|
ஆண்டு B |
|
ஆண்டவரின் திருமுழுக்கு |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்; நீங்கள் வாழ்வீர்கள்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55: 1-11
ஆண்டவர் கூறுவது: தாகமாய் இருப்பவர்களே, நீங்கள் அனைவரும்
நீர்நிலைகளுக்கு வாருங்கள்; கையில் பணமில்லாதவர்களே, நீங்களும்
வாருங்கள்; தானியத்தை வாங்கி உண்ணுங்கள், வாருங்கள், காசு பணமின்றித்
திராட்சை இரசமும் பாலும் வாங்குங்கள். உணவாக இல்லாத ஒன்றிற்காக
நீங்கள் ஏன் பணத்தைச் செலவிடுகின்றீர்கள்? நிறைவு தராத ஒன்றிற்காய்
ஏன் உங்கள் உழைப்பை வீணாக்குகிறீர்கள்? எனக்குக் கவனமாய்ச்
செவிகொடுங்கள்; நல்லுணவை உண்ணுங்கள்; கொழுத்ததை உண்டு மகிழுங்கள்.
எனக்குச் செவி கொடுங்கள், என்னிடம் வாருங்கள்; கேளுங்கள்; அப்பொழுது
நீங்கள் வாழ்வடைவீர்கள். நான் உங்களுடன் ஓர் என்றும் உள்ள உடன்படிக்கையைச்
செய்துகொள்வேன்; தாவீதுக்கு நான் காட்டிய மாறாத பேரன்பை உங்களுக்கும்
காட்டுவேன்.
நான் அவனை மக்களினங்களுக்குச் சாட்சியாகவும், வேற்றினங்களுக்குத்
தலைவராகவும் தளபதியாகவும் ஏற்படுத்தினேன். இதோ, நீ அறியாத பிற
இனமக்களை அழைப்பாய்; உன் கடவுளாகிய ஆண்டவரை, இஸ்ரயேலின் தூயவரை
முன்னிட்டு, உன்னை அறியாத பிற இனத்தார் உன்னிடம் ஓடிவருவர்.
ஏனெனில், அவர் உன்னை மேன்மைப்படுத்தியுள்ளார். ஆண்டவரைக் காண்பதற்கு
வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும்போதே
அவரை நோக்கி மன்றாடுங்கள். கொடியவர் தம் வழிமுறையையும், தீயவர்
தம் எண்ணங்களையும் விட்டுவிடுவார்களாக; அவர்கள் ஆண்டவரிடம்
திரும்பி வரட்டும்; அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்; அவர்கள்
நம் கடவுளிடம் வரட்டும்; ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர்.
என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என்
வழிமுறைகள் அல்ல, என்கிறார் ஆண்டவர். மண்ணுலகத்திலிருந்து
விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என்
வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன.
மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன; அவை நிலத்தை
நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு
விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத்
திரும்பிச் செல்வதில்லை.
அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும்.
அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ
அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி
வருவதில்லை.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
எசா: 12: 2-3. 4. 5-6 (பல்லவி: 3)
=================================================================================
பல்லவி: மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து அகமகிழ்வோடு தண்ணீர் முகந்துகொள்வீர்.
2 இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்;
ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே. 3
மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்துகொள்வீர்கள்.
பல்லவி
4 அந்நாளில் நீங்கள் சொல்வதாவது; ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்;
அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்; மக்களினங்களிடையே அவர் செயல்களை
அறிவியுங்கள்; அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். பல்லவி
5 ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர்
மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்; அனைத்துலகும் இதை அறிந்துகொள்வதாக.
6 சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள்; இஸ்ரயேலின்
தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார். பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
இயேசு இறைமகன் என்று தூய ஆவியும் நீரும் சான்று பகர்கின்றன.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம்
5: 1-9
அன்பார்ந்தவர்களே, இயேசுதான் மெசியா என்று நம்புவோர் அனைவரும்
கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். பெற்றவரிடம் அன்பு செலுத்துவோர்
பிள்ளைகளிடமும் அன்பு செலுத்துவர். நாம் கடவுள்மீது அன்புகொண்டு
அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, கடவுளின் பிள்ளைகள்மீதும்
அன்பு கொள்கிறோம் என்பது நமக்குத் தெரியவரும்.
ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்தான் கடவுள் அன்பு
அடங்கியுள்ளது. அவர் கட்டளைகள் நமக்குச் சுமையாய் இருப்பதில்லை.
ஏனெனில் கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும்;
உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே.
இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்?
நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் நீரால்
மட்டும் அல்ல. நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் என தூய ஆவியார்
சான்று பகர்கிறார். தூய ஆவியாரே உண்மை. எனவே சான்று அளிப்பவை
மூன்று இருக்கின்றன. தூய ஆவியும் நீரும் இரத்தமுமே அவை. இம்மூன்றும்
ஒரே நோக்கம் கொண்டவை. மனிதர் தரும் சான்றை நாம் ஏற்றுக்கொள்கிறோமே!
கடவுள் தரும் சான்று அதைவிட மேலானது அன்றோ! கடவுள் தம் மகனுக்குச்
சான்று பகர்ந்துள்ளார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான்,
"இதோ கடவுளின் செம்மறி! செம்மறியாம் இவரே உலகின் பாவத்தைப்
போக்குபவர்" என்றார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி
வாசகம்
=================================================================================
என்
அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்.
+ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 7-11
அக்காலத்தில் யோவான் அறிவித்ததாவது: "என்னைவிட வலிமை
மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி
வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. நான் உங்களுக்குத்
தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்: அவரோ உங்களுக்குத் தூய
ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்" எனப் பறைசாற்றினார்.
அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து
யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார். அவர் ஆற்றிலிருந்து
கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப்போல் தம்மீது
இறங்கி வருவதையும் கண்டார்.
அப்பொழுது, "என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான்
பூரிப்படைகின்றேன்" என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 1
=================================================================================
"இன்றைய முதல் வாசகத்தில், இறைவன்,
"நம் எண்ணங்கள் உங்கள்; எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என்
வழிமுறைகள் அல்ல" என்கிறார். ஆம். இதைத்தான் "நாம் ஒன்று
நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும்" என்று கூறக்
கேட்டிருக்கிறோம். நம் வாழ்வில் அனுபவித்தும்
பார்த்திருப்போம். நம் எண்ணங்கள்; வேறு, இறைவனின் எண்ணங்கள்
வேறு" என்பதை புனித பவுலின் வாழ்வில் நாம் அறிய முடியும்.
இயேசுவைப் பின்பற்றுபவர்களை ஒழிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் வருகிறார்.
ஆனால், இறைவனின் எண்ணம் அங்கே வேறாக அமைவதைப் பார்க்கிறோம்.
அவரைத் தம் பணிக்கென தேர்ந்தெடுக்கிறார்.
யோனாவும் இறை அழைப்பிலிருந்து விடுபட வேண்டுமென்ற எண்ணத்துடன்
கடலில் குதிக்கிறார். ஆனால், அங்கேயும் இறைவனின் எண்ணம் வேறாக
அமைகிறது. அவரை ஒரு பெரிய மீன் விழுங்கிற்று. மூன்று நாட்களுக்குப்
பின் வெளிக் கொணரப்படுகிறார். இறைத்திட்டப்படியே நினிவே நகருக்குச்
செல்கிறார்.
ஆம், "மனிதரின் எண்ணங்கள் வீணானவை, இதனை ஆண்டவர் அறிவார்" என்றும்,
" மனிதர் மனத்தில் எழும் எண்ணங்கள்; ஏராளம்,ஆனால், ஆண்டவரின்;
திட்டமே நிலைத்து நிற்கும்" என்றும்; திருப்பாடல் 94: 11
கூறுகின்றது. நம் உள்ளத்தின் எண்ணங்கள் பயனற்றவையாக, தீயவனவாக
இல்லாமல், இறைவனுக்கு உகந்தவையாய் அமையட்டும்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 2
=================================================================================
ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழா
ஒரு சமயம் வெவ்வேறு கிறிஸ்தவ சபையைச் சார்ந்த (மெதோடிஸ்ட்,
பிரஸ்பிடேரியன், பாப்டிஸ்ட்) மூன்று போதகர்கள் சந்தித்துக்
கொண்டார்கள். அவர்கள் தாங்கள் இருந்த சபையைக் குறித்தும்,
அதில் அனுதினமும் அவர்கள் சந்திக்கக்கூடிய சவால்களைக்
குறித்தும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். இப்படி
அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது அவர்களுடைய பேச்சு,
ஆலயத்திற்குள் நுழைந்து சேட்டைகள் செய்யும் வௌவால்களை எப்படி
விரட்டுவது என்பதற்குத் தாவியது.
அப்போது மெதோடிஸ்ட் சபையைச் சார்ந்த போதகர், "நாங்கள்
எங்களுடைய ஆலயத்திற்குள் நுழையும் வௌவால்களைத் துப்பாக்கியைக்
கொண்டு விரட்டியடிப்போம்" என்றார். தொடர்ந்து பேசிய
பிரஸ்பிடேரியன் சபையைச் சார்ந்த போதகர், "நாங்கள் எங்களுடைய
ஆலயத்திற்குள் நுழைந்து சேட்டைகள் செய்யும் வௌவால்களைத்
துப்பாக்கியைக் கொண்டெல்லாம் விரட்டியடிக்க மாட்டோம். மாறாக,
ஒரு பெரிய போர்வையை ஆலயத்தினுள்ளே விரித்து, அதில் அவற்றைச்
சிக்க வைத்து, பின்னர் அந்த போர்வையைத் தூக்கிக்கொண்டு போய்
காட்டுப் பகுதியில் கொண்டு போய் போட்டுவிட்டு வந்துவிடுவோம்"
என்றார்.
அதுவரை அமைதியாக இருந்த பாப்டிஸ்ட் சபையைச் சார்ந்த போதகர்,
"நாங்கள் எங்களுடைய ஆலயத்திற்குள் நுழைந்து சேட்டைகள் செய்யும்
வௌவால்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்துவிடுவோம். அவ்வளவுதான்,
அதன்பிறகு வௌவால்கள் அந்தப் பக்கம் தலை வைத்துக்கூடப்
படுப்பதில்லை" என்றார். இதைக் கேட்டு மற்ற இருவரும் சிரிப்பை
அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
மேலே சொல்லப்பட்ட நிகழ்வு வேடிக்கையாக இருந்தாலும்,
திருமுழுக்குப் பெறுவதோடு சரி, அதற்கு அப்புறம் ஆலயத்தின்
பக்கம் தலைவைத்துக்கூடப் படுக்காத ஒருசில கிறிஸ்தவர்களைப் பகடி
செய்வதாக இருக்கின்றது. இன்று நாம் ஆண்டவர் இயேசுவின்
திருமுழுக்குப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். இவ்விழா
நாம் பெற்ற திருமுழுக்கை நினைவுபடுத்துகின்ற அதே வேளையில்,
திருமுழுக்குப் பெற்ற நாம் என்னென்ன செய்யவேண்டும் என்பதை
நமக்கு எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. நாம் அதனைக் குறித்து
இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.
திருமுழுக்கு என்பது யூத சமயத்தில் சேரக்கூடிய புறவினத்து
மக்களுக்கு ஒரு புதுமுகச் சடங்காக நிறைவேற்றப்பட்டது.
பின்னாளில் திருமுழுக்கு யோவான் யோர்தான் ஆற்றங்கரையில்
திருமுழுக்குக் கொடுத்தபோது புறவினத்து மக்கள் மட்டுமல்லாது,
யூதர்களும் திருமுழுக்குப் பெற்றார்கள். இங்கே யோவான் கொடுத்த
திருமுழுக்கு ஒரு புகுமுகச் சடங்கைப் போன்று அல்லாமல், பாவம்
போக்கும் சடங்காக நிறைவேற்றப்பட்டது. அதனால் அனைத்து நிலையில்
இருந்தவர்களும் தங்களுடைய குற்றங்களை உணர்ந்து, அவரிடம்
திருமுழுக்குப் பெற்றார்கள். யோவான் கொடுத்த திருமுழுக்கு
பாவம் போக்கும் சடங்காக இருந்தது என்றால், பாவக்கறை இல்லாத
ஆண்டவர் இயேசு எதற்குத் திருமுழுக்குப் பெறவேண்டும் என்றொரு
கேள்வி எழுகின்றது. இங்கே நாம் இன்னொரு உண்மையையும்
உணர்ந்துகொள்ள வேண்டும், அது என்னவெனில், இயேசு,
யோவானிடமிருந்து பெற்ற திருமுழுக்கை பாவம் போக்கும் சடங்கப்
பார்க்காமல், அவர் மக்களோடு தன்னை ஐக்கியப்படுத்திக்
கொள்ளக்கூடிய ஒரு நிகழ்வாகப் பார்க்கவேண்டும். அப்போதுதான்
நாம் இயேசு யோவானிடமிருந்து பெற்ற திருமுழுக்கின் அர்த்தத்தை
உணர்ந்துகொள்ள முடியும்.
இயேசு, யோவானிடமிருந்து பெற்ற திருமுழுக்கு அவர் மக்களோடு
தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட ஒரு நிகழ்வாக நாம்
பார்க்கக்கூடிய அதே வேளையில், இயேசு பெற்ற திருமுழுக்கை
அவருடைய பணிவாழ்வின் தொடக்கமாக நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
இயேசு திருமுழுக்குப் பெற்ற பிறகு இறையாட்சிப் பணியை செய்யத்
தொடங்குகின்றார்; ஏழைகளுக்கு நற்செய்யை அறிவித்து, நோயாளிகளைக்
குணப்படுத்துகின்றார்; சென்ற இடங்களிலெல்லாம் நன்மை
செய்கின்றார்; எல்லாவற்றிற்கும் மேலாக கல்வாரி மலையில்
தன்னுடைய உயிரைப் பலியாகத் தந்து, தந்தைக் கடவுளின் திருவுளமான
உலகினை மீட்கின்றார். இப்படிப் பட்ட பணிகளை செய்யப்போவதாலும்
பின்னாளில் அவற்றைச் செய்து முடித்ததாலும் தந்தைக் கடவுள்
அவரைப் பார்த்து, "என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு
நான் பூரிப்படைகின்றேன்" என்றார். இயேசு தந்தைக் கடவுளின்
திருவுளத்தை ஏற்று நிறைவேற்றியதாலேயே அவர் இயேசுவின் பொருட்டு
பூரிப்படைகின்றார்.
இயேசுவைப் போன்று இறைவன் நம்மைக் குறித்தும்
பூரிப்படையவேண்டும் என்றால், நாம் செய்யவேண்டியதெல்லாம்
இரண்டாம் வாசத்தில் யோவான் சொல்வது போன்று ஆண்டவரை முழுமையாக
அன்பு செய்வது, அவருடைய கட்டளைகளைக் கடைபிடிப்பது வாழ்வதுதான்.
என்றைக்கு நாம் ஆண்டவரை முழுமையாக அன்பு செய்து அவருடைய
கட்டளைக் கடைப்பிடித்து வாழ்கின்றோமோ அன்றைக்கு நாம் அவருடைய
அன்பு மக்களாக மாறுவோம் என்பது உறுதி.
ஆகவே, ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழாவைக் கொண்டாடக் கூடிய
இந்த வேளையில் நாம் இயேசுவைப் போன்று தந்தைக் கடவுளின்
கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவருடைய திருவுளத்தை நிறைவேற்றி
வாழ்வோம். அதன்வழியாக அவருடைய அன்பு மக்களாவோம்; அவருடைய அருளை
நிறைவாய் பெறுவோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 3
=================================================================================
ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழா
கடந்த ஆண்டு (2014) நவம்பர் மாதம் பாகிஸ்தானில் நடைபெற்ற
நிகழ்வு. ஷாசத் மாசி, ஷமா என்கிற கிறிஸ்தவ தம்பதிகள் லாகூரில்
இருக்கக்கூடிய ஓர் இஸ்லாமியர் நடத்தி வந்த செங்கல்சூளையில்
வேலைபார்த்து வந்தனர். அவர்களுக்கு நான்கு குழந்தைகள்,
வறுமையின் காரணமாக அவர்கள் இந்த வேலையைச் செய்யவேண்டிய
நிர்பந்தத்திற்கு உள்ளானார்கள். ஆனாலும் வறுமை எவ்வளவுதான்
வாட்டினாலும் கிறிஸ்தவ விசுவாசத்தில் அவர்கள் முன்மாதிரியாத்
திகழ்ந்தார்கள். ஒரு நாள் இவர்கள் வேலை
பார்த்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த செங்கல்சூளையின்
உரிமையாளர் அவர்களை, குரானை எரித்து இழிவுபடுத்தினார்கள் என்று
அவர்கள்மீது பொய்க்குற்றம்சாட்டி செங்கல்சூளையில் தூக்கி
எறிந்து கொலைசெய்தான். இந்த கொலைபாதக நிகழ்விற்கு பல்வேறு
நாடுகளிலிருந்து எதிர்ப்பு வந்தது என்பது நாம் அறிந்த செய்தி.
கிறிஸ்தவர்களாகிய நாம் திருமுழுக்கில் பெற்ற விசுவாசத்தைக்
கடைப்பிடித்து வாழ்வதனால் ஏற்படக்கூடிய நிந்தை அவமானங்கள்,
துன்பங்கள் எத்தகையது என்பதை இந்த நிகழ்வானது நமக்கு
எடுத்துக்கூறுகின்றது.
இன்று நாம் ஆண்டவர் இயேசுவின் திருமுழுக்குப் பெருவிழாவைக்
கொண்டாடுகிறோம். யோர்தான் ஆற்றங்கரையில் இயேசு திருமுழுக்குப்
பெற்றார் என்று சொல்லும்போது அவர் மானுட மீட்புக்காக
பாடுகளையும், துன்பங்களையும், சிலுவைகளையும் ஏற்கத்
துணிந்துவிட்டார் என்றே நாம் பொருள் எடுத்துக்கொள்ளலாம்.
இத்தகைய பின்னணில் இன்று நாம் கொண்டாடும் இயேசுவின்
திருமுழுக்குப் பெருவிழா நமக்கு எத்தகைய செய்தியைத் தருகின்றது
என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு திருமுழுக்கு யோவானிடமிருந்து
திருமுழுக்குப் பெற்றார் என்று படிக்கிறோம். பாவமற்ற இயேசு
எதற்கு பாவிகள் பெறும் திருமுழுக்கைப் பெற வேண்டும்? என்பது
நமது சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. அதற்கு விவிலிய
அறிஞர்கள், மக்களோடு தம்மை ஐக்கியப் படுத்திக்கொள்ளவே இயேசு
திருமுழுக்குப் பெற்றார் என்று கூறுவார்கள். இஸ்ரயேல் மக்களது
வரலாற்றில் கடவுள் அவர்களுடைய துன்பங்களில் பங்கெடுத்ததுபோல,
இயேசு தான் பெற்ற திருமுழுக்கின் வழியாக தாம் மக்களின்
துன்பங்களில் பங்கேற்கப் போவதாகப் பறைசாற்றுகின்றார்.
ஆதலால் கடவுள் இனிமேல் வானத்தில் மட்டும் உறைபவர் அல்ல, அவர்
மக்களோடு மக்களாக இருப்பவர் என்ற உண்மையை இயேசுவின்
திருமுழுக்கு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
அடுத்ததாக இயேசு பெற்ற திருமுழுக்கு அவருடைய இறையாட்சிப்
பணியின் தொடக்கம் எனப் புரிந்துகொள்ளலாம். திருமுழுக்கு பெற்ற
உடன், இயேசு நற்செய்திப் பணியை செய்யத் தொடங்குகிறார்.
ஏழைகளுக்கு நற்செய்தி, சிறைப்பட்டோருக்கு விடுதலை,
ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை வாழ்வு, பார்வையற்றோருக்குப் பார்வை
இதுபோன்ற பல்வேறு பணிகளை அவர் செய்யத் துணிகின்றார். அதனால்
அவர் பல்வேறு துன்பங்களையும், சிலுவை அவமானங்களையும்
தாங்கிக்கொள்ள முன்வருகின்றார். ஆகையால் இயேசு பெற்ற
திருமுழுக்கு ஒரு சாதாரண நிகழ்வு அல்ல, மாறாக அது ஒரு புதிய
வரலாற்றுக்கான தொடக்கம் என நாம் புரிந்துகொள்வோம்.
இவ்வேளையில் இவ்விழா உணர்த்தும் செய்தி என்ன என்பதை நாம்
கவனமுடன் சிந்தித்துப் பார்ப்போம். முதலாவதாக இயேசுவின்
திருமுழுக்கு அவர் மானுட மீட்புக்காக தன்மீது சிலுவைகளை
ஏற்றுக்கொண்டதற்கான சம்மதமாகும். இனிமேல் இறைப்பணிதான் அவருடைய
பணி, இறையாட்சிப் பணிதான் அவருடைய பணி என்பதை இயேசு பெற்ற
திருமுழுக்கு மிகத்தெளிவாகப் பறைசாற்றுகின்றது. இத்தகைய பணியை
செய்ததினால் இயேசு அடைந்த துன்பங்கள் ஏராளம், சந்தித்த
சவால்கள் அதிகம். அவற்றையெல்லாம் அவர் பொறுமையோடு
தாங்கிக்கொண்டார். திருமுழுக்குப் பெற்ற நாம் ஒவ்வொருவரும்
இயேசு செய்த அதே பணிகளைச் செய்யவேண்டும், அதன்மூலம் நாம்
அடையும் துன்பங்களையும், அவமானங்களையும் பொறுமையோடு
தாங்கிக்கொள்ளவேண்டும் என்பதையும் நாம் பெற்ற திருமுழுக்கு
நமக்கு நினைவுபடுத்துகிறது.
ஒருமுறை திருத்தந்தை 23 ஆம் அருளப்பர் தனக்கு முன்பாகக்
கூடியிருந்த மக்களைப் பார்த்து, "திருச்சபையின் சிறப்பான
அம்சம் என்ன? என்று கேட்டார். அதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு
பதிலைச் சொன்னார்கள். யாருடைய பதிலிலும் திருப்தியடையாத
திருத்தந்தை அவர்கள், "திருச்சபையின் சிறப்பான அம்சமே
மகிழ்ச்சி, அதுவும் சிலுவையினால் வரும் மகிழ்ச்சி" என்றார்.
உடனே அங்கிருந்த மக்கள் அவரிடம், "அது எப்படி சிலுவையினால்
துன்பம்தானே வரும், எப்படி மகிழ்ச்சி வரும்?" என்று
கேட்டார்கள். அதற்கு திருத்தந்தை, "சிலுவையினால் துன்பம்தான்
வரும் என்பது உண்மை. ஆனால் அந்தத் துன்பத்தின் வழியாகக்
கிடைப்பதோ பெருமகிழ்ச்சி, அதுவும் பெரு மகிழ்ச்சி" என்றார்.
ஆம், நாம் இயேசுவின் வழியில், திருமுழுக்கில் நாம்
பெற்றுக்கொண்ட விசுவாசத்தின்படி வாழும்போது நமக்கு துன்பங்கள்
- சிலுவைகள் வரலாம். ஆனால் அந்தத் துன்பத்தின் நிறைவாக
நமக்குக் கிடைப்பதோ பெருமகிழ்ச்சி. ஆகவே, நாம் இயேசு
நம்மிடத்தில் விட்டுச்சென்ற நற்செய்திப் பணியை எத்தகைய
துன்பங்கள் வந்தாலும் துணிவோடு செய்திடுவோம்.
இயேசுவின் திருமுழுக்கு துன்பங்கள், சவால்களைக் கடந்தும்
நற்செய்திப் பணியைச் செய்யவேண்டும் என்பதைக்
குறித்துக்காட்டும் அதேவேளையில், அத்தகைய பணியை தாழ்ச்சியோடு
செய்யவேண்டும் என்பதையும் நமக்கு நினைவுபடுத்துக்கின்றது.
ஏனென்றால் ஆண்டவருக்காக வழிகளை ஆயத்தம் செய்த, மக்களை
மனமாற்றத்திற்கு அழைத்த திருமுழுக்கு யோவான்கூட
தாழ்ச்சியோடுதான் அத்தகைய பணிகளைச் செய்தார். இன்றைய நற்செய்தி
வாசகத்தில் திருமுழுக்கு யோவான், "என்னைவிட வலிமை மிக்க ஒருவர்
எனக்குப் பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை
அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை" என்கிறார். ஒரு இறைபணியை
எத்தகைய மனநிலையோடு பணிசெய்யவேண்டும் என்பதற்கு திருமுழுக்கு
யோவான் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. திருமுழுக்கு யோவான்
இப்படித் தாழ்ச்சியோடு இருந்ததனால்தான் ஆண்டவர் இயேசு அவரை,
"மனிதராகப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர்
யாருமில்லை" (லூக் 7:28) என்று பாராட்டுகிறார். ஆகவே, நாம்
எத்தகைய மனநிலையோடு நற்செய்தியைப் பணியை, இறையாட்சிப் பணியை
செய்கிறோம் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
நிறைய நேரங்களில் நம்முடைய பெயர் விளங்கவேண்டும், நம்முடைய
பெயர் பெரிதாகத் தெரியவேண்டும் என்று செயல்படுகின்றோம். இது
உண்மையான சீடனுக்குரிய மனநிலையாகாது. சீடன் என்பதன், தன்னுடைய
பெயரை அல்ல, தன்னுடைய தலைவனது பெயரை விளங்கச் செய்யவேண்டும்.
அதுபோன்று நாம் நம்முடைய பெயரை அல்ல, நாம் ஆண்டவர் இயேசுவின்
பெயரை விலகச் செய்யவேண்டும்.
இன்னும் ஒருசிலர் இருக்கிறார்கள். அவர்கள் தாழ்ச்சியை
கடைப்பிடிக்கிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு மறைமுகமாக
தாங்கள் செய்த சாதனைகளை பட்டியலிட்டுக்கொண்டிருப்பார்கள்.
இதுவும் உண்மையான தாழ்ச்சியாகாது.
ஓர் அரசியல் தலைவருக்கு பாராட்டுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது
அந்த கூட்டத்திற்கு வந்தவர்கள் அனைவரும் அவரை வானுயர
வாழ்த்திச் சென்றார்கள். இறுதியாக அவர் எழுந்து பேசத்
தொடங்கினார்; "அன்பார்ந்தவர்களே! நீங்கள் என்னை வானுயர
வாழ்த்திச்சென்றீர்கள். நான் என்ன இந்த ஊரில் இருக்கும் எல்லா
வீடுகளையுமா கட்டிக்கொடுத்தேன், பத்து வீடுகளைத்தானே
கட்டிக்கொடுத்தேன். அதேபோன்று இந்த ஊரில் இருக்கின்ற எல்லா
ஏழைகளுக்குமா உதவிகளைச் செய்துவிட்டேன். ஐம்பது
ஏழைகளுக்குத்தானே உதவிகளைச் செய்திருக்கிறேன். இந்த ஊரில்
இருக்கும் எல்லாச் சாலைகளையுமா அமைத்துத் தந்தேன். இங்கே
இருக்கும் இந்த பிரதான சாலையைத்தானே அமைத்துத் தந்தேன்" என்று
தான் செய்த அனைத்தையும் அவர் பட்டியல் போட்டுக்காட்டினார்.
இந்த மனிதர் தாழ்ச்சியாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டு, தான்
செய்த எல்லாவற்றையும் தம்பட்டம் அடித்துக்காட்டுகின்றார். இது
உண்மையான தாழ்சியாகாது, ஒருவிதத்தில் இதுவும் ஆணவத்தின்
வெளிபாடுதான். உண்மையான தாழ்ச்சி என்பது இறைவனுக்கு
முன்னால்தான் தான் ஒன்றுமில்லை என்று உணர்வது; நாம்
பெற்றிருக்கும் கொடைகள் அனைத்தும் ஆண்டவர் தந்தது என உணர்வது.
ஆகவே இறைப்பணி செய்யும் நாம் ஒவ்வொருவரும் திருமுழுக்கு
யோவானைப் போன்று தாழ்ச்சியோடு பணிசெய்வோம்.
நிறைவாக இயேசு திருமுழுக்கு விழா நமக்கு உணர்த்து செய்தி: நாம்
ஒவ்வொருவரும் இறைவனின் குரலுக்கு செவிமடுத்து வாழவேண்டும்
என்பதாகும். இறைவாக்கினர் எசாயாப் புத்தகத்திலிருந்து
எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், "எனக்கு செவிகொடுங்கள்.
என்னிடம் வாருங்கள்; கேளுங்கள்; அப்பொழுது வாழ்வடைவீர்கள்"
என்று படிக்கின்றோம். ஆம், நாம் ஒவ்வொருவரும் இறைவனின்
குரலுக்கு அனுதினமும் செவிகொடுத்து வாழவேண்டும். ஆண்டவர் இயேசு
இறைவனின் குரலுக்கு செவிமடுத்து வாழ்ந்தார். இன்னும்
சொல்லப்போனால் தன்னுடைய வாழ்வின் துன்பகரமான வேளையிலும்கூட
அதாவது கெத்சமணி தோட்டத்திலும் இயேசு தன்னுடைய குரலுக்கு,
தன்னுடைய விருப்பத்திற்கு செவிமடுக்கவில்லை, மாறாக இறைவனின்
குரலுக்கு, இறைவனின் விருப்பத்திற்கு செவிகொடுத்து வாழ்ந்தார்.
அதனால்தான் தந்தையாகிய கடவுள், "இவரே என்னுடைய அன்பார்ந்த மகன்
இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று வாழ்த்துகிறார்.
ஆகவே, நாமும் இறைவனின் குரலுக்கு செவிகொடுத்து வாழவேண்டும்,
அப்படி செவிகொடுத்து வாழ்கின்றபோது இறைவனின் அன்பு மக்களாக
வாழ்வோம் என்பது உறுதி. எனவே, இயேசுவின் திருமுழுக்குப்
பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நல்லநாளில் நாமும் இயேசுவைப்
போன்று மானுட மீட்புக்காக துன்பங்களை தோள்மேல் ஏற்றுகொள்வோம்,
தாழ்ச்சியோடு பணிசெய்வோம். வாழ்வின் எந்த நிலையிலும் தந்தையின்
குரலுக்கு செவிமடுத்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்
பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 4
=================================================================================
ஆண்டவரின் திருமுழுக்கு (ஜனவரி 10)
I எசாயா 55: 1-11
II 1 யோவான் 5: 1-9
III மாற்கு 1: 7-11
"மனுக்குலத்தோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட இயேசு"
நிகழ்வு
ஒருமுறை இங்கிலாந்தின் பிரதமராக இருந்த வின்சென்ட் சர்ச்சில்
காந்தியடிகளைப் பார்த்து, "அரை நிர்வாணப் பக்கிரி" என்று
குறிப்பிட்டார்.
காந்தியடிகள் இங்கிலாந்தில் வழக்குரைஞருக்குப் படிக்கின்றபோதும்,
அவர் வழக்குரைஞராகத் தென்னாப்பிரிக்காவில் பணியாற்றும்போதும்
மிகவும் ஆடம்பரமாக உடை உடுத்தியவர். அப்படிப்பட்டவர் நாலுமுழ
வேட்டியோடும் தோளில் ஒரு துண்டாடும் அரை நிர்வாணமாக, அமைதி
வழியில் நாட்டிற்காகப் போராடி, விடுதலை பெற்றுத் தந்ததற்கு மதுரையில்,
அவருடைய வாழ்வில் நடந்த ஒரு முக்கியமான நிகழ்வு காரணமாக இருக்கின்றது.
1921 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 22 ஆம் நாள் காந்தியடிகள்
சென்னையிலிருந்து மதுரைக்கு வந்திருந்தபொழுது, மதுரை மேலவாசி
வீதியாக நடந்து சென்றார். அப்பொழுது அவர் அங்குள்ள மக்கள்
மேலுடை அணியாமல், வெறும் நாலுமுழ வேட்டியை மட்டும் அணிந்திருப்பதைக்
கண்டார். அக்காட்சியைக் கண்டு அதிர்ந்து போன காந்தியடிகள்,
இந்நாட்டில் உள்ள பலரும் உடுத்துவதற்குச் சரியான உடை இல்லாமல்
இருக்கும்பொழுது, நான் மட்டும் மிகவும் ஆடம்பரமாக உடை உடுத்து
நல்லதில்லை என்று, தான் அணிந்து வந்த ஆடம்பரமான ஆடைகளைத் துறந்து,
நாலுமுழ வேட்டியோடும், தோளில் துண்டாடும் அரை நிர்வாணமாக வலம்வந்து,
நாட்டிற்கு விடுதலையைப் பெற்றுத் தந்தார்.
காந்தியடிகள் தான் அணிந்து வந்த ஆடம்பரமான ஆடைகளைத் துறந்து,
மேலுடை இல்லாமல் வலம் வந்ததன் மூலம், இந்த நாட்டில் இருந்த பல
கோடி ஏழை எளிய மக்களோடு தன்னை அடையாளபடுத்திக் கொண்டார். ஆண்டவராகிய
இயேசுவும் பாவிகள் மனம்மாறுவதற்காகக் கொடுக்கப்பட்ட
திருமுழுக்கைப் பெற்றுக்கொண்டதன் மூலம், அவர் மனுக்குலத்தோடு
தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார், இயேசு ஏன் திருமுழுக்குப்
பெற வேண்டும், இயேசு பெற்ற திருமுழுக்கு நமக்கு என்ன உண்மையை
உணர்த்துகின்றது என்பன குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
நம்மோடு அடையாளப்படுத்தி கொண்ட இயேசு
இன்றைக்குப் பலர் அதிகாரத்திலும், பதவியிலும் உயர்ந்து மற்றவர்களை
அடக்கியாள வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றார். இயேசு
இதற்கு முற்றிலும் மாறாக, தன்னுடைய நிலையிலிருந்து இறங்கி வந்து
(பிலி 2: 6-8), பாவிகள் மனம்மாறுவதற்காகக் கொடுக்கப்பட்ட
திருமுழுக்கினைப் பெறுகின்றார்
இயேசு பாவம் அறியாதவர் (2 கொரி 5: 21). அப்படியிருந்தும் அவர்
திருமுழுக்குப் பெற்றார் எனில், அவர் மனுக்குலத்தோடு தன்னை அடையாளப்படுத்தவே.
இயேசு தன்னுடைய நிலையிலிருந்து இறங்கி வந்து, திருமுழுக்கின்
வழியாகத் தன்னை மனக்குலத்தோடு அடையாளப்படுத்திக் கொண்டதுபோல்,
நாமும் நம்முடைய ஆணவத்திலிருந்து, அகந்தையிலிருந்து கீழே இறங்கி
வந்து, துன்புறுகின்ற மக்களோடு நம்மை அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும்.
இது குறித்து திருத்தூதர் புனித பேதுரு இவ்வாறு கூறுவார்:
"கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் உங்களைத் தாழ்த்துகள். அப்பொழுது
அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார் (1 பேது 5: 6). ஆகவே,
நாம் நம்முடைய ஆணவத்திலிருந்து இறங்கி வந்து, மிகுந்த
தாழ்ச்சியோடு மக்களோடு நம்மை அடையாளபடுத்திக் கொண்டுவாழ்வோம்.
தன் பணியைத் தொடங்கிய இயேசு
திருமுழுக்கு யோவானிடமிருந்து இயேசு பெற்ற திருமுழுக்கு அவரது
பணிவாழ்வின் தொடக்கமாக இருக்கின்றது. முப்பது ஆண்டுகள்
பொதுவாழ்வில் ஈடுபடாமல் இருந்த இயேசு, திருமுழுக்குப் பெற்றதும்,
தூய ஆவியார் அவர்மேல் இறங்கி வந்ததும், அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த
அனைவரையும் விடுவித்து, எங்கும் நன்மை செய்துகொண்டே
செல்கின்றார் (திப 10: 32).
இயேசு திருமுழுக்குப் பெற்றபின் இறையாட்சிப் பணியைச் செய்யத்
தொடங்கினார் எனில், திருமுழுக்குப் பெற்றிருக்கின்ற நாம் ஒவ்வொருவரும்
இயேசுவைப் போன்று இறையாட்சிப் பணியைச் செய்யக் கடமைப்பட்டவர்களாக
இருக்கின்றோம். இன்னும் சொல்லப்போனால் திருமுழுக்கில் நாம்
பெற்ற அருள் நம்மை இறைப்பணியை செய்ய உந்தித் தள்ளுவதாக இருக்கவேண்டும்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில்,
ஆண்டவராகிய கடவுள் கூறுவதாக இவ்வாறு வாசிக்கின்றோம்: "நான் அவனை
மக்களினங்களுக்குச் சாட்சியாகவும், வேற்றினங்களுக்கு தலைவராகவும்
தளபதியாகவும் ஏற்படுத்தினேன்" (எசா 55: 4). ஆண்டவராகிய கடவுள்
கூறுவதாக இறைவாக்கினர் எசாயா கூறுகின்ற இந்த வார்த்தைகளுக்கு
ஏற்ப, இயேசு தன் வாழ்வாலும் போதனையாலும் மக்களுக்குச் சாட்சியாகவும்,
வேற்றினங்களுக்குத் தலைவராகவும் விளங்கினார். அப்படியெனில்,
திருமுழுக்குப் பெற்ற நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்வாலும்
வார்த்தையாலும் மக்களுக்குச் சாட்சிகளாகத் திகழவேண்டும். இது
நம்முடைய தலையாய கடமை.
கடவுளின் அன்பார்ந்த பிள்ளைகளாக இருக்க அழைப்பு
இயேசு கிறிஸ்து திருமுழுக்குப் பெற்றதும், "என் அன்பார்ந்த மகன்
நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்" என்று வானத்திலிருந்து
ஒரு குரல் ஒலிக்கின்றது. இயேசு தந்தைக் கடவுளின் திருவுளத்தை
நிறைவேற்றி, அதன்மூலம் அவருடைய அன்பார்ந்த மகன் ஆனதால் வானத்திலிருந்து
இப்படியொரு குரல் ஒலிக்கின்றது. பின்னர் இக்குரல் இயேசு தோற்றமாற்றம்
அடைகின்றபொழுதும் இதே போன்று ஒலிக்கும் (மத் 17: 5). இயேசு தந்தைக்
கடவுள் திருவுளத்தை நிறைவேற்றி அவரது அன்பார்ந்த மகனானதுபோன்று,
நாமும் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றி, அவரது மகனான, மகளான
மாறவேண்டும்.
திருத்தூதர் புனித யோவான் முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட
இன்றைய முதல் வாசகத்தில், கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிப்போர்
அவர்மீதும் அன்பு கூர்கின்றார் என்றும், அதன்மூலம் அவர் கடவுளின்
மக்கள் ஆகின்றார் என்றும் கூறுகின்றார். இங்கு கடவுளை அன்புகூர்வது
என்பதை இயேசுவை மெசியா என நம்புவதும், நம்பி அதன்படி வாழ்வதுமாகும்
என்று பொருள் எடுத்துக்கொள்ளலாம். முதல் நூற்றாண்டைச் சார்ந்த
செரிந்துஸ், இயேசு திருமுழுக்குப் பெற்றது முதல் பாடுகள்படுகிறவரைக்கு
மட்டுமே இறைமகனாக இருந்தார், அதற்கு முன்பும் பின்பும் அவர் இறைமகனாக,
மெசியாவாக இல்லை என்று சொல்லிவந்தனர். இதற்குத் தன் கண்டனத்தைப்
பதிவு செய்யும் யோவான், இயேசுவே உண்மையான மெசியா, அதற்கு
நீரும் இரத்தமும் தூய ஆவியும் சான்றுகள், இதை நம்பி ஏற்றுக்கொள்வோர்
உலகை வெல்வர் என்று கூறுகின்றார்.
அப்படியெனில், நாம் கடவுளின் அன்பார்ந்த மக்களாக வேண்டும் எனில்,
இயேசுவே மெசியா என நம்பி, அதன்படி வாழவேண்டும். இது குறித்து
யோவான் நற்செய்தியில் இவ்வாறு வாசிக்கின்றோம்: "அவரிடம் நம்பிக்கை
கொண்டு, அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின்
பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார்" (யோவா 1: 12). எனவே, நாம்
ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழாவில் இயேசுவை மெசியா என்று
நம்பி ஏற்றுக்கொண்டு, அவர் வழியில் நடந்து, அதன்மூலம் தந்தைக்
கடவுளின் அன்பார்ந்த மக்களாவோம்.
சிந்தனை
நிலைவாழ்வை நோக்கிய பாதையின் முதல் அடி திருமுழுக்கு என்பார்
டெல்பர்ட் எல்.ஸ்டாப்லே (Delbert L. Stapley) என்ற அறிஞர். ஆகையால்,
திருமுழுக்கின் வழியாக நிலைவாழ்வை நோக்கிய பாதையில் முதல் அடி
எடுத்து வைத்து, அதில் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்ற நாம்,
அதில் இறுதிவரைக்கும் நடந்து, கடவுளின் அன்பு மக்களாவோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
=================================================================================
திருப்பலி முன்னுரை 1
=================================================================================
ஆண்டவரின் திருமுழுக்கு விழா
அன்புக்குரியவர்களே!
வாழ்த்துக்களும், வணக்கங்களும்.
கிறிஸ்துப் பிறப்பு பெருவிழாக் கொண்டாட்டம் இன்றோடு நிறைவுக்கு
வருகின்றது.
இயேசுவின் திருமுழுக்கு கொண்டாட்டம் இன்றைய வழிபாட்டு மையக் கருத்தாக
உள்ளது.
பாவம் அவரிடம் இல்லையென்றாலும், எல்லாருக்கும் உரிய வழிமுறையை
பின்பற்றி தானும் திருமுழுக்கு கையால் நீரால் திருமுழுக்கு பெற
முன்வருகின்றார். இதனை உறுதி செய்யும் விதத்தில் தந்தையும், ஆவியானவரும்
சான்று பகர்கின்றனர்.
படைப்பிலேயே நீருக்கு முக்கியத்துவம் தரப்பட்டது என்பதனை தொடக்கநூல்
சொல்லித் தருகின்றது. ஆவியானவர் படைப்பின் தொடக்கத்திலேயே
நீரின் மீது அசைவாடி நீரின் தன்மையை புதுப்பித்தார். அந்த
நீராலேயே இன்றும் திருமுழுக்கு அருளப்படுகின்றது. இந்த
திருமுழுக்கில் தூய ஆவியின் அபிஷேகத்தோடு நடக்கின்றது என்பதுவே
உண்மை.
நம்முடைய திருமுழுக்கை மனத்திலே கொண்டு, நம்மை புதுப்பித்துக்
கொண்டு, இறை பிள்ளைகளாகவும், திருஅவையின் உறுப்பினராகவும், பாவத்திற்கு
விடுதலைப் பெற்றவராகவும் வாழ உறுதி கொண்டவர்களாக பயணிக்க முன்வருவோம்.
இறையருள் பெறுவோம்.
முதல் வாசக முன்னுரை (எசாயா 55:1-11)
கடவுள் அன்பும் இரக்கமும் பரிவும் கொண்டவர். அவர் தந்தையைப்
போல் தம் மக்களை அன்புசெய்து அவர்களோடு உடன்படிக்கை செய்து
கொண்டுள்ளார் என்று கூறும் இன்றைய முதல் வாசகத்திற்கு
செவிகொடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை (1 யோவான் 5 : 1-9)
இயேசு இறைவனின் அன்பு மைந்தர். அன்பே வடிவான அவர் அன்பையே தனது
கட்டடளையாகக் கொடுத்தார் என்று திருத்தூதர் யோவான் இன்றைய இரண்டாம்
வாசகத்தில் கூறுவதை கேட்போம்.
மன்றாட்டு
அன்பார்ந்த மைந்தரே இறைவா! திருஅவை உம்முடைய எண்ணங்களை தமதாக்கி
முன்னெடுத்துச் செல்ல அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அன்பார்ந்த மைந்தரே இறைவா! நாடுநலம் பெற, வளம் பெற உழவுத்
தொழிலையும் அதனை செய்வோரையும் மதித்து, உயர்வாக கருதிட, அருள்தர
இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அன்பார்ந்த மைந்தரே இறைவா! பலியிலே பங்கேற்கும் நாங்கள், தகாத
தேவையில்லாத எண்ணங்களை விடுத்து, உம்முடைய எண்ணங்களே எம்முடையது
என்று வாழ, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அன்பார்ந்த மைந்தரே இறைவா! திருமுழுக்கின் அருளை இழந்துவிடாது
இருக்க, நாளும் பொழுதும், உம்முடைய அருள் துணையாலேயே வாழ்ந்திட
அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அன்பார்ந்த மைந்தரே இறைவா! தந்தை உம்மை குறித்து மகிழ்ந்தது
போல, எங்களை குறித்து மகிழ்ந்திட, நாங்கள் அவரது திருவுளத்தை
நிறைவேற்றும் மக்களாக வாழ, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
=================================================================================
திருப்பலி முன்னுரை 2
=================================================================================
ஆண்டவரின் திருமுழுக்கு விழா
இறைமகனே மனிதரின் கையால் திருமுழுக்கு பெற்று, எளிமையை அணிந்த
ஆண்டவரின் திருமுழுக்கு விழாத் திருப்பலிக்கு இறைவனைப் புகழ
அழைக்கப்பட்டிருக்கிறோம்.
திருமுழுக்கு என்பது கத்தோலிக்கத் திருச்சபையில் நடைபெறும் ஒரு
சம்பிரதாயச் சடங்கு அல்ல. தூய ஆவியின் துணையை இறைவன் அருளால்
பெற்றுக் கொள்ளும் விசுவாசமே ஆகும். தூய ஆவியையும் அவரின்
வல்லமையும் பெற்றுக் கொள்ள இறைவனை நோக்கி மன்றாடுவோம்.
இன்றைய முதல் வாசகத்தில், "நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு
வாருங்கள், நீங்கள் வாழ்வீர்கள்" என்று இறைவன் வழங்கும் ஆசியை
எடுத்துரைக்கிறார் எசாயா இறைவாக்கினர். நீர்நிலைகளில் வாழ்வு
பொதிந்துள்ளதா? இல்லை. திருமுழுக்கு என்பது நீர்நிலைகளில்
நடைபெறும் அனுபவம். திருமுழுக்கின் மூலம் இறைவனின் வல்லமையான
தூய ஆவியைப் பெற்றுக் கொண்டு வாழுங்கள் என்பதே எசாயா
இறைவாக்கினரின் வாக்கு.
இன்றைய நற்செய்தியில், தூய ஆவியால் திருமுழுக்கு கொடுக்கும்
இயேசுவையும் அவரின் வல்லமையும் பற்றி திருமுழுக்கு யோவான்
எடுத்துரைக்கிறார். "என் அன்பார்ந்த மகன் இவரே, இவரில் நான்
பூரிப்படைகிறேன்" என்று இறைவன் தன் மைந்தனில் மகிழ்வதைக்
காண்கிறோம்.
மகனை உலகிற்காக கையளித்த தந்தை பூரிப்படைகிறார்.
தந்தையின் வாக்கை வாழ்வாக்க
தம் வாழ்வையே கையளிக்க மகன் ஆர்வமடைகிறார்.
நாம் இறைவனின் உன்னத அன்பையும் இறை இயேசுவின் எளிமையையும், தூய
ஆவியாரின் துணையிருப்பையும் கேட்டு மன்றாட இப்பலியில்
பங்கேற்போம்.
இறைமக்களின் மன்றாட்டுகள்
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
1. தூய ஆவியாம் துணையாளரை அனுப்புபவரே எம் இறைவா!
திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள்,
பொதுநிலையினர் யாவரும் தூய ஆவியின் வல்லமையைப் பெற தம்மையேத்
தயார்படுத்தி, தூய ஆவியின் கனிகளைச் வெளிப்படுத்தும் வாழ்வு
வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. அன்பின் தெய்வமே எம் இறைவா!
எம் நாட்டை ஆளும் அரசியல் தலைவர்கள், சுயநலப் போக்கைக்
கைவிட்டு, எளிய மக்களின் வாழ்வுக்காக திட்டங்களை உருவாக்கிச்
செயல்படுத்தவும், நாட்டின் முதன்மைத் தொழிலாம் விவசாயத்திற்கு
ஆதரவாகச் செயல்படும் ஞானத்தை இறைவன் வழங்க வேண்டுமென்று
மன்றாடுகிறோம்.
3. ஆண்டவரைக் காண வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள் என்று
உரைப்பவரே எம் இறைவா!
நாங்கள் உலக நாட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்
நேரத்தைக் குறைத்து, இறைவனை நாடித் தேடவும், அதற்கான நேரத்தை
முதன்மைப்படுத்தவும், அதிகப்படுத்தவும், பிறரன்புச் செயல்களில்
எங்களை ஈடுபடுத்துவதன் மூனல் இறைவனுக்கு அருகில் இருக்கவும்
வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. புதிய ஆண்டினைத் தந்து ஆசீர்வதிப்பவரே எம் இறைவா!
புத்தாண்டிலே அனைவரும் இறை அரவணைப்பில் வாழவும், நோய்த் தொற்று
குறையவும், வேளாண்மை சிறக்கத் தேவையான கால சூழல் நிலவவும்,
படிக்கும் மாணவர்கள் எதிர்கால குழப்பம் தீர்ந்து தெளிவு
பெறவும், வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தை வரம் வேண்டுவோர்
உமது அருளால் பெற்று மகிழ வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
நன்றி: திருமதி ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.
|
|