|
30 டிசம்பர் 2018 |
|
இயேசு, மரியா, யோசேப்பின் திருக்குடும்பம்ு |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன்.
சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 1: 20-22,24-28
உரிய காலத்தில் அன்னா கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்தார்.
"நான் அவனை ஆண்டவரிடமிருந்து கேட்டேன்" என்று சொல்லி, அவர்
அவனுக்குச் `சாமுவேல்' என்று பெயரிட்டார். எல்கானாவும் அவர்
வீட்டார் அனைவரும் ஆண்டவருக்குத் தங்கள் ஆண்டுப் பலியையும்
பொருத்தனையையும் செலுத்தச் சென்றார்கள். ஆனால், அன்னா செல்லவில்லை.
அவர் தம் கணவரிடம், "பையன் பால்குடி மறந்ததும் அவனை எடுத்துச்
செல்வேன். அவன் ஆண்டவர் திருமுன் சென்று என்றும் அங்கே தங்கியிருப்பான்"
என்று சொன்னார். அவன் பால்குடி மறந்ததும், அன்னா அவனைத்
தூக்கிக்கொண்டு மூன்று காளை, இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால்
மாவு, ஒரு தோல்பை திராட்சை இரசம் ஆகியவற்றுடன் சீலோவிலிருந்து
ஆண்டவரின் இல்லத்திற்கு வந்தார். அவன் இன்னும் சிறு பையனாகவே
இருந்தான். அவர்கள் காளையைப் பலியிட்ட பின், பையனை ஏலியிடம்
கொண்டு வந்தார்கள்.
பின் அவர் கூறியது: "என் தலைவரே! உம் மீது ஆணை! என் தலைவரே! உம்முன்
நின்று ஆண்டவரிடம் வேண்டிக்கொண்டிருந்த பெண் நானே. இப்பையனுக்காகவே
நான் வேண்டிக்கொண்டேன். நான் ஆண்டவரிடம் விண்ணப்பித்த என்
வேண்டுகோளை அவர் கேட்டருளினார்.
ஆகவே நான் அவனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறேன். அவன் தன்
வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன்." அங்கே
அவர்கள் ஆண்டவரைத் தொழுதார்கள்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
(திபா 84: 1-2. 4-5. 8-9 (பல்லவி: 4)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே உமது இல்லத்தில் தங்கியிருப்போர்
பேறுபெற்றோர்.
1 படைகளின் ஆண்டவரே! உமது உறைவிடம் எத்துணை அருமையானது! 2 என்
ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது;
என் உள்ளமும் உடலும் என்றும் உள்ள இறைவனை மகிழ்ச்சியுடன்
பாடுகின்றது. பல்லவி
4 உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறுபெற்றோர்; அவர்கள்
எந்நாளும் உம்மைப் புகழ்ந்துகொண்டே இருப்பார்கள். 5 உம்மிடமிருந்து
வலிமை பெற்ற மானிடர் பேறுபெற்றோர்; அவர்களது உள்ளம்
சீயோனுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகளை நோக்கியே உள்ளது. பல்லவி
8 படைகளின் ஆண்டவரே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்!
யாக்கோபின் கடவுளே, எனக்குச் செவிசாய்த்தருளும்! 9 எங்கள் கேடயமாகிய
கடவுளே, கண்ணோக்கும்! நீர் திருப்பொழிவு செய்தவரின் முகத்தைக்
கனிவுடன் பாரும். பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே
இருக்கிறோம்.
யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-2,21-24
அன்பார்ந்தவர்களே, நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு
கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்;
கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால்
தான் நம்மையும் அறிந்துகொள்ளவில்லை.
என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம்.
இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை.
ஆனால் அவர் தோன்றும்போது நாமும் அவரைப்போல் இருப்போம்; ஏனெனில்
அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம். அன்பார்ந்தவர்களே, நம் மனச்சான்று
நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதிருந்தால் நாம் கடவுள்
திருமுன் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க முடியும்.
அவரிடம் நாம் எதைக் கேட்டாலும் பெற்றுக் கொள்வோம்; ஏனெனில் அவர்
கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறோம்; அவர் திருமுன் அவருக்கு உகந்தவற்றையே
செய்து வருகிறோம். கடவுள் நமக்குக் கொடுத்த கட்டளைப்படி, அவருடைய
மகன் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு, ஒருவர் மற்றவரிடம்
அன்பு செலுத்த வேண்டும். இதுவே அவரது கட்டளை. கடவுளுடைய கட்டளைகளைக்
கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கிறார்; கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார்.
கடவுள் நம்மோடு இணைந்திருக்கிறார் என்பதை அவர் நமக்கு அருளிய
தூய ஆவியால் அறிந்துகொள்கிறோம்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
திப 16: 14 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் வார்த்தைகளை மனத்தில் இருத்தும்படி,
ஆண்டவரே, எங்கள் இதயத்தைத் திறந்தருளும். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
போதகர்கள் நடுவில் அமர்ந்திருந்த இயேசுவை அவருடைய பெற்றோர் கண்டுகொள்கின்றனர்.
+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 41-52
ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப்
போவார்கள்; இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி
விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர்.
விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு
எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத்
தெரியாது; பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர்.
ஒருநாள் பயணம் முடிந்தபின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும்
அவரைத் தேடினர்; அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத்
திரும்பிச் சென்றார்கள்.
மூன்று நாள்களுக்குப் பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே
அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக்
கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக்கொண்டும் இருந்தார்.
அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்துகொள்ளும் திறனையும்
அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர். அவருடைய
பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர்.
அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, "மகனே, ஏன் இப்படிச்
செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு
தேடிக்கொண்டிருந்தோமே" என்றார்.
அவர் அவர்களிடம், "நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என்
தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத்
தெரியாதா?" என்றார்.
அவர் சொன்னதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. பின்பு அவர் அவர்களுடன்
சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய
தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து
வைத்திருந்தார்.
இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும்
மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
திருக்குடும்ப விழா
அன்பில் மலரும் குடும்பங்கள்
தாய் தந்தை அவர்களுடைய ஒரே செல்ல மகள் என்றிருந்த குடும்பத்தில்
ஒரு நாள் மகள் தந்தையிடம் சென்று, "அப்பா! எனக்கு ஒரு சந்தேகம்...
மனித இனம் எப்படித் தோன்றியது? சொல்லுங்கள்" என்று கேட்டாள்.
அதற்குத் தந்தை, "கடவுள் ஆதாமையும் ஏவாளையும் படைத்தார், அவர்களிடமிருந்து
பிள்ளைகள் தோன்றினார்கள். அவர்களுடைய பிள்ளைகளிலிருந்து பிள்ளைகள்
தோன்றினார்கள். இப்படித்தான் மனித இனம் தோன்றியது" என்றார்.
மகளும் அதற்குச் சரியென்று சொல்லிவிட்டு அவரிடமிருந்து நகர்ந்து
சென்றார்.
பின்னர் சமயலறையில் வேலைபார்த்துக் கொண்டிருந்த தாயிடம் சென்ற
மகள் தந்தையிடம் கேட்ட அதே கேள்வியை கேட்டாள். அவளோ, "மனித இனம்
குரங்கிலிருந்து தோன்றியது" என்றாள்.
இருவர் சொன்ன பதிலையும் கேட்டுக் குழம்பிப்போன மகள் மீண்டுமாக
தந்தையிடம் சென்று, "அப்பா மனித இனம் எப்படித் தோன்றியது என்ற
ஒரு கேள்விக்கு இருவரும் இருவேறு விதமாகப் பதில் தருகின்றீர்கள்.
இதில் எது உண்மை?" என்று கேட்டார். அதற்கு அவளுடைய தந்தை,
"நான் என்னுடைய முன்னோர் எப்படித் தோன்றினார்கள் என்று
சொன்னேன். உன் தாயோ அவளுடைய முன்னோர்கள் எப்படித் தோன்றினார்கள்
என்று சொல்கின்றார். இதில் குழம்புவதற்கு என்ன இருக்கின்றது?"
என்றார்.
இதைக் கேட்டு சமையறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த மனைவி தன்னுடைய
கணவன்மீது செல்லமாய் கோபம் கொண்டு முகத்தைத்
திருப்பிக்கொண்டாள். உடனே கணவன் மனைவிடத்தில் சென்று, அவளை சமாதானப்படுத்தி
ஒரு வழிக்குக் கொண்டுவர அக்குடும்பத்தில் இன்பம் கரைபுரண்டு ஓடியது.
சிறு சிறு சண்டைகள், ஒருவர் ஒருவர்மீதான உள்ளார்ந்த அன்புப் பரிமாற்றங்கள்.
இவைகள்தான் ஒரு குடும்பத்தை இன்னும் உறவில் வலுப்பெறச்
செய்கின்றன. "நெருப்பில்லாமல் மனித முன்னேற்றமில்லை, குடும்ப
உறவில்லாமல் வாழ்க்கை இல்லை" என்பார் ராபர்ட் இங்கர்சால் என்னும்
எழுத்தாளர். ஆம், மனித முன்னேற்றத்திற்கான விதை குடும்பத்தில்தான்
விதைக்கப்படுகின்றன. பின்னர் அது வளர்ந்து நிறைந்த பலனைக்
கொடுக்கின்றது.
இன்று நாம் திருக்குடும்ப விழாவைக் கொண்டாடுகின்றோம். இந்த நல்ல
நாளில் இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை நமக்கு என்ன
செய்தியைத் தருகின்றது என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு
செய்வோம்.
கல்லாலும் மண்ணாலும் செங்கற்களாலும் மட்டும் ஒரு வீடானது கட்டப்படுவதில்லை,
அன்பினாலேயே ஒரு வீடு கட்டப்படுகின்றது" என்பார் மறைந்த நா.
முத்துக்குமார் என்ற கவிஞர். ஆம், அன்பில்தான் ஒரு வீடானது கட்டப்படுகின்றது.
அப்படி அன்பில் கட்டப்படாத வீடானது ஒருபோதும் உறுதியாக இருக்காது
என்பதுதான் உண்மை.
நற்செய்தி வாசகத்தில் அன்பில் கட்டப்பட்ட ஒரு வீட்டைக்
குறித்துப் படிக்கின்றோம். அக்குடும்பம் வேறெதுவும் கிடையாது
இயேசு மரி சூசையை உள்ளடக்கிய திருக்குடும்பம்தான். இக்குடும்பத்தில்தான்
எத்துணை அன்பு கரைபுரண்டு ஓடியிருக்கும் என்று நினைத்துப்
பார்க்கும்போது உண்மையிலே மெய்சிலிர்க்கின்றது. குறிப்பாக அன்னை
மரியா தன்னுடைய கணவர் சூசையப்பர் மீதும், இயேசுவின் மீதும்
மிகுந்த அன்பு கொண்டிருப்பார்; ஒருசிறந்த மனைவிக்குரிய,
தாய்க்குரிய இலட்சணங்களோடு விளங்கி இருப்பாள் என்று சொன்னால்
அதில் மாற்றுக் கருத்து கிடையாது. இத்தனைக்கும் மரியா தன்னுடைய
கணவராகிய யோசேப்பு தன்னைவிட நிறைய வயது மூத்தவராக இருந்தாலும்கூட
அவர்மீது மிகுந்த அன்பு காட்டியிருப்பார். அந்த அன்பில்
யோசேப்பும் மகிழ்ந்திருப்பார்.
ஆகையால், ஒவ்வொரு மனைவிமாரும் மரியாவைப் போன்று தன்னுடைய
கணவர்மீதும் பிள்ளைகள் மீதும் மிகுந்த அன்பு காட்டி அவர்களை
சிறந்த விதமாய் பராமரிக்கவேண்டும் என்பதுதான் நம்முடைய மனதில்
பதிய வைக்கவேண்டிய முதன்மையான செய்தியாக இருக்கின்றது.
யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய
இரண்டாம் வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம், "கடவுள் நமக்குக்
கொடுத்த கட்டளைப்படி, (அவருடைய மகன் இயேசுவிடம் நம்பிக்கை
கொண்டு) ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்தவேண்டும். கடவுளுடைய
கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கின்றார்;
கடவுளும் அவரோடு இணைந்திருக்கின்றார் " என்று. ஆம், அன்னை
மரியா கடவுளின் கட்டளையான அன்பினை தன்னுடைய கணவர்மீதும்,
மகன்மீது காட்டி அதனைக் கடைப்பிடித்துவந்தார். அதனாலேயே
கடவுளின் அன்பு அக்குடும்பத்தில் என்றும் குடிகொண்டிருந்தது.
(மரியா சூசையப்பர்மீது அன்பு காட்டினார் என்று சொல்லும்போது,
சூசையப்பர் மரியாவின் மீதும் இயேசுவின் மீதும் அன்பு
காட்டவில்லை என்று அர்த்தம் கிடையாது. அவரும் மரியாவின் மீது
மிகுந்த அன்பு காட்டினார் என்பதே உண்மை)
ஒரு குடும்பம் சிறந்த, முன்மாதிரியான குடும்பமாக விளங்குவதற்கு
அந்த குடும்பத்தில் இருக்கின்ற மனைவி மட்டும் அன்புள்ளம்
கொண்டவராக இருப்பது போதாது. அக்குடும்பத்தில் இருக்கின்ற
கணவனும் அன்புள்ளம் கொண்டவராக இருக்கவேண்டும். அதிலும்
குறிப்பாக கணவர் தன்னுடைய மனைவிக்கு மிகுந்த
மதிப்பளிப்பவராகும் அவருக்கு முன்னுரிமை கொடுப்பவராகவும்
இருக்கவேண்டும். அப்போதுதான் அந்தக் குடும்பம் முன்மாதிரியான
குடும்பமாய் விளங்கமுடியும். இயேசு, மரி, சூசையைக் கொண்ட
குடும்பம் திருக்குடும்பமாக துலங்கியதற்கு சூசை தன்னுடைய மனைவி
மரியாவுக்கு மிகுந்த மதிப்பளித்ததை ஒரு காரணமாகச் சொல்லலாம்.
இன்றைய நற்செய்தி வாசகம் சூசை தன்னுடைய மனைவி மரியாவுக்கு
முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்ததற்கு மிகச் சிறந்த உதாரணமாகச்
சொல்லலாம்.
நற்செய்தி வாசகத்தில் சூசையும் மரியாவும் குழந்தை இயேசுவும்
பாஸ்கா விழாவிற்காக எருசலேம் செல்கின்றார்கள். சென்ற இடத்தில்
குழந்தை இயேசுவோ தொலைந்து போய்விடுகின்றார். மூன்று நாட்களாக
அவரை சூசையும் மரியாவும் தேடி, இறுதியில் எருசலேம்
திருக்கோவிலில் கண்டு கொள்கின்றார்கள். இங்கே ஒன்றைப்
புரிந்துகொள்ளவேண்டும், எருசலேம் திருக்கோவிலானது எல்லாரும்
குழுமி இருக்கக்கூடிய ஒரு பொதுவான இடம். பொது இடத்தில் பெண்கள்
பேசுவதற்கு உரிமை மறுக்கப்பட்ட காலம் அது. அக்காலத்திலும் கூட
சூசை தன்னுடைய மனைவி மரியாவைப் பேச அனுமதிக்கின்றார்.
அதனால்தான் மரியா, "மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார்,
உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு
தேடிக்கொண்டிருந்தோம்" என்கின்றார். மரியா பொது இடத்த்தில்
இவ்வாறு பேசியது, சூசை தன்னுடைய மனைவி மரியாவுக்கு மிகுந்த
முக்கியத்துவமும் மதிப்பும் அளித்து வந்தார் என்பதைத்தான்
காட்டுகின்றது. ஆகையால், ஒவ்வொரு கணவரும் தன்னுடைய மனைவிக்கு
மிகுந்த மதிப்பளித்து, அவருக்கு தன்னுடைய வாழ்வில்
முக்கியத்துவம் தரவேண்டும் என்பதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு
எடுத்துக்காட்டுகின்றது.
இன்றைக்கு நிறைய குடும்பங்களில் மனைவிக்கு மதிப்பில்லாத
சூழ்நிலை நிலவிக்கொண்டிருக்கின்றது. மனைவியை ஏதோ போகப்
பொருளாகவும் குழந்தை பெற்றெடுக்கின்ற எந்திரமாகவும்
பார்ப்பதுகூட நிறைய குடும்பங்களில் நிலவும் அவல நிலையாகத்தான்
இருக்கின்றது. இந்த நிலை மாறவேண்டும், சூசையைப் போன்று ஒவ்வொரு
கணவரும் தன்னுடைய மனைவிக்கு மிகுந்த மதிப்பளிப்பவராக
இருக்கவேண்டும்.
மனைவியும் கணவனும் ஒரு திருக்குடும்பத்தைக் கட்டி
எழுப்புவதற்கு எப்படி இருக்கவேண்டும் என்று சிந்தித்த நாம்,
ஒரு குடும்பத்திற்கு கிடைக்கின்ற மிகப்பெரிய சொத்தாகிய
பிள்ளை(கள்) எப்படி இருக்கவேண்டும், அது எப்படி
வளர்க்கப்படவேண்டும். குடும்பத்தில் அதனுடைய பங்கு என்ன என்று
சிந்தித்துப் பார்க்க அழைக்கப்படுகின்றோம்.
இன்றைய முதல் வாசகமும் நற்செய்தி வாசகமும் பெற்றோர்கள்
தன்னுடைய பிள்ளைகளை இறைவழியில் எப்படி வளர்த்தெடுக்கவேண்டும்
என்பதைக் குறித்துப் பேசுகின்றன. முதல் வாசகத்தில் அன்னா
தனக்குப் பிறந்த சாமுவேலை ஆண்டவரின் ஆலயத்தில்
ஒப்புக்கொடுத்து, அவரை கடவுளின் பிள்ளையாகவே
வளர்த்தெடுக்கின்றாள். நற்செய்தி வாசகத்தில் சூசையும்
மரியாவும் பனிரெண்டு வயது நிரம்பிய இயேசுவை எருசலேமில் நடந்த
பாஸ்காவிற்கு அழைத்துச் சென்று, அவரை இறைவழியில்
வளர்த்தெடுத்து, கடவுளுக்கு உகந்தவராக மாற்றுகின்றார்கள்.
இவ்வாறு சூசையும் மரியாவும் குழந்தை இயேசுவை நல்வழியில்
வழிநடத்திச் சென்ற மிகச் சிறந்த பெற்றோரை விளங்குகின்றார்கள்.
இன்றைக்கு உள்ள பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை இறைநெறியில்
வளர்கின்றார்களா?, அவர்கள்மீது உண்மையான அன்பு
காட்டுகின்றார்களா? அவர்களுக்கு போதுமான நேரத்தை
ஒதுக்கின்றார்களா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக
இருக்கின்றது.
குருவானவர் ஒருவர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலையிலும்
அருகாமையில் இருக்கும் சிறைச்சாலைக்குச் சென்று, அங்கிருக்கும்
கைதிகளுக்கு ஆற்றுப்படுத்தும் பணியினைச் (Counselling) செய்வது
வழக்கம். ஒருநாள் அவர் அங்கு சென்றபோது ஒரு சிறைக்கூடத்தில்
பதினெட்டு வயதுக்கும் குறைவான சிறுவன் ஒருவன் இருந்தான். அவர்
அவனைத் தன் அருகே அழைத்து, அவன் தோள்மேல் கைகளைப் போட்டு
வாஞ்சையோடு பேசியபோது அவன் கண்ணீர்விட்டு அழுது தன்னுடைய கதையை
குருவானவரிடம் சொல்லத் தொடங்கினான். "என்னுடைய குடும்பம்
வசதியான குடும்பம், என்னுடைய அப்பா எப்போதும் வேலை வேலை என்று
அலையக்கூடியவர், அம்மாவோ என்னை எதற்கும் கண்டுகொள்ளவே
மாட்டார். அதனால்தான் இந்த சிறிய வயதிலேயே கெட்டு, இந்த
சிறைச்சாலையில் கிடக்கின்றேன். ஒருவேளை என்னுடைய தந்தையும்
தாயும் உங்களைப் போன்று என் தோள்மீது கைகளைப் போட்டு
வாஞ்சையோடு பேசி என்னுடைய தவற்றைச் சுட்டிக்காட்டியிருந்தால்,
இன்றைக்கு நான் இந்த நிலை ஆளாகியிருக்க மாட்டேன்" என்றான்.
ஆம், நிறைய குழந்தைகள் இன்றைக்குக் கெட்டுப்போவதற்குக் காரணமே
பெற்றோர்களின் சரியான வளர்ப்பு இல்லாமையால்தான். ஆனால்,
சூசையும் மரியும் இதற்கு விதிவிலக்கு. அவர்கள் இயேசுவை
இறைவனுக்கு உகந்த வழியில் வளர்த்தெடுத்து, உலகம் போற்றும்
பிள்ளையாக மாறினார்கள்.
ஆகவே, திருக்குடும்பப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நல்ல
நாளில் நம்முடைய குடும்பங்கள் திருக்குடும்பமாக விளங்க இயேசு
மரி, சூசையை நம்முடைய முன்மாதிரியாகக் கொண்டு வாழ்வோம். ஒருவர்
மற்றவர்மீது உண்மையான அன்பு காட்டுவோம், ஒருவர் மற்றவருக்கு
உகந்த மதிப்பளிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
குழந்தையே தந்தை
திருக்குடும்ப விழா
1 சாமுவேல் 1:20-22, 24-28
1 யோவான் 3:1-2, 21-24
லூக்கா 2:41-52
"இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்"
என்று ஆண் பெண் ஏற்றுக்கொண்டு, "ஆதாம் தன் மனைவி ஏவாளுடன் கூடி
வாழ்ந்தான். அவள் கருவுற்றுக் காயினைப் பெற்றெடுத்தாள். அவள்,
'ஆண்டவரின் அருளால் ஆண் மகன் ஒருவனை நான் பெற்றுள்ளேன்" என்று
சொன்ன மனிதக் குடும்பம் கடந்து வந்த பாதையை நினைக்கும்போது,
குடும்பம் என்ற நிறுவனம் இன்று தேவையற்ற சுமையாக, அல்லது
தேவைக்கேற்ற சுகமாகப் பார்க்கும் நிலையில் வந்து நிற்கிறது.
இந்தப் பின்புலத்தில் இன்று நாம் கொண்டாடும் "திருக்குடும்ப
திருவிழா"வை எப்படிப் பொருள் கொள்வது? கடவுளால் படைப்பின்
தொடக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட சமூகத்தின் அடிப்படை அலகான
குடும்பம் ஒரு தோல்வியா?
"குழந்தையே தந்தை" என்ற மையக்கருத்தில் இன்றைய நாளில்
சிந்திப்போம்.
ஆங்கிலத்தில், 'தெ சைல்ட் இஸ் த ஃபாதர் ஆஃப் தெ மேன்'
(குழந்தையே மனிதனின் தந்தை) என்ற ஒரு சொல்லாடல் உண்டு. இது
ஆங்கில ஆல்பம் பாடல் ஒன்றின் வரிதான். இதை எழுதியவர்கள் பிரயன்
வில்சன் மற்றும் ஃபான் டைக் பார்க்ஸ். இதன் பொருள் என்ன?
'குழந்தை எப்படி மனிதனின் தந்தையாக இருக்க முடியும்? மனிதன்
தான் குழந்தையின் தந்தை' என நினைக்கிறீர்களா? நீங்கள்
நினைப்பது சரிதான். ஆனால், இந்தச் சொல்லாடலின் பொருள் வேறு.
குழந்தையாக இருக்கும்போது ஒருவர் கற்றுக்கொள்ளும்
பழக்கங்களும், பண்புகளுமே ஒருவரை மனிதனாக உருவாக்குகின்றன.
இந்த நிலையில் குழந்தை மனிதனின் தந்தையாக இருக்கிறது.
குழந்தையின் பழக்கங்களும், பண்புகளும் எங்கிருந்து வருகின்றன?
குடும்பத்திலிருந்துதான். குழந்தையை தந்தையாக மாற்றுவது
குடும்பம்.
திருக்குடும்பத் திருவிழாவின் வாசகங்கள் நம்மை குழந்தை பிறப்பு
நிகழ்வுகளிலிருந்து குழந்தை வளர்ப்பு நிகழ்வுக்கு அழைத்துச்
செல்கின்றன. குழந்தைகள் தந்தையர்களாக உருவெடுக்க குடும்பம்
அவசியமானது என்பதை இன்றைய மூன்று வாசகங்களும் நமக்குச்
சொல்கின்றன.
இன்றைய முதல் வாசகம் (காண். 1 சாமு 1:20-22, 24-28) சாமுவேல்
நூலின் முதல் பக்கங்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
சாமுவேலின் பிறப்பு மிகவும் சோகமான பின்பலத்தோடு தொடங்குகிறது.
எப்ராயிம் மலைநாட்டைச் சார்ந்த எல்கானாவுக்கு இரண்டு மனைவியர்
- அன்னா ('அருள்'), பெனின்னா ('விலைமதிப்பில்லாத கல்' 'முத்து'
'மாணிக்கம்' 'மரகதம்'). பெனின்னாவுக்கு குழந்தைப்பேறு
இருக்கிறது. அன்னாவுக்கு இல்லை. இதை ஒரு குறையாக அன்னாவிடம்
சுட்டிக்காட்டுகிறார் பெனின்னா. ஆக, வீட்டில் அவருக்கு
மிஞ்சியதெல்லாம் கண்ணீரும், கேலிப்பேச்சும்தான். இதை கடவுளிடம்
முறையிட சீலோவில் அமைந்திருந்த ஆண்டவரின் ஆலயத்திற்கு
செல்கின்றார். அங்கிருந்த ஏலி என்னும் குரு அன்னாவின் செபத்தை
குடிவெறி என தவறாகப் புரிந்து கொண்டு அவரைக் கடிந்து
கொள்கிறார். அதே நேரத்தில், 'மனநிறைவோடு செல்ல. இஸ்ரயேலின்
கடவுள் நீ அவரிடம் விண்ணப்பித்த உனது வேண்டுகோளை
கேட்டருள்வார்' என்று நல்ல வார்த்தையும் சொல்கிறார். மேலும்,
அன்னா ஆண்டவருக்கு ஒரு வாக்குறுதியும் கொடுக்கிறாள். அன்னாவின்
எதிர்பார்ப்புக்களைவிட கடவுளின் அருள் மிகுதியாக இருக்கிறது.
அன்னா ஒரு குழந்தையைப் பெற்றெடுத்ததோடல்லாமல், அந்தக் குழந்தை
இஸ்ரயேலின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராக மாறுகிறது.
சாமுவேல் இந்த நிலைக்கு உயர்ந்ததற்கு அன்னா மிக முக்கியக்
காரணம். முதலில், அன்னா குழந்தையின் உடல் ஊட்டத்திற்கு
உதவுகிறார். மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் பால் கொடுக்கிறார்.
அடுத்து, தன் குழந்தையைச் சரியான பாதையில் தூக்கி
நிறுத்துகின்றார். 'நான் அவனை ஆண்டவரிடமிருந்து கேட்டேன்'
என்று சொல்லி, குழந்தைக்கு 'சாமுவேல்' எனப் பெயரிடுகிறாள்.
இவள் பெயரிட்டது போலவே, குழந்தையும் வளர்ந்து தன் வாழ்க்கை
முழுவதும் கடவுள் சொல்வதைக் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
மேலும், அன்னா தன் கணவரிடம், 'பையன் பால் குடி மறந்ததும் அவனை
எடுத்துச் செல்வேன். அவன் ஆண்டவர் திருமுன் சென்று என்றும்
அங்கே தங்கியிருப்பான்' என்கிறாள். இவ்வாறாக, குழந்தையின்
வாழ்க்கைக்கான முடிவை தானே எடுக்கின்றாள். அக்காலச் சமுதாயம்
அத்தகைய உரிமையை தாய்க்கு வழங்கியது. 'மேமல்ஸ்' என்று
சொல்லப்படும் பாலூட்டி இனம் (சில விலங்குகள் மற்றும்
மனிதர்கள்) தன் குழந்தைக்கு கொடுக்கும் மார்பகப் பாலை
நிறுத்தும், அல்லது குழந்தை தாயிடம் பால் குடிக்கும் நேரம்தான்
பால்குடி மறக்கும் பருவம். இது குழந்தையின் வாழ்வில் மிக
முக்கியமான பருவம். இந்த பருவத்தில்தான் குழந்தை
சார்புநிலையிலிருந்து, தனித்தன்மை (அடானமி) நிலைக்கு கடந்து
போகின்றது. ஆங்கிலத்தில் இந்த பருவத்தை 'வீனிங் பிரியட்' என
அழைக்கின்றனர். 'வீன்' என்ற ஆங்கில வார்த்தைக்கு 'பழுத்தல்'
(அதாவது, பழம் பழுத்தல்) என்பது பொருள். திராட்சை செடியில்
பழுத்த கனிக்கு இனி அந்தச் செடியில் வேலையில்லை. அது தன்
தாயாகிய செடியை விட்டு விடைபெறும் நேரம் வந்துவிட்டது. இனி அது
தாயோடு ஒட்டிக்கொண்டிருந்தால், புழு வைத்து தாய்க்கும்
ஆபத்தாகிவிடும். தனக்கும்; ஆபத்தாகிவிடும். பால்குடி
பருவத்தில் தாய் என்னும் திராட்சைச் செடியிலிருந்து உறவுநிலை
மாறத் தொடங்குகிறது குழந்தைக்கு. ஒரு உறவிலிருந்து அடுத்த
உறவுக்கு மாறும் பாதைதான் இந்தப் பருவம். ஆனால் இதை தாயின்
உறவின் முறிவு என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. உளவியல்
அடிப்படையில் எந்த ஒரு குழந்தை இந்த பருவத்தை சரியாக
கடக்கிறதோ, அந்தக் குழந்தையே 'நிறைவு பெற்ற குழந்தை'
(ஃபுல்பில்ட்) என்று அழைக்கப்படுகிறது. ஏன்? ஒரு குழந்தை அதிக
நாள் பால் குடித்தது என்றால் அது பிற்காலத்தில் அடுத்தவர்களை
சார்ந்தே நிற்கும் அல்லது அடுத்தவர்களைக் கேட்டே
முடிவெடுக்கும் மனிதராக உருப்பெறுகிறது. குறைந்த நாளே பால்
குடித்தது என்றால், அடிப்படையிலேயே பாதுகாப்பற்ற, யாரிடமும்
ஒட்டிக்கொள்ளாத, தன்னை மட்டுமே மையப்படுத்துகின்ற மனிதராக
உருப்பெறுகிறது. சாமுவேலின் தாய் தன் குழந்தையை ஒரு
நிறைவுபெற்ற குழந்தையாக ஆண்டவருக்கு அர்ப்பணம் செய்ய
விழைகிறாள்.
ஆண்டவரின் இல்லத்திற்கு குழந்தையை அழைத்துச் செல்கின்ற அன்னா,
'அவன் தன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவருக்கே
அர்ப்பணிக்கப்பட்டவன்' என்று கடவுளுக்கான நாசீராக
ஒப்படைக்கின்றாள். அவன் 'ஆண்டவருக்கு' அல்ல, 'ஆண்டவருக்கே'
அர்ப்பணிக்கப்பட்டவன். ஆக, அவனுடைய அர்ப்பணம் இனி வேறு
யாருக்கும் இல்லை. ஆண்டவருக்கு மட்டுமே. இப்படியான கடினமான,
தூய்மையான அர்ப்பண வாழ்வு மற்ற இஸ்ரயேலருக்கு ஒரு பாடமாக
இருந்தது. அவர்களைத் தூய்மை வாழ்வுக்குத் தூண்டியது. இத்தகைய
உயர்ந்து அர்ப்பணத்திற்குத் தன்னை அர்ப்பணிக்கிறாள் அன்னா. தன்
ஒரே மகனை, கடவுள் கொடுத்த கொடையை அவருக்கே கொடுக்கிறாள். இதுவே
அன்னாவின் உயர்ந்த தியாகம். தன் மகனைத் தனக்கென
வைத்துக்கொள்ளாமல் ஆண்டவரின் இல்லத்தில் அவன் வளர, அவருடைய
அழைப்பைக் கேட்டு இஸ்ரயேலின் நடுவராக, ஆள்பவராக,
அருள்பணியாளராக மாற விட்டுவிடுகின்றாள்.
சாமுவேல் என்ற குழந்தை இத்தகைய தந்தை என்ற நிலை அடையக் காரணம்
அன்னாவும் அவருடைய கணவரும்தான், அதாவது, அவருடைய
குடும்பம்தான். அன்னா தன் குழந்தையை உச்சி முகர்ந்து
கொண்டாடிவிட்டு, ஆண்டவரிடம் கொடுத்துவிடுகிறார். இதுதான்
முழுமையான அர்ப்பணம். அதாவது, எதையும் திரும்ப எதிர்பார்க்காத
அர்ப்பணம். இந்த அர்ப்பணம்தான் குடும்பத்தில் கணவனையும்,
மனைவிiயும் இணைக்கிறது. சேர்ந்து வாழ்தல் அல்லது ஒரேபாலினத்
திருமணம் அல்லது வாடகைத் தாய்-தந்தை
- இந்த எல்லாவற்றிலும்
ஒருவர் மற்றவருக்கு சொல்வது என்ன? 'உன் இடத்தில் நான் யாரையும்
வைக்க முடியும்!' ஆனால், திருமணம் என்ற உறவில் மட்டும்தான்,
'நீ எனக்கு மட்டும்தான்' என்ற நிலை உருவாகிறது.
இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 யோவா 3:1-2, 21-24) கடவுளின்
குடும்பம் என்ற பெரிய குடும்பத்தைப் பற்றிப் பேசுகிறது.
'கடவுளின் மக்கள்' என அழைக்கப்படும் மக்கள், அந்த நிலையில்
நிலைத்திருக்க, 'நம்பிக்கை,' 'அன்பு' என்ற இரண்டு பண்புகள்
தேவைப்படுகின்றன. அல்லது, 'நம்பிக்கை' என்ற கணவனும், 'அன்பு'
என்ற மனைவியும் இணைந்து 'கடவுளின் மக்களை' பெற்றெடுக்கின்றனர்.
இந்த இரண்டும் கடவுளின் மக்களை அவர்கள் தொடர்ந்து அதே நிலையில்
நிலைத்திருக்க உதவி செய்கின்றன.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 2:41-52)
திருக்குடும்பம் ஒரு பிரச்சினையைச் சந்திக்கிறது. சிறுவன்
இயேசுவைக் காணவில்லை. திருக்குடும்பம் பாஸ்கா விழாவைக் கொண்டாட
எருசலேம் செல்கிறது. அந்த நேரத்தில் இயேசுவுக்கு வயது 12. யூத
சமூகத்தில், 12 வயதில்தான் ஒரு குழந்தை முழுப்பருவம் அடைகிறது.
இந்த வயதிலிருந்து அக்குழந்தை யூதச் சட்டங்களைத்
தெரிந்துகொள்ளவும், அவற்றின்படி நடக்கவும் வேண்டும் என்பது
வழக்கம். அந்தச் சட்டங்களில் ஒன்றுதான் எருசலேமுக்குத்
திருப்பயணம் செல்வது. இந்த வழக்கப்படியே, இயேசுவை
அழைத்துக்கொண்டு தங்களின் ஆண்டு ஆன்மீகக் கடமைகளை நிறைவேற்ற
திருக்குடும்பம் எருசலேமுக்கு வருகிறது.
இங்கே நற்செய்தியாளர் லூக்காவின் நோக்கம் இயேசுவைக் கடவுளின்
மகன் என்று முன்வைப்பதாகவும், இயேசு செய்ய வேண்டிய பணிக்கான
அர்ப்பணத்தை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிறது. தன்
பெற்றோருடன் ஆலயம் வரும் இயேசு, அவர்களிடமிருந்து தன்னை
விடுவித்துக்கொண்டு தன் தந்தையின் இல்லத்தில்
தங்கிவிடுகின்றார். அந்த இல்லத்தில்தான் அவர் மறைநூல்
வல்லுநர்கள் மறைநூலைப் புரிந்துகொள்ளும் விதம் பற்றிக்
கேள்வியெழுப்புகின்றார். சிறுவனாய் இருந்தாலும், அவருக்குத்
தன் பயணம் முழுவதும் இந்த ஆலயத்தை மையப்படுத்தியதே என்று அவர்
அறிந்திருந்தார்.
இயேசுவின் பெற்றோர்களின் நிலை மிகவும் கடினமானதாக இருக்கிறது.
இது மரியாவின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது. இருந்தாலும்,
தாங்கள் செய்ய வேண்டிய வேலையைச் சரியாகச் செய்கிறார்கள். முதன்
முதலாக இயேசுவை எருசலேமுக்கு அழைத்து வந்து அவருக்கு அந்த
நகரையும், ஆலயத்தையும் அறிமுகம் செய்கின்றனர். காணாமல்போன
இயேசுவைக் கண்டுபிடித்தபின் அவரைக் கடிந்துகொள்ளும் மரியா
இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டவுடன் மௌனம் காக்கிறார்:
'இந்நிகழ்ச்சிகளையெல்லாம் உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்.'
ஆக, இயேசுவின் பெற்றோர் இயேசு என்னும் குழந்தையை அறிவு,
கட்டின்மை, ஞானம், உடல்வளர்ச்சி பெற்ற தந்தையாக
மாற்றுகின்றனர்.
இவ்வாறாக, குழந்தையே தந்தையாக மாறுவதற்கு அதன் குடும்பம் மிக
அவசியம். அது சாமுவேல், இயேசுவின் சிறிய குடும்பமாக
இருந்தாலும் சரி. அல்லது, கடவுளின் மக்கள் என்ற பெரிய
குடும்பம் என்றாலும் சரி. தன்னலமில்லாத் தாயாக தன் ஒரே மகனைத்
தயாரித்துக் கடவுளுக்குக் கொடுத்தாள் அன்னா. நம்பிக்கை மற்றும்
அன்பின் வழியே கடவுளின் குழந்தையாக மாற முடியும் என தன்
குழுமத்திற்கு அறிவுறுத்துகிறார் யோவான். தங்களின் இரத்த
உறவுக் குடும்பத்தைக் கடந்த ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர் தன்
மகன் என அறிந்துகொள்கின்றனர் இயேசுவின் பெற்றோர். இவ்வாறாக,
பெற்றோர்கள் தங்கள் வாழ்வின் சூழல்கள் வௌ;வேறாக இருந்தாலும்
தங்களின் தாராள உள்ளத்தாலும், தியாகத்தாலும் தங்கள்
குழந்தைகளைத் தந்தையராக்குகின்றனர். அத்தந்தையர்கள்,
'ஆண்டவரின் இல்லத்தில் தங்கியிருப்போர் பேறுபெற்றோர்' (திபா
84) என்ற நிலையை அடைகின்றனர்.
இப்படியான ஒரு ரொமான்டிக் குடும்பமாக இன்றைய நம் குடும்பங்கள்
இருப்பதில்லை.
கணவன்-மனைவி சண்டை, திருமணத்திற்குப் புறம்பே உறவு, அவ்வுறவைத்
தக்க வைக்க தன் துணையையும், பிள்ளைகளையும் கொல்லும் நிலை,
குடும்ப வன்முறை, மணமுறிவு, உடைந்த குடும்பங்கள் என நிறைய
எடுத்துக்காட்டுகளை நாம் அன்றாடம் செய்தித்தாள்களிலும், மற்ற
ஊடகங்களிலும் பார்க்கிறோம். நம் குடும்பமும் இந்த ஒரு
இக்கட்டான நிலையில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறது. தங்கள்
குழந்தைகள்மேல் பொறுப்புணர்வு குறைந்த பெற்றோர்களையும், தங்கள்
பெற்றோர்களை மதிக்காத குழந்தைகளையும்தான் இன்று நாம் அதிகம்
பார்க்கிறோம். இந்தப் பின்புலத்தில் திருக்குடும்பம் நமக்கு
முன்மாதிரியாக இருக்கிறது.
பெற்றோர்களின் வாழ்க்கைமுறை குழந்தைகளை நிறையப் பாதிக்கிறது.
'நண்டு புறாவைப் பெற்றெடுப்பதில்லை' என்பது ஆப்பிரிக்க பழமொழி.
ஆக, பெற்றோர்களைப் போலவே பிள்ளைகளும் இருக்கிறார்கள்,
இயங்குகிறார்கள். ஒரு சமூகத்தின் வளர்ச்சியின் அளவுகோலாக
இருப்பது குடும்பமே.
இன்று நாம் நம் இருப்பில் இருக்க நம் குடும்பங்கள் காரணமாக
இருப்பதுபோல, நம் குழந்தைகளின் இருப்பு இருக்க நம்
குடும்பங்கள் காரணமாக இருத்தல் வேண்டும். மனுக்குலத்தின் மிகத்
தொன்மையான இந்த நிறுவனத்திலிருந்தே மனுக்குலம் தழைக்கிறது.
இந்நிறுவனம் வழியாகவே குழந்தை தந்தையாகிறது.
ஏனெனில், குழந்தையே தந்தை.
அன்னாவின் தியாக உள்ளம், எல்கானாவின் மனைவியை மதிக்கும் குணம்,
சாமுவேலின் நீடித்த அர்ப்பணம், யோசேப்பின் தேடல், மரியாளின்
ஏக்கம், இயேசுவின் பணித்தெளிவு ஆகிய அனைத்தும் நம்
குடும்பங்களுக்கும் ஊக்கம் தருவனவாக.
இன்றைய நாளில் நம் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, நம்
உடன்பிறந்தவர்கள், உறவினர்கள் அனைவரையும் எண்ணிப்பார்த்து
இவர்களின் இருப்பிற்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம். இவர்களே
நம் ஒவ்வொருவரின் வேர்கள்.
குழந்தையரைத் தந்தையர்களாக, தாயார்களாகக் கனவு கண்டவர்களும்,
அந்தக் கனவுகளை நனவுகளாக்கியவர்களும் இவர்களே!
(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)
Faculty Member
Saint Paul's Seminary
Tiruchirappalli - 620 001
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
|
|