Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

 

                      ஆண்டு B  
                                 திருவருகைக்காலம் மூன்றாம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 61: 1-2, 10-11

ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும், ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழங்கவும் என்னை அனுப்பியுள்ளார்.

ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்; என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்; மலர்மாலை அணிந்த மணமகன் போலும், நகைகளால் அழகுபடுத்தப்பட்ட மணமகள் போலும், விடுதலை என்னும் உடைகளை அவர் எனக்கு உடுத்தினார்; நேர்மை என்னும் ஆடையை எனக்கு அணிவித்தார்.

நிலம் முளைகளைத் துளிர்க்கச் செய்வது போன்றும், தோட்டம் விதைகளை முளைக்கச் செய்வது போன்றும், ஆண்டவராகிய என் தலைவர் பிற இனத்தார் பார்வையில் நேர்மையும் புகழ்ச்சியும் துளிர்த்தெழச் செய்வார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்லூக் 1: 47-48. 49-50. 53-54 (பல்லவி: எசா 61: 10)
=================================================================================
பல்லவி: என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்.

47 ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. 48 ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். பல்லவி

49 ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். 50 அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். பல்லவி

53 பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். 54 மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார். பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரும்போது கடவுள் உங்களுடைய உள்ளம், ஆன்மா, உடல் அனைத்தையும் காப்பாராக!

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 16-24

சகோதரர் சகோதரிகளே, எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே. தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டாம்.

இறைவாக்குகளைப் புறக்கணிக்க வேண்டாம். அனைத்தையும் சீர்தூக்கிப் பாருங்கள். நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள். எல்லா வகையான தீமைகளையும் விட்டு விலகுங்கள். அமைதி அருளும் கடவுள்தாமே உங்களை முற்றிலும் தூய்மையாக்குவாராக.

அவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரும்போது உங்களுடைய உள்ளம், ஆன்மா, உடல் அனைத்தையும் குற்றமின்றி முழுமையாகக் காப்பாராக! உங்களை அழைக்கும் அவர் நம்பிக்கைக்குரியவர். அவர் இதைச் செய்வார்.
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================


=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 + யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 6-8, 19-28

கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார். அவர் பெயர் யோவான். அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக் குறித்துச் சான்று பகர்ந்தார். அவர் அந்த ஒளி அல்ல. மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர். எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, நீ யார்? என்று கேட்டபோது அவர்,நான் மெசியா அல்ல என்று அறிவித்தார். இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார். அப்போது, அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா? என்று அவர்கள் கேட்க, அவர், நானல்ல என்றார். நீர் தாம் வர வேண்டிய இறைவாக்கினரா? என்று கேட்டபோதும், அவர்; இல்லை என்று மறுமொழி கூறினார். அவர்கள் அவரிடம், நீர் யார்? எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறுமொழி சொல்லியாகவேண்டும். எனவே உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர்? என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப்பற்றியே என்றார். பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள்;; அவரிடம்; நீர் மெசியாவோ எலியாவோ வர வேண்டிய இறைவாக்கினரே அல்லவென்றால் ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்? என்று கேட்டார்கள். யோவான் அவர்களிடம், நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார். அவர் எனக்குப்பின் வருபவர். அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை என்றார். இவையாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
இயேசுவுக்கு சான்று பகர்ந்த திருமுழுக்கு யோவான்

ஒருமுறை ஒரு பங்குத்தளத்தில் தியானப் பிரசங்கம் நிகழ்த்துவதற்காக இறையடியார்  பரதேசி பீட்டருக்கு அழைப்பு வந்தது. அப்போது அவர், தான் பிரசங்கம் செய்ய இருக்கும் நாளுக்கு முந்தைய நாளிலேயே அங்கு வருவதாக அந்தப் பங்குத்தந்தையிடம் சொன்னார், பங்குத்தந்தையும் அதற்குச் சரியென்று ஒத்துக்கொண்டார்.

தியான பிரசாங்கத்திற்கான வேலைகளும் வெகுவிமரிசையாக நடந்தன. ஆனால் பரதேசி பீட்டர், தான் கூறியபடி அன்றையநாளில் வரமுடியவில்லை. இரவு நீண்டநேரம் ஆகிவிட்டது, இனி அவர் காலையில்தான் வருவார் என்று பங்குதந்தையும் கோவில் கதவுகளை அடைத்துவிட்டு தூங்கச் சென்றுவிட்டார். ஆனால் பரதேசி பீட்டர் வந்த பேருந்து விபத்துக்குள்ளாக, விபத்து நடந்த இடத்தில் இருந்து வேறு பேருந்து கிடைக்காததால் அவர் நடந்தே நடு இரவில் ஆலயம் வந்து சேர்ந்தார். அங்கு ஆலயம் பூட்டப்பட்டு இருந்தது. வெளிக்கதவும் பூட்டப்பட்டு இருந்தது. காவலரையும் காணவில்லை. எனவே, அவர் வெளிக் கதவிலே தலைவைத்து நன்கு தூங்கிவிட்டார்.

அதிகாலையில் திருப்பலிக்கு மக்கள் வருவார்கள் என்பதால் காவலர் தூங்கி எழுந்து கதவைத்திறந்தார். அங்கு பரதேசி பீட்டர் எளிய கோலத்தில் ஒரு பரதேசி போன்று தூங்கிக்கொண்டு இருந்தார். அவரை இதுவரை பார்த்திராத காவலர் அவரைத் தட்டி எழுப்ப, அசதி மிகுதியால் அவர் எழுந்திரிக்க முடியவில்லை. அதனால் அந்த காவலர் அவரை கோபத்தோடு காலால் எத்தி, "இன்று இங்கு எவ்வளவு பெரிய மனிதர் வர போகின்றார்?, நீ இங்குவந்து இப்படித் தூங்கிகொண்டு இருக்கின்றாய்?" என்றார். அதற்கு அவர், "வருவோர் போவோருக்கு தொல்லை இல்லாமல் நான் இங்கு சற்றுத்தள்ளி சிறிதுநேரம் படுத்துக்கொள்கிறேன்" என்றார். அதற்கு அந்த காவலாளி அவர் வைத்திருந்த சோல்னா பையை பறித்துத், தூர எறிந்தார். அப்போது அதற்குள் இருந்த திருமறை நூலும் வெளியே வந்துவிழுந்தது. பின் காவலாளி வேறு பக்கம் சென்றுவிட்டார்.

இவர் கீழே விழுந்த திருமறை நூலை எடுத்து தட்டிக்கொண்டு இருக்கும் வேளையில், இவர் வருகின்றாரா என்று பார்க்க வந்த குருவானவர் நடந்த நிகழ்ச்சிகள் தெரியாமல் அவரை பார்த்து சந்தோசம்கொண்டு, அவரை உள்ளே அழைத்துச்சென்று தகுதியான ஓய்வு எடுக்க, அறையொன்றை கொடுத்து ஓய்வு எடுக்கச் சொல்லிவிட்டு ஆலயத்திற்கு சென்றார்.

தியான பிரசங்கம் சரியாக பத்து மணிக்கு ஆரம்பமானது. ஆலயத்தின் பீடத்தருகில் பரதேசி பீட்டர் பிரசங்கிக்க உள்ளே வந்துநின்றார். அப்போது பிரசங்கியார் யார் என்பதைக் காண விரும்பிய காவலாளி ஆலயத்தின் உள்ளே  சென்று பார்க்கும்போதுதான், யாரை காலால் உதைத்து வெளியே தள்ளினாரோ அவர்தான் அங்கு அனைவராலும் பாராடடப்பட்டுக்கொண்டு இருந்தார். அதைக்கண்டு நடுங்கிப்போன காவலாளி, உடனே பங்கு தந்தையிடம் சென்று நடந்ததை கூறி கதறி அழுதார். பங்கு தந்தைக்கும் கவலையாகி போய்விட்டது. மாலை வேளையில் பிரசங்கம் முடிந்தவுடன் காவலாளி பரதேசி பீட்டரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். அப்போது பரதேசிப் பீட்டர் அவரிடம், "நான் கடவுளல்ல, கடவுளைப் பற்றி எடுத்துத்துரைக்கும் ஒரு சாதாரண மனிதர், எதற்காக என்னுடைய காலில் விழுகிறாய்?" என்று சொல்லி அவரை மன்னித்து, இதைக்குறித்து தான் ஒன்றும் கவலைப்படவில்லை என்று சொல்லி அங்கிருந்த எல்லோரையும் பரவசப் படுத்தினார்.

"நான் கடவுளல்ல, கடவுளைப்பற்றி எடுத்துரைக்கும் ஒரு சாதாரண மனிதர்" என்ற இறையடியார் பரதேசிப் பீட்டர் வார்த்தைகள் நமது சிந்தனைக்கு உரியது. திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் தரும் சிந்தனை திருமுழுக்கு யோவானைப் போன்று இயேசுவுக்கு சான்று பகர்ந்து வாழ்வோம் என்பதாகும். நாம் எப்படி இயேசுவுக்கு சான்றுபகர்ந்து வாழ்வது எனச் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

திருவருகைக் காலம் தொடங்கியதிலிருந்தே நாம் திருமுழுக்கு யோவானைக் குறித்து அதிகமாக வாசிக்கின்றோம். இன்றைய நாளிலும் நாம் அவரைக் குறித்துத்தான் சிந்தித்துப் பார்க்க இருக்கின்றோம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் எருசலேமிலுள்ள யூதர்கள் அனுப்பிய குருக்களும் லேவியர்களும் நீர் யார்? என்று கேட்கின்றபோது அவர் நான் மெசியாவும் அல்ல, எலியாவும் அல்ல மாறாக மெசியாவைக் குறித்து சான்றுபகர வந்தவன் என்று மிகத் திட்டவட்டமாகக் கூறுகின்றார். வீண் பெருமைகளையும், அடுத்தவருக்குச் சேரவேண்டிய பேரையும் புகழையும் தானே அனுபவிக்கும் மக்களுக்குக் மத்தியில், திருமுழுக்கு வித்தியாசமான மனிதராகத் திகழ்கின்றார். அவர் தான் உண்மையிலே மெசியா அல்ல, மெசியாவைக் குறித்துச் சான்று பகரவந்தவன் என்ற முழங்குகின்றார்.

திருமுழுக்கு யோவான் நினைத்திருந்தால், தான்தான் மெசியா எனச் சொல்லியிருக்கலாம், மக்களும் அதை நம்பி இருப்பார்கள். ஏனென்றால் அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்கள் மெசியாவின் வருகைக்காக ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள். அத்தகைய சூழலை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு திருமுழுக்கு யோவான் தன்னை மெசியா என மக்களிடத்தில் கூறியிருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. அவர் தான் ஒளியைக் குறித்து சான்றுபகர வந்தவனே ஒழியே, தான் ஒளி அல்ல என்பதைத் திட்டவட்டமாக அறிவிக்கின்றார்.

திருமுழுக்கு யோவானின் இத்தகைய ஒரு பெருந்தன்மைக்குப் பின்னால் இருந்த மனநிலை என்னவென்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். நிச்சயமாக தன்னை முழுமையாக ஏற்றுக்கொண்ட, முழுமையாக அன்புசெய்த ஒருவரால்தால் இப்படிச் செய்யமுடியும். திருமுழுக்கு யோவான் தன்னை முழுமையாக ஏற்றுக்கொண்டார்; முழுமையாக அன்புசெய்தார். அதனால்தான் அவர் அப்படிச் சொன்னார். ஆகவே, இறைப்பணியைச் செய்யும் ஒவ்வொருவரும் தன்னை முழுமையாக ஏற்றுக்கொள்ளக்கூடியவராகவும், முழுமையாக அன்பு செய்யக்கூடியவராக இருக்கவேண்டும். தன்னை ஏற்றுக்கொள்ளாத ஒருவரால் பிறரையும் ஏற்றுக்கொள்ள முடியாது, பிறரை அன்புசெய்யமுடியாது ஆழமான உண்மை.

திருமுழுக்கு யோவானிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய அடுத்த பாடம்: தன்னை முன்னிலைப்படுத்தாமல், தன் தலைவனாகிய இயேசுவை முன்னிலைப்படுத்தக் கூடிய ஒரு பண்பாகும். ஒரு இறையடியாருக்கு இருக்கவேண்டிய தகுதியே இதுதான். கடவுளின் மகிமையையும், பெருமையையும் விளங்கிச் செய்ய தான் ஒரு கருவி என்ற மனப்பான்மையோடு வாழவேண்டும். இதற்கு அடிப்படையாக இருப்பது தாழ்ச்சி என்ற குணம்தான். திருமுழுக்கு யோவான் சொல்கிறார், "நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்; அவர் எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை" என்று. இப்படியெல்லாம் சொல்வதற்கு திருமுழுக்கு யோவானிடத்தில் நிறைய தாழ்ச்சி இருந்திருக்கவேண்டும். எனவே, இறையடியார் ஒவ்வொருவரும், இறைப்பணி செய்கின்ற ஒவ்வொருவரும் தான் ஒன்றுமில்லை, எல்லாப் புகழும் இறைவனுக்கே என்ற மனநிலையோடு வாழவேண்டும். அதற்குத் தான் என்ற ஆணவத்தை அல்ல, தாழ்ச்சியை ஆடையாக அணியவேண்டும்.

ஒரு ஞானியிடத்தில் சீடராகச் சேர்வதற்கு இளைஞர் ஒருவர் தன்னுடைய இரண்டு கைகளிலும் தாமரை மலர்களை ஏந்தி வந்தார். அப்போது அந்த ஞானி அவரிடத்தில், "கீழே போடு" என்று கத்தினார். தாமரை மலரை இடது கையில் வைத்திருப்பது அமங்களம் என்பதற்காகத்தான் ஞானி கீழேபோடு என்று சொல்கிறாரோ என நினைத்த அந்த இளைஞர், தன்னுடைய இடது கையிலிருந்த தாமரை மலரைக் கீழே போட்டார். அப்போதும் அந்த ஞானி கீழே போடு என்று கத்தினார். தன்னுடைய வலது கையில் இருக்கும் தாமரை மலரையும் கீழே போடச் சொல்கிறாரோ என்னவோ என நினைத்த அந்த இளைஞர் தன்னுடைய வலது கையிலிருந்த தாமரை மலரையும் கீழே போட்டார். அப்போதும் ஞானி அந்த இளைஞரைப் பார்த்து கீழே போடு என்று கத்தினார்.

கையிலிருந்த இரண்டு மலர்களையும் கீழேபோட்டாயிற்று. இன்னும் எதைக் கீழே போடுவது என்று குழம்பிப்போன இளைஞர் ஞானியிடத்தில், "இன்னும் எதைக் கீழே போடுவது?" என்று கேட்டார். அதற்கு ஞானி, "நான் கீழேபோடச் சொன்னது தாமரை மலர்களை அல்ல, தான் என்ற ஆணவத்தை" என்றார். அப்போதுதான் அந்த இளைஞர் உண்மையை உணர்ந்தார். சீடராக இருப்பதற்கு முதன்மையான தகுதியே தான் என்ற ஆணவத்தை அகற்றுவதுதான். ஆகவே, திருமுழுக்கு யோவான் எப்படி தாழ்ச்சியோடு வாழ்ந்தாரோ அதைப்போன்று இறைப்பணி செய்யும் நாம் ஒவ்வொருவரும் தாழ்ச்சியோடு வாழவேண்டும்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
யோவான் நற்செய்தியின் தொடக்கத்திலேயே, அதனுடைய நற்செய்தியின் அடிப்படை சாராம்சம் வெளிப்படுத்தப்படுகிறது. யோவான் நற்செய்தியின் அடித்தளமாகப்பார்த்தால் இரண்டு செய்திகளைச்சொல்லலாம். 1. இயேசு தான் கடவுளின் வெளிப்பாடு 2. யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ள மறுத்தல். வேறு எந்த நற்செய்தியிலும் காண முடியாத அளவுக்கு, யோவான் நற்செய்தியில் யூதர்கள் என்ற வார்த்தை ஏறக்குறைய 70 முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அவர்கள் தங்களை இயேசுவுக்கு எதிர்ப்பானவர்களாக காட்டிக்கொள்கிறார்கள். கடவுளின் அன்பும், அவரது எச்சரிக்கையும் சமஅளவில் இங்கே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

திருமுழுக்கு யோவானைச் சந்திக்க குருக்களும், லேவியர்களும் வருகிறார்கள். பரிசேயர்களால் அவர்கள் அனுப்பப்பட்டவர்கள். எதற்காக குருக்களையும், லேவியர்களையும் அனுப்ப வேண்டும்? எதற்காக பரிசேயர்கள் அனுப்ப வேண்டும்? இந்த இரண்டு கேள்விகளுக்கான பதிலை நாம் பார்ப்போம். திருமுழுக்கு யோவானுடைய தந்தை செக்கரியா ஒரு குரு. யூத மதத்தில், குருத்துவம் என்பது வழித்தோன்றல் அடிப்படையானது. ஏரோனின் வழித்தோன்றலில் வராத யாரும் குருவாகப் பணிபுரிய முடியாது. அதிகாரவர்க்கத்தினரின் பார்வையில், யோவான் ஒரு குரு. எனவே, அவருடைய குருகுலத்தில் இருந்து, அவரைப்பார்த்து பேச அனுமதிக்கிறார்கள். அதேபோல, அவர்களை அனுப்பியது பரிசேயர்கள். அவர்களுக்கு பின்னால் தலைமைச்சங்கம் இருந்தது. யாராவது இறைவாக்கினர் தோன்றினால், அவர் உண்மையான இறைவாக்கினரா? அல்லது போலியான இறைவாக்கினரா? என்பதை அறிந்து, செயலாற்ற வேண்டியது தலைமைச்சங்கத்தின் கடமை. எனவே, பரிசேயர்கள் அவர்களை அனுப்பினார்கள். வழக்கமான குருவைப்போல இல்லாததாலும், வழக்கமான போதகரைப்போல இல்லாததாலும், திருமுழுக்கு யோவான் மேல், அதிகாரவர்க்கம் சந்தேகம் கொண்டது. புதுமைக்கு எதிரானவர்களாக இவர்கள் இருந்தது இதற்கு காரணம்.

தங்களது சுயஇலாபத்திற்காக, ஆதாயத்திற்காக வளர்ச்சியை ஏற்றுக்கொள்ளாதவர்களும், சுயநலத்திற்காக தேவையற்றவைகளை வளர்ச்சி என்ற பெயரில் புகுத்துவதும் இன்றைய அதிகாரவர்க்கத்தினரின் அடாவடி நடவடிக்கைகளாக இருக்கின்றன. நீடித்த, நிலைத்த வளர்ச்சியை நமது அரசுகள் தாரக மந்திரங்களாகக் கொண்டு இயங்கட்டும்.

=================================================================================
 
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================

ஆண்டவரில் பெருமகிழ்ச்சி


(டிசம்பர் 13, 2020)
 எசாயா 61:1-2, 10-11
 1 தெசலோனிக்கர் 5:16-24
 யோவான் 1:6-8, 19-28
திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு மகிழ்ச்சியின் ஞாயிறு என அழைக்கப்பட்டு, இந்த நாளின் திருவழிபாட்டு நிறம் 'ரோஸ்' என வரையறுக்கப்பட்டுள்ளது.

இன்றைய முதல் வாசகம் (காண். எசா 61:1-2,10-11) இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது: முதல் பகுதியில், இறைவாக்கினர் எசாயா தன் பணியின் இலக்கு மற்றும் தன்மை பற்றி எடுத்துரைக்கின்றார். இரண்டாவது பகுதியில், வரவிருக்கும் நன்னிலை ஏற்கெனவே வந்துவிட்டதாகவும், தன் கடவுளின் செயலால் தான் பூரிப்படைவதாகவும் இறைவாக்கினர் துள்ளிக் குதிக்கின்றார்.

இந்த வாசகத்தின் பின்புலம், ஆண்டவரின் ஊழியன் அல்லது பணியாளன் என்னும் பாடலே (காண். எசா 42:1,48:16). ஆண்டவரின் பணியாளன் என்னும் தன்மையை ஒருவர் ஆண்டவரின் ஆவியாலேயே பெறுகின்றார். ஆண்டவரின் அருள்பொழிவு ஒருவரை, அவருடைய பணியாளர் நிலைக்கு உயர்த்துவதுடன் சமூகத்தில் அவருக்கென்று சில பணிகளையும் வரையறை செய்கிறது: நற்செய்தி அறிவித்தல், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்துதல், விடுதலையைப் பறைசாற்றுதல், விடிவைத் தெரிவித்தல், அருள்தரும் ஆண்டினை அறிவித்தல். இதே வாசகப் பகுதியையே இயேசுவும் தன் பணித்தொடக்கத்தில் தொழுகைக்கூடத்தில் வாசிப்பதாக லூக்கா பதிவு செய்கின்றார் (காண். லூக் 4).

இரண்டாவதாக, ஆண்டவராகிய கடவுள் தனக்கு, 'விடுதலை' மற்றும் 'நேர்மை' என்னும் இரண்டு ஆடைகளை அணிவிப்பதாக இறைவாக்கினர் மொழிகின்றார். நாடுகடத்தலின் பின்புலத்தில் இதைப் பார்த்தால், அடிமைகளாக நாடுகடத்தப்படுவர்கள் பெரும்பாலும் நிர்வாணமாக்கப்படுவர் அல்லது குறைவான ஆடைகள் அணிவிக்கப்படுவர். ஒருவரின் ஆடையைக் களைதல் என்பது அவர் அனைத்தையும் இழந்துவிட்டார் என்பதன் அடையாளம். ஆடைகள் களையப்பட்டுக் கிடந்த இஸ்ரயேல் மக்களுக்கு, ஆண்டவராகிய கடவுள், 'விடுதலை' மற்றும் 'நேர்மை' என்னும் இரண்டு ஆடைகளைக் கொடுக்கின்றார். 'விடுதலை' என்பது அவர்கள் விரைவில் பெறவிருக்கின்ற கட்டின்மையையும், 'நேர்மை' என்பது அவர்கள் இனிமேல் கடவுளின் உடன்படிக்கைக்குப் பிரமாணிக்கமாக இருப்பார்கள் என்பதையும் குறிக்கிறது. மேலும், 'மணமகன்' மற்றும் 'மணமகள்' என்னும் சொல்லாடல்கள் உடன்படிக்கை நிகழ்வை நினைவுறுத்தவதோடு, இஸ்ரயேல் மக்கள் பெறுகின்ற மகிழ்ச்சியையும் எடுத்துரைக்கிறது.

'ஆண்டவரின் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்' என உரக்கச் சொல்கிறார் இறைவாக்கினர். தன் செயல்களால் அல்ல, மாறாக, ஆண்டவரின் அருளாலேயே தனக்கு மகிழ்ச்சி என்பதை உணர்கிறார் எசாயா. ஆண்டவரில் ஒருவர் பெறும் மகிழ்ச்சி, ஒருவர் பெற்றுள்ள விடுதலை மற்றும் நேர்மையில் வெளிப்படுகிறது.
இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 தெச 5:16-24), புனித பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் கடிதத்தின் இறுதிப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. புதிதாக கிறிஸ்தவ நம்பிக்கைக்குள் நுழைந்த மக்களுக்கு சில அறிவுரைகளை வழங்குகின்றார் பவுல். அந்த வகையில், இறைவேண்டல் பற்றிய அறிவுரைப் பகுதியாக இந்தப் பகுதி அமைந்துள்ளது. 'மகிழ்ச்சியாக இருங்கள்,' 'இறைவனிடம் வேண்டுங்கள்,' 'நன்றி கூறுங்கள்' என்னும் மூன்று சொல்லாடல்கள் வழியாக அவர்களுடைய இறைவேண்டலின் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்று உணர்த்துகின்றார். மேலும், இதுவே 'கிறிஸ்து இயேசு வழியாகக் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம்' என்று சொல்லி அதன் மேன்மையைக் கூட்டுகின்றார்.
தெசலோனிக்கத் திருஅவை ஓர் இளைய திருஅவை. அத்திருஅவையின் உறுப்பினர்கள் நாளும் நிறைய பிரச்சினைகளை எதிர்கொண்டனர். துன்பங்கள், மற்றவர்களின் வெறுப்பு, நிராகரிப்பு, கேலிப் பேச்சு, அவமானம் என தங்களுடைய அண்டை வீட்டாரிடமிருந்து நிறைய இக்கட்டுகளை எதிர்கொண்டனர். பவுல் அந்த நகரத்தில் நற்செய்தி அறிவிக்கும்போதும் துன்பத்துக்கு ஆளானார். ஆனாலும், ஒரு நல்ல தந்தையாய் அவர்கள்மேல் அக்கறை கொண்டிருந்தார். ஆகையால்தான், 'எப்போதும்,' 'இடைவிடாது,' 'எல்லாச் சூழ்நிலையிலும்' என்று உற்சாகப்படுத்துகின்றார். மேலும், 'தூய ஆவியாரின் செயல்பாட்டைத் தடுத்துவிடவோ, அந்த நெருப்பை அணைத்துவிடவோ வேண்டாம்!' என எச்சரிக்கின்றார். ஏனெனில், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அவர்களைச் சோர்வுக்கு உள்ளாக்கி, தங்களுடைய நம்பிக்கை வாழ்விலிருந்து அவர்களை பின்நோக்கித் தள்ளிவிடும் என அஞ்சினார்.

ஆகவே,மகிழ்ச்சி, இறைவேண்டல், நன்றி ஆகியவற்றின் வழியாக தங்கள் நம்பிக்கை வாழ்வை அவர்கள் தக்கவைக்கவும், தகவமைக்கவும் வேண்டும் எனப் பவுல் விரும்புகின்றார். ஆண்டவரை மையமாக வைத்து வாழும் வாழ்வில் மகிழ்ச்சி மேலோங்கி நிற்கிறது.

நற்செய்தி வாசகம் (காண். யோவா 1:6-8,19-28), கடந்த வார வாசகத்தின் தொடர்ச்சியாக இருக்கிறது. திருமுழுக்கு யோவான் யார் என்று அறிமுகம் செய்கின்ற நற்செய்தியாளர் யோவான், தொடர்ந்து, அவர் தன்னைப் பற்றியும், தனக்குப் பின் வரும் மெசியா பற்றியும் அறிந்த அறிவுபற்றி ஒரு நிகழ்ச்சி வழியாக விளக்குகின்றார். 'நீர் யார்?' என்று மக்கள் கேட்டபோது, 'நான் மெசியா அல்ல!' என்று வெளிப்படையாகச் சொல்லிவிடுகின்றார். மேலும், 'நான் ஒரு குரல்' என்று தன்னை அடையாளப்படுத்துகின்றார். மேலும், யோவா 3:29இல், 'மணமகள் மணமகனுக்கே உரியவர். மணமகனின் தோழரோ அருகில் நின்று அவர் சொல்வதைக் கேட்கிறார். அதில் அவர் பெருமகிழ்ச்சி அடைகிறார். என் மகிழ்ச்சியும் இது போன்றது. இம்மகிழ்ச்சி என்னுள் நிறைந்துள்ளது' என்று திருமுழுக்கு யோவான் கூறுகிறார்.
'நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்,' 'நான் மணமகனின் குரல் கேட்பதில் மகிழ்கிறேன்' என்று சொல்லும் திருமுழுக்கு யோவானின் வார்த்தைகளில் அவருடைய பெருந்தன்மை புலப்படுகிறது.

ஆண்டவரின் மெசியாவை அறிந்து, அவரைப் பற்றி அறிவித்து, அவருக்கு வழிவிடுவதில் மகிழ்கின்றார் யோவான்.
ஆக,
முதல் வாசகத்தில், ஆண்டவர் தரும் விடுதலையும் நேர்மையும் இறைவாக்கினர் எசாயாவுக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் மகிழ்ச்சி தருகின்றது.
இரண்டாம் வாசகத்தில், ஆண்டவர் இயேசுமேல் கொண்டுள்ள நம்பிக்கை தெசலோனிக்க சமூகத்தின் மகிழ்ச்சிக்குக் காரணமாக இருக்கிறது.
நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் பற்றிய அறிவு திருமுழுக்கு யோவானுக்கு மகிழ்ச்சி தருகிறது.

இன்றைய இறைவார்த்தை வழிபாடு நம் வாழ்வுக்குச் சொல்வது என்ன?
நம் வாழ்வின் இலக்கு மகிழ்ச்சியே. நாம் அனைவரும் இந்த ஒற்றை வார்த்தைக்காகத்தான் வாழ்கிறோம், இருக்கிறோம், இயங்குகிறோம். ஆனால், பல நேரங்களில் நம் விரல்களுக்கிடையில் நழுவும் தண்ணீர் போல மகிழ்ச்சி நம் உள்ளங்கைகளிலிருந்து நழுவி விடுகிறது. சில நேரங்களில் நாமே மகிழ்ச்சி என்னும் தண்ணீரை நம் கைகளிலிருந்து உதறி விடுகிறோம்.
ஆண்டவரில் அடையும் மகிழ்ச்சியே சிறந்த மகிழ்ச்சி. 'ஆண்டவரின் மகிழ்வே நம் வலிமை' என்கிறார் நெகேமியா (காண். நெகே 8:10).

இந்த மகிழ்ச்சியை நாம் எப்படி அடைவது?

(அ) விடுதலை மற்றும் நேர்மை வழியாக
'பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை. வீட்டில் அடிமைக்கு நிலையான இடமில்லை' என்கிறார் இயேசு (காண். யோவா 8:34). மேலும், 'உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்' என்கிறார் (காண். யோவா 8:32). விடுதலை அல்லது கட்டின்மை உணர்வுதான் நமக்கு மகிழ்ச்சி தரும். தவறான பழக்கங்கள் அல்லது உறவுநிலைகள் அல்லது பணிகள் அல்லது எண்ணங்களுக்கு நாம் அடிமையாக இருந்தால் நம் மகிழ்ச்சியை நாம் இழக்கிறோம். தொடர்ந்து, 'நேரிய நடத்தை' நமக்கு இயல்பாகவே மகிழ்ச்சியைத் தருகிறது.

(ஆ) தெளிந்த தெரிவு (discernment)
சில நேரங்களில் நம் தெரிவுகள் நம் மகிழ்ச்சியைக் கெடுத்துவிடுகின்றன. தவறான நபரைத் தெரிவு செய்வது, தவறான பாதையைத் தெரிவு செய்வது என பல நேரங்களில் சரியான தெரிவுகளை எடுக்க நாம் தவறிவிடுகிறோம். இரண்டாம் வாசகத்தில் பவுல் ஒரு ஃபார்முலா கற்றுத்தருகிறார்: 'அனைத்தையும் சீர்தூக்கிப் பாருங்கள். நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள். எல்லா வகையான தீமைகளையும் விட்டு விலகுங்கள்.' ஆக, அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து, அல்லதை விலக்கி நல்லதைப் பற்றிக்கொள்ளும் ஒருவர் சரியான தெரிவை எடுக்கிறார். அத்தெரிவு அவருக்கு மகிழ்ச்சி தருகிறது.

(இ) குரல் கேட்டல், குரலாய் இருத்தல்
மணமகனின் குரல் கேட்பதில் மகிழும் தோழராகிய யோவான், பாலைநிலத்தில் அவருடைய குரலாக நிற்கிறார். இறைவனின் குரலைக் கேட்பதும், அவரின் குரலாக நான் மாறுவதும் எனக்கு மகிழ்ச்சி தருகிறது.

இறுதியாக,
'என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது' என இன்றைய பதிலுரைப்பாடலில் அக்களிக்கிறார் மரியாள் (காண். லூக் 1).
கடவுளை நினைத்தலே பேரின்பம். ஏனெனில், அவரே நம் மகிழ்ச்சியின் ஊற்று.

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!