|
year B |
|
ஆண்டின்
தவக்காலம் 3ஆம் ஞாயிறு |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
திருச்சட்டம் மோசே வழியாக அளிக்கப்பெற்றது.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம்
20: 1-17
மோசே மக்களிடம் கூறியது: கடவுள் அருளிய வார்த்தைகள் இவையே:
நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; அடிமை வீடாகிய எகிப்து
நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர். என்னைத் தவிர வேறு
தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது.
மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில்
உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம். நீ
அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில்
உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக் கொள்ளமாட்டேன்;
என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல்
மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் தண்டித்துத் தீர்ப்பேன்.
மாறாக என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு
ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன். உன் கடவுளாகிய ஆண்டவரின்
பெயரை வீணாகப் பயன்படுத்தாதே; ஏனெனில், தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவரை
ஆண்டவர் தண்டியாது விடார். ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில்
கருத்தாயிரு.
ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலையையும் செய்வாய். ஏழாம்
நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வு நாள்.
எனவே அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப்
பெண்ணும் உன் கால்நடைகளும் உன் நகர்களுக்குள் இருக்கும் அன்னியனும்
யாதொரு வேலையும் செய்ய வேண்டாம்.
ஏனெனில், ஆண்டவர் ஆறு நாள்களில் விண்ணுலகையும், மண்ணுலகையும்,
கடலையும், அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்.
இவ்வாறு ஆண்டவர் ஓய்வுநாளுக்கு ஆசிவழங்கி அதனைப் புனிதப்படுத்தினார்.
உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ்நாள்கள்
நீடிக்கும்படி, உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட. கொலை
செய்யாதே.
விபசாரம் செய்யாதே. களவு செய்யாதே. பிறருக்கு எதிராகப்
பொய்ச்சான்று சொல்லாதே. பிறர் வீட்டைக் கவர்ந்திட விரும்பாதே;
பிறர் மனைவி, அடிமை, அடிமைப்பெண், மாடு, கழுதை, அல்லது பிறர்க்குரியது
எதையுமே கவர்ந்திட விரும்பாதே.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
அல்லது
குறுகிய வாசகம்
திருச்சட்டம் மோசே வழியாக அளிக்கப்பெற்றது.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 20: 1-3,7-8,12-17
மோசே மக்களிடம் கூறியது: கடவுள் அருளிய வார்த்தைகள் இவையே:
நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; அடிமை வீடாகிய எகிப்து
நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர். என்னைத் தவிர வேறு
தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது. உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை
வீணாகப் பயன்படுத்தாதே; ஏனெனில், தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவரை
ஆண்டவர் தண்டியாது விடார். ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில்
கருத்தாயிரு.
உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ்நாள்கள்
நீடிக்கும்படி, உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட. கொலை
செய்யாதே. விபசாரம் செய்யாதே. களவு செய்யாதே. பிறருக்கு எதிராகப்
பொய்ச்சான்று சொல்லாதே. பிறர் வீட்டைக் கவர்ந்திட விரும்பாதே;
பிறர் மனைவி, அடிமை, அடிமைப்பெண், மாடு, கழுதை, அல்லது பிறர்க்குரியது
எதையுமே கவர்ந்திட விரும்பாதே.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா: 19: 7. 8. 9. 10 (பல்லவி: யோவா 6: 68)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடமே
உள்ளன.
7 ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர்அளிக்கின்றது.
ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது.
பல்லவி
8 ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன.
ஆண்டவரின் கட்டளைகள் ஒளி மயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன.
பல்லவி
9 ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும்
நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை
முற்றிலும் நீதியானவை. பல்லவி
10 அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை;
தேனினும், தேனைடையினின்று சிந்தும் தெளி தேனினும் இனிமையானவை.
பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவையே பறைசாற்றுகிறோம்.
அவரது சிலுவை யூதருக்குத் தடைக்கல்; அழைக்கப்பட்டவருக்கோ கடவுளின்
ஞானம்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து
வாசகம் 1: 22-25
சகோதரர் சகோதரிகளே, யூதர்கள் அரும் அடையாளங்கள் வேண்டும் என்று
கேட்கிறார்கள்; கிரேக்கர் ஞானத்தை நாடுகிறார்கள்.
ஆனால் நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்பற்றிப் பறைசாற்றுகிறோம்.
அச்சிலுவை யூதருக்குத் தடைக் கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாயும்
இருக்கிறது.
ஆனால் அழைக்கப்பட்டவர்கள், யூதரானாலும் கிரேக்கரானாலும், அவர்களுக்குக்
கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார். ஏனெனில்
மனித ஞானத்தை விடக் கடவுளின் மடமை ஞானம் மிக்கது; மனித வலிமையைவிட
அவருடைய வலுவின்மை வலிமை மிக்கது.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 3: 16
அல்லேலூயா, அல்லேலூயா!
தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல்
நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக்
கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி
வாசகம்
=================================================================================
இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி
எழுப்புவேன்.
தூயயோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-25
அக்காலத்தில் யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால்
இயேசு எருசலேமுக்குச் சென்றார்; கோவிலில் ஆடு, மாடு, புறா
விற்போரையும் அங்கே உட்கார்ந்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்;
அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும்
கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடு மாடுகளையும் விரட்டினார்; நாணயம்
மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும் கவிழ்த்துப்
போட்டார்.
அவர் புறா விற்பவர்களிடம், "இவற்றை இங்கிருந்து எடுத் துச்
செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்"
என்று கூறினார்.
அப்போது அவருடைய சீடர்கள், "உம் இல்லத்தின்மீதுள்ள ஆர்வம் என்னை
எரித்து விடும்" என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவு
கூர்ந்தார்கள்.
யூதர்கள் அவரைப் பார்த்து, "இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை
உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன?" என்று
கேட்டார்கள்.
இயேசு மறுமொழியாக அவர்களிடம், "இக்கோவிலை இடித்துவிடுங்கள்.
நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்" என்றார்.
அப்போது யூதர்கள், "இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள்
ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பிவிடுவீரோ?"
என்று கேட்டார்கள். ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப்பற்றியே
பேசினார். அவர் இறந்து உயிருடன் எழுப்பப்பட்டபோது அவருடைய சீடர்
அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை நினைவுகூர்ந்து மறைநூலையும் இயேசுவின்
கூற்றையும் நம்பினர்.
பாஸ்கா விழாவின்போது இயேசு எருசலேமில் இருந்த வேளையில் அவர்
செய்த அரும் அடையாளங்களைக் கண்டு பலர் அவரது பெயரில் நம்பிக்கை
வைத்தனர்.
ஆனால் இயேசு அவர்களை நம்பிவிடவில்லை; ஏனெனில் அவருக்கு அனைவரைப்பற்றியும்
தெரியும். மனிதரைப் பற்றி அவருக்கு யாரும் எடுத்துச்சொல்லத்
தேவையில்லை. ஏனெனில் மனித உள்ளத்தில் இருப்பதை அவர் அறிந்திருந்தார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை
இயேசு, ஆலயத்தில் நாணயம் மாற்றுவோரையும், புறா விற்போரையும்
சாட்டை எடுத்து துரத்தி விட்டார்" என்ற இந்த நிகழ்வு, நம்மிலே
இயேசுவிடம் இருந்த துணிச்சலையும், பொறுப்புணர்வையும் உணர
வைக்கின்றது. இன்று, நாம், நம் கண்முன் எத்தனை அவலங்கள், அட்டூழியங்கள்,
அராஜகங்கள் அரங்கேறினாலும்,அதைக் கண்டும் காணாதவர்;போல சென்று
விடுகின்றோம். யார் எப்படி போனால் என்ன, நான் நன்றாக இருந்தால்
போதும், என் காரியம் நடந்;தால் போதுமென்ற என்ற சுயநலப்போக்கு
நம் ஒவ்வொருவரிலும் மேலோங்கிக் காணப்படுகின்றது. "யாராவது, எவராவது
தட்டிக் கேட்பார்கள்", "நமக்கேன் வீண் வம்பு" என கோழைகளாக ஒதுங்கி
விடுகிறோம். அந்த யாரோ ஒருவராக நாம்; ஏன் இருக்கக்கூடாது" என்;ற
மனநிலை நம் ஒவ்வொருவரிலும் கலக்கின்றபோதுதான், துணிச்சல் பிறக்கின்றபோதுதான்
இந்தச் சமூகம், நாடு நல்வழியில் பயணப்படும்.
"கோழையாய் தினமும் அஞ்சி, அஞ்சி வாழ்வதைவிட, துணிச்சலுடன் எதிர்த்து
சாவதே மேல்"
- இது நம் அண்டை நாடான ஈழத்தில், நம் மக்கள் கற்றுத்
தந்த உயர்ந்த பாடம் இதுதான். அத்தகைய மனநிலை நமதாகும்போதுதான்
நம் சுற்றமும், சமூகமும், நாடும் முன்னேற்றம் பெற முடியும் என்பது
தெளிவு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 1
=================================================================================
தூய்மைச் சாட்டை
புறத் தூய்மை நீரால் அமையும் அகத் தூய்மையோ
வாய்மையினால் அமையும் என்பதனை இயேசு இன்றைய நற்செய்தியில் தன்
செயல் மூலம் காட்டுகிறார். எருசலேம் கோவிலைத் தூய்மைப்படுத்துகிறார்.
அவருக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அவரது வாழ்நாளில் பலமுறை
எருசலேம் தேவாலயத்துக்குச் சென்றிருந்தாலும் இன்று அதனைத் தட்டிக்
கேட்கின்றார். ஒருவர் செய்யும் செயலைத் தவறு என சுட்டிக்காட்டுவதற்கு
துணிவும் தைரியமும் அதிகம் தேவை . அதிலும் சுட்டிக்காட்டுபவருக்கு
என்று ஒரு நிலை வேண்டும். அப்போது தான் அவர் கூறும் கருத்து,
தவறு செய்பவன் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இல்லை என்றால்
அதனை யாரும் ஒரு பொருட்டாக கூட ஏற்கமாட்டார்கள்.
உதாரணத்திற்கு நமது நடைமுறை வாழ்வையே எடுத்துக் கொள்வோம். நாம் ஓர் ஆலயம் அல்லது பொது இடத்தில் வணிகம் செய்யும் வியாபாரிகளை /வணிகர்களை
இடைக்கச்சை கொண்டு அடித்தோம் என்று வைத்துக் கொள்வோம். என்ன
செய்வார்கள் நம்மை?
நாம் ஒருவரை அடித்தால் அவர்கள் பலர் சேர்ந்து நம்மை அடிப்பார்கள்
அல்லது காவல் நிலையத்திற்கு நம்மைக் கையோடு அழைத்துச் செல்வார்கள்.
அல்லது புத்தி பேதலித்துவிட்டது என்று முத்திரை குத்தி அனுப்பிவிடுவர்.
இதில் மூன்றில் ஒன்று கட்டாயம் நடக்கும்.
இயேசுவின் வாழ்வில் அவர் பிறந்த சில நாட்களில் விருத்தசேதனம்
செய்ய எருசலேம் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது" பிற இனத்தார்க்கு
இருளகற்றும் ஒளி" என சிமியோன் இறைவாக்கினரால் புகழப்பட்டார்.
12 வயதில் பெற்றோருடன் திருவிழா கொண்டாடச் சென்றபோது அறிவார்ந்த
கேள்விகள் கேட்டும், விளக்கங்கள் அளித்தும் அறிஞர்களால் பாராட்டப்பெற்றார்.
இறுதியாக இப்போது சீடர்களுடன் பாஸ்கா விழா கொண்டாடச் சென்ற நேரத்தில்
கோவிலின் தூய்மைக்காக சாட்டை எடுக்கிறார். இப்போது என்ன
பேசினார்கள் மக்கள்?
இதுவரை நன்றாகத் தானே இருந்தார். என்ன ஆயிற்று இவருக்கு? இவர்
பெற்றொர் கூட நம்மிடம் தானே மாடப்புறாக் குஞ்சுகளை வாங்கிக்
காணிக்கையாகக் கொடுத்தனர். இப்போது மட்டும் ஏன் இப்படி நடந்து
கொள்கிறார்? என்று சிலர் பேசினர். ஆனால் அதையும் தாண்டி "இவர்
மெசியா, அற்புதங்கள் பல செய்பவர். நோயாளிகளைக் குணப்படுத்துபவர்.
பேய்களை அடித்து விரட்டுபவர் என்றெல்லாம் கேள்விப்பட்டு அவரைப்
பின்தொடர்ந்த மக்கள் பலர், இவர் நல்லவர் இவர் இப்படி செய்தால்
இதில் ஏதோ ஒரு நன்மை இருக்கிறது" என்று நம்பினர். இல்லாவிட்டால்
அனைவரும் மீண்டும் அவரைத்தேடி சென்றிருக்க மாட்டார்கள். ஆம் அந்த
ஒரு நம்பிக்கையை மக்களிடத்தில் விதைக்கத் தான் இயேசு இத்தனை
நாள் காத்திருந்திருப்பார் என்று எண்ணுகிறேன். தவறைச் செய்பவன்
யாராக இருந்தாலும் அதைச் சுட்டிகாட்டுபவன் சரியானவனாக இருக்க
வேண்டும். இல்லையெனில் எதிர்ப்புக் குரல் எடுபடாதக் குரலாகப்
போயிருக்கும். இன்று நாமும் நமது வாழ்வில் பலவற்றிற்கு எதிர்ப்பு
தெரிவிக்கிறோம் நாம் தெரிவிக்கும் எதிர்ப்பு நியாயமானது தான்
ஆனால் நாம் நின்று சொல்லும் இடம் தான் சரியானதா என்று பார்க்க
வேண்டும். கூரைக்கு அடியில் நின்று கோழி கொக்கரித்தால் ஊர் எழும்பாது
மாறாக கூரைக்கு மேல், வேண்டுமானால் அதைவிட உயரமான இடத்தில்
நின்று கொக்கரித்தால் மட்டுமே தூங்குபவர்களை துயில் எழும்பச்செய்ய
முடியும். இயேசு காலம் வரும் வரைக் காத்திருந்தார். தன்னை யார்
என்று காட்டினார். பின் தன் செயல்கள் மூலம் தான் யார் என
வெளிப்படுத்தினார். சாதாரணத் தொழுகைக் கூடத்தில் தொடங்கவில்லை. எருசலேம் தேவாலயத்தில் தொடங்குகிறார். இப்படிச்செய்வதனால்
தனக்கு ஆபத்து என்பதை நன்கு உணர்ந்திருந்தும் அவ்வாறு செயல்படுகிறார்.
ஏனெனில் சலித்துக் கொள்பவன் தான் ஒவ்வொரு வாய்ப்பிலும் ஆபத்தை
மட்டுமே காண்பான். இயேசுவோ சாதிப்பவர் எனவே ஒவ்வொரு ஆபத்திலும்
வாய்ப்பினைக் கண்டு கொள்கிறார்.
என் தந்தையின் இல்லத்தை சந்தை ஆக்காதீர்கள் என உரக்கச் சொல்லி
தன் உரிமையை உலகறியச் செய்கின்றார். பழைய ஏற்பாட்டில் அகத்தூய்மை
வாழ்க்கை வாழ யாவே கடவுள் பத்து கட்டளைகளை இஸ்ரயேல் மக்களுக்குக்
கொடுக்கிறார். அகத்தூய்மையோடு வாழ வேண்டும் என அறிவுறுத்தும்
தந்தை கடவுளின் இல்லமே புறத்துய்மையின்றி இருப்பது கண்டு
பொங்கி எழுகிறார் புதிய ஏற்பாட்டு இயேசு. தனது தூய்மைச் செயலை
உடனடியாக செய்யத் துவங்குகிறார்.
கயிற்றுச்சாட்டை: சிறு பிள்ளையில் தோசை சுடும் கரண்டியால் அடிவாங்கிய
அனுபவம் எனக்கு பல உண்டு. ஏதாவது தவறு செய்தால் எடு அந்த கரண்டிய
என்று சொன்னாலோ அல்லது கையில் எடுத்து வைத்திருந்தாலோ போதும்
எங்கும் நகர மாட்டோம். நான் மட்டுமல்ல என் உடன் பிறப்புக்களும்
அப்படியே .அது ஒரு வகையான தூய்மையான பயம் என்றே கூறலாம். இயேசு
கயிற்றினால் ஒரு சாட்டை பின்னி அவர்களை விரட்டுகிறார். இத்தகைய
தூய்மையான ஒரு பயத்தையே அவர்களிடத்தில் வர வைக்கிறார். சாட்டை
கொண்டு அடித்தாரா என்று தெரியவில்லை. ஆனால் விரட்டுகிறார்.
பிறர் பணத்தில் பாதி லாபம் பார்த்து அமர்ந்து பணம் சம்பாதிக்கும்
நாணயம் மாற்றுவோரின் மேசைகளைக் கவிழ்த்துப் போடுகிறார். தாங்கள்
வளர்த்த ஆடு மாடு கோழி புறா போன்றவற்றை விற்போரிடம் அதை எடுத்துப்போகச்சொல்கிறார்.
கோபமே கொண்டாலும் இடம் அறிந்து செயல்படுகிறார்.
இன்றைய நற்செய்தியில் இயேசு நமக்கு விடுக்கும் அழைப்பு செய்தி
இதுதான்,
-
தவறைச் சுட்டிக் காட்டத் தயங்காதே.
-
எதிர்ப்பே ஆனாலும் சரியான இடத்திலிருந்து தெரிவி.
-
தூய்மையான பயம் கொள்.
அபாயம் வரும் என்று பயந்து கொண்டிருப்பதை விட அதை எதிர்நோக்கி
சந்திப்பதே நல்லது என உணர்ந்து வாழ்வோம். அகத்தூய்மையை
விரும்பும் இறைவன் புறத்தூய்மையையும் விரும்புகிறார் என்பதை நன்கு
உணர்ந்து செயல்படுவோம். நமது உள்ளங்களில் இருக்கும் தேவையற்ற
குப்பைகளை இயேசுவின் துணிவு கருணை என்னும் சாட்டை கொண்டு விரட்டுவோம். இறைத்துணை என்றும் நம்மோடும் நம் குடும்பத்தினர் அனைவரோடும்
இருப்பதாக ஆமென்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 2
=================================================================================
"இயேசு கயிறுகளால் சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும்
கோவிலிலிருந்து துரத்தினார்" (யோவான் 2:15)
இயேசு "கோவிலைத் தூய்மைப் படுத்திய" நிகழ்ச்சியை எல்லா நற்செய்தியாளரும்
பதிவுசெய்துள்ளனர். ஆயினும், யோவான் மட்டுமே இயேசு கோவிலில்
சென்று அங்கே வியாபாரம் செய்தவர்களையும் நாணயம் மாற்றுவதில் ஈடுபட்டிருந்தோரையும்
துரத்திய நிகழ்ச்சி இயேசுவின் பணிக்காலத் தொடக்கத்தில் நிகழ்ந்ததாகக்
கூறுகிறார். மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய பிற நற்செய்தி ஆசிரியர்கள்
இந்நிகழ்ச்சி இயேசுவின் பணிக்கால இறுதியில் நடந்ததாகவும் உடனேயே
இயேசுவின் எதிரிகள் அவரைக் கொலைசெய்யத் திட்டம் தீட்டியதாகவும்
குறிப்பிடுகின்றனர். எருசலேம் கோவில் யூதர்களுக்கு மிகப் புனிதமான
இடம். அங்கு மட்டுமே யாவே கடவுளுக்குப் பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன.
அங்குதான் கடவுளின் பிரசன்னம் உண்டு என அவர்கள் நம்பினார்கள்.
அத்தகைய தூய்மை நிறைந்த இடம் "சந்தை" போல் ஆகிவிட்டதைக் கண்டு
வருந்துகிறார் இயேசு. கடவுளின் இல்லமே கோவில் என்றால் கோவிலை
அவமதிப்பது கடவுளையே அவமதிப்பதாகும் என இயேசு கூறினார். ஆனால்,
இயேசு கோவிலைத் தூய்மைப்படுத்தியதை ஒரு சட்ட மீறலாகக்
காண்கிறார்கள் அவருடைய எதிரிகள். அப்போது இயேசு "இக்கோவிலை இடித்துவிடுங்கள்.
நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்" என்றார். தம்
உடலாகிய கோவிலைப் பற்றியே இயேசு இவ்வாறு கூறினார் என யோவான்
குறிப்பிடுகிறார் (யோவா 2:21).
இயேசுவின் உடலே கோவில் என்பதன் பொருள் என்ன? இயேசுவிடத்தில்
கடவுள் உறைகின்றார். எனவே எருசலேம் கோவில் அழிந்துபோனால் அது
இருந்த இடத்தில் இயேசு என்னும் கோவில் எழும்பும். இயேசு
சாவிலிருந்து உயிர்பெற்று எழுவார். இனிமேல் கடவுளை வழிபடுவோர்
அக்கடவுளை இயேசுவில் கண்டுகொள்வர். இந்த ஆழ்ந்த உண்மையை இயேசு
"கோவிலைத் தூய்மைப் படுத்திய" நிகழ்ச்சி வழியாக உணர்த்தியதாக
யோவான் பதிவுசெய்துள்ளார். இன்று நாம் கடவுளை எங்கே வழிபடுவது?
நம் கோவில்களில் நற்கருணை உள்ளது. அதில் இயேசுவே உடனிருக்கிறார்
என்பது நம் நம்பிக்கை. ஆயினும் கடவுளின் இல்லம் வெறும் கட்டடம்
அல்ல. இயேசுவே கடவுளின் இல்லம். இயேசுவை ஏற்போர் அவரில் உறைகின்ற
கடவுளை ஏற்பர். இயேசுவை ஏற்போர் இவ்வுலகில் இயேசுவின் சாயலாக
விளங்குகின்ற மனிரை ஏற்பர்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 3
=================================================================================
இயேசு கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்ந்திருந்த
நாணயம் மாற்றுவோரையும் கண்டார்; அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை
பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்"
(யோவான் 2:14-15)
-- "கோவிலைத் தூய்மைப்படுத்துதல்" என அழைக்கப்படும் நிகழ்ச்சியை
நான்கு நற்செய்தியாளர்களும் பதிவுசெய்துள்ளனர் (காண்க: மத்
21:12-13; மாற் 11:15-17; லூக் 19:45-46). ஆனால் மற்ற மூன்று
நற்செய்தியாளர்களும் இந்நிகழ்ச்சி இயேசுவின் பணிக்காலத்தின் இறுதிக்
கட்டத்தில் நடந்ததாகக் கூறுவர். யோவான் மட்டும் இயேசுவின் பணிக்காலத்தின்
தொடக்கத்திலேயே இந்நிகழ்ச்சி நடந்ததாகக் குறித்துள்ளார். ஏன்
இந்த வேறுபாடு? யோவான் நற்செய்தி ஒரு குறிப்பிட்ட இறையியல்
பின்னணியில் எழுதப்பட்டது. அதாவது, இயேசுவின் பணி தொடங்கிய
நாளிலிருந்தே அவரை எதிர்த்தவர்கள் இருந்தார்கள்; இயேசு தம் பணியைத்
தொடங்கிய நாளிலிருந்தே தாம் ஒரு புதிய ஒழுங்குமுறையை இவ்வுலகில்
நிலைநாட்ட வந்ததாக அறிவிக்கிறார். அவர் கானாவில் திருமண நிகழ்ச்சியில்
கலந்துகொண்டு, தண்ணீரைச் சுவைமிகு திராட்சை இரசமாக மாற்றினார்.
யூத சமயம் என்னும் பழைய ஒழுங்குமுறை மாறி ஒரு புதிய ஒழுங்குமுறை
விரைவில் வருகிறது என அறிவித்தார். இயேசு கொணர்வது சுவைமிகுந்த
திராட்சை இரசம். அது மக்களுக்கு மகிழ்ச்சி தருகின்ற ஒன்றாகும்.
மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியை அறிவிக்கவே இயேசு வந்தார்.
தொடர்ந்து, யூத சமயத்தின் ஒரு முக்கிய அம்சமாக விளங்கிய எருசலேம்
கோவிலில் இயேசு தம் அதிகாரத்தை நிலைநாட்டுகிறார். அக்கோவிலை இயேசு
"என் தந்தையின் இல்லம்" என அழைக்கின்றார் (யோவா 2:16). அந்த
இல்லம் தூய்மையானது. அதை ஒரு சந்தைபோல ஆக்கிவிட்டவர்களை இயேசு
கடிந்துகொள்கிறார்.
-- மேலும் இயேசு தம்மையே எருசலேம் கோவிலுக்கு ஒப்பிட்டுப்
பேசுகின்றார்: "தம் உடலாகிய கோவில் பற்றி அவர் பேசினார்"
(யோவா 21). கோவில் என்பது கடவுள் உறைகின்ற இடம் என்றால் இயேசு
தம் உடலில் (தம்மில்) கடவுள் உறைகின்றார் என்றுரைத்தார். இனிமேல்
கடவுளைத் தேடி மக்கள் கோவிலுக்குச் செல்ல வேண்டியதில்லை; கடவுள்
தம் மகன் இயேசுவிடம் முழுமையாக உறைகின்றார். இதைக் கேட்ட "யூதர்கள்"
கோபமுற்றனர். இயேசு, "இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான்
மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்" என்று கூறியதைக்
கேட்ட அவர்கள் அதிர்ச்சியடைந்திருக்க வேண்டும். எனவேதான் தங்கள்
கோவிலின் பெருமையை அவர்கள் எடுத்துரைத்தார்கள். எருசலேம்
கோவிலைப் புதுப்பித்து விரிவுபடுத்தும் பணி கி.மு. 20-19 அளவில்
தொடங்கியது. அப்பணி கி.பி. 60களில் தான் நிறைவடைந்தது. பணி தொடங்கிய
ஆண்டிலிருந்து "நாற்பத்தாறு ஆண்டுகள்" (காண்க: யோவா 2:20) ஆகும்போது
இயேசு "கோவிலைத் தூய்மைப்படுத்தினார்" என்றால் அது கி.பி. 28
அளவில் நிகழ்ந்திருக்க வேண்டும். இயேசுவின் உடல் கடவுள் உறைகின்ற
கோவில் என்னும் உண்மையைச் சீடர் இயேசு சிலுவையில் இறந்து அதன்
பின் உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சியின் ஒளியில் முழுமையாக அறிந்துகொண்டார்கள்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 4
=================================================================================
அடிமை வீடா? தந்தையின் இல்லமா?
விடுதலைப் பயணம் 20:1-17
1 கொரிந்தியர் 1:22-25
யோவான் 2:13-25
முதல் ஏற்பாட்டில் எங்கெல்லாம் எகிப்து பற்றிய வர்ணனை வருகிறதோ
அங்கெல்லாம் பெரும்பாலும் விவிலிய ஆசிரியர் "அடிமை வீடாகிய
எகிப்து நாடு" என்று வர்ணனை செய்கின்றார். இவ்வாறாக, எகிப்து
என்பது இஸ்ரயேல் மக்களின் அடிமைத்தனத்தின் அடையாளமாக
இருக்கிறது. அடிமை வீடாகிய எகிப்தில் அவர்கள் பாரவோனுக்கு
அடிமைகளாக இருந்தனர். வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள்
நுழைந்தவுடன் அவர்கள் யாவே இறைவனின் உரிமை மக்களாக
மாறுகின்றனர். ஆக, அடிமை வீட்டிலிருந்து அவர்கள் தந்தையின்
இல்லத்திற்குக் கடந்து செல்கின்றனர்.
ஆனால், ஒருவர் தந்தையின் இல்லத்திற்குள் நுழைய வேண்டுமென்றால்
அவர் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று
பத்துக்கட்டளைகளைப் பட்டியலிடுகின்றது இன்றைய முதல் வாசகம்.
இந்த பத்துக் கட்டளைகள் சொல்வது ஒற்றைச் சொல்தான்: "புனிதம்."
"புனிதம்" என்ற வார்த்தையை மையமாக வைத்து பத்துக்கட்டளைகளை
பின்வருமாறு வகைப்படுத்தலாம்:
கட்டளை 1: கடவுள் என்னும் புனிதம்
கட்டளை 2: வார்த்தை என்னும் புனிதம்
கட்டளை 3: நேரம் என்னும் புனிதம்
கட்டளை 4: அதிகாரம் என்னும் புனிதம்
கட்டளை 5: உயிர் என்னும் புனிதம்
கட்டளை 6: அன்பு என்னும் புனிதம்
கட்டளை 7: உரிமை என்னும் புனிதம்
கட்டளை 8: உண்மை என்னும் புனிதம்
கட்டளை 9: திருப்தி என்னும் புனிதம்
கட்டளை 10: நிறைவு என்னும் புனிதம்
இந்த 10 புனித வாயில்களில் நாம் நுழையும்போது தந்தையின்
இல்லத்திற்குச் சென்றுவிடலாம்.
அடிமை வீடா? தந்தையின் இல்லமா?
- எதைத் தேர்ந்து கொள்வது என்ற
கேள்வி இன்றைய நற்செய்தி வாசகத்தில் தொடர்கிறது. இயேசு
எருசலேம் ஆலயத்தை தூய்மைப்படுத்தும் நிகழ்வு நான்கு நற்செய்தி
நூல்களிலும் நாம் காணும் ஒன்று. யோவான் இந்த நிகழ்வை நற்செய்தி
நூலின் தொடக்கத்திலும், மற்றவர்கள் ஏறக்குறைய இறுதியிலும்
பதிவு செய்கின்றனர்.
எருசலேம் ஆலயம் அடிமை வீடாக இருக்கிறது. எப்படி?
இயேசுவின் சமகாலத்தில் எருசலேம் ஆலயம் ஒரு வியாபார ஸ்தலமாக
மாறிவிட்டது. கடவுளையும், கடவுள் சார்ந்தவற்றையும் காசாக்கும்
வித்தைகள் கற்றிருந்தவர்களின் கருவூலமாக ஆலயம் இருந்தது.
இவ்வாறாக, மக்களையும், கடவுளையும் இணைக்கவேண்டிய ஆலயம்
இவ்விருவருக்கும் இடையே பெரிய பொருளாதார, சமூக, சமய, அரசியல்
பிளவை ஏற்படுத்தியிருந்தது.
மேலும், இவ்வாறாக இவ்வாலயம் இருந்தததால் இவ்வாலயம் சுயநலம்,
குறுக்குவழி வணிகம், தாறுமாறான லாபம், ஏமாற்றுவேலை, இலஞ்சம்,
ஊழல் என்னும் காரணிகளுக்கு அடிமைகளாக இருந்தவர்களின் வீடாக
மாறிவிட்டது. இயேசு இதைத் தூய்மைப்படுத்துகிறார்?
"நீர் யார் இதைச் செய்ய?" என்று யூதர்கள் கேட்டபோது, தன்னையே
"தந்தையின் இல்லம்" என்னும் கோவில் என்று அடையாளம்
காட்டுகின்றார்.
ஆக, அடிமைத்தன வீட்டை அழிக்க தந்தையின் இல்லமாக வாழும்
ஒருவரால் தான் முடியும்.
இன்று நான் என்னையே கேட்டுப்பார்க்கிறேன்:
எப்போதெல்லாம் என் உடல் என்னும் ஆலயம் அடிமைத்தன வீடாக
இருந்தது? நான் எவற்றிற்கெல்லாம் அடிமையாக இருந்தேன்?
அல்லது என் உடல் தந்தையின் இல்லமாகவே இருந்திருக்கிறதா?
இல்லம் வலுவில்லாமல் இருந்தாலும் அது தந்தையின் இல்லமாக
இருந்தால் அது வலுவுள்ளது என்பதை, "மனித வலிமையைவிட அவரின்
வலுவின்மை வலிமை மிக்கது" என்கிறார் தூய பவுல்.
இறுதியாக,
என் உடல் தந்தையின் இல்லம் என்பதை அறிவுறுத்துகின்ற இயேசு இந்த
உடலில் உறையும் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும்
தூய்மைப்படுத்துகின்றார். இவற்றின்மேல் நாம் உரிமை கொண்டிருக்க
அழைக்கப்படுகிறோமே தவிர, இவற்றின் அடிமைகளாக, இவற்றிற்கு நம்மை
விற்றுவிட அல்ல.
ஒவ்வொரு கட்டளை சொல்லும் புனிதம் இந்த இல்லத்தின் வாழ்வாக நான்
என்ன செய்கிறேன்?
வலுவான ஒரு வீடாக என் உடல் இருந்து அது அடிமைத்தனத்தின் வீடாக
இருப்பதைவிட, வலுவற்றதாயினும் அது தந்தையின் இல்லமாக இருந்தால்
சால்பு.
(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)
Archdiocese of Madurai |
|