|
10 நவம்பர்
2019 |
|
பொதுக்காலம்
32ம் ஞாயிறு
- 3ம் ஆண்டு |
|
|
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நாங்கள் இறந்தபின் என்றென்றும் வாழுமாறு அனைத்துலக அரசர் எங்களை
உயிர்த்தெழச் செய்வார்.
மக்கபேயர் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 1-2, 9-14
அந்நாள்களில் சகோதரர்கள் எழுவரும் அவர்களுடைய தாயும் கைதுசெய்யப்
பட்டார்கள்; சாட்டைகளாலும் வார்களாலும் அடிக்கப்பட்டுச் சட்டத்துக்கு
முரணாகப் பன்றி இறைச்சியை உண்ணும்படி மன்னனால் கட்டாயப் படுத்தப்பட்டார்கள்.
அவர்களுள் ஒருவர் மற்றவர்களின் சார்பில், "நீ எங்களிடமிருந்து
கேட்டறிய விரும்புவது என்ன? எங்கள் மூதாதையருக்குக் கொடுக்கப்பட்ட
சட்டங்களை மீறுவதை விட நாங்கள் இறக்கத் துணிந்திருக்கிறோம்"
என்றார்.
தாம் இறுதி மூச்சு விடும் வேளையில், "நீ ஒரு பேயன். நீ எங்களை
இம்மை வாழ்வினின்று அகற்றிவிடுகிறாய். ஆனால் நாங்கள் இறந்தபின்
என்றென்றும் வாழுமாறு அனைத்துலக அரசர் எங்களை உயிர்த்தெழச்
செய்வார்; ஏனெனில் நாங்கள் இறப்பது அவருடைய கட்டளைகளின்
பொருட்டே"என்று கூறினார்.
அவருக்குப் பிறகு மூன்றாமவரை அவர்கள் கொடுமைப் படுத்தினார்கள்.
அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, உடனடியாகத் தம் நாக்கையும்
கைகளையும் அவர் துணிவுடன் நீட்டினார்; "நான் இவற்றை விண்ணக இறைவனிடமிருந்து
பெற்றுக் கொண்டேன்; அவருடைய சட்டங்களுக்காக நான் இவற்றைப்
பொருட்படுத்துவதில்லை.
அவரிடமிருந்து மீண்டும் இவற்றைப் பெற்றுக்கொள்வேன் என நம்புகிறேன்"
என்று பெருமிதத்தோடு கூறினார். அவர் தம் துன்பங்களைப் பொருட்படுத்தவில்லை.
எனவே மன்னனும் அவனோடு இருந்தவர்களும் இந்த இளைஞரின் எழுச்சியைக்
கண்டு வியந்தார்கள். அவரும் இறந்தபின் நான்காமவரையும் அவர்கள்
அவ்வண்ணமே துன்புறுத்திக் கொடுமைப்படுத்தினார்கள்.
அவர் இறக்கும் தறுவாயில், "கடவுள் மீண்டும் உயிர்த்தெழச்
செய்வார் என்னும் நம்பிக்கை எனக்கு இருப்பதால், மனிதர் கையால்
இறக்க விரும்புகிறேன். ஆனால் நீ வாழ்வு பெற உயிர்த்தெழ
மாட்டாய்"என்றார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
(திபா:
17: 1. 5-6.
8,15 (பல்லவி: 15b) Mp3
=================================================================================
பல்லவி: விழித்தெழும்போது, ஆண்டவரே உம் உருவம் கண்டு நிறைவடைவேன்.
1 ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்; என் வேண்டுதலை
உற்றுக் கேளும்; வஞ்சகமற்ற உதட்டினின்று எழும் என் மன்றாட்டுக்குச்
செவிசாய்த்தருளும். பல்லவி
5 என் நடத்தை உம் பாதைகளில் அமைந்துள்ளது; என் காலடிகள் உம்
வழியினின்று பிறழவில்லை. 6 இறைவா, நான் உம்மை நோக்கிக்
கூப்பிடுகின்றேன்; ஏனெனில், நீர் எனக்குப் பதில் அளிப்பீர். என்
பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்; என் விண்ணப்பத்திற்குச்
செவிசாய்த்தருளும். பல்லவி
8 உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின்
நிழலில் என்னை மூடிக்கொள்ளும். 15 நானோ நேர்மையில்
நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்; விழித்தெழும்போது, உமது
உருவம் கண்டு நிறைவு பெறுவேன். பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
நல்லதையே சொல்லவும் செய்யவும் உங்களை ஆண்டவர் உறுதிப்படுத்துவாராக!
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து
வாசகம் 2: 16 - 3: 5
சகோதரர் சகோதரிகளே, நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவும், நம்மீது
அன்புகூர்ந்து தம் அருளால் நிலையான ஆறுதலையும் எதிர்நோக்கையும்
அளித்த நம் தந்தையாம் கடவுளும் உங்கள் உள்ளங்களுக்கு ஊக்கமளித்து,
நல்லதையே சொல்லவும் செய்யவும் உங்களை உறுதிப்படுத்துவார்களாக!
சகோதரர் சகோதரிகளே, இறுதியாக எங்களுக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.
ஆண்டவருடைய வார்த்தை உங்களிடையே விரைந்து பரவிப் புகழ் பெற்றது.
அதுபோல அது எங்கும் பரவிப் புகழ் பெறவும், தீயோர், பொல்லாதவர்
கையினின்று நாங்கள் விடுவிக்கப்படவும் வேண்டுங்கள்; ஏனெனில் நம்பிக்கை
எல்லாரிடமும் இல்லை. ஆனால் ஆண்டவர் நம்பிக்கைக்குரியவர்.
அவர் உங்களை உறுதிப்படுத்தி, தீயோனிடமிருந்து காத்தருள்வார்.
நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டதை நீங்கள் செய்கிறீர்கள்; இனியும்
செய்வீர்கள் என்னும் உறுதியான நம்பிக்கையை ஆண்டவர் எங்களுக்குத்
தருகிறார். கடவுளின் அன்பையும், கிறிஸ்துவின் மன உறுதியையும்
அடைய ஆண்டவர் உங்கள் உள்ளங்களைத் தூண்டுவாராக!
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
திவெ 1: 5-6 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவே இறந்தோருள் முதலில்
உயிர்பெற்று எழுந்தவர்; இவருக்கே மாட்சியும் ஆற்றலும்
என்றென்றும் உரியன. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 27-38
அக்காலத்தில் உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயர் இயேசுவை
அணுகி, "போதகரே, மணமான ஒருவர் மகப்பேறின்றி இறந்துபோனால் அவர்
மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக்கொண்டு தம் சகோதரருக்கு
வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே எழுதி வைத்துள்ளார்.
இங்குச் சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து
மகப்பேறின்றி இறந்தார். இரண்டாம், மூன்றாம் சகோதரர்களும் அவரை
மணந்தனர். இவ்வாறே எழுவரும் மகப்பேறின்றி இறந்தனர்; கடைசியாக
அப்பெண்ணும் இறந்தார்.
அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அவர்களுள் யாருக்கு மனைவி
ஆவார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே?"
என்று கேட்டனர்.
அதற்கு இயேசு சதுசேயரிடம், "இக்கால வாழ்வில் மக்கள் திருமணம்
செய்து கொள்கின்றனர். ஆனால் வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி
பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும்போது திருமணம்
செய்துகொள்வதில்லை. இனி அவர்கள் சாக முடியாது; அவர்கள்
வானதூதரைப் போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய்
இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே.
இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர்
பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர்
ஆண்டவரை, `ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின்
கடவுள்' என்று கூறியிருக்கிறார். அவர் இறந்தோரின் கடவுள் அல்ல;
மாறாக வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில்
அனைவரும் உயிருள்ளவர்களே"என்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
பொதுக்காலம் முப்பத்து இரண்டாம் ஞாயிறு
I 2 மக்கபேயர் 7: 1-2, 9-14
II 2 தெசலோனிக்கர் 2: 16-3: 5
III லூக்கா 20: 27-38
"அவர் வாழ்வோரின் கடவுள்"
நிகழ்வு
மலைமேல் இருந்த கிறிஸ்தவக் கிராமம் அது. அந்தக்
கிராமப்புறத்தில் ஒரு மேனிலைப்பள்ளி இருந்தது. ஒருநாள் அந்தப்
பள்ளியின் தலைமை ஆசிரியர், மாணவ மாணவிகளிடம் ஓவியப்போட்டி
ஒன்றை அறிவித்து, அதில் எல்லா மாணவர்களும் கலந்துகொள்ளவேண்டும்
என்றும் வரையப்படும் ஓவியம் உயிர்ப்பை எடுத்துரைக்கும் விதமாக
இருக்கவேண்டும் என்றும் கூறினார்.
தலைமையாசிரியரிடமிருந்து இப்படியோர் அறிவிப்பு வந்ததைத்
தொடர்ந்து எல்லாரும் மிகவும் மகிழ்ச்சியடைத்தார்கள்; நொவினா
என்ற ஒரே ஒரு மாணவியைத் தவிர. அவளுக்கு ஓவியம் நன்றாக வரையத்
தெரிந்திருந்தாலும்கூட, அடிக்கடி உடல்நலமின்றிப் போனதால்,
ஓவியப் போட்டியில் ஆர்வமின்றி இருந்தாள். இருந்தாலும், தலைமை
ஆசிரியர் ஓவியப்போட்டியில் எல்லாரும் கட்டாயம்
கலந்துகொள்ளவேண்டும் என்று சொன்னதால், வித்தியாசமாக ஏதாவது
முயற்சிக்கலாம் என்று அவள் யோசித்துக் கொண்டிருந்தாள்.
அவள் தன்னுடைய வகுப்பறையில் சன்னலோரமாய் இருக்கும் இருக்கையில்
அமர்வது வழக்கம். அங்கு அமர்ந்துகொண்டு அவ்வப்பொழுது அவள்
வெளியே கண்களைப் படரவிடுவதுண்டு. சன்னலுக்கு அந்தப் பக்கம்
ரோஜாச் செடி ஒன்று இருந்தது; அது எப்பொழுதும் பூத்துக்
குலுங்கும்; பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். ஆனால், ஏனோ
சில மாதங்களாகவே அது கவனிப்பாரின்றிக் காய்ந்துபோய்க்
கிடந்தது. நொவினா அந்தச் செடியைக் கூர்ந்து பார்த்தபோது,
கம்பளிப்பூச்சி ஒன்று அதில் மெல்ல ஊர்வதும் காய்ந்துபோன அதன்
இலைகளைத் திண்பதுமாக இருந்தது. இக்காட்சியைப் பார்த்துவிட்டு
"இந்தக் கம்பளிப்பூச்சியைப் போன்றுதான் நானும் மெலிந்து
காணப்படுகின்றன்" என்று அவள் மிகவும் வேதனையடைத்தாள்.
இதற்குப் பின் வந்த நாளில் மலை உச்சியில் நல்ல மழை பெய்தது.
இதனால் காய்ந்துகிடந்த அந்த ரோஜாச் செடி மெல்லத் தளிர்க்கத்
தொடங்கியது; ஓரிரு வாரங்களிலேயே அந்த ரோஜாச் செடியில் வெள்ளை
நிறத்தில் ஒரு ரோஜா பூத்தது. நொவினா அந்த ரோஜா மலரைப்
பார்த்தபோது மிகவும் பரவசமடைந்தாள். தொடர்ந்து அவள் அந்தச்
செடியைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, அந்தச் செடியிலேயே
வளர்ந்த கம்பளிப்பூச்சி, இப்பொழுது வண்ணத்துப்பூச்சியாய் மாறி
ரோஜா மலரில் தேன்குடிக்க, அதன்மேல் வந்து அமர்ந்தது.
இக்காட்சியைக் கண்டதும் நோவினா, "உயிர்ப்பை எடுத்துரைக்க
இதைவிட வேறென்ன காட்சி வேண்டும்?" என்று நினைத்துகொண்டு, ஒரு
வெள்ளைக் காகிதத்தையும் பென்சிலையும் எடுத்துகொண்டு,
மேற்பகுதியில் காய்ந்துபோன ரோஜாச் செடியையும் அதன்மீது
கம்பளிப்பூச்சியையும் வரைந்து, அதற்குக் கீழ் மலர்ந்திருந்த
ரோஜாவைப் பூவையும் அதன்மேல் வண்ணத்துப் பூச்சி
தேன்குடிப்பதுபோன்றும் வரைந்து தலைமையாசிரியரிடம் கொடுத்தாள்.
அதைப் பார்த்து வியந்துபோன தலைமையாசிரியர் நொவினாவிற்கே முதல்
பரிசு கொடுத்தார்.
மனித வாழ்க்கை, இந்நிகழ்வில் வருகின்ற காய்ந்துபோன ரோஜாச்
செடியைப் போன்று இறப்போடு முடிந்துவிடுவதல்ல. மாறாக.
காய்ந்துபோன ரோஜாச் செடி எப்படி மீண்டுமாகப் பூப்பூத்ததோ,
கம்பளிப்பூச்சி எப்படி வண்ணத்துப் பூச்சியானதோ, அதுபோன்று
இறப்புக்குப் பின்னும் வாழ்வு உண்டு. அத்தகைய உண்மையை
எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.
இன்றைய இறைவார்த்தையும் நமக்கு இதையே எடுத்துக்கூறுகின்றது.
அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
உயிர்த்தெழுதலை மறுத்துவந்த சதுசேயர்கள்
இன்றைய நற்செய்தியில் இயேசுவை எப்படியாவது சிக்கலில்
மாட்டிவிடவேண்டும் என்று அவரிடம் வருகின்ற சதுசேயர்கள் மணமான
ஒருவர் மகப்பேறின்றி இறந்தால் அவர் மனைவியைக் கொழுந்தனே
மனைவியாக ஏற்றுக்கொண்டு தன் சகோதரர்க்கு வழிமரபு உருவாக்க
வேண்டும் (தொநூ 38; இச 25: 5-10) என்ற மோசேயின் சட்டம்
தொடர்பான ஒரு கேள்வியோடு வருகின்றார்கள். தன்னிடம் இப்படியொரு
குதர்க்கமான கேள்வியோடு வந்த சதுசேயர்கட்கு இயேசு என்ன மறுமொழி
கூறினார் என்று சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னம் முதலில்
யார் இந்தச் சதுசேயர்கள்? இவர்களுடைய நம்பிக்கை என்ன?
என்பவற்றைக் குறித்துத் தெரிந்துகொள்வோம்.
சதுசேயர்கள் யூத சமூகத்திலிருந்த உயிர்குடியினர். அதனால்
எருசலேம் திருக்கோயில் தொடர்பான நிர்வாகத்தில் முக்கிய இடம்
வகித்தவர்கள் (திப 4:1-2) இவர்கட்கு வானதூதர்கள்மீதோ
உயிர்ப்பின்மீதோ நம்பிக்கை கிடையாது (திப 23:8); பழைய
ஏற்பாட்டில் வருகின்ற முதல் ஐந்து நூல்களைத்தான்
ஏற்றுக்கொண்டார்கள். இப்படிப்பட்டவர்கள்தான் இயேசுவிடம் வந்து
உயிர்ப்பு தொடர்பான கேள்வியைக் கேட்கிறார்கள். இவர்கட்கு
இயேசுவிடமிருந்து பதிலைத் தெரிந்துகொள்ளவேண்டும்
என்பதைவிடவும் அவரைச் சிக்கலில் மாட்டிவிடவேண்டும் என்பதுதான்
முதன்மையான நோக்கமாக இருந்தது. இத்தகையோரிடம் இயேசு என்ன
மறுமொழி கூறினார் என்பதை இப்பொழுது பார்ப்போம்.
சதுசேயர்களின் கண்களைத் திறந்த இயேசு
சதுசேயர்களின் எண்ணமெல்லாம் "உயிர்த்தெழுதலைப் பற்றி
ஐநூல்களில் எங்கேயும் இல்லை அதனால் இயேசுவை எப்படியும்
சிக்கலில் மாட்டிவிடலாம்;" என்பதாகத்தான் இருந்திருக்கும்!
இயேசுவோ அவர்களின் எண்ணங்களை அறிந்து அவர்களிடம், இறந்து
உயிர்த்தெழும்போது திருமணம் என்பதே கிடையாது; அவர்கள்
வானதூதர்களைப் போன்று இருப்பார்கள்; கடவுளின் மக்களாகவும்
இருப்பார்கள் என்று தீர்க்கமாய்க் கூறுகின்றார். இவையெல்லாவற்றிற்கும்
மேலாக எந்த ஐநூல்களில் உயிர்ப்பு பற்றி
வானதூதர்கள் பற்றி எதுவுமே இல்லை என்று சதுசேயர்கள்
நினைத்திருந்தார்களோ அந்த ஐநூல்களிலேயே உயிர்ப்பு பற்றியும்
வானதூதர்களைப் பற்றியும் தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றன என்று
கூறுகின்றனர்.
இயேசு சதுசேயர்கட்கு அளித்த மறுமொழியைக்
கேட்டு அவர்கள்
உயிர்ப்பின் மீதும் வானதூதர்கள்மீதும் நம்பிக்கை கொண்டார்களா?
என்று நமக்குத் தெரியவில்லை. ஆனால் நாம் நம்பி ஏற்றுக்
கொள்ளவும் அதன்படி வாழ்வதற்கும் நமக்கொரு செய்தி இருக்கின்றது.
அது குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
நம் கடவுள்;; வாழ்வோரின் கடவுள்
இயேசு சதுசேயர்கள் கேட்ட கேள்விக்கு மறுமொழி கூறுகையில்> "அவர்
இறந்தோரின் கடவுள் அல்ல;; மாறாக வாழ்வோரின் கடவுள்" என்று
கூறுவார். கடவுள் வாழ்வோரின் கடவுள் எனறால்> அந்த வாழ்வோரின்
கடவுளுடைய மக்களாக நாம் மாறவேண்டும் என்றால் அல்லது இறந்து>
உயிர்த்தெழ வேண்டும் என்றால்> அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்
என்பது குறித்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.
யோவான் நற்செய்தியில் இயேசு கூறுவார்: "உயிர்த்தெழுதலும்
வாழ்வும் நானே;; என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும்
வாழ்வார்" (யோவா 11:25). இந்த இறைவார்த்தையிலேயே நாம் என்ன
செய்யவேண்டும் என்பதற்கான விடை இருக்கின்றது. ஆம் நாம் இறந்து
உயிர்ந்தெழுந்து வாழும் கடவுளின் மக்களாக மாறவேண்டும்
என்றால் உயித்தெழுதலும்; வாழ்வுமான இயேசுவிடம் நம்பிக்கை
கொள்ளவேண்டும். இதுதான் நாம் செய்யவேண்டிய முதன்மையான செயலாக
இருக்கின்றது. இன்றைய முதல் வாசகத்தில் ஒரு தாயும் அவருடைய ஏழு
மகன்களும்; ஆண்டவர் தங்களை உயிர்த்தெழச் செய்வார் என்று
நம்பினார்கள். நாமும் அவர்களைப் போன்று நம்பி இயேசுவின்
வழியில் நடந்தால் உயிர்த்தெழுந்து கடவுளின் மக்களாவோம் என்பது
உறுதி.
சிந்தனை
"இயேசுவே ஆண்டவர்" என் வாயார அறிக்கையிட்டு இறந்த அவரைக்
கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளுர நம்பினால்
மீட்புப் பெறுவீர்கள்" (உரோ 10:9) என்பார் புனித பவுல்.
ஆகையால், நாம் வாழ்வோரின் கடவுளான ஆண்டவரிடம் நம்பிக்கை
கொண்டு அவர்க்கு ஏற்ற வாழ்க்கை வாழ்வோம். அதன்மூலம் கடவுளின்
அன்புமக்களாக மாறும் பேறுபெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
=================================================================================
திருப்பலி முன்னுரை
=================================================================================
=================================================================================
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
=================================================================================
|
|