|
ஆண்டு B |
|
கிறிஸ்து பிறப்புக்காலம் -
திருக்குடும்பப் பெருவிழா |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
உனக்குப் பிறப்பவனே உனக்குப்பின் உரிமையாளன்
ஆவான்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 15: 1-6;
21: 1-3
ஆண்டவரின் வாக்கு ஆபிராமுக்கு ஒரு காட்சி வழியாக வந்து அறிவித்தது:
"ஆபிராம்! அஞ்சாதே. நான் உனக்குக் கேடயமாக இருப்பேன். உனக்குப்
பெரும் கைம்மாறு கிடைக்கும்." அப்பொழுது ஆபிராம், "என் தலைவராகிய
ஆண்டவரே, எனக்கு என்னதான் தருவீர்? எனக்கோ குழந்தையே இல்லை!
தமஸ்கு நகர் எலியேசர்தான் எனக்குப் பின் என் இல்லத்திற்கு உரிமை
மகன் ஆகப்போகிறான்! நீர் எனக்குக் குழந்தை ஒன்றும் தராததால் என்
வீட்டு அடிமை மகன் எனக்குப் பின் உரிமையாளன் ஆகப்போகிறான்" என்றார்.
அதற்கு மறுமொழியாக, "இவன் உனக்குப் பின் உரிமையாளன் ஆகமாட்டான்.
ஆனால், உனக்குப் பிறப்பவனே உனக்குப் பின் உரிமையாளன் ஆவான்"
என்று ஆபிராமுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது.
அப்பொழுது ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, "வானத்தை
நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப்
போலவே உன் வழிமரபினரும் இருப்பர்" என்றார்.
ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு
நீதியாகக் கருதினார். ஆண்டவர் தாம் கூறியிருந்தபடி சாராவைக் கண்ணோக்கினார்.
ஆண்டவர் தம் வாக்குறுதிக்கேற்ப சாராவுக்குச் செய்தருளினார்.
கடவுள் வாக்களித்தபடி, குறிப்பிட்ட அதே காலத்தில் சாரா கருத்தாங்கி,
ஆபிரகாமுக்கு அவரது முதிர்ந்த வயதில் ஒரு மகனைப்
பெற்றெடுத்தார். ஆபிரகாம் தமக்குப் பிறந்த, சாரா தமக்குப்
பெற்றுக்கொடுத்த, மகனுக்கு `ஈசாக்கு' என்று பெயரிட்டார்.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
தி.பா:
105: 1-2. 3-4. 5-6. 8-9 (பல்லவி: 8a)
=================================================================================
பல்லவி: ஆண்டவர் தம் உடன்படிக்கையை என்றென்றும் நினைவில்
கொண்டுள்ளார்.
1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்!
அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள். 2 அவருக்குப்
பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு
செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! பல்லவி
3 அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத்
தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! 4 ஆண்டவரையும் அவரது ஆற்றலையும்
தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! பல்லவி
5 அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவு கூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும்,
அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள்.
6 அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட
யாக்கோபின் பிள்ளைகளே! பல்லவி
8 அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்;
ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை
நினைவுகூர்கின்றார். 9 ஆபிரகாமுடன் தாம் செய்துகொண்ட உடன்படிக்கையையும்
ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில்
கொண்டுள்ளார். பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
ஆபிரகாம், சாரா, ஈசாக்கு ஆகியோரின் நம்பிக்கை.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 11:
8,11-12,17-19
ஆபிரகாம் தாம் அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, உரிமைப்பேறாகப்
பெறவிருந்த இடத்திற்குச் சென்றதும் நம்பிக்கையினால்தான். தாம்
எங்கே போகவேண்டும் என்று தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச்
சென்றார். ஆபிரகாம் வயது முதியவராயும் சாரா கருவுற இயலாதவராயும்
இருந்தபோதிலும், அவர் ஒரு தந்தையாவதற்கான ஆற்றல் பெற்றதும் நம்பிக்கையினால்தான்.
ஏனெனில் வாக்களித்தவர் நம்பிக்கைக்குரியவர் என அவர் கருதினார்.
இவ்வாறு, உயிரற்றவர் போலிருந்த இந்த ஒருவரிட மிருந்து வானத்திலுள்ள
திரளான விண்மீன்களைப் போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப்
போலவும் கணக்கற்ற மக்கள் பிறந்தனர். ஆபிரகாம் சோதிக்கப்பட்டபோது
ஈசாக்கைப் பலியிடத் துணிந்தது நம்பிக்கையினால்தான்.
"ஈசாக்கின் மூலமே, உன் வழிமரபு விளங்கும்" என்ற வாக்குறுதியை
அவர் பெற்றிருந்தபோதிலும், அவர் தம் ஒரே மகனைப் பலியிட முன் வந்தார்.
ஏனெனில், இறந்தோரைக் கடவுள் உயிரோடு எழுப்ப வல்லவர் என்பதை அவர்
உணர்ந்திருந்தார். எனவே, அவர் தம் மகனை மீண்டும்
பெற்றுக்கொண்டார். பின்பு நடக்க இருந்ததற்கு இது ஓர் அறிகுறி.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
எபி 1: 1-2
அல்லேலூயா, அல்லேலூயா! பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர்
வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம்
மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி
வாசகம்
=================================================================================
பாலன்
வளர்ந்து ஞானம் நிறைந்தவராய் இருந்தார்.
+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 22-40
மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது,
குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக்
கொண்டு சென்றார்கள்.
ஏனெனில், "ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்"
என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது. அச்சட்டத்தில்
கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை
அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.
அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர்
நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட
ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார்.
"ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை" என்று
தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார். அந்த ஆவியின் தூண்டுதலால்
அவர் கோவிலுக்கு வந்திருந்தார்.
திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச்
செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்தபோது,
சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி,
"ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன்
போகச் செய்கிறீர். ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு
செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற
இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப்
பெருமை" என்றார்.
குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும்
வியப்புற்றனர்.
சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி,
"இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும்
காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும்.
இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும்
ஒரு வாள் ஊடுருவிப் பாயும்" என்றார்.
ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர்
ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர்; மணமாகி ஏழு ஆண்டுகள்
கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்; அவருக்கு வயது எண்பத்து
நான்கு. அவர் கோவிலை விட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும்
பகலும் திருப்பணி செய்துவந்தார். அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து
கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும்
அக்குழந்தையைப்பற்றிப் பேசினார்.
ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்து முடித்த
பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத்
திரும்பிச் சென்றார்கள். குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால்
நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
அல்லது குறுகிய வாசகம்
பாலன் வளர்ந்து ஞானம் நிறைந்தவராய் இருந்தார்.
+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 22, 39-40
மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது
குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக்
கொண்டு சென்றார்கள்.
ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்து முடித்த
பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத்
திரும்பிச் சென்றார்கள். குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால்
நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 1
=================================================================================
அந்த கணவன் மனைவி இருவரும் வயதானவர்கள். நாற்பது வருடத்திற்கும்
மேல் தாம்பத்யம் நடத்தியவர்கள். மிகப்பெரிய செல்வந்தனாக
வேண்டும் என்ற கனவில் மிதந்தவர் அந்தக் கணவர். ஆனால், அவரது ஆசை
நிறைவேறாமலேயே மரணப்படுக்கையில் விழுந்தார். அந்தக் கடைசிக் காலத்திலாவது
மனைவியின் அன்பை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்,
உறவினர் ஒருவர் சொன்னார் "உன் மனைவி எத்தனை அன்பானவள்
தெரியுமா?, கல்யாணம் ஆன புதிதில், நீ உன் அலுவலகத்தில் பணத்தை
கையாடல் செய்து வேலையை இழந்தாய். அப்போது உன் அப்பாவும் அம்மாவும்
கூட "நீ எனக்குப் பிள்ளையே கிடையாது" என்று சொல்லி, உன்னைப்
பிரிந்து போனார்கள். ஆனால், உன் மனைவி மட்டும் உன்னோடுதான் இருந்தாள்.
பிறகு தொழில் தொடங்கப்போகிறேன் என்று பல லட்ச ரூபாயை வங்கிக்
கடனாக வங்கி ஒரு ஷோரூம் ஒன்றை ஆரம்பித்தாய். அதில் பெரிய நஷ்டம்
வந்து கடன்காரனாகி கடைசியில் அந்த தொழிலும் கைவிட்டுப்போனது.
உன்னோடு நெருக்கமாயிருந்த நண்பர்கள் கூட அந்த நேரத்தில் விலகிப்
போனார்கள். அப்போதும் உன் மனைவி உன்னோடு இருந்தாள். பிறகு
கெட்ட சகவாசங்கள், தீய பழக்கங்கள் வந்து சேர, ஒழுக்கம் கெட்டவாழ்க்கை
வாழ்ந்து வியாதியஸ்தனானாய். அப்போது நீ பெற்ற பிள்ளைகளே, உன்னை
உதறிவிட்டுப் போனார்கள். ஆனால், அப்போதும் உன்னோடு இருந்தது உன்
மனைவி மட்டும்தான். இதிலிருந்து உனக்கு என்ன புரிகிறது?" என்று
அந்தக் கணவனை நோக்கிக் கேட்டார் உறவினர். அதற்குக் கணவர்
சொன்னார்: "எனக்குக் கெட்டது நடந்த ஒவ்வொரு நேரத்திலும் இவள்
என் பக்கத்தில் இருந்திருக்கிறாள். இவள் துரதிர்ஷ்டத்தால்தான்
நான் இப்படிக் கஷ்டப் பட்டிருக்கிறேன்".
இதைக் கேட்ட உறவுக்காரர் எதுவும் பேசாது அமைதியானார். குடும்பத்தில்
கணவன் மனைவியிடம் உண்மையான அன்பும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும்,
புரிந்துகொள்ளுதலும், சகிப்புத்தன்மையும் இல்லையென்றால் பிரச்னைகளுக்கு
மேல் பிரச்னைகளும் சண்டைகளும்தான் வரும் என்பதை இந்த நிகழ்வு
அருமையாக எடுத்துக்கூறுகின்றது. இன்று நாம் திருக்குடும்பப்
பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். திருக்குடும்பப்
பெருவிழாவைக் கொண்டாடுவதன் நோக்கமே நமது குடும்பங்களை
திருக்குடும்பமாகக் கட்டி எழுப்புவதற்குத் தான். எனவே, நாம் எப்படி
நமது குடும்பங்களை திருக்குடும்பமாகக் கட்டியெழுப்பப் போகிறோம்
என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
"மனிதர்கள் சிறந்து விளங்கும் சமூகத்தைப் பெறவேண்டும் என்றால்
குடும்பத்தைத் தவிர வேறு வழியில்லை என்று சரித்திரம் நமக்கு
போதிக்கிறது" என்பார் ரே லைமன் வில்பர் என்ற அறிஞர். ஆம், இது
உண்மை. ஒரு சமுதாயம் செழித்தோங்கி வளரவேண்டும் என்றால், அதற்கான
அடித்தளம் குடும்பத்தில் இடப்படவேண்டும். குடும்பங்கள் நன்றாக
இல்லாத பட்சத்தில், சமூகமும் நன்றாக இருப்பதற்கு வழியில்லை என்பதுதான்
நாம் புரிந்துகொள்ளவேண்டிய உண்மை.
நம்முடைய குடும்பங்களை நல்ல குடும்பங்களாக, திருக்குடும்பமாக
கட்டிஎழுப்ப நாம் என்ன செய்ய வேண்டும் என சிந்தித்துப்
பார்த்து நிறைவு செய்வோம். அதற்கு முதலாவது நம்மிடத்தில் இருக்கவேண்டியது
குறைகளை அல்ல, நிறைகளைப் பார்க்கவேண்டிய மனநிலை. இன்று குடும்பங்கள்
சிதைத்து, சின்னாபின்னமாகிப் போவதற்கு அடிப்படைக் காரணம் குறைகளைக்
கண்டுபிடிக்கும் மனபான்மையினால்தான். கணவன் எதைச் செய்யும்
குறைகண்டுபிடிக்கும் மனைவியர் நிறைப்பேர் இருகிறார்கள். அதேநேரத்தில்
மனைவி எதைச் செய்தாலும் குறைகண்டுபிடிக்கும் கணவன்மார்கள் அதிகம்பேர்
இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களால் ஒரு நல்ல குடும்பத்தைக்
கட்டியெழுப்ப முடியாது என்பதே உண்மை. இன்றைக்கும் குறட்டைவிட்டதற்கெல்லாம்
கோர்ட் வாசல் ஏறும் கணவன் மனைவிகள் இருக்கிறார்கள் என்பது வேதனையான
காரியம்.
ஆனால் இதற்கு முற்றிலும் மாறாக, குறைகளை அல்ல, நிறைகளை மட்டுமே
பார்த்துப் பழகிய ஒரு தம்பதியினரைக் குறித்து இன்றைய முதல்வாசகத்தில்
படிக்கின்றோம். அவர்கள்தான் ஆபிராகம் சாராள் தம்பதியினர். இவர்கள்
இருவருக்கும் நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியமே இல்லை. ஆனாலும்கூட
அவர்கள் ஒருவர் மற்றவரைக் குறைகூறிகொண்டிருக்கவில்லை. சாராள்
கருவுற இயலாதவர் என்று ஆபிரகாம் குறைகூறிக்கொண்டிருக்கவில்லை,
அதேநேரத்தில் சாராள் தன்னுடைய கணவர் ஆபிரகாம் வயது முதிர்ந்தவராக
இருக்கிறார் என்று குறைகூறிக்கொண்டிருக்கவில்லை. மாறாக ஒருவர்
மற்றவரை குறைநிறைகளோடு ஏற்றுக்கொண்டனர். சிறந்த தம்பதியினராக
விளங்கினார்கள். ஆகையால் ஒரு குடும்பம் சிறந்த குடும்பமாக இருப்பதற்கு
முதன்மையாக கணவன் மனைவி இடத்தில் நிறைகளை மட்டுமே பார்க்கும்
மனநிலை பெருகவேண்டும்.
ஒரு குடும்பம் நல்ல குடும்பமாக/ திருக்குடும்பமாக இருப்பதற்கான
இரண்டாவது தகுதி அந்த குடும்பம் இறைநம்பிக்கையில் வாழவேண்டும்
என்பதாகும். இன்றைக்கு நம்முடைய (கிறிஸ்தவக்) குடும்பங்களில்
இறைநம்பிக்கை இல்லை, ஆழமான விசுவாசம் இல்லை, ஏன், குடும்ப ஜெபம்கூட
இல்லை. அதனால்தான் அடித்தளம் இல்லாத கட்டடங்கள் போன்று குடும்பங்கள்
சிதைவுற்றுக்கிடக்கின்றன;
ஆனால் இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்களில் இடம்பெறும் ஆபிரகாம்
குடும்பமாக இருக்கட்டும் அல்லது யோசேப்பு மரியாள் குடும்பமாக
இருக்கட்டும், இரண்டு குடும்பங்களுமே இறைநம்பிக்கையில்
நிலைத்திருந்தன என்று சொன்னால் அது மிகையாகாது. ஆபிரகாம் தன்னுடைய
வாழ்வின் எல்லாச் சூழ்நிலைகளிலும் ஆண்டவர்மீது நம்பிக்கைகொண்டிருந்தார்.
அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார். அதனால்தான் ஆண்டவர்
ஆபிரகாமைப் பார்த்து, "வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால்,
விண் மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்"
என்கிறார். யோசேப்பும் மரியாளும் இறைவன்மீது அசைக்கமுடியாத நம்பிக்கை
வைத்து வாழ்ந்தார்கள் என்றால் அது மிகையில்லை. ஏரோது மன்னன் குழந்தை
இயேசுவைக் கொல்வதற்குச் சூழ்ச்சி செய்தபோதும், இயேசுவை
கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த சிமியோனின் இறைவாக்கைக்
கேட்டபோதும், பனிரெண்டு வயதில் இயேசு கோவிலில் காணாமல்போனபோதும்
அவர்கள் இறைவன்மீது நம்பிக்கையோடு இருந்தார்கள் என்பதை உறுதிபடச்
சொல்லலாம்.
ஆகவே, நம்முடைய குடும்பங்கள் இறைநம்பிக்கையில் வளரும்போது அவை
திருக்குடும்பங்களாக மாறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
நிறைவாக நமது குடும்பங்கள் திருக்குடும்பங்களாக மாறுவதற்கு
நாம் செய்யவேண்டியது குடும்பங்களை அன்பில் கட்டியெழுப்ப
வேண்டும் என்பதாகும். "நீரின்றி அமையாது உலகு என்பதுபோல, அன்பின்றியும்
உலகம் அமையாது. குடும்பத்தில் நல்லன்பும், பரிவும் இருக்கின்றபோது
அத்தகைய அன்பு சமூதாயத்திற்கும் பரவும், அது உலகையே அன்புமயமானதாக
மாற்றிவிடும். தூய பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்தில்
கூறுவார், "நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், அவரது
அன்பிற்குரிய இறைமக்கள்.... ஆகையால் ஒருவரை ஒருவர்
பொறுத்துக்கொள்ளுங்கள் ஒருவரைப் பற்றி ஒருவருக்கு ஏதாவது
முறையீடு இருந்தால் மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்ததுபோல
நீங்களும் மன்னிக்கவேண்டும். இவையனைத்திற்கும் மேலாக, அன்பையே
கொண்டிருங்கள். அதுவே இவையனைத்தையும் பிணைத்து நிறைவுபெறச்
செய்யும்". (கொலோ 3:12-14).
திருக்குடும்பத்திலும் ஆபிரகாம் குடும்பத்திலும் ஆழமான, உண்மையான
அன்பு நிலவியிருக்கும். அதனால்தான் அவர்கள் சிறந்த குடும்பங்களைக்
கட்டியெழுப்ப முடிந்தது. நம்முடைய குடும்பங்களிலும் உண்மையான
அன்பு நிலவுகிறபோது, குடும்பங்கள் திருக்குடும்பங்களாக மாறும்
என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
இப்படி கணவன் மனைவியரிடத்தில் நிறைகளைப் பார்க்கும் மனபான்மையும்
இறைநம்பிக்கையும் உண்மையான அன்பும் இருக்கவேண்டும் என்று
சிந்தித்த நாம், அந்த கணவன் மனைவியினது அன்பின் வெளிப்பாடாக வரும்
குழந்தைச் செல்வங்களை எப்படி வளர்ப்பது என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
ஏனென்றால், இக்காலக் குழந்தைகளே எதிர்காலத்தில் தலைவன் தலைவியாக
மாறுகிறார்கள். எனவே அவர்கள் நன்முறையில் வளர்க்கப்படும் பட்சத்தில்
சமுதாயத்தில் நல்லமனிதர்கள் பெருகுவார்கள் என்பதில் எந்தவொரு
மாற்றுக்கருத்தும் கிடையாது.
"எந்த குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே,
பின் நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே" என்பான்
கவிஞன் ஒருவன். ஒரு குழந்தையின் வளர்ச்சியில் தாய் மட்டுமல்ல,
தந்தையும் சிறப்பான பங்களிப்பைச் செய்கிறார்கள். அவர்கள்
தங்கள் வழியாக பிறந்திருக்கும் குழந்தைக்கு முன்மாதிரியான
வாழ்க்கையை வாழ்ந்துகாட்டுகிறபோது அவர்கள் நல்ல மனிதர்கள்
மாறுவார்கள் என்பது உறுதி. ஆனால் பெற்றோர்களின் தாறுமாறு
வாழ்க்கையைப் பார்த்துவிட்டு, குழந்தைகள் சீரழிந்து போகின்ற
நிலையைத்தான் இன்றைக்குப் பார்க்கின்றோம்.
வகுப்பறையில் ஆசிரியர் ஒரு மாணவர்களைப் பார்த்துக்கேட்டார்:
"வேகமாகச் செல்லக்கூடியது அம்பா? துப்பாக்கிக்குண்டா?" என்று.
அதற்கு அந்த மாணவன், "இரண்டும் இல்லை. என்னுடைய அப்பாதான்
வேகமாகச் செல்வார்?" என்றான். ஒருநிமிடம் திகைத்துப் போன
ஆசிரியர் அவனிடம், "அது எப்படி?" என்று கேட்டார். அதற்கு அவன்,
"என்னுடைய தந்தை வேலை பார்க்கும் அரசு அலுவலகத்தில் ஐந்து
மணிக்குத்தான் வெளியே விடுவார்கள். ஆனால் என்னுடைய தந்தை
நான்கு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துவிடுவார். இப்போது
சொல்லுங்கள். யார் வேகமாகச் செல்கிறார் என்று?". இதைக் கேட்ட
அந்த ஆசிரியர் எதுவும் பேசாது அமைதியானார்.
இப்படிப்பட்ட ஒரு பொறுப்பற்ற, கடமை உணர்வு இல்லாத ஒரு
தந்தையைப் பார்த்து வாழும் மகன் எப்படி வளர்வான் என்பதே நாமே
சிந்தித்துப் பார்த்துக்கொள்ளவேண்டியதுதான். ஆகையால் ஒவ்வொரு
தாய் தந்தையும் தங்களுடைய பிள்ளைகளுக்கு தாங்கள்தான் முதல்
கதாநாயகர்கள்/ கதாநாயகிகள் என்ற ரீதியில் முன்மாதிரியான
வாழ்ந்துகாட்டவேண்டும். அதேநேரத்தில் பிள்ளைகளும் தங்களுடைய
பெற்றோருக்குக் கீழ்படிந்து வாழவேண்டும். எப்படி இயேசு
கடவுளுக்கும் பெற்றோருக்கும் உகந்தவராய் வாழ்ந்தாரோ அதைப்
போன்று.
ஆகவே, திருக்குடும்பப் பெருவிழாக் கொண்டாடும் இந்த நல்ல நாளில்
கணவன் மனைவியர் நிறைகளைப் பார்க்கும் மனநிலையோடும், இறை
நம்பிக்கையோடும் அன்பும் வாழவேண்டும். அதே நேரத்த்தில்
பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைகளுக்கும் முன்மாதிரியான
வாழ்க்கை வாழ்ந்துகாட்டவேண்டும். அப்படி நடக்கும்போது நமது
குடும்பங்கள் திருக் குடும்பங்களாக மாறும் என்பதில் எந்தவித
சந்தேகமுமில்லை.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 2
=================================================================================
திருக்குடும்பத் திருவிழா
ஒன்றும் இரண்டும் ஐந்து
(டிசம்பர் 27, 2020)
சீராக்கின் ஞானம் 3:2-7,12-14
கொலோசையர் 3:12-21
லூக்கா 2:22-40
'மேன்மையான மனிதர்களின் ஏழு பண்புகள்' என்ற நூலின் ஆசிரியர்
ஸ்டீபன் கோவே அவர்கள், 'சினர்ஜி' ('கூட்டாற்றல்' அல்லது
'கூட்டொருங்கியக்கம்') என்பதை ஆறாவது பண்பாகக்
குறிப்பிடுகின்றார். இந்த வார்த்தையின் பொருள் என்ன? 'சினர்ஜி'
என்ற பெயர்ச்சொல், 'சுன்' மற்றும் 'எர்கவோ' ('இணை' மற்றும் 'செயலாற்றுதல்')
என்ற வினைச்சொல்லிலிருந்து வருகிறது. அதாவது, 'ஒன்றும் ஒன்றும்
மூன்று' என்பதுதான் இதன் பொருள். அது எப்படி? அதாவது, இரு ஆற்றல்கள்
இணையும்போது உருவாகும் ஆற்றல் அவற்றின் கூட்டுத்தொகையை விட அதிகம்.
பவுல் தன் திருமுகத்தில் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகின்றார்:
'கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப
அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும்
ஒத்துழைக்கிறார் (கூட்டொருங்கியக்கம்) செய்கிறார்' (காண். உரோ
8:28). நான் கடவுளை அன்பு செய்கிறேன். அவர் எனக்கு நன்மை
செய்கிறார். இங்கே நானும், கடவுளும் இரு ஆற்றல்கள். ஆனால், இந்த
இரு ஆற்றல்களும் இணையும்போது என் ஆற்றல் பன்மடங்கு பெரிதாகிறது.
ஓர் உருவகம் வழியாகப் புரிந்துகொள்வோம். ஒரு வண்டியில் பூட்டப்பட்ட
இரு மாடுகள் செயலாற்றி அந்த வண்டியை இழுக்கின்றன. அவை இணைந்து
செயல்படும்போது உருவாகும் ஆற்றல் அவற்றின் தனித்தனி ஆற்றலின்
கூட்டுத்தொகையைக் விட அதிகமாக இருக்கிறது. 10 பேர் கொண்ட
கிரிக்கெட் அணி ஒன்றில் 10 பேரின் தனித்தனி ஆற்றலால் அந்த அணி
வெல்வதில்லை. மாறாக, அணியின் 10 பேரும் தங்கள் ஆற்றல்களை ஒருவர்
மற்றவரோடு இணைத்துக்கொள்வதால்தான் அங்கே வெற்றி கிடைக்கிறது.
இன்று, யோசேப்பு-மரியா-இயேசு திருக்குடும்பத் திருவிழாவைக்
கொண்டாடுகின்றோம்.
'ஆண்' என்ற 'ஒன்றும்', 'பெண்' என்ற 'இரண்டும்' இணையும்போது அங்கே
உருவாகும் ஆற்றல் 'ஐந்து' என இருக்கிறது என்று இன்றைய இறைவார்;த்தை
வழிபாடு நமக்குச் சொல்கிறது. ஏனெனில், மனிதர்கள் குடும்பத்தை
உருவாக்குகின்றனர். இறைவனே அதைத் திருக்குடும்பம் ஆக்குகின்றார்.
குடிலின் நடுவே பாலன் இயேசு படுத்திருக்க, அவரின் வலப்புறமும்
இடப்புறமும் அவரின் கண்கள்மேல் தங்கள் கண்களைப் பதித்தவாறு
யோசேப்பும் மரியாவும் நிற்கின்றனர். இந்த மூன்று பேரையும் ஒரு
சேரப் பார்க்கும் நம் கண்கள் நம்மை அறியாமலேயே அவர்களின் கண்களில்
ஒன்றாகக் கலந்துவிடுகின்றன.
இன்றைய முதல் வாசகம் சீராக்கின் ஞானநூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
'ஏசு பென் சீராக்' என்னும் யூத ஞானியே இதன் ஆசிரியர். எபிரேயத்தில்
எழுதப்பட்ட நூலை அவருடைய பேரன் சீராக் கிரேக்கத்திற்கு மொழிபெயர்க்கிறார்.
நிறைய அறிவுரைப் பகுதிகள் காணக்கிடக்கும் இந்நூல் முழுக்க
முழுக்க குடும்ப ஞானம் பற்றியதாகவும், குடும்ப வாழ்வுக்குத்
தேவையான அறநெறிகள் கொண்டதாகவும் இருக்கிறது. 'உன் தந்தை, தாயை
மதித்து நட' என்னும் நான்காவது கட்டளையின் வாழ்வியல் நீட்சியாக
இருக்கிறது இன்றைய வாசகப் பகுதி. கீழ்ப்படிதல் என்பதை வெறும்
கட்டளையாக அல்லாமல் மதிப்புநிறை மனப்பாங்காகவே மாற்றிக்கொள்ள
வேண்டும் என அழைப்பு விடுக்கிறார் சீராக். பெற்றோரை மதித்தல்
நமக்கு இரண்டுநிலைகளில் ஆசீராக அமைகின்றது:
(அ) அது நீண்ட ஆயுளை நமக்குத் தருகிறது. இதை நாம் அப்படியே
நேரிடைப் பொருளில் எடுக்கத் தேவையில்லை. 'நீண்ட ஆயுள்' என்பது
உச்சகட்ட ஆசீர். ஏனெனில், மற்ற அனைத்தையும் நாம் பெற்றுக்கொள்ளலாம்.
நாம் வாழும் காலத்தை நீட்ட ஆண்டவரால் மட்டுமே இயலும்.
(ஆ) நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, நம் இறைவேண்டல்கள் கேட்கப்படும்.
பெற்றோரை மதிப்பவர்கள் பாவம் செய்வதில்லை. ஏனெனில், தான் செய்வதை
தன் தந்தை அல்லது தாய் ஏற்றுக்கொள்வாரா என்று நான் ஒரு நிமிடம்
யோசித்தால் அந்தச் செயலைச் செய்ய மாட்டேன். ஆக, பாவம் தானாகவே
குறைந்துவிடுகிறது. மேலும், பெற்றோரிடம் ஒருவர் இணக்கம்
கொண்டிருப்பதால், அங்கே இறைவன் உடனிருக்க, நம் இறைவேண்டல்கள்
கேட்கப்படுகின்றன.
மேலும், பெற்றோருக்குரிய மதிப்பு அவர்கள் செயலாற்றும் நிலையில்
இருப்பதால் அல்ல, மாறாக, அவர்களுடைய முதுமையிலும், அவர்களுக்கு
உடல் மற்றும் அறிவாற்றல் குன்றும்போதும் இருக்க வேண்டும்.
மேலும், அது நிபந்தனையற்றதாக இருத்தல் வேண்டும்.
பெற்றோரைக் கொண்டாடுவதால் ஒருவர் தன் கூட்டாற்றலை அதிகரித்துக்கொள்கின்றார்.
எனக்கு உடலில் ஆற்றல் இருக்க, என் அப்பாவுக்கு அனுபவத்தில் ஆற்றல்
இருக்க, என் அம்மாவுக்கு ஆன்மிகத்தில் ஆற்றல் இருக்க, இம்மூன்று
ஆற்றல்களும் இணைந்தால் வல்லசெயல் நடந்தேறுகிறது.
இன்றைய இரண்டாம் வாசகம் (காண். கொலோ 3:12-21), இறைமக்களுக்குரிய
அறிவுரைப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. கொலோசை நகரத்
திருஅவை மக்கள் பெற்றிருக்கின்ற அழைத்தலின் மேன்மையை அவர்களுக்கு
நினைவூட்டுகின்ற பவுல், 'இறைமக்களுக்குரிய பரிவு, இரக்கம், நல்லெண்ணம்,
மனத்தாழ்மை, கனிவு, பொறுமை ஆகிய பண்புகளால்' அவர்கள் தங்களை அணிசெய்ய
அழைப்பு விடுக்கின்றார். 'அணிசெய்தல்' அல்லது 'உடுத்திக்கொள்தல்'
என்னும் உருவகத்தைப் பயன்படுத்துகிறார் பவுல். ஏனெனில், இறைமக்கள்
சமூகமே ஒரு குடும்பம்தான்.
தொடர்ந்து, இரண்டாவது பகுதியில் குடும்பத்தில் திகழ வேண்டிய
அறநெறி பற்றி எழுதுகின்றார் பவுல். 'பெண்கள் ஆண்களுக்குப் பணிந்திருக்க
வேண்டும்' என்றும், 'ஆண்கள் பெண்களை அன்பு செய்ய வேண்டும்' என்றும்,
'பிள்ளைகள் பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டும்' என்றும் அறிவுறுத்துகிறார்
பவுல். இங்கே பணிதலும், கீழ்ப்படிதலும் அடிமைத்தனப் பண்புகள்
என எண்ணுதல் தவறு.
இறைமக்கள் குடும்பம் நற்பண்புகளால் தன்னை அணிசெய்யும்போதும்,
தனிநபர் குடும்பங்கள் பணிதல், அன்பு, மற்றும் கீழ்ப்படிதல்
கொண்டிருக்கும்போதும் அங்கே கூட்டொருங்கியக்கம் சாத்தியமாகிறது.
நற்செய்தி வாசகத்தில், திருக்குடும்பம் முதன்முதலாக எருசலேம்
செல்லும் நிகழ்வை வாசிக்கின்றோம். மூன்று காரணங்களுக்காக அவர்கள்
எருசலேம் செல்கின்றனர்:
(அ) குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க - ஏனெனில், தலைப்பேறு
அனைத்தும் ஆண்டவருக்கு உரியது. எனவே, நாம் விலைகொடுத்து அதை
மீட்டுக்கொள்ள வேண்டும். விலையாக ஒரு இளம் ஆடு அல்லது இரு மாடப்புறாக்கள்
கொடுக்க வேண்டும்.
(ஆ) தாயின் தூய்மைச் சடங்கு நிறைவேற்ற - ஆண் குழந்தையைப்
பெற்றெடுத்த தாய் 40 நாள்கள் தீட்டாக இருக்கிறார். அவர் 40
நாள்களுக்குப் பின் தன்னையே தூய்மைப்படுத்திக்கொள்ள வேண்டும் -
பெண் குழந்தையைப் பெற்றெடுத்தால் 80 நாள்கள் தீட்டு என்கிறது
மோசேயின் சட்டம்.
(இ) குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய - விருத்தசேதனம் என்பது
உடன்படிக்கையின் அடையாளமாக இருந்தது.
இயேசுவின் திருக்குடும்பம், இறைவனின் குடும்பத்திலிருந்த
சிமியோன் மற்றும் அன்னாவை தன்னை நோக்கி இழுத்துக்கொள்கிறது. இந்நிகழ்வில்,
இயேசுவின் பெற்றோர் ஆண்டவரின் திருச்சட்டத்துக்குப் பணிந்து
நடப்பவர்களாகவும், குழந்தை இயேசு, கடவுளுக்கு உகந்தவராகவும் இருக்கிறார்.
இவ்வாறாக, திருக்குடும்பம் இறைவனின், இறைவனின் அடியவர்களின்
கூட்டாற்றலின் இயங்குதளமாக இருக்கிறது.
திருக்குடும்பத் திருவிழா நமக்குத் தரும் பாடங்கள் எவை?
(அ) நம் குடும்பம் நம் வேர்கள்
நம் குடும்பத்தில்தான் நம் கால்கள் நிலைபெற்று நிற்கின்றன. அங்கே
நாம் வேர்விட்டு நிற்கின்றோம். நம் வேர்கள் கசப்பானதாக, பார்ப்பதற்கு
ஏற்புடையதாக இல்லாமல் இருந்தாலும் அவை இல்லையேல் நாம் இல்லை.
அவற்றால் நாம் வந்தோம், வளர்ந்தோம், ஊட்டம் பெற்றோம், நலம்
பெற்றோம். நம் குடும்பம் என்னும் வேர்களுக்காகவும், நாம் வளர,
வளர நம்மை அணைத்துக்கொண்ட குடும்பங்களுக்காகவும், நம் உறவினர்கள்
மற்றும் நண்பர்களின் குடும்பங்களுக்காகவும், இறைச்சமூகம் என்னும்
குடும்பங்களுக்காக நன்றி கூறுவோம் இன்று. தொடர்ந்து, நம்
குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களிடம் நாம் கற்றுக்கொண்ட அல்லது
கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பண்பை எடுத்து அதை நம் வாழ்வாக்க முயல்வோம்.
அப்பாவின் நேர்மை அல்லது கடின உழைப்பு, அம்மாவின் தியாகம் அல்லது
கனிவு, சகோதரியின் குழந்தை உள்ளம் அல்லது துடிப்பு, சகோதரரின்
உற்சாகம் அல்லது துணிச்சல் என எண்ணிப் பார்த்தல் சிறப்பு.
(ஆ) வலுவற்ற நிலையில் தாங்குவோம்
நம் அப்பா மற்றும் அம்மாவின் வலுவின்மை எது என்று சற்று நேரம்
யோசிப்போம். நோய், முதுமை, ஆற்றல் இழப்பு, பொருளாதார ஏழ்மை, தனிமை,
வறுமை, சோர்வு இப்படி பல்வேறு துன்பங்கள் அவர்களுக்கு இருக்கலாம்.
அவற்றை அவர்கள் பெரும்பாலும் நம்மிடம் காட்ட மாட்டார்கள். அவற்றை
நாம் எண்ணிப்பார்த்து அவர்களுக்கு நம் உடனிருப்பை உறுதி செய்தல்
சிறப்பு.
(இ) இறைமையக் குடும்பம்
எல்லாவற்றிலும் இறைவன் மட்டுமே நம் சிந்தனையில் இருந்தால்,
நாம் ஒருவர் மற்றவரை அன்புடனும் நடத்தி, பணிவுடனும், பரிவுடனும்
வழிநடப்போம்.
மனிதர்கள் குடும்பங்களை உருவாக்கலாம். இறைவன் மட்டுமே
திருக்குடும்பத்தை உருவாக்கின்றார்.
ஆகையால்தான், ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் குடும்பத்தில் ஆசீராகப்
பொழிகிறது என்கிறார் திருப்பாடல் ஆசிரியர்:
'உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர். நீர் நற்பேறும் நலமும்
பெறுவீர்!
உம் இல்லத்தில் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்.
உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச்
சூழ்ந்திருப்பர்.
ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பர்!'
(திபா 128)
(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 3
=================================================================================
|
|