Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                     Year B  
                                      ஆண்டின் பொதுக்காலம் 6ஆம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
 
தொழுநோயாளி பாளையத்துக்கு வெளியே தனியாகக் குடியிருப்பார்.

லேவியர் நூலிலிருந்து வாசகம் 13: 1-2, 44-46

அந்நாள்களில் ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் உரைத்தது: "ஒருவர் உடலில் தோல்மீது தொழுநோய் போன்று, ஏதேனும் தடிப்போ, சொறி சிரங்கோ, வெண்படலமோ தோன்ற, அது தொழுநோயென ஐயமுற்றால், அவர் குருவாகிய ஆரோனிடம் அல்லது குருக்களாகிய அவர் புதல்வரில் ஒருவரிடம் கொண்டுவரப்பட வேண்டும்.

அவர் தொழுநோயாளி. அவர் தீட்டுள்ளவர். அவர் தீட்டுள்ளவர், எனக் குரு அறிவிப்பார். ஏனெனில் நோய் அவர் தலையில் உள்ளது.

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் கிழிந்த உடை அணிந்து, தலை வாராமல் மேலுதட்டை மறைத்துக்கொண்டு, "தீட்டு, தீட்டு", என குரலெழுப்ப வேண்டும்.

நோயுள்ள நாளெல்லாம் அவர் தீட்டுள்ளவர். எனவே தீட்டுள்ள அவர் பாளையத்துக்கு வெளியே தனியாகக் குடியிருப்பார்.


- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
 
பதிலுரைப் பாடல்தி.பா:
32: 1-2. 5. 11 (பல்லவி: 7a)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, நீரே எனக்குப் புகலிடம்.

1 எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப்பட்டதோ, அவர் பேறுபெற்றவர். 2 ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ, எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ, அவர் பேறுபெற்றவர். பல்லவி

5 "என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்; என் தீச்செயலை நான் மறைத்ததில்லை; ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக்கொள்வேன்" என்று சொன்னேன். நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர். பல்லவி

11 நீதிமான்களே, ஆண்டவரை முன்னிட்டு அகமகிழுங்கள்; நேரிய உள்ளத்தோரே, நீங்கள் அனைவரும் மகிழ்ந்து பாடுங்கள். பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
 
நான் கிறிஸ்துவைப்போல் நடக்கின்றேன்; நீங்கள் என்னைப்போல் நடங்கள்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 10: 31 - 11: 1

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் உண்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்யுங்கள். யூதருக்கோ கிரேக்கருக்கோ கடவுளின் திருச்சபைக்கோ இடையூறாய் இராதீர்கள்.

நானும் அனைத்திலும், அனைவருக்கும் உகந்தவனாய் இருக்கிறேன். நான் எனக்குப் பயன் தருவதை நாடாமல், பலரும் மீட்படையும்படி அவர்களுக்குப் பயன் தருவதையே நாடுகிறேன். நான் கிறிஸ்துவைப்போல் நடப்பதுபோன்று நீங்களும் என்னைப்போல் நடங்கள்.



- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
லூக் 7: 16

அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================

தொழுநோய் அவரை விட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 40-45

ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, "நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்"" என்று முழந்தாள்படியிட்டு வேண்டினார்.

இயேசு அவர்மீது பரிவுகொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், "நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!"" என்றார்.

உடனே தொழுநோய் அவரை விட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.

பிறகு அவரிடம், "இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்"" என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பி விட்டார்.

ஆனால் அவர் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார்.

அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை; வெளியே தனிமையான இடங்களில் தங்கி வந்தார். எனினும் மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரிடம் வந்து கொண்டிருந்தார்கள்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
இயேசு செபவீரர் மட்டுமல்ல, செயல்வீரரும் கூட

ஜெர்மன் நாட்டைச் சார்ந்த பெண்ணொருத்தி கோடை விடுமுறையை செலவழிப்பதற்காக இத்தாலிக்கு அருகே இருந்த ஒரு தீவுக்குச் சென்றிருந்தாள். அந்தத் தீவு மிகவும் ரம்மியமாகவும் அவ்வளவாக ஆள் நடமாட்டம் இல்லாததாகவும் இருந்தது. ஆனால், அந்தத் தீவில் நடந்துகொண்டிருந்த இன்னொரு சம்பவம் அவரை மனம் நோகச்செய்தது. அது என்னவென்றால், அந்தத் தீவுக்கு வந்தபோன சுற்றுலாப் பயணிகள் சிலர் மது அருந்திவிட்டு, மது பாட்டில்களை ஆங்காங்கே போட்டுவிட்டுச் சென்றனர். இன்னும் சிலர் பிளாஸ்டிக் குப்பைகளை ஆங்காங்கே சிதறவிட்டுவிட்டுச் சென்றார். இதனால் அந்தத் தீவே பொழிவிழந்து காணப்பட்டது.

இதைப் பார்த்து அந்தப் பெண்மணியால் சும்மா இருக்க முடியவில்லை. அவர் தன்னால் முடிந்த மட்டும் அங்காங்கே சிதறிக்கிடந்த மது பாட்டில்களை, பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தார். இப்படியாக அந்தப் பெண்மணி தீவு சுத்தமாக இருக்க உதவிகள் செய்து வந்தார்.

ஒருநாள் மாலை வேளையில் அவர் வழக்கம் போல் தீவில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த குப்பைகளை, பிளாஸ்டிக் பொருட்களை, மது பாட்டில்களை அப்புறப்படுத்திக் கொண்டிருக்கும்போது, அவரைப் போன்றே ஒரு வயதான மனிதர் தீவில் கிடந்த மது பாட்டில்களை, பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்திக்கொண்டிருந்தார். அந்த மனிதர் ஒவ்வொருநாள் காலையிலும் தீவில் இருக்கும் தேவாலயத்தில் நடைபெறும் திருப்பலியில் கலந்துகொள்ளும் மனிதர் போன்று அவருக்குத் தெரிந்தது.

உடனே அந்தப் பெண்மணி பெரியவரிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினார், "பெரியவரே! நீங்கள் ஒவ்வொருநாளும் தீவில் இருக்கும் தேவாலயத்தில் நடைபெறும் திருப்பலியில் கலந்துகொள்கின்றவர்தானே?" என்று கேட்டார். "ஆமாம். நான்தான் அவர்" என்றார். தொடர்ந்து அந்தப் பெரியவர் பெண்மணியிடத்தில் பேசத் தொடங்கினார், "திருப்பலில் கலந்துகொள்வதால் மட்டும் என்னுடைய விசுவாச வாழ்க்கை முழுமை பெறவில்லை என்று எனக்குத் தோன்றியது. அதனால்தான் என்னால் இயன்ற மட்டும் இந்த தூய்மைப்படுத்துகின்ற பணியில் ஈடுபட்டு, என்னுடைய விசுவாச வாழ்க்கையை முழுமையாக்க முயற்சி செய்துகொண்டிருக்கின்றேன்".

பெரியவரின் வார்த்தைகளால் தொடப்பட்ட அந்தப் பெண்மணி, அதன்பிறகு தீவினைச் சுத்தப்படுத்துகின்ற பணியை அந்தப் பெரியவரோடு சேர்ந்தே செய்தார்.

ஜெபம் செய்வது மட்டும் கிறிஸ்தவ வாழ்க்கை கிடையாது, செயலிலும் ஈடுபடுவதுதான் உண்மையான எடுத்துகாட்டன கிறிஸ்தவ வாழ்க்கை என்னும் உண்மையை இந்த நிகழ்வு மிக அழகாக எடுத்துக்கூறுகின்றது.

பொதுக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் "இயேசுவைப் போன்று செபவீரராக மட்டுமல்லாமல், செயல்வீரராகவும் வாழ அழைப்புத் தருகின்றது. நாம் எப்படி செயல்வீரராக மாறுவது என்று இன்றைய இறைவார்த்தையின் வழியாக சிந்தித்துப் பார்ப்போம்.

மாற்கு நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகம் ஆண்டவர் இயேசுவினுடைய பணிவாழ்வில் ஒருநாள் எப்படியெல்லாம் கழிந்தது என்பதைப் பற்றி மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றது. இயேசு விடியற்காலையில் தனிமையான ஓர் இடத்திற்கு இறைவேண்டல் செய்வதற்காக சென்றார் என்று தொடங்கும் அவருடைய நாள், மாலை வேளையில் பல்வேறு பிணிகளால் வருந்திய மக்களை இயேசு குணப்படுத்தினார் என்பதோடு அவருடைய ஒருநாள் பணிவாழ்க்கை இருக்கின்றது. இயேசு இறைவனோடு தனிமையில் ஜெபித்தார் என்பது அவர் ஜெப வீரர் என்பதை சுட்டிகாட்டுகின்ற அதே வேளையில், அவர் பல்வேறு பிணிகளால் வருந்திய மக்களைக் குணப்படுத்தினார் என்பது அவர் உண்மையான செயல்வீரர் என்னும் உண்மையை நமக்கு மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

இயேசு பேய்களை ஒட்டியது, நோயாளிகளைக் குணப்படுத்தியது, நற்செய்தி அறிவிக்க பல்வேறு ஊர்களுக்குச் சென்றது, இறைவனின் ஜெபித்தது எல்லாம் அவர் மனுக்குலத்தின் மீது கொண்ட உண்மையான அன்பினால் செய்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. இறைவாக்கினர் எசாயா கூறுவது போன்று "மெய்யாகவே இயேசு நம்மீது கொண்ட அன்பினால் நம்முடைய பிணிகளையும், துன்பங்களையும், பாடுகளையும் தன்மீது சுமந்து கொண்டார் (எசா 53: 4) என்று சொன்னால் அது மிகையாகாது.

அது மட்டுமல்லாமல், நற்செய்தி அறிவிப்பும், ஆண்டவரின் இரக்கத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லி, அவர்களுக்கு நலமான வாழ்வினைத் தருவதுதான் தன்னுடைய இலட்சியமாகக் கொண்டு செயல்பட்டார். அது இன்றைய நற்செய்தி வாசகத்தில் மிகத் தெளிவாக தெரிகின்றது. "நாம் அடுத்த ஊர்களுக்கும் போவோம் வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியை பறைசாற்றவேண்டும்; ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கின்றேன்" என்னும் வார்த்தைகள்" இயேசு மக்கள்மீது கொண்ட உண்மையான அன்பினையும், அவருடைய இலட்சியக் கனவினையும் நமக்கு மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றது. நாம் ஒவ்வொருவரும் ஆண்டவர் இயேசுவைப் போன்று மக்கள்மீது உண்மையான அன்புகொண்டு, அவர்களுக்கு உதவி செய்து, நடமாடும் நற்செய்தியாய் இருக்கவேண்டும் என்பதுதான் இயேசுவின் திருவுளமாக இருக்கின்றது.

இப்படி ஆண்டவர் இயேசு போதித்த, வாழ்ந்துகாட்டிய விழுமியங்களின் படி வாழ்ந்தவர் தூய பவுலடியார் என்று சொன்னால் அது மிகையாகாது. கொரிந்தியருக்கு எழுதப்பட்ட முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகம் அதற்குச் சான்றாக அமைகின்றது.

இரண்டாம் வாசகத்தில் பவுலடியார், "நான் நற்செய்தியை அறிவிக்கின்றேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்யவேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு! என்று சொல்லிவிட்டு, எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாமானேன்" என்கின்றார்.

பவுலடியார் நற்செய்தியின்மீது கொண்ட தாகம் அளப்பெரியது, அது மட்டுமல்லாமல் அவர் மக்களை ஆண்டவருக்குள் கொண்டு வருவதற்கு பட்ட துன்பங்கள், கஷ்டங்கள், சந்தித்த அவமானங்கள், வேதனைகள் அனைத்தையும் வார்த்தையில் விளக்கிச் சொல்ல முடியாது. இவற்றையெல்லாம் அவர் மக்கள்மீதும் இறைமகன் இயேசுவின் மீது கொண்ட உள்ளார்ந்த அன்பினாலேயே செய்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. அதைவிடவும் பவுலடியார் தான் செய்துவந்த பணிகள் அனைத்தையும் பெருமைக்காக அல்ல, தன்மேல் சுமத்தப்பட்ட கடமையாக செய்தார். ஆகையால், நாம் பவுலடியாரைப் போன்று, ஆண்டவர் இயேசுவைப் போன்று நற்செய்தி அறிவிப்பதையும், நற்செயல் புரிவதையும் கடமையுணர்வோடு செய்யவேண்டும். அப்போதுதான் நாமும் ஆண்டவர் இயேசுவைப் போன்று, பவுலடியாரைப் போன்று செயல்வீரர்களாக மாறமுடியும்.

ஓர் ஊரில் மார்கரெட் என்னும் இளம்பெண் வாழ்ந்து வந்தாள். அவளுடைய குடும்பம் பொருளாதரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பம்; அவளுடைய பெற்றோரோ வயது முதிர்ந்தவர்களாக இருந்தார்கள். இதனால் அவள்தான் குடும்பச் சுமையை தன்னுடைய தோள்மேல் சுமக்கவேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டது. மார்கரெட்க்கு நல்லதொரு வேலை கிடைக்கவில்லை. குறைந்த ஊதியத்தில்தான் வேலை பார்த்து வந்தார். நல்லவொரு வேலை கிடைக்கவேண்டும் என்பதற்காக அவள் பல்வேறு நிறுவனங்களை ஏறி இறங்கினாள்.

இப்படிப்பட்ட தருணத்தில் ஒருநாள் மார்கரெட் ஒரு பெரிய நிறுவனத்திடம் வேலை வேண்டி புறப்பட்டுச் சென்றாள். ஆச்சரியம் என்னவென்றால், அவளைப் போன்றே நிறையப் பெண்கள் அந்த பெரிய நிறுவனத்திடம் வேலை வேண்டிச் சென்றார்கள். அவர்கள் எல்லாரும் பார்ப்பதற்கு கொஞ்சம் வசதி படைத்தவர்கள் போன்றும், அழகானவர்கள் போன்றும் இருந்தார்கள். இது மார்கரெட் உள்ளத்தில் ஒருவிதமான அச்சத்தைத் தோற்றுவித்தது. எப்படியும் வேலை கிடைத்தால்தான் தன்னுடைய குடும்பத்தை கரையேற்ற முடியும் என்ற முனைப்போடு குறிப்பிட்ட நிறுவனத்தை நோக்கி மார்கரெட் வேகவேகமாகப் போய்க்கொண்டிருந்தார்.

அப்போது ஓர் எதிர்பாராத சம்பவம் நடந்தது. ஆம், வேலை வாய்ப்பு தரும் அந்த நிறுவனத்தை நோக்கி நடந்துபோய்கொண்டிருந்தபோது ஒரு நடுத்தவர வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் கால் இடறிக் கீழே விழுந்துவிட்டார். அவருக்கு அருகிலே நடந்து சென்றவர்கள் எல்லாரும் பெண்ணொருத்தி வீழே விழுந்ததுகூடத் தெரியாமல், குறிப்பிட்ட நேரத்திற்குள் நிறுவனத்திற்குள் செல்ல வேண்டும் என்ற பரபரப்போடு சென்றபோது, மார்கரெட்டோ கீழே விழுந்த பெண்மணியை தூக்கி நிறுத்தி, அருகே இருந்த மருந்தகத்திற்கு அவரை அழைத்துச் சென்று, முதலுதவியைச் செய்து அந்தப் பெண்மணியிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்.

எதிர்பாராத சம்பவம் நடந்து கால தாமதமானதால், தனக்கு வேலை கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பதற்றத்துடனே மார்கரெட் அந்த நிறுவனத்திற்குள் காலடி எடுத்து வைத்தார். எல்லாரும் போனபின்பு கடைசியாகத்தான் மார்கரெட் நேர்முகத் தேர்வு நடைபெறும் அறைக்குள் செல்ல முடிந்தது. அவர் அந்த அறைக்குள் சென்றபோது அவளுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. ஆம், சில மணித்துணிகளுக்கு முன்பாக மார்கரெட் யாருக்கு சாலையில் உதவிசெய்தாளோ அந்தப் பெண்மணிதான் அங்கு இருந்தார். அவர் மார்கரெட்டைப் பார்த்தவுடன், "வா! உனக்காகத்தான் நான் இவ்வளவு நேராம் காத்திருந்தேன். நீ வருவாய் என்று எனக்கு நிச்சயம் தெரியும். இங்கே நிறையப் பேர் வேலைதேடி வந்தார்கள். ஆனால், அவர்களிடத்தில் அடுத்தமட்டில் அன்பும் அக்கறையும் இல்லை. உனக்கு இருக்கின்றது. அதனால் உன்னை இங்கு ஒரு முக்கியமான பொறுப்பில் வேலைக்கு அமர்த்துகின்றேன்" என்றார். இதைக் கேட்டு மார்கரெட் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

இயேசுவின் வழியில் நடக்கும் நாம், அவரைப் போன்று அடுத்தவர் மட்டில் உண்மையான அன்போடும் அக்கறையோடும் இருக்கவேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் ஆண்டவரால் ஆசிர்வதிக்கப்படுவோம் என்பது உறுதி.

ஆகவே, நம் பெருமான் இயேசுவின் போன்று செபவீரர்களாக மட்டும் இல்லாமல், செயல்வீரர்களாகவும் வாழ்வோம். அடுத்தவர் மட்டில் அன்பு கொண்டு வாழ்வோம், அதனை நம்முடைய கடமையாக நினைத்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
தாயினும் சாலப் பரிந்து

ஆண்டின் பொதுக்காலம் 6ம் ஞாயிறு
(பிப்ரவரி 14, 2021)

லேவியர் 13:1-2, 44-46
1 கொரிந்தியர் 10:3111:1
மாற்கு 1:40-45

"பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ பாவியேனுடைய ஊனினை உருக்கி, உள்ளொளி பெருக்கி, உலப்பிலா ஆனந்தம் ஆய" என்று தன் இறைவனை நினைத்து திருவாசகத்தில் உருகுகின்றார் மாணிக்கவாசகர்.

பரிவு என்பது இறைவனின் பண்பு என்பது இன்றைய நற்செய்தியில் இயேசுவின் வல்ல செயல் வழியாக வெளிப்படுகிறது. இன்றைய முதல் மற்றும் மூன்றாம் வாசகங்களில் மையமாக இருக்கின்ற ஒரு வார்த்தை 'தொழுநோய்.' தொழுநோய் பிடித்தவர் 'நடைபிணம்' என்று அந்த நாள்களில் கருதப்பட்டார். தொழுநோயின் கொடுமையை நாம் 'ரத்தக்கண்ணீர்' போன்ற திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். தொழுநோயாளர் அன்றைய எபிரேய மற்றும் கானானிய சமூகத்தில் மூவகை துன்பங்களை அனுபவித்தார்:

(அ) உடல்சார் துன்பம்: தொழுநோய் பீடித்த உடல் புண்களால் நிறைந்து நாற்றமெடுக்கும். தோலின் நிறம் மாறும். தோல் தன் உணரும் தன்மையை இழக்கும். தோலுக்கு உணரும் தன்மை இல்லாததால் நாய் அல்லது பூனை புண்களை நக்கினாலும், எறும்புகள் அல்லது ஈக்கள் மொய்த்தாலும் உணர முடியாது. கை மற்றும் கால் விரல்கள் சூம்பிப் போகும். மருந்துகள் இல்லாத நிலையில் இறப்பு ஒன்றே இதற்கான மருந்து என்று கருதப்பட்டது.

(ஆ) உறவுசார் துன்பம்: தொழுநோய் ஒருவர் மற்றவருக்குப் பரவக் கூடிய நோய் என்பதாலும், மருந்துகள் அல்லது தடுப்பு மருந்துகள் இல்லாத நிலையில் சமூகப் பரவலைத் தடுப்பதற்காக, நோயுற்ற நபரைத் தொற்றொதுக்கம் செய்வது வழக்கம். இப்படியாக தொழுநோய் பீடித்த ஒருவர் அவருடைய குடும்பம் மற்றும் நண்பர்களிடமிருந்து பிரித்துவைக்கப்பட்டதால் உறவுசார் துன்பத்தையும் அவர் அனுபவிக்க நேரிட்டது.

(இ) சமயம்சார் துன்பம்: ஒருவர் தான் செய்த பாவத்திற்கு கடவுள் தரும் தண்டனையே தொழுநோய் என்று கருதப்பட்டது. கடவுளால் மட்டுமே இதைக் குணமாக்க இயலும் (காண். நாமான் நிகழ்வு) என்ற நிலை இருந்ததால், இந்நோய் பீடிக்கப்பட்டவர் கடவுளின் சாபத்துக்கு ஆளானவராகக் கருதப்பட்டார்.

மேற்காணும் மூவகைத் துன்பங்கள் நமக்கு கோவித்-19 பெருந்தொற்றை நினைவூட்டுகின்றன. நம்மை விட்டு நீங்கியும் நீங்காமலும் சுற்றி நிற்கின்ற இந்தப் பெருந்தொற்றுக்காலத்தில், தொற்றுக்கு ஆளானவர் மேற்காணும் மூன்று துன்பங்களையும் அனுபவித்தார் என்பதை நாம் அறிவோம். பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களைப் புதைக்கவும் இடமில்லாமல், சுற்றத்தாரும் அவர்களைக் காண இயலாமல், போதிய மருத்துவ வசதி இல்லாமல் என நாம் அனுபவித்த துன்பங்கள் அளப்பரியவை.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். லேவி 13), தொழுநோய் பீடித்தவரை எப்படித் தொற்றொதுக்கம் செய்ய வேண்டும் எனவும், அவர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றியும் ஆண்டவர் மோசே மற்றும் ஆரோனுக்கு வலியுறுத்துகிறார். கடவுளிடமிருந்து வரும் பாவம் என்று கருதப்பட்டதால் குருக்களே இந்நோய் பற்றிய தொற்றொதுக்கத்தை அனுமதிப்பவர்களாகவும், மீண்டும் மக்களை ஊருக்குள் அழைப்பவர்களாகவும் இருக்கின்றனர். தொழுநோய் என்பது கடவுள் மோசேக்குத் தரும் அடையாளமாகவும், முணுமுணுத்த மிரியாமுக்கு அவர் வழங்கிய தண்டனையாகவும் இருக்கிறது.

இரண்டாம் வாசகத்தில், புனித பவுல் கொரிந்து நகரக் குழுமத்தில் எழுந்த உணவுசார்ந்த பிரச்சினை ஒன்றைப் பற்றி அவர்களுக்கு அறிவுறுத்துகின்றார். சிலைகளுக்குப் படைத்தவற்றை உண்பதா வேண்டாமா என்ற பிரச்சினை கொரிந்து நகரில் எழுகின்றது. கொரிந்து நகரில் இருவகையான நம்பிக்கையாளர்கள் இருந்தனர். முதல் வகையினர் தங்கள் நம்பிக்கையில் உறுதியாக இருந்தனர். சிலைகளுக்குப் படைக்கப்பட்டதை உண்டதால் அவர்கள் தங்கள் நம்பிக்கை மறைந்து போகும் என்று எண்ணவில்லை. இரண்டாம் வகையினர் நம்பிக்கையில் வலுவற்று இருந்தனர். சிலைகளுக்குப் படைக்கப்பட்ட உணவு இவர்களைப் பொருத்தவரையில் ஓர் இடறலாகக் கருதப்பட்டது. நம்பிக்கையில் வலுக்குறைந்து நின்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் மற்ற குழுவினர் சிலைகளுக்குப் படைக்கப்பட்டதை உண்டனர். அவர்களுக்கு அறிவுறுத்துகின்ற பவுல், 'நீங்கள் உண்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும் எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்ய வேண்டும் எனவும்,' மேலும் 'ஒருவர் மற்றவருக்குப் பயன்தருவதையே நாட வேண்டும்' என்றும் சொல்கின்றார். இவ்வாறாக, அவர்கள் மற்றவர்களைப் பற்றிய அக்கறை கொண்டிருக்க அழைக்கின்றார்.

நற்செய்தி வாசகத்தில், தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வருகின்றார். அவர் இயேசுவை எங்கே சந்திக்கிறார் என்று தெரியவில்லை. தொழுநோயாளர் வசிக்கும் இடத்திற்கு இயேசு சென்றாரா, அல்லது 'தீட்டு, தீட்டு' என்று கத்திக்கொண்டே தொழுநோயாளர் இயேசுவிடம் வந்தாரா என்ற குறிப்பு இல்லை. மேற்காணும் இரண்டு நிலைகளிலும் இயேசு தன் சமகாலத்துச் சமூகத்தின் புரிதலைப் புரட்டிப் போடுகின்றார். 'நீர் விரும்பினால் எது நோயை நீக்க உம்மால் முடியும்' என்னும் தொழுநோயாளரின் வார்த்தைகளில் நம்பிக்கை தெரிவதோடு, இறைவிருப்பம் நிறைவேறுவதையே அவர் விரும்புகிறார் என்ற அவருடைய நல்லுள்ளமும் தெறிகிறது.

இயேசுவின் வல்ல செயல் மூன்று நிலைகளில் நடந்தேறுகிறது: ஒன்று, தொழுநோயாளர்மேல் இயேசு பரிவு கொள்கின்றார். இரண்டு, அவரைத் தொட்டு நலம் தருகின்றார். மூன்று, அவரை மீண்டும் சமூகத்துடன் இணைப்பதற்காக மோசேயின் கட்டளையை நிறைவேற்றுமாறு பணிக்கின்றார்.

ஆனால், அந்த நபர் இயேசுவைப் பற்றி எல்லாருக்கும் அறிவிக்க, கடைசியில் இயேசு ஊருக்குள் செல்ல இயலாத நிலை ஏற்படுகிறது. இயேசுவுக்கு அந்த நிலை ஏற்பட்டது ஏன்? தொழுநோயாளரைத் தொட்ட செய்தியை மக்கள் அறிந்ததால் அவரையும் தீட்டுப்பட்டவர் என நினைத்தார்களா? அல்லது இயேசு ஒதுக்கிவைக்கப்பட்டாரா? அல்லது மக்கள் கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக இயேசு ஒதுங்கி நின்றாரா? நமக்குத் தெரியவில்லை.

இயேசுவின் பரிவுள்ளம் நமக்கான இன்றைய பாடமாக இருக்கிறது.

இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. 'வேலண்டைன் டே' என்று கொண்டாடப்பட்டது இன்று ஒரு வாரமாகக் கொண்டாடப்படுகிறது. ரோஸ் தினம், முன்மொழிதல் தினம், சாக்லேட் தினம், டெடி தினம், வாக்குறுதி தினம், தழுவல் தினம், முத்த தினம், இறுதியில் காதலர் தினம். அன்பே இந்த நாள்களில் முதன்மையாக இருக்கிறது. அல்லது இருக்க வேண்டும்.

நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடைய 'ஃப்ரத்தெல்லி தூத்தி' ('அனைவரும் உடன்பிறந்தோர்') என்னும் சமூகச் சுற்றுமடலில், பரிவு பற்றி மிக அதிகமாகப் பேசுகின்ற திருத்தந்தை அவர்கள், அன்பிற்கான முதற்படி பரிவு என்கிறார். மேலும், செயல்பாட்டில் காட்டப்படும் அன்பே பரிவு என்பதும் அவருடைய புரிதல்.

இன்று பல நேரங்களில் அன்பு என்பது வெறும் ஓர் உணர்வு அல்லது உணர்ச்சியாக மாறிவிட்டது. காதலர் தினக் கொண்டாட்டங்களிலும், திருமண உறவுநிலைகளிலும் இதே நிலைதான் பல நேரங்களில் நீடிக்கிறது.

ஆகையால்தான், நாம் மேலே குறிப்பிட்ட பாடலில், தாயினும் மிகுதியாக அன்பு செய்யும் கடவுள் என்று தன் கடவுளை அழைக்காமல், 'பரிவு கொள்ளும் இறைவனாகத்' தன் இறைவனை அழைக்கின்றார் மாணிக்கவாசகர்.

இயேசுவைப் போல பரிவுள்ளம் கொள்வது எப்படி?

(அ) பிறருக்கு உகந்ததையும் பயன் தருவதையும் நான் நாட வேண்டும்:

இதுவே தன் விருப்பம் எனச் சொல்கிறார் பவுல். மேலும், கிறிஸ்து தன் வாழ்க்கையில் எப்போதும் பிறருக்கு உகந்ததையும், பயன் தருவதையும் நாடினார் என்பதும் பவுலின் புரிதல்.

(ஆ) வரையறைகளைக் கடப்பது:

எபிரேய மொழியில் பரிவு காட்டுதல் என்னும் செயல், ஒரு தாய் தன் மடியில் கிடத்தப்பட்டுள்ள குழந்தையைக் குனிந்து பார்த்தலைக் குறிக்கிறது. தாய் தன் முகத்தைத் தாழ்த்தி குழந்தையின் முகத்தின் அருகில் கொண்டு வரும்போது அவர் தன்னையே வளைக்கின்றார். தாய் என்னும் தன் நிலையைத் தாண்டி குழந்தையின் எல்லையைத் தனதாக்கிக் கொள்கின்றார். இயேசு சமூகத்தின் வரையறைகளைக் கடந்ததால் மட்டுமே தொழுநோயாளருக்கு அருகில் செல்லவும், அவரைத் தொடவும் முடிந்தது.

(இ) பொறுத்துக்கொள்வது:

இயேசுவின் வார்த்தைக்கு எதிர்மாறாக அந்த நலம் பெற்ற தொழுநோயாளர் செயல்பட்டாலும், அவருடைய செயலை இயேசு பொறுத்துக்கொள்கின்றார். 'அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும்' (காண். 1 கொரி 13) என்பது இங்கே தெளிவாகிறது.

இன்று நாம் அன்பைக் கொண்டாடினாலும், பெருந்தொற்றுக் காலத்திலிருந்து இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தாலும் நமக்குத் தேவையானது பரிவு. மேற்காணும் மூன்று வழிகள் வழியாக நாம் கடவுளின் பரிவுள்ளம் பெற்றால் நலம்.

கடவுளின் பரிவுள்ளம் நம் இன்னல்களினின்று நம்மை விடுவிக்கிறது என்கிறார் திருப்பாடல் ஆசிரியர் (காண். திபா 32). நாம் ஒருவர் மற்றவருடைய இன்னல்களில் அவர்களுக்குத் துணை நிற்கும்போது நாமும் அதே பரிவுள்ளத்தைக் கொண்டிருக்கிறோம்.

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
மதுரை உயர்மறைமாவட்டம்
இணைப் பேராசிரியர்
புனித பவுல் அருள்பணிப் பயிற்சியகம்
திருச்சிராப்பள்ளி 620 001
அழைக்க 948 948 21 21


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 
  ஆண்டின் பொதுக்காலம் 6ம் ஞாயிறு

லேவியர் 13:1-2, 44-46
1 கொரிந்தியர் 10:31-11:1
மாற்கு 1:40-45

"தொழுநோயாளர் ஒருவர்" என்று இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மாற்கு 1:40-45) தொடங்குகிறது. ஆனால், நற்செய்தி வாசகத்தில் இறுதிக்கு வரும்போது "தொழுநோயாளர் இருவர்" என்று இன்றைய நற்செய்தி வாசகம் தொடங்கியிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

யார் அந்த இரண்டாவது தொழுநோயாளர்?

நிற்க.

புத்தமதத்தில் "போதி சத்துவா" என்ற கருதுகோள் உண்டு. "போதி சத்துவா" என்பவர் ஏற்கனவே மீட்படைந்தவர். இவரின் பணி என்னவென்றால் மீட்படைய கஷ்டப்படுகின்ற ஆன்மாக்களுக்காக இவர் முயற்சி செய்து மீட்பைப் பெற்றுக்கொடுப்பார்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் சர்க்கஸ் போடுகிறார்கள் என வைத்துக்கொள்வோம். சர்க்கஸ் பார்க்க 500 ரூபாய் தேவை. என்னிடம் 500 ரூபாய் இல்லை. ஆனால் சர்க்கஸ் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆக, நான் கேட்டிற்கு முன் நின்று எட்டி எட்டி பார்க்கிறேன். என்னைப் பார்த்துக்கொண்டிருக்கின்ற "போதி சத்துவா" என்ன செய்வார் தெரியுமா? தன்னிடம் இருக்கும் நிறைய 500 ரூபாய் நோட்டுக்களில் ஒன்றை எடுத்து என்னிடம் கொடுத்து டிக்கெட் எடுக்கச் சொல்லி உள்ளே அனுப்பிவிடுவார். என்னிடம் அல்லது எனக்காக கொடுப்பதால் 500 ரூபாய் அவரிடம் குறைவுபட்டாலும் அதை என் மீட்புக்காக செலவிடுவதால் அந்த செலவை பெரியதாக எடுத்துக்கொள்ளமாட்டார். இப்படி நிறைய பேருக்கு உதவி செய்தவுடன் தன் கடைசி 500 ரூபாயை வைத்து இவரும் சர்க்கஸ்க்குள் வந்துவிடுவார்.

இவ்வாறாக, அடுத்தவரின் நலனுக்காக தன் நலனை விட்டுக்கொடுக்கும் அல்லது தியாகம் செய்யும் நிலையின் பொருளை போதி சத்துவா நமக்கு உணர்த்துகிறார். புத்த மதத்தின் போதி சத்துவா தான் இறந்தபின்தான் மற்றவர்களுக்கு உதவி செய்ய முடியும். ஆனால், தான் வாழும்போதே அத்தகைய உதவியைச் செய்கிறார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குச் சொல்கிறது.

"தொழுநோய்" என்ற வார்த்தையை மையமாக வைத்து இன்றைய முதல் மற்றும் மூன்றாம் வாசகங்கள் சுழல்கின்றன. "தொழுநோய்" இன்று பூமித்தாயின் முகத்திலிருந்து முற்றிலம் துடைத்தெடுக்கப்பட்ட நோய் என்றாலும் இங்கொன்றும், அங்கொன்றும் சிலர் இந்த நோயினால் அவதிப்படுவதை நாம் பார்க்கிறோம். மருத்துவ வார்த்தைகளால் சொல்லப்போனால் இது ஒரு தோல் நோய். இந்தத் நோய் தோலின் அடுத்தடுத்த அடுக்குகளுக்குள் பரவி தொடு உணர்வு இல்லாமல்போகச் செய்கிறது. ஒருவர் மற்றவர்மேல் உள்ள தொடுதலால், அவர்கள் பயன்படுத்திய பொருள்களைப் பயன்படுத்துவதால் பரவக்கூடியது. இது பார்வை, கேட்கும்திறன் என அனைத்தின்மேலும் பாதிப்பை ஏற்படுத்தவல்லது. இதன் கனாகனத்தை நாம் "ரத்தக்கண்ணீர்" திரைப்படத்தில் பார்க்கலாம்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். லேவி 13:1-2,44-46) தொழுநோய் பிடித்தவர் செய்ய வேண்டியதும், தொழுநோய் பிடித்தவருக்கும் செய்ய வேண்டியது என்ன என்பதை மோசே ஆரோனுக்கு அறிவுறுத்துகின்றார். எதற்காக மோசே ஆரோனிடம் சொல்ல வேண்டும்? ஆரோன்தான் தலைமைக்குரு. இஸ்ரயேல் சமூக அமைப்பில் குரு தான் எல்லாம். மேலும், தூய்மை - தீட்டு என்றால் என்ன என்பதை தீர்மானித்து முன்வைப்பவரும் குருவே. தொழுநோய் வரக் காரணம் பாவம் என்ற சிந்தனை விவிலிய மரபில் இருந்தது.

தொழுநோய் பிடித்தவர் மூன்றுவகை அந்நியப்படுத்துதலை அனுபவிக்கின்றார்:

அ. தன்னிலிருந்து அந்நியப்படுதல்

தொழுநோய் பிடித்தவர் "கிழிந்த ஆடை அணிந்து தலை வாராமல் மேலுதட்டை மறைத்துக்கொண்டு "தீட்டு, தீட்டு" என்று கத்த வேண்டும். இவற்றில் ஏதாவது ஒன்றையாவது நம்மால் செய்ய முடியுமா? சட்டையில் சிறு பகுதி கிழிந்திருந்தாலே அதை உடனடியாக மாற்றவிட நினைக்கின்றோம். தலை வாராமல் நம்மால் இருக்க முடியுமா? தூங்கும்போது கூட நம் சிகை சரியாக இருக்கிறதா என்று கண்ணாடி முன் நின்று சரி செய்துகொள்கிறோம். "நான் தீட்டு, நான் தீட்டு" என்று என்னால் கத்த முடியுமா? கண்டிப்பாக இல்லை. ஆக, இந்த மூன்று காரியங்களையும் செய்யும் தொழுநோய் பிடித்தவர் எந்த அளவிற்கு தன்னிலிருந்தே அந்நியப்படுத்தப்படுகின்றார்.

ஆ. குடும்பம், உறவினர்கள், நண்பர்களிடமிருந்து அந்நியப்படுதல்

"தீட்டுள்ள அவர் பாளையத்திற்கு வெளியே தனியாகக் குடியிருப்பார்" என்கிறார் மோசே. மோசேயின் இந்த அறிவுரையில் பிறர்மேல் கொண்டிருக்கின்ற அக்கறை இருந்தாலும், பாளையத்தில் குடியிருக்கும் அடுத்தவர்கள்மேல் உள்ள நலனின் அக்கறை இருந்தாலும், அவர் இவரை மற்றவர்களிடமிருந்து அந்நியப்படுத்துகிறார் என்பதை நாம் மறுக்க முடியாது. பாளையத்திற்கு வெளியே தனியாகவோ அல்லது தன்னைப்போல நோய்பிடித்தவர்களோடோதான் இவர் தன் வாழ்வைக் கழிக்க வேண்டும்.

இ. இறைவனிடமிருந்து அந்நியப்படுதல்

"அவர் நோய் அவர் தலையில் உள்ளது" என்கிறார் மோசே. தலை என்றால் என்னைப் பெற்றவர். வாழையடி வாழையாக அல்லது என் முன்னோர் மற்றும் பெற்றவர் செய்த பாவம் தொழுநோயாக மாறுகிறது. நாம் பேச்சுவழக்கில் ஒருவர் பாவம் செய்யும்போது, "இப்படிச் செய்யாதே! ஒருநாள் இது உன் தலையில் விழும்!" என்று சாடுகின்றோம். தொழுநோய் பாவத்தின் விளைவு என்பதால் இறைவனிடமிருந்தும் அந்நியப்பட்டவராகின்றார் தொழுநோயாளர்.

இந்த மூன்றுவகை அந்நியப்படுத்துதல் அவசியம் என்பது இன்றைய முதல் வாசகம் அறிவுறுத்துகின்றது.

லேவியர் நூலில் உள்ள சட்டங்களும், விதிமுறைகளும், ஒழுங்குகளும் சரியாகப் பின்பற்றப்படுகின்றனவா என்று கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிச் சுற்றிக்கொண்டிருந்த குருக்கள், மறைநூல் அறிஞர்கள், பரிசேயர்கள் வாழ்ந்த வந்த காலத்தில்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தின் நிகழ்வு நடந்தேறுகிறது:

தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வருகின்றார். "தொழுநோயாளர் தன் உதடுகளை மறைத்துக்கொண்டு "தீட்டு," "தீட்டு" எனக் கத்தவில்லை." மாறாக, "நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என்று கனிந்த குரலில் மொழிகின்றார். இந்த உரையாடலை வைத்துப் பார்க்கும்போது ஒருவேளை இயேசு தொழுநோயாளர்கள் தங்கியிருக்கும் பகுதியில் உலா வந்தாரோ என்று கேட்கத் தோன்றுகிறது. தொழுநோயாளர் உறைவிடப்பகுதிக்குதான் அவர் வந்திருக்க வேண்டும். ஏனெனில், குணமாக்குதலின் இறுதியில், "நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டும்" என்று ஊருக்கு வெளியே இருந்த அவரை ஊருக்கு உள்ளே அனுப்புகின்றார்.

இயேசுவின் குணமாக்குதல் இரண்டு நிலைகளில் நடந்தேறுகிறது:

அ. அவரின் அந்நியப்படுதலிலிருந்து விடுதலை

"இயேசு அவர் மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு" என பதிவு செய்கிறார் மாற்கு நற்செய்தியாளர். அவர்மீது கொண்ட பரிவால் இறைவனுக்கும் அவருக்கும் இடையே இருந்த அந்நியப்படுத்துதலிலிருந்தும், அவரை நோக்கி கையை நீட்டியதால் பிறருக்கும் அவருக்கும் இடையே இருந்த அந்நியப்படுத்துதலிலிருந்தும், அவரைத் தொட்டதால் அவர் தன்னிடமிருந்து அந்நியப்பட்டதிலிருந்தும் விடுவிக்கின்றார் இயேசு.

ஆ. தொழுநோயிலிருந்து விடுதலை

தொடர்ந்து, "நான் விரும்புகிறேன். உமது நோய் நீங்குக!" என்று அவரது நோயிலிருந்து அவரை விடுவிக்கின்றார் இயேசு.

இயேசுவின் இந்தக் குணமாக்குதல் அவரின் உடல்நலத்தை மட்டுமல்லாமல், சமூகம் மற்றும் சமயம் அவர்கள்மேல் சுமத்தியிருந்த தேவையற்ற சுமைகளையும் இறக்கி வைப்பதாக இருக்கிறது.

விளைவு என்ன?

இயேசு தொழுநோயாளர் ஆக்கப்படுகின்றார். எப்படி?

தொழுநோய் குணமானவர் ஊருக்குள் சென்று எல்லாருக்கும் செய்தியை அறிவிக்க அந்த ஊர் மக்கள் இயேசுவைப் பாராட்டுவதற்குப் பதிலாக, "ஓ நீ அவனைத் தொட்டு குணமாக்கினாயா?" என்று சொல்லி, இயேசுவை அந்நியப்படுத்துகின்றனர்.

முதல் தொழுநோயாளர் குணமடைந்தார்.

இரண்டாமவர் தொழுநோய் ஏற்றார்.

இந்த நிலையை இயேசுவால் எப்படி ஏற்றுக்கொள்ள முடிந்தது?

அதற்கான விடை இன்றைய இரண்டாம் வாசகத்தில் (1 கொரி 10:31-11:1) இருக்கிறது: "நான் எனக்குப் பயன் தருவதை நாடாமல், பலரும் மீட்படையும்படி அவர்களுக்குப் பயன் தருவதையே நாடுகிறேன்."

இயேசு தனக்குப் பயன்படுவதை நாடியிருந்தால் தொழுநோயாளர் உறைவிடத்திலிருந்தும், அவரின் பிரசன்னத்திலிருந்தும் விலகிச் சென்றிருப்பார். ஆனால், அவர் தன் பயன் நாடாது பிறர்பயன் நாடுகின்றார். அது தன் பயனுக்கு குறைவு ஏற்படுத்தினாலும்கூட.

இந்த மனநிலை நம்மில் வளர நாம் என்ன செய்ய வேண்டும்?

இயேசுவிடமிருந்த மூன்று பண்புகள் நமதாக வேண்டும்: "பரிவு," "அருகில் செல்லுதல்," "தொடுதல்."

இறுதியாக, இன்று தொழுநோய் நம்மிடமிருந்து துடைத்தெடுக்கப்பட்டாலும், நம்மை அறியாமலேயே தொழுநோயின் மறுஉருவங்கள் வலம் வருகின்றன: பாலியல் நோய், சாதியம், நிறப் பாகுபாடு, மொழிப் பாகுபாடு, மாற்றுக் கலாச்சாரம். இதில் என்னவொரு கொடுமை என்றால், இவர்களோடு நாம் வாழ்ந்து, பழகி, உணவு உண்டாலும்கூட ஏதோ ஒரு நிலையில் நான் இவர்களைவிட பெரியவராக, நல்லவராக, தூய்மையானவராக நினைத்துக்கொள்கிறேன். அனைத்திலும், அனைவருக்கும் உகந்தவனாய் நான் வாழ என்னில் தடையாக இருப்பது எது? அந்த நிலைக்கு நான் கடந்து செல்ல, இரண்டாம் தொழுநோயாளராய் நான் ஆக்கப்பட்டாலும், என்னிடம் துணிச்சல் குறைவுபடுவது ஏன்?

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)
Archdiocese of Madurai

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!