|
Year B |
|
பொதுக்காலம்
33ம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
உன் இனத்தார் விடுவிக்கப்படுவர்.
இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 12: 1-3
"அக்காலத்தில் உன் இனத்தார்க்குத் தலைமைக் காவலரான மிக்கேல்
எழும்புவார். மக்களினம் தோன்றியது முதல் அக்காலம் வரை இருந்திராத
துன்ப காலம் வரும்.
அக்காலத்தில் உன் இனத்தார் விடுவிக்கப்படுவர். நூலில் யார்
யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ, அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள்.
இறந்துபோய் மண்புழுதியில் உறங்குகிற அனைவருள் பலர் விழித்தெழுவர்;
அவருள் சிலர் முடிவில்லா வாழ்வு பெறுவர்; வேறு சிலரோ வெட்கத்திற்கும்
முடிவில்லா இழிவுக்கும் உள்ளாவர்.
ஞானிகள் வானத்தின் பேரொளியைப் போலவும், பலரை நல்வழிக்குக் கொணர்ந்தவர்
விண்மீன்களைப் போலவும், என்றென்றும் முடிவில்லாக் காலத்திற்கும்
ஒளிவீசித் திகழ்வர்."
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
(திபா
16: 5,8. 9-10. 11 (பல்லவி: 1)
Mp3
=================================================================================
பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் அடைக்கலம்
புகுந்துள்ளேன்.
5 ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய
பங்கைக் காப்பவரும் அவரே; 8 ஆண்டவரை எப்போதும் என் கண்முன்
வைத்துள்ளேன்; அவர் என் வலப் பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன்.
பல்லவி
9 என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது;
என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். 10 ஏனெனில், என்னைப்
பாதாளத்திடம் ஒப்புவிக்க மாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக்
காண விடமாட்டீர். பல்லவி
11 வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில்
எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப் பக்கத்தில் எப்போதும்
பேரின்பம் உண்டு. பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
ஒரே பலியினால் என்றென்றைக்கும் நிறைவுள்ளவர் ஆக்கினார்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10:
11-14,18
சகோதரர் சகோதரிகளே, ஒவ்வொரு குருவும் நாள்தோறும் இறை ஊழியம்
புரியும்போது மீண்டும் மீண்டும் அதே பலிகளைச் செலுத்தி வருகிறார்.
அவையோ பாவங்களை ஒருபோதும் போக்க இயலாதவை.
ஆனால், இவர் ஒரே பலியைப் பாவங்களுக்காக என்றென்றைக்கும் எனச்
செலுத்திவிட்டு, கடவுளின் வலப் பக்கத்தில் அமர்ந்துள்ளார். அங்கே
தம் பகைவர் தமக்குக் கால்மணை ஆக்கப்படும்வரை காத்திருக்கிறார்.
தாம் தூயவராக்கியவர்களை ஒரே பலியினால் என்றென்றைக்கும்
நிறைவுள்ளவராக்கினார். எனவே பாவ மன்னிப்புக் கிடைத்தபின் பாவத்திற்குக்
கழுவாயாகச் செலுத்தும் பலிக்கு இடமே இல்லை.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
லூக் 21: 36
அல்லேலூயா, அல்லேலூயா! மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு
எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக்
கூட்டிச் சேர்ப்பார்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 24-32
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: அந்நாள்களில்
வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டு விடும்; நிலா ஒளி
கொடாது. விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்;
வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும்
மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள்.
பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு
கோடியிலிருந்து விண்ணுலகில் மறு கோடிவரை நான்கு திசைகளிலிருந்தும்
தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.
அத்திமரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள். அதன்
கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக் காலம் நெருங்கி
வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள்.
அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார்
என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.
இவையனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக
உங்களுக்குச் சொல்கிறேன். விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால்
என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா. ஆனால் அந்த நாளையும் வேளையையும்
பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது; விண்ணகத்திலுள்ள
தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
"என் இல்லம் இறைவேண்டலின் வீடு"
பெருநகர் ஒன்றில் பிரிவினை சபையைச் சேர்ந்த மதபோதகர் ஒருவர் இருந்தார்.
அவருக்கு குதிரைகளின்மீதும், குதிரைப் பந்தயத்தின்மீது அதிகமான
ஈடுபாடு இருந்தது. தன்னுடைய வீட்டில்கூட ஒரு உயிர்தரக்
குதிரையை வாங்கி வைத்திருந்தார். குதிரைகளின்மீது இவருக்கு இருந்த
அதிகமான நாட்டத்தைக் கண்ட ஒரு குதிரை வியாபாரி ஒருவர், தன்னிடம்
இருந்த குதிரையை விற்கவேண்டும் என நினைத்து, அவரிடம் பேச்சுக்
கொடுத்தார்:
"ஐயா உங்களுக்கு குதிரையின்மீது அதிகமான நாட்டம் இருக்கிறது என்பதை
நான் அறிவேன். என்னிடம் ஒரு குதிரை இருக்கிறது. அது பார்ப்பதற்கு
மிகவும் அழகாக இருக்கும். அரபு நாட்டிலிருந்து பிரத்யோகமாக இறக்குமதி
செய்யப்பட்ட குதிரை அது. பழகுவதற்கு மிகவும் சாதுவானது. சிறிய
குழந்தைகள்கூட அதில் ஏறிக்கொண்டு சவாரி செய்யலாம். அதற்காக
நீங்கள் பெரிதாக எதையும் செலவழிக்கவேண்டாம். பராமரிப்புச் செலவுகூட
மிகக்குறைவு.
மேலும் அதைப் பார்த்து நீங்கள் போ என்றால் போகும். நில் என்று
சொன்னால் நிற்கும். அவ்வளவு கீழ்படிதலுள்ள குதிரை அது. இப்படிப்பட்ட
ஒரு குதிரையை உங்கள் வாழ்நாளில் நீங்கள் பார்த்திருக்கவே
மாட்டீர்கள். அதனால் நீங்கள் அந்தக் குதிரையை வாங்கிக்கொள்ளுங்கள்"
என்று அந்த குதிரை வியாபாரி மதபோதகரைக் கெஞ்சிக் கேட்டார்.
எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த மதபோதகர்
வியாபாரி, "இவ்வளவு கீழ்படிதலுக்கு ஒரு குதிரையை என்னுடைய ஆலயத்தில்
உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளலாமா?, ஏனென்றால் என்னுடைய ஆலயத்திற்கு
வரும் இறைமக்கள் யாருமே என்னுடைய சொல்பேச்சுக் கேட்பதில்லை,
எனக்குக் கீழ்படிந்து நடப்பதுமில்லை" என்றார்.
இதைக் கேட்டு அந்த குதிரை வியாபாரி பேச்சற்று நின்றார்.
ஆலயமும், அதில் நடக்கும் வழிபாடும் மக்களின் மனதில் மாற்றத்தையும்,
தூய அன்பையும் கொண்டுவரவேண்டும். அத்தகைய மாற்றமும், அன்பும்
நிகழவில்லை என்றால், ஆலயத்தாலும், அதில் நிகழும் வழிபாட்டுக்
கொண்டாட்டங்களாலும் ஒரு பயனும் இல்லை.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு எருசலேம் திருக்கோவிலில்
வியாபாரம் செய்துவந்தவர்களை விரட்டி அடிக்கின்றார்; அதன் புனிதத்தன்மையையும்,
மாண்பையும் நிலைநாட்டுகிறார். இயேசுவின் இந்த தீரமிக்க/வீரமிக்க
செயலுக்குப் பின்னால் இருக்கும் உண்மையைச் சிந்தித்துப் பார்ப்பது
நமது கடமையாகும்.
தொடக்க காலத்தில் யூத சமூகம் ஒரு நாடோடிச் சமூகமாகவே வாழ்ந்துவந்தது.
எனவே அவர்களுக்கென்று கோவில் கிடையாது. அவர்கள் இறைவனை மலைதனிலும்,
(யோவான் 4:20) இன்ன பிற இடத்திலும் வழிபாட்டு வந்தார்கள். அதன்பிறகு
ஆண்டவராகிய கடவுள் மோசேக்கு சீனாய் மலையில் கொடுத்த பத்துக்கட்டளைகளையும்,
ஆரோனின் கோலையும், மன்னாவையும் உடன்படிக்கைப் பேழையில் வைத்து,
அதில் கடவுளின் பிரசன்னத்தை உணர்ந்து வாழ்ந்துவந்தார்கள். முதல்முறையாக
தாவீது அரசன் கடவுளுக்குக் கோவில் கட்ட நினைத்தபோது, கடவுள்
அவரிடம், "நீ மிகுதியான குருதியைச் சிந்தினாய், பெரும் போர்களை
நடத்தினாய், எனக்கு முன்பாகத் தரையில் நீ மிகுதியான குருதியைச்
சிந்தியதால், என் பெயருக்கு நீ கோவில் கட்டவேண்டாம்" என்கிறார்.
(1குறி: 22:8)
எனவே, யூத மக்களுக்கான முதல் ஆலயம் தாவீதின் மகனான சாலமோனின்
காலத்தில்தான் கட்டப்படுகிறது. அவர் கடவுளுக்காக கோவிலைக் கட்டி,
அதை இவ்வாறு நேர்ந்தளிக்கிறார், "இஸ்ரயேல் மக்களைச் சாராத அன்னியர்
ஒருவர் உமது பெயரை முன்னிட்டுத் தொலை நாட்டிலிருந்து வந்து,
மாண்புமிக்க உமது பெயரையும், வலிமை வாய்ந்த உமது கையையும், ஆற்றல்
மிகுந்த உமது புயத்தையும் பற்றிக் கேள்விப்பட்டு வந்து, இந்தக்
கோவிலை நோக்கி வேண்டுதல் செய்தால், உமது உறைவிடமாகிய
விண்ணிலிருந்து நீர் அவருக்கு செவிசாய்த்து அந்த அன்னியர் கேட்பதை
எல்லாம் அருள்வீராக".
ஆதலால், சாலமோன் அரசரால் கட்டப்பட்ட ஆலயம் எல்லா மக்களுக்கும்
பொதுவானது என்பதை நம்முடைய மனதில் இருத்திக்கொளகொள்ளவேண்டும்.
இறைவாக்கினர் எசாயா இக்கருத்தை இன்னும் அழுத்தம் திருத்தமாகக்
கூறுவார், "என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைமன்றாட்டின்
வீடு" என்று (எசா 56:7). ஆகவே, எருசலேம் ஆலயம் யூதர்களுக்கு மட்டுமல்லாமல்
எல்லாருக்கும் பொதுவாக இருந்து, அதில் புறவினத்து மக்கள்
ஜெபிக்கக்கூடிய பகுதியில் வியாபாரம் நடந்ததால்தால்தான் ஆண்டவர்
இயேசு அங்கே வியாபாரம் செய்கின்றவர்களை விரட்டி அடிக்கின்றார்.
ஆலயம் இறைவேன்டலின் வீடு, அது வியாபாரத் தளமல்ல" என்பதை எண்பிக்கின்றார்.
இறைமக்கள் சமூகமாகிய நாம் இறைவன் தங்கிவாழும் இல்லத்திற்கு எந்தளவுக்கு
முக்கியத்துவமும், மதிப்பும் தருகிறோம் என்று சிந்தித்துப்
பார்க்கவேண்டும். "ஆண்டவன் சன்னதி, மனதிற்கு நிம்மதி" என்பார்கள்.
எனவே நாம் ஆலயத்தின் புனிதத்தன்மையை உணர்வோம். ஆர்வமாய் ஆண்டவரை
நாடிச் செல்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
இயேசுவின் இரண்டாம் வருகையும் இறுதித்
தீர்ப்பும்
முன்பொரு காலத்தில் பரோக்கா என்றொரு யூத இரபி இருந்தார். அவர்
கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்தவர். அதனால் மக்களுக்கு மத்தியில் அவருக்கு
மிகுந்த செல்வாக்கு இருந்தது.
ஒருநாள் அவர் கடைத்தெருவிற்குச் சென்றபோது, அங்கே ஓர் ஓரத்தில்
இறைவாக்கினர் எலியா இருப்பதைக் கண்டார். அவரைக் கண்டதும் பரோக்காவிற்கு
சந்தோசம் தாங்க முடியவில்லை. உடனே அவர் இறைவாக்கினர் எலியாவிடம்
சென்று அவருடைய கையைப் பிடித்துக்கொண்டு பேசத் தொடங்கினார்.
அவர் பேசிக்கொண்டிருந்தபோதே இறைவாக்கினர் எலியாவிடம், "ஐயா! இங்கே
இருக்கின்றவர்களில் இறுதித் தீர்ப்பின்போது யாராரெல்லாம் விண்ணகம்
செல்ல தகுதியுள்ளவர்கள்?" என்று கேட்டார். அப்போது அவர் ஒரு மனிதரைச்
சுட்டிக் காட்டினார். அவரிடம் சென்ற பரோக்கா, "ஐயா! நீங்கள் இப்போது
என்ன வேலை செய்துகொண்டிருக்கின்றீர்கள்?" என்று கேட்டார். அதற்கு
அம்மனிதர், "நான் சிறை அதிகாரியாக பணி
செய்துகொண்டிருக்கின்றேன். என்னுடைய பணியே சிறையில் இருக்கின்ற
ஆண் கைதிகளையும் பெண் கைதிகளையும் நல்ல முறையில் கவனித்து, அவர்களிடையே
எந்தவிதமான அசம்பாவித நிகழ்வும் நடக்காதவாறு கவனித்துக் கொள்வதுதான்"
என்றார். "நன்று" என்று சொல்லிவிட்டு அவர் அவரிடமிருந்து இறைவாக்கினர்
எலியாவிடம் வந்தார்.
பின்னர் அவர் இறைவாக்கினர் எலியாவிடம், "இந்தக் கூட்டத்தில் இருக்கின்ற
வேறு யாராது விண்ணகம் செல்லத் தகுதியுடையவர்களாக இருக்கின்றார்களா?"
என்று கேட்டார். அதற்கு அவர், "அதோ ஓரமாக நின்றுகொண்டு,
சிரித்துப் பேசி மகிழ்ந்து கொண்டிருக்கின்றார்களே, அவர்கள் இருவரும்
விண்ணகம் செல்ல தகுதியுள்ளவர்களாக இருக்கின்றார்கள்" என்றார்.
உடனே பரோக்கா அவர்கள் இருவரிடமும் சென்று, "நண்பர்களே! நீங்கள்
இருவரும் என்ன வேலை செய்கின்றீர்கள்?" என்று கேட்டார். அதற்கு
அவர்கள் இருவரும், "எங்களுடைய வேலையே மற்றவர்களை மகிழ்ச்சிப்
படுத்துவதுதான். நாங்கள இருவரும் யாராரெல்லாம் சோகமாக இருக்கின்றாகளோ
அவர்களிடம் கலகலப்பாகப் பேசி சந்தோசப்படுத்துவோம், எங்கெல்லாம்
சண்டைச் சச்சரவுகள் நடக்கின்றனவோ, அங்கெல்லாம் சென்று அமைதியை
ஏற்படுத்துவோம்" என்றார்கள். "அருமை, தொடர்ந்து அப்படியே
செய்யுங்கள்" என்று சொல்லிவிட்டு பரோக்கா அவர்கள் இருவரிடமிருந்தும்
விடைபெற்று, இறைவாக்கினர் எலியா இறைவாக்கினரிடம் வந்து,
"விண்ணகம் செல்வதற்கு யாராருக்கெல்லாம் தகுதி இருக்கின்றது என்பதை
இப்போது உணர்ந்துகொண்டேன். தான் இருக்கும் இடத்தில் மற்றவர்களுக்குப்
பிரயோஜனமாக வாழக்கூடிய யாவருமே விண்ணகம் தகுதி படைத்தவர்கள்"
என்று சொல்லி அவர் இறைவாக்கினர் எலியாவிடமிருந்து விடைபெற்றுச்
சென்றார்.
இறுதித் தீர்ப்பின்போது யாராருக்கெல்லாம் விண்ணகம் செல்வதற்குத்
தகுதி இருக்கின்றது என்கின்ற உண்மையை மேலே சொல்லப்பட்ட நிகழ்வு
நமக்கு அருமையாக எடுத்துரைக்கின்றது.
பொதுக்காலத்தின் முப்பத்தி மூன்றாம் ஞாயிறான இன்று நாம் படிக்கக்
கேட்ட வாசகங்கள் ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றியும்,
அதைத் தொடர்ந்து நடக்கூடிய இறுதித் தீர்ப்பையும் பற்றி எடுத்துக்
கூறுகின்றது. நாம் அவற்றைக் குறித்து இப்போது சிந்தித்துப்
பார்ப்போம்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, அந்நாட்களில் -இறுதி நாட்களில்-என்னவெல்லாம்
நடக்கும் என்பதைக் குறித்துப் பேசுகின்றார். அப்படிப்
பேசும்போது அவர் "அந்நாட்களில் வேதனைகளுக்குப் பிறகு கதிரவன்
இருண்டுவிடும்; நிலா ஒளி கொடாது; விண்மீன்கள் வானத்திலிருந்து
விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிகள் அதிரும். அப்போது மிகுந்த
வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள்மீது வருவதைக்
காண்பார்கள். பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில்
ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறுகோடிவரை நான்கு திசைகளிலிருந்தும்
தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்" என்கின்றார்
இயேசு. இங்கே இயேசு கூறுவதாக மாற்கு நற்செய்தியாளர் கூறுகின்ற
வார்த்தைகள் அவர் தனது நற்செய்தியின் மற்ற பகுதிகளில் பயன்படுத்தப்படும்
வார்த்தைகளிலிருந்து வித்தியாசப்படுவதை நாம் அறிந்துகொள்ளலாம்.
இதனை இன்னும் ஆழமாக அறிந்துகொள்ளவேண்டும் என்றால், யூதர்கள் காலத்தை
எவ்வாறு கணக்கிட்டார்கள் என்பதைப் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும்.
பொதுவாக யூதர்கள் காலத்தை இரண்டாகப் பிரித்தார்கள். ஒன்று இப்போது
இருக்கின்ற நிகழ்காலம். இன்னொன்று ஆண்டவர் வெளிப்படுகின்ற
பொற்காலம். நிகழ்காலத்தை அவர்கள் வேதனை நிறைந்ததாகவும் பொற்காலத்தை
மகிழ்ச்சி நிறைந்ததாகும் பார்த்தார்கள். ஆனால், இந்த இரண்டு காலங்களுக்கும்
இடையே ஆண்டவரின் நாளானது இருக்கும். அந்த நாளில் தீமைகள் அழிக்கப்பட்டு,
நன்மையானது நிலைநாட்டப்படும் என்று நம்பினார்கள். இந்த ஆண்டவரின்
நாளுக்கு முன்புதான் மேலே நாம் வாசித்த போர்களும், கலகங்களும்,
இயற்கைப் பேரிடர்களும் நடக்கும் என்று நம்பினார்கள். இதைத்தான்
ஆண்டவர் இயேசு மானிட மகனின் இரண்டாம் வருகையைக் குறித்தும் தொடர்ந்து
வருகின்ற இறுதித்தீர்ப்பைக் குறித்துப் பேசுகின்றபோது
பேசுகின்றார். இயேசுவின் இவ்வார்த்தைகள் நமக்கு வேண்டுமானால்
புதிதாக, அச்சம் தரக்கூடியதாக இருக்கலாம். ஆனால், யூதர்களைப்
பொறுத்தளவில் அவை மிகவும் பழக்கப்பட்ட வார்த்தைகள் தான்.
இங்கே நாம் தியானித்த வார்த்தைகளும், இதனை அடியொட்டி வரக்கூடிய
இன்றைய முதல்வாசகமும் நமக்கு ஒருசில செய்திகளைத் தருகின்றன. அவை
என்ன என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.
மானிடமகனது இரண்டாம் வருகை நிச்சயம் நிகழும். இதுதான் இன்றைய
இறைவார்த்தை நமக்குச் சொல்லும் முதன்மையான செய்தியாக இருக்கின்றது.
எப்படி அத்திமரத்தில் உள்ள இலைகள் உதிர்ந்து தளிர்ப்பது
கோடைக்காலம் நெருங்கி வந்துவிட்டதற்கான அறிகுறியாக இருக்கின்றதோ
அதுபோன்று உலகில் நிகழ்வும் போர்களும் வன்முறைகளும், குழப்பங்களும்,
இயற்கைப் பேரிடர்களும் மானிட மகனது வருகைக்கான முன் அறிகுறி இருக்கின்றது.
இயேசு மானிட மகன் எப்போது வருவார் எந்தைக் குறித்து திட்டவட்டமாகத்
தெரிவிக்காவிட்டாலும்கூட, அவருடைய இரண்டாம் வருகை நிச்சயம் நிகழ்வும்
என்று உறுதிபடச் சொல்கின்றார்.
மானிடமகனது வருகையைத் தொடர்ந்து இறுதித் தீர்ப்பானது நடைபெறும்.
இது இன்றைய இறைவார்த்தை நமக்கு எடுத்துரைக்கும் இரண்டாவது
செய்தியாக இருக்கின்றது. நற்செய்தியில் இயேசு, "மானிட மகன் வானதூதரை
அனுப்பி, மண்ணுலகில் ஒருகோடியிலிருந்து விண்ணுலகில் மறுகோடிவரை
நான்கு திசையிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச்
சேர்ப்பார்" என்று கூறுகின்ற வார்த்தைகள் இறுதித்
தீர்ப்பினைத்தான் நமக்கு நினைவூட்டுகின்றன. இறைவனின் அரசில்
நுழைவதற்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றவர்கள் எந்த அடிப்படையில்
தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு
அழகாக எடுத்துக் கூறுகின்றது.
முதல் வாசகத்தில், "ஞானிகள் வானத்தின் பேரொளியைப் போலவும் பலரை
நல்வழிக்குக் கொணர்ந்தவர் விண்மீன்களைப் போலவும், என்றென்றும்
முடிவில்லாக் காலத்திற்கும் ஒளிவீசித் திகழ்வர்" என்று
வாசிக்கின்றோம். அப்படியானால் பிறரை நல்வழிக்குக் கொண்டுவருவோர்தான்
இறைவனின் அரசில் நுழைவதற்கு தேர்தெடுக்கப்படுகின்றார்கள் என்பது
உண்மையாகின்றது. பிறரை நல்வழிப்படுத்துவோர் நிச்சயம் நல்வழியில்
நடந்திருப்பார் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. ஆகையால், மானிடமகன்
அளிக்கின்ற இறுதித் தீர்ப்புக்கு நாம் நம்மையே தகுதியுள்ளவர்களாக
மாற்றிக் கொள்ளவேண்டும் என்றால், நாம் நல்வழியில் நடந்து, மற்றவரையும்
நல்வழிக்குக் கொண்டு வரவேண்டும்.
எப்போதும் விழிப்பாய் இருக்கவேண்டும். இது இன்றைய இறைவார்த்தை
எடுத்துரைக்கும் மூன்றாவது முக்கியமான செய்தியாக இருக்கின்றது.
மானிட மகனது வருகையைக் குறித்துப் பேசுகின்றபோது இயேசு, "அந்த
நாளையும் வேளையையும் பற்றி தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும்
தெரியாது; விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது"
என்பார். அப்படியானால் மானிட மகன் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.
அதற்காக நாம் விழிப்பாய், ஆயத்தமாய் இருக்கவேண்டும் என்பதுதான்
நாம் புரிந்துகொள்ளவேண்டிய செய்தியாக இருக்கின்றது.
மானிட மகனது வருகைக்கு நாம் ஆயத்தமாக இருக்கின்றோமா என்பது
நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது. பல நேரங்கில்
நாம் போதுமான நேரம் இருக்கின்றபோது அதனைப் பயனில்லாமல் கழித்துவிட்டு,
கடைசி நேரத்தில் அவசரப்பட்டு எதையுமே சரியாகச் செய்யாமல் தத்தளிக்கின்றோம்.
கிறிஸ்தவ வாழ்விற்கு அத்தகைய மெத்தனப் போக்கு கூடவே கூடாது.
கிறிஸ்துவின் வழியில் நடக்கும் நாம் எப்போதும் எதற்கும் ஆயத்தமாக
இருக்கவேண்டும்.
முன்பொரு காலத்தில் கடற்கரையோரம் இருந்த ஒரு ஊரில் எண்ணையால்
எரியும் கலங்கரை விளக்கு ஒன்று இருந்து. அந்தக் கலங்கரை விளக்கை
செயல்படுத்த ஒரு காப்பாளன் புதிதாக வேலைக்குச்
சேர்ந்திருந்தான். வாராவாரம் கலங்கரை விளக்கிற்குத் தேவையான எண்ணையை
கப்பல் நிறுவனங்கள் அவனுக்குத் தப்பாமல் அனுப்பிக் கொண்டிருந்தன.
காப்பாளனின் முக்கியமான வேலை கலங்கரை விளக்கைக் காப்பது, விளக்கு
அணையாமல் செலுத்திக் கொண்டிருப்பது மட்டுமே. தொடக்கத்தில் எல்லாம்
நன்றாகப் போய்க்கொண்டிருந்தது.
ஒரு கடுங்குளிர்கால இரவில் கலங்கரை விளக்கின் அலுவலகக் கதவை
யாரோ தட்டினார்கள். காப்பாளன் கதவைத் திறந்து பார்த்தான். பக்கத்து
ஊரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் குளிரில் நடுங்கிக் கொண்டே
நின்று கொண்டிருந்தார். "தம்பி! என் வீட்டில் விளக்கெரிக்கக்கூட
எண்ணை இல்லை. நீ கொஞ்சம் எண்ணை கொடுத்தால் பிழைத்துக்
கொள்வேன்" என்று கெஞ்சினார். மனமிளகிய காப்பாளன் அவருக்குக்
கொஞ்சம் எண்ணை கொடுத்தனுப்பினான். அடுத்த நாள் இரவு மறுபடியும்
கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்தால் ஒரு வழிப்போக்கன்.
"அண்ணே! நான் அவசரமாக ஊருக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். என்
கை விளக்கில் எண்ணை தீர்ந்து விட்டது. பயணத்திற்கு எண்ணை
கொடுத்து உதவினால் மிகவும் நன்றி உள்ளவனாக இருப்பேன்" என்று
வெகு இளக்கமாகப் பேசினான். காப்பாளனும் வழிப்போக்கனுக்கு எண்ணை
கொடுத்தனுப்பினான். மூன்றாம் நாளும் இதே கதை தொடர்ந்தது. இப்போது
கதவைத் தட்டியது ஒரு மூதாட்டி. "ராசா. வீட்டில் பச்சைக் குழந்தைக்குப்
பால் காய்ச்ச அவசரமாக அடுப்பு எரிக்கணும். வீட்டில் எண்ணை
தீர்ந்து போய் விட்டதப்பா! நீதான் அவசரத்துக்குக் கடவுள் போல்
கை கொடுத்து உதவணும்" என்றாள். அவளுக்கும் காப்பாளன் எண்ணை
கொடுத்தான்.
வாரக் கடைசி. அடுத்த வாரத்திற்கான எண்ணையைக் கொண்டுவரும் வண்டி
வர இன்னும் இரண்டு நாட்கள் இருந்தன. காப்பாளன் வழக்கம்போல விளக்கிற்கு
எண்ணை நிரப்ப பீப்பாயைத் திறந்து பார்த்தான். அப்போதுதான்
பீப்பாயில் இருந்த எண்ணை வாரக் கடைசிவரை விளக்கைச் செலுத்தப்
போதாது என்று புரிந்தது. இருந்த எண்ணையை விளக்கில் நிரப்பி அதை
எரிய விட்டுவிட்டு பதறிப் போய் ஊருக்குள் ஒடினான். மிக அவசரமாக
விளக்கிற்கு எண்ணை தேவை. கடன் வாங்கியவர்கள் திருப்பிக்
கொடுத்து விடுங்கள் என்று கேட்டான். எல்லோரும் கை விரித்து
விட்டார்கள். வாரக் கடைசியில் இரவில் எண்ணை தீர்ந்து போய் விளக்கு
அணைந்து விட்டது. இதனால் இரண்டு கப்பல்கள் அன்று இரவு கலங்கரை
விளக்கு எரியாததால் வழி தவறிப் போய் பாறையில் மோதிச் சிதறி
விட்டன.
கலங்கரை விளக்குக் காப்பாளன் ஆபத்து உதவுகிறேன் பேர்வழி என
நினைத்துக்கொண்டு தன்னுடைய பொறுப்பில் கண்ணும் கருத்துமாய் இல்லாமல்,
விழிப்பில்லாமல் இருந்தமையால் மிகப் பெரிய அழிவு ஏற்பட காரணமானான்.
மானிட மகனது வருகையின்போது விழிப்பில்லாமல், ஆயத்தமில்லாமல் இருந்தால்
இதுபோன்ற அழிவைத்தான் நாம் சந்திக்க நேரிடும்.
ஆகவே, மானிட மகனது வருகைக்கு நம்மையே தயாரிக்கும் பொருட்டு எப்போதும்
விழிப்பாகவும் ஆயத்தமாகவும் இருப்போம். இறைவன் வரும்வரை அவருக்கு
உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்
பெறுவோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
"மானிட மகன் கதவை நெருங்கி வந்துவிட்டார்"
நிகழ்வு
"அம்மா! உங்களுக்கு இயேசுவின் இரண்டாம் வருகையில் நம்பிக்கை
இருக்கிறதா? இப்படியொரு கேள்வியைக் கேட்டுவிட்டுத் தன்
அம்மாவின் பதிலுக்காகக் காத்திருந்தாள் பத்து வயது ஜெசி.
"இயேசு மீண்டும் வருவார் என்பதில் எனக்கு முழுநம்பிக்கை
இருக்கின்றது. அது சரி, நீ ஏன் திடீரென்று என்னிடத்தில்
இப்படியொரு கேள்வியைக் கேட்கின்றாய்?" என்று ஜெசியின் அம்மா
அவளைப் பார்த்துக் கேட்டாள். "இன்றைய "ஞாயிறு மறைக்கல்வி
வகுப்பில், இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றி மறைக்கல்வி
ஆசிரியர் கற்பித்தார். அதனால்தான் நான் இந்தக் கேள்வியை
உங்களிடத்தில் கேட்கின்றேன்" என்று சொல்லிவிட்டு, ஜெசி தன்
அம்மாவிடம், "இன்றைக்கு இயேசு வருவாரா?" என்றாள். "ஆமாம்"
என்று தன் அம்மாவிடமிருந்து பதில் வந்தும், "இன்னும் சிறிது
நேரத்தில் இயேசு வருவாரா?" என்று அடுத்த கேள்வியைக் கேட்டாள்
ஜெசி.
அதற்கும் ஜெசியின் அம்மா, "ஆமாம்" என்றதும், "அப்படியானால்,
உடனே நீங்கள் என்னுடைய தலையை வாரி, எனக்குப் பொட்டு வைத்துப்
பூச் சூடுவீர்களா?" என்றாள் ஜெசி. "ஏன்?" என்று ஜெசியின் அம்மா
அவளிடம் கண்கள் விரியக் கேட்டபொழுது, ஜெசி மிகவும் தீர்க்கமான
குரலில், "அப்பொழுதுதானே, இயேசு மீண்டுமாக வருகின்றபோது, அவரை
எதிர்கொள்வதற்கு நான் தயாராக இருக்க முடியும்!" என்றாள்.
டான் ஹுசாங் (Don Hussong) என்ற எழுத்தாளர் சொல்லக்கூடிய இந்த
நிகழ்வு, நாம் ஒவ்வொருவரும் இயேசு மீண்டுமாக வருகின்றபோது,
அவரை எதிர்கொள்வதற்கு ஆயத்தமாக இருக்கவேண்டும் என்ற செய்தியைத்
தருகின்றது. பொதுக்காலத்தின் முப்பத்து மூன்றாம் ஞாயிறான இன்று
நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, எப்போது வேண்டுமானாலும்
வரக்கூடிய மானிடமகனுடைய வருகைக்காக நாம் ஆயத்தமாக
இருக்கவேண்டும் என்ற செய்தியை நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
அது குறித்து நாம் சிந்திப்போம்.
அமைதிக்கு முன்பு புயல்
"புயலுக்குப் பின்னே அமைதி" என்று நாம் சொல்லக்
கேட்டிருப்போம். இதையே நாம் வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால்,
"அமைதிக்கு முன்பு புயல்" என்று சொல்லலாம். "அமைதிக்கு முன்பு
புயல்" என்ற இந்தச் சொல்லாடலை இயேசுவின் இரண்டாம் வருகையோடு
ஒப்பிட்டுப் பார்த்தால், அதை இன்னும் தெளிவாகப்
புரிந்துகொள்ளலாம். ஆம், அமைதி என்ற இயேசுவின் இரண்டாம்
வருகைக்கு முன்பு, புயல் என்ற இதுவரை இருந்திராத துன்பக் காலம்
வரும். அத்துன்பக் காலத்தில், இன்றைய நற்செய்தியில் இயேசு
சொல்வது போல், கதிரவன் இருண்டுவிடும்; நிலா ஒளி கொடாது;
விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமாயிருக்கும்;
வான்வெளிக் கோள்கள் அதிரும். வானில் தோன்றும் இந்த அடையாளங்கள்
எல்லாம், ஒருவகையில் நமக்கு அச்சமூட்டுபவையாக,
திகிலூட்டுபவையாக இருந்தாலும், இன்னொரு வகையில் இவையெல்லாம்
இயேசுவின் இரண்டாம் வருகையை வெளிப்படுத்தும் அடையாளங்கள்
ஆகும். ஆகையால், அமைதி என்ற இயேசுவின் இரண்டாம் வருகைக்கு
முன்பாகப் புயல் என்ற துன்பங்களை நாம் எதிர்கொள்ள வேண்டியதைத்
தவிர்க்க முடியாது.
கால்மனை ஆக்கப்படுவர்
மானிட மகனுடைய வருகைக்கு முன்பு இதுவரை இருந்திராத துன்பக்
காலம் இருக்கும் என்று இன்றைய இறைவார்த்தை எடுத்துரைக்கும் அதே
வேளையில், அவருடைய பகைவர் கால்மனை ஆக்கப்படுவர் என்ற மற்றொரு
செய்தியையும் எடுத்துரைக்கின்றது.
"பகைவர் கால்மனை ஆக்கப்படுவர்" என்று இன்றைய இரண்டாம்
வாசகத்தில் எடுத்தாளப்படுகின்ற வார்த்தைகள், திருப்பாடல் 110:1
இல் இடம்பெறுகின்றன. மெசியாவைக் குறித்துத் தாவீது மன்னர்
பாடும் இப்பாடல், மெசியாவின் பகைவர்கள் அனைவரும்
வீழ்த்தப்பட்டுக் கால்மனையாக்கப்படுவர் என்ற செய்தியைத்
தருகின்றது. இங்கே குறிப்பிடப்படும் மானிட மகனின் பகைவர்கள்
என்பவர்களை அவர்மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள், அவரைப்
புறக்கணித்தவர்கள், அவருடைய விழுமியங்களுக்கு எதிராகச்
செயல்படுபவர்கள் ஆகியோரோடு நாம் தொடர்புபடுத்திப் பார்த்துக்
கொள்ளலாம். இத்தகையயோர் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாவர் என்பது
உறுதி.
வாழ்வின் நூலில் பெயர் பொறிக்கப்பட்டோர் மீட்கப்படுவர்
மானிட மகனுடைய வருகைக்கு முன்பு அவருடைய பகைவர் கால்மனை
ஆக்கப்படுவர் எனில், அவருடைய வருகையின்போது அவர்மீது நம்பிக்கை
கொண்டோர் அல்லது வாழ்வின் நூலில் இடம்பெற்றோர் மீட்கப்படுவர்.
இதைத் தானியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம்
தெளிவாக எடுத்துக்கூறுகின்றது.
வாழ்வின் நூலைப் பற்றிய குறிப்பு திருவெளிப்பாட்டில்
இடம்பெறுகின்றது. இந்நூலில் இறந்தோரின் செயல்கள்
எழுதப்பட்டிருந்ததால், அவர்களுக்கு அவர்களுடைய
செயல்களுக்கேற்பத் தீர்ப்பு வழங்கப்பட்டது என்று அங்கே
சொல்லப்படுகின்றது (திவெ 20:12). இன்றைய முதல் வாசகம்,
வாழ்வோரின் நூலில் பெயர் பொறிக்கப்படுவர் மீட்கப்படுவர்
என்றும், அந்த வாழ்வின் நூலில் இடம்பெறும் ஞானிகளும், பலரை
நல்வழிக்குக் கொண்டுவந்தோரும் முடிவில்லாக் காலத்திற்கும்
ஒளிவீசுவர் என்கிறது.
வாழ்வின் நூலில் இடம்பெறும் "ஞானிகளை" ஆண்டவர்மீது நம்பிக்கை
கொண்டு அவர் வழியில் நடந்தவர்களோடு ஒப்பிடலாம். இவர்கள்
ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டு, நல்லன செய்ததால் வாழ்வு
பெறுகின்றார்கள் (யோவா 5:29). ஆகையால், நாம் வாழ்வின் நூலில்
இடம்பெறுவதற்கும், அதனால் வாழ்வு பெறுவதற்கும் ஆண்டவரில்
நம்பிக்கை கொண்டு வாழ்வது மிகவும் இன்றியமையாதது.
இங்கே நாம் ஒரு முக்கியமான செய்தியைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
அது என்னவெனில், மானிடமகன் வரும் நாளையும் வேளையும் பற்றித்
தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது என்பதுதான்.
இன்றைக்குப் பலர் "மானிட மகன் இதோ வந்துவிட்டார்", அதோ
வந்துவிட்டார்" என்று சொல்லி மக்களைத் திசை திருப்பிக்
கொண்டிருக்கின்றார்கள். பவுல் எபேசு நகர் மூப்பர்களிடம்
சொன்னதுபோன்று, கொடிய ஓநாய்கள் போன்ற போலி இறைவாக்கினர்கள்
இறைமக்கள் நடுவில் நுழைந்து மந்தையைச் சிதறடிக்கின்றனர்;
மந்தையைக் கடுமையாகத் தாக்குகின்றனர் (திப 20:29). இப்போலி
இறைவாக்கினர்களிடமிருந்து இறைமக்களைக் காத்து, அவர்களை
நல்வழிக்கு இட்டுச் சென்று, நாமும் நல்வழியில் நடப்பது
அவசியமாக இருக்கின்றது. இவ்வாறு செய்தால், நாம் வாழ்வின்
நூலில் இடம்பெற்று, முடிவில்லாக் காலத்திற்கும் ஒளிவீசுவோம்
என்பது உறுதி.
ஆதலால், நாம் மானிடமகன்மீது ஆழமான நம்பிக்கை வைத்து, நாமும்
நல்வழியில் நடந்து, மற்றவரையும் நல்வழிப்படுத்தி, என்றும்
ஒளிவீசும் விண்மீன்கள் ஆவோம்.
சிந்தனை
"உன்னிடம் ஒப்படைக்கப்பட்டதைப் பாதுகாப்பாயாக" (1 திமொ 6:20)
என்று பவுல் திமொத்தேயுக்குக் கூறுவார். எனவே, நாம் நம்மிடம்
ஒப்படைக்கப்பட்ட இறைமக்களை நல்வழிக்குக் கொண்டு வந்து, நாமும்
ஆண்டவர்மீதுகொண்ட நம்பிக்கையின் மூலம் நல்வழியில் நடந்து,
வாழ்வின் நூலில் இடம்பெறுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
நான் அசைவுறேன்!
ஆண்டின் பொதுக்காலம் 33ம் ஞாயிறு
(நவம்பர் 14, 2021)
தானியேல் 12:13
எபிரேயர் 10:1114, 18
மாற்கு 13:2432
ஆண்டின் பொதுக்காலத்தின் இறுதி ஞாயிறு இன்று. வருகின்ற ஞாயிறு
கிறிஸ்து அரசர் பெருவிழா. இன்றைய ஞாயிற்றை ஏழைகள் ஞாயிறு
என்றும் நாம் சிறப்பிக்கின்றோம். இன்றைய நாளின் வாசகங்கள்
உலகத்தின் இறுதி நாள்கள் பற்றிப் பேசுகின்றன.
முதல் வாசகம் தானியேல் நூலின் இறுதிப் பகுதியிலிருந்து
எடுக்கப்பட்டுள்ளது. திருவெளிப்பாட்டு நடை என்னும் இலக்கியக்
கூற்றை நாம் இங்கே காண்கிறோம். இந்த நடையில் நிறைய
உருவகங்களும், அடையாளங்களும், குறிச்சொற்களும்
பயன்படுத்தப்படுகின்றன. துன்பம், போர், வன்முறை, வறுமை, பசி,
பஞ்சம், இயற்கைப் பேரிடர்கள் என வருந்தும் உலகம்
நொடிப்பொழுதில் முடியும் அல்லது மாறும் என மொழிகிறது இந்த நடை.
சிரிய அரசர் நான்காம் எபிஃபேனஸ் காலத்தில் யூதர்கள் அனுபவித்த
துன்பங்களின் போது தானியேல் காட்சி காண்கின்றார். நீதித்
தீர்ப்பின்போது என்ன நடக்கும் என்பதைக் காட்சியாகக் காண்கிறார்
தானியேல். மிக்கேல் என்னும் அதிதூதர் யூத நாட்டின் காவல்
தூதராக இருக்கின்றார். மக்களின் கருத்துகளைக் கடவுள்முன்
கொண்டு செல்பவர் இவரே. கடவுளின் கட்டளைகளை உடனடியாக
நிறைவேற்றுபவரும் இவரே. உலக முடிவில் தீமைக்கு முடிவு
கட்டுவதற்காக கடவுள் மிக்கேல் அதிதூதரை அனுப்புகிறார். இந்த
நேரத்தில் இறந்தோர் உயிர் பெறுவர். நல்லோர் எனவும், தீயோர்
எனவும் இரு குழுக்களாக அவர்கள் பிரிக்கப்படுவர். தானியேல்
நூலைப் பொருத்தவரையில் நல்லோர் என்பவர் கடவுளுக்குப்
பிரமாணிக்கமாக இருந்து, கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து,
துன்பங்களை ஏற்றுக்கொண்டோர் ஆவர்.
இரண்டாம் வாசகத்தில், எருசலேமில் வாழ்ந்த தலைமைக்
குருக்களுக்கும் ஒப்பற்ற தலைமைக் குருவாம் இயேசுவுக்கும் இடையே
உள்ள வேறுபாடுகளைத் தொடர்ந்து பட்டியலிடுகின்றார் ஆசிரியர்.
ஒரே பலியால் - தன் உடலால் - நிறைவுள்ளவராக்குகிறார் இயேசு.
நிறைவுள்ளவராக்குதல் என்பது பலி செலுத்தப்பட்டு
ஏற்றுக்கொள்ளப்படுதலைக் குறிக்கின்றது.
நற்செய்தி வாசகத்தில், மாற்கு நற்செய்தியில் உள்ள
திருவெளிப்பாட்டு நடைப் பகுதியை உலக இறுதியை
வாசிக்கின்றோம். உலக இறுதியின்போது வான்வெளியில் நிகழும்
மாற்றங்களையும், மானிட மகனின் வருகையையும் முன்மொழிகின்ற இயேசு
(மாற்கு), 'விண்ணும் மண்ணும் ஒழிந்து போகும். என் வார்த்தைகள்
ஒழிய மாட்டா' என்கிறார். மேலும், அந்த நாள் வானகத் தந்தைக்கு
மட்டுமே தெரியும்.
ஆக, தொடங்கியது அனைத்தும் முடிவுறும் என்றும், இறுதியில்
நல்லோர் வெல்வர் என்றும், இயேசுவின் வழியாக நாம் அனைவரும்
நிறைவுள்ளவராக்கப்படுவோம் என்றும் முன்மொழிகின்றது இன்றைய
இறைவாக்கு வழிபாடு.
உலகம் அழிந்தாலும், வான்கோள்கள் அதிர்ந்தாலும், நல்லோர்-தீயோர்
எனப் பிரிக்கப்பட்டாலும், நமக்கு இவை அனைத்தும் அச்சம்
தந்தாலும், 'நான் அசைவுறேன்!' எனத் துணிவோடும் உறுதிபடவும்
கூறுகின்றார் பதிலுரைப் பாடல் ஆசிரியர் (திபா 16). 'ஆண்டவரை
எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன். அவர் என் வலப் பக்கம்
உள்ளார். எனவே, நான் அசைவுறேன்' என்கிறார் பாடல் ஆசிரியர்.
ஆண்டவரைத் தன் கண்முன் வைத்துள்ளவர்கள் அசைவுறுவதில்லை.
இன்று நான் கண்ட திருப்பலி ஒன்றில், பெங்களுரு பேராயர்
அவர்கள், மூன்று 'டி' பற்றிப் பேசினார்கள். இராணுவப்
பயிற்சியின்போது கற்பிக்கப்படும் இந்த மூன்று 'டி'யை நம்
வாழ்க்கைக்கும் எடுத்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன்:
(அ) டிவோஷன். தமிழில், 'அர்ப்பணம்' என்று சொல்லலாம்.
ஆண்டவருக்கும், வாழ்க்கைக்கும், நம் அழைப்புக்கும் நாம்
கொடுக்கும் பதிலிறுப்பே டிவோஷன். தானியேல் காலத்தில் சிலர்
தங்கள் ஆண்டவராகிய கடவுளின் கட்டளைகளைப் பற்றிக்கொண்டனர்.
அப்படி அவர்கள் பற்றிக்கொண்டதே அர்ப்பணம்.
(ஆ) டெடிகேஷன். 'அர்ப்பணம்' என்பது 'உணர்வு' என்றால்,
'ஈடுபாடு' என்பது செயல். எடுத்துக்காட்டாக, நான் இறைவனுக்கு
அர்ப்பணமாக இருந்தால், அவர்சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு
காட்டுவேன். குடும்ப உறவில், கணவன் மனைவியிடமும் மனைவி
கணவரிடமும் அர்ப்பணத்தோடு இருந்தால், அவர்கள் தாங்கள்
செய்கின்ற அனைத்திலும் ஈடுபாட்டுடன் விளங்குவர்.
(இ) டிஸிப்லின். 'ஒழுக்கம்' என்று இதை மொழிபெயர்க்கலாம்.
தீர்க்கமான முடிவும் அந்த முடிவைச் செயல்படுத்துதலுமே
ஒழுக்கம். ஒழுக்கம் என்பது அறநெறி சார்ந்த ஒன்று அல்ல. மாறாக,
அது அன்றாட வாழ்வியல் சார்ந்தது.
அர்ப்பணம், ஈடுபாடு, ஒழுக்கம் என்னும் அணிகலன்கள் நம்மை
அலங்கரித்தால், நாம் எச்சூழலிலும் அசைவுறாமல் நிலைத்து நிற்க
முடியும்.
ஏழையர் ஞாயிற்றுக்கும் இந்த இறைவார்த்தை வழிபாட்டுக்கும் என்ன
தொடர்பு?
ஏழ்மை என்பது சார்பு நிலையை உணர்தல். ஏழையர் இயல்பாகவே
மற்றவர்களைச் சார்ந்து வாழ்தலைப் பண்பாகக் கொண்டவர்கள். பல
நேரங்களில் பணம், பொருள், ஆற்றல், அதிகாரம், ஆள்பலம்
ஆகியவற்றைக் கொண்டு தற்சார்பு நிலையில் நாம் வாழ விழைகின்றோம்.
நம் தற்சார்பு இறைவனிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் நம்மை
அந்நியப்படுத்துகின்றது.
ஏழ்மை என்னும் சார்புநிலையை திருப்பாடல் ஆசிரியர்
கொண்டிருந்ததால்தான், இறைவனைப் பற்றிப் பிடித்துக்கொண்ட அவர்,
'நான் அசைவுறேன்!' என்று துணிந்து சொல்கின்றார்.
இன்று நம் நாட்டில் குழந்தைகள் தினத்தையும் கொண்டாடுகின்றோம்.
குழந்தைகள் இயல்பாகவே மற்றவர்களைச் சார்ந்திருப்பவர்கள்.
மற்றவர்களைச் சார்ந்த நிலையை உணர நமக்கு நிறைய தாழ்ச்சி தேவை.
நாம் இருக்கும்போது ஒருவர் மற்றவரையும், இறக்கும்போது
இறைவனையும் சார்ந்திருக்கின்றோம்.
'நான் அசைவுறேன் - ஏனெனில், நான் சாய்ந்துள்ளேன்!'
(அருட்தந்தை: யேசு கருணாநிதி)
மதுரை உயர்மறைமாவட்டம்
|
|