என் மந்தையே, நான் ஆட்டுக்
கிடாய்களுக்கும் வெள்ளாட்டுக் கிடாய்களுக்கும் இடையே
நீதி வழங்குவேன்.
இறைவாக்கினர்
எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 34: 11-12, 15-17
தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு
கூறுகிறார்: நானே என் மந்தையைத் தேடிச் சென்று பேணிக்
காப்பேன். ஓர் ஆயன் தன் மந்தையினின்று சிதறுண்ட ஆடுகளைத்
தேடிச் செல்வது போல, நானும் என் மந்தையைத் தேடிப்
போவேன். மப்பும் மந்தாரமுமான நாளில் அவற்றை எல்லா இடங்களினின்றும்
மீட்டு வருவேன். நானே என் மந்தையை மேய்த்து, இளைப்பாறச்
செய்வேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
காணாமல் போனதைத் தேடுவேன்; அலைந்து திரிவதைத் திரும்பக்
கொண்டுவருவேன்; காயப்பட்டதற்குக் கட்டுப் போடுவேன்; நலிந்தவற்றைத்
திடப்படுத்துவேன். ஆனால், கொழுத்ததையும் வலிமையுள்ளதையும்
அழிப்பேன். இவ்வாறு நீதியுடன் அவற்றை மேய்ப்பேன்.
எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: உன்னைப்
பொறுத்தவரை, என் மந்தையே, நான் ஆட்டுக்கும் ஆட்டுக்கும்
இடையேயும் ஆட்டுக் கிடாய்களுக்கும் வெள்ளாட்டுக்
கிடாய்களுக்கும் இடையேயும் நீதி வழங்குவேன்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
- திபா 23: 1-2. 3. 5. 6 (பல்லவி:
1)
பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும்
குறையில்லை.
1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. 2 பசும்
புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான
நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். பல்லவி
3 அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப
எனை நீதிவழி நடத்திடுவார். பல்லவி
5 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை
ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம்
பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. பல்லவி
6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும்
பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின்
இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். பல்லவி
இரண்டாம் வாசகம்
கிறிஸ்துவின்
வருகையின்போது கடவுளே அனைத்திலும் அனைத்துமாய் இருப்பார்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு
எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 20-26,28
சகோதரர் சகோதரிகளே, இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார்.
அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும்
உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது.
ஒரு மனிதர் வழியாகச் சாவு வந்ததுபோல ஒரு மனிதர் வழியாகவே
இறந்தோர் உயிர்த்தெழுகின்றனர். ஆதாமை முன்னிட்டு அனைவரும்
சாவுக்குள்ளானது போலக் கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும்
உயிர் பெறுவர். ஒவ்வொருவரும் அவரவர் முறை வரும்போது உயிர்
பெறுவர். கிறிஸ்துவே முதலில் உயிர் பெற்றார். அடுத்து,
கிறிஸ்துவின் வருகையின்போது அவரைச் சார்ந்தோர் உயிர்
பெறுவர். அதன் பின்னர் முடிவு வரும்.
அப்போது கிறிஸ்து ஆட்சியாளர், அதிகாரம் செலுத்துவோர்,
வலிமையுடையோர் ஆகிய அனைவரையும் அழித்துவிட்டு, தந்தையாகிய
கடவுளிடம் ஆட்சியை ஒப்படைப்பார். எல்லாப் பகைவரையும்
அடிபணிய வைக்கும்வரை அவர் ஆட்சி செய்தாக வேண்டும்.
சாவே கடைசிப் பகைவன், அதுவும் அழிக்கப்படும். அனைத்துமே
மகனுக்கு அடிபணியும்போது தமக்கு அனைத்தையும் அடிபணியச்
செய்த கடவுளுக்கு மகனும் அடிபணிவார். அப்போது கடவுளே
அனைத்திலும் அனைத்துமாயிருப்பார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மாற் 11: 10
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக!
வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக!
அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
மானிடமகன்
மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில்
வீற்றிருப்பார்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து
வாசகம் 25: 31-46
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது:
`"வானதூதர் அனைவரும் புடைசூழ மானிடமகன் மாட்சியுடன் வரும்போது
தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும்
அவர் முன்னிலையில் ஒன்றுகூட்டப்படுவர்.
ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப்
பிரித்துச் செம்மறியாடுகளை வலப் பக்கத்திலும் வெள்ளாடுகளை
இடப் பக்கத்திலும் நிறுத்துவது போல் அம்மக்களை அவர்
வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார்.
பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப் பக்கத்தில்
உள்ளோரைப் பார்த்து, "என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே,
வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு
செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப் பேறாகப்
பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் நான் பசியாய்
இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய்
இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக
இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி
இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்;
நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்;
சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்"
என்பார்.
அதற்கு நேர்மையாளர்கள் "ஆண்டவரே, எப்பொழுது உம்மைப்
பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது
தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்?
எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக்கொண்டோம்?
அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்?
எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு
உம்மைத் தேடி வந்தோம்?" என்று கேட்பார்கள்.
அதற்கு அரசர், "மிகச் சிறியோராகிய என் சகோதரர்
சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம்
எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச்
சொல்லுகிறேன்" எனப் பதிலளிப்பார்.
பின்பு இடப் பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து,
"சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள்.
அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு
செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள்
செல்லுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள்
எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என்
தாகத்தைத் தணிக்கவில்லை. நான் அன்னியனாய் இருந்தேன்,
நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆடையின்றி
இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை.
நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக்
கவனித்துக் கொள்ளவில்லை" என்பார்.
அதற்கு அவர்கள், "ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ,
தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ,
சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு
செய்யாதிருந்தோம்?" எனக் கேட்பார்கள்.
அப்பொழுது அவர், "மிகச் சிறியோராகிய இவர்களுள்
ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை
எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச்
சொல்கிறேன்" எனப் பதிலளிப்பார். இவர்கள் முடிவில்லாத்
தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும்
செல்வார்கள்."
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
கிறிஸ்து
அரசர் பெருவிழா
சீனாவில் தோன்றிய மிகப்பெரிய சிந்தனையாளரான கன்பூசியஸ்
ஒருமுறை தன்னுடைய சீடர்களோடு மலைப்பாங்கான ஓர் இடத்திற்கு
சென்றுகொண்டிருந்தார். அவர் வழியெங்கும் தன்னுடைய சீடர்களுக்குப்
பலவற்றைக் கற்பித்துக்கொண்டே சென்றார்.
அப்பொழுது ஓரிடத்தில் கல்லறைத்தோட்டம் ஒன்று இருந்தது.
அதில் இளம்பெண் ஒருத்தி தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தாள்.
இதைப் பார்த்த கன்பூசியஸ் அந்த பெண் அருகே சென்று,
"
ஏனம்மா இப்படி அழுதுகொண்டிருக்கிறாய்?"
என்று
கேட்டார். அதற்கு அவர், "என்னுடைய மகனை கொடிய புலி ஒன்று
அடித்துக்கொன்று போட்டுவிட்டது. இப்போதுதான் நான் அவனை
அடக்க செய்துவிட்டு இருக்கிறேன்"
என்றாள். இவ்வாறு
சொல்லிவிட்டு அவள் தொடர்ந்தார், "
இந்தக் காட்டில்
கொடிய புலி ஒன்று அலைகிறது. அந்தப் புலிதான் என்னுடைய
கணவரையும், ஏன், என்னுடைய தந்தையையும் கொன்றுபோட்டது"
என்றாள். இதைக் கேட்ட கன்பூசியஸ் அந்தப் பெண்மணியிடம்,
"அப்படியானால் எதற்காக நீ இந்த இடத்தைவிட்டு இன்னும்
போகாமல் இருக்கிறாய், வேறொரு இடத்திற்குச் செல்லவேண்டியதுதானே?"
என்று கேட்டார். அதற்கு அவள், "இங்கே இருக்கக்கூடிய
அரசாங்கம் அவ்வளவு ஒன்றும் மோசமில்லை"
என்றாள்.
இதைக் கேட்ட கன்பூசியஸ் தன்னுடைய சீடர்கள் பக்கம்
திரும்பிப் பார்த்து, "
எனதருமைச் சீடர்களே!, "
ஒரு மோசமான
அரசாங்கம் புலியைவிடவும் மிகக் கொடியது, அது குடிமக்களின்
உயிரையே பறிக்க வல்லது"
என்று சொன்னார். ஆம், மக்களை
ஆட்சிசெய்யக்கூடிய அரசாங்கம் மிகக் கொடியதாக இருக்கும்
பட்சத்தில் மக்களின் நிலை மிகவும் பரிதாபமானதுதான்.
"
மக்கள் சுதந்திரமாகச் சிந்திக்கவும், பேசவும், எழுதவும்,
சாதி மத வேறுபாடின்றி வழிபாடு செய்யவும், சமூக அரசியல்,
பொருளாதார நீதி வழங்கவும், சமத்துவ சந்தர்பங்களை எல்லோருக்கும்
வழங்கவும் எல்லோரிடத்திலும் தனிமனித நன்மதிப்பையும்,
நாட்டு ஒற்றுமையையும் உறுதிபடுத்தும் வகையில் சகோதரத்துவத்தை
அளிக்கவும் வகைசெய்வதுதான் உண்மையான அரசாங்கமாகும் (இந்திய
அரசியலமைப்பு நிர்ணய சபைக் குழு, 1946 டிசம்பர் 9).
இன்று நாம் கிறிஸ்து அரசர் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம்.
தன்னை ஒருபோதும் அரசர் என்று அழைத்துக்கொள்ளாத இயேசுவை
ஓர் அரசராக பாவித்து விழாக் கொண்டாடுவது பொருத்தமாகுமா
என்ற கேள்வியையும் கடந்து, இயேசுவை ஓர் ஒப்பற்ற அரசராக
நினைத்து விழாக் கொண்டாடுகின்றோம். எனவே, கிறிஸ்து என்னும்
அரசரின் ஆட்சி எப்படிப்பட்டது, எது எப்படி மற்ற அரசுகளைவிட
உயர்ந்தது என்று சிந்தித்துப் பார்த்து
நிறைவுசெய்வோம்.
இந்த உலகத்தில் எத்தனையோ அரசுகள் தோன்றி இருக்கின்றன.
ஆனால் அவையெல்லாம் இன்றைக்கு மண்ணோடு மண்ணாக மக்கிப்
போய்விட்டன. உலகத்தையே தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவர நினைத்த மாவீரன் அலெக்ஸாண்டர்கூட தான் இறக்கும்போது
இந்த உலகத்திலிருந்து ஒன்றையும் கொண்டுபோகவில்லை என்பதைக்
குறித்துக்காட்ட இரண்டு கைகளையும் விரித்தவாரே இறந்துபோனான்.
அவன் இந்த உலகத்தில் இருந்தான் என்பது ஒரு வரலாற்றுச்
செய்தியாக, ஒரு நிலைத் தகவலாக மட்டுமே தேங்கி நிற்கிறது.
ஆனால் கிறிஸ்து அரசரோ அப்படியில்லை, இரண்டாயிரம் ஆண்டுகள்
கடந்து போன பின்னரும் இன்றைக்கும் அவர் நம்முடைய உள்ளங்களில்,
இல்லங்களில் ஆட்சி செலுத்துகிறார் என்றால், அங்கேதான்
அவருடைய ஆட்சியின் வல்லமையும் தனித்தன்மையும் வெளிப்படுகின்றன.
எனவே, அவருடைய ஆட்சி எப்படி தனித்துவமாக இருக்கிறது என்று
சிந்தித்துப் பார்ப்போம்.
முதலாவதாக கிறிஸ்துவின் அரசு நலிந்தவர்பால் அக்கறைகொள்ளக்கூடிய
அரசு. இன்றைக்கு உள்ள அரசாங்கம் பணம் படைத்தவருக்கும்,
பதவியில் உள்ளவர்களுக்கு மட்டுமே பணிந்துபோகக்கூடிய
அரசாங்கமாக இருக்கின்றது. ஏழைகளை, வறியவரை அது ஒரு
பொருட்டாகக்கூட கருதுவதில்லை என்பதுதான் நிதர்சன உண்மையாக
இருக்கின்றது. நாட்டில் பெரும் எண்ணிக்கையில் வாழும்
இம்மண்ணின் பூர்வகுடிகளான பழங்குடியினர், ஆதிவாசிகள்,
தலித்துகள் ஆகியோரின் தேவைகளை எந்தளவுக்கு கருத்தில்கொண்டு
செயல்படுகிறது என்பதை வைத்தே சொல்லிவிடலாம் இந்த அரசாங்கம்
ஏழைகள், நலிந்தவர் வறியவர்மீது எந்தளவுக்கு அக்கறை இல்லாமல்
இருக்கிறது என்று.
இதைதான் இன்குலாப் என்ற புரட்சிக் கவிஞன் இவ்வாறு
சொல்லிவைத்தான்: கன்னக்கோல் திருடர்கள் செங்கோல்
ஏந்தியதால் நாமிருக்கும் நாடு நமக்குரிமையாகால் டாலர்
மடியிலும் ரூபிள் அடியிலும் கால் பிடித்துக்
கைபிடித்துப் புரண்டுகொண்டிருக்கிறது"
.
ஆனால் கிறிஸ்துவின் அரசு அப்படியில்லை. அது
ஏழைகளுக்கும், நலிந்தவருக்கும், வறியவருக்கும் அதிக
முன்னுரிமை தருவதாக இருக்கின்றது. இறைவாக்கினர்
எசேக்கியல் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய
முதல்வாசகத்தில் தலைவராகிய ஆண்டவர், "
நானே என்
மந்தையைத் தேடிச் சென்று, பேணிக்காப்பேன். ஓர் ஆயன்
தன் மந்தையினின்று சிதறுண்ட ஆடுகளைத் தேடிச்
செல்வதுபோல, நானும் என் மந்தையைத் தேடித் போவேன்.
காணாமல் போனதைத் தேடுவேன்; அலைந்து திரிவதைத்
திரும்பக் கொண்டுவருவேன்; காயப்பட்டதைக்
கட்டுப்போடுவேன்; நலிந்தவற்றைத் திடப்படுத்துவேன்"
என்று கூறுகின்றார். இதை அப்படியே இயேசு தன்னுடைய
வாழ்வில் வாழ்ந்துகாட்டினார். அவர் சமுதாயத்தால்
புறக்கணிக்கப்பட்ட ஏழைகளை, அனாதைகளை, வறியவரை,
நோயாளிகளை, பாவிகளைத் தேடிச் சென்றார். அவர்களுக்கு
ஆறுதலையும் அரவணைப்பையும் தந்தார். அதனாலேயே அவர்
ஆட்சியாளர்களிடமிருந்து எதிர்ப்பையும்,
கட்டிக்கொண்டார். ஆகையால் கிறிஸ்துவின் அரசு
நலிந்தோருக்கான அரசு என்று சொன்னால் அது மிகையாகாது.
அடுத்ததாக கிறிஸ்துவின் அரசு நீதியின் அரசு. இன்றைக்கு
நாம் வாழும் இந்த சமுகத்தில் நீதியின் குரல்வளைகள்
நெறிக்கப்படுகின்றன, நீதிக்காகக் குரல்கொடுப்போருடைய
வாழ்வும் கேள்விக்குறியதாக இருக்கின்றது. வடகிழக்கு
இந்தியாவில் இராணுவத்தை அப்புறப்படுத்தவேண்டும் என்று
பத்தாண்டுகளுக்கும் மேல்
குரல்கொடுத்துக்கொண்டிருக்கும் ஜெரோம் சர்மிளா என்ற
சமூகப் போராளிக்கு இந்த அரசாங்கம் எந்தளவுக்கு
மதிப்பளித்திருக்கிறது என்பதை வைத்துப் பார்க்கும்போதே
நீதி எந்த நிலையில் இருக்கிறது எனப்
புரிந்துகொள்ளலாம்.
இத்தகைய பின்னணியில் கிறிஸ்துவின் அரசு எந்தளவுக்கு
நீதியின் அரசாக இருக்கிறது என சிந்தித்துப் பார்ப்பது
மிகவும் பொருத்தமானதாகும். முதல் வாசகத்தில், "
என்
மந்தையே!, நான் ஆட்டுக்கும் ஆட்டுக்கும் இடையேயும்
ஆட்டுக்கிடாய்களுக்கும், வெள்ளாட்டுக்கிடாய்களுக்கும்
இடையேயும் நீதி வழங்குவேன்"
என்கிறார் தலைவராகிய
ஆண்டவர். ஆண்டவர் இயேசு இதைத் தன்னுடைய வாழ்வில்
வாழ்ந்து காட்டினார். ஆனால் அதை நீதியாக
வெளிப்படுத்தால் இரக்கமாக, பரிவாக வெளிப்படுத்தினார்.
அதைதான் நாம் நற்செய்தி வாசகத்தில் ஆயனில்லா
ஆடுகள்போன்று இருந்த மக்கள்மீது பரிவுகொண்டார் என்று
படிக்கின்றோம் (மத் 14:14).
ஆகவே நீதியுள்ள அரசராகிய கிறிஸ்துவின் ஆட்சிக்கு
உட்பட்ட மக்களாகிய நாமும் நீதியை நமது வாழ்வில்
கடைபிடித்து வாழவேண்டும்.
"நெருப்பைக் கரையான் அழிக்க
முடியாது; நீதிமானைப் பழியும் பாவமும் நெருங்க
முடியாது. ஒவ்வொரு தனி மனிதனும் நீதியுடனும்,
நேர்மையுடனும் நடந்தால் பொது வாழ்வும் தானாகவே
தூய்மையடையும் என்பார் ஓமந்தூர் இராமசாமி. நாம்
நீதியுள்ள அரசரின் மக்களாக வாழ நீதியை, இரக்கத்தை நமது
வாழ்வில் கடைப்பிடித்து வாழ்வோம்.
மூன்றாவதாக கிறிஸ்துவின் அரசு தீமைகளை, சாவை வென்ற
அரசாக இருக்கின்றது. இந்த உலகில் வாழ்ந்த எத்தனையோ
அரசர்கள், மனிதர்கள் சாவை வெற்றிகொண்டு நிலைவாழ்வை வாழ
நினைத்தார்கள். அவர்களால் முடியவில்லை. அமெரிக்காவைக்
கண்டுபிடித்த அமெரிக்கோ வெஸ்புகி என்பவர் தன்னுடைய
குழுவோடு ப்ளோரிடா என்ற இடத்தில் அற்புத மூலிகைகள்
இருப்பதாகும், அதை உண்டால் அழியா வாழ்வு வாழலாம் என்ற
முயற்சியில் ஈடுபட்டார்கள். ஆனால் அவர்களுடைய
முயற்சியோ பயனில்லாமல்தான் போனது. ஆகையால்
கிறிஸ்துவைத் தவிர வேறு யாராலும் சாவை வெல்லமுடியாது
என்பதுதான் உண்மை.
இயேசு தன்னுடைய பாடுகள், உயிர்ப்பின் வழியாக சாவை
வெற்றிகொண்டார். இதைத்தான் தூய பவுல் இன்றைய இரண்டாம்
வாசகத்தில்,
"சாவே கடைசிப் பகைவன். அதுவும்
அழிக்கப்படும்" என்று கூறுகிறார் (1 கொரிந்தியர் 15).
ஆகவே, கிறிஸ்துவின் அரசு, சாவை வென்ற அரசு என்பதை
நினைத்து நாம் பெருமைகொள்ளவேண்டும்.
இப்படி கிறிஸ்து ஆட்சிசெலுத்தும் நலிந்தோர்மீது
அக்கறைகொள்ளகூடிய, சாவின்மீது வெற்றிகொண்ட, நீதியின்
அரசில் பங்குகொள்ளவேண்டுமேன்றால் நாம் செய்யவேண்டும்
என்பது நமது சிந்தனைக்கு உரியதாக இருக்கின்றது. நாம்
எத்தகைய வாழ்க்கை வாழ்ந்தால் கிறிஸ்துவின் அரசில்
பங்குகொள்ளலாம் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு
எடுத்துக்கூறுகின்றது. நற்செய்தி வாசகத்தில் நாம்
பசித்தோருக்கு உணவிடுவதன் வழியாக, தாகமாய்
இருப்போருக்கு தண்ணீர் கொடுப்பதன் வழியாக, ஆடையின்றி
இருப்போருக்கு ஆடை வழங்குவதன் வழியாக, அன்னியரை
வீட்டில் ஏற்றுக்கொள்வதன் வழியாக, நோயுற்றைவரைக்
கவனித்துக் கொள்வதன்வழியாக, சிறையில் இருப்போரை
பார்க்கச் செல்வதன் வழியாக கிறிஸ்துவின் அரசில்
பங்குபெறலாம் என்று படிக்கின்றோம். நாம் இத்தகைய
இரக்கச் செயல்களை நமது வாழ்வில் கடைபிடிக்கின்றோமா?
என்று சிந்தித்துப் பார்ப்போம்.
ஜான்ஸ் ஹோப்கின்ஸ் (Johns Hopkins) என்ற
மருத்துவமனையின் தலைவர் ஹோவார்ட் கெல்லி என்பவர்
ஒருநாள் மாலைவேளையில் ஒரு கிராமப்புறச் சாலையின்
வழியாக நடைபயற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது
அவருக்கு அடக்கமுடியாத தாகம் ஏற்பட்டது. அவர்
தண்ணீருக்கு என்னசெய்வது என்று சுற்றுமுற்றும்
பார்த்தார். அங்கே ஒரே ஒரு குடிசையைத் தவிர, வேறு
எதுவும் இல்லை. எனவே அவர் அந்த குடிசைக்குச் சென்று
தண்ணீர் கேட்கலாம் என்று விரைந்து சென்று கதவைத்
தட்டினார். அப்போது அந்த வீட்டிலிருந்து ஒரு சிறுமி
வெளியே வந்தாள். அவளிடத்தில் கெல்லி, "
தாகமாக
இருக்கிறது கொஞ்சம் தா"
என்று கேட்டார். உடனே அந்த
சிறுமி வீட்டிற்குள் சென்றது ஒரு டம்ளர் பால்
எடுத்துக்கொண்டு வந்து, அவருக்குக் குடிக்கக்
கொடுத்தார். அவர் அந்தப் பாலைக் குடித்துவிட்டு,
அவளுக்கு நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.
இரண்டு ஆடுகளுக்குப் பிறகு அந்த சிறுமி கொடிய நோயினால்
பாதிக்கப்பட்டு ஜான்ஸ் ஹோப்கின்ஸ் என்ற
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அவளுக்குச்
சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பெருந்தொகையை
கட்டணமாகக் கேட்டார்கள். அக்குழந்தையின் பெற்றோர்களோ
செய்தவதறியாது திகைத்து நின்றார்கள். அப்போது அங்கு
வந்த ஹோவார்ட் கெல்லி, சிறுமியின் மருத்துவ கட்டண
பில்லைப் பார்த்துவிட்டு, அதில், "
இச்சிறுமியின்
மருத்துவக் கட்டணம் ஏற்கனவே வசூலிக்கப்பட்டுவிட்டது,
அது வேறொன்றுமில்லை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இவள்
கொடுத்த ஒரு டம்ளர் பால்தான்"
என்று எழுதி வைத்தார்.
நாம் ஒருவருக்குச் செய்யும் சிறு உதவிக்கும்
(கிறிஸ்துவின் அரசில்) கைம்மாறு உண்டு என்பதை இந்த
நிகழ்வு நமது எடுத்துக்கூறுகிறது.
ஆகவே, கிறிஸ்து அரசர் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த
வேளையில், அவரது சிறந்த ஆட்சியில் பங்குகொள்ள நாம்
நம்மோடு வாழும் சகோதர சகோதரிகளுக்கு நாள் உதவிகளைச்
செய்வோம். கிறிஸ்து வழங்கும் நீதியை, இரக்கத்தை அன்பை
நிறைவாய் பெறுவோம்.
இயேசு கிறிஸ்து அனைத்துலக
அரசர்
(நவம்பர் 22, 2020)
எசேக்கியேல் 34:11-12, 15-17
1 கொரிந்தியர் 15:20-26, 28
மத்தேயு 25:31-46
விண்ணரசுக்கான அக்கறை
'வீடற்ற இயேசு' அல்லது 'இயேசு வீடற்றவர்' என்னும் கருத்துருவை
மையமாக வைத்து, திமோத்தி ஸ்மால்ஷ் என்ற கனடா நாட்டவர்
2013ஆம் ஆண்டு உருவாக்கிய வெண்கல உருவமானது இன்று உலகின்
பல பகுதிகளிலும் நிறுவப்பட்டு வருகிறது. ஒரு மர
பெஞ்சில், ஒரு பெரிய போர்வையைப் போர்த்திக்கொண்டு
கூனிக் குறுகிப் படுத்திருக்கும் நபரின் பாதங்களில்
சிலுவையின் ஆணிகள் பதிந்த தடங்கள் இருக்கின்றன. அவருடைய
ஒரே ஒரு கண் மட்டும் திறந்திருப்பது போல வைக்கப்பட்டுள்ள
தோற்றம் காண்பவரின் மனத்தை உருக்குவதாக இருக்கின்றது.
இந்த உருவம் நிறுவப்பெற்ற இடங்களில் எல்லாம் பல
வித்தியாசமான விமர்சனங்கள் எழுந்தன. இயேசுவைக் கேலி
செய்வது போல இது உள்ளது என்றனர் சிலர். சிலர், மத்தேயு
நற்செய்தியின் இறுதித் தீர்ப்பு பகுதியை எங்களுக்கு
நினைவூட்டுகிறது என்றனர். சிலர் இந்த உருவத்தின் காலடிகளில்
அமர்ந்து செபிக்கவும், அங்கே மெழுகுதிரிகள் ஏற்றவும்
தொடங்கினர்.
வீடற்ற இயேசுவைத் தொடர்ந்து, இன்று நாம், ஆடையற்ற, பசியுற்ற,
தாகமுற்ற, உடல்நலமற்ற, சுதந்திரமற்ற பல இயேசுக்களைப்
பார்த்துக்கொண்டேதான் இருக்கின்றோம்.
விண்ணரசுக்கான தயாரிப்பு, செயலாற்றுதல் என்று கடந்த
இரண்டு வாரங்கள் சிந்தித்தோம். அந்த வரிசையில், விண்ணரசுக்கான
அக்கறை இன்றைய நாளின் மையச் செய்தியாக அமைந்துள்ளது.
மண்ணிலிருந்து விண்ணுக்கு, இக்கரையிலிருந்து அக்கரைக்கு
நாம் செல்ல வேண்டுமெனில் அக்கறை அவசியம் என்கிறது இன்றைய
இறைவார்த்தை வழிபாடு.
திருவழிபாட்டு ஆண்டின் இறுதி வாரத்தின் தொடக்கமாகிய இன்று
நாம் இயேசு கிறிஸ்துவை அனைத்துலகுக்கும் அரசராகக்
கொண்டாடி மகிழ்கின்றோம். தன் அரசநிலை அல்லது அரசாட்சி
சின்னஞ்சிறியவர்கள்மேல் கொள்ளும் அக்கறையில் அடங்கியுள்ளது
என்று மொழிகின்ற கிறிஸ்து அரசர், தன்னையே சின்னஞ்சிறியவர்களுள்
ஒருவராக அடையாளப்படுத்திக்கொள்கிறார்.
இன்றைய முதல் வாசகத்திலிருந்து (காண். எசே
34:11-12,15-17) நம் சிந்தனையைத் தொடங்குவோம். எருசலேமின்
அழிவுக்கான காரணம் என்ன என்பதை அடிக்கடி நினைத்துப்
பார்க்கும் இறைவாக்கினர் எசேக்கியேல், 'இஸ்ரயேலர்களின்
ஆயர்களாகிய' தலைவர்களே எருசலேமின் அழிவுக்கு முக்கியக்
காரணம் என்று பழிசுமத்துகிறார். ஏனெனில், அவர்கள் தங்கள்
மக்களை மேய்ப்பதற்குப் பதிலாக, அவர்களை மேய்ந்தனர்.
வளர்ச்சிக்கான பாதையில் அவர்களை இட்டுச் செல்லாமல் அழிவுக்குரிய
சிலைவழிபாட்டுப் பாதையில் அவர்களை இட்டுச் சென்றனர்.
இன்றைய வாசகத்தில் நல்ல ஆயன் என்னும் புதிய தலைவரைப்
பற்றி எசேக்கியேல் பேசுகின்றார். இந்த நல்லாயன் ஆண்டவராகிய
கடவுளே.
நல்லாயனாகிய ஆண்டவராகிய கடவுள் மூன்று பணிகளைச்
செய்கின்றார்: ஒன்று, சிதறுண்ட ஆடுகளைத் தேடிச் சென்று
கூட்டிச் சேர்க்கின்றார். இங்கே, 'சிதறுண்ட ஆடுகள்' என்னும்
சொல்லாடல் பாபிலோனியாவில் நாடுகடத்தப்பட்டு அடிமைகளாக
வாழ்ந்த இஸ்ரயேல் மக்களைக் குறிக்கிறது. ஆண்டவராகிய
கடவுள் அவர்களை மீண்டும் ஒன்று சேர்ப்பதாகச் சொல்வது
அவர்கள் விரைவில் பெறவிருக்கின்ற விடுதலை வாழ்வைக்
குறிக்கின்றது. இரண்டு, காயத்திற்குக் கட்டுப் போட்டு,
நலிந்தவற்றைத் திடப்படுத்துகின்றார். சொந்த நாட்டிலேயே
அலைந்து திரிந்தவர்களும், பாபிலோனிய அடிமைத்தனத்தால்
சிதைந்து போனவர்களும் இங்கே அடையாளப்படுத்தப்படுகின்றனர்.
ஆண்டவராகிய கடவுள், அவர்களின் உடல் காயங்களுக்கும், விரக்தி,
சோர்வு, மரண பயம் என்னும் உள்ளத்தின் காயங்களுக்கும்
மருந்திடுகின்றார். அவர்களைத் திடப்படுத்தி வலுவூட்டுகின்றார்.
மூன்று, நீதியுடன் மேய்த்து, நீதி வழங்குகின்றார்.
'கொழுத்ததையும் வலிiயுள்ளதையும் அழிப்பேன்' என்னும் எச்சரிக்கை,
இஸ்ரயேலின் ஆயர்கள் தங்கள் ஆடுகளைப் பேணிக்காக்கத் தவறியதற்காக,
கடவுள் அவர்களுக்கு நீதியுடன் அருளும் தண்டனையை அவர்கள்
ஏற்றாக வேண்டும் என்பதைக் குறிக்கிறது. மேலும், ஒவ்வோர்
ஆடும் வலுவற்றதாய் இருந்தாலும், அதற்குரிய நீதி வழங்கப்பட
வேண்டும் என்பது ஆண்டவராகிய கடவுளின் விருப்பமாக இருக்கிறது.
இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 கொரி 15:20-26,28),
புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தின்
இறுதிப் பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
பிரிவினை, வழிபாட்டில் பிறழ்வு, சிலைகளுக்குப் படைத்தவை,
பாலியல் பிறழ்வு போன்ற மேய்ப்புப்பணி பிரச்சினைகளுக்குத்
தீர்வுகளை வரையறுத்த பவுல், இறுதியாக, இறந்தோர் உயிர்த்தெழுதல்
இல்லை என்று வாதிட்ட சிலருக்கு விடையளிக்கும் நோக்குடன்
இறுதிக்கால நிகழ்வுகள் பற்றிய சில குறிப்புகளைத் தருகின்றார்.
இறந்தோர் உயிர்த்தெழுதல் என்பது கிறிஸ்துவின் உயிர்ப்பை
அடிப்படையாகக் கொண்ட ஒன்று. கிறிஸ்து வரும்போது இறந்த
நம்பிக்கையாளர்கள் அனைவரும் உயிர்பெறுவர். 'கிறிஸ்து
ஆட்சியாளர், அதிகாரம் செலுத்துவோர், வலிமையுடையோர் ஆகிய
அனைவரையும் அழித்துவிடுவார்.' எல்லாவற்றுக்கும் மேலாக,
கடைசிப் பகைவனாக இருக்கின்ற இறப்பும் அழிக்கப்படும்.
இறப்பு அழிக்கப்படுவதன் வழியாக, படைப்பு தன் பழைய
நிலைக்குக் கொண்டுவரப்பட்டுப் புதுப்பிக்கப்படும். அனைத்தின்
மேலும் கிறிஸ்து ஆட்சி செலுத்துவார். இதனால், 'கடவுளே
அனைத்திலும் அனைத்துமாயிருப்பார்.' கிறிஸ்து செய்த
மீட்புச் செயல், இறப்பின்மேல் வெற்றி, படைப்பில் ஏற்பட்ட
ஒழுங்குநிலை, கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையே
மீண்டெழுந்த நெருக்கம் அனைத்தையும், 'கடவுளே அனைத்திலும்
அனைத்துமாயிருப்பார்' என்ற ஒற்றைச் சொல்லாடல் வழியாகச்
சொல்லிவிடுகின்றார். ஆக, பாவம் அழித்த அமைதியையும், ஒழுங்கையும்
கிறிஸ்து மறுபடியும் கொண்டுவருகின்றார்.
இறுதிக்கால நிகழ்வுகளை எடுத்துரைப்பதன் வழியாக, பவுல்,
நாம் இவ்வுலகில் வாழும் வாழ்க்கை பொருளற்றது அல்ல என்றும்,
நம் செயல்கள் அனைத்தும் இறுதி நிகழ்வுக்கு நம்மைத் தயாரிப்பவை
என்றும் முன்மொழிகின்றார். இவ்வாறாக, கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள்
தங்களுடைய தனிப்பட்ட வாழ்வு வழியாகவும், குழும வாழ்வு
வழியாகவும் தங்களையே தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
மத்தேயு நற்செய்தியில் வரும் இறுதி உவமையே இன்றைய நற்செய்தி
வாசகம் (காண். மத் 25:31-46). 'ஆட்டுக்கிடாய்களுக்கும்
வெள்ளாட்டுக் கிடாய்களுக்கும் இடையே நீதி வழங்குபவராக'
இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள் வருகின்றார்.
எசேக்கியேலின் இறைவாக்கு இன்றைய நற்செய்தி வாசகத்தின்
பின்புலமாக உள்ளது.
அரசர் அல்லது அரசர் தொடர்புடைய நேரடி சொல்லாடல்கள்
மூன்றை இன்றைய நற்செய்தியில் பார்க்கிறோம்: (அ) 'அரியணை'
- 'வானதூதர் அனைவரும் புடைசூழ மானிட மகன் மாட்சியுடன்
வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார்'
(மத் 25:31) என்று தொடங்குகிறது நற்செய்திப் பகுதி.
அரசர்களின் இருக்கைகளில் கைபிடிகளாக இரண்டு சிங்கங்கள்
('அரிமா') இருக்கும். சிங்க உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளதால்,
இவை 'அரிமா ஆசனங்கள்' அல்லது 'அரியாசனங்கள்' அல்லது 'அரியணைகள்'
என அழைக்கப்படுகின்றன. மேலும், 'சிங்கம்' என்பது அதிகாரம்
மற்றும் ஆற்றலைக் குறிக்கும் ஒரு உருவகம். மேலும், 'அமர்வது'
என்பதும் அதிகாரத்தைக் குறிக்கிறது. (ஆ) 'அரசன்' - 'அரசன்'
(பஸிலேயோஸ்) என்ற வார்த்தை இரண்டு வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது
(25:34, 40). 'அரசர்' என்ற வார்த்தையை நற்செய்தியாளர்
நேர்மையாளர்களோடு (வலப்பக்கம் உள்ளவர்களோடு) உரையாடும்
இடங்களில் மட்டுமே பதிவு செய்கின்றார். இடப்பக்கம் உள்ளவர்களோடு
உள்ள உரையாடலில் அரசன் என்ற வார்த்தை இல்லை. மேலும்,
இருதரப்பினரும் அவரை 'ஆண்டவர்' என அழைக்க
முடிந்தாலும், வலப்பக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே அவர்
அரசராக இருக்கின்றார். (இ) 'அரசாட்சி' அல்லது 'அரசுரிமை'
- 'அரசாட்சியை' (பஸிலேயோ) உரிமையாக்கிக்கொள்ளுமாறு
அரசர் வலப்பக்கம் இருப்பவர்களுக்கு அழைப்பு
விடுக்கின்றார். 'அரசாட்சி' என்றால் என்ன என்பது இங்கே
தெளிவாகக் குறிக்கப்படவில்லை என்றாலும், இந்த அரசாட்சி
உலகின் தொடக்கமுதல் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று என்பது
மட்டும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும்,இயேசுவே தன் வாயால் தன்னை 'அரசர்' என்று அழைப்பது
இந்த நிகழ்வில் மட்டுமே: இயேசுவை இரண்டு பேர் அரசர் என்று
நேரிடையாக மொழிந்திருக்கிறார்கள்: ஒன்று, நத்தனியேல்.
'பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின்கீழ்
இருந்தபோதே நான் உம்மைக் கண்டேன்' என்று இயேசு நத்தனியேலைப்
பார்த்துச் சொன்னபோது, 'ரபி, நீர் இறைமகன். நீரே இஸ்ரயேல்
மக்களின் அரசர்' என்கிறார் நத்தனியேல் (காண். யோவா
2:48-49). இரண்டு, பிலாத்து. தன்முன் கைதியாக நிறுத்தப்பட்ட
இயேசுவை விசாரித்து மரண தண்டனை அளித்த பிலாத்து, இறுதியாக,
எல்லாரும் பார்க்குமாறு இயேசு அறையப்பட்ட சிலுவையின்
உச்சியில், 'இவன் யூதரின் அரசனாகிய இயேசு' (மத் 27:37)
என எழுதி வைக்கின்றார். நல்ல கள்வன்கூட 'நீர் ஆட்சியுரிமை
பெற்று வரும்போது' (லூக் 23:42) என்று சொல்கிறானே தவிர,
'அரசர்' என்று சொல்லவில்லை.
இந்த அரசர் நீதி வழங்குபவராக தன்னையே அறிமுகம்
செய்கின்றார். இவருடைய முதன்மையான பணி நீதி வழங்குவது.
இந்த நீதி மனிதர்களின் வெற்றிகள் அல்லது முயற்சிகளை மையமாக
வைத்து வழங்குப்படுவதல்ல. மாறாக, மனிதரின் ஆறு முதன்மையான
தேவைகளுக்கு அவர்கள் செய்யும் பதிலிறுப்புகளின் அடிப்படையில்
நடக்கிறது. உணவு, தண்ணீர், விருந்தோம்பல், உடை, உடல்நலம்,
மற்றும் சுதந்திரம் என்னும் ஆறும் மனிதரின் அடிப்படைத்
தேவைகள். தனக்கு அருகிருப்பவரின் மேற்காணும் தேவைகளை
நிறைவேற்றியவர் ஆசிபெற்றவர் என அழைக்கப்படுகின்றார்.
அப்படிச் செய்ய மறுத்தவர்கள் சபிக்கப்பட்டவர்களாகக் கருதப்படுகின்றனர்.
முழுமனித ஆளுமையும் இங்கே கருத்தில் கொள்ளப்படுகின்றது.
'உணவு, தண்ணீர், உடை, மற்றும் உடல் நலம்' ஆகிய
நான்கும் உடல்சார்ந்த தேவைகள். 'விருந்தோம்பல், மற்றும்
தனிமை போக்குதல்' போன்றவை உளவியல் அல்லது ஆன்மிகத்
தேவைகள்.
உவமை இத்தோடு நின்றுவிடவில்லை. மானிட மகன் என்னும்
அரசர், தன்னையே சின்னஞ்சிறியவர்களோடு ஒன்றிணைத்துக்கொள்கிறார்.
'மிகச் சிறியோர்களாகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள்
செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்' என்ற மானிட மகனின்
வார்த்தைகள் கிறிஸ்தவ அறநெறியின் சாரத்தை அடையாளம்
காட்டுகின்றன. நலிந்தவர்களை அடையாளம் காணுதலும், அவர்களின்
தேவைகளை நிறைவேற்றுவதுமே புதிய வழிபாடு என முன்மொழியப்படுகிறது.
ஆக,
தன் மந்தையின் மேல் அக்கறை காட்டாத ஆயர்களை அகற்றுகின்ற
கடவுள், அக்கறை காட்டும் ஆயராகத் தன்னையே முதல் வாசகத்தில்
முன்வைக்கின்றார்.
தங்களுடைய தனிப்பட்ட மற்றும் குழும வாழ்வின்மேல் நம்பிக்கையாளர்கள்
காட்டும் அக்கறை, 'கடவுளே அனைத்திலும் அனைத்துமாய் இருக்கும்'
நிலைக்கு அவர்களை இட்டுச் செல்லும் என்பது பவுலின் அறிவுரையாக
இருக்கின்றது.
சின்னஞ்சிறியவர்களுக்கு அக்கறை காட்டுவதும், அவர்களின்
உடல் மற்றும் உள்ளம்சார் தேவைகளை நிறைவேற்றுவதும் நம்மை
அக்கரைக்கு அழைத்துச் செல்லும் என்பது நற்செய்தி வாசகத்தின்
செய்தியாக இருக்கிறது.
இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு விடுக்கும் சவால்கள்
எவை?
அ. கறையும் அக்கறையும்
தொலைக்காட்சி விளம்பரங்களில், 'கறை நல்லது' என்ற வாசகத்துடன்
சலவைத் தூள் அறிமுகப்படுத்தப்படுவதண்டு. அங்கே முதன்மைப்படுத்தப்படுவது
கறை என்றாலும், அந்தக் கறையைப் போக்கும் சலவைத்தூளின்
அக்கறைதான் மையம். இன்று நாம் பல நேரங்களில் மற்றவர்களின்
கறைகளைப் பார்த்துவிட்டு அவர்கள் மேல் அக்கறை காட்ட மறுக்கின்றோம்.
பசி, தாகம், ஆடையின்மை, வீடின்மை, நோய், சிறைவாசம் ஆகியவற்றை
மற்றவர்களின் சாபங்கள் அல்லது பாவங்கள் என்னும் கறைகள்
என நினைத்து ஒதுங்கிவிடுகின்றோம். ஆனால், அவர்களின் கறைகளே
நாம் அவர்கள்மேல் கொள்ளும் அக்கறைக்கான அழைப்பாக இருத்தல்
வேண்டும்.
ஆ. அக்கறையின் வகைகள்
மூன்று வகை அக்கறை இருக்கின்றது: போலியான அக்கறை - ஆடு
நனைவதைக் கண்டு வருந்தும் ஓநாயின் அக்கறை, வியாபாரத்தனமான
அக்கறை - பெருநிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்கள்மேல்
காட்டும் அக்கறை, ஆயனுக்குரிய அக்கறை. இந்த மூன்றாவது
வகை அக்கறையே மேன்மையானது. ஆடுகள் தன் ஆயனுக்கு எந்த
நிலையிலும் பதிலன்பு காட்ட இயலாது என்றாலும், ஆயனே
தான் விரும்பி தன் ஆடுகள்மேல் அக்கறை காட்டுகின்றார்.
அவருடைய அக்கறையால் ஆடுகள் மீண்டும் கூட்டிச் சேர்க்கப்படுகின்றன,
நலம் பெறுகின்றன, நீதி பெறுகின்றன. இன்று நான் எனக்கு
அடுத்திருப்பவர் மேல் காட்டும் அக்கறை எந்த வகையைச்
சார்ந்தது.
இ. கடவுளே அனைத்திலும் அனைத்துமாய்
ஆன்மிக வளர்ச்சியின் உச்சகட்டம் என நான் இதைத்தான்
நினைக்கிறேன். அனைத்திலும் அனைத்துமாய் கடவுள்
நிறைந்திருப்பதை நான் கண்டால் அதுவே என் உச்சகட்ட
நிறைவு அனுபவம். இந்த அனுபவம் கிடைத்துவிட்டால் என்னில்
எந்த எதிர்மறை உணர்வும் எழாது. நான் யாருக்கு எதிராகவும்
எதையும் செய்ய மாட்டேன். அனைவரின் நலனையும் அமைதியையும்
மட்டுமே விரும்புவேன். இந்த நிலை அடைவதற்கு ஒவ்வொரு
பொழுதும் நானே அனைத்திலும் அனைத்துமாய்க் கடவுளைக்
காணுதல் வேண்டும்.
இறுதியாக,
இன்று நாம் காட்டும் அக்கறை என்னை அக்கரைக்கு அழைத்துச்
செல்லும் என்ற தன்னல நோக்கத்திற்காக நாம் மற்றவர்கள்
மேல் அக்கறை காட்டுதல் தவறு. ஏனெனில், அந்த நிலையில்
நாம் அடுத்தவர்களைப் பொருளாகப் பயன்படுத்தத் தொடங்குவோம்.
மாறாக, என்னில் இருக்கிற இறைவன் எல்லாரிலும் எல்லாமுமாய்
என்ற எண்ணத்தில் அக்கறை காட்டத் தொடங்கினால், இக்கரையே
நமக்கு அக்கரைதான். அங்கே, 'அவர் பசும் புல்வெளிமீது
எனை அவர் இளைப்பாறச் செய்வார்.அமைதியான நீர் நிலைகளுக்கு
எனை அழைத்துச் செல்வார். எனக்குப் புத்துயிர் அளிப்பார்'
(பதிலுரைப்பாடல், திபா 23).
(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
பொதுக்காலம் இறுதி
ஞாயிறு கிறிஸ்து அரசர் பெருவிழா
மறையுரை அருட்பணி மேரி ஜான் R புனித அலோசியஸ் குரு மடம்
கோட்டாறு நாகர்கோவில்
உலக நாடுகள் அரசர்களால் ஆளப்பட்ட காலம் ஒன்று இருந்தது.
இன்றைய காலத்தில் அரசர்கள், அரசிகள் ஆகியோரின் எண்ணிக்கை
மிகச் சுருங்கியுள்ளது. சில நாடுகளில் மட்டும் பெயரளவிலேயே
அரசர்களும் அரசிகளும் உள்ளனர்.
அரசர்களின் காலம் முடிந்துவிட்டாலும் அரசுகள்
நீடிக்கின்றன. எந்த ஆட்சிமுறையாக இருந்தாலும் அது
அரசு என்றே இன்னும் தமிழில் அழைக்கப்படுகிறது. தற்போது
ஆட்சி என்ற சொல் அரசு என்பதற்குப் பதிலாகப் பல மொழிகளில்
பயன்படுத்தப்பட்டாலும் ஆட்சி செய்யப்படும் அமைப்பு அரசு
என்றே தமிழில் அழைக்கப்படுகிறது.
இந்தப் பின்னணியில் இயேசுவை அரசர் என்று புரிந்துகொள்வது
எப்படி? உலக வரலாற்றில் அரசர்களைப்பற்றிப் படித்திருக்கிறோம்.
அந்த வரிசையில் இயேசுவைப் புரிந்துகொள்வது எந்த விதத்திலும்
சிறப்பாய் இராது. ஏனெனில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே
நல்ல அரசர்கள் என்று பெயரெடுத்தவர்கள் இருந்துள்ளார்கள்.
இயேசு இந்த உலகில் மனிதராக வாழ்ந்தபோது ஓர் அரசராகத்
தன்னைக் காட்டிக்கொள்ளவில்லை. வாய்ப்பு கிடைத்தபோதும்
அதனை ஏற்கவில்லை (காண்க யோவான் 6:15).
இயேசு மெசியாவாக வருவார் என்று உரைத்த பழைய ஏற்பாட்டு
இறைவாக்குப் பகுதிகளில் அவருக்கு அரசர் என்ற அடைமொழி
கொடுக்கப்பட்டுள்ளது. எசாயா 9:6, செக்கரியா 9:9 முதலியவை
சில எடுத்துக்காட்டுகள்.
இயேசு பிறந்தவுடன் அவரைக் காணக் கிழக்கிலிருந்து வந்த
ஞானிகள் அவரை அரசராக அடையாளம் கண்டதாக மத்தேயு நற்செய்தி
கூறுகிறது (மத்தேயு 2:2).
இறுதித் தீர்ப்பைப்பற்றிக் கூறும்போது இயேசு தன்னை
அரசராக உருவகப்படுத்தியதை இந்த நாளின் நற்செய்தி வாசகம்
சுட்டிக்காட்டுகிறது.
இயேசுவைப் பிலாத்திடம் கையளித்த தலைமைக் குருக்கள்
சாட்டிய குற்றங்களுள் ஒன்று இயேசு தன்னை அரசராக்கிக்கொண்டார்
என்பதாகும் (யோவான் 19:12). இந்தக் குற்றச்சாட்டுதான்
பிலாத்துவிடம் எடுபடும் என்பது அவர்களுக்குத்
தெரிந்திருந்த ஒன்று. ஏனெனில் உரோமை மன்னன் சீசருடைய
ஆட்சியின்கீழ் பாலஸ்தீனம் இருந்தது. ஒருவர் தன்னை அரசனாக
அறிவிப்பது சீசரை எதிர்த்துச் செய்யும் கிளர்ச்சியாகவே
பார்க்கப்படும்.
இறுதியாக, நீ யூதரின் அரசனா? என்ற பிலாத்துவின்
கேள்விக்கு இயேசு அளித்த பதில் இல்லை என்று திட்டவட்டமாக
மறுப்பதுபோல் அமையவில்லை. அரசு, ஆட்சி ஆகிய சொற்களைக்
கொண்டே அவரும் பதிலளிக்கிறார்: எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி
போன்றது அல்ல.
தன்னை அரசனாக ஒருபோதும் காட்டிக்கொள்ளாத இயேசு ஓர் அரசைப்பற்றியே
ஓயாது பேசினார். அதுவே அவருடைய இலட்சியமாக இருந்தது.
அதுவே இறையரசு, விண்ணரசு என்றெல்லாம் அழைக்கப்பட்ட
இறையாட்சி. அது அவர் காலத்து மக்களுடைய எதிர்பார்ப்பாக
இருந்தது. இயேசுவுக்குமுன்னேயே திருமுழுக்கு யோவான்
அதன் வரவை அறிவித்து அதற்கான ஓர் இயக்கத்தையும் தொடங்கிவைத்தார்.
அவரிடம் சென்று திருமுழுக்கு பெற்று அந்த இயக்கத்தில்
இணைந்து, அவர் சிறைப்பட்ட பிறகு இயேசு அந்தப் பணியைத்
தொடர்ந்ததாக மாற்கு நற்செய்தி குறிப்பிடுகிறது. இறையாட்சி
வந்துவிட்டது என்பதுதான் இயேசுவின் முதல் அறிவிப்பாகவும்
இருந்தது (காண்க மாற்கு 1:15).
இயேசு அறிவித்த இறையாட்சியைச் சுருக்கமாக
எல்லாருக்கும் நல்வாழ்வு, எல்லாரோடும் நல்லுறவு என்று
புரிந்துகொள்ளலாம். அதன் அடையாளமாகவே அவருடைய வாழ்வும்
சொற்களும் செயல்களும் அமைந்திருந்தன. அந்த உயர் இலட்சியத்தை
அடைவதற்காக மக்களிடம் மனமாற்றம் வேண்டும் என்று அறைகூவல்
விடுத்தார். ஒருசிலரிடம் மட்டும் மனமாற்றம் தனியாக நிகழ்வதால்
அதிகப் பயன் ஏற்படப்போவதில்லை. எனவேதான் மனமாற்றத்துக்கான
அவருடைய அழைப்பில் சமூக மாற்றம், சமயச் சீர்திருத்தம்,
அரசியல் மாற்றம் ஆகிய அனைத்தும் அடங்கியிருந்தன. அனைத்தும்
சேர்ந்து மாறும்போதுதான் அந்த மாற்றம் நிலைத்து
நிற்கும். இல்லையென்றால் விரைவில் பழைய நிலை
திரும்பிவிடும்.
மேற்கண்டதொரு மாற்றத்தைத் தொடங்கிவைத்து அதனை
முன்னின்று நிகழ்த்தியதில்தான் அவருடைய அரச தன்மை (தலைமை)
வெளிப்படுகிறது. அவர் பிறந்து வாழ்ந்த யூத சமயத்தை அவர்
எதிர்கொண்ட விதம், அக்கால அரசியலை அவர் பார்த்த தன்மை,
சமூக நம்பிக்கைகளையும் மரபுகளையும் மாற்ற அவர் எடுத்த
முயற்சிகள் - எடுத்துக்காட்டாக, ஏழையரையும், பெண்களையும்,
சிறாரையும், தாழ்த்தப்பட்ட, ஒதுக்கப்பட்ட பிறரையும்
அவர் பார்த்த பார்வை - ஆகியவற்றில் வெளிப்பட்ட
புதுமைதான் அவருடைய புதிய பாணியிலான ஓர் அரச தன்மையை,
ஆட்சிமுறையை நம் முன்வைக்கிறது.
இந்த ஆண்டு கிறிஸ்து அரசர் விழாவுக்காகத் தரப்பட்டுள்ள
முதல் வாசகமும் நற்செய்தி வாசகமும் மக்களின் நல்வாழ்வையும்
நல்லுறவையும் அடிப்படையாகக் கொண்டவை. மக்களை ஆண்ட அரசர்கள்
தங்கள் மக்களின் நலனைக் கவனியாத நிலையில் தாமே தம் மக்களைத்
தேடிச் சென்று அவர்களின் குறைகளைப் போக்கி நல்வாழ்வு
அளிக்கப்போவதாக முதல் வாசகத்தில் கடவுள் சொல்கிறார்.
இறுதித் தீர்ப்பை விவரிக்கும் நற்செய்தி வாசகத்திலும்
பிறருடைய நல்வாழ்வுக்கு ஒவ்வொருவரும் அளித்த பங்கின்
அடிப்படையிலேயே இறுதித் தீர்ப்பு அமையும் என்பது உறுதியாகச்
சொல்லப்படுகிறது. ஒருவரையொருவர் வாழவைக்கும் அளவுக்கான
நல்லுறவு கொள்கிறவர்களே இயேசு அரசரின் வலப்பக்கம்
நிற்கும் பேறு பெறுவர் என்று அறிவுறுத்தப்படுகிறது.
இன்று இயேசுவை அரசர் என்று கொண்டாட வேண்டுமென்றால் அவருடைய
பார்வையை உள்வாங்கி, அவருடைய ஆட்சிமுறைக்கேற்பச் சமூகத்தை
மாற்றியமைக்க முன்வர வேண்டும்.
குடும்ப அமைப்பு தொடங்கி எங்கெங்கு நிர்வாகம் என்று ஒன்று
செயல்படுகிறதோ அங்கெல்லாம் அரசு இயங்குகிறது. ஓர் ஆட்சிமுறை
நிகழ்கிறது. அதில் இறையாட்சியின் தன்மைகள் விளங்குகின்றனவா
என்று பார்க்க வேண்டும். அதாவது எல்லாருக்கும் நல்வாழ்வு,
எல்லாரோடும் நல்லுறவு என்ற அடிப்படை செயல்படுகிறதா என்று
பார்க்க வேண்டும். சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்ட இன்றைய
நிலையில் இதனை எல்லாவற்றுக்கும் நல்வாழ்வு, எல்லாவற்றிடையேயும்
நல்லுறவு என்றும் மாற்றியமைக்கலாம்.
அரசு, நிர்வாகம் ஆகிய அனைத்தின் நோக்கமும் இதுவாகதான்
இருக்க வேண்டும். ஏற்கெனவே இருக்கும் அல்லது புதிதாக
உருவாக்கப்படும் வளங்கள் அனைவருக்கும் தேவையான அளவில்
பகிர்ந்தளிக்கப்படுவதையும் வளங்களை உருவாக்குவதில் பங்கெடுக்க
அனைவருக்கும் உரிய வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுப்பதையும்
உறுதிசெய்வதே நியாயமான ஓர் ஆட்சிமுறையின் செயலாக இருக்க
வேண்டும். இங்கே சமமான பங்கீடு நியாயமான பங்கீடாக இருக்க
வேண்டுமென்பதில்லை. பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு
அதிகக் கவனம் செலுத்துவது நியாயமான பங்கீட்டின் ஓர் அம்சமே.
குடும்பத்தில் ஒருவருக்கு நோய் ஏற்படுகிறது என்றால்
அவருக்கு அதற்கான மருந்துகளைக் கொடுக்கிறோம். மற்றவர்களும்
அதில் பங்கு வேண்டும் என்று கேட்பதில்லை. அதே நேரத்தில்
தடுப்பு மருந்து என்றால் எல்லாருக்கும் கொடுக்கிறோம்.
அடிப்படையான நிலைப்பாடு எல்லாருக்கும் நல்வாழ்வு என்பதுதான்.
இந்த அடிப்படையைக் குறிக்கோளாகக் கொண்டால் அரசுகளும்
பிற ஆட்சிமுறைகளும் இறையாட்சியின் தன்மையைப் பெற இயலும்.
மனிதர்களால் உருவாக்கப்படும் ஆட்சிமுறைகள் எப்போதும்
இறையாட்சியின் முழுமையைப் பெற இயலாது எனினும் அதனை
நோக்கி முன்னேற இயலும். மனித வாழ்வும் ஆட்சிமுறைகளும்
இறையாட்சியை நோக்கிய ஒரு பயணமே.
ஒரு நாட்டில் அரசு எதற்குத் தேவை? தன் நாட்டு மக்கள்
அனைவரும் நலமாக, நல்லுறவோடு வாழ வழிசெய்வதே ஓர் அரசின்
நோக்கமாக இருக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் பொருள்களைப்
பங்கிட வழி செய்வதும், மக்களிடையே உறவுச் சிக்கல்கள்
ஏற்படும்போது உறவு பாதிக்கப்படாமல் நீதி வழங்குவதும்
ஓர் அரசை நல்ல ஆட்சியாக அடையாளப்படுத்துபவை.
சில நாட்டு அல்லது மாநில அரசுகளை நோக்கும்போது இறையாட்சி
என்பது நிறைவேறாக் கனவாகவே தோற்றம் தருகிறது. எடுத்துக்காட்டாக,
நம் நாட்டில் உள்ள கல்வி வாய்ப்புகளைப் பார்க்கலாம்.
சமூகத்தின் தேவை, மாணவர்களின் விருப்பம், இயல்பு நாட்டம்
ஆகியவற்றின் அடிப்படையில் அனைவருக்கும் கல்வி வாய்ப்புகளை
உருவாக்குவது ஒரு நல்ல அரசின் செயலாக இருக்கும். நம்
நாட்டில் தேவையான அளவு தரமான மருத்துவர்கள் இல்லையென்றே
சொல்ல வேண்டும். மருத்துவம் பயில்வதற்கான ஆர்வமும் இயல்பு
நாட்டமும் உள்ள மாணவர்கள் பலர் உள்ளனர். ஆனால் மருத்துவக்
கல்லூரிகளை அரசு போதிய அளவில் ஏற்படுத்தவில்லை. மருத்துவக்
கல்விக்கான இடங்களில் ஒரு பற்றாக்குறையை ஏற்படுத்தி,
அந்த இடங்களைப் பிடிக்கத் தங்களுக்குள் போட்டியிட
வைக்கிறது அரசு. நீட் தேர்வு என்பதன் அடிப்படை இதுதான்.
சிறு வயதிலிருந்தே கல்வியில் போட்டியை அரசு புகுத்துவதன்
காரணமும் இதுதான். தங்களுக்கு வேண்டிய வாய்ப்புகளை ஏன்
உருவாக்கவில்லை என்று மாணவர்கள் அரசைக் கேட்பதற்குப்
பதிலாக இருக்கும் குறைவான வாய்ப்புகளைப் பெறத் தங்களுக்குள்
போட்டியில் ஈடுபடுவார்கள். நலமற்ற, தீய அரசுகளின்
சூழ்ச்சி இது. அதுபோல்தான் நாட்டு வளங்களைப் பங்கிடுவதிலும்.
பெருமளவிலான செல்வங்களை அரசியல்வாதிகளுக்கும் பெருமுதலாளிகளுக்கும்
மடைமாற்றம் செய்துவிட்டு, மீதமிருக்கும் சிறிதளவிலான
செல்வங்களைப் பெறுவதற்குத் தங்களுக்கிடையே அடித்துக்கொள்ள
வைக்கிறது அரசு. மக்கள் தங்களுக்கிடையே போட்டியிட்டு
அடித்துக்கொள்கிறவரையில் அரசு பாதுகாப்பாக இருக்கும்.
ஏனெனில் அரசை யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள்.
இறையாட்சியின் தன்மைகளைப் பரப்பும் கடமை திருஅவைக்கு
உள்ளது. ஏனெனில் இறையாட்சியின் பணியாள் என்றே தன்னைத்
திருஅவை புரிந்துகொள்கிறது. ஆனால் பதவிகளுக்காகவும்,
உயர்ந்த இடங்களுக்காகவும் போட்டியிடும் ஆயர்களும் அருள்பணியாளர்களும்
பொதுநிலைத் தலைவர்களும் உள்ள தலத் திருஅவைகள் இறையாட்சியைக்
குழி தோண்டிப் புதைப்பவை என்றே கருத வேண்டும். பிற ஆட்சி
அமைப்புகளுக்குச் சிறந்த ஓர் எடுத்துக்காட்டாக விளங்கும்
வாய்ப்பினை நம் பங்கு அருள்பணிப் பேரவைகள் தவறவிட்டன.
ஒற்றுமையான, உடன்பாடு அடிப்படையில் உறுப்பினர்களைத்
தேர்ந்தெடுக்கும் வாய்ப்பினை நழுவவிட்டு, நாட்டின்
தேர்தல்முறைக்கே சவால் விடும் அளவுக்குப் போட்டிகளையும்
தில்லுமுல்லுகளையும் ஏற்படுத்தும் அளவிலான தேர்தல்முறையையே
சில மறைமாவட்டங்கள் ஏற்படுத்தியுள்ளன. பங்கு அருள்பணிப்
பேரவைத் தேர்தல் என்ன, பல நேரங்களில் அருள்பணி
நிலையில் உள்ளவர்களுக்கு இடையிலான தேர்தல்களிலும் நிலை
இதுதானே!
மேலும் இறையாட்சி மலர வேண்டும், சமூக மாற்றம் நிகழ
வேண்டும் என்று அறைகூவல் விடுக்கும் பலரும் போட்டிகளைக்
கைவிடத் தயங்குகின்றனர். தங்களிடையே போட்டியிடுவது மட்டுமல்ல,
சிறு குழந்தைகளிடமும் போட்டிகளைப் புகுத்தி, போட்டியுணர்வுகளை
உருவாக்கி, தங்கள் காலத்துக்குப் பின்னும் இறையாட்சியின்
தன்மைகள் பரவவிடாமல் இருப்பதில் முனைப்பாய் உள்ளனர்!
போட்டிகள் எந்த வடிவத்தில் இருந்தாலும் அவை இறையாட்சிக்கு
எதிரானவையே. ஒத்துழைப்பு, கூட்டுணர்வு ஆகியவையே இறையாட்சியின்
படிக்கற்கள்.
நம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது வகையில் தலைமைப்
பொறுப்பு, நிர்வாகப் பொறுப்பு ஆகியவை அவ்வப்போது
கிடைக்கின்றன. கிறிஸ்து அரசர் விழாவைக் கொண்டாடும் நேரத்தில்
அவருடைய ஆட்சிக்கு உகந்த முறையில் நம் பொறுப்புகளைச்
செயல்படுத்துகிறோமா என்று கேட்டுக்கொள்வோம். எல்லாருடையவும்
நல்வாழ்வுக்காகவும் எல்லாரிடையேயும் நல்லுறவுக்காகவும்
கூட்டுணர்வுடன் செயல்பட ஆற்றல் வேண்டுவோம்.
அனைவருக்கும் கிறிஸ்து அரசர் விழா நல்வாழ்த்துகள்.
கிறிஸ்து
அரசர் பெருவிழா
திருப்பலி முன்னுரை
நீதித் தீர்ப்பை வழங்கி, நிலைவாழ்வுக்கு அழைத்துச்
செல்லும் கிறிஸ்துவை அரசராகப் போற்றும் கிறிஸ்து அரசர்
பெருவிழாவைக் கொண்டாட இன்றைய ஞாயிறு திருப்பலி நமக்கு
அழைப்பு விடுக்கிறது.
அரியணையில் வீற்றிருக்கும் இறைவன், நமது ஆன்ம செயல்பாடுகளுக்கேற்ப
தீர்ப்பிடுவாரே அன்றி ஆன்மீகச் செயல்பாடுகளுக்கல்ல.
ஆலயங்களுக்குச் சென்று பணியும் முழங்கால்களை விட,
ஆதரவற்றோரை அரவணைக்கும் கரங்களே இறையரசிற்கு உகந்ததாக
எண்ணப்படுகிறது.
இன்றைய முதல் வாசகத்தில், நானே மந்தையைத் தேடிச்
சென்று பேணிக் காப்பேன் என்று தன்னை ஒரு நல்ல ஆயனாக
அறிவிக்கிறார் இறைவன் என்பதை எசேக்கியேல் இறைவாக்கினர்
எடுத்துரைக்கிறார். ஒவ்வொரு ஆட்டிற்கும் நீதித்
தீர்ப்பு வழங்கி, கொழுத்தவற்றை அழிப்பேன் என்கிறார்.
ஆட்டு மந்தையினை நல்ல ஆயன் பேணிக் காப்பது போல் நம்மையும்
இறைவன் அனைத்து வளங்களையும் தந்து வழிநடத்துகிறார்.
நீதித் தீர்ப்பின் போது இறையாட்சிக்குள் செல்லும் அளவிற்கு
நல்வாழ்வை மேற்கொள்வோம்.
இன்றைய நற்செய்தியில், மக்களினத்தார் அனைவருக்கும் தங்களின்
செயல்களுக்கேற்ப அளிக்கப்படும் தீர்ப்பு பற்றி இயேசு
எடுத்துரைக்கிறார். இச்சிறியோராகிய என் சகோதர சகோதரிகளுக்கு
நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என்று
வாழ்வின் அடிப்படை தத்துவமாகிய இரக்கத்தை வெளிப்படுத்துகிறார்.
மனிதன் வாழ்விலே துன்பம் வருவதுண்டு.
கண்ணாலே பிறர் துன்பத்தை பார்த்திருந்தும்
காணாமல் போவதினால்
மண்ணிலே பிறந்ததற்கு பலன் ஏதும் இல்லையே.
நம்மோடு தெய்வம் சேர எந்நாளும் பாதை உண்டு.
இல்லாத ஏழைக்கெல்லால் செய்வாய் நீ ஆசைத் தொண்டு
என்பது ஒரு கவிஞனின் வார்த்தைகள்.
இவற்றை மனதில் நிறுத்தி கரங்களில் வெளிப்படுத்துவோம்.
இச்சிந்தனைகளைத் தாங்கி இப்பலியில் பங்கேற்போம்.
இறைமக்களின் மன்றாட்டுகள்
1. விண்ணுக்கும் மண்ணுக்கும் அரசரே எம் இறைவா!
மண்ணக மக்களை விண்ணக பேரன்புக்கு வழிநடத்தும் திருத்தந்தை,
எம் திருச்சபைப் பணியாளர்கள் மீட்புப் பணியில் நேரிய
பாதையில் நடக்கவும், அப்பாதையில் மக்களை வழிநடத்தவும்
வேண்டுமென இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
2. தந்தையின் வலப்பக்கம் அமர்ந்து எம்மை ஆட்சி செய்பவரே
எம் இறைவா!
எம் நாட்டை ஆட்சி செய்யும் தலைவர்கள், மக்களுக்கு சேவை
செய்வதில் கட்சி மனப்பான்மை, காழ்ப்புணர்ச்சி களைந்து,
மக்கள் நலனில் அக்கறை கொண்டு, வளம்பெறும் வழிகளில்
திட்டத்தை செயல்படுத்த தேவையான ஞானம் தர வேண்டி இறைவா
உம்மை மன்றாடுகிறோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
3. எப்போதும் விழிப்பாயிருங்கள் என்றழைப்பவரே எம் இறைவா!
பாவ வழிகளில் பயணித்து, வாழ்வைத் தொலைத்துக்
கொண்டிருக்கும் இன்றைய இளம் சமுதாயத்தினர், பாவத்தினை
விலக்கி, தெளிவான சிந்தனையைப் பெறவும், ஆவிக்குரிய வரங்களைப்
பெற்று உம்மைத் தேடி வரவும் வரம் வேண்டி இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
4. விண்ணுலக வேந்தனே எம் இறைவா!
இம்மண்ணக வாழ்வினை முடித்து விண்ணகம் நோக்கிப் பயணிக்கும்
எம் சகோதர சகோதரிகளின் பாவங்களை மன்னித்து, நிலைவாழ்வை
அளித்திட வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
5. நம்புவோரைக் கைவிடாதவரே எம் இறைவா!
எம் பகுதிவாழ் மக்களை ஆசீர்வதியும். எம் பகுதியில்
போதிய மழை பொழிந்து, வேளாண்மை சிறக்கவும், பொருளாதாரம்
மேம்படவும், குடும்ப அமைதி, சந்தோசம் நிறையவும், படிக்கும்
குழந்தைகள் ஞானத்தில் அதிகப்படவும், வேலைக்காக
காத்திருப்போர் உமதருளால் பெற்று மகிழவும், திருமணம்,
குழந்தை வரம் வேண்டுவோர் உமதருளால் பெற்றுக் கொள்ளும்
வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
நன்றி: திருமதி ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம். |