Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                     05 மே 2019  
                                பாஸ்கா காலம் - 3ஆம் ஞாயிறு - 3ம் ஆண்டு
     
=================================================================================
முதல் வாசகம்

=================================================================================
இவற்றுக்கு நாங்களும் தூய ஆவியும் சாட்சிகள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 27b-32. 40b-41

அந்நாள்களில் தலைமைக் குரு திருத்தூதர்களை நோக்கி, "நீங்கள் இந்த இயேசு பற்றிக் கற்பிக்கக்கூடாது என்று நாங்கள் கண்டிப்பாய்க் கட்டளையிடவில்லையா? என்றாலும் எருசலேம் முழுவதும் நீங்கள் கற்பித்து வருகிறீர்கள்.

மேலும் இந்த மனிதருடைய இரத்தப் பழியையும் எங்கள்மீது சுமத்தப் பார்க்கிறீர்களே!" என்றார்.

அதற்குப் பேதுருவும் திருத்தூதரும் மறுமொழியாக, "மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிடக் கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்? நீங்கள் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்ற இயேசுவை நம் மூதாதையரின் கடவுள் உயிர்த்தெழச் செய்தார்.

இஸ்ரயேல் மக்களுக்கு மனமாற்றத்தையும் பாவ மன்னிப்பையும் அளிப்பதற்காகக் கடவுள் அவரைத் தலைவராகவும் மீட்பராகவும் தமது வலப்பக்கத்துக்கு உயர்த்தினார். இவற்றுக்கு நாங்களும் கடவுள் தமக்குக் கீழ்ப்படிவோருக்கு அருளும் தூய ஆவியும் சாட்சிகள்" என்றனர்.

இனி இயேசுவைப் பற்றிப் பேசக்கூடாது என்று திருத்தூதர்களுக்குக் கட்டளையிட்டு விடுதலை செய்தனர்.

இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிப்புக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால் திருத்தூதர்கள் மகிழ்ச்சியோடு தலைமைச் சங்கத்தை விட்டு வெளியே சென்றார்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா: 30: 1,3. 4-5. 10-11a,12b (பல்லவி: 1a) Mp3
================================================================================= பல்லவி: ஆண்டவரே, உம்மைப் புகழ்வேன்; ஏனெனில் என்னைக் கைத்தூக்கிவிட்டீர்.

அல்லது: அல்லேலூயா.

1 ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கிவிட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை. 3 ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக்குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். பல்லவி

4 இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள். 5 அவரது சினம் ஒரு நொடிப்பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு. பல்லவி

10 ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும். 11ய நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்; 12b என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன். பல்லவி




================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
 கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி வல்லமையும் செல்வமும் பெறத் தகுதி பெற்றது.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 5: 11-14

யோவான் நான் பார்த்துக்கொண்டிருக்கும்போது, அரியணையையும் உயிர்களையும் மூப்பர்களையும் சுற்றி நின்ற கோடிக்கணக்கான வானதூதர்களின் குரலைக் கேட்டேன்: "கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி வல்லமையும் செல்வமும் ஞானமும் ஆற்றலும் மாண்பும் பெருமையும் புகழ்ச்சியும் பெறத் தகுதி பெற்றது" என்று அவர்கள் உரத்த குரலில் பாடிக்கொண்டிருந்தார்கள்.

பின்பு, விண்ணுலகு, மண்ணுலகு, கீழுலகு, கடல் எங்கும் இருந்த படைப்புகள் அனைத்தும், அவற்றில் இருந்த ஒவ்வொன்றும், "அரியணையில் வீற்றிருப்பவருக்கும் ஆட்டுக்குட்டிக்கும் புகழ்ச்சியும் மாண்பும் பெருமையும் ஆற்றலும் என்றென்றும் உரியன" என்று பாடக் கேட்டேன்.

அதற்கு அந்த நான்கு உயிர்களும், "ஆமென்" என்றன.

மூப்பர்கள் விழுந்து வணங்கினார்கள்.


- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா!

கிறிஸ்து உயிர்த்தெழுந்தார். அனைத்தையும் படைத்தவர் அவரே; மானிடக் குலத்தின்மீது இரக்கம் கொண்டவரும் அவரே. அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இயேசு அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 1-19

அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு: சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர்.

அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், "நான் மீன்பிடிக்கப் போகிறேன்" என்றார்.

அவர்கள், "நாங்களும் உம்மோடு வருகிறோம்" என்று கூறி, போய்ப் படகில் ஏறினார்கள்.

அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை.

ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது.

இயேசு கரையில் நின்றார்.

ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்துகொள்ளவில்லை.

இயேசு அவர்களிடம், "பிள்ளைகளே! மீன் ஒன்றும் படவில்லையா?" என்று கேட்டார்.

அதற்கு அவர்கள், "இல்லை" என்றார்கள்.

அவர், "படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்" என்று அவர்களிடம் கூறினார்.

அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை.

இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், "அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்" என்றார்.

அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந்திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார். மற்ற சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகு தொலையில் இல்லை; ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள்.

படகை விட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது.

இயேசு அவர்களிடம், "நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள்" என்றார்.

சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையைக் கரைக்கு இழுத்தார். வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.

இயேசு அவர்களிடம், "உணவருந்த வாருங்கள்" என்றார்.

சீடர்களுள் எவரும், "நீர் யார்?" என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர்தாம் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள்.

இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார்.

இவ்வாறு, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார்.

அவர்கள் உணவருந்தியபின் இயேசு சீமோன் பேதுருவிடம், "யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?" என்று கேட்டார்.

அவர் இயேசுவிடம், "ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!" என்றார்.

இயேசு அவரிடம், "என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்" என்றார்.

இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், "யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?" என்று கேட்டார்.

அவர் இயேசுவிடம், "ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!" என்றார்.

இயேசு அவரிடம், "என் ஆடுகளை மேய்" என்றார்.

மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், "யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?" என்று கேட்டார்.

"உனக்கு என்னிடம் அன்பு உண்டா?' என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், "ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?" என்றார்.

இயேசு அவரிடம், "என் ஆடுகளைப் பேணி வளர். நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடி வந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்" என்றார்.

பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார். இதைச் சொன்னபின் பேதுருவிடம், "என்னைப் பின்தொடர்" என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



அல்லது குறுகிய வாசகம்

இயேசு அருகில் வந்து அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 1-14

இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு: சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர்.

அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், "நான் மீன்பிடிக்கப் போகிறேன்" என்றார்.

அவர்கள் "நாங்களும் உம்மோடு வருகிறோம்" என்று போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை. ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது.

இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்துகொள்ளவில்லை.

இயேசு அவர்களிடம், "பிள்ளைகளே! மீன் ஒன்றும் படவில்லையா?" என்று கேட்டார்.

அதற்கு அவர்கள், "இல்லை" என்றார்கள்.

அவர், "படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்" என்று அவர்களிடம் கூறினார்.

அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை.

இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், "அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்" என்றார்.

அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந் திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார். மற்ற சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகு தொலையில் இல்லை; ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள். படகைவிட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது.

இயேசு அவர்களிடம், "நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள்" என்றார்.

சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையைக் கரைக்கு இழுத்தார். வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.

இயேசு அவர்களிடம், "உணவருந்த வாருங்கள்" என்றார்.

சீடர்களுள் எவரும், "நீர் யார்?" என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர்தாம் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள்.

இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார். இவ்வாறு, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார்.



- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
(திருத்தூதர் பணிகள் 5: 27-32, 40-41; திருவெளிப்பாடு 5: 11-14; யோவான் 21: 1-19)

என்மீது அன்பு செலுத்துகிறாயா?

நிகழ்வு

நகரில் இருந்த ஒரு தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்புப் படித்துவந்த மகிழினி, கோடை விடுமுறைக்காகத் தன்னுடைய பெற்றோரோடு ஊரில் இருந்த உறவினரின் வீட்டிற்கு நான்கு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாள். இடையில் ஒரு திருப்பத்தில் எதிரே வந்த லாரி, மகிழினியும் அவருடைய பெற்றோரும் சென்றுகொண்டிருந்த வாகனத்தின்மீது மோத, அவளுடைய பெற்றோர் அந்த இடத்திலேயே இறந்துபோனார்கள். மகிழினி மட்டும் எப்படியோ சிறு காயங்களோடு உயிர் தப்பினாள். இந்தக் கோர சம்பவத்திற்குப் பிறகு மகிழினி, ஊரில் இருந்த அவளுடைய உறவினரின் வீட்டில் வளர்ந்துவந்தாள். நாட்கள் செல்லச் செல்ல, அவளுடைய உறவினர் அவளை வளர்ப்பது மிகவும் கடினம் என்று நினைத்து அவளை ஓர் அனாதை இல்லத்தில் கொண்டுபோய்ச் சேர்ந்தனர். ஏற்கனவே பெற்றோரை இழந்த துயரத்திலிருந்து மீளமுடியாமல் இருந்த மகிழினிக்கு, அவளுடைய உறவினர் அவளை அனாதை இல்லத்தில் கொண்டுவந்து விட்டது, அவளுக்கு தாங்கிக்கொள்ள முடியாத துயரத்தைத் தந்தது. இதனால் அவள் அனாதை இல்லத்தில் இருந்த யாரிடமும் பேசாமல், பழகாமல் அமைதியாகவே இருந்தாள்.

அனாதை இல்லத்தில் மகிழினி இப்படி இருந்ததால், அந்த அனாதை இல்லத்தில் பொறுப்பாளராக இருந்தவர் அவளுடைய நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினார். ஒருநாள் அதிகாலை வேளையில், அனாதை இல்லத்தின் பொறுப்பாளராக இருந்தவர், தான் இருந்த அறையின் சாளரத்தின் வழியாகப் பார்த்தபோது, மகிழினி தன்னுடைய கையில் ஏதோவொரு வெள்ளைத் தாளை எடுத்துக்கொண்டு, அதை அனாதை இல்லத்திற்குப் பின்னால் இருந்த வேப்பமரத்தின் அடிவாரத்தில் வைத்துவிட்டு வந்தாள். அவள் அங்கிருந்து போனபிறகு, இல்லப் பொறுப்பாளர் மகிழினி வைத்துவிட்டு வந்த அவ்வெள்ளைத் தாளில் என்ன எழுதப்பட்டிருக்கின்றது என்று பார்க்கத் சென்றார். அவர் அந்த வெள்ளைத் தாளை எடுத்து வாசித்தபோது, அதில், "உங்களை நான் அன்புசெய்கிறேன்" என்று எழுதப்பட்டிருந்தது. இதை வாசித்தபிறகு இல்லப் பொறுப்பாளர் மகிழினியை அதிகமாக அன்பு செய்யத் தொடங்கினார். அவர் மட்டுமல்ல அந்த வெள்ளைத் தாளைப் படித்த எல்லாரும் மகிழினியை அன்பு செய்யத் தொடங்கினார்கள்.

இந்நிகழ்வில் வரும் மகிழினி எப்படித் தன்னுடைய சோகத்தை மறந்து இல்லத்தில் இருந்த எல்லாரையும் அன்பு செய்யத் தொடங்கினாளோ, அதுபோன்று, இன்றைய நற்செய்தியில் வரும் பேதுரு மற்ற எல்லாரையும் விட இயேசுவை மிகுதியாக அன்பு செய்யத் தொடங்குகின்றார். பேதுரு இயேசுவின்மீதுகொண்ட அன்பு எத்தகையது? அந்த அன்பின் வெளிப்பாடாக, அவர் இயேசுவுக்கு என்ன செய்தார்? நாம் இயேசுவின்மீது கொண்டிருக்கும் அன்பு எத்தகையது? அதற்காக நாம் என்ன செய்யப்போகிறோம்? என்று இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

மனம்வருந்திய பேதுரு

யோவான் நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகம், உயிர்த்த ஆண்டவர் இயேசு, சீடர்களுக்குத் திபேரியக் கடலருகே தோன்றுவதையும் தொடர்ந்து இயேசுவுக்கும் பேதுருவுக்கும் இடையே நடக்கும் உரையாடலையும் குறித்துப் பேசுகின்றது.

இயேசு கிறிஸ்து உயிர்த்தபிறகு தன் சீடர்களுக்கு அதிலும் குறிப்பாக பேதுருவுக்கு ஓரிருமுறை தோன்றினாலும், திபேரியக் கடலருகே தோன்றியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால், 'இயேசுவை மும்முறை மறுதலித்துவிட்டோமே' என்ற குற்றஉணர்வோடு இருந்த பேதுரு, அதிலிருந்து வெளிவரவும் இயேசுவின்மீது தனக்கிருக்கும் அன்பை வெளிக்காட்டவும் பேதுருவுக்கு இந்நிகழ்வு ஒருவாய்ப்பாக இருக்கின்றது. இதில் கவனிக்கவேண்டிய விடயம் என்னவெனில், தான் செய்த குற்றத்தை பேதுரு இயேசுவிடம் அறிக்கையிட்டு மன்னிப்புக் கேட்கும் முன்னமே, இயேசு அவரை மன்னிக்கின்றார். இதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், "நொறுங்கிய, குற்றத்தை உணர்ந்த நெஞ்சத்தோடு (திபா 51: 17) இருந்த பேதுருவை, அவர் தன்னுடைய குற்றத்தை அறிக்கையிடும் முன்னமே அல்லது அறிக்கையிடாமலே மன்னித்து ஏற்றுக்கொள்கின்றார் இயேசு.

மிகுதியாக அன்புசெய்த பேதுரு

பேதுரு தன்னுடைய குற்றத்தை உணர்ந்து நிற்கிறார் என்பதை அறிந்த இயேசு, அவரைத் தான் மன்னித்துவிட்டேன் என்பதையும் அவர் தன்னிடம் மிகுதியாக அன்புகொண்டிருக்கின்றார் என்பதையும் மற்ற சீடர்களுக்குக் காட்டும்பொருட்டு, "யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?" என்று கேட்கின்றார். இக்கேள்வியை இயேசு பேதுருவிடம் மூன்றுமுறை கேட்கின்றார். பேதுருவும், "ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே" என்று மூன்றுமுறை சொல்கின்றார். இதன்மூலம் இயேசு தன்னை மும்முறை மறுதலித்திருந்த பேதுருவை, மற்ற எல்லாரையும்விட அன்புசெய்வதை மற்ற சீடர்களுக்கு வெளிப்படுத்துகின்றார்.

இயேசு பேதுருவிடம் கேட்கக்கூடிய கேள்வியை, "பேதுருவே! நீ இந்தப் படகு, வலை, உன்னுடைய உறவுகள் இவற்றுக்கெல்லாம் மேலாக என்னை அன்பு செய்கிறாயா?" என்று இயேசு கேட்பதாகக் கூட எடுத்துக்கொள்ளலாம். பேதுருவும் மற்ற எல்லாவற்றையும்விட எல்லாரையும்விட இயேசுவை மிகுதியாகக் அன்புசெய்கின்றார். அந்த அன்பிற்கு ஈடாக அவர் இயேசுவுக்காக எதையும் செய்யத் துணிகின்றார்.

இயேசுவின் மந்தையைப் பேணிகாத்த, அதற்காக உயிர்தந்த பேதுரு

உயிர்த்த ஆண்டவர் இயேசு பேதுருவிடம், நீ என்னை அன்புசெய்கிறாயா? என்பதும் பதிலுக்குப் பேதுரு, ஆம் ஆண்டவரே என்று சொல்வதையும் தொடர்ந்து இயேசு, "என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர், ஆடுகளை மேய்' என்று சொல்கின்றார். இயேசு பேதுருவிடம் இவ்வாறு சொல்வது, அவர் திருஅவையின் தலைவராகவும் மேய்ப்பராகவும் இருந்து தன்னிடம் ஒப்படைப்பட்ட மக்களை பேணி வளர்க்க இருப்பதை எடுத்துக்கூறுகின்றது. பேதுருவும் இயேசு தன்னிடம் சொன்னதற்கு ஏற்ப, தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட இறைமக்கள் சமூகத்தைப் பேணி வளர்க்கின்றார்; மேற்பார்வை செய்கின்றார்; எல்லாவற்றையும் மன உவப்போடு செய்கின்றார் (1 பேது 5:2); இறுதியில் நல்ல ஆயானாம் இயேசுவைப் போன்று (எபி 13: 20-21; 1 பேது 5:4) ஆடுகளுக்காகத் தன் உயிரையும் தருகின்றார்.

ஆடுகளைப் பேணி வளரவேண்டிய பொறுப்பு அல்லது இறைமக்கள் சமூகத்தைப் பேணிவளர்க்க வேண்டிய பொறுப்பு எப்படி பேதுருவிடம் கொடுக்கப்பட்டதோ, அதுபோன்று நம்மிடமும் கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே, நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பினை உணர்ந்து, மந்தையை நல்ல முறையில் பேணி வளர்ப்பதும் மேற்பார்வை செய்வதும் இவற்றையெல்லாம் கட்டாயத்தின் பேரில் அல்ல, மன உவப்புடன் செய்வது நம்முடைய கடமையாகும்.

சிந்தனை

'என்மீது அன்புகொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைபிடிப்பீர்கள்' என்பார் இயேசு (யோவா 15:14) நாம் இயேசுவை அன்பு செய்கிறோம் என்பதை, பேதுருவைப் போன்று அவருடைய மந்தையைப் பேணிப் காப்பதன் மூலமாகவும் மந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் வழியாகவும் வெளிப்படுத்துவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.



மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2  பாஸ்கா காலம் 3ம் ஞாயிறு (மே 5, 2019)
=================================================================================
  என் சாக்குத் துணியைக் களைகிறார்!

 திருத்தூதர் பணிகள் 5:27-32, 40-41
 திருவெளிப்பாடு 5:11-14
 யோவான் 21:1-19

திருச்சிராப்பள்ளி மணிகண்டத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து என்ற இளவலின் பெயர் கடந்த இரு வாரங்களாக செய்தித்தாள்களிலும் சமூக வலைதளங்களிலும் அதிகமாகப் பேசப்படுகின்றது. ஏன்? கடந்த மாதம் கத்தார் நாட்டிலுள்ள தோகாவில் நடந்த ஆசிய தடகள போட்டிகளில் பெண்கள் பிரிவில் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற தங்கப் பெண் இவர். 'இணைந்தே இருப்பவை வறுமையும் திறமையும்' என்ற திருவிளையாடல் திரைப்பட வசனத்திற்கிணங்க மிக எளிய பின்புலத்தைக் கொண்டிருக்கிறவர் இவர். இவர் ஓடி முடித்து விளையாட்டரங்கில் ஓய்ந்து நின்ற நேரம் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இவர் ஏறக்குறைய கிழிந்து நைந்துபோன ஷூ ஒன்றை அணிந்திருப்பது பலருடைய கண்களைக் கவர்ந்தது. தன் பழைய கிழிந்த ஷூதான் தனக்கு லக்கி என்று இந்த இளவல் பெரிய மனத்துடன் பெருமைப்பட்டுக்கொண்டாலும், புதிய காலணிகள் வாங்குவதற்குக் கூட இயலாத இவருடைய பின்புலமும், கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம் மற்ற விளையாட்டுக்களுக்குத் தரப்படவில்லை என்ற விளையாட்டு அரசியலும் இங்கே தெளிவாகிறது. தன் தங்கத்தின் வெற்றிக்குப் பின்னாலும் தன்னுடைய கிழிந்த ஷூவைக் கழற்றத் துணியவில்லை கோமதி.

இவரின் வெற்றிக் களிப்பும், மகிழ்ச்சியும் இவரின் கிழிந்த காலணியைக் கழற்ற முடியவில்லை.

முதன் முதலாக வாங்கி உடைந்த பேனா, நம் லக்கியான சேலை, ஷர்ட், திருமண பட்டுச் சேலை, குருத்துவ அருள்பொழிவு திருவுடை, பழைய டைரி என நிறைய பழையற்றையும், கிழிந்தவற்றையும் நாம் இன்று நம்முடன் வைத்திருந்து பழமை பற்றிப் பெருமை கொள்கிறோம். பழமையான இவைகளை நாம் பாதுகாக்கக் காரணம் இவை நம் இறந்த காலத்தை, நம் வேர்களை நமக்கு நினைபடுத்துகின்றன.

ஆனால், சில நேரங்களில் - இல்லை, பல நேரங்களில் - நாம் தூக்கி எறியப்பட வேண்டிய பழையவற்றை இன்னும் தூக்கிக்கொண்டே திரிகிறோம். இப்படிப்பட்ட நேரங்களில் நம் பழையவற்றை அகற்றிவிட்டு புதியவற்றை அருள இறைவன் வருகிறார் என்று நமக்கு நம்பிக்கை அளிக்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

இன்றை பதிலுரைப்பாடலோடு (காண். திபா 30) நம் சிந்தனையைத் தொடங்குவோம்:

'புகழ்ப்பா, திருக்கோவில் அர்ப்பணப்பா, தாவீதுக்கு உரியது' என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்பாடல் மிக அழகான உருவகம் ஒன்றைக் கொண்டிருக்கிறது. 'நீர் என் புலம்பலை களிநடனமாக மாற்றிவிட்டீர். என் சாக்குத் துணியைக் களைந்துவிட்டு எனை மகிழ்ச்சியால் உடுத்தினீர்!' (திபா 30:11). 'புலம்பல்' மற்றும் 'சாக்குத்துணி', 'களிநடனம்' மற்றும் 'மகிழ்ச்சி' என்ற ஒரே பொருள் கொண்ட சொற்கள் அடுத்தடுத்துப் பயன்படுத்தப்படுவதால், இங்கே 'ஒருபோகு நிலை' அல்லது 'இணைவுநிலை' என்னும் இலக்கியக்கூறு காணக்கிடக்கிறது.

தான் அணிந்திருக்கின்ற சாக்குத்துணியை கடவுள் அகற்றுவதாக தாவீது பாடுகிறார். இன்று சாக்கு என்பது 'ஜனல்' என்ற தாவரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. முதல் ஏற்பாட்டுக் காலத்தில் இது ஆடுகளின் மயிரிலிருந்து தயாரிக்கப்பட்டது. இந்த சாக்கு ஒரு விநோதமான பயன்பாட்டுப் பொருள். உணவுப் பொருள்களான அரிசி, கோதுமை, சீனி போன்றவை சேமிக்கப்படுவதும் சாக்கில்தான். அடுப்பறையில், கழிவறைக்கு வெளியில் ஈரம் அகற்றும் கால்மிதியாகப் பயன்படுத்துவதும் சாக்குதான். வீட்டிற்கு வெளியே தாழ்வாரத்தில் நிழலுக்கு, கவிழ்த்து வைக்கப்பட்ட பஞ்சாரத்துக் கூடையிலிருக்கும் கோழிக்குஞ்சுகளை பருந்துகளின் பார்வையிலிருந்து காப்பாற்ற கூடையின் மேல், பெரிய பாத்திரத்தை சூடு பொறுத்து இறக்க கைகளில், அப்பாத்திரத்தின் கரி தரையில் படியாமல் இருக்க தரையில், பழைய பாத்திரங்களை மூட்டை கட்டி வண்டியில் ஏற்றி வீடு மாற்ற என்று இதன் பயன்பாடு மிகவே அதிகம். நெகிழி (பிளாஸ்டிக்) பைகள் தடைசெய்யப்பட்டபின் இப்போது சாக்குப் பைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது நம் ஊரில். விவிலியத்தில் சாக்கு மூன்று பொருள்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது: ஒன்று, துக்கம் அல்லது சோகம். தன் மகன் யோசேப்பு கொல்லப்பட்டான் என்று தனக்கு அறிவிக்கப்பட்டவுடன் யாக்கோபு சாக்கு உடை அணிந்து துக்கம் கொண்டாடுகிறார் (காண். தொநூ 37:34). தன் இனத்தார் அழிக்கப்படப் போகின்றனர் என்று கேள்விப்பட்ட எஸ்தர் அரசி சாக்கு உடை அணிகின்றார் (காண். எஸ் 4:1-2). தன் மகனின் இறப்பு செய்தி கேட்டவுடன் சாக்கு உடை அணிகின்றார் தாவீது (காண். 2 சாமு 42:25). இரண்டு, மனமாற்றம். ஏறக்குறைய முதல் பொருளை ஒட்டியதுதான். இறைவாக்கினர் யோனாவின் செய்தியைக் கேட்ட நினிவே நகரம் சாக்கு உடை அணிந்துகொள்கிறது (காண். யோனா 3:8, மத் 11:21). மூன்று, சேமிப்பு பை. எகிப்துக்கு உணவு சேகரிக்க வந்த தன் சகோதரர்களின் கோணிப்பையில் தன் வெள்ளித்தட்டை வைத்து தைக்கிறார் யோசேப்பு (காண். தொநூ 42:25).

'என் சாக்குத் துணியை நீர் களைகிறீர்' என்று தாவீது பாடும்போது, தன்னுடைய 'துக்கத்தையும்,' 'பாவத்தையும்' இறைவன் களைவதாக முன்மொழிகின்றார் தாவீது. கடவுள் சாக்குத்துணியை அகற்றினால் மட்டும் போதுமா? நிர்வாணத்தை அவரே மறைக்கின்றார். எப்படி? மகிழ்ச்சியால்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். திப 5:27-32,40-41) திருத்தூதர்கள் பேதுருவும் யோவானும் கைது செய்யப்பட்டு தலைமைச் சங்கத்தின்முன் நிறுத்தப்படுகின்றனர். தலைமைச் சங்கம்தான் இயேசுவுக்குச் சிலுவைத்தீர்ப்பிடுமாறு பிலாத்துவை வலியுறுத்தியது. தங்களுடைய ஆண்டவரும் போதகருமான இயேசுவைக் கொலைக்கு உட்படுத்திய அதே சங்கத்தின்முன் பேதுருவும் யோவானும் நிறுத்தப்படும்போது இயல்பாக அவர்களின் உள்ளத்தில் எழுகின்ற உணர்வு 'பயம்.' 'நீங்கள் இந்த இயேசு பற்றிக் கற்பிக்கக்கூடாது என்று நாங்கள் கண்டிப்பாகக் கட்டளையிடவில்லையா?' என்று தலைமைக்குரு கேட்டபோது, 'மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட நாங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிய வேண்டுமில்லையா?' என்று எதிர்கேள்வி கேட்கின்றனர் திருத்தூதர்கள். இந்தப் பதிலில் இவர்களின் பயமற்ற நிலையையும் அதே வேளையில், 'நீ ஒரு மனிதன்தான்!' என்ற தலைமைக் குருவையே எதிர்த்து நிற்கும் இறைவாக்கினர் துணிச்சலையும் பார்க்கின்றோம். இவர்களின் இந்தப் பதிலால் இவர்கள் நையப்புடைக்கப்படுகின்றனர். ஆனாலும் விடுதலை செய்யப்படுகின்றனர். விடுதலை செய்யப்பட்ட திருத்தூதர்கள், 'இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால் திருத்தூதர்கள் மகிழ்ச்சியோடு தலைமைச் சங்கத்திலிருந்து வெளியே சென்றனர்' எனப் பதிவு செய்கிறார் லூக்கா.

அரசவையிலிருந்து பொன்னும் பரிசிலும் பெற்று வெளியே வந்தால் ஊரார் வியப்புடன் பார்த்து வாயாரப் புகழ்வர். நெற்றி முகர்வர். நன்றாய் அடிபட்டு, கிழிந்த ஆடை, உடைந்த பற்கள். வழியும் இரத்தம், கலைந்த தலை என்று வெளியே வந்தால் எல்லாரும் ஏளனம் செய்வர். ஒதுங்கிச் செல்வர். ஆனால், திருத்தூதர்கள் அச்சம் அற்றவர்களாக, அவமதிப்பை ஏற்றுக்கொள்பவர்களாக இருப்பதோடு, இவற்றுக்காக மகிழ்ச்சியும் அடைகின்றனர்.

ஆக, 'அச்சம்' என்னும் சாக்குத்துணியை திருத்தூதர்களிடமிருந்து அகற்றி 'மகிழ்ச்சி' என்ற ஆடையை கடவுள் இவர்களுக்கு அணிவிக்கின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். திவெ 5:11-14) யோவான் 'கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டியைக்' காட்சியில் காண்கின்றார். 'பார்ப்பதற்கேற்ற தோற்றம் இல்லாமல், இகழப்பட்டு, மனிதரால் புறக்கணிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, சிறுமைப்படுத்தப்பட்டு, அடிப்பதற்காக இழுத்துச்செல்லபட்ட ஆட்டுக்குட்டி போல' (காண். எசா 52:13-53:12) இருந்த இயேசு, 'வல்லமை, செல்வம், ஞானம், ஆற்றல், மாண்பு, பெருமை, புகழ்' என்னும் ஏழு குணங்களைப் பெருகிறார். யூத நம்பிக்கைப்படி கடவுள் கொண்டிருக்கும் அல்லது கடவுளிடம் நிறைவாக இருக்கும் ஏழு குணங்கள் இவை. கடவுளுக்கு உரித்தான ஏழு நிறைகுணங்களும் இப்போது இயேசுவுக்கு வழங்கப்படுகின்றன.

ஆக, 'அவமானம்' என்னும் சாக்குத்துணியை இயேசுவிடமிருந்து அகற்றி, 'மாட்சி' என்ற ஆடையை கடவுள் அவருக்கு அணிவிக்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். யோவா 21:1-19) யோவான் நற்செய்தியின் பிற்சேர்க்கைப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. உயிர்த்த இயேசு கலிலேயாவில் தன் சீடர்களுக்குத் தோன்றும் நிகழ்வை இரண்டு நிலைகளில் பதிவு செய்கிறார் யோவான். முதலில், லூக்கா நற்செய்தில் செய்வதுபோல, தன் சீடர்களோடு இணைந்து உணவு உண்கிறார் இயேசு. இரண்டவதாக, மூன்று முறை தன்னை மறுதலித்த பேதுருவை, 'என்னை அன்பு செய்கிறாயா?' என்று மூன்று முறை கேட்டு, தலைமைத்துவத்தால் அவரை அணிசெய்கிறார்.

எருசலேமிலிருந்து கலிலேயா திரும்புகின்ற சீடர்கள் தாங்கள் முதலில் செய்துவந்த மீன்பிடித்தொழில் செய்யப் புறப்படுகின்றனர். இது இவர்களுடைய ஏமாற்றத்தின், விரக்தியின், சோர்வின் வெளிப்பாடாகக்கூட இருக்கலாம். அவர்களை அழைத்த நிகழ்வில் போலவே (காண். லூக் 5:1-11) காலியான வலைகள் மற்றும் காலியான வயிறுகளோடு காய்ந்திருக்கின்ற சீடர்களுக்கு மிகுதியான மீன்பாட்டை அருளுகின்றார் இயேசு. அவர்கள் தங்களுடைய பழைய வாழ்க்கைக்குத் திரும்பியதை இயேசு கடிந்துகொள்ளவில்லை. மாறாக, தாயன்போடு, 'பிள்ளைகளே' என் அவர்களை அழைத்து, 'கரியினால் தீ மூட்டி உணவு தயாரித்து' அவர்களின் பசியைப் போக்குகின்றார். தொடர்ந்து, சீமோன் பேதுருவோடு தனித்து உரையாடும் இயேசு, 'நீ இவர்களைவிட மிகுதியாக என்னை அன்பு செய்கிறாயா?' என்று கேட்டு, 'என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்,' 'என் ஆடுகளை மேய்,' 'என் ஆடுகளைப் பேணி வளர்' என்று தலைமைத்துவப் பொறுப்பை அவருக்கு அளிக்கின்றார். மேலும், பேதுருவின் இறுதிக்காலம் எப்படி இருக்கும் என்பதையும் முன்னுரைக்கும் இயேசு, 'என்னைப் பின்தொடர்!' என்று தற்கையளிப்பிற்கு அவரை அழைக்கின்றார்.
ஆக, 'குற்றவுணர்வு' என்னும் சாக்குத் துணியை சீடர்களிடமிருந்து அகற்றும் இயேசு, 'பொறுப்புணர்வு' என்ற ஆடையால் அவர்களை அணிசெய்கின்றார்.

இவ்வாறாக, இன்றைய முதல் வாசகத்தில், 'அச்சம்' என்னும் சாக்குத் துணி அகற்றப்பட்டு, 'மகிழ்ச்சி' என்னும் ஆடையும், இரண்டாம் வாசகத்தில், 'அவமானம்' என்னும் சாக்குத் துணி அகற்றப்பட்டு, 'மாட்சி' என்னும் ஆடையும், நற்செய்தி வாசகத்தில், 'குற்றவுணர்வு' என்னும் சாக்குத் துணி அகற்றப்பட்டு, 'பொறுப்புணர்வு' என்னும் ஆடையும் அணிவிக்கப்படுகிறது.

இன்று நம்மிடம் இருக்கும் 'அச்சம்,' 'அவமானம்,' மற்றும் 'குற்றவுணர்வு' என்ற சாக்குத் துணிகளை அகற்றி, 'மகிழ்ச்சி,' 'மாட்சி,' 'பொறுப்புணர்வு' என்னும் ஆடைகளை நமக்கு அணிவிக்கின்றார் கடவுள்.

எப்படி?
1. 'அச்சம்' அகற்றி 'மகிழ்ச்சி'

நம் இருப்பை நாம் மறுக்கும்போது, அல்லது பிறருடைய இருப்பை அதிக மதிப்பிடும்போது நமக்கு அச்சம் வருகிறது. எடுத்துக்காட்டாக, தலைமைக் குருவைப் பார்த்து மறைமுகமாக, 'நீரும் ஒரு மனிதன்தான். உமக்கு அச்சப்படத் தேவையில்லை' என்று சொல்கின்றனர் திருத்தூதர்கள். பல நேரங்களில் இல்லாத ஒன்றை இருப்பது போல நினைத்து, அல்லது இருப்பதை மிகைப்படுத்திப் பார்த்து நாம் அச்சம் கொள்கிறோம். சிறிய தலைவலி வந்தால் புற்றுநோய் வந்துவிட்டதாகவும், சிறிய பிரச்சினையை பெரிய ஆபத்தாகவும் நினைக்கின்றோம். தாங்கள் யார் என்றும், தங்களுடன் கடவுள் இருக்கின்றார் என்றும் அறிந்துகொள்கின்ற சீடர்கள், தலைமைக்குரு யார் என்றும் தெரிந்துகொள்கின்றனர். இவ்வளவு நாளாக, தாங்கள் கொண்டிருந்த மிகைப்படுத்துதலை அகற்றி, 'நீயும் ஒரு மனிதன்தான். உன்னைவிட கடவுள் இருக்கிறார்' என்று துணிவு கொள்கின்றார். ஆக, மிகைப்படுத்துதல் மறைந்தாலே அச்சம் மறைந்துவிடும். அரசுத் தேர்வில் தோற்றுவிட்டால் வாழ்விலேயே தோற்றுவிட்டதுபோல நாம் அச்சப்படக் காரணம் நம்முடைய மிகைப்படுத்துதலே. ஆக, மிகைப்படுத்துதல் மறைந்து, மனிதர்களை மனிதர்களாக, தேர்வை தேர்வாக, பிரச்சனையை பிரச்சினையாகப் பார்க்கும்போதும், இவற்றை எல்லாம் விட பெரிய கடவுளை நம் அருகில் வைத்துக்கொள்ளும்போதும் நம் அச்சம் மறைந்து நமக்கு மகிழ்ச்சி பிறக்கிறது.

2. 'அவமானம்' அகற்றி 'மாட்சி'

இன்று நாம் ஒருவரின் பின்புலம், இருப்பு, கையிருப்பு, பையிருப்பு ஆகியவற்றை முதன்மைப்படுத்தி பார்க்கும்போது, அவரை நாம் நம்மைவிடத் தாழ்வானவர் என எண்ணி, இகழ்ச்சியாகப் பார்ப்பது சில நேரங்களில் நடக்கும். அல்லது இதே காரணங்களுக்காக நாமும் மற்றவர்களால் அவமானத்திற்கு உள்ளாகியிருப்போம். அவமானம் அல்லது வெட்கம் என்பது நம்முடைய ஆளுமையைச் சீர்குலைக்கும் பெரிய காரணி. 'தனக்குத் தானே பொய்யாய் இருக்கும் ஒருவர் அவமானத்தால் கூனிக்குறுகுவார்' என்கிறார் இரஷ்ய எழுத்தாளர் டோஸ்டாய்வ்ஸ்கி. எடுத்துக்காட்டாக, என் அறையின் இருட்டின் தனிமையில் நான் ஒரு மாதிரியாகவும், வெளியில் வேறு மாதிரியாகவும் இருக்கும்போது, என்னை அறியாமல் என் மனம் வெட்கப்படும். ஏனெனில், என் மனத்திற்கு என் அறையின் இருட்டில் நான் எப்படி இருக்கிறேன் என்று தெரியும். நமக்குள்ளே நாம் கொள்ளும் அவமானம் குறைய வேண்டுமெனில் எனக்கு நானே பொய் சொல்வதை நான் குறைக்க வேண்டும். பிறரால் வரும் அவமானம் குறைய வேண்டுமெனில் நான் பொறுமை காக்க வேண்டும். ஆக, பொய்யைக் குறைக்கும்போது, பொறுமையாய் இருக்கும்போது அவமானம் மறைந்து மாட்சி பிறக்கும்.

3. 'குற்றவுணர்வு' அகற்றி 'பொறுப்புணர்வு'

நம்மை வெற்றிப்பாதையிலிருந்து பின்நோக்கி இழுக்கும் ஒரு பெரிய காரணி குற்றவுணர்வு. நாம் கடந்த காலத்தில் செய்த தவறும், அந்தத் தவறு நம்மில் உருவாக்கிய காயமும் நம்மை முன்நோக்கிச் செல்லவிடாது. 'ஐயோ! நான் இப்படி,' 'நான் இப்படித்தான்,' 'என்னால் திருந்த முடியாது,' 'என் பழைய சுமை கடினமாக இருக்கிறது' என்று சோர்வும், விரக்தியும் கொண்டிருந்தால் நம்மால் முன்னேறிச் செல்ல முடியாது. முதல் ஏற்பாட்டில் மிக அழகான வாக்கியம் இருக்கிறது: தானும் தன் மனைவியும் தன் நிலமும் கடவுளால் சபிக்கப்பட்டவுடன், ஆதாம் தன் மனைவிக்கு 'ஏவாள்' எனப் பெயரிடுகின்றான். இதுவரை 'பெண்' (காண். தொநூ 2:23) என அறியப்பட்டவள் இப்போது 'உயிர் வாழ்வோர் அனைவரின் தாயாக' (காண். தொநூ 3:20) மாறுகிறாள். 'ஐயோ! பாவம் செய்தாயிற்று! கீழ்ப்படியவில்லை! கடவுளின் கட்டளை மீறிவிட்டேன்!' என ஆதாமும், ஏவாளும் குற்றவுணர்வுடன் புலம்பிக் கொண்டே இருக்கவில்லை. அடுத்து என்ன செய்வது? என்று தங்கள் வாழ்க்கைக்குப் பொறுப்பேற்கின்றனர். நாமும் நம் பழைய பாவக் காயங்களை மறக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இன்னும் சிலர், கொஞ்சம் நன்றாகச் சிரித்தாலே, அல்லது தங்களுக்கென ஒரு நல்ல பொருளை வாங்கினாலே குற்றவுணர்வு கொள்வர். இதுவும் ஆபத்தானது. நாம் மகிழ்ச்சியாக இருக்கவும், நல்ல பொருள்களைப் பயன்படுத்தவும், மதிப்பாக இருக்கவும், மதிப்பானவற்றோடு, மதிப்பானவர்களோடு உறவு கொள்ளவும் குற்றவுணர்வுகொள்தல் கூடாது. மதிப்பான இந்தப் பொருளை வைத்து நான் எப்படி என் மதிப்பைக் கூட்ட முடியும்? என்று நினைக்க வேண்டுமே தவிர, 'ஐயோ! எனக்கு தகுதியில்லை இதற்கு!' என்று அழுது புலம்பக்கூடாது. 'நான் தவறிவிட்டேன். நான் மறுதலித்தேன். ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை அன்பு செய்கிறேன்' என சரணாகதி ஆகிறார் பேதுரு. ஆக, குற்றவுணர்வு மறையும்போது பொறுப்புணர்வு தானாக வந்துவிடுகிறது.

இறுதியாக,
பழையவற்றைப் பேணிக்காத்துப் பெருமை கொள்ளும் கோமதிக்களாக நாம் இருந்தாலும், பழைய சாக்குத் துணிகளை இறைவன் அகற்றி புதிய ஆடைகளை நமக்கு அணிவிக்க அவர் முன்வரும்போது, நாம் கொஞ்சம் எழுந்து நிற்போம். அப்போதுதான், 'மகிழ்ச்சி என்னும் ஆடை அணிந்து களிநடனம் செய்ய முடியும்' - இன்றும் என்றும்!

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)


=================================================================================
திருப்பலி முன்னுரை- பாஸ்கா 03ஆம் ஞாயிறு 05 05 2019
=================================================================================
இறைப்பாதையில் பயணித்து நமது இலக்குகளை மேற்கொள்ள பாஸ்கா காலம் மூன்றாம் ஞாயிறு திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம். இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைய ஓயாது ஓடிக் கொண்டிருக்கின்றோம். இதுவே வாழ்க்கைப் பயணமாக கருதப்படுகின்றது. நம் இறைவன் நம் மீது ஒரு நோக்கம் வகுக்கின்றார். இறைவனை நோக்கமும் நமது இலக்குகளும் ஒரே பாதையில் பயணிக்கும் போது நம் வாழ்வு கனி தரும் வாழ்வாகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் இயேசு கிறிஸ்து பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றிய பேதுருவும் திருத்தூதர்களும் துன்புறுத்தப்படுவதைக் காண்கின்றோம் வேதனைகளின் மத்தியிலும் "மனிதர்களுக்கு கீழ்ப்படிவதை விட கடவுளுக்கு கீழ்ப்படிவது மேல்" என்று தூய ஆவியின் அருளால் துணிவோடு பதிலளிக்கிறார்கள். இன்றைய சமுதாயத்திலும் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட மக்கள் பல்வேறு வகைகளில் தாக்கப்படுகிறார்கள், துன்புறுத்தப்படுகின்றார்கள். சட்டங்களால் ஆட்டுவிக்கப்படும் பொம்மை மனிதர்கள் ஆண்டவரின் கூட்டத்தை அழித்து விட முனைப்பாக உள்ளது. கொன்றழித்த கொலைகார கூட்டத்தையே மன்னித்த இயேசுவின் மக்கள் அல்லவா நாம்? பொறுமையை மனதில் கொண்டு தூய ஆவியின் துணையை உடலில் கொண்டு, திருத்தூதர்களைப் போல கடவுளுக்கு கீழ்ப்படிவதே மேல் என்று துணிந்து நற்செய்தியை வாழ்வாக்குவோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் சீடர்களுக்கு காட்சி தரும் இயேசு பேதுருவை ஆயனாக நியமிக்கிறதைக் காண்கின்றோம். இயேசுவின் இறப்பால் நம்பிக்கை இழந்த பேதுரு 'மீன்பிடிக்க போகின்றேன்' என்று பழைய வாழ்க்கைக்கு திரும்புகின்றார். பேதுருவின் எண்ணங்களை வாசித்த இயேசு, திருச்சபையை வழிநடத்த பேதுருவை முதல் ஆயனாக்கி, தம்மைப் பின்தொடர பணிக்கின்றார்.

நம்பிக்கை தேய்பிறையானால் காரிருள் நம்மை கவ்வும்; இறைவன் என்னோடு என எண்ணி நடைபோட்டால் அவரது வார்த்தைகள் நம் கால்களுக்கு தீபமாய் இருக்கும். இறை நம்பிக்கையில் ஆழம் பெற்றவர்களாய் திருச்சபை தலைவருக்கும் பணியாளருக்குமே நற்செய்திப்பணி விதிக்கப்பட்டுள்ளது எனக் கருதாமல் நம் எண்ணங்களால், சொற்களால், செயல்களால் நற்செய்தியை வாழ்வாக்கி இயேசுவுக்கு சான்று பகர்வோம்; பலியில் பங்கேற்போம்.

மன்றாட்டுகள்

1. 'என் ஆடுகளைப் பேணி வளர்' என்று முதல் ஆயனைத் திருநிலைப்படுத்தியவரே!
எம் திருஅவையை வழிநடத்தும் புனித பேதுரு வழி வந்த திருத்தந்தை, ஆயர்கள் திருஅவை தலைவர்கள் உமக்கு சான்று பகரவும், பணியில் ஏற்படும் போராட்டங்களையும் துன்பங்களையும் உம் துணையில் வென்று மக்களை நல்வழி நடத்திட வரம் அருள வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

2. மனிதர்களுக்கு கீழ்ப்படிவதை விட கடவுளுக்கு கீழ்ப்படிவதே சிறந்தது என்று பேதுரு வாயிலாக உணர்த்தியவரே எம் இறைவா!
எம் நாட்டை ஆளும் தலைவர்கள், அதிகாரிகள் அதிகார போக்கில் இருக்கும் சில மனிதர்கள் கீழ்ப்படிந்து, இறையச்சமின்றி மக்களை வதைத்துக் கொண்டிருக்கும் நிலை மாறவும், தேர்தலில் உண்மையான மக்கள் நேசம் கொண்ட தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடு வளர்ச்சி காண வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

3. பாடுகளுக்கு பின்பே உயிர்ப்பு என்று உம் திருமகன் வழியாக உணர்த்தியவரே!
எங்கள் வாழ்வில் எதிர்படும் தோல்வி, துன்பங்கள், ஏமாற்றங்கள் போன்றவற்றில் உம்மைப் போல பாடுகளை ஏற்றுக்கொண்டு உயிர்ப்பு எனும் மீட்பு உண்டு என்று விசுவாசத்தோடு வாழ்வின் சவால்களை சந்திக்கும் வரம் அருள வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

4. திருத்தூதர்கள் மேல் இரக்கம் காட்டி அதிகமாக மீன்களை கிடைக்கச் செய்தவரே! எம் பகுதியில் வெப்பம் தணிந்து போதிய மழை பொழியவும், விவசாயம் செழிக்கவும், பொருளாதாரம் ஏற்றம் பெறவும், தேர்வுகளை முடித்தவர்கள் தங்கள் இலக்கை நோக்கி நடக்கவும், குடும்பங்களில் அமைதி சந்தோஷம் பெருகவும், உள்ளத்து விருப்பங்கள் நிறைவேறவும் வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

நன்றி: ஆசிரியை. திருமதி. ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.


=================================================================================
திருப்பலி முன்னுரை - உயிர்ப்புக் காலம் மூன்றாம் ஞாயிறு
=================================================================================(திப 5:27- 32, 40-41,தி.பா 30, திவெ 5:11-14, யோவான் 21:1-19)

"மரித்த இயேசு உயிர்த்துவிட்டார் அல்லேலூயா.

மன்னன் இயேசு வாழ்கிறார் அல்லேலூயா."

கிறிஸ்துவில் பிரியமான சகோதர சகோதரிகளே! உயிர்ப்புக் காலம் மூன்றாம் ஞாயிறு திருப்பலியில் கலந்துகொள்ள வந்திருக்கும் உங்கள் அனைவரையும் பனிமயமாதா அன்பியம் சார்பாக கரம்கூப்பி வரவேற்கின்றேன். இன்று, தாயாம் திருச்சபை உயிர்ப்புக் காலம் மூன்றாம் ஞாயிறு வழிபாட்டை சிறப்பிக்க நம்மை அழைக்கின்றது. கிறிஸ்து பாவ இருளை அகற்ற நமக்காக பாடுபட்டு சிலுவையில் மரித்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து, தன்னையே மனிதர்களுக்கு ஒளியாக கொடுத்தார். "அஞ்சாதே! உலகம் முடியும் வரை எந்நாளும் உங்களோடு இருப்பேன்" என்று எடுத்துக்கூறிய இறைவன், மனிதர்மீது கொண்ட அன்பால், மீண்டும் சீடர்களுக்குத் தோன்றி திருச்சபையை வழிநடத்த ஆவணை செய்கிறார். தளர்ந்துபோய் துவண்டு கிடந்த சீடர்களை நம்பிக்கையால் திடப்படுத்தி, அவர்களின் பயத்தைப் போக்கி, இறைபணியைத் தொடர்ந்து செயலாற்ற அவர்களைப் பணித்தார். இயேசுவின் அன்புக் கட்டளைகளை ஏற்று சீடர்களும் இறைபணியயைத் தொடர்ந்தார்கள். உயிர்ப்பின் ஒளியை கண்டுகொண்டு சாட்சிகளாய் வாழ்ந்தார்கள். உயிர்ப்பின் ஒளியைப் பெற்றுக்கொண்டவுடன், தாங்கள் யார் என்பதை புரிந்துகொண்டு, இறைவனுக்காய் அவர்கள் வாழ்ந்தார்கள். இன்று, நாமும் இயேசுவின் அன்புச் சீடர்களாய் வாழ நமக்கு அழைப்பு விடப்படுகின்றது. எனவே, நம்முடைய வாழ்க்கையில், திருத்தூதர்களைப்போன்று, இறை அனுபவம் பெற்று, உயிர்ப்பு செய்தியை பிறருக்கு அறிவிக்கின்ற மக்களாக வாழவும், இயேசுவின் உடனிருப்பை ஒவ்வொரு நாளும் உணர்ந்து அவர் பணியைத் தொடர்ந்து செய்திடவும், இறையருள்வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்று

ஜெபிப்போம். இறைஆசிர் பெறுவோம்.

முதலாம் வாசக முன்னுரை

இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு திருத்தூதர்களின் வாழ்வு, சவால் நிறைந்ததாக அமைந்திருந்ததுது. இயேசுவின் இறப்பிற்குப்பின், ஆனந்தத் தாண்டவமாடிய தலைமைக் குருக்களின் கேள்விகளுக்கு தைரியமாக திருத்தூதர்கள் பதிலளித்தனர். "நீங்கள் சிலுவையில் தொங்க வைத்துக் கொன்ற இயேசுவை மூதாதையரின் கடவுள் உயிர்த்தெழச் செய்தார், இதற்கு நாங்களும், கடவுள் தமக்குக் கீழப்படிவோருக்கு அருளும் தூய ஆவியும் சாட்சிகள்" என்று திருத்தூதர்களின் நிலைப்பாட்டை எடுத்துக்கூறும் முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை



இன்றைய இரண்டாம் வாசகத்தில், புனித யோவான் கண்ட திருக்காட்சிகள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றது. இயேசுவின் உயிர்ப்பு பெரும் மகிழ்ச்சியை அவருக்கு படம்பிடித்துக் காட்டியது. அங்கே, "ஆமென்" என்ற வார்த்தையால், இறை புகழ்ச்சி அற்புதமாக அரங்கேறியது. மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி, மன்னன் இயேசுவினுடைய திருக்காட்சிகளைக் களிப்போடு எடுத்துரைக்கும், இன்றைய இரண்டாம் வாசகத்திற்கு நாம் கவனமுடன் செவிகொடுப்போம்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

அன்புத் தந்தையே இறைவா! எம் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், இருபால் துறவியர்கள், மற்றும் பொதுநிலையினர் அனைவரும், "என் ஆடுகளை பேணி வளர்" என்ற வார்த்தைக்கேற்ப, இறைமக்களை நல்வழியில் நடத்திட தேவையான இறைஅனுபவம் கொடுத்து, நிறைவாக ஆசிர்வதிக்கவேண்டி, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அரணும் கோட்டையுமான இறைவா! எம் நாட்டை ஆளும் தலைவர்கள் நேரிய வழியில் நடந்திடவும், தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை நன்முறையில் வழிநடத்திடவும் அவர்கள், தங்கள் கடமைகளை உணர்ந்து பொறுப்புள்ள அதிகாரிகளாக செயல்பட, தேவையான ஞானத்தையும் அறிவையும் கொடுத்தருள, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

படைப்பின் நாயகனே எம் இறைவா! நீர் படைத்த இந்த உலகில், தொடர்ந்து வேரூன்றி வளர்ந்து வருகின்ற தீவிரவாத செயல்களை அடியோடு அழிக்கவும், அதற்கு உறுதுணையாய் இருக்கின்ற தீயவர்களின் மனங்களை மாற்றவும், தீவிரவாதத்திற்கு ஆதரவான சூழ்ச்சிகளை அகற்றவும், பதட்டங்கள் மாறி, மக்கள் புதிய வாழ்வைக் காணவும், ஆதரவற்ற பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் நீரே தந்தையாய், தாயாயிருந்து, ஆறுதலை அளித்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


உலகிற்கு ஒளியாய் இருக்கின்ற இறைவா! சில நாட்களுக்கு முன்பு இலங்கை குண்டுவெடிப்பில் பலியான பல குழந்தைகளுக்காகவும், பெற்றோர்களுக்காகவும், பிற சகோதரர்களுக்காகவும் உம்மிடம் மன்றாடுகின்றோம். நீரே அவர்கள் செய்த குற்றங்களை மன்னித்து, அவர்களின் ஆன்மாக்களை விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளும். மேலும், இழப்பினால் பிரிந்து வாடும் உறவினர்களுக்கும், பெற்றோர்களுக்கும், நீரே ஆதரவாக இருந்து, அவர்களின் கண்ணீரை துடைத்திடவேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அருட்பணி.யோ.கு.செல்வ பிரபு MMI


=================================================================================
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
=================================================================================

விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

ஐயங்கள் நீக்கி எம்மை அன்பால் ஒன்றிணைக்கும் அமைதியின் இறைவா!
திருத்தந்தை, உடன் உழைக்கும் அனைத்து ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் உம் உயிர்ப்பின் மகிமையையும், மகிழ்ச்சியையும், அமைதியையும் முழுமையாகப் பெற்று தோமாவைப் போல் துணிவுடன் இறையரசை அறிவிக்க, இணைந்து செயல்படத் தேவையான இறைஅருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நானே உங்கள் கடவுள்! நீங்கள் என் மக்கள் என்று பாசத்துடன் உடன்படிக்கைச் செய்து கொண்ட எம் இறைவா!
உமது துன்புரும் திருஅவையைக் கண்நோக்கும். இலங்கையில் நடைப்பெற்ற வெடிகுண்டு தாக்குதலால் நிலைந்து நிற்கும் உம் மக்கள், தங்கள் குடும்ப உறவுகளை இழந்தத் தவிக்கும் இவ்வேளையில் அவர்களுக்கு ஆறுதலையும் தேற்றுதலையும், அமைதியையும் கொடுக்கவும், மருத்துவமனையில் இருக்கும் மக்கள் சரியான மருத்துவம் பெற்று நலமுடன் வாழவும் அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இறைவா,
உடல் நலம் இன்றித் தவிப்பவர்கள், மனநலம் குன்றித் துன்புறுவோர் இவர்களுக்கு உயிர்த்த இயேசுவின் ஆற்றலாலும், மகிமையாலும் அனைத்து உதவிகளும் நல்மனம் கொண்டவர்கள் வழியாகக் கிடைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அருட்செல்வங்களால் எங்களை ஆசீர்வதிக்கும் அன்புத்தந்தையே! எம் இறைவா!
எங்களைப் பராமரித்துப் பாதுகாத்த எம் பெரியவர்கள் இன்று ஆதரவின்றி, அனாதைகளாக்கப்பட்டு, தெரு ஒரங்களிலும், பேருந்து நிலையங்களிலும் முதியோர் இல்லங்களிலும் தனித்து விடப்பட்டு , அவர்கள் படும் வேதனைகள் தொடர் நிகழ்வாகவே நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. எனவே அவர்கள் உம் இறை இரக்கத்தினால்,பாதுகாப்புடன் வாழ, இத்தலைமுறையினர் பெரியவர்கள் மேன்மையை உணர்ந்து அவர்களைப் பாதுகாக்கத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா!
உலகப் பற்றினால் உண்மைக் கடவுளாகிய உம்மை மறந்து வாழும் இளைஞர்கள் நீரே ஆண்டவர், நீரே கடவுள் என்பதை உணர்ந்து உம்மில் புதிய வாழ்வைக் காண மனமாற்றம் பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஐயங்கள் நீக்கி எம்மை அன்பால் ஒன்றிணைக்கும் அமைதியின் இறைவா!
பாஸ்கா காலத்தில் எங்கள் குடும்பங்களுக்கு உமது உயிர்ப்பின் பலனான அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பகிர்ந்து வாழும் நல்மனம் ஆகியவற்றை நிறைவாய் பொழிந்து, எங்கள் குடும்பங்களில் உமது துணையாளரின் அருளால் உறவுகள் மேன்பட்டு, வரவிருக்கும் நாட்களில் எங்கள் குடும்ப ஒற்றுமையால் உயர்ந்திடவும் சாட்சிய வாழ்வு வாழவும் உமது இரக்கத்தை அருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

ஒருவர் ஒருவரின் சுமைகளைத் தாங்கிக் கொள்ள சமூக உறவை உருவாக்கிய அன்புத் தந்தையே இறைவா!
எமது சமூகத்திற்காக உம்மிடம் இரந்து வருகின்றோம். இன்றைய நாட்களில் சமூக உறவுக்கும் ஒற்றுமைக்கும் மகிழ்ச்சிக்கும் தடையாக இருக்கும் அனைத்துத் தீமைகளையும் உமது இரக்கத்தால் தகர்த்தெறிந்து நாம் அனைவரும் ஒரே உள்ளமும், ஒரே மனமும் உடையவர்களாச் செயற்பட்டு இறையரசின் கருவிகளாகவும், சமாதானத்தின் தூதுவர்களாகவும், உமது சாட்சிகளாகவும் செயற்பட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!