|
ஆண்டு
B |
|
ஆண்டின் பொதுக்காலம்
3ஆம் ஞாயிறு |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நினிவே மக்கள் தீய வழிகளினின்று
விலகினர்.
இறைவாக்கினர் யோனா எழுதிய நூலிலிருந்து முதல் வாசகம் ( 3:1-5 10)
அன்னாள்களில்
இரண்டாம் முறையாக யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது.
அவர், "நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், நான் உன்னிடம்
சொல்லும் செய்தியை அங்குள்ளோருக்கு அறிவி" என்றார். அவ்வாறே
யோனா புறப்பட்டு ஆண்டவரது கட்டளைப்படி நினிவேக்குச் சென்றார்.
நினிவே ஒரு மாபெரும் நகர். அதைக் கடக்க மூன்றுநாள் ஆகும். யோனா
நகருக்குள் சென்ற, ஒரு நாள் முழுதும் நடந்த பின், உலத்த குரலில்,
"இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும் " என்று அறிவித்தார்.
நினிவே நகர மக்கள் கடவுளின் செய்தியை நம்பி, எல்லாரும்
நோன்பிருக்க முடிவு செய்தார்கள். பெரியோர் சிறியோர் அனைவரும்
சாக்கு உடை உடுத்திக் கொண்டனர். கடவுள் அவர்கள் செய்தது அனைத்தையும்
பார்த்தார். அவர்கள் தீய வழிகளினின்று விலகியதை அவர் கண்டு, தம்
மனத்தை மாற்றிக் கொண்டார்: தாம் அவர்கள் மீது அனுப்புவதாகச்
சொல்லியிருந்த தண்டனையை அனுப்பவில்லை.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
தி.பா:
25: 4-9, 6-7, 8-9 Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரே உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்
4 ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை
எனக்குக் கற்பித்தருளும்.
5 உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்;
ஏனெனில்,
நீரே என் மீட்பராம் கடவுள்; உம்மையே நான் நாள் முழுதும் நம்பியிருக்கின்றேன்;
-பல்லவி
6 ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்;
ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே.
7 உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே
நீரே நல்லவர். -பல்லவி
8 ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு
நல்வழியைக் கற்பிக்கின்றார்.
9 எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோருக்குத்
தமது வழியைக் கற்பிக்கின்றார். -பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
புனித சின்னப்பர் கொரிந்தியருக்கு
எழுதிய முதல் திருமுகத்திலிலிருந்து வாசகம் (1கொரி.7:29-31)
அன்பர்களே, நான் சொல்வது இதுவே; இனியுள்ள காலம் குறுகியதே. இனி
மனைவி உள்ளவரும் மனைவி இல்லாதவர் போல இருக்கட்டும். அழுபவர்
அழாதவர் போலவும், மகிழ்ச்சியுறுவோர் மகிழ்ச்சியற்றவர் போலவும்,
பொருள்களை வாங்குவோர் அவை இல்லாதவர் போலவும் இருக்கட்டும்.
உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழமையாக ஈடுபடாதவர்
போல் இருக்கட்டும். இவ்வுலகு இப்போது இருப்பது போல் நெடு
நாள் இராது.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம்
மாறி நற்செய்தியை நம்புங்கள். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி
வாசகம்
=================================================================================
மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1:14-20
யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின்
நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார்.
காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம்
மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்று அவர் கூறினார். அவர் கலிலேயக்
கடலோரமாய்ச் சென்றபோது சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும்
கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள்.
இயேசு அவர்களைப் பார்த்து, "என் பின்னே வாருங்கள்; நான் உங்களை
மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" என்றார். உடனே அவர்கள் வலைகளை
விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். பின்னர், சற்று அப்பால்
சென்றபோது செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான
யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுது
பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடனே இயேசு அவர்களையும் அழைத்தார்.
அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில்
விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 1
=================================================================================
மனம் மாறுங்கள் நற்செய்தியை நம்புங்கள்!
ஓர் ஊரில் ஜாக் என்னும் இளைஞன் இருந்தான். ஆலயங்களுக்கு வண்ணம்
பூசுவதுதான் அவனுடைய பிரதான வேலையே. அவன் ஆலயங்களுக்கு வண்ணம்
பூசுகின்றபோது அதிக விலைக்குப் பொருட்கள் வாங்குவதாகச்
சொல்லிக்கொண்டு, மிகவும் மலிவான விலையில் பொருட்களை வாங்கி வண்ணம்
பூசி வந்தான்.
ஒரு சமயம் அவனுக்கு மிகப்பெரிய ஆலயத்திற்கு வண்ணம் பூசக்கூடிய
வாய்ப்புக் கிடைத்தது. வழக்கம் போல அவன் மிகவும் மலிவான
விலையில் பொருட்களை வாங்கி, வண்ணம் பூசிக்கொண்டிருந்தான். ஒரு
நாள் அவன் ஆலயத்தின் மேல் கூரையில் வண்ணம் பூசிக்கொண்டிருந்தபோது
திடிரென்று இடி இடித்தது. இதனைச் சிறிதும் எதிர்பார்த்திராத
ஜாக், நிலை தடுமாறு கீழே விழுந்தான். அதிஷ்டவசமாக அவருடைய உடலில்
பெரும் காயங்கள் எதுவும் ஏற்படாமல், சிறு காயங்களோடு உயிர் தப்பினான்.
அப்போது அவன் அண்ணார்ந்து பார்த்து, "ஆண்டவரே! நான் செய்த தவறுகளுக்கு
இது தேவைதான். இப்போது நான் என்னுடைய குற்றங்களை உணர்கின்றேன்.
அடுத்து நான் என்ன செய்வது?" என்று கேட்டான். அதற்கு
மேலிருந்து, "மனமாறு! மலிவான விலைவில் தரம் குறைந்த பொருட்களைப்
பயன்படுத்தி வண்ணம் பூசாதே! நல்ல முறையில் வண்ணம் பூசு" என்று
ஒரு குரல் ஒலித்தது. அன்றிலிருந்து ஜாக் மனம்மாறி, கடவுளுக்குப்
பயந்து தன்னுடைய தொழிலை மிக நேர்த்தியாக செய்யத் தொடங்கினான்.
பாவ வழியில் நடக்கும் ஒவ்வொருவரும் மனம்மாறவேண்டும். அதைத்தான்
மேலே உள்ள நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. பொதுக்காலத்தின்
மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை வாசகங்கள் அனைத்தும் "மானமாற்றம் என்னும்
செய்தியைத்தான் தாங்கி வருகின்றன. நாம் அதனைக் குறித்து சற்று
ஆழமாக சிந்தித்துப் பார்ப்போம்.
மனமாற்றத்தைக் குறித்து சொல்கின்றபோது மாக்சிமுஸ் என்னும் புனிதர்
இவ்வாறு சொல்வார், "கடவுள் நாம் ஒவ்வொருவரும் மீட்படையவேண்டும்
என்றுதான் விரும்புகின்றார். எனவே, நாம் நம்முடைய குற்றங்களை
உணர்ந்து, மனம்மாறி அவரிடம் திரும்பி வருகின்றபோது அவர் அடைகின்ற
மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆம், பாவி ஒருவர் மனம்மாறி ஆண்டவரிடத்தில்
செல்கின்றபோது கடவுளுக்கு அதைவிட மகிழ்ச்சி தரக்கூடிய காரியம்
வேறொன்றும் இல்லை.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு நாற்பது நாட்கள்
நோன்பிருந்து தன்னைத் தயாரித்துக்கொண்டு தன்னுடைய பணிவாழ்வைத்
தொடங்குகின்றார். அப்படி அவர் தன்னுடைய பணிவாழ்வைத் தொடங்குகின்றபோது
போதிக்கின்ற முதல் போதனை "காலம் நிறைவேறிவிட்டது, இறையாட்சி
நெருங்கி வந்துவிட்டது. மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்பதுதான்.
இயேசு கிறிஸ்து இந்த பூவுலகில் பிறந்ததே இறையாட்சியின் தொடக்கம்தான்.
எனவே, மக்கள் அவருடைய வருகைக்காகத் தங்களையே தயாரிப்பது அவருக்கு
ஏற்ற செயலாகும். ஆகையால், காலத்தை விரையமாக்காமல், கடவுளிடம்
திரும்பி வருவதுதான் கடவுளுக்கு ஏற்ற செயலாகும்.
தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் (இரண்டாம்
வாசகம்) காலம் எத்துணை குறுகியது என்று சொல்கின்றபோது இவ்வுலகு
இப்போது இருப்பது போல் நெடுநாள் இருக்காது" என்கின்றார். ஆகையால்,
குறுகிய காலத்தில் நாம் கடவுளிடம் திரும்பி வருபது என்பதுதான்
நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.
இறையாட்சி வருவதற்கான காலம் எத்துணை குறுகியது என்று
சிந்தித்துப் பார்த்த நாம், எது உண்மையான மனமாற்றம்?, நாம் ஏன்
மனமாறவேண்டும் என்று சிந்தித்துப் பார்ப்போம். மனமாற்றம் என்று
சொல்கின்றபோது ஒருமனிதன் அதுவரை வாழ்ந்து வந்த பாவ வழியிலிருந்து
முற்றிலுமாக திரும்பி வருவது. ஆங்கிலத்திலே U turn என்று
சொல்கின்றோம். ஆம், பாவ வழியில் நடக்கின்ற ஒருவர் தன்னுடைய
குற்றங்களை உணர்ந்து, கடவுளிடத்தில் திரும்பி வரவேண்டும். அதுதான்
மனமாற்றத்திற்கான முதல்படியாக இருக்கின்றது.
இறைவாக்கினர் யோனா புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்
வாசகத்தில் யோனா கடவுளால் இரண்டாம் முறையாக அழைக்கப்படுகின்றார்.
கடவுளால் அழைக்கப்பட்ட அவர் பாவ வழியில் வாழ்ந்து வந்த நினிவே
நகர மக்களுக்கு நற்செய்தி அறிவிக்க அனுப்பப்படுகின்றார்.
நினிவே நகரோ யூதர்கள் வாழ்ந்த நகரம் கிடையாது. அது புறவினத்தார்
வாழ்ந்த நகரம். அப்படிப்பட்டவர்களிடம்தான் இறைவாக்கினர் அனுப்பப்படுகின்றார்.
இங்கே நாம் இன்னொரு உண்மையை உணர்ந்துகொள்ளவேண்டும். அது என்னவென்றால்,
யூதர் மட்டும்தான் மீட்படைய வேண்டும் என்பதல்ல, எல்லா மக்களும்
மீட்படைய வேண்டும் என்பதுதான் கடவுளின் கடவுளின் விரும்பம்.
அதனால்தான் புறவினத்தார் வாழ்ந்த பகுதியாக நினிவே நகருக்கு இறைவாக்கினர்
யோனாவை அனுப்பி வைத்து, அவர்களுக்கு மனமாற்றச் செய்தியை அறிவிக்கச்
செய்கின்றார்.
யோனானின் செய்தியைச் கேட்ட நினிவே நகர மக்கள் - சிறுவர் முதல்
பெரியவர் வரை - சாக்கு உடை உடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து
நோன்பிருக்கின்றார்கள். இறைவன் அவர்களுடைய செயல்பாடுகளைப்
பார்த்து, தன்னுடைய முடிவினை மாற்றிக்கொண்டு அவர்களை அழிக்காமல்
விட்டுவிடுகின்றார். இறைவனின் விரும்பம் நாம் அழிந்து போகவேண்டும்
என்பதல்ல, மாறாக நாம் அனைவரும் மனம்மாறி, அவரிடம் திரும்பி வரவேண்டும்
என்பதே ஆகும். அதனை இன்றைய முதல் வாசகம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.
ஆகையால், ஓர் உண்மையான மனமாற்றம் என்பது வெறுமனே பேச்சுக்காக
மனம்மாறிவிட்டேன் எனச் சொல்வதாக இருக்காமல், செயலில் வெளிப்படுவதாக
இருக்கவேண்டும். அதுதான் உண்மையான மனமாற்றம் ஆகும்.
திருமுழுக்கு யோவான் தன்னிடம் திருமுழுக்கு பெற வருகின்றவர்களிடம்,
"நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயலில் காட்டுங்கள்"
(மத் 3: 8) என்பார். ஆம், மனமாற்றம் என்பது செயலில் வெளிப்படவேண்டும்.
பேச்சளவில் தங்கிவிட்டால் அது ஒருபோதும் உண்மையான மனமாற்றமாக
இருக்காது.
சில ஆண்டுகளுக்கு முன்பாக பசிபிக் தீவுப் பகுதியில் ஒரு குருவானவர்
தங்கி, அங்கிருந்த மக்களுக்குப் போதித்து வந்தார்.
ஒருநாள் அவரைப் பார்க்க அந்தப் தீவில் வாழ்ந்து வந்த ஓர் இளம்பெண்
தன்னுடைய இரண்டு கைகளிலும் கடற்கரை மணலை அள்ளிக்கொண்டு வந்தார்.
அந்த மணல் மிகவும் ஈரமாக இருந்தது, மட்டுமல்லாமல் அதிலிருந்து
தண்ணீர் மெல்ல வடிந்துகொண்டிருந்தது. நேராக வந்த அந்தப் இளம்பெண்
குருவானவரிடம் சென்று, "இது என்ன?" என்று கேட்டார். அவர்
"கடற்கரை மணல்" என்றார். "எதற்காக இந்த மணலை அள்ளிக்கொண்டு வந்திருக்கின்றேன்
என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார். குருவானவர்
தெரியாது என்று சொல்ல, அதன் இளம்பெண், "இந்த கடற்கரை மணல்தான்
என்னுடைய பாவங்கள். இந்த மணலை எப்படி எண்ண முடியாது. அந்தளவுக்கு
நான் பாவங்கள் செய்திருக்கின்றேன். நான் செய்த இவ்வளவு குற்றங்களையும்
இறைவன் மன்னிக்கவே மாட்டார்" என்றார்.
அதற்குக் குருவானவர் அவரிடம், "அப்படி நினைக்காதே! இறைவன் நீ
செய்த குற்றங்கள் அனைத்தையும் மன்னிப்பார்" என்று
சொல்லிவிட்டு, அவர் அந்த இளம்பெண்ணிடம், "இந்த மணலை கடற்கரையிலிருந்து
தானே எடுத்துவந்தாய்?" என்று கேட்க, அவர் ஆம் என்று பதில்
சொன்னார். "அப்படியானால், இந்த மணலை வைத்து கடற்கரையில் ஒரு
சிறிய வீடு கட்டினால், அது என்னவாகும்?" என்று கேட்டார். அந்த
இளம்பெண்ணோ, "அந்த வீட்டை சிறிது நேரத்திலே கடல் அலை வந்து அடித்துக்கொண்டு
போய்விடும்" என்றார்.
"நீ சொல்வது மிகச் சரி. எப்படி கடற்கரையில் கட்டப்படும் வீட்டை
கடலலை வந்து அடித்துக்கொண்டு போய்விடுமோ, அது போன்றுதான் நீ
செய்த குற்றங்கள் அனைத்தையும் இறைவன் மன்னித்துப்
போக்கிவிடுவார். ஏனென்றால், கடவுளின் இரக்கமும் அன்பும் கடலைவிடப்
பெரியது. அதற்கு முன்பாக உன்னுடைய குற்றங்கள் எல்லாம் ஒன்றமில்லை"
என்றார். குருவானவர் இவ்வாறு சொன்னதைக் கேட்ட அந்த இளம்பெண் தன்னுடைய
குற்றங்களுக்காக மனம் வருந்தி, மனம் திரும்பிய பெண்ணாக வாழத்
தொடங்கினார்.
ஆம், உண்மையான மனமாற்றம் செயலில் வெளிப்படவேண்டும்.
நிறைவாக நாம் மனமாறுவதால் என்ன நடக்கின்றது என்றும்
சிந்தித்துப் பார்க்கவேண்டும். லூக்கா நற்செய்தியில் ஆண்டவர்
இயேசு மிகத் தெளிவாக எடுத்துக்கூறுவார், "மனம் மாறிய ஒரு
பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும்"
(லூக் 15: 7) என்று. இது முற்றிலும் உண்மை. எப்படி என்றால் பாவ
வழியில் வாழக்கூடிய ஒருவன் மனமாற்றம் அடைகின்றபோது முதலில்
அவனுக்கு அது நலம் பயப்பதாக இருக்கின்றது, அடுத்ததாக அவனைச்
சார்ந்த அவனுடைய பெற்றோர், உற்றார், உடன்பிறப்புகள்
ஆகியோருக்கும் நலம் பயப்பதாக இருக்கின்றது. அதை விடவும்
ஆண்டவருக்கும், அவருடைய வானதூதர்களுக்கும் நலம் பயப்பதாக
இருக்கின்றது. ஏனென்றால் கடவுள் தீயோரின் அழிவில் மகிழ்கின்ற
கடவுள் அல்ல, அவர் அவனுடைய மனமாற்றத்தில் மகிழ்கின்ற கடவுள்.
ஆகையால், தீய வழியில் நடக்கின்ற நாம் மனமாற்றம் அடைகின்றபோது
அது எல்லாருக்கும் நல்லது.
எனவே, மனமாற்றம் அடைவதற்கான காலம் மிகக் குறுகியது என்பதை
உணர்வோம். கடவுளின் மேலாக அன்பையும், இரக்கத்தையும் எப்போதும்
நினைத்துப் பாப்போம். மனம் மாறிய மக்களாக வாழ்வோம். அதன்வழியாக
இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 2
=================================================================================
போகிற போக்கு
யோனா 3:1-5,10
1 கொரிந்தியர் 7:29-31
மாற்கு 1:14-20
நம் தமிழ் மரபில் நாம் சந்திக்கும் யாரையும், "நீங்க நல்லா இருக்கீங்களா?"
எனக் கேட்கிறோம். விவிலிய எபிரேய மரபில் ஒருவர் மற்றவரைச் சந்திக்கும்போது,
"நீ எங்கிருந்து வருகின்றாய்? எங்கே போகின்றாய்?" என்று
கேட்பார்கள் (காண். தொநூ 16:18, நீத 19:17). இக்கேள்வியின்
பின்புலம் இரண்டு: (அ) எபிரேயர்கள் அல்லது இஸ்ரயேல் மக்கள்
பாலைநிலத்தில் குடியிருந்தனர். வீடுகள் மிகவும் தூரமாக இருந்தாலும்,
ஒருவர் மற்றவரோடு உள்ள தொடர்பு மிகக் குறைவாக இருந்ததாலும், ஒருவரின்
வருகையையும், செல்கையையும் கேட்கும்போது அவரின் தொடக்கம் மற்றும்
முடிவை அறிந்து கொண்டனர். வருகின்ற நபர் தங்களுக்கு ஆபத்து எதுவும்
தராதவர் என்பதை இவ்வாறு உறுதி செய்துகொண்டனர். (ஆ) இவர்கள் தங்கள்
வாழ்வை ஒரு பயணமாககே கருதினர். ஒவ்வொரு பயணத்திற்கும் இந்த இரண்டு
கேள்விகளும் அவசியம். இந்த இரண்டு கேள்விகளுக்கு விடை தெரியாதவர்
சும்மா உழன்றுகொண்டே இருப்பர். ஆக, வாழ்வின் எந்த நிலையிலும்
இந்த இரண்டு கேள்விகளுக்கு விடை அவசியம் என்பதை இவர்கள் உறுதியாக
நம்பினர்.
இன்றைய இறைவாக்கு வழிபாட்டு சிந்தனைக்கு, "போகிற போக்கு" என்று
தலைப்பிட்டுக்கொள்வோம். "போக்கு" என்றால் "போகுதல்" அல்லது
"செல்லுதல்." "போகுதல்" என்பது ஒரு வழியை உள்ளடக்கியிருக்கிறது.
இந்த வழிக்கு தொடக்கம் ஒன்று உண்டு, இலக்கு ஒன்று உண்டு. இந்த
இரண்டும் தெளிவாக இருக்கும்போது போதல் எளிதாகிறது.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். யோனா 3:15,10) நினிவே மக்கள்
"போகிற போக்கை" இறைவாக்கினர் யோனா மாற்றிப் போடுகின்றார்.
இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 7:29-31) வாழ்வின் இயலாமை
பற்றிப் பேசுகின்ற தூய பவுலடியார் நாம் "போகிற போக்கு" நிலையானது
அல்ல என்றும், அது மிக வேகமாக மாறக்கூடியது என்றும் அறிவுறுத்துகின்றார்.
நற்செய்தி வாசகத்தில் (காண். மாற் 1:14-20), "காலம்
நிறைவேறிவிட்டது" என்று தன் பணிவாழ்வைத் தொடங்கும் இயேசு, அனைத்து
மக்களின் "போகிற போக்கை" மனமாற்றத்தின் வழியாகவும், முதற்சீடர்களின்
"போகிற போக்கை" சீடத்துவ அழைப்பின் வழியாகவும் மாற்றிப்
போடுகின்றார்.
"போகிற போக்கை" ஒவ்வொரு வாசகத்திற்கும் சென்று சற்று விரிவாகப்
பார்ப்போம்:
முதல் வாசகம்:
"யோனாவின் போக்கும், நினிவேயின் போக்கும்"
இறைவாக்கினர் யோனாவின் பணி பயணத்தில்தான் தொடங்குகிறது. ஆண்டவர்
அவருக்கு அருளும் முதல் வாக்கே, "நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப்
போய்" என்றுதான் இருக்கிறது. ஆனால் யோனா தன் போக்கில் பயணம்
செய்ய முற்படுகின்றார். ஆண்டவர் வடக்கு நோக்கி இவரை அனுப்ப,
அதற்கு எதிர்திசையில் தெற்கு நோக்கி பயணம் தொடங்குகின்றார்
யோனா. விளைவு கடல் கொந்தளிப்பு. கொந்தளிப்பின் இறுதியில் கடலின்
மீனின் வாய்க்குள் விழ, இரண்டாம் முறையாக மீண்டும் அழைப்பு பெற
நினிவேக்கு வருகின்றார் யோனா. "நினிவே ஒரு மாபெரும் நகர். அதை
கடக்க மூன்று நாள்கள் ஆகும். யோனா நகருக்குள் சென்று, ஒரு நாள்
முழுதும் நடந்தபின்" என பதிவு செய்கிறார் ஆசிரியர். வேண்டா
வெறுப்பாக நினிவேக்குச் செல்கின்ற யோனா, மூன்று நாள் கடக்க
வேண்டிய நகரின் தூரத்தை ஒரே நாளில் கடக்கின்றார். அப்படி என்றால்
இவர் நடந்திருக்க மாட்டார். ஓடியிருப்பார். வேண்டா வெறுப்பாக,
ஓட்டமும் நடையுமாக இறைவாக்குரைத்து முடிக்கின்றார் யோனா.
மேலும், மனமாற்றம் பற்றி அவர் போதிக்கவில்லை என்றாலும், நினிவே
மக்கள் யோனாவின் செய்தியை மனமாற்றத்திற்கான அழைப்பாக ஏற்று
உடனடியாக செயல்படத் தொடங்குகின்றனர். "இன்னும் நாற்பது நாளில்
நினிவே அழிக்கப்படும்" என்ற மொட்டையான செய்தியை "போகிற
போக்கில்" சொல்லிவிடுகின்றார் யோனா. ஆனால், "போகிற போக்கில்"
சொல்லப்பட்ட செய்திதானே என போகிற போக்கில் அதை விட்டுவிடாமல்,
தாங்கள் போகின்ற போக்கை மாற்ற முடிவு செய்கின்றனர். அந்த மாற்றத்தை
உடனே செயல்படுத்துகின்றனர். ஆண்டவரும் அவர்கள் தங்கள் தீய வழியை
மாற்றிக்கொண்டதால் தம் மனத்தை மாற்றிக் கொள்கின்றார்.
இரண்டாம் வாசகம்:
"வெளி நோக்கும் போக்கிலிருந்து உள் நோக்கும் போக்கு"
திருமண வாழ்வு பற்றி கொரிந்து நகர திருச்சபைக்கு அறிவுறுத்துகின்ற
பவுல் தொடர்ந்து, "மணமாகாதவர்களும் கைம்பெண்களும் கொண்டிருக்க
வேண்டிய வாழ்க்கை முறை" பற்றிப் பேசுகின்றார். பவுல் இந்தக் கடிதத்தை
எழுதும் காலத்தில் (கி.பி. 60 - 100) "பருசியா" என்று சொல்லப்படும்
"இரண்டாம் வருகை" அல்லது "உலக இறுதி" மிக அருகில் இருப்பதாக மக்கள்
நம்பினர். இந்தப் பின்புலத்தில் திருமணம் முடித்தலும், பெண்
கொள்தலும், கொடுத்தலும், திருமண உரிமையால் வரும் மகிழ்ச்சியும்,
பிரிவால் வரும் அழுகையும் என எல்லாம் மாறிப்போகும் அல்லது அழிந்து
போகும் என எண்ணுகின்ற பவுல், "இனியுள்ள காலம் குறுகியதே" என்று
தொடங்கி, "இப்போது இருப்பதுபோல நெடுநாள் இராது" என நிறைவு
செய்கிறார்.
குறுகிய காலம்தான் எல்லாம் இருக்கிறது என்றால் நாம் தேவையற்றவைகளை
விடுத்துவிட்டு, தேவையானவற்றை மட்டும் பற்றிக்கொள்ள வேண்டும்
என்பது பவுலின் அழைப்பாக இருக்கிறது. நாம் நம் வீட்டில் இருக்கும்
போது பெரிய வீடு, இடம், தோட்டம் என எல்லாவற்றையும் பயன்படுத்துகிறோம்.
நம்முடைய ஒருநாள் வாழ்விற்கு மேசை, நாற்காலி, கைகழுவும் இடம்,
கட்டில், டிவி என நிறைய பயன்படுத்துகிறோம். ஆனால், ஒருநாள்
பயணமாக நாம் அமெரிக்க ஐக்கிய நாடுகள் செல்ல விமானம் ஏறும்போது
இவை எல்லாவற்றையும் விமானத்தின் ஒற்றை நாற்காலியில் அமர்வதன்
வழியாக முடித்துக்கொள்கிறோம். ஆக, நம் வாழ்விற்கு ஒற்றை
நாற்காலி இருந்தால் போதுமானதுதான். ஒருநாள் விமானத்தில் இந்த
ஒற்றை இருக்கையோடு வாழும் நமக்கு ஓராண்டு முழுவதும் வாழ்வது
சாத்தியமில்லையா? ஆக, நம் வாழ்வின் மகிழ்ச்சி என்பது நாம்
நிறைய கொண்டிருப்பதிலும், நிறைய அனுபவத்திலும் இல்லை. மாறாக,
அது நம் ஒவ்வொருவருக்கும் உள்ளே பொதிந்து இருக்கிறது. ஆக, வெளி
நோக்கி நாம் செல்லும் போக்கை உள்நோக்கி திருப்ப வேண்டும் என்பது
இரண்டாம் வாசகத்தின் பாடம்.
நற்செய்தி வாசகம்:
"இயேசுவின் போக்கும், சீடர்களின் போக்கும்"
மாற்கு நற்செய்தியாளரின் இயேசுவின் பணி வாழ்வு தொடக்கத்தைப் பதிவு
செய்யும்போது, "யோவான் கைதுசெய்யப்பட்ட பின்" என்று தொடங்குகின்றார்.
ஆக, "யோவானுக்கு திரை விழுந்து" "இயேசுவுக்கு திரை விலகுகிறது."
இதுதான் "காலம் நிறைவேறிவிட்டது" என்பதன் பொருள். "யோவானின் காலம்
நிறைவேறிவிட்டது," "மீட்பற்ற நிலையின் காலம் நிறைவேறிவிட்டது,"
"இனி தொடர்வது எல்லாம் புதிய காலமே" என "இறையாட்சியின் வருகையை
அறிவிக்கின்றார்" இயேசு. இந்த இறையாட்சியை அறிந்து கொள்வது என்பது
"மனம் மாறி நற்செய்தியாகிய இயேசுவை நம்புவதில்" அடங்கியிருக்கிறது.
இயேசுவின் போக்கு தன் வாழ்வின் கூட்டு நிலையிலிருந்து வெளியேறி
பணி வாழ்வுக்குள் நுழைவதாக இருக்கிறது.
போகிற போக்கில் நற்செய்தி அறிவித்த யோனா போல அல்லாமல், தம் சீடர்களின்
"போக்கை மாற்றுகின்றார்" இயேசு. இயேசுவுக்கும், யோனாவுக்கும்
இன்னும் சில வித்தியாசங்களும் உள்ளன. தம்மிடம் அறிகுறி கேட்பவர்களுக்கு
யோனாவின் அறிகுறியை வழங்கும் இயேசு, "இங்கிருப்பவர் யோனாவைவிட
பெரியவர் அல்லவா!" (மத் 12:41) என முழங்குகின்றார். யோனா நகரத்தில்
தன் பணியைச் செய்தார். இயேசுவோ கிராமத்தில் செய்தார். யோனாவின்
பயணம் மையம் நோக்கி இருந்து. இயேசுவின் பயணமோ விளிம்பி நோக்கி
இருந்தது. யோனா ஓட்டமும் நடையுமாக பணி செய்கிறார். இயேசு ஆற
அமர பணி செய்கிறார்.யோனா வேண்டா வெறுப்பாகச் செய்கிறார். இயேசு
மக்கள் மேல் கொண்ட பரிவினால் செய்கிறார்.இவ்வாறாக, அவர்
"யோனாவைவிட பெரியவராக" இருக்கின்றார்.
இயேசு திருத்தூதர்களை அழைக்கும் நிகழ்வு மாற்கு 3:14-15ல் இருந்தாலும்,
முதற்சீடர்களை அழைக்கும் நிகழ்வை நாம் மாற்கு 1:14-20ல்
வாசிக்கின்றோம். சீமோன் - அந்திரேயா, யாக்கோபு - யோவான் என்னும்
இரண்டு ஜோடி சகோதரர்களை அழைக்கின்றார் இயேசு. நான் இந்த நிகழ்வை
ஓர் உருவகமாக பார்க்கிறேன். எப்படி?
கடல் என்பது இவ்வுலகில் உள்ள எல்லாரையும் குறிக்கிறது. இவ்வுலகில்
உள்ள எல்லாருமே நாம் கடலோரமாய் தான் நின்றுகொண்டிருக்கிறோம்.
இந்த நின்றுகொண்டிருத்தலில் ஒருவகையான காத்திருத்தலும், எதிர்நோக்கும்
இருக்கிறது. இவ்வாறு, காத்திருக்கும் நாம் நம் வாழ்வு என்னும்
கடலில் நம் பணிகள், பயணங்கள், படிப்பு, உறவுநிலைகள் வழியாக "கடலில்
வலை வீசிக்கொண்டிருக்கிறோம்." அதாவது, நம் அன்றாட அலுவல் ஒன்றைச்
செய்துகொண்டிருக்கிறோம். பிறந்த குழந்தைக்கும்கூட ஏதோ ஒரு அலுவல்
அல்லது ஒரு கவலை இந்த உலகில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இப்படி
நம் வேலையில் மும்முரமாக இருக்கும் நம்மை நோக்கி கடவுளின் அழைப்பு
வருகிறது. ஆக, அந்த அழைப்பு வரும் கணப்பொழுதில் நாம் சட்டென
முடிவு எடுக்க வேண்டும். அந்த முடிவிற்காக நாம் பெரிய விலையைக்
கொடுக்க வேண்டும். நம் வலைகளை விட்டுவிட வேண்டும். கடலை நோக்கி
நம் முதுகைத் திருப்ப வேண்டும். இனி கடல் நம்மிடமிருந்து
விடைபெற வேண்டும். பாதி கடல், பாதி கடவுள் என்று நம்மால் பயணம்
செய்ய முடியாது. சீமோன் - அந்திரேயா போல வலைகள் என்னும் வேலைகளை
விட வேண்டும். யாக்கோபு - அந்திரேயா போல நம் அப்பாவை, உறவுகளை,
கூலியாள்களோடு விட வேண்டும். கூலியாள் என்பவர் நம் ஆடம்பரம்.
நம் வேலையை நாம் செய்வதற்குப் பதிலாக நமக்கு நம் வேலையை
செய்யும், நம் அதிகாரத்திற்கு தூபம் போடுபவர்கள்தான் கூலியாள்கள்.
கூலியாள்களை விட்டுவிடுவது என்பது நம் அதிகாரத்தையே
விட்டுக்கொடுப்பது. அப்பாவை விடுவது என்பது எல்லா உறவுகளையும்
விடுவது. ஆக, வேலை, உறவு, அதிகாரம் என்ற மூன்றை நோக்கிய நம்
போக்கை மாற்றிப்போடுகிறது இயேசுவின் அழைப்பு.
இவ்வாறாக, இன்றைய நம் போக்கு (வழி) என்ன? நாம் போகிற போக்கு சரிதானா?
என்பதை மறுஆய்வு செய்ய நமக்கு அழைப்பு விடுக்கிறது இன்றைய இறைவாக்கு
வழிபாடு.
இவ்வாறாக, நாம் நம் போக்கை மாற்றுவதால் நமக்குக் கிடைக்கும்
பலன்கள் எவை?
முதல் வாசகத்தில், தங்கள் போக்கை மாற்றிய நினிவே மக்கள், தங்கள்
ஓட்டத்தை நிறுத்தி சாம்பலில் அமர்ந்த நினிவே மக்கள் கடவுளின்
தீர்ப்பு அல்லது தண்டனைக்குத் தப்பியவர்களாய் அவரது இரக்கத்தைப்
பெறுகின்றனர். இரண்டாம் வாசகத்தில், தங்கள் போக்கை மாற்ற அறிவுறுத்தப்படும்
கொரிந்து நகர மக்கள் நிலையான மகிழ்ச்சியாம் ஆண்டவருக்குப் பணிபுரிதலைக்
கண்டுகொள்கின்றனர். நற்செய்தி வாசகத்தில், தங்களின் வேலை, அப்பா,
வேலையாள்கள் ஆகியவற்றிலிருந்து தங்கள் போக்கை மாற்றும் முதற்சீடர்கள்
நற்செய்தியாம் இயேசுவைப் பற்றிக்கொள்கின்றனர்.
இந்த மூன்று போக்கு மாற்றங்களுக்கும் இவர்கள் பெரிய விலையைக்
கொடுக்க வேண்டும். அந்த விலை என்னவென்றால், "ஒருமுறை விட்ட
வழியில் அவர்கள் மீண்டும் செல்லக்கூடாது." நினிவே மக்கள்
தங்கள் பழைய வாழ்க்கைக்குத் திரும்புதல் கூடாது. கொரிந்து நகர
மக்கள் இவ்வுலக வாழ்வின் கவலைகளில் தங்களை ஆழ்த்தக் கூடாது.
முதற்சீடர்கள் தங்கள் வலைகளையும், அப்பாவையும்,
கூலியாள்களையும் நாடிச் செல்லக்கூடாது. (இந்த சோதனை
சீடர்களுக்கு இயேசுவின் இறப்பிற்குப் பின் வருகிறது - காண்.
யோவா 21:3. ஆனால் இந்த சோதனையும் அவர்களின் கடவுளின் பிரசன்னம்
வெளிப்படும் நிகழ்வாக மாறுகிறது)
இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு வைக்கும் வாழ்வியல் சவால்கள்
எவை?
1. நாம் "போகிற போக்கில்" வாழ்கிறோமா? அல்லது "போக்கையே
மாற்றி" வாழ்கிறோமா?
யோனாவிடம் ஓர் இனம்புரியாத கோபம் இருக்கிறது. தன்மேல், தன்னைச்
சுற்றியிருப்பவர்கள்மேல், தன் கடவுள்மேல். இந்தக் கோபம்
இருப்பதால் அவரால் வாழ்வை முழுமையாக வாழ முடியவில்லை. ஆனால்,
அதற்கு எதிர்மாறாக இயேசுவிடம் பரிவு மட்டுமே இருக்கிறது. கோபம்
குடிகொள்ளும் யோனா தன்னை மையப்படுத்தியவராக இருக்கிறார். பரிவு
குடிகொள்ளும் இயேசு பிறரை மையப்படுத்தியவராக இருக்கிறார்.
இன்று என் வாழ்வை முழுமையாக வாழ்வதற்கு தடையாக இருக்கும் காரணி
எது? அது எங்கே இருக்கிறது?
2. "எங்கள் சொல்லும் செயலும் உமக்கு உகந்தனவாக அமைய எங்களுக்கு
வழிகாட்டும்"
இன்றைய சபை மன்றாட்டில் நாம் இப்படித்தான் செபிக்கின்றோம். நம்
சொற்களும், செயல்களும் அவருக்கு உகந்தனவாக இருக்க அவர் தான்
வழிகாட்ட வேண்டும். ஆக, நம் வாழ்வின் ஓட்டம் அவர் கைகளில்
இருக்கிறது. இதுவே இன்றைய பதிலுரைப்பாடலில் திருப்பாடல்
ஆசிரியரின் செபமாக இருக்கிறது: "ஆண்டவரே, உம் பாதைகளை நான்
அறியச் செய்தருளும். உம் வழிகளை எனக்கு கற்பித்தருளும். உமது
உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்கு கற்பித்தருளும்" (திபா
25:4-5). ஆண்டவரின் வழிகளை நம்மால் கற்றுக்கொள்ள
முடியுமென்றால் நாம் திறந்த உள்ளம் கொண்டிருக்கிறோமா?
3. "பொருள்களை வாங்குவோர் அது இல்லாதவர் போலவும் இருக்கட்டும்"
இருந்தாலும் இல்லாதவர் போல, இல்லை என்றாலும் இருப்பவர் போல
வாழ்வது என்றால் என்ன? இப்படி இருப்பதாக நடிப்பது அல்லது
யூகிப்பது அல்ல. மாறாக, நாம் கொண்டிருக்கும் பொருள்கள் அல்லது
நபர்கள் நம் வாழ்வைக் கூட்டுவதோ, குறைப்பதோ இல்லை என உணர்வது.
பவுல் "மனைவி உள்ளவர் மனைவி இல்லாதவர்போல" இருக்கட்டும்
என்கிறார். பவுல் அளவிற்கு நம்மால் புரட்சிகரமாக
எல்லாவற்றையும் ஒதுக்கிவைக்க முடியவில்லை என்றாலும், கொஞ்சம்
கொஞ்சமாக பற்றுக்களை குறைத்துக்கொள்தல் நலம். இதைப்
புரிந்துகொள்ளவே கடவுளின் தூண்டுதல் அவசியம் என நினைக்கிறேன்.
நம்ம வாழ்வையே நினைத்துப் பார்ப்போம். ஒவ்வொரு கால கட்டத்தில்
நாம், "இதுதான் உலகம்" என பிடித்துக்கொண்டிருந்தது, அடுத்த
கட்டத்திற்குள் நுழையும்போது நம்மை அறியாமலேயே நம் கை நழுவிப்
போய்விடுகிறது. வாழ்வின் போக்கிற்கு ஏற்ப நம் போக்கை
அமைத்துக்கொள்வது.
இயேசு வருவார் என்று சீமோனும், பேதுருவும், யாக்கோபும்,
யோவானும் வழிமேல் விழி வைத்து ஓய்ந்திருக்கவில்லை. வலைகளை
வீசிக்கொண்டும், படகுகளை பழுதுபார்த்துக்கொண்டும்தான்
இருந்தனர். அதே வேளையில் இயேசு வந்தவுடன் தங்கள் உலகமாக
அவர்கள் நினைத்த வலைகளையும், படகுகளையம், அப்பாவையும்,
கூலியாள்களையும் விட தயாராக இருந்தனர். ஆக, எல்லாவற்றிற்கும்
"ஆம்" என்று சொல்லும் தயார் மனநிலை இது. அவ்வாறே, யோனாவின்
வருகையை நினிவே மக்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர்
வந்தவுடன் மனமாற்றத்திற்கு தாமதிக்கவில்லை. வாழ்க்கை சில
நேரங்களில் எல்லாவற்றையும் settle செய்வதற்கு நமக்கு நேரம்
கொடுப்பதில்லை. இருக்கும்போதே அப்படியே போட்டுவிட்டு அடுத்த
நிலைக்குச் செல்ல அழைக்கிறது. இப்படி செல்வதற்கு கட்டின்மை
வேண்டும்.
அவரின் வழி என் வழியாக, அவரின் போக்கே நான் போகிற போக்காக
இருந்தால் எத்துணை நலம்!
(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)
Archdiocese of Madurai
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 3
=================================================================================
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் 32-ஆவது ஜனாதிபதியாகிய
ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட் அவர்களைப் பற்றிய குறிப்பு ஒன்று உண்டு.
வெள்ளை மாளிகையில் தன்னை சந்திக்க வருகின்ற பார்வையாளர்கள் அனைவரையும்
அவர் பொறுமையோடு வரவேற்று உபசரிப்பார். ஆனால், தான் சொல்லுவதை
பார்வையாளர்கள் யாருமே கவனமுடன் கேட்பதில்லை என்றொரு மனக்குறை
அவருக்கு உண்டு. ஒருநாள் இத்தகைய பார்வையாளர் சந்திப்பின்
போது, ஒரு சோதனையை செய்து பார்க்க அவர் முடிவு செய்தார். தன்னை
சந்திப்பதற்காக வரிசையில் வந்தவர்களை கைகுலுக்கி வரவேற்ற அவர்,
ஒவ்வொருவர் காதிலும் "இன்று காலையில் என் பாட்டியை நான் கொலை
செய்துவிட்டேன்" என்று முணுமுணுத்தார். பார்வையாளர்கள் ஒவ்வொருவரும்,
"நன்று, ஐயா, அற்புதம்.., இந்த நற்செயலை தொடர்ந்து செய்யுங்கள்..
உங்களைக் குறித்து பெருமையடைகிறோம்.. கடவுள் உம்மை ஆசீர்வதிக்கட்டும்.."
என்று ஏதோ ஒன்றை சொல்லிவிட்டு நகர்ந்தார்கள். அந்த வரிசையில்
இறுதியாக வந்த பொலிவியா நாட்டு தூதுவர் மட்டுமே ஜனாதிபதி கூறியதை
சரியாக புரிந்துகொண்டார். எந்தவிதமான அதிர்ச்சியும் அடையாமல்,
அந்த தூதுவர் குனிந்து, ஜனாதிபதியின் காதில் "அதற்கு உங்கள்
பாட்டியே வழிவகுத்துக் கொடுத்திருப்பார் என்றே நம்புகிறேன்" என்று
மிக மெதுவாக கூறினார்.
சொல்லப்படுவதை மக்கள் கேட்பதில்லை. நாமும் நமக்கு சொல்லப்படுவதை
கேட்பதில்லை. அப்படியே கேட்கத் தயாராக இருந்தாலும்,
தேர்ந்தெடுத்த சிலவற்றிற்கு மட்டுமே செவிமடுக்கிறோம். இன்றைய
காலகட்டத்தில், "செவிமடுத்தல்" என்பது மறக்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது.
இது, வல்லுநர்கள், ஆலோசனை கூறுவோர், மனோதத்துவ நிபுணர்கள், மனநோய்
மருத்துவர்கள் ஆகியோர் மட்டுமே அறிந்திருக்க வேண்டிய ஒரு உத்தியாக
மாறிவிட்டது. அமைதியாக ஒலிக்கின்ற இயேசுவின் குரலுக்கு நாம்
செவிசாய்ப்பதில்லை என்பது முற்றிலும் உண்மையான கருத்தாகவே உள்ளது.
இறைவார்த்தை:
செவிமடுத்து, அதற்கேற்றவாறு செயலாற்றுவதைப் பற்றி இன்றைய முதல்
வாசகமும், நற்செய்தி வாசகமும் எடுத்துரைக்கின்றன.
யோனாவும், நினிவே நகர மக்களும் செவிமடுத்து செயலாற்றினார்கள்: நினிவே
மாநகருக்குச் சென்று, அந்நகருக்கு வரவிருக்கின்ற பேரழிவை மக்களுக்கு
அறிவிக்குமாறு ஆண்டவரின் வாக்கு யோனாவுக்கு அருளப்படுகிறது. முதலில்
யாவே கடவுளிடமிருந்து தப்பியோட யோனா முயன்றாலும், முடிவில் ஆண்டவரின்
வார்த்தைக்கு செவிசாய்த்து, "இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்"
என்று ஆண்டவர் உரைத்ததை நினிவே நகர மக்களுக்கு அறிவிக்கிறார்.
அந்நகரத்து மக்களும் இறைவாக்கினர் யோனாவின் அறிவிப்பிற்கு செவிமடுத்து,
அதற்கேற்றவாறு செயல்படுகிறார்கள். அவர்கள் நோன்பிருக்க
முடிவுசெய்து, சாக்கு உடை உடுத்திக்கொண்டு, தங்கள் தீய வழிகளிலிருந்து
விலகி வந்தார்கள். யோனாவும், நினிவே நகரத்து மக்களும், தங்களுக்கு
சொல்லப்பட்டதற்கு செவிசாய்த்து, அதற்கு உகந்தாற்போல செயல்பட்டார்கள்.
திருத்தூதர்களும் செவிமடுத்து செயலாற்றினார்கள்: "காலம்
நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி
நற்செய்தியை நம்புங்கள்" இதுவே மக்கள் அனைவருக்காகவும் அறிவிக்கபட்ட
இயேசுவின் முதற்செய்தி. "என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப்
பிடிப்பவர் ஆக்குவேன்" இது திருத்தூதர்களுக்காக இயேசு கூறிய
இரண்டாவது செய்தி. "மனம் மாறுதல்", "இயேசுவைப் பின்பற்றுதல்"
ஆகிய இரண்டு செய்திகளையும் திருத்தூதர்கள் கேட்கிறார்கள்; தாங்கள்
கேட்டதற்கு ஏற்றவாறு செயலாற்றத் துணிகிறார்கள். தங்கள் குடும்பங்களையும்,
வாழ்வாதாரமாக இருந்த தங்கள் தொழிலையும், தங்கள் கூலியாட்களையும்
விட்டுவிட்டு, இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்கள்.
இறைவாக்கினர் யோனா, நினிவே நகர மக்கள் மற்றும் திருத்தூதர்கள்
ஆகிய மூன்று பிரிவினர் கடவுளின் வார்த்தையை கேட்டது மட்டுமின்றி,
தாங்கள் கேட்டதற்கு ஏற்றாற்போல செயல்பட்டார்கள். இறைவனின்
வார்த்தைக்கு செவிசாய்த்து, அதன்படி செயலாற்றிய யோனா, நினிவே
நகரத்து மக்களுக்கு மீட்பின் கருவியாக ஆனார். யோனாவின்
வார்த்தைக்கு செவிசாய்த்த நினிவே நகர மக்கள், தங்கள்
வாழ்க்கையைக் காப்பற்றிக் கொண்டார்கள். இயேசுவின் வார்த்தைக்கு
செவிமடுத்து செயலாற்றிய திருத்தூதர்கள், இறைத்திட்டத்தில் இயேசுவோடு
பணியாற்றுகின்ற துடிப்பான உடன் உழைப்பாளர்கள் ஆனார்கள். தாங்கள்
கேட்டவற்றிக்கு உகந்தாற்போல திருத்தூதர்கள் செயலாற்றிய போது,
கடவுள் அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பாக ஆனார்.
பயன்பாடு:
சான்பிரான்ஸிஸ்கோ நகரில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், விடலைப்
பருவத்தினரான விலைமகளிரிடம், "உங்களுக்கு மிகமிக தேவையானது என்று
நீங்கள் விரும்பியும், உங்களுக்கு கிடைக்காமல் போனது ஏதேனும்
உண்டா?" என்ற கேள்வி கேட்கப்பட்டது. துக்கம் தொண்டையை அடைத்திட,
கண்களில் கண்ணீரோடு அவர்கள் ஒருமித்து கூறியது: "நான் சொல்லுவதை
காது கொடுத்துக் கேட்பதற்கு, கவனமுடன் செவிசாய்ப்பதற்கு முன்வருவோர்
யாரேனும் உண்டோ என்பதே எனக்கு மிகவும் தேவையான ஒன்றாக இருந்தது".
சைமன் கார்ஃபங்கெல் (Simon Garfunkel) பாடிய பாடலின் வரிகள் என்
நினைவிற்கு வருகின்றன. "அரைகுறை வெளிச்சத்தில் நான் கண்டேன்,
ஆயிரம் பதினாயிரம் மக்கள்... உரையாடலின்றி கதைக்கின்ற மக்கள்..
உணர்ச்சியோடு செவிமடுக்காமல் கேட்கின்ற மக்கள்...." ("And in the naked light I saw Ten thousand people, maybe more, People
talking without speaking, People hearing without listening")
இன்றைய நாள்களில்
நம்மைச் சுற்றி நிலவுகின்ற பலத்த கூச்சல் என்னும் சுழலில்
மூழ்கி, நாம் நிலைதடுமாறி இருக்கிறோம். இரைச்சலுடன் கூடிய பலவகை
தாக்கங்கள் நமது தலைக்குள்ளே சுழன்றடிக்கின்றன. நம் மனமெங்கும்
கூச்சலே நிறைந்துள்ளது. நமது ஜெபங்களும் சத்தங்கள் மிகுந்த
வார்த்தைகளின் வெளிப்பாடாகவே உள்ளது. திருப்பலி நேரத்தில்
செய்தி இதழ்களைப் படித்துக் கொண்டும், தங்கள் கைபேசிகளை தடவிக்
கொண்டும், மற்றவர் மேல் கவனத்தை செலுத்திக் கொண்டும் பலர் இருப்பது
நமக்குத் தெரியும். ஆலயங்களில் ஜெபிக்கின்ற நேரங்களில் பற்பல
புத்தகங்களை நாம் பயன்படுத்துகிறோம்; அவற்றில் இருக்கின்ற
வார்த்தைகளே சரியான ஜெபங்கள் என்று நாம் நம்புகிறோம். நமது வழிபாடு
என்பது பெருங்கூச்சலாவே உள்ளது. எந்த அளவு கூச்சல் அதிகமாக இருக்கிறதோ,
அந்த அளவுக்கு நமது வழிபாடு சிறப்பாக இருப்பதாக நாம்
நினைக்கிறோம். நமக்கு பழக்கப்பட்டு போன நடைமுறைகள், நமது கட்டுப்பாட்டுத்
தேவைகள், நமது பாதுகாப்பின்மை, மறைவாக சிலவற்றை மாற்றியமைப்பதற்கான
அவசியம், வெற்றி கொள்வதற்கான நமது வேட்கை, நம்முடைய மனநெருடல்கள்
மற்றும் உணர்வுகள் இவை அனைத்தும் உண்மையாகவே நாம் செவிமடுப்பதை
கடினமாக்குகின்றன.
"என் வார்த்தைகளுக்கு செவிசாய்ப்பதையே என் மக்களிடம் நான் எதிர்பார்க்கிறேன்"
என்றே கடவுள் கூறுவதாகத் தெரிகிறது. 1 அரசர், 19 ஆம் அதிகாரத்தில்,
யாவே கடவுள் தன்னிடம் பேசவேண்டுமென்பதற்காக, இறைவாக்கினர் எலியா
ஓரேபு மலையில் காத்திருக்கிறார். மலைகளைப் பிளந்து பாறைகளைச்
சிதறடிக்கின்ற பெரும் சுழற்காற்றை கடவுள் அனுப்பினார். ஆனால்,
அந்தக் காற்றில் கடவுள் பேசவில்லை. பின்னர், எலியா
நின்றுகொண்டிருந்த இடத்தை அதிரச் செய்கின்ற நிலநடுக்கத்தை கடவுள்
அனுப்பினார். ஆனால், அந்த நிலநடுக்கத்திலும் கடவுள் பேசவில்லை.
அதன் பிறகு, கடவுள் தீயை அனுப்பினார். ஆனால், அந்தத் தீயிலும்
கடவுள் பேசவில்லை. இறுதியாக, மென்மையான இளங்காற்றும், அதனோடு
"அடக்கமான மெல்லிய ஒலி"யும் கேட்டது. இத்தகைய அமைதியான சூழலில்
கடவுள் எலியாவோடு பேசினார்; எலியாவும் அந்த அடக்கமான மெல்லிய
காற்றில் கடவுள் பேசுவதைக் கேட்டார். நம்மைச் சுற்றியும், நமக்குள்ளும்
பேரிரைச்சல் சூழ்ந்திருக்கும் நிலையில், கடவுளின் அடக்கமான குரலுக்கு
நாம் எங்ஙனம் செவிமடுக்க இயலும்?
வழிதவறி நிற்கின்ற நிலையில், முன்பின் அறியாத வேற்றாள் ஒருவரிடம்
சரியான வழியைக் கேட்டறிய தயங்காத நாம், நம் வாழ்விற்கான வழிமுறைகளை
கடவுளிடம் கேட்டறிய தயங்குவது வேடிக்கையே. தாம் ஏறெடுக்கின்ற
மன்றாட்டுகளுக்கு கடவுள் பதில் தரவேண்டுமென்று விரும்புகின்ற
மக்கள், கடவுள் தருகின்ற ஆலோசனைகளுக்கு செவிசாய்க்க மறுப்பது
விந்தையே. "இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை
நலம்! அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல்,
உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்" என்று
திருப்பாடல் 95 ல் அப்பாடலின் ஆசிரியர் மக்களிடம் வேண்டி கேட்பது
இங்கு நினைவுகூரதக்கது.
"நான் சொல்வதற்குச் செவி சாய்க்க உங்களால் இயலவில்லை. எனவேதான்
நான் சொல்வதை நீங்கள் கண்டுணர்வதில்லை" என்று யோவான் நற்செய்தி
8:43 ல் இயேசு மக்களைப் பார்த்துக் கூறுகிறார். கடவுளின் மொழி
நமக்கு அந்நியமான ஒன்றாக ஆகிவிட்டதா? உங்களையும், என்னையும்
பார்த்து இன்றைக்கும் இதே வார்த்தைகளைத் தான் இயேசு சொல்வாரா?
நமது கைபேசிகளையும், திறன்பேசிகளையும், மடிக்கணிணிகளையும்
ஒருமணி நேரம் நாம் நிறுத்திவைக்க இயலுமா? சில மணி நேரத்திற்கு
நமது தொலைக்காட்சி பெட்டிகளை அணைத்து நிறுத்திவைக்க நம்மால்
முடியுமா? ஒரே ஒருநாள் செய்திதாள்களை படிக்காமல் நம்மால்
இருக்கமுடியுமா? இயேசுவின் குரலுக்கு செவிமடுத்து அதன்படி
செயலாற்றிட, நம்மைச் சூழ்ந்திருக்கின்ற எல்லா இரைச்சல்களையும்
ஒவ்வொரு நாளிலும் கொஞ்ச நேரம் நிறுத்திவைத்திட நம்மால்
முடியுமா?
முடிவுரை:
இயேசுவின் குரலுக்கு செவிமடுக்க, இறைவனின் தூய ஆவியார் நம்மைத்
தூண்டுவாராக! இறைத்தந்தையின் குரலுக்கு செவிசாய்த்து, அதன்படி
செயலாற்றிய நம் அன்னையாம் கன்னி மரியா நமக்கு துணை நிற்பாராக.
மறையுரை ஆங்கிலத்தில்
அருட்பணி பிரடரிக் அமல்ராஜ் CSSR
அதன் தமிழாக்கம்
திருவாளர் ரேன்சம் சென்னை,
பதிவு,பெஸ்கி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 4
=================================================================================
"உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு இயேசுவைப்
பின்பற்றினார்கள்" (மாற்கு 1:18)
இயேசு தம்மோடு இருப்பதற்கும், தாம் ஆற்றவந்த நற்செய்திப் பணியைத்
தொடர்வதற்கும் சீடர்களை அழைத்தார். வழக்கமாக சீடர்கள் குருவை
நாடிச் செல்வார்கள். இங்கே சீடர்களைத் தேடிச்செல்கிறார் குரு.
இயேசு யாரைத் தம் சீடர்களாகத் தேர்ந்துகொண்டார் என்பதை நாம்
அலசிப் பார்க்கும்போது ஓர் உண்மை தெளிவாகிறது. அன்றைய பாலஸ்தீன
நாட்டில் வாழ்ந்த சாதாரண மனிதரையே இயேசு தேர்ந்துகொண்டார். அவர்களில்
பலர் மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். தம் தொழிலைச்
செய்வதில் கவனமாக இருந்தவர்கள் தங்கள் வலைகளையும் பிற கருவிகளையும்
விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள் (மாற் 1:18). இது ஒரு
பெரிய அதிசயம்தான். ஆனால் அவர்களை அழைத்தவர் ஓர் அதிசய மனிதர்தானே!
இயேசுவின் அழைப்பைப் பெற்ற மீனவர்களான சீமோனும் அந்திரேயாவும்
தயக்கமின்றி இயேசுவைப் பின்தொடர்ந்தனர். மீன்பிடிப்பதற்கு
மாறாக "மனிதரைப் பிடிக்கும்" திறமையை அவர்களுக்குக்
கொடுத்தார் இயேசு. அதாவது, கடவுளின் ஆட்சி பற்றிய நற்செய்தியை
அறிவித்து, அந்த அறிவிப்பின் வழியாக வேறு பல மனிதர்களை இயேசுவின்
அணைப்பில் கொணர்கின்ற பணியைச் சீடர்கள் பெற்றார்கள். இதுவே இன்றைய
கிறிஸ்தவ சமூகம் தொடர்ந்து ஆற்ற வேண்டிய பணி. இயேசுவைப் பின்பற்ற
விரும்புவோர் தம்மை முழுவதும் அவரிடம் கையளித்திட வேண்டும்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 5
=================================================================================
விட்டுவிட்டுச் செல்வதால்...
பொதுக்காலம் 3ஆம் ஞாயிறு.
சொல்ல வேண்டிய
செய்திகள்
பகிரப்பட வேண்டிய
செல்வங்கள்
பரிமாறப்பட வேண்டிய
திறமைகள்
கற்றுக்கொடுக்கப்பட வேண்டிய
பாடங்கள்
திருத்தப்பட வேண்டிய
முகவரிகள்
வரையபட வேண்டிய
சித்திரங்கள்
வகுக்கபட வேண்டிய
திட்டங்கள்
வர்ணனை செய்யபட வேண்டிய
ஓவியங்கள்
வசந்தமாய்
மாற்றப்பட வேண்டிய
வாழ்க்கைச் சூழல்கள்
இப்படியாய்
மாற்றங்களுக்கு
மகத்துவம் செய்ய வேண்டிய
இன்றைய மனித வாழ்வு
படைத்தவனையும்
மறந்து
படைப்புகளையும்
வெறுத்து
மனிதன் ஆடும்
திருவிளையாடல்களைச்
சித்தரித்து காட்டுகின்றது
இன்றைய திருவழிபாட்டுக் கொண்டாட்டம்!
ஊனமானவர்களை
ஒதுக்கி வைத்துவிட்டு
போலியாய்
உரிமைக்காகப் போராடுபவர்கள்
நம்மில் எத்தனை பேர்?
மாடி வீட்டில்
அமர்ந்துக் கொண்டு
குடிசை வீட்டில்
இருப்பவர்களைக்
குறைச்சொல்பவர்கள்
நம்மில் எத்தனை பேர்?
அழுக்குச் சட்டையுடன்
வருவோரை
அர்த்தமில்லாமல் திட்டி
அவமானத்தை ஏற்படுத்துவோர்
நம்மில் எத்தனை பேர்?
பெண் அடிமைத்தனம்
ஒழிக என்று
கூக்குரல் எழுப்பி
தம் துணைவியரைத்
துண்டு துண்டாக
வார்த்தையால் வெட்டுவோர்
நம்மில் எத்தனை பேர்?
குடும்பமே உலகமென்று
குதூகலத்தை நாடாமல்
குழந்தைகளே
மகிழ்வின் நிறைவு என்று
அவர்களைக் கட்டித்தழுவாமல்
குடியோடு
குடித்தனம் நடத்துவோர்
நம்மில் எத்தனை பேர்?
விட்டுச் செல்லும்
உறவுகளை விட
தொட்டுச் செல்லும்
உறவுகளே மேல்
இவற்றின் ஆழம் புரியாமல்
உறவின் மேன்மை அறியாமல்
வாழ்வோர்
நம்மில் எத்தனை பேர்?
சுதந்திரமாய்
சுற்றித் திரிய வேண்டிய
மனித வாழ்வு
சிறைக்குள் புகலிடம் அடைந்தது
எங்ஙனம்?
இனியுள்ள காலம்
குறுகியதே
இது பவுலின் கூற்று
இரண்டாம் வாசகத்தின் ஊற்று!
பணத்தை நம்பி பாசத்தை
அடகு வைத்த நாள் போதும்
பதவியை நம்பி
சொந்தங்களைத் தொலைத்த
நாள் போதும்
பட்டங்களையும்
சட்டங்களையும் நம்பி
உறவுகளைச் சிதைத்த
தருணங்கள் போதும்
எல்லாவற்றையும்
விட்டுவிடுவோம்!
தவறு என்று தெரிந்தவுடன்
சாக்கு உடையணிந்து
ஆண்டவனைத் தேடிய
நினிவே மக்கள்
நமக்கு ஒரு முன்மாதிரி!
இது முதல்வாசகத்தின் முகவரி
கடவுளின் அழைப்புக்குச் செவிக்கொடுத்த
மக்களின் மனமாற்ற வரிகள்...
என் பின்னே வாருங்கள்
இது அழைப்பின் குரல்
நற்செய்தியில் ஒலித்த
இயேசுவின் அமுதக்குரல்
கேட்டவர்கள்
அனைத்தையும்
விட்டுவிட்டுச் சென்றார்கள்
ஆண்டவனின் வழியைத்
தேர்ந்தெடுத்தார்கள்!
இது நமக்கான நேரம்
எதை விட்டுவிட்டுச் செல்லப் போகின்றோம்?
எதையெல்லாம்
விட்டுவிட்டுச் செல்ல வேண்டும்?
சிந்திப்போம்...
அன்பை அல்ல அகந்தையை
ஆக்கத்தை அல்ல அழிவை
உயர்வை அல்ல தாழ்வை
ஏற்றத்தை அல்ல ஏமாற்றத்தை
உறவுகளை அல்ல உட்கட்சிப்பூசலை
சிந்தனைகளை அல்ல சிதைவுகளை
அப்போது
நாமும் விட்டுவிட்டுச் செல்வோம்
மனிதரைப் பிடிப்பவராய் வாழ்வோம்!
விட்டுவிட்டுச் செல்வதால் அல்ல
சேர்த்து சேர்த்து வைப்பதால்தான்
சிதைகிறது நம் வாழ்வு...
இனியாவது
சிரமமாய் எண்ணாதீர்கள்
சிந்தித்து முன்னேறுங்கள்...
இறைவனின் சீடராய் வாழுங்கள்!
-ஆமென்.
திருப்பலி முன்னுரை
இறையாட்சியை உரிமையாக்கிக் கொள்ள மனம் மாறுங்கள் என அழைப்பு
விடுக்கும் பொதுக்கால 3ஆம் ஞாயிறு திருப்பலிக்கு வந்திருக்கும்
இறைமக்களை மனம் மகிழ்வோடு வரவேற்கின்றோம்.
உன் மனம் தான் உன்னை வீழ்த்தும் ஆயுதம்; அது தெளிவாக
இருக்கும் வரை உன்னை யாரும் வீழ்த்த முடியாது என்று கவிஞன்
ஒருவன் எழுதினான். நம் மனங்கள் சரியான வழியில் தெளிவாக
பயணிக்கும் போது நம் வாழ்க்கை பிறர் வாசிக்கும் பாடமாகிறது.
இன்றைய முதல் வாசகத்தில் கடவுளின் சீற்றம் நினிவே நகர் மீது
வெளிப்பட்டு நினிவே நாற்பது நாளில் அழிக்கப்படும் என்ற
செய்தியை யோனா அறிவிக்கின்றார். நினிவே மக்கள் தங்கள் பாவச்
செயல்களுக்காக மனம் வருந்தி மனமாற்றம் அடைந்து, தங்கள் பாதையை
நோன்பின் மூலம் செம்மையாக்குகின்றனர். என் கோபமோ ஒரு நிமிடம்
என்பதை ஆண்டவர் நினிவே மக்களுக்கு உணர்த்துகின்றார். இங்கு
மக்களின் மனமாற்றம் மறுவாழ்வை பெற்றுத் தருகிறது.
இன்றைய சூழலில் மனமாற்றம் எவ்வாறு இருக்கிறது? பணத்திற்காக
மனம் மாற்றமடைகிறது. நாமும் பேசும் அர்த்தமற்ற
பேச்சுகளிலிருந்து மனம் மாறுவோம். துன்பம் வரும் போது துவண்டு
விடும் நிலையிலிருந்து மனம் மாறுவோம். ஆணவத்தை அணிந்த மனங்கள்
அன்பை வெளிப்படுத்தும் மனமாக மாறட்டும். கொடுஞ்சொற்களை சுமந்த
மனங்கள் சுகமான வார்த்தைகளை உதிர்க்கும் மனங்களாகட்டும்.
இன்றைய இரண்டாம் வாசகமும், உலகச் செல்வத்தை பயன்படுத்துவோர்
அவற்றில் முழுமையாக ஈடுபடாதவர் போல் இருக்கட்டும் என்கிறது.
இறைவன் இவ்வுலகை ஆளும் அதிகாரத்தையே தாம் படைத்த மக்களுக்குத்
தந்தார். ஆனால் நாமோ இவ்வுலகச் செல்வத்தைத் துய்க்கும்
பொருட்டு விண்ணக வாழ்வை மறக்கின்றோம். பொன் நகைகளையும்,
பட்டாடையும் அணிந்து வலம் வரும் பகட்டான வாழ்வை
விரும்புகிறோம். வறியவனின் பசியையும், திக்கற்றவனின்
துக்கங்களையும் கருணையற்ற கண்களால் காண்கிறோம். இதையே பவுலும்,
பகட்டில் ஒட்டியிருக்கும் பற்றுதலை நீக்கு என்று இரண்டாம்
வாசகத்தில் கூறுகிறார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு, மனம் மாறி நற்செய்தியை
நம்புங்கள், என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதர்களைப்
பிடிப்பவர் ஆக்குவேன் என்று சீடர்களை அழைக்கிறார்.
அன்பு செய்து வாழும் போது மனிதர்களாகிறோம். பிற மனிதர்களை
அன்பால் பிடிப்பவர் ஆகிறோம். ஆகவே அன்பு தான் பிரதானம். தம்
மனச்சான்றால் கண்டிக்கப்படாதோர் பேறுபெற்றோர் என்கிறது
சீராக்கின் ஞான நூல். எனவே மனமாற்றம் அடைவோம்; நல் மனத்தோராய்
வாழ்வோம் என்ற மனத்தோடு இத்திருப்பலியில் இணைவோம்.
மன்றாட்டுகள்
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
1. என் பின்னே வாருங்கள்! என்று அழைத்தவரே எம் இறைவா!
உம் அழைப்பை ஏற்று அனைத்தையும் துறந்து, நற்செய்தி பணியாற்றும்
எம் திருத்தந்தை, ஆயர்கள், திருச்சபை பணியாளர்களை ஏற்றுக்
கொள்ளும். மக்கள் மனம்மாற அழைப்பு விடுத்து, நல்
மேய்ப்பர்களாகி மக்களை சிறப்பாக வழிநடத்த உம் துணை வேண்டி
இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. நிலையான செல்வமே இறைவா!
இவ்வுலக வாழ்விற்கு தேவையான அழிந்து போகும் செல்வங்களில்
ஈடுபாட்டை செலுத்தும் நாங்கள், மன அமைதி, அன்பு, பகிர்ந்து
வாழ்தல் போன்ற மனித நேயப் பண்புகளை பெற்று வாழும் வரம் வேண்டி
இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் என்று அழைப்பவரே எம்
இறைவா!
உமது வார்த்தைகளை தியானிக்கும் நாங்கள் உதட்டளவில் மட்டும்
உச்சரிக்காமல், வார்த்தைகளை வாழ்வாக்கி நல் மனத்துடன் வாழ்ந்து
உமக்கு சான்று பகரும் மக்களாக எங்களை மாற்றியருள இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
4. மனந்திரும்பும் பாவியை பரிவோடு ஏற்றுக்கொள்பவரே எம் இறைவா!
பாவ வாழ்வில் சிக்கி, போதை பழக்கம், சமூக அக்கறையின்மை,
உறவுகளிலிருந்து பிரிந்து தவறான வழியில் பயணிக்கும் இன்றைய
இளைய சமுதாயத்தினரை உம் அன்பில் அரவணைத்து, அவர்களுக்கு
புதுவாழ்வு தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. கருணையின் தெய்வமே இறைவா!
எங்கள் பகுதியில் சிறந்த இயற்கைச் சூழலைத் தந்து விவசாயம்
மேம்படவும், பொருளாதார முன்னேற்றம் பெறவும், குடும்பங்களில்
மகிழ்ச்சி, சமாதானம் பெருகவும் உமதருள் வேண்டி இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
நன்றி: ஆசிரியை. திருமதி. ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ்,
பாவூர்சத்திரம். |
|