|
ஆண்டு A |
|
பொதுக்காலம்
6ஆம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இறைப் பற்றின்றி இருக்க, ஆண்டவர்
யாருக்கும் கற்பிக்கவில்லை.
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 15:15-20
நீ விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடி; பற்றுறுதியுடன் நடப்பது
உனது விருப்பத்தைப் பொறுத்தது. உனக்குமுன் நீரையும்
நெருப்பையும் அவர் வைத்துள்ளார்; உன் கையை நீட்டி உனக்கு
விருப்பமானதை எடுத்துக்கொள். மனிதர்முன் வாழ்வும் சாவும் வைக்கப்பட்டுள்ளன.
எதை அவர்கள் விரும்புகிறார்களோ அதுவே அவர்களுக்குக் கொடுக்கப்படும்.
ஆண்டவரின் ஞானம் பெரிது. அவர் ஆற்றல் மிக்கவர்; அனைத்தையும்
அவர் காண்கிறார். ஆண்டவருக்கு அஞ்சிநடப்போர் மீது அவரது பார்வை
இருக்கும்; மனிதரின் செயல்கள் அனைத்தையும் அவர் அறிவார். இறைப்பற்றின்றி
இருக்க யாருக்கும் ஆண்டவர் கட்டளையிட்டதில்லை; பாவம் செய்ய எவருக்கும்
அவர் அனுமதி கொடுத்ததும் இல்லை.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திருப்பாடல் 119:1-2, 4-5, 17-18, 33-34
=================================================================================
பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 119:1-2, 4-5, 17-18, 33-34
பல்லவி: ஆண்டவரின் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்
1 மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவர் திருச்சட்டப்படி
நடப்போர் பேறுபெற்றோர்.
2 அவர் தந்த ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்;
முழுமனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர். -பல்லவி
4 ஆண்டவரே! நீர் உம் நியமங்களைத் தந்தீர்; அவற்றை நாங்கள்
முழுமையாய்க் கடைப்பிடிக்க வேண்டும் என்றீர்.
5 உம்முடைய விதிமுறைகளை நான் கடைப்பிடிக்க, என் நடத்தை உறுதியுள்ளதாய்
இருந்தால் எவ்வளவோ நலம்! -பல்லவி
17 உம் அடியானுக்கு நன்மை செய்யும்; அப்பொழுது, நான் உம் சொற்களைக்
கடைப்பிடித்து வாழ்வேன்.
18 உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை நான் கண்டுணருமாறு என்
கண்களைத் திறந்தருளும். -பல்லவி
33 ஆண்டவரே! உம் விதிமுறைகள் காட்டும் வழியை எனக்குக் கற்றுத்தாரும்;
நான் அவற்றை இறுதிவரை கடைப்பிடிப்பேன்.
34 உம் திருச்சட்டத்தின்படி நடக்க எனக்கு மெய்யுணர்வுதாரும்.
அதை நான் முழு உள்ளத்தோடு கடைப்பிடிப்பேன். -பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
உலகம் தோன்றும் முன்பே ஞானம் கடவுளின்
திட்டத்தில் இருந்தது.
தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல்
திருமுகத்திலிருந்து வாசகம் 2:6-10
முதிர்ச்சி பெற்றவர்களோடு நாங்கள் ஞானத்தைப்பற்றிப்
பேசுகிறோம். ஆனால் இது உலக ஞானம் அல்ல; உலகத் தலைவர்களின் ஞானமும்
அல்ல. அவர்கள் அழிவுக்குரியவர்கள். வெளிப்படுத்தப்படாமல் மறைபொருளாய்
இருக்கும் இறை ஞானத்தைப்பற்றியே நாங்கள் பேசுகிறோம். அது நாம்
மேன்மை பெற வேண்டும் என்னும் நோக்குடன் உலகம் தோன்றும் முன்பே
கடவுளின் திட்டத்தில் இருந்தது. இவ்வுலகத் தலைவர்கள் எவரும் அதை
அறிந்து கொள்ளவில்லை. அறிந்திருந்தால், அவர்கள் மாட்சிக்குரிய
ஆண்டவரைச் சிலுவையில் அறைந்திருக்க மாட்டார்கள். ஆனால் மறைநூலில்
எழுதியுள்ளவாறு, "தம்மிடம் அன்பு கொள்ளுகிறவர்களுக்கென்று கடவுள்
ஏற்பாடு செய்தவை கண்ணுக்குப் புலப்படவில்லை; செவிக்கு எட்டவில்லை;
மனித உள்ளமும் அதை அறியவில்லை." இதைக் கடவுள் தூய ஆவியாரின்
வழியாக நமக்கு வெளிப்படுத்தினார். தூய ஆவியாரே அனைத்தையும்
துருவி ஆய்கிறார்; கடவுளின் ஆழ்ந்த எண்ணங்களையும் அறிகிறார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
(மத் 11: 25)
அல்லேலூயா, அல்லேலூயா! "தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே,
உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும்
இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்"! அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இறைவாக்குகளை நிறைவேற்றுவதற்கே வந்தேன்.
தூய மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 17-37
"திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள்
எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.
"விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும்
நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக
உங்களுக்குச் சொல்லுகிறேன். எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது
ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில்
மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவையனைத்தையும் கடைப்பிடித்துக்
கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார். மறைநூல்
அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும்.
இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச்
சொல்கிறேன். "கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத்
தீர்ப்புக்கு ஆளாவர்" என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக்
கேள்விப் பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச்
சொல்கிறேன்; "தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத்
தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ "முட்டாளே" என்பவர்
தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; "அறிவிலியே" என்பவர் எரிநரகத்துக்கு
ஆளாவார். ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில்
செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள்
மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின்முன்
உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு
ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச்
செலுத்துங்கள். உங்கள் எதிரி உங்களை நீதிமன்றத்துக்குக்
கூட்டிச் செல்லும் போது வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு
செய்துகொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை
ஒப்படைப்பார். நடுவர் காவலரிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில்
அடைக்கப்படுவீர்கள். கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல்
அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்கு
சொல்கிறேன். " 'விபசாரம் செய்யாதே' எனக் கூறப்பட்டிருப்பதைக்
கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால், நான் உங்களுக்குச்
சொல்கிறேன்; ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால்
ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று. உங்கள் வலக்கண்
உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து
விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதைவிட
உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது. உங்கள் வலக்கை
உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதையும் உங்களிடமிருந்து
வெட்டி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்குச்
செல்வதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது.
"தன் மனைவியை விலக்கி விடுகிறவன் எவனும் மணவிலக்குச் சான்றிதழைக்
கொடுக்கட்டும்" எனக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் நான் உங்களுக்குச்
சொல்கிறேன்; எவரும் தம் மனைவியைப் பரத்தைமைக்காக அன்றி வேறு எந்தக்
காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது. அப்படிச் செய்வோர் எவரும்
அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர். விலக்கப்பட்டோரை மணப்போரும்
விபச்சாரம் செய்கின்றனர். மேலும், "பொய்யாணை இடாதீர். ஆணையிட்டு
நேர்ந்து கொண்டதை ஆண்டவருக்குச் செலுத்துவீர்" என்று முற்காலத்தவர்க்குக்
கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான்
உங்களுக்குச் சொல்கிறேன்; ஆணையிடவே வேண்டாம். விண்ணுலகின்
மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனென்றால் அது கடவுளின் அரியணை. மண்ணுலகின்
மேலும் வேண்டாம்; ஏனெனில் அது அவரின் கால்மணை. எருசலேம் மேலும்
வேண்டாம்; ஏனெனில் அது பேரரசரின் நகரம். உங்கள் தலைமுடியின்
மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனெனில் உங்கள் தலைமுடி ஒன்றையேனும்
வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ உங்களால் இயலாது. ஆகவே நீங்கள்
பேசும்போது 'ஆம்' என்றால் 'ஆம்' எனவும் 'இல்லை' என்றால் 'இல்லை'
எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும்
தீயோனிடத்திலிருந்து வருகிறது.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி - கிறிஸ்துவே உமக்குப் புகழ்
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
I சீராக்கின் ஞானம் 15: 15-20
II 1 கொரிந்தியர் 2: 6-10
III மத்தேயு 5: 17-37
உங்கள் நெறி சிறந்திருக்கட்டும்
நிகழ்வு
சீனாவைச் சார்ந்த செங்கிஸ்கான் என்ற மன்னன் ஒருநாள் தன்னுடைய
செல்லப் பறவையான கழுகோடு, குதிரையில் அமர்ந்துகொண்டு
காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். செல்லும்வழியில் அவனுக்குக்
கடுமையான தாகம் எடுத்தது. தண்ணீருக்காக அவன் எங்கெல்லாமோ அலைந்தான்.
நீண்டநேரத்திற்குப் பிறகு ஒரு பாறையிலிருந்து லேசாகத் தண்ணீர்
வருவதைக் கண்ட அவன் குதிரையிலிருந்து இறங்கி, கழுகின் தலையில்
மாட்டி வைத்திருந்த வெள்ளிக் குல்லாவைக் கழற்றி அதில் தண்ணீர்
பிடிக்கத் தொடங்கினான். அந்நேரத்தில் அவனுடைய கழுகு வானத்தில்
வட்டமடிக்கத் தொடங்கியது.
ஒருவழியாக வெள்ளிக் குல்லாவில் தண்ணீர் நிரம்பியதும், அதைக்
குடிப்பதற்காக செங்கிஸ்கான் தன் வாயருகே கொண்டுசென்றான்.
அப்பொழுது வேகமாகப் பறந்துவந்த அவனது கழுகு அதனைத்
தட்டிவிட்டது. செங்கிஸ்கானுக்கு கடுஞ்சினம் வந்தது. "இது ஏன்
இப்படிச் செய்தது?" என்று மனத்திற்குள் அதனைத் திட்டித்
தீர்த்தான். பிறகு மீண்டுமாக அந்த வெள்ளிக் குல்லாவில் தண்ணீர்
பிடிக்கத் தொடங்கினான். தண்ணீர் அதில் சொட்டுச் சொட்டாக
விழுந்தது நிரம்பியதும், குடிப்பதற்குத் தன் வாயருகில் கொண்டு
சென்றான். இந்த முறையும் கழுகு வேகமாகப் பறந்து வந்து, அவனுடைய
கையில் இருந்த வெள்ளிக் குல்லாவைத் தட்டிவிட்டது. அவனுக்குச்
சினம் தலைக்கேறியது. உடனே அவன், "இனிமேல் நீ என்னுடைய
கையிலிருந்து தண்ணீரைத் தட்டிவிட்டால், வாளுக்கு இரையாவது
என்றான்.
இதற்குப் பின்பு அவன் மிகவும் பொறுமையிழந்தவனாய் வெள்ளிக்
குல்லாவில் தண்ணீர் பிடிக்கத் தொடங்கினான். தண்ணீர் வெள்ளிக்
குல்லாவில் நிறைந்ததும் அதை குடிப்பதற்கு அவன் தன் வாயருகில்
கொண்டு சென்றபொழுது, முன்புபோல் வேகமாகப் பறந்து வந்த கழுகு,
அதைத் தட்டிவிடப் பார்த்தது. அதற்குள் அவன் தன் இடையிலிருந்த
வாளை உருவி, கழுகை ஒரே வெட்டாக வெட்டினான். அப்பொழுதும்கூட
கழுகு அவனுடைய கையில் இருந்த வெள்ளிக் குல்லாவைத் தட்டிவிட்டே
தரையில் விழுந்தது. அவன் ஒன்றும் புரியாதவனாய், தண்ணீர்
வந்துகொண்டிருந்த பாறையின்மீது ஏறிப்பார்த்தான். அங்கு ஒரு
கருநாகம் செத்துக் கிடந்ததைக் கண்டு, "சினத்தில் நம்முடைய
செல்லப் பறவையை இப்படித் தேவையில்லாமல் கொன்றுபோட்டுவிட்டோமே!"
என்று மிகவும் வருந்தினான்.
பின் அரண்மனைக்குத் திரும்பிய அவன் தங்கத்தால் ஒரு கழுகினைச்
செய்து, அதற்குக் கீழ், "சினத்தில் செய்யப்படும் யாவும்
துயரத்தையே தரும் என்று பொறித்து, அதனை மக்கள் பார்வைக்கு
வைத்தான்.
ஆம், சினத்தால் ஏற்படுகின்ற விளைவு மிகக் கொடூரமானது.
பொதுக்காலத்தின் ஆறாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட
இறைவார்த்தை, சினத்தால் ஏற்படுகின்ற விளைவுகள் எத்தகையவை, அதன்
மாற்று என்ன ஆகியவற்றைக் குறித்து எடுத்துக்கூறுகின்றது. நாம்
அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
நமக்கு முன்பாக வாழ்வும் சாவும்
சீராக்கின் ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்
வாசகம், "மனிதர் முன் வாழ்வும் சாவும் வைக்கப்பட்டுள்ளன. எதை
அவர்கள் விரும்புகின்றார்களோ அதுவே அவர்களுக்குக்
கொடுக்கப்படும் என்கின்றது. இவ்வார்த்தைகளை இன்றைய நற்செய்தி
வாசகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் வாழ்வு எது, சாவு எது
என்று நமக்குப் புரிந்துவிடும். சாவு என்று நற்செய்தியில்
இயேசு குறிப்பிடுவது சினமாகும். வாழ்வு என்று இயேசு
குறிப்பிடுவது நல்லுறவாகும். நல்லுறவும் சினமும் எப்படி
வாழ்வாக, சாவாக இருக்கின்றன என்பதைக் சற்று விரிவாகச்
சிந்தித்துப் பார்ப்போம்.
சாவுக்கு இட்டுச் செல்லும் சினம்
"கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு
ஆளாவர்" (விப 20:13) என்பது பழைய (ஏற்பாட்டுச்) சட்டமாக
இருந்தது. ஆண்டவர் இயேசுவோ, "தம் சகோதர் சகோதரிகளிடம்
சினங்கொள்கின்றவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்..... என்ற
புதிய சட்டத்தைத் தருகின்றார். எதற்காக இயேசு,
சினங்கொள்கின்றவர் தண்டனைக்குத் தீர்ப்பு ஆளாவார் எனச்
சொல்கின்றார் என்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது.
புனித யாக்கோபு தன்னுடைய திருமுகத்தில் இவ்வாறு கூறுவார்:
"மனிதரின் சினம் கடவுளுக்கு ஏற்புடைய செயல்கள் நிறைவேறத்
தடையாய் இருக்கின்றது. (யாக் 1:20). கடவுளுக்கு ஏற்புடையது
அல்லது விரும்புவது எல்லாம், இப்புவியில் அன்பும் அமைதியும்
பெருகுவதைதான். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், இவ்வுலகம்
அமைதிப் பூங்காவாக இருக்கவேண்டும் என்றே இறைவன்
விரும்புகின்றார் (எசாயா 11). அதற்குத் தடையாக இந்தச் சினம்
இருக்கின்றது. ஏனெனில், வெளியே காட்டப்படாமல், உள்ளே அடக்கி
வைக்கப்பட்டிருக்கின்ற சினம் நாளாக நாளாக முற்றி
கொலைசெய்வதற்கும் இன்னும் பல்வேறு தீமைகளைச் செய்வதற்கும்
காரணமாக அமைந்துவிடும். இவ்வாறு சினம் பல்வேறு தீமைகளுக்குக்
காரணமாக இருப்பதால்தான் இயேசு சினம் கொள்கின்றவர் தண்டனைத்
தீர்ப்புக்கு ஆளாவார் என்று கூறுகின்றார்.
வாழ்வுக்கு இட்டுச்செல்லும் நல்லுறவு
சினம் சாவுக்கு இட்டுச் செல்லும் என்று குறிப்பிட்ட இயேசு,
வாழ்வுக்கு இட்டுச் செல்லும் வழி ஒன்றைக் குறிப்பிடுகின்றார்.
அதுதான் நல்லுறவாகும். தன் சகோதர் சகோதரியோடு நல்லுறவு
ஏற்படுத்திக்கொண்டு செலுத்தப்படும் பலியே சிறந்தது என்று
குறிப்பிடும் இயேசு, எதிரியோடு நீதிமன்றத்திற்குச்
செல்கின்றபோதும் நல்லுறவு ஏற்படுத்திக்கொண்டால் நலம்பயக்கும்
என்று குறிப்பிடுகின்றார். ஏன் இயேசு நல்லுறவுக்கு இவ்வளவு
முக்கியத்துவம் தருகின்றார் எனில், அவர் நல்லுறவின் கடவுளாக
இருக்கின்றார் (யோவா 17:11) மேலும் நல்லுறவோடு இருக்கின்ற
இடத்தில் அவர் இருக்கின்றார் (மத் 18: 20). அதனால்தான் நாம்
நல்லுறவோடு இருக்கவேண்டும் என்று கூறுகின்றார். ஆகையால் நாம்
சாவுக்கு இட்டுச் செல்லும் சினத்தை நம்மிடமிருந்து
அகற்றிவிட்டு, வாழ்வுக்கு இட்டுச் செல்லும் நல்லுறவின் வழியில்
நடப்போம்.
ரால்ப் வோனர் சொல்லக்கூடிய ஒரு சிறு கதை. ஒரு காட்டில் இருந்த
சிங்கமும் மலை ஆடும் ஒரே நேரத்தில் ஓர் ஓடையில் தண்ணீர்
குடிக்க வந்தன. இரண்டும் அங்கு வந்தபொழுது தண்ணீர் மிகக்
குறைவாக இருப்பதைப் பார்த்துவிட்டு, "நான்தான் முதலில் நீர்
அருந்துவேன்" என்று ஒன்று மற்றொன்றோடு வாக்குவாதத்தில்
ஈடுபட்டது. ஒருகட்டத்தில் அவற்றுக்கிடையே வாக்குவாதம் முற்றவே,
ஒன்று மற்றொன்றின்மீது பாய்ந்து தக்கத் தொடங்கியது. அப்பொழுது
வானத்தில் வல்லூறு கூட்டம் வட்டமடிப்பதைக் கண்ட அந்த இரண்டு
விலங்குகளும், "நாம் இருவரும் இப்படிச் சண்டைபோட்டுக்
கொண்டிருந்தால் நமக்கு மேலே பறந்துகொண்டிருக்கும் அந்த
வல்லூறுக்களுக்கு இரையாக வேண்டியதுதான். அதனால் நாம் இருவரும்
சமரசமாகி, இருக்கின்ற தண்ணீரைப் பாதி பாதி குடித்துவிட்டுப்
போவோம்" என்ற முடிவுக்கு வந்தன.
ரால்ப் வோனர் இந்தச் சிறுகதையைச் சொல்லிவிட்டு பகைமையும்
வெறுப்பும் அல்ல, நல்லுறவே எப்பொழுதும் நன்மை பயக்கும் என்று
கூறுவார். ஆகவே, நாம் சினம் என்ற தவறான நெறியை நம்மிடமிருந்து
அகற்றிவிட்டு, நல்லறவு என்ற உயர்ந்த நெறியின் படி வாழ்வதற்கு
முயற்சி செய்வோம்.
சிந்தனை
"உணர்ச்சிகளுள் சினமே எவ்வித வலுவும் இல்லாதது. அதனால்
பயனொன்றும் விளைவதில்லை. எதிரியைக் காட்டிலும், அதைக்
கொண்டவனுக்கே அது அதிகத் தீங்கிழைக்கும்" என்பார் கிளாரண்டன்
என்ற எழுத்தாளர். ஆகையால், நாம் நம்முடைய வாழ்வில் தேவையற்ற
சினத்தைத் தவிர்த்துவிட்டு, ஒருவர் ஒருவரோடு நல்லுறவோடு
இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
|
|