Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     21 டிசம்பர் 2019  
                         திருவருகைக்காலம் 3ம் ஞாயிறு - 2ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 இதோ, மலைகள்மேல் தாவி என் அன்பர் வருகின்றார்.

இனிமைமிகு பாடலிலிருந்து வாசகம் 2: 8-14

தலைவி கூறியது: என் காதலர் குரல் கேட்கின்றது; இதோ, அவர் வந்துவிட்டார்; மலைகள்மேல் தாவி வருகின்றார்; குன்றுகளைத் தாண்டி வருகின்றார். என் காதலர் கலைமானுக்கு அல்லது மரைமான் குட்டிக்கு ஒப்பானவர்.

இதோ, எம் மதிற்சுவர்க்குப் பின்னால் நிற்கின்றார்; பலகணி வழியாய்ப் பார்க்கின்றார்; பின்னல் தட்டி வழியாய் நோக்குகின்றார். என் காதலர் என்னிடம் கூறுகின்றார்: "விரைந்தெழு, என் அன்பே! என் அழகே! விரைந்து வா.

இதோ, கார்காலம் கடந்துவிட்டது. மழையும் பெய்து ஓய்ந்துவிட்டது. நிலத்தில் மலர்கள் தோன்றுகின்றன; பாடிமகிழும் பருவம் வந்துற்றது; காட்டுப்புறா கூவும் குரலதுவோ நாட்டினில் நமக்குக் கேட்கின்றது. அத்திப் பழங்கள் கனிந்துவிட்டன; திராட்சை மலர்கள் மணம் தருகின்றன; விரைந்தெழு, என் அன்பே! என் அழகே! விரைந்து வா.'' பாறைப் பிளவுகளில் இருப்பவளே, குன்றின் வெடிப்புகளில் இருக்கும் என் வெண்புறாவே! காட்டிடு எனக்கு உன் முகத்தை; எழுப்பிடு நான் கேட்க உன் குரலை. உன் குரல் இனிது! உன் முகம் எழிலே!

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
அல்லது

இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்.

இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து வாசகம் 3: 14-17

மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி; இஸ்ரயேலே! ஆரவாரம் செய்; மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி. ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிட்டார்; உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்; இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய்.

அந்நாளில் எருசலேமை நோக்கி இவ்வாறு கூறப்படும்: "சீயோனே, அஞ்சவேண்டாம்; உன் கைகள் சோர்வடைய வேண்டாம். உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்; உன் பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூருவார்; தம் அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்; உன்னைக் குறித்து மகிழ்ந்து ஆடிப்பாடுவார்."


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் -திபா 33: 2-3. 11-12. 20-21 (பல்லவி: 1a,3a காண்க) Mp3
=================================================================================
பல்லவி: நீதிமான்களே, புதியதொரு பாடல் ஆண்டவர்க்குப் பாடுங்கள்.

2 யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள். 3 புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக் குரல் எழுப்புங்கள். பல்லவி

11 ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்; அவரது உள்ளத்தின் திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும். 12 ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறு பெற்றோர். பல்லவி

20 நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். 21 நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்; ஏனெனில், அவரது திருப்பெயரில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! இம்மானுவேலே, சட்டம் இயற்றும் எம் அரசே, இறைவனாம் எம் ஆண்டவரே, எம்மை மீட்க எழுந்தருளும். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?

+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-45

அக்காலத்தில் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டில் உள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது எலிசபெத்து வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்.

அப்போது எலிசபெத்து உரத்த குரலில், "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

வாழ்த்துக்கள் பரிமாறப்படும் போது, ஆவியானவரின் கனியாகிய மகிழ்வு பிறக்கின்றது. இதுவே ஆவியை பெற்றவர்களின் செயல்பாடாகும்.

ஆவியை பெற்ற நாம் பிறரை என்றென்றும் வாழ்த்துவோம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
முதல் வாசகம்

இதோ, மலைகள்மேல் தாவி என் அன்பர் வருகின்றார்.


இனிமைமிகு பாடலிலிருந்து வாசகம் 2: 8-14

"வருகின்றார்; நோக்குகின்றார்; கூறுகின்றார்"

நிகழ்வு

அது ஒரு சிற்றூர். அதில் இளம்பெண் ஒருவர் இருந்தார். ஒருநாள் அவர் அவ்வூரில் இருந்த பங்குத்தந்தையிடம் சென்று தன்னுடைய மனக்குமுறலை எடுத்துச் சொன்னார்: "சுவாமி! நான் இயேசுவை அன்பு செய்வதற்கு எவ்வளவோ முயற்சி செய்கின்றேன்; என்னால் முடியவில்லை. நீங்கள்தான் இதற்கு உதவிசெய்யவேண்டும்."

அந்த இளம்பெண் சொன்னதை அமைதியாகக் கேட்டுக்கொண்ட பங்குத்தந்தை அவரிடம், "இயேசு என்னை அன்பு செய்கின்றார் என்ற வார்த்தைகளை மீண்டும் மீண்டுமாகச் சொல். அதன்பிறகு என்ன நடக்கின்றது என்பதைப் பார்" என்று சொல்லி அனுப்பிவைத்தார். பங்குத்தந்தை சொன்ன வார்த்தைகளை மனத்தில் பதித்தவராய், அந்த இளம்பெண், "இயேசு என்னை அன்பு செய்கின்றார்; இயேசு என்னை அன்பு செய்கின்றார்" என்ற வார்த்தைகளைத் திரும்பித் திரும்பச் சொல்லிக்கொண்டு வீட்டிற்குச் சென்றார்.

மறுநாள் அவர் மீண்டுமாகப் பங்குத்தந்தைப் பார்க்க வந்தார். இந்த முறை அவருடைய முகம் அவ்வளவு பிரகாசமாக இருந்தது. அவர் மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தார். ஆம் "இயேசு என்னை அன்பு செய்கின்றார்" என்று அவர் சொன்ன வார்த்தைகள் அவருடைய வாழ்வை மிகவும் மாற்றியிருந்தன.

இயேசு நம்மை மிகவும் அன்பு செய்கின்றார். இந்த உண்மையைதான் மேலே உள்ள நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இயேசு நம்மை மிகவும் அன்பு செய்வதால், நம்மைத் தேடிவந்து, நமக்குப் புதுவாழ்வு தருகின்றார். இன்றைய முதல் வாசகமும் மெசியா நம்மைத் தேடி வந்து, நம்முடைய வாழ்வில் மகிழ்ச்சியைத் தருகின்றார் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இனிமைமிகு பாடல்கள் நூலின் பின்னணி

இன்றைய முதல் வாசகமானது இனிமைமிகு பாடல்கள் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்நூலை எழுதியவர் யார் என்ற போதிய தெளிவில்லை. இந்நூல் கிமு மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

காதலன், காதலி அல்லது தலைவன் தலைவிக்கு இருவருக்கும் இடையே நிகழும் அன்புப் பரிமாற்றத்தைக் கவிதை வடிவில் எடுத்துச் சொல்கின்றது இந்நூல். இந்நூல் தலைவன் தலைவி இருவருக்கும் இடையே நிகழும் அன்புப் பரிமாற்றத்தை விளக்கிச் சொல்வதாக இருந்தாலும், ஆண்டவரைக் கணவராகவும் இஸ்ரயேலரை மனைவியாகவும் (ஓசே 2: 16-19) இயேசுவை மனவாளனாகவும் திருஅவையை மனவாட்டியாகவும் (திவெ 21: 2,9) பார்க்கின்ற ஒரு பழக்கம் திருவிவிலியத்தில் இருப்பதால், இந்த நூலில் வருகின்ற தலைவரை ஆண்டவராகவும் தலைவியை நாமாவாகவும் பொருத்திப் பார்ப்பது மிகவும் நல்லது.

அன்போடு வருகின்றார்

இன்று முதல்வாசகமாக நாம் வாசிக்கும் பகுதியில், தலைவன் தன் தலைவியைத் தேடி வருவதைக் குறித்து வாசிக்கின்றோம். தலைவன் எப்படித் தன் தலைவியைத் தேடி வருகின்றாரோ, அதுபோன்று ஆண்டவராகிய கடவுள் நம்மைத் தேடிவருகின்றார். மட்டுமல்லாமல், தன்னுடைய அன்பையெல்லாம் நம்மீது பொழிய வருகின்றார். ஆகையால், நாம் செய்யவேண்டியதெல்லாம், தலைவன் வருகின்றபொழுது, தலைவி எப்படி காத்திருந்தாளோ, அதுபோன்று ஆண்டவர் நம்மைத் தேடி வருகின்றபோது அவருக்காக ஆவலோடு காத்திருப்பதே நல்லது

அன்போடு நோக்குகின்றார்

இன்றைய முதல் வாசகத்தில் இடம்பெறும் இரண்டாவது முக்கிய வார்த்தை நோக்குகிறார் என்பதாகும். "தலைவன் தலைவியைப் பின்னல் தட்டிவழியாக நோக்கினார்" என்று வாசிக்கின்றோம். இதையே நாம் நம் ஆண்டவர் இயேசு மக்களைக் (கூர்ந்து) நோக்கினார் என்பதோடு ஒப்பிட்டுச் சிந்தித்துப் பார்க்கலாம். ஆண்டவர் ஒருவரைக் கூர்ந்து நோக்கினார் (மாற் 10: 21) எனில், அவர்மீது தனிக்கவனம் செலுத்தினார் என்பதுதான் பொருளாக இருக்கின்றது. ஆகையால், நம்மைக் கூர்ந்து நோக்குகின்ற அல்லது நம்மீது தனிக்கவனம் செலுத்துகின்ற ஆண்டவரின் அன்பிற்கு உகந்தவர்களாய் அவர் வழியில் நடப்பது சிறந்தது.

அன்போடு பேசுகின்றார்

இன்றைய முதல் வாசகத்தில் இடம்பெறும் மூன்றாவது முக்கியமான வார்த்தை "கூறுகின்றார்" என்பதாகும். தலைவர் தன் தலைவியிடம் "விரைந்தெழு என் அன்பே! என் அழகே!" என்று கூறுகின்றார். இதனை ஆண்டவர் இயேசு நம்மை "காலம் நிறைவேறிவிட்டது; இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது..." (மாற் 1:14) என்று கூறுவது போன்று எடுத்துக்கொள்ளலாம். ஆம், ஆண்டவர் நம்மோடு அன்போடு பேசுகின்றார்; நம்முடைய உள்ளத்தில் மகிழ்ச்சியை விதைக்கின்றார். ஆகையால், நம்மிடம் அன்போடு வருகின்ற, அன்போடு நோக்குகின்ற, அன்போடு பேசுகின்ற அன்பு இறைவனுக்கு உகந்த மக்களாக வாழ நாமும் ஒருவரை ஒருவர் அன்பு செய்யும் மக்களாய் வாழ்வோம்.

சிந்தனை

"இறைமக்கள் அனைவரோடும் சேர்ந்து கிறிஸ்துவினுடைய அன்பின் அகலம், நீளம், ஆழம் என்னவென்று உணர்ந்து, அறிவுக்கெட்டாத இந்த அன்பை உணர்ந்துகொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக" (எபே 3:18) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் கிறிஸ்துவின் பேரன்பை உணர்ந்து, ஒருவர் மற்றவரை அன்புசெய்து, அவரது அன்பிற்கினிய மக்களாக மாறி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
லூக்கா 01: 39-45

"ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்"


நிகழ்வு

ஜெர்மனியில் தோன்றிய மிகச்சிறந்த கவி ஹென்றிச் ஹெய்ன் (1797-1856) என்பவர். இவர் கலோன் (Cologne) நகரில், மிகப் பிரமாண்டமாக இருக்கும் பெருங்கோயிலை (Cathedral) பார்த்துவிட்டு, தன்னோடு இருந்தவர்களிடம் இவ்வாறு சொன்னார்: "நம்முடைய முன்னோர்கள் ஆண்டவரிடம் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அதனால்தான் அவர்களால் இப்படியொரு பிரமாண்டமான கோயிலைக் கட்டி எழுப்ப முடிந்திருக்கின்றது. நம்மிடம் அத்தகைய நம்பிக்கை இல்லை; வெறும் கருத்துகள் மட்டும்தான் இருக்கின்றன. இந்தக் கருத்துகளைக் கொண்டு இப்படியொரு பிரமாண்டமான கோயிலைக் கட்டியெழுப்ப முடியாது. நம்பிக்கையால். நம்பிக்கையால்தான் கட்டியெழுப்ப முடியும்."

ஹென்றிச் ஹெய்ன் சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்டு, "நீர் சொல்வது முற்றிலும் உண்மை" என்று அவரோடு இருந்தவர்கள் ஆமோதித்தார்கள்.

ஆம், நம்மிடம் நம்பிக்கை இருந்தால், எவ்வளவு பெரிய செயலையும் செய்து முடிக்க முடியும். அதே நேரத்தில் நம்மிடம் நம்பிக்கை இல்லையென்றால் எதையும் செய்ய முடியாது. இன்றைய நற்செய்தி வாசகம் ஆண்டவர் சொன்னதை அப்படியே நம்பி வாழ்ந்த மரியாவைக் குறித்தும் அவருடைய உறவினரான எளிசபெத்தைக் குறித்தும் பேசுகின்றது. மரியா ஆண்டவரிடம் கொண்டிருந்த நம்பிக்கை எத்தகையது என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

நம்பிக்கையின் தாய் மரியா

நற்செய்தியில் மரியா தன்னுடைய உறவினரான எலிசபெத்தைச் சந்திக்க ஐம்பதிலிருந்து எழுபது மைல்கள் தூரம் ஓர் ஊருக்கு விரைந்து செல்கின்றார். அங்கு அவர் எலிசபெத்தைக் கண்டதும், வாழ்த்துகின்றார். எலிசபெத்தும் மரியாவை வாழ்கின்றார். அப்படி எலிசபெத் மரியாவை வாழ்த்துகின்றபோது, உதிர்கின்ற வார்த்தைகள்தான், "ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்" என்பதாகும். இந்த வார்த்தைகளைக் குறித்த தெளிவினைப் பெற நாம் நேற்றைய நற்செய்தி வாசகத்தோடு (லூக் 1: 26-38) இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

நேற்றைய நற்செய்தி வாசகத்தில், வானதூதர் கபிரியேல் மரியாவிடம், இயேசுவின் பிறப்பைக் குறித்துச் சொல்கிறபோது, "இது எப்படி நிகழும்? நான் கன்னியாயிற்றே?" என்று மரியா தொடக்கத்தில் சொன்னாலும், வானதூதர் எல்லாவற்றையும் எடுத்துரைத்த பின்பு, "நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்று ஆண்டவரின் வார்த்தையின்மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு, அவருடைய திருவுளத்தை நிறைவேற்றத் தயாராகின்றார்.

திருவிவிலியத்தில் ஆண்டவரால் அல்லது அவரது தூதரால் ஒருவருடைய பிறப்புச் செய்தி முன்னறிவிக்கப்படுகின்றபோது, அதைக் கேட்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரி எதிர்வினையாற்றுவார்கள். ஆண்டவர் ஆபிரகாமிடம், "... உமது மனைவி சாராவுக்கு மகன் பிறந்திருப்பான்" என்று சொல்கின்றது, அதைக் கேட்கும் சாரா நம்பமுடியாதவராய்ச் சிரிப்பார் (தொநூ 18: 9-15); செக்கரியாவோ "இது நடைபெறும் என எனக்கு எப்படித் தெரியும்?" என்று ஆண்டவரின் வார்த்தைகளில் நம்பிக்கை கொள்ளாமல், ஐயம் கொள்வார் (லூக் 1:18); ஆனால், மரியா முன்னவர்களைப் போன்று இல்லாமல், ஆண்டவரின் வார்த்தையில் அசைக்க முடியாத நம்பிக்கைகொண்டு, "உமது சொற்படியே நிகழட்டும்" என்று சொல்லி, நம்பிக்கையின் தாயாகத் திகழ்கின்றார்.

மரியாவின் நம்பிக்கை இதோடு நின்றுவிடவில்லை. அவர் ஆண்டவர்மீது கொண்ட நம்பிக்கையின் அடையாளமாக வேறொன்றையும் செய்தார். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

நம்பிக்கையைச் செயலில் வெளிப்படுத்திய மரியா

மரியா ஆண்டவருடைய வார்த்தையில் அசைக்க முடியாத கொண்டார். அந்த அசைக்க முடியாத நம்பிக்கையின் அடையாளமாக அவர், பேறுகால வேளையில் இருந்த தன்னுடைய உறவுக்காரப் பெண்மணியான எலிசபெத்து உதவச் செல்கின்றார். மரியா எலிசபெத்திடம் சென்றபோது எலிசபெத் ஆறுமாதக் கர்ப்பிணி. அதற்கடுத்து மூன்று மாதங்கள் மரியா எலிசபெத்தோடு இருந்து, அவருக்கு எல்லாவிதத்திலும் உதவி செய்திருக்கவேண்டும். இவ்வாறு மரியா புனித யாக்கோபு தன்னுடைய திருமுகத்தில் கூறுவதுபோன்று, நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுப்பவராக விளங்குகின்றார் (யாக் 2:17)

மரியா ஆண்டவரிடம் கொண்டிருந்த நம்பிக்கையும் அந்த நம்பிக்கையின் வெளிப்பாடாக எலிசபெத்துக்கு உதவச் சென்றதையும் குறித்துச் சிந்தித்துப் பார்க்கின்ற நாம், ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டு வாழ்கின்றோமா? அந்த நம்பிக்கையை நம்முடைய வாழ்வில் வெளிப்படுகின்றோமா? என்று சிந்தித்தப் பார்ப்போம். எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் இவ்வாறு கூறுவார், "நம்பிக்கையினாலன்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராக இருக்க முடியாது." (எபி 11: 6) ஆகையால், நாம் மரியாவைப் போன்று ஆண்டவர்மீது ஆழமான நம்பிக்கை கொண்டு, அந்த நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுப்பவர்களாய் வாழ்வோம்.

சிந்தனை

"தம்மிடம் நம்பிக்கை உண்டு எனச் சொல்லும் ஒருவர் அதைச் செயல்களிலே காட்டாவிட்டால், அதனால் பயன் என்ன?" என்பார் புனித யாக்கோபு (யாக் 2: 14). ஆகையால், நாம் மரியாவைப் போன்று இறைவனிடம் ஆழமான நம்பிக்கைக் கொண்டு, அந்த நம்பிக்கையை நம் வாழ்வில் வாழ்ந்து காட்ட முயற்சி செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!