|
ஆண்டு
A |
|
பொதுக்காலம்
7ஆம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
உன்மீது நீ அன்புகூர்வதுபோல், உனக்கு அடுத்திருப்பவர்மீதும்
அன்புகூர்வாயாக!
லேவியர் நூலிலிருந்து வாசகம் 19: 1-2,
17-18
ஆண்டவர் மோசேயிடம் கூறியது: "நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது:
தூயோராய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான்
தூயவர்! உன் சகோதரரை உன் உள்ளத்தில் பகைக்காதே! உனக்கு அடுத்தவர்
பாவம் செய்யாதபடி அவரைக் கடிந்துகொள். பழிக்குப் பழியென உன்
இனத்தார்மேல் காழ்ப்புக் கொள்ளாதே. உன்மீது நீ அன்புகூர்வதுபோல்
உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக! நான் ஆண்டவர்!"
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 103: 1-2.
3-4. 8,10. 12-13 (பல்லவி: 8a) Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.
1என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது
திருப்பெயரை ஏத்திடு!
2என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும்
மறவாதே! - பல்லவி
3அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம்
குணமாக்குகின்றார்.
4அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப்
பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். " -
பல்லவி
8ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும்
உள்ளவர்.
10அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு
ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. - பல்லவி
12மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவிலுள்ளதோ, அத்துணைத்
தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார்.
13தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு
அஞ்சுவோர்மீது இரங்குகிறார். - பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
நீங்கள் கிறிஸ்துவுக்கு உரியவர்கள்;
கிறிஸ்து கடவுளுக்கு உரியவர்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய
முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 16-23
சகோதரர் சகோதரிகளே, நீங்கள் கடவுளுடைய கோவில் என்றும் கடவுளின்
ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத்
தெரியாதா? ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார்.
ஏனெனில் கடவுளின் கோவில் தூயது; நீங்களே அக்கோவில். எவரும் தம்மைத்தாமே
ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். இவ்வுலகில் தங்களை ஞானிகள் என்று கருதிக்கொள்வோர்
தாங்களே மடையராகட்டும். அப்போது அவர்கள் ஞானிகள் ஆவார்கள். இவ்வுலக
ஞானம் கடவுள் முன் மடமையாய் உள்ளது. ஏனெனில் மறைநூலில் எழுதியுள்ளவாறு,
"ஞானிகளைக் கடவுள் அவர்களது சூழ்ச்சியில் சிக்க வைப்பார்."
மேலும் "ஞானிகளின் எண்ணங்கள் வீணானவை என ஆண்டவர் அறிவார்." எனவே
மனிதரைக் குறித்து யாரும் பெருமை பாராட்டலாகாது. பவுல், அப்பொல்லோ,
கேபா ஆகிய அனைவரும் உங்களுக்கு உரியவர்களே. அவ்வாறே உலகம்,
வாழ்வு, சாவு, நிகழ்காலம், எதிர்காலம் இவை அனைத்தும் உங்களுக்கு
உரியவைகளே. ஆனால் நீங்கள் கிறிஸ்துவுக்கு உரியவர்கள்; கிறிஸ்து
கடவுளுக்கு உரியவர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
(1 யோவா
2: 5)
அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவின் வார்தையைக் கடைப்பிடிப்போரிடம்
கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது; நாம் அவரோடு இணைந்திருக்கிறோம்
என அதனால் அறிந்து கொள்ளலாம். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து
வாசகம் 5: 38-48
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "
"கண்ணுக்குக் கண்', "பல்லுக்குப் பல்" என்று கூறப்பட்டிருப்பதைக்
கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச்
சொல்கிறேன்: தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை
வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்
காட்டுங்கள். ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள்
அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர்
எடுத்துக்கொள்ள விட்டுவிடுங்கள். எவராவது உங்களை ஒரு கல் தொலை
வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள். உங்களிடம்
கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம்
கோணாதீர்கள். "உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக',
"பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக" எனக் கூறியிருப்பதைக்
கேட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள்
பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக
இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள்
விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர்
மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார்.
நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச்
செய்கிறார். உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு
செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரி
தண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா? நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு
மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும்
மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா?
ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல
நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
I லேவியர் 19: 1-2, 17-18
II 1 கொரிந்தியர் 3: 16-23
III மத்தேயு 5: 38-48
பகைவருக்கு அருள்வாய்
நிகழ்வு
சில ஆண்டுகளுக்கு முன்பு பிலிப்பைன்ஸில் ஒரு கிறிஸ்தவப் பெண்மணி
இருந்தாள். அவள் தன்னுடைய பிழைப்பிற்காக ஒரு சிறு கடை நடத்தி
வந்தாள். ஒரு நாள் அவள் தன்னுடைய கடையைச் சாத்திவிட்டு, அருகிலிருந்த
வீட்டிற்குச் சென்றபிறகு, நீண்டநாள்களாக அவளுடைய கடையை நோட்டம்
விட்டுக்கொண்டிருந்த மூன்று இளைஞர்கள் அவளுடைய கடையை உடைத்து,
அதற்குள் இருந்த பொருள்களையெல்லாம் அள்ளிக்கொண்டுபோய் பக்கத்து
ஊரில் ஒரு கடை போட்டு அவற்றை விற்கத் தொடங்கினார்கள்.
மறுநாள் தன்னுடைய கடைக்கு வந்த பெண்மணி, அங்கிருந்த பொருள்கள்
யாவும் காணாமல் போனதைக் கண்டு அதிர்ந்து போனாள். பின்னர் அவள்
காவல்துறையினரிடம் ஒரு புகார் எழுதிக் கொடுத்தாள்.
காவல்துறையினர் அவள் அளித்த புகாரை வாங்கிக்கொண்டு தேடுதல்
வேட்டையைத் தொடங்கியது. ஓரிரு நாள்களில் அவளுடைய கடையிலிருந்த
பொருள்களை யார் திருடினார் என்பதைக் காவல்துறையினர்
கண்டுபிடித்து, அந்த மூன்று இளைஞர்களையும் சிறையில் அடைத்தனர்.
செய்தியறிந்த கிறிஸ்தவப் பெண்மணி அந்த மூன்று இளைஞர்களையும்
தேடி, அவர்கள் இருந்த சிறைக்குச் சென்றாள். அவளைப் பார்த்ததும்
அந்த மூன்று இளைஞர்களும் "இவர் நம்மைக் கடுமையாகத் திட்டித்
தீர்ப்பதற்குத்தான் இங்கு வந்திருக்கின்றார்" என்று
அஞ்சினார்கள்; ஆனால் அவள் அவர்களைத் திட்டவோ, அவர்களுக்கு
எதிராகக் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தவோ இல்லை. மாறாக
அவர்களுக்கு அவள் திருவிவிலியத்திலிருந்து ஒருசில பகுதிகளை
வாசித்துக்காட்டி விளக்கமளித்தாள்.
இப்படியே அவள் பலநாள்களாகச் செய்து வந்ததால், அவர்கள்
தங்களுடைய தவற்றை உணர்ந்து மனம்வருந்தினார்கள். மட்டுமல்லாமல்
கிறிஸ்துவைத் தங்களுடைய தலைவராக ஏற்றுக்கொண்டார்கள். இதற்குப்
பின்பு அவள் அங்கிருந்த சிறையதிகாரியின் அனுமதியின் பெயரில்
அவர்களை அருகிலிருந்த கோயிலுக்கு அழைத்துச் சென்று,
திருப்பலியில் பங்குகொள்ளச் செய்தாள். அது அவர்களுக்குப்
புதுவிதமான அனுபவமாக இருந்தது; அவர்களுடைய வாழ்க்கையிலும்
நிறைய மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. இப்படியிருக்கையில்
சிறையதிகாரி அந்த இளைஞர்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட
மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டு அவர்களை விரைவில் சிறையிலிருந்து
விடுதலை செய்தார். சிறையிலிருந்து விடுதலையான அந்த மூன்று
இளைஞர்களும் நல்லதொரு தொழிலைச் செய்து, நல்லமுறையில் வாழத்
தொடங்கினார்கள்.
இந்த நிகழ்வில் வருகின்ற பெண்மணி தன்னுடைய கடையிலிருந்து
திருடிய அந்த மூன்று இளைஞர்களையும் திட்டவோ அல்லது அவர்கள்மீது
கடுமையான நடவடிக்கையோ எடுக்காமல், அவர்களை மன்னித்து
அன்புசெய்து வாழ்வின் வழியைக் காட்டினார். அதனால் அவர்கள்
நல்லவர்களாக வாழத் தொடங்கினார்கள். இன்றைய இறைவார்த்தையும்கூட
நாம் நமக்கு எதிராகத் தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்யவும்
பகைவர்களை அன்பு செய்யவும் அழைத்துத் தருகின்றது. நாம் அது
குறித்து இப்பொழுது சிந்தித்துப் பாப்போம்.
இயேசுவின் புதிய போதனை
இந்த உலகம் "பழிக்கு பழி" என்று தத்துவத்தின் அடிப்படையிலும்
"அடித்தால் திருப்பி அடி" என்ற தத்துவத்தின் அடிப்படையிலும்
இயங்கிக்கொண்டிருக்கின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆண்டவர்
இயேசு புதிய போதனையை அல்லது தத்துவத்தை முன் வைக்கின்றார்.
அதுதான் தீமைக்கு நன்மை செய்வதும் பகைவரை அன்புசெய்வதுமாகும்.
ஒருகன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும், அங்கியை
எடுத்துக்கொள்பவருக்கு மேலாடையையும், ஒரு கல் தொலை நடக்கக்
கட்டாயப்படுத்துவோரிடம் இருகல் தொலைவும், கேட்போருக்குக்
கொடுக்கவும், பகைவரிடம் அன்பும், துன்புறுத்துவோருக்காக
இறைவனிடம் வேண்டவும் சொல்லும் இயேசு, தீமைக்கு ஒருபோதும்
தீமைக்குத் தீர்வாகாது நன்மையையும் அன்பும் மட்டுமே தீர்வாகும்
என்ற உண்மையை எடுத்துக்கூறுகின்றார். இயேசுவின் இப்போதனையை
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் கடைபிடிப்பது மிகக்கடினம் என்று
ஒருசிலர் சொல்லலாம். இயேசுவின் இப்போதனையைக் கடைப்பிடிப்பது
கடினமாக இருந்தாலும், இயலாத ஒன்று அல்ல. ஏனென்றால், இயேசுவே
தனக்கெதிராகத் தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்து, பகைவர்களை
அன்பு செய்தார். அப்படியானால் நாமும் நமக்கெதிராகத் தீமை
செய்தவர்களுக்கு நன்மையும் பகைவர்களை அன்பு செய்ய முடியும்
என்பதுதானே உண்மை. நாம் ஏன் தீமை செய்வதற்கு நன்மையும்
பகைவர்களை அன்புமசெய்யவும் வேண்டும்? இதனால் நமக்குக்
கிடைக்கும் பலனென்ன? ஆகியவற்றைக் குறித்துச் சிந்தித்துப்
பார்ப்போம்.
நாம் ஒவ்வொருவரும் தூய ஆவியார் தங்கும் கோயில்
இயேசு சொல்வது போன்று நாம் நமக்குத் தீமை செய்தவர்களுக்கு
நன்மையும் பகைவர்களை அன்புசெய்வதற்கும் முதன்மையான காரணம்,
ஒவ்வொருவரும் கடவுளுடைய கோயில்... ஒவ்வொருவருக்குள்ளும் தூய
ஆவியார் குடிகொண்டிருக்கின்றார் என்பதால்தான். வேறு
வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், ஒருவர் நமக்கெதிராகத்
தீமை செய்துவிட்டார் என்பதற்காகப் பதிலுக்கு நாம் அவருக்குத்
தீமை செய்தால், நாம் கடவுளின் கோயிலுக்கு எதிராகவும்
ஒவ்வொருவரிலும் குடிகொண்டிருக்கும் தூய ஆவியாருக்கு எதிராகவும்
பாவம் செய்கின்றோம் என்று ஆகிவிடுவோம். கடவுளின் கோயிலை
அழிக்கின்றவரைக் கடவுள் அழித்துவிடுவார் என்று புனித பவுல்
கூறுகின்றார். ஆகவே, நாம் ஒவ்வொருவரும் நமக்கெதிராகத் தீமை
செய்தவர்களுக்கு நன்மையையும் நம்முடைய பகைவர்களுக்கு அன்பையும்
காட்டவேண்டியது தேவையானதாக இருக்கின்றது.
நாம் யாவரும் விண்ணகத்தந்தையின் மக்கள்
நாம் நமக்குத் தீமை செய்தவர்களுக்கு நன்மையும் பகைவர்களுக்கு
அன்பையும் செலுத்தவேண்டிய இரண்டாவது முக்கியமான காரணம், நாம்
யாவரும் விண்ணகத் தந்தையின் மக்கள் என்பதால் ஆகும். விண்ணகத்
தந்தையோ நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச்
செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை
பெய்யச் செய்கின்றார். இப்படி இருக்க, நாம் நமக்கெதிராகத் தீமை
செய்தவர்களுக்குத் தீமையையும் பகைவர்களிடம் வெறுப்பையும்
காட்டிக்கொண்டிருந்தால், ஒருபோதும் நாம் விண்ணகத் தந்தையின்
மக்களாக முடியாது. மாறாக, அலகையின் பிள்ளைகளாகத்தான் முடியும்
ஏனெனில், தம் சகோதர் சகோதர்களிடம் அன்பு காட்டாதவர்களும்
அவர்கள் செய்த தீமைக்குத் தீமையையே செய்கிறவர்களும் அலகையின்
பிள்ளைகளாகத்தான் இருக்கமுடியும் (1 யோவா 3: 10). ஆகையால் நாம்
விண்ணகத்தந்தையின் மக்களாக இருக்க தீமை செய்தவர்களுக்கு
நன்மையையும் பகைவர்களிடம் அன்பையும் காட்டவேண்டும்.
ஒருமுறை ஒரு வயதான பெரியவரிடம் இளைஞன் ஒருவன், "தாத்தா!
உங்களுடைய வயது என்ன?" என்றான். அவர் "தொண்ணூறு" என்றதும்,
"இந்தத் தொண்ணூறு வயதிலும் இவ்வளவு இளமையாகவும் நலமோடும்
இருக்கிறீர்களே...! இதற்கான காரணமென்ன?" என்றான் அவன். "எனக்கு
எதிரிகள் கிடையாது. அதனால்தான் நான் இவ்வளவு நலமாக
இருக்கின்றேன்" என்று பெரியவர் சொன்னதும், அவன்
நம்பமுடியாதவனாய், "என்ன...! உங்களுக்கு எதிரிகள் கிடையாதா...?
கொஞ்சம் நம்புகின்ற மாதிரி பொய் சொல்லுங்கள்" என்று ஏளனமாகச்
சொன்னான். "தம்பி! நான் சொல்வது உண்மை. எனக்கு எதிரிகள் என்று
யாருமே கிடையாது. ஏனெனில் எனக்கு இருந்த எதிரிகளை எல்லாம் நான்
என் நண்பர்களாக்கிக்கொண்டேன். அதனால் என்னிடத்தில் யார்மீதும்
வெறுப்பு என்பதே கிடையாது... அன்பு மட்டுமே இருக்கின்றது.
அதனால்தான் நான் இவ்வுளவு இளமையாகவும் நலமாகவும்
இருக்கின்றேன்" என்றார் பெரியவர்.
ஆம் தீமைக்குப் பதில் நன்மை செய்து, நம் பகைவர்களை மன்னித்து
அன்பு செய்கின்றபோது நாம் நல்ல உடல் நலத்துடன் இருப்பதோடு
மட்டுமல்லாமல், விண்ணகத் தந்தையின் மக்களாகவும் ஆகுகின்றோம்.
ஆகையால், நாம் தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்வோம்; பகைவர்களை
மன்னித்து அன்புசெய்வோம்.
சிந்தனை
"ஒருவரை நாம் வெறுக்கத் தொடங்கும்பொழுதே, அவரை நாம் நம்மீது
அதிகாரம் செலுத்த அனுமதித்துவிடுகின்றோம்" என்பார் டால்
கார்னகி என்ற எழுத்தாளர். ஆகையால் நாம் யாரும் நம்மீது
அதிகாரம் செலுத்தாமல் இருக்கவும் இறைவனின் அதிகாரத்திற்கு
மட்டுமே கட்டுப்பட்டு, அவருடைய அன்பு மக்களாக இருக்கவும் தீமை
செய்தவர்களுக்கு நன்மை செய்வோம்; பகைவர்களை அன்பு செய்வோம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
|
|