|
|
|
பொதுக்காலம்
30 ஆம் வாரம் -
ஞாயிறு - 3ம் ஆண்டு |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
தங்களைத் தாழ்த்துவோரின் வேண்டுதல்
முகில்களை ஊடுருவிச் செல்லும்.
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 35: 12-14, 16-18
ஆண்டவர் நடுவராய் இருக்கிறார்; அவரிடம் ஒருதலைச் சார்பு என்பதே
கிடையாது. அவர் ஏழைகளுக்கு எதிராய் எவரையும் ஒருதலைச் சார்பாய்
ஏற்கமாட்டார்; தீங்கிழைக்கப்பட்டோரின் மன்றாட்டைக் கேட்பார்.
கைவிடப்பட்டோரின் வேண்டுதலைப் புறக்கணியார். தம்மிடம்
முறையிடும் கைம்பெண்களைக் கைவிடார்.
ஆண்டவரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பணிசெய்வோர் ஏற்றுக் கொள்ளப்படுவர்.
அவர்களுடைய மன்றாட்டு முகில்களை எட்டும். தங்களைத்
தாழ்த்துவோரின் வேண்டுதல் முகில்களை ஊடுருவிச் செல்லும்; அது
ஆண்டவரை அடையும்வரை அவர்கள் ஆறுதல் அடைவதில்லை. உன்னத இறைவன்
சந்திக்க வரும்வரை அவர்கள் நற்பயிற்சியில் தளர்ச்சியடைவதில்லை;
அவர் நீதிமான்களுக்குத் தீர்ப்பு வழங்குகிறார்; தம் தீர்ப்பைச்
செயல்படுத்துகிறார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 34: 1-2.
16-17. 18,22 (பல்லவி: 6a) Mp3
=================================================================================
பல்லவி: இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச்
செவிசாய்த்தார்.
1
ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும்
என் நாவில் ஒலிக்கும்.
2
நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக்
கேட்டு அக்களிப்பர். - பல்லவி
16
ஆண்டவரின் முகமோ தீமை செய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர்,
அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார்.
17
நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை
அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். - பல்லவி
18
உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த
நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார்.
22
ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்; அவரிடம் அடைக்கலம்
புகும் எவரும் தண்டனை அடையார். - பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய
வாழ்வுக்கான வெற்றி வாகையே.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய
இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 6-8, 16-18
அன்பிற்குரியவரே,
நான் இப்போதே என்னைப் பலியாகப் படைக்கிறேன். நான் பிரிந்து
செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் நல்லதொரு போராட்டத்தில்
ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக்
காத்துக்கொண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய
வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத்
தருவார்; நீதியான அந்த நடுவர் எனக்கு மட்டுமல்ல, அவர்
தோன்றுவார் என விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்குமே தருவார்.
நான் முதன்முறை வழக்காடியபோது எவரும் என் பக்கம் இருக்கவில்லை;
எல்லாரும் என்னை விட்டு அகன்றனர். அக்குற்றம் அவர்களைச்
சாராதிருப்பதாக. நான் அறிவித்த செய்தி நிறைவுற்று, அனைத்து
நாட்டவரும் அதனைக் கேட்க வேண்டுமென்று ஆண்டவர் என் பக்கம்
நின்று எனக்கு வலுவூட்டினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் என்னை
விடுவித்தார்.
தீங்கு அனைத்திலிருந்தும் அவர் என்னை விடுவித்துத் தம் விண்ணரசில்
சேர்த்து எனக்கு மீட்பளிப்பார். அவருக்கே என்றென்றும் மாட்சி
உரித்தாகுக! ஆமென்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
2 கொரி 5: 19
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக உலகினரைத்
தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம்
ஒப்படைத்தார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
பரிசேயர் அல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு
ஏற்புடையவராகி வீடு திரும்பினார்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து
வாசகம் 18: 9-14
அக்காலத்தில்
தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும்
சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்: "இருவர் இறைவனிடம்
வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்.
பரிசேயர் நின்றுகொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்:
"கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற
மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரைப் போலவோ இல்லாதது பற்றி உமக்கு
நன்றி செலுத்துகிறேன்; வாரத்தில் இரு முறை நோன்பு இருக்
கிறேன்; என் வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக்
கொடுக்கிறேன். " ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்றுகொண்டு, வானத்தை
அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்
கொண்டு, "கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும் " என்றார். "
இயேசு, "பரிசேயர் அல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி
வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்
பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான்
உங்களுக்குச் சொல்கிறேன் என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
பொதுக் காலத்தின் முப்பதாம் ஞாயிறு
I சீராக்கின் ஞானம் 35: 12-14, 16-18
II 2 திமொத்தேயு 4: 6-8, 16-18
III லூக்கா 18: 9-14
முகில்களை ஊடுருவிச் செல்லும் இறைவேண்டல்
இறங்கி வந்ததுபோல் ஏறிச் சென்றிருந்தால்:
சொற்பொழிவாளர் ஒருவர் இருந்தார். அவருக்குச் சொற்பொழிவில்
தன்னை மிஞ்சுவதற்கு ஆளே இல்லை என்ற எண்ணமானது நிறைவே இருந்தது.
ஒருமுறை அவர் ஒரு கோயில் திருவிழாவில் பேசுவதற்கு அழைப்புப்
பெற்றிருந்தார். நிகழ்ச்சித் தொகுப்பாளர் நிகழ்ச்சிக்கு
வந்திருந்த எல்லாரையும் வரவேற்றுவிட்டுச் சொற்பொழிவாளரை உரை
நிகழ்த்துவதற்காக மேடைக்கு அழைத்தார். சொற்பொழிவாளரும் தனக்கு
அருமையான குரல் வளம் இருக்கின்றது; சொற்பொழிவை நன்றாகத்
தயாரித்திருக்கின்றோம். அதனால் சிறப்பாகச் சொற்பொழிவாற்றலாம்
என எண்ணத்தோடு மேடைக்கு ஏறிச் சென்றார்.
ஒலிவாங்கி முன்பு நின்றுகொண்டு சில வினாடிகள் திரண்டிருந்த
மக்களைத் தனக்கே உரிய கர்வத்தோடு பார்த்தார். அவர் அத்துணைக்
கர்வத்தோடு பார்ப்பதை மக்கள் பார்த்துவிட்டு சற்று அதிர்ந்து
போனார்கள். பிறகு அவர் தன்னுடைய சொற்பொழிவை நிகழத்
தொடங்கினார்.
அவர் சொற்பொழிவை நிகழ்த்தத் தொடங்கிய சில மணித்துணிகளில்
ஒலிவாங்கி ஊளையிடத் தொடங்கியது; முன் வரிசையில் இருந்த ஒரு
சிறுவன் அழகைத் தொடங்கினான். இவற்றால் அவருடைய கவனம் சிதறி,
வார்த்தைகள் அவருடைய வாயிலிருந்து வரத் தயங்கின. எப்படியோ
நிலைமைச் சமாளித்துகொண்டு அவர் சொற்பொழிவை
நிகழ்த்தியிருந்தாலும், அவருடைய சொற்பொழிவு அவருக்கே
திருப்திகரமாக இல்லை. இதனால் தலையைத் தாழ்த்திக்கொண்டு கீழே
இறங்கி வந்தார். இதைப் பார்த்துவிட்டு, முன்வரிசையில் இருந்த
பெரியவர் ஒருவர், நீங்கள் மேடையிலிருந்து கீழே இறங்கி
வந்ததுபோல், மேடைக்கு ஏறிச் சென்றிருந்தால், மேடைக்கு ஏறிச்
சென்றதுபோல், மேடையிலிருந்து கீழே இறங்கி வந்திருப்பீர்கள்
என்றார்.
ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற சொற்பொழிவாளரைப் போன்றுதான் பல
நேரங்களில் நாம், "என்னை மிஞ்ச ஆளே இல்லை! " "என்னைப் போல் ஓர்
ஆள் உண்டா? " என்ற ஆணவத்தில் ஆடுகின்றோம். இதனாலேயே
அவமானத்தையும் அழிவையும் சந்திக்கின்றோம். பொதுக் காலத்தின்
முப்பதாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை,
தங்களைத் தாழ்த்திக்கொள்வோரின் இறைவேண்டலே முகில்களை ஊடுருவிச்
செல்கின்றது என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம்
சிந்திப்போம்.
தாழ்ச்சியும் தலைக்கனமும்:
"கந்தைகூட எதற்காவது பயன்படும்; அகந்தை எதற்குமே பயன்படாது "
என்று சொல்வர். இது யாராலும் மறுக்க முடியாத உண்மை. இன்று பலர்
எதற்குமே பயன்படாத அகந்தையோடு இருக்கின்றார்கள் என்பதுதான்
வேதனை கலந்த உண்மை.
இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்கள் தங்களை
நேர்மையாளர்கள் என்று கருதினார்கள். இதுகூட பிரச்சனை இல்லை
என்று விட்டுவிடலாம். ஆனால், அவர்கள் மற்றவர்களை இழிவாகக்
கருதினார்கள். இவர்களுக்குப் பாடம் புகட்டும் வகையில் இயேசு
பரிசேயர், வரித்தண்டுபவர் உவமையைக் கூறுகின்றார். இந்தப்
பரிசேயர் இறைவேண்டல் என்கிற பெயரில் "வாரத்தில் இருமுறை
நோன்பிருக்கின்றேன்; என் வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக்
கொடுக்கின்றேன் என்று தன்னைப் பற்றித் தம்பட்டம் அடித்துக்
கொள்கின்றார். இதைவிடவும் அவர் கொள்ளையர், விபசாரர்,
வரிதண்டுபவர் போன்று இல்லாததற்காகக் கடவுளுக்கு நன்றி
செலுத்துகின்றார்.
நல்லது எது என்று ஆண்டவர் கூறுவதாக, இறைவாக்கினர் மீக்கா
நூலில் இவ்வாறு நாம் வாசிக்கின்றோம்: நேர்மையைக்
கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும், உன்
கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்துகொள்வதையும் தவிர வேறு
எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்? இந்த இறைவார்த்தையின்படி
பார்த்தால், உவமையில் வரும் பரிசேயர் தன்னை நேர்மையாளராகக்
காட்டிக் கொண்டாரே ஒழியே, உண்மையில் நேர்மையாளராக இல்லை.
ஏனெனில், அவர் நேர்மையாளராக இருந்திருந்தால், வறியரிடம்
இரக்கம் காட்டியிருப்பார். அடுத்ததாக, அவர் கடவுளுக்கு
முன்பாகத் தன்னைத் தாழ்த்திக் கொள்ளவே இல்லை. அதனால் அவர்
கடவுளுக்கு ஏற்புடையவராகாமல் போகிறார்.
இதற்கு முற்றிலும் மாறாக, உவமையில் வருகின்ற வரிதண்டுபவர்,
வானத்தை அண்ணார்ந்து பார்க்கக்கூடத் துணியாதவராய்க் கடவுளுக்கு
முன்பு தன்னைத் தாழ்த்திக் கொண்டு, கடவுளே, பாவியாகிய என்மேல்
இரங்கியருளும் என்கிறார். இதனால் அவர் கடவுளுக்கு
ஏற்புடையவராய்த் தம் வீடு திரும்புகின்றார்.
தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்திற்கும் நூலளவு வித்தியாசம்தான்.
உவமையில் வரும் பரிசேயரிடம் தலைக்கனம் மிகுதியாக இருந்ததால்,
அவரால் கடவுளுக்கு ஏற்புடையவராக முடியவில்லை. தாழ்ச்சியோடு
இருந்த வரிதண்டுபவராலேயே கடவுளுக்கு ஏற்புடையவராக முடிந்தது.
முகில்களை ஊடுருவிச் செல்லும் இறைவேண்டல்:
கடவுள் விண்ணகத்தில் இருக்கின்றார் என்ற நம்பிக்கை யூதர்களிடம்
மிகுதியாக இருந்தார். இயேசுகூடத் தன் சீடர்களுக்கு இறைவனிடம்
வேண்டக் கற்றுத் தரும்போது, விண்ணுலகில் இருக்கின்ற எங்கள்
தந்தையே! (மத் 6:9) என்றுதான் கற்றுத்தருகின்றார்.
விண்ணை நோக்கி நம்முடைய வேண்டுதலை நாம் எழுப்புகின்றபோது
முகில்கள் போன்ற தடைகள் நடுவில் வரலாம். இந்தத் தடைகளை
அப்புறப்படுத்திவிட்டு, நம்முடைய வேண்டுதல் இறைவனிடம்
செல்லவேண்டும் என்றால், அதற்குத் தாழ்ச்சி என்ற ஒன்று
தேவைப்படுகின்றது. அதனால்தான் இன்றைய முதல் வாசகத்தில்
சீராக்கின் ஞான நூல் ஆசிரியர், தங்களைத் தாழ்த்துவோரின்
வேண்டுதல் முகில்களை ஊடுருவிச் செல்லும்; அது ஆண்டவரை
அடையும்வரை அவர்கள் ஆறுதல் அடைவதில்லை என்கிறார்.
நற்செய்தியில் இயேசு சொல்லும் உவமையில் வரும் வரிதண்டுபவர்
கடவுளுக்கு முன்பாகத் தன்னையே தாழ்த்தியதால்தான் அவருடைய
வேண்டுதல் முகில்களையும் ஊடுருவிச் சென்றது; அதன்மூலம் அவர்
கடவுளுக்கு ஏற்புடையவர் ஆனார். அதனால் ஒருவர் கடவுளுக்கு
முன்பாகத் தன்னைத் தாழ்த்திக்கொள்ளும்போது அவரது வேண்டுதல்
நிச்சயம் கேட்கப்படும் என்பது உறுதி.
நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகை:
ஒரு காலகட்டத்தில் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியதன் மூலம்
கிறிஸ்துவைத் துன்புறுத்தியவர் பவுல். அப்படிப்பட்டவர் தமஸ்கு
நகர் நோக்கிய பயணத்தில் கிறிஸ்துவால் தடுத்தாட்கொள்ளப்பட்டுக்
கிறிஸ்துவுக்காகவே தன்னை அர்ப்பணித்தார்; ஏன் மறுகிறிஸ்துவாகவே
வாழ்ந்தார் (கலா 2:20). அவர் இன்றைய இரண்டாம் வாசகத்தில்
திமொத்தேயுவிடம், நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன்;
என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். நம்பிக்கையைக்
காத்துக்கொண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய
வாழ்வுக்கான வெற்றி வாகையே என்கிறார்.
பவுல் கிறிஸ்துவால் தடுத்தாட்கொள்ளப்படுவதற்கு முன்பு வரை
தன்னுடைய பெருமையைப் பேசிக்கொண்டு ஆணவத்தோடு இருந்தார்!
எப்போது அவர் கிறிஸ்துவால் தடுத்தாட்கொள்ளப்பட்டாரோ, அப்போதே
அவர் தன்னிடம் இருந்த ஆணவத்தை அழித்து தாழ்ச்சியோடு வாழத்
தொடங்கினார். அவர் தாழ்ச்சியோடு வாழ்ந்தார் என்பதன் அடையாளம்
தான், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை ஆகிய பண்புகளால் உங்களை
அணிசெய்யுங்கள் (கொலோ 3:12) என்ற வார்த்தைகள் ஆகும்.
இறைமக்கள் மனத்தாழ்மையோடு இருக்கச் சொல்லும் பவுல், அவரும்
அவ்வாறே வாழ்ந்திருப்பார். அதனால்தான் அவரால் நீங்கள் என்னைப்
போல் ஒழுகுங்கள் என்று சொல்ல முடிந்தது. (2 தெச 3:7).
பவுல் தன்னுடைய தாழ்ச்சி நிறைந்த வாழ்விற்கு வெற்றி வாகையைப்
பரிசாகப் பெற்றிருப்பார். நாமும் வெற்றி வாகையைப் பரிசாகப்
பெற, மனத்தாழ்மையோடு வாழ்வோம்.
சிந்தனைக்கு:
"எங்கே தாழ்ச்சி இருக்கின்றதோ அங்கே வெற்றி இருக்கும். அந்த
வெற்றி சாதாரண வெற்றியாக இல்லாமல் நிலையான வெற்றியாக
இருக்கும் " என்பார் பேட்ரிக் லென்சியோனி என்ற அறிஞர். எனவே,
நாம் மனத்தாழ்மையோடு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
|
|