Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                       
                       தூய ஆவி பெருவிழாவுக்குப் பின்வரும் ஞாயிறு - 3ம் ஆண்டு
             மூவொரு கடவுள்  
=================================================================================
முதல் வாசகம்

=================================================================================
பூவுலகு உண்டாகும் முன்னே, ஞானம் நிலைநிறுத்தப் பெற்றது.

நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 8: 22-31

இறைவனின் ஞானம் கூறுவது: ஆண்டவர் தம் படைப்பின் தொடக்கத்திலேயே, தொல்பழங்காலத்தில் எதையும் படைக்கும் முன்னரே, என்னைப் படைத்தார். தொடக்கத்தில், பூவுலகு உண்டாகுமுன்னே, நானே முதன்முதல் நிலைநிறுத்தப்பெற்றேன். கடல்களே இல்லாத காலத்தில் நான் பிறந்தேன்; பொங்கி வழியும் ஊற்றுகளும் அப்போது இல்லை. மலைகள் நிலைநாட்டப்படுமுன்னே, குன்றுகள் உண்டாகுமுன்னே நான் பிறந்தேன். அவர் பூவுலகையும் பரந்த வெளியையும் உண்டாக்குமுன்னே, உலகின் முதல் மண்துகளை உண்டாக்குமுன்னே நான் பிறந்தேன். வானத்தை அவர் நிலைநிறுத்தினபோது, கடல்மீது அடிவானத்தின் எல்லையைக் குறித்தபோது, நான் அங்கே இருந்தேன். உலகத்தில் மேகங்களை அவர் அமைத்தபோது, ஆழ்கடலில் ஊற்றுகளை அவர் தோற்றுவித்தபோது, நான் அங்கே இருந்தேன். அவர் கடலுக்கு எல்லையை ஏற்படுத்தி, அந்த எல்லையைக் கடல் நீர் கடவாதிருக்கும்படி செய்தபோது, பூவுலகிற்கு அவர் அடித்தளமிட்டபோது, நான் அவர்அருகில் அவருடைய சிற்பியாய் இருந்தேன்; நாள்தோறும் அவருக்கு மகிழ்ச்சியூட்டினேன்; எப்போதும் அவர் முன்னிலையில் மகிழ்ந்து செயலாற்றினேன். அவரது பூவுலகில் எங்கும் மகிழ்ந்து செயலாற்றினேன்; மனித இனத்தோடு இருப்பதில் மகிழ்ச்சி கண்டேன்.



இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:
8: 3-4. 5-6. 7-8 (பல்லவி: 1a) Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரே! உமது பெயர் உலகெங்கும் மேன்மையாய் உள்ளது!

3 உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது, 4 மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? பல்லவி

5 ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்; மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர். 6 உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். பல்லவி

7 ஆடுமாடுகள், எல்லா வகையான காட்டு விலங்குகள், 8 வானத்துப் பறவைகள், கடல் மீன்கள், ஆழ்கடலில் நீந்திச் செல்லும் உயிரினங்கள் அனைத்தையும் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். பல்லவி


================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
 
நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-5

சகோதரர் சகோதரிகளே, நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் மூலம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகியுள்ள நாம், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுளோடு நல்லுறவு கொண்டுள்ளோம். நாம் இப்போது அருள் நிலையைப் பெற்றிருக்கிறோம். இந்நிலையை அடையும் உரிமை இயேசு கிறிஸ்து மீது கொண்ட நம்பிக்கையால்தான் அவர் வழியாகவே நமக்குக் கிடைத்தது. கடவுளின் மாட்சியில் பங்கு பெறுவோம் என்னும் எதிர்நோக்கில் நாம் பெருமகிழ்வும் கொள்ள முடிகிறது. அதுமட்டும் அல்ல, துன்பங்களைத் தாங்கிக் கொள்வதிலும் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். ஏனெனில், துன்பத்தால் மன உறுதியும், மன உறுதியால் தகைமையும், தகைமையால் எதிர்நோக்கும் விளையும் என அறிந்திருக்கிறோம். அந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது; ஏனெனில் நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப் பட்டுள்ளது.


- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
திவெ 1: 8 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவருமான கடவுள், தந்தை, மகன், தூய ஆவியாருக்கு மகிமை உண்டாகுக. அல்லேலூயா.

 

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
தந்தையுடையவை யாவும் என்னுடையவையே.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 12-15

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: "நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது. உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேச மாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார். தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவே தான் அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார்'  என்றேன்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.


 

சிந்தனை

தமத்திருத்துவப் பெருவிழா மூவரும் இணைப்பிரியாது செயலாற்றி வருகின்றார்கள். புரிந்து கொள்வதற்கு சிரமமே. படைத்தல், பராமரித்தல், ஊக்குவித்தல் என்பதுவே இவர்களின் பணி. நாமும் இந்த பணிகளில் பங்காளிகளாக இருப்பதற்கு அழைப்பு பெற்று இருக்கின்றோம். கருவை அழிக்காது, மனித உயிரை பராமரித்து, எல்லோரும் இன்புற்றிருக்க ஊக்குவிப்போம்.




=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
(நீதிமொழிகள் 8: 22-31; உரோமையர் 5: 1-5; யோவான் 16: 12-15)

நல்லுறவுக்கு இலக்கணமான மூவொரு கடவுள்

நிகழ்வு

          அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் (Dublin) பேராயர் ஒருவர் இருந்தார். அவர் அதே நகரில் இருந்த சீர்த்திருத்த சபைச் சகோதரர்கள் (Protestant) நடத்திவந்த மிகவும் புகழ்பெற்ற ட்ரினிட்டி கல்லூரில் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் யாரும் சேரக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார். அவரது உத்தரவையும் மீறி ஒரு கத்தோலிக்கக் கிறிஸ்தவர் அந்த ட்ரினிட்டி கல்லூரியில் நுழைந்தார். இது நடந்து ஓரிரு நாட்களிலேயே பேராயரின் உத்தரவை மீறி ட்ரினிட்டி கல்லூரில் நுழைந்த அந்த மனிதர் இறந்துபோனார். இதைப் பார்த்துவிட்டு மக்களெல்லாம், 'பேராயரின் உத்தரவை மீறி ட்ரினிட்டி கல்லூரில் நுழைந்ததால்தான், அவர்க்கு இப்படியொரு நிலைமை நேர்ந்தது' என்று பேசத் தொடங்கினார்கள்.


இதற்குப் பின்பு அந்த மனிதர் விண்ணகத்திற்குச் சென்றார். விண்ணக வாசலில் நின்றுகொண்டிருந்த பேதுரு, "நீ என் வழியாக வரும் பேராயரின் உத்தரவையும் மீறி, ட்ரினிட்டி கல்லூரில் நுழைந்தவன்தானே! அதனால் உனக்கு விண்ணகத்தில் இடமில்லை. நீ பாதாளத்திற்குப் போ"என்று விரட்டினார். அப்பொழுது தற்செயலாக அங்கு வந்த கடவுள்விடம் பேதுரு, "நாமே மூவொரு கடவுள். அப்படியிருக்கும்போது இவர் ட்ரினிட்டி கல்லூரியில் நுழைந்தார் என்பதற்காக விண்ணகத்திற்குள் நுழையவிடாமல் தடுப்பது எந்தவிதத்தில் நியாயம்!. அதனால் தயவுசெய்து இவரை உள்ளே அனுப்பிவிடுங்கள்"என்றார். பேதுருவும் கடவுள் சொன்னதற்கு ஏற்ப அவர் விண்ணகத்திற்குள் செல்ல அனுமதித்தார்.


வேடிக்கையாகச் சொல்லப்பட்ட நிகழ்வாக இருந்தாலும், பேரன்பிற்கும் நல்லுறவிற்கும் இலக்கணமாக விளங்கும் மூவொரு கடவுள் யாரையும் புறம்பே தள்ளிவிடுவதில்லை என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குறித்து. இன்று அன்னையாம் திருஅவை மூவொரு கடவுளின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. இந்த நல்லநாளில் மூவொரு கடவுள் விழா நமக்கு என்ன செய்தியை எடுத்துச் சொல்கின்றது என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

மூவொரு கடவுளுக்கு புனிதர்கள் கொடுக்கும் விளக்கம்

          குருக்களின் பாதுகாவலர் என அழைக்கப்படுகின்ற, ஜான் மரிய வியான்னி மூவொரு கடவுளைக் குறித்துச் சொல்லும்போது, "மூவொரு கடவுளை ஒரு மரத்திற்கு ஒப்பிடலாம். எப்படி ஒரு மரத்தில் ஆணிவேர், தண்டு, கிளைகள் என்று மூன்று பகுதிகள் இருந்தாலும் அவை மரம் என்று அழைக்கப்படுகின்றதோ, அதுபோன்று தந்தை, மகன், தூய ஆவியார் என்று மூன்று ஆட்களாக இருந்தாலும், மூவொரு கடவுள் என்றே அழைக்கப்படுகின்றார்கள்"என்பார்.

இதுபோன்று அயர்லாந்தின் திருத்தூதர் என அழைக்கப்படுகின்ற தூய பேட்ரிக் மூவொரு கடவுளைக் குறித்துச் சொல்லும்போது, "மூவொரு கடவுளை ஷாம்ரோக் (Shamrock) என்ற செடியில் உள்ள இலைக்கு ஒப்பிடலாம்
. இவ்விலையில் மூன்று இதழ்கள் இருந்தாலும் அவை, ஷாம்ரோக் இல்லை என்றே அழைக்கப்படுவதுபோல, தந்தை, மகன், தூய ஆவியார் என்று மூன்று ஆட்களாக இருந்தாலும், மூவொரு கடவுள் என்ற அழைக்கப்படுகின்றார்கள்" என்று விளக்கம் தருவார். இவ்விளக்கங்களில் ஒருசில குறைபாடுகள் இருந்தாலும், மூவொரு கடவுளை எளிய வகையில் புரிந்துகொள்வதற்கு இவை வழிவக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் இல்லை.

விவிலியத்தில் மூவொரு கடவுள்

மூவொரு கடவுளுக்கு ஒருசில புனிதர்கள் கொடுத்த எளிய விளக்கத்தை அறிந்துகொண்ட நாம், இப்பொழுது விவிலியத்தில் மூவொரு கடவுளைக் குறித்து என்ன சொல்லப்பட்டிருகின்றது என்பதைத் தெரிந்துகொள்வோம்.

கடவுள் மானிடரைப் படைக்கும்போது, "மானிடரை நம் உருவிலும் நம் சாயலிலும் உண்டாக்குவோம்' (தொநூ 1:26) என்பார். இங்கே குறிப்பிடப்படும் 'நம்' என்ற வார்த்தை தந்தை, மகன், தூய ஆவியார் ஆகிய மூன்று ஆட்களும் படைப்பின்போது செயலாற்றியிருகின்றார்கள் என்பதைத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றது. மூவொரு கடவுள் சேர்ந்து செயல்பட்ட இன்னொரு நிகழ்வு இயேசுவின் பிறப்பாகும். இதை வானதூதர் கபிரியேல் மரியாவிடம் சொல்லக்கூடிய, "தூய ஆவியார் உம்மீது வருவார். உன்னத கடவுளின் வல்லமை உன்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் என அழைக்கப்படும்"(லுக் 1: 35) என்ற வார்த்தைகளில் கண்டுகொள்ளலாம்.

மூவொரு இறைவன் ஒன்றாகச் செயல்படும் இன்னுமோர் இடம், இயேசுவின் திருமுழுக்கு ஆகும். இங்கு இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு யோவானிடமிருந்து திருமுழுக்குப் பெற்றுவிட்டு வெளியே வரும்போது, தூய ஆவியார் அவர்மீது இறங்கி வருகின்றார். தந்தைக் கடவுளோ, "என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்"(மத் 3: 13-17) என்கின்றார். இப்படி மூவொரு இறைவன் ஒன்றாக இணைந்து செயல்பட்டதற்கான எடுத்துக்காட்டுகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.  மூவொரு கடவுள் அன்றைக்கு மட்டுமல்ல, இன்றைக்கும் நம் மத்தியில் செயல்படுகின்றார் (மத் 28: 19,20) என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.


நல்லுறவுக்கு இலக்கணமான மூவொரு கடவுள்

மூவொரு கடவுளைக் குறித்து புனிதர்கள் சொன்னதையும் விவிலியத்தின் மூவொரு செயல்பாட்டினையும் அறிந்துகொண்ட நாம், இந்த மூவொரு கடவுள் நல்லுறவுக்கு எப்படி இலக்கணமாக இருக்கிறார்? நாம் எப்படி நல்லுறவோடு இருப்பது? என்று சிந்தித்துப் பார்ப்போம்.


யோவான் நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு இவ்வாறு கூறுவார்: "உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் தாமாக எதையும் பேசமாட்டார்; அவர் தாம் கேட்பதையே பேசுவார்."இவ்வார்த்தைகளை நாம் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் தந்தை, மகன், தூய ஆவியார் ஆகிய மூன்று ஆட்கட்க்கும் இடையே இருக்கும் நல்லுறவு புரிந்துவிடும். தூய ஆவியார் உண்மையை வெளிப்படுத்துபவராக இருந்தாலும்கூட, அவர் தாமாக எதையும் பேசாமல், தந்தைக் கடவுள் வெளிப்படுத்துவதை வார்த்தையாம் இயேசுவின் வழியாக சொல்கின்றார் என்றால், அங்குதான் அவர்கட்க்கு இடையே இருக்கும் நல்லுறவானது முக்கியத்துவம் பெறுகின்றது. இத்தகைய நல்லுறவு ஒருவர் மற்றவர் அன்பு கொள்வதாலும் ஒருவர் மற்றவர்க்கு மதிப்பளிப்பதாலும் ஒருவர் மற்றவருக்கு முக்கியத்துவம் கொடுப்பதாலும் மட்டுமே நிகழும். மூவொரு கடவுளிடம் அவை இவையெல்லாம் இருந்தது.

ஆகையால், மூவொரு கடவுளிடம் நல்லுறவு நிலவ அவர்கள் எப்படி அன்போடும் மதிப்பளித்தும் இருந்தார்களோ, அதுபோன்று நாமும் இருந்தால், நாம் வாழும் குடும்பத்திலும் சரி, சமூகத்திலும் சரி நல்லுறவு ஏற்படும் என்பதில் எந்தவிதமான ஐயமுமில்லை.


சிந்தனை      

          'துணிவு, மனசாட்சி, இரக்கம் ஆகிய மூன்றுதாம் ஓர் அறிவார்ந்த சமூகத்தில் தமதிருத்துவமாகும்' என்பார் அபிஜித் நஷ்கர் (Abhijit Naskarr) என்ற எழுத்தாளர். ஆகவே, மூவொரு கடவுளின் விழாவைக் கொண்டாடும் நாம், மூவொரு கடவுளிடம் விளங்கும் நல்லுறவையும் பேரன்பையும், மேலே நாம் பார்த்த துணிவு, மனசாட்சி, இரக்கம் ஆகியவற்றையும் நமதாக்குவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
  ஏன் கடவுள்? என் கடவுள்!

மூவொரு இறைவன் பெருவிழா
(ஜூன் 16, 2019)

நீதிமொழிகள் 8:22-31
உரோமையர் 5:1-5
யோவான் 16:12-15

நாம் ஒருவர் மற்றவரைச் சந்திக்கும்போது, நம் நண்பர்களைச் சந்திக்கும்போது, 'எப்படி இருக்குற?' என்று கேட்கிறோம். என்றாவது ஒருநாள் அவர்களிடம், 'ஏன் இருக்குற?' என்று கேட்டுப்பார்த்தால் அது விபரீதத்தில் போய் முடியும். இல்லையா? ஓர் ஆய்வகத்தில் இருக்கிறோம். தண்ணீரின் மூலக்கூறு வாய்ப்பாட்டைக் கண்டுபிடிக்கிறோம். 'தண்ணீர் உருவாவது எப்படி?' என்று கேட்டால், 'ஒரு பகுதி ஆக்ஸிஜனும், இரு பகுதி ஹைட்ரஜனும் இணையும்போது தண்ணீர் உருவாகிறது' என்று பதில் சொல்லலாம். ஆனால், இதையே கொஞ்சம் மாற்றி, 'தண்ணீர் ஏன் உருவாகிறது?' என்று கேட்டால் நமக்குப் பதில் தெரியாது. ஆக, மனிதர்கள் மற்றும் இயற்பியல்சார் உலகில், 'எப்படி?' என்ற கேள்விக்குத்தான் பொருள் கிடைக்குமே தவிர, 'ஏன்?' என்ற கேள்விக்கு அல்ல.

ஆனால், கடவுள் மற்றும் இறைசார் உலகு இதற்கு எதிர்மாறானது. இங்கே, 'ஏன்?' என்ற கேள்விக்குத்தான் விடையே தவிர, 'எப்படி?' என்ற கேள்விக்கு விடையில்லை. 'ஏன் விண்ணேற்றம்?' என்று கேட்கலாம். 'எப்படி விண்ணேற்றம்?' என்று கேட்க முடியாது. 'ஏன் நற்கருணை?' என்று கேட்கலாம். 'எப்படி நற்கருணை?' என்று கேட்க முடியாது. 'ஏன் மூவொரு இறைவன்?' என்று கேட்கலாம். 'எப்படி மூவொரு இறைவன்?' என்று கேட்க முடியாது.

இன்று நாம் மூவொரு இறைவன் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.

'இவ்வாறு உண்மையான, நிலையான கடவுள் தன்மையை நாங்கள் அறிக்கையிடும்போது
வகையில் தனித்தன்மையையும் இறை இயல்பில் ஒருமையையும்
மாண்பில் சமத்துவத்தையும் போற்றுகின்றோம்' என்று பாடும் இன்றைய திருப்பலியின் தொடக்கவுரை ஓரளவுக்கு மூவொரு இறைவன் என்னும் மறையுண்மையை விளக்கினாலும் நம்மால் இதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது.

நான் புனேயில் இறையியல் பயின்றபோது, மூவொரு இறைவன் பற்றி ஓர் ஆயர் வகுப்பெடுக்க, அங்கிருந்த மாணவர் ஒருவர், 'ஆயரே! மூவொரு இறைவன் பற்றித்தான் நம்மால் அறிந்துகொள்ள முடியாதே. அப்படி இருக்க அவர் மூன்று பேராக இருந்தால் என்ன? நான்கு பேராக இருந்தால் என்ன? வாட் டஸ் இட் மேட்டர்?' என்று கேட்டார்.

'வாட் டஸ் இட் மேட்டர்?' என்று நம் மூளை ஒதுங்கிக்கொள்ளவே நினைக்கிறது.

'தந்தை-மகன்-தூய ஆவியார்' என்று நாம் பயன்படுத்தும் வார்த்தைகளும் இன்றைய நாள்களில் ஏற்புடையவை அல்ல. இவ்வார்த்தைகள் கடவுள் ஆண்பாலைச் சார்ந்தவர் என்று அறுதியிட்டுக் கூறுகின்றன. கடவுளை எப்படி பாலினத்திற்குள் அடக்க முடியும்?

மேலும், 'மூவொரு இறைவன்' என்பது 'கடவுளைப் புரிந்துகொள்வதற்கான' ஒரு 'ஒர்க்கிங் மாடல்.' அவ்வளவுதான். நாம் பள்ளியில் படிக்கும்போது, மிக்ஸி போன்ற ஒரு மாடல் செய்கிறோம் என வைத்துக்கொள்வோம். அதில் ஒரு சிறிய மோட்டார், ஒரு சிறிய கத்தி என்று வடிவமைக்கிறோம். இதை 'ஒர்க்கிங் மாடல்' என்கிறோம். இது என்னதான் அழகாக, நேர்த்தியாக இருந்தாலும், இந்த 'மாடலை' வைத்து நாம் சட்னி அரைக்க முடியுமா? அல்லது 'மூவொரு இறைவனின் தந்தை மகனை அன்பு செய்கிறார்' எனச் சொல்கிறோம். ஆனால், வீட்டில் என் அப்பா என்னை அன்பு செய்யவே இல்லை என்றால், கண்டிப்பாக என்னால் தந்தையையும் அன்பு செய்பவராக ஏற்றுக்கொள்ள முடியாது.

கிளாவர் மலர், தண்ணீர்-பனிக்கட்டி-நீராவி, அப்பா-அம்மா-மகன், வெப்பம்-ஒளி-கதிர்வீச்சு என எவ்வளவோ உருவகங்களைப் பயன்படுத்தினாலும், திருவிவிலியத்திலிருந்து மேற்கோள்கள் காட்டினாலும் நம்மால் இம்மறைபொருளைப் புரிந்துகொள்ளவே முடியாது.

ஆக, 'எப்படி மூவொரு இறைவன்?' என்று கேட்பதை விடுத்து, 'ஏன் இறைவன்?' அல்லது 'ஏன் மூவொரு இறைவன்?' என்று கேட்கலாம்.

இன்று கடவுள் நமக்குத் தேவையா? கடவுள் இல்லாமல் நம்மால் இருக்க முடியாதா?

நாம் கடவுள் தேவையை மூன்று நிலைகளில் அல்லது வழிகளில் உணர்கின்றோம்: (அ) நம்முடைய வரையறை அனுபவம். 'என்னால் ஐம்பது கிலோதான் தூக்க முடியும்' என வைத்துக்கொள்வோம். ஆனால், அறுபது கிலோ தூக்க வேண்டும் என்ற நிர்பந்தம் வரும்போது, நம் மனம் இயல்பாகவே கடவுளை நோக்கி எழும்புகிறது. என்னால் முடியாத ஒன்றைச் செய்ய நான் இறைவனின் துணையை நாடுகிறேன். (ஆ) தனிமை. விலங்குகள் ஒருபோதும் தனிமையை உணர்வதில்லை. அவை எதிரிகளைக் கண்டுதான் பயப்படுமே தவிர தனியாய் இருக்கப் பயப்படுவதில்லை. ஆனால், நாமோ எதிரிகளோடு விருந்துண்டு, பயணம் செய்து, வழி நடந்து, இருந்தாலும் மனதில் தனிமையாய் உணர்வதண்டு. கடவுள் ஆதாமிடம் விரும்பாத உணர்வும் தனிமை தான். தனிமைக்குத் துணையாக ஏவாள் படைக்கப்பட்டாலும், முதற்பெற்றோரின் தனிமையைப் போக்குபவராக கடவுள் இருக்கிறார். (இ) நினைவு. கடவுள் பற்றிய உணர்வு நம்முடைய நினைவில் இருக்கிறது. இந்த நினைவு தனிநபர் சார்ந்ததாக இருக்கலாம். அல்லது ஒட்டுமொத்த குழும உணர்வாக இருக்கலாம். என்னுடைய அம்மாவும், அப்பாவும் 'கடவுள் என்றால் இது அல்லது இவர்' என்று தங்கள் நினைவில் இருந்ததை எனக்கு கொடுக்கிறார்கள். அவர்கள் அதை ஒட்டுமொத்த குழும நினைவிலிருந்து பெற்றுக்கொள்கிறார்கள். ஆக, நினைவு இருக்கும் வரை தான் கடவுள் இருப்பார். எனக்கு நினைவு போய்விட்டால் என்னைப் பற்றியே எனக்குத் தெரியாதபோது கடவுளைப் பற்றி எனக்கு என்ன தெரியும்?

ஆக, நம்முடைய வரையறை அனுபவம், தனிமை, நினைவு இம்மூன்றும் கடவுள் என்னும் தேவையை அறியவும், தேடவும் நம்மைத் தூண்டுகின்றன.

'கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை. தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்' (காண். யோவா 1:18) என யோவான் நற்செய்தியாளர் அறிக்கையிடுகின்றார். ஆக, காணக்கூடிய இயேசுவிடமிருந்து நாம் காணக்கூடாத இறைவனை நோக்கிச் செல்கின்றோம். இதிலும் ஒரு பிரச்சினை இருக்கிறது. எடுத்துக்காட்டாக, இயேசு சிலுவையில் அறையப்பட்ட அன்று அவர் அவருடைய மனித தன்மையில் அறையப்பட்டாரா அல்லது இறைத்தன்மையில் அறையப்பட்டாரா? மனிதத் தன்மையில் அறையப்பட்டார் என்றால் அவர் இறைவன் இல்லையா? இறைத்தன்மையில் அறையப்பட்டார் என்றால் அவர் இறந்த அன்று மூவொரு இறைவனில் ஒரு ஆள் இறந்துவிட்டாரா? அல்லது மூவொரு இறைவனுமே இறந்துவிட்டாரா? இவை என் கேள்விகள் அல்ல. வரலாற்றில் ஆரியஸ் போன்றவர்கள் கேட்ட கேள்விகளே.

ஆக, இயேசுவிடமிருந்து அல்லது இயேசு வழியாக மூவொரு இறைவனை அறிந்துகொள்வதும் கடினமாக இருக்கிறது.

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு ஒரு வழியைக் காட்டுகிறது. மூவொரு இறைவனின் மூன்று பண்புகளை இது பட்டியல் இடுகிறது: (அ) இணைச்சார்புநிலை, (ஆ) இணைவுநிலை, மற்றும் (இ) உள்முகப்பார்வை.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். நீமொ 8:22-31) 'ஞானம் என்னும் பெண்' தன் வரலாறு கூறுகிறாள். இந்த ஞானமே படைப்புச் செயலில் முக்கியமான பங்கு வகிக்கிறது. ஒழுங்கற்ற உலகில் ஒழுங்கை ஏற்படுத்தும் நில வரைபடமாக இருக்கின்றாள் ஞானம். இவள் வழியாகவே கடவுள் உலகை உருவாக்கி அதற்கு உயிர் கொடுக்கிறார். நீதிமொழிகள் ஆசிரியர் படைப்புச் செயல் பல நிலைகளில் நடந்ததாக எழுதுகிறார். முதலில், ஞானம் படைக்கப்படுகிறாள். படைக்கப்பட்ட ஞானம் கடவுள் முன் அகமகிழ்கிறாள். மூவொரு இறைவனின் முதல் நபராக இருக்கின்ற தந்தையாகிய கடவுள் ஞானத்தைப் பெற்றெடுக்கிறார். இங்கே இரண்டும் வேறு வேறு அல்ல. உதாரணத்திற்கு, சிலந்தியின் வாயிலிருந்து வரும் ஒருவித பிசுபிசுப்பான பசை சிலந்திக் கூடாக மாறுகின்றது. சிலந்திக் கூட்டின் ஒரு நுனியைப் பிடித்து நாம் கவனமாகச் சென்றால் சிலந்தியை அடைந்து விடலாம். சிலந்தியும் பசையும் வேறு வேறு எனத் தோன்றினாலும், அவை வேறல்லவே. ஞானம் கடவுளின் பிரதிபலிப்பாகவும் வெளிப்பாடாகவும் இருக்கிறது. தந்தை தன்னிடமிருந்தே ஞானத்தைப் படைத்தாலும், உலகைப் படைப்பதற்காக, அவர் ஞானத்தோடு இணைச்சார்புநிலையில் இருக்கின்றார்.

இரண்டாம் வாசகம் (காண். உரோ 5:1-5) இரண்டாம் நபரான இயேசுவை மையப்படுத்தியதாக இருக்கிறது. கடவுளுடைய படைப்பு மனிதர்களின் பாவத்தால் பாழ்படுகிறது. இதனால் கடவுளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள உறவு நிலை பாதிக்கப்படுகிறது. முதற்பெற்றோரின் பாவத்திற்குப் பின் பயமும் குற்றவுணர்வும் மனிதர்களைத் தொற்றிக்கொள்ள, இறப்பும் அழிவும் தவிர்க்கமுடியாதவையாகின்றன. கடவுள் தன் மக்களை மீட்டு மீண்டும் தன்னோடு இணைத்துக் கொண்டதை, பவுல், 'ஏற்புடையவராதல்' என்ற வார்த்தையால் விளக்குகின்றார். பவுலைப் பொருத்தவரை, 'நாம் நம்பிக்கையின் மூலம் கடவுளுக்கு ஏற்புடையவராகி, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுளோடு நல்லுறவு கொண்டுள்ளோம்' (காண். உரோ 5:1). இயேசுவின் வழியாக நாம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகின்றோம். இந்த எதிர்நோக்கு நாம் இவ்வுலக வாழ்வை இனிதே வாழத் துணைசெய்கிறது. இயேசு, பாவத்தால் ஏற்பட்ட பிரிவை அகற்றி, கடவுளக்கும் நமக்கும், நமக்கும் மற்றவர்களுக்கும் இணைவுநிலையை உருவாக்குகின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். யோவா 16:12-15) தமதிருத்துவத்தின் மூன்றாம் நபரான தூய ஆவியாரை மையமாகக் கொண்டுள்ளது. தூய ஆவியார் திருத்தூதர்களை உண்மையை நோக்கி வழிநடத்துவதோடு, அவர் இயேசுவையும் மாட்சிப்படுத்துகிறார். ஆவியார் ஒரு மனிதரின் உள்இயல்பாக மாறி, உண்மையை நோக்கி அவருடைய இதயத்தைத் திருப்புகிறது. வெளிநோக்கிய ஒரு நபரை உள்நோக்குப் பார்வை கொள்ளச் செய்கிறார் தூய ஆவியார்.

மூவொரு இறைவன் இன்றைய நம் வாழ்வுக்குத் தரும் பாடங்கள் எவை?

அ. ஆதிக்கத்திலிருந்து இணைச்சார்புநிலைக்கு (From domination to interdependence)

இன்று நம் உறவுகள் - குடும்பம், சமூகம் - சீக்கிரம் கசந்துபோவதற்குக் காரணம் ஆதிக்கம். சிறு வயதில் காதல், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், சோர்வு, விரக்தி போன்று இளையோரும் ஒருவர் மற்றவரை உரிமையாக்கிக் கொள்ள நினைக்கும் பண்பு அதிகமாகிறது. மேலும், என் உறவுக்கு நானே பொறுப்பு, என் வாழ்வுக்கு நானே பொறுப்பு என்ற மனநிலையில், அதை உரிமையாக எடுத்துக்கொண்டு அடுத்தவர்மேல் ஆதிக்கம் செலுத்தும் போக்கு வளர்கிறது. உறவு நிலையில் இருப்பவர் மற்றவர்மேல் உள்ள உரிமையை முன்னிறுத்தி, மற்றவரைத் தன்னுடைய உடைமை எனக் கருதும் போக்கும் ஆதிக்கத்திற்கு வழிவகுக்கிறது. மூவொரு இறைவன் ஒருவர் மற்றவர்மேல் ஆதிக்கம் செலுத்தும் நபர்கள் அல்லர். மாறாக, ஒருவர் மற்றவரோடு இணைச்சார்புநிலை கொண்டிருப்பவர்.

ஆ. அந்நியப்படுத்துதலிலிருந்து இணைவிற்கு (from alienation to interconnectedness)

பாவத்தால் ஒருவர் மற்றவரிடமிருந்து அந்நியப்பட்டு நின்று நம்மை ஒருவர் மற்றவரோடும், கடவுளோடும் இணைக்கிறார் இயேசு. அந்நியப்படுதல் என்பது விலகி நிற்றல். இன்று தகவல் தொழில்நுட்பம் நம்மை எந்த அளவிற்கு அருகில் கொண்டுவந்திருக்கிறதோ அந்த அளவிற்கு நம்மை ஒருவர் மற்றவரிடமிருந்து அந்நியப்படுத்தியிருக்கிறது என்பதும் உண்மை. இணைவை நோக்கி நாம் செல்ல ஒருவர் மற்றவருக்கு அருகில் வந்து நிற்கும் நற்குணம் பெறுதல் வேண்டும்.

இ. வெளிப்புறப்பார்வையிலிருந்து உள்முகப்பார்வைக்கு (from outwardness to inwardness)

நாம் அனைவரும் வெளிப்புறத்தில் தோற்றத்தில் ஒருவர் மற்றவரிடமிருந்து வேறுபட்டு இருந்தாலும் நம்மிடையே குடிகொண்டிருக்கும் கடவுள் ஒருவர்தான். இதையே, 'தத்வமசி' என்கிறது உபநிடதம். நான் ஒருவர் மற்றவரைச் சந்திக்கும்போது, என்னில் இருக்கும் கடவுள் அவரில் இருக்கும் கடவுளைச் சந்திக்கிறார். ஆக, அடுத்தவரை நான் வெளிப்புறத் தோற்றம் மற்றும் பின்புலம் கொண்டு மதிப்பிடாமல், அவரின் உள்முகத்தைக் கண்டு அன்பு செய்தல் நாம் கற்க வேண்டிய மூன்றாவது பாடம்.

இறுதியாக, மூவொரு இறைவன் என்னும் மறைபொருள் கடவுளுக்குத் தேவையோ, இல்லையோ, அது நம் ஒவ்வொருவருக்கும் தேவை. இம்மறைபொருளில் நாம் கடவுளை அல்ல. நம் ஒவ்வொருவரையுமே கண்டுகொள்கிறோம். இப்படிக் கண்டுகொள்ளும் நாம் பகிர்வு, சார்பு, சமத்துவம் என்று ஒருவர் மற்றவரை அரவணைக்கிறோம். ரொம்ப பிராக்டிகலாக சொல்ல வேண்டுமென்றால், மூவொரு இறைவனின் மேல் நம்பிக்கை கொண்டவர்கள் மேலோர்-கீழோர் என்று வேற்றுமை பாராட்டுவதில்லை, சாதி வித்தியாசம் பார்ப்பதில்லை, மூட நம்பிக்கைகள் கொண்டிருப்பதில்லை, தங்களுடைய சமய மரபுகளைப் பிடித்துக்கொண்டிருப்பதில்லை, தான் செய்வதே சரி என்று சொல்வதில்லை, யார்மேலும் வன்முறை பாராட்டுவதில்லை. அவர்கள் அனைவரையும் மதிப்பர், கனிவோடு நடத்துவர், தன்னைப் போல நடத்துவர்.

மூவொரு இறைவனைப் பற்றி அறிந்து கொள்வது என்பது, என்னைத் துரத்திக்கொண்டே ஒரு மரத்தைச் சுற்றிக்கொண்டு நான் ஓடுவது போன்றது. நான் எத்துணை வேகமாக ஓடினாலும், என்னை நான் பிடிக்க முடியாது. ஏனெனில் 'நான்' என்பதும், 'எனது' என்பதும் ஒன்றே. இவ்வாறே, மூவொரு இறைவனைப் பற்றிப் புரிந்து கொள்ள முயலும் ஒவ்வொரு நொடியும் நான் என்னையே புரிந்துகொள்கிறேன். என்னையும், என்னைச் சுற்றி இருக்கும் சமூகத்தையும் புரிந்து கொள்ளும் ஒவ்வொரு நொடியும் நான் என் மூவொரு இறைவனையே புரிந்து கொள்கிறேன். ஏனெனில், ஏன் கடவுள்? என்ற கேள்வியிலிருந்து என் கடவுள் யார் என்று நான் கண்டுகொள்கின்றேன்.
உங்களையும், என்னையும் போலவே மூவொரு இறைவனும் ஒரு மறைபொருள்!

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================


=================================================================================
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
=================================================================================
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

ஐயங்கள் நீக்கி எம்மை அன்பால் ஒன்றிணைக்கும் அமைதியின் இறைவா!
திருத்தந்தை, உடன் உழைக்கும் அனைத்து ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் உம் உயிர்ப்பின் மகிமையையும், மகிழ்ச்சியையும், அமைதியையும் முழுமையாகப் பெற்று தோமாவைப் போல் துணிவுடன் இறையரசை அறிவிக்க, இணைந்து செயல்படத் தேவையான இறைஅருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நானே உங்கள் கடவுள்! நீங்கள் என் மக்கள் என்று பாசத்துடன் உடன்படிக்கைச் செய்து கொண்ட எம் இறைவா!
உமது துன்புரும் திருஅவையைக் கண்நோக்கும். இலங்கையில் நடைப்பெற்ற வெடிகுண்டு தாக்குதலால் நிலைந்து நிற்கும் உம் மக்கள், தங்கள் குடும்ப உறவுகளை இழந்தத் தவிக்கும் இவ்வேளையில் அவர்களுக்கு ஆறுதலையும் தேற்றுதலையும், அமைதியையும் கொடுக்கவும், மருத்துவமனையில் இருக்கும் மக்கள் சரியான மருத்துவம் பெற்று நலமுடன் வாழவும் அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இறைவா,
உடல் நலம் இன்றித் தவிப்பவர்கள், மனநலம் குன்றித் துன்புறுவோர் இவர்களுக்கு உயிர்த்த இயேசுவின் ஆற்றலாலும், மகிமையாலும் அனைத்து உதவிகளும் நல்மனம் கொண்டவர்கள் வழியாகக் கிடைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அருட்செல்வங்களால் எங்களை ஆசீர்வதிக்கும் அன்புத்தந்தையே! எம் இறைவா!
எங்களைப் பராமரித்துப் பாதுகாத்த எம் பெரியவர்கள் இன்று ஆதரவின்றி, அனாதைகளாக்கப்பட்டு, தெரு ஒரங்களிலும், பேருந்து நிலையங்களிலும் முதியோர் இல்லங்களிலும் தனித்து விடப்பட்டு , அவர்கள் படும் வேதனைகள் தொடர் நிகழ்வாகவே நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. எனவே அவர்கள் உம் இறை இரக்கத்தினால்,பாதுகாப்புடன் வாழ, இத்தலைமுறையினர் பெரியவர்கள் மேன்மையை உணர்ந்து அவர்களைப் பாதுகாக்கத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா!
உலகப் பற்றினால் உண்மைக் கடவுளாகிய உம்மை மறந்து வாழும் இளைஞர்கள் நீரே ஆண்டவர், நீரே கடவுள் என்பதை உணர்ந்து உம்மில் புதிய வாழ்வைக் காண மனமாற்றம் பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஐயங்கள் நீக்கி எம்மை அன்பால் ஒன்றிணைக்கும் அமைதியின் இறைவா!
பாஸ்கா காலத்தில் எங்கள் குடும்பங்களுக்கு உமது உயிர்ப்பின் பலனான அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பகிர்ந்து வாழும் நல்மனம் ஆகியவற்றை நிறைவாய் பொழிந்து, எங்கள் குடும்பங்களில் உமது துணையாளரின் அருளால் உறவுகள் மேன்பட்டு, வரவிருக்கும் நாட்களில் எங்கள் குடும்ப ஒற்றுமையால் உயர்ந்திடவும் சாட்சிய வாழ்வு வாழவும் உமது இரக்கத்தை அருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

ஒருவர் ஒருவரின் சுமைகளைத் தாங்கிக் கொள்ள சமூக உறவை உருவாக்கிய அன்புத் தந்தையே இறைவா!
எமது சமூகத்திற்காக உம்மிடம் இரந்து வருகின்றோம். இன்றைய நாட்களில் சமூக உறவுக்கும் ஒற்றுமைக்கும் மகிழ்ச்சிக்கும் தடையாக இருக்கும் அனைத்துத் தீமைகளையும் உமது இரக்கத்தால் தகர்த்தெறிந்து நாம் அனைவரும் ஒரே உள்ளமும், ஒரே மனமும் உடையவர்களாச் செயற்பட்டு இறையரசின் கருவிகளாகவும், சமாதானத்தின் தூதுவர்களாகவும், உமது சாட்சிகளாகவும் செயற்பட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!