|
Year A |
|
ஆண்டவரின் திருமுழுக்கு விழா |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இதோ! என் ஊழியர்! அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 42: 1-4, 6-7
ஆண்டவர் கூறுவது: இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்;
நான் தேர்ந்துகொண்டவர் அவர்; அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது;
அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்; அவர் மக்களினங்களுக்கு
நீதி வழங்குவார். அவர் கூக்குரலிடமாட்டார்; தம் குரலை உயர்த்தமாட்டார்;
தம் குரலொலியைத் தெருவில் எழுப்பவுமாட்டார். நெரிந்த நாணலை
முறியார்; மங்கி எரியும் திரியை அணையார்; உண்மையாகவே நீதியை
நிலைநாட்டுவார். உலகில் நீதியை நிலைநாட்டும்வரை அவர் சோர்வடையார்;
மனம் தளரமாட்டார்; அவரது நீதிநெறிக்காகத் தீவு நாட்டினர்
காத்திருப்பர். ஆண்டவராகிய நான் நீதியை நிலைநாட்டுமாறு உம்மை
அழைத்தேன்; உம் கையைப் பற்றிப்பிடித்து, உம்மைப் பாதுகாப்பேன்;
மக்களுக்கு உடன்படிக்கையாகவும் பிற இனத்தாருக்கு ஒளியாகவும்
நீர் இருக்குமாறு செய்வேன். பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும்,
கைதிகளின் தளைகளை அறுக்கவும், இருளில் இருப்போரைச்
சிறையினின்று மீட்கவும் உம்மை அழைத்தேன்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 29: 1-2. 3ac-4. 3b,9c-10 (பல்லவி: 11b)
Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதி அளித்து ஆசி வழங்குவாராக!
1a
இறைவனின் மைந்தரே! மாட்சியையும் வலிமையையும் ஆண்டவருக்கு உரித்தாக்குங்கள்.
2
ஆண்டவரின் பெயருக்கேற்ற மாட்சியை அவருக்கு உரித்தாக்குங்கள்;
தூய மாட்சி இலங்கும் ஆண்டவரை வழிபடுங்கள். - பல்லவி
3ac
ஆண்டவரின் குரல் கடல்மேல் ஒலிக்கின்றது; ஆண்டவர் நீர்த்திரள்களின்மேல்
வீற்றிருக்கின்றார்.
4
ஆண்டவர் குரல் வலிமைமிக்கது; ஆண்டவரின் குரல் மாட்சிமிக்கது. -
பல்லவி
9b
ஆண்டவரின் குரல் காடுகளை வெறுமையாக்குகின்றது; அவரது கோவிலில்
உள்ள அனைவரும் "இறைவனுக்கு மாட்சி என்று ஆர்ப்பரிக்கின்றனர்.
10
ஆண்டவர் வெள்ளப் பெருக்கின்மீது வீற்றிருக்கின்றார்; ஆண்டவர்
என்றென்றும் அரசராக வீற்றிருக்கின்றார். - பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
கடவுள் இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 10: 34-38
கொர்னேலியு மற்றும் அவரது வீட்டாரை நோக்கிப் பேதுரு கூறியது:
"கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே
உணர்கிறேன். எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து,
நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர். இயேசு
கிறிஸ்து வாயிலாக அமைதி உண்டு என்னும் நற்செய்தியை அவர் இஸ்ரயேல்
மக்களுக்கு அனுப்பினார். அவரே அனைவருக்கும் ஆண்டவர்.
திருமுழுக்குப் பெறுங்கள் என்று யோவான் பறைசாற்றிய பின்பு கலிலேயா
முதல் யூதேயா முழுவதிலும் நடந்தது உங்களுக்குத் தெரியும். கடவுள்
நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார்.
கடவுள் அவரோடு இருந்ததால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த
அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்துகொண்டே
சென்றார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
(மாற் 9: 7)
அல்லேலூயா, அல்லேலூயா! வானம் திறந்தது; தந்தையின் குரலொலி கேட்டது:
"என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்." அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
திருமுழுக்குப் பெற்ற இயேசு, கடவுளின்
ஆவி தம்மீது இறங்கி வருவதைக் கண்டார்.
+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 13-17
அக்காலத்தில் இயேசு யோவானிடம் திருமுழுக்குப் பெறக் கலிலேயாவிலிருந்து
யோர்தானுக்கு வந்தார். யோவான், "நான்தான் உம்மிடம்
திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர்?'' என்று
கூறித் தடுத்தார். இயேசு, "இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு
ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை'' எனப் பதிலளித்தார்.
அதற்கு யோவானும் இணங்கினார். இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே
தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின்
ஆவி, புறா இறங்குவதுபோலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார். அப்பொழுது,
"என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்''
என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
I எசாயா 42: 1-4, 6-7
II திப 10: 34-38
III மத்தேயு 3: 13-17
மறு கிறிஸ்து வாழ்வோம்
நிகழ்வு
சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு சிறுமியும் அவளுடைய தாயும் தந்தையும்
திருமுழுக்குப் பெற்று, கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்கள். இதற்கு
அடுத்து வந்த நாளில் சிறுமி தான் படித்துவந்த பள்ளிக்கூடத்திற்குச்
சென்றாள். பள்ளிக்கூடத்தில் அவளோடு படித்துவந்த மாணவிகள், அவள்
திருமுழுக்குப் பெற்ற செய்தியைக் கேள்விப்பட்டு அவளிடம்,
"திருமுழுக்கின்பொழுது என்ன நடந்தது?" என்று கேட்டார்கள்.
சிறுமியோ மிகவும் தீர்க்கமான குரலில், "குருவானவர் என்னிடம்
"கிறிஸ்தவ சமூகம் உன்னைப் பெருமகிழ்வுடன் வரவேற்கின்றது. இந்த
சமூகத்தின் பெயரால் நான் உன்மீது சிலுவை அடையாளம் வரைகிறேன்
என்று சொல்லி என்னுடைய நெற்றியில் சிலுவை அடையாளம் வரைந்தார்.
பின்னர் அவர், "கிறிஸ்துவின் அடையாளத்தைத்
தாங்கியிருக்கின்றாய். அதனால் நீ மறுகிறிஸ்துவாக வாழவேண்டும்
என்றார்" என்று சொல்லி முடிந்தாள்.
திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரும் மறு கிறிஸ்துவாக வாழவேண்டும்.
அதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்று
நாம் ஆண்டவரின் திருமுழுக்கு விழாவைக் கொண்டாடுகின்றோம். இந்த
விழா நமக்கு உணர்த்தும் உண்மை என்ன, இந்த நாளில் நாம் வாசிக்கக்கேட்ட
இறைவார்த்தை நமக்கு எடுத்துரைக்கும் செய்தி என்ன ஆகியவற்றைக்
குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
மாந்தரோடு தன்னை ஒன்றிணைத்துக்கொண்ட இயேசு
மத்தேயு நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தியில்,
யோர்தான் ஆற்றில், திருமுழுக்கு யோவானிடமிருந்து இயேசு
திருமுழுக்குப் பெறுவதைக் குறித்து வாசிக்கின்றோம். இயேசு,
திருமுழுக்கு யோவானிடமிருந்து திருமுழுக்குப் பெறுகின்ற இந்நிகழ்வினை,
அவர் இவ்வுலகிற்குத் தன்னை மூன்றாம்முறையாக வெளிப்படுத்துகின்றார்
என்று சொல்லலாம். முதலில், யூத சமூகத்தில் மிகவும் வறியநிலையில்
இருந்த இடையர்களுக்கும் பின்னர் புறவினத்தாராகிய கீழ்த்திசை
ஞானிகளுக்கும் வெளிப்படுத்திய இயேசு, திருமுழுக்கின்பொழுது
மூன்றாம்முறையாகத் தன்னை வெளிப்படுத்துகின்றார்.
இப்பொழுது நமக்கு ஓர் கேள்வி எழலாம். "மக்கள் தங்களுடைய
பாவங்களிலிருந்து மனம்மாறுவதற்காகக் கொடுக்கப்பட்ட
திருமுழுக்கினை, ஒரு குற்றமும் செய்யாத (லூக் 24: 31) இயேசு
பெறவேண்டியதன் தேவை என்ன?" என்பதுதான் அக்கேள்வி. திருமுழுக்கு
யோவான்கூட, "நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெறவேண்டியவன்.
நீரா என்னிடம் வருகின்றீர்?" என்று இதையொத்த கேள்வியைத்தான்
கேட்கின்றார். இயேசு, திருமுழுக்கு யோவானிடமிருந்து
திருமுழுக்குப் பெற்றது, பாவ மன்னிப்பைப் பெற அல்ல. மாறாக,
மக்களோடு தன்னை ஒன்றித்துக்கொள்ளவே. ஆம், மக்களோடு தன்னை
ஒன்றித்துக்கொள்ளவே இயேசு திருமுழுக்கு யோவானிடமிருந்து
திருமுழுக்குப் பெற்றார்.
இறையாட்சிப் பணிசெய்யப் புறப்படும் இயேசு
திருமுழுக்கு யோவானிடமிருந்து இயேசு பெற்ற திருமுழுக்கு
அவருடைய பணிவாழ்வின் தொடக்கம் என்று சொல்லலாம். காரணம், இயேசு
திருமுழுக்கு பெற்றபின்புதான், "காலம் நிறைவேறிவிட்டது;
இறையாட்சி நெருங்கிவந்துவிட்டது; மனம்மாறி நற்செய்தியை
நம்புங்கள்" (மாற் 1: 14-15) என்று கடவுளின் நற்செய்தியை
எடுத்துரைக்கத் தொடங்குகின்றார்.
பழைய ஏற்பாட்டுக் காலத்தில் குருவோ, அரசரோ தன்னுடைய பணியைத்
தொடங்குகின்றபொழுது, அவரைத் திருப்பொழிவு எண்ணெயால்
அருள்பொழிவு செய்வது வழக்கம் (விப 29: 7; 1சாமு 10:1, 16: 13;
1அர 1: 39, 2அர 9:6). நற்செய்தியில் திருமுழுக்கு யோவான்
இயேசுவுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுப்பதை அந்த
அடிப்படையில் புரிந்துகொள்வது இன்னும் சிறப்பாக இருக்கும்.
இயேசு தண்ணீராலோ எண்ணெயினாலோ அல்ல, தூய ஆவியாரால் அருள்பொழிவு
செய்யப்படுகின்றார். இதனை இன்றைய இரண்டாம் வாசகத்தில், பேதுரு
கொர்னேலியுக்குப் கூறுகின்ற, "கடவுள் தூய ஆவியாரின் வல்லமையை
இயேசுவின்மீது பொழிந்திருந்தருளினர்" (திப 10:38) என்ற
வார்த்தைகளிலும், நாசரேத்தில் உள்ள தொழுகைக்கூடத்தில்,
இறைவாக்கினர் எசாயாவின் இறைவார்த்தையை மேற்கோள் காட்டிப்
பேசுகின்ற இயேசுவின் வார்த்தைகளிலும் (லூக் 4: 18)
கண்டுகொள்ளலாம்.
திருமுழுக்கின் மூலம் தூய ஆவியாரின் அருள்பொழிவைப் பெற்ற இயேசு
கிறிஸ்து எத்தகைய பணியைச் செய்தார் அல்லது செய்யப்போகிறார்
என்ற கேள்வி எழலாம். இதற்கான பதிலாக இருக்கின்றது இறைவாக்கினர்
எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம். "அவர்
நீதி வழங்குவார்... நெரிந்த நாணலை முறியார்...பிற இனத்தாருக்கு
ஒளியாக இருப்பார்...பார்வையிழந்தோருக்குப் பார்வையளிப்பார்..."
என்று வருகின்ற வார்த்தைகள் யாவும் மெசியாவாம் இயேசுவைக்
குறித்துச் சொல்லப்பட்டவை. இவையாவும் இயேசுவில் நிறைவேறின.
ஆம், தூய ஆவியாரால் அருள்பொழிவு செய்யப்பட்ட இயேசு எங்கும்
நன்மை செய்துகொண்டே சென்றார்.
மறுகிறிஸ்துவாக வாழ அழைக்கும் இயேசு
திருமுழுக்கின் மூலம் தூய ஆவியாரால் அருள்பொழிவு செய்யப்பட்ட
இயேசு கிறிஸ்து எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார் என்பது,
நாமும் இயேசுவைப் போன்று எங்கும் நன்மை செய்துகொண்டே செல்ல
அல்லது மறுகிறிஸ்துவாக வாழ அழைப்புத் தருகின்றது. இன்னும்
சொல்லப்போனால், திருமுழுக்கு என்பதே ஒரு கடத்தல்தானே!
எப்படிப்பட்ட கடத்தல், சாவிலிருந்து வாழ்விற்கும்
இருளிலிருந்து ஒளிக்கும் சாத்தானின் பிள்ளையிலிருந்து கடவுளின்
பிள்ளை என்ற ஒரு நிலைக்குமான கடத்தல். இதுவே திருமுழுக்கு
உணர்த்தும் ஆழமான உண்மையாகும். இன்றைக்குப் பலர்
திருமுழுக்குப் பெற்ற பின்பும், பழைய பாவ வாழ்க்கை
வாழ்ந்துகொண்டிருப்பது மிகவும் வியப்பாக இருக்கின்றது.
பிராமணர் ஒருவர் இருந்தார். (சாதிப் பெயரைக் குறிப்பிடுவதை
நினைத்துத் தவறாக நினைக்கவேண்டும். ஓர் உண்மையை உணர்த்தவே
குறிப்பிடுகின்றேன்) இவர் ஒரு பிராடஸ்டன்ட் சபைப் போதகரின்
போதனையால் தொடப்பட்டு, கிறிஸ்துவ மதத்திற்கு மாறுவதாகச்
சொன்னார். உடனே அந்தப் போதகர், "கிறிஸ்துவ மதத்திற்கு
மாறவேண்டும் என்றால், திருமுழுக்கு (முழுக்கு ஞானஸ்நானம்)
பெறவேண்டும்" என்றார். அவரும் அதற்குச் சரியென்று சொல்ல,
போதகர் அவரை அருகில் இருந்த ஒரு குளத்திற்கு அழைத்துச்
சென்றார். அங்கு போதகர் அவரை மூன்றுமுறை நீருக்குள் முக்கி
எடுத்தார். மூன்றாம் முறையாக அவர் முக்கி எடுத்தபொழுது, அந்த
மனிதர் தன்னுடைய உடம்பில் அணிந்திருந்த பூணூலைக் கழற்றி
எறிந்திருந்தார். இதைப் பார்த்துவிட்டுப் போதகர் அந்த மனிதரைப்
பார்த்து, "நீர் உண்மையான கிறிஸ்தவராக மாறிவிட்டீர் என்பதை
நான் நம்புகிறேன் என்று அவரைப் பாராட்டினார்.
இந்த நிகழ்வில் வருகின்ற பிராமணர், கிறிஸ்தவை ஏற்றுக்கொண்டதன்
அடையாளமாக அல்லது மறு கிறிஸ்துவாக வாழத் தொடங்கிவிட்டதன்
அடையாளமாக தன்னுடைய உடலில் அணிந்திருந்த பூணூலைக் கழற்றி
எறிந்தார். நாம் மறு கிறிஸ்துகளாக வாழத் தொடங்கிவிட்டோம்
என்பதை எப்படிக் காட்டப் போகின்றோம்? சிந்தித்துப்
பார்க்கவேண்டும்.. "நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாக, ஒளியாய்
இருக்கிறீர்கள்" (மத் 5:14). ஆகையால், நாம் மண்ணுலகிற்கு
உப்பாக, ஒளியாக இருந்து, மறுகிறிஸ்துகளாக வாழ்வோம். அதன்மூலம்
இயேசுவின் திருமுழுக்கைப் பெருவிழாவை, நாம் பெற்றுக்கொண்ட
திருமுழுக்கைப் பொருளுள்ளதாக்குவோம்.
சிந்தனை
"இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார் (கலா
2:20) என்பார் புனித பவுல். ஆகவே, இயேசுவின் திருமுழுக்குப்
பெருவிழாவில் திருமுழுக்குப் பெற்ற நாம் ஒவ்வொருவரும் மறு
கிறிஸ்துவாக வாழ முற்படுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
அக்கரை உறவுகள்!
எசாயா 42:1-4, 6-7
திருத்தூதர்பணிகள் 10:34-38
மத்தேயு 3:13-17
ஜென் கதை ஒன்றோடு தொடங்குவோம்.
ஆற்றின் கரையருகில் ஜென் மடாலயம் இருந்தது. புதிதாய் ஜென்
மடாலயத்திற்கு வந்த இளவல்கள் சிலர் படகேறி ஆற்றின்
அக்கரைக்குச் சென்றனர். மாலை வேலையாகிவிட்டது. ஒருவர் தவிர
மற்ற எல்லாரும் படகேறி மடாலயம் திரும்பிவிட்டனர். திரும்பி
வராத மற்றவர், ஆற்றின் அக்கரையில் நின்றுகொண்டு, இக்கரையில்
இருப்பவர்களிடம் கை அசைக்கின்றார். அவரின் கை அசைவைக்
கவனிக்கின்ற மடலாயத் தலைவர் வெளியே வருகிறார். வெளியே வந்த
தலைவர் தானும் கையசைத்து, 'என்ன வேண்டும்?' எனக் கேட்கின்றார்.
'அக்கரைக்கு வருவது எப்படி?' எனக் கேட்கின்றார் இளவல். 'நீ
இருப்பதே அக்கரைதானே!' என்கிறார் தலைவர். ஞானம் பெற்றான்
சீடன்.
அடுத்தவர்கள் இருக்கும் கரை தனக்கு அக்கரை என்றால், தான்
இருப்பதும் அடுத்தவர்களுக்கு அக்கரை என்று உணர்ந்த சீடன்,
ஒவ்வொன்றும் அக்கரை என்று உணர்கின்றான். அதுவே ஞானம்.
கிறிஸ்து பிறப்பு பெருவிழா என்ற இக்கரையிலிருந்து நாம் ஆண்டின்
பொதுக்காலம் என்ற அக்கரைக்கு இன்று கடந்து செல்கின்றோம்.
நம்மைத் தண்ணீரில் இறக்கி அக்கரைக்குச் செல்ல அழைக்கும்
திருவிழாவே இயேசுவின் திருமுழுக்கு திருவிழா.
இயேசுவின் திருமுழுக்கின்போது, வானகத் தந்தை, 'இவரே என்
அன்பார்ந்த மகன்' என்று உலகிற்கு அவரைப் பற்றி
அறிக்கையிடுகின்றார். அந்த நேரமே இயேசு தன்னுடைய பணிவாழ்வையும்
தொடங்குகின்றார். ஆக, கடவுளோடு மகன் என்ற நிலையில் உறவுகொண்ட
இயேசு, ஒருவர் மற்றவரோடு சகோதரர் என்ற நிலையில் பணியாற்றத்
தொடங்குகின்றார். ஆக, இயேசுவின் திருமுழுக்கு அவருக்கு இரண்டு
உறவுகளுக்குக் கதவுகளைத் திறக்கின்றது. அக்கரையில் நின்ற
கடவுளையும் மனுக்குலத்தையும் தண்ணீரில் இறங்குவதால்
தழுவிக்கொண்டு உறவுகொள்ளத் தொடங்குகிறார் இயேசு.
இதுதான் நம்முடைய சிந்தனையின் கரு.
'உறவு' என்ற வார்த்தையை நினைத்தவுடன் இரண்டு விடயங்கள்
நினைவிற்கு வருகின்றன.
முதலில், வேளாங்கண்ணி பேராலயத்தில் உள்ள குருக்கள் இல்லத்தின்
உணவகத்தில் ஒட்டப்பட்டுள்ள ஒரு ஸ்டிக்கர். புனிதர்களின்
வார்த்தைகளை மேற்கோள் காட்டி வைக்கப்பட்டுள்ள பல
ஸ்டிக்கர்களில் ஒன்றில், இப்படி எழுதப்பட்டிருந்தது. 'நீ யாரை
அல்லது எதை அன்பு செய்கிறாயோ அதுவாக நீ மாறுகிறாய்' என்ற தாமஸ்
அக்வினாஸின் வார்த்தைகள் என்னை ஈர்த்தன. அன்பில் இணையும்போது
ஒருவர் மாற்றத்திற்கு ஆளாகின்றார். மற்றவரின் குணநலன்களைப்
பெற்றுக்கொள்கின்றார். அல்லது அன்பு செய்யும் செயல் ஒருவரின்
இருப்பிலும் இயக்கத்திலும் ஆளுமையிலும் மாற்றத்தை
ஏற்படுத்துகின்றது.
இரண்டு, இத்தாலிய மொழி பயிலும் மாணவர்களுக்குத் திரையிட
இத்தாலிய மொழி திரைப்படங்கள் தேடிக்கொண்டிருந்த வேளையில்,
'ச்சாவோ ப்ரதர்' என்ற படம் கிடைத்தது. முன்னோட்டம் பார்க்கும்
ஆர்வத்தில் முழுப்படத்தையும் நகர்த்திக் கொண்டிருந்தபோது,
கதாநாயகன் தன்னுடைய சகோதர நண்பனிடம் சொல்லும் ஒரு வசனம்
என்னைக் கவர்ந்தது: 'உறவு என்பது பனி விழுவது மாதிரி.
தொடங்கும் போது பனி விழுவது மாதிரி இருக்கும். அழகாக
இருக்கும். ஆனால், நாளாக நாளாக அது விழுந்து உறைந்து இறுகி
அதுவே சுமையாக மாறிவிடும். உடைக்க நினைத்தாலும் உடைக்க முடியாத
அளவிற்கு உறைந்துவிடும். உடைக்க நினைப்பவரின் கையிலும் காயத்தை
ஏற்படுத்திவிடும். ஆக, உறவே வேண்டாம்!'
உறவு என்பது என்னில் தாக்கத்தை அல்லது மாற்றத்தை
ஏற்படுத்துகிறது என்று உறவைக் கொண்டாடுவதா?
அல்லது,
உறவு காயப்படுத்திவிடும் என்று எச்சரிக்கையாக இருப்பதா?
அக்கரை உறவுகளை நாம் அக்கறையோடு அணுகுவது எப்படி?
வாசகங்கள் வழியே தேடுவோம்.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 3:13-17) இயேசுவின்
திருமுழுக்கு நிகழ்வை படம்பிடித்துக்காட்டுகிறது. திருமுழுக்கு
பெறுமுன் இயேசு யோவானோடு உரையாடுகின்றார். 'நீரா என்னிடம்
திருமுழுக்கு பெற வருகிறீர்?' என்று யோவான் தயக்கம் காட்ட,
'கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதே முறை'
என்கிறார் இயேசு. 'கடவுளுக்கு ஏற்புடையவை' என்ற வார்த்தை இங்கே
முக்கியமானது. கிரேக்கத்தில் 'டிக்காயுசுனே' என்று
குறிப்பிடப்படும் வார்த்தைக்கு, 'கடவுளோடு உள்ள உறவை
நேர்கோட்டில் அமைத்துக்கொள்ளுதல்' என்பது பொருள். இயேசு
தன்னுடைய திருமுழுக்கின் நினைவாக கடவுளோடு உள்ள உறவை
நேர்கோட்டில் அமைத்துக்கொள்கிறார் என்றால், இயேசுவின் கோடுகள்
கோணலாக இருந்தனவா? இல்லை. மாறாக, கடவுளுக்கும் தனக்கும் உள்ள
உறவில் தான் யார் என்பதைக் கண்டுகொள்கிறார் இயேசு. அந்தக்
கண்டுகொள்தல், தந்தையின் வார்த்தைகளில் - 'என் அன்பார்ந்த
மைந்தர் இவரே. இவரின் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்' -
நடந்தேறுகிறது. தொடர்ந்து, இயேசு தன்னுடைய பொதுவாழ்வை அல்லது
பணிவாழ்வைத் தொடங்குகின்றார். அதாவது, கடவுளுக்கு
ஏற்புடையவற்றை நிறைவேற்றிய ஒருவர், தன்னையும் கடவுளையும்
நேர்கோட்டில் வைத்துக்கொள்ளும் ஒருவர், வெறுமனே ஓய்ந்திருக்க
இயலாது. அவர் உடனடியாக மற்றவர்களை நோக்கிப் புறப்பட வேண்டும்.
இதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். திப 10:34-38),
கொர்னேலியுவின் இல்லத்தில் உரையாற்றுகின்ற பேதுரு, இயேசுவின்
திருமுழுக்கு அனுபவத்தை, 'தூய ஆவியாரின் அருள்பொழிவு' என்று
அழைப்பதோடு, 'கடவுள் அவரோடு இருந்ததால் அலகையின் கொடுமைக்கு
உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து, எங்கும் நன்மை
செய்துகொண்டே சென்றார்' என்று மொழிகின்றார். இயேசு
மற்றவர்கள்மேல் காட்டிய உறவு, 'நன்மை செய்தல்' என்ற நிலையில்
வெளிப்படுகிறது. இயேசு செய்த அனைத்துப் பணிகளையும் -
போதித்தல், பேய்களை ஓட்டுதல், நோய்களைக் குணமாக்குதல் -
'நன்மை' என்ற ஒற்றைச் சொல்லில் அடக்கிவிடுகின்றார் பேதுரு.
இன்றைய முதல் வாசகம் (காண். எசா 42:1-4,6-7), ஊழியர் பாடல்
என்றழைக்கப்படும் நான்கு பாடல்களில் முதன்மையான பாடலாக
இருக்கிறது. இங்கே கடவுள் தான் தேர்ந்துகொண்ட இஸ்ரயேலை,
தன்னுடைய இறைவாக்கினரை, தான் முன்மொழியும் மெசியாவை, 'இதோ! என்
ஊழியர்' என அழைக்கின்றார். மேலும், தான் தேர்ந்துகொண்ட
ஊழியரால் தன்னுடைய நெஞ்சம் பூரிப்படைவதாகவும் மொழிகின்றார்.
தொடர்ந்து, 'உம் கையைப் பற்றிப் பிடித்து, உம்மை பாதுகாப்பேன்'
என்று தன்னுடைய உடனிருப்பையும் அவருக்குத் தருகின்றார்
ஆண்டவர். இங்கே, ஆண்டவரோடு உள்ள உறவும், ஊழியர்
மற்றவர்களுக்குச் செய்யப்போகின்ற பணியும் இணைந்தே செல்வதைப்
பார்க்கின்றோம்.
ஆக, இன்றைய மூன்று வாசகங்களையும் இணைத்துப்பார்க்கும்போது,
மூன்று விடயங்கள் தெளிவாகின்றன:
அ. மனிதர்களோடு உள்ள உறவில் முதல் அடி எடுத்து வைப்பவர்
கடவுள். அவரே மனிதர்களைத் தெரிந்துகொள்கிறார். அன்பு
செய்கிறார். அவர்களால் பூரிப்படைகின்றார்.
ஆ. கடவுளோடு உறவுகொள்ளும் ஒருவர், கடவுளால் அன்புசெய்யப்படும்
ஒருவர், அந்த அன்பை கடவுளுக்கு பதிலன்பாகக் காட்ட முடியாது.
ஆனால், அவர் அந்தப் பதிலன்பை ஒருவர் மற்றவருக்குக் காட்ட
வேண்டும். அந்த அன்பு நன்மை செய்தலாகவும், பிறரன்புப்
பணிகளாகவும், நீதிச் செயல்களாகவும் வெளிப்படும்.
இ. மனித உறவுகளுக்கு இரண்டு திசைகள் உள்ளன. நேர்கோட்டு
திசையில் மனிதர்கள் கடவுளோடும், சமதளத்தில் ஒருவர் மற்றவரோடும்
இணைந்திருக்கின்றனர். முதல்வகை உறவு மனித வாழ்வின் வேர்
என்றால், இரண்டாம்வகை உறவு அவர்களின் கிளைகள் அல்லது கனிகள்.
இவற்றை நம் வாழ்வோடு எப்படிப் பொருத்திப் பார்ப்பது?
நாம் வயது வந்து திருமுழுக்கு பெற்றாலன்றி, அல்லது
திருமுழுக்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அல்லது
காணொளியைப் பார்த்தாலன்றி, நம்முடைய திருமுழுக்கு நிகழ்வை நாம்
நினைவிற்குக் கொண்டுவர முடியாது. திருமுழுக்கு கிறிஸ்தவர்களின்
வாழ்வில் மிக முக்கியமான நிகழ்வு. 'தொடக்கநிலைப் பாவம்
கழுவப்படுகிறது' என்று ஆன்மீகப்படுத்தவில்லை என்றாலும், சாதாரண
வாழ்வியல் நிலையில் இதற்கு நிறையப் பொருள் இருக்கிறது.
திருமுழுக்கு ஒரு குடும்ப நிகழ்வு. திருமுழுக்கின் வழியாக
குழந்தை ஒரு குடும்பத்தின் உறுப்பினராகிறது. ஏனெனில்,
குழந்தைக்குப் பெயரிடுதல் இங்கேதான் நடைபெறுகிறது. பெயரிடுதல்
என்பது ஒருவர் அனுபவிக்கும் உரிமை உணர்வைக் காட்டுகிறது.
மேலும், குழந்தை தன்னுடைய குடும்பத்தோடு, குடும்பத்தாரின்
குடும்பங்களோடு உறவுகொள்ளத் தொடங்குகிறது.
இந்த உறவுக்கு அடித்தளமாக இருப்பது இறையுறவு. 'தந்தை மகன் தூய
ஆவியாரின் பெயரால் நான் உன்னைக் கழுவுகிறேன்' என்ற வார்த்தைகள்
சொல்லப்பட்டு, தண்ணீர் தலையில் ஊற்றப்படும்போது, குழந்தை
தன்னுடைய கடவுளோடு உள்ள நிலையில் தன்னையே நேர்கோட்டில்
வைத்துக்கொள்கிறது. இறைவனுக்கு குழந்தையை அர்ப்பணிக்கும் மரபு
எல்லா மதங்களிலும் காணப்படுகிறது. இந்து சமயத்தில்
புழக்கத்தில் இருக்கும் மொட்டையிடுதல் இறையுறவையே குறிக்கிறது.
போரில் தோற்ற அரசன் தன்மேல் வெற்றிகொண்ட அரசனின் கால்களில்
தன்னுடைய மணிமுடியைக் கழற்றி வைத்து, 'இனி நான் உன் அடிமை. உன்
விருப்பப்படி எனக்குச் செய்யும்' என்று சொல்வதுபோல, பெற்றோர்
குழந்தையின் மணிமுடியாகிய தலைமுடியைக் கழற்றி, 'இனி இவன்-இவள்
உன் அடிமை. உன் விருப்பப்படி இவனுக்கு-இவளுக்குச் செய்யும்'
என்று சொல்கின்றனர்.
ஆக, நம்முடைய திருமுழுக்கிலும் நாம் இறைவன் என்ற அக்கரையோடும்,
மற்றவர்கள் என்னும் அக்கரையோடும் இணைகிறோம்.
அக்கரையில் நாம் கண்ட இந்த இரு உறவுகளில் எப்படி நாம்
நிலைத்திருப்பது? அல்லது உறைபனி போல உறவுகள் உறைந்துவிடாமல்
எப்படி பாதுகாப்பது?
1. இறைவனில் அடையாளத்தைக் காண்பதால்:
நாம் அன்பு செய்யும்போது மற்றவர்களையும், அல்லது நம் படிப்பு,
பெயர், பின்புலம் போன்றவற்றையும் நம்முடைய அடையாளங்களாகக்
கொள்கின்றோம். இவ்வடையாளங்கள் நம்மை ஏமாற்றிவிடுகின்றன. ஆனால்,
'நான் இறைவனின் அன்பார்ந்த மகன் அல்லது மகள்' என்று நாம்
எடுத்துக்கொள்ளும் உரிமையும், அடையாளமும் ஒருபோதும் மாறாது.
நாம் எங்கே இருந்தாலும், எப்படி இருந்தாலும் நமக்கு
உந்துசக்தியாக இருப்பது இந்த அடையாளம்தான். இந்த அடையாளத்தில்
இயேசு மிகவும் உறுதியாக இருந்தார். எனவேதான், அவருடைய
உறவினர்கள் அவரை மதிமயங்கிவிட்டார் என்று நினைத்து
தேடிவந்தபோதும், பரிசேயர்கள், சதுசேயர்கள், மறைநூல் அறிஞர்கள்
தனக்கு எதிராகச் சதிசெய்தபோதும், தன்னுடைய சீடர்கள் தன்னைப்
புரிந்துகொள்ள மறுத்தபோதும் அல்லது தவறாகப்
புரிந்துகொண்டபோதும் துணிச்சலோடு முன்னேறிச் செல்கின்றார்.
இன்று நான், 'நான் கடவுளின் அன்பார்ந்த மகன்-மகள்' என்று
எனக்குள்ளே சொல்லிக்கொள்வதோடு, அவருடைய பாதுகாப்பையும்,
உடனிருப்பையும் உணர வேண்டும்.
2. தண்ணீரை விட்டு வெளியேறுதல்:
திருமுழுக்கு பெற்ற இயேசு தண்ணீரிலிருந்து வெளியேறுகின்றார்.
தண்ணீரிலிருந்து அவர் வெளியேறும்போதுதான் அவரால் தந்தையின்
குரலைக் கேட்க முடிகின்றது. தண்ணீர் என்பது பாதுகாப்பு வளையம்.
அந்த பாதுகாப்பு வளையத்திலிருந்து ஒருவர் வெளியேற வேண்டும்.
இறையுறவையும், பிறர் உறவையும் நான் உணர என்னுடைய பாதுகாப்பு
வளையத்தை விட்டு வெளியேறுதல் அவசியம். 'பாதுகாப்பாய்
இருக்கிறது' என்று தண்ணீரில் அதிக நேரம் நின்றால், அதுவே
நமக்கு ஆபத்தாய் முடிந்துவிடும். இன்று நான் வெளியேற வேண்டிய
தண்ணீர் எது? நான் விடமுடியாது பிடித்துக்கொண்டிருக்கும்
பழக்கம் எது? எனக்கு நானே கட்டிக்கொள்ளும் சங்கிலி எது?
3. பிறருக்கு நன்மை செய்வதால்:
இறைவனின் நன்மைத்தனத்தையும் அன்பையும் அனுபவித்த ஒருவர் அதை
மற்றவர்களுக்குக் காட்ட கடமைப்பட்டிருக்கின்றார். இயேசு தான்
சென்ற இடமெங்கும் நன்மைசெய்துகொண்டே செல்கின்றார். நன்மை
செய்தல் அவருடைய வழக்கமாகவே மாறிவிடுகின்றது. நன்மை செய்தல்,
நல்லதை நினைத்தல், நல்லதைப் பேசுதல் போன்றவை நாம்
கற்றுக்கொள்ளும் பழக்கங்கள். தொடர்ந்து செய்யும் செயல் நமக்கு
பழக்கம் அல்லது வழக்கமாகிவிடுகின்றது. நன்மையும் அப்படித்தான்.
இன்று நான் என்னுடைய வாழ்வில் செய்யும் நன்மைகள் எவை? என்னுடைய
இருப்பால் யாராவது ஒருவருடைய வாழ்வு முன்னேறியிருக்கிறதா? நான்
அடுத்தவரை அலகையின் கட்டுக்களிலிருந்து விடுவித்துள்ளேனா?
இறுதியாக,
அக்கரை உறவுகள் என்னும் இறை-மனித உறவுகளின் நுழைவாயிலாக
திருமுழுக்கு இயேசுவுக்கு இருந்ததுபோல, திருமுழுக்கு பெற்ற
உங்களுக்கும் எனக்கும் இருக்கிறது. நுழைவாயிலைக் கடந்த
இறை-மனித உறவில் இணையும் அனைவருக்கும் 'ஆண்டவர் தம் அமைதியை
அருள்கின்றார்' என்று இன்றைய பதிலுரைப்பாடல் (காண். திபா 29)
நமக்கு வாக்குறுதி தருகிறது.
அக்கரை உறவுகள் அக்கறையோடு!
(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)
|
|