|
|
|
திருவருகைக்காலம்
4 ம் ஞாயிறு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஆண்டவர் என்னோடு இருக்கிறார்.
இறைவாக்கினர் சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் (2 சாமு.
7:1-5,8-12,14,16)
தாவீது அரசர் தம் அரண்மனையில் குடியேறியப்பின், சுற்றிலிருந்த
எல்லா எதிரிகளின் தொல்லையினின்றும் ஆண்டவர் அவருக்கு ஓய்வு அளித்தார்.
அப்போது இறைவாக்கினர் நாத்தானைத் தாவீது அழைத்து, பாரும் நான்
கேதுரு மரங்களான அரண்மனையில் நான் வாழ்கிறேன். கடவுளின் பேழையோ
கூடாரத்தில் வாழ்கிறது என்று கூறினார். அதற்கு நாத்தான் நீர்
விரும்பிய அனைத்தையும் செய்துவிடும்: ஏனெனில் ஆண்டவர் என்னோடு
இருக்கிறார் என்று அரசனிடம் சொன்னார். அன்று இரவே ஆண்டவரின்
வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது. நீ சென்று, என் ஊழியன்
தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: நான் தாக்குவதற்காக
எனக்கு கோவில் கட்டப்போகிறாயா? எனது ஊழியன் தாவீதிடம் படைகளின்
ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: என் மக்கள் இஸ்ரயேலின் தலைவனாக
விளங்க புல்வெளியில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த உன்னை நான் அழைத்தேன்.
நீ சென்றவிடமெல்லாம் நான் உன்னோடு இருந்தேன்: உன் கண்முன் உன்
எதிரிகள் அனைவரையும் அழித்தேன்: மேலும் உலகில் வாழும் பெரும்
மனிதர் போல் நீ புகழுறச் செய்தேன். எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு
ஓர் இடத்தை அளிப்பேன். அவர்கள் அந்த இடத்திலேயே வாழ வைப்பேன்.
என் மக்களாகிய இஸ்ரயேல் மீதும் நீதித் தலைவர்களை ஏற்படுத்திய
நாள்களாகிய தொடக்கத்தில் தீயவர்கள் அவர்கள் ஒடுக்கப்பட்டது போல
இனியும் அவர்கள் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள். அனைவரின் தொல்லைகளினின்றும்
எனக்கு நான் ஓய்வு அளிப்பேன். மேலும் ஆண்டவர் தாமே என்
வீட்டைக் கட்டப்போவதாக அவர் உனக்கு அறிவிக்கிறார். வாழ் நாள்
நிறைவுபெற்று நீ என் மூதாதையரோடு துயில்கொள்ளும் போது, உனக்கு
பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப் பின் நான் உயர்த்தி அவனது
அரசை நான் நிலைநாட்டுவேன். நான் அவனுக்கு தந்தையாக இருப்பேன்.
அவன் எனக்கு மகனாக இருப்பான். அவன் தவறுசெய்யும்போது மனித இயல்புக்கேற்ப
அடித்து, மனிதருக்கே உரிய துன்பங்களைத் தருவேன். முன்பாக உனது
குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை
என்றுமே நிலைத்திருக்கும்!
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
தி.பா: 89: 1-2, 3-4, 26, 28
Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்.
ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர்
எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன். உமது பேரன்பு என்றென்றும்
நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப் போல் உறுதியானது.
பல்லவி
நீர் உரைத்தது; |நான் தேர்ந்து கொண்டவனோடு உடன்படிக்கை
செய்துகொண்டேன்; என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது;
உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்; உன் அரியணையைத்
தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன். பல்லவி
நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை| என்று அவன் என்னை
அழைப்பான். அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு
செய்வேன்; அவனோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும்
நிலைத்திருக்கும். பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
இயேசு கிறிஸ்துவின் வழியாய் என்றென்றும் மாட்சி உரித்தாகுக!
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து
வாசகம் (16:2-27)
சகோதரர் சகோதரிகளே, இயேசு கிறிஸ்துவைப் பற்றி நான் பறைசாற்றும்
நற்செய்திக்கு ஏற்ப வாழக் கடவுள் உங்களை உறுதிப்படுத்த வல்லவர்.
ஊழி காலமாக மறைபொருளாக இருந்த இந்த நற்செய்தி இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இறைவாக்கினர் வாயிலாக இது நமக்குத் தெளிவாகியுள்ளது. என்றும்
வாழும் கடவுளின் கட்டளைப்படி எல்லா மக்களினங்களுக்கும் அது
தெரிய வந்துள்ளது. இதனால் அவர்கள் நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை
கொள்வர். ஞானமே உருவாகிய கடவுள் ஒருவருக்கே இயேசு கிறிஸ்துவின்
வழியாய் என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! விடிவிண்மீனே, முடிவிலா ஒளியின் சுடரே,
நீதியின் கதிரவனே, இருளிலும் மரண நிழலிலும் அவதிப்படுவோரைச் சுடர்வீசி
ஒளிர்விக்க வந்தருளும். அல்லேலூயா
=================================================================================
நற்செய்தி
வாசகம்
=================================================================================
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து
வாசகம் (லூக். 1:26-38)
ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள்
கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம்
அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும்
பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. வானதூதர்
மரியாவுக்குத் தோன்றி, "அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு
இருக்கிறார் " என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி,
இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். வானதூதர்
அவரைப் பார்த்து, "மரியா, அஞ்சவேண்டாம்: கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்.
இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்: அவருக்கு இயேசு என்னும்
பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்: உன்னத கடவுளின் மகன்
எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள்
அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும்
ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது " என்றார்.
அதற்கு மரியா வானதூதரிடம், "இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!
" என்றார். வானதூதர் அவரிடம், "தூய ஆவி உம்மீது வரும். உன்னத
கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்
போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய
எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார்.
கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம்.
ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" என்றார். பின்னர் மரியா,
"நான் ஆண்டவரின் அடிமை: உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்றார்.
அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 1
=================================================================================
"வானதூதர் அவரைப் பார்த்து, "மரியா, அஞ்சவேண்டாம்" கடவுளின்
அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப்
பெறுவீர்" அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்" என்றார்"
(லூக்கா 1"30-31)
மரியாவிடம் வந்த கபிரியேல் வானதூதர் கடவுளின் செய்தியை அவருக்கு
எடுத்துரைக்கிறார். ஆனால் மரியாவுக்கோ ஒரே குழப்பமும் கலக்கமும்தான்
மிஞ்சியது. மரியாவின் வழியாகப் பிறக்கவிருக்கும் குழந்தை கடவுளின்
வல்லமையால் இவ்வுலகுக்கு வரும் என்ற செய்தி மரியாவுக்கு அதிர்ச்சியாகத்தான்
இருந்திருக்க வேண்டும். ஆனால், வானதூதர் மரியாவுக்குத் தெளிவு
வழங்குகின்றார். மரியா கடவுளின் தனிப்பட்ட அன்புக்கு உரித்தானவர்
என்றும், கடவுளின் அருள் அவரிடம் நிறைவாக உள்ளது என்றும் வானதூதர்
உறுதிகூறுகின்றார். கடவுளின் அருள் நம் எல்லோருக்கும் கொடையாக
வழங்கப்படுகிறது. ஆனால் மரியா கடவுளின் மீட்புத் திட்டத்தில்
ஒரு சிறப்பிடம் வகிக்கிறார். அவர் கடவுளின் ஒரே மகனை இவ்வுலகிற்குப்
பெற்று வழங்கினார். இப்பெரும் பேறு மரியாவுக்குக் கடவுள் வழங்கிய
சிறப்புக் கொடை எனலாம். இதனால் மரியா இயேசுவின் தாய் மட்டுமல்ல,
இயேசுவின் வழியாக அருள்நிலையில் கடவுளின் பிள்ளைகளாக
மாறியிருக்கின்ற நமக்கும் அவர் தாயாகின்றார்.
மரியா ஈந்த மகன் மரியாவுக்கு மட்டும் உரியவரல்ல, அவர் உலகின்
சொத்து. அவருடைய பெயரே இந்த ஆழ்ந்த பொருளை விளக்கிநிற்கின்றது.
"இயேசு" என்னும் பெயருக்கு மீட்பர் என்பது பொருள். இயேசு நம்மை
மீட்கின்றார் என்றால் நாம் ஏதோ அடிமைநிலையில் இருந்ததால் நமக்கு
மீட்புத் தேவைப்பட்டது என்பதை நாம் உணரலாம். மனித வாழ்க்கை அனுபவமாகிய
பாவமும் சாவும் நம்மை அடிமைப்படுத்திய நிலையில் இயேசு கொணர்ந்த
மீட்பு நமக்கு ஒரு புதிய நிலையை வழங்குகிறது. நாம் பெறும்
புதிய நிலை கடவுளின் அன்பில் நாம் நிலைத்திருப்பதைக்
குறிக்கும். கடவுளோடு நமக்குள்ள நெருங்கிய உறவு நம்மை அவரோடு
இறுகப் பிணைப்பதால் நாம் கடவுளின் வல்லமையை நம் வாழ்க்கையில்
உணரமுடிகிறது. எவ்விதத் தயக்கமும் இன்றி நாம் கடவுளின் வழியில்
நடந்தால் அவர் தரும் அருள் ஒருநாளும் குறைபடாது.
மன்றாட்டு:
இறைவா, எங்கள் வாழ்க்கையில் தோன்றுகின்ற அச்சங்களை அகற்றியருளும்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 2
=================================================================================
I 2 சாமுவேல் 7: 1-5, 8b-12, 14-16
II உரோமையர் 16: 25-27
III லூக்கா 1: 26-38
"நான் உமது அடிமை"
நிகழ்வு
புனித பிலிப்பு நேரி வாழ்ந்த காலத்தில், உரோமைக்கு அருகில்
இருந்த ஒரு துறவுமடத்தில் புனிதத்திற்கு எடுத்துக்காட்டாக ஒரு
பெண் துறவி வாழ்ந்து வருகின்றார் என்று மக்கள்
பேசிக்கொண்டார்கள். இச்செய்தியை அப்போதிருந்த திருத்தந்தை
கேள்விப்பட்டார். அவர் பிலிப்பு நேரியை அழைத்து, தான்
கேள்விப்பட்ட செய்தி உண்மையா என்பதை அறிந்துவர அவரை அனுப்பி
வைத்தார்.
திருத்தந்தையின் வேண்டுகோளுக்கிணங்க, பிலிப்பு நேரி அந்தப்
பெண்துறவி வாழ்ந்து வந்த துறவு மடத்திற்குக் கால்நடையாகவே
நடந்து சென்றார். இவர் அந்தத் துறவுமடத்திற்குச் சென்றபொழுது
மழை பெய்து, வழியெங்கும் ஒரே சேறும் சகதியுமாய் இருந்தது. இவர்
அதன்வழியாக நடந்து சென்றதால், இவர் அணிந்திருந்த காலணி
அழுக்கானது. ஒருவழியாக இவர் துறவுமடத்தை அடைந்தார். இவர்
துறவுமடத்தை அடைந்தபொழுது, யார் வந்திருக்கின்றார் என்று
பார்ப்பதற்காக "புனிதத்திற்கு எடுத்துக்காட்டான அந்தப் பெண்
துறவி" வெளியே வந்தார். அவரிடம் இவர், "வழியெங்கும் ஒரே சேறும்
சகதியுமாய் இருந்ததால், என்னுடைய காலணிகள் அழுக்காகிவிட்டன.
அவற்றைக் கழுவிச் சுத்தம் செய்ய, கொஞ்சம் தண்ணீர் ஊற்ற
முடியுமா?" என்று கெஞ்சிக் கேட்டார். பிலிப்புநேரி இப்படிச்
சொன்னதும், அந்தப் பெண் துறவி, "உங்களுடைய காலணிகளில்
இருக்கும் அழுக்கைப் போக்குவதற்குத் தண்ணீர் ஊற்ற, நான் என்ன
உங்கள் வீட்டு வேலைக்காரியா?" என்றார்.
இதற்குப் பிலிப்பு நேரி அவரிடம் மறுவார்த்தை பேசாமல், நேராகத்
திருத்தந்தையிடம் வந்தார். "இவ்வளவு சீக்கிரத்தில் ஒருவர்
புனிதமானரா? இல்லையா? என்று நீங்கள்
கண்டுபிடித்துவிட்டீர்களா?" என்று திருத்தந்தை பிலிப்பு
நேரியிடம் கேட்டதற்கு, இவர் திருத்தந்தையிடம், "ஒருவர்
புனிதமானவரா? இல்லையா? என்று தெரிந்துகொள்வதற்குத் தாழ்ச்சி
என்ற அளவுகோல் இருக்கின்றது. அந்த அளவுகோலைக் கொண்டு
அளந்துபார்த்தபொழுது அந்தப் பெண்துறவி புனிதத்திற்கு
எடுத்துக்காட்டு இல்லை என்பது தெரிந்தது. அதனால்தான் இவ்வளவு
விரைவாக வந்துவிட்டேன்" என்றார்.
ஆம், எவர் ஒருவர் தாழ்ச்சியில் சிறந்து விளங்குகின்றாரோ, அவர்
புனிதத்திலும் சிறந்து விளங்குவார். திருவருகைக்காலத்தின்
நான்காம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, நாம்
ஒவ்வொருவரும் மரியாவைப் போன்று தாழ்ச்சியோடு வாழ்ந்து,
இறைவனின் திருவுளம் நிறைவேற நாம் ஒத்துக்க வேண்டும் என்றோர்
அழைப்பினைத் தருகின்றது. அது குறித்து இப்பொழுது நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
கடவுளைத் தன்னுடைய விருப்பத்திற்கேற்ப வளைத்த தாவீது
நாம் இறைவனுக்கு மிக நெருக்கமாக இருக்கலாம்; பணபலம்,
படைபலத்தில்கூட பெரியவர்களாக இருக்கலாம். அதற்காக நாம் இறைவனை
நம்முடைய விருப்பத்திற்கு ஏற்ப வளைக்கக்கூடாது. அப்படிச்
செய்வது இறைவனின் விருப்பத்திற்கு எதிராகச் செயல்படுவதற்குச்
சமமாகும். இஸ்ரயேலை ஆண்ட மன்னர்களில் ஆண்டவரின் நெஞ்சத்திற்கு
நெருக்கமாக இருந்தவர் தாவீது மன்னர். இவர் தம் அரண்மனையில்
குடியேறியதும், ஆண்டவரின் விருப்பத்தை அறியாமல், அவருக்கென
கோயில் கட்ட விருப்புகின்றார். அப்பொழுது ஆண்டவர் இறைவாக்கினர்
நாத்தான் வழியாக, "ஆண்டவர்தாம் உம் வீட்டைக் கட்டப்போவதாக அவர்
உனக்கு அறிவிக்கின்றார்" என்கிறார்.
தாவீது மன்னர் ஆண்டவரின் விருப்பத்தை அறிய விரும்பாமல்
"நான்தான் மிகப்பெரியவன் ஆயிற்றே" என எண்ணத்தில்
ஆண்டவருக்கெனக் கோயில்கட்ட நினைத்ததால், அது முடியாமல் போனது
ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் அவர் மிகுதியான குருதியைச்
சிந்தியிருந்தார் (1 குறி 22:8). அதனாலும் அவரால் ஆண்டவருக்கென
கோயிலைக் கட்ட முடியவில்லை. மேலும் தாவீது மன்னர் ஆண்டவருக்கென
கற்களாலான கோயிலையே கட்ட விரும்பினார்; ஆனால் ஆண்டவராகிய
கடவுள் என்றுமுள்ள அரசைக் கட்டப் போவதாக வாக்குறுதி
அளிக்கின்றார். இவ்வாறு தாவீது மன்னர் ஆண்டவரின் விருப்பத்தை
அறிய விரும்பாமல், "தான் மிகப்பெரிய மன்னன்" என்ற மமதையில்
ஆண்டவருக்கென கோயில் கட்ட விரும்பியதால், அவரால் கோயில் கட்ட
முடியாமலேயே போகின்றது.
கடவுளின் விருப்பத்திற்கேற்ப வளைந்து கொடுத்த மரியா
மரியா சிறுவயதிலிருந்தே ஆண்டவருக்குத் தன்னை அர்ப்பணித்து,
அவருக்கு மிக நெருக்கமாக இருந்தவர்தான். ஆனாலும் அவர் தாவீது
மன்னரைப் போன்று இறைவனைத் தன்னுடைய விரும்பத்திற்கு
வளைக்கவில்லை. மாறாக, இறைவனின் விருப்பத்திற்கு வளைந்து
கொடுக்கின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் முதன்மை வானதூதர் மரியாவிற்குத்
தோன்றி, இறைவனின் மீட்புத் திட்டத்தைச் சொல்லி முடிந்ததும்
அவர், "நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு
நிகழட்டும்" என்கின்றார். மரியா முதன்மை வானதூதர் கபிரியேலிடம்
சொல்லும் இச்சொற்களில் இரண்டு உண்மைகள் அடங்கியிருக்கின்றன.
ஒன்று, மரியா, இறைவனிடம் திருவுளம் நிறைவேற இசைவு தந்தது
அல்லது ஆம் என்று சொன்னது. இரண்டு, இறைவனின் திருவுளத்தைத்
தாழ்ச்சியோடு நிறைவேற்றத் தான் தயார் என்று சொன்னது. ஆம்,
மரியா இறைவனின் திருவுளம் நிறைவேறுவதற்கு ஓர் அடிமையைப் போன்று
தம்மைத் தாழ்த்திக் கொண்டார். இதன்மூலம் இறைவனின் என்றுமுள்ள
அரசு கட்டியெழுப்பப்பட அவர் காரணமாக இருந்தார்.
தாழ்ச்சியுள்ளோரின் உள்ளத்தில் ஆண்டவர்
இதுவரையில், இறைவனைத் தன்னுடைய விரும்பத்திற்கேற்ப வளைத்த
தாவீது மன்னரையும், இறைவனின் விரும்பத்திற்கு வளைந்து கொடுத்த
அல்லது தாழ்ச்சியோடு ஆம் என்று சொன்ன மரியாவையும் குறித்துச்
சிந்தித்துப் பார்த்திருக்கின்றோம். இவர்கள் இருவரில் நாம்
யாராக இருக்கப் போகின்றோம் என்று சிந்தித்துப் பார்ப்பது
நம்முடைய கடமையாகும்.
"இறைவனுக்கு இரண்டு உறைவிடங்கள் உள்ளன. ஒன்று, விண்ணகம்.
மற்றொன்று, தாழ்ச்சியுள்ளவரின் உள்ளம்" என்று கூறுவார் புனித
அகுஸ்தின். மரியா தாழ்ச்சியுள்ளவராய், இறைவனின்
விரும்பத்திற்கு ஆம் என்று சொல்லி, அவருடைய மீட்புத் திட்டம்
நிறைவேறக் காரணமாக இருந்தார். இதனால் அவர் இயேசுவைத்
திருவயிற்றில் சுமந்து, எல்லாத் தலைமுறையும் பேறுபெற்றவர் என
அழைக்கும் சிறப்பினைப் பெற்றார் (லூக் 1:48) நாமும் மரியாவைப்
போன்று தாழ்ச்சி உள்ளவர்களாய், இறைவனின் விருப்பத்திற்கு ஏற்ப
நடந்தோமெனில், இறைவனிடமிருந்து ஆசி பெறுவோம் என்பது உறுதி.
ஆகையால், நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் தாவீது மன்னரைப்
போன்று அல்லாமல், மரியாவைப் போன்று தாழ்ச்சியோடு வாழ்ந்து,
இறைவனின் விருப்பத்திற்கு ஏற்ப வாழ்ந்து, அவர் தருகின்ற
ஆசியைப் பெற்று மகிழ்வோம்.
சிந்தனை
"தன்னை அல்ல, கடவுளை மாட்சிப்படுத்தியதில்தான் புனித கன்னி
மரியாவின் மகத்துவம் அடங்கியிருக்கின்றது" என்பார் திருத்தந்தை
பதினாறாம் பெனடிக்ட் (An Invitation to Faith). ஆகையால், நாம்
புனித கன்னி மரியாவைப் போன்று நம்மை அல்ல, கடவுளை நம்முடைய
வாழ்வாலும் வார்த்தையாலும் மாட்சிப்படுத்துவோம். அதற்குத்
தாழ்ச்சியோடு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 3
=================================================================================
ஆண்டவர் உம்மோடு
(டிசம்பர் 20, 2020)
2 சாமுவேல் 7:1-5, 8-12, 14-16
உரோமையர் 16:25-27
லூக்கா 1:26-38
நம் திருப்பலிக் கொண்டாட்டங்களிலும், ஆசியுரை போன்ற நிகழ்வுகளிலும்,
'ஆண்டவர் உங்களோடு இருப்பாராக!' என்ற அழகிய வாக்கியத்தை நாம்
பயன்படுத்துகின்றார். முதல்வர் இந்த வாழ்த்தொலியைக் கூற,
கூடியிருப்பவர்கள், 'உம்மோடும் அல்லது உம் ஆன்மாவோடும் இருப்பாராக!'
என்று விடையளிக்கின்றனர்.
இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் நாத்தான், தாவீது அரசரிடம்,
'நீர் விரும்பியது அனைத்தையும் செய்துவிடும். ஏனெனில், ஆண்டவர்
உம்மோடு இருக்கிறார்' என்கிறார்.
நற்செய்தி வாசகத்தில், வானதூதர் மரியாவிடம், 'ஆண்டவர் உம்மோடு
இருக்கிறார்' என்று சொல்ல, மரியாவோ, இறுதியில், 'உம் சொற்படியே
எனக்கு நிகழட்டும்' என்கிறார்.
முதலில், 'ஆண்டவர் உம்மோடு' என்னும் சொல்லாட்சியைப்
புரிந்துகொள்வோம். தொடர்ந்து, தாவீது மற்றும் மரியாவின்
வாழ்வில் அந்தச் சொல்லாடல் எந்தத் தாக்கத்தை ஏற்படுத்தியது எனக்
கண்டு, இச்சொல்லாட்சி தரும் வாழ்வியல் கருத்துகளை உள்வாங்க முயற்சிப்போம்.
'ஆண்டவர் உம்மோடு' என்னும் சொல்லாடல் முதன்முதலாக எகிப்தியப்
பாரவோனால் மோசே மற்றும் ஆரோனுக்குச் சொல்லப்படுகிறது என்பதில்தான்
ஆச்சரியம் உள்ளது. தாங்கள் எகிப்தைவிட்டுப் புறப்பட அனுமதி
வேண்டி பாரவோனிடம் வந்துநிற்கின்றனர் மோசேயும் ஆரோனும். அந்த
நேரத்தில் அவர்களோடு உரையாடுகின்ற பாரவோன், 'உங்களை உங்கள் குழந்தைகளோடு
நான் அனுப்பிவைத்தால், ஆண்டவர்தாம் உங்களோடு இருக்க வேண்டும்.
ஏனெனில் உங்கள்முன் உள்ளது தீமையே!' (காண். விப 10:10) என்கிறார்.
பாரவோனின் வார்த்தைகள் இரண்டு விடயங்களைச் சொல்கின்றன: ஒன்று,
ஆண்டவரின் இருத்தலை அவர் ஏற்றுக்கொள்கின்றார். இரண்டு, ஆண்டவர்
உடனிருந்தாலன்றி தீமையை மனிதர்கள் வெற்றிகொள்ள இயலாது என்பதையும்
ஏற்றுக்கொள்கின்றார்.
தொடர்ந்து, ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களைத் தலைமையேற்று
வழிநடத்துமாறு மோசேக்குப் பணிக்கும் நிகழ்வில், 'எனது
திருமுன்னிலை உன்னோடு செல்லும். நான் உனக்கு இளைப்பாறுதல் அளிப்பேன்'
என, மோசே மறுமொழியாக, 'நீர் எம்மோடு வரவில்லையெனில் எங்களை இங்கிருந்து
போகச் செய்யாதீர்!' என இறைஞ்சுகின்றார். மேலும், 'நானும் உம்
மக்களும் உம் பார்வையில் தயை பெற்றுள்ளோம் என்பதை எப்படி அறிவோம்?'
என்கிறார் (காண். விப 33:14-15). இந்த நிகழ்வில், ஆண்டவரின்
உடனிருப்பை மோசே வேண்டுவதோடு, 'ஆண்டவர் நம்மோடு' என்ற அனுபவம்
நமக்கு 'தயை பெற்ற அனுபவம்' தரும் என்கிறார்.
அடுத்ததாக, மோசேயின் இறப்புக்குப் பின்னர், வாக்களிக்கப்பட்ட
நாட்டிற்குள் மக்களை அழைத்துச் செல்லக்கூடிய பணியை யோசுவாவிடம்
ஒப்படைக்கின்ற ஆண்டவராகிய கடவுள், 'மோசேயுடன் இருந்தது போல உன்னோடும்
இருப்பேன். உன்னைக் கைநெகிழ மாட்டேன், கைவிடவும் மாட்டேன்' என்கிறார்
(காண். யோசு 1:5). ஆண்டவரின் வார்த்தைகளிலிருந்து அவர் ஏற்கெனவே
மோசேயுடன் இருந்தார் என்றும், இப்போது யோசுவாவுடன் இருக்கப்போவதாகவும்
அவர் வாக்குறுதி தருவது தெளிவாகிறது.
இந்த மூன்று நிகழ்வுகளிலும், 'ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்!'
அல்லது 'ஆண்டவர் உம்மோடு இருப்பாராக!' என்ற சொல்லாட்சி நேர்முகமான
தொனியில் சொல்லப்பட்டுள்ளது.
நீதித்தலைவர்கள் நூலில், இஸ்ரயேல் மக்கள் மிதியானியர்களால் வதைக்கப்பட்டபோது,
ஆண்டவரின் தூதர் கிதியோனுக்குத் தோன்றி, 'வலிமை மிக்க வீரனே!
ஆண்டவர் உன்னோடு இருக்கிறார்' என்றார். கிதியோன் அவரிடம், 'என்
தலைவரே! ஆண்டவர் எம்மோடு இருக்கிறார் என்றால் ஏன் இவையெல்லாம்
எமக்கு நேரிடுகின்றன? ஆண்டவர் எம்மை எகிப்து நாட்டிலிருந்து
வெளியே கொண்டு வரவில்லையா என்று கூறி, எங்கள் தந்தையர் எமக்கு
வியந்துரைத்த அவரது வியத்தகு செயல்களெல்லாம் எங்கே? இப்பொழுது
ஏன் ஆண்டவர் எம்மை இப்படிக் கைவிட்டுவிட்டார்?' (காண். நீத
1:12-13). இங்கே கிதியோனின் கேள்வி நமக்கு ஏற்புடையதாக இருக்கிறது.
'ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்ற அனுபவம் செயல்பாடாக இல்லாமல்
போனது ஏன்? என்பதே கிதியோனின் ஆதங்கமாக இருக்கிறது.
ஆண்டவர் அல்லது ஆண்டவரின் தூதர் மனிதர்களுக்கு வழங்கிய 'ஆண்டவர்
உம்மோடு' என்னும் வாக்குறுதி, காலப்போக்கில், மனிதர்கள் ஒருவர்
மற்றவரை வாழ்த்துவதற்காகப் பயன்படுத்தும் வாழ்த்தொலியாக மாறுகிறது.
அதற்கு ஓர் அழகிய உதாரணம் ரூத்து நூலில் உள்ளது: சிறிது நேரம்
கழித்து, போவாசு பெத்லகேமிலிருந்து வயலுக்கு வந்துசேர்ந்தார்.
அவர் அறுவடையாளர்களை நோக்கி, 'ஆண்டவர் உங்களோடு இருப்பாராக!'
என்றார். அவர்களும், 'ஆண்டவர் உமக்கு ஆசி வழங்குவாராக!' என்றார்கள்.
(காண். ரூத் 2:4). நம் வீட்டுக்கு வேலைக்கு வருகிறவர்களையும்,
அல்லது நம் வயலின் பணியாளர்களையும், 'ஆண்டவர் உங்களோடு இருப்பாராக!'
என்று நாம் வாழ்த்த, அவர்களும் நமக்குப் பதில்மொழியாக, 'ஆண்டவர்
உமக்கு ஆசி வழங்குவாராக!' என்று வாய்நிறைய வாழ்த்தினால் நம்
குடும்பமும் தொழிலும் பெருகாதா?
மேற்காணும் நிகழ்வுகளில் வரும், 'ஆண்டவர் உம்மோடு' என்னும்
சொல்லாட்சியின் உள்பொருளை நாம் பின்வரும் மூன்று நிலைகளில்
புரிந்துகொள்ளலாம். 'ஆண்டவர் நம்மோடு அல்லது உம்மோடு' என்னும்
அனுபவம்,
(அ) ஒருவரின் தீங்கு நீக்கும்
(ஆ) ஆண்டவரிடம் தயை (இரக்கம்) பெற்றவர் என்பதை அவரும் மற்றவரும்
அறியச் செய்யும்
(இ) இயலாததையும் இயலச் செய்யும் வல்லமை தரும்
இன்றைய முதல் வாசகம் (காண். 2 சாமு 7:1-5,8-12,14-16) இஸ்ரயேல்
வரலாற்றின் தொடக்கத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. ஏறக்குறைய
கிமு 10ஆம் நூற்றாண்டில் இஸ்ரயேல் ஓர் ஒருங்கிணைந்த நாடாக உருவாகிறது.
அண்டை நாடுகளின் அச்சுறுத்தல் நீங்க, எதிரிகள் எல்லாம் அழிக்கப்பட,
தாவீது அரசர் தம் அரண்மனையில் குடியேறுகிறார். 'எல்லா எதிரிகளின்
தொல்லையினின்றும் ஆண்டவர் அவருக்கு அமைதி அளித்தார்.' தனக்கு
அமைதியையும் வெற்றியையும் தந்த ஆண்டவராகிய கடவுள் உடன்படிக்கைப்
பேழையில் மழையிலும் வெயிலிலும் இருப்பதைக் கண்டு, ஆண்டவருக்கு
ஓர் இல்லம் அமைக்க விரும்புகின்றார் தாவீது. தன் விருப்பத்தை
நாத்தானிடம் தெரிவித்து அவரின் ஒப்புதலை வேண்டுகின்றார். 'ஆண்டவர்
உம்மோடு இருக்கிறார். நீர் விரும்பியது அனைத்தையும்
செய்துவிடும்' என்று அவரும் உடனடியாக ஒப்புதல் தந்தாலும், அன்று
இரவு ஆண்டவரின் வார்த்தை வேறு மாதிரியாக வருகிறது. தாவீதின் எளிய
பின்புலத்தைச் சுட்டிக்காட்டுகின்ற ஆண்டவர், தாவீதுக்கு தாம்
இல்லம் ஒன்று கட்டப்போவதாக உரைக்கின்றார்.
தனக்கு ஓர் ஆலயம் வேண்டாம் என்று சொல்வதன் வழியாக, கட்டடங்கள்
மற்றும் அமைப்புகள் மேல் தனக்கு விருப்பமில்லை என்கிறார் ஆண்டவர்.
மேலும், வழித்தோன்றல் என்னும் கட்டடத்தை ஆண்டவராகிய கடவுளே
தாவீதுக்குக் கட்டுவதாக வாக்களிக்கின்றார்.
ஆக, ஆண்டவர் நம்மோடு என்ற அனுபவம் தாவீதுக்கு இருந்ததால் அவர்
வெற்றிகள் பல கண்டார். அந்த அனுபவத்தை ஆண்டவர் தாமே அவருடைய
வழித்தோன்றல் வழியாக நீட்டுகின்றார்.
உரோமையருக்கு எழுதிய திருமடலை நிறைவுசெய்கின்ற பவுல், அவர்களுக்குச்
சொன்ன அறிவுரையின் நிறைவாக, 'கடவுள் உங்களை உறுதிப்படுத்த வல்லவர்'
என்கிறார். அதாவது, ஆண்டவருடைய உடனிருத்தல் அவர்களுக்கு நம்பிக்கையில்
உறுதி அளிக்கிறது.
ஆக, ஆண்டவரின் உடனிருப்பு நமக்கு உறுதியளிக்கிறது.
நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 1:26-38) இயேசு பிறப்பின்
முன்னறிவிப்பு நிகழ்வை வாசிக்கின்றோம். 'ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்!'
என்ற வாழ்த்தொலியோடு மரியாவை எதிர்கொள்கின்ற கபிரியேல், 'கடவுளால்
இயலாதது எதுவும் இல்லை' என்று நிறைவு செய்கின்றார்.
ஆக, ஆண்டவர் உடனிருந்தால் அனைத்தும் சாத்தியமாகிறது.
ஆண்டவர் நம்மோடு என்ற அனுபவம் நமக்கு வெற்றியும், உறுதியும் தந்து
அனைத்தையும் சாத்தியமாக்குகிறது.
'ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்னும் சொல்லாட்சி நமக்குத் தரும்
வாழ்வியல் பாடங்கள் எவை?
1. வார்த்தைகள் அனுபவமாக மாற வேண்டும்:
'ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்று நாத்தான் இறைவாக்கினரால்
எப்படி தாவீதிடம் சொல்ல முடிந்தது? ஒருவரின் செயல்களைக் கொண்டே
கணித்துவிடலாம் என்பதால், தாவீது ஆற்றிய அரும்பெரும் செயல்களைக்
கண்டு நாத்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம். இன்னொரு பக்கம்,
எந்த அரண்மனையின் உச்சியில் நின்று உடன்படிக்கைப் பேழை
வெயிலில் காய்வதைக் காண்கிறாரோ, அதே அரண்மனையின் உச்சியில்
நின்றுதான் உரியாவின் மனைவி குளிப்பதையும் காண்கின்றார்
தாவீது. தாவீது தன்னுடனான ஆண்டவரின் இருத்தலைச் சில நேரங்களில்
மறந்தாலும், ஆண்டவர் அவரிடமிருந்து விலகிக்கொள்ளவே இல்லை. இதுதான்
ஆண்டவரின் பிரமாணிக்கம். 'நாம் நம்பத்தகாதவர் எனினும் அவர் நம்பத்தக்கவர்.'
தாவீது தன் செயலுக்காக மனம் வருந்துகிறார். ஆண்டவரும் அவரை
முழுமையாக ஏற்றுக்கொள்கின்றார். ஆக, நாம் ஆண்டவரோடு இல்லை என்றாலும்,
அவர் நம்மோடு என்பது ஒரு வாழ்வியல் அனுபவமாக மாற வேண்டும்.
2. 'நான் ஆண்டவரின் அடிமை':
'ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்!' என்று வானதூதர் சொன்னபோது,
'நான் ஆண்டவரின் அடிமை' என்று சரணாகதி அடைகின்றார் மரியா. ஆக,
ஆண்டவரின் உடனிருப்பை ஒரு தலைவர்-பணியாளர் உடனிருப்பாகக்
காண்கிறார் மரியா. இங்கே ஒட்டுமொத்தமாகத் தன் சுதந்திரத்தைத்
தாரை வார்த்துக் கொடுக்கிறார் மரியா. இந்தப் பக்குவம் அல்லது
தயார்நிலை அவருக்கு எப்படி வந்தது? இன்று நான் ஆண்டவருக்கு என்னையே
சரணாகதி ஆக்கும்போது, 'ஆண்டவர் என்னோடு இருக்கிறார்' என்பதை
உணர முடியும். ஏனெனில், தாவீதின் வாழ்வில் பார்க்கிறோம், அவரின்
விருப்பமல்ல, ஆண்டவரின் விருப்பமே நிறைவேறுகிறது.
3. ஒருவர் மற்றவரை வாழ்த்துவோம்:
'ஆண்டவர் உம்மோடு இருப்பாராக!' என்ற வாழ்த்தொலி அடுத்தவருக்கு
நம்பிக்கை தருகிறது, தீமைகளை அகற்றுகின்றது, இயலாததை இயலச்
செய்கிறது என்றால், நாம் ஒருவர் மற்றவரை, 'ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்'
என்று வாழ்த்துவோம். இந்த வாழ்த்தொலி மற்றவர்களிடம் நம்பிக்கைக்
கீற்றை மின்னச் செய்வதுடன், அந்தக் கீற்றொளியில் அவர்கள் தொடர்ந்து
வழிநடக்கவும் துணை செய்யும்.
இறுதியாக,
ஆண்டவர் நம்மோடு இருந்தால், அவரின் தயை பெற்றவர்கள் நாம் என்பதை
மற்றவர்களும் அறிந்துகொள்வார்கள். அவரின் தயை (இரக்கம்) இல்லாமல்
தான் இல்லை என்பதை உணர்ந்ததால்தான் திருப்பாடல் ஆசிரியர், 'ஆண்டவரின்
பேரன்பைப் பற்றிப் பாடுவேன்' (காண். திபா 89) எனத் துள்ளிக்
குதிக்கின்றார்.
'ஆண்டவர் நம்மோடு இருக்கிறார்!' ஆகையால்தான், நாமும் நம் நிலமும்
அமைதி காண்கிறது. இந்த அமைதியையே நாம் இன்று ஏற்றும் இறுதி
மெழுகுதிரி குறித்துக்காட்டுகிறது.
(அருட்தந்தை: இயேசு கருணாநிதி) |
|