|
|
|
திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40: 1-5, 9-11
"ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்" என்கிறார்
உங்கள் கடவுள். எருசலேமிடம் இனிமையாய்ப் பேசி, உரத்த குரலில்
அவளுக்குச் சொல்லுங்கள்: "அவள் போராட்டம் நின்றுவிட்டது; அவள்
குற்றம் மன்னிக்கப்பட்டது; அவள் தன் பாவங்கள் அனைத்திற்காகவும்
ஆண்டவர் கையில் இருமடங்கு தண்டனை பெற்றுவிட்டாள்."
குரலொலி ஒன்று முழங்குகின்றது: "பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை
ஆயத்தமாக்குங்கள்; பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை
ஒன்றைச் சீராக்குங்கள். பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்;
மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானது நேராக்கப்படும்;
கரடு முரடானவை சமதளமாக்கப்படும். ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்;
மானிடர் அனைவரும் ஒருங்கே இதைக் காண்பர்; ஆண்டவர்தாமே இதை
மொழிந்தார்."
சீயோனே! நற்செய்தி தருபவளே, உயர்மலைமேல் நின்றுகொள்! எருசலேமே!
நற்செய்தி உரைப்பவளே! உன் குரலை எழுப்பு, அஞ்சாதே! "இதோ உன்
கடவுள்" என்று யூதா நகர்களிடம் முழங்கு! இதோ என் தலைவராகிய ஆண்டவர்
ஆற்றலுடன் வருகின்றார்; அவர் ஆற்றலோடு ஆட்சிபுரிய இருக்கிறார்.
அவர்தம் வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருகின்றார்; அவர்
வென்றவை அவர்முன் செல்கின்றன.
ஆயனைப் போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத்
தம் கையால் ஒன்று சேர்ப்பார்; அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்;
சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 85: 8ab-9. 10-11.
12-13 (பல்லவி: 7 காண்க)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பைக் காட்டி எங்களை மீட்டருளும்.
8ab ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம்
பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்; 9
அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது
உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். பல்லவி
10 பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும்
நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும். 11 மண்ணினின்று உண்மை
முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். பல்லவி
12 நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும்.
13 நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும்.
பல்லவி
=================================================================================
இரண்டாம் வாசகம்
=================================================================================
புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும் என நாம்
எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
திருத்தூதர் பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம்
3: 8-14
அன்பார்ந்தவர்களே, நீங்கள் ஒன்றை மறந்துவிட வேண்டாம். ஆண்டவரின்
பார்வையில் ஒரு நாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள்
ஒரு நாள் போலவும் இருக்கின்றன. ஆண்டவர் தம் வாக்குறுதியை
நிறைவேற்றக் காலந்தாழ்த்துவதாகச் சிலர் கருதுகின்றனர்.
ஆனால் அவர் அவ்வாறு காலந்தாழ்த்துவதில்லை. மாறாக, உங்களுக்காகப்
பொறுமையோடிருக்கிறார். யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம்
மாறவேண்டுமென விரும்புகிறார்.
ஆனால் ஆண்டவருடைய நாள் திருடனைப்போல வரும். வானங்கள் பெருமுழக்கத்துடன்
மறைந்தொழியும்; பஞ்சபூதங்கள் வெந்துருகிப் போகும். மண்ணுலகமும்
அதன் செயல்களும் தீக்கிரையாகும். இவை யாவும் அழிந்து போகுமாதலால்
நீங்கள் தூய, இறைப்பற்றுள்ள நடத்தையில் மிகவும் சிறந்து விளங்க
வேண்டும்! கடவுளின் நாளை எதிர்பார்த்து அவர் வருகையை விரைவுபடுத்த
வேண்டும். அந்நாளில் வானங்கள் எரிந்தழிந்து பஞ்சபூதங்கள்
வெந்துருகிப் போகும்.
அவர் வாக்களித்தபடியே நீதி குடிகொண்டிருக்கும் புதிய விண்ணுலகும்
புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக்
கொண்டிருக்கிறோம். ஆகவே, அன்பார்ந்தவர்களே, இவற்றை எதிர்பார்த்திருக்கும்
உங்களை அவர் மாசுமறுவற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய்க்
காணும் வகையில் முழு முயற்சி செய்யுங்கள்.
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
லூக் 3: 4,6
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்;
அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்; மனிதர் அனைவரும் கடவுள்
அருளும் மீட்பைக் காண்பர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி
வாசகம்
=================================================================================
ஆண்டவருக்காகப்
பாதையைச் செம்மையாக்குங்கள்.
+ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
1: 1-8
கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்:
"இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்; அவர் உமக்கு வழியை
ஆயத்தம் செய்வார்.
பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: ஆண்டவருக்காக வழியை
ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்""
என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது.
இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலைநிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு
அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்.
யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்;
தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம்
திருமுழுக்குப் பெற்று வந்தனர். யோவான் ஒட்டக முடி ஆடையை அணிந்திருந்தார்;
தோல் கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும்
காட்டுத் தேனும் உண்டு வந்தார்.
அவர் தொடர்ந்து, "என்னைவிட வலிமைமிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார்.
குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதி
இல்லை. நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக்
கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால்
திருமுழுக்குக் கொடுப்பார்" எனப் பறைசாற்றினார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 1
=================================================================================
ஆண்டவருக்காக வழியை ஆயத்தம் செய்யுங்கள்
அவன் மூர்க்கமானவன்; தன்ன சுயநலத்துக்காக எவரையும் ஏமாற்றக்
கூடியவன். ஆனால் அவன் தந்தையோ அந்த ஊரே போற்றும் அளவுக்கு நல்லவர்;
நேர்மையானவர். அவர் எவ்வளவோமுறை சொல்லியும் அவன் ஏமாற்றுவதை
நிறுத்துவதாக இல்லை. கடைசியில் ஒரு நாள் அவர் தன் மகனை அழைத்து,
"நான் உன்னிடம் எவ்வளவோ முறை கூறிவிட்டேன், ஆனாலும் நீ
திருந்துவதாகயில்லை. இருக்கட்டும். இனி நீ ஒவ்வொரு முறை ஏமாற்றும்போதும்
நம் வாசல் கதவில் ஒவ்வொரு ஆணியாக அடி. அது போதும் எனக்கு" என்றவாறு
கூறிச் சென்றார்.
அவனுக்கோ மட்டற்ற மகிழ்ச்சி. தன்னை இனி கேள்வி கேட்பாரில்லை என
சுதந்திரமாக சுற்றித் திரிந்தான். சில மாதங்கள் கழித்து இரவு
வீட்டுக்கு வந்தவுடன் அந்தக் கதவைப் பார்த்து அதிர்ச்சியுற்றான்.
காரணம், சிறிது கூட இடைவெளி இல்லாமல் அதில் ஆணி அறையப்பட்டிருந்தது.
அவனுக்கு மனசு வலித்தது. ஏனோ தான் செய்த ஏமாற்று வேலைகள் எல்லாம்
கண்கள் முன் நிழலாடின. வீறிட்டு அழத் தொடங்கினான். பிறகு தன்
தந்தையிடம் சென்று தான் திருந்தி விட்டதாகவும், இனிமேல் தான்
எவருக்கும் துன்பம் அளிக்காத வண்ணம் வாழப் போவதாகவும் சத்தியம்
செய்தான்.
அதைக் கேட்ட அவன் அப்பா சிறிய புன்முறுவலுடன், "நல்லது. இனி மக்களுக்கு
உன்னாலான நல்லதை செய். நீ செய்யும் ஒவ்வொரு நன்மைக்கும் நம்
கதவில் அறையப்பட்ட ஆணிகளை ஒவ்வொன்றாக நீக்கிவிடு" என்றார். மகன்
சிறிது நிம்மதி அடையலானான். ஆனால் மற்றவர்களை ஏமாற்றுவதைப் போல
நன்மை செய்வது அவ்வளவு சுலபமாய் இல்லை. ஒவ்வொரு நாளும் அவன் தன்
வீட்டுக் கதவின் முன் நின்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருப்பான்.
நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்கள்
ஆயின. அவனது தந்தையும் மூப்பு காரணமாக படுத்த படுக்கையானார்.
அன்றொரு நாள், அவன் மிக்க மகிழ்ச்சியுடன் தன் தந்தையிடம் வந்து
தான் கதவில் அறையப்பட்ட எல்லா ஆணிகளையும் எடுத்து விட்டதாகவும்,
இதோ தன் கையில் இருப்பது தான் கடைசி ஆணி என்றும் காண்பித்து,
தான் இப்போது நல்லவனா? என தந்தையிடம் வினவினான். தந்தை புன்னகைத்துக்கொண்டே
மீண்டும் கதவை சென்றுப் பார்க்குமாறு கூறினார். திரும்பி வந்த
மகனிடம், "என்ன தெரிந்தது?" எனக் கேட்டார். அதற்கு மகனோ, "கதவு
முழுவதும் சிறு சிறு ஓட்டைகளாக உள்ளன" என்றான். தந்தை
மென்மையாக, "நீ செய்த தவறுகள் தான் அந்த கதவில் அறையப் பட்ட ஆணிகள்.
நீ திருந்துவதன் மூலம் அந்த ஆணிகள் பிடுங்கப்பட்டிருக்கலாம்.
ஆனாலும் நீ அறைந்ததன் விளைவுகளான ஓட்டைகளை உன்னால் ஒன்றும்
செய்ய முடியாது." என்றார்.
(எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய "கேள்விக்குறி" என்ற புத்தகத்தில்
இடம்பெற்ற கதை)
தவறுசெய்து திருந்தி வாழும் மனிதனை இந்த உலகம் ஏற்றுக்கொள்ளலாம்
அல்லது ஏற்றுக்கொள்ளாமல் போகலாம், புறக்கணிக்கலாம் அல்லது புறக்கணிக்காமலும்
போகலாம். ஆனால் இறைவன் அப்படியில்லை. அவர் நிச்சயம் அவனை ஏற்றுக்கொள்வார்;
அவனுக்கு அவர் தன்னுடைய ஆசிரையும், அருளையும்தந்து
காத்திடுவார். இதுதான் இன்றைய இறைவார்த்தையின் சாராம்சமாக இருக்கின்றது.
திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறான இன்று நாம் படிக்கக்கேட்ட
வாசகங்கள் தரும் சிந்தனை "ஆண்டவருக்காக வழியை ஆயத்தம்
செய்வோம்" என்பதாகும். நாம் எப்படி ஆண்டவருக்கான வழியை ஆயத்தம்
செய்வது என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவான் தன்னிடம்
திருமுழுக்குப் பெற வந்தவர்களிடம், பாவ மன்னிப்பு அடைய மனம்மாறித்
திருமுழுக்குப் பெறுங்கள் என்கிறார். திருமுழுக்கு என்பது மனமாற்றத்தின்
அடையாளமாக இருக்கின்றது. ஆகையால் ஒருவர் இறைவன் தரக்கூடிய விடுதலையை,
பாவ மன்னிப்பைப் பெறவேண்டுமென்றால் மனம்மாறவேண்டும். இதுதான்
இறைவன் நம் ஒவ்வொருவரிடமிருந்தும் எதிர்பார்க்கக்கூடிய இருக்கின்றது.
அடுத்ததாக எதிலிருந்து மனமாற்றம் அடையவேண்டும் என்பது நமது
சிந்தனைக் கூறியதாக இருக்கின்றது. விவேகானந்தர் ஒருமுறை இவ்வாறு
குறிப்பிட்டார், "பொய்மையிலிருந்து வாய்மைக்கும், இருளிலிருந்து
ஒளிக்கும், தீமையிலிருந்து நன்மைக்கும் நாம் திரும்பிவரவேண்டும்.
அதுதான் உண்மையான மனமாற்றம்" என்று. ஆகவே, நாம் தீய வழிகளிலிருந்து
விலகி, நல்வழியில் நடக்கவேண்டும். அப்போதுதான் நாம் உண்மையான
மனமாற்றத்தை அடைந்திருக்கிறோம் என்று அர்த்தமாகும்.
இஸ்ரயேல் மக்கள் உண்மைக் கடவுளான யாவே இறைவனை மறந்துவிட்டு,
பொய்தெய்வங்களை வழிபாட்டு தான்தோன்றித்தனமான ஒரு வாழ்க்கையை
வாழ்ந்தார்கள். இதனால் சினம்கொண்ட கடவுள் அவர்களைத் தண்டித்தார்;
அந்நியரின் கைகளில் அவர்களை ஒப்புவித்தார். அப்போதுதான் அவர்கள்
தங்களுடைய தவறுகளை உணர்ந்தார்கள்; கடவுள் தங்களைக்
கைநெகிழ்ந்து விட்டாரே என்று மனம்வருந்தி அழுதார்கள்.
"பாபிலோனின் ஆறுகளருகே அமர்ந்து, நாங்கள் சீயோனை நினைத்து அழுதோம்.
அங்கிருந்த அலரிச்செடிகள் மீது எங்கள் யாழ்களை மாட்டி
வைத்தோம். ஏனெனில், அங்கு எங்களைச் சிறையாக்கினோர் எங்களைப்
பாடும்படி கேட்டனர்; எங்களைக் கடத்திச் சென்றோர் எங்களை மகிழ்ச்சிப்பா
இசைக்குமாறு கேட்டார், "சீயோனின் பாடல்களை எங்களுக்குப்
பாடிக்காட்டுங்கள்" என்றனர். ஆண்டவருக்கு உரித்தாகும் பாடலை
அன்னிய நாட்டில் எங்ஙனம் இசைப்போம்?" (திருப்பாடல் 137: 1-4)
என்ற வார்த்தைகள் இஸ்ரயேல் தங்களுடைய தவறை உணர்ந்து, வருந்தி
அழுவதை சுட்டிக்காட்டுகிறது. அதனால்தான் கடவுள் அவர்கள்மீது
இரக்கம்கொண்டு அவர்களுடைய குற்றங்களை மன்னிக்கிறார் (முதல்
வாசகம்).
ஆகவே, இஸ்ரேயல் மக்கள் தங்களுடைய தவறை உணர்ந்து,
மனம்வருந்தியபோது இறைவன் மன்னித்ததுபோல, நாமும் நம்முடைய தவறை
உணர்ந்து, திருந்தி வாழ்கின்றபோது இறைவன் நம்முடைய பாவங்களை
மன்னிப்பார் என்பது உறுதி. எப்போது நாம் நம்முடைய பாவத்தை
உணர்ந்து, மனமாறுகின்றோமோ அப்போதே நாம் ஆண்டவருக்கான வழியை
ஆயத்தம் செய்யத் தொடங்கிவிடுகின்றோம் என்று அர்த்தமாகும்.
நிறைவாக பாவத்திலிருந்து மனம்மாறிவிட்டால் போதுமா?, அதுவே
நமக்கு மீட்பையும், இறைவன் தரக்கூடிய ஆசீரையும்
பெற்றுத்தந்துவிடுமா? என்றால், நிச்சயமாக இல்லையென்றே
சொல்லலாம். ஏனென்றால், மத்தேயு நற்செய்தி 6:8 ல்
வாசிக்கின்றோம், "நீங்கள் மனம்மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற
செயல்களால் காட்டுங்கள்" என்று. ஆம், நாம் மனம்மாறியவர்கள்
என்பதைக் குறித்துக்காட்ட, நற்செயல்களைச் செய்யவேண்டும்,
இறைவனுக்கு உகந்த வழியில் நடக்கவேண்டும். மனம்மாறிவிட்டேன்
என்று சொல்லி, அதே நிலையில் இருப்பதோ அல்லது எந்த ஒரு
நன்மையும் செய்யாதிருத்தலோ உண்மையான மனமாற்றம் ஆகாது.
ஒருசிலர் இறைவனின் வருகை எப்போதோ வரப்போகிறது, அதற்காக நாம்
எதற்கு இப்போதே கவலைப்படவேண்டும்?, இப்போதே எதற்கு நன்மை
செய்யவேண்டும்? பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கலாம்.
ஆனால் ஆண்டவருடைய நாள் திருடனைப் போன்று திடிரென்று வரும்
என்று இன்றைய இரண்டாம் வாசகமானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
ஆகவே, நாம் இறைவன் வரக் காலம் தாழ்த்துவார், பின்னால் நல்லதொரு
வாழ்ந்துகொள்வோம், இப்போது எப்படியும் வாழ்வோம் என்று
நினைக்காமல் இப்போதே, இந்த நொடியிலிருந்தே நன்மை செய்து வாழக்
கற்றுக்கொள்வோம். அதுதான் ஆண்டவருக்கான வழியை ஆயத்தம்
செய்வதற்கான இரண்டாம் மற்றும் இறுதிப் படிநிலையாக
இருக்கின்றது.
ஒரு கிராமத்தில் மிகுந்த செல்வம்கொண்ட பெரிய பணக்காரன் ஒருவன்
இருந்தான். அவன் தன் இறப்பிற்குப் பின் தன் சொத்துக்கள்
அனைத்தையும் தர்மம் செய்வதாக அறிவித்தான். அப்படி இருந்தும்
மக்கள் அவனைக் குறை கூறிக்கொண்டே இருந்தார்கள். அதனால் மிகவும்
மனமுடைந்த அவன், அதற்கான காரணத்தை அறிய ஒரு ஜென் துறவியை
பார்க்கச் சென்றான்.
துறவியைப் பார்த்து அனைத்தையும் கூறி, "எதற்காக மக்கள் எனக்கு
மதிப்பளிக்காமல், இன்னும் குறைகூறிக்கொண்டே இருக்கிறார்கள்?"
என்று கேட்டான். அதற்கு குரு அவனிடம் "உனக்கு பன்றி மற்றும்
பசுவைப் பற்றிய கதை சொல்ல வேண்டும்" என்றார். அதற்கு அவன் "அது
என்ன பன்றி, பசு கதை, எனக்கு சொல்லுங்கள்" என்று கூறினான்.
பின் குரு "ஒரு முறை பன்றி பசுவிடம், நீ மக்களுக்கு பால்
மட்டும்தான் தருகிறாய், ஆனால் நான் அவர்களுக்கு என்
மாமிசத்தையே தருகிறேன். இருப்பினும் மக்கள் உன்னையே புகழக்
காரணம் என்ன?" என்று வருத்தத்தோடு கேட்டது. அதற்கு பசு நான்
உயிருடன் இருந்து அவர்களுக்கு தருகிறேன், ஆனால் நீ இறந்து
தருகிறாய், அதனால்தான் எதையும் உன்னால் உணர முடியவில்லை என்று
சொன்னது" என்று கதையை கூறினார். பிறகு குரு அவனிடம் "நீயும்
அந்த பன்றியைப் போல்தான், உயிருடன் இருக்கும்போது மக்களுக்கு
தானம் செய்து பார், பின் தெரியும்" என்று கூறி அவனை அனுப்பி
வைத்தார்.
ஆம், நாம் இறந்தபிறகு அல்ல, வாழும்போதே
- இப்போதே - நன்மைகளைச்
செய்யவேண்டும். அதுதான் ஓர் உண்மையான கிறிஸ்தவ வாழ்விற்கு
அடிப்படியாகும்.
ஆகவே, நாம் நமக்கு மீட்பினை, வாழ்வினை, நிம்மதியைத் தரக்கூடிய
இறைவனது, அந்த ஆண்டவனது வருகையை ஆயத்தம் செய்யவேண்டும்
என்றால், அதற்கு நாம் நம்முடைய பாவ வாழ்க்கையிலிருந்து
மனம்மாறவேண்டும். அதோடு மட்டுமல்லாமால், நன்மையான காரியத்தை
இன்றே, இப்போதே, நாம் இந்த புவியில் வாழும்போதே செய்யவேண்டும்.
அப்போது இறைவன் நமக்கு எல்லா ஆசிரையும் தந்து நம்மைக்
காத்திடுவார். எனவே நன்மையானதைச் செய்வோம். நாயகன் இயேசுவின்
அருள் பெறுவோம்.
=================================================================================
திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு
தடைகளை நீக்குதல்
(டிசம்பர் 6, 2020)
எசாயா 40:1-5, 9-11
2 பேதுரு 3:8-14
மாற்கு 1:1-8
திருவருகைக்காலத்தில் நாம் இயேசுவின் மூன்று வருகைகளையும் முதன்மைப்படுத்திச்
சிந்திக்கின்றோம். அவருடைய முதல் வருகை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முன் நடந்தது. அவருடைய இரண்டாம் வருகை உலக முடிவில் நடக்கும்.
அவருடைய மூன்றாம் வருகை அன்றாடம் நடந்தேறுகிறது. அவருடைய முதல்
மற்றும் இரண்டாம் வருகை காணக்கூடிய அளவில் இருந்தது, இருக்கும்.
ஆனால், மூன்றாம் வருகையை நாமாக முயற்சி எடுத்தாலன்றிக் காண இயலாது.
ஆண்டவரை அன்றாடம் நம் வாழ்வில் வரவேற்க நாம் நிறையத் தடைகளைக்
களைய வேண்டும், நம் வாழ்வில் நிறைய மாற்றங்களை உருவாக்க
வேண்டும்.
இன்றைய முதல் வாசகம் (காண். எசா 40:1-5,9-11), இரண்டாம் எசாயா
நூலின் தொடக்கப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
பாபிலோனிய அடிமைத்தனத்தில் சிக்கியிருக்கும் இஸ்ரயேல் மக்கள்
விரைவில் தங்கள் சொந்த நாடு திரும்புவார்கள் என்பதை முன்னறிவிக்கிறார்
இறைவாக்கினர். கிமு 587இல் எருசலேம் நகரம் அழிக்கப்பட்டதையும்,
இஸ்ரயேல் மக்கள் நாடுகடத்தப்பட்டதையும் நேருக்கு நேர் கண்ட இறைவாக்கினர்கள்,
மக்களாலும் மக்களின் அரசர்களின் தவறான வாழ்வியல் முறைகளால் இந்த
அழிவு நேரிட்டது என்பதை எண்ணி வருந்துகின்றனர். மேலும், கடவுளின்
உடன்படிக்கையை மக்கள் மீறியதற்காக, கடவுள் அவர்களுக்கு அனுப்பிய
தண்டனை என்றும் பலர் கருதினர். கடவுள் தன் மக்களை ஒரேயடியாக ஒதுக்கிவிட்டார்
என்று நினைத்துப் புலம்பினர். இத்தகைய சூழலில் இறைவாக்குரைக்கின்ற
எசாயா, இந்த நிகழ்வு பற்றிய ஒரு புதிய புரிதலை
முன்வைக்கின்றார்.
'ஆறுதல் கூறுங்கள்!' என்பதுதான் கடவுள் தனக்குக் கொடுத்த பணி
என்று எசாயா தன் பணியின் இலக்கை வெளிப்படுத்துகின்றார். கடவுள்
மூன்று வினைச்சொற்களைப் பயன்படுத்துகின்றார்: 'ஆறுதல் கூறுங்கள்,'
'கனிமொழி கூறுங்கள்,' மற்றும் 'உரக்கச் சொல்லுங்கள்'. கடவுள்
பழிதீர்க்கும் கடவுள் அல்லர் என்றும், கடவுள் தூரத்தில்
நிற்கும் கடவுள் அல்லர் என்றும், கடவுள் தன் மக்களை ஒருபோதும்
கைவிடுபவர் அல்லர் என்றும் இவ்வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன.
இஸ்ரயேலின் கடவுள் அவர்களோடு என்றும் தங்குகிறார். மேலும், 'ஆண்டவரின்
மாட்சி வெளிப்படுத்தப்படும். மானிடர் அனைவரும் ஒருங்கே இதைக்
காண்பர். ஆண்டவர்தாமே இதை மொழிந்தார்' எனக் காட்சி காண்கிறார்
எசாயா. இதுவே 'நற்செய்தி' என அவர்களுக்கு அறிவிக்கப்படுகிறது.
கடவுள் அவர்களோடு இருந்து அவர்களைக் காத்து வழிநடத்தும் அர்ப்பணத்தை
இது அவர்களுக்கு நினைவூட்டுகிறது. கடவுள் மீண்டும் அவர்களை
முந்தைய நன்னிலைக்குக் கொண்டுவர விரும்புகிறார் என்பதை ஓர் உருவகம்
வழியாக உரைக்கின்றார் எசாயா: 'ஆயனைப் போல் தம் மந்தையை அவர்
மேய்ப்பார். ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்.
அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார். சினையாடுகளைக் கவனத்துடன்
நடத்திச் செல்வார்.' இந்த உருவகத்தின் வழியாக, ஆண்டவராகிய கடவுளே
இஸ்ரயேல் மக்களின் தலைவராக இருப்பார் என்பதும், அடிமைத்தனத்தில்
சிதறுண்ட மக்களை ஒன்று சேர்ப்பார் என்பதும், நலிவுற்றவர்களைத்
தாங்கிக் கொள்வார் என்பதும், புதிய உயிர்கள் பிறப்பதற்கு அவரே
துணை நிற்பார் என்பதும் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது.
இந்த வாக்குறுதி நிறைவேற வேண்டுமெனில், 'பாலைநிலத்தில் வழி ஆயத்தமாக்கப்பட
வேண்டும்,' 'பாழ்நிலத்தில் நெடுஞ்சாலை சீராக்கப்பட வேண்டும்.'
'பாலைநிலம்' மற்றும் 'பாழ்நிலம்' என்பது இஸ்ரயேல் மக்கள்
புதிதாக மேற்கொள்ள வேண்டிய பயணத்தை அல்ல, மாறாக, அவர்கள் ஏற்கெனவே
பெற்றிருந்த விடுதலைப்பயண அனுபவத்தை அவர்களுக்கு
நினைவூட்டுகின்றன. சீனாய் மலை வழியாக பாலைநிலத்தில் இஸ்ரயேல்
மக்கள் மேற்கொண்ட பயணத்தில்தான் கடவுள் அவர்களோடு உடன்படிக்கை
செய்துகொண்டு, 'நாம் உங்கள் கடவுளாய் இருப்போம். நீங்கள் என்
மக்களாய் இருப்பீர்கள்!' என மொழிந்தார். அங்குதான் அவர்கள் தங்களுடைய
கடவுளை முழுமையாக அன்பு செய்யக் கற்றுக்கொண்டார்கள். அவர்களுடைய
பயங்களும் தவறான எண்ணங்களும் மறைந்து, சந்தேகங்கள் விலகியது அங்கேதான்.
'இதோ! உன் கடவுள்!' என்று இஸ்ரயேல் மக்களுக்கு இப்போது சொல்வதன்
வழியாக, எசாயா தன் மக்களை எழவும், குரல் எழுப்பவும், மீண்டும்
தாயகம் திரும்பவும் அழைக்கின்றார்.
இரண்டாம் வாசகத்தில் (காண். 2 பேது 3:8-14) ஆண்டவரின் வருகையோடு
தொடர்புடைய பிரச்சினை பற்றிப் பேசுகின்றார். ஆண்டவரின் இரண்டாம்
வருகை இல்லை என்று போதித்துவந்து போலிப் போதகர்களால் கவரப்பட்ட
தன் திருச்சபைக்கு எழுதுகின்ற பேதுரு, அவர்கள் இழந்த நம்பிக்கையை
மீண்டும் தட்டியெழுப்புகிறார். அவர்களது பொறுமையின்மையைக் கடிந்துகொண்டு,
பொறுமையோடு எதிர்நோக்க அழைக்கின்றார். மேலும், அவர்களது பயங்களையும்
ஐயங்களையும் களைகின்றார்.
முதலில், ஆண்டவரின் நேரமும் நம் நேரமும் ஒன்றல்ல என்று வரையறுக்கிறார்:
'ஆண்டவரின் பார்வையில் ஒரு நாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம்
ஆண்டுகள் ஒரு நாள் போலவும் இருக்கின்றன.' ஆக, 'விரைவில் வருகிறார்'
என்பதை மனித கால வரையறையின்படி நாம் அறிந்துகொள்ள முடியாது.
இரண்டாவதாக, இரண்டாம் வருகையின் தாமதத்திற்குக் காரணம் கடவுளின்
அன்பும் பொறுமையுமே. தன் வருகையைத் தள்ளி வைப்பதன் வழியாக, மற்றவர்கள்
மனம் மாறுவதற்கு நேரம் கொடுக்கிறார் கிறிஸ்து. ஆக, நம்பிக்கை
கொண்ட இறைமக்கள் காலத்தைக் கணிப்பதை விடுத்துவிட்டு, தங்களையே
தயார்படுத்திக்கொள்ளவும் சரிசெய்யவும் வேண்டும். தங்களையே
'மாசுமறுவற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய்'
நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும்.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண் மாற் 1:1-8), மாற்கு நற்செய்தியின்
தொடக்கப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. 'கடவுளின் மகனாகிய
இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்' என்று தன்
நற்செய்தியைத் தொடங்கும் மாற்கு, எசாயா இறைவாக்கினரின் வாக்கு,
திருமுழுக்கு யோவானில் நிறைவுபெறுவதாக எழுதுகின்றார். பாலைநிலத்தில்
குரலெழுப்பிய தூதரும், பாவமன்னிப்புக்கான திருமுழுக்கைப்
போதித்தவரும் யோவானே என முன்மொழிகின்றார். கடவுளுக்கும் நமக்கும்
இடையே உள்ள உறவுக்குத் தடையாகப் பாவம் இருந்ததால், அந்தப் பாவத்தைக்
களைந்துவிட்டு, தனிமனித மனமாற்றம் அடைய மக்களை அழைக்கின்றார்
யோவான். தடைகளை நீக்குகின்ற நம்பிக்கையாளர்கள் 'தூய ஆவியாரால்
திருமுழுக்கு பெறுவர்.'
ஆக,
பயம், ஏமாற்றம், ஐயம் என்னும் தடைகள் நீக்கப்பட்டால், மக்கள்
தங்கள் கடவுளோடு தங்களை மீண்டும் இணைத்துக்கொள்ளலாம் என்று முதல்
வாசகத்தில் எசாயாவும்,
பரபரப்பும் கலக்கமும் நீங்கி பொறுமையும் விடாமுயற்சியும் பிறந்தால்,
இறைமக்கள் ஆண்டவரின் இரண்டாம் வருகையை எதிர்கொள்ள முடியும் என்று
பேதுருவும், பாவத்தை நீக்குதல் தூய ஆவியாரின் அருள்பொழிவைப்
பெற வழி என்று திருமுழுக்கு யோவானும் மொழிகின்றனர்.
இன்றைய நாள் நமக்கு வைக்கும் பாடம் என்ன?
கடவுளின் இரக்கப் பெருக்கை மறத்தல், பரபரப்போடு இருத்தல், பாவத்தொற்றிலேயே
நிலைத்திருத்தல் போன்றவை இன்றயை நம் தடைகளாக இருக்கலாம்.
மேற்காணும் தடைகளை நாம் உணர்வதோடு, அவற்றை நீக்க நாம் முழுமுயற்சி
செய்ய வேண்டும்.
எப்படி நீக்குவது?
'சிறியவற்றில் பிரமாணிக்கம், பெரியவற்றிலும் பிரமாணிக்கம்.'
'சிறியவற்றில் தோல்வி, பெரியவற்றிலும் தோல்வியே.'
இஸ்ரயேல் மக்கள் ஒரே நாளில் கடவுளின் உடன்படிக்கையை மீறவில்லை.
சின்னச் சின்ன விடயத்தில் மீறினார்கள் பெரிய அளவில் துன்பம் அடைந்தார்கள்.
சிறிய பழக்கம், சிறிய தொடர் பயிற்சி, சிறிய ஒழுக்கம் நம்மைப்
பெரியவற்றுக்கு இட்டுச்செல்லும். இதன் வழியாக நாம் வலிமையும்,
ஞானமும், நன்மையும் பெறுவோம். அதே போல, சிறிய பொய் பெரிய
பொய்க்கும், சிறிய இன்பநுகர்வு பெரிய துரோகத்திற்கும், சிறிய
மதுபாட்டில் பெரிய மதுப்பழக்கத்திற்கும் இட்டுச் செல்லும். ஆக,
நாம் எந்தப் பாதையைத் தேர்வு செய்தாலும் அதை நேராக்கவும்,
சமதளமாக்கவும் வேண்டும். நாம் எடுக்கின்ற ஒவ்வொரு முடிவும் நம்மை
நன்மைக்கோ அல்லது தீமைக்கோ இட்டுச் செல்லும். சிறிய விளைவுகள்
பெரிய விளைவுகளைக் கொண்டுவரும். சங்கிலி போல அது தொடரும்.
நாம் மேற்கொள்ளும் தெரிவுகளின் ஒட்டுமொத்தக் கூட்டுத்தொகைதான்
நாம். சரியான முடிவுகள் சரியான விடிவுக்கு இட்டுச்செல்லும்.
தடைகளை நீக்குதல் மெசியாவைக் காண்பதற்கு வழி செய்யும்.
அப்போது, 'நல்லதையே ஆண்டவர் அருள்வார். நல்விளைவை நம் நாடு நல்கும்'
(காண். திபா 85).
(அருள்திரு. இயேசு கருணாநிதி)
உம்மை நோக்கி என் உள்ளம்
'மனித உறவுகள் தரும் இன்பப் பிணைப்பு, பிணைப்போடு வரும்
பொறாமை, சந்தேகம், பயம், கோபம், மற்றும் சண்டை சச்சரவுகள்,
அறிவுக்கான தொடர்தேடல், தேடலின் இறுதியில் மிஞ்சும் விரக்தி,
அடுத்தவரை மகிழ்வித்து அவர்தரும் புகழால் அடையும் களிப்பு,
களிப்பு தரும் வெறுமை, பேருண்டி தரும் நிறைவு,
நிறைவுக்குப் பின் வரும் வலி மற்றும் நோய், புலன்கள் தரும்
மயக்கம், மயக்கத்தின்பின் வரும் குழப்பம், அமைதிக்கான தேடல்,
தேடலில் திசைமாறும் பயணங்கள்' என்று தன் வாழ்வைப்
பின்நோக்கிப் பார்க்கின்ற அகுஸ்தினார், 'உமக்காகவே நீர் எங்களைப்
படைத்துள்ளதால், உம்மில் அமைதி காணும் வரை எம் இதயம் அமைதி
கொள்வதில்லை' எனச் சரணடைகின்றார் (காண். ஒப்புகைகள், புத்தகம்
1, பிரிவு 1). எதிரிகளாலும், உடல்நலக் குறைவாலும், உறவுச்
சிக்கல்களாலும் துன்பத்துக்கு ஆளாகி, செல்லும் வழி அறியாது
நிற்கின்ற தாவீது, 'ஆண்டவரே, உம்மை நோக்கி என் உள்ளத்தை
உயர்த்துகின்றேன்' (காண். திபா 25, பதிலுரைப்பாடல்) என்று
தன்னையே ஆண்டவரிடம் சரணாகதி ஆக்குகின்றார்.
திருவருகைக்காலத்தில் ஆண்டவரை நோக்கி நம் உள்ளம் மூன்று
நிலைகளில் உயர்ந்து நிற்கின்றது: (அ) அவரது முதல் வருகையின்
நினைவுகூர்தலை நோக்கி நெஞ்சம் நிறை நன்றியோடும், மகிழ்ச்சியோடும்ளூ
(ஆ) அவரது இரண்டாம் வருகையை எதிர்பார்த்து கண்கள் நிறை
விழிப்போடும், கவனமோடும்ளூ (இ) அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளிலும்,
நபர்களிலும் வரும் அவரின் உடனிருப்பு நோக்கி பரிவோடும், பகிர்வோடும்.
இறைவாக்கு நூல்களில் எரேமியா மட்டுமே அழிவு மற்றும் ஆறுதலின்
செய்திகளை இணைத்துத் தருகின்றார். 'தாவீதிலிருந்து
நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன்' என்று ஆண்டவராகிய
கடவுள் எரேமியா வழியாக ஆறுதல் தருகின்றார் (காண். எரே
33:14-16, முதல் வாசகம்). நாட்டில் அவர் நீதியையும்
நேர்மையையும் நிலைநாட்டி, யூதாவுக்கு விடுதலை தரும்
நாளில், 'யாவே சித்கேனூ' ('ஆண்டவரே நமது நீதி') என்று எருசலேம்
புதிய பெயரைப் பெறும். 'தளிர்' என்பது மெசியாவுக்கான உருவகம்
(காண். செக் 3:8). யூதாவை 'செதேக்கியா' ('ஆண்டவர் நீதியானவர்,'
'ஆண்டவரே நீதி') மன்னன் ஆண்டபோது இஸ்ரயேல் மக்கள்
பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர். ஆண்டவரின் முதல்
நீதி (செதேக்கியா) எருசலேமுக்கு தண்டனையைக் கொணர்ந்தது.
இரண்டாம் நீதி (சித்கேனூ) இரக்கத்தைக் கொண்டு வருகிறது. தங்கள்
அரசரை நோக்கி உயர்ந்த இஸ்ரயேல் மக்களின் உள்ளம் தண்டனை
பெற்றது. ஆண்டவரை நோக்கி உயர்கின்ற உள்ளம் இரக்கம்
பெறுகின்றது. 'நம் கிறிஸ்தவப் புரிதலின்படி, 'தாவீதின்
நீதியின் தளிர்' இயேசுவைக் குறிக்கிறது. அவரில் கடவுளின்
நீதி இரக்கமாகக் கனிந்தது. சக்கேயு, பாவியான பெண்,
நோயுற்றோர், பேய்பிடித்தோர், பசியால் வாடிய மக்கள்
போன்றோரை இயேசு எதிர்கொள்ளும் நிகழ்வுகளில் எல்லாம் நீதி
பரிவாகக் கனிகிறது' என்பது திருஅவைத் தந்தையர்களின் விளக்கம்.
புனித பவுல் தெசலோனிக்கியருக்கு எழுதிய முதல் திருமடலிலிருந்து
எடுக்கப்பட்டுள்ளது இரண்டாம் வாசகம் (காண். 1 தெச
3:12-4:2). தெசலோனிக்கா நகரில் பவுல் மூன்றே முறைதான்
(மூன்று ஓய்வுநாள்கள்) நற்செய்தி அறிவிக்கிறார் (காண். திப
17:1). அந்த மூன்று நாள்களிலேயே நிறையப்பேரைக் கிறிஸ்துவை
நோக்கித் திருப்புகின்றார். அவர்கள் மீண்டும் தங்கள் பழைய
வாழ்க்கைக்குத் திரும்பாவண்ணம் அவர்களை மீண்டும் சந்திக்கவும்,
அவர்களுக்கு கடிதங்கள் (இரண்டு) எழுதவும் செய்கின்றார். இக்கடிதங்களில்
மேலோங்கி நிற்கும் கருத்துரு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை.
பவுலும், அன்றைய திருச்சபையாரும் கிறிஸ்துவின் வருகை மிக
அருகில் இருப்பதாகவும், அது தங்கள் காலத்திலேயே நடந்தேறும்
என்று நம்பினர். இந்தப் பின்புலத்தில்தான், அவரின் வருகைக்கான
தயாரிப்பை அறிவுரையாகத் தருகின்றார் பவுல்: '... நம் ஆண்டவர்
இயேசு தம்முடைய தூயோர் அனைவரோடும் வரும்பொழுது, நம் தந்தையாம்
கடவுள்முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு,
அவர்கள் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக!' உள்ளங்களை
உறுதிப்படுத்தும் ஆண்டவர், 'அவர்கள் ஒருவர் மற்றவருக்காகக்
கொண்டுள்ள அன்பை வளர்த்துப் பெருகச் செய்வாராக!' என்றும்
பவுல் வாழ்த்துகின்றார்.
நற்செய்தி வாசகத்தில் (காண். 21:25-28, 34-36), மானிட மகனின்
வருகையின்போது கதிரவனிலும், நிலவிலும், விண்மீன்களிலும்,
வான்வெளிக் கோள்களிலும் நிகழும் மாற்றங்களை
திருவெளிப்பாட்டு நடையில் பட்டியலிடும் இயேசு, 'உங்கள்
மீட்பு நெருங்கி வருகின்றது' என்ற அவசரமான ஆறுதலைத் தந்து,
'உங்கள் உள்ளங்கள் குடிவெடி, களியாட்டம், இவ்வுலக
வாழ்க்கைக்குரிய கவலையினால் மந்தம் அடையாதவாறு
காத்துக்கொள்ளவும்,' 'அந்நாள் திடீரென ஒரு கண்ணியைப் போல்
சிக்க வைக்காதவாறு எச்சரிக்கையாக இருக்கவும்,' 'மானிட மகன்முன்
நிற்க வல்லவராவதற்கு எப்போதும் விழிப்பாயிருந்து மன்றாடவும்'
அறிவுறுத்துகின்றார். 'இப்பொழுதே இன்பம்' என்று
'குடிவெறி', 'இனி ஒன்றும் இல்லை' என்று 'களியாட்டம்,'
'நேற்று இப்படி ஆகிவிட்டதே' என்று 'கவலை' நம்மை மந்த
நிலைக்கும் தேக்கநிலைக்கும் இட்டுச் செல்கின்றன. 'கண்ணி'
என்பது விவிலியத்தில் எதிரி அல்லது பகைவரின் சூழ்ச்சியின்
உருவகம். 'இறைவேண்டல்' என்பது லூக்கா நற்செய்தியில் இறையுறவுக்கான
முக்கியமான கூறு. ஒருவர் கொண்டிருக்கிற
விழிப்புநிலையில்தான் அது சாத்தியமாகிறது. இறைவேண்டலில் நம்
உள்ளம் ஆண்டவரை நோக்கி எழுகின்றது.
ஆக, ஆண்டவர் தருகின்ற நீதியை நோக்கி எருசலேமும், அன்பை
நோக்கி தெசலோனிக்கத் திருஅவையும், மீட்பை நோக்கி நாமும் நம்
உள்ளங்களும் உயர வேண்டும்.
திருவருகைக்காலம் முதல் வாரத்தில், 'உம்மை நோக்கி என் உள்ளம்'
என்னும் கருத்துரு நமக்கு எதை உணர்த்துகிறது? ஆண்டவரின்
இரண்டாம் வருகை பற்றியும், உலக முடிவு பற்றியும் இன்று எண்ணற்ற
விவாதங்களும், பரப்புரைகளும், அச்சுறுத்தல்களும் நம்மைச்
சுற்றி நடக்கின்றன. தொடங்கியது அனைத்தும் நிறைவுறும் என்பது
எதார்த்தம். நம் இயக்கத்தின் இலக்கான இயேசுவில் அனைத்தும்
நிறைவுபெறும் என்பது நம் எதிர்நோக்கு. வருகின்ற ஒன்றுக்காகக்
காத்திருப்பது என்பது, இருக்கின்ற ஒன்றில் மூழ்கிவிடாமல்
இருக்க எச்சரிக்கிறது. மேலும், 'மானிட மகன் முன் வல்லவராக
நிற்பதற்கு' தகுதிப்படுத்தும் செயல்களை மட்டும் செய்யுமாறு
நம் இலக்குகளைக் கூர்மைப்படுத்துதல் அவசியம்.
'உம்மை நோக்கி என் உள்ளம்' என்று நாம் எதிர்நோக்கத் தடையாக
இருப்பவை எவை?
(அ) ஆன்மிக மந்தநிலை. 'குளிர்ச்சி அல்லது சூடு நலமாக இருந்திருக்கும்'
எனச் சொல்கின்ற ஆண்டவர், 'வெதுவெதுப்பாய் இருப்பதை' கடிந்துகொள்கின்றார்
(காண். திவெ 3:16). வழிபாடுகள், வெளிப்புறக் கொண்டாட்டங்கள்
ஆகியவற்றைத் தாண்டிய ஆன்மிகத்தை நம்மால் கற்பனை செய்ய முடியவில்லை.
கூட்டொருங்கியக்கத் திருஅவைக்காக என்னும் மாமன்றத்தின் சூழலில்,
நம் கொண்டாட்டங்களை ஆய்வுசெய்துபார்க்க நம்மை அழைக்கிறார்
திருத்தந்தை. ஆன்மிகம் அன்பில் கனியும்போது ஆண்டவர்
திருமுன் நாம் தூயோராக நிற்க முடியும்.
(ஆ) கவனச் சிதறல்கள். இணையதளங்களும் சமூக ஊடகங்களும் நம்
இன்றைய குடிவெறியாகவும், களியாட்டமாகவும், கவலையாகவும்
ஏனெனில், எவ்வளவு நுகர்ந்தாலும் இன்னும் அதிகம் நுகரவே
விரும்புகிறோம், மெய்நிகர் உணர்வே உண்மை என நினைக்கிறோம்,
பிறர் பார்க்கவும் விரும்பவும் இல்லையே என்று கவலை
கொள்கிறோம் - மாறிவிட்டன. இவற்றிலிருந்து நம் கண்கள் உயர்ந்தால்தான்
நம் உள்ளம் இறைவனை நோக்கி உயரும்.
(இ) அநீதியால் வரும் சோர்வு. நம் சமூக, அரசியல், பொருளாதர,
சமயம், மற்றும் பணித்தளச் சூழல்களில் நாம் எதிர்கொள்ளும்
அநீதி நமக்கு மனச்சோர்வையும் விரக்தியையும் தருவதால், நம்மால்
நிமிர்ந்துகூடப் பார்க்க இயலாத அளவுக்குச் சோர்ந்து
போகின்றோம். 'ஆண்டவரே நமது நீதி!' என்பது வெறும் எதிர்நோக்காகவே
இருந்துவிடுமோ என அச்சப்படுகின்றோம். ஆண்டவர் தன்
வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை நம் சோர்வை
அகற்றும்.
இறுதியாக, புதிய திருவழிபாட்டு ஆண்டுக்குள் அடியெடுத்து
வைக்கும் நாம் இன்று ஏற்றும் முதல் திரியான 'எதிர்நோக்கு'
அணையாமல் ஒளிவீசுவதாக! 'உம்மை நோக்கி என் உள்ளம்' என்னும்
சரணாகதியும் காத்திருப்பும்தான் 'எதிர்நோக்கு.'
|
|