Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                         
                                         திருவருகைக்காலம் 4ம்  ஞாயிறு - 1ம் ஆண்டு
     
=================================================================================
முதல் வாசகம்

=================================================================================
இதோ, கன்னிப் பெண் கருத்தாங்குவார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 7: 10-14

அந்நாள்களில் ஆண்டவர் ஆகாசுக்கு மீண்டும் தம் திருவாக்கை அருளிச் சொல்லியது: "உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு ஓர் அடையாளத்தை அருளுமாறு கேளும்; அது கீழே பாதாளத்திலோ, மேலே வானத்திலோ தோன்றுமாறு கேட்டுக்கொள்ளும்" என்றார். அதற்கு ஆகாசு, "நான் கேட்க மாட்டேன். ஆண்டவரைச் சோதிக்க மாட்டேன்" என்றார்.

அதற்கு எசாயா: "தாவீதின் குடும்பத்தாரே! நான் சொல்வதைக் கேளுங்கள்; மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது போதாதோ? என் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களோ?

ஆதலால் ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கன்னிப் பெண் கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவர் `இம்மானுவேல்' என்று பெயரிடுவார்."


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் -  திபா 24: 1-2. 3-4ab. 5-6 (பல்லவி: 7c, 10b) Mp3
=================================================================================
 பல்லவி: ஆண்டவர் எழுந்தருள்வார்; மாட்சிமிகு மன்னர் இவரே.

1 மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். 2 ஏனெனில், அவரே கடல்களின்மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. பல்லவி

3 ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்? 4யb கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். பல்லவி

5 இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார். 6 அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே; யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. பல்லவி



================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
  தாவீதின் மரபினரான இயேசு கிறிஸ்து கடவுளின் மகன்

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-7

கடவுளின் அன்பைப் பெற்று இறைமக்களாக அழைக்கப்பட்டுள்ள உரோமை நகர மக்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் பணியாளனும் திருத்தூதனாக அழைப்புப் பெற்றவனும் கடவுளின் நற்செய்திப் பணிக்கென ஒதுக்கி வைக்கப்பட்டவனுமாகிய பவுல் எழுதுவது: நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிட மிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக! நற்செய்தியைத் தருவதாகக் கடவுள் தம் இறைவாக்கினர் வழியாக ஏற்கெனவே திருமறை நூலில் வாக்களித்திருந்தார்.

இந்த நற்செய்தி அவருடைய மகனைப் பற்றியதாகும். இவர் மனிதர் என்னும் முறையில் தாவீதின் வழிமரபினர்; தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட நிலையில் வல்லமையுள்ள இறைமகன். இவர் இறந்து உயிர்த்தெழுந்ததால் இந்த உண்மை நிலைநாட்டப்பட்டது.

இவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. பிற இனத்தார் அனைவரும் இவர்மீது நம்பிக்கை கொண்டு இவருக்குக் கீழ்ப்படியுமாறு இவர் பெயர் விளங்க இவர் வழியாகவே நாங்கள் திருத்தூதுப்பணி செய்வதற்குரிய அருளைப் பெற்றுக் கொண்டோம்.

பிற இனத்தவராகிய நீங்களும் இயேசு கிறிஸ்துவுக்கு உரியவர்களாய் இருக்க அழைப்புப் பெற்றிருக்கிறீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 1: 23

அல்லேலூயா, அல்லேலூயா! இதோ, கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல், அதாவது `கடவுள் நம்முடன் இருக்கிறார்' எனப் பெயரிடுவர். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
தாவீதின் மகனான யோசேப்புக்கு மண ஒப்பந்தமான மரியாவிடமிருந்து இயேசு பிறப்பார்.

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 18-24

இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார்.

அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.

அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, "யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்" என்றார். "இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்.

அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்" என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் `கடவுள் நம்முடன் இருக்கிறார்' என்பது பொருள். யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



19 12 2010 திருவருகைக்கால நான்காம் ஞாயிறு நமது வாழ்வில் கடவுள் பலவழிகளில் பேசுகின்றார். தன் உடனிருப்பை நமக்கு வெளிப்படுத்துகின்றார். திறந்த மனம், ஏற்றுக் கொள்ளும் பக்குவம், நேர்மையான எண்ணம் இருந்தால் அவரது உடனிருப்பை உணர்ந்து, அவரது குரல் கேட்க முடியும். யோசேப்பைப் போல் அருள் பெறவும் முடியும்.



2013 Dec 22 SUN: FOURTH SUNDAY OF ADVENT (O Rex Gentium)

Is 7: 10-14/ Ps 24: 1-2. 3-4. 5-6 (7c. 10b)/ Rom 1: 1-7/ Mt 1: 18-24

தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்பதற்கு ஏற்ப வரலாற்று இயேசுவின் பிறப்பில் நேர்மையானவராய் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மீட்புப் பணியில் இணை மீட்பராக திகழ்ந்த மரியாளின் அன்பு கணவராய் வாழ்ந்து சரித்திரம் படைத்தவர் வளனார்.

சரித்திரம் படைத்து இறைவனின் மீட்பு வரலாற்றில் இறையரசு கனவில் பேசாமடைந்தையாய் சிந்தித்து செயல்பட்ட வளனாரைப் போல வாழ தயாரா

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
I எசாயா 7: 10-14

II உரோமையர் 1: 1-7

III மத்தேயு 1: 18-24



கனவின் வழியாகப் பேசும் கடவுள்



நிகழ்வு



கி.மு. 44 ஆம் ஆண்டு, மார்ச் 14 ஆம் நாள் உரோமைப் பேரரசன் ஜூலியஸ் சீசர் தன்னுடைய மனைவி கல்புனியாவோடு படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தான். நள்ளிரவு நேரத்தில் கல்புனியா தூக்கத்தில் ஏதோ பேசுவதைக் கேட்டு, திடுக்கிட்டு எழுந்த ஜூலியஸ் சீசர், அவளைத் தட்டி எழுப்பி, "உனக்கு என்ன ஆயிற்று? என்று கேட்டான் ஜூலியஸ் சீசர். "அன்பரே! நாளைய நாளில் நீங்கள் செனட்டிற்குப் போகும்போது, அங்கு நீங்கள் கொல்லப்படுவதும் என்னுடைய மடியில் இரத்த வெள்ளத்தில் செத்துக்கிடப்பதுமாய்க் கனவு கண்டேன். அதனால் தயைகூர்ந்து நாளைய நாளில் நடக்கும் செனட்டிற்கு நீங்கள் போகவேண்டாம் என்றாள். "சரி, நீ சொல்வதுபோல் நாளை நான் சென்ட்டிற்குப் போகமாட்டேன் என்று உறுதிகூறினான் ஜூலியஸ் சீசர்.



மறுநாள் காலையில் ஜூலியஸ் சீசர், தன்னைப் பார்க்க வந்த தன்னுடைய நெருங்கிய நண்பனாகிய புரூட்டசிடம், "இன்றைக்கு நடப்பதாக இருக்கும் செனட் கூட்டத்தை இன்னொரு நாளைக்குத் தள்ளிவைக்கிறேன்... அதனால் கூட்டிற்கு வரும் எல்லாரிடமும் செய்தியைச் சொல்லிவிடுங்கள் என்றான். அதற்கு அவன், "பேரரசரே! இன்றைக்கு நடப்பதாக இருக்கும் செனட் கூட்டத்தை இன்னொரு நாளுக்குத் தள்ளிவைத்தால், எல்லாரும் உங்களைக் குறித்து, "இவன் கையாலாகாதாவன்" என்று தவறாகப் பேசுவார்களே என்று நயவஞ்சகமாகப் பேசினான். இதைக்கேட்டு சற்று தடுமாற்றம் அடைந்த ஜூலியஸ் சீசர், "ஆமாம், நீ சொல்வதுதான் சரி என்று தன்னுடைய மனைவியின் வார்த்தைகளைப் புறக்கணித்துவிட்டு, புரூட்டசோடு செனட் நடைபெறும் இடத்திற்குச் சென்றான்.



போகிற வழியில் ஜூலியஸ் சீசருக்கு நெருக்கமான ஒருவர், நடக்கப்போகும் சதியைக் குறித்து முன்கூட்டியே தெரிந்தவராய் அவரிடம் வந்து, "இதை நீங்கள் மட்டும் படியுங்கள் என்று சொல்லிவிட்டு ஒரு குறிப்பைக் கொடுத்துவிட்டுப் போனார். ஜூலியஸ் சீசர், அது ஒரு மனு என்று நினைத்துக்கொண்டு மற்ற காகிதங்களோடு வைத்துக்கொண்டான். செனட் நடைபெறவிருந்த இடத்தை ஜூலியஸ் சீசரும் புருட்டஸும் அடைந்த பிறகு, அந்தத் தருணத்திற்காகவே காத்திருந்தவர்கள் போல் செனட்டில் இருந்தவர்களும் ஜூலியஸ் சீசரின் நெருங்கிய நண்பனுமாகிய புரூட்டஸும் ஜூலியஸ் சீசர்மீது பாய்ந்து அவனைக் கொன்றுபோட்டார்கள். அவனோ இரத்த வெள்ளத்தில் இறந்துபோனான்.



தன்னுடைய மனைவிக்குத் தோன்றிய கனவின் வழியாக ஜூலியஸ் சீசர் எச்சரிக்கைப்பட்ட போதும், அதற்குப் பணிந்து நடக்காததால் அவன் கயவர்களால் கொல்லப்பட்டது மிகவும் வேதனைக்குரியது. இதற்கு முற்றிலும் மாறாக, கனவின் வழியாகப் பேசிய கடவுளுக்கு கடவுளின் தூதுவருடைய குரலுக்குச் - செவிகொடுத்த யோசேப்பைக் குறித்து இன்றைய நற்செய்தி வாசகம் பேசுகின்றது. யோசேப்பிற்குக் கனவின் வழியாகச் சொல்லப்பட்ட செய்தி என்ன? அதற்கு அவர் எவ்வாறு கீழ்ப்படிந்து நடந்தார்? நாம் எப்படி ஆண்டவரின் குரலுக்குக் கீழ்ப்படிந்து நடப்பது? என்பவற்றைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.



யோசேப்பு என்னும் நேர்மையாளர்



நற்செய்தி வாசகத்தில், நேர்மையாளர் யோசேப்பைக் குறித்து வாசிக்கின்றோம். இவர் தனக்கு மணஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த மரியா தன்னோடு கூடி வாழ்வதற்கு முன்பே கருவுற்றிருந்த செய்தியைக் கேள்விப்பட்டு, அவரை மறைவாய் விலக்கிவிடத் தீர்மானிக்கின்றார். இங்கு யோசேப்பு மரியாவிடம் (பெருந்தன்மையோடு) நடந்துகொண்டவிதம் கவனிக்கத்தக்கது.



மண ஒப்பந்தம் செய்யப்பட்ட பெண்ணிடம் கன்னிமை காணவில்லை என்றால், அப்பெண்ணைக் கல்லால் எறிந்து கொல்லவேண்டும் வேண்டும் என்பது மோசேயின் சட்டம் (இச 22: 20-21). மேலும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட ஒருவன், அந்தப் பெண்ணின் அருவருக்கத்தக்க செயலைப் பார்த்துவிட்டு, அவளிடம் முறிவுச் சீட்டு எழுதிக்கொடுத்துவிட்டு, அவளை அவளுடைய வீட்டிற்கு அனுப்பி விடலாம். இதையும் மோசேயின் சட்டம் கூறுகின்றது (இச 24:1). ஆனால், யோசேப்போ தனக்கு மணஒப்பந்தம் செய்யப்பட்ட மரியா தன்னோடு கூடி வாழ்வதற்கு முன்னமே கருவுற்றிருந்த செய்தியைக் கேள்விப்பட்டு, அவரைக் கல்லால் எறியவுமில்லை; மணமுறிவுச் சீட்டு எழுதிக் கொடுக்கவுமில்லை. மாறாக, மறைவாக விலக்கிவிட முடிவுசெய்கின்றார். இவ்வாறு அவர் நேர்மையாளராய் நடந்துகொள்கின்றார்.

திருவிவிலியம் "நேர்மையாளர்" என்பவரைச் சக மனிதரிடம் அன்போடும் இரக்கத்தோடும் நடந்துகொள்பவராகச் சுட்டிக்காட்டுக்கின்றது. இயேசு சொல்கின்ற இறுதித் தீர்ப்பு உவமை இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. இந்த உவமையில் வருகின்ற நேர்மையாளர்கள் (மத் 25: 37-39) சகமனிதர்களிடம் இரக்கத்தோடும் அன்போடும் நடப்பார்கள்; நற்செயல் புரிவார்கள். அந்த வகையில் யோசேப்பும் மரியாவின் மட்டில் இரத்தத்தோடு நடத்துகொண்டு, நேர்மையாளராய் மிளிர்கின்றார்.



கனவின் வழியாகப் பேசும் கடவுள்



யோசேப்பு, மரியாவைத் தனியாக விலக்கிவிடத் திட்டமிட்ட சமயத்தில்தான், கடவுள் தன்னுடைய தூதர்மூலம், யோசேப்பின் கனவில் தோன்றிப் பேசுகின்றார். கடவுள் கனவின் வழியாகப் பேசுவார் என்பதற்குத் திருவிவிலியத்தில் பல சான்றுகள் இருக்கின்றன. ".....கனவில் அவனோடு பேசுவேன்" (எண் 12:6) என்ற இறைவார்த்தையும், உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளையோர் காட்சிகளையும் காண்பார்கள் (யோவே 2: 28) என்ற இறைவார்த்தையும் இன்னும் ஒருசில இறைவார்த்தைகளும் (மத் 2:12,13,19,22) இதற்குச் சான்று பகர்கின்றன.



யோசேப்பின் கனவில் தோன்றிய கடவுளின் தூதர் அவரிடம், மரியா தூய ஆவியார்தான் கருவுற்றிருக்கின்றார் என்பதையும் அவரை ஏற்றுக்கொள்ளத் தயங்க வேண்டாம் என்பதையும் அவர் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார் என்பதையும் எடுத்துக்கூறுகின்றார். இவ்வாறு கனவின் வழியாகப் பேசிய கடவுளுக்கு கடவுளின் தூதருக்கு யோசேப்பு செவிமடுத்தாரா? அதன்பிறகு என்ன நடந்தது என்பன குறித்துத் தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.



இறைத் திருவுளத்தின்படி நடந்த யோசேப்பு



கடவுளின் தூதர் கனவின் மூலம் கடவுளின் திருவுளத்தை யோசேப்பிடம் எடுத்துச் சொன்னதும், அவர் தன்னுடைய மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ளத் தொடங்கி கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து நடக்கத் தொடங்குகின்றார். இதன்மூலம் யோசேப்பு, இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகும் பேறுபெறுகின்றார், மட்டுமல்லாமல், "நம்மோடு இருக்கும் கடவுளின்" உடனிருப்பை தன்னுடைய வாழ்நாள் முழுவதும் உணரத் தொடங்குகின்றார்.



யோசேப்பு கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து நடந்தது, நமக்கு முன் ஒரு கேள்வியை எழுப்புகின்றது. அது என்ன என்றால், நாம் கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து நடக்கின்றோமா? என்பதாகும். நிறைய நேரம் நாம் இன்றைய முதல் வாசகத்தில் வருகின்ற ஆகாசு மன்னனைப் போன்று கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து நடக்காமல், நம்முடைய விருப்பத்தின்படியே நடந்தே அழிந்து போகின்றோம். இத்தகைய சூழ்நிலையில் நாம் யோசேப்பைப் போன்று கடவுளின் திருவுளத்திற்கு நம்மையே கையளித்து, அதற்குப் பணிந்து நடந்தால், இயேசு கண்ட இறையாட்சிக் கனவு நனவாகும் என்பது உறுதி.



சிந்தனை



"உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ நான் வருகின்றேன்" (எபி 10: 9) என்று இயேசு கிறிஸ்து ஆண்டவரின் திருவுளத்தை நிறைவேற்றுவார். ஆதலால், நாமும் நம் ஆண்டவரைப் போன்று, யோசேப்பு, மரியாவைப் போன்று ஆண்டவரின் திருவுளத்தை நிறைவேற்ற முன்வருவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 


=================================================================================
திருப்பலி முன்னுரை
=================================================================================
திருவருகைக்காலத்தின் நான்காம் ஞாயிறு இன்று. விழாக் கொண்டாட்டத்திற்கான ஆயத்தங்களை செய்ய தொடங்கியுள்ள இந்த வேளையில் இந்த வாரத்தை, "அன்பின்" வாரம் என்றழைக்கின்றோம்.

யோவான் கூறியுள்ளவாறு 03: 16 தன் மகனையே அனுப்பி வைத்து, கடவுள் இந்த உலகை அன்பு செய்தார். அந்த மகனும் தன்னையே முழுமையாக தந்து உலகை நேசித்தார். இத்தகைய அன்பையே நமக்கும் தந்து, உலகம் முடியும் மட்டும் நம்மோடு இருந்து நம்மை அன்பு செய்து வருகின்றார்.

அன்பாக வந்த இறைமகனை இன்றும் வாழ்விலே கண்டு, சான்று பகர முன்வருவோம்.



=================================================================================
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
=================================================================================
மன்றாட்டு

திருஅவை அன்பர்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளிலும் உம் ஆவியை தந்து, அருள் பொழிந்தருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நாட்டிலே நல்ல மழையைத் தந்து, பூமி செழிக்கவும், மண் வளம் பெறவும், ஊர்வன பறப்பன, நடப்பன யாவும் நிறைந்த பயன் பெற, அருள் பொழிய இறவவா உம்மை மன்றாடுகின்றோம்.

பலியிலே பங்கேற்கும் நாங்கள் மிகுந்த நம்பிக்கையோடும், மகிழ்வோடும், அமைதியோடும், உண்மை அன்போடும் பெருவிழாவை கொண்டாடிட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

குடும்பத்தாரோடு பெருவிழாவைக் கொண்டாட பயணிக்க உள்ள அன்பர்களின் தூதர்களை கட்டளையிட்டு, மிகுந்த பாதுகாப்போடு பயணிக்கவும், கொண்டாட்டங்கள் மகிழ்வு தரவும், அருள் பொழிய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!