Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                    Year C  
                                           தவக்காலம் ஐந்தாம் வாரம் ஞாயிறு
     
=================================================================================
முதல் வாசகம்

=================================================================================
இதோ நாம் புதியன செய்கிறோம். நம் மக்களின் தாகம் தீர்ப்போம்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 43: 16-21

கடலுக்குள் வழியை ஏற்படுத்தியவரும், பொங்கியெழும் நீர் நடுவே பாதை அமைத்தவரும், தேர்களையும், குதிரைகளையும், படைவீரரையும், வலிமைமிக்கோரையும் ஒன்றாகக் கூட்டி வந்தவரும், அவர்கள் எழாதவாறு விழச்செய்து, திரிகளை அணைப்பதுபோல் அவர்களை அழித்தவருமாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: முன்பு நடந்தவற்றை மறந்துவிடுங்கள்; முற்கால நிகழ்ச்சி பற்றிச் சிந்திக்காதிருங்கள்; இதோ புதுச்செயல் ஒன்றை நான் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றிவிட்டது; நீ அதைக் கூர்ந்து கவனிக்கவில்லையா? பாலைநிலத்தில் நான் பாதை ஒன்று அமைப்பேன்; பாழ்வெளியில் நீரோடைகளைத் தோன்றச் செய்வேன்.

காட்டு விலங்குகளும் என்னைப் புகழும்; குள்ள நரிகளும், தீக்கோழிகளும் என்னைப் பெருமைப்படுத்தும்; ஏனெனில், தேர்ந்தெடுக்கப்பட்ட என் மக்களுக்குப் பாலைநிலத்தில் குடிக்கக் கொடுப்பேன்; பாழ்நிலத்தில் நீரோடைகள் தோன்றச் செய்வேன். எனக்கென்று நான் உருவாக்கிய இந்த மக்கள் என் புகழை எடுத்துரைப்பர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா: 126: 1-2ab. 2cd-3. 4-5. 6 (பல்லவி: 3) Mp3
=================================================================================
 பல்லவி: ஆண்டவர் மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் பெருமகிழ்வடைகின்றோம்.

1 சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம். 2யb அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது. பல்லவி

2உன "ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்" என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். 3 ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். பல்லவி

4 ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும். 5 கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். பல்லவி

6 விதை எடுத்துச் செல்லும்போது - செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது - வரும்போது - அக்களிப்போடு வருவார்கள். பல்லவி


================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
 கிறிஸ்துவின் பொருட்டு நான் அனைத்தையும் இழந்துவிட்டேன்; சாவில் அவரை ஒத்திருக்கவும் விரும்புகிறேன்.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 8-14

சகோதரர் சகோதரிகளே, உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப்பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்ற செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்துவிட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன்.

கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத்தான் நான் இவ்வாறு கருதுகிறேன். திருச்சட்டத்தின் அடிப்படையில் நான் கடவுளுக்கு ஏற்புடையவன் ஆக இயலாது. கிறிஸ்துவின்மீது கொண்டுள்ள நம்பிக்கையால்தான் அவருக்கு நான் ஏற்புடையவன் ஆகமுடியும். இந்த ஏற்புடைமை கடவுளிடமிருந்து வருவது; நம் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது.

கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறியவும் அவருடைய துன்பங்களில் பங்கேற்று, சாவில் அவரை ஒத்திருக்கவும் விரும்புகிறேன். அப்பொழுதுதான் நானும் இறந்தோருடன் உயிர்த்தெழ இயலும்.

நான் இவற்றை ஏற்கெனவே அடைந்துவிட்டேன் என்றோ, நிறைவு எய்திவிட்டேன் என்றோ சொல்வதற்கில்லை.

கிறிஸ்து இயேசு என்னை ஆட்கொண்டதற்கான நோக்கம் நிறைவேறுவதற்காகத் தொடர்ந்து ஓடுகிறேன். அன்பர்களே, இந்நோக்கம் நிறைவேறிவிட்டது என நான் எண்ணவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் செய்கிறேன். கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதைக் கண்முன் கொண்டு, பரிசு பெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன். கிறிஸ்து இயேசுவின்மூலம் கடவுள் எனக்கு மேலிருந்து விடுக்கும் அழைப்பே அப்பரிசாகும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவே 2: 12-13

இப்பொழுதாவது உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள். ஏனெனில் நான் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர், என்கிறார் ஆண்டவர்.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-11

அக்காலத்தில் இயேசு ஒலிவ மலைக்குச் சென்றார். பொழுது விடிந்ததும் அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது மக்கள் அனைவரும் அவரிடம் வந்தனர். அவரும் அங்கு அமர்ந்து அவர்களுக்குக் கற்பித்தார்.

மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு வந்து நடுவில் நிறுத்தி, "போதகரே, இப்பெண் விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிபட்டவள். இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டத்திலுள்ள கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்?" என்று கேட்டனர். அவர்மேல் குற்றம் சுமத்த ஏதாவது வேண்டும் என்பதற்காக அவர்கள் இவ்வாறு கேட்டுச் சோதித்தார்கள்.

இயேசு குனிந்து விரலால் தரையில் எழுதிக்கொண்டிருந்தார்.

ஆனால் அவர்கள் அவரை விடாமல் கேட்டுக்கொண்டிருந்ததால், அவர் நிமிர்ந்து பார்த்து, "உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்" என்று அவர்களிடம் கூறினார்.

மீண்டும் குனிந்து தரையில் எழுதிக்கொண்டிருந்தார். அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக அவர்கள் யாவரும் அங்கிருந்து சென்றுவிட்டார்கள்.

இறுதியாக இயேசு மட்டுமே அங்கு இருந்தார். அப்பெண்ணும் அங்கேயே நின்றுகொண்டிருந்தார்.

இயேசு நிமிர்ந்து பார்த்து, "அம்மா, அவர்கள் எங்கே? நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?" என்று கேட்டார்.

அவர், "இல்லை, ஐயா" என்றார்.

இயேசு அவரிடம், "நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்" என்றார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
தீர்ப்பிடாது வாழ்வோம் - 03ம் ஆண்டு

ஓர் ஊரில் ஞானி ஒருவர் இருந்தார். ஒருநாள் அவரிடத்தில் ஒருவன் வந்து, "குருவே என்னுடைய பாவங்களை எல்லாம் மன்னித்தருள்க" என்று கெஞ்சிக் கேட்டான். அதற்கு அவர், "முதலில் நீ என்ன பாவம் செய்தாய் என்று சொல், அதன்பிறகு அது மன்னிக்கக்கூடிய குற்றமா? இல்லையா? என்று சொல்கிறேன்" என்றார். அவன், "ஐயா! நான் இந்த ஊரில் இருக்கக்கூடிய எல்லா மனிதர்களைப் பற்றியும் தீர்ப்பிட்டுக் கொண்டும், அவதூறு பேசிக்கொண்டும் இருப்பேன். இதுதான் நான் செய்த மிகப்பெரிய பாவம்" என்றான்.


எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டுவிட்டு குரு அவனிடம், "முதலில் நீ போய் உன்னுடைய வீட்டில் இருக்கக்கூடிய தலையணையை எடுத்துக்கொண்டுவந்து, அதிலுள்ள பஞ்சை எல்லாம் தெருவில் வைத்து, காற்றில் பறக்கவிட வேண்டும். அதன் பின்னர் வந்து என்னைப் பார்" என்றார். அவனும் தன்னுடைய வீட்டிற்குச் சென்று தலையணை எடுத்துவந்து, அதிலுள்ள பஞ்சை எல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, குருவிடம் திரும்பி வந்தான்.


"குருவே! நீங்கள் சொன்னது போன்று நான் எல்லாவற்றையும் செய்துவிட்டேன், இப்போது என்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டதுதானே!" என்றான். அதற்கு அவர், "பஞ்சைக் காற்றில் பறக்கவிட்டால் உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று யார் சொன்னது?. இப்போது மீண்டுமாக நீ போய், காற்றில் பரந்த பஞ்சை எல்லாம் சேகரித்துக்கொண்டு வா" என்றார். அவனும் போய் காற்றில் பரந்த பஞ்சை திரும்ப சேகரிக்கச் தொடங்கினான். அவனால் எல்லாற்றையும் சேகரிக்க முடியவில்லை. அது அவனுக்குக் கடினமாக இருந்தது. இதனால் அவன் வருத்தத்தோடு திரும்பிவந்து, குருவிடம் தன்னுடைய தோல்வியை ஒத்துக்கொண்டான்.


அப்போது ஞானி அவனிடம், "காற்றில் பரந்த பஞ்சை மீண்டுமாக சேகரிப்பது கஷ்டம்தானே, அதுபோன்றுதான் இதுவரைக்கும் நீ பரப்பிய அவதூறுகளை, தவறான தீர்ப்பிடல்களைத் திரும்பப் பெறவதும். ஆதலால் உன்னுடைய குற்றங்களை மன்னிக்கவே முடியாது" என்று சொல்லி அங்கிருந்து அவனை திரும்பிப் போகச் சொன்னார். ஒருவரைப் பற்றி நாம் பரப்பும் அவதூறு, தவறான தீர்ப்பிடல்கள் எல்லாம் எந்தளவுக்கு கொடியது என்பதால்தான், அப்படிப்பட்ட குற்றம் மன்னிக்க முடியாது என்றார் அவர்.


தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் நமக்கு இன்றைய நாள் வாசகங்கள் "தீர்ப்பிடாது வாழவோம்" என்றதொரு அழைப்பைத் தருகிறது. இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசுவை எப்படியாவது சிக்கலில் மாட்டிவிட வேண்டும் என்பதற்காக பாவத்தில் பிடிப்பட்ட பெண் ஒருவரை மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்கள் அவரிடம் கொண்டுவருகிறார்கள். ஆனால் இயேசு அவர்களின் தீய எண்ணத்தை அறிந்துகொண்டு "உங்களில் பாவம் செய்யாதவர் இப்பெண்ணின் மீது முதலில் கல் எறியட்டும்" என்று சொல்கிறார். உடனே சிறுவர் தொடங்கி, பெரியவர் வரை யாவருமே அவ்விடத்திலிருந்து களைந்துபோய்விடுகின்றனர். அதன்பிறகு இயேசு அப்பெண்ணைப் பார்த்து, "நானும் உன்னைத் தீர்ப்பிடேன், இனிமேல் பாவம் செய்யாதீர்" என்று சொல்லி அனுப்புகிறார்.


இங்கே ஒருவரைப் பற்றித் தீர்ப்பிட, கடவுளைத் தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை என்று ஆண்டவர் இயேசு மிகத்தெளிவாக எடுத்துரைக்கிறார். மனிதர்களாகிய நாம் ஒருவரைப் பற்றிய முழுமையாகத் தெரியாமலே தீர்ப்பிடுகிறோம். இன்னும் சில நேரங்களில் நம்முடைய தவறை மறைப்பதற்காக பிறரைத் தீர்ப்பிடுகிறோம். பிறருடைய தவறைப் பெரிதுபடுத்துகிறோம். அதனால் ஆண்டவர் இயேசு கூறுகிறார், "பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள், அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்" என்று (மத் 7:1). இயேசு தொடர்ந்து சொல்வார், "உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்?" என்று.


ஆதலால் பிறரைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கும் முன்னால் நாம் தீர்ப்பளிக்கத் தகுதியானவர்கள்தானா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். விபசாரித்தில் பிடிபட்ட பெண்ணை ஆண்டவர் இயேசு தீர்ப்பிட்டிருக்கலாம். ஏனென்றால் அவர் பாவமற்றவர். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. மாறாக அப்பெண்மணியை, அவளுடைய பாவங்களை மன்னித்து, இனிமேல் பாவம் செய்யாதே" என்று சொல்லி அனுப்பிக்கிறார்.

ஆம், தீயோர் அழிவுற வேண்டும், கெட்டு மடியவேண்டும் என்பதல்ல, மாறாக அவர்கள் மனம்மாற வேண்டும் என்பதுதான் கடவுளின் மேலான விரும்பாக இருக்கிறது. இதைதான் நாம் விவிலியத்தின் பல இடங்களில் குறிப்பாக எசேக்கியல் 33:11 ல் வாசிக்கின்றோம்.

நம் கடவுள் நமது அழிவில் மகிழ்கின்ற கடவுள் அல்ல, மாறாக நாம் அனைவரும் வாழவேண்டும் என்று விரும்புகின்ற கடவுள்.

நமது அண்டை மாநிலமான கேரளாவில் நாத்திக அலை பரவியிருந்த நேரம் அது. அப்போது ஓரிடத்தில் சமய பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. சமய சொற்பொழிவு நன்றாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில் திடிரென்று கூட்டத்திலிருந்து எழுந்த ஒருவன், "கடவுள் என்பது ஒரு கற்பனை, கடவுள் என்று ஒருவர் இந்த உலகத்தில் இல்லவே இல்லை. கடவுளை நம்புகிறவன் முட்டாள். ஒருவேளை கடவுள் இந்த உலகில் இருக்கிறார் என்று சொன்னால், அவர் என்னை மூன்று நிமிடத்திற்குள் அடித்துக் கொல்லட்டும்" என்று திரண்டிருந்த கூட்டத்தினர் முன்பாகச் சவால் விட்டான். இதைப் பார்த்து மக்கள் வியப்படைந்தனர்.

ஒரு நிமிடம் ஆனது, இரண்டு நிமிடம் ஆனது, மூன்று நிமிடமும் ஆனது. ஆனால் அவன் அப்படியே உயிரோடு இருந்தான். உடனே அவன் மக்கள் கூட்டத்தைப் பார்த்து, "பார்த்தீர்களா! கடவுள் இல்லை என்பது இப்போது நிரூபணம் ஆகிவிட்டது. கடவுள் ஒருவேளை இருந்திருந்தால் நான் இந்நேரம் இறந்திருப்பேனே!" என்று கூட்டத்தைப் பார்த்து ஏளனமாகப் சிரித்தான். மக்களும் அவனுடைய பேச்சை நம்ப ஆரம்பித்தார்கள். இதனால் கூட்டத்தில் மிகப்பெரிய குழப்பமே ஏற்பட்டது

அப்போது அங்கே இருந்த இட்டிவரா என்ற சாது மக்கள் கூட்டத்தைப் பார்த்து, "கடவுள் தந்தையும், தாயுமானார். இன்னும் சொல்லப்போனால் நம் தந்தை தாயைவிட நம்மீது மேலான அன்புகொண்டிருப்பவர், அப்படிப்பட்ட கடவுள் நாம் அழிவுறவேண்டும் என்று விரும்புவாரா?. ஒருபோதும் இல்லை. கடவுள் நம்மைக் காப்பாவரே அன்றி, அழிப்பவர் அல்ல" என்று முடித்தார்.

திரண்டிருந்த மக்கள்கூட்டம் இதைக் கேட்டு கடவுள் உண்மையிலே இருக்கிறார் என்று நம்பத் தொடங்கினார்கள்.

ஆம், நம் கடவுள் நாம் அழிவுறவேண்டும் என்று அல்ல, மாறாக வாழவேன்றும் என்று விரும்புகிறார். அதனால் இயேசு விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை பாவி என்று தீர்ப்பிடாமல், அவளை மனதார மன்னித்து, அவள் புதிய ஒரு வாழ்க்கை வாழ வழிவகுக்கின்றார்.

இன்றைய நாள் வாசகங்கள் நமக்குத் தரும் அடுத்த சிந்தனை. நாம் நமது கடந்தகால வாழ்வை மறந்துவிட்டு, புதியதொரு வாழ்க்கை வாழவேண்டும் என்பதுதான். எசாயாப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகத்தில் கூறுகிறார், "முன்பு நடந்தவற்றை மறந்துவிடுங்கள்; முற்கால நிகழ்ச்சி பற்றிச் சிந்திக்காதீர்கள்; இதோ புதுச்செயல் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றிவிட்டது" என்று கூறுகிறார். இன்றைய இரண்டாம் வாசகத்திலும்கூட பவுல் பிலிப்பியருக்கு எழுதுகிறபோது கூறுகிறார், "கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதை கண்முன் கொண்டு, பரிசு பெறவேண்டிய இலக்கை நோக்கி தொடர்ந்து ஓடுகிறேன்" என்று.

ஆகையால் இந்த தவக்காலத்தில் நமது கடந்தகால - பாவமான வாழ்வை -முற்றிலுமாக மறந்துவிடுவோம்.  புதியதொரு வாழ்க்கை வாழ முயற்சி எடுப்போம். ஏனென்றால் கடவுள் நம் குற்றங்கள் அனைத்தையும் மன்னித்துவிட்டார், நம்மை தூய, மாசற்றவர்களாக மாற்றிவிட்டார்.

முதல் உலகப்போரின்போது இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருந்தவர் லீயோட் ஜார்ஜ் என்பவர். ஒருநாள் அவர் தன்னுடைய நண்பரோடு வீட்டுக்குப் பின்பக்கம் இருக்கக்கூடிய கோல்ப் மைதானத்தில் கோல்ப் ஆடிவிட்டு, புல்வெளி மைதானத்தின் கதவைக் கடந்துவந்தார். அவருக்குப் பின்னால் வந்த நண்பர்  கதவை மூடாமலே விட்டுவிட்டார்.

அதைக் கவனித்த பிரதமர், திரும்பி வந்து கதவை அடைத்துவிட்டு, "கதவைக் கடந்து வந்துவிட்டால், அதை அடைத்துவிடுவது எனது பழக்கம்" என்று சொல்லிவிட்டுச் சொன்னார், "உங்களுக்கு  மனநிம்மதி வேண்டுமெனில் உங்களுக்குப் பின்னால் உள்ள கதவை மூடிவிடுங்கள்; உங்களது கவலைகளை அங்கேயே விட்டுவிடுங்கள்; கடந்ததைத் தொடாதீர்கள்; நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும்" என்று சொல்லி முடித்தார்.

ஆம், நாம் ஒவ்வொருவரும் நமது கடந்த கால வாழ்க்கையை மறந்துவிட்டு, புதியதொரு வாழ்க்கை வாழ முயற்சி எடுப்போம். அதுவே இந்தத் தவக்காலத்தில் இறைவன் தரும் அழைப்பு.

"கடந்த காலம் என்பது கனவு; எதிகாலம் என்பது கற்பனை; இன்று நன்றாக வாழ்ந்தால் ஒவ்வொரு கடந்த நாளும் சந்தோசக் கனவாகும், நாளைய நம்பிக்கையை கற்பனையாக்கும். இன்றைய நாளை மட்டும் பாருங்கள், இன்று மட்டுமே வாழுங்கள்" என்பார் காளிதாசர் என்ற மகான். ஆண்டவர் இயேசுகூட நாளைக்காக கவலைப்படாதீர். ஏனெனில் நாளைய வழி பிறக்கும்" என்று இந்த நாளில் வாழச் சொல்வார் (மத் 6:34).

ஆகவே இந்த தவக்காலத்தில் நாம் நமது கடந்த கால வாழ்வை மறப்போம். புதியதொரு வாழ்க்கை வாழ முயற்சிப்போம். குறிப்பாக பிறரைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பிடும் மனநிலையிலிருந்து மனம் மாறுவோம். இறைவனின் அளவு கடந்த அன்பை உணர்ந்து, இறைவழியில் நடப்போம். இறையருளை நாமும் நிறைவாய் பெறுவோம்.


எனவே தீர்ப்பிடாது வாழ்வோம். இறைவன் தரும் அருளை நிறைவாய் பெறுவோம்.


மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 (எசாயா 43: 16-21; பிலிப்பியர் 3: 8-14; யோவான் 8: 1-11)

தீயோர் அழிந்துபோகவேண்டும் என்றல்ல, மனம்மாறி வாழவேண்டும் என்று விரும்பும் இறைவன்

நிகழ்வு

இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் தன்னுடைய நண்பர்களோடு சேர்ந்துகொண்டு செய்யாத தவறுகள் கிடையாது. புலால் உண்டான். வேசைகளின் வீட்டிற்குச் சென்றான். தவிர, தன்னுடைய சகோதருடைய தங்கப் காப்பினைத் திருடி அதன்மூலம் பல தீய பழக்கவழக்கங்களில் ஈடுபட்டான். இப்படிப்பட்ட அந்த இளைஞன் ஒருநாள் தன்னுடைய தவறை உணர்ந்து, திருந்தி நடக்க விரும்பினான். அதற்கு முன்னதாக கடந்த காலத்தில் தான் செய்த குற்றங்களையெல்லாம் தனது தந்தையிடம் எடுத்துக் சொல்லி மன்னிப்புக் கேட்க விரும்பினான். ஆனால், தந்தை என்ன நினைப்பாரோ என்று நினைத்துப் பயந்தான். எனவே, அவன் தான் செய்த குற்றங்களையெல்லாம் ஒரு வெள்ளைக் காகிதத்தில் எழுதி, அதைத் தந்தையிடம் கொடுத்தான்.

அந்த இளைஞனின் தந்தையோ படுக்கையில் முடியாமல் கிடந்தார். தான் கொடுத்த கடிதத்தைப் படித்துப் பார்த்துப் பார்த்துவிட்டு, தந்தை 'தன்னுடைய தோலை உரித்துத் தொங்கவிடப் போறாரோ அல்லது வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்க்கப்போறாரோ' என்று பயந்துகொண்டே இருந்தான். தந்தை அவன் கொடுத்த கடிதத்தைப் படித்துப் பார்த்துவிட்டு, கண்ணீரால் அந்தக் கடித்ததை நினைத்தார். பின்னர் அந்தக் கடிதத்தைக் கிழித்துக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, தன் மகனை அணைத்துகொண்டு, "என் மகனே! எப்பொழுது நீ உன்னுடைய குற்றத்தை உணர்ந்துவிட்டாயோ, அப்பொழுதே நான் உன்னை மனதார மன்னித்துவிட்டேன்... இனிமேலாவது நல்ல மனிதனாக வாழ்" என்றார்.

இப்படி, தான் செய்த தவறுக்குத் தந்தையிடம் மன்னிப்புக் கேட்டு, நல்ல மனிதராக வாழத் தொடங்கியவர்தான், பின்னாளில் நம்முடைய நாட்டிற்காக ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலையை வாங்கித்தந்த காந்தியடிகள் அவர்கள். காந்தியடிகளின்மீது அவருடைய தந்தை காட்டிய பேரன்பு அவரைப் புதிய மனிதராக மாற்றியது. நற்செய்தியியிலோ இயேசு ஒரு பெண்ணிடம் காட்டிய பேரன்பு அவரைப் புதிய பெண்ணாக மாற்றிக்காட்டுகின்றது. இயேசு அப்பெண்ணிடம் கொண்ட அன்பு எத்தகையது, அது அவரை எப்படிப்பட்ட பெண்ணாக மாற்றுகின்றது என்று சிந்தித்துப் பார்ப்போம்.

'பெண்' அழிந்துபோகவேண்டும் என்று விரும்பிய பரிசேயக்கூட்டம்

நற்செய்தியில் இயேசு எருசலேம் திருகோவிலில் மக்களுக்குப் போதித்துக் கொண்டிருக்கும்பொழுது, அவரிடம் ஒரு பெண்ணை இழுத்துக்கொண்டு வந்த பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள், "இப்பெண் பரத்தமையில் கையும் மெய்யுமாகப் பிடிபட்டவள். இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்துகொள்ளவேண்டும் என்பது மோசேயின் சட்டம். நீர் என்ன சொல்கிறீர்?" என்று கேட்கிறார்கள்.

முதலில் பரத்தமை அல்லது விபச்சாரத்தில் பிடிபட்டவர்களுக்கு மோசே என்ன தண்டனை கொடுக்கவேண்டும் என்று கூறியிருக்கின்றார் என்று தெரிந்துகொண்டால்தான் பரிசேயர்களின் தீய எண்ணத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும். "அடுத்திருப்பவன் மனைவியோடு உடலுறவு கொள்பவனும் அந்தப் பெண்ணும் கொலை செய்யப்படவேண்டும்" (லேவி 20:10 ; இச 22:22) இதுதான் பரத்தமையில் ஈடுபடுவோருக்கு மோசே கொடுக்கச் சொன்ன தண்டனை. ஆனால், இயேசுவிடம் வருகின்ற பரிசேயக்கூட்டமோ, அந்தப் பெண்ணோடு தவறு செய்த ஆணைவிட்டுவிட்டு, பெண்ணை மட்டும் 'விலைமகள்' என்று முத்திரை குத்தி இயேசுவிடம் இழுத்துக்கொண்டு வருகின்றார்கள். இதிலிருந்தே அவர்கள் எவ்வளவு தந்திரமாகச் செயல்படுகின்றார்கள் என்பது புரியும்.

மேலும் பரிசேயக்கூட்டம், விபச்சாரத்தில் ஈடுபட்ட அந்தப் பெண்ணுக்குத் தண்டனை வாங்கித் தந்துவிடவேண்டும் என்று செயல்பட்டதை விடவும், இயேசுவை எப்படியும் சிக்கலில் மாட்டிவிடவேண்டும் என்று மிகத் துரிதமாகச் செயல்பட்டது. அதனால்தால் அவர்கள், "நீர் என்ன சொல்கிறீர்?" என்கின்றார்கள். இயேசு, அப்பெண்ணைக் கல்லால் எறிந்து கொள்ளவேண்டும் என்றால், இயேசு பாவிகளின் நண்பன், அவர் அவர்களை அரவணைக்கின்றவர் என்பது பொய்யாகிவிடும். மறுபக்கம், இயேசு அப்பெண்ணைக் கல்லால் எறிந்து கொள்ளவேண்டும் என்று சொன்னால், மோசேயின் சட்டத்திற்கு எதிராக ஏற்கனவே செயல்பட்டவர் (5: 39-47; 6:32; 7:40) இப்பொழுது மீண்டுமாகச் செயல்படுகின்றார் என்று மக்களை அவருக்கு எதிராகத் திரும்பிமுடியும். இப்படிப்பட்ட நிலையில் இயேசு ஞானத்தோடு செயல்பட்டு, அவர்களின் தந்திரத்தை முறியடிக்கின்றார்.

பெண் வாழவேண்டும் என்று விரும்பிய இயேசு

பரிசேயர்கள் கேட்ட கேள்விக்கு எப்படிப் பதில் சொன்னாலும் பிரச்சினைதான் என்பதை நன்குணர்ந்த இயேசு, அவர்களிடம் எதுவும் பேசாமல் குனிந்து விரலால் தரையில் எழுதிக்கொண்டிருக்கின்றார். இயேசு தரையில் தன் விரலால் எழுதுவது, ஆண்டவராகிய கடவுள் சீனாய் மலையில் தன் விரலால் எழுதிய உடன்படிக்கைப் பலகையை மோசேக்குத் தந்ததையும் (விப 31:18) இறைவாக்கினர் எரேமியா, "உம்மைவிட்டு அகன்றோர் தரையில் எழுதப்பட்டோர் ஆவர்" (எரே 17:13) என்று சொன்னதையும் நினைவுபடுத்துவதாக இருக்கின்றது. இந்த இரண்டு பகுதிகளையும் இணைத்துச் சிந்தித்துப் பார்க்கும்பொழுது, "கட்டளைகளைக் கொடுத்த இறைவனாகிய நான் சொல்கிறேன், பொல்லாத நீங்கள் அப்பெண்ணை எதுவும் செய்யாமல் செய்யாதீர்கள்" என்று இயேசு சொல்வது போன்று இருக்கின்றது. அதனால்தான் அவர், "உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்" என்கின்றார். இயேசு இவ்வாறு சொன்னதைக் கேட்டு, முதியவர் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக அவ்விடத்தை விட்டு நகர்ந்து செல்கின்றார்கள். அப்பொழுது இயேசு அப்பெண்ணிடம், "இனிப் பாவம் செய்யாதீர்" என்று சொல்லி, அப்பெண் புதிய வாழ்வை வாழ வழிவகுக்கின்றார்.

பரிசேயக்கூட்டம் அந்தப் பெண் அழிந்துபோகவேண்டும் என்று விரும்பியபோது, இயேசுவோ அப்பெண் மனம்மாறி வாழவேண்டும் என்று விரும்பியது நமது சிந்தனைக்குரியதாக இருக்கின்றது.

நாம் பரிசேயர்களைப் போன்றவர்களா? இயேசுவைப் போன்றவர்களா?

விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை பரிசேயக் கூட்டமும் இயேசுவும் இருவேறு விதமான அணுகிறார்கள். அந்தப் பெண் அழிந்துபோக வேண்டும் என்று பரிசேயர்கள் விரும்பியபோது, இயேசு, அப்பெண் வாழ்வேண்டும் என்று விரும்புகின்றார். இந்த இருவரில் நாம் யார் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்

இந்த உலகத்தில் தவறு செய்யாத மனிதர்கள் யாரும் இல்லை. அப்படித் தவறுசெய்தவர்களை இயேசுவைப் போன்று மன்னித்து ஏற்றுக்கொள்கின்றபோதுதான் தவறுசெய்தவர் தன்னுடைய தவற்றை உணர்ந்து திருந்தி நடப்பதற்கான வாய்ப்பிருக்கின்றது. அப்படி இல்லாமல், தவறுசெய்தவர் தண்டக்கப்படவேண்டும் என்ற மனநிலையோடு செயல்பட்டால் இந்த உலகத்தில் யாரும் மிஞ்சமாட்டார்கள் என்பதுதான் உண்மை.

தாமஸ் ஆல்வா எடிசன் பல போராட்டங்களுக்குப் பிறகு மின்விளக்கை கண்டுபிடித்து, அதைத் தன்னுடைய நெருங்கிய நண்பர்களுக்குக் காட்டுவதற்கும் அதைப் பற்றி விளக்கமளிப்பதற்கும் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நாளில், எடிசன் தனது உதவியாளரிடம், கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்திருந்த மின்விளக்கைக் கூட்டம் நடைபெறும் இடத்தில் கொண்டுசென்று வைக்கச் சொன்னார். அவரோ தவறுதலாக அதை உடைத்துவிட, எல்லாரும் அதிர்ந்துபோனார்கள். ஆனால் எடிசன் எந்தவொரு பதற்றமும் அடையாமல், மீண்டுமாக ஆய்வுக்கூட்டத்திற்குச் சென்று, வேக வேகமாக மின்விளக்கைத் தயாரித்து, அதைத் தன் உதவியாளரிடமே கொடுத்து, கூட்டம் நடைபெறவிருந்த இடத்தில் வைக்கச் சொன்னார்.

இதைப் பார்த்துவிட்டு எடிசனின் நண்பர்கள், "கடந்தமுறைதான் அவர் மின்விளக்கை உடைத்தாரே.... மீண்டுமாக எதற்கு அவரிடமே கொடுத்து அனுப்புகிறீர்கள்?" என்று கேட்டதற்கு அவர், "மின்விளக்கு உடைந்து போனால் மீண்டுமாகத் தயாரித்துவிட முடியும், அவருடைய மனது உடைந்துபோனால் எப்படித் தயாரிப்பது?... கடந்தமுறை தெரியாமல் உடைத்தவருக்குத் தெரியும், இந்தமுறை அதை எப்படிக் கொண்டுசெல்லவேண்டும் என்று. அதனால்தான் நான் அவரிடமே மின்விளக்கைக் கொடுத்தனுப்பினேன்" என்றார். எவ்வளவு அருமையான வார்த்தைகள் இவை.

மன்னிக்கும் மனமிருந்தால் இதயநோய் வருவதில்லை என்கிறது அமெரிக்காவின் கலிபோர்னியா பேராசிரியர் பிரிட்டோ லார்சனின் ஆராய்ச்சி முடிவு. ஆகவே, நாம் தவறு செய்தவர்களை இயேசுவைப் போன்று மன்னித்து, நாமும் நம்மால் மன்னிக்கப்பட்டவர்களும் நலம் பெறுவதற்கு வழி வகுப்போம்.

சிந்தனை

'இறைவன், யாரும் அழிந்துபோகாமல் எல்லாரும் மனம் மாறவேண்டுமென (அதனால் வாழ்வு பெற) விரும்புகிறார்' என்பார் தூய பேதுரு (2 பேதுரு 3:9). ஆகவே, தீயவர்கள் மனம் மாறி வாழ்வு பெற நாமும் ஒரு காரணமாக இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 தொடர்ந்து ஓடு!

தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு


எசாயா 43:16-21
 பிலிப்பியர் 3:8-14
 யோவான் 8:1-11

'ஓடிக்கொண்டே அல்லது நடந்துகொண்டே இருக்கும் நாம் ஒரு கட்டத்தில் செல்ல முடியாதவாறு சாலை அடைக்கப்பட்டிருந்தால்' அந்த இடத்தை "முட்டுச் சந்து" என்று அழைக்கிறோம். ஆங்கிலத்தில் "டெட் என்ட்." அதற்குப் பின் அங்கே பாதை இல்லை. இரண்டே வழிதான் இப்போது: ஒன்று, அங்கேயே நின்று விடுவது, அல்லது வந்த வழி திரும்புவது. அல்லது ஒருவேளை ரொம்பவும் ஆபத்தான நேரத்தில் நாம் முட்டுச் சந்தில் இருக்கிற மதிலை உடைத்து அல்லது தாண்டி அந்தப் பக்கம் தப்புவோம்.

இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் இப்படி 'டெட் என்டில்' (முட்டுச் சந்தில்) சிக்கிக்கொண்ட மூன்று பேரைப் பார்க்கிறோம்: முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள், இரண்டாம் வாசகத்தில் பவுலடியார், நற்செய்தி வாசகத்தில் விபச்சாரத்தில் பிடிபட்ட பெண். இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவின் அடிமைத்தனம் என்ற வழியற்ற பாதையில் இருக்கின்றனர். பவுல் தன்னுடைய யூத முதன்மைகள் என்னும் வழியற்ற பாதையில் இருக்கின்றார். விபச்சாரத்தில் பிடிபட்ட பெண் கல்லால் அடிபட்டு மரணம் என்ற வழியற்ற பாதையில் இருக்கின்றார். இவர்கள் மூவருக்கும் இரண்டு தீர்வுகள்: ஒன்று. இருக்குமிடத்திலேயே இருப்பது. இரண்டு, வந்த பாதை திரும்புவது. ஆனால், இந்த இரண்டு தீர்வுகளையும் தாண்டி மூன்றாவது ஒரு தீர்வைத் தருகின்றார் இறைவன்: அதுதான், 'தொடர்ந்து ஓடு!' என்பது. 'தொடர்ந்து ஓடு!' என்ற சொன்ன இறைவன், சொன்னதோடு அல்லாமல், புதிய பாதையை ஏற்படுத்திக் கொடுத்து இந்த மூவரும் தொடர்ந்து பயணிக்க வழிசெய்கின்றார். ஆக, இறைவனைப் பொறுத்தவரையில் 'என்ட்' என்பது ஒரு 'பென்ட்' மட்டுமே என்று நமக்கு ஒரே வரியில் அறிவுறுத்துகிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

முதல் வாசகத்தில் (காண். எசா 43:16-21) பாபிலோனியாவில் அடிமைப்பட்டுக்கிடந்த இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கினர் எசாயா வழியாக ஆறுதலின் செய்தியைத் தருகின்றார் ஆண்டவராகிய கடவுள். கடவுள் இஸ்ரயேலருக்குத் தான் செய்த அரும்பெரும் செயல்களை முதலில் நினைவுறுத்துகின்றார்: 'கடலுக்குள் வழியை அமைத்தவரும், பொங்கியெழும் நீர் நடுவே பாதை அமைத்தவரும், தேர்களையும், குதிரைகளையும், படைவீரரையும், வலிமைமிக்கோரையும் ஒன்றாகக் கூட்டி வந்தவரும், அவர்கள் எழாதவாறு விழச் செய்து, திரிகளை அணைப்பதுபோல அணைத்தவருமான ஆண்டவர்' - இவ்வாறாக, அவர்களின் செங்கடலைக் கடத்தல் நிகழ்வில் அவர் செய்த அரும்பெரும் செயல்களைப் பட்டியலிடுகின்றார் இறைவன். விடுதலைப் பயண நூல் 14ல் நாம் இந்நிகழ்வை வாசிக்கின்றோம். முன்னால் கடல், பின்னால் எகிப்தியர், எந்தப் பக்கம் சென்றாலும் மரணம் என்று அவர்கள் பாதை மூடிக்கிடந்த வேளையில், கடலில் பாதையை உருவாக்குகின்றார் கடவுள். 'அஞ்சாதீர்கள்! நிலைகுலையாதீர்கள்! இன்று ஆண்டவர்தாமே உங்களுக்காக ஆற்றும் விடுதலைப் செயலைப் பாருங்கள். இன்று நீங்கள் காணும் எகிப்தியரை இனிமேல் என்றும் காணப்போவதில்லை. ஆண்டவரே உங்களுக்காகப் போரிடுவார். நீங்கள் சும்மா இருங்கள்!' (விப 14:13-14) என்கிறார் ஆண்டவராகிய கடவுள். இங்கே தண்ணீர் இஸ்ரயேல் மக்களுக்கு வாழ்வாகவும், எகிப்தியருக்கு அழிவாகவும் மாறுகின்றது. பழையதை நினைவுபடுத்தும் கடவுள், உடனே, 'முன்பு நடந்தவற்றை மறந்துவிடுங்கள். முற்கால நிகழ்ச்சி பற்றி சிந்திக்காதிருங்கள். இதோ! புதுச்செயல் ஒன்றைச் செய்கிறேன்' என்கிறார். முற்காலத்தை நினைவுபடுத்தும் கடவுள் ஏன் முற்காலத்தை மறக்கச் சொல்கின்றார். இங்கே முற்காலம் என்பது 'செங்கடல் நிகழ்வையும்' குறிக்கலாம். 'பாபிலோனிய அடிமைத்தன நிகழ்வையும்' குறிக்கலாம். இரண்டாவதைக் குறிப்பதாக நாம் எடுத்துக்கொள்வோம். அடிமைத்தனத்தில் இருந்த மக்கள் தாங்கள் அந்த நிலைக்கு அழைத்து வரப்பட்டதன் வடு மிகவும் ஆழமாகவே இருந்தது. அதை நினைத்துக்கொண்டிருந்த அவர்கள் தங்கள் வாழ்க்கை முடிந்துவிட்டதாகவும், கடவுளால்கூட ஒன்றும் செய்ய முடியாது என்றும் நினைத்துக்கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் கடவுள் 'புதுச்செயலை' வாக்களிக்கின்றார். அங்கே அழிவின் காரணியாக இருந்த தண்ணீர் இங்கே வாழ்வின் காரணியாக மாறுகிறது. தண்ணீர் என்ற உருவகத்தை வைத்து, 'பாலை நிலைத்தில் பாதையும் பாழ்வெளியில் நீரோடையும் உருவாகும்' என்றும், 'இம்மக்களுக்கு அந்நீரைக் குடிக்கக் கொடுப்பேன்' என்றும் சொல்கிறார் கடவுள்.

ஆக, பாபிலோனிய அடிமைத்தனத்தில் இருந்த மக்கள் தங்களுக்கென ஒரு இனிய கடந்த காலம் இருந்தாலும், நிகழ்காலத்தின் துன்பத்தால் எதிர்காலம் பற்றிய கலக்கத்தி;ல் இருக்கிறார்கள். இவர்களுக்கு, கடவுள் புதிய பாதையை உருவாக்கித் தருவதாக வாக்களித்து இவர்களின் பயணத்தில் இவர்கள் தொடர்ந்து ஓடுமாறு பணிக்கிறார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (பிலி 3:8-14), பவுல் வாழ்வில் நடந்த மிகப் பெரிய மாற்றத்தை வாசிக்கின்றோம். பவுல் தன்னுடைய முந்தைய வாழ்வை (காண். 3:4-6) விடுத்து புதிய வாழ்வுக்குப் பயணமாகிறார். எட்டாம் நாளில் விருத்தசேதனம் பெற்றவன், இஸ்ரயேல் இனத்தவன், பென்யமின் குலத்தவன், எபிரேயன், பரிசேயன் என்று தன்னுடைய சமய மற்றும் சமூக அடையாளங்களைக் குறித்துப் பெருமை பாராட்டும் பவுல், தொடர்ந்து, 'கிறிஸ்துவின் பொருட்டு எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன்' என்கிறார். மேலும், தன்னுடைய இலக்காக, 'கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறியவும் அவருடைய துன்பங்களில் பங்கேற்று, சாவில் அவரை ஒத்திருக்கவும் விரும்புவதை' நிர்ணயித்துக்கொள்கின்றார். இந்நோக்கம் நிறைவேற, 'கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதைக் கண்முன் கொண்டு, பரிசு பெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன்' என்கிறார் பவுல். பவுல் கொரிந்தியருக்கு எழுதிய திருமடலில், 'பந்தயத்திடலில் ஓட வந்திருப்போர் பலர் ஓடினாலும் பரிவு பெறுபவர் ஒருவரே. எனவே, பரிசு பெறுவதற்காக நீங்களும் ஓடுங்கள்' (காண். 1 கொரி 9:24) என அறிவுறுத்துகிறார்.

ஆக, தான் எல்லா அடையாளங்களையும் இழந்துவிட்டதால் பாதை அடைக்கப்பட்ட பவுல், தொடர்ந்து ஓடுவதற்குக் காரணம் அவர் முன் இருந்து கிறிஸ்துவின் வல்லமை என்னும் இலக்கு. பழைய பாதையிலிருந்து விலகுகின்ற பவுல் பதிய பாதையாம் கிறிஸ்துவில் தொடர்ந்து ஓடுகின்றார். பாதை முடிந்தது என்ற நினைத்த அவருக்குப் புதிய பாதை கிறிஸ்துவில் விடிகின்றது.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். யோவா 8:1-11) யோவான் நற்செய்தியில் மட்டுமே காணக்கிடக்கிறது. பல ஓவியர்களின் ஓவியங்களில், இயக்குநர்களின் திரைப்படங்களில் முதன்மையான இடம் பெற்றிருக்கும் 'விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணை இயேசுவிடம் கொண்டுவரும் காட்சி' (யோவா 7:53-8:11) பல விவிலியங்களில் அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும்.இந்த நற்செய்திப் பகுதி பல முக்கியமான பிரதிகளில் காணப்படவில்லை. அல்லது சில முக்கியமற்ற பிரதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. இந்த நிகழ்வை யோவான் நற்செய்தியின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்வது சிரமமாக இருந்தாலும், 'வெளித்தோற்றத்தின்படி தீர்ப்பளியாதீர்கள். நீதியோடு தீர்ப்பளியுங்கள்' (யோவா 7:24) என்ற இயேசுவின் போதனையின் விளக்கவுரையாகவும், 'நீங்கள் உலகப்போக்கின்படி தீர்ப்பு அளிக்கிறீர்கள். நான் யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை' (8:15) என்ற வார்த்தைகளின் சுருக்கமாகவும் உள்ளது இந்நிகழ்வு.

இந்நற்செய்திப் பகுதியை கதையாடல் ஆய்வு என்ற அடிப்படையில் ஐந்து உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்: (அ) தொடக்கச் சூழல் (8:1), (ஆ) இறுக்கம் (8:2-6), (இ) திருப்பம் (8:7), (ஈ) தளர்வு (8:8-11அ), மற்றும் (உ) இறுதிச் சூழல் (8:11ஆ). ஒலிவ மலையில் இரவு முழுவதும் இருந்த இயேசு பொழுது விடிந்ததும் கோவிலுக்கு வருகின்றார். ஆக, இந்நிகழ்வு நடக்கும் நேரம் அதிகாலை. இடம் கோவில். அதிகாலையில் நிகழ்வு நடப்பதால், அதற்கு முந்தைய இரவில் இந்தப் பெண் விபச்சாரம் செய்து பிடிப்பட்டிருக்கலாம். விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை இயேசுவிடம் கொண்டுவருகின்றனர் மறைநூல் அறிஞரும் பரிசேயரும். பெண் இங்கே இருக்கிறார்? கூட இருந்த ஆண் எங்கே? என்பதுதான் முதல் கேள்வி. அல்லது ஒருவேளை இந்தப் பெண் தனக்குத்தானே விபச்சாரம் செய்து கொண்டாரா? அப்படிச் செய்தால் அதன் பெயர் தன்னின்பம் தானே. அது எப்படி விபச்சாரம் ஆகும்? இரண்டாம் கேள்வி.இயேசு, 'போதகரே' என யோவான் நற்செய்தியில் இங்கு மட்டுமே அழைக்கப்படுகின்றார் (காண். மத் 8:19, மாற் 9:17, லூக் 3:12). இது இயேசுவை மரியாதையாக விளிக்கும் சொல் அல்ல இங்கு. அவரது போதனையைக் கிண்டல் செய்யும் விதமாக 'போதகரே' என அழைக்கின்றனர். 'இப்படிப்பட்டவர்களை கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்று மோசே சட்டம் சொல்கிறது.' மோசே சட்டம் சாட்சிகளோடுதான் ஒரு குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறது (காண் இச 17:6, 19:15). ஆனால் இங்கே சாட்சிகள் இல்லை. குற்றச்சாட்டு மட்டுமே இருக்கிறது. மேலும், மோசேயின் சட்டத்திலும், இயேசுவின் காலத்தில் புழக்கத்தில் இருந்த மிஷ்னாவின் சட்டத்திலும், விபச்சாரம் செய்யும் ஆண்தான் தண்டிக்கப்படுகிறார் (காண். லேவி 20:10, இச 22:22). ஆக, இங்கே வந்திருப்பவர்களின் நோக்கம் சட்டத்திற்கு கீழ்ப்படிதலின் அடிப்படையில் அல்ல. 'இயேசுவின் மேல் குற்றம் சுமத்த' அந்தப் பெண்ணைப் பயன்படுத்துகிறார்கள் இவர்கள். 'கல்லால் எறிந்து கொல்லுங்கள்' என்று இயேசு சொன்னால், இயேசு உரோமைச் சட்டத்திற்கு எதிராக செயல்படுபவராகவும், அல்லது கருணையற்ற ரபியாகவும் மாறிவிடுவார். ஏனெனில், இயேசுவின் சமகாலத்தில் கொலை தண்டனை விதிப்பது என்பது உரோமை அரசுக்கும் மட்டும் உரியது என்று இருந்தது. 'எறிந்து கொல்ல வேண்டாம்' என்று சொன்னார் அவர் மோசேயின் சட்டத்தை மீறியவராகக் கருதப்படுவார்.' இயேசு இவர்களின் கேள்வியைத் தவிர்ப்பதற்காக குனிந்து தரையில் எழுதுகின்றார். அவர் தரையில் அவர்களுடைய பாவங்களை எழுதினார் என்று சிலர் சொல்வார்கள். அதனால்தான் என்னவோ, 'பதில் சொல்லும்!' என்று அவரை அவசரப்படுத்துகின்றனர். தீர்ப்பிடுமாறு கூட்டி வந்தவர்களை இப்போது இயேசு கூண்டில் ஏற்றுகின்றார்.'உங்களில் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்!' என்று சொல்லிவிட்டு, மீண்டும் தரையில் எழுதத் தொடங்குகிறார். எல்லாரும் போகின்றனர்.இயேசுவும் அப்பெண்ணும் அங்கே நின்றுகொண்டிருக்கின்றனர். இப்போது இயேசுவே பேச்சைத் தொடங்குகின்றார். 'அம்மா, அவர்கள் எங்கே? உன்னை யாரும் தீர்ப்பிடவில்லையா?' 'இல்லை' என்கிறார் பெண். 'நானும் தீர்ப்பளிக்கவில்லை. நீர் போகலாம். இனி பாவம் செய்யாதீர்' என பெண்ணிடம் இயேசு சொல்வதுடன் நிறைவடைகிறது நிகழ்வு.

அவர்கள், 'இவள்' என்று சொன்னவரை, இயேசு, 'அம்மா' என மரியாதையுடன் அழைக்கிறார். இந்த ஒற்றைச் சொல்லிலேயே அவர் அவருக்குப் புதுவாழ்வு தந்துவிடுகின்றார். அத்தோடு நில்லாமல், 'இனி பாவம் செய்யாதீர்!' என அறிவுறுத்துகின்றார். ஆக, 'பாதை ஒரு முறை அடைக்கப்பட்டுவிட்டது. நான் உமக்கு புதிய பாதை ஒன்றைத் தொடங்குகிறேன். மீண்டும் பாவம் செய்து அதை அடைத்துவிடாதீர்!' என்று சொல்லி அனுப்புகிறார் இயேசு. தன் வாழ்வுப் பாதையில் அவர் தொடர்ந்து ஓடுமாறு பணிக்கிறார் இயேசு.

இவ்வாறாக, இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்களுக்குப் புதிய பாதையை அமைத்தும், இரண்டாம் வாசகத்தில் புதிய இலக்கை பவுலுக்குத் தந்தும், நற்செய்தி வாசகத்தில் பெண்ணுக்கு மன்னிப்பு அளித்தும், இவர்கள் தொடர்ந்து ஓடுமாறு செய்கின்றார் இறைவன்.

இன்று நம் வாழ்வில் நாம் எதிர்கொள்கின்ற பாதை முடிவுற்ற நிலைகள் எவை? அவற்றைக் கடந்து நாம் எப்படி ஓடுவது? மூன்று வழிகளைச் சொல்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

1. கடந்ததை மறந்துவிடுவது :
மூன்று வாசகங்களிலும் இந்தச் சொல்லாடல் நேரிடையாகவும் மறைமுகமாகவும் வருகிறது. அடிமைத்தனம் என்னும் கசப்பான அனுபவத்தை மறக்கச் சொல்லி அழைக்கிறது முதல் வாசகம். சமய சமூக அடையாளங்களை மறக்கச் சொல்கிறது இரண்டாம் வாசகம். பாவ வாழ்வை மறக்கச் சொல்கிறது நற்செய்தி வாசகம். 'மறத்தல்' நம் வாழ்வில் மிக முக்கியமான ஒன்று. நம் குழந்தைப் பருவம் தொடங்கி இன்றுவரை நடந்தவை எல்லாம் நமக்கு நினைவில் இருந்தால் நாம் பைத்தியமாகிவிடுவோம். நம் மூளை எதை வைத்துக்கொள்ள வேண்டுமோ அதை வைத்துவிட்டு மற்றதை மறந்துவிடுகிறது. கடந்த காலத்தில் நம்முடைய மனத்தைக் கட்டியிருக்கும்போது நம்மால் முன்னேறிச் செல்ல முடியவில்லை. அதாவது, யானையைச் சிறிய சங்கிலியால் கட்டுவதுபோல. யானை மிகவும் பலம் வாய்ந்தது. ஆனால், அதை எப்படி பாகானால் சிறிய சங்கிலியைக் கொண்டு கட்ட முடிகிறது? குட்டியாக இருக்கும்போதே யானைக்குக் கட்டப்படும் சங்கிலி அதனால் உடைக்க முடியாததாக இருக்கிறது. ஆக, 'என்னால் உடைக்க முடியாது' என்ற கடந்த கால அனுபவம் யானைக்கு ஆழமாக மூளையில் பதிந்துவிடுவதால், இறுதிவரை அது சங்கிலியை உடைக்கும் முயற்சியில் ஈடுபடுவதே இல்லை. கடந்த காலத்தை மறக்கும்போது கடந்த காலம் நம்மில் விதைத்த எதிர்மறை எண்ணங்கள், உணர்வுகள், அனுபவங்கள் ஆகியவற்றை மறக்க வேண்டும்.

2. இலக்கு நிர்ணயம் :
பழையதை மறந்துவிட்டால் மட்டும் போதுமா? புதியது நோக்கி நகர வேண்டும். இல்லை என்றால் நாம் அப்படியே தேங்கி விடுவோம். புதியது என்பது புதிய இலக்கு. பவுல் தன் பழையதை மறக்க புதியது ஒன்றோடு தன்னை இணைத்துக்கொள்கிறார். 100 மீட்டர் ஓட்டத்தில் அல்லது உயரம் தாண்டுதல் அல்லது நீளம் தாண்டுதலில் பங்கேற்பது போல. விளையாட்டு வீரர் தன் 'உந்தியக்கப் பலகையை' மறப்பதோடல்லாமல் இலக்கை மனத்தில் கொண்டால்தான் வெற்றி பெற முடியும். நம் வாழ்க்கை வழியற்ற பாதையை அடைந்துவிட்டால், அதையும் தாண்டி நம்முடைய இலக்கைப் பார்க்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஆக, அடுத்தடுத்த என்று இலக்கு மாறிக்கொண்டே இருக்க வேண்டும். புதிய இலக்குகள் நமக்கு புதிய வேகத்தைத் தரும். திடீரென்று வேலை பறிபோய்விட்டதா. உடனடியாக, ஓய்வு நேரத்தை எப்படி பயன்படுத்துவது? என்ற இலக்கு வேண்டும். உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டதா. அதை ஓய்வுக்கான வாய்ப்பாக பயன்படுத்தி அடுத்துச் செய்ய வேண்டிய வேலைகளைத்திட்டமிட வேண்டும். ஆக, 'டெட் என்ட்' என்பது நமக்கு அன்றாடம் வரலாம். ஓடிக்கொண்டே இருக்கும் நமக்கு எதிரே சுவர் வந்துவிட்டதால் வருத்தப்பட வேண்டுமா? இல்லை. அந்தச் சுவரில் ஓவியம் வரையக் கற்கலாமே! அப்படிக் கற்றால், தடையே நமக்கு இலக்காக மாறிவிடும்.

3. வாழ்க்கையைப் பற்றிய பார்வையை அகலமாக்குவது :
மற்றவர்கள் அந்தப் பெண்ணின் பழைய வாழ்வைப் பார்த்தார்கள். ஆனால், இயேசுவோ அவளின் புதிய வாழ்வைப் பார்க்கிறார். நாகேஷ் அவர்கள் ஒரு திரைப்படத்தில் சொல்வதுபோல. பிரச்சினை என்பது சிறிய கூழாங்கல் போன்றது. அதை நம் கண்ணுக்கு அருகில் வைத்துப் பார்த்தால், அது பெரியதாகத் தெரிவதோடு, நம்முடைய பார்வையை மறைத்துவிடும். கொஞ்சம் தள்ளி வைத்துப் பார்த்தால் சின்னதாகத் தெரியும். அப்படியே நம் முதுகிற்குப் பின் எறிந்துவிட்டால் அது மறைந்துவிடும். 'பாவம்' என்பதை, 'தவறுதல்' என்பதைச் சின்னக் கல்லாகப் பார்க்கும் இயேசு அதை பின்னால் எறிந்துவிடுகிறார். மற்றவர்களோ தங்கள் கண்களுக்கு மிக அருகில் வைத்துப் பார்க்கின்றனர். பார்வை அகலமாகும்போது பாதை இன்னும் விரிவாகும். நம்மால் தொடர்ந்து ஓட முடியும். இங்கே இயேசு, தீர்ப்பிட வந்தவர்களின் பார்வையையும் அகலமாக்குகின்றார். பெண்ணின் பார்வையையும் அகலமாக்குகிறார். வாழ்வில் அனைத்தையும் அனைவரையும் சிறு சிறு புள்ளிகளாக இணைத்துப் பார்க்கிற ஒருவரால்தான் வாழ்வு என்னும் முழு ஓவியத்தைப் பார்க்க முடியும். இயேசுவால் பார்க்க முடிகிறது அப்படி. இயேசுவின் பார்வை நமக்கு இருந்தால் நம்மாலும் அது முடியும்.

இறுதியாக,
இன்று 'டெட் என்ட்' - பாதை முடிவு - வந்தே தீரும். நம் தனிப்பட்ட வாழ்வில், உடல்நலத்தில், உறவுநிலைகளில், பணியில், படிப்பில். இப்படி பாதை அடைக்கப்பட்டது என்று எண்ணியவர்கள் எல்லாம் - அன்னை தெரசா, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், நம் அப்பா, அம்மா - நெடும் பயணம் கடந்து சென்றார்கள். முடிந்துவிட்ட பாதையில் அமர்ந்து கண்ணீர் வடிக்கவில்லை. ஏனெனில், அவர்களுக்குத் தெரியும் - அவரோடு கைகோர்க்கும்போது முடிவு என்பது விடிவு என்று.

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)


=================================================================================
திருப்பலி முன்னுர
=================================================================================
 
(எசாயா 43: 16-21; பிலிப்பியர் 3: 8-14; யோவான் 8: 1-11)

அன்பார்ந்தவர்களே,

தவக்காலத்தின் ஐந்தாம் ஞரயிறு வழிபாட்டை சிறப்பிக்க வந்துள்ள உங்கள் அனைவருக்கும் எங்கள் அன்பான வணக்கங்கள்.

இன்றைய நற்செய்தியில், பொழுது விடிந்ததும் இயேசுவிடம் விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை கூட்டிக் கொண்டு வருவதை பார்க்கின்றோம். அதேபோலவே, இயேசுவையும் விடியற்காலையிலேயே பிலாத்துவின்; அரண்மனைக்கு அழைத்துச் செல்வதை நாம் விவிலியத்தில் படித்திருக்கின்றோம். ஒருவர் மீது குற்றம் சுமத்த மக்கள் எவ்வளவு ஆர்வமாய் இருக்கின்றார்கள் என்பதை நம்மால் இங்கே உணர முடிகின்றது. அடுத்ததாக, இயேசுவை சோதிக்கும் நோக்குடன் கேட்பதையும் நற்செய்தியில் நாம் காண்கின்றோம். இயேசுவை பல தருணங்களில் ஏதாவது காரணத்தை முன்னிட்டு, பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் சோதிப்பதை நாம் பார்க்கின்றோம் பழைய ஏற்பாட்டில் "இஸ்ரயேல் மக்கள் இறைவனை பல நேரங்களில் சோதித்தார்கள். அதனால் பாம்பினால் படிபட்டு அழிந்து போயினர், அவர்களைப்போல் நாமும் அவரைச் சோதிக்கக்கூடாது" என புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் தெளிவாகக் கூறுகின்றார். யூதித்து நூலிலும்," இன்று கடவுளைச் சோதிக்க நீங்கள் யார்? இப்போது எல்லாம் வல்லவரைச் சோதிக்கின்றீர்கள்: ஆனால் நீங்கள் எதையுமே அறிந்து கொள்ளப்போவதில்லை" எனத் தெளிவாக இஸ்ரயேல் மக்களிடத்தில் கூறுவதை காணலாம். நாமும் இன்று இறைவனை சோதிக்கின்ற மாந்தர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

தம்மை சோதிக்கும் பொருட்டு வந்த மாந்தர்களிடம், " உங்களில் பாவம் இல்லாதவர் இப்பெண் மீது முதல் கல்லெறியட்டும்" ஞானத்துடனும், விவேகத்துடனும் இறைமகன் பதில் கூறுகின்றார். அப்பெண் தவறு செய்தவள் என்றால், அதற்குத் துணை நின்ற ஆண்களும் தண்டனைக்குரியவர்கள், பாவம் செயதவர்கள் என்பதை மறைத்து அப்பெண்ணை மட்டும் தண்டிக்க முன்வருகின்ற மனநிலையை அறிந்த இயேசு, அவர்கள் பாவங்களை தனித்தனியாக சுட்டிக் காட்டி தீர்ப்பிட விரும்பாதவராய், அந்தப் பதிலை கூறுகின்றார். அவர்களும் உள்ளம் குத்துண்டவர்களாக அங்கிருந்து செல்கின்றனர். அடுத்தவர்மீது கல்லெறிய மிக ஆர்வமாய் முன்வரும் நாம், நம் அகத்திலிருக்கும் சேற்றினைப் பார்க்கவோ, அதை கழுவி தூய்மைப்படுத்தவோ மறுக்கின்றோம். புனிதத் தவக்காலத்தில் பயணிக்கும் நாம், இறைவனை சோதிக்கின்ற மனதினை, பிறரை என்ன காரணம் சொல்லி வீழ்த்தலாம் என்ற குறுகிய மனதினை, பிறர்மீது கல்லெறிகின்ற பரிசேயத்தனத்தினை மனதிலே வேரோடு களைந்தெறிந்து, நம் பாவம் உணர்ந்தவர்களாக, கல்லான இதயத்தை களைந்து, கனிவுள்ள மனம் பெற்றவர்களாக, புதிய படைப்பாகிட அருள் வேண்டி, இப்புனித திருப்பலியில்; இணைவோம்.

முதல் வாசக முன்னுரை: (எசாயா 43:16-21)

மாற்றத்துக்கு உரியவர்களே, இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா, கடவுளின் புதுப்பிக்கும் ஆற்றலைப் பற்றி எடுத்துரைக்கிறார். கடலின் நடுவே பாதை அமைத்து இஸ்ரயேலரை கடந்து போகச் செய்த கடவுள், எகிப்தியரின் படைகளை அதே கடலுக்குள் மூழ்கடித்து அழித்த நிகழ்வு நினைவுபடுத்தப்படுகிறது. தம் மக்களுக்காக பழையவற்றை அழிக்கவும், புதியவற்றை உருவாக்கவும் கடவுள் தயாராக இருக்கிறார் என்பது விளக்கப்படுகிறது.. நாம் கடவுளுக்கு உண்மை உள்ளவர்களாய் வாழ்ந்து, கடவுளின் வாக்குறுதிக்கு தகுதிபெற வரம் வேண்டி, இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:( பிலிப்பியர் 3: 8-14)

மாற்றத்துக்கு உரியவர்களே, இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கடவுளுக்காக வாழ்வது பற்றிப் பேசுகிறார். ஒப்பற்ற செல்வமான இயேசு கிறிஸ்துவைப் பற்றிய அறிவைப்பெற, அனைத்தையும் இழப்பாகக் கருதுவதாக கூறுகிறார். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுவதாகவும் திருத்தூதர் குறிப்பிடுகிறார். கிறிஸ்துவையும், அவரது உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறிய, அவருடைய துன்பங்களில் பங்கேற்று, சாவில் அவரை ஒத்திருப்பது தேவை என்றும் அவர் எடுத்துரைக்கிறார். புனித பவுலைப் போன்று, கிறிஸ்து என்ற இலக்கை நோக்கி ஓடும் வரம் வேண்டி, இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.

மன்றாட்டுக்கள்:

வார்த்தை மனுவுருவான இறைவா,
எம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், துறவறத்தினர் அனைவரும், பல்வேறு சோதனைகளுக்கும், சோதித்தலுக்கும் ஆளாக்கப்படும்போது, அவர்கள் சோர்ந்திடாது, மனம் தளர்ந்திடாது, பாறைமீது கட்டப்பட்ட வீட்டைப்போல் உறுதியுள்ளவர்களாக, தங்கள் அழைத்தலுக்கு என்றும் உண்மையுள்ளவர்களாக, வாழ்ந்திட, நீர்தாமே அவர்களை உம் சிறகுகளின் நிழலில் வைத்து பாதுகாத்து, அவர்களுக்கு கழுகினைப்போல் புதிய ஆற்றலையும், வலிமையும் தந்து, வழிநடத்திட வேண்டி, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்

நீதியின் கதிரவனே இறைவா,
வரவிருக்கின்ற தேர்தலில் எந்தவித பிரச்சனைகளும், இடையூறுகளும், ஆபத்துக்களுமின்றி நடைபெறவும், மக்கள் அலட்சிய மனமுள்ளவர்களாக, தங்கள் n;பாறுப்பை தட்டிக் கழித்துச் செல்லாமல், மக்கள் நலனில் அக்கறை கொண்ட, முன்னேற்றப் பாதையில் வழிநடத்திச் செல்கின்ற, பொது நலனை நாடுகின்ற, தன்னலமற்ற தலைவர்களைத் தேர்ந்தெடுக்கக்கூடிய, ஞானத்தை, அறிவை, விவேகத்தைத் தந்தருள வேண்டுமென்று, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

கோட்டையும் அரணுமான இறைவா,
தங்கள் குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் என தங்கள் சொந்த பந்தங்களை, அவர்களின் நல்வாழ்விற்காக, தன் இன்ப, துன்பங்களைத் தியாகம் செய்து, நினைவுகளில் மட்டுமே அவர்களோடு உறவாடுகின்ற, வெளிநாடுகளில் பணிபுரிகின்ற மாந்தர்களை உம்பாதம் ஒப்புக் கொடுக்கின்றோம். அவர்களுக்கு எவ்வித ஆபத்துக்களும், தீங்குகளும் நேரிடாமல், நல்ல உடல், உள்ள நலனுடன், தங்கள் பணியினைத் தொடர்ந்திட, அவர்களின் காவல்தூதர்கள் உடனிருந்து, அவர்களைப் பாதுகாத்திட அருள் புரிந்திட வேண்டுமென்று, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

தூயவரே இறைவா,
இப்புனித தவக்காலத்தில பயணிக்கும் நாங்கள், இன்னும் பாவச்சேற்றுக்குள் இருப்பதையே சுகமென நினைத்து வாழாமல், எங்கள் வலுவின்மையை காரணம் காட்டி, இன்னும் அதிலே உழன்று கொண்டிருக்காமல், கொடுக்கப்பட்டுள்ள காலத்தை உணர்ந்தவர்களாக, அதிலிருந்து விடுபட்டு, நீர் தங்கும் கோவிலாகிய எங்கள் உள்ளத்தைத் தூயதாக்கிட, அருள்தர வேண்டுமென்று, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

அழியாத, நிலையான சொந்தமே இறைவா,
மண்ணுலகில் ப+ச்சியும், துருவும் அழித்து விடும் செல்வம், பணம் இவற்றிற்கு முதலிடம் கொடுத்து, அதற்காக, பெற்றோர்கள், உடன்பிறந்தவர்களைக்கூட கொலை செய்யும் அளவிற்கு மக்களின் மனநிலை கொடூரமாகிப் போய்க் கொண்டிருக்கின்றது. இவர்கள், இத்தகைய இழிநிலையான மனநிலையகற்றி, உண்மைச் செல்வமாகிய உம்மை உணர்ந்தவர்களாக, நீர் மட்டுமே இவ்வுலகில் நிரந்தரம் என்பதை அறிந்தவர்களாக, விண்ணுலகில் அழியாத செல்வம் சேர்க்கின்ற மாந்தர்களாக வாழ்ந்திட வரம் வேண்டி, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.



=================================================================================
திருப்பலி முன்னுரை
=================================================================================
தவக்காலம் 05ஆம் ஞாயிறு

"பிறரை தீர்ப்பிடாதீர்கள்" என்ற இறை உண்மையை உணர்ந்து கொள்ள இத்தவக்கால ஞாயிறு வழிபாடு நம்மை அழைக்கின்றது. கடந்த காலத்தின் பாவம் எவ்வளவாய் இருந்தாலும் அதை விடுத்து, "இனி பாவம் செய்யாதீர்" என்றே இறைவன் உரைக்கிறார். பழையன கழிதலும், கடந்த காலத்தின் கசப்புகளும் மனதை அழுத்தாது, புதிய வாழ்வை பெற்றுக்கொள்ள அழைக்கப்பட்டிருக்கின்றோம்.

இன்றைய முதல் வாசகத்தில், "முன்பு நடந்தவற்றை மறந்து விடுங்கள்; இதோ! புதுச்செயல் ஒன்றை நான் செய்கிறேன்" என்று புதுமையான வாழ்வை, புது வாழ்வை அனுபவித்து மகிழ இறைவன் அழைக்கின்றார். பாவத்தின் நிமித்தம் முணுமுணுப்பின் நிமித்தம் மக்களைக் கண்டிக்கிறார்; தண்டிக்கவில்லை. கனிவான வார்த்தைகளையும் வாழ்வையும் தந்து ஆசீர்வதிக்கின்றார். அவரின் புகழை எடுத்தியம்பவே அழைக்கப்பட்டிருக்கின்றோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணைப் பார்த்து, "இனி பாவம் செய்யாதீர்" என்று கடந்த காலத்தை மன்னித்து, புதுவாழ்வைத் தொடங்க ஆசீர்வதிக்கின்றார். கடந்த காலம் கசப்பானதாக இருப்பினும் அனைத்தையும் சரி செய்து நிகழ்காலத்தில் பயணிக்கவும், இனி இப்படி இருக்க வேண்டாம் என்று நாம் மாறுவதே இயேசு நமக்காக வைத்திருக்கும் இலக்கணம்.

அழுக்காகிப்போன பக்கங்களை
மீண்டும் மீண்டும் புரட்டாமல்
புதிய பக்கங்களில் தெளிவான வார்த்தைகளை
திருத்தமாக எழுதுவோம்.
இச்சிந்தனைகளை மனதில் தாங்கி இப்பலியில் இணைவோம்.

மன்றாட்டுகள்
1. புதுச்செயல் ஒன்றை நான் செய்கின்றேன் என்றவரே எம் இறைவா!
திருச்சபையை வழிநடத்தும் தலைவர்கள், பணியாளர்கள் எளிமையை தரித்து, மக்களோடு மக்களாக நின்று, புதுமையான செயல்களைச் செய்யவும், மக்களை புதுமையான பாதையில் வழிநடத்தும் அருள் தர வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

2. பாலைநிலத்தில் பாதை ஒன்றை அமைப்பேன் என்றவரே எம் இறைவா!
இயற்கை வளங்களை சிதைத்து எம் நாடு பாலைவனமாய் மாறிக் கொண்டிருக்கும் வேளையில், நடைபெறும் இத்தேர்தலில் சரியான தலைமையை, இயற்கையை, மக்களை நேசிக்கும் தலைவர்களைத் தேர்ந்தெடுத்து சரியான பாதையை அமைக்க வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

3. இனி பாவம் செய்யாதீர் என்று விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணை மன்னித்தவரே எம் இறைவா!
எங்களை நாங்களே ஆய்வு செய்து, மனத்தை நல்வழி நோக்கித் திருப்ப, கடந்த காலத்தை மறந்து, நிகழ்காலத்தில் பயணிக்கவும் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

4. கருணையின் மழையே எம் இறைவா!
கோடை கொந்தளிக்கும் இவ்வேளையில் எங்களுக்கு போதிய மழையை நீ தரவும், குடும்ப அமைதி, சந்தோஷம் நிறைந்திருக்கவும், மக்களின் உள்ளத்தின் வேண்டுதல்கள் இறைவனால் நிறைவேற்றப்படவும் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

நன்றி: ஆசிரியை. திருமதி. ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!