Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                      
                                                       பொதுக்காலம் 3ஆம் வாரம் - ஆண்டு A
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
பிற இனத்தார் வாழும் கலிலேயாவில் மக்கள் பேரொளியைக் கண்டார்கள்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 9: 1-4

முற்காலத்தில் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் ஆண்டவர் அவமதிப்புக்கு உட்படுத்தினார்; பிற்காலத்திலோ, பெருங்கடல் வழிப் பகுதி, யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பு, பிற இனத்தார் வாழும் கலிலேயா நாடு ஆகிய பகுதிகளுக்கு மேன்மை வரச் செய்வார்.

காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. ஆண்டவரே! அந்த இனத்தாரைப் பல்கிப் பெருகச் செய்தீர்; அவர்கள் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்; அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவதுபோல் உம் திருமுன் அவர்கள் அகமகிழ்கிறார்கள்; கொள்ளைப் பொருளைப் பங்கிடும்போது அக்களிப்பதுபோல் களிகூர்கிறார்கள்.

மிதியான் நாட்டுக்குச் செய்ததுபோல அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர்; அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப் போட்டீர்; அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஒடித்தெறிந்தீர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 27: 1. 4. 13-14 (பல்லவி: 1a) Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.

1ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? - பல்லவி

4நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித் தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். - பல்லவி

13வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்.

14நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. - பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
நீங்கள் ஒத்த கருத்துடையவர்களாய் இருங்கள். உங்களிடையே பிளவுகள் வேண்டாம்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 10-13, 17

சகோதரர் சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்வது இதுவே: நீங்கள் ஒத்த கருத்துடையவர்களாய் இருங்கள். உங்களிடையே பிளவுகள் வேண்டாம். ஒரே மனமும் ஒரே நோக்கமும் கொண்டிருங்கள். என் அன்பர்களே, உங்களிடையே சண்டை சச்சரவுகள் இருப்பதாகக் குலோயி வீட்டார் எனக்குத் தெரிவித்துள்ளனர். நான் இதைச் சொல்லக் காரணம், உங்களுள் ஒவ்வொருவரும் "நான் பவுலைச் சார்ந்துள்ளேன்" என்றோ "நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன்" என்றோ "நான் கேபாவைச் சார்ந்துள்ளேன்" என்றோ, "நான் கிறிஸ்துவைச் சார்ந்துள்ளேன்" என்றோ சொல்லிக்கொள்கிறீர்களாம். கிறிஸ்து இப்படிப் பிளவுபட்டுள்ளாரா? அல்லது பவுலா உங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டான்? அல்லது பவுலின் பெயரிலா நீங்கள் திருமுழுக்குப் பெற்றுக்கொண்டீர்கள்? திருமுழுக்குக் கொடுப்பதற்கு அல்ல, நற்செய்தியை அறிவிக்கவே கிறிஸ்து என்னை அனுப்பினார். மனித ஞானத்தின் அடிப்படையிலான சொற்களில் இந்நற்செய்தியை அறிவித்தல் ஆகாது. அவ்வாறு அறிவித்தால் கிறிஸ்துவின் சிலுவை பொருளற்றுப் போய்விடும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 (மத் 4: 23)

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா.
 
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றார்; எசாயா இறைவாக்கு இவ்வாறு நிறைவேறியது.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 12-23


அக்காலத்தில்

யோவான் கைது செய்யப்பட்டதை இயேசு கேள்விப்பட்டுக் கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவர் நாசரேத்தை விட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார். இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறியது:

"செபுலோன் நாடே! நப்தலி நாடே! பெருங்கடல் வழிப் பகுதியே! யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பே! பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே! காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடரொளி உதித்துள்ளது."

அதுமுதல் இயேசு, "மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது" எனப் பறைசாற்றத் தொடங்கினார்.

இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போது, சகோதரர் இருவரைக் கண்டார். ஒருவர் பேதுரு எனப்படும் சீமோன், மற்றவர் அவர் சகோதரரான அந்திரேயா. மீனவரான அவ்விருவரும் கடலில் வலை வீசிக் கொண்டிருந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, "என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

அங்கிருந்து அப்பால் சென்றபோது வேறு இரு சகோதரர்களைக் கண்டார். அவர்கள் செபதேயுவின் மகன் யாக்கோபும் அவர் சகோதரரான யோவானும் ஆவர். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார். உடனே அவர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார்; அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது குறுகிய வாசகம்


இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றார்; எசாயா இறைவாக்கு இவ்வாறு நிறைவேறியது.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 12-17

அக்காலத்தில்

யோவான் கைது செய்யப்பட்டதை இயேசு கேள்விப்பட்டுக் கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவர் நாசரேத்தை விட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார். இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறியது:

"செபுலோன் நாடே! நப்தலி நாடே! பெருங்கடல் வழிப் பகுதியே! யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பே! பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே! காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடரொளி உதித்துள்ளது."

அதுமுதல் இயேசு, "மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது" எனப் பறைசாற்றத் தொடங்கினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
I எசாயா 9: 1-4
II 1கொரிந்தியர் 1: 10-13,17
III மத்தேயு 4: 12-23

"மனிதர்களைப் பிடிப்பவர்களாக"


நிகழ்வு

ஒருசமயம் இறைநம்பிக்கையில்லாத நாத்திகன் ஒருவன் பழங்குடி மக்கள் அதிகம் வாழ்ந்து வந்த பிஜி தீவுக்குச் சென்றான். அந்தத் தீவில் இருந்த மக்கள் யாவரும் கிறிஸ்தவர்களாக இருந்ததைக் கண்டு, அவன் மிகவும் ஆச்சரியப்பட்டான். பின்னர் அவன் அந்த மக்களின் தலைவரைச் சந்தித்து, அவரோடு பேசத் தொடங்கினான்: "அது எப்படி இந்தத் தீவில் இருக்கின்ற எல்லாரும் கிறிஸ்தவர்களாக இருக்கின்றார்கள்?". "இங்கொரு மிஷினரி மறைப்பணியாளர் இருக்கின்றார். அவரால்தான் நான் உட்பட இந்தத் தீவில் இருக்கின்ற எல்லாரும் கிறிஸ்தவர்கள ஆனோம்" என்றார் மக்கள் தலைவர்.

தலைவர் இவ்வாறு சொன்னது நாத்திகனுக்கு மிகுந்த எரிச்சலைத் தந்தது. "இன்னுமா இந்த மறைப்பணியாளர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் ஏமாற்றுக்காரர்கள்... இவர்கள் போதிக்கப் பயன்படுத்தும் திருவிவிலியம் காலாதியான ஒரு நூல்... இவர்கள் போதிக்கக்கூடிய இயேசுவோ எப்போதோ வாழ்ந்தவர். இப்படியிருக்கையில் இந்த மறைப்பணியாளரின் பேச்சைக் கேட்டு, நீங்கள் அனைவரும் கிறிஸ்தவர்களாக மாறியிருக்கின்றீர்களே...! உங்களைப் போன்ற முட்டாள்களை இவ்வுலகத்தில் நான் பார்த்ததே இல்லை" என்றான்.

நாத்திகன் சொன்னதை அமைதியாகக் கேட்டுக்கொண்டுவிட்டு, மக்கள் தலைவர் அவனிடம் மிகவும் பொறுமையாகப் பேசத் தொடங்கினார்: "நீ சொல்வதுபோன்றே என்றோ வாழ்ந்த இயேசுவை காலாவாதியான நூலின் வழியாக எங்களுக்குப் போதித்த மறைப்பணியாளர் ஏமாற்றுக்காரராக இருக்கட்டும்; ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இந்த மறைப்பணியாளர் மட்டும் இயேசுவின் வார்த்தையை எங்களுக்கு அறிவிக்காமல் இருந்திருந்தால், அதோ தெரிகின்றதே ஒரு பெரிய கல். அந்த கல்லில் உன் மண்டையை உடைத்து, இதோ தெரிகின்றதே ஒரு பெரிய அடுப்பு. இதில் போட்டு உன்னை வேகவைத்துச் சாப்பிட்டிருப்போம். இவ்வளவு நேரம் நீ உயிரோடு இருந்து, என்னோடு பேசிக்கொண்டிருக்க முடியாது. இப்பொழுது நீ உயிரோடு இருப்பதற்குக் காரணமே, இந்த மறைப்பணியாளர்தான். அதனால் இந்த மறைப்பணியாளருக்கு, இவரை இங்கு அனுப்பி வைத்த இயேசுவுக்கு நன்றி சொல்."

மக்கள் தலைவர் பேசியதை ஆச்சரியமாகக் கேட்டுக்கொண்டிருந்த நாத்திகன், அதன்பிறகு எதுவும் பேசாமல், அங்கிருந்து நகர்ந்துசென்றான்.

மனிதர்களைப் பிடித்து உண்ணும் ஒரு பெருங்கூட்டத்தையே முழு மனிதர்களாக மாற்றிய பெருமை மறைப்பணியாளரையே சாரும். ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற மறைப்பணியாளர் இயேசு சொல்வதுபோன்று "மனிதர்களைப் பிடிப்பவராக" மாறினார். அதனால்தான் அவரால் பிஜி தீவில் வாழ்ந்த பழங்குடி மக்களை முழு மனிதர்களாக மாற்ற முடிந்தது. ஆண்டவர் இயேசு நம் ஒவ்வொருவரையும் பார்த்து, நீங்கள் மனிதர்களைப் பிடிப்பவர்களாகுங்கள் என்கின்றார். இயேசு விடுக்கும் இந்த அழைப்பிற்கு நாம் எப்படிப் பணிந்து வாழ்வது என்று சிந்தித்துப் பார்ப்போம்.

தொடர்ந்து நடைபெறவேண்டிய இறையாட்சிப் பணி

திருமுழுக்கு யோவான் கைதுசெய்யப்பட்டபின்பு இயேசு தன்னுடைய பணியைத் தொடங்குகின்றார் (மத் 4:12) திருமுழுக்கு யோவான் மெசியாவாம் இயேசுவுக்காக மக்களை ஆயத்தம் செய்தார். அவர், இயேசு வந்ததும் பொறுப்பினை அவரிடம் கொடுத்துவிட்டு விலகிக்கொள்கின்றார். இவ்வாறு நற்செய்திப் பணி அல்லது இறையாட்சிப் பணி ஒருவருக்குப் பின் ஒருவராகத் தொடர்ந்து நடைபெறுகின்றது.

இயேசு தன்னுடைய பணியைத் தொடங்குபொழுது, தன் சொந்த ஊராகிய நாசரேத்தைவிட்டு, செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் இருந்த கப்பர்நாகுமுக்கு வருகின்றார். இது புறவினத்தார் அதிகமாக வாழும் பகுதி. இயேசு தன் சொந்த ஊரைவிட்டு புறவினத்தார் வாழும் பகுதிக்கு வந்து நற்செய்திப் பணிசெய்தார் எனில், அவர் எல்லா மக்களுக்கும் பணிசெய்து, எல்லா மக்களுக்கும் மீட்பரானார் என்ற செய்தியை மத்தேயு நற்செய்தியாளர் மிக அழகாக எடுத்துரைக்கின்றார்.

இயேசு, கப்பர்நாகுமுக்கு வந்து இறையாட்சிப் பணி செய்யத் தொடங்குவதைக் குறிப்பிடுகின்றபொழுது, மத்தேயு நற்செய்தியாளர் இறைவாக்கினர் எசாயா நூல் 9:2 ல் இடம்பெறுகின்ற, "காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்..." என்ற இறைவார்த்தையைக் குறிப்பிடுகின்றார். இதன்மூலம் எல்லா மக்களுக்கும் பணிசெய்யத் தொடங்கும் இயேசு, அவர்கள் அனைவர்க்கும் ஒளியாக இருக்கப்போகிறார் என்பதையும் குறிப்பிடுகின்றார். ஆம், உலகின் ஒளியான இயேசு (யோவா 8:12), திருமுழுக்கு யோவான் தன்னுடைய பணியிலிருந்து விலகியபின்பு அல்லது ஓய்ந்த பின்பு, அங்கிருந்து தன்னுடைய இறையாட்சிப் பணியைத் தொடங்குகின்றார்.

சீடர்களை அழைக்கும் இயேசு

நற்செய்திப் பணியை ஒரு தொடர் ஓட்டத்திற்கு ஒப்பிடுவார்கள். தொடர் ஓட்டத்தில் பங்கேற்கின்ற போட்டியாளர் தன்னிடம் ஒப்படைக்கப்படும் கோலினை எடுத்துச் சென்று இன்னொருவரிடம் ஒப்படைப்பார். அவர் அதனை எடுத்துச்சென்று இன்னொருவரிடம் ஒப்படைப்பார். இவ்வாறு அணியில் இருக்கின்ற எல்லாருடைய கூட்டு முயற்சியின் காரணமாக இலக்கினை அடைவர். ஆண்டவர் இயேசு இறையாட்சிப் பணியைச் செய்தபொழுது, அவர் மட்டும் செய்துகொண்டிருக்கவில்லை. தனக்குப் பின் அப்பணி தொடர்ந்து நடைபெறவேண்டும் என்பதற்காக முதலில் அந்திரேயாவையும் அவர் சகோதரர் பேதுருவையும் அவர்களுக்குப் பின் யாக்கோபையும் யோவானையும் தொடர்ந்து மற்றவர்களையும் அழைத்தார். இதன்மூலம் இறையாட்சிப் பணி தொடர்ந்து நடைபெறவேண்டும் என்பதற்கான விதையினை இயேசு விதித்தார்.

இங்கு நாம் கருத்தில் கொள்ளவேண்டிய ஒரு முக்கியமான செய்தி, "இறையாட்சிப் பணி ஒருகூட்டு முயற்சி" என்பதைத்தான். ஆம். ஆண்டவர் தொடங்கி, விட்டுச் சென்ற இறையாட்சிப் பணி தொடர்ந்து நடைபெற ஒவ்வொருவரும் தன்னுடைய பங்களிப்பைச் செய்யவேண்டும். இதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது.

"மனிதர்களைப் பிடிக்க" அழைக்கும் இயேசு

இயேசு முதல் சீடர்களை அழைத்த பின்பு, அவர்களிடம் சொல்லக்கூடிய வார்த்தைகள், "என் பின்னே வாருங்கள். நான் உங்களை மனிதர்களைப் பிடிப்பவர்கள் ஆக்குவேன்" என்பதாகும். இயேசு சொல்லும் இவ்வார்த்தைகள் நமது ஆழமான சிந்தனைக்குரியவையாக இருக்கின்றன. இயேசு சீடர்களிடம் சொன்னதுபோன்றே அவர்களுக்கு அவர் உரிய பயிற்சி தந்து மனிதர்களைப் பிடிப்பவர் ஆக்கினார். சீடர்களும் இயேசு தங்களை எதற்காக அழைத்தாரோ, அந்த அழைப்பினை உணர்ந்து மனிதர்களைப் பிடிப்பவர்கள் ஆனார்கள்.

இயேசுவின் சீடர்கள் மனிதர்களைப் பிடிப்பவர்களாக ஆனதுபோல் நாம் ஒவ்வொருவரும் மனிதர்களைப் பிடிப்பவர்களாக மாறவேண்டும். இது ஒவ்வொருவருடைய கடமை. நற்செய்திப் பணி தொடர்பாக அண்மையில் வெளிவந்த ஓர் ஆய்வு இவ்வாறு சொல்கின்றது: "உலக மக்களில் பத்தில் ஒன்பது பேர் தங்களுடைய வாழ்வைத் தொலைத்தவர்களாக இருக்கின்றார்கள். இந்த ஒன்பது பேரில் ஆறு பேர் இயேசு கிறிஸ்துவைக் குறித்து முழுமையாக அறிந்துகொள்ளாமல் இருக்கின்றார்கள். இந்த ஆறு பேரிலும் மூன்று பேர் இயேசுவைப் பற்றி இதுவரைக்கும் கேள்விப்படாதவர்களாக இருக்கின்றார்கள்."

இந்த ஆய்வுமுடிவின் படி பார்த்தால், பத்துக்கு மூன்று பேர் இயேசுவைக் குறித்து கேள்விப்படாதவர்களாகவே இருக்கின்றார்கள். இவர்களிடம் இயேசுவைக் கொண்டு செல்லும் "மனிதர்களைப் பிடிப்பவர்களாக" மாறவேண்டியது திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரின் கடமை (1 கொரி 9:16). இக்கடமையை நாம் உணர்ந்து செய்கின்றபொழுது, இயேசுவின் அன்பிற்கு உரியவர்களாவோம் என்பது உறுதி. எனவே, நாம் இயேசு விட்டுச் சென்ற பணி இப்புவியில் தொடர்ந்து நடைபெற மனிதர்களைப் பிடிப்பவர்களாக மாறுவோம்.

சிந்தனை

"அன்பில்லாமல் செய்யப்படும் மறைப்பணி. அன்பே இல்லாத தாய்மைக்கு ஒப்பாக இருக்கும்" என்பார் சுக் ஸ்விண்டோல் என்ற அறிஞர். தாய்மைக்கு அழகே அன்புதான். அதுபோன்றுதான் மறைப்பணிக்கும் அன்பே அழகு. ஆகையால், நாம் அன்போடு மறைப்பணி செய்வோம் அல்லது மனிதர்களைப் பிடிப்பவர்கள் ஆவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================



=================================================================================
திருப்பலி முன்னுரை
=================================================================================
காரிருளில் நடந்து வந்த மக்களை பேரொளியில் வழிநடத்திய இறைவனின் நற்செய்தியை நம்பிக்கையோடு அறிக்கையிட பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு நம்மை அழைக்கின்றது.

எசாயா இறைவாக்கினரால் இயேசுவின் பணி முன்னறிவிக்கப்படுகிறது. பாதையை செம்மையாக்குங்கள் என யோவானால் மீண்டும் அறிவிக்கப்படுகிறது. விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது என்று இன்றும் அறிவிக்கப்படுகிறது. மனதின் குறையைக் களைந்து, இறைப் பாதையை அறிந்து, நற்செய்தியை நமது வாழ்வாக்குவோம்.

இன்றைய முதல் வாசகத்தில் சுமையாக இருந்த நுகத்தை உடைத்தெறிந்தீர் என்று ஆசீர்வாதமான வார்த்தைகளை வழங்குகிறார் எசாயா இறைவாக்கினர்.

காரிருள் ஒளி பெற்றது கதிரவனால்
மன இருள் மகிழ் பெற்றது மனுமகனால்
துன்பங்களுக்கு துணிவில்லை
தூயவரின் மக்களை நோக்க
எனவே இறைவன் வழங்கும் அக்களிப்பை அணிந்து ஆனந்தம் கொள்வோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், "என் பின்னே வாருங்கள், உங்களை மனிதர்களைப் பிடிப்பவர் ஆக்குவேன்" என்று இறை பணிக்கு சீடர்களை அழைக்கிறார் இயேசு. இவ்வுலகத்தில் சாதாரண மனிதன் போன்ற வாழ்வே வாழ்ந்தார். ஆனால் தேவ மைந்தனுக்குரிய வல்லமையைக் கொண்டு, அற்புதங்களை நிகழ்த்தினார். மக்களை மீட்க இன்றும் பல சீடர்களை அழைக்கிறார்.

உழைப்பை விடவும் உடைமையை விடவும் உன்னதமான பணி நற்செய்திப் பணி என சீடர்களை அழைக்கிறார். நாமும் அதுபோல வாழவும், நமது வாழ்வே பிறர் விரும்பும் நற்செய்தியாக அமைய வரம் வேண்டி, அன்பின் தேவனிடம் இறைஞ்சுவோம். இப்பலியில் இணைவோம்.

இறைமக்களின் மன்றாட்டுகள்

1. என் பின்னே வாருங்கள் என்றவரே எம் இறைவா!
எம் தாயாம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள் மனிதர்களை அன்பால் பிடிக்கவும், வாழ்க்கை செய்ல்களில் இயேசுவை பிரதிபலிக்கவும், திருப்பணிக்கான வல்லமையை தந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

2. காரிருள் மறைந்து ஒளியால் நிரப்புபவரே எம் இறைவா!
எம் பாரத நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள், காரிருள் சூழ்ந்திருக்கும் நாட்டை ஒளியால் நிரப்ப தேவையான நல்ல செயல் திட்டங்களையும், ஆக்கப் பூர்வமான செயல்களையும் செய்து, பொருளாதாரம், அமைதியில் நாட்டை மேம்படுத்த ஞானம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

3. நுகத்தை உடைத்தெறிபவரே எம் இறைவா!
குடும்பம், உறவு நாட்டில் நிகழ்த்தப்படும் அடக்குமுறைகள் ஒழியவும், அனைவரும் ஒருமனப்பட்டு ஆழவும், வேலைவாய்ப்பு இல்லாமல் தவிப்பவர்கள், வாழ்வாதாரத்தைப் பயன்படுத்தி முன்னேறவும், இறையாட்சிப் பணியில் ஈடுபட இளைஞர்கள் ஆர்வமாகச் செயல்படவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

4. மகிழ்ச்சியை மிகுதியாக்குபவரே எம் இறைவா!
எம் பகுதியில் போதிய இயற்கை கால சூழ்நிலையைத் தந்து, விவசாயம் சிறக்கவும், பொருளாதாரம் மேம்படவும், குடும்பங்களில் அமைதி, மகிழ்ச்சி பெருகவும், மக்கள் இறை பாதையை உணரவும், படிக்கும் மாணவர்கள் ஞானத்தோடு செயலாற்றவும், வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தை வரம் போன்ற எதிர்பார்ப்புகள் நிறைவேறவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

நன்றி: திருமதி ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.




நம்பிக்கையின் ஊற்றே இறைவா!
நாம் கிறிஸ்துவின் சீடத்துவத்துள் வாழவும்
இறையரசை அநுபவிக்கவும் எம்மை
ஞானத்தோடு சிறப்பாக வழிநடத்தும் எமது
திருத்தந்தையையும் மற்றும் அனைத்து
இறை பணியாளர்களையும் நீர் அரவணைத்து உடன் பயணித்து பாதுகாத்து
வழி நடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அழைத்தலின் ஆண்டவரே இறைவா!
எமது அன்றாட வாழ்வில் இறை ஞானத்தின்
துணையோடு இறைவனின் அழைப்புக்கு
செவி கொடுக்கவும் எமது திருமுழுக்கின்
புனிதமான அழைத்தல் வாழ்வை உணர்ந்து
இறை திட்டத்துக்கும் பணிந்த மனத்தோடு
சான்று பகர்ந்து வாழவும் வரமருள வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


அருள் பொழியும் ஆண்டவரே!
பிரிவினைக் சிந்தனைகளும் சுயநல
மனப்பாங்கும் பதவி மோகமும் நிறைந்த
இன்றைய உலகில் வாழும் நாம் ஒவ்வொருவரும் உலகின் அமைதிக்காக
இடைவிடாது நம்பிக்கையோடு செபிக்கவும்
அனைவரையும் ஏற்றுக்கொண்டு மனித
மாண்பிற்காக உழைக்கவும் எம்மை வழி
நடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

இரக்கத்தின் தந்தையே இறைவா!
கைவிடப்பட்ட முதியோர்கள் நோய்களினாலும் சிறைகளிலும் வாடுவோர்
மற்றும் மாற்று வலுவுடையோர் அனைவரையும் உமது கரங்களில்
ஒப்படைக்கின்றோம்.இவர்களை ஆசீர்வதித்து துன்பங்களில் இருந்து
விடுவித்து நம்பிக்கை வாழ்வை ஆழப்படுத்த
வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

அன்புத் தந்தையே இறைவா!

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம் : அவர்கள் தாங்கள் பெற்றுக் கொண்ட அழைத்தலுக்கு ஏற்ப பிரமாணிக்கமாய் வாழ்ந்து, மக்களின் விடுதலைச் சக்தியாய்ச் செயற்படுவதற்கு வேண்டிய சக்தியையும், ஆற்றலையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பிரிவுற்ற அனைவரையும் ஒன்றிணைத்து அமைதியை உருவாக்கும் தந்தையே!

நாங்கள் ஒத்தக் கருத்துடையவர்களாய் இருந்து. எங்களிடையே உள்ள பிளவுகளைத் தவிர்த்து கிறீஸ்துவுக்குள் ஒரே மனமும், ஒரே நோக்கமும் கொண்டு, உமக்குகந்த அன்பிய சமூகமாக வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அஞ்சாதே என்று வாழ்த்தி புத்துயிர் தந்த எம் கனிவான தந்தையே எம் இறைவா!

எங்கள் குடும்பங்களில் திருமுழுக்கின் வழியாக நாங்கள் பெற்றுக் கொண்ட அருங்கொடைகளை உணர்ந்த உம் வார்த்தைகளின்படி வாழ்க்கை நடத்தவும், வரும் தீமைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுதலைப் பெற்றிட வேண்டிய வரத்தை எமக்கு அளித்திடுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நல்லாயனே இறைவா!

நீரே எம் ஒளி: நீரே எம்; மீட்பு: யாருக்கு நான் அஞ்சவேண்டும்? நீரே எம்உயிருக்கு அடைக்கலம்: யாருக்கு நாம் அஞ்சி நடுங்க வேண்டும்? இன்று இயற்கையின் தாக்கத்திற்குட்பட்டுத் தவித்துக் கொண்டிருக்கும் அனைத்து மக்களும் நீர் கொடுக்கின்ற ஆறுதலைப் பெற்றுக் கொள்ளவும், இயற்கை, செயற்கை அழிவுகளிலிருந்து அவர்களைப் பாதுகாத்திடவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஒளியும், மீட்புமான தந்தையே இறைவா!

எமது இளைஞர்களுக்கு நீர் ஒளியாகவும், வழியாகவும் இருந்து வழிகாட்டி உமது சாட்சிகளாய் வாழ அவர்களுக்கு அருள் தந்து ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கீழ்ப்படிதலின் மகிமையை உம் திருக்குடும்பத்தின் வழியாக உணர்த்திய எம் இறைவா!

எங்கள் குடும்பங்களில் இறைமகன் வாழ்ந்துக் காட்டிய அதே வழியை, நாங்களும் கடைபிடித்து, எங்கள் குடும்பங்கள் கோவிலாய் ஒளிர்ந்திட, எமக்கு சுயநலமற்ற அன்பும், அடுத்திருப்பவருடன் நட்பு பாராட்டும் நல்ல உள்ளங்களையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பாதுகாப்பின் நாயகனே!

எம் பங்கில் இருக்கின்ற நோயாளிகள், முதியவர்கள், கைவிடப்பட்டவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்து அவர்களை உமது அன்பில் திளைக்கவைக்க அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!