Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

   Year C  
                                               பொதுக்காலம் ஆண்டின் இரண்டாம் ஞாயிறு*
     
=================================================================================
முதல் வாசகம்

=================================================================================
மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வதுபோல் உன் கடவுள் உன்னில் மகிழ்வார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 62: 1-5

சீயோனின் வெற்றி வைகறை ஒளியெனவும், அதன் மீட்பு சுடர் விளக்கெனவும் வெளிப்படும்வரை, அதனை முன்னிட்டு மவுனமாயிரேன்; எருசலேம் பொருட்டுச் செயலற்று அமைதியாயிரேன். பிற இனத்தார் உன் வெற்றியைக் காண்பர்; மன்னர் யாவரும் உன் மேன்மையைப் பார்ப்பர்; ஆண்டவர் தம் நாவினால் சூட்டும் புதியதொரு பெயரால் நீ அழைக்கப்படுவாய்.

ஆண்டவரின் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்; உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் விளங்குவாய். 'கைவிடப்பட்டவள்' என்று இனி நீ பெயர் பெற மாட்டாய்; 'பாழ்பட்டது' என இனி உன் நாடு அழைக்கப்படாது; நீ 'எப்சிபா' என்று அழைக்கப் படுவாய்; உன் நாடு 'பெயுலா' என்று பெயர்பெறும்.

ஏனெனில், ஆண்டவர் உன்னை விரும்புகின்றார்; உன் நாடு மணவாழ்வு பெறும். இளைஞன் கன்னிப் பெண்ணை மணப்பது போல உன்னை எழுப்பியவர் உன்னை மணந்துகொள்வார்; மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வது போல் உன் கடவுள் உன்னில் மகிழ்வார்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா 96: 1,2a. 2b-3. 7-8a. 9-10ac (பல்லவி: 3b) Mp3
=================================================================================
 பல்லவி: அனைத்து மக்களுக்கும் ஆண்டவரின் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; 2a ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள். பல்லவி

2b அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். 3 பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். பல்லவி

7 மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள்; மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள். 8a ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள். பல்லவி

9 தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, அவர் திருமுன் நடுங்குங்கள். 10ac வேற்றினத்தாரிடையே கூறுங்கள்; ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். பல்லவி


================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
தூய ஆவியார் தம் விருப்பம்போல் ஒவ்வொருவருக்கும் கொடைகளைப் பகிர்ந்தளிக்கிறார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 4-11

சகோதரர் சகோதரிகளே, அருள் கொடைகள் பலவகையுண்டு; ஆனால் தூய ஆவியார் ஒருவரே. திருத்தொண்டுகளும் பலவகையுண்டு; ஆனால் ஆண்டவர் ஒருவரே. செயல்பாடுகள் பலவகையுண்டு; ஆனால் கடவுள் ஒருவரே. அவரே எல்லாரிடமும் எல்லாவற்றையும் செயல்படுத்துபவர். பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது.

தூய ஆவியார் ஒருவருக்கு ஞானம் நிறைந்த சொல்வளத்தை அருளுகிறார். இன்னொருவருக்கோ அதே ஆவியார் அறிவு செறிந்த சொல்வளத்தை அளிக்கிறார். அதே ஆவியார் வேறொருவருக்கு நம்பிக்கை அருளுகிறார். அந்த ஒரே ஆவியார் மற்றொருவருக்குப் பிணி தீர்க்கும் அருள் கொடையையும் அளிக்கிறார். தூய ஆவியார் ஒருவருக்கு வல்ல செயல் செய்யும் ஆற்றலையும், இன்னொருவருக்கு இறைவாக்கு உரைக்கும் ஆற்றலையும், வேறொருவருக்கு ஆவிக்குரியவற்றைப் பகுத்தறியும் ஆற்றலையும், மற்றொருவருக்குப் பல்வகை பரவசப் பேச்சுப் பேசும் ஆற்றலையும், பிறிதொருவருக்கு அப்பேச்சை விளக்கும் ஆற்றலையும் அருளுகிறார்.

அந்த ஒரே ஆவியாரே இவற்றையெல்லாம் செயல்படுத்துகிறார்; அவரே தம் விருப்பம்போல் ஒவ்வொருவருக்கும் இவற்றைப் பகிர்ந்தளிக்கிறார்.


- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
2 தெச 2: 14

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
கானாவில் இயேசு செய்த முதல் அரும் அடையாளத்தில் தம் மாட்சியை வெளிப்படுத்தினார்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-12


கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர். திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்துபோகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்றார்.

இயேசு அவரிடம், "அம்மா, அதைப் பற்றி நாம் என்ன செய்ய முடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே" என்றார்.

இயேசுவின் தாய் பணியாளரிடம், "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்றார்.

யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளும்.

இயேசு அவர்களிடம், "இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்" என்று கூறினார்.

அவர்கள் அவற்றை விளிம்புவரை நிரப்பினார்கள்.

பின்பு அவர், "இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டுபோங்கள்" என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.

பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது.

ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு, "எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம்போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?" என்று கேட்டார்.

இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர். இதன் பிறகு அவரும் அவர் தாயும் சகோதரர்களும் அவருடைய சீடரும் கப்பர்நாகும் சென்று அங்குச் சில நாள்கள் தங்கியிருந்தனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
தூய ஆவியின் கொடைகள் பொது நன்மைக்காகவே!

அமெரிக்காவில் வாழ்ந்த மிகப்பெரிய செல்வந்தர் வில்லியம் ஆலன் ஒயிட். மிகுந்த தாராள உள்ளமும், இரக்க குணமும் உடையவர். ஒருமுறை அவர் தனக்கென்று இருந்த 50 ஏக்கர் நிலத்தையும் தன்னுடைய ஊர் மக்களுக்காக எழுதி வைத்தார். இதை அறிந்த அவருடைய உறவுக்காரர் ஒருவர் அவரிடம், "எதற்காக இவ்வளவு நிலத்தையும் ஊர் மக்களுக்கு எழுதி வைக்கிறீர்கள்" என்று கேட்டார்.

அதற்கு அவர், "நான் என்னிடம் இருப்பதை பிறருக்குக் கொடுக்கிறபோது மூன்றாவது விதமான மகிழ்ச்சியை அனுபவிக்கிறேன்" என்றார். "அது என்ன மூன்றாவது விதமான மகிழ்ச்சி. அதைக் கொஞ்சம் எனக்குத் தெளிவாக விளக்குங்கள்" என்று கேட்க, வில்லியம் ஆலன் ஒயிட் மறுமொழியாக, "பணம் மூன்றுவிதமான மகிழ்ச்சிகளைத் தருகிறது. முதலாவது பணத்தைச் சேர்ப்பதில் மகிழ்ச்சி; இரண்டாவது கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை பாதுகாப்பதில் மகிழ்ச்சி; மூன்றாவது மற்ற எல்லாவற்றையும்விட சிறந்தது, அது நம்மிடம் இருப்பவற்றை பிறருக்குக் கொடுக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி.

பலர் தாங்கள் பெற்ற செல்வத்தை; திறமைகளை; கடவுள் கொடுத்த ஆசிர்வதங்களை தங்களுக்குள்ளே வைத்துக்கொள்கிறார்கள். அதனால் அவர்கள் மூன்றாவது விதமான மகிழ்ச்சியை அடைவதில்லை. ஆனால் நான், என்னிடம் இருப்பதை பிறருக்குக் கொடுப்பதால் அதை அனுபவிக்கிறேன்" என்றார்.

நம்மிடம் இருப்பதை பிறருக்குக் கொடுக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி மற்ற எல்லாவற்றையும் விட உயர்ந்தது என்பதை இந்நிகழ்வு நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.

பொதுக்காலத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் நமக்கு இன்றைய நாளில் நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் தரும் அழைப்பு "நமக்குக் கொடுக்கப்பட்ட கொடைகள் பிறரது நம்மைக்காகவே" என்பதே. கடவுள் கொடுத்த திறமைகள், கொடைகள், வாய்ப்பு வசதிகள் யாவற்றையும் நமது சொந்த தேவைக்காகவே பயன்படுத்தி வாழும் நமக்கு, இன்றைய வாசகங்கள் அவற்றைப் பொதுநலத்திற்காக பயன்படுத்த அழைப்புத் தருகிறது.

கொரிந்தியருக்கு எழுதப்பட்ட திருமடலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுலடியார், கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான திறமையைக் கொடுத்திருக்கிறார். குறிப்பாக ஒரு சிலருக்கு ஞானம் நிறைந்த சொல்வன்மை, அறிவுநிறைந்த சொல்வன்மை, நம்பிக்கை, வல்ல செயல்கள் புரியும் ஆற்றல், பரவசப் பேச்சுப் பேசும் ஆற்றல், இன்னும் ஒருசிலருக்கு அவற்றை விளக்கும் ஆற்றல் இவையெல்லாம் கொடுத்திருக்கலாம். ஆனால் நாம் அதனை பிறருக்காக, பொது நன்மைக்காகப் பயன்படுத்த வேண்டும் என்றதொரு அழைப்பினை விடுக்கிறார் (1 கொரி 12:7).

ஆனால் நடைமுறையில் கடவுள்/ தூய ஆவியார் கொடுத்த திறமைகளை, கொடைகளை பொது நன்மைகாகப் பயன்படுத்தாமல் தன்னுடைய சுயநலத்திற்காக, தன்னுடைய பெயர் விளங்கச் செய்வதற்குத்தான் மக்கள் பயன்படுத்திக் கொண்டிருப்பது வேதனை அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. வெறுமனே பணம், பொருள் என்று மட்டுமல்லாமல் இறைவனின் பணி செய்ய கடவுள் கொடுத்திருக்கும் ஆற்றலையும், திறமையையும்கூட இன்றைக்கு மக்கள் தங்களுடைய சுயநலத்திற்காக பயன்படுத்துகிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

ஒருமுறை மராட்டிய மன்னர் சிவாஜி பகைவர்களிடமிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக ஒரு பெரிய கோட்டையைக் கட்டிக்கொண்டிருந்தார். அந்த கோட்டையைக் கட்டும் பணியில் ஏராளமான மக்கள் ஈடுபட்டிருந்தார்கள். அரசர் அவர்கள் எல்லாருக்கும் உணவு கொடுத்து, அவர்களை பராமாரித்துக் கொண்டும் வந்தார். இது அவருடைய உள்ளத்தில் ஒருவிதமான கர்வத்தை உண்டுபண்ணியது. நான்தான் எல்லாருக்கும் உணவு கொடுக்கிறேன். நான் எவ்வளவு பெரிய மன்னர் என்ற கர்வம் அவருடைய பேச்சிலே அடிக்கடி தெறித்தது.

இதைக் கண்ணுற்ற அவருடைய குரு மன்னருக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்தார். அதனால் அவர் மன்னரிடம், "மன்னர் மன்னா! எனக்காக அருகே இருக்கக்கூடிய பாறையை உடைத்து, அதை இங்கே கொண்டுவர முடியுமா?" கேட்டார். அதற்கு மன்னரும் தன்னுடைய வேலையாட்களிடம் பாறையை உடைத்துக்கொண்டு வரச்சொல்ல, அவர்களும் அதைக் கொண்டுவந்தார்கள்.

அப்போது அந்த பாறைக்குள் இருந்து ஒரு தேரை (தவளை) வெளியே ஓடியது. உடனே குரு மன்னரை பார்த்து, "மன்னா! எல்லாருக்கும் உணவிடுகிறீர்கள், இந்த பாறைக்குள் இருந்த தேரைக்கும் நீங்கள்தானே உணவிடுகிறீர்கள்" என்று சொன்னதும், மன்னருக்கு, குரு தன்னுடைய ஆணவத்தான் சுட்டிக் காட்டுகிறார் என்பதை உரைத்தது. அதன்பிறகு ஆணவம் இல்லாது செயல்படத் தொடங்கினார்.

கடவுள் கொடுத்திருக்கும் கொடைகள்/பொறுப்புகள் எல்லாம் கடவுளின் பேர் விளங்கப் பயன்படுத்த வேண்டுமே ஒழியே அதனை தன்னுடைய பெயர் விளங்கப் பயன்படுத்துவது தவறு என்பதை இந்த நிகழ்வானது அழகாக எடுத்துரைக்கிறது.

ஆக, நம்மிடம் இருக்கும் எல்லாமும் நாம் பிறருக்காக பயன்படுத்த, இறைவன் கொடுத்த கொடைகள் என்பதை நாம் உணரவேண்டும். இதற்கு நம்மிடம் இருக்கக்கூடிய அடிப்படையான மனநிலை, நாம் அனைவரும் ஒரே உடலின் உறுப்புகள், இந்த உடலின் உறுப்புகளுக்குத் தலையாக இருப்பவர் கிறிஸ்துவே என்பதை நாம் உணரவேண்டும். உடலில் காலோ அல்லது தலையோ அடிபட்டிரும்போது கை சும்மா இருக்காது. உடனே அது உதவி செய்ய விரைந்து வரும். அதுபோன்றுதான் கிறிஸ்து என்ற உடலில் உறுப்புகளாக இருக்கும் நாம் அனைவரும், நம்மோடு வாழக்கூடிய மக்களின் நிலை அறிந்து, உதவி செய்ய விரைந்து வரவேண்டும்.

அந்த வகையில் கடவுள் கொடுத்த எல்லா ஆசிர்வாதங்களையும் பொது நன்மைகாகப் பயன்படுத்திய ஒருவர் இருக்கிறார் என்று சொன்னால் அது இயேசுவைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது. இன்று படிக்கக்கேட்ட நற்செய்தி வாசகம் அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கிறது.

கானாவூர் திருமணத்திற்கு தன்னுடைய தாய் மற்றும் சீடர்களுடன் செல்லும் இயேசுக் கிறிஸ்து, அங்கே திருமண விருந்தின்போது திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது என்பதை தன்னுடைய தாயின் வழியாகக் கேள்விப்படுகிறார். தாயின் வேண்டுதலின் பேரில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றி, மணவீட்டாருக்கு நேரிட இருந்த அவப்பெயரைப் போக்குகிறார்.

இங்கே இயேசுக் கிறிஸ்து கடவுள் கொடுத்த அருளை தனது பெயர் விளங்கப் பயன்படுத்தவில்லை. மாறாக மணவீட்டாரின் அவல நிலை நீங்கவும், கடவுளின் பெயர் விளங்கவுமே அப்படிச் செய்கிறார். நற்செய்தியின் இந்த பகுதியில் மட்டுமல்லாது, எல்லா இடங்களிலும் இயேசு தன் அருளை பிறரது நலனுக்காகவே பயன்படுத்துகிறார். அதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தது எல்லா மக்களும் இறைவனின் பிள்ளைகள் என்ற எண்ணமே. நாமும் இப்படி கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் கொடையை பிறருக்காகப் பயன்படுத்தும்போது அதைவிடச் சிறந்த பேறு வேறு எதுவும் இருக்க முடியாது.

"சமுதாயச் சேவையை சட்டையாக மாற்றாதீர்கள்; உங்கள் உடம்பின் சதையாக மாற்றுங்கள்" என்பார் கவிஞர் வைரமுத்து. நாம் சமுதாயத்திற்கு ஏதோ ஒருசில நன்மைகளை மட்டும் செய்து திருப்திப்பட்டுக் கொள்ளாமல், எப்போதுமே இயேசுவைப் போன்று இறைபணி/சமூகப்பணி செய்ய வேண்டும் என்பதுதான் அவர் சொல்ல விரும்பும் கருத்து.

சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில், பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் ஒரு காலைப் பொழுதில், காரில் பயணம் செய்துகொண்டிருந்த ஒருவர் பனிப்பொழிவில் மாட்டிக்கொண்டார். எவ்வளவுதான் அவர் சத்தம் போட்டாலும் யாருமே அவருக்கு உதவ முன்வரவில்லை.

அப்போது அங்கு வந்த ஓர் இளைஞர், தன்னுடைய கையில் இருந்த இரும்புக் கம்பியால் பனிக்கட்டிகளை எல்லாம் உடைத்து, அகற்றிவிட்டு, அவரை அதிலிருந்து காப்பாற்றினார். தனக்கு தக்க நேரத்தில் வந்து உதவியதற்காக, அன்பளிப்பாக ஏதாவது தரலாம் என்று நினைத்த அந்தக் கணவான், தன்னுடைய பையிலிருந்து கொஞ்சம் டாலரை எடுத்து அதை அவரிடம் நீட்டினார்.

ஆனால் அந்த இளைஞர் பணத்தை வாங்க மறுத்துவிட்டுச் சொன்னார், "நான் DO UNTO OTHERS" என்று மன்றத்தில் உறுப்பினராக இருக்கிறேன். இந்த மன்றத்தின் முக்கியமான நோக்கம் தேவையில் இருப்பவருக்கு ஓடோடிச் சென்று உதவுவதுதான் என்று சொன்னதும், காரில் வந்திரந்த அந்த கணவான் நன்றிப் பெருக்கோடு அவரைக் கைகூப்பி வணங்கிவிட்டு, அங்கிருந்து சென்றார்.

நாம் ஒவ்வொருவருமே தேவையில் இருப்பவருக்கு, அதுவும் யாராக இருந்தாலும் உதவவேண்டும்; கடவுள் கொடுத்த கொடைகளை பிறர் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதை இந்நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.

இப்படியெல்லாம் ஒரு மனிதர் வாழ்கிறபோது கடவுள் எத்தகைய ஆசிர்வாதத்தைத் என்று இன்றைய முதல் வாசகத்தில் (எசாயா புத்தகம் 62) படிக்கின்றோம்.

"அவர்களது வெற்றியையும், மேன்மையையும் புறவினத்தார் காண்பார்கள்; புதிய பெயரால் அழைக்கப்படுவார்கள்; இறைவனின் கையில் அழகிய மணிமுடி போன்றும், அரச மகுடம் போன்றும் இருப்பார்கள்" என்று இறைவாக்கினர் எசாயா கூறுகிறார். ஆம், இறைப்பணி நல்ல உள்ளத்தோடு செய்யும்போது இறைவனும் நம்மை ஆசிர்வதிப்பார் என்பதே உண்மை.

எனவே நாம், நமது ஆண்டவர் இயேசுவைப் போன்று கடவுள் நமக்குக் கொடுத்திர்க்கும் திறமைகளை/ கொடைகளை இறைவனின் பெயர் விளங்கவும், பொது நன்மைகாகவும் பயன்படுத்துவோம். அதன் வழியாக இறைவனின் அன்புப் பிள்ளைகள் ஆவோம். அவரது ஆசியை நிறைவாய் பெறுவோம்.



மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
தலைவனின் தழுவல்


எசாயா 62:1-5
1 கொரிந்தியர் 12:4-11
யோவான் 2:1-11

பழைய பொருட்கள் விற்கும் ஒரு கடையில் வயலின் ஒன்று பல நாட்களாக விற்காமல் கிடந்தது. அதை விலைகுறைத்தாலும் யாரும் வாங்குவதாகயில்லை. 'இதை வைத்து அடுப்பெரிக்கக்கூட முடியாது' என்று யாரும் வாங்காமல் ஒதுங்குகினர். அந்நேரம் அங்கே டிப்டாப்பாக ஒரு முதியவர் வந்தார். அந்த வயலினைத் தன் கையில் எடுத்து தான் வைத்திருந்த துணியால் மெதுவாகத் துடைத்தார். பின் அங்கேயே அமர்ந்து அதை வாசிக்கத் தொடங்குகினார். வயலினிலிருந்து புறப்பட்ட இசை கேட்டு கடை வீதியே ஸ்தம்பித்துத் திரும்பிப் பார்த்தது. வயலினை வாசித்து முடித்த முதியவர் அதை அதே இடத்தில் வைத்துவிட்டுப் போய்விட்டார். அவர் சென்ற சற்று நேரத்தில், 'அது எனக்கு, அது எனக்கு' என அந்த வயலினை வாங்கப் பலர் போட்டி போட்டுக் கொண்டு ஓடி வந்தனர். கேட்பாரற்றுக் கிடந்த அந்தப் பழைய வயலினுக்கு இப்போது ஏன் போட்டி? அந்த வயலினுக்கு மதிப்பைத் தந்தது எது? 'தலைவனின் தழுவல்' ('master's touch').

இசைத்தலைவன் தொட்டவுடன் வயலினின் மதிப்பு கூடுகிறது.

தலைவராம் இறைவன் தழுவும் பொருள்களும், நபர்களும் புதிய மதிப்பு பெறுகின்றனர் என்று நமக்கு முன்மொழியும் இன்றைய இறைவாக்கு வழிபாடு, அந்தத் தழுவலுக்கு நம்மை சரணாகதியாக்க அழைக்கின்றது.

இன்றைய முதல் வாசகம் (காண். எசா 61:1-5) எசாயா நூலின் மூன்றாம் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. கி.மு. 539ஆம் ஆண்டு பாரசீக அரசன் சைரசு பாபிலோனியாவில் சிறைப்பட்டுக் கிடந்த மக்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்பலாம் என்று கட்டளை பிறக்கின்றார். சிலர் பாபிலோனியாவியே தங்கிவிட, சிலர் மட்டும் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்புகிறார்கள். திரும்பி வந்தவர்கள் தங்கள் நாடும், நகரும், ஆலயமும் சிதைந்து கிடந்ததைக் கண்டு மிகவும் துயருற்றனர். தரை மட்டமாகக் கிடந்த தங்கள் வீடுகள், ஆலயம், சாம்பலாகக் கிடந்த தங்கள் வயல்கள் என நிலம் வறண்டு கிடந்தது. 'எல்லாவற்றையும் சீக்கிரம் கட்டி எழுப்பிவிடலாம்' என்ற நம்பிக்கை சிறிது சிறிதாகக் கரைய ஆரம்பிக்கிறது. சோர்வும்,தோல்வியும், ஏமாற்றமும், சந்தேகமும் கவ்விக் கொள்கிறது. தங்கள் கடவுள் தங்கள் முன்னோர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யா? என்ற கேள்வியும் எழ ஆரம்பிக்கிறது. இந்தப் பின்புலத்தில்தான் இன்றைய எசாயாவின் இறைவாக்கு அங்கே உரைக்கப்படுகின்றது. முழு நம்பிக்கையாடும், தடுமாற்றமில்லா உறுதியோடும் எருசலேமின் புதிய மாட்சி பற்றி இறைவாக்குரைக்கின்றார் எசாயா.

'ஆண்டவரின் வாயிலிருந்து வரும் புதிய பெயர்' என்பதுதுதான் இறைவாக்கின் மையமாக இருக்கிறது. விவிலியத்தில் பெயர் மாற்றங்கள் இரண்டு பொருள்களைத் தருகின்றன: ஒன்று, பெயர் மாற்றம் பெறுகிற அந்த நபர் புதிய பணிக்கான அல்லது புதிய வாழ்க்கைமுறைக்கான அழைப்பைப் பெறுவார். இரண்டு, புதிய பெயரைத் தருவதன் வழியாகக் கடவுள் அந்த நபரின் மேல் புதிதாக உரிமை கொண்டாடுவார். இன்றைய முதல் வாசகத்தை, (அ) புதிய பெயர் (62:1-4), (ஆ) புதிய வாழ்க்கை நிலை (62:5), (இ) புதிய பாதுகாப்பு (62:6) என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். யூதர்களின் திருமணக் கொண்டாட்டம் மூன்று நிகழ்வுகளாக நடைபெறும். முதலில், வாக்குறுதி பத்திரம் எழுதப்படும். இரண்டு, மணமகனுக்கும் மணமகளுக்கும் இடையே உடன்படிக்கை செய்யப்படும். மூன்று, மணமகனும் மணமகளும் உடலால் இணைவர். இரண்டாவது நிகழ்வான உடன்படிக்கை அல்லது வாக்குறுதி பத்திரத்தில்தான் மனைவியின் பெயர் மாற்றப்படும். அதே போல, இங்கே ஆண்டவரும் இஸ்ரயேலை மணப்பதற்கு முன், தழுவிக்கொள்ளுமுன், அவளுக்கு பாபிலோனிய அடிமைத்தனத்தில் வழங்கப்பட்ட 'அசுவா' (கைவிடப்பட்டவள்), 'ஷெமமா' (பாழ்பட்டது) என்ற பெயர்களை மாற்றி, 'எப்சி-பா' (என் மகிழ்ச்சி அவளிடம்), 'பெயுலா' (மணமுடித்தவள்) என்ற புதிய பெயர்களை அளிக்கின்றார். நாடிழந்து நிற்கும், இழப்பை சரிசெய்ய முடியாமல் தவிக்கும் இஸ்ரயேல் மக்களை இறைவன் உரிமையாக்கிக் கொண்டு அவர்களுக்குப் புதிய வாழ்க்கை நிலையை வாக்களிக்கின்றார். மணமகளுக்கு பாதுகாப்பு தரும் மணமகன் போல இஸ்ரயேலுக்குப் பாதுகாப்பு தருவார் இறைவன். திருமணத்தில் மணமக்கள் ஒருவர் மற்றவருக்குத் தரும் உரிமை அவர்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருப்பது போல, இறைவன் இஸ்ரயேல் மக்கள் மேல் கொண்டாடும் உரிமை அவர்களின் பாதுகாப்பு அரணாக இருக்கின்றது.

ஆக, தவிடு பொடியாய்க் கிடந்த எருசலேம் நகரமும், அந்த நிலையில் கிடந்த நகரத்திற்குத் திரும்பிய மக்களும் தலைவனின் தழுவலால் புதிய பெயரும், புதிய வாழ்க்கை நிலையும், புதிய பாதுகாப்பும் பெறுகின்றனர்.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 கொரி 12:4-11) பவுல் கொரிந்த நகரத்திருச்சபையின் பிளவுகளில் ஒன்றான 'கொடைகள் பிளவு' பற்றியதாக இருக்கின்றது. கொரிந்த நகரத் திருச்சபை போட்டி, பொறாமை, பிளவு நிறைந்த சபையாக இருக்கிறது. அதன் பிளவுக்கான பல காரணங்களில் ஒன்று 'அருள்கொடையும்' அக்கொடையினால் வரும் 'திருத்தொண்டும்.' 'ஞானம் நிறைந்த சொல்வளம்,' 'அறிவுசெறிந்த சொல்வளம்,' 'நம்பிக்கை,' 'பிணிதீர்க்கும் அருள்கொடை,' 'வல்ல செயல் செய்யும் ஆற்றல்,' 'இறைவாக்குரைக்கும் ஆற்றல்,' 'ஆவிக்குரிய பகுத்தறியும் ஆற்றல்,' 'பரவசப் பேச்சு,' 'பேச்சை விளக்கும் ஆற்றல்' என கொரிந்து நகரத் திருச்சபை பெற்றிருந்த அருள்கொடைகளைப் பார்க்கும்போது நமக்மே ஆச்சர்யமாகவும் பொறாமையாகவும் இருக்கிறது. தொடக்கத் திருச்சபையில் துலங்கிய அருள்கொடைகள் இன்று நம்மிடையே இல்லாதது அல்லது குறைவாயிருப்பது ஏன்? ஆவியானவரின் செயல்பாடுகள் இன்று குறைந்துவிட்டனவா? அல்லது அவருடைய செயல்பாட்டிற்கு இன்றைய திருச்சபையின் இயல்பு தடையாக இருக்கின்றதா?

அருள்கொடைகள் இப்படிப் பலவாக இருந்தாலும், அவைகள் ஒரே புள்ளியில் சங்கமிக்கின்றன: அந்தப் புள்ளிக்கு இரண்டு முகங்கள் உண்டு: ஒன்று, 'ஆவியானவர்' என்னும் ஊற்று, இரண்டு, 'பொதுப்பயன்பாடு' என்னும் நோக்கம். ஆக, எல்லா அருள்கொடைகளும் ஒரே ஆண்டவரால் தழுவப்பட வேண்டும். அப்படி தழுவப்பட்டால்தாம் அவைகளால் பயன் உண்டு. அப்படிப் தழுவப்பட்ட கொடைகள் ஒட்டுமொத்த குழுமத்தின் வளர்ச்சிக்குப் பயனுள்ளவைகளாக அமைதல் அவசியம். பவுலின் மூவொரு இறைவன் தத்துவம் இங்கே காணக்கிடக்கிறது: 'அருள்கொடைகள் பல. தூய ஆவியார் ஒருவரே. தொண்டுகள் பல. ஆண்டவர் ஒருவரே. செயல்பாடுகள் பல. கடவுள் ஒருவரே' என, தூய ஆவி, மகன், தந்தை என தலைகீழாக மூவொரு இறைவனை புதிய கோணத்தில் தருகின்றார். அதாவது, கடவுளை மேலிருந்து கீழ் வருபவராகக் காட்டாமல், கீழிருந்து மேலேற்றுகிறார். இதை வைத்து பவுலை ஒரு மார்க்சிஸ்ட் என்று சொல்லலாம்! பவுலின் இரண்டாவது மார்க்கிய சிந்தனை இது: அருட்கொடைகள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உடைமை என்றாலும், அது பயன்படுத்தப்பட வேண்டியது பொது நன்மைக்காக. கொடைகளை முன்னிறுத்தும்போது நாம் நமக்குள் ஒருவர் மற்றவரை ஒப்பீடு செய்யத் தொடங்குகிறோம். ஆனால், ஊற்றையும், நோக்கத்தையும் பார்த்தால் ஒப்பீடுகள் மறைந்துவிடும்.

ஆக, தலைவனின் தழுவல் நம்பிக்கையாளர்களுக்கு நற்கொடைகளை வழங்குகிறது. இந்நற்கொடைகள் திருச்சபையின் பொதுநலத்திற்காகக் கையாளப்படுகின்றன.

'இயேசு கானாவூர் திருமண விழாவில் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றிய நிகழ்வை' இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 2:1-11) காண்கிறோம். நமக்குப் பரிச்சயமான இவ்வாசகப் பகுதியை கொஞ்சம் நெருக்கமாகப் பார்ப்போம்:

அ. பழைய புரிதல்களும், புதிய கேள்விகளும்

1. யோவான் நற்செய்தியில் வரும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் இரண்டு அடுக்கு அர்த்தங்கள் உண்டு: ஒன்று, மேலோட்டமானது. இரண்டு, ஆழமானது. உதாரணத்திற்கு, கானாவூர் திருமண விழாவில் மேலோட்டமான அர்த்தம் என்னவென்றால், இயேசு தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றியது. ஆனால், ஆழமான அர்த்தம் என்னவென்றால், இதன்வழியாக இயேசுவின் மாட்சிமை வெளிப்படுகிறது. இரண்டு அர்த்தங்களையும் நாம் அலசிப் பார்ப்பது அவசியம்.

2. மரியாள் பரிந்து பேசுபவரா? 'மரியாள் வழி இயேசுவிடம்' என்ற ஒரு சொல்லாடல் கேட்டிருப்போம். இந்த சொல்லாடல் உருவானதன் பின்புலம் கானாவூர் நிகழ்வுதான். மரியாள் கானாவூர் திருமண விழாவில் பரிந்து பேசுகிறார் என நாம் பல நேரங்களில் சொல்கிறோம். எனக்கு இந்த அர்த்தத்தில் உடன்பாடு இல்லை. மரியாள் இல்லையென்றாலும் இயேசுவின் முதல் அற்புதம் அன்று நடந்தேறியிருக்கும். இதற்காக, நான் மரியாளை தள்ளி வைக்கிறேன் என எண்ண வேண்டாம். தொழுநோயால் வருந்திய நாமானை இஸ்ரயேலுக்குச் சென்று நலம்பெறுமாறு அவரின் மன்னன் கடிதம் கொடுத்து அனுப்புகிறான். இதில் மன்னன் அனுப்புகிறான்தான். ஆனால், குணம் பெறக் காரணமாக இருந்தவர் எலிசா. மன்னன் கடிதம் கொடுத்ததால்தான் நாமான் நலம் பெற்றார் எனச் சொல்ல முடியுமா? இல்லை. கானாவூர் நிகழ்வை இலக்கிய அடிப்படையில் பார்த்தால் மரியாளின் வேலை, ஒரு ஏஜன்ட். அதாவது, ஒரு நிகழ்வு நடக்குமுன் நிகழ்ச்சி தொகுப்பாளர் தொகுத்து வழங்குவதுபோல. நிகழ்ச்சி தொகுப்பாளர் இல்லையென்றால் நிகழ்ச்சியே நடக்காது என்று நாம் சொல்ல முடியுமா?

3. திருமணம் என்று நிகழ்வு தொடங்குகிறது. ஆனால், மணமக்கள் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. பாரம்பரியத்தில் இந்த திருமணம் யூதா ததேயுவின் திருமணம் என்பது பலரின் கருத்து. நற்செய்தியாளரின் உள்ளார்ந்த பொருளின்படி இயேசுவே இங்கே மணமகனமாகவும், ஒட்டுமொத்த மானுடம் மணமகளாகவும் இங்கே உருவகிக்கப்படுகிறது.

4. 'அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்ய முடியும்?' 'அம்மா' என்பது இங்கே பெண்களை மரியாதை நிமித்தம் அழைக்கும் வார்த்தையே அன்றி, 'தாய்' என்ற அர்த்தம் அல்ல. மேலும், தொடர்ந்து, 'உனக்கும், எனக்கும் என்ன?' என்பதுதான் சரியான மொழிபெயர்ப்பாக இருக்க முடியும். மேலும் முதல் ஏற்பாட்டில் இந்த சொல்லாடல் மிகுந்து கிடக்கிறது. ஒருவர் மற்றவரை தொந்தரவு செய்யும்போது, தொந்தரவு செய்யப்படுபவர், தொந்தரவு செய்பவரைப் பார்த்துக் கேட்பதாகவோ (நீத 11:12), அல்லது சம்பந்தப்படாத ஒருவரை ஒன்றில் வலுக்கட்டாயமாக சம்பந்தப்படுத்தும்போது, அவர் கழுவுற மீனுல நழுவுற மீனா ஓடும்போது சொல்வதாகவோ (2 அர 3:13) பயன்படுத்தப்பட்டுள்ளது.

5. 'நேரம்.' யோவான் நற்செய்தியில் இரண்டு வகை நேரம் குறிப்பிடப்படுகிறது. ஒன்று, 'க்ரோனோஸ்.' அதாவது, நாம் அன்றாடம் பயன்படுத்தும் நொடி, நிமிடம், மணி, நாள், வாரம் சம்பந்தப்பட்டது. இதன்படி, இந்த நிகழ்வு நடக்கும் நாள் 'மூன்றாம் நாள்.' இரண்டு, 'கைரோஸ்.' அதாவது, மீட்பு நேரம். இயேசு குறிப்பிடும் நேரம் இந்த இரண்டாம் நேரமே.

6. 'அறிகுறி.' யோவான், மற்ற நற்செய்தியாளர்கள் பயன்படுத்தும் 'அற்புதம்' (miracle) என்ற வார்த்தையை விடுத்து 'அறிகுறி' (sign) என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றார்;. இயேசு எப்படிப்பட்டவர், அவர் எதற்காக வந்தார் என்பதற்கான அறிகுறியாக அவரின் செயல்கள் இருந்தன என்பதைச் சுட்டிக்காட்டத்தான் யோவான் இச்சொல்லாடலைப் பயன்படுத்துகின்றார். அதாவது, அற்புதங்கள் செய்யப்பட்டதன் நோக்கம் அற்புதங்கள் அல்ல. மாறாக, அவற்றின் வழியாக என்ன வெளிப்பட்டது என்பதுதான் முக்கியம். இங்கே, சீடர்கள் இந்த அறிகுறியின் வழியாக இயேசுவின்மேல் நம்பிக்கை கொள்கின்றனர்.

ஆ. சமய, சமூக பின்புலம்

யூத மரபில் திருமணம் என்பது எட்டு நாள்கள் நடக்கின்ற ஒரு குடும்ப, சமூக நட்பு விழா. இதில் மையமாக இருப்பது 'திராட்சை இரசம்.' உணவுப் பொருட்களில் தயாரிப்பிற்கு அதிக நாட்கள் எடுக்கும் பொருள் திராட்சைரசம் தான். ஆகையால் ஒரு திருமணம் என்றால் குறைந்தது ஆறு மாதத்திற்கு முன்னே திட்டமிட்டு திராட்சை ரசம் செய்யத் தொடங்க வேண்டும். அதற்கு ஆறு மாதத்திற்கு முன் திராட்சை பயிரிடவும் வேண்டும். ஆகையால் கானாவூரின் இந்தக் குடும்பம் ஏறக்குறைய ஒரு வருடமாக இந்தத் திருமணத்திற்கான தயாரிப்பை நிகழ்த்தியிருக்கவேண்டும். ஏதோ ஒரு காரணத்தால் திராட்சைரசம் தீர்ந்துவிட்டது. விருந்தினர்களுக்கு 'இல்லை' என்று சொன்னால் நன்றாக இருக்காது. அதுவும் சொந்தங்களுக்கு 'இல்லை' என்று சொன்னால் என்ன நடக்கும் என்பது நம் அனைவருக்குமே தெரியும். நமக்கு அறிமுகமாகாத மூன்றாம் நபரும், நம் நண்பர்களும் 'இல்லை' என்ற சொல்லை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் நம் சொந்தக்காரர்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நம்மைக் குறைத்துப் பேச மற்றொரு 'டாபிக்' கிடைத்ததாக எண்ணுவார்கள். இந்த இக்கட்டான சூழலில்தான் இயேசுவின் அறிகுறி நிகழ்கின்றது.

இ. வாழ்வும், வாக்கும்

'தன்னைப் படைத்தவரைக் கண்ட தண்ணீர் வெட்கத்தால் தன் முகம் சிவந்து இரசமாய் மாறியது' என்று கவிதையாகச் சொல்கின்றார் ஒரு ஆங்கிலக் கவிஞர்.இன்றைய நற்செய்திப்பகுதியில் வருகின்ற 'தூய்மைச்சடங்கிற்கென வைக்கப்பட்ட ஆறு கற்தொட்டிகள்' என்னும் சொல்லாடலில், இந்த ஆறு கற்தொட்டிகளுக்கு ஒரு பெயரெச்சமும் கொடுக்கப்பட்டுள்ளது. யூத, இசுலாமிய, அல்லது சில இந்து மரபு வழிபாட்டுத்தலங்களுக்குச் சென்றால் வெளியே தண்ணீர்த்தொட்டி இருப்பதை நாம் பார்க்கலாம். இப்போது நவீனமாக திருகு-குழாய்கள் வைத்திருக்கிறார்கள். ஆனால் ஒரு சில இடங்களில் தண்ணீர் தொட்டியில் சேமிக்கப்பட்டிருக்கும். உள்ளே செல்பவர்கள் தங்கள் காலணிகளைக் கழற்றிவிட்டு இத்தண்ணீரில் இறங்கி பின் வழிபாட்டிற்குள் செல்வார்கள். கீழைமரபில் உள்ள மற்றொரு பழக்கம் - இரண்டு வகையான தண்ணீரைப் பயன்படுத்துதல்: குடிக்க ஒன்று, சுத்தம் செய்ய மற்றொன்று. குடிக்க வைத்திருக்கும் தண்ணீர் பாதுகாப்பாக இருக்கும். சுத்தம் செய்ய வைக்கப்படும் தண்ணீர் கேட்பாரற்றுக் கிடக்கும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நிலை எப்படியிருந்திருக்கும்? அதுவும் பாலஸ்தீனம் போன்ற வெப்பபூமியில் தண்ணீர் கிடைத்திருக்குமா? கிடைத்திருக்கும் தண்ணீரின் தரம் எப்படி இருந்திருக்கும்? தரம் தாழ்ந்த தண்ணீரைத் தலைவன் இயேசு தழுவியதால் அத்தண்ணீர் புதிய இயல்பு பெற்றது.

இன்றைய முதல் சிந்தனை: நாம் திராட்சை ரசமாக, இனிமையாக மாறுவதற்கு 'நீ இப்படி இருக்க வேண்டும், அப்படியிருக்க வேண்டும்' என்று இயேசு நம்மிடம் சொல்வதில்லை. நாம் எப்படி இருந்தாலும், எந்தப் பின்புலத்தில் வந்தாலும் அவர் தொட்டால் நாம் திராட்சை இரசமாக மாறமுடியும். இரண்டாவதாக, தண்ணீர் இரசமாக மாற வேண்டுமென்றால் தன் இயல்பை இழக்க முன்வர வேண்டும். 'இல்லை. நான் இப்படியே இருக்கிறேன். தூய்மைச் சடங்கிற்கு பயன்படும் தண்ணீராக மட்டும் இருக்கிறேன்' என்று தன்னையே சுருக்கிக் கொள்ளாமல், மற்றவர்கள் தங்கள் கைகளில் ஏந்தும் மதிப்பிற்குரிய பொருளாக மாறவேண்டுமானால் தன் இயல்பை இழக்க வேண்டும். நம் வாழ்விலும் நம் எண்ணங்கள் நிறைவேற வேண்டுமானால் நம் இயல்பை, தாழ்வு மனப்பான்மையை, குறுகிய எண்ணங்களை இழக்க வேண்டும். ஆன்மீகம் என்பது நம் இயல்பை மாற்றுவது. நம் கூட்டை உடைத்து வெளியேறுவது. மூன்றாவதாக, தலைவன் தழுவியவுடன் விளிம்பு மையமாகிவிடுகிறது. மையம் விளிம்பாகிவிடுகிறது. பணியாளன் திராட்சை இரசத்தின் ஊற்றை அறிகிறான். ஆனால், வீட்டுத் தலைவனுக்கு அது மறைபொருளாக இருக்கிறது.

ஆக, தலைவனின் தழுவல் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதோடல்லாமல், கடவுளின் ஆட்சி வெளிப்படவும், இதன் வழியாகச் சீடர்கள் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளவும் காரணமாக அமைகிறது.

இவ்வாறாக, தலைவனின் தழுவல் முதல் வாசகத்தில் எருசலேமிற்கு புதிய பெயரையும் பாதுகாப்பையும், இரண்டாம் வாசகத்தில் நம்பிக்கையாளர்களுக்கு அருள்கொடைகளையும், நற்செய்தி வாசகத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாகவும் மாற்றுகிறது.

என் இன்றைய இயல்பும், இருப்பும் எப்படிப்பட்டதாக இருந்தாலும், என் தலைவன் என்னைத் தழுவும்போது என்னில் மகிழ்ச்சியும், வாழ்வும், நிறைவும் பொங்கி எழும். என் தலைவன் என்னைத் தழுவி மாற்றம் பெற்ற நான், என் தழுவலால் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியும், வாழ்வும், நிறைவும் தரும்போது நானும் அவரைப் போன்ற தலைவனே!

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)
Faculty Member
Saint Paul's Seminary
Tiruchirappalli - 620 001

=================================================================================
பொதுக்காலம் 02ஆம் ஞாயிறு -திருப்பலி முன்னுரை
=================================================================================
 விண்ணப்பங்களையும் வேண்டுதல்களையும் நிறைவேற்றி, நிலை வாழ்வை அளிக்கும் இறைவனின் அழைப்பிற்கிணங்க பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு திருப்பலிக்கு வந்திருக்கும் அன்புள்ளங்களை வரவேற்கின்றோம்.

இறைவன் மீதுள்ள நம்பிக்கையும் அன்னை மரியாவின் பரிந்துரையும் இணைந்து செயல்படும்போது ஆசீர்வாதங்களை அள்ளித்தருகிறது. மீட்பின் பாதையில் நம்மை வழிநடத்துகிறது. சீயோன் மக்களை இறைவன் ஆசீர்வதித்ததையும், மக்களின் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துகின்றது இன்றைய முதல் வாசகம்.

மண வாழ்வு என்பது ஒரு பெண்ணுக்கு எவ்வளவு மகிழ்ச்சியைத் தருமோ அவ்வளவு மகிழ்வை கடவுள் நம்மேல் கொண்டுள்ளார். பிற இனத்தார் உன் வெற்றியை காணும் பொருட்டு இறைவன் எல்லா வித வளங்களையும் தந்து நம்மை ஆசீர்வதித்து கொண்டிருக்கிறார் என்பதை விசுவசித்து நன்றி நவில்கின்றோம்.

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் புதுமையை அறியச் செய்கிறது புனித யோவான் எழுதிய வார்த்தைகள். திராட்சை இரசம் தீர்ந்துவிட்டதே என்று தவித்து நின்ற திருமண வீட்டாருக்கு அன்னையின் பரிந்துரையே இயேசு முதல் அற்புதம் செய்ய பாதை அமைத்து தந்தது. அவரின் சொற்படியே ஆகட்டும் என்று பரம தந்தையின் பாதம் பணிந்து இறை மைந்தனை மனிதனாக்கிய அன்னை இன்று அவர் சொல்வதெல்லாம் செய்யுங்கள் என்று கூறி அற்புதத்தை செய்ய வைத்து மனித குமாரனை இறை மைந்தனாக அறிமுகம் செய்கின்றார்.

நாமும் நம் வாழ்வில் அவர் சொல்படி நடந்தால், அன்னையின் பரிந்துரையோடு சேர்ந்து ஆசீர்வாதங்களை பெற்றுத் தரும். அன்னையைப் போல் பிறரின் இக்கட்டான சூழ்நிலையில் பரிதாப வார்த்தைகளை உதிர்க்காமல் பரந்த மனதோடு உதவி புரிய முன்வருவோம். இச்சிந்தனைகளோடு இப்பலியில் இணைவோம்.

மன்றாட்டுகள்

1. புதுமைகளால் புது வாழ்வு தருபவரே

எமது அன்னையாம் திருச்சபையை புது வாழ்வுக்கான பாதையை நோக்கி வழிநடத்தும் திருச்சபைத் தலைவர்கள் ஆற்றும் பணிகளை உம் வல்லமையால் நிரப்பி, ஆவியின் கனிகளை பெற்றுத்தரும் பணிகளை மாற்றிட வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

2. எம்மில் மகிழ்பவரே!

உம் அருளால் பெற்றுக்கொண்ட வாழ்வில் நற்காரியங்கள் செய்து உமக்கும், உற்றத்தார்க்கும் மகிழ்வை ஏற்படுத்தும் மக்களாக வாழ்வை மேற்கொள்ள வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

3. தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றி அற்புதத்தை செய்தவரே!

எங்கள் மத்தியில் பல்வேறு தேவைகளோடு வாழும் மக்களின் உடல், உள்ள தேவைகளை நீர் அறிந்து அற்புதத்தைக் காண செய்யும் வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

4. பல்வேறு வரங்களை எமக்கு பரிசளிப்பவரே!

எம் மனங்களில் மகிழ்வைத்தரும் இறைவா! எங்கள் மகிழ்வை பிறரோடு பகிர்ந்து வாழவும், அன்னை மரியாவைப் போல பிறருக்கு இயன்ற உதவியை செய்து மகிழும் வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

5. நலன்களின் நாயகனே!

எம் பகுதிவாழ் மக்களை ஆசீர்வதிக்கவும், தகுந்த இயற்கைச் சூழலை அமைத்து வேளாண்மை சிறக்கவும், குடும்பங்களில் அமைதி, சந்தோஷம் பெருகவும், உள்ளத்தின் தேவைகள் உம் அருளால் சந்திக்கப்படவும் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

நன்றி: ஆசிரியை. திருமதி. ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.


------------------------------------
02ஆம் வாரம் ஞாயிறு - மூன்றாம் ஆண்டு


திருப்பலி முன்னுரை

இறைஇயேசுவில் அன்பிற்குரியவர்களே,

இன்று பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு வழிபாட்டை சிறப்பிக்க வந்துள்ள உங்கள் அனைவருக்கும் இயேசுவின் இனிய நாமத்தில் அன்பான வணக்கங்கள்.

இன்றைய நற்செய்தியில் கானாவூரில் இயேசுகிறிஸ்து தன் முதல் அரும்அடையாளத்தை நிகழ்த்தியதை காண்கிறோம். அன்னைமரி திருமண வீட்டில் திராட்சை இரசம் தீர்ந்ததும், தன் மகனிடம் "இரசம் தீர்ந்து விட்டது" எனக் கூறியபோது, "எனது நேரம் இன்னும் வரவில்லையே" என இறைமகன்; தயங்கினாலும், தன் மகனால் ஏதேனும் செய்ய இயலும் என்பதை உணர்ந்த அன்னைமரி, " அவர் n;சால்வதையெல்லாம் செய்யுங்கள்" என்று கூறுகின்றார். இறைமகனும் அற்புதத்தை நிகழ்த்துகின்றார். இறையாட்சி இத்தரணியிலே தழைத்தோங்கிட தன் வாழ்வையே தாரை வார்த்திட்ட அன்னைமரியே இறைமகனின் முதல் அரும்அடையாளம் வெளிப்படக் காரணமாக, தூண்டுகோலாக, உந்துசக்தியாக இருக்கின்றார். பேதுருவும், யோவானும் கல்வியறிவு அற்றவர்களே. ஆனால், அவர்களால் துணிவுடன் போதிக்க முடிந்தது, காரணம், இறைமகன் இயேசுகிறிஸ்து அவர்களுக்கு உந்துசக்தியாக, தூண்டுதலாக இருந்தார்.

நம் குழந்தைகளிடம், நண்பர்களிடம், நம் உறவுகளிடம் பல திறமைகள், ஆற்றல்கள் ஒளிந்திருக்கும். அதை அவர்கள் வெளிப்படுத்தத் தயங்கலாம். நாம் அதை உணர்ந்தவர்களாக, அவர்களின் திறமைகள், அறிவாற்றலை வெளிக் கொணர தூண்டுதலாக, உந்துசக்தியாக திகழ்ந்திட வேண்டும். விளக்கில் திரி எரிந்து பிரகாசிக்க வேண்டுமானால்; ஒரு தூண்டல் இருக்க வேண்டும். நம்முடன் இருப்பவர்களின் வாழ்வு பிரகாசமாய் ஜொலித்திட, நாம் நம் மனதில் எந்தவித பொறாமையும், தன்னலமும் அற்றவர்களாக, அவர்களின் வாழ்வு ஏற்றம் கண்டிட அவர்களுக்கு நல்ல தூண்டுதல் சக்தியாக, ஊக்கமூட்டுவர்களாக வாழ்ந்திட, வரம் வேண்டி இத்தெய்வீகத் திருப்பலியில் இணைவோம்.





மன்றாட்டுக்கள்:



தாயும், தந்தையுமான இறைவா,

உம் பணிக்காய் நீர் தேர்ந்தெடுத்து, அர்சித்தி;ட்ட எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், அருட் சகோதரிகள். துறவறத்தார் அனைவரும், தங்கள் பணிவாழ்வில் உமதன்;பு வாழ்வை, வார்த்தையாக இல்லாமல் வாழ்வாக பிரதிபலித்து, முன்மாதிரியான சாட்சிய வாழ்வு வாழந்து, மக்களை நல்வழியில் வழிநடத்தி, இறையாட்சியை எங்கும் வளரச் செய்திட, தூய ஆவியின்; ஆற்றலையும், வல்லமையையும் நிறைவாகப் பொழிந்து, காத்திட வேண்டுமென்று, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.



அரணும், கோட்டையுமான இறைவா,

எங்கள் வாழ்வில் வரும் துன்பங்கள், துயரங்கள், சோதனைகளைக் கண்டு, மனம் சோர்ந்து, தளர்ந்து, வாழ்வை முடித்துக் கொள்ளும் கோழைத்தனமான, முட்டாள்தனமான முடிவுகளை எங்கள் மனதிலிருந்து அகற்றி, நீர் எங்களோடு என்றும் உடனிருக்கின்றீர், பயணிக்கின்றீர், எங்கள் வாழ்வை வளமாக்குவீர் என்ற ஆழமான விசுவாசத்தை, நம்பிக்கைளை நாங்கள் பெற்று, வாழ்வின் பயணத்தை உம் கரம் பிடித்து, நடந்திடக் கூடிய உறுதியான உள்ளத்தைத் தந்தருள வேண்டுமென்று, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.



உலகின் ஒளியே இறைவா,

வளர்ந்து வரும் இளைய தலைமுறையினரை உம்மிடம் ஒப்புக் கொடுக்கின்றோம். இந்த உலகம் காட்டும் மாயக் கவர்ச்சியான பணம், பதவி, புகழ், மது, மாது என்ற போதையில் தங்கள் வாழ்வை தொலைத்திடாது. தடம் புரண்டிடாது, உண்மை இறைவன் உம்மை விட்டு விலகி, பாவத்திலே வீழ்ந்திடாது, இருளின் ஆட்சிக்குரிய தவறான செயல்களிலிருந்து விடுபட்டு, ஒளியின்; ஆட்சிக்குரிய செயல்களை உணர்ந்து, அதன் வழியில் தங்கள் வாழ்வைத் தொடர்ந்திடக் கூடிய தெளிவான மனதினைத் தந்தருள வேண்டுமென்று, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.



வாழ்வு வழங்கும் வள்ளலே இறைவா,

அன்று வயது முதிர்ந்த சாரா, அன்னா, எலிசபெத் இவர்களின் கண்ணீரின் வேண்டுதல்களை ஏறெடுத்து, அவர்களுக்கு மக்கட்பேற்றினை அளித்தீரே, இன்று திருமணமாகி பல ஆண்டுகள் கடந்து, குழந்தைச் செல்வத்திற்காக ஏங்கித் தவிக்கும் தம்பதியரின் வேண்டுதல்களை கண்ணோக்கிப் பாரும். அவர்களின் கண்ணீரை கண்ணுற்று, அவர்களுக்கு நல்ல மக்கட்பேற்றினை அளித்து, அவர்கள் அக்குழந்தையை உமக்கும், இச்சமூகத்திற்கும் உகந்தவர்களாக வளர்த்து ஆளாக்கிடக் கூடிய, பொறுப்புள்ள பெற்றோர்களாக வாழந்திட வரமருள வேண்டுமென்று, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.



இரக்கத்தின் ஊற்றே இறைவா.

வறுமை, ஏழ்மையினால் துயருறும் மக்களுக்கு, அவர்களின் தேவைகளையறிந்து, உதவிடவும், எங்களிடம் இருப்பதை, இல்லாதவர்களோடு பகிர்ந்து வாழவும், விபத்து, ஆபத்துக்களில் சிக்கித் தவிப்பவர்களை கண்டும் காணாததுபோல், "நமக்கேன் வம்பு" என விலகிச் செல்லாமல், நல்ல சமாரியனைப் போல் உடனிருந்து உதவிடவும், அநீதிகளைக் கண்டு, தட்டிக் கேட்காமல், கோழைத்தனமாக வாழாது, தவற்றினைச் சுட்டிக் காட்டி, நீதியை நிலைநாட்டவும் கூடிய, துணிவு நிறைந்த உள்ளத்தை தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!