|
ஆண்டு
A |
|
பொதுக்காலம்
5ஆம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
உன் ஒளி விடியல் போல் எழும்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம்
58:7-10
பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும் தங்க இடமில்லா
வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக்
காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும் உங்கள் இனத்தாருக்கு
உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும்
நோன்பு! அப்பொழுது உன் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் உனக்கு
நலமான வாழ்வு துளிர்க்கும்; உன் நேர்மை உனக்கு முன் செல்லும்;
ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின்சென்று காக்கும். அப்போது நீ ஆண்டவரை
மன்றாடுவாய்; அவர் உனக்குப் பதிலளிப்பார்; நீ கூக்குரல் இடுவாய்;
அவர் "இதோ! நான்" என மறுமொழி தருவார். உன்னிடையே இருக்கும் நுகத்தை
அகற்றிவிட்டு, சுட்டிக்காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும் பொல்லாதன
பேசுவதையும் நிறுத்திவிட்டு, பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து,
வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்;
இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
(திபா
112:4-5, 6-7,
8அ, 9 Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சுவோர் இருளில் ஒளியென மிளிர்வர்
4 இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்; அருளும்
இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர்.
5 மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள்
தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர். - பல்லவி
6 எந்நாளும் அவர்கள் அசைவுறார்; நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில்
என்றும் வாழ்வர்.
7 தீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது; ஆண்டவரில் நம்பிக்கை
கொள்வதால் அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும். - பல்லவி
8 அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்; அவர்களை அச்சம்
மேற்கொள்ளாது;
9 அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்களது நீதி
என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன்
மேலோங்கும். - பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
++கடவுளைப் பற்றிய மறைபொருளை
உங்களுக்கு அறிவித்தேன்.
தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல்
திருமுகத்திலிருந்து வாசகம் 2:1-5
சகோதர சகோதரிகளே, கடவுளைப் பற்றிய மறைபொருளை அறிவிக்க நான் உங்களிடம்
வந்தபோது மிகுந்த சொல்வன்மையுடனோ ஞானத்துடனோ வரவில்லை. நான் உங்களிடையே
இருந்தபோது மெசியாவாகிய இயேசுவைத்தவிர, அதுவும் சிலுவையில் அறையப்பட்ட
அவரைத் தவிர, வேறு எதையும் அறியவேண்டும் என்று நினைக்கவில்லை.
நான் உங்கள் நடுவில், வலுவற்றவனாய், மிகுந்த அச்சத்தோடும் நடுக்கத்தோடும்
இருந்தேன். நான் பறைசாற்றிய செய்தி ஞானத்தின் கவர்ச்சியான சொற்களில்
அமையவில்லை. ஆனால் அது தூயஆவியின் வல்லமையை எடுத்துக்காட்டுவதாக
அமைந்தது. உங்கள் நம்பிக்கைக்கு அடிப்படை மனித ஞானம் அல்ல, கடவுளில்
வல்லமையே.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
(யோவா 8: 12)
அல்லேலூயா, அல்லேலூயா! "உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர்
இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக்
கொண்டிருப்பார்" அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்.
தூய மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து
வாசகம் 5:13-16
நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப்
போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது
வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும்
உதவாது. நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும்
நகர் மறைவாயிருக்க முடியாது. எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள்
வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான்
அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும். இவ்வாறே உங்கள் ஒளி
மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு
உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
I எசாயா 58: 7-10
II 1 கொரிந்தியர் 2: 1-5
III மத்தேயு 5: 13-16
உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க
நிகழ்வு
துறவி ஒருவர் இருந்தார். அவர் மலையடிவாரத்தில் ஒரு குடிசை அமைத்து
அங்கு வருவோருக்கு அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வந்தார்.
ஒருநாள் அவரைச் சந்திக்க வந்த இளைஞன் ஒருவன் அவரிடம் நீண்டநேரம்
பேசிக்கொண்டிருந்தான். தற்செயலாக அவன் வெளியே பார்த்தபொழுதுதான்
நன்றாக இருட்டியிருந்தது தெரிந்தது. உடனே அவன் துறவியிடம்,
"நேரமாகிவிட்டது. கிளம்புகிறேன்" என்றான். துறவி அவனிடம்,
"இன்றிரவு இங்கு தங்கிவிட்டு அதிகாலையில் கிளம்பு... இது கொடிய
விலங்குகள் நடமாடக்கூடிய பகுதி" என்றார். அவனோ அங்கிருந்து கிளம்புவதில்
விடாப்பிடியாக இருந்ததால், அவர் அவனை அங்கிருந்து போக அனுமதித்தார்.
வெளியே வந்து பார்த்தான் அவன். ஒரே கும்மிருட்டாக இருந்தது. இப்பொழுது
அவனுக்குள் ஊருக்குப் போகவா வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டது.
இதைக் கவனித்த துறவி தன்னுடைய குடிசையிலிருந்த ஒரு விளக்கை எடுத்து
அவனிடம் கொடுத்து, "இதை வைத்துக்கொண்டு உன்னுடைய பயணத்தைத் தொடர்"
என்றார். அவனும் துறவி கொடுத்த விளக்கை வைத்துக்கொண்டு மெல்ல
நடந்து சென்றான்.
அவனுடைய நடையில் ஒருவிதமான தளர்ச்சி தெரிந்தது. அதைக் கவனித்த
துறவி வேகமாக அவனருகே சென்று, அவன் வைத்திருந்த விளக்கை "பூ"
என ஊதினார். விளக்கு உடனே அணைந்துபோக, அவன் அப்படியே
அதிர்ந்துபோய் நின்றான். "என்ன சுவாமி இப்படிச்செய்து
விட்டீர்கள். இனி நான் ஊருக்கு எப்படிப் போவது?" என்றான்.
துறவி, அவனை ஒரு வினாடி உற்றுப் பார்த்துவிட்டுத் தீர்க்கமான
குரலில் சொன்னார்: "இரவல் விளக்கு நீண்ட நேரம் துணைக்கு வராது.
உனக்குள் இருக்கும் விளக்கே/ஒளியே இறுதிவரை உன்னோடு வரும். உன்
கையில் விளக்கு தேவையென்றால், உனக்குள்ளே பயம்
உறைந்திருக்கின்றது என்று பொருள். உள்ளே துணிவிருந்தால் உனக்கு
விளக்கு தேவையில்லை. அதனால் உன் துணிவு என்னும் ஒளியால் உன்
பயணத்தைத் தொடர்."
துறவி சொன்ன இந்த நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளைக் கேட்ட
இளைஞன். கையில் விளக்கேதும் இல்லாமல், தனக்குள் இருந்த துணிவு
என்ற விளக்கைக் கொண்டு, அந்த அடர்ந்த காட்டின் வழியாக நடந்து
வீடு வந்து சேர்ந்தான்.
உனக்கு நீயே விளக்கு/ ஒளி என்ற உண்மையை எடுத்துரைக்கும் இந்த
ஜென் கதை இன்றைய இறைவார்த்தையின் முதன்மைச் சிந்தனையை அப்படியே
எடுத்துரைப்பதாக இருக்கின்றது. இன்றைய இறைவார்த்தை நாம்
ஒவ்வொருவரும் உலகிற்கு ஒளியாக இருக்கவேண்டும் என்ற சிந்தனையை
எடுத்துக்கூறுகின்றது. இது குறித்து இப்பொழுது நாம்
சிந்தித்துப் பாப்போம்.
தன்னை இழக்கத் தயராய் இருக்கவேண்டும்
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாக,
ஒளியாக இருக்கின்றீர்கள் என்று கூறுகின்றார். உப்பு, ஒளி
இரண்டும் வேறு வேறாக இருந்தாலும், இரண்டுக்கும் ஓர் ஒற்றுமை
இருக்கின்றது. அது என்ன ஒன்றுமை எனில், தன்னை இழப்பதாகும்.
உப்பு தன்னை இழந்து உணவிற்குச் சுவையூட்டுகின்றது.... ஒளியோ
தன்னைக் கரைத்துக்கொண்டு அல்லது தன்னை இழந்து உலகிற்கு
ஒளிகொடுக்கின்றது. அப்படியானால் இயேசு மக்களைப் பார்த்து
அல்லது சீடர்களைப் பார்த்து, நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய்,
ஒளியாய் இருக்கிறீர்கள் என்று கூறுகின்றார் என்றால், அவர்கள்
தங்களை இழந்து விண்ணகத் தந்தைக்குப் பெருமை சேர்க்கவேண்டும்
என்பதுதான் இதன் பொருளாக இருக்கின்றது.
சீடத்துவ வாழ்வில் இழத்தல் என்ற பண்பு முக்கிய இடம்
வகிக்கின்றது. "கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது
அப்படியே இருக்கும்; மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை
அளிக்கும்" (யோவா 12: 24) என்று சொல்லும் சொல்லும் இயேசு, நாம்
நம்மை இழக்கின்றபொழுது மட்டுமே உலகிற்கு உப்பாக ஒளியாக இருக்க
முடியும் என்று கூறுகின்றார்.
அஞ்சாதிருக்கவேண்டும்
உலகிற்கு உப்பாக, ஒளியாக இருக்கத் தன்னை இழப்பது முதல்படி
என்றால், அஞ்சாதிருப்பது அடுத்த படி என்று சொல்லலாம். இதற்கான
தெளிவினை நற்செய்தி வாசகத்திலிருந்து நாம் பெற்றுக்கொள்ளலாம்.
இன்றைய நற்செய்தியில் இயேசு, "எவரும் விளக்கை ஏற்றி
மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின்மீதே
வைப்பர்" என்று கூறுகின்றார். இயேசுவின் இவ்வார்த்தைகளுக்கு
விளக்கம் அளிக்கின்றபொழுது, திருவிவிலிய அறிஞர்கள்,
"கிறிஸ்தவம் வேகமாகப் பரவி வந்த தொடக்கக் காலக்கட்டத்தில்
கிறிஸ்தவர்கள்மீது தொடர் தாக்குதல்களும் வன்முறைகளும் நடந்த
வன்ணமாய் இருந்தன. இத்தகைய சூழ்நிலையில் கிறிஸ்தவர்களில்
ஒருசிலர், தாங்கள் கிறிஸ்தவர்கள் என்று அரசாங்கத்திற்குத்
தெரிந்தால், தங்களுடைய உயிருக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ
என்று அஞ்சி அஞ்சி வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.
இப்படிப்பட்டவர்கள் தங்களுடைய கிறிஸ்தவ அடையாளத்தை மறைத்து,
அஞ்சி அஞ்சி வாழாமல், அஞ்சாமல் துணிவோடு சான்று பகர்ந்து
வாழவேண்டும்" என்று விளக்கம் அளிப்பார்கள்.
ஆம், உலகிற்கு உப்பாக, ஒளியாக இருக்கவேண்டியவர்கள் பிறர் என்ன
நினைப்பார்களோ என்று தங்களுடைய கிறிஸ்தவ அடையாளத்தை
மறைத்துகொண்டு அஞ்சி அஞ்சி வாழ்ந்தார்கள் எனில், அவர்களால்
உலகிற்கு ஒளியாக, உப்பாக இருக்க முடியாது. அவர்கள் ஆண்டவருக்கு
மட்டுமே அஞ்சி, அவருக்குச் சான்று பகர்ந்து வாழவேண்டும்.
அப்பொழுதுதான் அவர்கள் உலகிற்கு உப்பாக, ஒளியாக
இருக்கமுடியும்.
வறியோரின் தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டும்
உலகிற்கு உப்பாக, ஒளியாக இருப்பதற்கான மூன்றாவது மற்றும்
நிறைவான படி, வறியோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகும். அது
எப்படி வறியோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் வழியாக நாம்
உலகிற்கு உப்பாக, ஒளியாக மாற முடியும் என்ற கேள்வி எழலாம்.
இதற்கான பதிலை இன்றைய முதல் வாசகம் தருகின்றது. இறைவாக்கினர்
எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தின்
இறுதியில், "வறியோரின் தேவையை நிறைவுசெய்வாயானால், இருள் நடுவே
உன் ஒளி உதிக்கும்; இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும் "
என்று கூறுகின்றார். இறைவாக்கினர் எசாயா கூறுவதுபோல் நாம்
வறியோரின் தேவைகளை நிறைவுசெய்பவர்களாக இருக்கின்றோமா? அல்லது
அவர்களைக் கண்டும் காணாமல் இருக்கின்றோமா? சிந்தித்துப்
பார்ப்போம்.
அண்மையில் செய்தித்தாளில் வெளிவந்த ஒரு செய்தி இது: சண்டிகரைச்
சார்ந்த குர்கிரெத் என்ற பத்து வயதுச் சிறுவன், ஏழை ஒருவரின்
மருத்துவச் செலவிற்காக ரூபாய் முப்பதாயிரம் நன்கொடை
வழங்கியிருக்கின்றான். இவ்வளவு பெரிய தொகை இவனுக்கு எப்படிக்
கிடைத்தது என்ற கேள்வி எழலாம். இவனுடைய பெற்றோர் இவனுடைய
செலவுக்காகக் கொடுத்த பணத்தை இவன் சிறுகச் சிறுகச் சேமித்து
வைத்தான். அதிலிருந்துதான் இவன் ஏழை ஒருவருடைய மருத்துவச்
செலவிற்கு உதவியிருக்கின்றான். தற்பொழுது ஆஸ்திரேலியாவில்
படித்து வரும் இச்சிறுவன், நாம் வறியவர்களுக்கு உதவி
செய்வதற்கு வயதோ, குடும்பச் சூழ்நிலையோ ஒரு பொருட்டல்ல என்பதை
எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது.
ஆகையால், நாம் எந்த நிலையில் இருந்தாலும் வறியோருக்கு உதவி
செய்து, அவர்களின் தேவைகளை நிறைவு செய்யவேண்டும். அப்பொழுது
நாம் உலகிற்கு உப்பாக, ஒளியாக இருக்க முடியும் என்பது உறுதி.
சிந்தனை
"நன்மை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்; ஒடுக்கப்பட்டோருக்கு உதவி
செய்யுங்கள்" (எசா 1:17) என்பார் இறைவாக்கினர் எசாயா. ஆகையால்,
நாம் எல்லா மக்களுக்கும் நன்மை செய்து, உலகிற்கு ஒளியாக,
உப்பாக விளங்குவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
|
|