Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                  Year 2  
                                      ஆண்டின் பொதுக்காலம் 4ஆம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
 
ஓர் இறைவாக்கினரை ஏற்படுத்துவேன். என் வார்த்தைகளை அவருடைய வாயில் வைப்பேன்.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 18: 15-20


அந்நாள்களில்

மோசே மக்களிடம் கூறியது: உன் கடவுளாகிய ஆண்டவர் உன் சகோதரர் நடுவினின்று என்னைப் போல் ஓர் இறைவாக்கினரை ஏற்படுத்துவார். நீ அவருக்குச் செவிகொடு. ஓரேபில் திருப்பேரவை கூடிய நாளில், நீ உன் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடி, நான் இறந்து போகாதபடி, என் கடவுளாகிய ஆண்டவரின் குரலொலியை இனி நான் கேட்காமலும் இப்பெரும் நெருப்பை இனி நான் காணாமலும் இருப்பேனாக என்று விண்ணப்பித்தபோது, ஆண்டவர் என்னை நோக்கி, அவர்கள் சொன்னதெல்லாம் சரி என்றார். உன்னைப் போல் ஓர் இறைவாக்கினனை அவர்களுடைய சகோதரர்களினின்று நான் அவர்களுக்காக ஏற்படுத்துவேன். என் வார்த்தைகளை அவனுடைய வாயில் வைப்பேன். நான் கட்டளையிடுவது அனைத்தையும் அவன் அவர்களுக்குச் சொல்வான். என் பெயரால் அவன் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவி கொடாதவனை நான் வேரறுப்பேன்.

ஆனால், ஓர் இறைவாக்கினன் எனது பெயரால் பேசுவதாக எண்ணிக்கொண்டு, நான் அவனுக்குக் கட்டளையிடாதவற்றைப் பேசினால், அல்லது வேற்றுத் தெய்வங்களின் பெயரால் பேசினால், அந்த இறைவாக்கினன் சாவான்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்திபா 95: 1-2. 6-7. 8-9 (பல்லவி: 8b,7c காண்க) Mp3
=================================================================================

பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்; ஆண்டவர் குரலுக்குச் செவிசாய்ப்பீர்.
1
வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்.
2
நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். - பல்லவி

6
வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம்.
7
அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! - பல்லவி

8
அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
9
அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். - பல்லவி


================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
 கன்னிப் பெண் தூயவராக இருக்கும் வண்ணம் ஆண்டவருக்கு உரியவற்றில் அக்கறையாக இருக்கிறார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 7: 32-35

சகோதரர் சகோதரிகளே,

நீங்கள் கவலையற்றவர்களாய் இருக்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன். மணமாகாதவர் ஆண்டவருக்கு உரியவற்றில் அக்கறை கொள்கிறார்; எப்படி அவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக் கொண்டிருக்கிறார். ஆனால் மணமானவர் உலகுக்கு உரியவற்றில் அக்கறை கொள்கிறார்; எப்படித் தம் மனைவிக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் மனம் பிளவுபட்டுள்ளது. மணமாகாத பெண்ணும் கன்னிப் பெண்ணும் ஆண்டவருக்கு உரியவற்றில் அக்கறை கொள்வதால் அவர்கள் உடலிலும் உள்ளத்திலும் தூயோர் ஆகின்றனர். ஆனால் மணமான பெண், உலகுக்கு உரியவற்றில் அக்கறை கொள்வதால் எப்படித் தம் கணவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார்.

உங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல, உங்கள் நலனுக்காகவே இதை நான் சொல்கிறேன். எல்லாம் ஒழுங்காய் இருக்கவும் நீங்கள் முழு மனத்தோடு ஆண்டவரிடம் பற்றுக்கொண்டிருக்கவுமே இவ்வாறு சொல்கிறேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 4: 16

அல்லேலூயா, அல்லேலூயா! காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடரொளி உதித்துள்ளது. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார்.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 21-28

ஒருமுறை இயேசுவும் அவர் சீடர்களும் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார். அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த ஆவி, "நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்" என்று கத்தியது. "வாயை மூடு, இவரை விட்டு வெளியே போ" என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது அத்தீய ஆவி அம் மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங் கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று. அவர்கள் அனைவரும் திகைப்புற்று, "இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!" என்று தங்களிடையே பேசிக்கொண்டனர். அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================

I இணைச்சட்டம் 18: 15-20
II 1 கொரிந்தியர் 7: 32-35
III மாற்கு 1: 21-28

"நம் நடுவே பெரிய இறைவாக்கினர்"


நிகழ்வு

இலண்டன் மாநகர் வழியாக ஓடும் தேம்ஸ் ஆற்றில் கப்பல் போக்குவரத்து சிறப்பான முறையில் நடந்ததால், பலரும் அங்கு வருவதும் போவதுமாக இருந்தார்கள். அவர்கள் நடுவில் இறைவார்த்தையை எடுத்துரைக்க முடிவுசெய்தார் அருள்பணியாளர் ஒருவர். அதற்காக அவர் ஒரு சுமைதூக்கும் தொழிலாளியைப் போன்று உடை அணிந்துகொண்டு, உடைமைகளை கப்பலிலிருந்து எடுத்து, அந்த உடைமைகளின் உரிமையாளர் போகவேண்டிய இடம்வரைக்கும் கொண்டுசென்று, போகிற வழியிலேயே இறைவாக்கு உரைத்து வந்தார். இது பெரிய பலனைத் தந்தது.

இதைக் கவனித்து வந்த ஒருவன், சுமைதூக்கும் தொழிலாளி உடையில் இருந்த அருள்பணியாளரை அவமானப்படுத்த நினைத்தான். அதற்காக அவன் தக்க தருணத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தான். ஒருநாள் அருள்பணியாளர் கப்பலிலிருந்து ஒரு செல்வச் சீமாட்டியின் உடைமைகளை தூக்கிக்கொண்டு, கப்பலுக்கும் துறைமுகத்திற்கும் இடையே போடப்பட்டிருந்த பலகை வழியாக நடந்துவந்துகொண்டிருக்கும்பொழுது, இவன் அவர்மீது மோத, அவர் செல்வச் சீமாட்டியின் உடைமைகளோடு கடலுக்குள் விழுந்தார். இதைச் சுற்றி இருந்து பார்த்துக்கொண்டிருந்த அனைவரும் சத்தமாகச் சிரித்தனர்.

இதையடுத்து, உடைமைகளோடு கடலுக்குள் விழுந்த சுமைதூக்கும் தொழிலாளியின் உடையில் இருந்த அருள்பணியாளர் என்ன செய்யப் போகிறார் என்று அங்கிருந்தவர்கள் அவரையே பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது, அவர் உடைமைகளோடு யோடு நீந்திக் கரையை வந்தடைந்தார். தன்னால் கடலுக்குள் தள்ளிவிடப்பட்ட அருள்பணியாளர் கரைக்கு வந்துவிட்டாரே, இனி அவர் என்னை என்னச் செய்யப் போகிறாரோ! என்று அவரைத் தள்ளிவிட்டவன் அச்சத்தோடு நின்றுகொண்டிருக்கும்பொழுது, அருள்பணியாளர் அவனுக்கு மிகவும் அன்போடு இறைவார்த்தையை எடுத்துரைத்து, அவன் ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளச் செய்தார். இப்படிப் பலருக்கும் இறைவார்த்தையை எடுத்துரைத்து, அவர்களை ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கைகொள்ளச் செய்தார் சுமைதூக்கும் தொழிலாளியின் உடையில் இருந்த அந்த அருள்பணியாளர்.

ஒரு சாதாரண சுமை தூக்கும் தொழிலாளியைப் போன்று உடையடைந்து, தேம்ஸ் ஆற்றின் வழியாகப் பயணம் செய்தோருக்கு இறைவார்த்தையை அறிவித்த அருள்பணியாளரின் செயல் உண்மையிலேயே பாராட்டிற்குரியது. பொதுக்காலம் நான்காம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, இயேசு என்னும் பெரிய இறைவாக்கினர் மக்கள் நடுவில் இறையாட்சிப் பணி செய்வதைக் குறித்து எடுத்துக்கூறுகின்றது. இயேசு ஆற்றிய இறையாட்சிப் பணி நமக்கு எத்தகைய செய்தியைத் தருகின்றது என்பதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இறைவாக்கினரை ஏற்படுத்தப்போவது பற்றிய முன்னறிவிப்பு

இணைச்சட்ட நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், ஆண்டவராகிய கடவுள் மக்கள் நடுவினின்று ஓர் இறைவாக்கினரை ஏற்படுத்தப் போவதைப் பற்றி எடுத்துக்கூறுகின்றது. இது குறித்து நாம் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு இணைச்சட்ட நூல் 13: 1-5 இல் இடம்பெறுகின்ற இறைவார்த்தை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

இப்பகுதியில் போலி இறைவாக்கினனைப் பற்றிச் சொல்லப்படும். அந்தப் போலி இறைவாக்கினன், அடிமைத்தன வீடாக எகிப்திலிருந்து, வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டிற்கு அழைத்துவரும் கடவுளுக்கு எதிராக மக்களைத் திசை திருப்புபவனாக இருப்பான். இதனால் அந்தப் போலி இறைவாக்கினன் கொல்லப்படுவான் என்று அங்குச் சொல்லப்படும்; ஆனால், ஆண்டவர் ஏற்படுத்தப்போவதாக இன்றைய முதல் வாசகத்தில் சொல்லப்படும் இறைவாக்கினரோ, ஆண்டவர் கட்டளையிடுவதை மட்டுமே மக்களுக்கு சொல்பவாராக இருப்பார். மேலும் அவர் ஆண்டவரின் நெஞ்சத்திற்கு மிக நெருக்கமாக இருந்து, மக்களை ஆண்டவரின் கொண்டு வருவார்.

இந்தப் பின்னணியில் "வரவேண்டிய இறைவாக்கினர் இவர்தான்" (யோவா 6: 14, 7:40) என்று மக்கள் இயேசுவைப் பற்றிச் சொல்கின்ற வார்த்தைகளை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

இயேசுவே வரவேண்டிய இறைவாக்கினர்

மோசே வழியாக ஆண்டவர் உரைத்த "ஓர் இரைவாக்கினனை நான் அவர்களுக்கு ஏற்படுத்துவேன்" என்ற வார்த்தைகள் இயேசுவில் நிறைவேறுகின்றன. அதற்குச் சான்றாக இருப்பதுதான் இன்றைய நற்செய்தி வாசகம். நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, ஓய்வுநாளில் கப்பர்நாகுமில் உள்ள தொழுகைக்கூடத்தில் போதிக்கின்றார். இயேசுவின் போதனையைக் கேட்ட மக்கள் வியப்பில் ஆழ்கின்றார்கள்.

இயேசுவின் போதனையைக் கேட்டு மக்கள் வியப்பில் ஆழ்வதற்கு இரண்டு முதன்மையான காரணங்களைச் சொல்லலாம். ஒன்று, இயேசு தானாக எதையும் பேசவில்லை; தன்னை அனுப்பிய தந்தை என்ன சொல்லவேண்டும், என்ன பேசவேண்டும் என்று கட்டளையிட்டிருந்தாரோ, அதைப் பற்றியே பேசினார் (யோவா 12: 49). இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினரை ஏற்படுத்தப்போவதாகச் சொல்லும் கடவுள், தான் கட்டளையிடும் அனைத்தையும் அவன் அவர்களுக்குச் சொல்வான் என்பார். அந்த அடிப்படையில் இயேசு, தந்தைக் கடவுள் தனக்குச் சொன்னதையே பேசியதால், அவருடைய போதனையைக் கேட்ட மக்கள் வியப்புறுகின்றார்கள்.

இரண்டு, இயேசு மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு போதித்தார். இயேசு அதிகாரத்தோடு போதித்ததற்கு, அவருடைய வாழ்வும் ஒரு காரணமாக இருந்தது என்று சொல்லலாம். ஏனெனில், பரிசேயர்கள் சொன்னார்கள்; அதைச் செயலில் காட்டவில்லை (மத் 23: 4). இயேசு அப்படியில்லை. அவர் சொன்னதைச் செய்தார்; சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராக இருந்தார் (லூக் 24: 19). இதனாலேயே இயேசுவின் போதனையைக் கேட்டு மக்கள் வியந்தார்கள்.

தீய ஆவிகளின்மீதும் அதிகாரம் கொண்ட இயேசு

கப்பர்நாகுமில் உள்ள தொழுகைக்கூடத்தில் இருந்தவர்கள் இயேசுவின் போதனையைக் கேட்டு வியப்புற்றுக்கொண்டிருக்கும்பொழுதே, அவர்கள் மேலும் வியப்புறும் வகையில் இயேசு வேறொரு செயலைச் செய்கின்றார். அதுதான் அங்கிருந்த தீய ஆவி பிடித்திருந்த மனிதரிடமிருந்து தீய ஆவியை விரட்டியது. இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பலர் தீய ஆவிகளை விரட்டினார்கள்; ஆனால், அவர்கள் தன்னலத்திற்காகத் தீய ஆவியை விரட்டினார்கள்; தீய ஆவி உட்பட எல்லாவற்றின்மீதும் அதிகாரம்கொண்டிருந்த இயேசுவோ தீய ஆவியை விரட்டியதன் மூலம் சாத்தானின் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது, இறையாட்சி தொடங்கிவிட்டது என்பதை உரக்கச் சொல்லி ஆண்டவருக்குப் பெருமை சேர்த்தார். நாம் எந்தவொரு செயலைச் செய்தாலும், அதில் நமக்குப் பெருமையும் புகழும் சேரவேண்டும் என்று எண்ணிச் செய்யாமல், கடவுளுக்குச் சேர வேண்டும் என்று எண்ணிச் செயல்பட்ட இயேசுவைப் போன்று செயல்பட வேண்டும்.

எனவே, நாம் பெரிய இறைவாக்கினராய் மக்கள் நடுவில் பணியாற்றிய இயேசுவைப் போன்று சொல்லிலும் செயலிலும் வல்லவர்களாய் விளங்கி, இறையாட்சி இம்மண்ணில் வர ஒரு கருவியாய் இருப்போம்.

சிந்தனை

பிள்ளைகளே, நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம் (1 யோவா 3: 18) என்பார் திருத்தூதர் புனித யோவான். ஆகையால், நாம் செயலில் தன் அன்பை வெளிப்படுத்தி, வாழ்ந்ததையே போதித்த, பெரிய இறைவாக்கினராகிய இயேசுவின் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 அதிகாரத்தின் ஊற்றும் பணியும்

 இணைச்சட்டம் 18:15-20
 1 கொரிந்தியர் 7:32-35
 மாற்கு 1:21-28
ஒரு சாதாரண தாள். பத்திரம் எழுதுமிடத்தில் கையெழுத்து வைக்கப்பட்டு, முத்திரை இடப்பட்டவுடன் சொத்து என்று ஆகிவிடுகிறது.
ஒரு சாதாரண தாள். ஆளுநரின் கையொப்பம் இருந்தால் அது பணம் என்றாகிவிடுகிறது.

முன்பின் தெரியாத இருவர். திருமண நிகழ்வு. மணமகன் மணமகளுக்கு மாங்கல்யம் அல்லது மோதிரம் அணிவிக்க, ஒருவர் மற்றவர்மேல் அதிகாரம் கொண்டவர்களாக மாறுகின்றனர். ஒருவர் மற்றவர்மேல் உரிமை கொண்டுகின்றனர்.
எளிய பின்புலத்திலிருந்து வரும் ஒருவர். அருள்பணியாளராக அருள்பொழிவு பெற்றவுடன் அவர் தன் ஆயருக்குக் கீழ் மறைமாவட்டத்தின் பங்கு அல்லது நிறுவனத்தில் அதிகாரம் பெற்றவராக மாறுகின்றார்.

பேருந்து ஓட்டுநருக்கு பேருந்தின் மேல் அதிகாரம். நடத்துனருக்குப் பயணிகள் மேல் அதிகாரம். மருத்துவமனையில் மருத்துவருக்கு நோயுற்றவர்கள்மேல் அதிகாரம். நாட்டின் தலைவருக்கு அந்நாட்டு மக்கள்மேல் அதிகாரம் என எல்லா நிலைகளிலும் அதிகாரத்தின் இருப்பும் இயக்கமும் இருப்பதை நாம் காண்கிறோம்.
சில அதிகாரங்களைக் கண்டு நாம் அஞ்சுகின்றோம்.
சில அதிகாரங்களை நாம் வெறுக்கிறோம்.
சில அதிகாரங்களை நாம் விரும்பி ஏற்றுக்கொள்கிறோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு அதிகாரத்தோடு போதிக்கின்றார், அதிகாரத்தோடு தீய ஆவிகளுக்குக் கட்டளை இடுகின்றார். இவை இரண்டையும் கேட்கின்ற, காண்கின்ற மக்கள் திரள் வியக்கிறது.
தீய ஆவி தொழுகைக்கூடத்தில் இருக்கிறது. 'நீர் யாரென்று எனக்குத் தெரியும்' என்று இயேசுவை நோக்கிச் சொல்வதோடு, 'உமக்கு இங்கு என்ன வேலை?' என்று கேட்கிறது.
உண்மையில், 'உனக்கு இங்கு என்ன வேலை?' என்று இயேசுதான் தீய ஆவியிடம் கேட்டிருக்க வேண்டும்.
மக்கள் கூடி இறைவேண்டல் செய்யும் இடத்தில் தீய ஆவி எப்படி வந்தது?
மக்கள் வாரந்தோறும் தொழுகைக்கூடத்திற்கு வந்தார்களோ இல்லையா, தீய ஆவி ரெகுலராக வந்தது. தீய ஆவி வந்து செல்லும் அளவுக்குத்தான் தொழுகைக்கூடத்தின் இயக்கம் இருந்தது என்று எண்ணத் தோன்றுகிறது. தீய ஆவிக்கு தொழுகைக்கூடம் பிடித்திருந்தது.
தீய ஆவியின் அதிகாரத்திற்குள் இருந்த ஒரு நபரை இயேசு விடுவிக்கின்றார். ஆக, உண்மையான அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்பது இந்த நிகழ்வின் வழியாகத் தெளிவாகிறது.

இஸ்ரயேல் மக்கள் அதிகாரத்தை இரண்டு நிலைகளில் பார்த்தனர்: ஒன்று, மக்களால் மக்களுக்காக உருவாக்கப்படும் அதிகாரம். குறிப்பாக, ஒரு குடும்பத்தில் பெற்றோர் தங்கள் குழந்தைகள்மேல் கொண்டுள்ள அதிகாரம், ஓர் அரசன் தன் மக்கள்மேல் கொண்டிருந்த அதிகாரம், மறைநூல் அறிஞர்கள் தங்கள் விளக்கங்களை வழங்கத் தாங்கள் சார்ந்திருந்த பள்ளியின் வழியாகப் பெற்ற அதிகாரம், ஆலயத்தில் குருக்கள் பெற்றிருந்த அதிகாரம் போன்றவை. இது காலத்திற்கும் இடத்திற்கும் உட்பட்டது. காலத்தையும் இடத்தையும் தாண்டி ஒருவர் அதிகாரம் செலுத்த முடியாது. எடுத்துக்காட்டாக, நான் பெற்றோர் என்பதற்காக எனக்கு அடுத்திருக்கும் வீட்டில் உள்ள குழந்தையின்மேல் அதிகாரம் செலுத்த முடியாது. இரண்டு, இறைவன் அல்லது கடவுள் மக்களுக்கு வழங்கும் அதிகாரம். இது பற்றிய கேள்வியை இயேசு பரிசேயர்களிடம் கேட்கின்றார்: 'திருமுழுக்கு யோவானுக்கு, திருமுழுக்கு கொடுக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது? மண்ணிலிருந்தா? விண்ணிலிருந்தா?' இயேசுவின் இந்தக் கேள்விக்கு அவர்கள் பதிலிறுக்க மறுக்கின்றனர். மேலும், இயேசுவின் பணிக்காலம் முழுவதும், அவருடைய எதிரிகள், 'பாவங்களை மன்னிக்க இவர் யார்?' 'நீர் எந்த அதிகாரத்தால் இப்படிச் செய்கின்றீர்?' என அவரிடம் நிறையக் கேள்விகள் கேட்கின்றனர். தன் பாடுகளுக்கு முன் இயேசு விசாரிக்கப்படும் நிகழ்வில்கூட, 'உன்னை விடுதலை செய்யவும் எனக்கு அதிகாரம் உண்டு, உன்னைச் சிலுவையில் அறையவும் எனக்கு அதிகாரம் உண்டு என்பது உனக்குத் தெரியாதா?' எனப் பிலாத்து இயேசுவிடம் கேட்க, இயேசு, 'மேலிருந்து அருளப்படாவிடில் உமக்கு என்மேல் எந்த அதிகாரமும் இராது' என்கிறார் (காண். யோவா 19:10-11).

மேலிருந்து வரும் அதிகாரம் அல்லது இறைவன் தரும் அதிகாரம் என்றால் என்ன?
இதைப் புரிந்துகொள்ள இன்றைய முதல் வாசகம் (காண். இச 18:15-20) உதவுகிறது. இஸ்ரயேல் மக்கள் பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டுக்குள் நுழையுமுன் அவர்களோடு உரையாற்றும் மோசே, 'உன் கடவுளாகிய ஆண்டவர் உன் சகோதரர் நடுவினின்று என்னைப் போல் ஓர் இறைவாக்கினரை ஏற்படுத்துவார்' என்கிறார். இந்த இறைவாக்கினர் யார்? என்ற கேள்வி யூத இலக்கியங்கள் பலவற்றில் எழுகின்றது. அதிகமான இலக்கியங்கள், 'பொதுவான இறைவாக்கினர் பற்றிய பதிவு இது' என்றும், சில, 'இது இறைவாக்கினர் எரேமியாவைக் குறிக்கிறது' என்றும் சொல்கின்றனர். ஆனால், நற்செய்தியாளர்களைப் பொருத்தவரையில், 'இது இயேசுவையே குறிக்கிறது.' ஏனெனில், இந்த இறைவாக்கினர் பெற்றிருக்கும் மூன்று பண்புகளை இயேசு பெற்றிருக்கின்றார்.

அவை எவை?
(அ) ஆண்டவர் தாமே அந்த இறைவாக்கினரை மக்கள் நடுவினின்று ஏற்படுத்துவார்
(ஆ) ஆண்டவர் தம் வார்த்தைகளை அவருடைய வாயில் வைப்பார்.
(இ) ஆண்டவர் கட்டளையிடுவது அனைத்தையும் அந்த இறைவாக்கினர் பேசுவார்.
ஆக, இறைவாக்கினர் என்பவர் வரவிருப்பவற்றை முன்குறித்துச் சொல்லும் குறிசொல்பவர் அல்லது சோதிடக்காரர் என்ற நிலை மாறி, அவர்கள் மக்கள் முன் இறைவன் சார்பாகவும், இறைவன் முன் மக்கள் சார்பாகவும் பேசுபவர் என்ற புரிதல் உருவாகிறது. அந்த நிலையில் இயேசுவின் இறையாட்சிப் பணி என்பது ஓர் இறைவாக்கினர் பணியாக இருக்கிறது. ஆண்டவரின் வார்த்தைகளை அறிவிக்கின்றார், வல்ல செயல்கள் செய்கின்றார்.
இயேசு இரண்டு நிலைகளில் தனக்கு முந்தைய இறைவாக்கினர்கள் மற்றும் தன் சமகாலத்து மறைநூல் அறிஞர்களைவிட மேன்மையானவராக இருக்கிறார்:
(அ) மற்ற இறைவாக்கினர்கள் எல்லாம் இறைவாக்குரைக்கும்போது, 'ஆண்டவர் கூறுகிறார்' என ஆண்டவரின் அதிகாரத்தின்கீழ் இறைவாக்கு உரைத்தனர். ஆனால், இயேசுவோ, 'நான் உனக்குச் சொல்கிறேன். எழுந்து நட!' என்று தன் வார்த்தைகளின் அதிகாரத்தை தனக்குள்ளே கொண்டிருக்கின்றார்.

(ஆ) மற்ற மறைநூல் அறிஞர்கள் மறைநூல் பகுதிகளை விளக்கிச் சொல்லும்போது, தங்களுடைய விளக்கவுரைகளை தங்களுக்கு முன்சென்ற மறைநூல் அறிஞர்கள் மற்றும் தாங்கள் சார்ந்திருந்த பள்ளிகளின் கருத்துகளை ஒட்டி விளக்கம் தந்தனர். எடுத்துக்காட்டாக, ஒரு ரபி இன்னொரு ரபியின் விளக்கத்தை ஒட்டியே தன் விளக்கத்தையும் அளிப்பார். ஆனால் இயேசு, தொழுகைக்கூடத்தில் எசாயாவின் இறைவாக்குப் பகுதியை வாசித்தவுடன், அதற்கு விளக்கம் தருவதற்குப் பதிலா, 'நீங்கள் கேட்ட இந்த இறைவாக்கு இன்று நிறைவேறிற்று!' என்கிறார் (காண். லூக் 4). தானே இறைவாக்கு நூல்களின் நிறைவு எனத் தன்னை முன்மொழிகிறார் இயேசு.
இந்த இரண்டும் இன்றைய நற்செய்தி வாசகத்திலும் நடந்தேறுகிறது.
முதலில், இயேசு அதிகாரம் கொண்டவராகப் போதிக்கின்றார்.

இரண்டு, தீய ஆவி மேல் அதிகாரம் கொண்டு தீய ஆவியைத் தன் சொல்லால், தன் அதிகாரத்தால் விரட்டுகின்றார்.
இந்தப் பின்புலத்தில்தான், எம்மாவு சீடர்கள் எருசலேமிலிருந்து வழிநடந்தபோது, தங்களோடு மறைவாக வழிநடந்த இயேசுவிடம், 'நாசரேத்து இயேசுவைப் பற்றியேதான் பேசுகிறோம். அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார்' (காண். லூக் 24:19) எனப் பதிவு செய்கின்றார்.

மாற்கு நற்செய்தியில், இயேசு தன் முதற்சீடர்களை அழைத்த பின்னர், பதிவு செய்யப்படும் முதல் நிகழ்வே அவருடைய போதனை மற்றும் வல்ல செயலின் இயல்பை எடுத்துரைப்பதாக இருக்கின்றது. இவ்வாறாக, மாற்கு, மக்களும் தீய ஆவிகளும் இயேசுவின் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டதாகப் பதிவு செய்கின்றார்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 7:32-35), மணத்துறவு பற்றித் தொடர்ந்து பேசுகின்றார் பவுல். திருமண உறவில் கணவன் மனைவி மேலும், மனைவி கணவன் மேலும் கொண்டிருக்கும் அதிகாரத்தில் உரிமை இருப்பதோடு, கவலையும் இருப்பதாகச் சொல்கின்றார் பவுல். ஏனெனில், அங்கே ஒருவர் அடுத்திருப்பவருக்கு உகந்ததைச் செய்யும்போதே அங்கே அதிகாரம் கிடைக்கிறது. எடுத்துக்காட்டாக, கணவர் தன் மனைவிமேல் அதிகாரம் கொள்ள வேண்டுமெனில், அவருக்கு உகந்ததைச் செய்ய வேண்டும். பல நேரங்களில் அடுத்தவருக்கு உகந்தது என்று அறிந்துகொள்வதே பெரிய போராட்டமாக அங்கு இருக்கிறது. ஆனால், மணமாகாதவர் ஆண்டவருக்கு உகந்ததை நிறைவேற்றுவதால் அவர் ஆண்டவரிடம் பற்றுக்கொண்டிருக்கிறார். ஆண்டவரின் பொருட்டு தன் அதிகாரத்தை இழக்க முன் வருகின்றார்.

ஆக,
முதல் வாசகத்தில், மோசே, இறைவாக்கினரின் அதிகாரம் இறைவனில் ஊற்றெடுக்கிறது என முன்மொழிகிறார்.
நற்செய்தி வாசகத்தில், இயேசு, இறைவனின் மகனாக, தானே அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார். அந்த அதிகாரம் அவருடைய போதனை மற்றும் வல்ல செயலில் வெளிப்படுகிறது.

இரண்டாம் வாசகத்தில், மணவுறவின் அதிகாரத்தையும் தாண்டி, மணத்துறவின் அதிகாரம் ஒருவரைக் கவலையின்றி இருக்கவும், ஆண்டவர்மேல் பற்றுக்கொண்டிருக்கவும் செய்கிறது என்கிறார் பவுல்.
அதிகாரம் இன்று எல்லா நிலைகளிலும் மேலோங்கி நிற்கிறது. அதிகாரம் பல நேரங்களில் வன்முறையால் பிறழ்வுபடுகிறது. அல்லது அதிகாரம் சில நேரங்களில் வலுவற்றவர்களுக்கு எதிராகக் கட்டவிழ்க்கப்பட்டு, வலுவற்றவர்களை இன்னும் நொறுக்குகிறது.

நாம் எந்த நிலையில் இருந்தாலும் நமக்கென்று ஓர் அதிகாரம் இருக்கவே செய்கிறது. ஒரு குழந்தையும் கூட தான் வைத்திருக்கும் தன் பொம்மையின்மேல் தன் அதிகாரத்தைக் காட்ட விழைகிறது.

இன்று நம் அதிகாரத்தின் ஊற்றும் பணியும் எப்படி இருக்க வேண்டும்?
(அ) இறைமைய அதிகாரம்:
இறைவன் ஒருவரே நம் அதிகாரத்தின் ஊற்று என எண்ண வேண்டும். இப்படி எண்ணுவதால் நம் அதிகாரத்தின் வரையறையை நாம் உணர்ந்துகொள்ள முடியும். இறைவன் எனக்கு அளிக்கும் அதிகாரம் நான் நன்மை - தீமையைத் தெரிவு செய்யப் பயன்படுகிறது. அந்த அடிப்படை அதிகாரத்தையே நான் தவறாகப் பயன்படுத்தினேன் என்றால், மற்ற அதிகாரத்தையும் நான் தவறாகவே பயன்படுத்துவேன். நான் எந்த நிலையில் அதிகாரம் கொண்டிருந்தாலும் என் அதிகாரத்தின் ஊற்று இறைவன் என்று இருக்க வேண்டும். புனித பவுல் அப்படி நினைத்ததால்தான், மணத்துறவு பற்றிய அறிவுரையை அவரால் வழங்க இயலுகிறது.

(ஆ) அதிகாரம் பணி செய்வதற்கே:
இயேசுவின் அதிகாரம் போதிப்பதிலும், வல்ல செயல் செய்வதிலும் வெளிப்படுகிறது. ஆக, சொல்லும் செயலும் ஒருவரின் அதிகாரத்திலிருந்து புறப்படுகின்றன. அப்படிப் புறப்படும் சொல்லும் செயலும் மற்றவருக்கு நன்மை செய்ய வேண்டுமே அன்றி, ஒருபோதும் தீமை செய்தல் கூடாது. இன்று, அதிகாரப் பிறழ்வுகள் சொல் மற்றும் செயல் என்னும் இரண்டு நிலைகளில்தாம் நடந்தேறுகின்றன. அடுத்தவர் வாழ்வு பெறுகிறார் என்பதோடு, அங்கே நாமும் வாழ்வு பெற வேண்டும். என் அதிகாரத்தால் தீமை அகல வேண்டும்.

(இ) ஆண்டவருக்கு உகந்தது:
ஆண்டவருக்கு உகந்ததை நாடுபவர்கள் கவலையின்றி இருப்பார்கள் எனச் சொல்கிறார் பவுல். ஒருவர் தன் அதிகாரத்தின் ஊற்று இறைவன் என்பதை உணர்ந்தால், அவர் மற்றவருக்குத் தன் சொல்லாலும் செயலாலும் நன்மைகள் செய்தால் அவர் ஆண்டவருக்கு உகந்ததையே செய்கின்றார். ஆக, வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், எனக்கு உகந்ததை நாடாது, ஆண்டவருக்கு உகந்ததை நாட நான் முயற்சி செய்ய வேண்டும். பல நேரங்களில் எனக்கு உகந்தது எது என்பதை அறிந்துகொள்ளவே எனக்குக் குழப்பமாக இருக்க, ஆண்டவருக்கு உகந்ததை நான் எப்படிக் கண்டறிவது என்ற கேள்வி எழலாம்? ரொம்ப எளிதான விடயம். எனக்கு உகந்ததை நான் செய்யும்போது அங்கே கவலை பிறக்கிறது. ஆண்டவருக்கு உரியதை நான் செய்யும் போது கவலைகள் அகல்கின்றன. இதுவே அளவுகோல்.
(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!