|
Year B |
|
பொதுக்காலம்
32ம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
எலியா சொன்னபடியே கைம்பெண் செய்தார்.
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 17: 10-16
அந்நாள்களில் எலியா புறப்பட்டு, சாரிபாத்துக்குப் போனார். நகரின்
நுழைவாயிலை வந்தடைந்தபொழுது, அங்கே ஒரு கைம்பெண் சுள்ளிகளைப்
பொறுக்கிக் கொண்டிருந்தார்.
அவர் அவரை அழைத்து, "ஒரு பாத்திரத்தில் எனக்குக் குடிக்கக்
கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா" என்றார்.
அவர் அதைக் கொண்டு வரச் செல்கையில், அவரைக் கூப்பிட்டு,
"எனக்குக் கொஞ்சம் அப்பமும் கையோடு கொண்டு வருவாயா?" என்றார்.
அவர், "வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர்மேல் ஆணை! என்னிடம் அப்பம்
ஏதும் இல்லை; பானையில் கையளவு மாவும் கலயத்தில் சிறிதளவு எண்ணெயுமே
என்னிடம் உள்ளன. இதோ, இப்போது இரண்டொரு சுள்ளிகளைப் பொறுக்கிக்
கொண்டு வீட்டிற்குப் போய் அப்பம் சுட்டு, நானும் என் மகனும்
சாப்பிடுவோம். அதன்பின் சாகத்தான் வேண்டும்" என்றார்.
எலியா அவரிடம், "அஞ்ச வேண்டாம், போய் நீ சொன்னபடியே செய். ஆனால்,
முதலில் எனக்கு ஒரு சிறிய அப்பம் சுட்டுக் கொண்டு வா. பிறகு
உனக்கும் உன் மகனுக்கும் சுட்டுக்கொள்.
இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் உரைப்பது இதுவே: நாட்டில் ஆண்டவர்
மழை பெய்யச் செய்யும் நாள் வரை பானையிலுள்ள மாவு தீராது; கலயத்திலுள்ள
எண்ணெயும் குறையாது" என்று சொன்னார்.
அவர் போய் எலியா சொன்னபடியே செய்தார். அவரும் அவருடைய மகனும்,
அவர் வீட்டாரும் பல நாள் சாப்பிட்டனர்.
எலியா வழியாக ஆண்டவர் உரைத்த வாக்கின்படி பானையிலிருந்து மாவு
தீரவில்லை; கலயத்திலிருந்த எண்ணெயும் குறையவில்லை.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
(திபா 146: 7. 8-9a. 9bc-10 (பல்லவி:
1) Mp3
=================================================================================
பல்லவி: என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு. அல்லது: அல்லேலூயா.
7 ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு
உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். பல்லவி
8 ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை
உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு
கொண்டுள்ளார். 9a ஆண்டவர்
அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். பல்லவி
9bc அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால்,
பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார். 10 சீயோனே!
உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி
செய்வார். பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
பாவங்களைப் போக்கும் பொருட்டு ஒரே முறை தம்மைத்தாமே பலியாகககொடுத்தார்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 9: 24-28
சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து, மனிதரின் கையால் அமைக்கப்பட்டதும்
உண்மையான தூயகத்திற்கு முன்னடையாளமாய் இருப்பதுமான இவ்வுலகத்
தூயகத்திற்குள் நுழையாமல் விண்ணுலகிற்குள்ளேயே
நுழைந்திருக்கிறார். அங்கே இப்போது நம் சார்பாகக் கடவுளின்
திருமுன் நிற்கிறார். தலைமைக் குரு விலங்குகளின் இரத்தத்துடன்
ஆண்டுதோறும் தூயகத்திற்குள் செல்வார்.
அதற்கு மாறாக, கிறிஸ்து தம்மையே ஒரே முறை பலியாகக் கொடுத்தார்.
அதை மீண்டும் மீண்டும் செய்யவில்லை. அவ்வாறு செய்திருப்பார் என்றால்,
உலகம் தோன்றிய காலந்தொட்டு, அவர் மீண்டும் மீண்டும்
துன்புற்றிருக்க வேண்டும்.
அதற்கு மாறாக, உலகம் முடியும் காலமான இப்போது தம்மையே பலியாகக்
கொடுத்து, பாவங்களைப் போக்குவதற்காக ஒரே முறை உலகில் வெளிப்படுத்தப்பட்டார்.
மனிதர் ஒரே முறை சாவுக்கு உட்படுகின்றனர். பின்னர் இறுதித்
தீர்ப்பு வருகிறது. இதுவே அவர்களுக்கென உள்ள நியதி.
அவ்வாறே, கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு,
ஒரே முறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். அவர் மீண்டும் ஒரு
முறை தோன்றுவார். ஆனால், பாவத்தின் பொருட்டு அல்ல, தமக்காகக்
காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும் பொருட்டே தோன்றுவார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
மத் 5: 3
அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில்
விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இந்த ஏழைக் கைம்பெண், எல்லாரையும்விட மிகுதியாகப்
போட்டிருக்கிறார்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 38-44
அக்காலத்தில் இயேசு கற்பித்துக் கொண்டிருந்தபோது, "மறைநூல் அறிஞர்களைக்
குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் தொங்கல் ஆடை அணிந்து நடமாடுவதையும்
சந்தை வெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும்
விரும்புகிறார்கள்; தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும்
விருந்துகளில் முதன்மையான இடங்களையும் பெற விரும்புகிறார்கள்;
கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்; நீண்ட நேரம்
இறைவனிடம் வேண்டுவதாக நடிக்கிறார்கள். கடுந்தண்டனைத்
தீர்ப்புக்கு ஆளாக இருப்பவர்கள் இவர்களே" என்று கூறினார்.
இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்து கொண்டு மக்கள் அதில்
செப்புக் காசு போடுவதை உற்று நோக்கிக்கொண்டிருந்தார். செல்வர்
பலர் அதில் மிகுதியாகப் போட்டனர். அங்கு வந்த ஓர் ஏழைக்
கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகளைப்
போட்டார்.
அப்பொழுது, அவர் தம் சீடரை வரவழைத்து, "இந்த ஏழைக் கைம்பெண்,
காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட
மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச்
சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த
மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை
இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக
வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்" என்று அவர்களிடம்
கூறினார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
அல்லது
குறுகிய வாசகம்
இந்த ஏழைக் கைம்பெண், எல்லாரையும்விட மிகுதியாகப்
போட்டிருக்கிறார்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 41-44
அக்காலத்தில் இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்து
கொண்டு மக்கள் அதில் செப்புக் காசு போடுவதை உற்று
நோக்கிக்கொண்டிருந்தார். செல்வர் பலர் அதில் மிகுதியாகப் போட்டனர்.
அங்கு வந்த ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு
காசுகளைப் போட்டார்.
அப்பொழுது, அவர் தம் சீடரை வரவழைத்து, "இந்த ஏழைக் கைம்பெண்,
காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும்விட
மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச்
சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த
மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை
இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக
வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்" என்று அவர்களிடம்
கூறினார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
கொடுப்பதில் முழுமையடையும் மனித வாழ்க்கை
நீயூ கரோலினாவைச் சார்ந்த செனட்டர் செபுலோன் வான்ஸ் சொல்லக்கூடிய
ஒரு நிகழ்வு.
ஒரு நகரில் மறைபோதகர் ஒருவர் இருந்தார். அவர் கால்நடையாகவே எல்லா
இடங்களுக்குச் சென்று நற்செய்தி அறிவித்து, ஆன்மாக்களை
மீட்கும் பணியைச் செய்துவந்தார். அவர் சென்ற இடங்களில் மக்கள்
கொடுக்கக்கூடிய காணிக்கைதான் அவருடைய பணிக்கு பக்கபலமாக இருந்தது.
ஒருநாள் அவர் ஒரு நகருக்குச் சென்றிருந்தபோது அங்கிருந்த ஆலயத்தில்
போதிக்கத் தொடங்கினார். அங்கிருந்த மக்கள் அனைவரும் அவருடைய போதனையை
மிக ஆர்வமாகக் கேட்டார்கள். அவர் தன்னுடைய போதனையை முடித்த
பின்பு காணிக்கை நேரத்தில் மக்களிடமிருந்து காணிக்கை பெறுவதற்காக
தான் அணிந்திருந்த தொப்பியை அவர்களுக்கு மத்தியில் கொடுத்து அனுப்பினார்.
காணிக்கைத் தட்டாக மாறியிருந்த அந்தத் தொப்பி எல்லாரையும் கடந்து
சென்று அவரிடம் திரும்பி வந்தபோது அதில் ஒரு பைசா கூட
காணிக்கையாக விழவில்லை. இதைக் கண்டு அவர் மிகவும் அதிர்ச்சியடைந்தார்.
இருந்தாலும் தன்னுடைய அதிர்ச்சியை வெளியே காட்டிக் கொள்ளாமல்,
"அன்பார்ந்த மக்களே! நாம் அனைவரும் சேர்ந்து இறைவனுக்கு நன்றி
செலுத்துவோம்" என்றார்.
அப்போது கூட்டத்திலிருந்த ஒருவர் எழுந்து ஒருவர், "சுவாமி! இறைவனுக்கு
நன்றி செலுத்துங்கள் என்று சொன்னீர்களே, எதற்காக நன்றி செலுத்தவேண்டும்?"
என்று கேட்டார். அதற்கு அந்த மறைபோதகர், "காணிக்கை பெறுவதற்கு
அனுப்பி வைக்கப்பட்ட தொப்பியாவது திரும்பி வந்திருக்கின்றதே.
அதற்குத்தான் நான் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள் என்று
சொன்னேன்" என்றார். இதைக் கேட்ட மக்கள் அனைவரும் அவமானத்தால்
உறைந்துபோய் நின்றார்கள்.
இறைவன் கொடுத்த கொடைகளை இறைவனுக்குக் கொடுப்பதற்கு யோசிக்கும்
மக்களை இந்த நிகழ்வானது தோலுரித்துக் காட்டுகின்றது. பொதுக்காலத்தின்
முப்பத்தி இரண்டாம் ஞாயிறான இன்று நாம் படிக்கக் கேட்ட வாசகங்கள்,
கொடுப்பதில் முழுமையடையும் மனித வாழ்க்கை என்னும் சிந்தனையைத்
தருகின்றது. நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவு
செய்வோம்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு எருசலேம் திருக்கோவில் இருந்த
காணிக்கை பெட்டிக்கு எதிராக அமர்ந்துகொண்டு மக்கள் அதில்
காணிக்கை போடுவதை உற்றுக் கவனித்துக்கொண்டிருக்கின்றார். செல்வர்கள்
அதில் மிகுதியாக காணிக்கை செலுத்த, ஓர் ஏழைக் கைம்பெண்ணோ ஒரு
கொதிராந்துக்கு இணையான இரண்டு செப்புக்காசுகளை காணிக்கையாக
செலுத்துகின்றார். இதைக் கவனித்த இயேசு தன்னுடைய சீடர்களிடம்,
"காணிக்கை பெட்டியில் காணிக்கை செலுத்திய மற்ற எல்லாரையும் விட
இந்த ஏழைக் கைம்பெண் மிகுதியாகக் காணிக்கை செலுத்தினார். ஏனென்றால்,
மற்ற எல்லாரும் தங்களிடம் இருந்த மிகுதியானவற்றிலிருந்து
காணிக்கை செலுத்தினார்கள். இவரோ தன்னுடைய பிழைப்புக்காக
வைத்திருந்த அனைத்தையுமே காணிக்கையாக செலுத்திவிட்டார்" என்கின்றார்.
எருசலேம் திருக்கோவிலில் பெண்கள் பகுதிக்கும் புறவினத்தார் பகுதிக்கும்
இடையே அழகு வாயில் என்றொரு பகுதி இருக்கும். இங்குதான் பதிமூன்று
காணிக்கைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். இந்த பதிமூன்று
காணிக்கைப் பெட்டிகளும் எக்காலம் (The Trumpet) போன்று இருக்கும்.
இதில் விழுகின்ற காணிக்கைகள் யாவும் ஒவ்வொரு தேவைக்காகப் பயன்படுத்தப்படும்.
குறிப்பாக ஆலயத்திற்குத் தேவையான எண்ணெய், விளக்குகள், பலி
பொருட்கள், குருக்கள் உடுத்தும் ஆடைகள் இவையெல்லாம் வாங்குவதற்குப்
பயன்படுத்தப்படும். இந்த காணிக்கைப் பெட்டிகளுக்கு முன்பாகத்தான்
அமர்ந்து, இயேசு அதில் காணிக்கை செலுத்துபவர்களைக் கவனித்துக்கொண்டிருக்கின்றார்.
அப்போதுதான் ஏழைக் கைம்பெண் காணிக்கை செலுத்துகின்ற நிகழ்வு
நடக்கின்றது.
ஏழைக் கைம்பெண் இரண்டு செப்புக்காசுகளை காணிக்கையாக செலுத்தியதை
ஆண்டவர் இயேசு இவ்வளவு வியந்து பாராட்டுவதற்குக் காரணமில்லாமல்
இல்லை. இன்றைய நற்செய்தியின் முற்பகுதியில் ஆண்டவர் இயேசு மறைநூல்
அறிஞர்களின் போலித்தனத்தை, அவர்கள் கைம்பெண்களை எப்படியெல்லாம்
வஞ்சிக்கின்றார்கள் என்பதை தோலுரித்துக் காட்டுகின்றார். அதில்
வரக்கூடிய ஒரு வார்த்தைகள்
"கைம்பெண்களின் வீடுகளை
பிடுங்கிக்கொள்கின்றார்கள்" என்பதாகும். ஆம், யூத சமூகத்தில்
கைம்பெண்கள் மிகுந்த அவல நிலைக்கு உள்ளானார்கள். கணவனை இழந்து
வாழ்ந்த அவர்கள் எல்லாராலும் வஞ்சிக்கப்பட்டார்கள். இப்படி எல்லாராலும்
வஞ்சிக்கப்பட்ட ஏழைக் கைம்பெண் இரண்டு செப்புக்காசுகள்
காணிக்கையாக செலுத்துவது என்பது உண்மையிலே பாராட்டப்பட வேண்டிய
ஒன்றாகும். அதனால்தான் இயேசு அந்த ஏழைக் கைம்பெண்ணை மற்ற எல்லாரையும்விட
மிகுதியாக காணிக்கை செலுத்தினார் என்று வியந்து
பாராட்டுகின்றார்.
இன்றைய முதல் வாசகத்தில் நற்செய்தியில் நாம் வாசித்த நிகழ்வை
ஒத்த செய்தி வருகின்றது. அதுதான் சாரிபத்தைச் சார்ந்த கைம்பெண்
இறைவாக்கினர் எலியாவுக்கு அப்பம் சுட்டுத் தந்தது. இந்த நிகழ்வில்
சாரிபாத்தைச் சார்ந்த கைம்பெண் எலியா இறைவாக்கினர் கேட்டதும்
அப்பம் சுட்டுத் தருகின்றார். இத்தனைக்கும் அவளிடம் அந்த
பொழுதுக்கான மாவும் எண்ணையும் மட்டும்தான் இருந்தது. இருந்தாலும்
இறையடியார் கேட்கின்றார் என்பதற்காக அப்பம் சுட்டுத் தருகின்றார்.
இதனால் பஞ்ச காலம் முடியும் மட்டும் அவளுடைய பாத்திரத்தில்
மாவும் எண்ணையும் குறையாமல் இருக்கின்றது.
நற்செய்தியில் வரும் ஏழைக் கைம்பெண்ணும் முதல் வாச்கத்தில் வருகின்ற
சாரிபாத்துக் கைம்பெண்ணும் நமக்கு உணர்த்துகின்ற செய்தி, ஆண்டவருக்கும்
அவருடைய அவருடைய அடியாருக்கும் முகம் கோணாமல் கொடுக்கின்றபோது
அவர் நம்மை நிறைவாக ஆசிர்வதிப்பார் என்பதே ஆகும். ஏழைக்
கைம்பெண் தன்னிடம் இருந்த இரண்டு செப்புக்காசுகளையும்
காணிக்கையாக செலுத்தினார் அதனால் அவர் இயேசுவால் பாராட்டப்படுகின்றார்.
சாரிபாத்துக் கைம்பெண்ணோ தன்னுடைய வாழ்வுக்காக வைத்திருந்த
மாவையும் எண்ணையையும் ஆண்டவருடைய அடியாருக்காகக் கொடுத்தார்.
அதனால் அவருடைய பாத்திரம் குறையாமல் இருக்கின்றது. இவ்வாறு இவர்கள்
இருவரும் தங்களிடம் இருக்கின்ற அனைத்தையும் ஆண்டவருக்காக, அவருடைய
அடியாருக்குக் கொடுப்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகத்
திகழ்கின்றார்கள்.
இதுவரைக்கும் தங்களிடம் இருந்த அனைத்தையும் ஆண்டவருக்காகக்
கொடுத்தவர்களைக் குறித்து சிந்தித்த நாம், இப்போது தன்னையே நமக்காக
கொடுத்த ஒருவரைக் குறித்து சிந்தித்துப் பார்க்க இருக்கின்றோம்.
தன்னையே கொடுத்தவர் யாரென்று சிந்தித்துப் பார்க்கும்போது அவர்
வேறு யாருமல்ல, நம் ஆண்டவர் இயேசுதான் என்று இன்றைய இரண்டாம்
வாசகம் நமக்கு எடுத்துக்கூறுகின்றது. எபிரேயருக்கு எழுத்தப்பட்ட
திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில்
வாசிக்கின்றோம். "கிறிஸ்து தம்மையே ஒருமுறை பலியாகக்
கொடுத்தார்" என்று. ஆம். இயேசு தம்மையே நமது மீட்புக்காகத் தந்து
(யோவா 10:10) கொடுப்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கின்றார்.
இயேசுவின் வழியில் நடக்கும் நாம் கொடுப்பதில் எப்படிப்பட்டவர்களாக
இருக்கின்றோம் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். இறைவன் நமக்கு
கொடுத்ததில் கொஞ்சம் கிள்ளிக் கொடுக்கலாம், இயேசு காலத்தில்
வாழ்ந்த பணக்காரர்களைப் போன்று. கொடுத்தது அனைத்தையும் கொடுக்கலாம்,
ஏழைக் கைம்பெண்ணை போன்று. கொடுத்தது அனைத்தையும் கொடுத்து, தன்னையே
கொடுக்கலாம், ஆண்டவர் இயேசுவைப் போன்று. எப்படி இருந்தாலும்
நாம் கொடுப்பது நம்முடைய வாழ்வை பாதிப்பதாய், நம்முடைய கையைக்
கடிப்பதாய் இருக்கவேண்டும். அதுதான் கொடுப்பதற்கு அர்த்தத்தைத்
தருவதாய் இருக்கும்.
அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் நிலவிய சமயத்தில் இளைஞன்
ஒருவன் வேலை தேடி பல்வேறு அலுவலகங்களை ஏறி இறங்கி வந்தான். ஆனால்,
அவனுக்கு வேலை தருவார் யாருமில்லை.
இதற்கிடையில் ஒருநாள் அவன் மனவருத்ததோடு ஆலயத்திற்குச் சென்று,
திருப்பலியில் கலந்துகொண்டான். திருப்பலியின்போது எப்படியாவது
தனக்கு வேலை கிடைக்கவேண்டும் என்று இறைவனிடம் மிக உருக்கமாக மன்றாடினான்.
அது மட்டுமல்லாமல், காணிக்கை நேரத்தின் போது தன்னிடம் இருந்த
ஒரு டாலர் பணத்தில் பாதியை அதாவது ஐம்பது சென்டை காணிக்கையாகச்
செலுத்திவிட்டு, திருப்பலி முடிந்ததும் மன நிம்மதியோடு வெளியே
வந்தான். அவன் ஆலயத்தை விட்டு வெளியே வந்த தருணத்தில்,
பேருந்து ஒன்று அவ்வழியாக வந்தது. அப்பேருந்தில் ஏறி பக்கத்து
நகரில் ஏதாவது வேலை தேடலாம் என்று தீர்மானித்தான். அதன்படியே
அவன் பேருந்தில் ஏறி அமர்ந்தான்.
பேருந்து நடத்துனர் அவன் அருகே வந்தபோது, அவன், "பக்கத்து
நகருக்கு ஒரு டிக்கெட் வேண்டும்" என்று கேட்டான். அவரோ "ஒரு
டாலர் கொடுங்கள்" என்று சொன்னதும், அவனுக்குத் தூக்கி வாரிப்
போட்டது. ஏனென்றால் அவன் தன்னிடத்தில் இருந்த ஒரு டாலரில்
பாதியை ஆலயத்தில் காணிக்கையாக செலுத்தி இருந்தான். இப்போது
அவனிடத்தில் பாதி டாலர்
- ஐம்பது சென்ட்
- மட்டுமே இருந்தது.
அதனால் அவன் நடத்துனரிடம், "என்னிடம் இப்போது ஐம்பது சென்டு
மட்டுமே உள்ளது. இதற்கு நான் எவ்வளவு தூரம் பயணிக்க முடியுமோ
அவ்வளவு தூரம் பயணிக்கின்றேன். அதன்பிறகு என்னைக் கீழே
இறக்கிவிடுங்கள். நான் பக்கத்து நகருக்கு நடந்து
போய்க்கொள்கின்றேன்" என்றான். அவரும் சரியென்று ஒப்புக்கொண்டு
அவன் கொடுத்த பணத்திற்கு ஏற்ற தூரத்தில் அவனை இறக்கிவிட்டார்.
அவனும் பேருந்தில் இருந்து இறங்கி மெல்ல
நடந்துபோய்க்கொண்டிருந்தான். ஓரிடத்தில்
'வேலைக்கு ஆட்கள்
தேவை. வாரம் ஐந்து டாலர் சம்பளம்' என்ற அறிவிப்புப் பலகை
இருந்தது. இதைக் கண்டு அவன் மிகவும் மகிழ்ந்துபோனான். உடனே
அவன் அறிவிப்புப் பலகை இருந்த அலுவலகத்திற்குள் சென்று,
வேலைக்குச் சேர்ந்தான். வார இறுதியில் ஏற்கனவே குறிப்பிட்டது
போன்று அவனுக்கு ஐந்து டாலர் சம்பளம் கிடைத்தது. ஒருவேளை அவன்
ஆலயத்தில் ஐம்பது சென்ட் காணிக்கையாகச் செலுத்தாமல், அதனை
அப்படியே வைத்திருந்து, பேருந்தில் ஒரு டாலர் கொடுத்து
பக்கத்து நகருக்குப் போயிருந்தால் அந்த அறிவிப்பை
பார்த்திருக்கமுடியாது. காணிக்கை செலுத்தியதால்தான் அவனுக்கு
நல்லபடியாக அமைந்தது.
அப்போது அவன் நினைத்துக்கொண்டான் நான் ஆண்டவருக்கு அரை
டாலர்தான் காணிக்கையாகச் செலுத்தினேன். அவரோ எனக்கு பத்து
மடங்கு அதிகமாக ஐந்து டாலர் சம்பளம் கொடுத்து
ஆசிர்வதித்திருக்கின்றார். உண்மையில் இறைவன் மிகப் பெரியவர்
என்று வாயாரப் போற்றிப் புகழ்ந்தான்.
ஆண்டவருக்கு காணிக்கை செலுத்தும்போது ஆண்டவர் நம்மை அதிகதிமாக
ஆசிர்வதிப்பார் என்னும் உண்மையை இந்த நிகழ்வு நமக்கு
எடுத்துக்கூறுகின்றது.
ஆகவே, நாம் இறைவனுக்கு மனமுவந்து காணிக்கை செலுத்துவோம்.
பெறுவதில் அல்ல, கொடுப்பதில் இன்பம் காண்போம். அதன்வழியாக
இறையருளை நிறைவாய் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
1 அரசர்கள் 17:10-16 II. எபிரேயர் 9:24-28 III. மாற்கு
12:38-44
வெறுங்கை முழம் போடுமா?
கைம்பெண்கள் - நாம் எதிர்கொள்ளும் கேள்விக்குறிகள், ஆச்சர்யக்குறிகள்!
இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் இரண்டு கைம்பெண்களை (சாரிபாத்து,
எருசலேம் நகர்) பார்க்கின்றோம். இவ்விரண்டு கைம்பெண்களையும்
இரண்டு இறைவாக்கினர்கள் (எலியா, இயேசு) சந்திக்கின்றனர்.
இன்றைய முதல் வாசகத்தை கொஞ்சம் முன்னும் (1 அர 17:1-9),
பின்னும் (1 அர 18) நீட்டிப் பார்த்தால்தான் இந்த வாசகத்தில்
குறிப்பிடப்படும் நிகழ்வை முழுவதும் புரிந்து கொள்ள முடியும்.
சாரிபாத்து நகரில் எலியா இறைவாக்கினர் கைம்பெண் ஒருவரால் பசியாறப்பெறுகின்றார்.
இதுதான் ஒற்றைவரியில் முதல் வாசகம். ஆனால் இதன் பின்புலம்
பாகால் வழிபாடு. சாலமோனுக்குப் பின் ஒருங்கிணைந்த அரசு வடக்கு,
தெற்கு என பிரிந்து போக, எலியா வடக்கே, அதாவது இஸ்ராயேலில்
('தெற்கு', யூதா என அழைக்கப்பட்டது) இறைவாக்குரைத்தார். வடக்கே
ஆட்சி செய்த ஆகாபு தன் நாட்டில் இருந்த பாகால் வழிபாட்டைத் தடுக்க
முடியவில்லை. மக்கள் தங்கள் இறைவனாம் யாவேயை மறந்துவிட்டு இந்தப்
புதிய கடவுள்பின் செல்கின்றனர். யாவே இறைவன் இதனால் கோபம்
கொண்டு மழையை நிறுத்திவிடுகின்றார். மூன்றரை ஆண்டுகள் கடும் பஞ்சம்.
தண்ணீர்நிலைகள் வற்றிக்கொண்டிருக்கின்றன. காகங்கள் வழியாக எலியாவுக்கு
உணவளித்து வந்த இறைவன் இப்போது சாரிபாத்து நகர் ஏழைக்கைம்பெண்ணிடம்
அனுப்புகின்றார். அப்படி சாரிபாத்துக்கு வந்த எலியா, ஏழைக்கைம்பெண்ணைச்
சந்திக்கும் நிகழ்வே இன்றைய முதல் வாசகம்.
எலியா நகரின் நுழைவாயிலை அடையும்போது கடைசிக் கள்ளிகளைப்
பொறுக்கிக்கொண்டிருக்கிறாள் கைம்பெண். 'பாத்திரத்தில் தண்ணீர்
கொடு' என்கிறார் எலியா. அந்தக் கைம்பெண்ணின் வீட்டில் ஒருவேளை
ஒரேயொரு பாத்திரம் மட்டும்தான் இருந்திருக்க வேண்டும்.
கைம்பெண்கள் வீட்டில் யாரும் தண்ணீர் கேட்டு வருவதில்லை. ஆகவே,
அவர்கள் தனி சொம்பு அல்லது டம்ளர் வைத்திருக்க வாய்ப்பில்லை.
இப்போது எலியாவுக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டுமென்றால் மாவு இருக்கும்
பாத்திரத்தைக் காலி செய்து அதிலிருந்துதான் கொண்டு வர
முடியும். முதலில் தண்ணீர் கேட்டவர், கூடவே அப்பமும்
கேட்கிறார். ஒன்றுமில்லா கைம்பெண் தனக்கென்று வைத்திருந்த எல்லாவற்றையும்
இந்த எலியா கேட்டுவிடுகிறார். இறைவன் கேட்டால் நம்மிடம் அப்படித்தான்
கேட்கிறார். கொடுத்தால் எல்லாவற்றையும் கொடு. அல்லது ஒன்றையும்
எனக்குக் கொடுக்காதே. 'எனக்கு கொஞ்சம், உனக்கு கொஞ்சம்' என இறைவனிடத்தில்
நான் பேச முடியுமா? முடியாது. கொடுத்தால் அப்படியே முழுமையாகக்
கொடுக்க வேண்டும்.
'அதன் பின் சாகத்தான் வேண்டும்'. கைம்பெண்ணின் இந்தச் சொல் நம்
உள்ளத்தையும் பிசைந்து விடுகிறது. எல்லா இடத்திலும் பஞ்சம் அதிகரித்து
மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கதாசிரியர் இந்த
ஒற்றை வரியில் பதிவு செய்கிறார். 'என்னையும், என் மகனையும்
சுவாசிக்க வைத்திருப்பது இந்த அப்பம்தான். இதன்பின் பசியும்,
இறப்பும்தான்' என முன்பின் தெரியாத ஒருவரிடம் தன் நிலை பற்றி
சொல்கின்றார் கைம்பெண். வாழ்வில் இதற்குமேல் ஒன்றுமில்லை என்ற
கட்டத்திற்கு வந்துவிட்டால் நாமும் முன்பின் தெரியாதவரிடம்கூட
நம் மனதை அப்படியே திறந்து காட்டுவிடுவோம்தானே. மற்றொன்றையும்
கவனிக்க வேண்டும். ஒரு விளக்கு அணையப்போகிறது என்று நினைத்தவுடன்
கடவுள் அங்கே சரியான நேரத்தில் தன் இறைவாக்கினரை அனுப்புகின்றார்.
ஏற்கனவே அவளின் வாழ்வில் கணவன் என்ற விளக்கு அணைந்து போய்விட்டது.
இன்னும் இருக்கும் நம்பிக்கை மகனில் எரிந்து கொண்டிருக்கிறது.
மகன் ஒருவேளை சிறு பையனாக இருக்கலாம். ஆகையால்தான் இன்னும்
தாயே அவனுக்கு உணவு தந்து கொண்டிருக்கிறாள். இவளின் வாழ்வு என்னும்
விளக்கு அணையும்போது, 'இனி உன் வீட்டில் விளக்கே அணையாது' என்று
அவளின் அடுப்பை என்றென்றும் எரிய வைக்கின்றார்.
சாரிபாத்து நகரப் பெண் எலியாவின் இறைவனாம் யாவே கடவுளை அறிந்திருக்க
வாய்ப்பில்லை. இருந்தாலும், 'வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர்மேல்
ஆணை!' என எலியாவின் கடவுளை 'வாழும் கடவுளாக' ஏற்றுக்கொள்கிறார்.
இந்த நம்பிக்கைதான் அவரைச் செயலாற்ற, தன்னிடம் உள்ளதை இழக்கத்
துணிவைத் தருகிறது. 'வாழும் கடவுள்' என்னை வாழ வைப்பார் என்ற
நம்பிக்கை அவரிடம் முதலில் எழுந்தது. 'பின் சாகத்தான்
வேண்டும்' என்று விரக்தியில் இருந்த பெண்ணிடம், 'போய் நீ சொன்னபடி
செய். ஆனால் அதற்கு முன் அப்பம் கொண்டு வா' என்று சொல்வது
சிறிது புன்னகையை வரச் செய்தாலும், 'நீ சொன்னபடி நடக்காது' என்று
எலியா அவரிடம் சொல்லி அனுப்புவது போலத்தான் இருக்கிறது. தன்னிடமிருந்த
கையளவு மாவையும், கலயத்தின் எண்ணெயையும் கொடுக்கத் துணிந்த
கைம்பெண்ணின் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
இந்த அற்புதம் நிகழக் காரணங்கள் மூன்று:
அ. எலியாவின் ஆண்டவரை வாழும் கடவுளாக ஏற்றுக்கொண்டார்.
ஆ. 'அந்த ஆண்டவர் பார்த்துக்கொள்வார்' என்று நம்பினார்.
இ. 'அவர் பார்த்துக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. பசித்தவருக்கு
உணவு கொடுப்பேன்' தன்னை அடுத்தவருக்காக நொறுக்கினார்.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மாற்கு 12:38-44), 'கைம்பெண்களைக்
கொள்ளையடிப்பவர் பற்றியும்,' 'முழுவதையும் கொடுத்த கைம்பெண் ஒருவர்
பற்றியும்' என இரண்டு பகுதிகளாக உள்ளது.
முதல் பகுதியில், இயேசு மறைநூல் அறிஞர்களைக் குறித்து எச்சரிக்கை
விடுக்கின்றார். அந்த எச்சரிக்கையின் ஒரு பகுதியாக, 'இவர்கள்
கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்' என்கிறார்.
இதன் பொருள் என்ன? யூத சமூகத்தில் கைம்பெண்கள் மிகவும்
நொறுங்குநிலையில் இருந்தவர்கள். ஆகையால்தான் பத்திலொருபாகம்
கொடுப்பதற்கான சட்டம் பற்றிய பகுதியின் இறுதியில் மோசே, 'உன்
நகரில் வாழும் அந்நியரும், அநாதைகளும், கைம்பெண்களும் உண்டு
நிறைவு பெறுமாறு பத்திலொரு பாகத்தை நகரின் வாயிலருகே வை' (இச
14:19) என்கிறார். 'அந்நியருக்கு' தங்க இடம் கிடையாது. அவர்களுக்கு
மொழி உட்பட எல்லாம் புதிதாக இருக்கும். அநாதைகள் பெற்றோர்கள்
இல்லாததால் செல்லும் இடம் அறியாதவர்கள். கைம்பெண்கள் தங்கள்
வாழ்க்கைத் துணையை, வருமானத்தை இழந்தவர்கள். கையறுநிலையின் உச்சக்கட்டத்தை
உணர்ந்தவர்கள் இம்மூவர். மறைநூல் அறிஞர்கள் என்ன செய்வார்கள்
தெரியுமா? இம்மாதிரி கைம்பெண்ணைக் கவரும் விதமாக நீண்ட செபம்
செய்வார்கள். வாழ்வில் ஏற்கனவே நொந்துபோய் இருப்பவர்கள் செபம்
செய்பவர்களை எளிதாகப் பிடித்துக்கொள்வார்கள். இப்படியாக,
கைம்பெண்ணின் ஆவலைக் கவர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக அவர்களிடமிருந்து
பணம் பெறுவார்கள். இறுதியில், உனக்காக வாதாடுகிறேன், உன் உரிமைச்
சொத்தை மீட்கிறேன், உன் கணவனின் சொத்தில் உனக்கு பங்கைப்
பெற்றுத் தருகிறேன் என வாதாடுவதாகச் சொல்லி அவரின் ஒட்டுமொத்த
வீடு மற்றும் உடைமைகளையும் பறித்துக்கொள்வார்கள். இந்த
நிலையைத்தான் சாடுகின்றார் இயேசு. 'எரிகிற வீட்டில் பிடுங்கின
மட்டும் லாபம்' என்பதுதான் இவர்களின் லாஜிக்காக இருக்கிறது.
இரண்டாம் பகுதியில், இயேசு காணிக்கை பெட்டி முன் அமர்ந்திருக்கிறார்.
எருசலேம் ஆலயத்தில் நிறையக் காணிக்கைப் பெட்டிகள் உண்டு. இயேசு
அமர்ந்த இடம் அவற்றில் ஏதாவது ஒன்றின் முன் இருக்கலாம். வரிசையாக
வந்தவர்களில் இரண்டு வகை கொடுப்பவர்கள் இருக்கிறார்கள்: (அ)
செல்வர் வகை - தங்களிடம் இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து
போடுகின்றனர். (ஆ) கைம்பெண் வகை - தன்னிடம் உள்ளது எல்லாவற்றையும்
போட்டுவிடுகின்றார்.இந்த இரண்டு வகை கொடுத்தலை 'உள்ளதிலிருந்து
கொடுப்பது', 'உள்ளத்திலிருந்து கொடுப்பது' எனவும் சொல்லலாம்.
ஒவ்வொரு யூதரும் ஆலயத்தின் மேலாண்மைக்காகவும், பராமரிப்புக்காவும்,
ஆலயத்தின் குருக்களின் பராமரிப்புக்காகவும் ஆண்டுக்கு இரண்டு
செக்கேல்கள் கொடுக்க வேண்டும் என்பது முறைமையாக இருந்தது. இப்பெண்
போட்ட காசு - ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகள் - அதாவது,
எவ்வளவு போட வேண்டுமோ அதில் 60ல் 1 பங்கு மட்டுமே. ஆனால், இவரிடம்
இருந்தது இவ்வளவுதான்.
இயேசுவின் கணக்கு வித்தியாசமாக இருக்கிறது. 'எவ்வளவு' போட்டோம்
என்று பார்ப்பதைவிட, 'எந்த மனநிலையில்' போட்டோம் என்று
பார்க்கின்றார். அதாவது, 100 கோடி கொண்டுள்ள நான் 1 கோடியை
ஆலயத்திற்கு கொடுக்கிறேன் என வைத்துக்கொள்வோம். எனக்கு அருகில்
இருப்பவர் தன் ஒரு மாத சம்பளம் 5000 ரூபாயை அப்படியே
கொடுத்துவிடுகின்றார். 1 கோடி என்பது 5000 ரூபாயைவிட பெரியதுதான்.
ஆனால், என்னிடம் இந்த மாதம் செலவுக்கு இன்னும் 99 கோடிகள் இருக்கின்றன.
ஆனால் என் அருகில் இருப்பவரிடம் ஒன்றும் இல்லை கையில். எனக்கு
அருகில் இருப்பவர்தான் அதிகம் போட்டார் என்கிறார் இயேசு.
பல நேரங்களில் இந்த நற்செய்திப் பகுதியை அருட்பணியாளர்களும்,
சபைப் போதகர்களும், 'நல்ல கலெக்ஷன்' ஆக வேண்டும் என்பதற்காக மட்டுமே
பயன்படுத்துகிறோம் என்பதுதான் வருத்தத்திற்குரிய ஒன்று. மாற்கு
நற்செய்தியாளரின் நோக்கமும், இயேசுவின் நோக்கமும் 'நிறைய
காணிக்கை எடுப்பது எப்படி?' என்று நமக்குச் சொல்வதற்கு அல்ல.
மாறாக, கடவுளின் திருமுன் நம் அர்ப்பணம் எப்படி இருக்கிறது
என்பதை நமக்குத் தோலுரித்துக் காட்டவே.
இந்தப் பெண்ணும் சாரிபாத்துக் கைம்பெண் போலவே தான் செய்த
செயலுக்கு மூன்று காரணங்கள் வைத்திருந்தார்:
அ. ஆண்டவரை வாழும் கடவுளாக ஏற்றுக்கொண்டார்.
ஆ. 'அவர் பார்த்துக்கொள்வார்' என நம்பினார்.
இ. 'அவர் பார்த்துக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. இதுதான் நான்
என என் ஆண்டவரிடம் என்னைக் காட்டுவேன்' என இறைவன்முன் தன்னை
நொறுக்கினார்.
இவ்விரண்டு கைம்பெண்களும் நமக்கு முன்வைக்கும் வாழ்க்கைப்
பாடங்கள் எவை?
1. 'ஒரு கை மாவு - ஒரு கலயம் எண்ணெய் - இரு செப்புக்காசுகள்'
'இதுதான் நான்' - முன்பின் தெரியாத எலியாவிடம் தன் பீரோவைத்
திறந்து காட்டி, 'இதுதான் நான்' என்று சொல்ல சாரிபாத்துக்
கைம்பெண்ணால் எப்படி முடிந்தது? 'என்னிடம் உள்ளது இவ்வளவுதான்'
என்று தன் உள்ளங்கை ரேகைகளை விரித்துக்காட்ட எருசலேம்
கைம்பெண்ணால் எப்படி முடிந்தது? இவர்கள் இருவரும் தங்களை
அறிந்த ஞானியர். பல நேரங்களில் நான் என் இருப்பை இல்லாததையும்
சேர்த்துக் கூட்டிக்கொள்கிறேன். என் படிப்பு, குடும்பம்,
அழைப்பு, பணி, பொறுப்பு ஆகியவற்றை என் இருப்பாக்கிக் கொண்டு
நான் என்னையே மிகைப்படுத்தி இறைவன் முன் நிற்கிறேன். ஆக,
என்னிடம் மிகைப்படுத்துதல் இருப்பதால் என்னையே இழக்க என்னால்
முடியவில்லை. நான் என்னையே நொறுக்காததால் நொறுங்குநிலை என்றால்
என்ன என அறியாமல் இருக்கிறேன். இன்று என் அடையாளங்களை நான்
இழக்க முன்வர வேண்டும். இது முதல் பாடம்.
2. 'எனக்கு இன்னும் வேண்டும்'
'எனக்கு இன்னும் வேண்டும்' என்று சிறுவன் ஆலிவர் கேட்டவுடன்
ஆலிவர் டுவிஸ்ட் நாவல் ஒரு புதிய வேகத்தைப் பெறுகிறது.
அப்படிக் கேட்டதற்காக அந்தச் சிறுவன்
கொடுமைப்படுத்தப்படுகிறார். இன்று நாம் எதையாவது
வாங்கிக்கொண்டே இருக்க விழைகின்றோம். 'எனக்கு இன்னும்
வேண்டும்' - என்பதே என் தேடலாக இருப்பது. இது உறவு
நிலைகளிலும், 'எனக்கு இன்னும் புதிய நண்பர் வேண்டும்' என்ற
நிலையிலும், அல்லது 'என் நண்பரிடமிருந்து எனக்கு இன்னும்
வேண்டும்' என்ற நிலையிலும் சேகரிப்பதாகவே இருக்கிறது. ஆனால்,
இன்று நாம் இறைவாக்கு வழிபாட்டில் காணும் கைம்பெண்கள் இந்த
மனநிலைக்கு எதிராக ஒரு புரட்சி செய்கின்றனர். 'பெரிதினும்
பெரிது கேள்' என்பதற்கு மாற்றாக, 'சிறிதினும் சிறிது பார்' என
இழப்பதில் இருப்பைக் காண்கின்றனர். 'போதும் என்றால் இதுவே
போதும். போதாது என்றால் எதுவும் போதாது' - இதுவே இவர்கள் தரும்
இரண்டாம் பாடம். இதுவே இயேசுவின் சீடத்துவப் பாடமும்கூட.
3. 'கேள்விகள் கேட்காத சரணாகதி'
'எங்க ஊருக்கு மட்டும் ஏன் பஞ்சம்?' 'எங்க ஊருல மட்டும் என்
வறட்சி?' 'என் கணவர் மட்டும் ஏன் சாகணும்?' 'எனக்கு மட்டும்
ஏன் எதுவும் இல்லை?' 'என் ஆடை ஏன் கிழிஞ்சுருக்கு?' 'என் வீடு
மட்டும் ஏன் ஓட்டையாயிருக்கு?' - இப்படி நிறையக் கேள்விகள்
இரண்டு கைம்பெண்கள் மனத்திலும் ஓடியிருக்கும். ஆனாலும், தங்கள்
கேள்விகளை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு சரணாகதி அடைகின்றனர்.
கேள்வி கேட்காத மனமே சரண் அடையும். கேள்வி கேட்காத மனமே
பகிர்ந்து கொடுக்கும். இவர்களின் சரணாகதி இறைவன் முகத்தில்
இவர்கள் ஓங்கி அறைவதுபோல இருக்கிறது. வாழ்வில் பல
கேள்விகளுக்கு விடைகள் இல்லை. அல்லது நாம் விரும்புகின்ற
விடைகள் இல்லை. அந்நேரங்களில் சரணடைவதே சால்பு.
இறுதியாக,
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபி 9:24-28) எபிரேயருக்கு
எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் மற்ற தலைமைக்குருக்களின்
பலிகளிலிருந்து இயேசுவின் பலியை வேறுபடுத்திக் காட்டுகின்றார்.
மற்றவர்கள் கைகளில் ஆடுகளை எடுத்துச் சென்றனர். ஆனால் இயேசு
வெறுங்கையராய்ச் சென்றார். அதுவே உயர்ந்த பலியானது.
வெறுங்கை முழம் போடுமா? என்பது பழமொழி.
ஆனால், வெறுங்கைதான் முழுவதும் போடும் என்பது இன்றைய இறைமொழி.
- Fr. Yesu Karunanidhi, Faculty Member, Saint Paul's
Seminary, Tiruchirappalli 620 001. +91 948 948 21 21
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
(மறையுரை சிந்தனைகளின் தொகுப்பு)
காணிக்கை கொடுங்கள்! நல்லா இருப்பீர்கள்!
மாற்கு 12:38-44
இறையேசுவில் இனியவா்களே! பொதுக்காலம் 32ம் ஞாயிறு வழிபாட்டைக்
கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன்.
இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன்
வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
ஒரு ஊரில் ஜோசப் என்னும் மனிதர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளிடத்தில்
ஆழமான பக்திகொண்டிருந்தார். அதற்கேற்றார்போல் கடவுளுடைய கட்டளைகளை
தவறாது கடைப்பிடித்து வந்தார், தன்னிடம் இருப்பதை முடிந்தவரை
ஏழைகளுக்கும் இறைபணிக்கும் கொடுத்துவந்தார்.
இந்த ஜோசப்பின் வீட்டுக்குப் பக்கத்தில் பணக்காரர் ஒருவர் வசித்து
வந்தார். அவர் யாருக்கும் ஒரு பைசாகூட கொடுக்காதவர். இப்படிப்பட்டவருடைய
வீட்டுக்கு வந்த ஓர் இறையடியார் அவரிடத்தில், "நீ சேர்த்து
வைத்த செல்வம் யாவும் உன் அண்டை வீட்டானாகிய ஜோசப்பைத் தான்
போய் சேரும்" என்று சொல்லிவிட்டுக் கடந்து போய்விட்டார். இது
அந்த பணக்காரருக்கு ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தியது. இத்தனை
ஆண்டுகளும் நாம் சேர்த்துவைத்த செல்வம், யாரோ ஒருவருக்குப் போவதா?
போகவே கூடாது என்று, தான் சேர்த்து வைத்த செல்வமனைத்தையும் ஓர்
அற்புதமான இரத்தினமாக மாற்றி, அதனைத் தன்னுடைய தலைக்கவசத்துக்குள்
மறைத்து வைத்துக்கொண்டு, கடலுக்கு நடுவே இருந்த தீவில் இருந்த
தன்னுடைய பங்களாவில் வைப்பதற்காக கப்பலில் பயணமானார்.
அவர் கடலில் பயணம் சென்றபோது சூறைக்காற்று ஓங்கி ஓங்கி வீசியது.
இதனால் அந்தப் பணக்காரரின் தலைக்கவசமானது கடலுக்குள் விழுந்து,
அதற்குள் இருந்த அற்புதமான இரத்தினமானது ஓர் மீனின் வயிற்றுக்குள்
போனது. தனக்கு ஏற்பட்ட இந்த நிலைமையை நினைத்து அந்தப் பணக்காரன்
பெரிதும் வருந்தினான். இது நடந்து ஓரிரு நாட்கள் கழித்து, மீனவன்
ஒருவன் கடலில் மீன்படிக்க வந்தான். அவனுடைய வலையில் இரத்தினத்தை
விழுங்கிய அந்த மீன் வந்து சிக்க, அதனை அவன் மீன் சந்தையில்
விற்றான்.
அன்றைக்குப் பார்த்து மீன்வாங்க வந்த ஜோசப் குறிப்பிட அந்த
மீனை வாங்கி வீட்டுக்குச் சென்று, அதனை வெட்டி குழம்பு வைக்கத்
தயாரானபோது அதன் வயிற்றினுள் இருந்த இரத்தினத்தைக் கண்டு, மிகவும்
ஆச்சரியப்பட்டு நின்றான். பின்னர் அவன், "இறைவா! நீ தந்த இந்தக்
கொடைக்கு கோடான கோடி நன்றி" என்று இறைவனைப் போற்றிப் புகழத் தொடங்கினான்.
யாராரெல்லாம் இறைவனுக்கும் அவருடைய பணிக்கும் தாராளமாகக்
கொடுக்கின்றார்களோ, அவர்களுக்கு இறைவன் தாராளமாகக் கொடுப்பார்
என்னும் உண்மையை இந்தக் கதையின் வழியாக நாம் அறிந்துகொள்ளலாம்.
பொதுக்காலம் 32-ம் ஞாயிறு காணிக்கை கொடுப்பதன் அவசியத்தையும்,
காணிக்கை கொடுக்கும் போது எப்படி கடவுளின் ஆசீர் நமக்கும் நமது
குடும்பத்திற்கும் கூட்டமாய் வந்து சேருகிறது என்பதை நமக்கு
சுட்டிக்காட்டுகிறது. நம்முடைய கொடுத்தல் மூன்று வடிவங்களிலே
நிகழ்கிறது. இந்த மூன்றையும் நாம் செய்வது நம் கடமை.
1. காணிக்கை
நான் ஒரு பங்கில் இருக்கும்போது, ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை
திருப்பலியில் எத்தனை பேர் வாரம் வாரம் காணிக்கை போடுவீர்கள்
என்றுக் கேட்டேன். அந்த திருப்பலியில் ஏறக்குறைய 600 பேர் இருந்தனர்.
600 பேரில் வெறும் 150 நபர்களே நாங்கள் வாரம் வாரம் காணிக்கை
போடுவோம் என்றனர். கேட்பதற்கு அது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
ஒரு பங்கை நிர்வகிக்க வேண்டும் என்றால் அந்த பங்குத்தந்தைக்கு
போதிய பணம் இருக்க வேண்டும். ஒருசில பணிகள் செய்வதற்கு பணம்
வேண்டும். மறைக்கல்வி மற்றும் விடுமுறை விவிலியப் பள்ளி நடத்துவதற்கு
பணம் கட்டாயத் தேவை. மற்ற சிறப்பு கூட்டங்கள் ஏற்பாடு செய்வதற்கு
பணம் தேவை. விழாக்கள், பரிசுகள் இவைகள் அனைத்தையும் சிறப்பாக
செய்வதற்கு பணம் மிகவும் அவசியமே. பணம் பங்குத்தந்தையிடம் எதுவும்
கிடையாது. நம் பங்குத்தந்தை நம் பங்கிற்காக உழைக்கிறார். நாம்
தான் அதை உற்சாகப்படுத்த வேண்டும். தாராளமாக உதவிகள் செய்ய
வேண்டும்.
ஏழைக்கைம்பெண் தனக்கு இருந்த அத்தனையையும் கடவுளுக்காகவும் கடவுள்
பணிக்காகவும் மனமுவந்து கொடுத்தார். அதைப் போல நம் குடும்பம்
அதை செய்யட்டும். நம் குடும்பத்திலுள்ள அனைவரும் ஞாயிற்றுக்கிழமை
காணிக்கை போடுவோம். கொடுப்பதை புலம்பலோடு கொடுக்காமல் புன்முறுவலோடு
கொடுப்போம். இறைவன் ஆசீரை அள்ளித் தருவார்.
2. நிதிகள்
நான் எமது தூத்துக்குடி மறைமாவட்டத்திலுள்ள சிறுமலர் குருடத்தில்
பணிசெய்கிறேன். வாரம் வாரம் எமது மறைமாவட்டத்திலுள்ள பங்குகளுக்குச்
சென்று குருமாணவர் நிதி பிரிக்கிறேன். ஒவ்வொரு பங்குத்தந்தையும்
இதை சிறப்பாக ஏற்பாடு செய்கிறார்கள். எம் மக்கள் மிகவும்
நிறைவாகவே தருகிறார்கள. ஒரு சுவாரசியமான நிகழ்வை உங்களாடு பகிர்ந்துக்கொள்வதில்
மகிழ்கிறேன்.
ஒரு பங்கிற்கு குருமாணவர் நிதி பிரிக்க சென்ற போது வீடு வீடாகச்
சென்றேன். ஒரு வீட்டில் ஒரு வயதான முதியவர் இருந்தார். அந்த
பாட்டியைப் பார்த்ததும் அவரிடம் பணம் கேட்க வேண்டாம் என எனக்கு
தோன்றியது. கொஞ்சம் நேரம் அவரிடம் பேசிய பிறகு சரி பாட்டி ஒரு
ஜெபம் சொல்லிட்டு போயிட்டு வாரேன் என்றேன். ஜெபம் முடித்ததும்
அந்த பாட்டி சாமி! இந்தாங்க இத வச்சிங்க! இது என்னால் முடிந்தது
என்று சொல்லி கொஞ்சம் நாணயங்கள் கொடுத்தார். எண்ணிப்
பார்த்தேன். அதில் மொத்தம் 28 ரூபாய் இருந்தது. அன்று அவரைப்
பார்த்து வியந்த நான் இன்றும் அதை நினைக்கும் போது வியப்பாகவே
இருக்கிறது.
அன்புமிக்கவர்களே! ஒரு சில நிதிகள் குருமாணவர் நிதிகளைப்
போன்று முதியோர் நிதி, மருத்துவ நிதி, ஏழை மாணவர் படிப்பு
நிதி, மறைபரப்பு நிதி என ஒருசில நிதிகளை கொடுக்கவும் நாம் அழைக்கப்படுகிறோம்.
நாம் முகம் சுளிக்கும்போதெல்லாம் இந்த ஏழைக் கைம்பெண் நம்
நினைவிற்கு வர வேண்டும்.
ஏழைக்கைம்பெண் தனக்கு இருந்த அத்தனையையும் கடவுளுக்காகவும் கடவுள்
பணிக்காகவும் மனமுவந்து கொடுத்தார். அதைப் போல நம் குடும்பம்
அதை செய்யட்டும். நம் குடும்பத்திலுள்ள அனைவரும் ஞாயிற்றுக்கிழமை
காணிக்கை போடுவோம். கொடுப்பதை புலம்பலோடு கொடுக்காமல் புன்முறுவலோடு
கொடுப்போம். இறைவன் ஆசீரை அள்ளித் தருவார்.
3. நன்கொடைகள்
ஒரு குறிப்பிட்ட மறைமாவட்டத்தில் பேராலயம் ஒன்று கட்டிக்கொண்டிருந்தார்கள்.
அதன் பங்குத்தந்தை மக்களுக்கு அறிவிப்பு கொடுத்தார். அன்புமக்களே!
பேராலயப்பணிகளுக்கு மக்கள் தாராளமாய் நன்கொடை கொடுங்கள். உங்கள்
உதவியால் இது கட்டப்பட வேண்டும். இது நம் ஆலயம் என்றார். இந்த
ஆயலத்தில் நடைபெறும் ஞாயிறு திருப்பலிக்கு அந்த பகுதியைச்
சார்ந்த இந்து சகோதரி தவறாமல் வருவது வழக்கம். இந்த அறிவிப்பைக்
கேட்டதும் அவர் ஆலயப்பணிகளுக்கு கண்டிப்பாக நன்கொடை வழங்க
வேண்டும் என்று முடிவு செய்தார்.
அடுத்த வாரம் பங்குத்தந்தை சொன்னார் அன்புமக்களே! நான் ஒரு ஆச்சரியத்தை
இப்போது உங்களிடத்தில் சொல்ல போகிறேன். என்ன ஆச்சரியம்! மக்கள்
திகைத்தார்கள். நான் இரண்டு நாட்களுக்கு முன் மாலை வேளை ஆலயத்திற்கு
ஜெபிக்க வந்தபோது பீடத்தின் மேல் ஒரு கவரில் பத்தாயிரம் ரூபாய்
இருக்க கண்டேன். அந்த கவரின் மேல் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.
தந்தையே! என் சிறு உதவி நம்முடைய ஆலயப்பணிக்காக, ஏற்றுக்கொள்ளுங்கள்".
இவ்வளவுதான். அதில் பெயர்கூட குறிப்பிடப்படவில்லை. நன்கு
விசாரித்த பிறகு தெரிந்தது அது வாரம் வாரம் திருப்பலிக்கு வருகின்ற
அந்த இந்து சகோதரி என்று.
அன்புமக்களே! நம் பங்கில் பல்வேறு விதமான நன்கொடைகள் திரட்டப்படுகின்றன.
ஆயலம் கட்ட நன்கொடை, மண்டபம் கட்ட நன்கொடை என திரட்டும் அனைத்தும்
நம் பங்கு வளர்ச்சிக்காகவே. சில சமயங்களில் பொருளாதாரத்தில்
குறைந்த சில பங்கைச் சார்ந்தவர்களுக்கும் நாம் நன்கொடை கொடுக்க
அழைக்கப்படுகிறோம். கொடுப்பதனால் குறைந்து போவதில்லை.
ஏழைக்கைம்பெண் தனக்கு இருந்த அத்தனையையும் கடவுளுக்காகவும் கடவுள்
பணிக்காகவும் மனமுவந்து கொடுத்தார். அதைப் போல நம் குடும்பம்
அதை செய்யட்டும். நம் குடும்பத்திலுள்ள அனைவரும் ஞாயிற்றுக்கிழமை
காணிக்கை போடுவோம். கொடுப்பதை புலம்பலோடு கொடுக்காமல் புன்முறுவலோடு
கொடுப்போம். இறைவன் ஆசீரை அள்ளித் தருவார்.
மனதில் கேட்க...
1. ஆலயம், பங்கு இவைகளுக்கு கொடுக்கும் போது புலம்புகிறேனா?
புன்முறுவல் செய்கிறேனா?
2. காணிக்கை, நிதி, நன்கொடை கொடுப்பது நல்லது? கொடுக்கும் போது
கடவுளின் ஆசீரால் நல்லா இருக்கலாம் அல்லவா?
மனதில் பதிக்க
நல்லதை செய்து நற்செயல்கள் என்னும் செல்வத்தை சேருங்கள். தங்களுக்குள்ளதைத்
தாராள மனத்தோடு பகிர்ந்தளியுங்கள் (1திமொ 6:18)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா
====================
1அரசர்கள் 17: 10
-16
இறைவனின் வழிநடத்தல்
"வாழும் உம் கடவுளாகிய ஆண்டவரின் மேல் ஆணை! என்னிடம் அப்பம் ஏதுமில்லை!
பானையில் கையளவு மாவும், கலயத்தில் சிறிதளவு எண்ணெயுமே என்னிடம்
உள்ளன" என்று, எலியாவிடம், சாரிபாத்தில் வாழ்ந்த அந்த கைம்பெண்
சொல்கிறாள். இது, இது தொடக்கநூல் 21: 16 ல் வருகிற, ஆகார் மற்றும்
அவளுடைய மகன் போன்ற நிலையைக் குறிப்பதாக இருக்கிறது. கடவுளின்
பணியாளர்கள் எல்லா தருணத்திலும், குறிப்பாக நெருக்கடியான தருணங்களில்
இயற்கையால் வழிநடத்தப்படுகிறார்கள். உணவளிக்கப்படுகிறார்கள்.
இந்த அதிகாரத்தின் தொடக்கத்தில், ஆண்டவரால் ஓர் ஓடையருகே ஒளிந்து
கொள்ள பணிக்கப்படுகிறார். அங்கே நீர் அவருக்கு அளிக்கப்படுகிறது.
அற்புதமாக காகத்தின் மூலம் உணவளிக்கப்படுகிறது. இப்போது, பசியால்
சாகவிருக்கிற கைம்பெண் மூலமாக உணவளிக்கப்பட்டு, அவளுக்கும்
வாழ்வளிக்கப்படுகிறது. அந்த பெண்ணுக்கும், இறைவாக்கினருக்கும்
இடையே நடக்கும் உரையாடல் அற்புதமானது. அந்த பெண் குறைவைப்
பார்க்கிறாள். ஆனால், இறைவாக்கினரோ, குறைவிலும் இறைவனின் மீது
கொண்ட அளப்பரிய நம்பிக்கையினால் நிறைவை எதிர்பார்க்கிறார். அந்த
பெண்ணின் வார்த்தைகளில் ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது. இறைவாக்கினரின்
வார்த்தைகளிலோ, நம்பிக்கை அதிகமாக இருக்கிறது. ஆகாருக்கு இறைவன்
சொன்ன அதே வார்த்தைகளை, கைம்பெண்ணுக்கு இறைவாக்கினர் வழங்குகிறார்
"பயப்படாதே!". ஆக,
இறைவன் இருக்கிற இடத்தில் நாம் எப்போதும் பயம் கொள்ளத்
தேவையில்லை. நாம் எப்போதும் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்க
வேண்டும். மரணத்தின் தருவாயிலும் நாம் நம்பிக்கையோடு இருக்கிறபோது,
இறைவனின் ஆசீர்வாதம் நிச்சயம் நமக்கு நிறைவாகக் கிடைக்கும்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
---------------------------------------------------
ஏழை எளியவர்களின் கடவுள்
மறைநூல் அறிஞர்களுக்கு இன்றைய நற்செய்தி மூலம், இயேசு எச்சரிக்கை
விடுக்கிறார். அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை அடுக்குகிறார்.
தொங்கலான ஆடை என்பது, ஒரு மதிப்பைக் கொடுக்கக்கூடிய ஆடை. ஆடை
தரையில் பட நடந்து வருவது, மேன்மையைக் குறிக்கக்கூடியதாக, மக்கள்
மத்தியில் உணரப்பட்டது. ஏனென்றால், கடினமாக உழைப்பவர்களோ,
அவசரமாக நடந்து செல்கிறவர்களோ, இந்த ஆடையை அணிய முடியாது. தங்களை
மேன்மைமிக்கவர்களாக, தங்களுக்கு பணிசெய்ய வேலையாட்கள் இருக்கிறார்கள்,
என்பதைக் காட்டிக்கொள்ளக்கூடியவர்களால் மட்டும் தான், இதுபோன்ற
ஆடைகளை அணிய முடியும். ஆக, மற்றவர்களை தங்களுக்குக் கீழானவர்களாக
மதிக்கக்கூடிய எண்ணம் தான், அவர்களை தொங்கலான ஆடை அணியச்செய்திருக்கிறது.
சட்ட வல்லுநர்கள் தங்களுடைய போதனைகளுக்கு, எந்த கூலியும்
பெற்றுக்கொள்ளக் கூடாது. தங்களது வாழ்விற்குத் தேவையான
பொருளாதாரத்தை, செல்வத்தை அவர்கள், வேலை செய்து சம்பாதித்துக்
கொள்ள வேண்டும். ஆனால், அப்படிச் செய்யாமல், ஏழை, எளியவர்களை
ஏமாற்றி, தங்களுக்கு வேண்டியதை, கடவுளின் பெயரால் இவர்கள்
பெற்றுக்கொண்டார்கள். சாதாரண, பாமர மக்களை ஏமாற்றிப்பிழைக்கக்கூடிய
செயல்கள், நடத்தைகள் மதங்களில் இருப்பது கண்டிக்கத்தக்கது. அது
அருவருக்கத்தக்கது.
இவ்வாறு, ஏழை, எளியவர்களை ஏமாற்றிப்பிழைக்கக்கூடிய இவர்களுக்கு
கடவுள் நிச்சயம் தண்டனை கொடுப்பார், என்று இயேசு அவர்களுக்கு
எச்சரிக்கை விடுக்கிறார். செய்யக்கூடிய ஒவ்வொரு செயல்களுக்கும்
நிச்சய் நாம் பதில் சொல்லியே ஆக வேண்டும், என்று நற்செய்தி
சொல்கிறது. குறிப்பாக, ஏழை, எளியவர்களுக்கு செய்யக்கூடிய அநீதிக்கு
கடுமையான தண்டனையை, கடவுள் நிச்சயம் கொடுப்பார். நமது
வாழ்வில், ஏழை, எளியவர்கள் மீது அக்கறை காட்டுகிறவர்களாக
மாறுவோம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------
தற்பெருமையை அகற்றுவோம்
இந்த நற்செய்திப் பகுதியில் மறைநூல் அறிஞர்களுக்கு எதிராக இயேசு
வரிசையாக பல குற்றச்சாட்டுக்களைச் சாட்டுகிறார். அவர் வைக்கக்கூடிய
முதல் குற்றச்சாட்டு: அவர்கள் தொங்கல் ஆடை அணிந்து நடமாடுவதை
விரும்புவார்கள். நீண்ட, தரையைத் தொடுமடுமளவுக்கு அணியப்படும்
ஆடை, மதிப்பைக்கொடுப்பதாக இருக்கிறது. அந்த நீண்ட ஆடையின் முனைகளில்
குஞ்சங்கள் செய்து ஒவ்வொரு குஞ்சத்திலும் நீல நாடாவைக்கட்டினர்.
குஞ்சம் என்பது ஒருவகையான அலங்காரம். உதாரணமாக, அருட்தந்தையர்கள்
தங்கள் இடையில் கட்டும், இடைக்கயிறில் காணப்படும் கயிறுகளின்
தொகுப்பு. அதைக்கட்டுவதற்கான காரணம் எண்ணிக்கை 15: 39 ல் தரப்படுகிறது:
"நீங்கள் ஒழுக்கம் கெட்டு நடப்பதற்கு ஏதுவாய் உங்கள் இதயங்களும்
உங்கள் கண்களும் விரும்புவதைப் பின்பற்றாமல் நீங்கள் அவற்றைப்பார்த்து,
ஆண்டவர் கட்டளைகள் அனைத்தையும் நீங்கள் நினைவுகூர்ந்து அவற்றைச்செய்திடவே
இக்குஞ்சம்". ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதற்கான
நினைவூட்டல்தான், இந்த குஞ்சங்களின் பொருள். இயேசுவின் குற்றச்சாட்டு,
மறைநூல் அறிஞர்கள் தாங்கள் செய்வது அனைத்தையும், உண்மையான அர்த்தத்தோடு
செய்யாமல், கடவுளை மகிமைப்படுத்த வேண்டும் என்று எண்ணாமல், சடங்குக்காகவும்,
தங்களை மகிமைப்படுத்தவும், அதைப்பயன்படுத்தினர். மற்றவர்கள்
முன் தங்களை மதிப்புள்ளவர்களாகக் காட்டிக்கொண்டனர்.
கடவுள் முன்னிலையில் நாம் தற்பெருமை உள்ளவர்களாக வாழ்ந்தால்,
அழிவு நமக்கு மிகவிரைவாய் நேரிடும். இதற்கு எத்தனையோ உதாரணங்கள்
விவிலியத்தில் தரப்பட்டுள்ளது. படைப்புக்களாய் இருக்கிற நாம்,
படைத்தவருக்கு இணையாக நம்மையே கருதமுடியாது. அது நம்மை அழிவிற்குத்தான்
கொண்டு செல்லும்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
-------------------------
தண்டனைக்குரியவர்களும், பாராட்டுக்குரியவர்களும்
தண்டனைக்குரியவர்கள், பாராட்டுக்குரியவர்கள் என இருவகையான மனிதர்களைப்
பற்றிப் பேசுகின்றது இன்றைய நற்செய்தி வாசகம்.
"கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாக இருப்பவர்கள்" என ஆண்டவர் இயேசு
குறிப்பிடும் நபர்கள் மறைநூல் அறிஞர்கள். இவர்கள் நீண்ட நேரம்
இறைவனிடம் வேண்டுவதாக நடிக்கிறார்கள் என்கிறார் இயேசு. இவர்களுக்கு
ஆன்மீகம், வழிபாடு, இறைவேண்டல் முதலியவை ஒரு வெளிவேடமே, நடிப்பே.
எனவே, உள் ஒன்றும், புறம் ஒன்றுமாக வாழ்பவர்கள் நடிக்கிறார்கள்.
இறைவன் இவர்களது வேண்டுதலை ஏற்பதில்லை.
இத்தகையோருக்கு மாற்றாக இயேசுவால் பாராட்டப்படுபவர் ஓர் ஏழைக்
கைம்பெண். இவர் இரண்டு செப்புக் காசுகள் மட்டுமே போட்டார். ஆனால்,
தமது பிழைப்புக்காக வைத்திருந்த அனைத்தையும் போட்டதற்காக இயேசுவால்
புகழப்படுகின்றார். இவரது காணிக்கை நடிப்பல்ல, உள்ளத்தில் ஆழத்திலிருந்து
வந்த்து. இறைவனிடம் கொண்டிருந்து ஆழ்ந்த நம்பிக்கையிலிருந்து
வந்தது. "அனைத்தையும் போட்டுவிட்டாலும், இறைவன் என்னைக்
காப்பாற்றுவார்" என்ற பற்றுறுதியின் காரணமாக அந்தக் காசுகளைப்
போட்டார் அவர்.
நமது வாழ்வும், வழிபாடும் வெளிவேடமாக இல்லாமல், உள்ளார்ந்த ஈடுபாடு
கொண்டதாக அமைய முயற்சி செய்வோம்.
மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். முரண்பாடுகள்
நிறைந்த வெளிவேட ஆன்மீகத்திலிருந்து எங்களை விடுவித்தருளும்.
நேர்மையான விதத்தில் எங்கள் வழிபாடுகள் அமைய அருள்தாரும். ஆமென்.
அருள்பணி. குமார்ராஜா
-------------------------
பெறுவதைவிட தருவதே மேலானது !
இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,
சில உண்மைகளை அனுபவத்தின் மூலம் மட்டுமே கற்றுக்கொள்ள
முடியும். அவற்றுள் ஒன்றுதான் கொடுப்பதன் மேன்மை. கொடுங்கள்,
உங்களுக்குக் கொடுக்கப்படும் என்ற ஆண்டவரின் அருள்வாக்கின் அருமையை
அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும். இன்றைய முதல் வாசகத்திலும்,
நற்செய்தி வாசகத்திலும் கொடுத்தலின் மேன்மை போற்றப்படுகிறது.
முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எலியாவுக்கு அப்பம் கொடுத்துப்
பசி நீக்கிய கைம்பெண்ணுக்கு ஆண்டவர் அற்புதமான முறையில் தொடர்ந்து
உணவு கிடைக்கச் செய்த நிகழ்வை வாசிக்கிறோம். நற்செய்தி வாசகத்திலோ
ஆண்டவர் இயேசு மறைநுhல் அறிஞர்களைச் சாடும்போது அவர்கள் பிறருக்குக்
கொடுப்பதற்குப் பதிலாக, கைம்பெண்களின் வீடுகளைப்
பிடுங்கிக்கொள்வதைக் கண்டனம் செய்கிறார். அத்துடன், ஏழைக்
கைம்பெண் போட்ட காணிக்கையையும் பெரிதும் பாராட்டுகிறார். இரு
வாசகங்களிலும் வருகின்ற கைம்பெண்கள் தாங்கள் பெறுகின்ற
நிலையில் இருந்தபொழுதும்கூட கொடுக்கின்ற மனம் உள்ளவர்களாக இருந்தனர்.
எனவே, பாராட்டையும், இறை ஆசியையும் பெற்றுக்கொண்டனர். பொதுவாகவே,
குறைவாக உள்ளவர்களுக்குத்தான் நிறைவான மனம் இருக்கிறது என்று
நாம் சொல்கிறோம். இந்தக் கைம்பெண்கள் அதை எண்பித்துக்காட்டுகின்றனர்.
கொடுப்பது என்பது ஒரு பழக்கம். கொடுக்க, கொடுக்க அது ஒரு நற்பழக்கமாக,
நல் மனநிலையாக நம்மில் உருவாகும். எனவே, எப்போதும், எதையாவது
கொடுக்கின்ற ஒரு பழக்கத்தினை நம்மில் உருவாக்கிக்கொள்வோம்.
மன்றாடுவோம்: கொடைகளின் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம்.
நீர் எங்களுக்கு ஏராளமான கொடைகளை அள்ளித் தந்திருக்கின்றீர்.
உம்மிடமிருந்து நாங்கள் பெற்றுக்கொண்டவைகளிலிருந்து ஒரு சிறிது
பிறருக்கும் கொடுத்து, அதன் வழியாக உம்மிடமிருந்து இன்னும்
நிறைய பெற்றுக்கொள்கின்ற பேற்றினை, ஞானத்தினை எங்களுக்குத் தந்தருளும்.
உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
-- அருள்தந்தை குமார்ராஜா
-------------------------
"இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக
அமர்ந்துகொண்டு மக்கள் அதில் செப்புக் காசு போடுவதை உற்று
நோக்கிக்கொண்டிருந்தார். செல்வர் பலர் அதில் மிகுதியாகப் போட்டனர்.
அங்கு வந்த ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு
காசுகளைப் போட்டார்" (மாற்கு 12:41-42)
அன்பார்ந்த இணையதள நண்பர்களே!
-- எருசலேம் கோவிலுக்குச் சென்ற மக்கள் கடவுளுக்கென்று
காணிக்கை அளித்தார்கள். கோவில் வழிபாட்டுக்கும் பிற செலவுகளுக்கும்
அக்காணிக்கை பயன்பட்டது. காணிக்கை அளிப்பதன் வழியாக மக்கள் தங்கள்
சமய உணர்வை வெளிப்படுத்தினார்கள். சிலர் தங்களது செல்வக்
கொழிப்பைக் காட்டுகின்ற தருணமாக அதைக் கருதியிருக்கலாம். மக்கள்
காணிக்கை போடுவதை இயேசு கூர்ந்து பார்க்கிறார். எல்லாரும்
பார்க்கும் விதத்தில், கேட்கும் விதத்தில் அவர்கள் போடுகின்ற
செப்பு நாணயம் காணிக்கைப் பெட்டியில் விழுந்து ஒலி எழுப்புகிறது.
அப்போது அங்கே வருகிறார் ஓர் ஏழைக் கைம்பெண். அவரிடத்தில் செல்வம்
கிடையாது. அவர் கைவசம் இருக்கும் செல்வம் இரண்டு சிறு காசுகளே.
அவற்றின் மதிப்பு இன்றைய கணிப்புப்படி ஒரு சில பைசா மட்டுமே.
அந்த இரு சிறு காசுகளையும் அப்பெண் காணிக்கையாக அளிக்கிறார்.
இதைக் கண்ட இயேசு அப்பெண்ணின் தாராள உள்ளத்தைப்
பாராட்டுகிறார். அவர் "தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே
காணிக்கையாகக் கொடுத்துவிட்டார்" (காண்க: மாற் 12:44) என இயேசு
அவருடைய செயலைப் புகழ்கிறார்.
-- இதிலிருந்து நாம் இரு கருத்துக்களைப் பெறலாம். அந்த ஏழைக்
கைம்பெண்ணை இயேசு பாராட்டியதற்குக் காரணம் அவர் கொடுத்த தொகை
பெரிது என்பதல்ல, மாறாக, அவர் தமக்கென்று எதையுமே தக்க வைக்காமல்
"எல்லாவற்றையுமே" காணிக்கையாகப் போட்டுவிட்டார் என்பதே. கடவுளை
முழு உள்ளத்தோடு நாம் அன்புசெய்ய வேண்டும் (காண்க: மாற்
12:29-30) என்று இயேசு கூறியதற்கு அப்பெண் முன் உதாரணம் ஆகின்றார்.
அவருடைய காணிக்கை "முழுமையானதாக" இருந்தது. அவர் கடவுளுக்குத்
தம் உயிரையே காணிக்கையாக்கிவிட்டார். இன்னொரு கருத்து, அந்த ஏழைக்
கைம்பெண் ஏன் அவ்வாறு காணிக்கை அளித்தார் என்பதைப் பற்றியது.
அக்காலத்தில் "கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கியவர்கள்" இருந்தார்கள்
என இயேசு கூறினார் (காண்க: மாற் 12:40). கடவுளின் பெயரால்,
சமயத்தின் பெயரால் மக்களைச் சுறண்டிய அதிகாரிகள் அன்றும் இருந்தார்கள்,
இன்றும் இருக்கிறார்கள். மனிதர் மாண்போடு வாழ வேண்டும் என்பதே
கடவுளின் விருப்பமேயன்றி, அவர்கள் சமயச் சட்டங்களுக்கு அடிமைகளாக்கப்பட்டு,
துன்பத்தில் வாட வேண்டும் என்பதல்ல (காண்க: மாற் 2:23-28;
3:1-5; 7:9-13). ஆயினும், இயேசு அந்த ஏழைக் கைம்பெண்ணின் தாராள
உள்ளத்தைப் போற்றினார். இயேசுவும் தம்மையே முழுமையாக நமக்குக்
கையளித்தார்; தம் உயிரை நமக்குக் "காணிக்கையாக்கினார்". அவரைப்
போல, அந்த ஏழைக் கைம்பெண்ணைப் போல நாமும் முழு உள்ளத்தோடு கடவுளை
அன்புசெய்ய அழைக்கப்படுகிறோம்.
மன்றாட்டு
இறைவா, தாராள உள்ளத்தை எங்களுக்குத் தந்தருளும்.
--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்
"இயேசு தம் சீடரை வரவழைத்து, 'இந்த ஏழைக்
கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும்
விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச்
சொல்கிறேன்' என்றார்" (மாற்கு 12:43)
அன்பார்ந்த இணையதள நண்பர்களே!
-- பணம், பதவி, அந்தஸ்து, அதிகாரம் ஆகியவற்றைத் தேடிய மனிதர்களை
இயேசு பல முறை கண்டித்துப் பேசினார். மறைநூல் அறிஞருள் சிலர்
நேர்மையாக நடந்தார்கள் என்றாலும் (காண்க: மாற் 12:28-34), வேறு
பலர் வெளிவேடக்காரர்களாகவும் பதவி மற்றும் பண ஆசை கொண்டவர்களாவும்
நடந்துகொண்டார்கள். அவர்களைக் குறித்து இயேசு எச்சரிக்கை
விடுத்தார். அவர்கள் "கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்
கொள்கிறார்கள்" (மாற் 12:40). இயேசு வாழ்ந்த காலத்தில்
கைம்பெண்களின் நிலை மிகவும் மோசமாகவே இருந்தது. ஆணாதிக்கம்
கோலோச்சிய அன்றைய சமுதாயத்தில் கைம்பெண் துணையற்ற ஒருவராக வாழ
வேண்டியிருந்தது. கணவனின் சாவுக்குப் பிறகு பிறந்த வீட்டுக்கே
திரும்பிச் செல்லும் நிலைக்குப் பலர் தள்ளப்பட்டனர். இவ்வாறு
துணையற்றவர்களாக இருந்த கைம்பெண்களை ஏமாற்றித் தங்களுக்குச்
செல்வம் சேர்த்த மறைநூல் அறிஞரும் இயேசுவின் காலத்தில் இருந்திருக்க
வேண்டும் எனத் தெரிகிறது. இப்பின்னணியில் நாம் "ஏழைக்
கைம்பெண்ணின் காணிக்கை" என்னும் பகுதியைப் புரிந்துகொள்ள
வேண்டும் (மாற் 12:41-44). எருசலேம் கோவிலுக்குச் சென்ற இயேசு
அங்கே வைக்கப்பட்டிருந்த காணிக்கைப் பெட்டிகளில் மக்கள்
காணிக்கை போடுவதை "உற்று நோக்கிக் கொண்டிருந்தார்" (மாற்
12:41). ஒவ்வொருவராக வந்து காணிக்கை போடுகின்றனர். சிலர்
பெரும் தொகையைப் பெட்டியில் போடுகின்றனர். அப்போது காணிக்கைப்
பெட்டியை நோக்கித் தயக்கத்தோடு வருகிறார் ஓர் ஏழைக் கைம்பெண்.
அவரிடம் பெருமளவில் பணம் இல்லை. இரண்டு காசுகள் மட்டுமே உள்ளன.
அதுவே அவருடைய முழுச் சொத்து. அச்சொத்து முழுவதையும் அவர்
காணிக்கையாகக் கொடுத்துவிடுகிறார்.
-- இதைக் கண்ட இயேசு தம் சீடர்களுக்கு ஒரு பாடம் கற்பித்துக்
கொடுக்கிறார்: "இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில்
காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார்
என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" (மாற் 12:43). இந்த நிகழ்ச்சியிலிருந்து
நாம் பல கருத்துக்களை அறிந்துகொள்கிறோம். அதாவது, சமயத்தின் பெயரால்
ஏழைகள் ஒடுக்கப்பட்டது அன்று மட்டுமல்ல, இன்றும் நடந்துதான் வருகிறது.
கடவுளுக்குக் காணிக்கை என்று கூறிவிட்டு, ஏழைகளைச் சுறண்டுகின்ற
வேலையே நடந்தால் அது கொடுமைதான். ஆனால் அக்கைம்பெண்ணைப் பொறுத்தமட்டில்
அவருடைய உள்ளத்திலிருந்து எழுகின்ற அன்பு நம்மைக் கவர்ந்து இழுக்கிறது.
"உன் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன்
ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக" (மாற் 12:31) என்னும்
அன்புக் கட்டளையை அக்கைம்பெண் நடைமுறையில் செயல்படுத்துகிறார்.
தன் உடைமையை மட்டுமன்று, தன்னை முழுவதுமே அவர் கடவுளுக்குக்
காணிக்கையாக்கிவிடுகிறார். கடவுளிடம் அவர் கொண்ட நம்பிக்கையின்
ஆழம் நம்மை வியப்புறச் செய்கிறது. கடவுளையும் பிறரையும் நாம்
அன்புசெய்ய வேண்டும் என்பது நம் செல்வத்தை நாம் காணிக்கையாக்க
வேண்டும் என்பதோடு நின்றுவிடுவதில்லை. நம் உள்ளத்திலிருந்து எழுகின்ற
அன்புணர்வோடு நாம் கடவுளை அணுகிச் செல்லும்போது நம் திறமைகள்,
நேரம் ஆகியவற்றையும் பிறர் நலம் சிறக்கச் செலவிடத் தயங்க
மாட்டோம். செய்கின்ற தொழிலையும் கடமையுணர்வோடு நாம் ஆற்றும்போது
அது பிறரன்புப் பணியாக மாறும். இவ்விதத்தில் நம் தாராள உள்ளம்
வெளிப்படும். தன்னிடமிருந்த அனைத்தையும் காணிக்கையாக்கிய
கைம்பெண்ணைப் போல நாமும் கடவுள் முன்னிலையில் "செல்வர்கள்"
ஆவோம்.
மன்றாட்டு
இறைவா, எங்களை முழுவதும் உமக்குக் காணிக்கையாக்கிட அருள்தாரும்.
--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்
---------------------------
தொங்கல் ஆடையா? ஒரு கொதிராந்தா?
அன்பார்ந்த இணையதள நண்பர்களே!
மனிதனுக்கு விலாசம் தேவை. விளம்பரம் தேவையல்ல. விலை கொடுத்து
விளம்பரப்படுத்தி பெறுவை பெயரும் புகழும். மாறாக தன்னை வருத்தி
தயாகம் செய்வதால் தானா அவை வந்து சேர வேண்டும். விளம்பரம்
தேடும் விவரம் தெறிந்த படித்த பெரிய மனிதர்களையும்,
கொடுத்துக்கொடுத்து தன்னையும் தன் வாழ்வையும் தன் முகவரியையும்
கூட இழந்து போன ஒரு பெண்ணையும் இங்கே காண்கிறோம்.
இயேசு பெண்ணைப் பாராட்டுகிறார். பெரிய மனிதர்கள் குறித்து எச்சரிக்கையாக
இருக்கச் சொல்கிறார். மறைநூல் அறிஞரின் தொங்கலாடை, ஆடம்பரம்,
செல்வாக்கு, பெருமை இவற்றின் வெளி அடையாளம். கைம்பெண்ணின் ஒரு
வெள்ளிக்காசு மறைவான தியாகத்தின் உச்சநிலை. தியாகச்செயல் ஆண்டவருக்கே
செய்யப்பட்டப் போதிலும் அது மறைவாக இருக்க வேண்டும். தன்னை வருத்துவதாய்
இருக்க வேண்டும்.
நல்ல மனதோடு செய்கின்ற சிறிய தியாகமும் தர்மமும் ஆண்டவரின் ஆசீரை
அள்ளிக் கொண்டு குவிக்கும் ஆற்றல் படைத்தது. அதே வேளையில்
பெருமைக்காக, விளம்பரத்திற்காகச் செய்யும் பெரிய கொடைகள் பல
வேளைகளில் நமக்கு உதவாமல் போய்விடும். ஏழைக் கைம்பெண்ணிடம் விளங்கிய
மன நிலையோடு தான தர்மங்களைச் செய்வோம். அது நமக்கு முகவரியைப்
பெற்றுத் தரும். முக மலர்ச்சியைக் கொடுக்கும். இறை
வார்த்தையில் புதுப்பிக்கப்பட்டு புதுவாழ்வு வாழ
வாழ்த்துகிறேன்; செபிக்கிறேன்.
--அருட்திரு ஜோசப் லியோன்
மூன்று அறிவுரைகள் !
இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,
இன்றைய நற்செய்தி வாசகம் வழியாக மூன்று அறிவுரைகளை நமக்குத் தருகிறார்
இயேசு. 1. நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு நண்பர்களைத்
தேடிக்கொள்ளுங்கள். நம்மிடத்தில் உள்ள திறமைகள், ஆற்றல்கள்,
குறிப்பாக பணம்... இவற்றைக் கொண்டு நல்ல நண்பர்களை, குறிப்பாக
மறுவுலக வாழ்வுக்கான நண்பர்களைத் தேடிக்கொள்ள வேண்டும். எனவே,
செல்வம் சேர்த்து வைப்பதற்கல்ல. மாறாக, இறைவனுக்காகப் பயன்படத்துவதற்காக.
அதை மனதில் கொள்வோம். 2. நேர்மையற்ற செல்வத்தைக் கையாள்வதிலேயே
நம்பத்தகாதவராய் இருந்தால், உண்மைச் செல்வத்தை யார் ஒப்படைப்பார்?
எனவே, நிதியை, குறிப்பாக பொது நிதியைக் கையாள்வதில் நேர்மையாகவும்,
வெளிப்படையாகவும் இருக்க வேண்டும். நிதியை நேர்மையோடு கையாள்பவர்
மற்ற அனைத்தையும் கையாள்வதில் நம்பிக்கைக்குரியவராய் இருப்பார்.
3.ஒரு வேலையாள் இரு தலைவர்களுக்கு ஊழியம் செய்யமுடியாது. நாம்
இரு கடவுள்களை வழிபட முடியாது. கடவுளையும், காசையும் நாம் வழிபட
முடியாது. செல்வத்தின்மீது அதிகப் பற்று சிலைவழிபாட்டுக்கு ஒப்பானது.
எனவே, செல்வத்தைக் கடவுளுக்கு இணையாக்காமல் வாழ்வோம்.
மன்றாடுவோம்: செல்வத்தில் எல்லாம் பெருஞ்செல்வமான இயேசுவே, உம்மைப்
போற்றுகிறோம். இன்றைய நற்செய்தி வாசகம் வழியாக நீர் எங்களுக்குத்
தருகின்ற இந்த மூன்று அறிவுரைகளையும் நாங்கள் ஏற்று செயல்பட எங்களுக்கு
அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
-- அருள்தந்தை குமார்ராஜா
--------------------------------
"இயேசு, 'நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு உங்களுக்கு நண்பர்களைத்
தேடிக் கொள்ளுங்கள்.
அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக்கொள்வார்கள்'
என்றார்" (லூக்கா 16:9
அன்பார்ந்த இணைதள நண்பர்களே!
-- செல்வம் நிலையானதல்ல என்னும் உண்மையை இயேசு பல இடங்களில் எடுத்துக்
கூறுகிறார் (காண்க: மத் 6:19-21; லூக் 12:15). எனவே "நேர்மையற்ற
செல்வம்" என இயேசு கூறுவதை நாம் இரு பொருள்களில் புரிந்துகொள்ளலாம்.
இவ்வுலகு சார்ந்த செல்வம் பெரும்பாலும் நேர்மையற்ற வழிகளைப்
பயன்படுத்தி சம்பாதிக்கப்படுவது என்பது ஒரு பொருள். இவ்வுலகச்
செல்வத்தை மனிதர் நேர்மையற்ற நோக்கத்தோடும் செலவிடுகிறார்கள்
என்பது மறுபொருள்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
பங்குக்கோவில் திருநாள் நெருங்கி வந்தது. திருநாளுக்கு நிதி
உதவி செய்யுமாறு, பங்குத்தந்தை, ஒவ்வொரு திருப்பலியிலும்,
மக்களிடம் விண்ணப்பித்தார். அத்துடன், நிதி உதவி செய்பவர்
பெயரும், அவர் வழங்கியத் தொகையும் ஞாயிறு திருப்பலிகளில்
வாசிக்கப்படும் என்றும் பங்குத்தந்தை அறிவித்திருந்தார்.
பங்கில் பல ஆண்டுகள் பேருடனும், புகழுடனும் வாழ்ந்து வந்த
செல்வந்தர் ஒருவர், திருவிழாவுக்கென, பங்குத்தந்தையிடம்,
பத்தாயிரம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார். அடுத்த ஞாயிறன்று
அதை கட்டாயம் அறிவிப்பதாக பங்குத்தந்தை கூறியதும், செல்வந்தர்
விடைபெற்றுச் சென்றார். ஐந்து நிமிடங்கள் சென்று, செல்வந்தர்
மீண்டும் பங்குத்தந்தையிடம் வந்து, "சாமி, நான் கொடுத்த
பத்தாயிரத்தில் தயவுசெய்து ஒரு ரூபாயைத் திருப்பிக் கொடுங்கள்"
என்று கேட்டு வாங்கிக்கொண்டார். காரணம் புரியாமல் திகைத்து
நின்ற பங்குத்தந்தையிடம், அச்செல்வந்தர், "சாமி, நீங்கள்
பூசையில் என் பெயரையும், நான் கொடுத்த தொகையையும்
சொல்லும்போது, 'பத்தாயிரம்' என்று சொன்னால், அது ஒரே
வார்த்தையிலே, சுருக்கமா முடிஞ்சிடும். அதற்குப்பதில், நான்
தந்தது, 'ஒன்பதாயிரத்து, தொள்ளாயிரத்து, தொண்ணுற்றொன்பது'
என்று நீங்கள் சொல்லும்போது, அது நீளமாகத் தெரியும்" என்று
விளக்கம் தந்தார்.
தர்மச் செயல்களுக்கு விளம்பரம் தேடும் பலருக்கு,
இச்செல்வந்தர், ஒரு சிறிய, இன்னும் சொல்லப்போனால்,
சின்னத்தனமான எடுத்துக்காட்டு. தங்களது தான தர்மங்களை,
தம்பட்டம் அடித்து, மற்றவர்களின் செவிப்பறையைக் கிழிக்கும்
தர்மக் கர்த்தாக்களை, இயேசு இன்றைய நற்செய்தியில் தோலுரித்துக்
காட்டுகிறார்.
கோவிலில், காணிக்கைப் பெட்டிக்கருகே நடந்தவற்றை,
நற்செய்தியாளர் மாற்கு இவ்வாறு பதிவு செய்துள்ளார்: "இயேசு
காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்துகொண்டு மக்கள் அதில்
செப்புக்காசு போடுவதை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். செல்வர்
பலர் அதில் மிகுதியாகப் போட்டனர்" (மாற்கு 12:41)
மக்கள் காணிக்கைப் பெட்டியில் செப்புக்காசு போட்டனர் என்பதை
நற்செய்தியாளர் மாற்கு சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளது, நம்
சிந்தனைகளைத் தூண்டுகிறது.
எருசலேம் கோவிலில், காணிக்கைப் பேட்டிகள், ஒரு குழாய்
வடிவத்தில், உலோகத்தால் செய்யப்பட்டிருந்தன. எனவே, அவற்றில்
நாணயங்களைப் போடும்போது, மிகுந்த ஒலியை உருவாக்கின. அந்த ஒலி
நீண்ட நேரம் கேட்கவேண்டும் என்பதற்காக, தாங்கள் வழங்கிய
காணிக்கைத் தொகை முழுவதையும் சிறு சில்லறைகளான
செப்புக்காசுகளாக மாற்றி, அதிக நேரம் அந்தக் காணிக்கைப்
பெட்டியில் போட்டனர், செல்வந்தர். அதிலும், மக்கள் கூடிவந்த
பகல் நேரங்களில் அவர்கள் இவ்வாறு செய்திருக்கவேண்டும். யாருடைய
காணிக்கை, அதிக நேரம் ஒலி எழுப்புகிறது என்ற போட்டியும்,
செல்வந்தர்களுக்கிடையே எழுந்திருந்தால்,
ஆச்சரியப்படுவதற்கில்லை.
காணிக்கைப் பெட்டிக்கருகே செல்வந்தர்கள் நடத்திய
நாடகங்களையெல்லாம் கண்டு, தனக்குள் சிரித்தபடியே அமர்ந்திருந்த
இயேசுவின் கவனம், அங்கு வந்து சேர்ந்த ஓர் ஏழைக் கைம்பெண் மீது
திரும்பியது. செல்வந்தர்கள் எல்லாரும், தங்கள் தர்ம நாடகத்தை
முடித்துவிட்டு சென்ற பிறகு, அக்கைம்பெண் காணிக்கை
பெட்டிக்கருகே வந்து சேர்ந்திருக்க வேண்டும். யாருடைய
கவனத்தையும் ஈர்க்காமல், காணிக்கையைச் செலுத்திவிட்டு செல்ல
நினைத்த அக்கைம்பெண், இயேசுவின் கவனத்தை ஈர்த்துவிட்டார்.
*மாற்கு 12:42-44*
அங்கு வந்த ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான
இரண்டு காசுகளைப் போட்டார். அப்பொழுது, அவர் தம் சீடரை
வரவழைத்து, "இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு
போட்ட மற்ற எல்லாரையும்விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும்
தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ
தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே,
ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே
போட்டுவிட்டார்" என்று அவர்களிடம் கூறினார்.
ஒப்புமைப்படுத்திப் பேசுவது பொதுவாக இயேசுவின் பாணி அல்ல.
ஆனால், இந்த நிகழ்வில், அப்பெண்ணின் காணிக்கையை மற்ற
செல்வந்தர்களின் காணிக்கையோடு ஒப்பிட்டுப் புகழ்கிறார் இயேசு.
மேலோட்டமாகப் பார்த்தால், அதாவது, காணிக்கை பெட்டிக்குள்
எவ்வளவு பணம் போடப்பட்டது என்ற ஒரு கணக்குப் பார்வையுடன்
பேசினால், அப்பெண்ணின் காணிக்கையை, இயேசு மிகைப்படுத்தி
சொன்னதுபோல் தெரிகிறது. செல்வந்தர்கள் போட்டது, 1000 ரூபாய்
என்றால், இந்த ஏழைக் கைம்பெண் போட்டது, 50 காசுகள்.
ஆனால், அது கணக்கல்ல. எவ்வளவு போட்டார்கள் என்பதைவிட, காணிக்கை
செலுத்தியபின் அவர்களிடம் என்ன மீதி இருந்தது என்பதுதான்,
காணிக்கையின் மதிப்பைக் காட்டும். இதைத்தான், புனித அன்னை
தெரசா மற்றொரு வகையில் சொன்னார்: "Give till it hurts" அதாவது,
"கொடுங்கள், உங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில்
கொடுங்கள்... கொடுங்கள், உங்கள் உடலை வருத்திக் கொடுங்கள்."
என்று.
தமிழ் பாரம்பரியத்தில் பேசப்படும் சிபி சக்ரவர்த்தி நினைவுக்கு
வருகிறார். தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவைக் காப்பாற்ற,
தன் உடலின் சதையை அறுத்துத் தந்த அந்த மன்னர், அன்னை தெரசா
சொன்னதுபோல் செய்தவர். கர்ணனும் இப்படி கொடுத்ததாக நமது
மகாபாரதம் சொல்கிறது. தான் ஏமாற்றப்படுவது தெரிந்தும், தன்
உயிர் போகும் அளவு தந்த கர்ணனும், உடல் வருத்தித் தந்தவர்.
இதைதான் இயேசுவும் கூறுகிறார். "இந்த ஏழைக் கைம்பெண்...
தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே,
ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே
போட்டுவிட்டார்" (மாற்கு 12:44)
அப்பெண்ணின் காணிக்கையைப் பற்றி இயேசு புகழ்ந்து சொன்ன
வார்த்தைகளில் ஆழமும், அர்த்தமும் உள்ளன. இருந்ததைப் போட்டார்,
வைத்திருந்ததைப் போட்டார் என்று மட்டும் சொல்லாமல், இருந்த
அனைத்தையுமே போட்டார், பிழைப்புக்காக வைத்திருந்த
எல்லாவற்றையுமே போட்டார் என்று, அக்காணிக்கையின் முழுமையை,
அழுத்தமாய், ஆணித்தரமாய் கூறுகிறார் இயேசு.
அதுமட்டுமல்ல... இருந்தது, பிழைப்புக்காக வைத்திருந்தது என்ற
சொற்களில், இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாம் கலந்து
ஒலிப்பதையும் காணலாம். சுருங்கச் சொல்லவேண்டுமானால், இந்தக்
கைம்பெண் தன்னையும், தன் வாழ்வையும் பற்றி சிறிதும் கணக்கு
பார்க்காமல், கடவுளுக்கு, அனைத்தையும் வழங்கினார் என்பதை,
இயேசு நமக்குப் புரியவைக்கிறார்.
நற்செய்தியாளர்கள் மாற்கும், லூக்காவும், இந்நிகழ்வை,
இயேசுவின் பாடுகள் துவங்குவதற்கு முன்னதாக, ஒரு முன்னுரைபோல
குறிப்பிட்டுள்ளனர். அந்த ஏழைக் கைம்பெண் தன்னையே வருத்தி,
முழுவதுமாக இறைவனுக்கு வழங்கியதுபோல், இயேசுவும் சிலுவையில்,
தன்னையே வருத்தி, முற்றிலும் வழங்குவார் என்பதைக் குறித்துக்
காட்ட இந்நிகழ்வை, இத்தருணத்தில் பதிவு செய்துள்ளனரோ என்று
எண்ணத் தோன்றுகிறது.
இந்தக் கைம்பெண் ஏன் இவ்விதம் செய்தார் என்ற கேள்வி எழலாம்...
கடவுள் தன் தியாகத்தைப் பார்த்து ஏதாவது செய்வார் என்று இப்படி
செய்தாரா? நிச்சயமாக கிடையாது. அந்தக் கண்ணோட்டம் வியாபாரம்.
'கடவுளே நான் இவ்வளவு தருகிறேன் நீ இவ்வளவு தா' என்று நாம்
இறைவனிடம் பேசினால், அது, பேரம் பேசும் வியாபாரம். இயேசு
சுட்டிக்காட்டியக் கைம்பெண், வியாபார பேரங்களைக் கடந்தவர்.
தன்னிடம் இருந்தவை எல்லாவற்றையும் கடவுளுக்கு மகிழ்வாகத்
தந்தவர். எனவேதான், அவர் இயேசுவின் மனமார்ந்த பாராட்டுகளைப்
பெறுகிறார். அப்பெண் இந்தப் புகழுரையைக் கேட்டாரா? இல்லை.
காணிக்கை செலுத்திய திருப்தியுடன், அவர் காணாமல் போய்விட்டார்.
அந்தப் பெண்ணுக்கு பெயர் கூட இல்லை. கட்டடங்களிலும்,
கற்களிலும், பெயர்களைப் பொறித்து, போஸ்டர்கள் ஒட்டி
ஆர்ப்பாட்டம் செய்யாமல், அமைதியாக நல்லது செய்வது, ஏழைகளின்
அழகு.
மற்றொரு ஏழைக் கைம்பெண்ணை இன்றைய முதல் வாசகத்தில்
சந்திக்கிறோம். அரசர்கள் நூலில் இறைவாக்கினர் எலியா சந்தித்த
கைம்பெண்ணும், அவரது மகனும், வாழவும் முடியாமல், சாகவும்
முடியாமல் போராடும் பல கோடி ஏழைகளின் பிரதிநிதிகள். எலியா
சந்தித்த இந்தக் கைம்பெண், ஏற்கனவே தனக்கும், தன் மகனுக்கும்
மரணதண்டனை விதித்துவிட்டப் பெண். இறப்பதற்குமுன், தன்
மகனுக்குச் சிறிதளவாகிலும் உணவு தந்து, அவன்
மகிழ்ந்திருப்பதைக் காணவேண்டும் என்ற ஆவலால், அந்தத் தாய்,
வீட்டிலிருந்த கையளவு மாவைக் கொண்டு, ரொட்டி சுடுவதற்கு,
சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தார். அந்த கைம்பெண்ணின்
வாழ்க்கையில் கடவுள் குறுக்கிடுகிறார்.
எலியா என்ற இறைவாக்கினர் வழியாக, கடவுள் வருகிறார். சும்மா
வரவில்லை. ஒரு பிரச்சனையைக் கொண்டுவருகிறார். அப்பெண்ணின்
உணவில் பங்குகேட்டு வருகிறார். கொடூரமான வார்த்தைகளில் சொல்ல
வேண்டுமானால், அவரது வயிற்றில் அடிக்க வருகிறார். முதலில்,
எதேச்சையாக, தண்ணீர் மட்டும் கேட்கும் இறைவாக்கினர் எலியா,
அப்பெண் போகும்போது, 'கொஞ்சம் அப்பமும் கொண்டு வா' என்கிறார்.
ஏதோ அக்கைம்பெண், தன் வீட்டில் அப்பங்களைச் சுட்டு அடுக்கி
வைத்திருப்பது போலவும், அவற்றில் ஒன்றிரண்டைக் கொண்டு வா
என்று கேட்பது போலவும் உள்ளது, எலியாவின் கூற்று. மேலோட்டமாகப்
பார்த்தால், எலியா அவரைக் கேலி செய்வது போலத் தோன்றலாம். ஆனால்
அது கேலி அல்ல, ஒரு மறைமுக அழைப்பு. கடவுள் ஆற்றக்கூடிய
புதுமைகளைக் காண்பதற்கு ஓர் அழைப்பு. அந்த அழைப்பைப்
புரிந்துகொள்ள முடியவில்லை அந்தப் பெண்ணுக்கு. தன் பசி, அதைவிட
தன் மகனின் பசி இவையே அவரது மனதை ஆக்ரமித்ததால், தன் இயலாமையை,
விரக்தியை இவ்வார்த்தைகளில் கொட்டுகிறார்:
*அரசர்கள் முதல் நூல் 17: 12*
"வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர்மேல் ஆணை! என்னிடம் அப்பம் ஏதும்
இல்லை: பானையில் கையளவு மாவும் கலயத்தில் சிறிதளவு எண்ணெயுமே
என்னிடம் உள்ளன. இதோ, இப்போது இரண்டொரு சுள்ளிகளைப் பொறுக்கிக்
கொண்டு வீட்டிற்குப் போய் அப்பம் சுட்டு, நானும் என் மகனும்
சாப்பிடுவோம். அதன் பின் சாகத்தான் வேண்டும்."
விரக்தியின் உச்சத்தில், தனக்குத் தானே எழுதிக்கொண்ட மரணதண்டனை
தீர்ப்பு இது. நம்மைச் சுற்றியிருக்கும் பல கோடி ஏழைகள்,
தங்கள் வாழ்வில், பலமுறை, தங்களுக்குத் தாங்களே
வழங்கிக்கொள்ளும் மரணதண்டனை தீர்ப்புக்களை இந்த வார்த்தைகள்
நமக்கு நினைவுறுத்துகின்றன.
விரக்தியில் சொல்லப்பட்ட இவ்வார்த்தைகளுக்குப் பதிலாக, எலியா
அவரிடம், இறைவன் ஆற்றக்கூடிய அற்புதங்களைச் சொல்கிறார். எலியா
சொன்னதெல்லாம் அந்தப் பெண்ணுக்கு விளங்கியதோ இல்லையோ
தெரியவில்லை. ஆனால், "அவர் போய் எலியா சொன்னபடியே செய்தார்"
என்று இன்றைய வாசகம் கூறுகிறது.
அந்தப் பெண் எலியாவை முன்பின் பார்த்தது கிடையாது. இருந்தாலும்
அவர் சொன்னதுபோல் செய்கிறார். அந்தப்பெண் நடந்துகொண்ட விதத்தை
இருவேறு வகையில் நாம் பொருள் கொள்ளலாம். எலியா சொன்னதுபோல்,
புதுமை நடக்கும் என்ற எதிர்பார்ப்போடு அந்த ஏழைக் கைம்பெண்
அப்படி செய்திருக்கலாம். ஆனால், அதைவிட மேலான ஒரு பொருளை நாம்
எண்ணிப்பார்க்கலாம். தனது இயலாமையிலும், வறுமையிலும்,
பசியிலும் இன்னொரு மனிதரின் பசியைப் போக்கவேண்டும் என்ற
ஆவலால், அவர் இப்படிச் செய்திருக்கலாம்.
ஏழைகளின் மனம் அப்படிப்பட்டது. அவர்களுக்குத்தான்,
தாழ்வென்றால், தவிப்பென்றால், பசியென்றால் என்னவென்று
அனுபவப்பூர்வமாகத் தெரியும். அவர்களுக்குத்தான், தங்களிடம்
உள்ளதைப் பகிர்ந்து, பசியைப் போக்கும் புதுமை தெரியும். தங்கள்
துன்பகளைவிட, மற்றவர்களின் தேவைகள், துன்பங்கள் இவற்றைத்
துடைப்பதையே பெரிதாக எண்ணும் மனம் அவர்களது.
'இறைவாக்கினர்' (The Prophet) என்ற கவிதைத்தொகுப்பில்,
'கொடுப்பது' (Giving) என்ற தலைப்பில், கவிஞர் கலீல் கிப்ரான்
அவர்கள், எழுதிய கவிதையின் சில வரிகள்...
நீ சேர்த்துவைத்துள்ள உடைமைகளிலிருந்து நீ கொடுக்கும்போது,
வெகு குறைவாகவே கொடுக்கிறாய்.
எப்போது நீ உன்னையே கொடுக்கிறாயோ, அப்போதுதான் உண்மையிலேயே
கொடுக்கிறாய்.
தங்கள் உடைமைகளிலிருந்து சிறிது கொடுப்பவர்கள் உண்டு. பேரும்,
புகழும் தேடி அவர்கள் தரும் அக்கொடை, முழுமையானதல்ல.
வேறுசிலர், தங்களிடம் உள்ளது மிகக் குறைவேயானாலும்,
அனைத்தையும் கொடுக்கின்றனர்.
இவர்கள், வாழ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்கள்; இவர்களது
கருவூலம், காலியாவதே கிடையாது.
சிலர் மகிழ்வோடு தருவர்; அந்த மகிழ்வே அவர்கள் பெறும் வெகுமதி.
சிலர் வேதனையோடு தருவர்; அந்த வேதனையே அவர்கள் பெறும்
திருமுழுக்கு.
இன்னும் சிலர், மகிழ்வோ, வேதனையோ இன்றி தருவர்; புண்ணியம்
செய்கிறோம் என்ற எண்ணம் ஏதுமின்றி தருவர்.
தான் மணம் தருகிறேன் என்பதை உணராமல், தன் நறுமணத்தைப் பரப்பும்
மலரைப் போல் தருபவர் இவர்கள்.
இவ்வாறு தருபவர் கரங்கள் வழியே, கடவுள் பேசுகிறார்; இவர்கள்
கண்கள் வழியே கடவுள் இவ்வுலகைப் பார்த்து, புன்னகைக்கிறார்.
"தகுதியானவருக்கு மட்டுமே நான் தருவேன்" என்று நீ அடிக்கடி
சொல்கிறாய்.
உன் தோட்டத்தில் உள்ள மரங்களோ, உன் பண்ணையில் இருக்கும்
மிருகங்களோ அவ்வாறு சொல்வதில்லையே. அவை தருகின்றன; அதனால்,
வாழ்கின்றன. அவை தராமல் பதுக்கி, சேர்த்து வைத்தால், அவை
அழிந்துவிடும்.
கடவுளுக்கும், பிறருக்கும் தரும்போது, எதையும் எதிபார்க்காமல்,
நம் உடலை, வாழ்வை வருத்தித் தரவேண்டும். அதுவே மேலான காணிக்கை.
இதை இன்றைய ஞாயிறு வாசகங்கள் வழியேச் சொல்லித்தந்த இரு
கைம்பெண்களுக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்.
*கூடுதல் எண்ணங்கள்... தேவைப்பட்டால்...*
பல ஆண்டுகளுக்கு முன், திருச்சியில் வெள்ளம் வந்தபோது நடந்த
ஒரு நிகழ்வு என் நினைவில் நிழலாடுகிறது. நான் பயின்ற அந்தக்
கல்லூரியில் துப்புரவுத் தொழில் செய்தவரின் வீடு வெள்ளத்தால்
நிறைந்துவிட்டது. அந்த வெள்ளத்தில் அவர் அனைத்தையும் இழந்தார்.
வீட்டில் இருந்தவர்கள் மட்டும் உயிர் தப்பினர். அவர் வளர்த்து
வந்த ஓர் ஆட்டுக்குட்டியை அவரால் காப்பற்ற முடிந்தது. அது
அவருக்கு பெரும் மகிழ்ச்சி. காரணம் என்ன? அந்த ஆட்டுக்குட்டியை
அவர் கடவுளுக்கு நேர்ந்து விட்டிருந்தார். வெள்ளம் வடிந்ததும்,
நேர்ந்துவிட்டபடி அந்தக் குட்டியை ஒரு கோவிலுக்குக்
கொடுத்தார். தனக்குரியதெல்லாம் இழந்தாலும், கடவுளுக்குரியதை
கடவுளுக்கு செலுத்திய திருப்தியுடன், அந்த மகிழ்வை அவர்
என்னிடம் பகிர்ந்துகொண்டது, இப்போது எனக்கு நினைவில்
இனிக்கிறது.
---------------------------------------
"வெளிச்சம் வெளியே இல்லை" என்ற கவிதைத் தொகுப்பில் கவிஞர்
மு.மேத்தா எழுதியுள்ள ஒரு கவிதை என் நினைவுக்கு வருகிறது.
சாலையைக்
கடந்து செல்வதற்காகக்
காத்திருந்தார்கள்.
சிக்னல் கண்ணசைத்ததும்
பரபரப்போடு பறந்தார்கள்.
பார்வையில்லாத
வயோதிகர் ஒருவர்
சாலையின் குறுக்கே
தன்னுடைய
ஊன்று கோலையே
கண்களாக்கி
ஊர்ந்து கொண்டிருந்தார்...
அருகிலிருந்தோர்
அவசரமாய்ப் பறக்க...
பார்வையில்லாத அவர்
பாதியில் திகைக்க...
மாறப் போகிறேன் என்றது சிக்னல்;
பாயப் போகிறேன் என்றது பஸ்.
சட்டென்று
வேகமாய் வந்த
இளம் பெண்ணொருத்தி
அவரைக்
கையில் பிடித்து இழுத்தபடி
விரைந்து சாலையைக் கடந்தாள்.
உதவியாய் அவருடன் நடந்தாள்.
தெருவோரம் சென்றவள்
திரும்பியபோதுதான் தெரிந்தது
அவளுக்கு உள்ளதே
அந்த ஒரு கைதான் என்று.
இரு கைகள் உள்ள பலர், பார்வை இழந்தவருக்கு உதவி செய்யாமல்
பறந்துகொண்டிருந்தபோது, ஒரு கை மட்டுமே உள்ள அந்தப் பெண்ணால்
மட்டும் எப்படி அந்த உதவியைச் செய்ய முடிந்தது?
அவருக்குத்தான், இழப்பின் வலி தெரிந்திருந்தது. அந்த வலியுடன்
வாழ்ந்த மற்றொருவருக்கு வழிகாட்டத் தெரிந்திருந்தது.
*- L.X.Jerome, S.J., VATICAN RADIO, TAMIL SECTION, 00120
VATICAN CITY. ROME. ITALY.*
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
5
=================================================================================
பெறுபவர்களாக அல்ல கொடுப்பவர்களாக...
(32-ம் ஞாயிறு கவிதை)
எல்லாவற்றையும்
தன்வயப்படுத்திக்கொள்ள
விரும்புகின்றனர் சிலர்
பணம்
பட்டம்
பதவி
செல்வம்
சொத்து
பெருமை
புகழ்
நீண்டுக்கொண்டே
போகும் இப்பட்டியலுக்குச்
சொந்தக்காரர்களாக
மாறிட ஆசைப்படுகின்றனர்
இன்னும் சிலர்
நாம் நிற்கின்ற
தோரணையிலேயே
சிலர் நம்மைப் பார்த்து
நடுங்க வேண்டுமென்று
எண்ணுகின்றனர்
பணம் படைத்தவர்கள்
அடியாள்களை
வைத்திருப்பவர்கள்
இவ்விரண்டையும் கொண்டு
மக்களை ஒடுக்குகின்றனர்
இதுவும்
இவ்வுலகில் பரவலாய்
காணப்படுகின்ற ஒன்று!
அடிப்படையில்
மனிதன் பெறுவதற்கு அல்ல
கொடுப்பதற்காகவே
படைக்கப்பட்டிருக்கிறான்
இது புரியாதபட்சத்தில்தான்
பெறுவதற்கே
நம் கைகள் நீள்கின்றது
இலவசம் என்ற பெயரில்
பெறுகின்ற மக்களாய்
மாற்றப்பட்ட நாம்
இந்த டெக்னிக்கைக்
கடவுளுக்கும் பயன்படுத்திப்
பார்க்க துணிந்துவிட்டோம்
நம்முடைய ஆன்மிக வாழ்வும்கூட
எம்; என் சி கம்பெனிகளைப் போல
இலாபத்தை முன்னிறுத்தி
பயணிக்கின்ற போக்கு
தென்பட்டுவிட்டது என்பது
உண்மையிலும் உண்மை!
ஆகையால்தான்
நாம் கடவுளிடம்
பேரம் பேசுவதும்
இலவசத்தை எண்ணிப்பார்த்து
நிற்பதும் எதார்த்தமாகிவிட்டது!
இன்றைய இறைவாக்கு வழிபாடு
நம்மைப் பெறுவதற்கு அல்ல
கொடுப்பதற்கு அழைக்கிறது
மூன்று வாசகங்களுமே
பெறுவதைக் காட்டிலும்
கொடுப்பதற்கான
அதுவும்
முழுமையாய் கொடுப்பதற்கான
மனம் நம்மிடம்
இருக்க வேண்டும் என்ற
செய்தி வலியுறுத்துகிறது!
முதல் வாசகத்தில்
சாரிபாத்து கைம்பெண்
இறைவாக்கினர் எலியாவுக்கு
தன்னிடம்; இருந்த
எல்லாவற்றையும் அவருக்கு கொடுத்தார்
இரண்டாம் வாசகத்தில்
புனித பவுல்
இயேசு தன்னையே முழுவதுமாக
கையளித்து நம் பாவங்களுக்கு
ஈடாக கொடுத்தார்
என்கிற செய்தியையும்
நற்செய்தியில்
ஏழைக் கைம்பெண்
தன்னிடம் இருந்த
இரண்டு செப்புக்காசுகளையும்
காணிக்கையாகக் கொடுத்தார்
இம்மூன்று வாசகத்திலும்
மையம் பெறுவது கொடுப்பதே
ஆனால் இத்தகைய
பண்பைப் புறந்தள்ளிவிட்டு
பெறுவதிலேயே குறியாய்
இருந்தவர்களைக் கோடிட்டு
காட்டுகிறார் இயேசு
தொங்கல் ஆடை
சந்தைவெளிகளில் வணக்கம்
தொழுகைக் கூடங்களில்
முதன்மையான இருக்கை
கைம்பெண்களின் வீடுகளைப்
பிடுங்குதல்
வேண்டுவதாக நடித்தல்
இது அன்றைய
மறைநூல் அறிஞர்களுக்கு
மட்டுமல்ல
இன்றைய இப்பேர்பட்ட
மனநிலை கொண்ட அத்தனை
மனிதர்களுக்குமே பொருந்தும்
அதனால் அவர்களுக்கு
கடும் தண்டனை உண்டென்று
நற்செய்தி வாசகம் சொல்கிறது!
ஆக
நம்முடைய வாழ்வைப்
பெறுவதிலேயே செலவழிக்காமல்
கொடுப்பதில்
கொஞ்சம் அக்கறை காட்டுவோம்
அதுவும் நிறைவாகவும்
முழுமையாகவும் கொடுப்போம்
அன்று அந்தக் கைம்பெண்ணுக்கு
இரண்டு செப்புக்காசுகள் என்றால்
இன்று நமக்கு
படிப்பைச் சொல்லித் தருதலும்
திறமையை வளர்த்தெடுத்தலும்
கலைகளைக் கற்றுக்கொடுத்தலும்
மக்களை ஒன்றிணைத்து
உரிமைக்குரல் கொடுக்க செய்தலும்
தீமைகளை வேரறுக்க
உழைத்தலும்
செப்புக்காசுகளாய் உள்ளன
இவையெல்லாமே பெறுவதற்காய் அல்ல
கொடுப்பதற்காய்
கடவுள் நமக்குத் தந்துள்ளார்
முயன்றமட்டும் கொடுங்கள்
கொடுப்பதால் யாரும் குறைவதில்லை
கொடுப்பதால் யாரும் கெட்டுப்போவதில்லை
கொடுப்பதால் யாரும் தாழ்ந்துபோவதில்லை
கொடுப்பதால்
பெறுகிறார்கள் அதுதான் உண்மை
கொடுப்பதில் மகிழ்ச்சி அடையுங்கள்
பெற வேண்டியவை
தானாக வரும்
அதுவும் நீஙகள் நினைப்பதற்கு
மேலாய் வந்துசேரும்
உங்கள் வாழ்க்கையை இனிதாக்கும்!
- ஆமென் |
|