|
|
04 பெப்ரவரி 2018 |
|
|
ஆண்டின்
பொதுக்காலம் 5ஆம் ஞாயிறு |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
விடியும்வரை படுக்கையில் புரண்டு
உழல்வேன்.
யோபு நூலிலிருந்து வாசகம் 7: 1-4,6-7
யோபு கூறியது: மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போராட்டந்தானே?
அவர்களின் நாள்கள் கூலியாள்களின் நாள்களைப் போன்றவைதாமே? நிழலுக்கு
ஏங்கும் அடிமை போலவும், கூலிக்குக் காத்திருக்கும் வேலையாள் போலவும்,
வெறுமையான திங்கள்கள் எனக்கு வாய்த்தன; இன்னல்மிகு இரவுகள் எனக்குப்
பங்காயின.
படுக்கும்போது எப்போது எழலாம் என்பேன்! இரவோ நீண்டிருக்கும்;
விடியும்வரை புரண்டு உழல்வேன். என் நாள்கள் தறியின் ஓடுகட்டையினும்
விரைந்தோடுகின்றன; அவை நம்பிக்கையின்றி முடிவடைகின்றன. என் உயிர்
வெறுங்காற்றே என்பதை நினைவுகூர்வீர்; என் கண்கள் மீண்டும் நன்மையைக்
காணா.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
தி.பா:
147: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 3a)
=================================================================================
பல்லவி: உடைந்த உள்ளத்தோரை ஆண்டவர் குணப்படுத்துகிறார். அல்லது:
அல்லேலூயா.
1 நம்முடைய கடவுளைப் புகழ்ந்து பாடுவது நல்லது; அவரைப் புகழ்வது
இனிமையானது; அதுவே ஏற்புடையது. 2 ஆண்டவர் எருசலேமை மீண்டும் கட்டி
எழுப்புகின்றார்; நாடு கடத்தப்பட்ட இஸ்ரயேலைக் கூட்டிச்
சேர்க்கின்றார். பல்லவி
3 உடைந்த உள்ளத்தோரைக் குணப்படுத்துகின்றார்; அவர்களின் காயங்களைக்
கட்டுகின்றார். 4 விண்மீன்களின் இலக்கத்தை எண்ணி, அவை ஒவ்வொன்றையும்
பெயர் சொல்லி அழைக்கின்றார். பல்லவி
5 நம் தலைவர் மாண்பு மிக்கவர்; மிகுந்த வல்லமையுள்ளவர்; அவர்தம்
நுண்ணறிவு அளவிடற்கு அரியது. 6 ஆண்டவர் எளியோர்க்கு ஆதரவளிக்கின்றார்;
பொல்லாரையோ தரைமட்டும் தாழ்த்துகின்றார். பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ
எனக்குக் கேடு!
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய
முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 9: 16-19, 22-23
சகோதரர் சகோதரிகளே, நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும்
அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்யவேண்டிய கட்டாயம்
எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக்
கேடு! இதை நானாக விரும்பிச் செய்தால் எனக்குக் கைம்மாறு உண்டு.
நானாக விரும்பாவிட்டாலும் இது என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள
பொறுப்பாக இருக்கிறது.
அப்படியானால், எனக்குக் கைம்மாறு என்ன? உங்களுக்கு எச்செலவுமின்றி
நற்செய்தியை அறிவிப்பதிலுள்ள மனநிறைவே அக்கைம்மாறு;
நான் நற்செய்தி அறிவிப்போருக்குரிய உரிமையைக் கொஞ்சம்கூடப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.
நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும் பலரைக் கிறிஸ்துவிடம்
கொண்டுவர என்னை எல்லாருக்கும் அடிமையாக்கிக்கொண்டேன்.
வலுவற்றவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர வலுவற்றவர்களுக்கு வலுவற்றவனானேன்.
எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும்
எல்லாம் ஆனேன்.
நற்செய்தியால் வரும் ஆசியில் பங்கு பெற வேண்டி, நற்செய்திக்காக
எல்லாவற்றையும் செய்கிறேன்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
மத் 8: 17
அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்;
நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி
வாசகம்
=================================================================================
பல்வேறு பிணிகளால் வருந்தியவரை இயேசு குணப்படுத்தினார்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
1: 29-39
அக்காலத்தில் இயேசுவும் சீடர்களும் தொழுகைக்கூடத்தை விட்டு
வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின்
வீட்டிற்குள் சென்றார்கள்.
சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப்பற்றி
இயேசுவிடம் சொன்னார்கள். இயேசு அவர் அருகில் சென்று கையைப்
பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரைவிட்டு நீங்கிற்று.
அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.
மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள்,
பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டு வந்தார்கள்.
நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது.
பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல
பேய்களையும் ஓட்டினார்; அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால்
அவற்றை அவர் பேசவிடவில்லை.
இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப்
புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக்
கொண்டிருந்தார்.
சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள்.
அவரைக் கண்டதும், "எல்லாரும் உம்மைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்''
என்றார்கள்.
அதற்கு அவர், "நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள்.
அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்; ஏனெனில் இதற்காகவே
நான் வந்திருக்கிறேன்'' என்று சொன்னார்.
பின்பு அவர் கலிலேய நாடுமுழுவதும் சென்று அவர்களுடைய
தொழுகைக்கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றிப் பேய்களை ஓட்டி
வந்தார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 1
=================================================================================
இயேசு செபவீரர் மட்டுமல்ல, செயல்வீரரும் கூட
ஜெர்மன் நாட்டைச் சார்ந்த பெண்ணொருத்தி கோடை விடுமுறையை செலவழிப்பதற்காக
இத்தாலிக்கு அருகே இருந்த ஒரு தீவுக்குச் சென்றிருந்தாள். அந்தத்
தீவு மிகவும் ரம்மியமாகவும் அவ்வளவாக ஆள் நடமாட்டம் இல்லாததாகவும்
இருந்தது. ஆனால், அந்தத் தீவில் நடந்துகொண்டிருந்த இன்னொரு சம்பவம்
அவரை மனம் நோகச்செய்தது. அது என்னவென்றால், அந்தத் தீவுக்கு வந்தபோன
சுற்றுலாப் பயணிகள் சிலர் மது அருந்திவிட்டு, மது பாட்டில்களை
ஆங்காங்கே போட்டுவிட்டுச் சென்றனர். இன்னும் சிலர் பிளாஸ்டிக்
குப்பைகளை ஆங்காங்கே சிதறவிட்டுவிட்டுச் சென்றார். இதனால் அந்தத்
தீவே பொழிவிழந்து காணப்பட்டது.
இதைப் பார்த்து அந்தப் பெண்மணியால் சும்மா இருக்க முடியவில்லை.
அவர் தன்னால் முடிந்த மட்டும் அங்காங்கே சிதறிக்கிடந்த மது
பாட்டில்களை, பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தார். இப்படியாக
அந்தப் பெண்மணி தீவு சுத்தமாக இருக்க உதவிகள் செய்து வந்தார்.
ஒருநாள் மாலை வேளையில் அவர் வழக்கம் போல் தீவில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த
குப்பைகளை, பிளாஸ்டிக் பொருட்களை, மது பாட்டில்களை அப்புறப்படுத்திக்
கொண்டிருக்கும்போது, அவரைப் போன்றே ஒரு வயதான மனிதர் தீவில் கிடந்த
மது பாட்டில்களை, பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்திக்கொண்டிருந்தார்.
அந்த மனிதர் ஒவ்வொருநாள் காலையிலும் தீவில் இருக்கும் தேவாலயத்தில்
நடைபெறும் திருப்பலியில் கலந்துகொள்ளும் மனிதர் போன்று அவருக்குத்
தெரிந்தது.
உடனே அந்தப் பெண்மணி பெரியவரிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினார்,
"பெரியவரே! நீங்கள் ஒவ்வொருநாளும் தீவில் இருக்கும் தேவாலயத்தில்
நடைபெறும் திருப்பலியில் கலந்துகொள்கின்றவர்தானே?" என்று
கேட்டார். "ஆமாம். நான்தான் அவர்" என்றார். தொடர்ந்து அந்தப்
பெரியவர் பெண்மணியிடத்தில் பேசத் தொடங்கினார்,
"திருப்பலில்
கலந்துகொள்வதால் மட்டும் என்னுடைய விசுவாச வாழ்க்கை முழுமை பெறவில்லை
என்று எனக்குத் தோன்றியது. அதனால்தான் என்னால் இயன்ற மட்டும்
இந்த தூய்மைப்படுத்துகின்ற பணியில் ஈடுபட்டு, என்னுடைய விசுவாச
வாழ்க்கையை முழுமையாக்க முயற்சி செய்துகொண்டிருக்கின்றேன்".
பெரியவரின் வார்த்தைகளால் தொடப்பட்ட அந்தப் பெண்மணி, அதன்பிறகு
தீவினைச் சுத்தப்படுத்துகின்ற பணியை அந்தப் பெரியவரோடு
சேர்ந்தே செய்தார்.
ஜெபம் செய்வது மட்டும் கிறிஸ்தவ வாழ்க்கை கிடையாது, செயலிலும்
ஈடுபடுவதுதான் உண்மையான எடுத்துகாட்டன கிறிஸ்தவ வாழ்க்கை என்னும்
உண்மையை இந்த நிகழ்வு மிக அழகாக எடுத்துக்கூறுகின்றது.
பொதுக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள்
"இயேசுவைப் போன்று செபவீரராக மட்டுமல்லாமல், செயல்வீரராகவும்
வாழ அழைப்புத் தருகின்றது. நாம் எப்படி செயல்வீரராக மாறுவது என்று
இன்றைய இறைவார்த்தையின் வழியாக சிந்தித்துப் பார்ப்போம்.
மாற்கு நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகம்
ஆண்டவர் இயேசுவினுடைய பணிவாழ்வில் ஒருநாள் எப்படியெல்லாம் கழிந்தது
என்பதைப் பற்றி மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றது. இயேசு
விடியற்காலையில் தனிமையான ஓர் இடத்திற்கு இறைவேண்டல் செய்வதற்காக
சென்றார் என்று தொடங்கும் அவருடைய நாள், மாலை வேளையில் பல்வேறு
பிணிகளால் வருந்திய மக்களை இயேசு குணப்படுத்தினார் என்பதோடு
அவருடைய ஒருநாள் பணிவாழ்க்கை இருக்கின்றது. இயேசு இறைவனோடு தனிமையில்
ஜெபித்தார் என்பது அவர் ஜெப வீரர் என்பதை சுட்டிகாட்டுகின்ற அதே
வேளையில், அவர் பல்வேறு பிணிகளால் வருந்திய மக்களைக் குணப்படுத்தினார்
என்பது அவர் உண்மையான செயல்வீரர் என்னும் உண்மையை நமக்கு மிகத்
தெளிவாக எடுத்துரைக்கின்றது.
இயேசு பேய்களை ஒட்டியது, நோயாளிகளைக் குணப்படுத்தியது, நற்செய்தி
அறிவிக்க பல்வேறு ஊர்களுக்குச் சென்றது, இறைவனின் ஜெபித்தது எல்லாம்
அவர் மனுக்குலத்தின் மீது கொண்ட உண்மையான அன்பினால் செய்தார்
என்று சொன்னால் அது மிகையாகாது. இறைவாக்கினர் எசாயா கூறுவது
போன்று "மெய்யாகவே இயேசு நம்மீது கொண்ட அன்பினால் நம்முடைய
பிணிகளையும், துன்பங்களையும், பாடுகளையும் தன்மீது சுமந்து
கொண்டார் (எசா 53: 4) என்று சொன்னால் அது மிகையாகாது.
அது மட்டுமல்லாமல், நற்செய்தி அறிவிப்பும், ஆண்டவரின் இரக்கத்தை
மக்களுக்கு எடுத்துச் சொல்லி, அவர்களுக்கு நலமான வாழ்வினைத் தருவதுதான்
தன்னுடைய இலட்சியமாகக் கொண்டு செயல்பட்டார். அது இன்றைய நற்செய்தி
வாசகத்தில் மிகத் தெளிவாக தெரிகின்றது.
"நாம் அடுத்த ஊர்களுக்கும்
போவோம் வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியை பறைசாற்றவேண்டும்;
ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கின்றேன்" என்னும் வார்த்தைகள்"
இயேசு மக்கள்மீது கொண்ட உண்மையான அன்பினையும், அவருடைய இலட்சியக்
கனவினையும் நமக்கு மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றது. நாம்
ஒவ்வொருவரும் ஆண்டவர் இயேசுவைப் போன்று மக்கள்மீது உண்மையான அன்புகொண்டு,
அவர்களுக்கு உதவி செய்து, நடமாடும் நற்செய்தியாய் இருக்கவேண்டும்
என்பதுதான் இயேசுவின் திருவுளமாக இருக்கின்றது.
இப்படி ஆண்டவர் இயேசு போதித்த, வாழ்ந்துகாட்டிய விழுமியங்களின்
படி வாழ்ந்தவர் தூய பவுலடியார் என்று சொன்னால் அது மிகையாகாது.
கொரிந்தியருக்கு எழுதப்பட்ட முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட
இன்றைய இரண்டாம் வாசகம் அதற்குச் சான்றாக அமைகின்றது.
இரண்டாம் வாசகத்தில் பவுலடியார்,
"நான் நற்செய்தியை
அறிவிக்கின்றேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை.
இதைச் செய்யவேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை
அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு! என்று சொல்லிவிட்டு,
எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும்
எல்லாமானேன்" என்கின்றார்.
பவுலடியார் நற்செய்தியின்மீது கொண்ட தாகம் அளப்பெரியது, அது
மட்டுமல்லாமல் அவர் மக்களை ஆண்டவருக்குள் கொண்டு வருவதற்கு
பட்ட துன்பங்கள், கஷ்டங்கள், சந்தித்த அவமானங்கள், வேதனைகள்
அனைத்தையும் வார்த்தையில் விளக்கிச் சொல்ல முடியாது.
இவற்றையெல்லாம் அவர் மக்கள்மீதும் இறைமகன் இயேசுவின் மீது
கொண்ட உள்ளார்ந்த அன்பினாலேயே செய்தார் என்று சொன்னால் அது
மிகையாகாது. அதைவிடவும் பவுலடியார் தான் செய்துவந்த பணிகள்
அனைத்தையும் பெருமைக்காக அல்ல, தன்மேல் சுமத்தப்பட்ட கடமையாக
செய்தார். ஆகையால், நாம் பவுலடியாரைப் போன்று, ஆண்டவர்
இயேசுவைப் போன்று நற்செய்தி அறிவிப்பதையும், நற்செயல்
புரிவதையும் கடமையுணர்வோடு செய்யவேண்டும். அப்போதுதான் நாமும்
ஆண்டவர் இயேசுவைப் போன்று, பவுலடியாரைப் போன்று செயல்வீரர்களாக
மாறமுடியும்.
ஓர் ஊரில் மார்கரெட் என்னும் இளம்பெண் வாழ்ந்து வந்தாள்.
அவளுடைய குடும்பம் பொருளாதரத்தில் மிகவும் பின்தங்கிய
குடும்பம்; அவளுடைய பெற்றோரோ வயது முதிர்ந்தவர்களாக
இருந்தார்கள். இதனால் அவள்தான் குடும்பச் சுமையை தன்னுடைய
தோள்மேல் சுமக்கவேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டது. மார்கரெட்க்கு
நல்லதொரு வேலை கிடைக்கவில்லை. குறைந்த ஊதியத்தில்தான் வேலை
பார்த்து வந்தார். நல்லவொரு வேலை கிடைக்கவேண்டும் என்பதற்காக
அவள் பல்வேறு நிறுவனங்களை ஏறி இறங்கினாள்.
இப்படிப்பட்ட தருணத்தில் ஒருநாள் மார்கரெட் ஒரு பெரிய
நிறுவனத்திடம் வேலை வேண்டி புறப்பட்டுச் சென்றாள். ஆச்சரியம்
என்னவென்றால், அவளைப் போன்றே நிறையப் பெண்கள் அந்த பெரிய
நிறுவனத்திடம் வேலை வேண்டிச் சென்றார்கள். அவர்கள் எல்லாரும்
பார்ப்பதற்கு கொஞ்சம் வசதி படைத்தவர்கள் போன்றும், அழகானவர்கள்
போன்றும் இருந்தார்கள். இது மார்கரெட் உள்ளத்தில் ஒருவிதமான
அச்சத்தைத் தோற்றுவித்தது. எப்படியும் வேலை கிடைத்தால்தான்
தன்னுடைய குடும்பத்தை கரையேற்ற முடியும் என்ற முனைப்போடு
குறிப்பிட்ட நிறுவனத்தை நோக்கி மார்கரெட் வேகவேகமாகப்
போய்க்கொண்டிருந்தார்.
அப்போது ஓர் எதிர்பாராத சம்பவம் நடந்தது. ஆம், வேலை வாய்ப்பு
தரும் அந்த நிறுவனத்தை நோக்கி நடந்துபோய்கொண்டிருந்தபோது ஒரு
நடுத்தவர வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் கால் இடறிக் கீழே
விழுந்துவிட்டார். அவருக்கு அருகிலே நடந்து சென்றவர்கள்
எல்லாரும் பெண்ணொருத்தி வீழே விழுந்ததுகூடத் தெரியாமல்,
குறிப்பிட்ட நேரத்திற்குள் நிறுவனத்திற்குள் செல்ல வேண்டும்
என்ற பரபரப்போடு சென்றபோது, மார்கரெட்டோ கீழே விழுந்த
பெண்மணியை தூக்கி நிறுத்தி, அருகே இருந்த மருந்தகத்திற்கு அவரை
அழைத்துச் சென்று, முதலுதவியைச் செய்து அந்தப்
பெண்மணியிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்.
எதிர்பாராத சம்பவம் நடந்து கால தாமதமானதால், தனக்கு வேலை
கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பதற்றத்துடனே மார்கரெட் அந்த
நிறுவனத்திற்குள் காலடி எடுத்து வைத்தார். எல்லாரும் போனபின்பு
கடைசியாகத்தான் மார்கரெட் நேர்முகத் தேர்வு நடைபெறும்
அறைக்குள் செல்ல முடிந்தது. அவர் அந்த அறைக்குள் சென்றபோது
அவளுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. ஆம், சில மணித்துணிகளுக்கு
முன்பாக மார்கரெட் யாருக்கு சாலையில் உதவிசெய்தாளோ அந்தப்
பெண்மணிதான் அங்கு இருந்தார். அவர் மார்கரெட்டைப்
பார்த்தவுடன்,
"வா! உனக்காகத்தான் நான் இவ்வளவு நேராம்
காத்திருந்தேன். நீ வருவாய் என்று எனக்கு நிச்சயம் தெரியும்.
இங்கே நிறையப் பேர் வேலைதேடி வந்தார்கள். ஆனால்,
அவர்களிடத்தில் அடுத்தமட்டில் அன்பும் அக்கறையும் இல்லை.
உனக்கு இருக்கின்றது. அதனால் உன்னை இங்கு ஒரு முக்கியமான
பொறுப்பில் வேலைக்கு அமர்த்துகின்றேன்" என்றார். இதைக் கேட்டு
மார்கரெட் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
இயேசுவின் வழியில் நடக்கும் நாம், அவரைப் போன்று அடுத்தவர்
மட்டில் உண்மையான அன்போடும் அக்கறையோடும் இருக்கவேண்டும்.
அப்படி இருக்கும் பட்சத்தில் ஆண்டவரால் ஆசிர்வதிக்கப்படுவோம்
என்பது உறுதி.
ஆகவே, நம் பெருமான் இயேசுவின் போன்று செபவீரர்களாக மட்டும்
இல்லாமல், செயல்வீரர்களாகவும் வாழ்வோம். அடுத்தவர் மட்டில்
அன்பு கொண்டு வாழ்வோம், அதனை நம்முடைய கடமையாக நினைத்து
வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 2
=================================================================================
"இயேசு சீமோனுடைய மாமியார் அருகில் சென்று கையைப் பிடித்து அவரைத்
தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப்
பணிவிடை செய்தார்'' (மாற்கு 1:31)
இயேசு இறையாட்சிப் பணி ஆற்றிய இடங்களில் முக்கியமான ஒன்று கப்பர்நாகும்
ஊர் ஆகும். அங்கே சீமோன் பேதுருவின் வீடு இருந்தது. இயேசு அங்குச்
செல்வது வழக்கம். சீமோனுடைய மாமியாருக்குக் காய்ச்சல். இயேசு
நோயாளருக்கு நலமளிக்கிறார் என்னும் செய்தி ஏற்கெனவே பரவியிருந்தது
(காண்க: மாற் 1:27-28). எனவே, சீமோனுடைய மாமியாருக்கு நலமளிக்க
வேண்டும் என இயேசுவைக் கேட்கிறார்கள். இயேசு கையைப் பிடித்து
அவரைத் தூக்கவே காய்ச்சல் நீங்குகிறது. நலம் பெற்ற அப்பெண்மணி
இயேசுவுக்கும் அவரோடு இருந்தவர்களுக்கும் ''பணிவிடை செய்தார்''
(மாற் 1:31). இங்குப் பணிவிடை எனக் குறிக்கப்படுவது ஏதோ உணவு
பரிமாறியது மட்டுமல்ல. திருச்சபைச் சமூகத்தில் ஒருவர் மற்றவர்
மட்டில் அன்புகொண்டு அவர்களைத் தம் குடும்ப உறுப்பினர்போல ஏற்று
மதித்து ஒழுகுவதே ''பணிவிடை''. இத்தகைய பணிவிடை (''தொண்டு'')
செய்யவே இயேசு இவ்வுலகில் வந்தார் (மாற் 10:45).
இயேசுவின் மீட்புப் பணி நம்மைத் தீமையிலிருந்து விடுவிப்பதோடு
நாம் பிறரை முழு மனத்தோடு அன்புசெய்ய நமக்கு சக்தியையும் வழங்குகிறது.
சீமோனின் மாமியார் இதற்கு ஒரு முன்மாதிரி எனலாம். அவருக்கு ஏற்பட்ட
''தீமை'' காய்ச்சலாக வெளிப்பட்டது. அத்தீமையிலிருந்து அவர்
விடுதலை பெற்றது இயேசுவை அவர் சந்தித்து, அவரால் தொடப்பட்ட நேரம்
நிகழ்ந்தது. இவ்வாறு நலம் பெற்ற அவர் ஒரு புதிய மனிதராக
மாறுகிறார். இயேசுவுக்கும் அவரில் நம்பிக்கைகொண்டோருக்கும் ''பணிவிடை''
செய்ய அவர் திறம் பெறுகிறார். நாமும் நலம் பெற்ற மனிதராக, பிறருக்கு
நலம் கொணரும் மனிதராக மாறிட அழைக்கப்படுகிறோம்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
இயேசு, "நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள்.
அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்" என்றார்''
(மாற்கு 1:38)
இயேசுவின் அன்புக்குரியவரே!
-- மக்களைத் தேடிச் சென்று அவர்களுக்கு இறையாட்சி பற்றிய நற்செய்தியை
அறிவித்தார் இயேசு. அவ்வேளைகளில் இயேசு தம்மோடு தொடர்ந்து இருக்கவேண்டும்
என்று மக்கள் விரும்பியதுண்டு. எனவேதான் சீடர்கள் இயேசுவிடம்
சென்று, ''எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்'' என்று
கூறினார்கள் (மாற் 1:37). ஆனால் இயேசு ஒருசில மனிதரை மனமாற்றம்
அடையச் செய்தால் போதும் என்றோ, அவர்களுக்கு மட்டும் நற்செய்தி
அறிவித்தால் போதும் என்றோ நினைக்கவில்லை. அவர் மேலும் பல ஊர்களுக்குச்
செல்ல வேண்டும்; மேலும் பல மக்களைச் சென்றடைய வேண்டும்; மேலும்
பலரை இறையாட்சியின் அரவணைப்பில் கொண்டு வர வேண்டும் என்னும் ஆர்வத்தால்
உந்தப்பட்டார். எனவே, ''நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம்'' என்றார்.
இயேசு பல ஊர்களுக்குச் சென்று போதித்தாலும் அவருடைய நடமாட்டம்
கலிலேயா பகுதியிலும் எருசலேம் பகுதியிலும் மட்டுமே நிகழ்ந்தது.
இயேசுவின் பணியைத் தொடர்ந்து அனைத்துலக மக்களுக்கும் நற்செய்தியை
அறிவிக்கின்ற பொறுப்பு அவருடைய சீடர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
-- நாம் இயேசுவின் கால்களாக, கைகளாக, ஏன் இயேசுவின் உடலாக இருக்கின்றோம்
என பவுல் அறிவுறுத்துகிறார் (காண்க: 1 கொரி 12:27; எபே 4:4-6).
இத்தகைய உணர்வால் உந்தப்பட்டு, பவுல் போன்ற திருத்தூதர்கள் இயேசுவின்
நற்செய்தியை அறிவிக்கப் புறப்பட்டுச் சென்றார்கள். பிற்காலத்தில்
தூய பிரான்சிஸ் சவேரியார் போன்றோர் இந்திய நாட்டிற்கு வந்து மறையறிவித்தார்கள்.
எனவே, இயேசு ஊர் ஊராகச் சென்று போதித்த பணி இன்றும் தொடர்கிறது.
நற்செய்தியைப் பறைசாற்றுவோர் இயேசுவைப் பின்பற்றி ''அடுத்த ஊர்களுக்கும்''
போக அழைக்கப்படுகிறார்கள். ஒரே இடத்தில், ஒரே தளத்தில் வேரூயஅp;ன்றி
விடாமல் வெவ்வேறு மக்களை அணுகிச் சென்று அவர்களையும் இறையாட்சியின்
அரவணைப்பில் கொணர்ந்திட முயல வேண்டும் என்பதை இயேசுவின் பணி
நமக்கு உணர்த்துகிறது. இதனால் நாம் பயணம் சென்று தொலைநாடுகள்
செல்லவேண்டும் என்றில்லை; மாறாக, எங்கிருந்தாலும் அங்குள்ள அனைவருக்கும்
வேறுபாடின்றி நற்செய்தியின் தூதுவர்களாக நாம் விளங்கிட
வேண்டும் என்பதே பொருள்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 3
=================================================================================
|
|