Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                          
                                         திருவருகைக்காலம் 02ஆம்  ஞாயிறு - 1ம் ஆண்டு
     
=================================================================================
முதல் வாசகம்

=================================================================================
நேர்மையோடு ஏழைகளுக்கு நீதி வழங்குவார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 11: 1-10

ஆண்டவருக்குரிய நாளில் ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர் விடும்; அதன் வேர்களிலிருந்து கிளை ஒன்று வளர்ந்து கனி தரும்.

ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்; ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு - இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும். அவரும் ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதில் மகிழ்ந்திருப்பார்.

கண் கண்டதைக் கொண்டு மட்டும் அவர் நீதி வழங்கார்; காதால் கேட்டதைக் கொண்டு மட்டும் அவர் தீர்ப்புச் செய்யார்; நேர்மையோடு ஏழைகளுக்கு நீதி வழங்குவார்; நடுநிலையோடு நாட்டின் எளியோரது வழக்கை விசாரிப்பார்; வார்த்தை எனும் கோலினால் கொடியவரை அடிப்பார்; உதட்டில் எழும் மூச்சினால் தீயோரை அழிப்பார்.

நேர்மை அவருக்கு அரைக்கச்சை; உண்மை அவருக்கு இடைக்கச்சை. அந்நாளில், ஓநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும்; அக்குட்டியோடு சிறுத்தைப்புலி படுத்துக்கொள்ளும். கன்றும், சிங்கக்குட்டியும், கொழுத்த காளையும் கூடி வாழும்; பச்சிளம் குழந்தை அவற்றை நடத்திச் செல்லும். பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும்; அவற்றின் குட்டிகள் சேர்ந்து படுத்துக்கிடக்கும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும்; பால் குடிக்கும் குழந்தை விரியன் பாம்பின் வளையில் விளையாடும்; பால்குடி மறந்த பிள்ளை கட்டுவிரியன் வளையினுள் தன் கையை விடும். என் திருமலை முழுவதிலும் தீமை செய்வார் எவருமில்லை; கேடு விளைவிப்பார் யாருமில்லை; ஏனெனில், கடல் தண்ணீரால் நிறைந்திருக்கிறது போல, மண்ணுலகம் ஆண்டவராம் என்னைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்.

அந்நாளில், மக்களினங்களுக்குச் சின்னமாய் விளங்கும் ஈசாயின் வேரைப் பிற இனத்தார் தேடி வருவார்கள்; அவர் இளைப்பாறும் இடம் மாட்சி நிறைந்ததாக இருக்கும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் -  திபா 72: 1-2. 7-8. 12-13. 17 (பல்லவி: 7a) Mp3
=================================================================================
 பல்லவி: ஆண்டவருடைய காலத்தில் நீதி தழைத்தோங்கும்.

1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். 2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! பல்லவி

7 அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ளவரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக. 8 ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லைவரைக்கும் அவர் அரசாள்வார். பல்லவி

12 தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். 13 வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். பல்லவி

17 அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக! கதிரவன் உள்ளவரையில் அவர் பெயர் நிலைப்பதாக! அவர்மூலம் மனிதர் ஆசிபெற விழைவராக! எல்லா நாட்டினரும் அவரை நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக! பல்லவி



================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
  மக்கள் அனைவரையும் கிறிஸ்து மீட்கிறார்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 15: 4-9

சகோதரர் சகோதரிகளே, முற்காலத்தில் எழுதப்பட்டவை அனைத்தும் நமக்கு அறிவுரையாகவே எழுதப்பட்டன. மறைநூல் தரும் மன உறுதியினாலும் ஊக்கத்தினாலும் நமக்கு எதிர்நோக்கு உண்டாகிறது. கிறிஸ்து இயேசுவின் முன்மாதிரிக்கு ஏற்ப நீங்கள் ஒரே மனத்தினராய் இருக்குமாறு மன உறுதியையும் ஊக்கத்தையும் தரும் கடவுள் உங்களுக்கு அருள்புரிவாராக!

இவ்வாறு நீங்கள் அனைவரும் ஒருமனப்பட்டு, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவரை ஒருவாய்ப்படப் போற்றிப் புகழ்வீர்கள்.

ஆகையால், கிறிஸ்து உங்களை ஏற்றுக்கொண்டது போல நீங்களும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது கடவுளைப் பெருமைப்படுத்துவீர்கள். என் கருத்து இதுவே. கடவுள் உண்மையுள்ளவர் என்பதைக் காட்டுமாறு கிறிஸ்து விருத்தசேதனம் செய்துகொண்டவர்களுக்குத் தொண்டர் ஆனார்.

மூதாதையருக்குத் தரப்பட்ட வாக்குறுதிகளை உறுதிப்படுத்தவும், பிற இனத்தார் கடவுளுடைய இரக்கத்தைப் பார்த்து அவரைப் போற்றிப் புகழவும் இவ்வாறு தொண்டர் ஆனார். ஆகவே, பிற இனத்தாரிடையே உம்மைப் போற்றுவேன்; உமது பெயருக்குப் புகழ்மாலை சாற்றுவேன்'' என இதைக் குறித்து மறைநூலில் எழுதியுள்ளது.


- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
லூக் 3: 4,6

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்; மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது.

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 1-12

அக்காலத்தில் திருமுழுக்கு யோவான் யூதேயாவின் பாலைநிலத்துக்கு வந்து, மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது'' என்று பறைசாற்றி வந்தார்.

இவரைக் குறித்தே, பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்'' என்று இறைவாக்கினர் எசாயா உரைத்துள்ளார். இந்த யோவான் ஒட்டக முடியாலான ஆடையை அணிந்திருந்தார்; தோல் கச்சையை இடையில் கட்டி இருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத் தேனும் உண்டு வந்தார். எருசலேமிலும் யூதேயா முழுவதிலும் யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகள் அனைத்திலும் இருந்தவர்கள் அவரிடம் சென்றார்கள். அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தார்கள்.

பரிசேயர், சதுசேயருள் பலர் தம்மிடம் திருமுழுக்குப் பெற வருவதைக் கண்டு அவர் அவர்களை நோக்கி, விரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்? நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள். `ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை' என உங்களிடையே சொல்லிப் பெருமை கொள்ள வேண்டாம். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்யக் கடவுள் வல்லவர் என உங்களுக்குச் சொல்கிறேன்.

ஏற்கெனவே மரங்களின் வேரருகே கோடரி வைத்தாயிற்று. நற்கனி தராத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப்படும்.

நீங்கள் மனம் மாறுவதற்காக நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன், எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர் என்னைவிட வலிமை மிக்கவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதி இல்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார். அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார்; தம் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; ஆனால், பதரை அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



திருவருகைக்கால இரண்டாம் ஞாயிறு

கடவுளின் இரக்கம் உண்மையான மனமாற்றத்தில் உள்ளது. உள்மனமாற்றத்தை பாராது வெளிப்புற பக்திமார்க்கங்களில் மாற்றங்களையும் , புதுமைகளையும் புகுதிக் கொள்வது இரக்கத்தை இறைஞ்சும் வழியாகாது.


Is 11: 1-10/ Ps 72: 1-2. 7-8. 12-13. 17/ Rom 15: 4-9/ Mt 3: 1-12

மனம் மாறுங்கள்! மாற்றம் என்பது மானிட தத்துவம். மாற்றம் ஒன்றே என்றும் மாறாதது.

காலங்கள் மாறலாம், கோலங்கள் மாறலாம், காற்றசைய மறக்கலாம், கடலசைய மறக்கலாம், ஆனால் நேற்றும் இன்றும் என்றும் மாறதவர் உன்னை சந்திக்க வருகின்றார்.

அவரை சந்திக்க உன் பாதையை செம்மையாக்க புதுவாழ்வு என்னும் விண்ணரசிற்கு அழைக்கின்றார் பாலைவனத்து ரோஜா திருமுழுக்கு யோவான்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================


I எசாயா 1: 1-10

II உரோமையர் 15: 4-9

III மத்தேயு 3: 1-12


மனமாற்றத்தைச் செயலில் காட்டுங்கள்



நிகழ்வு


1895 ஆம் ஆண்டில் ஒருநாள், அமெரிக்க அதிபராக இருந்த கிளீவ்லாண்ட்டிற்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது:


மாண்புமிகு அதிபர் அவர்களே! வணக்கம். உங்கள் குடிமக்களில் ஒருவனாகிய நான் எழுதிக்கொள்வது.... சிலநாள்களாகவே எனக்கு நிம்மதியில்லை. எப்பொழுதும் அரசாங்கத்திற்கு எதிராக நான் செய்த தவறுதான் என்னுடைய நினைவுக்கு வந்துபோகின்றது. நான் செய்த தவறு இதுதான்: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட மூன்று தபால்தலைகளை நான் மீண்டுமாகப் பயன்படுத்திவிட்டேன். அப்பொழுது எனக்குப் பதின்மூன்று வயது இருக்கும். ஏதோ அறியாமல் செய்துவிட்டான். இப்பொழுது நான் அதற்காக மனம்வருந்தி மன்னிப்புக் கேட்கின்றேன். மேலும், தவறாகப் பயன்படுத்திய அந்த மூன்று தபால்தலைகளுக்கு உண்டான பணத்தைக் காசோலையாக இந்தக் கடிதத்தோடு இணைத்துள்ளேன். அருள்கூர்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள். இப்படிக்கு உங்களில் குடிமக்களில் ஒருவன்.


இந்தக் கடிதத்தைப் படித்துப்பார்த்த அதிபர் கிளீவ்லாண்ட் அப்படியே வியந்துபோய் நின்றார். செய்த தவறினை உணர்ந்து, அதற்குப் பரிகாரம் தேடிய இந்தச் சிறுவன் அல்லவா நாட்டின் உண்மையான குடிமகன் என்று அவர் அவனுடைய கடிதத்தை வெள்ளை மாளிகையில் பத்திரப்படுத்தி வைத்தார். அது இன்றைக்கும் அங்கு உள்ளது.


உண்மையான மனமாற்றம் தவறுக்காக மனம்வருந்துவது மட்டுமல்ல, செய்த தவறை இனிமேலும் செய்வதில்லை என்று உறுதியெடுத்துக்கொண்டு, நேர்வழியில் நடப்பது. இத்தகைய செய்தியை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. திருவருகைக்காலத்தின் இரண்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை மெசியாவின் வருகைக்காக நாம் நம்மையே தயாரிக்கும் விதமாக மனம்மாறி நல்வழியில் நடக்கவேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது. நாம் எப்படி மனம்மாறி நல்வழியில் நடப்பது என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.


திருவருகைக்காலத்தின் கதாநாயகன் திருமுழுக்கு யோவான்


நற்செய்தியில், திருமுழுக்கு யோவான் மெசியாவின் வருகையின் பொருட்டு மக்களை மனமாற்றத்திற்கு அழைக்கின்றார். அவருடைய இந்த அழைப்பினை ஏற்று வரிதண்டுபவர்களும் பாவிகளும் அவரிடம் செல்கின்றார்கள், பரிசேயர்களும் சதுசேயர்களும் தாங்கள் நேர்மையாளர்கள்... அதனால் தாங்கள் மனமாறத் தேவையில்லை என்று அப்படியே இருக்கின்றார்கள்.


இந்தத் திருமுழுக்கு யோவான் யார்? எந்த அதிகாரத்தால் அவர் மக்களை மனமாற்றத்திற்கு அழைத்தார்? அவருடைய அழைப்பிற்குச் செவிமடுப்பதன் தேவை என்ன? என்பவற்றைக் குறித்துத் தெரிந்துகொள்வது நல்லது. திருமுழுக்கு யோவான் எலியாவின் உளப்பாங்கைக் கொண்டவர் (லூக் 1: 16-17), இயேசுவின் வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால் அவர் எலியா (மத் 17:12). மட்டுமல்லாமல் அவர் மனிதராய்ப் பிறந்தவர்களுள் பெரியவர் (மத் 7: 11). இவையெல்லாவற்றிற்கும் மேலாக அவர் கடைசி இறைவாக்கினர் (லூக் 16:16). இத்தகைய சிறப்புகளைப் பெற்ற திருமுழுக்கு யோவான் தன்னுடைய சொந்த அதிகாரத்தால் போதிக்கவில்லை, திருமுழுக்குக் கொடுக்கவில்லை. மாறாக, விண்ணகத்திலிருந்து வந்த அதிகாரத்தாலேயே போதித்தார், திருமுழுக்குக் கொடுத்தார். அப்படிப்பட்டவருடைய போதனை எல்லாரும் கேட்டு மனம்மாறியிருக்கவேண்டும். ஆனால், மேலே நாம் பார்த்ததுபோல வரிதண்டுபவர்களும் பாவிகளும்தான் அவருடைய போதனையைக் கேட்டு மனம்மாறினார்கள். ஏனையோர் மனம்மாறத் தேவையே இல்லை என்பதுபோல் இருந்தார்கள். அதனால் அதற்குரிய தண்டனைக்குத் தங்களை உட்படுத்திக்கொண்டார்கள்.


உண்மையான மனமாற்றம் எது?


திருமுழுக்கு யோவான் மக்களிடம் போதித்தது இரண்டே இரண்டு செய்திகள்தான். ஒன்று, விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது. இரண்டு. மனம்மாறவேண்டும் என்பதாகும். இந்த இரண்டு செய்திகளும், மெசியா வருகின்றார், ஆதலால் மனம்மாறுங்கள் என்ற ஒரே நேர்கோட்டில் வருகின்றன. திருமுழுக்கு யோவான் சொல்லக்கூடிய மனம்மாற்றம் எத்தகையது என்பதைத் தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.


ஒருசிலர் மனமாற்றம் என்றால், பாவத்தை நினைத்து மனம்வருந்துதல் என்று நினைத்துக்கொள்கின்றார்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் சுருக்கிக்கொள்கின்றார்கள். உண்மையான மனமாற்றம் என்பது பாவத்தை நினைத்து மனம் வருந்துவது மட்டும் கிடையாது. அந்தப் பாவத்தை மீண்டுமாகச் செய்யாமல் இருந்து, நற்செயல்களைச் செய்வது. அதைத்தான் திருமுழுக்கு யோவான், நீங்கள் மனம்மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள் என்கின்றார்.


இங்கு இன்னொரு முக்கியமான செய்தியையும் நாம் தெரிந்துகொள்ளவேண்டும். அது என்னவெனில், மனமாற்றம் அடைவது ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டும் கிடையாது. எல்லாரும் மனமாற்றம் அடையவேண்டும். திருமுழுக்கு யோவான மனமாற்றச் செய்தியை எடுத்துரைத்தபோது, பரிசேயர்களும் சதுசேயர்களும் அவருடைய குரலைச் சட்டைசெய்யாமல் இருந்தற்குக் காரணம், தாங்கள் ஆபிரகாமின் மக்கள்... அதனால் மனம்மாறத் தேவையில்லை என்ற எண்ணமாகும். ஆகையால்தான் திருமுழுக்கு யோவான் அவர்களைப் பார்த்து, இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்ய கடவுள் வல்லவர் என்று கூறுகின்றார். அப்படியென்றால், அவர் மனம்மாறவேண்டும், இவர் மனம்மாறவேண்டும் என்றில்லை. எல்லாரும் மனம்மாறவேண்டும். ஏனெனில், கடவுள் ஒருவரே நல்லவர் (மத் 19: 17). ஏனையோர் யாவரும் பாவிகளே!


கனிகொடாத மரம் வெட்டப்படும்


திருமுழுக்கு யோவான், தன்னிடம் திருமுழுக்குப் பெற வந்தவர்களிடம் சொல்லக்கூடிய மிக முக்கியமான செய்தி, கனிகொடுக்கும் வாழ்க்கை வாழவேண்டும் என்பதாகும். இயேசுவும் இதே செய்தியைத்தான், நீங்கள் மிகுந்த கனிதந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது (யோவா 15:8) என்று கூறுவார். அப்படியானால், மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் கனிகொடுக்கும் வாழ்க்கை வாழவேண்டும். அப்படிக் கனிகொடுக்காமல் இருக்கின்றபோது, கனிகொடாத மரங்களைப் போன்று தீயில் தள்ளப்படுவோம் அல்லது தண்டனையைப் பெறுவோம் என்பது உறுதி.


திருமுழுக்கு யோவான் இங்கு, மனமாற்றச் செய்தியைக் கேளாமலும், கேட்டு அதன்படி வாழாமலும் இருக்கக்கூடியவர்களுக்குக் கிடைக்கும் தண்டனைத் தீர்ப்பைக் குறித்துப் பேசுகின்றார். யாரும் அழிந்துபோகாமல், எல்லாரும் மீட்படையவேண்டும் என்பது கடவுளின் திருவுளமாக இருந்தாலும் (1திமொ 2:4; 2 பேது 3:9), ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கு ஏற்பக் கைம்மாறு அளிக்கின்ற கடவுள் (உரோ 2:6) மனம்மாறாமலும், மெசியாவின் வருகைக்காகத் தயாரில்லாமலும், வந்தவரை நம்பாமலும் அதன்படி வாழாமலும் இருந்தால், அதற்கானத் தண்டனையைத் தருவார் என்பது உறுதி.


ஆகையால், மெசியாவாம், இயேசுவின் வருகையை, அவருடைய பிறப்பு விழாவைக் கொண்டாட ஆவலுடன் காத்திருக்கும் நாம், நம்முடைய பாவத்திலிருந்து விலகி, அவர்மீது நம்பிக்கை வைத்து முற்படுவோம்.


சிந்தனை


அவள்/அவன் மனம்மாற வாய்ப்புக் கொடுத்தேன். அவளோ/ அவனோ மனம்மாறவில்லை (திவெ 2: 21) என்பார் ஆண்டவர். ஆகையால், கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் மனமாற்றத்திற்கான வாய்ப்பினைப் பயன்படுத்தி, நற்கனி கொடுப்பவர்களாவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
திருப்பலி முன்னுரை
=================================================================================
 திருவருகைக்கால இரண்டாம் ஞாயிறுக்கு வந்துள்ளோம்.

இயேசுவே வாரும் என்று சொல்லி அழைக்கும் இக்காலத்தில், இந்த ஞாயிறு இயேசுவின் வருகையை அறிவித்த இறுதி இறைவாக்கினராக வந்த திருமுழுக்கு யோவானைப் பற்றி சிந்திக்க அழைக்கப்படுகின்றோம்.

அமைதியின் வாரம் என்றழைக்கப்படும் இந்த வாரத்தில் நீதியின் வழித் தான் அமைதிப் பிறக்கும் என்பதனை, இறைவாக்கினர்கள் வழியாக முன் அறிவிக்கப்படுகின்றது.

இன்று இத்தகைய அமைதி இல்லாத நிலையே நாடுகளிடையே பார்க்கின்றோம். எனவே நமது நாட்டிற்காகவும், அன்றைய நாடுகளுக்காகவும், போரினை சந்தித்து வரும் சிரியா போன்ற நாடுகளுக்காகவும் அதனை ஆளுவோருக்காகவும் மன்றாடுவோம்.

பக்தியுடனே பங்கேற்று பயன் பெற பாவங்களையேற்று மனம் வருந்தி இறை இரக்கத்தை இறைஞ்சுவோம்.



மன்றாட்டு

திருஅவையை ஆசீர்வதியும். அமைதியின் மன்னராகிய உம் ஆட்சியின் விழுமியங்களை உலகு சொல்லும் விதத்தில் வாழ்வை பணியை அமைத்துக் கொள்ள அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நாட்டை ஆளுவோருக்காக மன்றாடுகின்றோம். அமைதியை விதைக்கின்றவர்களாக செயல்பட்டு, எல்லா மக்களும் எல்லாம் பெற்று வாழும் நலம்விரும்விகளாக வாழ அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கடவுளின் மக்கள் என சொல்லும் நாங்கள், அமைதியையேற்படுத்துவதில் அக்கரை காட்டிட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

போர்களை சந்தித்து வரும் நாடுகளில் அமைதியின் ஆவியை தங்கச் செய்து மக்கள் நலமுடனே வாழ்ந்திட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




=================================================================================
திருப்பலி முன்னுரை
=================================================================================

மெசியாவை வரவேற்க மனம் மாறுங்கள். அவரால் அமைதியையும் மகிழ்வையும் பெற்றுக் கொள்ளுங்கள் என்பதை வலியுறுத்தும் திருவருகைக்காலம் 2ஆம் ஞாயிறு திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு அன்புடனே அழைக்கின்றோம்.

திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறாகிய இன்று ஏற்றப்பட்டிருக்கும் மெழுகுதிரியின் ஒளி நம்மிடையே அமைதியை நினைவுறுத்தவும், நிலைநாட்டவும் ஏற்றப்பட்டுள்ளது. இறைமகனாக இருந்தாலும் இயேசுவின் பிறப்பு எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் எளிமையாய்தான் நிகழ்ந்தது. அத்தகைய எளிமைதான் அமைதியைக் கொணரும். ஆர்ப்பாட்டமும் ஆடம்பரமும் அமைதியை அகற்றி பிரிவினையையே ஏற்படுத்தும். எனவே நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் அமைதியைப் பெற்றுக் கொண்டு அதைப் பிறருடனே பகிர்ந்து வாழ்வோம்.

இன்றைய முதல் வாசகத்தில், என் திருமலை முழுவதும் தீமை செய்வார் எவருமில்லை என்று இறைவாக்கினர் எசாயா, இறைமகனின் வருகையின்போது நடக்க இருப்பதைக் கூறுகிறார்.

இன்றைய உலகில் விலங்குகள் கூட தனது உணவுத் தேவைக்காக மட்டுமே பிற உயிரினத்தை வேட்டையாடும். ஆனால் மனித இனம் மட்டுமே பணத்திற்காகவும் பதவிக்காகவும் கௌரவத்திற்காகவும் தன் இனத்தையே வேட்டையாடுகிறது. எனவே இறைவன் வருகை நம் உலகில் மட்டுமல்ல; நம் உள்ளங்களிலும் எழும்போதுதான் நாம் உயிருள்ள ஆலயங்களாக முடியும்.

இன்றைய நற்செய்தியில், மனம் மாறுங்கள், விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது என்று அறிவிக்கிறார் திருமுழுக்கு யோவான். மனம் மாறுங்கள் என்பது

ஆலயம் நுழைந்து ஆண்டவரை வேண்டுவது அல்ல;

நம்மில் ஆழ்ந்திருக்கும் அகத்தின் அழுக்குகளை வெளியேற்றுவது.

பிறரின் தேவைகளை நம் மனத்தால் உணர்ந்து

இரு கரத்தால் உதவி செய்வது.

மறந்து போன மனிதத்தை நம்மில்

மீண்டும் துளிர்க்கச் செய்வது.

இவ்வுலக இச்சைகளைக் குறைத்து

இறைவனை நம்முள் பிறக்கச் செய்வது.

எனவே மனமாற்றம் பெறுவோம். இம்மண்ணுலகில் மானிடராய் பிறக்க இருக்கும் மனுமகனை மனதில் வரவேற்போம். நம் உள்ளத்தைத் தயார்படுத்த இப்பலியில் இணைவோம்.


=================================================================================
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
=================================================================================

மனம் மாறுங்கள் என்றவரே எம் இறைவா!


எம் திருஅவையை வழிநடத்த நீர் தேர்ந்து கொண்ட திருஅவைத் தலைவர்கள், பணியாளர்கள் எளிய வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து, அர்ப்பணிக்கேற்ற பணியினைச் செய்து, மக்களை மனமாற்றும் கருவியாய் தமது வாழ்வை நடத்தி, இறை பாதைக்கு வழிநடத்த வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.


எம் திருமலை முழுவதும் தீங்கு செய்வார் எவருமில்லை என்றவரே எம் இறைவா! எம் நாட்டினை ஆளும் ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள், நாட்டில் நடக்கும் அநீதிகளுக்கு காரணிகளாய் இராமல், தீங்கினை அழித்து நீதியை நிலைநாட்டவும், மக்களின் நல்வாழ்விற்கான பணிகளை தக்க நேரத்தில் செய்து, வாழ்க்கை தரத்தினை மேம்படுத்த நல்லறிவு தரவேண்டுமென இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.


ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள் என்றவரே எம் இறைவா!


நாங்கள் உமது பாதையை அடைய தடையாய் இருக்கும் எங்கள் கோபம், தாழ்வு மனப்பான்மை, செருக்கு போன்ற காரியங்களை துறந்து, இறை மதிப்பீடுகளான நீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை எம்மில் வாழ்வாக்க வரமருள தரவேண்டுமென இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.


விண்ணகக் கதவுகளைத் திறந்து ஆசீர்வதிப்பவரே எம் இறைவா!


எம் பகுதியில் இயற்கை வளங்கள் பேணப்பட்டு முறையாக பயன்படுத்தப்படவும், விவசாயம் சிறந்து குடும்ப பொருளாதாரம் மேம்படவும், குடும்ப அமைதி, சந்தோஷம் பெருகவும், படிக்கும் மாணவர்கள் ஞானத்தோடு விளங்கி சிறந்த எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளவும், வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தை வரம் வேண்டுவோர் உமது அருளால் பெற்று மகிழவும் வரம் அருள வேண்டுமென்று உம்மை கெஞ்சி மன்றாடுகின்றோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.



நன்றி: திருமதி ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!