Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                    year 1  
         திருவருகைக்காலம் 3ஆம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================

கடவுளே வந்து உங்களை விடுவிப்பார்
.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 35: 1-6a, 10

அந்நாள்களில்

பாலைநிலமும் பாழ்வெளியும் அகமகிழும்; பொட்டல் நிலம் அக்களிப் படைந்து, லீலிபோல் பூத்துக் குலுங்கும். அது வளமாய்ப் பூத்துக் குலுங்கி மகிழ்ந்து பாடிக் களிப்படையும்; லெபனோனின் எழில் அதற்கு அளிக்கப் படும்; கர்மேல், சாரோனின் மேன்மை அதில் ஒளிரும்; ஆண்டவரின் மாட்சியையும் நம் கடவுளின் பெருமையையும் அவர்கள் காண்பார்கள்.

தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள்; தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள். உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, "திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்; இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்; அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார்."

அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, கால் ஊனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்;

ஆண்டவரால் விடுவிக்கப்பட்டோர் திரும்பி வருவர்; மகிழ்ந்து பாடிக்கொண்டே சீயோனுக்கு வருவர்; அவர்கள் முகம் என்றும் உள்ள மகிழ்ச்சியால் மலர்ந்திருக்கும்; அவர்கள் மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைவார்கள்; துன்பமும் துயரமும் பறந்தோடும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 146: 7. 8. 9-10 (பல்லவி: எசா 35:4) Mp3
=================================================================================
 

பல்லவி: ஆண்டவரே, எங்களை மீட்க வந்தருளும்.

அல்லது: அல்லேலூயா.
7
ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். - பல்லவி

8
ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். - பல்லவி

9
ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார்; அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார்.
10
சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். அல்லேலூயா! - பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================

உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள்; ஏனெனில் ஆண்டவரின் வருகை நெருங்கி வந்துவிட்டது.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 7-10

சகோதரர் சகோதரிகளே, ஆண்டவரின் வருகைவரை பொறுமையோடு இருங்கள். பயிரிடுபவரைப் பாருங்கள். அவர் நிலத்தின் நல்ல விளைச்சலை எதிர்பார்த்து முன்மாரியும் பின்மாரியும் பொழியுமளவும் பொறுமையோடு காத்திருக்கிறார். நீங்களும் பொறுமையோடு இருங்கள். உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள். ஏனெனில் ஆண்டவரின் வருகை நெருங்கி வந்துவிட்டது.

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகாதவாறு, ஒருவர் மற்றவருக்கு எதிராக முறையிடாதீர்கள். இதோ நடுவர் வாயிலில் நின்றுகொண்டிருக்கிறார். அன்பர்களே, நீங்கள் துன்பத்தைத் தாங்குவதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பதிலும் ஆண்டவரின் பெயரால் பேசிய இறைவாக்கினரை உங்களுக்கு மாதிரிகளாகக் கொள்ளுங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
எசா 61: 1ac

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உள்ளது; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தி அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.
 
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================

வர இருப்பவர் நீர்தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 2-11

அக்காலத்தில்

யோவான் சிறையிலிருந்தபோது மெசியாவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத் தம் சீடர்களை அவரிடம் அனுப்பினார். அவர்கள் மூலமாக, "வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?" என்று கேட்டார்.

அதற்கு இயேசு மறுமொழியாக, "நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள். பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக்கொள்வோர் பேறுபெற்றோர்" என்றார்.

அவர்கள் திரும்பிச் சென்றபோது இயேசு மக்கள் கூட்டத்திடம் யோவானைப்பற்றிப் பேசத் தொடங்கினார்: "நீங்கள் எதைப் பார்க்கப் பாலைநிலத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா? இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடையணிந்த ஒரு மனிதரையா? இதோ, மெல்லிய ஆடையணிந்தோர் அரச மாளிகையில் இருக்கின்றனர். பின்னர் யாரைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினரைவிட மேலானவரையே என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

இதோ! நான் என் தூதனை உமக்கு முன் அனுப்புகிறேன். அவர் உமக்கு முன் உமது வழியை ஆயத்தம் செய்வார் என்று இவரைப்பற்றித்தான் மறைநூலில் எழுதியுள்ளது. மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு

இன்றைய வாசகங்கள்:-
எசாயா 35:1-6,10
யாக்கோபு 5:7-10
மத்தேயு 11:2-11

6. மறையுரைச் சிந்தனை - அருள்பணி மரிய அந்தோணிராஜ் . அருள்வாக்கு.காம்

"பொறுமையோடு இருங்கள்"
நீங்கள் கற்கவேண்டிய முதற்பாடம்:
ஒரு கல்லூரியில் உரை நிகழ்த்துவதற்காகத் துறவி ஒருவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். குறிப்பிட்ட நாளில், துறவியின் உரையைக் கேட்பதற்காகக் கல்லூரியில் இருந்த அரங்கமே நிரம்பி வழிந்தது.

காலை ஒன்பது மணிக்குத் துறவி உரை நிகழ்த்துவதாக இருந்தது. ஆனால் ஒன்பது மணி ஆனபோதும், அவர் அங்கு வந்து சேரவில்லை. இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் துறவியைத் தொடர்புகொண்டு பேசியபோது, அவர், "இப்போதுதான் படுக்கையிலிருந்து எழுந்திருகின்றேன்" என்று சொன்னார். இதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர், அரங்கத்திலிருந்தவர்களிடம் சொல்லிவிட்டு, "அவர் வரும்வரைப் பொறுமையாக இருக்கவும்" என்றார்.

நேரம் கடந்தது. நண்பகல் பன்னிரண்டு மணி இருக்கும். அப்போதும் துறவி அங்கு வரவில்லை. ஆகவே, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் துறவியைத் தொடர்பு கொண்டு பேசியபோது, துறவி, தன்னைப் பார்க்க முக்கியமான ஒரு நபர் வந்திருப்பதாகவும், அவரிடம் பேசிவிட்டு வந்துவிடுவதாகவும் சொன்னார். இதையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அரங்கத்திலிருந்தவர்களிடம் சொன்னபோது, பாதிப்பேருக்கு மேல் அரங்கத்தை விட்டு வெளியே சென்றார்கள்.

நேரம் செல்லச் செல்ல, அரங்கத்திலிருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறினார்கள். மாலை நான்கு மணி இருக்கும். அப்போதுதான் துறவி அரங்கத்திற்குள் நுழைந்தார். அவர் அரங்கத்திற்குள் நுழைந்தபோது, வெறும் நான்கு பேர்கள் மட்டுமே உள்ளே இருந்தார்கள் அவர்களிடம் அவர், "இவ்வளவு நேரம் எனக்காகப் பொறுமையோடு காத்திருந்ததற்காக நன்றி. நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் முதன்மையாகக் கற்றுக்கொள்ளவேண்டிய பாடமும் இந்தப் பொறுமைதான்" என்று சொல்லித் தன் உரையை முடித்தார்.

நம்முடைய வாழ்க்கையில் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய முதன்மையான பாடம் பொறுமை என்பது எவ்வளவு ஆழமான உண்மை. திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, நாம் பொறுமையோடு இருக்க வேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது. நாம் ஏன் பொறுமையோடு இருக்க வேண்டும்? பொறுமையோடு இருப்பதால் நமக்குக் கிடைக்கும் ஆசிகள் என்ன? என்பன குறித்து நாம் சிந்திப்போம்.


ஆண்டவர் வரும்வரை பொறுமை:
"வலிமை உடையவரைவிடப் பொறுமை உடையவரே மேலானவர்" இது நீதிமொழிகள் நூலில் இடம்பெறும் இறைவார்த்தையாகும் (நீமொ 16:32). வலிமை உடையவரைவிடப் பொறுமை உடையவர் ஏன் மேலானவர்? என்ற கேள்வி நமக்கு எழலாம். வலிமையுடைவர் தன்னிடம் இருக்கும் வலிமையைக் கொண்டு எதையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செயல்பட வாய்ப்பிருக்கின்றது. பொறுமையுடையவரோ, எதையும் பொறுமையாகச் சிந்தித்துத் செயல்பட வாய்ப்பிருக்கின்றது. அதனால்தான் வலிமை உடையவரைவிடப் பொறுமையுடையவர் மேலானவராக இருக்கின்றார்.

கிறிஸ்தவம் வேகமாகப் பரவி வந்த தொடக்கக் காலகட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராகப் பலவிதமான வன்முறைகளும் அடக்குமுறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டன. இந்நிலையில், அவர்களைத் தங்களது நம்பிக்கையில் உறுதிப்படுத்தும் வகையில், யாக்கோபு எழுதுகின்ற வார்த்தைகள்தான், இன்றைய முதல் வாசகத்தில் இடம்பெறுகின்ற, "ஆண்டவரின் வருகைவரை பொறுமையோடு காத்திருங்கள்" என்பதாகும். இந்த உண்மையை விளக்கிக் கூறுவதற்கு யாக்கோபு பயன்படுத்தும் உருவகம்தான் பயிரிடுபவர்.

பயிரிடுபவர் தன்னுடைய நிலத்தில் விதைத்துவிட்டு, அதை அறுவடை செய்வதற்காக உடனே கிளம்பிப் போய்விடுவது கிடையாது மாறாக, முன்மாரியும் பின்மாரியும் பொழியுமளவும் பொறுமையோடு காத்திருக்கின்றார். கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொண்டவர்களும் தாங்கள் எதிர்கொள்ளும் சித்திரவதைகளையும் துன்பங்களையும் கண்டு நம்பிக்கை இழந்து விடாமல், பொறுமையோடு இருக்கவேண்டும் என்றுதான், ஆண்டவரின் வருகைவரை பொறுமையோடு இருங்கள் என்கிறார் யாக்கோபு. மேலும், ஆண்டவரின் வருகை வரை, "ஒருவர் மற்றவருக்கு எதிராக முறையிடாதீர்கள்" என்றும் கூறுகின்றார். ஆகையால், நாம் ஆண்டவரின் வருகைவரை பொறுமையோடு இருக்கின்ற அதே வேளையில், ஒருவர் மற்றவரைப் பற்றி நல்ல விதமாய்ப் பேசுவதும் மிகவும் இன்றியமையாததாக இருக்கின்றது.


பொறுமையிழந்த திருமுழுக்கு யோவான்:
மெசியாவாம் இயேசுவின் வருகைக்கு முன்பாக ஏறக்குறைய நான்கு நூற்றாண்டுகள், இஸ்ரயேலில் எந்தவோர் இறைவாக்கினரும் தோன்றவில்லை. இதனால் மெசியாவின் வருகைக்கான எதிர்பார்ப்பு மக்கள் நடுவில் மிகுதியானது. இந்நிலையில் இயேசுவின் முன்னோடியாக, அவரது வருகைக்காக மக்களை ஆயத்தப்படுத்திய திருமுழுக்கு யோவான்தான் மெசியாவாக இருக்கக்கூடும் என்று மக்கள் நினைத்தபோது அவர், "நான் மெசியா அல்ல; மாறாக, அவருக்கு முன்னோடியாக அனுப்பப்பட்டவன்" (யோவா 3:28) என்று சொல்லிவிட்டு, மெசியாவாம் இயேசு தன்னிடம் வந்தபோது, அவருக்குத் திருமுழுக்குக் கொடுக்கின்றார்.

இப்படிப்பட்டவர், தன் சகோதரனின் மனைவியோடு வாழ்ந்த ஏரோதின் தவற்றைச் சுட்டிக் காட்டியதால், ஏரோதால் பிடித்துச் சிறையில் அடைக்கப்பட்டார் (மத் 4:12). இந்நிலையில், மெசியாவின் வருகைக்காக மக்களை ஆயத்தப்படுத்தியதற்காகச் சிறையில் அடைக்கப்பட்ட தன்னை, மெசியாம் இயேசு விடுக்கவில்லையே என்று, திருமுழுக்கு யோவான், ஒருவேளை இயேசு மெசியாவாக இருக்க மாட்டாரோ? என நினைத்துத் தன் சீடர்கள் மூலமாக இயேசுவிடம், "வருவிருப்பவர் நீர்தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?" என்றொரு கேள்வியைக் கேட்கச் சொல்கின்றார்.

திருமுழுக்கு யோவானின் சீடர்கள் இயேசுவிடம் இக்கேள்வியைக் கேட்டபோது, இயேசு அவர்களிடம், "நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள்" என்று சொல்லிவிட்டு, "என்னைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்வோர் பேறுபெற்றோர்" என்கிறார். திருமுழுக்கு யோவானுக்கு ஒரு துன்பம் வந்ததும் அவர் பொறுமையிழந்து, இப்படியெல்லாம் கேள்வியை இயேசுவிடம் கேட்கச் சொல்கின்றார். நாமும் நம்முடைய வாழ்வில் இதுபோன்ற துன்பங்களைச் சந்திக்கும்போது பொறுமையிழப்பது உண்டு. ஆனால், பொறுமையோடும் மன உறுதியோடும் இருப்பவர்தான் மீட்புப் பெறுவர் (மத் 24:13) என்று இயேசு சொல்கின்றார்.

பொறுமையோடு இருப்பவருக்குக் கிடைக்கும் ஆசி:
வாழ்க்கையில் எல்லாமே நன்றாகப் போய்க்கொண்டிருக்கும்போது, நாம் சமநிலையோடு இருப்போம். எப்போது நம்முடைய வாழ்க்கையில் துன்பம் வருகின்றபோது, அப்போது நாம் திருமுழுக்குக் யோவானைப் போன்று சமநிலையை, பொறுமையை இழக்கின்றோம். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், ஆண்டவரின் வருகைவரை பொறுமையோடு இருப்பவர் எத்தகைய ஆசிகளைப் பெறுவர் என்பதை எடுத்துக் கூறுகின்றது.

இன்றைய முதல் வாசகம், ஆண்டவரின் வருகைவரை பொறுமையோடு காத்திருப்பவர் மூன்றுவிதமான ஆசிகளைப் பெறுவர் என்கிறது. ஒன்று, வறண்ட நிலம் வற்றாத நிலமாக மாறும். இரண்டாவதாக, பல்வேறு பிணிகளால் வருந்துவோர் நலமடைவர். மூன்றாவதாக, பாபிலோனில் அடித்தனத்தில் - இருப்பவர் விடுவிக்கப்படுவர். இந்த மூன்று ஆசிகளும் ஆண்டவரின் வருகைக்காகப் பொறுமையோடு காத்திருப்பவருக்குக் கிடைக்கும். இந்த ஆசிகளெல்லாம் இயேசு வழியாகக் கிடைத்தன என்பதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குச் சான்று பகர்கின்றது.

ஆதலால், நம்முடைய வாழ்வில் துன்பம், தோல்வி, வேதனை எல்லாம் வருகின்றனவே என்று நம்பிக்கையை இழந்து விடாமல், ஆண்டவருக்காகப் பொறுமையோடு காத்திருந்து, அவர் அளிக்கும் ஆசிகளைப் பெறுவோம்.

சிந்தனைக்கு:
நான் ஆண்டவருக்காகப் பொறுமையோடு காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து, எனது மன்றாட்டைக் கேட்டருளினார் (திபா 40:1) என்று திருப்பாடல் ஆசிரியர் கூறுவார். எனவே, நாம் ஆண்டவருக்காகப் பொறுமையோடு காத்திருந்து, அவர் வரும்வரை அவருக்கு ஏற்புடையவற்றைச் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு

இன்றைய வாசகங்கள்:-
எசாயா 35:1-6,10
யாக்கோபு 5:7-10
மத்தேயு 11:2-11

1. ஞாயிறு இறைவாக்கு - அருள்பணி முனைவர் ம . அருள்

ஒரு மனிதனுக்கு சாதாரணமாக நான்கு வகையிலே துன்பம் வரலாம்: 1. நோயினால் 2. பாவத்தால் 3. மரணத்தால் 4. இயற்கையினால். ஆண்டவர் மனிதர்களின் மனநிலையை உணர்ந்தவராய் நான்கு துயரங்களிலிருந்தும் மனிதர்களை விடுவித்து அவர்களுக்கு மகிழ்ச்சியும், மனநிம்மதியும் நிறைந்த வாழ்க்கையைப் பரிசாக அளிக்கிறார்.

நற்செய்தியில் கூறப்பட்ட இருவரும் பார்வையற்றோர். அவர்கள் ஆண்டவராம் இயேசுவுக்காகக் காத்திருந்தார்கள்! இயேசு அவர்கள் இருந்த பக்கம் நடந்து செல்கிறார் என்பதை எப்படியோ உணர்ந்து கொண்டார்கள். கத்தினார்கள்: "தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்" என்றனர்! (மத.9:27-31) கங்கையும், காவிரியும் சேர்ந்தால் சொல்லவும் வேண்டுமோ! அவர் அவர்களை அன்போடு பார்த்து, ஆதரவு நிறைந்த இதயத்தோடு அவர்களைத் தொட்டார். தொட்டவுடன் அவர்கள் குணமானார்கள்.

இருவர் இயேசுவின் பக்கத்தில் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தனர். இருவரும் குற்றவாளிகள். ஒருவன் கேலி செய்தான். மற்றொருவனோ இயேசுவின் இரக்கத்தைக் கேட்டான்! திருடித் திருடிப் பழக்கப்பட்டவன் இறுதியாக இயேசுவின் இதயத்தையும் திருடிவிட்டான். இயேசு அவனைப் பார்த்து, "நீ இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" (லூக்.23:43) என்றார். "நான்கு நாட்கள் கல்லறையிலிருந்த இலாசரை உயிர்ப்பித்து கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்" (யோவா. 11:1-44) என்றார். "இரையாதே, அமைதியாயிரு" என்றார். காற்றும், கடலும் அவருக்குக் கீழ்ப்படிந்தன (மாற். 4:35- 41).

இதோ இந்த இரக்கத்தின் ஆண்டவர் இயேசுதான் நம் நடுவே பிறக்கப் போகிறார்! நமக்கெல்லாம் மகிழ்ச்சி பொங்கும் காலமிது. இயேசு காலடி பட்ட இடமெல்லாம் பாலைவனம் சோலை வனமானது; பொட்டல் நிலம் பூத்துக் குலுங்கியது; தளர்ந்துபோன கைகள் திடப்படுத்தப்பட்டன; தள்ளாடிய முழங்கால்கள் உறுதிப் படுத்தப்பட்டன. உள்ளத்தில் உறுதி அற்றவர்களுக்கு இயேசு உறுதி அளித்தார். அநீதியினின்று மக்களைக் காப்பாற்றினார். கண்களுக்குப் பார்வையையும், செவிகளுக்குக் கேட்கும் ஆற்றலையும், நாவிற்குப் பேசும் வரத்தையும் முடவருக்கு நடக்கும் சக்தியையும் தந்து எல்லாரும் நலமுடன் வாழ வலம் வந்தார்! ஆண்டவரால் விடுவிக்கப்பட்டோர் திரும்பி வருவர். மகிழ்ந்து பாடிக் கொண்டே (எசா. 35:10) சீயோனுக்கு வருவர் (முதல் வாசகம்). திருமுழுக்கு யோவான், மெசியா யார் என்பதை அறிந்துகொள்ள இயேசுவிடம் தன் சீடர்களை அனுப்புகிறார். தம்மிடம் வந்த சீடர்களிடம், நீங்கள் கண்டதையும், கேட்டதையும் யோவானிடம் அறிவியுங்கள். குருடர் பார்க்கின்றனர். முடவர் நடக்கிறார். நோயாளி குணமடைகிறான் என்றார் இயேசு. (மூன்றாம் வாசகம்) இயேசுவின் பணி திருமுழுக்கு யோவானுக்கு நிறைவும் மகிழ்வும் தருகிறது. இந்த மனநிலை நம்மில் இருந்தால் எவ்விதத் தடையுமின்றி பல நல்ல செயல்கள் நடந்தேறும் என்பதில் சந்தேகமில்லை.

யோவான் முன்னோடியாக வந்து இயேசுவின் பாதையை செம்மைப்படுத்தியது போல நாமும் இயேசுவின் முன்னோடியாக, சான்று பகர்ந்து வாழ இன்றைய வார்த்தை வழிபாடு நம்மை அழைக்கிறது. நாம் பாவம் என்ற குருட்டுத் தன்மையிலிருந்து விடுபட்டு இயேசுவின் மீது நம்பிக்கை கொள்வோம். நாம் பெற்றுக் கொண்ட மீட்பை, அமைதியை மற்றவருக்கு எடுத்துச் சொல்லும் தூதுவர்களாகச் செயல்படுவோம்.

ஒரு சிற்பியானவன் ஒரு கல்லில் சிலை வடிக்க தொடங்கினான். அது உடைந்தது. அடுத்த கல்லை செதுக்கினான். அதுவும் உடைந்தது, மூன்றாவது கல்லை விடா முயற்சியோடு செதுக்கினான். அழகான சிலை உருவானது. உடைந்த கற்கள் ஆலயத்தின் படிகற்களாக மாறின. உருவாக்கப்பட்ட சிலையானது வழிபடும் சிலையானது. ஆம்! நாம் நம்பிக்கையோடும், மன உறுதியோடும் செயல்பட்டால் வெற்றி நமதே! சாதனை ஒரு சிறுகதையல்ல. அது ஒரு தொடர்கதை.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு

இன்றைய வாசகங்கள்:-
எசாயா 35:1-6,10
யாக்கோபு 5:7-10
மத்தேயு 11:2-11

3. மறையுரை மொட்டுக்கள் - அருள்பணி Y. இருதயராஜ்

தமிழ் ஆசிரியர் வகுப்புக்குள் நுழையும் போதெல்லாம் ஒரு மாணவன் சிரிப்பான். ஏன் அவன் சிரிக்கிறான்? என்று ஆசிரியர் அவனைக் கேட்டார். அவன், "சார்! நீங்கள்தான் துன்பம் வரும்போதெல்லாம் சிரிக்க வேண்டும் என்று சொன்னீர்கள்" என்றான்.

துன்பம் வரும்போது சிரிக்க வேண்டும். ஏனெனில் துன்பத்தை விரட்டி அடிப்பதற்குச் சிரிப்பைப் போல வேறெந்த சக்தியும் கிடையாது.

இடுக்கண் வருங்கால் நகுக, அதனைஅடுத்து
ஊர்வது அஃது ஒப்பது இல் (குறள் 621)
திருவருகைக் காலத்தின் 3-ஆம் ஞாயிறு "மகிழ்வின் ஞாயிறு" என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் செப்பனியா, "மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி" (செப் 3:14) என்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம்: "இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கிறார்" (செப் 3:15). பதிலுரைப் பாடல். "சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள்" என்கிறது. அதற்குக் காரணம்: "இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகிறார்" (எசா 12:6). இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், "ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்" என்கிறார். காரணம்: "ஆண்டவர் அண்மையில் உள்ளார்" (பிலி 4:4-5).

நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கான காரணம் ஆண்டவர் நம் நடுவில் இருக்கிறார்; நம்முடன் இருக்கிறார். நம்மைவிட்டு அவர் விலகுவதுமில்லை; நம்மைக் கைவிடுவதுமில்லை. வானதூதர் கபிரியேல் மரியாவை, "அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" (லூக் 1:38) என்றுதான் வாழ்த்தினார். எனவேதான் திருச்சபையும் திருப்பலியில், "ஆண்டவர் உங்களோடு இருப்பாராக" என்று வாழ்த்துகிறது. கிறிஸ்து திருச்சபையின் திருக்கூட்டத்தில் உடனிருக்கிறார் (மத் 18:20). அவர் நம்மைத் திக்கற்றவராக விட்டுச் செல்வதில்லை (யோவா 14:18). உலகம் முடியும் வரை எந்நாளும் நம்முடன் இருக்கின்றார் (மத் 28:20).

ஒருவர் நன்றாகக் குடித்துவிட்டு நடுரோட்டில் குப்புறப்படுத்துக் கைகளையும் கால்களையும்ஆட்டிக் கொண்டிருந்தார். வழியில் சென்றவர்கள் அவர் என்ன செய்கிறார்? என்று கேட்டதற்கு "நான் நீச்சல் அடிக்கிறேன்" என்றார். "நீச்சல் அடிக்க தண்ணீர் எங்கே இருக்கிறது?" என்று கேட்டதற்கு, "என் வயிற்றுக்குள்ளே இருக்கிறது" என்றார்.

மகிழ்ச்சியின் ஊற்று நமக்குள் இருக்கிறது. அந்த ஊற்று யார்? கடவுள்தான் பொங்கி வழிந்தோடும் நீரூற்று (எரே 2:3), "மீட்பரின் உற்றுக்களிலிருந்து அகமகிழ்வுடன் தண்ணீர் முகந்து கொள்வீர்கள்" (எசா 12:3), "யாரேனும் தாகமாயிருந்தால் என்னிடம் வரட்டும்; என்னில் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும். அவருடைய உள்ளத்திலிருந்து வாழ்வு தரும் தண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும்" (யோவா 7:37-38).

கடவுள்தான் மகிழ்ச்சியின் ஊற்று. கடவுள் நம்மைத் திருபதிப்படுத்த முடியவில்லையென்றால் உலகில் வேறெந்தப் பொருளோ ஆளோ திருப்திப்படுத்த முடியாது. மாறாக, கடவுள் நம்மோடு இருக்கும்போது நாம் எல்லாவற்றையும் இழந்த நிலையிலும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். "அத்திமரம் துளிர்த்து அரும்பாமல் போயினும் திராட்சைக் கொடிகள் கனிதராவிடினும், ஒலிவ மரங்கள் பயன் அற்றுப் போயினும், வயல்களில் தானியம் விளையாவிடினும், கிடையில் ஆடுகள் யாவும் அழிந்து போயினும். தொழுவங்களில் மாடுகள் இல்லாது போயினும் நான் ஆண்டவரில் களிகூர்வேன்" (அபக்கூக்கு 3:17).

இரண்டாவதாக, நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால். நாம் நமக்குள்ளதை இல்லாதவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். "இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும், உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்" (லூக் 3:11) என்று இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவான். மக்களைக் கேட்கிறார்.

ஒரு சிறுவனுக்கு நான் இரண்டு 'சாக்லேட்' கொடுத்து எனக்கு ஒன்றைத் திருப்பிக் கொடுக்கும்படி கேட்டதற்கு அவன் கொடுக்க மறுத்தான். அப்போது அவனுடைய அக்கா, "ஃபாதர் என் தம்பிக்குப் பிறரிடமிருந்து வாங்கத்தான் தெரியும்; பிறருக்குக் கொடுக்கத் தெரியாது" என்றார், பிறரிடம் வாங்கி வாங்கி வாழ்ந்தான் என்பதைவிட பிறர்க்குக் கொடுத்துக் கொடுத்துச் செத்தான் என்பதே மேல். "பெற்றுக் கொள்வதைவிட கொடுத்தலே பேறுடைமை." (திப 20:35)

மூன்றாவதாக, நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால், நமக்கு மனநிறைவு வேண்டும்; பேராசை இருக்கக்கூடாது. "உங்கள் ஊதியம் போதும் என்றிருங்கள்" (லூக் 3:14) என்று திருமுழுக்கு யோவான் அறிவுறுத்துகிறார். கிடைக்கும் ஊதியம் போதாதென்று இன்று பலர் இலஞ்சம் வாங்குகின்றனர். ஒருவர் தன் நண்பரிடம், "எனக்கு இலஞ்ச ஒழிப்புத் துறையில் வேலை கிடைத்துள்ளது" என்றார். உடனே நண்பர் அவரிடம், "அந்த வேலையை வாங்குவதற்கு எவ்வளவு இலஞ்சம் கொன்று கேட்டார். இனிமேல் பிரசவத்தில் குழந்தையின் தலை முதலில் வராமல் அதனுடைய கைதான் வெளியே வருமாம்; அதன் கையில் ஒரு நூறு ரூபாய் வைத்தால்தான் மிச்சம் வருமாம்! கையூட்டு வாங்காமல் குழந்தையும் நகராது, அரசு அலுவலகங்களில் உள்ள கோப்பும் நகராது. ஒருவர் கையை மேலே தூக்கினால் அதற்குப் பெயர் "சல்யூட்" (Salute). கையை கீழே தாழ்த்தினால் அதற்குப் பெயர் "கையூட்டு!"

கடைசியாக, நாம் மகிழ்ச்சியுடன் வாழ நமக்குத் தாழ்ச்சி வேண்டும். இயேசு கிறிஸ்துவின் மிதியடி வாரைக்கூட அவிழ்க்கத் தமக்குத் தகுதியில்லையென்றும் (லூக் 3:16), "அவரது செல்வாக்குப் பெருக வேண்டும்; எனது செல்வாக்குக் குறைய வேண்டும்" (யோவா 3:30) என்றும் கூறுகிறார் திருமுழுக்கு யோவான்.

ஒரு மனைவி தன் கணவரிடம், "ஏழு ஏழு சென்மத்துக்கும் நீங்கள்தான் எனக்குக் கணவராக இருக்க வேண்டும்" என்றார். அதைக் கேட்ட கணவர் மிக்க மகிழ்ச்சியுற்று அதற்கான காரணத்தை மனைவியிடம் கேட்டபோது, "உங்களைவிட இளிச்சவாயன் வேறு யாரும் எனக்குக் கிடைக்க முடியாது" என்றாள் மனைவி. என்னே அவரது பதிபக்தி.

"மனத்தாழ்மையோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவர் களாகக் கருதுங்கள் ... கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்" (பிலி 2:3-5).

நமக்குள் கடவுள் இருப்பதை உணர்ந்து, நமக்குள்ளதை பிறருடன் பகிர்ந்து, கிடைக்கும் ஊதியம் போதுமென்று வாழ்ந்து, பிறரை நம்மைவிட உயர்ந்தவர்களாகக் கருதி மகிழ்ச்சியுடன் வாழ்வோம். அப்போது நமது மகிழ்ச்சியை எவரும் நம்மிடமிருந்து பறிக்க முடியாது (யோவா 16:22).

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு

இன்றைய வாசகங்கள்:-
எசாயா 35:1-6,10
யாக்கோபு 5:7-10
மத்தேயு 11:2-11

4. திருவுரைத்தேனடை - அருள்பணி இ . லூர்துராஜ்

விழித்திரு
இரண்டாம் உலகப் பெரும்போர் முடிந்த நேரம். ஜெர்மனி நாட்டு அதிபர் கொன்ராடு அடனாவர் வானொலி, தொலைக்காட்சி வழியாக மக்களுக்கு உரையாற்றுகிறார்: "அழிவு, சிதைவு, இடிபாடுகளுக்கு இடையே நின்று கொண்டிருக்கிறோம். நாம் விழித்தெழும் நேரம் வந்து விட்டது. வீறுகொண்டு கரம் கோர்ப்போம். புதிய ஜெர்மனியைக் கட்டி எழுப்பக் கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் நழுவ விடக்கூடாது...

மக்கள் கூர்ந்து கேட்டனர். விழித்து எழுந்தனர். விளைவு? வளமான செழிப்பான புதிய ஜெர்மனி.

திருவருகைக் காலத்தைத் தொடங்கும் போதே திருவழிபாட்டு முழக்கம்- விழிப்பாயிருங்கள் என்பதுதான். காரணம்? "உறக்கத்தினின்று விழிதெழும் நேரம் ஏற்கனவே வந்துவிட்டது. நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை கொண்டபோது இருந்ததைவிட மீட்பு இப்பொழுது மிக அண்மையில் உள்ளது" (ரோமை. 13:11.)

போரினால் உண்டான பாதிப்பால் அச்சமும் அதிர்ச்சியும் கொண்ட ஜெர்மனி நாட்டு மக்களின் உள்ளத்தில் எத்தகைய உணர்வுகள் கிளர்ந்தெழுந்தனவோ அதே தாக்கத்துக்கு ஆளான இஸ்ரயேல் மக்களின் மன உணர்வுகளின் சித்தரிப்பே முதல் வாசகம்.

- பபிலோனிய அடிமைத்தனத்துக்குப்பின் தாயகம் திரும்பிய நிலையில் அழிந்துபட்ட எருசலேமை, சிதைந்துவிட்ட திருக்கோவிலைச் கண்டு சிந்தையில் அமைதியிழந்து செல்வச் செழிப்பிழந்து இறைவழிபாட்டின் வளமை இழந்து வார்த்தைக்குள் அடங்காத வருத்தத்தை, சோகத்தை, ஏக்கத்தை வெளிப்படுத்தும் மன்றாட்டான புலம்பல்.

இந்த இழிநிலைக்கெல்லாம் தங்கள் பாவ வாழ்வே. இறைவனை விட்டு அகன்ற அவலமே காரணம் என்ற தன்னிலை உணர்வு. "நாங்கள் யாவரும் இலைபோல் கருகிப் போகின்றோம். எங்கள் தீச்செல்கள் காற்றைப்போல் எங்களை அடித்துச் சென்றன". (எசாயா 64:6)

இந்தத் தன்னுணர்வுக்கிடையிலும் உடைந்து போன இதயத்தின் அடித்தளத்தில் நம்பிக்கை வேரற்றுப் போகவில்லை. "ஆண்டவரே உம் வழிகளிலிருந்து எங்களைப் பிறழச் செய்ததேன்? உமக்கு அஞ்சி நடவாதவாறு எங்கள் நெஞ்சங்களைக் கடினப்- படுத்தியதேன்?" (எசாயா 63:17) என்று தங்கள் தவறுகளுக்கெல்லாம் கடவுளுக்குமே பங்கு உண்டு என்பது போலப் புலம்பி "நாங்கள் களிமண். நீர் எங்கள் குயவன்" (எசா.64:8) சீரழிந்த தன் வேலைப் பாடுகளைச் சீர்செய்ய இறைவனே இறங்கிவர உரிமையோடும் எதிர்பார்ப்போடும் கூடிய அழைப்பு.

- களிமண் தானாகக் குடமாக முடியுமா? வனைந்திடக் குயவன் அங்கே வரவேண்டாமா? கற்பாறை தானாகச் சிலையாக முடியுமா? செதுக்கிடச் சிற்பி அங்கே வரவேண்டாமா? பாவியான மனிதன் தன் சொந்த முயற்சியால் மட்டும் படைத்தவனைச் சென்றடைய முடியுமா? "நீர் வானத்தைப் பிளந்து (கிழித்து என்பது பழைய மொழிபெயர்ப்பு) இறங்கி வரமாட்டீரோ?" (எசா.64:1) இந்த இதய எழுச்சி, ஏக்கக்கதறல் இறைவன் எனக்குத் தேவை அதுவும் உடனடித் தேவை என்ற அவசர எதிர்பார்ப்புக் கலந்த தவிப்பு. திருப்பாடல் 144:5இல் கூட இதே துடிப்பின் வெளிப்பாடு: 'ஆண்டவரே உம் வான்வெளியை வளைத்து இறங்கி வாரும்'' இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள தடையை அவரால் மட்டுமே தகர்க்க முடியும். நம்மால் இயலாது. நம்மால் முடிந்ததெல்லாம் ஓசோன் படலத்தில் ஒட்டைகளைப் போட்டதுதான்!

ஆண்டவர் வருவார். "இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்கள் அல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்". (தி.ப.1:11) அதற்காக வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே நிற்பதா?

"விழிப்பாய் இருங்கள் ஏனெனில் வீட்டுத்தலைவர்... எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது" (மாற்கு. 13:35)

சென்னையில் ஓர் அரசு அலுவலர். தன் ஸ்கூட்டரை வெளியே நிறுத்திவிட்டு மதிய உணவை முடித்து வெளியே வந்தவருக்கு ஒரே அதிர்ச்சி. ஸ்கூட்டரைக் காணோம். அங்குமிங்கும் தேடி அலைமோதிய அவர் சிறிது தொலைவில் ஸ்கூட்டரைப் பார்க்கிறார். மகிழ்ச்சியோடு அருகில் செல்கிறார். ஸ்கூட்டரில் ஒரு கடிதமும் 2 சினிமா டிக்கெட்டுகளும் இருந்தன. "ஐயா, எங்களை மன்னியுங்கள். ஓர் அவசர வேலைக்காக வண்டியை எடுத்துச் சென்றோம். சொல்லாமல் எடுத்துச் சென்ற குற்றத்துக்காக ரிசர்வ் செய்யப்பட்ட இந்த டிக்கெட்டுகளை வைத்துள்ளோம். உங்கள் மனைவியோடு இன்று மாலையில் படம் பார்த்து மகிழுங்கள்" என்பது கடித வாசகம். இரட்டிப்பான மகிழ்ச்சி உற்சாகத்தோடு திரையரங்கு சென்று திரும்பிய போது வீடே கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. விழிப்புணர்வைக் குலைக்க, கவனத்தைச் சிதறடிக்க, சாத்தான் எப்படியெல்லாம் திட்டமிடுகிறான். செயல்படுகிறான்.

விழித்துக் கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார் குறட்டை விட்டோர் எல்லாம் கோட்டை விட்டார்.

"சுதந்திரம்
இருளில் வாங்கினோம். இன்னும் விடியவில்லை
என்று யார் சொன்னது?
விடிந்துவிட்டது. இன்னும் நாம்தாம் விழித்தெழவில்லை
நாளை என்பது விடியலில் அல்ல, விழித்தலில் உள்ளது".

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 5
=================================================================================
திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு

இன்றைய வாசகங்கள்:-
எசாயா 35:1-6,10
யாக்கோபு 5:7-10
மத்தேயு 11:2-11

5. சிந்தனைப் பயணம் . அருள்பணி L.X. ஜெரோம் சே.ச

அறிவைக் கடந்த கனவுகள்
'Chase the Lion', அதாவது, 'சிங்கத்தைத் துரத்திச் செல்லுங்கள்' என்ற நூல், 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. பொதுவாக, சிங்கத்தைக் கண்டால், தப்பித்து ஓடுவோம் அல்லது, முடிந்தால், அதை துரத்தியடிப்போம். இது மனித இயற்கை. இங்கோ, இந்நூலின் ஆசிரியர், சிங்கத்தைத் துரத்திச் செல்லுங்கள் என்று பணிக்கிறார். அமெரிக்க ஐக்கிய நாட்டின் வாஷிங்டன் மாநகரில் பணியாற்றும் Mark Batterson என்ற கிறிஸ்தவப் போதகர் எழுதியுள்ள இந்நூலுக்கு அவர் அளித்துள்ள துணை தலைப்பு, நம் கவனத்தை ஈர்க்கிறது. If your dream doesn't scare you, it is too small அதாவது, "உங்கள் கனவு உங்களை அஞ்சி நடுங்கச் செய்யவில்லையெனில், அது மிகச் சிறியது" என்று தன் நூலின் முகப்பில் கூறுகிறார். கனவை சிங்கமாக உருவகித்து, அதை நோக்கி நாம் செல்லவேண்டும் என்று வலியுறுத்தும் ஆசிரியர் Batterson அவர்கள், அதற்கு, விவிலிய எடுத்துக்காட்டுகளையும் வழங்கியுள்ளார். கனவைக் குறித்துப் பேசும் இந்நூலை இன்று நாம் சிந்திப்பதற்குக் காரணம், இன்று நாம் கொண்டாடும் 'மகிழும் ஞாயிறு'. திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறு, மகிழும் ஞாயிறு என்று அழைக்கப்படுகிறது. இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எசாயா, அக்களியுங்கள், அகமகிழுங்கள், மகிழுங்கள் என்று மகிழ்வைக் குறித்து பலமுறை கூறியுள்ளார். மகிழ்வு என்பது மனிதர்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல, அது இயற்கை அனைத்திலும் வெளிப்படும் உணர்வு என்பதை நம் உள்ளங்களில் ஆழப்பதிக்க, ஒரு கனவுலகை அவர் விவரிக்கிறார். இறைவாக்கினர் எசாயா கூறும் வார்த்தைகளுக்கு செவிமடுப்போம்:

அந்நாள்களில், பாலைநிலமும் பாழ்வெளியும் அகமகிழும்; பொட்டல் நிலம் அக்களிப்படைந்து, லீலிபோல் பூத்துக் குலுங்கும். அது வளமாய்ப் பூத்துக் குலுங்கி மகிழ்ந்து பாடிக் களிப்படையும் (இறைவாக்கினர் எசாயா 35: 1-2) இவ்வார்த்தைகளைக் கேட்கும்போது, தயவு செய்து கட்டுக்கடங்காது செல்லும் உங்கள் கனவுக்குக் கடிவாளம் போடுங்கள் என்று, இறைவாக்கினர் எசாயாவிடம் சொல்லத் தோன்றுகிறது. அற்புதம் இருக்க வேண்டியதுதான். அதற்காக, அபத்தமான, கற்பனை கலந்த கனவுகளை அற்புதம் என்று எப்படி சொல்வது? பாலை நிலம், லீலி மலர்களுடன் பூத்துக்குலுங்கும் என்று, இறைவாக்கினர் கூறுவதை, மிகையென்று கருதுகிறோம்.

இறைவாக்கினரின் கூற்று, அபத்தமானது, மிகைப்படுத்தப்பட்டது என்று நாம் சொல்வதற்குக் காரணம் என்ன? எந்த மன நிலை, நம்மை, இவ்வாறு பேசவைக்கிறது என்பதைச் சிந்திப்பது நல்லது. வாழ்வின் எதார்த்தங்களை, பெரும்பாலும், எதிர்மறை கண்ணோட்டத்துடன் பார்த்து, பயந்து, பயந்து, அடுத்த அடி எடுத்து வைத்தால் எவ்விதம் அடிபடுவோமோ என்று கணக்குப் பார்க்கும் practical சிந்தனை, அதாவது, நடைமுறைக்கு ஏற்றவற்றை மட்டுமே எண்ணிப்பார்க்கும் சிந்தனை, நம்மை இவ்வாறு பேசவைக்கிறது. இப்படிப்பட்டக் கனவுகள், நனவானால் நன்றாக இருக்குமே என்று ஆழ்மனதில் ஆசை எழுந்தாலும், நமது நடைமுறை அறிவு, இந்த ஆவலின் மேல் தண்ணீரையோ, மணலையோக் கொட்டி, அணைத்து, புதைத்துவிடுகிறது.

நடைமுறைக்கு ஒத்து வருவதையே நாம் நாள்தோறும் எண்ணிவந்தால்...
நடக்கும் ஒவ்வொன்றுக்கும் காரண, காரியங்களை நாம் அலசிவந்தால்...
எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் எடுத்துவைத்தால்...
செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நாம் கணக்குப் பார்த்துக்கொண்டிருந்தால்...
உலகில், கணக்குகள் எழுதப்பட்டப் புத்தகங்கள் மட்டுமே நிறைந்திருக்கும். கவிதைகளை, கனவுகளைக் கூறும் புத்தகங்கள் இருக்காது. மனித குலத்தில் ஆயிரம் பேர் கணக்கெழுதியபோது, ஓரிருவர் கவிதை எழுதியதால்தான், இவ்வுலகம் இவ்வளவு அழகாக இன்றும் உள்ளது. கவிதை, கனவு, கலை இவை தரும் நம்பிக்கையால் இவ்வுலகம் இன்று வரை வாழ்ந்து வருகிறது.

கவிதை சொல்பவர்கள், கனவு காண்பவர்கள், மென்மையானவர்கள்; உலகின் முரட்டுப் போக்கிற்கு ஈடுகொடுக்க முடியாதவர்கள் என்று அவசர முடிவெடுக்கிறோம். இத்தகைய முற்சார்பு எண்ணங்களை புரட்டிப்போட்ட ஒரு கவிஞரின் பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறோம். ஆம், இன்று, டிசம்பர் 11, மகாக்கவி பாரதியாரின் பிறந்தநாள். கொழுந்துவிட்டெரியும் மனதில் உருவாகும் கனவுகளும், கவிதைகளும், பிற மனங்களிலும் தீயை மூட்டும் என்பதற்கு, பாரதியார் ஓரு சிறந்த எடுத்துக்காட்டு. தான், வாழ வழியில்லாமல் இருந்தாலும், பல கோடி மக்கள் வாழ, நம்பிக்கை வரிகளைச் சொன்ன, பாரதியார் போன்ற கவிஞர்களுக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

பாரதியாரைப் போலவே, தன் வாழ்வில் துன்பங்களைத் தாங்கினாலும், மக்களின் நம்பிக்கைக்கு வழி வகுத்த திருமுழுக்கு யோவானைக் குறித்து இன்றைய நற்செய்தி பேசுகிறது. இவரைக் குறித்து இன்றைய நற்செய்தியில் இயேசு பேசும்போது, யோவான் வாழ்ந்த கடினமான வாழ்வை நினைவுபடுத்துகிறார். இறைவாக்கினர் அனைவருக்கும் இதே கதிதான் என்பதை விவிலியம் மீண்டும் மீண்டும் நமக்குச் சொல்கிறது. இறைவாக்கினர்கள் மெல்லிய ஆடை அணிந்து, மாளிகையில் வாழ்பவர்கள் அல்ல... பாலை நிலத்தில் பாறைகளோடு பாறையாய் மாறி, இயற்கையின் கருணைக்கு விடப்பட்டவர்கள் இவர்கள் என்று இயேசு நினைவுபடுத்துகிறார்.

மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை என்று இயேசுவால் புகழப்பட்ட யோவானின் குரல், பாலை நிலத்தில் ஒலித்தாலும், அவரது குரலைக் கேட்க மக்கள் ஓடிச் சென்றனர். மக்களை வரவழைத்து, அவர்களுக்கு நம்பிக்கையையும், நற்செய்தியையும் கூறிய யோவான், மதத் தலைவர்களையும் உரோமைய அரசையும் கடுமையாகச் சாடினார். இதனால் கதி கலங்கிய மதத் தலைவர்களும், ஏரோதும் அவரைச் சிறையில் அடைத்தனர். அந்தச் சிறையும், சங்கிலிகளும் யோவானின் உடலைக் கட்டிப்போட்டன. ஆனால், அவரது மனதில் கொழுந்துவிட்ட கனலை அடக்க முடியவில்லை. யோவானின் உடல் சிறையில் அடைபட்டிருந்தாலும், அவர் மனம், தனது மக்களின் விடுதலையைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தது. அந்த விடுதலை, இயேசுவின் வழியே வருமா என்ற கேள்வியை, ஏக்கத்துடன் கேட்கிறார், இன்றைய நற்செய்தியில்: வரவிருப்பவர் நீர்தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?

இந்தக் கேள்வியும், இதற்கு இயேசு தந்த பதிலும் இரு வேறு கண்ணோட்டங்களை நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. முதலில் யோவானின் கண்ணோட்டம்: தான் சிறையில் அடைக்கப்பட்டதும், தான் சுட்டிக்காட்டிய உலகின் செம்மறியான இயேசு, தன்னைத் தொடர்ந்து, தான் செய்துவந்த பணியில், முழு வேகத்துடன் இறங்கியிருப்பார்; மதத் தலைவர்களையும், உரோமைய அரசையும் இந்நேரம் கதிகலங்கச் செய்திருப்பார் என்பது யோவானின் எதிர்பார்ப்பாக இருந்தது. அவரது எதிர்பார்ப்பு, ஏமாற்றம் அடைகிறது. எந்தப் புரட்சியும் நடக்கவில்லை. தான் ஒருவேளை தவறானவரைச் சுட்டிக்காட்டிவிட்டோமோ என்று, யோவான் கலக்கம் கொள்கிறார். தம் சீடர்கள் வழியே இயேசுவிடமே தன் கலக்கத்தை வெளிப்படுத்துகிறார்.

தன் எதிர்பார்ப்புகளை ஏமாற்றிவிட்ட ஒருவரைப்பற்றி ஊரெல்லாம் சொல்லி சலித்துக் கொள்வதைவிட, ஏமாற்றிய அவரிடமே அதைப்பற்றி சொல்வதற்கு தனிப்பட்ட துணிச்சல் வேண்டும். அந்த துணிச்சல் யோவானிடம் ஏகப்பட்ட அளவு இருந்தது. வெட்டு ஒன்று, துண்டு இரண்டாக எழுகிறது, அவரது கேள்வி: தெளிவாகச் சொல்லுங்கள்... வேறு யாரையாவது நாங்கள் எதிர்பார்க்க வேண்டுமா?

யோவானின் எதிர்பார்ப்புகளும், தனது கண்ணோட்டம், பணி வாழ்வு இவைகளும் வேறுபட்டவை என்பதைச் சொல்ல, இயேசுவும் தயங்கவில்லை. யோவான் எதிர்பார்த்த புரட்சி, ஆள்பவர்களை விரட்டியடித்து, ஆட்சியைப் பிடித்து, மக்கள் வாழ்வை மாற்றுவது என்ற வரிசையில் அமைந்திருந்தது.

இயேசுவின் புரட்சி, இதற்கு நேர்மாறான, தலைகீழான புரட்சி. இந்தப் புரட்சி மக்கள் வாழ்வை மாற்றுவதிலிருந்து ஆரம்பமாகிறது. அதுவும் குறையுள்ள மக்களுக்கு முதலில் நிறைவை வழங்கி, அதன் வழியே தன் புரட்சியை ஆரம்பிக்கிறார், இயேசு. தன் புரட்சியைக்குறி்த்து அவர், நாசரேத்து தொழுகைக்கூடத்தில் இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகள் வழியே கூறினார். இயேசு அன்று நாசரேத்தில் வாசித்தது, எசாயா நூலின் 61ம் பிரிவு என்றாலும், இந்த புரட்சியைக் குறித்து இறைவாக்கினர் எசாயா கூறியுள்ள வரிகளை 35ம் பிரிவிலும் காண்கிறோம். இதுவே, இன்று நமக்கு முதல் வாசகமாக வழங்கப்பட்டுள்ளது. திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்: இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்; அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார். (எசாயா 35: 4) என்று எசாயா முழங்குகிறார்.

இறைவாக்கினர் எசாயா இவ்வாறு கூறியதும், இறைவன் எவ்விதம் பழிவாங்குவார் என்ற விவரம் அடுத்த வரிகளில் அடங்கியிருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அடுத்த வரிகளைத் தொடர்ந்து வாசித்தால், பெருத்த ஏமாற்றம் அங்கு நமக்குக் காத்திருக்கும். பழிவாங்குவது, அல்லது, பழிதீர்ப்பது என்ற வார்த்தைகளைக் கேட்டதும் நம் மனங்கள், பழிக்குப் பழி என்ற பாணியில் சிந்திப்பதால் வரும் ஏமாற்றம் இது. ஆனால், நமது எண்ணங்களுக்கு எதிர் துருவமாக, இறைவாக்கினர் எசாயா, பழிவாங்கும் கடவுளின் செயல்களாகக் கூறுவன இதோ:
அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்; ஆண்டவரால் விடுவிக்கப்பட்டோர் திரும்பி வருவர்; மகிழ்ந்து பாடிக் கொண்டே சீயோனுக்கு வருவர்; அவர்கள் முகம் என்றுமுள மகிழ்ச்சியால் மலர்ந்திருக்கும்; அவர்கள் மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைவார்கள்; துன்பமும் துயரமும் பறந்தோடும். (எசாயா 35: 5-6அ, 10)

பழிதீர்க்கும் இறைவன் இப்படித்தான் செயலாற்றுவார். இறைவனின் இந்த 'பழிதீர்க்கும் படலத்தை' இயேசு தொடர்கிறார். பழி தீர்ப்பது என்றால், பழிக்குப் பழியைச் செய்வது என்பது ஒரு பொருள். ஆனால், பழி தீர்ப்பது என்றால் பழியை, குறையைத் தீர்ப்பது என்றும் பொருள் கொள்ளலாம் இல்லையா? அப்படி பழியைத் தீர்க்க, பழியைத் துடைக்க வந்தவர் இயேசு. பழிதீர்க்கும் தன் பணியைக் குறித்து இயேசு இன்றைய நற்செய்தியில் கூறுவது இதுதான்:

நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள். பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. (மத்தேயு 11:4-5)

கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பது உலக வழக்கில், நடைமுறை வழியில் 'practical' ஆகச் சிந்திப்பவர்களின் பழிதீர்க்கும் மந்திரம். இதற்கு நேர் மாறாக, பழியைத் தீர்க்கும் மந்திரங்களும் வழிகளும் உலகில் உண்டு. கண்களையும், மனதையும் திறந்து இவற்றை நாம் பார்க்கவேண்டும் என்று, இயேசு இன்றைய நற்செய்தியில் நமக்கு அழைப்பு விடுக்கிறார்.

பழிதீர்ப்பது என்றால் என்ன என்பதை நமக்குப் புரியவைக்கும் ஓர் உன்னதமான உண்மை நிகழ்வை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரமதான் பண்டிகை காலத்தில், அகமது கதீப் என்ற பாலஸ்தீனிய சிறுவன் ஒருவன், இஸ்ரேல் வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டான். அவன் வைத்து விளையாடிக் கொண்டிருந்த பொம்மை துப்பாக்கியை, உண்மைத் துப்பாக்கி என்று நினைத்த இஸ்ரேல் வீரர்கள் அகமதைச் சுட்டனர்.

வீரர்கள் தங்கள் தவறை உணர்ந்ததும், உடனே அச்சிறுவனை இஸ்ரேல் பகுதியில் இருந்த ஒரு மருத்துவ மனைக்கு எடுத்துச்சென்றனர். அவனது பெற்றோரையும் அழைத்துச்சென்றனர். அகமதைக் காப்பாற்ற முடியவில்லை. அந்நேரத்தில் அந்தத் தாயும், தந்தையும் அற்புதம் ஒன்றைச் செய்தனர். அவர்கள் இருவரும், அகமதின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முன்வந்தனர்.

அகமதின் பெற்றோர், தங்கள் மகனின் உறுப்புக்களை, இஸ்ரேல் பகுதியில் இருந்த மருத்துவமனையிலேயே தானம் செய்ததைக் கேள்விப்பட்ட பாலஸ்தீனியர்கள், அதிர்ச்சி அடைந்தனர். பலர் கோபமடைந்தனர். தங்கள் மகனைக் கொன்றது, இஸ்ரேல் படை என்று தெரிந்தும், அப்பகுதியிலேயே தங்கள் மகனின் உறுப்புக்களை அவர்கள் தானம் செய்தது, பழிதீர்ப்பதன், அதாவது, பழியை முற்றிலுமாகத் துடைப்பதன் உச்சக்கட்டம்.

இஸ்மாயில், ஆப்லா என்ற அந்த பெற்றோர், எளிய மக்கள். இஸ்மாயில் சாதாரண ஒரு மெக்கானிக். அந்தப் பெற்றோரின் உன்னதச் செயலைப் பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, இஸ்மாயில் சொன்னது இதுதான்: "என் மகனின் உறுப்புக்கள் வழியே வாழப்போகும் இஸ்ராயேல் குழந்தைகள், தங்கள் காலத்திலாவது, சமாதானத்தை விரும்புவார்கள் என்ற நம்பிக்கையில்தான், இந்த உறுப்புகளை இங்கு நாங்கள் தானம் செய்தோம்."

பல்லாயிரத்தில் ஒருவர் இவ்வாறு இருப்பதால்தான் இந்த உலகம், இன்னும், மனிதர்கள் வாழும் உலகமாக இருக்கிறது. அன்புக்கும், நம்பிக்கைக்கும் விலைகுறித்து, கணக்குப் பார்க்கும் பலரது நடுவில், கவிதையாக, நல்ல கனவாக வாழும் எசாயா, திருமுழுக்கு யோவான், இஸ்மாயில், ஆப்லா போன்ற இறைவாக்கினர்கள், தொடர்ந்து நம்மிடையே வாழவேண்டும் என்று வேண்டுவோம். கணக்குப் பார்க்கும் உலகை விட, நல்ல கனவுகளில், கவிதைகளில் உலகம் வளர வேண்டும் என செபிப்போம். நம்பிக்கை தரும் கனவுகளை இத்திருவருகைக் காலத்தில் துரத்திச் செல்வோம்! சிங்கத்தைத் துரத்திச் செல்வோம்!

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!