|
ஆண்டு B |
|
ஆண்டின் பொதுக்காலம் 2ஆம் ஞாயிறு |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம்
3: 3b-10, 19
அந்நாள்களில் கடவுளின் பேழை வைக்கப்பட்டிருந்த ஆண்டவரின் இல்லத்தில்
சாமுவேல் படுத்திருந்தான். அப்பொழுது ஆண்டவர், "சாமுவேல்" என்று
அழைத்தார். அதற்கு அவன், "இதோ! அடியேன்" என்று சொல்லி, ஏலியிடம்
ஓடி, "இதோ! அடியேன். என்னை அழைத்தீர்களா?" என்று கேட்டான். அதற்கு
அவர், "நான் அழைக்கவில்லை. திரும்பிச் சென்று படுத்துக்கொள்"
என்றார். அவனும் சென்று படுத்துக்கொண்டான். ஆண்டவர் மீண்டும்
"சாமுவேல்" என்று அழைக்க, அவன் எழுந்து ஏலியிடம் சென்று, "இதோ!
அடியேன். என்னை அழைத்தீர்களா?" என்று கேட்டான். அவரோ, "நான்
அழைக்கவில்லை மகனே! சென்று படுத்துக்
கொள்" என்றார். சாமுவேல்
ஆண்டவரை இன்னும் அறியவில்லை அவனுக்கு ஆண்டவரின் வார்த்தை இன்னும்
வெளிப்படுத்தப்படவில்லை. மூன்றாம் முறையாக ஆண்டவர், "சாமுவேல்"
என்று அழைத்தார். அவன் எழுந்து ஏலியிடம் சென்று, "இதோ! அடியேன்.
என்னை அழைத்தீர்களா?" என்று கேட்டான். அப்பொழுது சிறுவனை ஆண்டவர்தாம்
அழைத்தார் என்று ஏலி தெரிந்து கொண்டார். பின்பு ஏலி சாமுவேலை
நோக்கி, "சென்று படுத்துக்கொள். உன்னை அவர் மீண்டும் அழைத்தால்
அதற்கு நீ, "ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன்" என்று பதில்
சொல்" என்றார். சாமுவேலும் தன் இடத்திற்குச் சென்று படுத்துக்கொண்டான்.
அப்போது ஆண்டவர் வந்து நின்று, "சாமுவேல், சாமுவேல்" என்று
முன்புபோல் அழைத்தார். அதற்குச் சாமுவேல், "பேசும், உம் அடியான்
கேட்கிறேன்" என்று மறுமொழி கூறினான். சாமுவேல் வளர்ந்தான்; ஆண்டவர்
அவனோடு இருந்தார்; சாமுவேலது வார்த்தை எதையும் அவர் தரையில் விழவிடவில்லை.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
தி.பா:
40: 2,3. 6-7. 7b-8. 9 Mp3
=================================================================================
பல்லவி: உமது திருவுளம் நிறைவேற்ற ஆண்டவரே, இதோ வருகின்றேன்.
2 அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக் கொணர்ந்தார்;
சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கி எடுத்தார்; கற்பாறையின்
மேல் நான் காலூன்றி நிற்கச் செய்தார்; என் காலடிகளை உறுதிப்படுத்தினார்.
3 புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று
எழச் செய்தார். -பல்லவி
6 பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும்
பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை;
ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர். 7 எனவே, "இதோ வருகின்றேன்."
-பல்லவி
7 என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது;
8 என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி
அடைகின்றேன்;
உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது என்றேன் நான்.
-பல்லவி
9 என் நீதியை, நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில்
அறிவித்தேன்;
நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர்.
-பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு
எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 6: 13-15,17-20
சகோதரர் சகோதரிகளே, உடல் பரத்தைமைக்கு அல்ல, ஆண்டவருக்கே உரியது.
ஆண்டவரும் உடலுக்கே உரியவர். ஆண்டவரை உயிர்த்தெழச் செய்த கடவுள்
தம் வல்லமையால் நம்மையும் உயிர்த்தெழச் செய்வார். உங்கள் உடல்கள்
கிறிஸ்துவின் உறுப்புகள் என்று தெரியாதா? ஆண்டவரோடு
சேர்ந்திருப்பவர் அவருடன் உள்ளத்தால் ஒன்றித்திருக்கிறார். எனவே
பரத்தைமையை விட்டு விலகுங்கள். மனிதர் செய்யும் எப்பாவமும் உடலுக்குப்
புறம்பானது. ஆனால் பரத்தைமையில் ஈடுபடுவோர் தம் சொந்த உடலுக்கு
எதிராகவே பாவம் செய்கின்றனர். உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து
பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா? நீங்கள்
உங்களுக்கு உரியவரல்ல. கடவுள் உங்களை விலை கொடுத்து
மீட்டுள்ளார். எனவே, உங்கள் உடலால் கடவுளுக்குப் பெருமை சேருங்கள்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 1:
41.17b
அல்லேலூயா, அல்லேலூயா! மெசியாவை, அதாவது அருள்பொழிவு
பெற்றவரைக் கண்டோம். அருளும் உண்மையும் இயேசு கிறிஸ்து வழியாய்
வெளிப்பட்டன. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி
வாசகம்
=================================================================================
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 35-42
யோவான் தம் சீடர் இருவருடன் நின்றுகொண்டிருந்தார். இயேசு அப்பக்கம்
நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அவரைக் கூர்ந்து
பார்த்து, "இதோ! கடவுளின் செம்மறி" என்றார். அந்தச் சீடர் இருவரும்
அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தனர். இயேசு
திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின்தொடர்வதைக் கண்டு,
"என்ன தேடுகிறீர்கள்?" என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள்,
"ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?" என்று கேட்டார்கள்.
அவர் அவர்களிடம்,
"வந்து பாருங்கள்" என்றார். அவர்களும்
சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய
மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள். யோவான்
சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா
ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர். அவர் போய் முதலில் தம்
சகோதரரான சீமோனைப் பார்த்து, "மெசியாவைக் கண்டோம்" என்றார்.
"மெசியா" என்றால் அருள்பொழிவு பெற்றவர் என்பது பொருள். பின்பு
அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக்
கூர்ந்து பார்த்து, "நீ யோவானின் மகன் சீமோன். இனி "கேபா" எனப்படுவாய்" என்றார். "கேபா" என்றால் "பாறை" என்பது பொருள்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 1
=================================================================================
இயேசுவைப் பின்தொடர்ந்து செல்வோம்; மற்றவரையும் இயேசுவைப்
பின்தொடரச் செய்வோம்
அது ஒரு பிரபல பள்ளிக்கூடம். அந்தப் பள்ளிக்கூடத்தில் தங்களுடைய
பிள்ளைகளைச் சேர்கின்ற பெற்றோர்களிடம் பள்ளியின் முதல்வர்
வித்தியாசமான ஒரு கேள்வியைக் கேட்டு வந்தார். பள்ளியின் முதல்வர்
பெற்றோர்களிடம் கேட்ட கேள்வி இதுதான். "உங்கள் பிள்ளையிடம் தலைமைத்துவப்
பண்பு இருக்கின்றதா?".
அந்தப் பள்ளிக்கூடத்தில் தங்களுடைய பிள்ளைகளைச் சேர்த்த எல்லாப்
பெற்றோர்களுமோ, "எங்களுடைய பிள்ளைக்கு தலைமைத்துவப் பண்பு இருக்கின்றது"
என்று சொல்லி வந்தார்கள். ஒரே ஒரு தந்தை மட்டும், பள்ளியின் முதல்வர்
இப்படிப்பட்ட ஒரு கேள்வியைக் கேட்டபோது, "என்னுடைய மகளுக்கு தலைமைத்துவப்
பண்பு இருக்கின்றதா என்று தெரியவில்லை. ஆனால், தனக்குப் பாடம்
கற்றுத் தரும் ஆசிரியர்களை, அறிவுரை பூட்டும் பெரியோரை சிறந்தவிதமாய்
பின்பற்றி நடக்கும் திறமை இருக்கின்றது" என்றார்.
அந்தத் தந்தை இவ்வாறு பதிலளித்ததைப் கேட்ட பள்ளியின் முதல்வர்,
"அருமை!. இதுபோன்ற மாணவர்கள்தான் எங்களுடைய பள்ளியில் சேர்ந்து
படிக்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம். ஏனென்றால், எல்லாம்
தெரிந்தவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு கற்றுத்தருவது கடினம்.
எதுவும் தெரியாது, கற்றுக்கொள்ள ஆவலாய் இருப்பவர்களுக்கு எளிதாய்
கற்றுத்தந்துவிடலாம்" என்றார்.
ஆம், எல்லாம் தெரிந்தவர்களுக்கு கற்றுத்தருவதை விடவும், எதுவுமே
தெரியாது என்ற நிலையில் இருப்பவர்களுக்கு கற்றுத்தருவது மிகவும்
எளிது.
பொதுக்காலத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை வாசகங்கள் இயேசுவைப்
பின்தொடர்ந்து நடப்பவர்களுக்கு என்னென்ன தகுதி இருக்கவேண்டும்.
அவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை நடத்தவேண்டும் என்பதை மிகத்
தெளிவாக எடுத்துக் கூறுகின்றது. நாம் அதனைக் குறித்து சற்று
ஆழமாக சிந்தித்துப் பார்ப்போம்.
நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவான் தனது சீடர்கள் இருவருடன்
(அந்திரேயா மற்றும் நற்செய்தியாளர் யோவான்) ஓரிடத்தில்
நின்றுகொண்டிருக்கும்போது இயேசு அப்பக்கமாய் வருகின்றார். உடனே
திருமுழுக்கு யோவான் தனது சீடர்களிடம் இயேசுவைச்
சுட்டிக்காட்டி, "இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி" என்கின்றார்.
திருமுழுக்கு யோவான் இவ்வாறு சொன்னதைக் கேட்ட அவருடைய சீடர்கள்
இயேசுவைப் பின்தொடர்ந்து செல்கின்றார்கள். திருமுழுக்கு
யோவானின் சீடர்கள் தன்னைப் பின்தொடர்வதை அறிந்த இயேசு அவர்களிடம்,
"என்ன தேடுகின்றீர்கள்?" என்று கேட்கின்றார். தன்னைத் தான் அவர்கள்
பின்தொடர்த்து வருகின்றார்கள் என்பது இயேசுவுக்குத் தெரியும்.
அப்படி இருக்கும்போது "யாரைத் தேடுகின்றீர்கள்?" என்று கேட்காமல்,
என்ன தேடுகின்றார்கள் என்று இயேசு அவர்களிடம் கேட்பது நம்முடைய
ஆழமான சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. யோவான் நற்செய்தியில்
இயேசு பேசுகின்ற முதல் வார்த்தையான "என்ன தேடுகின்றீர்கள்?" என்பதற்கு
சீடர்கள் பதில் சொல்லாமல் இருக்கின்றார்கள். அப்போதுதான் இயேசு
அவர்களிடம், "வந்து பாருங்கள்" என்கின்றார்.
வந்து பாருங்கள் என்று இயேசு அவர்களிடம் சொன்னதும், அவர்கள்
அவரைப் பின்தொடர்ந்து செல்கின்றார்கள். ஆகையால், இயேசுவின் சீடராக
இருப்பதற்கான முதமையான தகுதியே அவரைப் பின்தொடர்ந்து செல்வதுதான்.
பல நேரங்களில் இயேசுவின் சீடர்கள் என்று சொல்லிக்கொண்டு யாரை
யாரையோ பின்தொடர்ந்து செல்வது மிகவும் வேதனையான செயலாகவும். ஆனால்,
திருமுழுக்கு யோவான் தன்னுடைய சீடர்களிடம், இயேசுதான் கடவுளின்
ஆட்டுக்குட்டி என்று சுட்டிக்காட்டிய பின்பு அவர்கள்
திருமுழுக்கு யோவானை விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்ந்து
சென்றது நம்முடைய சிந்தனைகுரியதாக இருக்கின்றது. அதன்பிறகு அவர்கள்
திருமுழுக்கு யோவானுக்குப் பின்னால் செல்லவில்லை என்பது
குறிப்பிடத் தக்கது. ஆகவே, இயேசுவின் சீடராக இருப்பவர், அவரைப்
பின்தொடர்ந்து நடப்பவராக இருக்கவேண்டும் என்பது நாம் நம் மனதில்
கொள்ளவேண்டிய செய்தியாக இருகின்றது.
இயேசுவின் சீடர் அவரைப் பின்தொடர்ந்து சென்றால் மட்டும்
போதுமா? வேறொன்றும் செய்யவேண்டாமா? என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான்
சொல்லவேண்டும். இயேசுவின் சீடர் என்பவர் இயேசுவைப் பின்தொடர்வதோடு
மட்டுமல்லாமல், அவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்துகொள்ளவேண்டும்.
தன்னுடைய சீடர்கள் தன்னை முற்றிலுமாக அறிந்திருக்கவேண்டும் என்பதற்குத்தான்
இயேசு வந்து பாருங்கள் என்று சொல்கின்றார்கள்.
"வந்து பாருங்கள்" என்று இயேசு சொல்கின்ற வார்த்தையில் நிறைய
அர்த்தங்கள் இருக்கின்றன. இன்றைக்கு ஒரு மனிதரிடம் நேரடியாகத்
தொடர்பு கொள்ளாமல், பேசாமல் "இவர் இப்படித்தான்" என்ற ஒரு தவறான
முடிவுக்கு வந்துவிடுகின்றோம். ஆனால், ஒரு மனிதரிடம் நாம் நேரடியாகப்
பேசுகின்றபோது, அவரிடம் நேரடியாகத் தொடர்பு கொள்கின்றபோது, வந்து
பார்க்கின்றபோது அவரைக் குறித்த எல்லா விதமான தவறான எண்ணங்களும்
நம்முடைய உள்ளத்திலிருந்து மாறுவதற்கு வாய்ப்பிருக்கின்றது.
யோவான் நற்செய்தியில் பிலிப்பு நத்தனியேலிடம் இயேசுவைக்
குறித்து சொல்கின்றபோது தொடக்கத்தில் அவர், "நாசரேத்திலிருந்து
நல்லது எதுவும் வரக்கூடுமோ?" என்றுதான் சொல்கின்றார். பின்னர்தான்
அவர் இயேசுவைச் சந்தித்து, அவர் யாரென அறிந்துகொள்கின்றார்.
(யோவா 1: 45- 46). இயேசுவின் சீடர் என்பவர் அவரைக் குறித்து
முழுமையாக அறிந்துகொள்ளவேண்டுமானால், மற்றவர்களின் அனுபவமல்ல,
அவர்களுடைய சொந்த அனுபவம்தான் அவர்களுக்கு உதவி புரியும்.
திருமுழுக்கு யோவானிடமிருந்து வந்த சீடர்கள் இயேசுவோடு ஒரு
நாள் தங்கி இருக்கின்றார்கள், அவர் எப்படிப்பட்டவர் என
முழுமையாக அறிந்துகொள்கின்றார்கள்.
இன்றைய முதல் வாசகத்தில் (சாமுவேல் முதல் புத்தகத்திலிருந்து
எடுக்கப்பட்டது) ஆண்டவர் சிறுவன் சாமுவேலை தன்னுடைய பணிக்கென
அழைக்கின்றார். சாமுவேலும் ஆண்டவருடைய ஆலயத்தில் தங்கி இருந்து
அவர் எப்படிப்பட்டவர் என்பதை முழுமையாக அறிந்துகொண்டு, அதற்கேற்ப
மக்களை வழி நடத்துகின்றார். திருப்பாடல் 34:8 ல்
வாசிக்கின்றோம், "ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப்
பாருங்கள்" என்று. ஆம், இயேசுவின் சீடராக இருப்பவர் அவர் எப்படிப்பட்டவர்
என்பதை முழுமையாக அறிந்துகொள்ளவேண்டும். அதற்கு நாம் அவரோடு தங்கி
இருக்கவேண்டும்.
இயேசுவின் சீடர்கள் அவரைப் பின்தொடர்ந்து, அவரோடு தங்கி இருந்தால்
மட்டும் போதுமா? அதோடு சீடத்துவ வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடுகின்றதா?
என்று நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இயேசுவின் சீடர்கள்
இன்னொரு முக்கியமான செயலையும் செய்யவேண்டும். அதுதான் அவரைப்
பற்றி அறிந்ததை அடுத்தவருக்கும் அறிவிக்கவேண்டும் என்பதாகும்.
நற்செய்தி வாசகத்தில் அந்திரேயா ஆண்டவர் இயேசுவோடு தங்கி, அவரைக்
குறித்த சுய அனுபவம் பெற்ற பின்னர், தான் பெற்ற அனுபவத்தை தன்னோடு
வைத்துக்கொள்ளாமல், தன்னுடைய சகோதரரான பேதுருவிடம் எடுத்துச்
சொல்லி, அவரை இயேசுவிடம் கொண்டுவந்து சேர்கின்றார். இவ்வாறு அந்திரேயா
ஓர் உண்மையான சீடனுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றார். அந்திரேயாவால்
அழைத்து வரப்பட்ட பேதுருவைக் கண்டதும் இயேசு, "நீ யோவானின் மகன்
சீமோன். இனி கேபா எனப்படுவாய்" என்கிறார். அதாவது பேதுருவை உற்றுப்
பார்க்கின்ற இயேசு, எதிர்காலத்தில் அவரால் ஆகும் காரியங்களை
நினைவுகூர்ந்து பார்க்கின்றார்.
இங்கே அந்திரேயா செய்த செயல் மிகவும் பாராட்டுக்குரியதாக இருக்கின்றது.
ஏனென்றால், அவர்தான் திருச்சபையின் முதல் திருத்தந்தையை,
திருத்தூதர்களின் தலைவரை ஆண்டவர் இயேசுவிடம் கூட்டி வருகின்றார்.
அவர் மட்டும் பேதுருவை இயேசுவிடம் அறிமுகம் செய்யவில்லை என்றால்,
திருச்சபை ஒரு நல்ல தலைவரை இழந்திருக்கும். ஆகவே, இயேசுவின் சீடர்கள்
இயேசுவை மற்றவர்களுக்கு அறிவிப்பவர்களாக, அவரை மற்றவர்களுக்கு
எடுத்துச் சொல்பவராக இருக்கவேண்டும்.
சில ஆண்டுகளுக்கு முன்பாக மும்பையில் இருந்த ஒரு புகழ்பெற்ற பள்ளிக்கூடத்தில்
கிறிஸ்து பிறப்பு பற்றிய நாடகம் அரங்கேறியது. அந்த நாடகத்தில்
நடித்த குழந்தைகள், தங்களுடைய பெற்றோர்களை நாடகம் பார்ப்பதற்கு
அழைத்துவர அனுமதி வழங்கப்பட்டது. எனவே, நாடகத்தில் நடித்த எல்லாக்
குழந்தைகளும் தங்களுடைய பெற்றோரை அழைத்து வந்து, அவர்களுக்கென்று
ஒதுக்கப்பட்ட முன்வரிசையில் அமரச் செய்தார்கள்.
அந்த நாடகத்தில் மிட்செல் என்ற மாணவியும் பங்கேற்றிருந்தாள்.
அவளும் தன்னுடைய பெற்றோரை நாடகம் பார்ப்பதற்கு அழைத்து வந்திருந்தாள்.
நாடக அரங்கேற்றம் தொடங்கியது. முதல் காட்சியில் யோசேப்பு, தாய்
மரியா, குழந்தை இயேசுவின் வேடம் தாங்கிய குழந்தை, அருகிலே கழுதை,
மாடு, ஆடு போன்றவற்றின் வேடம் தாங்கிய குழந்தைகள் அவரவருக்குக்
கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை சிறப்பாகச் செய்தார்கள்.
மிட்செலின் பெற்றோர் தங்களுடைய மகள் எங்கே என்று உற்று உற்றுப்
பார்த்தார்கள். ஏனென்றால் அங்கிருந்த குழந்தைகளில் மிட்செல் இல்லை.
சிறிது நேரத்திற்கு பிறகு நாடகத்தை இயக்கிக்கொண்டிருந்த ஆசிரியை,
"இதோ எல்லா மக்களுக்கும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி அறிவிக்கின்றேன்.
நாசரேத்து ஊரில் மெசியா பிறந்திருக்கின்றார்" என்று அறிவித்தார்.
உடனே இடையர்கள் இயேசுவைக் காணப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களை
விண்மீனாது வழிநடத்திச் சென்று, இயேசுவுக்கு முன்பாகக்
கொண்டுபோய் நிறுத்தியது. மிட்செலின் பெற்றோர் கூர்ந்து கவனித்தபோதுதான்
தெரிந்தது விண்மீன் வேடம் தங்கி இருப்பது தங்களுடைய மகள் என்று.
இன்னும் சிறுது நேரத்திற்குப் பிறகு மூன்று ஞானிகள் இயேசுவைக்
காண வந்தார்கள். அவர்களையும் விண்மீனானது வழிநடத்தி வந்து, இயேசுவுக்கு
முன்பாக நிறுத்தியது. அப்போது எல்லாருடைய முகத்தில் இருந்த மகிழ்ச்சியையும்விட
விண்மீன் வேடம் தாங்கிய மிட்செலின் முகத்தில் அதிகமான மகிழ்ச்சி
தெரிந்தது.
நாடகம் முடிந்து எல்லாரும் கலந்து சென்றார்கள். மிட்செலும் தன்னுடைய
பெற்றோரோடு வீட்டுக்குத் திரும்பி போனாள். போகிற வழியில் அவளுடைய
பெற்றோர் அவளிடம் எதுவும் பேசவில்லை. காரணம் நாடகத்தில் அவளுக்குக்
கொடுக்கப்பட்ட வேடம் மிகச் சாதாரணமானது என்பது அவர்களுடைய எண்ணம்.
வீட்டுக்கு வந்ததும் மிட்செல் தன்னுடைய தாயிடம், "அம்மா! நடந்த
நாடகத்தில் எனக்குத்தான் மிக முக்கியமான வேடம்" என்றாள்,
"எப்படிச் சொல்கின்றாய்?" என்று தாய் அவளிடத்தில் கேட்டபோது,
மிட்செல், "அம்மா! நான்தான் எல்லாரையும் இயேசுவிடத்தில் கொண்டு
வந்தேன். நான் மட்டும் இல்லையென்றால் யாருமே இயேசுவைப்
பார்த்திருக்க முடியாது" என்றாள். அதுவரைக்கும் அமைதியாக இருந்த
மிட்செலின் தாய், அவள் இவ்வாறு பேசிய உடன் அவளை வாரி அணைத்துக்கொண்டாள்.
எப்படி விண்மீன் இடையர்களையும், மூன்று ஞானிகளையும் ஆண்டவர் இயேசுவிடம்
அழைத்து வந்ததோ, அந்திரேயா எப்படி பேதுருவை இயேசுவிடம் அழைத்து
வந்தாரோ அது நாமும் மற்றவர்களை இயேசுவிடம் அழைத்து வரவேண்டும்.
அப்போதுதான் சீடத்துவ வாழ்வானது முழுமை பெறும்.
எனவே, இயேசுவின் சீடர்களாகிய நாம் அவரை மட்டும் பின்தொடர்ந்து
செல்வோம். அது மட்டுமல்லாமல், அவரைப் பற்றிய முழுமையான அனுபவம்
பெறுவோம், அதனை அடுத்தவருக்கும் அறிவிப்போம். அதன்வழியாக இறையருள்
நிறைவாய் பெறுவோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 2
=================================================================================
தங்குதல் - அவருக்காக, அவரில், அவரோடு
ஆண்டின் பொதுக்காலம்
2ம் ஞாயிறு
1 சாமுவேல் 3:3-10,19
1 கொரிந்தியர் 6:13-15,17-20
யோவான் 1:35-42
நாம் இன்று கொண்டாடும் பொங்கல் மற்றும் இன்றைய இறைவாக்கு
வழிபாட்டையும் நாம் இணைத்துப் பார்க்கும்போது "தங்குதல்" என்ற
வார்த்தை இரண்டிற்கும் பொதுவான ஒன்றாக இருக்கிறது. பானையில்
தங்குகின்ற அரிசி தன் உடன் இருக்கும் சர்க்கரை, முந்திரி,
தேங்காய், மற்றும் சுக்கோடு இணைந்து பொங்கலாகின்றது. ஆண்டவரின்
அடியார்கள் அவருக்காக, அவரில், அவரோடு தங்கும்போது புதிய
மனிதர்களாக உருப்பெறுகின்றனர்.
"தங்குதல்"
- நம் வாழ்வின் இன்பம், துன்பம் அனைத்திற்கும்
காரணம் இந்த ஒற்றைச்சொல்லே.
மனிதர்கள் நாடோடிகளாக நடமாடிக்கொண்டிருந்தபோது நாகரீகமும்,
கலாச்சாரமும் வளரவில்லை. என்று ஒரே இடத்தில் அவர்கள் தங்கத்
தொடங்கினார்களோ அன்றுதான் எல்லாம் பிறந்தது. தங்குவதற்கு
நமக்கு இடம் தேவை. இடம் வந்தவுடன் வீடு தேவை. வீடு வந்தவுடன்
பொருள்கள் தேவை. பொருள்கள் வந்தவுடன் பாதுகாப்பு தேவை.
பாதுகாப்பு வந்தவுடன் காவலர் தேவை. காவலர் வந்;தவுடன்
கண்காணிப்பு கேமரா தேவை. கேமராவைப் பொருத்த கணிணி தேவை.
கணிணியின் தகவலை கைகளில் பார்க்க ஸ்மார்ட்ஃபோன் தேவை. தகவல்
தடையின்றி கிடைக்க 4ஜி தேவை. 4ஜிக்கு நெட்வொர்க் நிறுவனம்
தேவை. நிறுவனத்திற்கு அரசு தேவை. இப்படி மனிதன் என்று பாயை
விரித்து ஒரே இடத்தில் படுக்கத் தொடங்கினானோ அன்று எல்லாம்
தொடங்கிவிட்டது. அன்று அந்த ஒற்றை மனிதன் கண்ட கனவுதான் இன்று
நாம் பெற்றுள்ள எல்லா வளர்ச்சிக்கும்கூட காரணமாக இருக்கிறது.
மனிதர்கள் சக மனிதர்களோடு தங்குதலே இவ்வளவு பெரிய மாற்றத்தை
உருவாக்குகிறது என்றால் அவர்கள் கடவுளோடு அல்லது இறைவனோடு
அல்லது ஆண்டவரோடு தங்கும்போது இன்னும் எவ்வளவு பெரிய
மாற்றங்கள் அங்கே பிறக்கும். அப்படிப்பட்ட நிகழ்வுதான் இன்றைய
இறைவாக்கு வழிபாட்டில் நடக்கின்றது.
முதல் வாசகம்: "அவருக்காக தங்குதல்"
இன்றைய முதல் வாசகம் (காண். 1 சாமு 3:3-10,19) நமக்கு மிகவும்
பரிச்சயமான வாசகப் பகுதி: "ஆண்டவராகிய இறைவன் சாமுவேலை
அழைக்கும் நிகழ்வு." எல்கானா - அன்னா தம்பதியினருக்கு
பிறக்கின்ற சாமுவேல் தம் தாய் அன்னாவால் ஆண்டவருக்கு
அர்ப்பணிக்கப்படுகிறார். (வாழ்க்கையில் பிள்ளைகளின் எதிர்காலம்
பற்றிய முடிவுகளை விவிலியத்தில் பெண்கள்தாம் எடுக்கின்றனர்!)
"நான் ஆண்டவரிடமிருந்து கேட்டேன்" (எபிரேயத்தில் "ஷெமு"-"ஏல்")
என்று அவரிடமே தான் கேட்டதைக் கொடுத்துவிடுகின்றார் இந்த
துறவித்தாய். சாமுவேல் இறைவாக்கினர் காலத்தில் பிள்ளைகளை
ஆலயத்திற்கு நேர்ந்துவிடுவது புழக்கத்தில் இருந்தது. இப்படி
விடப்படும் பிள்ளைகள் ஆண்டவரின் இல்லத்தில் பணியாற்றும்
குருவோடு "தங்க"வேண்டும். குருக்கள் தங்கள் பணிக்கான
உதவியாள்களாக வைத்திருந்து காலப்போக்கில் அவர்களையும்
குருக்களாக்கி ஆலயப்பணியில் இணைத்துவிடுவர்.
இப்படி பிள்ளைகளோடு பிள்ளைகளாக சாமுவேல் படுத்திருக்க,
"சாமுவேல்" என்று கடவுள் அவரை அழைக்கின்றார். "அவனுக்கு
ஆண்டவரின் வார்த்தை இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை" என்கிறார்
ஆசிரியர். ஆக, ஆண்டவரின் குரலை அறியாத சாமுவேல் உடனடியாக தன்
குருவான ஏலியிடம் ஓடுகின்றார். "இதோ! அடியேன். என்னை
அழைத்தீர்களா?" என்று கேட்கின்றார். இப்படி மூன்று முறை நடக்க,
மூன்றாம் முறைதான் ஏலியே இது கடவுளின் செயல் என்று
உணர்ந்துகொள்கின்றார். "உன்னை அவர் மீண்டும் அழைத்தால்,
"ஆண்டவரே பேசும். உம் அடியான் கேட்கிறேன்" என்று பதில் சொல்ல"
என்று சொல்லி அனுப்ப, சாமுவேல், "பேசும், உம் அடியான்
கேட்கிறேன்!" - இங்கே நன்றாகக் கவனிக்க வேண்டும். சாமுவேல்
கடவுளை ஒருபோதும் "ஆண்டவர்" என்று அழைக்கவில்லை. எந்தவொரு
விளிச்சொல்லும் இன்றி மொட்டையாக, "பேசும்" என்கிறார் சாமுவேல்.
ஆனால் அன்று முதல் "ஆண்டவர் அவனோடு இருந்தார். சாமுவேலது
வார்த்தை எதையும் அவர் தரையில் விழவிடவில்லை" என பதிவு
செய்கின்றார் ஆசிரியர்.
இங்கே, சாமுவேல் ஆண்டவருக்காக, அவருக்காக, அவருடைய பணிக்காக
ஆண்டவரின் ஆலயத்தில் தங்கியிருக்கின்றார். இந்த
தங்கியிருத்தலின் விளைவாக ஆண்டவர் சாமுவேலோடு "உடனிருக்க"
ஆரம்பிக்கின்றார். "அவருடைய வார்த்தை எதையும் அவர் தரையில்
விழவிடவில்லை" என்றால், அன்று முதல் அவர் சொன்ன அனைத்தும்
இறைவனின் வாக்காக மாறின என்பதே பொருள்.
ஆக, ஓர் இரவில் ஆண்டவருக்காக தூக்கம் கலைத்தது சாமுவேல் என்ற
சிறுவனை ஓர் இறைவாக்கினராக - இஸ்ரNயுலின் முதல் இறைவாக்கினராக
- மாற்றுகிறது.
இரண்டாம் வாசகம்: "அவரில் தங்குதல்"
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 6:13-15, 17-20)
கொரிந்து நகர திருச்சபையில் மலிந்திருந்த பரத்தமைக்கு எதிராக
இறைமக்களை அறிவுறுத்தும் பவுலடியார் "உடல்" என்பதை உருவகமாகக்
கையாளுகின்றார். பரத்தைமையில் ஒருவரின் உடல் மற்றவரின் உடலோடு
இணைகிறது. திருமுழுக்கு பெறுகின்ற நம்பிக்கையாளர் ஒருவர் அந்த
நாள் முதல் ஆண்டவருக்கு உரியவராகிறார். ஆக, அவருடைய உடல்
ஆண்டவரில் தங்குவதால் அவருடைய உடலும் ஆண்டவருக்கு
உரியவராகின்றது. ஆக, ஒருவரில் இருக்கும் உடல் இன்னொருவரோடு
இணைவது சால்பன்று. ஏனெனில், ஆண்டவரோடு இணைந்திருப்பது உடல்
சார்ந்தது மட்டுமல்ல. அது உள்ளம் சார்ந்தது. ஆக, உள்ளத்தால்
இணைந்திருக்கும் அவர் மற்ற ஒருவரோடு உடலால் இணையும்போது தன்
உடலுக்கு எதிராக, தன் ஆண்டவருக்கு எதிராகவே பாவம்
செய்கின்றார். மேலும், தன் உரிமையாளரை அவர் மறுதலிக்கின்றார்.
ஏனெனில் கடவுள் அவரை விலைகொடுத்து வாங்கியுள்ளார்.
"விலைகொடுத்து வாங்குதல்" என்பது பவுலின் காலத்தில் நிலவிய
அடிமையை விலைக்கு வாங்கும் பொருளாதார பின்புலத்தில்
புரிந்துகொள்ளப்பட வேண்டும். "விலைகொடுத்து வாங்கப்படும்
ஒருவர்" தன்னை வாங்கியவருக்கு மட்மே பிரமாணிக்கமாக இருக்க
வேண்டும். எப்போது அவர் மற்ற ஒருவருக்குத் தலைவணங்கத்
தொடங்குகிறாரோ, அப்போதே அவரின் பிரமாணிக்கம் பிளவுபடத்
தொடங்குகிறது.
ஆக, ஆண்டவரில் தங்கும் ஒருவர் அவருக்காக, அவருடையவர்
ஆகிவிடுகிறார்.
"ஆண்டவரில் தங்குதலுக்கு" கிடைக்கும் நன்மை இதுதான். நாம்
ஆண்டவருக்கு உரியவர் ஆகிவிடுகின்றோம். மேலும், இந்த உடல்
உயிர்த்தெழ வைக்கப்படும்.
நற்செய்தி வாசகம்: "அவரோடு தங்குதல்"
தம் இரு சீடர்களுடன் ஒரு மாலை நேரம் நின்றுகொண்டிருக்கின்ற
திருமுழுக்கு யோவான் அவ்வழியே கடந்து சென்ற இயேசுவைப்
பார்த்து, தம் சீடர்களிடம் காட்டி, "இதோ, கடவுளின் செம்மறி!"
என்கிறார். "அப்படி என்றால் என்ன?" என்றோ, "அதுக்கு என்ன
இப்போ?" என்றோ, "நாங்க இப்ப என்ன செய்யணும்?" என்றோ கேட்காமல்,
அந்தச் செம்மறியாம் இயேசுவைப் பின்தொடர்கின்றனர் இரு சீடர்கள்.
அவர்கள் தம்மைப் பின்தொடர்வதைக் கண்டு, "என்ன தேடுகிறீர்கள்?"
என்று கேட்கின்றார் இயேசு. கிரேக்கம் மற்றும் இலத்தீன் மொழி
உலகில் யாரெல்லாம் சும்மா அல்லது மெதுவா
நடந்துகொண்டிருக்கிறார்களோ, அவர்களைப் பார்த்து மற்றவர்கள்
கேட்கும் கேள்வி, "எதைத் தொலைத்துவிட்டாய்? என்ன தேடுகிறாய்?"
என்பதுதான். யோவான் நற்செய்தியில் இயேசு பேசும் முதல்
வார்த்தையே இதுதான்: "என்ன தேடுகிறாய்?" இது முதல் ஏற்பாட்டில்
கடவுள் ஆதாமைப் பார்த்துக் கேட்ட முதல் கேள்வியோடு
ஒத்திருக்கிறது. மரங்களுக்கிடையே ஒளிந்திருக்கும் மனிதனைத்
தேடி வருகின்ற கடவுள், ஆதாமைப் பார்த்து, "நீ எங்கே
இருக்கிறாய்?" என்கிறார். இங்கே சீடர்களின் பதிலும்
கேள்வியாகவே இருக்கின்றது: "ரபி, நீர் எங்கே
தங்கியிருக்கிறீர்?" இயேசுவை அவர்கள் செம்மறி என
அறிந்திருந்தாலும், "ரபி" (போதகர்) என்றே அழைக்கின்றனர். இது
அவர்களுடைய தங்குதலின் முதற்படி. இரண்டாவதாக, "நீர் எங்கே
தங்கியிருக்கிறீர்?" என்ற அவர்களின் கேள்வியிலேயே, "நாங்களும்
உம்மோடு தங்க வேண்டும்" என்ற ஆசை ஒளிந்திருக்கிறது. "அதோ,
அங்கே" என்று பதில் சொல்லாமல், "வந்து பாருங்கள்" என்று சொல்லி
தம்மோடு அவர்களையும் சேர்த்துக்கொள்கின்றார். அவர் அழைத்த அந்த
நொடியே இவர்கள் இயேசுவோடு தங்கத் தொடங்கிவிடுகின்றனர்.
அவர்கள் பெற்ற அனுபவம் என்ன என்பதை நற்செய்தியாளர் பதிவு
செய்யவில்லை. ஆனால், "மெசியாவைக் கண்டோம்" என்ற அந்த இரட்டைச்
சொற்கள் அவர்களின் அனுபவம் முழுவதையும் பதிவு செய்கின்றது.
"அவரோடு" தங்குவதால், தங்கியதால் அவர்கள் பெற்ற அனுபவம்
"மெசியாவைக் காணுதல்."
இவர்களின் "மெசியாவைக் காணுதல்" அனுபவம் உடனடியாக அவர்களை
அடுத்தவர்களை நோக்கி அனுப்புகிறது. அந்திரேயா தன் சகோதரர்
பேதுருவைத் தேடிச் செல்கின்றார். தேடிச் சென்று தன்
அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார். அந்த அனுபவத்தின் ஆற்றல்
என்னவென்றால் உடனடியாக அவரும் இயேசுவைத் தேடி வருகின்றார்.
உடனடியாக இயேசுவை நோக்கி அவர் வருவதற்கு அந்திரேயா
எப்படிப்பட்ட அனுபவப் பகிர்வை செய்திருக்க வேண்டும்?
இவ்வாறாக,
முதல் வாசகத்தில், "அவருக்காக தங்குதல்". இதன் பலன்,
"ஆண்டவரின் உடனிருப்பை பெறுதல்"
இரண்டாம் வாசகத்தில், "அவரில் தங்குதல்". இதன் பலன்,
"ஆண்டவருக்கு உரியவராதல்"
மூன்றாம் வாசகத்தில், "அவரோடு தங்குதல்." இதன் பலன்,
"ஆண்டவரின் மெசியாவைக் காணுதல்"
இந்த மூன்று "தங்குதல்" நிகழ்வுகளும் இயல்பாக அல்லது தாமாக
நடந்தேறவில்லை.
எப்படி ஒவ்வொரு பொங்குதலுக்கும் ஒரு விலை இருக்கிறதோ,
அப்படியே ஒவ்வொரு தங்குதலுக்கும் ஒரு விலை இருக்கிறது. எப்படி?
பானைக்குள் விழுகின்ற அரிசி தன்னோடு சேர்க்கப்படும் தண்ணீரின்
கொதிநிலைக்குத் தன்னையே கையளிக்க வேண்டும். தன் இயல்பை
சர்க்கரை, தேங்காய், மற்றும் சுக்கு ஆகியவற்றின் அனைத்து
இயல்போடும் தன்னையே கரைத்துக்கொள்ள வேண்டும். அப்படி
செய்தால்தான் அது பொங்கலாக உருவாக முடியும்.
மேற்காணும் மூன்று தங்குதலுக்கும் கொடுக்கப்படும் விலை என்ன?
முதல் வாசகத்தில், "அவருக்காக தங்குவதற்கு" சாமுவேல் "தூக்கம்
கலைதல் வேண்டும்."
இரண்டாம் வாசகத்தில், "அவரில் தங்குவதற்கு" நம்பிக்கையாளர்
"பரத்தைமை (பிரமாணிக்கமின்மை) கலைதல் வேண்டும்"
மூன்றாம் வாசகத்தில், "அவரோடு தங்குவதற்கு" முதற்சீடர்கள்
தங்களின் "சொகுசான கூடுகளை விட்டு வெளியேற வேண்டும்"
இந்த மூன்று விலைகளை அவர்கள் கொடுத்தபின்தான் "தங்குதல்"
அனுபவம் பெறுகின்றனர்.
பானையில் அரிசி பொங்குதலோடு இணைந்து நம் மனங்களும், நம்
தொழுவத்தின் மாடுகளும், காணும் பொங்கலில் நம் உறவுகளும்
துள்ளும் இந்நன்னாளில்,
அவருக்காக,
அவரில்,
அவரோடு தங்குதலும் நடக்கட்டும்!
(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)
Archdiocese of Madurai
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 3
=================================================================================
பொதுக்காலம் 2ஆம் ஞாயிற்றுக்கிழமை (14-01-2018) திருப்பலி மறையுரை
:
-"ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?"-
இயேசுவின் அன்புக்குரியவரே!
"தங்கியிருத்தல்" உண்மையிலே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இன்றைய
காலகட்டங்களில் ஆ.டு.யு களை கடத்தி தங்களோடு தங்க வைப்பது இந்த
அனுபவம்தானே. ஒருவனோடு தங்கி, உண்டு, உறங்கி சில நாட்கள் இருந்தால்
அது அவனில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறதல்லவா!.
இத்தகைய பெரும் மாற்றத்தை, புரட்சியை இயேசுவோடு தங்கியிருப்பதும்
செய்யவல்லது. இயேசுவோடு தங்கிய யாவரும் இந்த அனுபவம் பெற்றனர்.
எம்மாவு "எங்களோடு தங்கும்"(லூக்24"29) என்ற அழைப்பு மாபெரும்
மாற்றத்தை அச்சீடர்களில் ஏற்படுத்தியது. "சக்கேயு,இன்று உமது
வீட்டில் நான் தங்க வேண்டும்" (லூக் 19"5) என்ற இயேசுவின்
வார்த்தை சக்கேயுவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதும்
நமக்கு தெறியும்.
இவ்வாறு தங்க ஆசைப்பட்டு "ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?"
எனக் கேட்டு அவரோடு தங்கியவருள் ஒருவர் அந்திரேயா. அவர் பெற்ற
அனுபவம் "மெசியாவைக் கண்டோம்" என்பது. பெற்ற பெரு மகிழ்ச்சியை
பேதுருவோடும் பகிர்ந்துகொள்கிறார். தானும் பேரானந்தம் அடைகிறார்.
பலரையும் இயேசுவில் மகிழச் செய்கிறார்.
இதேபோல் நாம் மகிழ, பிறரை மகிழ்விக்க, இயேசு தங்குமிடத்தை அறிந்து
அவரோடு தங்குவோம். அல்லது நாம் தங்கும் நம் வீட்டை இயேசு தங்கும்
வீடாக்குவோம். வாழ்த்துக்கள். ஆசீர்
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
பொதுக்காலம் 2ஆம் ஞாயிற்றுக்கிழமை (14-01-2018) திருப்பலி மறையுரை
:
மெசியாவைக் கண்டீர்களா?
இயேசுவோடு தங்கியிருந்து அவரது அன்பையும், ஆற்றல்மிகு வாக்குகளையும்
சுவைக்கும் அனுபவம் பெற்ற அந்திரேயா தமது சகோதரர் சீமோனிடம் வந்து
சொன்ன நற்செய்தி "மெசியாவைக் கண்டோம்" என்பது. வாழ்வு மாற்றம்
நிகழ்த்தும் தியானக்கூட்டங்களில் கலந்துகொண்டு பயன்பெற்ற பலரும்
திரும்பி வந்து, அண்டை அயலாரை அழைத்து, "நீங்களும் அந்த தியானத்தில்
கலந்துகொள்ளுங்கள்" என்று ஊக்கமூட்டும் நிகழ்வுகள் அவ்வப்போது
நடைபெறுகின்றன. இவை மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி அறிவிப்பு அனுபவங்கள்.
ஆனால், பெரும்பான்மை கத்தோலிக்கர் "மெசியாவைக் கண்டோம்" என்று
பிறரிடம் ஆர்வத்துடன் சொல்ல இயலுவதில்லை, காரணம் இந்த "மெசியா
அனுபவம்" அவர்களுக்குக் கிடைப்பதில்லை. தியானங்கள், திருப்பயணங்கள்,
குணமளிக்கும் நிகழ்வுகள், நற்செய்திக் கூட்டங்கள், அறப்பணி
சேவைகள்... இப்படி ஏதாவது ஒரு வகையில் நம்மவர்கள் அனைவரும்
"மெசியா அனுபவம்" பெறவேண்டும். அதற்கான வாய்ப்புகளை பங்குத் தந்தையர்,
அன்பியப் பொறுப்பாளர்கள், பக்த சபையினர் ஏற்படுத்தித் தரவேண்டும்.
"இயேசு அனுபவம்" இல்லாத கிறித்தவ வாழ்வு சாறற்ற சக்கைவாழ்வு என்பதை
உணர்வோம். எல்லாரும் இறையனுபவத்தைத் தேடிப்பெற ஊக்குவிப்போம்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
பொதுக்காலம் 2ஆம் ஞாயிற்றுக்கிழமை (14-01-2018) திருப்பலி மறையுரை
:
திருமுழுக்கு யோவானின் எடுத்துக்காட்டான வாழ்வு
திருமுழுக்கு யோவானின் பெருந்தன்மை இன்றைய நற்செய்தியிலே
வெளிப்படுகிறது. இதுவரை மக்கள் மத்தியில் அவர் பெற்றிருந்த
செல்வாக்கு, இறைவாக்கினர் என்று மக்கள் மதித்த பாங்கு, அதிகாரவர்க்கத்தினருக்கு
அவர் விடுத்த சவால், இவையனைத்தையும், ஒரு நொடியில் இழப்பதற்கு
திருமுழுக்கு யோவான் தயாராகிறார். தன்னை மெசியா என்று மக்கள்
நினைத்திருந்தாலும், அந்த நினைப்பை தனது சுயநலத்திற்காக அவர்
என்றுமே பயன்படுத்த முயலவில்லை.
தன்னுடைய சீடர்கள் தன்னிலிருந்து, இயேசுவுக்கு நம்பிக்கை வைக்க
வேண்டும் என்ற அவரது எண்ணத்தின் வெளிப்பாடுதான், இன்றைய நற்செய்தி.
அவர்களின் தேடல் நிறைவிற்கு வரப்போகிறது என்பதை திருமுழுக்கு
யோவான வெளிப்படுத்துகிறார். அவர்களின் தேடல் அவரில் அல்ல,
மாறாக, இயேசுவில்தான் நிறைவு பெறப்போகிறது என்பதை அவர் தன்னுடைய
சீடர்களுக்குக்கற்றுத்தருகிறார். அதற்காக அவர் வருந்தியது இல்லை.
தனது புகழ் முடிந்துவிட்டதே என்று, வருத்தப்படவும் இல்லை. இயேசுவை
இந்த உலகத்திற்கு முழுமையாக அடையாளம் காட்டுகிறார்.
நமது வாழ்வில் நம்மை அடையாளப்படுத்துவதற்கு அதிக முயற்சி எடுக்கிறோம்.
எப்படியாவது நம் வாழ்வில் முன்னேற வேண்டும் என்று அதிக அக்கறையும்,
சிரத்தையும் எடுக்கிறோம். எந்த அளவுக்கு என்றால், அடுத்தவர்களுக்கு
குழிவெட்டி, அவர்களை விழச்செய்து, நாம் குளிர் காய
நினைக்கிறோம். அதைத்தவிர்த்து, திருமுழுக்கு யோவானின்
வாழ்வைப்பின்பற்றுவோம்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 4
=================================================================================
சீடத்துவத்தின் வரைவிலக்கணம்
14-01-2018 : பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு
யோவான் 1:35 - 42
முன்னுரை
ஆழமான விசுவாசம் கொண்ட தீவிரமான இயேசுவின் சீடர்களாகத் தங்களை
எண்பித்துக் காட்டிய பலரைக் குறித்த ஏராளமான குறிப்புகளை தொடக்கக்
காலத் திருச்சபையின் வரலாறு நமக்கு எடுத்துரைக்கின்றது. இத்தகைய
குறிப்புகளில், விபியா பெர்பெத்துவா என்ற புனிதரின் வரலாறு சீடத்துவ
வாழ்விற்கான மிகச் சிறந்ததொரு எடுத்துகக்காட்டு. உரோமை பேரரசின்
உயர்குடி ஒன்றில் பிறந்த இந்த இளம்பெண், கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுவதைக்
கைவிட மறுத்த காரணத்தால், கி.பி. 203 ஆம் ஆண்டு கார்த்தேஜ்
நகரத்தின் கொடுங்களத்தில் சிங்கங்களுக்கு இரையாகின்ற மரணதண்டனை
விதிக்கப்பட்டார். இந்தக் கொடூரமான தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக,
கிறிஸ்துவை மறுதலித்திடுமாறு கேட்டுக் கொண்ட அவருடைய தந்தையின்
உருக்கமான வேண்டுகோளை பெர்பெத்துவா இவ்வாறு விவரிக்கிறார்:
"தலை நரைத்து முதுவயதடைந்த என் மேல் இரக்கம் கொள்வாய், மகளே!,
உன்னுடைய முடிவை மாற்றிக் கொள்... எங்களை முற்றிலுமாக அழித்துவிடாதே..
ஏனெனில், உனக்குத் துயரம் நேரும் வகையில் ஏதேனும் அசம்பாவிதமாக
நடந்துவிட்டால், அதன் பிறகு நாங்கள் மற்ற மனிதர்களிடம் தலைநிமிர்ந்து
பேசவே முடியாது.." என் கரங்களில் முத்தமிட்டவாறு ஒரு தந்தைக்குரிய
பாசத்தோடு கதறிய என் தகப்பன், தன் மகளிடம் அல்லாமல், வேறொரு
பெண்ணிடம் கேட்பது போல, என் கால்களில் முகங்குப்புற விழுந்து
கண்ணீர் உகுத்தார்"
"அப்பா, இந்த ஜாடியை நீங்கள் பார்க்கிறீர்கள் அல்லவா? இதற்கு
"ஜாடி" என்று இல்லாமல், வேறு ஒரு பெயர் சொல்லி அழைத்திடல் இயலுமோ?"
என்று பெர்பெத்துவா கேட்க, அதற்கு தந்தை, "இல்லை, அம்மா!" என்றார்.
"அதே போலத்தான், நான் கிறிஸ்தவள் என்பதால், என்னையும் வேறொரு
பெயர் கொண்டு அழைத்திட முடியாது, அப்பா!" என்று பெர்பெத்துவா
பதிலிறுத்தார். பெர்பெத்துவாவும், அவரது தோழியான
ஃபெலிசித்தாவும் இது போன்ற கோரிக்கைகளை எல்லாம் நிராகரித்து
விட்டு, கிறிஸ்துவுக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்து,
திருச்சபையின் மிகச் சிறந்த இரண்டு மறைசாட்சிகள் என்னும்
பெரும் பேற்றினை அடைந்தார்கள்.
"சீடனாக அல்லது சீடத்தியாக வாழ்வதே கிறிஸ்தவம்" என்பதை எடுத்துக்
காட்டிய விபியா பெர்பெத்துவா, கிறிஸ்தவர் என்ற சொல்லுக்கான
பொருளை வரையறுத்துச் சொன்னார்.
இறைவார்த்தை:
திருமுழுக்கு யோவான், சீமோன் பேதுரு, அந்திரேயா மற்றும் பெயர்
குறிப்பிடப்படாத இன்னொரு சீடர்
- ஆகிய நால்வரை முன்னிறுத்தி,
சீடத்துவத்திற்கான வரைவிலக்கணத்தை இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்தியம்புகின்றது.
மக்களுக்கு விடுதலையளித்து இயேசுவிடம் அழைத்துச் செல்வதே சீடத்துவம்:
போதகரான திருமுழுக்கு யோவான், இன்றைய நற்செய்தியில் ஒரு சீடராக
மாறுகிறார். இயேசுவைக் கண்டபோது, "இதோ, கடவுளின் ஆட்டுக்குட்டி"
என்று சொல்லி, அவரைத் தன்னுடைய இரண்டு சீடர்களுக்கு சுட்டிக்
காட்டுகிறார். உடனே, அந்த இரண்டு சீடர்களும் திருமுழுக்கு
யோவானை விட்டுவிலகி, இயேசுவைப் பின்பற்றிச் செல்கிறார்கள். இதுவரையிலும்
அந்த இரு சீடர்களும் திருமுழுக்கு யோவானிடமே இருந்தார்கள். உண்மையான
போதகராகிய இயேசு வந்தவுடன், அவரைப் பின்பற்றிச் செல்வதற்கு ஏதுவாக,
தன்னுடைய இரண்டு சீடர்களையும் விடுவித்திட திருமுழுக்கு யோவான்
விருப்பம் கொண்டார். அவ்வாறே அந்த இரு சீடர்களும் யோவானோடு கழித்த
பழைய வாழ்வைத் துறந்து, இயேசுவைப் பின்பற்றிச் செல்ல
விரும்பினார்கள். அந்த இரு சீடர்களில் ஒருவரான அந்திரேயா, தன்னுடைய
சகோதரரான சீமோன் பேதுருவை இயேசுவிடம் அழைத்து வருகிறார். ஆக,
இந்த சீடர்கள் மக்களை தங்களோடு நிறுத்தி வைத்துக் கொள்ளாமல்,
இயேசுவிடம் அழைத்து வருகிறார்கள்.
இயேசுவுடனான உறவை ஆழப்படுத்திக் கொள்ளுவதே சீடத்துவம்: இயேசுவுடன்
கொண்ட உறவை ஆழப்படுத்திக் கொள்ளுவதே, அந்த சீடர்களிடம் இருந்த
மிகப் பெரிய எதிர்பார்ப்பு. யோவானின் இரண்டு சீடர்கள் தன்னைப்
பின்தொடர்வதைக் கண்ட இயேசு அவர்களிடம், "என்ன தேடுகிறீகள்?" என்று
அவர்களிடம் கேட்டார். "வாழ்க்கையில் நீங்கள் தேடுவதென்ன?" என்பதே
இந்தக் கேள்வியின் உண்மையான பொருள். நீங்கள் கடவுளைத் தான்
நாடுகிறீர்களா? அதுதான் உங்கள் தேடலா? உங்கள் இதயத்தின் ஆழத்திலிருக்கும்
எதிர்பார்ப்புகளுக்கு என்னைக் குறித்த ஏதேனும் பதிலாக அமைந்துள்ளதா?
எபிரேய மொழியில் "போதகர்" என்று பொருள்படுகின்ற "ரபி" என்னும்
வார்த்தையைக் கொண்டு இந்த சீடர்கள் இயேசுவை விளிக்கிறார்கள்.
இது, இயேசுவை தங்களுடைய புதிய போதகராக இவர்கள் ஏற்றுக்கொண்டதற்கு
வெளிப்படையான ஒப்புதலாக உள்ளது. "நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?"
என்று அவர்கள் இயேசுவை கேட்டார்கள். இந்தக் கேள்விக்கு வேறொரு
பொருளும் உண்டு. நான்காவது நற்செய்தி நூலாகிய யோவான் நற்செய்தியில்,
"தங்குதல்" என்பதற்கு "ஒரு வீட்டில் இரவு தங்குவது" என்பதற்கும்
மேலாக மற்றொரு சிறப்பான அர்த்தம் உண்டு. மறைநூலில் கிறிஸ்து இயேசுவைக்
குறித்த ஆய்வியல் பாடப்பகுதிகளில், இறைமகன் இயேசு இறைத்தந்தையோடு
ஒன்றித்திருப்பதைக் குறிக்கும் விதமாக பயன்படுத்தப்படுகின்ற
"நிலைத்திருத்தல்" என்னும் பொருளைத் தருவதாகும். எனவே, "நீர்
எங்கிருந்து வருகிறீர்? உம்முடைய மூலாதாரமான அடித்தளம் எது?
யாரோடு நீர் நிலைத்திருக்கின்றீர்?"
- இவையே அந்த சீடர்கள் எழுப்பிய
உண்மையான வினாக்கள்.
சீடர்களின் கேள்விகளுக்கு இயேசு அளித்த பதில் இறையியல் சாயல்
கொண்டதாக உள்ளது. "எங்கே தங்கியிருக்கிறீர்?" என்ற சீடர்களின்
கேள்விக்கு இயேசு நேரிடையாக பதில் கூறவில்லை. மாறாக, "வந்து
பாருங்கள்" என்று ஒரு அழைப்பை விடுக்கிறார். சீடர்களும் நேராக
வந்து, தங்கள் கேள்விக்கான பதிலை (39 ஆம் வசனம்) கண்டு
கொள்கிறார்கள். யோவான் எழுதிய நான்காவது நற்செய்தி நூலில்,
"பார்த்தல்" என்ற வார்த்தைக்கு "விசுவாசத்தில் தெளிவு பெறுதல்"
என்பது பொருளாகும். ஆகவே, "என்னிடம் விசுவாசம் கொள்ள வருக" என்பதே
இங்கு இயேசு கொடுக்கின்ற அழைப்பு. விசுவாசத்தின் கண்களைக்
கொண்டு தன்னை பார்ப்பதற்காக இயேசு தருகின்ற அழைப்பு இது
(காண்க: யோவான் நற்செய்தி 1:46, 6:36, 9:35 41, 14:9). இயேசுவின்
அழைப்பினை ஏற்ற சீடர்கள் இருவரும் சரியாக முறையில் செயல்பட்டார்கள்;
"அவர்கள் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள்".
இயேசுவின் சீடர்களாக வாழ்வதற்கான அழைத்தல் துல்லியமாக மாலை 4
மணிக்கு தொடங்கியது. "அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள்" என்று
நற்செய்தி கூறுகிறது. இந்த நற்செய்தி பகுதியில் உள்ள
"தங்குதல்" என்ற பதத்திற்கு "நிலைத்திருத்தல்" என்பது பொருள்.
"அவர்கள் அவரோடு நிலைத்திருந்தார்கள், திராட்சை செடியும் அதன்
கிளைகளையும் போல (யோவான் நற்செய்தி, 15 ஆம் அதிகாரம்) அவரோடு
ஒன்றித்திருந்தார்கள்" என்பதே இந்த நற்செய்தி பகுதிக்கான சரியான
அர்த்தமாகும். இந்த சீடர்கள் இருவரும் இயேசுவோடு கொண்ட உறவை படிப்படியாக
வலுப்படுத்திக் கொண்டார்கள்.
இயேசுவுடன் கொண்ட உறவை அறிக்கையிடுவதே சீடத்துவம்: "இதோ, கடவுளின்
ஆட்டுக்குட்டி" என்று திருமுழுக்கு யோவான் அறிக்கையிட்டார். இயேசுவே
தங்கள் போதகர் என்று இரு சீடர்களும் அறிக்கையிட்டார்கள்.
பேதுருவைப் பார்த்த அந்திரேயா , "மெசியாவைக் கண்டோம்" என்று அறிக்கையிட்டார்.
இயேசுவோடு ஒருவர் வைத்திருக்கும் உறவை அறிக்கையிடுவதே சீடத்துவம்
ஆகும்.
நம்மையே மாற்றியமைத்திட கடவுளை அனுமதிப்பதே சீடத்துவம்: இறுதியாக
சீமோன் இயேசுவிடம் வந்தபோது, "நீ யோவானின் மகன் சீமோன். இனி
"கேபா" எனப்படுவாய்" என்று இயேசு கூறுகிறார். சீமோன்,
பேதுருவாக மாறுகிறார். இயேசு தன்னை முற்றிலும் மாற்றியமைத்திட
சீமோன் அனுமதித்தார். ஒருவருக்குப் பெயரிடுதல் என்பது, அவரை
சொந்தமாக்கிக் கொண்டு, அவர் மேல் ஆளுமை செய்வதற்கான உரிமை கோருவதாகும்.
பேதுருவின் மீது இயேசு உரிமை கோரினார். தன் மீது ஆளுமை செய்வதற்கான
உரிமையை எடுத்துக் கொள்வதற்கு பேதுருவும் கடவுளை அனுமதித்தார்.
ஒவ்வொரு கிறிஸ்தவருக்குமான சீடத்துவத்தின் தன்மையை இன்றைய
நற்செய்தி வரையறுக்கின்றது. கிறிஸ்தவராக இருப்பதென்றால்,
சீடராக இருப்பதாகத் தான் அர்த்தம். சீடராக இருப்பவர்,
மக்களுக்கு விடுதலை தந்து, இயேசுவிடம் அழைத்து வர வேண்டும்;
இயேசுவுடன் கொண்ட உறவை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்; அந்த
உறவை அறிக்கையிட வேண்டும்; இறுதியாக, நம்மையே மாற்றியமைத்திட
கடவுளை அனுமதிக்க வேண்டும்.
பயன்பாடு:
ஒரு ஆசிரியையிடம் ஒருவர், "உங்கள் தொழில்முறை யாது?" என்று
கேட்டார். "நான் ஒரு கிறிஸ்தவர்" என்று அந்த ஆசிரியைக்
கூறினார். கேள்விக் கேட்டவர் தொடர்ந்து, "நான் கேட்டது
அதுவல்ல; நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்?" என்று கேட்டார்.
ஆசிரியை மீண்டும், "நான் ஒரு கிறிஸ்தவர்" என்று அதே பதிலைக்
கூறினார். கேள்விக் கேட்டவர் குழப்பமடைந்தார். மறுபடியும்
அவர், "இந்தக் கேள்வியை நான் வேறுவிதமாக கேட்டிருக்க வேண்டும்.
உங்கள் வாழ்க்கையை நடத்திச் செல்ல நீங்கள் என்ன தொழில்
செய்கிறீர்கள்?" என்று வினவினார். "கிறிஸ்தவர் என்பது என்னுடைய
முழுநேரத்தொழில்; ஆனால், என் குழந்தைகளையும், நோயாளியான என்
கணவரையும் காப்பாற்றுவதற்காக, ஆசிரியப் பணி ஆற்றுகிறேன்" என்று
அந்த ஆசிரியை பதிலிறுத்தார். "இதோ வருகின்றேன்; என் கடவுளே,
உமது திருவுளம் நிறைவேற்ற வருகிறேன்" என்னும் மறைநூல்
வாக்கிற்கேற்ப, சீடத்துவத்தின் பொருளை அந்த ஆசிரியை தெளிவாகத்
தெரிந்து கொண்டார்.
நாம் கிறிஸ்தவர்கள். யார் வேண்டுமானாலும் கிறிஸ்தவராக
இருக்கலாம். யாரும் திருமுழுக்கு பெற்றுக் கொள்ள முடியும்.
யார் வேண்டுமானாலும் ஆலயத்திற்குச் செல்லலாம்;
திருவருள்சாதனங்களைப் பெற்றுக் கொள்ளலாம். கிறிஸ்தவ பெயரோ, ஆலய
வழிபாடோ, வெளிப்படையான பக்திமுயற்சிகளோ அல்லது பங்குதளத்தின்
உறுப்பினராக இருப்பதோ கிறிஸ்தவத்தை வரையறுத்திடாது. மக்களை
விடுதலை செய்து, இயேசுவிடம் அழைத்துச் செல்கின்ற சீடனாக
இருப்பது, இயேசுவுடன் கொண்ட உறவில் வலுபெற்றிருப்பது, அந்த
உறவை அறிக்கையிடுவது, கடவுள் நம்மை மாற்றியமைத்திட அனுமதிப்பது
- இவையே ஒரு கிறிஸ்தவரின் வரைவிலக்கணம்.
நாம் நம்மையே கேட்டுக் கொள்வோம் யாரையாவது நாம் இயேசுவிடம்
அழைத்துச் சென்றிருக்கிறோமா? இந்த உலகம் அறிந்து கொள்ளும்
அளவிற்கு இயேசுவுடனான உறவில் நாம் வலுப் பெற்றிருக்கிறோமா?
மற்றவர்களுக்கு நாம் தரவிருக்கின்ற உறவின் அறிக்கை யாது? நம்மை
முற்றிலும் மாற்றியமைத்து, நம்மீது ஆளுமை செய்யும் உரிமையைக்
கோரிட கடவுளை நாம் அனுமதித்திருக்கிறோமா?
முடிவுரை:
இறைத்தந்தையின் தூய ஆவியார் நம்மில் சீடத்துவத்தின் துடிப்பை
தூண்டுவாராக! இயேசுவின் முதற்சீடராக வாழ்ந்த அன்னை மரியா, நல்ல
சீடர்களாக வாழ்ந்திட நம்மை வழிநடத்துவாராக! நமது
சீடத்துவத்தின் அடையாளமாக இந்த திருப்பலி இருப்பதாக!
=================================================================================
திருப்பலி முன்னுரை
=================================================================================
காலைக் கதிரவன் கண்பட்டதும் இருள் நீங்கி உலகம் ஒளி பெறுவது
போல, கவலைகள் மறைந்து நம் மனங்களும் மகிழ்ச்சியில் நிறையட்டும்
என்று கூறி பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு திருப்பலிக்
கொண்டாட்டத்திற்கு அன்புடனே வரவேற்கிறோம்.
சாமுவேலை இறைவன் அழைக்கும் முதல் வாசகத்தினை மனதில்
நிறுத்துவோம். இறைவன் அழைப்பை மூன்று முறை சாமுவேல்
அறியவில்லை. ஆனாலும் இறைவன் சாமுவேலை தம் அன்பால் அரவணைத்து
மேன்மையாக்கினார்.
இன்றைய சூழலில் இயற்கையும் நம்மை அழைக்கிறது. நம்மை நோக்கி
கூக்குரலிடுகிறது. செவிகளை இழந்த நாம், நமது நாகரீக
வளர்ச்சிக்கு தடையாக உள்ளது என்று இயற்கையை சிதைத்துவிட்டு
வானம் பொய்த்து விட்டதென்று வழிதவறி பயணிக்கிறோம். மலிவாய்
கிடைத்ததென்று விளை நிலத்தை வீட்டுமனையாக்கி விட்டோம். நாம்
குளிர் அறையில் இருந்து ருசிக்கும் உணவை உருவாக்கியவன்
வெற்றுடம்பாய் வெயிலில் கருகிக்கொண்டிருக்கிறான். உலகிற்கே
உணவளித்தவன் தன் பசியாற கையேந்தி நிற்கிறான். பசியாலும்
கடனாலும் மடிந்து கொண்டிருக்கின்றான். இதன் காரணம்தான் என்ன?
இறைவன் அழைப்பை தாமதமாக அறிந்து கொண்ட சாமுவேலைப் போல இயற்கை
அரவணைப்பை தாமதமாகவே புரிந்துகொண்டோம்.
இன்றைய இரண்டாம் வாசகமும் நம் உடல்கள் கிறிஸ்துவின் உறுப்புகள்
என்று கூறி மானிட இனத்தை மகிமைப்படுத்துகிறது. நம் உடல்கள் தூய
ஆவி தங்கும் கோவில் என்று நமக்கு மகுடம் சூட்டுகிறது. அத்தகைய
மகுடங்கள் கோபுரத்தில் சூட்ட வேண்டுமே தவிர குப்பை மேட்டில்
அல்ல. விவிலியம் கூறும் பரத்தைமை என்பது இன்று பரவலாகிவிட்டது
என்பதை விட பேஷனாகி விட்டது என்பதே நிஜம். ஆம், அத்தனை
தொலைக்காட்சி நிகழ்வுகளும் உடல்களால் செய்யும் பாவத்தையே
அடிப்படையாகக் கொண்டுள்ளது.
ஆண், பெண் இருபாலெனினும் கற்பு என்பது பொதுவானது என்பது
மறுக்கப்படுகிறது; மறக்கப்படுகிறது. ஆண்டவர் தம் சீடர்களிடம்
வந்து பாருங்கள் என்று தம் இருப்பிடம் அழைக்கிறார். இறைவன்
இல்லம் காண, நமது செயல்களுக்காய் இறைவனிடம் மன்னிப்பைக் கேட்டு
இறைவன் தந்த இயற்கை நம்மை அணைக்கும்படி வாழ்வோம். பாவத்தினை
ரசிக்காமல் பாதையை மாற்றி பரமன் பதம் போற்றி நடப்போம். நம்
மனங்களில் மகிழ்ச்சி பொங்க இத்திருப்பலியில் இணைவோம்.
மன்றாட்டுகள்
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
1. வந்து பாருங்கள் என்று அழைத்தவரே எம் இறைவா!
உமது திருப்பணி செய்ய முன்வந்துள்ள எம் திருத்தந்தை, ஆயர்கள்,
குருக்கள், துறவறத்தார் தங்கள் அழைப்பின் இறை நோக்கத்தை
நிறைவேற்றி, தங்கள் பணி வாழ்வை பலப்படுத்திட அவர்களோடு
உடனிருந்து வழிகாட்ட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. சாமுவேலை அழைத்து மேன்மைப்படுத்தியவரே எம் இறைவா!
உமது அழைப்பை நாங்கள் உணர்ந்து, உமக்கு உகந்த வழியினில்
நடந்து, வாழ்வின் நற்கனிகளை பெற்று, வாழ்ந்திட வரம் வேண்டி
இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. இயற்கையின் இன்பத்தை படைத்தவரே எம் இறைவா!
பாதுகாக்க வேண்டிய இயற்கையை பரிதவிக்க விடாமல், வீடும் நாடும்
செழித்து, சந்தோசமும், அமைதியும் பொங்கி வழிய வேண்டி இறைவா
உம்மை மன்றாடுகின்றோம்.
4. அழைத்தலின் ஆண்டவரே எம் இறைவா!
சமூகப் பணியாற்ற அழைத்த நாட்டுத் தலைவர்கள், நேரிய வழியில்
நடந்து, மக்களின் நலனை மனதிற் கொண்டு, நல் திட்டங்களை
செயல்களாக்கி, நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்து செல்ல
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5. மகிழ்ச்சியின் மன்னவனே எம் இறைவா!
எங்கள் பகுதியில் தேவையான மழை பொழிந்து, நீர் நிலைகள் நிறைந்து
விவசாயம் செழிக்கவும், எம் விவசாயிகளின் மனங்கள் சந்தோசத்தில்
பொங்கவும், அனைத்து உள்ளங்களும் இல்லங்களும் உமது ஆசியைப்
பெற்றுக் கொள்ளவும் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
நன்றி: ஆசிரியை. திருமதி. ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ்,
பாவூர்சத்திரம். |
|