Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                            Year C  
                                                    பொதுக்காலம் ஆண்டின் 4ம் ஞாயிறு
     
=================================================================================
முதல் வாசகம்

=================================================================================
மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 1: 4-5.17-19

எனக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு: "தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்; நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்; மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன்'.

நீயோ உன் இடையை வரிந்து கட்டிக்கொள். புறப்படு, நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல். அவர்கள் முன் கலக்கமுறாதே. இல்லையேல், அவர்கள் முன் உன்னைக் கலக்கமுறச் செய்வேன்.

இதோ, இன்று நான் உன்னை நாடு முழுவதற்கும், அதாவது, யூதாவின் அரசர்களுக்கும் அதன் தலைவர்களுக்கும் அதன் குருக்களுக்கும் நாட்டின் மக்களுக்கும் எதிராக அரண்சூழ் நகராகவும் இரும்புத் தூணாகவும் வெண்கலச் சுவராகவும் ஆக்கியுள்ளேன். அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள்.

எனினும் உன்மேல் வெற்றி கொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்" என்கிறார் ஆண்டவர்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா 71: 1-2. 3-4a. 5-6ab. 15,17 (பல்லவி: 15) Mp3
=================================================================================
 பல்லவி: என் வாய் நாள்தோறும் உமது மீட்பை எடுத்துரைக்கும்.

1 ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; ஒருபோதும் நான் வெட்கமுற விடாதேயும். 2 உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்; எனக்கு நீர் செவிசாய்த்து என்னை மீட்டுக்கொள்ளும். பல்லவி

3 என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்; ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர். 4ய என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும். பல்லவி

5 என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமைமுதல் நீரே என் நம்பிக்கை. 6யb பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர். பல்லவி

15 என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் நீர் அருளும் மீட்பையும் எடுத்துரைக்கும்; உம் அருட்செயல்களை என்னால் கணிக்க இயலாது. 17 கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்; இனிவரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன். பல்லவி


================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையானவைதான். இருப்பினும் இவற்றுள் அன்பே தலைசிறந்தது.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 31 - 13: 13

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் மேலான அருள்கொடையையே ஆர்வமாய் நாடுங்கள். எல்லாவற்றையும் விடச் சிறந்த நெறி ஒன்றை நான் உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறேன்.

நான் மானிடரின் மொழிகளிலும் வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும் அன்பு எனக்கில்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் போலாவேன்.

இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் எனக்கு இருப்பினும், மறைபொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும், அறிவெல்லாம் பெற்றிருப்பினும், மலைகளை இடம்பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும், என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை.

என் உடைமையை எல்லாம் நான் வாரி வழங்கினாலும், என் உடலையே சுட்டெரிப்பதற்கென ஒப்புவித்தாலும், என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை.

அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது.

அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது.

அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும்.

அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மன உறுதியாய் இருக்கும்.

இறைவாக்கு உரைக்கும் கொடை ஒழிந்துபோம்; பரவசப்பேச்சுப் பேசும் கொடையும் ஓய்ந்துபோம்; அறிவும் அழிந்துபோம். ஆனால் அன்பு ஒருபோதும் அழியாது.

ஏனெனில், நமது அறிவு அரைகுறையானது; நாம் அரைகுறையாகவே இறைவாக்கும் உரைக்கிறோம். நிறைவானது வரும்போது அரை குறையானது ஒழிந்துபோம்.

நான் குழந்தையாய் இருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன்; குழந்தையின் மனநிலையைப் பெற்றிருந்தேன்; குழந்தையைப்போல எண்ணினேன். நான் பெரியவனான போது குழந்தைக்குரியவற்றை அறவே விட்டுவிட்டேன்.

ஏனெனில் இப்போது நாம் கண்ணாடியில் காண்பதுபோல் மங்கலாய்க் காண்கிறோம்; ஆனால் அப்போது நாம் நேரில் காண்போம். இப்போது நான் அரைகுறையாய் அறிகிறேன்; அப்போது கடவுள் என்னை அறிந்துள்ளதுபோல் முழுமையாய் அறிவேன்.

ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது.


- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

அல்லது

குறுகிய வாசகம்


நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையானவைதான். இருப்பினும் இவற்றுள் அன்பே தலைசிறந்தது.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 13: 4-13

சகோதரர் சகோதரிகளே, அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப் படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது. அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது.

அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும்.

அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மன உறுதியாய் இருக்கும்.

இறைவாக்கு உரைக்கும் கொடை ஒழிந்துபோம்; பரவசப்பேச்சுப் பேசும் கொடையும் ஓய்ந்துபோம்; அறிவும் அழிந்துபோம். ஆனால் அன்பு ஒருபோதும் அழியாது.

ஏனெனில், நமது அறிவு அரைகுறையானது; நாம் அரைகுறையாகவே இறைவாக்கும் உரைக்கிறோம். நிறைவானது வரும்போது அரை குறையானது ஒழிந்துபோம்.

நான் குழந்தையாய் இருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன்; குழந்தையின் மனநிலையைப் பெற்றிருந்தேன்; குழந்தையைப் போல எண்ணினேன். நான் பெரியவனான போது குழந்தைக்குரியவற்றை அறவே விட்டுவிட்டேன்.

ஏனெனில் இப்போது நாம் கண்ணாடியில் காண்பதுபோல் மங்கலாய்க் காண்கிறோம்; ஆனால் அப்போது நாம் நேரில் காண்போம்.

இப்போது நான் அரைகுறையாய் அறிகிறேன்; அப்போது கடவுள் என்னை அறிந்துள்ளதுபோல் முழுமையாய் அறிவேன்.

ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
லூக் 4: 18b-19

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
எலியா, எலிசா போல் இயேசு யூதர்களுக்காக மட்டும் அனுப்பப்படவில்லை.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 21-30

இயேசு தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களை நோக்கி, "நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று" என்றார்.

அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, "இவர் யோசேப்பின் மகன் அல்லவா?" எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர்.

அவர் அவர்களிடம், "நீங்கள் என்னிடம், `மருத்துவரே, உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும்' என்னும் பழமொழியைச் சொல்லி, `கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும்' எனக் கண்டிப்பாய்க் கூறுவீர்கள்.

ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப் படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார்.

மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழுநோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது" என்றார்.

தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங்கொண்டனர்; அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
(எரேமியா 1:4-5, 17-19: 1கொரிந்தியர் 12: 31-13:13; லூக்கா 4: 21-30)

இயேசு எல்லாருக்குமான இறைவன்

நிகழ்வு

கிராசியன் வாஸ் எழுதிய "Little things about Great People" என்ற நூலில் இடம்பெறும் ஒரு நிகழ்வு. ஒருநாள் சுவாமி விவேகானந்தர் ஒரு கிராமத்துச் சாலை வழியாகச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருக்குப் பசியெடுத்தது. யாராவது உணவு தருவார்களா? என்று அவர் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, பெரியவர் ஒருவர் தன்னுடைய வீட்டுக்கு முன்பாக இருந்த திண்ணையில் உணவு உண்டுகொண்டிருந்தார். அவரிடத்தில் சென்று உணவு கேட்போம் என்று விவேகானந்தர் அவரருகே சென்றார்.

"ஐயா! எனக்கு மிகவும் பசிக்கிறது... சாப்பிடுவதற்கு கொஞ்சம் உணவு தந்தால், நான் என்னுடைய பசியாற்றிக் கொள்வேன்" என்றார் விவேகானந்தர். அவரை மேலும் கீழுமாகப் பார்த்த அந்த பெரியவர், "உங்களுக்கு உணவுக்கு தருவதில் எனக்கொன்றும் ஆட்சோபனை இல்லை... ஆனால் நான் ஒரு துப்புரவுப் பணியாளன்; தீண்டத்தகாதவன். அப்படியிருக்கும்போது, நான் கொடுக்கிற உணவை நீங்கள் உண்பீர்களா? என்றுதான் நான் யோசிக்கிறேன்" என்றார்.

பெரியவர் இவ்வாறு சொன்னதுதான் தாம்தான், 'ஒரு தீண்டத்தகாதவரிடமிருந்து உணவை வாங்கி உண்பதா?' என்று விவேகானந்தர் வேகமாக நடக்கத் தொடங்கினார். சிறிதுதூரம் சென்றிருப்பார். அப்போது அவருடைய குருநாதர் சொன்ன 'எல்லாரிடத்திலும் கடவுள் இருக்கிறார், அதனால் யாரும் யாருக்கும் கீழானவர்கள் அல்ல' என்ற வார்த்தைகள் அவருக்கு நினைவுக்கு வந்தன. உடனே விவேகானந்தர் தன்னுடைய தவற்றை உணர்ந்து, அந்த பெரியவரை நோக்கி ஓடினார்.

"ஐயா! என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்... என்னை உயர்வாகவும் உங்களைத் தீண்டத்தகாதவராகவும் நினைத்து, நீங்கள் கொடுத்த உணவை சாப்பிடாமல் உதாசீனப்படுத்திவிட்டேன்... இப்போது என்னுள் இருக்கின்ற அதே இறைவன்தான் உங்களுக்குள்ளும் இருக்கிறார் என்ற உண்மையை உணர்ந்துகொண்டேன்" என்று சொல்லிவிட்டு அவரிடமிருந்து உணவை வாங்கி உண்ணத் தொடங்கினார்.

எல்லாரும் இறைவனின் மக்கள்; மக்கள் எல்லாருக்குள்ளும் இறைவன் இருக்கின்றார். அப்படி இருக்கும்போது பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு பார்ப்பது நல்லதல்ல என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியதாக இருக்கின்றது.

பொதுக்காலத்தின் நான்காம் ஞாயிற்றுகிழமையில் இருக்கும் நமக்கு, இன்றைய நாளில், நாம் படிக்கக்கேட்ட நற்செய்தி வாசகம், இயேசு யூதருக்கு மட்டுமல்ல, அவர் எல்லாருக்குமான இறைவன் என்றொரு செய்தியைத் தருகின்றது.

1. இயேசுவின் அமுதமொழியைக் கேட்டு வியப்புற்ற மக்கள்

இயேசு, தான் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்து, அங்குள்ள தொழுகைக்கூடத்தில், இறைவாக்கினர் எசாயாவின் சுருளேட்டை எடுத்து வாசிக்கத் தொடங்குகிறார். மக்களோ அவருடைய வாயிலிருந்து வந்த அமுத மொழிகளைக் கேட்டு வியக்கின்றார்.

இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் மிக முக்கியமானது, இயேசு பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் போலன்றி அதிகாரத்தோடு போதித்தார் என்பதாகும். பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும், திருச்சட்டம் 'இப்படிச் சொல்கிறது' என்று போதித்து வந்தார்கள். இயேசுவோ அப்படியில்லாமல், "நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்று அதிகாரத்தோடு போதித்தார். ஒருவர் அதிகாரத்தோடு போதிப்பது ஒன்றும் அவ்வளவு எளிதான ஒரு காரியமில்லை. உள்ளத்தில் உண்மையும் செயலில் நேர்மையும் இருக்கின்ற ஒருவரால் மட்டுமே அப்படிப் போதிக்க முடியும். இயேசுவிடம் உண்மையும் நேர்மையும் குடிகொண்டிருந்தன. அதனால்தான் அவரால் அதிகாரத்தோடு போதிக்க முடிந்தது.

2. இயேசுவைப் புறக்கணித்த மக்கள்

இயேசு, எசாயாவின் சுருளேட்டை வாசித்தபோதும் அதற்கு விளக்கம் தந்த தும் வியப்புற்ற மக்கள், அவர் இறைவாக்கினர்கள் எலியாவைப் போன்று, எலிசாவைப் போன்று புறவினத்து மக்களுக்குப் பணிசெய்யப் போகிறேன் என்று சொன்னதும், தொழுகைக்கூடத்தில் இருந்த மக்கள் அவர்மீது சிற்றம் கொள்ளத் தொடங்குகிறார்கள்.

இஸ்ரயேலில் மூன்றரை ஆண்டுகள் வானம் பொய்த்து, கடுமையான பஞ்சம் ஏற்பட்ட சமயத்தில், கைம்பெண்கள் பலர் இருந்தார்கள். ஆனால் இறைவாக்கினர் எலியா சீதோனைச் சார்ந்த சாரிபாத்துக் கைம்பெண்ணிடம் அனுப்பப்பட்டார். (1அர 17:8-16) இறைவாக்கினர் எலிசாவோ இஸ்ரயேல் குடிகளில் தொழுநோயாளர்கள் பலர் இருந்தபோதும், புறவினத்தாராகிய சிரியாவைச் சார்ந்த நாமானின் தொழுநோயையே நீக்கினார் (2 அர 5: 1-15). இப்படி இரண்டு இறைவாக்கினர்களும் இனம் கடந்து, குறுகிய எல்லைகளைக் கடந்து, எல்லா மக்களுக்கும் பணிசெய்ததைப் போன்று, தானும் பணிசெய்யப் போகிறேன் என்று சொன்னதால், மக்கள் அவர்மீது சீற்றம் கொள்ளத் தொடங்குகிறார்கள்.

புறவினத்தாரை நாயினும் கீழென நினைத்த யூதர்கள் மத்தியில், அவர்களைப் பற்றிப் பேசினாலோ அல்லது அவர்களது மத்தியில்தான் தான் பணிசெய்யப் போகிறேன் என்று சொல்வதனாலோ, தனக்கு மிகப்பெரிய பிரச்சினை வரும் என்று இயேசுவுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். இருந்தாலும் இயேசு தன் இலக்கு என்ன, இலக்கு மக்கள் யார், யார் என்பதைத் தெளிவாக எடுத்துச் சொல்லி, தான் யூதர்களுக்கு மட்டுமல்ல எல்லாருக்குமான இறைவன் என்பதை எடுத்துச் சொல்கிறார்.

இயேசு யூதர்கள் மட்டுமல்ல, எல்லாருக்குமான இறைவன் என்பதை, அவர் இறப்பின்போது, எருசலேம் திருக்கோவிலின் திரைச் சீலை இரண்டாகக் கிழிந்தததும் விண்ணேற்றம் அடையும்போது தன் சீடர்களிடம் சொன்ன, "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்" (மத் 28:19) என்ற வார்த்தைகளும் நமக்கு மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றன.

3. இயேசுவைக் கொலை செய்யவும் துணிந்த மக்கள்

இயேசு, தான் யூதர்களுக்கு மட்டுமல்ல, எல்லா மக்களுடைய மீட்புக்காகவும் வந்திருக்கிறேன் என்று சொன்னதும், தொழுகைக்கூடத்தில் இருந்த யூதர்கள், அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் இருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட முயல்கிறார்கள். இயேசுவின் அமுதமொழியைக் கேட்டு வியந்த மக்களா, சிறிதுநேரத்தில் அவரை மலை உச்சிலிருந்து கீழே தள்ளிவிடப் பார்க்கிறார்கள்! என நினைக்கும்போது நமக்கு வியப்பாக இருக்கிறது... அந்தளவுக்கு அவர்கள் இனவெறியில் ஊறிப்போனவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்கின்றபோதுதான் வேதனையாக இருக்கின்றது.

பலநேரங்களில் நாமும்கூட யூதர்களைப் போன்று கடவுள் 'எங்கள் இனத்திற்கு அல்லது குலத்திற்குத்தான் சொந்தம்' என்று உரிமை கொண்டாடுவது நம்முடைய குறுகிய மனப்பான்மையைக் காட்டுவதாக இருக்கின்றது. ஆகவே, கடவுளை ஒரு வட்டத்திற்குள் சுருக்கிக் கொள்ளாமல், அவர் எல்லாருக்கும் பொதுவானவர் என்ற பரந்த பார்வையோடு பார்ப்பது நல்லது.

சிந்தனை

"எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவர்; அவர் எல்லாருக்குள்ளும் இருப்பவர்" என்பார் தூய பவுல் (எபே 4:6). ஆம், எல்லாருக்கும் தந்தை ஒருவராக இருக்கின்ற போது... அவர் எல்லாருக்குள்ளும் இருக்கும்போது இங்கே உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாட்டிற்கு வழியே இல்லை.

ஆகவே, இயேசுவை எல்லாருக்குமான இறைவன் என்பதையும் உணர்ந்து, நாம் அனைவரும் அவருடைய சகோதர, சகோதரிகள் என்பதை உணர்ந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================


I எரேமியா 1: 4-5, 17-19
II 1கொரிந்தியர் 12: 31:13
III லூக்கா 4: 21-30

கலக்கமுறாமல் கடவுளின் வார்த்தையை அறிவி!

நற்செய்திக்காக உடல் முழுவதும் தழும்புகள்:

வியட்நாம் மக்களுக்குக் கடவுளின் வார்த்தையை முதன்முதலில் கொண்டு சென்றவர் மறைப்பணியாளரான அடோனிரம் ஜுட்சன் (Adoniram Judson 1788-1850). அமெரிக்காவைச் சார்ந்த இவர் தனது இருபத்து ஐந்தாவது வயதிலேயே வியட்நாமிற்கு நற்செய்தி அறிவிக்கச் சென்று, ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் அங்கு மிகச்சிறப்பான முறையில் நற்செய்தியை அறிவித்து, ஆயிரக்கணக்கான மக்களை ஆண்டவர் இயேசுவில் நம்பிக்கை கொள்ளச் செய்தவர்.

இவர் வியட்நாமிற்கு நற்செய்தி அறிவிக்கச் சென்ற புதிதில் பலவிதமான துன்பங்களைச் சந்தித்தார். ஒருபக்கம் பட்டினி, தனிமை போன்ற துன்பங்கள் என்றால், இன்னொரு பக்கம் ஆட்சியாளர்களிடமிருந்து துன்பங்கள். ஒருமுறை இவர் இயேசுவைப் பற்றி நற்செய்தியை அறிவித்ததற்காக கைதுசெய்து செய்யப்பட்டு அவா சிறைச்சாலையில் (Ava Prison) பதினேழு மாதங்கள் கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்டார். இதனால் இவருக்கு உடல் முழுவதும் காயங்களும் தழும்புகள் ஏற்பட்டன.

இவர் தண்டனைக் காலம் முடிந்தபின் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அப்போது இவர் தன்னைச் சிறையிலிருந்து விடுவித்த அதிகாரியிடம், இந்நாட்டின் ஒரு பகுதியில் நான் நற்செய்தி அறிவித்து விட்டேன். இதன் இன்னொரு பகுதியில் நற்செய்தி அறிவிக்கலாமா? என்றார். இதற்கு அந்த அதிகாரி, இயேசுவைப் பற்றி நற்செய்தியை அறிவித்ததற்காகத்தானே இத்தனை காலமும் நீ சிறைத் தண்டனையை அனுபவித்தாய். இப்போது மீண்டுமாக இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கப் போவதாகச் சொல்கிறாயே! உனக்கென்ன பைத்தியம் பிடித்துவிட்டதா? மேலும் நீ நினைப்பதுபோல் அங்குள்ள மக்கள் நற்செய்தியைக் கேட்டதும், அதை நம்பி ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு அவ்வளவு மூடர்கள் இல்லை. அதே நேரத்தில் உன்னுடைய உடலில் இருக்கும் தழும்புகளைக் கண்டு, அவர்கள் நிச்சயம் கடவுளை ஏற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு இருக்கின்றது என்றார்.

இதன்பிறகு அடோனிரம் ஜூட்சன் வியட்நாமின் இன்னொரு பகுதிக்குச் சென்று, ஆண்டவரைப் பற்றிய நற்செய்தியை மிகுந்த வல்லமையோடு அறிவித்து, ஆயிரக் கணக்கான மக்கள் ஆண்டவர் இயேசுவில் நம்பிக்கை கொள்ளச் செய்தார்.

ஆம், இறைவார்த்தையை அறிவிக்கும்போது எத்தனையோ துன்பங்கள் வந்தபோதும், அவற்றையெல்லாம் பொறுமையோடு தாங்கிக்கொண்டு, மிகுந்த வல்லமையோடு இறைவார்த்தையை அறிவித்து, ஆயிரக்கணக்கான மக்கள் ஆண்டவரிடம் கொண்டு வந்தவர் என்ற வகையில் அடோனிரம் ஜூட்சன் நம் அனைவருக்கும் சிறந்த முன்மாதிரி. பொதுக்காலத்தின் நான்காம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, கலக்கமுறாமல் கடவுளின் வார்த்தையை அறிவி என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

கலக்கமுறத் தேவையில்லை:

கடவுளின் விருப்பமெல்லாம், எல்லா மனிதரும் மீட்புப் பெற வேண்டும்; உண்மையை அறிந்துணர வேண்டும் என்பதே ஆகும் (1திமொ 2:4) இதற்காகவே அவர் இறைவாக்கினர்களை மக்கள் நடுவில் அனுப்புகின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியாவின் அழைப்பைக் குறித்து வாசிக்கின்றோம். இவர் கி.மு ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், கி.மு.ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் வாழ்ந்தவர். யூதா நாட்டினர் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடியாமல், தங்கள் விருப்பம் போன்று வாழ்ந்ததால், அவர்கள்மீது பாபிலோனியர்களின் படையெடுத்து நிகழப்போகிறது என்று எச்சரிப்பதற்காக ஆண்டவரால் இவர் தேர்ந்துகொள்ளப்பட்டார். மக்களிடம் தன்னுடைய வார்த்தையை அறிவிப்பதற்காக ஆண்டவர் எரேமியாவைத் தேர்ந்தெடுக்கும்போது, எரேமியா, சிறுபிள்ளைதானே! என்று கலங்குகின்றார். அப்போது ஆண்டவர் அவரிடம், அவர்கள் முன் கலக்கமுறாதே! என்று சொல்லிவிட்டு, உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கின்றேன் என்று அவருக்கு நம்பிக்கையூட்டுகின்றார்.

இதன்பிறகு எரேமியா ஆண்டவருடைய வார்த்தையை மக்களிடம் அறிவித்தபோது அவருக்குப் பலவிதமான துன்பங்கள் வந்தாலும், ஆண்டவர் அவரை உடனிருந்து பாதுகாத்தார் (எரே 11:18-23, 20:1ff, 38:7-13). ஆதலால், எல்லா மனிதரும் உண்மையை அறிந்துணரவும் மீட்புப் பெறவும் கடவுள் விரும்புவதால், அவருடைய பாதுகாப்பை உணர்ந்து, அவரது வார்த்தையை எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும் எல்லாருக்கும் அறிவிப்பது இன்றியமையாதது.

இறைவாக்குப் பணி எல்லாரையும் சென்றடைய வேண்டும்:

கடவுள், யூதர்கள் மட்டுமல்ல, எல்லா மக்களும் மீட்புப் பெற விரும்புகின்றார். அதனால் கடவுளின் வார்த்தை அவர்களுக்கும் அறிவிக்கப்படவேண்டும். அதற்குக் கடவுளின் அடியார்கள் அவர்கள் நடுவிலும் பணிசெய்ய வேண்டும். இச்செய்தியை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குக் உணர்த்துகின்றது.

இயேசு நாசரேத்தில் இருந்த தொழுகைக்கூடத்திற்கு வந்து, இறைவாக்கினர் எசாயாவின் சுருளேட்டை வாசித்த பின் இரண்டு நிகழ்வுகளைக் குறிப்பிடுகின்றார். ஒன்று, இஸ்ரயேலில் மூன்றரை ஆண்டுகள் வானம் பொய்த்தபோது இறைவாக்கினர் எலியா சாரிபாத்தில் இருந்த கைம்பெண்ணிடம் அனுப்பப்பட்டது (1 அர 17: -24). இரண்டு, இறைவாக்கினர் எலிசா சிரியாவை சார்ந்த, தொழுநோயால் பாதிக்கப்பட்ட நாமானை நலமாக்கியது (2 அர 5). இயேசு குறிப்பிடும் இவ்விரு நிகழ்வுகளிலும் வருகின்ற இறைவாக்கினர்கள் எலியாவும் எலிசாவும் பிற இனத்தார் நடுவில் பணிசெய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இயேசு இந்த இரண்டு நிகழ்வுகளையும் தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களிடம் குறிப்பிடுவதன் மூலம், தானும் பிற இனத்தாருக்குப் பணி செய்வேன் என்று சொல்லாமல் சொல்கின்றார். இதனால் தொழுகைக் கூடத்தில் இருந்தவர்கள் அவரைக் கொல்லத் துணிகின்றார்கள்.

மெசியா என்பவர் யூதர்கள் நடுவில் பணிசெய்வார் என்றிருந்த யூதர்களிடம், அவர் பிற இனத்தார் நடுவிலும் பணிசெய்வார் என்று சொன்னதன் மூலம், இயேசு கடவுளுடைய பணியைச் செய்கின்றவர்கள் எத்தகைய எதிர்ப்புகள் வந்தாதாலும் எல்லாருக்கும் பணி செய்ய வேண்டும் என்ற உண்மையை உணர்த்துகின்றார்.

அன்போடு இறைவாக்குப் பணி

கடவுளின் வார்த்தையை அறிவிப்பவர் கலக்கமுறாமலும் எல்லாருக்கும் அறிவிப்பது முக்கியமானதாக இருந்தாலும், அவருக்கு இன்னொன்றும் தேவைப்படுகின்றது. அதுதான் அன்பு.

கொரிந்து நகரில் இருந்தவர்கள் தங்களிடம் இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் இருக்கின்றது; பரவசப் பேச்சுப் பேசும் ஆற்றல் இருக்கின்றது என்று மற்றவர்களை இழிவாக நடத்தினார்கள். இந்நிலையில்தான் பவுல் அவர்களிடம் அன்பு இல்லை என்றால் எல்லாமும் ஒன்றுமில்லை என்கிறார். ஆம், இறைவாக்கு உரைப்பவராக இருந்தாலும் சரி, அதைக் கேட்கும் மக்களாக இருந்தாலும் சரி அவர்களுடைய உள்ளத்தில் அன்பு இருக்க வேண்டும். ஏனெனில் அன்புதான் தலைசிறந்தது. அன்புதான் தீவினையில் மகிழுறாமல் உண்மையில் மகிழும்.

எனவே, நாம் கடவுளின் துணையை நம்பி, அவருடைய வார்த்தையை எல்லாருக்கும் அறிவிப்போம். அதுவும் அன்போடு அறிவிப்போம். அதன்மூலம் இயேசுவுக்குச் சான்று பகர்வோம்.

சிந்தனைக்கு:

ஒரே வாழ்க்கைதான். அதுவும் மிகவும் வேகமாகக் கடந்துபோயிடும்; ஆனால், கிறிஸ்துவுக்காக நாம் புரியும் பணி என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் என்பார் மறைப்பணியாளரான சி.டி.ஸ்டட். ஆதலால், நாம் கடவுளின் வார்த்தையைக் கலக்கமுறாமல், அன்போடு, எல்லாருக்கும் அறிவிக்கபோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
எதிராளியாய்

ஆண்டின் பொதுக்காலம் 4ம் ஞாயிறு


எரேமியா 1:4-5, 17-19
1 கொரிந்தியர் 12:31-13:13
லூக்கா 4:21-30

நான் பள்ளிப்பருவத்தில் 11ஆம் வகுப்பில் ஆங்கில வகுப்பில் கற்ற பல பாடங்களில் ஒன்று ஜெஸி ஓவன்ஸ் பற்றியது. ஒரு அடிமையின் பேரனான இவர் 1936ஆம் ஆண்டு நாசி ஜெர்மனி நகர் பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் நான்கு தங்கப் பதக்கங்கள் வென்றவர். இவர் தன் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை இப்படிப் பதிவு செய்கிறார்: '1928ஆம் ஆண்டு ஒஹையோவில் நான் அன்றாடம் உடற்பயிற்சி செய்யச் செல்வேன். தொடக்கத்தில் எனக்கு மிகவும் சோம்பலாக இருந்தது. சோம்பலைக் காரணம் காட்டி நான் சில நாள்கள் பயிற்சியைத் தள்ளிப் போட்டேன். பின் தட்ப வெப்பநிலையைக் காரணம் காட்டினேன். பின் என் உடல் வலியைக் காரணம் காட்டினேன். ஆனால், பறிற்சிக்கு என்னைத் தினமும் அழைத்த என் கோச் எனக்கு ஒரு எதிராளியாகத் தோன்றினார். அவரை இதற்காகவே வெறுத்த நான் ஒரு கட்டத்தில் அவர் சொல்வதுபோல செய்ய ஆரம்பித்தேன். ஒலிம்பிக் போட்டிகள் அறிவிக்கப்பட்டன. என் உடற்பயிற்சி மேல் நான் நம்பிக்கை கொண்டிருநதாலும், கொஞ்சம் கொஞ்சமாக நாசிச 'ஆரிய மேட்டிமை' மேலாண்மை என் மனத்தில் பயத்தை உண்டாக்கியது. அந்த நாள்களில் என் உடல்நலமும் குன்றியது. ஆனால், 'என்னை மற்றவர்கள் ஒதுக்கி வைக்கும்' மனப்பான்மைக்கு நான் என்றும் எதிரானவன் என்று பதிவு செய்ய ஓடினேன்.'

இன்று அவருடைய சாதனைகள் முறியடிக்கப்பட்டாலும், அவர் அன்று தனக்கெனப் பதித்த முத்திரை அவருக்கானதே.

மனித வாழ்வின் தனி மனித வெற்றியும், குழும வெற்றியும் அடையும் வழி எதிராளியாக மாறுவதே. எதிராளியாக மாறுவது என்பது எதிர்த்து நிற்பது அல்லது எதிர்நீச்சல் போடுவது. எதிராளி என்பவர் பகையாளி அல்ல. பகையாளி என்பது ஒரு முடிந்த நிலை. ஆனால், எதிராளி என்பது ஒரு தொடர்நிலை.

'இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம்' என்ற என் காலை எண்ணத்திற்கு எதிராளியாக நிற்கும்போதுதான், நான் சுறுசுறுப்பாக வேலைகள் செய்ய முடிகிறது. 'கொஞ்சம் இனிப்பு சாப்பிடு. அப்புறம் மாத்திரை போட்டுக் கொள்ளலாம்' என்ற என் எண்ணத்திற்கு எதிராளியாக நிற்கும்போதுதான், நான் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க முடிகிறது. ஆங்கிலேயேர்க்கு எதிராளியாய் நம் முன்னோர்கள் நின்றதால்தான் இன்று நாம் விடுதலைக் காற்றை சுவாசிக்க முடிகிறது. இப்படியாக கறுப்பின மக்கள் எழுச்சி, அடக்குமுறைகளுக்கு எதிரான எழுச்சி என சமூக நிகழ்வுகளிலும், இராஜாராம் மோகன்ராய், மார்ட்டின் லூத்தர் போன்றவர்கள் எடுத்த நிலைப்பாடுகளிலும், 'எதிராளியாய்' இருப்பதன் அவசியம் புரிகிறது. குடும்பத்தில் நடக்கும் இழப்புக்களையும் தாண்டிக் குடும்பத்தை எழுப்பும் அப்பாக்கள், அம்மாக்கள், வறுமையிலும், இயலாமையிலும் சாதிக்கும் குழந்தைகள் என எல்லாருமே 'எதிராளியாய்' இருப்பதால்தான் சாதிக்க இயல்பவர்கள் ஆகிறார்கள்.

மொத்தமாகச் சொன்னால், 'ஓடுகின்ற தண்ணீரின் ஓட்டத்திற்குத் தன்னையே கையளிக்கின்ற படகு கரை ஒதுங்குகிறது. ஓட்டத்திற்கு எதிராளியாய் நிற்கிற படகு மறுகரை சேர்கிறது.'

இன்றைய இறைவாக்கு வழிபாடு, 'எரேமியா,' 'பவுல்,' 'இயேசு' என்ற மூன்று எதிராளிகளின் நிலைப்பாட்டைப் பதிவு செய்து, நம்மையும் எதிராளிகளாய் வாழ அழைக்கிறது. எப்படி?

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எரே 1:4-5, 17-19) யாவே இறைவன் எரேமியாவை அழைக்கின்றார். எருசலேமின் அழிவையும், பாபிலோனியாவுக்கு மக்கள் நாடுகடத்தப்பட்டதையும் நேருக்கு நேர் பார்த்த இறைவாக்கினரும் எரேமியாவே. ஆக. இவருடைய வாழ்வு ஒரு முள்படுக்கையாகவே இருந்தது. 'நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்' என்னும் வாக்கியத்தில் எரேமியாவின் தேர்ந்துகொள்ளப்பட்ட நிலையையும், ஒரு குறிப்பிட்ட பணிக்கென 'ஒதுக்கிவைக்கப்பட்ட' நிலையையும் பார்க்கின்றோம். 'திருநிலைப்படுத்துதல்' என்பது பொறுப்புமிக்க வார்த்தை. ஏனெனில், திருநிலைப்படுத்தப்படும் பொருளும், நபரும் சிறப்பான பணி ஒன்றிற்காக ஒதுக்கிவைக்கப்படுகிறார். அவர் அச்சிறப்பான பணியிலிருந்து கொஞ்சம் விலகிவிடவோ, அதே நேரம் தானே மற்ற பணிகளைத் தேடிச் செல்லவோ கூடாது. எரேமியாவின் அழைப்பு இறைவாக்குரைக்கவும், அதிலும் யூதாவின் தலைவர்களுக்கும், அரசர்களுக்கும், குருக்களுக்கும் இறைவாக்குரைக்கவுமாக இருக்கிறது. சாதாரண நபர்களுக்கு ஒன்றைச் சொல்லி நம்பவைத்துவிடலாம். ஆனால், மேற்கண்ட மூவருக்கும் சொல்வது மிகப்பெரிய சவால். அதுவும் நல்ல செய்தி என்றால் பரவாயில்லை. அவர்களின் பிரமாணிக்கமின்மையையும், உடன்படிக்கைக்கு எதிராக அவர்கள் செய்த தவறுகளையும், அவர்களின் சிலைவழிபாட்டையும் சுட்டிக்காட்டுவது எரேமியாவுக்குப் பெரிய சவாலாக இருந்தது. மேலும், அவர்கள் ஆட்சி செய்த 'எருசலேமின் அழிவையும்' அவரே முன்னுரைக்கவும் வேண்டியிருந்தது. இவரின் இந்த இறைவாக்கு அவரைப் பொதுவான எதிரியாக்கிவிடுகிறது. அவர் ஏளனத்திற்கும், கேலிப் பேச்சிற்கும், வன்முறைக்கும், சிறைத்தண்டனைக்கும் ஆளாகின்றார். ஆனாலும், தன் இறைவாக்குப் பணியில் அவர் பின்வாங்கவே இல்லை. ஒரு கட்டத்தில், 'ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர், நான் ஏமாந்து போனேன்' (20:7) என்று விரக்தி அடைந்தாலும், 'சுற்றிலும் ஒரே திகில்! அவன் மேல் பழிசுமத்துவோம்' (20:10) என்று மக்களின் கிளர்ச்சி பயத்தைத் தந்தாலும், 'உம் சொற்களை என்னால் அடக்கி வைக்க முடியாது' (20:9) என்றும் 'ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கிறார்' (20:11) என்று நம்பிக்கை கொள்ளவும் செய்கிறார் எரேமியா. இவ்வாறாக, தவறான சமய எண்ணங்களிலும், தங்களின் மேட்டிமைப் போக்கிலும் மூழ்கி இருந்த தலைவர்களுக்கும், மக்களுக்கும் 'எதிராளியாய்' நிற்கிறார் எரேமியா. இவரின் இந்தத் துணிவிற்குக் காரணம், 'உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்' (1:19) என்ற ஆண்டவரின் வாக்குறுதியே.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 12:31-13:13) பவுல் 'பல்வேறு கொடைகள்' பற்றிய தன் போதனையை நிறைவு செய்கிறார். கொரிந்து நகர திருஅவை உறுப்பினர்கள் தாங்கள் பெற்றிருந்த அருள்கொடைகள் பற்றியும், செயல்பாடுகள் பற்றியும், தொண்டுகள் பற்றியும் அதிகம் பெருமை பாராட்டிக்கொண்டும், தாங்கள் பெற்றிருந்த ஞானம் நிறைந்த சொல்வளம், அறிவு சார்ந்து சொல்வளம், நம்பிக்கை, பிணிதீர்க்கும் கொடை, வல்ல செயல் செய்யும் ஆற்றல், இறைவாக்குரைக்கும் ஆற்றல், பரவசப் பேச்சு, அதை விளக்கும் ஆற்றல் போன்ற கொடைகளை முன்னிறுத்தி, ஒருவர் மற்றவரை ஒப்பீடு செய்துகொண்டு, பொறாமைப்பட்டு, தங்களுக்குள் கட்சி மனப்பான்மை கொண்டு பிளவுபட்டிருந்தனர். கடந்த வார வாசகத்தில் 'ஒரே உடல் பல உறுப்புகள்' என்று அவர்களை அறியாமையிலிருந்து அறிவுக்கு அழைத்த பவுல், இன்னும் ஒரு படி போய், 'எல்லாவற்றையும் விட சிறந்த நெறி ஒன்றை நான் உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறேன்' (12:31) என்று சொல்லி அன்பை முன்வைக்கிறார். அவர்கள் தாங்கள் பெருமை கொண்டிருந்த - பரவசப் பேச்சு, இறைவாக்குரைக்கும் ஆற்றல், மறைபொருள்கள் விளக்கும் ஆற்றல், மலைகளை இடம் பெயரச் செய்யும் நம்பிக்கை, தன்னையே எரிக்கும் அளவிற்கு தற்கையளிப்பு - அனைத்தும் அன்பை ஊற்றாகக் கொண்டிருக்கவில்லை என்றால் அவற்றால் ஒரு பயனும் இல்லை என்கிறார். ஏனெனில், அன்பு இல்லாத இடத்தில் இவை யாவும் தனி மனித பெருமைக்காகவும், புகழுக்காகவும், பண ஈட்டிற்காகவும் மட்டுமே பயன்படும்.

கிரேக்க மொழியில் அன்பு என்பதற்கு நான்கு வார்த்தைகள் உள்ளன: (அ) அகாபே (மேன்மையான அன்பு), (ஆ) ஈரோஸ் (உடல் சார்ந்த அன்பு, காமம்), (இ) ஃபிலியா (நட்பு அல்லது நலம்விரும்புதல்), (ஈ) ஸ்டோர்கே (பெற்றோர்-பிள்ளை பாசம்). பவுல் பயன்படுத்தும் வார்த்தை, 'அகாபே.' மூன்று நிலைகளில் அன்பு முக்கியத்துவம் பெறுகின்றது: (அ) மேன்மையான அருட்கொடையை விட அன்பு சிறந்தது. (ஆ) முதன்மையான திறன்களைவிடச் சிறந்தது.(இ) கதாநாயக வெற்றிச் செயல்களைவிடச் சிறந்தது. தொடர்ந்து அன்பு இப்படி இருக்கும், அப்படி இருக்காது என நேர்முக மற்றும் எதிர்மறை வார்த்தைகளில் பட்டியலிடுகின்றார் பவுல். மேலும், அன்பின் குணத்தை பெரிதுபடுத்தியும் காட்டுகின்றார்: 'எல்லாவற்றையும்' பொறுத்துக்கொள்ளும். 'எல்லாவற்றையும்' நம்பும். 'எல்லாவற்றையும்' எதிர்நோக்கி இருக்கும். 'எல்லாவற்றிலும்' மனஉறுதியாய் இருக்கும். மேலும், இந்த அன்பு அழியாதது என்கிறார் பவுல். ஏனெனில், இவ்வன்பு கடவுளில் ஊற்றெடுக்கிறது. கடவுள் அழிவில்லாதவர். எது எப்படியோ அன்பு இருந்தால் சரி! எல் கிரேக்கோ என்பவர் 'நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு' என்ற மூன்று மதிப்பீடுகளையும், மூன்று பெண்களாக உருவகித்து (மோதெனா ட்ரிப்டிக்) ஒரு படம் வரைந்துள்ளார். இதில் அன்பு என்ற பெண்ணின் காலைப் பிடித்துக்கொண்டு நிறைய குழந்தைகள் இருக்கும். ஆம், அன்பின் குழந்தைகள் கணக்கிலடங்காதவை! அன்பு என்றும் மேலனாது.

பவுல் இப்படி கொரிந்து நகரத் திருச்சபைக்கு எழுதிய அன்பின் பாடல் கேட்பதற்கு நமக்கு இனிமையாக இருக்கிறது. ஆனால், பவுலின் திருச்சபைக்கு ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்கும். ஏனெனில், அவர்கள் கொண்டிருந்த அனைத்துப் பிரச்சினைகளையும் - பொறாமை, தற்புகழ்ச்சி, இறுமாப்பு, இழிவான ஊதியம், தன்னலம், எரிச்சல், தீவினை, பொய் - சுட்டிக்காட்டு, இச்செயல்கள் அன்பிற்கு இல்லை என்று சொல்வதன் வழியாக, 'உங்களிடத்தில் அன்பு இல்லை' என மறைமுகமாக அவர்களுக்கு எச்சரிக்கை விடுகின்றார் பவுல். பவுலின் இந்த மடலுக்காக கொரிந்து நகர மக்கள் அவரை நிராகரித்தார்கள் என்பதை நாம் அவரின் இரண்டாம் மடலில் வாசிக்கிறோம். இவ்வாறாக, பவுல், அன்பு பற்றிய போதனையால், அன்பை மற்ற எல்லாவற்றையும் விட உயர்த்தியதால், கொரிந்து நகரத் திருச்சபையின் 'எதிராளியாக' மாறுகின்றார். பவுலின் துணிவிற்குக் காரணம், இவர் கடவுளின் உடனிருப்பை அனுபவித்த விதமே. ஆகையால்தான், 'இப்போது நான் அறைகுறையாய் அறிகிறேன். அப்போது கடவுள் என்னை அறிந்துள்ளதுபோல் முழுமையாய் அறிவேன்' (13:12) என உறுதியாகக் கூறுகின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 4:21-30), இயேசுவின் நாசரேத்துப் போதனை அதைக் கேட்டவர்களின் நடுவில் ஏற்படுத்திய எதிர்வினையைப் பதிவு செய்கிறது. எசாயா இறைவாக்கினரின் பகுதியை வாசித்தவர், 'இது ஆண்டவரின் அருள்வாக்கு!' என்று இயேசு சொல்லியிருந்தால், எல்லாரும், 'ஆகா, ஓகோ, நல்லா வாசிக்கிற தம்பி!' என்று உச்சி முகர்ந்து கொண்டாடியிருப்பார்கள். ஆனால், இயேசு அப்படிச் சொல்லவில்லையே. 'நீங்கள் கேட்ட இறைவாக்கு இன்று நீங்கள் கேட்டதில் நிறைவேறியது!' என்கிறார். 'என்னது மெசியா பற்றிய எசாயா இறைவாக்கு நிறைவேறுகிறதா?' 'யார்ட்ட?' 'இவர்ட்டயா?' 'தம்பி, ஆர் யு ஓகே?' 'என்ன பேசுறோம்னு தெரிஞ்சுதான் பேசுறீங்களா?' 'இவர் யோசேப்போட பையன்தான!' என ஆளாளுக்கு பேச ஆரம்பிக்கின்றனர். 'இவர் யோசேப்பின் மகன் அல்லவா?' (லூக்கா 1:22) என்ற அவர்களின் வார்த்தைகள் இயேசு தூய ஆவியின் ஆற்றலால் பிறந்தார் என்பதைக் குத்திக் காட்டி, அவரின் பிறப்பைக் கேலி செய்வதாகக் கூட இருந்திருக்கலாம். சில நொடிகளில் எல்லாம் மாறிப்போனது. இயேசுவின் போதனையும், பணியும் புறவினத்தாரையும் உள்ளடக்கும் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எலியா மற்றும் எலிசா போல தன்னுடைய இறைவாக்குப் பணியும் எல்லாருக்கும் உரியது என்பதில் தெளிவாக இருக்கிறார் இயேசு. அவர் தங்களின் எதிர்பார்ப்பிற்கு முரணாக இருந்ததால் அவரைப் புறக்கணிக்கின்றனர் மக்கள். அவரைப் பாராட்டிய சில நொடிகளில் அவர்மேல் சீற்றம் (கோபத்தின் கொடூர வடிவம்) கொண்டு அவரை ஊருக்கு வெளியே துரத்தி மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிக் கொன்றுவிட முனைகின்றனர். ஆக,

இயேசு தன் போதனையின் வழியாக தன் சொந்த ஊர் மக்களுக்கு 'எதிராளியாக' மாறினார். தன் இலக்கோடு சமரசம் செய்துகொள்ளாத இயேசு தன்னலம் மற்றும் குறுகிய எண்ணம் கொண்ட அந்த மக்களிடமிருந்து விலகித் தன் வழியே செல்கின்றார்.

இவ்வாறாக, எரேமியா தன் இனத்து அரசர்களுக்கும், மக்களுக்கும் தன் இறைவாக்குப் பணியால் எதிராளியாகவும், பவுல் தன் கொரிந்து நகர திருஅவைக்குத் தன் 'அன்பு' பற்றிய போதனையால் எதிராளியாகவும், இயேசு அனைவரையும் உள்ளடக்கிய இறைவார்த்தைப் பணியால் தன் சொந்த ஊர் மக்களுக்கு எதிராளியாகவும் மாறுகின்றனர். ஆனால், இவர்களை எதிர்த்தவர்கள் நடுவில் இவர்கள் பின்வாங்கவில்லை. இன்றைய பதிலுரைப் பாடல் (திபா 71) சொல்வதுபோல, 'என் தலைவரே, நீரே என் நம்பிக்கை. இனி வரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன்' என்று துணிந்து முன்செல்கின்றனர்.

இன்று நம் தனிப்பட்ட வாழ்விலும், சமூக, மற்றும் அரசியல் வாழ்விலும் எதிராளியாக இருக்க இன்று நாம் அழைக்கப்படுகிறோம். எதிராளியாக மாறுவதற்கு மூன்று குணங்கள் அவசியம் என்பதையும் இன்றைய வாசகங்கள் குறித்துக்காட்டுகின்றன:

(அ) 'என்னால் முடியும்' என்ற தன்னம்பிக்கை. தான் சிறுவன் என்ற நிலையில் இருந்தாலும் எரேமியாவும், தான் அறிமுகமில்லாதவன் என்ற நிலையில் இருந்தாலும் பவுல், தான் சொந்த ஊர்க்காரன் என்றாலும் இயேசுவும், தங்களால் முடியும் எனத் தங்கள் மேல் முழு நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். ஆக, என்னிடம் உள்ள தேவையற்ற ஒரு பழக்கத்திற்கோ அல்லது குணத்திற்கோ நான் எதிராளியாக மாற வேண்டும் என்றால், 'என்னால் முடியும்' என்ற மனவுறுதியும் அதற்கான தன்னம்பிக்கையும் அவசியம்.

(ஆ) 'என் கடவுள் என்னோடு' - தன்னம்பிக்கை நம்மை விடப் பெரிய ஒன்றோடு கட்ட வேண்டும். அது விதியாகவோ, கடவுளாகவோ, கொள்கையாகவோ இருக்கலாம். மனிதர்கள்மேலும், இடங்களின் மேலும் கட்டவே கூடாது. ஏனெனில் அவர்களும், அவைகளும் மாறக்கூடியவை. ஆனால், மாறாத ஒன்றில் கட்டிக்கொள்ள வேண்டும் நம் நம்பிக்கையை. எரேமியா தன் ஆண்டவரின் மேல், பவுல் இயேசுவின் மேல், இயேசு தன் தந்தையின் மேல் நம்பிக்கையைக் கட்டியிருந்தனர்.

(இ) 'இலக்குத் தெளிவு' - நான் எதற்காக இங்கே இருக்கிறேன்? நான் எதை நோக்கிச் செல்கின்றேன்? என்ற கேள்விகள்தாம் இலக்கைத் தெளிவுபடுத்துகின்றன. எரேமியா, பவுல், இயேசு மூவரும் தங்கள் இலக்கை முன்வைத்து நடந்தனர். எதிர்ப்புகளைக் கண்டு அவர்கள் இலக்குகளோடு சமரசம் செய்துகொள்ளவில்லை. திரும்பச் செல்லவில்லை. எரேமியா தன் கோவில் திரும்பவில்லை. பவுல் தன் தர்சு நகரம் திரும்பவில்லை. இயேசுவும் நாசரேத்தூர் திரும்பவில்லை.

வாழ்வில் 'எதிராளி' நிலை என்பது நம் மாற்றத்திற்கான வளர்ச்சிநிலை. மருத்துவர் நோயாளிக்கு எதிராளியாய் நின்றால்தான் நோயைக் குணமாக்க முடியும். எடுக்கின்ற மாத்திரை நோய்க் கிருமிக்கு எதிராளியாக இருந்தால்தான் நோய் குணமாகும். நம்மில் போரடிக்கொண்டிருக்கும் ஒன்றிற்கு ஒன்று முரணான இயல்புகள் எதிராளியாக இருந்தால்தான் நாம் வளர முடியும்.

'பாம்பு பாம்பாக இல்லை என்றால் சிறுவர்கள் விறகோடு சேர்த்துக் கட்டிவிடுவார்கள்' என்பது ஆப்பிரிக்க பழமொழி. எதிராளியாக இல்லாதவரின் நிலையும் அப்படியே!

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)
Faculty Member
Saint Paul's Seminary
Tiruchirappalli - 620 001


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!