|
|
|
பாஸ்கா காலம் 05ஆம் ஞாயிறு
- 3ம் ஆண்டு |
|
|
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும்
அறிவித்தார்கள்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 14: 21b-27
அந்நாள்களில் பவுலும் பர்னபாவும் லிஸ்திரா, இக்கோனியா, அந்தியோக்கியா
ஆகிய நகரங்களுக்குத் திரும்பி வந்தார்கள்.
அங்குள்ள சீடர்களின் உள்ளத்தை அவர்கள் உறுதிப்படுத்தி, "நாம்
பல வேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்படவேண்டும்" என்று
கூறி நம்பிக்கையில் நிலைத்திருக்கும்படி அவர்களை ஊக்குவித்தார்கள்.
அவர்கள் ஒவ்வொரு திருச்சபையிலும் மூப்பர்களைத் தேர்ந்தெடுத்து
நோன்பிருந்து இறைவனிடம் வேண்டித் தாங்கள் நம்பிக்கை
கொண்டிருந்த ஆண்டவரிடம் அவர்களை ஒப்படைத்தார்கள்; பின்பு
பிசிதியா வழியாகப் பம்பிலியா வந்தார்கள். பெருகை நகரில் இறைவார்த்தையை
அறிவித்தபின் அத்தாலியா வந்தார்கள்; அங்கிருந்து கப்பலேறி அந்தியோக்கியா
வந்தார்கள்; அங்குதான் அவர்கள் அருள் வழங்கும் கடவுளின் பணிக்கென்று
அர்ப்பணிக்கப்பட்டார்கள்.
இப்போது அப்பணியைச் செய்து முடித்துவிட்டார்கள். அவர்கள் அங்கு
வந்ததும் திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த
அனைத்தையும், அவர் பிற இனத்தவர்க்கு நம்பிக்கை கொள்ளும்
வாய்ப்பைக் கொடுத்ததையும் அறிவித்தார்கள்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
(திபா: 145: 8-9. 10-11. 12-13ab (பல்லவி: 1)
Mp3
=================================================================================
பல்லவி: என் கடவுளே, உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன். அல்லது:
அல்லேலூயா.
8 ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம்
கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். 9 ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை
செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம்
காட்டுபவர். பல்லவி
10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்;
உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். 11 அவர்கள் உமது
அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப்
பேசுவார்கள். பல்லவி
12 மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய
மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள். 13யb உமது அரசு
எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக
உள்ளது. பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
கடவுள் அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார்.
திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம்
21: 1-5
யோவான் நான் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும்
கண்டேன். முன்பு இருந்த விண்ணகமும் மண்ணகமும் மறைந்துவிட்டன.
கடலும் இல்லாமற்போயிற்று.
அப்பொழுது புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து
விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன். தன் மணமகனுக்காகத்
தன்னையே அணி செய்துகொண்ட மணமகளைப்போல் அது ஆயத்தமாய் இருந்தது.
பின்பு விண்ணகத்திலிருந்து எழுந்த பெரும் குரல் ஒன்றைக்
கேட்டேன். அது, "இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது.
அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய்
இருப்பார்கள். கடவுள் தாமே அவர்களோடு இருப்பார்; அவரே
அவர்களுடைய கடவுளாய் இருப்பார். அவர்களுடைய கண்ணீர்
அனைத்தையும் அவர் துடைத்துவிடுவார்.
இனிமேல் சாவு இராது, துயரம் இராது, அழுகை இராது, துன்பம்
இராது; முன்பு இருந்தவையெல்லாம் மறைந்துவிட்டன" என்றது.
அப்பொழுது அரியணையில் வீற்றிருந்தவர், "இதோ! நான் அனைத்தையும்
புதியது ஆக்குகிறேன்" என்று கூறினார்.
மேலும், " இவ்வாக்குகள் நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை' என
எழுது" என்றார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 13: 34
அல்லேலூயா, அல்லேலூயா!
"ஒருவர் மற்றவரிடம் அன்பு
செலுத்துங்கள்' என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக்
கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும்
ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர்.
அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
"ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்னும் புதிய
கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 31-33a, 34-35
யூதாசு இறுதி இராவுணவின் அறையை விட்டு வெளியே போனபின் இயேசு,
"இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக்
கடவுளும் மாட்சி பெற்றுள்ளார். கடவுள் அவர் வழியாக மாட்சி
பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்;
அதையும் உடனே செய்வார்.
பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். `ஒருவர்
மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்னும் புதிய கட்டளையை நான்
உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது
போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள்
ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என்
சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வர்" என்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
"ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்"
அவன் ஊருக்குப் புதியவன். அதனால் அவன் ஒரு வாடகை டாக்சியை எடுத்துக்கொண்டு,
நாள் முழுவதும் ஊரைச் சுற்றிப்பார்த்தான்.
அந்தநாள் முடியும்வேளையில் அவன் தன்னுடைய மணிபர்சை எடுத்து, அதிலிருந்து
ஆயிரம் ரூபாயை டாக்சி டிரைவரிடம் வாடகையாகக் கொடுத்தான். ஆனால்
அந்த டாக்சி டிரைவரோ, அவன் கொடுத்த பணத்தை வாங்க மறுத்துவிட்டார்.
அதற்கு அவர் சொன்னார், "ஐயா! நான் இங்கே இருபது ஆண்டுகளுக்கும்
மேலாக டாக்சி டிரைவராக வேலைபார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால்
யாரும் என்னிடம் இவ்வளவு கண்ணியமாக, அன்பாகப் பேசியது
கிடையாது. ஆனால் நீங்களோ ஒரு நண்பரைப் போன்று, உங்களுடைய
வாழ்க்கையில் நடந்த எல்லாவற்றையும் என்னோடு பகிர்ந்துகொண்டீர்கள்.
அதோடு, ஒரு நண்பனைப் போன்றுதான் என்னைப் பார்த்தீர்கள். ஆதலால்
ஒரு நண்பராகிய உங்களிடம் நான் கட்டணம் வசூலிப்பது முறையாகுமா?
என்று சொல்லி பணத்தை வேண்டாமென்று சொல்லிவிட்டார்.
நாம் அன்போடு இருந்தால், நம்மைச் சுற்றி இருக்கும் உலகமும் அன்புமயமாக
மாறிவிடும். அப்போது எப்படிப்பட்ட மனிதர்களும் நமக்கு நண்பர்களாகிவிடுவார்கள்
என்ற உண்மையை இந்நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகிறது.
பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் நமக்கு,
இன்றைய நாளில் நாம் படித்த வாசகங்கள், "ஒருவர் மற்றவரை அன்பு
செய்து வாழவேண்டும்" என்றதொரு அழைப்பினைத் தருகிறது. இன்றைய
நாள் இறைவார்த்தையை நாம் ஆழமாகச் சிந்தித்துப் பார்ப்பதற்கு
முன்பாக அறிஞர் பெருமக்கள் "அன்பு" என்றால் என்ன? என்று
சொல்லியிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வோம்.
"அன்பு உள்ளம்தான் உலகத்தில் அனைத்துக்கும் ஆதார சுருதியாகத்
திகழ்கிறது. ஆண்டவனை எளிதாகத் தரிசனம் செய்வதற்கான ஒருவழி அன்பு
எனலாம்".
சாண்டில்யன்.
உலகம் நம்மிடம் இருந்துதான் ஆரம்பிக்கிறது. உலகத்தின் மையமாக
நம்மைப் பொறுத்தவரை நாம்தான் இருக்கின்றோம். எனவே எதையும் நம்மிடமிருந்து
ஆரம்பிப்பதுதான் நல்லது. நாம் மாறினால் உலகமும் அன்புமயமாக
மாறும்.
வெ.இறையன்பு.
உலக அமைதியை தன் உடலை வருத்திக்கொள்வதன்மூலம் உண்டாக்கிவிட
முடியாது. நாம் நம்மைச் சுற்றி அன்பின் அதிர்வுகளை ஏற்படுத்துவதன்
மூலம்தான் அதனைச் சாதிக்கமுடியும்" விவேகானந்தர்.
மேலே சொல்லப்பட்ட அறிஞர் பெருமக்களின் கூற்றுகளைப்
பார்க்கும்போது அன்புதான் அனைத்திற்கும் ஆதார சுருதியாக இருக்கிறது
என்ற உண்மையை நாம் மிக எளிதாக உணர்ந்துகொள்ளலாம். இன்றைய நற்செய்தி
வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய இறுதி இரவு உணவின்போது சீடர்களைப்
பார்த்துச் சொல்கிறார், "நான் உங்களை அன்புசெய்தது போன்று,
நீங்களும் ஒருவர் மற்றவரை அன்பு செய்யுங்கள்" என்று. இயேசுவைப்
பொறுத்தளவில் அன்புதான் திருச்சட்ட நூல் முழுமைக்கும், இறைவாக்கு
நூல்களுக்கும் அடிப்படையாக இருக்கின்றது (மத் 23:40). எனவே
நாம் ஒருவர் மற்றவரை அன்புசெய்து வாழ்கிறபோது நாம் திருச்சட்டத்தையும்,
இறைவாக்கையும் நிறைவேற்றுபவர்களாக இருக்கின்றோம்.
அடுத்ததாக ஒருவர் மற்றவரை அன்பு செய்யவேண்டும் என்று சொன்ன இயேசு
நாம் எப்படி மற்றவரை அன்பு செய்யவேண்டும் என்பதையும் நமக்கு எடுத்துரைக்கிறார்.
"நான் உங்களை அன்பு செய்ததுபோல, நீங்களும் ஒருவர் மற்றவரை அன்பு
செய்யுங்கள்" என்கிறார். இயேசுவின் அன்பை நம்மால் வார்த்தைகளால்
விவரிக்க முடியாது. அந்த அன்பு எல்லையில்லா அன்பு; நாம் பாவிகளாக
இருந்தபோதும் நமக்காகத் தன்னுடைய உயிரையே தரும் அன்பு; பரந்த
பேரன்பு. இயேசுவிடம் விளங்கிய அதே அன்பு நம்முடைய உள்ளத்தில்
விளங்கவேண்டும் என்பதுதான் இயேசுவின் விருப்பம், எண்ணம் எல்லாம்.
ஆனால் இன்றைக்கு நம்மால் ஆண்டவர் இயேசு இந்த உலகத்தினை / மக்களை
அன்புசெய்ததுபோன்று அன்புசெய்ய முடிகிறதா? என்பது மிகப்பெரிய
கேள்விக்குறியாக இருக்கிறது. பிரான்சு தேசத்து தத்துவவியலாளரான
சாத்தர் கூறுவார், "Other is Hell". அதாவது அடுத்தவன் எனக்கு
நரகமாக/ வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறான் என்பதே இதன் அர்த்தமாக
இருக்கின்றது. ஒருவர் மற்றவரை எதிரியாக, பகையாளியாக, வளர்ச்சிக்குத்
தடையாக இருப்பவனாகப் பார்த்தால் நம்மிடத்தில் உண்மையான அன்பு
இருக்காது, போலியான அன்புதான் இருக்கும்.
இன்றைக்கு நமது சமூகத்தில், ஏன் நமது குடும்பத்தில்கூட உண்மையான
அன்பு இல்லை. அதனால்தான் எல்லாவிதமான பிரச்சனைகளும், குழப்பங்களும்
ஏற்படுகின்றன.
முன்பொரு காலத்தில் பரத்திரகிரி என்ற மன்னன் நமது பாரதத்தை ஆண்டுவந்தான்.
அவன் தன்னுடைய நேர்மையும், உண்மையுமான வாழ்வால் மக்களுக்கு நல்ல
ஒரு ஆட்சியை அமைத்துக்கொடுத்தான்.
ஒருநாள் ஏழை ஒருவன் தான் கண்டடைந்த அதிசயக் கனியை கொண்டுவந்து
அரசனிடம் கொடுத்து "மன்னா! இது அதிசயக் கனி, இதை உண்பவர்கள்
நீண்ட நாட்களுக்கு வாழ்வார்கள். ஆதலால் நேர்மையோடும், உண்மையோடும்
மக்களை ஆட்சிசெய்யும் நீங்கள் இந்தக் கனியை உண்டால், நீண்ட
நாட்களுக்கு வாழ்ந்து, மக்களை இன்னும் சிறப்பாக ஆட்சி செய்வீர்கள்
என்று நினைத்துதான் இந்தக் கனியை உங்களிடம் தருகிறேன்" என்று
சொல்லிவிட்டுச் சென்றான். உடனே அரசன், "இந்தக் கனியைத் தான் மட்டும்
உண்டு, நீண்ட நாட்கள் வாழ்வதனால் என்ன பயன்?, தான் மிகவும் அன்புசெய்யும்
அரசியிடம் கொடுத்தால், அவள் நீண்டால் நாட்கள் வாழ்வாளே" என்று
நினைத்துக்கொண்டு அதிசயக் கனியை அரசிடம் கொடுத்தான். அங்கேதான்
விதியானது விளையாடத் தொடங்கியது.
அதிசயக் கனியைப் பெற்றுக்கொண்ட அரசி, அதைத் தான் உண்ணாமல்,
தான் மிகவும் (இரகசியமாக) நேசிக்கும் அரண்மனைக் காவலாளிக்குக்
கொடுத்தாள். அந்த காவலாளியோ தன்னுடைய மகளை அதிக அதிகமாக அன்பு
செய்யக்கூடியவன். எனவே அவன் அந்த அதிசயக் கனியை தன்னுடைய மகளிடம்
கொடுத்து சாப்பிடச் சொன்னான்.
காவலாளியின் மகளோ கனியை தான் உட்கொள்ளாமல் "மக்களை நேர்மையோடு
நல்லாட்சி செய்யக்கூடிய அரசன் சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும்"
என்று நினைத்து அதிசயக் கனியை அரசனிடமே கொண்டுபோய் கொடுத்தாள்.
இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப்போன அரசன் அச்சிறுமியிடம்,
"இக்கனி உனக்கு எப்படிக் கிடைத்தது?" என்று கேட்டான். அதற்கு
அவள், "அரண்மனையில் காவலாளி வேலைப் பார்க்கும் தன்னுடைய தந்தைதான்
கனியைக் கொடுத்தார்" என்று சொன்னாள். உடனே அரசன் காவலாளியை வினவ,
காவலாளி தனக்கு அரசிதான் தந்தாள் என்ற உண்மையை ஒத்துக்கொண்டான்.
இறுதியில் அரசி தனக்குத் துரோகம் செய்துவிட்டதை உணர்ந்த அரசன்
அவளை வாளால் வெட்டி எறிந்தான்.
அதன்பிறகு இந்த உலகத்தில் இருக்கும் மனிதர்களின் அன்பில் உண்மை
இல்லை. கடவுள்தான் நம்மை உண்மையாக அன்புசெய்வார் என்பதை உணர்ந்துகொண்டு,
தன்னுடைய அரசவாழ்வை தூக்கி எறிந்துவிட்டு, துறவறம் பூண்டான்.
மனிதர்களின் அன்பில் எவ்வளவு போலித்தனம் இருக்கிறது என்பதை இக்கதை
மிக வேதனையோடு கூறுகிறது.
இக்கதை முற்றிலுமாக உண்மையாக இல்லாவிட்டாலும்கூட நமது அன்பில்
போலித்தனம் எந்தளவுக்கு மலிந்து போய்விட்டது என்பதை யாராலும்
மறுக்கமுடியாது. ஆகவே அன்பில்லாச் சூழலில், பகையும்,
வெறுப்பும் உள்ள இந்த காலக்கட்டத்தில் ஆண்டவர் இயேசு நம்மை எப்படி
முழுமையாக அன்புசெய்தாரோ, அதுபோன்று நாமும் ஒருவர் மற்றவரை அன்பு
செய்யவேண்டும் என்பதுதான் நமக்கு முன்னால் இருக்கும் சவாலாக இருக்கின்றது.
நிறைவாக இயேசு சொல்வது போன்று நாம் ஒருவர் மற்றவரை, அவர் அன்புசெய்தது
போன்று அன்பு செய்தால், உண்மையில் நாம் அவருடைய சீடர்களாக இருப்போம்.
இது உண்மை. மேலும் திருவெளிப்பாட்டு நூலிலிருந்து எடுக்கப்பட்ட
இன்றைய இரண்டாம் வாசகத்தில் படிப்பது போன்று 'கடவுள் நம் மத்தியில்
உறைந்திடுவார், நமது துன்பம், துயரம், சாவு, கண்ணீர் அனைத்தையும்
போக்கிடுவார்'.
ஆம், நாம் ஒருவர் மற்றவரை அன்பு செய்து வாழ்கிறபோது கடவுள் நம்
மத்தியில் உறைந்திடுவார், நமது கண்ணீர், கவலை, துன்பம், துயரம்
அத்தனையும் போக்கிவிடுவார். இது இறைவன் நமக்கு அளிக்கும் ஆசிராக
இருக்கிறது. நமது திருத்தந்தை பிரான்சிஸ் கூறுவார்,
"அடுத்தவர்மீது அக்கறைகொண்டு வாழும்போது கடவுள் அங்கே உண்மையில்
பிரசன்னமாக இருக்கிறார். அதுவே உண்மையான நற்செய்திப் பணியாகும்"
என்று குறிப்பிடுவார். ஆகவே நாம் ஒவ்வொருவரும் இயேசுவின் அன்பு
கட்டளையை கடைப்பிடித்து, இறையாட்சியை இம்மண்ணில் நிலைநாட்டும்
மக்களாவோம்.
அருளே வடிவான ஓர் இறையடியார் சாக்கடல் (Dead Sea) ஓரமாக நடந்துகொண்டிருந்தார்.
அப்போது திடிரென்று ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் அவர் உள்ளே இழுத்துச்
செல்லப்பட்டார். அலைகளுக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட அவர் அதற்கு
எதிராக எவ்வளவோ முயன்று பார்த்தார். ஆனால் அவரால் கடலிருந்து
தப்பித்தது வெளியே வரமுடியவில்லை.
ஆர்ப்பரித்து எழுந்த அலைகளையும், கடுமையான உவர்ப்புத்தன்மைகொண்ட
கடல்தண்ணீரையும் பார்த்து அவர் இன்னும் பீதியடைந்தார். இனிமேல்
உயிர்பிழைக்க முடியாது என்ற நினைத்த அவர் கடல் அலையில் தன்னையே
ஒப்படைத்து சரணாகதி அடைந்தார்.
என்ன ஆச்சரியம். சிறுது நேரத்தில் அவர் கடலிலே மிதக்கத் தொடங்கினார்.
அலையை எதிர்த்துப் போராடாமல், அலையின் போக்கில் தன்னை
விட்டுவிட்டதன் காரணத்தால் கடலில் மிதந்து வந்து கரையை அடைந்தார்.
துன்பங்கள், சோதனைகள் வரும்போது அதை எதிர்த்துப் போராடாமல்,
கடவுளின் கரங்களில் நம்மையே நாம் முழுமையாக ஒப்படைத்து, சரணாகதி
ஆகின்றபோது நமது துன்பங்கள் எல்லாம் மறைந்து இன்பமாக மாறும்.
ஆகவே இயேசுவின் சீடர்களாக இருக்கும் நாம், அவர் நமக்குப்
போதித்தது போன்று ஒருவர் மற்றவரை நிபந்தனை இன்றி அன்பு
செய்வோம், துன்பங்கள், துயரங்கள் இன்றி மகிழ்வான ஒரு வாழ்வைப்
பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு
(திருத்தூதர் பணிகள் 14: 21-27; திருவெளிப்பாடு 21: 1-5;
யோவான் 13: 31-33, 34-35)
புதிய கட்டளை
நிகழ்வு
முன்பொரு காலத்தில் அரசன் ஒருவன் இருந்தான். ஒருநாள் அவன் தன்னுடைய
நாட்டில் இருந்த அறிஞர் பெருமக்களை எல்லாம் கூப்பிட்டு அவர்களிடம்,
"உலகில் இதுவரைக்கும் சொல்லப்பட்ட தத்துவங்களை, ஞானத்தை சேகரித்துக்கொண்டு
வாருங்கள்" என்றார். அவர்களும் அதற்குச் சரியென்று
சொல்லிவிட்டு, அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்கள். நாற்பது
ஆண்டுகள் கழித்து அரசனிடம் வந்த அறிஞர் பெருமக்கள் தாங்கள் சேகரித்த
தத்துவங்களையும் ஞானக் கருத்துக்களையும் ஆயிரம் புத்தகங்களாகக்
கொடுத்தார்கள். அவற்றைப் பார்த்த அரசன், "எனக்கு இப்போது அறுபது
வயதாகின்றது... இந்த வயதில் என்னால் ஆயிரம் நூல்களையும் வாசிக்கமுடியாது.
அதனால் இந்தப் புத்தகங்களில் சொல்லப்பட்ட கருத்துகளை சுருக்கி
எழுதிக் கொண்டுவாருங்கள்" என்றார். அவர்களும் அதற்குச் சரியென்று
சொல்லிவிட்டுப் போனார்கள்.
பத்தாண்டுகள் கழித்து அரசனிடம் வந்த அறிஞர் பெருமக்கள், "அரசே!
நீர் சொன்னதுபோன்று ஆயிரம் புத்தகங்களில் இருந்த கருத்துக்களை
நூறு புத்தகங்களுக்குச் சுருக்கிக் கொண்டுவந்திருக்கிறோம்" என்றார்கள்.
அதற்கு அரசன், "இதோ பாருங்கள்! எனக்கு இப்போது எழுபது வயது ஆகின்றது...
இந்த வயதில் என்னால் நூறு புத்தங்களையும் வாசிக்க முடியாது...
இவற்றையும் சுருக்கி எழுதிக்கொண்டு வாருங்கள்' என்றான். அரசன்
இவ்வாறு சொன்னது அவர்களுக்கு எரிச்சலூட்டினாலும், அதை வெளியே
காட்டிக்கொள்ளாமல், அவன் சொன்னதுபோன்று நூறு புத்தகங்களில் இருந்தவற்றை
ஒரு புத்தகத்தில் சுருக்கி எழுதிக்கொண்டு வந்தார்கள்.
அவர்கள் அரசனிடம் வந்தநேரம் அவன் சாகும் தருவாயில் இருந்தான்.
எனவே அவன் அவர்களிடம், "இப்போது என்னால் புத்தகத்தை வாசிக்கமுடியாத
அளவுக்கு என்னுடைய கண்பார்வை மங்கிவிட்டது. அதனால் இந்தப் புத்தகத்தில்
சொல்லப்பட்டிருக்கின்ற கருத்தை ஒரு வரியில் சொன்னால் நன்றாக இருக்கும்"
என்றான். அப்பொழுது ஓர் அறிஞர் எழுந்து, "மனிதன் பிறந்தான்,
வாழ்ந்தான், இறந்தான். அவனுடைய வாழ்க்கையை எப்போதும் உயிர்த்துடிப்போடு
வைத்திருப்பது அன்புமட்டுமே" என்றார். அந்த அறிஞர் இவ்வாறு
சொன்னதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த அரசன் எல்லாருக்கும் பரிசுகள்
பலதந்து, நிம்மதியாக உயிர்துறந்தான்.
'அன்பு ஒன்றுதான் மானுடசமுதாயத்தை உயிர்த்துடிப்போடு
வைத்திருக்கின்றது' என்ற உண்மையை உணர்த்தும் இந்த நிகழ்வு நமது
சிந்தனைக்குரியது. இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு அன்பு
தொடர்பாகப் புதியதொரு கட்டளையைத் தருகின்றார். அக்கட்டளை எத்துணை
உயர்வானது என்பதை இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.
ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்
இயேசு தன்னுடைய சீடர்களை விட்டுப் பிரிந்துபோகின்ற தருணத்தில்
அவர்களுக்குப் பலவற்றைக் கற்பிக்கின்றார். அவற்றுள் ஒன்றுதான்,
'ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்ற கட்டளையாகும்.
இதை இயேசு புதிய கட்டளை என்று சொல்கின்றார். அது ஏன் என்பதை இப்பொழுது
பார்ப்போம்.
"உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும்
அன்புகூர்வாயாக" (லேவி 19: 18) என்கிறது அன்பு குறித்தான பழைய
ஏற்பாட்டுக் கட்டளை. இக்கட்டளை சிறந்ததொரு கட்டளையாக இருந்தாலும்,
தன்னை அன்புசெய்யாத அல்லது தன்னைக் காயப்படுத்திக்கொள்ளும் ஒருவர்
எப்படிப் பிறரை அன்புசெய்வார்? என்ற கேள்வியை எழுப்புவதாக இருக்கின்றது.
இன்றைக்கு எத்தனையோ மனிதர்கள் தங்களுடைய நிறத்தை, உயரத்தை ஏற்றுகொள்ள
முடியாமல் தாழ்வுமனப்பான்மையோடு இருப்பதையும் சமயங்களில் தற்கொலை
செய்வதுகொள்வதையும் காணமுடிகிறது. இப்படித் தன்னை ஏற்றுக்கொள்ளாத,
அன்புசெய்ய முடியாத மனிதரால் அடுத்தவரை எப்படி ஏற்றுக்கொள்ளவும்
அன்புசெய்யவும் முடியும்? என்ற கேள்வித் தவிர்க்கமுடியவில்லை.
இத்தகைய சூழ்நிலையில்தான் இயேசு சொல்லக்கூடிய அன்புக்கட்டளை
முக்கியத்துவம் பெறுகின்றது. மேலும் 'ஒருவர் மற்றவரிடம் அன்புசெலுத்துங்கள்'
என்று சொல்லும் இயேசு தொடர்ந்து ஒன்றைச் சொல்கின்றார். அது என்ன
என்று பார்ப்போம்.
இயேசுவைப் போன்று ஒருவர் மற்றவரிடம் அன்புசெலுத்துங்கள்
நற்செய்தியில் இயேசு, 'ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்'
என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்து "நான் உங்களிடம் அன்பு
செலுத்தியபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்"
என்கின்றார்.
இந்த உலகத்தில், இயேசு நம்மை அன்புசெய்த அளவுக்கு வேறு யாரும்
அன்புசெய்ய முடியாது என்று சொல்லலாம். ஏனென்றால், பலர் எதையாவது
எதிர்பார்த்து அன்புசெய்கின்றவர்களாக இருக்கின்றார்கள். 'நான்
உன்னை அன்பு செய்தால், பதிலுக்கு நீ என்னை அன்பு செய்யவேண்டும்',
'நான் ஒன்று கொடுத்தால், பதிலுக்கு நீ ஒன்று தரவேண்டும்' என்ற
நிலையில்தான் பலருடைய அன்பு இருக்கின்றது. இன்னும் ஒருசிலர் இருக்கிறார்கள்.
அவர்கள் பணக்காரர்கள், வசதிபடைத்தவர்கள், அதிகாரம் படைத்தவர்கள்
ஆகியோரைக் கண்டால் அவர்கள்மீது தனி அன்பு காட்டுவார்கள். அதேநேரத்தில்
தங்களுக்குக் கீழே உள்ளவர்களை ஒருபொருட்டாகக்கூட மதிக்கமாட்டார்கள்.
இப்படி எதிர்பார்த்து, ஒருகுறிப்பிட மக்கள்மீது மட்டுமே அன்புசெலுத்துகின்ற
மக்களுக்கு மத்தியில், இயேசு எதையும் எதிர்பாராமல், யாவரும்
பாவிகளாக இருந்தபோதும் (உரோமை 5: 8) அன்புசெலுத்தியது
சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்று.
இயேசுவின் அன்பு இதோடு நின்றுவிடவில்லை. அவர் அன்பிற்காக எதையும்,
ஏன் தன்னுடைய உயிரையும் தரத் துணிந்தார் (யோவா 15:13). இவ்வாறு
நாம் மற்றவரை எப்படி அன்புசெய்யவேண்டும் என்பதற்கு இலக்கணமாக
இருக்கின்றார். ஆகையால், அடுத்தவரை அன்புசெய்ய அழைக்கப்பட்டிருக்கும்
நாம், இயேசு நம்மை அன்புசெய்தது போன்று, எந்தவொரு எதிர்பார்ப்பு
இல்லாமலும் எல்லாரையும் ஒன்றாகவும் அன்புசெய்வது தேவையான ஒன்றாக
இருக்கின்றது.
அன்புசெலுத்துவோர் மட்டுமே இயேசுவின் சீடராக இருக்கமுடியும்
'ஒருவர் மற்றவரின் அன்பு செலுத்துங்கள்' அதுவும் 'நான் உங்களிடம்
அன்பு செலுத்தியபோல...' என்று சொல்லும் இயேசு, இறுதியாக
'நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்துச் அன்பிலிருந்து என்
சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வர்' என்கின்றார்.
இயேசு தன்னுடைய சீடராவதற்கு ஒருவர் என்னவெல்லாம் செய்யவேண்டும்
என்பதற்கு நிறைய விடயங்களைப் பற்றிப் பேசியிருக்கின்றார். தன்னலம்
துறந்து, சிலுவையைச் சுமக்கவேண்டும் என்றும் (மத் 16: 24) மற்ற
எல்லாரையும் விட தன்னை மேலாகக் கருதவேண்டும் (லூக் 14: 26) என்றும்
போதித்த இயேசு இதனுடைய உச்சமாக ஒருவர் மற்றவரிடம் அன்பு
செலுத்துவேண்டும். அப்படிப்பட்டவரே தன்னுடைய சீடர் என்று ஆணித்தரமாகக்
கூறுகின்றார். இந்த இடத்தில் எல்லாம் இருந்தும் அன்பு இல்லையேல்
ஒன்றமில்லை என்ற பவுலடியாரின் வார்த்தைகளை இணைத்துப் பார்ப்பது
நல்லது (1 கொரி 13: 1-3). ஆகவே, இயேசுவின் சீடர் அவரைப் போன்று
எல்லாரையும் அன்பு செய்வது என்பது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது.
சிந்தனை
'எங்கு அன்பு இருக்கின்றதோ அங்கு வாழ்வு இருக்கின்றது... எல்லாமும்
இருக்கிறது என்பார் காந்தியடிகள். ஆகவே, மனித வாழ்வின் ஆதார
சுருதியாக இருக்கும் அன்பை இயேசு நம்மிடம் காட்டியது போன்று மற்றவரிடம்
காட்டுவோம். அதன்வழியாக நாம் இயேசுவின் சீடர்களாகி, இறையருள்
நிறைவாய்ப் பெறுவோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
பாஸ்கா 05ஆம் ஞாயிறு 19 05 2019
திருப்பலி முன்னுரை
அன்பே இவ்வுலக வாழ்வின் அஸ்திவாரம். அதுவே சீடத்துவத்தின் அடையாளம்
என்பதை முன்னிறுத்தி இன்றைய பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு
திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.
அன்பு என்னும் மூன்று எழுத்தினுள் அடங்கியுள்ள அற்புதத்தை அறிந்து
உணர்ந்து கொண்டிருக்கும் நாம், அதைப் பிறரோடு பகிர்ந்து
கொண்டிருக்கின்றோமா? என்பதை சற்று மனதில் யோசிப்போம்.
அன்பு பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. அன்பு, நட்பு, இரக்கம்,
காதல் என பல வழிகளில் அன்பு வெளிப்படுகின்றது. நாம் காட்டும்
அன்பிலிருந்து இறைவன் நம் மீது காட்டும் அன்பு முற்றிலும் மாறுபட்டது.
இறைவன் பொழியும் அன்பு தன்னலமற்ற அன்பு, உயிரையே கொடுத்த அன்பு.
அத்தகைய அன்பை நாமும் உள்ளத்தில் ஏற்றுவோம்.
இன்றைய முதல் வாசகத்தில் பவுலும், பர்னபாவும் நற்செய்தியை பறைசாற்றும்
போது ஏற்படும் நெருக்கடிகள் நமது நம்பிக்கையை அதிகப்படுத்த
வேண்டும் என்று எடுத்துரைக்கின்றனர். தங்களை முன்னிலைப்படுத்தாமல்
இறைவனை மேன்மைப்படுத்தி தங்களை அர்ப்பணிக்கிறார்கள்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு "ஒருவர் மற்றவரிடம் அன்பு
செலுத்துங்கள்" என்று மண்ணக வாழ்வுக்கும் விண்ணக வாழ்வுக்கும்
அவசியமான, ஆழமான கட்டளையை போதிக்கின்றார். 'அன்பு செலுத்துங்கள்'
என்று மட்டும் அல்ல, 'நான் உங்களுக்கு அன்பு செலுத்தியது போல'
என்கின்றார். எனவே இறை அன்பை நம் உள்ளத்தில் உணர்ந்து, உதிரத்தில்
வெளிப்படுத்துவோம்.
அன்பு சிறுத்தால் தவறுகள்
பெரியனவாக தோன்றும்
அன்பு வேரூன்றிய இடத்தில்
பிளவுகளின் வேர் அறுக்கப்படுகின்றது.
எனவே அன்பினால் கட்டப்பட்ட உலகத்தை உருவாக்குவோம் என்று நம்பிக்கையோடு
இப்பலியில் இணைவோம்.
மன்றாட்டுகள்
1. பவுலையும் பர்னபாவையும் நற்செய்தியை அறிவிக்கும் கருவியாக
பயன்படுத்தியவரே!
எம் திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள்
தங்கள் நற்செய்திப் பணியில் அன்பை முதன்மையாக்கி நற்செய்தியை
அறிவிக்கவும் நெருக்கடிகள், போராட்ட நேரங்களில் நம்பிக்கையோடு
இறைவனை அறிவிக்கும் வரம் வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
2. புதிய விண்ணகத்தையும் புதிய மண்ணகத்தையும் கண்டேன் என
யோவான் கூறியது போல எம் தாய்த் திருநாட்டில் நடைபெறும் தேர்தலில்
உமதருள் பெற்ற தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படவும், பழைய கஷ்டம்,
கண்ணீர், வறுமை, துயரம், ஊழல், சுயநலம் போன்றவற்றை களைந்து, எம்
நாட்டை புதியதாக்கி மக்களாகிய நாங்கள் புதிய விண்ணகத்தையும் மண்ணகத்தையும்
காண வரம் வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
3. நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம்
அன்பு செலுத்துங்கள் என்றவரே!
எங்கள் குடும்பங்களில் அன்பை அடித்தளமாக்கி உறவுகள் கட்டப்படவும்,
குற்றம், குறைகளை மறந்து நேசிக்கவும், அன்பிற்கு ஏங்கும் மக்கள்
தனிமையில் வாடுவோர், குடும்பங்களை இழந்தோர், எளியோர், வறியோர்
அனைவரையும் அன்பு செய்ய வரம் வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
4. உயிர்ப்பின் ஒளியில் எம்மை நிரப்புபவரே!
எம் பகுதியில் கோடை வெப்பம் குறைந்து தக்க மழை பொழிந்து, விவசாயம்
சிறப்படையவும், குடும்ப அமைதி, சந்தோஷம், பொருளாதாரம் உயரவும்,
மாணவர்கள் சரியான உயர் படிப்பைத் தேர்ந்தெடுக்கவும்,
வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தை வரம் வேண்டி மன்றாடுவோர் உமதருளால்
பெற்றுக்கொள்ளவும் வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
நன்றி: ஆசிரியை. திருமதி. ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம். |
|