|
Year C |
|
* பொதுக்காலம் ஆண்டின்
3ம் ஞாயிறு* |
|
|
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
எஸ்ரா கடவுளின் திருச்சட்டத்தை உரக்க வாசித்தார். மக்களும் அதைப்
புரிந்துகொண்டனர்.
இறைவாக்கினர் நெகேமியா நூலிலிருந்து வாசகம் 8: 2-4a, 5-6, 8-10
அந்நாள்களில் ஏழாம் மாதம் முதல் நாள் குரு எஸ்ரா ஆடவர்,
பெண்டிர், புரிந்து கொள்ளும் ஆற்றலுள்ள சிறுவர் அனைவரும் அடங்கிய
சபை முன்னிலையில் திருநூலைக் கொண்டு வந்தார்.
தண்ணீர் வாயிலுக்கு முன் இருந்த வளாகத்தில் காலைமுதல் நண்பகல்வரை
ஆடவரையும், பெண்டிரையும், புரிந்து கொள்ளும் ஆற்றலுள்ள சிறுவரையும்
பார்த்து அதை உரக்க வாசித்தார். எல்லா மக்களும் திருநூலுக்குச்
செவி கொடுத்தனர்.
திருநூல் வல்லுநரான எஸ்ராவோ இதற்காகச் செய்யப்பட்ட மரமேடையின்
மேல் நின்றுகொண்டிருந்தார். எஸ்ரா மக்களை விட உயரமான இடத்தில்
நின்றதால் அவர் திருநூலைத் திறந்தபோது எல்லா மக்களும் அதைப்
பார்த்தார்கள்; திருநூலைத் திறந்தபோது எல்லா மக்களும் எழுந்து
நின்றார்கள்.
அப்பொழுது எஸ்ரா மாபெரும் கடவுளாகிய ஆண்டவரை வாழ்த்தினார். மக்கள்
எல்லாரும் கைகளை உயர்த்தி "ஆமென்! ஆமென்!" என்று பதிலுரைத்தார்கள்;
பணிந்து, முகங்குப்புற விழுந்து ஆண்டவரைத் தொழுதார்கள். மக்களுக்குப்
புரியும்படி தெளிவாகவும், பொருளோடும் கடவுளின் திருச்சட்டத்தை
உரக்க வாசித்தார்கள். ஆதலால் மக்களும் வாசிக்கப்பட்டதன்
பொருளைப் புரிந்துகொண்டனர்.
ஆளுநர் நெகேமியாவும், குருவும் திருநூல் வல்லுநருமான எஸ்ராவும்,
விளக்கம் கூறிய லேவியர்களும் மக்கள் அனைவரையும் நோக்கி: "இன்று
கடவுளாகிய ஆண்டவரின் புனித நாள்; எனவே நீங்கள் அழுது புலம்ப
வேண்டாம்" என்றனர். ஏனெனில் மக்கள் அனைவரும் திருச்சட்டத்தின்
சொற்களைக் கேட்டதிலிருந்து அழுது கொண்டிருந்தார்கள்.
அவர் அவர்களைப் பார்த்து, "நீங்கள் போய்க் கொழுத்தவற்றை உண்டு,
இனிய திராட்சை இரசத்தைக் குடியுங்கள்; எதுவும் தயார் செய்யாதவருக்குச்
சிறிது அனுப்பி வையுங்கள். ஏனென்றால், நம் ஆண்டவரின் புனித
நாள் இதுவே; எனவே வருந்த வேண்டாம்; ஏனெனில் ஆண்டவரின் மகிழ்வே
உங்களது வலிமை" என்று கூறினார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
(திபா 19: 7. 8. 9. 14 (பல்லவி: யோவா 6: 63b)
Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரே! உம் வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக்
கொடுக்கின்றன.
7 ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது.
ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது.
பல்லவி
8 ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன.
ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன.
பல்லவி
9 ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும்
நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை
முற்றிலும் நீதியானவை. பல்லவி
14 என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! என் வாயின் சொற்கள்
உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்; என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு
உகந்தவையாய் இருக்கட்டும். பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
நீங்கள் கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து
வாசகம் 12: 12-30
சகோதரர் சகோதரிகளே, உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள்
பலவாயினும் உடல் ஒன்றாய் இருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார்.
ஏனெனில், யூதரானாலும் கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக்
குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய்
இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த ஒரே ஆவியையே பானமாகவும்
பெற்றோம். உடல் ஒரே உறுப்பால் ஆனது அல்ல; பல உறுப்புகளால் ஆனது.
"நான் கை அல்ல; ஆகவே இவ்வுடலைச் சேர்ந்தவன் அல்ல" எனக் கால்
சொல்லுமானால், அது அவ்வுடலைச் சேர்ந்ததில்லை என்றாகிவிடுமா?
"நான் கண் அல்ல; ஆகவே இவ்வுடலைச் சேர்ந்தவன் அல்ல" எனக் காது
சொல்லுமானால், அது அவ்வுடலைச் சேர்ந்ததில்லை என்றாகிவிடுமா? மு
ழு உடலும் கண்ணாயிருந்தால் கேட்பது எப்படி? முழு உடலும்
காதாயிருந்தால் முகர்வது எப்படி? உண்மையில் கடவுள் ஒவ்வோர் உறுப்பையும்
தாம் விரும்பியவாறே உடலில் அமைத்தார். அவை யாவும் ஒரே உறுப்பாய்
இருந்தால் உடல் என ஒன்று இருக்குமா? எனவேதான் பல உறுப்புகளை உடையதாய்
இருந்தாலும் உடல் ஒன்றே.
கண் கையைப் பார்த்து,
'நீ எனக்குத் தேவையில்லை' என்றோ தலை கால்களைப்
பார்த்து, 'நீங்கள் எனக்குத் தேவையில்லை' என்றோ சொல்ல
முடியாது. மாறாக, உடலில் மிக வலுவற்றனவாய்த் தோன்றும் உறுப்புகளே
மிகவும் தேவையானவையாய் இருக்கின்றன.
உடலின் மதிப்புக் குறைவான உறுப்புகள் என நமக்குத் தோன்றுபவற்றிற்கே
நாம் மிகுந்த மதிப்புக் கொடுக்கிறோம். நம் மறைவான உறுப்புகளே
மிகுந்த மதிப்புப் பெறுகின்றன. மறைந்திராத நம் உறுப்புகளுக்கு
அது தேவையில்லை.
மாறாக, மதிப்புக் குறைந்த உறுப்புகளுக்கு மிகுந்த மதிப்புக்
கொடுத்தே கடவுள் உடலை ஒன்றித்து உருவாக்கினார். உடலில் பிளவு
ஏற்படாமல், ஒவ்வோர் உறுப்பும் மற்ற உறுப்புகளின் மீது ஒரேவிதக்
கவலை கொள்ளவேண்டும் என்றே இப்படிச் செய்தார்.
ஓர் உறுப்பு துன்புற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும்
சேர்ந்து துன்புறும். ஓர் உறுப்பு பெருமை பெற்றால் அதனுடன் மற்ற
எல்லா உறுப்புகளும் சேர்ந்து மகிழ்ச்சியுறும்.
நீங்கள் கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்.
அவ்வாறே திருச்சபையிலும் கடவுள் முதலாவது திருத்தூதர்களையும்,
இரண்டாவது இறைவாக்கினர்களையும், மூன்றாவது போதகர்களையும், பின்னர்
வல்லசெயல் செய்வோர்களையும், அதன்பின் பிணிதீர்க்கும் அருள்கொடை
பெற்றவர்கள், துணை நிற்பவர்கள், தலைமையேற்று நடத்துபவர்கள், பல்வகை
பரவசப் பேச்சுப் பேசுகிறவர்கள் ஆகியோரையும் ஏற்படுத்தினார்.
எல்லாருமே திருத்தூதர்களா? எல்லாருமே இறைவாக்கினர்களா? எல்லாருமே
போதகர்களா? எல்லாருமே வல்லசெயல் செய்பவர்களா? இல்லை. எல்லாருமே
பிணி தீர்க்கும் அருள்கொடையைப் பெற்றவர்களா? எல்லாருமே பரவசப்
பேச்சுப் பேசுகிறவர்களா? எல்லாருமே விளக்கம் அளிப்பவர்களா? இல்லையே!
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
அல்லது
குறுகிய வாசகம்
நீங்கள் கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து
வாசகம் 12: 12-14,27
சகோதரர் சகோதரிகளே, உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள்
பலவாயினும் உடல் ஒன்றாய் இருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார்.
ஏனெனில், யூதரானாலும் கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக்
குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய்
இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த ஒரே ஆவியையே பானமாகவும்
பெற்றோம். உடல் ஒரே உறுப்பால் ஆனது அல்ல; பல உறுப்புகளால் ஆனது.
நீங்கள் கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
லூக் 4: 18-19 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும்
சிறைப்பட்டோர் விடுதலை அடைவர் என அறிவிக்கவும் ஆண்டவர் என்னை
அனுப்பியுள்ளார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நீங்கள் கேட்ட மறைநூல் வாக்கு இன்று
நிறைவேறிற்று.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
1: 1-4; 4:14-21
மாண்புமிகு தியோபில் அவர்களே, நம்மிடையே நிறைவேறிய நிகழ்ச்சிகளை
முறைப்படுத்தி ஒரு வரலாறு எழுதப் பலர் முயன்றுள்ளனர்; தொடக்க
முதல் நேரில் கண்டும் இறைவார்த்தையை அறிவித்தும் வந்த ஊழியர்
நம்மிடம் ஒப்படைத்துள்ளவாறே எழுத முயன்றனர்.
அது போலவே நானும் எல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்தே கருத்தாய்
ஆய்ந்து நீர் கேட்டறிந்தவை உறுதியானவை எனத் தெரிந்துகொள்ளும்
பொருட்டு, அவற்றை ஒழுங்குபடுத்தி உமக்கு எழுதுவது நலமெனக் கண்டேன்.
அலகையினால் சோதிக்கப்பட்ட பின்பு, இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க்
கலிலேயாவுக்குத் திரும்பிப்போனார். அவரைப் பற்றிய பேச்சு
சுற்றுப்புறம் எங்கும் பரவியது. அவர் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில்
கற்பித்து வந்தார். எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசினர்.
இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி
ஓய்வுநாளில் தொழுகைக்கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார்.
இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர்
அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது: "ஆண்டவருடைய
ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு
செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர்
விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும்
ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும்
ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்."
பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார்.
தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று
நோக்கியிருந்தன.
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, "நீங்கள் கேட்ட இந்த மறைநூல்
வாக்கு இன்று நிறைவேறிற்று" என்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
(நெகேமியா 8:2-4,5-6,8-10; 1கொரிந்தியர் 12: 12-30; லூக்கா
1:1-4, 4:14-21)
துணிவுள்ள இறைவாக்கினர்களாவோம்
நிகழ்வு
விவேகானந்தர் அமெரிக்கா சென்றிருந்த தருணம், அங்கிருந்த பல இடங்களுக்குச்
சென்று அவர் சொற்பொழிவு ஆற்றிவந்தார். அவ்வாறு அவர் சென்ற இடங்களிலெல்லாம்,
'இறைவன்மீது நம்பிக்கை வைத்து வாழவேண்டும், அப்படி வாழ்கின்றபோது
எதைக் குறித்தும் பயப்படத் தேவையில்லை' எனப் பேசிவந்தார்.
இதை நுட்பமாகக் கவனித்துவந்த ஒருசில இளைஞர்கள், 'இந்த மனிதர்
செல்லும் இடங்களிலெல்லாம் இறைவன்மீது நம்பிக்கை வைத்து வாழவேண்டும்,
துணிவோடு இருக்கவேண்டும் என்று போதித்துக்கொண்டு வருகிறாரே, உண்மையில்
இவர் துணிவுள்ள மனிதர்தானா? என்பதை சோதித்துப் பார்ப்போம்' என்று
அதற்கான வேலைகளில் அவர்கள் இறங்கினார்கள்.
ஒருநாள் விவேகானந்தர் ஒரு பெரிய அரங்கில் சொற்பொழிவாற்றிக்
கொண்டிருந்தார். அப்போது திடிரென்று அந்த அரங்கத்திற்குள்
நுழைந்த ஒருசில முகமூடி அணிந்த மர்ம நபர்கள், துப்பாக்கியால்
சரமாரியாகச் சுட்டார்கள். இப்படியொரு திடீர் தாக்குதலை யாரும்
எதிர்பாராததால், அரங்கில் இருந்த எல்லாரும் அலறியடித்துக்கொண்டு
வெளியே ஓடினார்கள். ஒருசில பெண்கள் துப்பாக்கிச் சத்தம் கேட்டு
அந்த இடத்திலேயே மயக்கம் போட்டு விழுந்தார்கள். ஆனால் ஒரே ஒருவர்
மட்டும் தான் இருந்த இடத்தை விட்டு நகராமல், அப்படியே இருந்தார்.
அது வேறுயாருமல்ல, விவேகானந்தர்தான்.
ஏறக்குறைய பத்து நிமிடங்களுக்கு மேல் நடைபெற்ற துப்பாக்கிச்
சுடுதல் ஒருவழியாக ஓய்ந்தது. அதிர்ஷ்டவசமாக யார்மீதும் குண்டுகள்
பாயவில்லை. இதற்குப் பின்பு எல்லாரும் அரங்கத்திற்குள் வந்ததும்,
விவேகானந்தர் எந்தவொரு பதட்டமோ, பயமோ இல்லாது தான் விட்ட இடத்திலிருந்து
பேசத் தொடங்கினார். எல்லாரும் ஆச்சரியத்தோடு அவரைப் பார்த்தார்கள்.
அந்நேரத்தில் அங்குவந்த ஒருசிலர் இளைஞர்கள் விவேகானந்தரிடம்
சென்று, சுவாமி! எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள். நாங்கள்தான்
இந்தத் துப்பாக்கிச் சுடுதலில் ஈடுபட்டோம்... நீங்கள் எத்துணைத்
துணிவுள்ளவர் என்பதைச் சோதித்துப் பார்க்கவே இவ்வாறு
செய்தோம்... துப்பாக்கிச் சத்தம் கேட்டு எல்லாரும் ஓடி ஒழிந்தபோது,
நீங்கள் மட்டும், எதற்கும் பயப்படாமல், அப்படியே இருந்தீர்கள்
அல்லவா!. உண்மையில் நீங்கள் துணிவுள்ள மகன்தான் என்று அவரை
வெகுவாகப் பாராட்டினார்கள்.
இறைவனைப் பற்றிப் போதிப்பவர்கள், இறைவார்த்தையை எடுத்துரைக்கும்
இறையடியார்கள், எதற்கும் அஞ்சாமல் துணிவோடு இருக்கவேண்டும்.
அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டுதான் இந்த நிகழ்வு.
இயேசு என்னும் பெரிய இறைவாக்கினர்
பொதுக்காலத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கின்ற நமக்கு
இன்றைய இறைவார்த்தை, நாம் ஒவ்வொருவரும் துணிவுள்ள இறைவாக்கினராக
வாழவேண்டும் என்றொரு அழைப்பைத் தருகின்றது. நாம் எப்படி இயேசுவைப்
போன்று துணிவுள்ள இறைவாக்கினர்களாக வாழலாம் என்று இறைவார்த்தையின்
ஒளியில் சிந்தித்துப் பார்ப்போம்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு நாசரேத்தில் உள்ள
தொழுகைக்கூடத்திற்கு சென்று கற்பிக்கின்றார். லூக்கா நற்செய்தியில்
இடம்பெறுகின்ற இந்த நிகழ்வு இயேசுவை இறைவாக்கினருக்கெல்லாம்
பெரிய இறைவாக்கினராகவும், இயேசுவின் வழியில் நடக்கின்ற ஒவ்வொருவரும்
அவர்போன்று எப்படி நடக்கவேண்டும் என்ற சிந்தனையையும் நமக்குத்
தருகின்றது.
வழிபாடுகளில் தவறாது கலந்துகொண்ட இயேசு
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தமது வழக்கப்படி, ஓய்வுநாளில்
தொழுகைக்கூடத்திற்குச் சென்றார் என்று வாசிக்கின்றோம் (4:16).
அப்படியானால், அவர் வழிபாடுகளில் தவறாது கலந்துகொண்டு, ஆண்டவரோடு
கொண்டிருந்த உறவில், அன்பில் நிலைத்திருந்தார் என்று உறுதியாகச்
சொல்லலாம். இந்த நிகழ்வு மட்டும் கிடையாது. பனிரெண்டு வயது நிரம்பிய
ஒவ்வொரு யூதரும் எருசலேமில் ஆண்டுதோறும் நடைபெறும் பாஸ்கா
விழாவில் கலந்துகொள்ளவேண்டும். இயேசு அதில் தவறாது கலந்துகொண்டார்
என்பதை விவிலியம் நமக்கு மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது
(லூக் 2:41-42, யோவா 2:13). இயேசுவுக்கு பரிசேயர்கள் பின்பற்றி
வந்த சடங்குமுறைகளில் மாற்றுக்கருத்து இருந்தாலும்கூட, அதைக்
குறித்து காரசாரமாக அவர்கோடு அவர் விவாதித்தாலும்கூட, வழிபாடுகளில்
தவறாது கலந்துகொண்டு இறை மனித உறவில் நிலைத்திருந்தார்.
இன்றைக்கு ஒருசிலர், நான் ஏன் ஆலயத்திற்குச் சென்று ஆண்டவனை வழிபடவேண்டும்?
என்று பிதற்றுவதைப் பார்க்க முடிகின்றது. இத்தகையோர் இயேசுவின்
வாழ்வை ஆழமாக படித்துப் பார்ப்பது நல்லது. நாம் ஏன் வழிபாடுகளில்
கலந்துகொள்ளவேண்டும் என்பதற்கான தெளிவாக பதிலை எபிரேயர் திருமுகத்தின்
ஆசிரியர் இன்னும் அழகாக எடுத்துரைப்பார். சிலர் வழக்கமாகவே நம்
சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை. நாம் அவ்வாறு செய்யலாகாது;
ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுவோமாக; இறுதிநாள் நெருங்கிவருவதைக்
காண்கின்றோம்; எனவே இன்னும் அதிகமாக ஊக்கமூட்டுவோம் என்று. (எபி
10:25). ஆம், வழிபாடு என்பது இறைவனைத் தொழுவதற்காக மட்டுமல்ல,
நம்மை நாமே ஊக்கப்படுத்திக்கொள்ளவும்தான். இதனை நாம் உணர்ந்து
செயல்படுவது நல்லது.
ஆண்டவரின் அருள்தரும் ஆண்டினை எடுத்துரைத்த இயேசு
தொழுகைக்கூடத்திற்குச் செல்கின்ற இயேசு, எசாயாவின் சுருளேட்டை
எடுத்து வாசிக்கத் தொடங்கிவிட்டு, அதற்கு விளக்கம் கொடுக்கத்
தொடங்குகின்றார். வழக்கமாக யூதர்களின் தொழுகைக்கூடத்தில் வழிபாடனது
இறைவேண்டலோடு தொடங்கி, இறைவார்த்தை வாசிக்கப்பட்டு, அதற்கு விளக்கம்
கொடுக்கப்படும். பின்னர் குருவானவர் (ரபி) இருந்தால் ஆராதனையோடு
நிறைவுபெறும் (இச 6:4-9,11:13-21) இயேசு தொழுகைக்கூடத்திற்குச்
சென்றபோதும் அப்படித்தான் நடைபெறுகின்றது. இதை ஒட்டி இன்னொரு
விஷயம், இயேசு வாசித்த எசாயாவின் சுருளேட்டை வாசிக்கின்றவர்கள்,
அதற்கு விளக்கம் கொடுக்கின்றபோது மெசியாவைக் குறித்து விளக்கம்
கொடுப்பார்கள். ஆனால் இயேசுவோ, 'நீங்கள் கேட்ட வாக்கு இன்று
நிறைவேறிற்று' என்கின்றார். அதுமட்டுமல்லாமல் ஆண்டவரின் அருள்தரும்
ஆண்டினை எடுத்துரைக்க நான் வந்திருக்கிறேன் என்கின்றார்.
அருள்தரும் ஆண்டு அல்லது ஜூபிலி ஆண்டினைக் குறித்து லேவியர்
புத்தகம் 25 அதிகாரம் எடுத்துச் சொல்கின்றது. ஏழு ஏழு ஆண்டுகளுக்குப்
பிறகு வரும் ஐம்பதாம் ஆண்டில் அடிமைகள் விடுவிக்கப்பட்டு, கடன்கள்
அனைத்தும் தள்ளுபடி செய்யவும், நிலைத்திற்கு ஓய்வு கொடுக்கப்படவும்
வேண்டும். இத்தகைய அருள்தரும் ஆண்டினை எடுத்துச் சொல்லும் இயேசு
தன்னுடைய பணிவாழ்வில் செய்துகாட்டுகின்றார். பொருளாதார
ரீதியில் அல்ல, ஆன்மீக ரீதியில் மக்களுடைய பாவங்களை மன்னித்து,
மக்களுக்கு இளைப்பாற்றி வழங்குவதன் வழியாக.
இயேசு கிறிஸ்து, ஆண்டவரின் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிப்பதோடு
மட்டுமல்லாமல், இன்னபிற காரியங்களையும் செய்வேன், அதுவும் எலியா,
எலிசா இறைவாக்கினர்களைப் போன்று எல்லா மக்களுக்கு செய்வேன் என்று
சொன்னதும், தொழுகைக்கூடத்தில் இருந்த யூதர்கள்
கொதித்தெழுகிறார்கள்.
துணிவுள்ள (பெரிய) இறைவாக்கினர் இயேசு
மெசியா என்பவர் யூதர்களுக்கு மட்டும்தான் சொந்தம் என்று
நினைத்துக்கொண்டிருந்த யூதர்கள் மத்தியில், மெசியாவாகிய தான்
யூதர்களுக்கு மட்டுமல்ல, எல்லா மக்களுக்கும் சொந்தம், எல்லாருக்கும்
மத்தியிலும் தன்னுடைய பணி இருக்கும் என்று சொல்வதனால் தனக்குப்
பெரிய பிரச்சனை வரும் என்று இயேசுவுக்கு நன்றாகவே
தெரிந்திருக்கும். அப்படியிருந்தும் அவர் துணிவோடு தன்னுடைய பணியென்ன,
தன்னுடைய பனியின் இலக்கு மக்கள் யார்? யார்? என்று எடுத்துரைக்கின்றார்.
இதனால் யூதர்கள் இயேசுவை மலைமீது இருந்து தள்ளிவிட்டு கொல்லமுயல்கின்றார்கள்.
ஏற்கனவே இயேசுவை தச்சர் மகன் என்று புறக்கணிக்கும் யூதர்கள்,
அவர் எல்லாருக்கும் மத்தியிலும் பணிசெய்வேன் என்று சொல்வதைக்
கேட்டு அவரைக் கொல்லமுயல்கிறார்கள். அதற்காக பயந்துவிட்டு தன்னுடைய
கொள்கையிலிருந்து அவர் பின்வாங்கிவிடவில்லை. மாறாக இறுதிவரைக்கும்
துணிவுடன் இருந்து ஆண்டவரின் வார்த்தையை எடுத்துரைக்கின்றார்.
இயேசுவின் வழியில் நடந்து, இறைப்பணியை செய்கின்ற ஒவ்வொருவரும்
எதிர்வரும் சவால்களைக் கண்டு பயந்துவிடாமல், துணிவோடு இருந்து
இயேசுவுக்கு சான்று பகரவேண்டும் என்பதுதான் அவர் இந்நாளில் நம்மிடமிருந்து
எதிர்பார்க்கின்ற ஒன்றாக இருக்கின்றது.
சிந்தனை
இறைவாக்கினருக்கு ஏச்சுக்களும் பேச்சுக்களும் இலவசம் என்பதுபோல,
இயேசுவின் வழியில் நடக்கின்ற ஒவ்வொருவருக்கும், அவர் பணிசெய்கின்ற
ஒவ்வொருவருக்கும் அவரைப் போன்று ஏச்சுக்களும் பேச்சுக்களும் உண்டு.
அதற்காக நாம் கலந்கிவிடாமல், அவர்மீது நம்பிக்கை வைத்து,
துணிவோடு இறைவாக்கினர் பணியைச் செய்யவேண்டும். அப்போதுதான்
நாம் துணிவுள்ள இறைவாக்கினர்களாக மாறமுடியும்.
ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், துணிவுள்ள இறைவக்கினர்களாவோம்.
அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
அறியாமையிலிருந்து விடுதலை
நெகேமியா 8:2-4,5-6,8-10
1 கொரிந்தியர் 12:12-30
லூக்கா 1:1-4, 4:14-21
இம்முறையும் பரிச்சயமான ஒரு கதையுடன் தொடங்குவோம். ஜென் துறவி
கிம்கானிடம் ஒரு இளைஞன் வருகிறான். 'சுவாமி! எனக்கு வாழ்க்கை
ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் ஆபத்து
இருப்பது போல இருக்கிறது. யாரும் என்னைக் கண்டுகொள்வதில்லை.
யாரைப் பார்த்தாலும் எனக்குப் பயமாக இருக்கிறது' என்று புலம்புகிறான்.
அப்போது கிம்கான் ஒரு உவமை சொல்கிறார்: 'காட்டு வழியே பயணம்
செய்து கொண்டிருந்த ஒருவனை ஒரு புலி துரத்துகிறது. எப்படியாவது
புலியிடமிருந்து தப்பி ஓடவிட வேண்டும் என நினைத்த அவன் வேகமாக
ஓடுகிறான். ஓடும் வழியில் ஒரு பெரிய பள்ளத்தாக்கு. பின்னால்
புலி. முன்னால் பள்ளத்தாக்கு. இருந்தாலும் பள்ளத்தாக்கில்
குதிக்கிறான். குதித்து கீழே போய்க்கொண்டிருக்கும் வழியில் ஒரு
மரத்தின் வேரைப் பற்றிக் கொள்கிறான். அப்பாடா! என்று
பெருமூச்சு விட்டவாறு கீழே பார்க்கிறான். அங்கே புலி அவனுக்காகக்
காத்திருக்கிறது. அண்ணாந்து மேலே பார்க்கிறான். இரண்டு எலிகள்
அவன் பற்றியிருந்த வேரைத் தோண்டிக் கொண்டிருக்கின்றன. தன் அருகில்
ஒரு ஸ்ட்ராபெரிக் கொடி. அழகான பழங்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன.
அதில் ஒன்றைப் பறித்து வாயில் போட்டு 'என்ன சுவையாய் இருக்கின்றது
இந்தப்பழம்' என்றான் அவன்.' உடனே ஞானம் பெற்றான் இளைஞன்.
ஜென் கதைகள் பெரும்பாலும் நிறைவு பெறும்போது 'உடனே ஞானம்
பெற்றான் சீடன்' என்றே முடிகின்றன. மதம் சார்ந்த போதனைகள் என்றாலும்
சரி, மதம் சாராத போதனைகள் என்றாலும் சரி, பெரும்பாலும் இவை அனைத்தும்
மனிதர்களை அறியாமையிலிருந்து விடுவிப்பதையே நோக்கமாகக்
கொண்டிருக்கின்றன. அல்லது அறியாமை என்பது ஞானம் அடைவதற்கான தடையாக
இருக்கிறது. அல்லது அறியாமை அகலும்போது ஞானம் பிறக்கிறது.
இன்றைய இறைவாக்கு வழிபாடு 'அறியாமையிலிருந்து விடுதலை' என்ற மையக்கருத்தைக்
கொண்டு சுழல்கிறது.
இன்றைய முதல் வாசகம் (காண். நெகே 8:2-4,5-6,8-10) நெகேமியா
நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய கி.மு. 450ல்
நெகேமியா ஆளுநராக இருந்தபோதுதான் சிதைந்து கிடந்த எருசலேம் நகரையும்
ஆலயத்தையும் கட்டி எழுப்புகின்றார். எருசலேம் நகரின் மதில்களைக்
கட்டி முடித்த அவர், ஏழைகளின் கடன்களை செல்வந்தர்கள் மன்னிக்க
வேண்டும் என்று சமூகப் புரட்சியும், ஆலயத்தின் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தவும்
செய்தார். இவரோடு தோள் கொடுத்து நின்றவர் மறைநூல் அறிஞரும்
குருவுமான எஸ்ரா. இருவரும் இணைந்து யூதா நாட்டை குழப்பத்திலிருந்தும்,
சமய கண்டுகொள்ளாத்தன்மையிலிருந்தும், ஏழ்மையிலிருந்தும்
காப்பாற்றுகின்றனர்.
இந்தப் பின்புலத்தில் எஸ்ரா செய்த ஒரு முக்கியமான செயலைத்தான்
இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம். இஸ்ரயேல் மக்கள்
பாபிலோனியாவின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று எருசலேம்
திரும்பி ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு கடந்தாலும், அவர்கள் எதிர்பார்த்த
அளவிற்கு ஆன்மீக, அரசியல், பொருளாதார, சமய நிலைத்தன்மையைப் பெற
முடியவில்லை. கடவுள் தங்களைத் தண்டித்துவிட்டதாக எண்ணிய பலர்
தங்களின் சமயத்தைக் கைவிடவும், தங்களின் சமகாலத்தில் மேலோங்கி
நின்ற உலகியல் தத்துவங்களாலும் இழுக்கப்படுவும் செய்தனர். சமய
மறுமலர்ச்சி காலத்தின் தேவையாக இருந்தது. எஸ்ரா தொடங்கிய மறுமலர்ச்சி
ஒரு சமூக நிகழ்வாகத் தொடங்குகிறது. அனைத்து தண்ணீர் வாயிலுக்கு
முன் இருந்த வளாகத்தில் ஒன்றுகூட்டுகிறார் எஸ்ரா. அவர்கள் முன்
திருச்சட்டத்தை வாசிக்கின்றார். 'ஒரே ஆளென மக்கள் கூடிவந்தார்கள்'
எனப் பதிவு செய்கிறார் ஆசிரியர். அதாவது, இவ்வளவு நாள்கள் தங்களுக்குள்
மக்கள் வேறுபட்டுக் கிடந்தாலும், அவர்களின் வெறுமை மற்றும் அடிமைத்தன
அனுபவம் எல்லாரையும் ஒன்றுகூட்டி, அவர்களுக்குள் இருந்த
வேற்றுமைகளைக் களைகின்றது. 'ஆண்களும், பெண்களும், புரிந்து
கொள்ளும் ஆற்றல் மிக்க சிறுவர்களும்' என அனைவரும் இணைந்து வருகின்றனர்.
இந்தச் சொல்லாடல் இரண்டு முறை பயன்படுத்தப்படுகிறது. எருசலேம்
ஆலயம் ஆண்களை மட்டுமே உள்ளே அனுமதித்தது. பெண்கள் மற்றும் குழந்தைகள்
வெளியில் நிறுத்தப்பட்டனர். ஆனால், தோரா என்னும் இறைவார்த்தையை
கேட்க எல்லாரும் அழைக்கப்படுகின்றனர். மேலும், தோரா முன் எல்லாரும்
சமம் என்னும் நிலை உருவாகிறது.
எஸ்ரா திருச்சட்ட நூலை வாசிக்க, மக்கள் அறியாமையிலிருந்து விடுதலை
பெறும் நிகழ்வு மூன்று பகுதிகளாக நடக்கிறது: (அ) 'திருநூலைத்
திறந்தபோது எல்லாரும் எழுந்து நின்றார்கள்,' (ஆ) 'எஸ்ராவோடு இணைந்து
கடவுளை வணங்கினர்,' (இ) 'வாசிக்கப்பட்டதன் பொருளைப்
புரிந்துகொண்டனர்.' 'எழுந்து நிற்றல்' மக்களின் தயார்நிலையையும்,
'முகங்குப்புற பணிந்து வணங்குதல்' அவர்களின் சரணாகதியையும்,
'பொருளைப் புரிந்துகொள்ளுதல்' அவர்கள் பெற்ற தெளிவையும்
குறிக்கிறது. திருச்சட்ட நூலின் பொருள் புரிந்த மக்கள் அழுது
புலம்பியதாகவும் அவர்களை எஸ்ரா ஆறுதல் படுத்துவதாகவும் பதிவு
செய்கிறார் ஆசிரியர்.
இவர்கள் ஏன் அழுதார்கள்? 'பல்வேறு நிலைகளில் தங்கள் ஆண்டவர் தங்களை
வழிநடத்தியதை மறந்து போன தங்களின் மறதிக்காக' அழுதார்களா? அல்லது
'இறைவன் இவ்வளவு நாள்கள் தங்களை கைவிட்டதற்காக' அழுதார்களா? அல்லது
'இத்திருச்சட்டத்திற்கும் தங்கள் வாழ்விற்கும் இடையே எவ்வளவு
பெரிய விரிசல் இருக்கிறது என்ற குற்ற உணர்வால்' அழுதார்களா? இந்த
மூன்று காரணங்களுக்காகவும் அழுதிருக்கலாம். ஆனால், இவர்களின்
கண்ணீர் இவர்களின் அறியாமையிலிருந்து விடுதலை பெறச் செய்கிறது.
ஆகையால்தான், மக்களின் கண்ணீர்ப் பெருக்கைக் கண்ட எஸ்ரா உடனடியாக,
'இன்று கடவுளாகிய ஆண்டவரின் புனித நாள். எனவே அழுது புலம்ப
வேண்டாம். நீங்கள் போய்க் கொழுத்தவற்றை உண்டு, இனிய திராட்சை
இரசத்தைக் குடியுங்கள். எதுவும் தயார் செய்யாதவருக்குச் சிறிது
அனுப்பி வையுங்கள் ... ஏனெனில் ஆண்டவரின் மகிழ்வே உங்களது வலிமை'
என அறிவுறுத்துகிறார்.
எஸ்ராவின் இவ்வார்த்தைகளில், (அ) 'அழ வேண்டாம்' என்ற கட்டளையும்,
(ஆ) இல்லாதவரோடு பகிருங்கள் என்ற கரிசனையும், (இ) 'ஆண்டவரின்
மகிழ்வே உங்களின் வலிமை' என்ற வாக்குறுதியும் இருக்கிறது. 'அழவேண்டாம்'
என்ற செய்தியானது இங்கே நான்கு முறை சொல்லப்படுகின்றது. 'ஆண்டவரின்
மகிழ்வே' என்னும் சொல்லாடலை, 'ஆண்டவர் தரும் மகிழ்வு' அல்லது 'ஆண்டவர்
என்னும் மகிழ்வு' என்று பொருள் கொள்ளலாம். இனி இறைவார்த்தையின்
வடிவில் விளங்கும் இறைவனின் மகிழ்ச்சியே இஸ்ரயேல் மக்களின் வலிமையாக
இருக்கப்போகிறது.
ஆக, இறைவனைப் பற்றிய அறியாமையில் இருந்த மக்கள் அவரின் இருப்பை
திருச்சட்ட நூல் வாசிப்பின் வழியாக உணர்ந்ததால், அவர்களின் அறியாமையிலிருந்து
விடுதலை பெறுகின்றனர். இதன் விளைவு, ஆண்டவரின் மகிழ்வைத் தங்களின்
வலிமையாக மாற்றிக்கொள்கின்றனர்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 12:12-30), தங்களுக்குள்
யார் பெரியவர்? யார் அதிகக் கொடைகள் பெற்றவர்? தங்களுள் யார்
மேன்மையானவர்? என்ற பிளவுபட்டு நின்ற கொரிந்து நகரத் திருச்சபைக்கு,
உடல் மற்றும் அதன் இருப்பு-இயக்கத்தை உருவமாக முன்வைத்து அனைத்து
உறுப்புகளும் இணைந்து செயல்படுவதன் அவசியத்தை வலியுறுத்துகின்றார்.
இன்றைய இரண்டாம் வாசகப் பகுதி மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது:
முதல் பிரிவில் (12:12-13), தூய ஆவியார் வழியாக ஒரே உடலாய் இருக்கும்படி
திருமுழுக்குப் பெற்ற அனைவரும் கிறிஸ்துவின் உடலின் உறுப்பினர்
ஆகிறார்கள் என்ற இறையியலை முன்வைக்கின்றார் பவுல். இரண்டாம்
பிரிவு (12:14-26) மனித உடல், அதன் உறுப்புக்களின் இருப்பு,
இயக்கம், இன்றியமையாமை பற்றி விளக்குகிறது. மூன்றாம் பிரிவில்
(12:27-30), 'நீங்கள் கிறிஸ்துவின் உடல். ஒவ்வொருவரும் அதன் தனித்தனி
உறுப்புகள்' என்று மறுபடியும் வலியுறுத்தி, திருச்சபையின் பல்வேறு
பணிநிலைகளை எடுத்துரைக்கின்றார்.
திருச்சபையின் பணிநிலைகள் எல்லாம் படிநிலைகள் என்ற அறியாமையில்
இருந்துகொண்டு ஒருவர் மற்றவரோடு சண்டையிட்டுக்கொண்டிருந்த மக்களை
அவர்களின் அறியாமையிலிருந்து விடுதலை செய்து, அவர்களின் தனித்தன்மை
மற்றும் ஒருங்கியக்கத்தை நினைவூட்டுகின்றார் பவுல். தங்களுக்குள்
நிலவிய ஒருமையை அறியாதவாறு அவர்களின் கண்கள் மறைக்கப்பட்டிருக்க,
அவர்கள் தங்களின் வேற்றுமைகளை மட்டும் முன்னிறுத்தி ஒருவர் மற்றவரைத்
தாழ்த்தவும், காயப்படுத்தவும், அழிக்கவும் முயல்வது தவறு என்பது
இதிலிருந்து தெளிவாகிறது.
ஆக, 'நான்' என்ற அறியாமையிலிருந்து விடுதலை செய்து, 'நாம்' என்ற
அறிவிற்குத் தன் திருச்சபையை அழைத்துச் செல்கிறார் பவுல்.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 1:1-4, 4:14-21) இரண்டு
பிரிவுகளைக் கொண்டுள்ளது: (அ) லூக்காவின் நற்செய்தி முன்னுரை
(1:1-4), (ஆ) இயேசுவின் பணித் தொடக்கம் (4:14-21).
நான்கு வாக்கியங்களாக தமிழ் மொழிபெயர்ப்பில் கொடுக்கப்பட்டுள்ள,
நான்கு வசனங்களும் கிரேக்கத்தில் ஒரே வாக்கியமாக இருப்பது
லூக்காவின் இலக்கியத்திறனுக்கு சிறந்த சான்று. தன் நற்செய்தியை
'மாண்புமிகு தியோபில் அவர்களே' என தொடங்குவதுபோல, தான் எழுதும்
திருத்தூதர் பணிகள் நூலையும் இவ்வாறே தொடங்குகிறார். இந்த
'தியோபில்' ஒரு வரலாற்று நபரா, அல்லது இந்த நூலை வாசிக்கும் அனைவருமா
என்பது புரியாத புதிராகவே உள்ளது. 'தியோபில்' என்றால் 'கடவுளால்
அன்புசெய்யப்படுபவர்' என்பது பொருள். நற்செய்தியை வாசிக்கும்
அனைவருமே கடவுளால் அன்பு செய்யப்படுபவர்தாம். அல்லது கடவுளால்
அன்புசெய்யப்படுபவர் மட்டுமே நற்செய்தியை வாசிக்க முடியும்.
மேலும், லூக்கா தன் நற்செய்தி தான் ஆராய்ச்சி செய்ததன் பயனாக
எழுதப்பட்டது எனவும், இதன் நோக்கம், தியோபில் அவர்கள் தான்
கேட்டதை உறுதி செய்துகொள்வதற்காகவும் என்று சொல்வதன் வழியாக,
'தெயோபில்' அவர்களின் கிறிஸ்துவைப் பற்றிய 'அறியாமையிலிருந்து
அவரை விடுதலை செய்வதற்கும்' என்று மொழிகிறார் லூக்கா.
நற்செய்தி வாசகத்தின் இரண்டாம் பிரிவை இன்னும் மூன்று உட்பிரிவுகளாகப்
பிரிக்கலாம்: (அ) இயேசுவின் கலிலேயப் பணி (14:14-15), (ஆ) இயேசு
எசாயா இறைவாக்கினர் வாசகத்தை வாசித்தல் (14:16-20), (இ) இயேசுவின்
போதனை (14:21).
மாற்கு 6ல் இயேசு நாசரேத்தில் பணி தொடங்குவதை ஒத்ததாக இருக்கிறது
லூக்காவின் இந்த படைப்பு. மாற்கு நற்செய்தியாளருக்கும், லூக்கா
நற்செய்தியாளருக்கும் இதில் உள்ள பெரிய வேறுபாடு என்னவென்றால்
எசாயாவின் இறைவாக்குப் பகுதியை இயேசு வாசிக்கும் நிகழ்வுதான்.
'இயேசு தம் சொந்த ஊரான நாசரேத்துக்கு வந்தார்' என லூக்கா நிகழ்வைத்
தொடங்குகிறார். நாசரேத்து இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்வுகளில்
முக்கியமான ஒரு ஊர் (காண். 1:26, 2:4, 39, 51). இந்த ஊரில்தான்
இயேசு 'வளர்ந்தார்'. இயேசு தொழுகைக்கூடங்களில் கற்பித்தார் என
14:15ல் லூக்கா குறிப்பிட்டாலும், இயேசுவின் தொழுகைக்கூட நிகழ்வு
இங்கேதான் தொடங்குகிறது. 'வாசிக்க எழுந்தார். போதிக்கும்போது
அமர்ந்தார்' (4:20, 5:3). எழுவதும், அமர்வதும் இங்கே நாம் கவனிக்க
வேண்டியவை. இயேசுவின் காலத்தில் தொழுகைக்கூடத்தில் என்ன
மாதிரியான செப ஒழுங்கு இருந்திருக்கும் என்பது நமக்கு தெரியவில்லை.
ஆனால், வழக்கமான வழிபாட்டில், ஷெமா இஸ்ரயேல், பத்துக்கட்டளைகள்
வாசித்தல், 18 ஆசியுரைகள், புனிதநூல் வாசகம், திருப்பாடல்கள்,
வாசக விளக்கம், இறுதி ஆசீர் என்னும் ஏழு கூறுகள் இருக்கும்.
லூக்கா இவற்றில் 'வாசகம்' மற்றும் 'விளக்கம்' என்னும் இரண்டு
கூறுகளை மட்டுமே குறிப்பிடுகின்றார்.
இயேசுவின் காலத்தில் தோரா நூல் எழுத்துவடிவத்தில் முழுமை
பெற்று, தொழுகைக் கூடங்களில் வாசிக்கப்பட்டது. இறைவாக்கு நூல்கள்
வாசிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லையென்றாலும், எசாயா 61 முக்கியமான
பகுதியாக இருந்ததால் அது செபக்கூட வாசகத்தில் இடம் பெற்றது. எசாயா
61ல் தான் 'மெசியா', அதாவது 'அருள்பொழிவு பெற்றவர்' என்ற
வார்த்தை வருகிறது. ஒட்டுமொத்த யூத நம்பிக்கையின் அடிப்படையே
மெசியாவின் வருகையே. இந்தப் பகுதியை இயேசுவே விரும்பி எடுத்தாரா,
அல்லது அது விரித்து அவரிடம் கொடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை.
மேலும், செபக்கூடத்தில் உள்ள ஏவலரின் பணி மிகவும் முக்கியமானது.
இவர் வெறும் எடுபுடி வேலைக்காக இருப்பவர் என்றாலும், இவருக்கு
எழுதப் படிக்க தெரியும். எபிரேயம் தெரியும். இயேசு எபிரேயத்தில்
வாசித்துவிட்டு, அரமேயத்தில் விளக்கம் தந்திருப்பார். வழக்கமாக
மூன்றுபேர் வாசகங்கள் வாசிப்பர். மற்றவர்கள் என்ன வாசித்தார்கள்
என்பதும் நமக்கு சொல்லப்படவில்லை.
லூக்கா 4:18-19, எசாயா 61:1 மற்றும் 58:6ன் கிரேக்க பதிப்பிலிருந்து
(எழுபதின்மர் நூல்) எடுக்கப்பட்டுள்ளது. இதை அப்படியே எடுத்து
பயன்படுத்தாமல், லூக்கா கொஞ்சம் மாற்றம் செய்கின்றார்: 'ஆண்டவரின்
ஆவி என்மேல் உள்ளது. ஏனெனில் அவர் எனக்கு அருள்பொழிவு
செய்துள்ளார்.ஏழையருக்கு நற்செய்தி அறிவிக்கவும், ('உள்ளம் உடைந்தோரை
குணப்படுத்தவும்' என்னும் வாக்கியத்தை விட்டுவிடுகின்றார்),
சிறைப்பட்டோருக்கு விடுதலையை பறைசாற்றவும், பார்வையற்றோர்
பார்வை பெறுவர் என அறிக்கையிடவும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை
செய்யவும், ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை அறிவிக்கவும் அவர் என்னை
அனுப்பியுள்ளார்.' மேலும், 'கடவுள் அநீதிக்குப் பழிவாங்கும்...'
என்று தொடருமுன் இயேசு சுருளை சுருட்டிவிடுகிறார். இயேசு
வாசித்த இந்த இறைவாக்குப் பகுதியில் மையமாக இருப்பது, 'பார்வையற்றோர்
பார்வை பெறுவர்' என்பதுதான். இங்கே வெறும் புறக்கண் பார்வையை
மற்றும் இறைவாக்கினர் குறிப்பிடவில்லை. மாறாக, 'ஆண்டவரின் ஆவியையும்,
ஆண்டவரின் அருள்தரும் ஆண்டினை அறிவிக்க வந்த அருள்பொழிவு பெற்றவரான'
இயேசுவை அடையாளம் கண்டுகொள்ளும் அகப்பார்வையைத்தான் குறிக்கிறது.
ஆகையால்தான், சற்று நேரத்தில், 'நீங்கள் கேட்ட இந்த மறைநூல்
வாக்கு இன்று நிறைவேறிற்று' என்று தன்னில் மறைநூல் வாக்கு
நிறைவேறுவதாக அறிக்கையிடுகின்றார் இயேசு.
ஆக, தெயோபில் அவர்கள் லூக்காவின் பதிவின் வழியாகவும், நாசரேத்து
மக்கள் இயேசுவின் போதனை வழியாகவும் அறியாமையிலிருந்து விடுதலை
பெறுகின்றனர்.
இவ்வாறாக, முதல் வாசகத்தில் எஸ்ராவின் திருச்சட்ட நூல்
வாசிப்பு எருசலேம் மக்களுக்கும், இரண்டாம் வாசகத்தில் பவுலின்
'உடல் உருவகம்' கொரிந்து நகர மக்களுக்கும், நற்செய்தி வாசகத்தில்
இயேசுவின் தொழுகைக்கூடப் போதனை நாசரேத்து மக்களுக்கும் 'அறியாமையிலிருந்து
விடுதலை' தருவதாக இருக்கின்றது. இம்மூன்றையும் இணைத்து இன்றைய
பதிலுரைப் பாடல், 'ஆண்டவரின் நியமங்கள் சரியானவை. அவை இதயத்தை
மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை. அவை கண்களை
ஒளிர்விக்கின்றன' (திபா 19) என்கிறது.
இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு விடும் சவால் என்ன?
இன்று பல நேரங்களில் நாம் பெற வேண்டிய புற விடுதலைகள் என்று
பொருளாதாரம், அரசியல், சமூகம், சமயம் போன்ற தளங்களை ஆராய்கிறோம்.
ஆனால், இவையெல்லாம் தொடங்க வேண்டியது 'அக விடுதலையில்தான்.' இன்று
என் மனத்தில் இருக்கும் அறியாமை இருள் அழிந்தால்தான் என்னால்
அடுத்தவரைச் சரியாகப் பார்க்க முடியும். இதையே இயேசு, 'உண்மை
உங்களை விடுதலை செய்யும்' என்கிறார்.
இறைவார்த்தை வாசிப்பின் வழியாகவும், இணைந்த திருச்சபை வழியாகவும்
நாம் அறியாமையிலிருந்து விடுதலை பெற முடிகிறது. நாம் பெறுகிற
இந்த விடுதலை எப்படி வெளிப்பட வேண்டும்?
அ. ஆண்டவரின் மகிழ்வு நம் வலிiமாக வேண்டும். ஏனெனில், நம் மகிழ்வுகள்
குறுகியவை. அவை நம் வல்லமையைக் கரைத்துவிடுபவை. ஆனால், ஆண்டவரில்
கொள்ளும் மகிழ்வு நமக்கு வலுவூட்டும்.
ஆ. வேற்றுமை பாரட்டாமல் ஒற்றுமையைக் கொண்டாடுவது. இப்படிக்
கொண்டாடும்போது நம்மால் ஒருவர் மற்றவரின் திறன்களை மதிக்க
முடிகிறது.
இ. தியோபில் போல ஏக்கமும், நாசரேத்து மக்கள் போல 'இயேசுவின்மேல்
கண்களைப் பதிய வைத்தலும்' இருத்தல் வேண்டும்.
இறுதியாக, மகிழ்ச்சி, ஒற்றுமை, நம்பிக்கை - இவை மூன்றும் அறியாமையிலிருந்து
விடுதலை பெறுபவர் சுவைக்கும் கனிகள்.
(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)
Faculty Member
Saint Paul's Seminary
Tiruchirappalli - 620 001
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
இருக்கட்டும் இலக்கு
பிறக்கட்டும் தெளிவு
பொதுக்காலம் 3ஆம் ஞாயிறு கவிதை
(நெகேமியா 8:2-4,5-6,8-10
1 கொரிந்தியர் 12:12-30
லூக்கா 1:1-4, 4:14-21)
இன்றைய உலகத்தை
எந்த வரிசையில்
சேர்ப்பது என்பது
பலருக்கு கேள்விக்குறியாய்
அமைந்துவிடுகின்றது
நல்லதும் இருக்கிறது
கெட்டதும் பரவுகிறது
விடியலும் தோன்றுகிறது
மறைதலும் நிகழ்கிறது
குழப்பங்களுக்கு மத்தியில்
கும்மியடிக்கும் கூட்டங்களாக
நம்மை மாற்றிவிட்டு
வேடிக்கை பார்க்கின்றனர்
ஒரு கூட்டத்தினர்...
குடும்பம் தொடங்கி
கோயில் வாசல் வரை
எங்குப் பார்த்தாலும்
இலக்கில்லாத வாழ்க்கை
தெளிவில்லாத பார்வை
எதற்கெடுத்தாலும்
கூட்டம் கூடுகிறது
கூடியமட்டும் பிரச்சனை
குறையுமா என்றால்
கூடிக்கொண்டே செல்கிறது
இது எதார்த்தமான உண்மை!
இன்று நாம் வாழும்
இச்சமூகத்தில்
இலக்கில்லா இளையோரையும்
தெளிவில்லா பெரியோரையும்
எளிதாய் அடையாளப்படுத்தலாம்
காரணம்
எவருடைய வாழ்வும்
இலக்கிற்குள்ளும்
தெளிவுகளுக்குள்ளும் பிறப்பதில்லை
முடிவுகள் அனைத்தும்
சுயநலப் பார்வைக்குள்ளும்
தன்னலப் போக்குகளிலும்தான்
பிறக்க பழகியிருக்கின்றன
இத்தகு குறுகிய மனநிலையைக்
குத்திக் கிழிக்கும்
இறைவார்த்தையாகதான்
இன்றைய இறைவாக்கு வழிபாடு
அமைந்திருக்கின்றது
இறைவார்த்தைக்கேற்ப வாழவும் நமக்கு
அழைப்பு கொடுக்கின்றது!
முதல்வாசகத்தில்
மிகுந்த அச்சத்தோடு இருந்த
மக்களுக்கு
திருநூல் வல்லுநரான எஸ்ராவின் வார்த்தைகள்
இலக்கை நோக்கி அவர்களைப்
பயணிக்க வைத்து
கடவுள் உங்களோடு இருக்கிறார்
நீங்கள் கவலை கொள்ளாதீர்கள்
புலம்பி அழாதீர்கள்
ஆண்டவரிலே மகிழுங்கள்
அவரே உங்களின் வலிமை என்கிற
தெளிவான புரிதலையும்
இரண்டாம் வாசகத்தில்
புனித பவுல் கொரிந்து நகர மக்களுக்கு
அவர்களின் இலக்கு
எதுவாக இருக்க வேண்டும்
அவர்களின் பார்வை எவ்வாறு
தெளிவு பெற வேண்டுமென்று
கடவுளின் படைப்பான உடலினை ஓர்
உருவகமாகக் கொண்டு
விளக்கமளிப்பதையும்
இன்று நாம் வாசிக்கும்
முதல் இரண்டு வாசகங்கள்
அழகாக எடுத்துரைக்கின்றன!
இவ்விரு வாசகங்களின் நீட்சியாக
இன்று நாம் தியானிக்கும்
நற்செய்தி வாசகம் அமைகின்றது...
இயேசு தன் பணி யாதென
தொழுகைக் கூடத்தில்
பறைசாற்றுகின்றார்
எல்லாரின் கண்களும் அவரையே
உற்றுநோக்கியிருந்தன.
இயேசு தன்னுடைய பணிஅறிக்கையை
இன்று சமர்ப்பிக்கின்றார்
அவர் எதற்காக இம்மண்ணுலகிற்கு
வந்தார் என்ற தெளிவும்
யார் என்னுடைய இலக்கு மக்கள்
என்பதன் முகவரியும்
மிக நேர்த்தியாக கொண்டிருந்தார்
என்பதை வெளிப்படையாய் தெரிவிக்கிறது
நற்செய்தி வாசகம்!
ஆண்டவரின் ஆவி என்னில்
பொழியப்பட்டுள்ளது என்பதனை உணர்ந்த
இயேசு கிறிஸ்து
ஏழைகளும்
சிறைப்பட்டோரும்
பார்வையற்றோரும்
ஒடுக்கப்பட்டோரும்
அவரின் இலக்கு மக்களாகவும்
விடுதலை அளிப்பதும்
நற்செய்தியைப் பறைசாற்றுவதும்
பார்வையை வழங்குவதும்
அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு
அறிவிப்பதும்
அவரின் பணித் தெளிவாகவும் இருக்கிறது
எனவே பொதுக்காலம்
மூன்றாம் ஞாயிறு கொடுக்கவிரும்பும்
அற்புதமான செய்தி என்னவென்றால்
நம்முடைய இலக்கும்
தெளிவான பார்வையும்
இயேசுவை நோக்கியிருந்தால்
நிச்சயம் நாமும் நம்முடைய
இலக்கை அடைவோம்
பார்வையைத் தெளிவாக்குவோம்
என்பதுதான்!
இதை அன்றாட வாழ்வோடு
தொடர்புப்படுத்துகையில்
தொடர்ச்சியான சீர்கேடும்
சீரழிவுகளும்தான்
எட்டிப்பார்க்கின்றன...
இலக்கில்லா சூழல்தான்
இலவசங்களை நோக்கித் தள்ளுகிறது
இலக்கில்லா வாழ்வுதான்
இயலாமைக்கு வழியமைக்கிறது
இலக்கில்லா படிப்புதான்
பட்டதாரியாய் படிக்கட்டில் அமரச் செய்கிறது
இலக்கில்லா முயற்சியால்தான்
இறுகிபோன மனநிலை நோக்கி
நம்மைச் செலுத்துகிறது
தெளிவில்லா எண்ணம்தான்
நம்மைத் திணறச் செய்கிறது
தெளிவில்லா பேச்சுதான்
நம் வாழ்வைச் சூனியமாக்குகிறது
தெளிவில்லா நோக்கம்தான்
நம்மை நோகடிக்கிறது
தெளிவில்லா பார்வைதான்
நம்மைக் குருடாக்குகிறது
சிந்திப்போம்
இயேசுவின் பணி அறிக்கை
இலக்கை நோக்கிப் பயணித்து
தெளிவான பார்வையோடு
கல்வாரியில் இன்னுயிர் அளித்து
தன்னுயிரைத் தாகம் செய்து
தரணியை மீட்டார்
ஆகவே கிறித்தவர்களாகிய நாம்
இயேசுவை நம் இலக்காக்குவோம்
அவரையே நம் தெளிவான பார்வைக்குச்
சொந்தமாக்குவோம்
அப்போது இலக்கும் தெளிவான பார்வையும்
மற்றவர்களுக்கு பயன் அளிக்கும்
பாதையெல்லாம் பக்குவமளிக்கும்!
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
பொதுக்காலம் 03ஆம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை
கதிரவனைக் கண்டதும் காணாமல் போகும் பனித்துளி போல இறைவனின் அன்பு
பார்வை நம்மை சூழ்ந்திட கவலைகள் காணாமல் போகும் என்பதை கூறும்
பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு திருப்பலிக்கு அன்புடன் வரவேற்கின்றோம்.
இயேசு கூறிய அன்புப் பாதையில் தன்னலம் என்பதை ஒதுக்கிவிட்டு,
தளராது நடக்கவும், நமக்கும் பிறருக்கும் மகிழ்வைத் தரும்
வாழ்வை மேற்கொள்ளவும் வேண்டுவோம்.
இத்தரணியை உருவாக்கியவர்கள் எல்லாம் தனக்கென்று வாழாமல் பிறர்க்கென்று
உழைத்தவர்கள்; இன்று பிறர்க்கென்று உழைப்பேன் என்று உறுதிமொழி
எடுத்து விட்டு பிறர் உழைப்பை உறிஞ்சி தரணியை தாழ்த்திவிட்டார்கள்.
இவையெல்லாம் களையப்பட வேண்டி இறைவனிடம் வேண்டுவோம்.
இன்றைய முதல் வாசகத்தில், இன்று ஆண்டவரின் புனித நாள்; அழுது
புலம்ப வேண்டாம் என்று ஆசியை பொழிகிறது நெகேமியா இறைவார்த்தைகள்.
உழைப்பின் வலியை உடல் வியர்க்கும்;
உள்ளத்தின் வலியை கண்கள் வியர்க்கும்;
உலகை உருவாக்கிய கடவுளின் கருணை
கண்ணீரைத் துடைத்து, கவலைகளை கரைத்து
மனங்களில் மகிழ்வைக் கொண்டு வரும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்யவும்,
ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கவும், மனுமகனாகிய இறைமகனின் மீது
எழுந்துள்ள தூய ஆவியும் அவரால் மறைநூல் வாக்கு நிறைவேறியதையும்
லூக்கா நற்செய்தியாளரின் வார்த்தைகள் எடுத்தியம்புகின்றது.
இறையாட்சிக்கு உட்பட்ட அனைவரும் ஒரே உடலை சார்ந்தவர்கள் என்கிறார்
பவுல். இன்ப துன்பங்களில் நேரடியாகவோ மறைமுகமாகவோ நமக்கும் பங்கு
உண்டு கிறிஸ்துவோடு இணைந்து உள்ள நாம் சமூகத்தில் அனைவரோடும்
அன்புறவோடு இணைந்து வாழ வேண்டும்.
நாம், நம் குடும்பம் என்ற சிறிய வட்டத்துக்குள் சுருங்கிக்
கொள்ளாமல் சமூக அக்கறையோடு இந்நாட்டின் முன்னேற்றத்திற்காகவும்
ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நாம் இணையும்போது நம்மோடு கடவுள்
இணைந்து கொள்வார் என்ற சிந்தனைகளை சிந்தையில் தாங்கி இப்பலியில்
பங்கேற்போம்.
மன்றாட்டுகள்
1. நற்செய்தியை வாழ்வாக்கியவரே எம் இறைவா!
நற்செய்திப் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் திருச்சபைப்
பணியாளர்கள் நற்செய்தியை வார்த்தைகளால் மட்டும் அறிக்கையிடாமல்,
வாழ்வில் வெளிப்படுத்தி மக்களை நல்வழியில் நடத்திடும் வரம்
வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
2. தன்னலம் துறந்து பிறர் நலம் பேணுங்கள் என்று அறிவுறுத்தியவரே!
எம் நாட்டை ஆளும் தலைவர்கள், ஆட்சியாளர்கள் பிறர் பணிபுரியவே
பொது வாழ்வு என்பதை உணர்ந்து நாட்டு மக்களை மகிழ்விக்க கூடிய
திட்டங்களை செயல்படுத்தவும் போராட்டம் சிக்கல்களை தீர்க்கும்
அறிவு தந்து வழிநடத்தும் வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
3. கலங்க வேண்டாம், ஆண்டவரில் மகிழ்ந்திருங்கள் என்றவரே எம் இறைவா!
தங்கள் வாழ்க்கைப் பாதையில் எதிர்கொள்ளும் தடைகளும் பிரச்சனைகளும்
கலங்கடிக்கும் வேளைகளில் உம் அரவணைப்பை உணர்ந்து, உம்மில் மகிழ்ந்து
இருக்கும் வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
நன்றி: ஆசிரியை. திருமதி. ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.
|
|