|
|
|
பாஸ்கா - 02ஆம் ஞாயிறு
- 3ம் ஆண்டு |
|
|
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஆண்டவரில் நம்பிக்கைக் கொண்டவரின் கூட்டம் வளர்ந்துள்ளது.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் (5: 12-16)
அந்நாள்களில் மக்களிடையே பல அரும் அடையாளங்களும் அருஞ்செயல்களும்
திருத்தூதர் வழியாய்ச் செய்யப்பட்டன. அனைவரும் சாலமோன் மண்டபத்தில்
ஒருமனத்தவராய்க் கூடிவந்தனர். மற்றவர் யாரும் இவர்களோடு
சேர்ந்துகொள்ளத் துணியவில்லை.
ஆயினும் மக்கள் இவர்களைப் பற்றிப் பெருமையாகப் பேசினர். ஆண்டவரிடம்
நம்பிக்கை கொண்ட திரளான ஆண்களும் பெண்களும் இவர்களோடு சேர்க்கப்பட்டார்கள்.
பேதுரு நடந்து செல்லும்போது அவர் நிழல் சிலர் மேலாவது படுமாறு
மக்கள் உடல் நலமற்றோரைக் கட்டில்களிலும் படுக்கைகளிலும் கிடத்திச்
சுமந்துகொண்டுவந்து வீதிகளில் வைத்தார்கள்; எருசலேமைச்
சுற்றியிருந்த நகரங்களிலிருந்து மக்கள் உடல் நலமற்றோரையும் தீய
ஆவிகளால் இன்னலுற்றோரையும் சுமந்து கொண்டு திரளாகக் கூடிவந்தார்கள்.
அவர்கள் அனைவரும் நலம் பெற்றனர்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
(திபா:118: 2-4. 22-24. 25-27a (பல்லவி: 1)
Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்;
என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!
2 'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என இஸ்ரயேல் மக்கள்
சாற்றுவார்களாக!
3 'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆரோனின் குடும்பத்தார்
சாற்றுவார்களாக!
4 'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆண்டவருக்கு அஞ்சுவோர்
அனைவரும் சாற்றுவார்களாக.
-பல்லவி
22 கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!
23 ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!
24 ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்;
அகமகிழ்வோம்.
-பல்லவி
25 ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றி தாரும்!
26 ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று
உங்களுக்கு ஆசி கூறுகிறோம்.
27 ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார்.
-பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
சாவுக்கு உட்பட்டேனாயினும், இதோ நான் என்றென்றும்
வாழ்கிறேன்.
திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம்
(1: 9-11A, 12-13, 17-19)
உங்கள் சகோதரனும், இயேசுவோடு இணைந்த நிலையில் உங்கள் வேதனையிலும்
ஆட்சியுரிமையிலும் மனவுறுதியிலும் பங்கு கொள்பவனுமான யோவான் என்னும்
நான் கடவுளின் வாக்கை அறிவித்து இயேசுவுக்குச் சான்று பகர்ந்ததால்
பத்மு தீவுக்கு வர நேர்ந்தது.
ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று தூய ஆவி என்னை ஆட்கொள்ளவே எனக்குப்
பின்னால் பெரும் குரல் ஒன்று எக்காளம் போல முழங்கக் கேட்டேன்.
"நீ காண்பதை ஒரு சுருளேட்டில் எழுதி ஏழு இடங்களிலும் உள்ள
திருச்சபைகளுக்கு அதை அனுப்பி வை" என்று அக்குரல் கூறியது. என்னோடு
பேசியவர் யார் என்று பார்க்கத் திரும்பினேன்.
அப்பொழுது ஏழு பொன் விளக்குத் தண்டுகளைக் கண்டேன். அவற்றின் நடுவே
மானிடமகனைப் போன்ற ஒருவரைப் பார்த்தேன். அவர் நீண்ட அங்கியும்
மார்பில் பொன் பட்டையும் அணிந்திருந்தார். நான் அவரைக் கண்டபொழுது
செத்தவனைப்போல் அவரது காலில் விழுந்தேன்.
அவர் தமது வலக் கையை என் மீது வைத்துச் சொன்னது: "அஞ்சாதே! முதலும்
முடிவும் நானே. வாழ்பவரும் நானே. இறந்தேன்; ஆயினும் இதோ என்றென்றும்
வாழ்கின்றேன். சாவின் மீதும் பாதாளத்தின் மீதும் எனக்கு அதிகாரம்
உண்டு. எனவே நீ காண்பவற்றை, அதாவது இப்பொழுது நிகழ்கின்றவற்றையும்
இனி நிகழ இருப்பவற்றையும் எழுதிவை."
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 20: 29
அல்லேலூயா, அல்லேலூயா! "தோமா, என்னைக் கண்டதால் நம்பினாய்.
காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்," என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
எட்டு நாள்களுக்குப் பின் இயேசு சீடர்களுக்குத்
தோன்றினார்.
புனித யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (20: 19-31)
அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச்
சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள்.
அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, "உங்களுக்கு
அமைதி உரித்தாகுக!" என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லியபின்
அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக்
கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.
இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!
தந்தை என்னை அனுப்பியதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்" என்றார்.
இதைச் சொன்னபின் அவர் அவர்கள்மேல் ஊதி, "தூய ஆவியைப்
பெற்றுக்கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ,
அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ,
அவை மன்னிக்கப்படா" என்றார்.
பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு
இல்லை. மற்றச் சீடர்கள் அவரிடம், "ஆண்டவரைக் கண்டோம்" என்றார்கள்.
தோமா அவர்களிடம், "அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப்
பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி
நான் நம்பமாட்டேன்" என்றார். எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய
சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள்.
அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும்
இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, "உங்களுக்கு அமைதி
உரித்தாகுக!" என்று வாழ்த்தினார்.
பின்னர் அவர் தோமாவிடம், "இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு.
உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கை
கொள்" என்றார். தோமா அவரைப் பார்த்து, "நீரே என் ஆண்டவர்!
நீரே என் கடவுள்!!" என்றார்.
இயேசு அவரிடம், "நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர்
பேறுபெற்றோர்" என்றார். வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு
தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை.
இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி
அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
(திருத்தூதர் பணிகள் 5: 12-16; திருவெளிப்பாடு 1: 9-11, 12-13,
17-19; யோவான் 20: 19-31)
இயேசுவே இறைமகன் என நம்பி வாழ்வு
பெறுவோம்
நிகழ்வு
சில ஆண்டுகளுக்கு முன்பாக யூகோஸ்லாவியாவில் நீதிபதி ஒருவர் இருந்தார்.
ஒருநாள் அவர் தன்னுடைய வீட்டுக்குளியறையில்
குளித்துக்கொண்டிருந்தபொழுது மின்சாரம் தாக்கி, மயக்கம்
போட்டுக் கீழேவிழுந்தார். உடனே அவருடைய மனைவி அவரை மருத்துவமனைக்குத்
தூக்கிக்கொண்டு போனார். மருத்துவமனையிலோ அவரைச் சோதித்துப்
பார்த்த மருத்துவர்கள் அவர் இறந்துபோய்விட்டதாக அறிவித்தார்கள்.
இதனால் அந்த நீதிபதியின் மனைவி உட்பட, அவருடைய குடும்பமே துக்கத்தில்
ஆழ்ந்தது. நீதிபதி இறந்த செய்தி சிறிதுநேரத்துக்குள் பண்பலைகளிலும்
(FM) தொலைக்காட்சிகளிலும் வெளிவரத் தொடங்கி, எல்லாரையும் கவலைக்குள்ளாக்கியது.
இதைத் தொடர்ந்து இறந்துபோன அந்த நீதிபதியின் உடலானது, மறுநாள்
மின் குமிழில் (Electric Cramotorium) வைத்து எரிக்கப்படுவதற்காகப்
பிணவறையில் (Mortuary) வைக்கப்பட்டது.
நள்ளிரவில் திடிரென்று சுயநினைவுக்கு திரும்பிய அந்த நீதிபதி,
தான் பெட்டியில் வைக்கப்பட்டு, பிணவறையில் இருப்பதை நினைத்து
அதிர்ந்துபோனார். உடனே அவர் வெளியேவந்து, பிணவறையைக் காவல்
காத்துக்கொண்டிருந்த காவலாளியிடம், தான் இறக்கவில்லை உயிரோடுதான்
இருக்கிறேன் என்று எடுத்துச்சொன்னார். அவரோ தன்னிடம் பேசுவது
பேய்தான் என்று நினைத்துக்கொண்டு, அங்கிருந்து அலறியடித்து ஓடினார்.
இதற்குப் பின்பு அவர் தன்னுடைய மனைவியைத் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு,
தான் உயிரோடு இருக்கின்ற செய்தியை அவரிடம் சொன்னார். அவரும் தன்னிடம்
பேசுவது பேய்தான் என நினைத்துத் தொடர்பைத் துண்டித்தார். இப்படி
அவர் அந்த நள்ளிரவில், நகரில் இருந்த தன்னுடைய நண்பர்கள்,
தெரிந்தவர்கள் எல்லாருடைய வீட்டுக்கதவைத் தட்டி, தான் இறக்கவில்லை
என்பதை அவர்களிடம் எடுத்துச்சொன்னபோதும் அவர்கள் அவர் சொன்னதை
நம்பாமல், பேய் என்று நினைத்து, கதவைச் சாத்திவிட்டு உள்ளே
சென்றனர்.
இதனால் அவர் பக்கத்து நகரில் இருந்த தன்னுடைய நண்பருக்குத்
தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசினார். அவரோ, இவர் இறந்துவிட்டதாக
வந்த செய்தியைக் கேள்விப்படாதவர். அவரிடம் நீதிபதி நடந்த எல்லாவற்றையும்
சொல்ல, அந்த நண்பர் நீதிபதியின் மனைவி மற்றும் நண்பர்களைத் தொடர்புகொண்டு
உண்மையை எடுத்து சொன்னபின்பு அவர்கள் நீதிபதி இறக்கவில்லை உயிரோடுதான்
என்று நம்பினார்கள்.
இந்நிகழ்வு, இயேசு உயிர்த்தெழுந்தபின்பு, தன்னுடைய சீடர்களுக்குத்
தோன்றியபொழுது, அவர்கள் ஏதோ ஆவியைக் கண்டதுபோல் திகிலுற்றதை
(லூக் 24: 37-39) நினைவூட்டுவதாக இருக்கின்றது. ஓர் ஆவியை கண்டதுபோல்
திகிலுற்று இருந்தவர்களிடம் இயேசு,
"நானேதான்" என்று சொல்லி,
அவர்களிடம் இருந்த அவநம்பிக்கையை விளக்கி நம்பிக்கையை ஏற்படுத்துகின்றார்.
இப்படி உயிர்த்த இயேசு தன்னுடைய சீடர்களுக்குத் தோன்றிய இந்நிகழ்வு
நமக்கு என்னென்ன செய்தியை எடுத்துச் சொல்கின்றது என்று
சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
பயத்திலிருந்த சீடர்களுக்கு அபயம் தந்த இயேசு
யூதர்கள், இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொன்றதைப்
பார்த்துவிட்டு, எங்கே தங்களையும் அவர்கள் பிடித்துக்
கொன்றுவிடுவார்களோ என்று பயந்து, சீடர்கள் தாங்கள் இருந்த அறையின்
கதவை மூடிவைத்திருந்தார்கள் (யோவா 20:1) இப்படிப்பட்ட
சூழ்நிலையில் இயேசு அவர்களுக்கு முன்பாகத் தோன்றி, "உங்களுக்கு
அமைதி உரித்தாகுக" என்று வாழ்த்துகின்றார். இயேசு உயிர்த்து,
தன்னுடைய சீடர்களுக்குத் தோன்றியபோது, தன்மீது அவர்கள் நம்பிக்கைகொள்ளவில்லை
என்றோ, தன்னை விட்டுவிட்டு ஓடிவிட்டார்கள் என்றோ அவர்களைத்
திட்டவில்லை. மாறாக,
'அமைதி உரித்தாகுக' என்ற ஆறுதல் அளிக்கும்
வார்த்தைகளைப் பேசுகின்றார். அதுமட்டுமல்லாமல், தூய ஆவியாரை
அவர்மேல் ஊதி, தன்னுடைய பணியைச் செய்ய மீண்டுமாக அவர்களை அழைக்கின்றார்.
இவ்வாறு இயேசு பயந்துகொண்டிருந்த சீடர்களுக்கு அபயம் தந்து
துணிவைத் தந்து வல்லமையோடு பணியைச் செய்ய வழி வகுக்கின்றார்.
இந்நிகழ்விற்குப் பிறகு சீடர்கள் புதிய உத்வேகத்துடன் செயல்பட்டதைக்கொண்டே
இயேசு தன் சீடர்களுக்கு தந்த அபயம், துணிவு எத்துணை உயர்ந்தது
என்பதை புரிந்துகொள்ளலாம்.
அவநம்பிக்கையோடு இருந்தவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டிய இயேசு
இயேசு உயிர்ந்தெழுந்த செய்தியை இயேசுவின் பெண் சீடர்கள்
திருத்தூதர்களிடம் சொன்னபோது, திருத்தூதர்கள் அவர்கள் சொன்னதை
நம்பாமல், ஏதோ பிதற்றுகிறார்கள் (லூக் 24: 11) என்று இருந்தார்கள்.
இப்படி நம்பிக்கை இல்லாமல் இருந்த சீடர்கள் மத்தியில்தான் இயேசு
தோன்றி, அவர்கள் அவர்மீது நம்பிக்கைகொள்ளச் செய்கின்றார்.
மேலும் தோமா சீடர்கள் சொன்னதைக் கேட்டும், அவர்மீது நம்பிக்கை
கொள்ளாமல் இருந்ததால், இயேசு அவருக்குத் தன்னை வெளிபடுத்தி,
"ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்" என்று சொல்ல, அவரும் இயேசுவிடம்
நம்பிக்கைகொள்கின்றார். இவ்வாறு அவநம்பிக்கையோடு இருந்த சீடர்களுடைய
உள்ளத்தில் நம்பிக்கையை ஊட்டி, அவர்களைப் புதுப்படைப்பாக
மாற்றுகின்றார் இயேசு.
இங்கு ஒரு சிறிய தகவல். இயேசு உயிர்த்தெழுந்த செய்தியை மற்ற சீடர்கள்
தோமாவிடம் எடுத்துச் சொன்னபோது, அவர் அதை நம்பவில்லை. இந்தத்
தோமா அல்லது திதிம் என்றால் இரட்டையர்கள் (Twin) என்று அர்த்தம்.
தோமாவோடு உடன்பிறந்த சகோதரரைக் குறித்த குறிப்புகள் எங்கினும்
இல்லை. இது குறித்து ஒருசில விவிலிய அறிஞர்கள் சொல்லும்பொழுது,
தோமோவோடு உடன்பிறந்த சகோதர் நீங்களோ, நானோ இருக்கலாம் என்றும்
தோமா எப்படி அவநம்பிக்கையோடு இருந்து, இயேசுவின்மீது நம்பிக்கை
கொண்டாரோ, அதுபோன்று நாம் ஒவ்வொருவரும் இயேசுவிடம் நம்பிக்கைகொண்டு
வாழவேண்டும் என்றும் சொல்வார்கள். ஆகவே, இயேசுவின் சீடர்கள் எப்படி
அவர்மீது கொண்டுவாழத் தொடங்கினார்களோ அதுபோன்று நாமும் இயேசுவின்மீது
நம்பிக்கை கொண்டு வாழ முயற்சிப்போம்.
சாவிலிருந்து வாழ்விற்கு அழைக்கும் இயேசு
இன்றைய நற்செய்தி வாசகம், இயேசு திருத்தூதர்களுக்கு தோன்றி,
அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியதோடு நின்றுவிடவில்லை.
மாறாக, நாமும் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்பதற்காக, "இயேசுவே
இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்கும் நம்பி அவர் பெயரால்
வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பட்டுள்ளன" என்ற
செய்தியோடு முடிகின்றது. யோவான் நற்செய்தியாளர் தன்னுடைய நற்செய்தி
நூலின் வழியாக, இயேசுவை இறைமகன் என ஒவ்வொருவரும் நம்பி ஏற்றுக்கொள்ளவேண்டும்
என்ற செய்தியைத் திரும்பத் திரும்ப வலியுறுத்திக்கூறுகின்றார்.
ஆகையால், இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம் அவர்மீது நம்பிக்கை
கொண்டால் வாழ்வு, அவநம்பிக்கை கொண்டால் தாழ்வு என்ற உண்மையை
உணர்ந்து, அவர்மீது நம்பிக்கை வைத்து, அதை வாழ்வாக்கி, அவர்தரும்
ஆசியைப் பெற முயற்சி செய்வோம்.
சிந்தனை
'இயேசு ஆண்டவர் என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள்
உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப்
பெறுவீர்கள்' என்பார் தூய பவுல் (உரோ 10:9). ஆகவே, நாம் இயேசுவே
இறைமகன்/ ஆண்டவர் என்று நம்பி, அவருடைய விழுமியங்களை
வாழ்வாக்குவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
கூட்டிலிருந்து வெளியே
பாஸ்கா காலம் 2ஆம் ஞாயிறு
(ஏப்ரல் 28, 2019)
திருத்தூதர் பணிகள் 5:12-16
திருவெளிப்பாடு 1:9-13,17-19
யோவான் 20:19-31
போன வாரம் உயிர்ப்பு பெருவிழா அன்று நீங்கள் யாருக்காவது 'ஈஸ்டர்
முட்டை' பரிசளித்தீர்களா? கிறிஸ்துமஸ் அன்று 'கிறிஸ்துமஸ் மரம்'
வைக்கும் வழக்கம் எப்படி வந்தது என்று நமக்கு காலப்போக்கில்
மறந்துவிட்டதுபோல, உயிர்ப்பு பெருநாள் அன்று 'ஈஸ்டர் எக்' எப்படி
வந்தது என்றும் மறந்து வருகிறது. இன்று பேக்கரிகளையும், சூப்பர்
மார்க்கெட்டுகளையும் அலங்கரிக்கும் ஈஸ்டர் முட்டைகள் பல
பொறிக்காமலேயே போய்விடுகின்றன. ஈஸ்டர் முட்டையின் பொருளை நாம்
அறிந்துள்ளோமோ இல்லையோ, இன்றைய கார்ப்பரெட் உலகம் அறிந்திருக்கிறது.
ஆகையால்தான் அதையும் ஒரு பரிசுப்பொருளாக, விற்பனைப் பொருளாக
மாற்றிவிட்டது.
ஈஸ்டர் முட்டை இரண்டு விடயங்களை அடையாளப்படுத்துகிறது. ஒன்று,
இயேசு. சிலுவையில் அறையப்பட்ட இறந்த அவர் கல்லறையில் அடக்கம்
செய்யப்படுகின்றார். ஆக, கல்லறையில் வைக்கப்பட்ட இயேசுவை முதலில்
அடையாளப்படுத்துகிறது முட்டை. இரண்டு, திருத்தூதர்கள். இயேசு
சிலுவையில் அறையப்பட்ட இறக்க, தங்களையும் கைது செய்துவிடுவார்களோ
என்று அஞ்சிய திருத்தூதர்கள் பூட்டிய அறைக்குள் ஒளிந்துகொள்கின்றனர்.
திருத்தூதர்கள் அறைக்குள் அடைந்து கிடந்ததை இரண்டாவதாக அடையாளப்படுத்துகிறது
முட்டை. கல்லறை என்ற முட்டையை இயேசு தாமே உடைத்து
வெளியேறுகின்றார். புதிய வாழ்வுக்குக் கடந்து செல்கின்றார்.
பூட்டிய அறை என்ற முட்டையை திருத்தூதர்கள் உடைத்து வெளியேற இயேசு
என்ற தாய்க்கோழியின் துணை தேவைப்படுகிறது.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். திப 5:12-16), தூய ஆவியானவரின்
வருகைக்குப் பின் துணிவுடன் இயேசுவுக்குச் சான்று பகர்ந்த
திருத்தூதர்களின் வாழ்க்கை முறை பற்றி பதிவு செய்கின்ற லூக்கா,
அவர்கள் வழியாக நடந்தேறிய அருஞ்செயல்கள் மற்றும் அரும் அடையாளங்கள்
பற்றி இங்கே குறிப்பிடுகின்றார். இயேசுவுக்கும், திருத்தூதர்களுக்குமான
இடைவெளியை மிக அழகாக பதிவு செய்கின்றார் லூக்கா. அதாவது, இயேசு
அறிகுறிகளை செய்தார். ஆனால், இங்கே திருத்தூதர் வழியாக அறிகுறிகள்
செய்யப்படுகின்றன. 'நம்பிக்கை கொண்டவர்கள்' ஒரே மனத்தோடு கூடி
வருகின்றனர்.இந்தக் கூடிவருதல் அவர்கள் தங்கள் நம்பிக்கையில்
நிலைத்திருப்பதற்கு உதவி செய்ததோடு, நம்பிக்கை குன்றியவர்களுக்கு
துணிவையும் தந்தது. தங்களின் குடும்பம், பின்புலம், சமூக அந்தஸ்து,
வேலை போன்றவற்றில் வேறுபட்டிருந்தாலும், இயேசுவின் மேல் உள்ள
நம்பிக்கை ஒருமனத்தோடு இவர்கள் வாழ வழிசெய்கிறது. திருத்தூதர்
பேதுருவை முதன்மைத் திருத்தூதராக தொடக்கத் திருஅவை ஏற்றுக்கொள்ளத்
தொடங்குகிறது. அவரின் நிழல் பட்டாலே நலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை
மக்கள் பெறுகின்றனர். இயேசு செய்த அறிகுறிகள் பெரும்பாலும் அவரின்
தொடுதலால் செய்யப்பட்டவை. இயேசு விண்ணேறிச் சென்றிபின் அவரின்
தொடுதல் இனி சாத்தியமில்லை. மேலும், விண்ணேறிச் சென்ற இயேசுவால்
தன் திருத்தூதரின் நிழலை வைத்துக்கூட குணம் தர முடியும். இவ்வாறாக,
இங்கே முதன்மைப்படுத்தப்படுவது இயேசுவின் ஆற்றலே.
'ரிலே' ஓட்டத்தில் ஓடுவதுபோல கையில் இறையாட்சி என்னும் தீபத்தை
எடுத்துக் கொண்டு ஓடிய இயேசு, அதைத் தன் சீடர்களின் கையில்
கொடுத்துவிட்டார். இனி அவர்கள்தாம் அதை முன்னோக்கி எடுத்துச்
செல்ல வேண்டும். 'அவர்களிடம் கொடுத்துவிட்டோம். நம் பணி
முடிந்துவிட்டது' என அவர் ஓய்ந்துவிடாமல், நிழலாக இன்றும் தொடர்கின்றார்.
இவ்வாறாக, தன்னுடைய தொடர் உடனிருப்பின் வழியாக இயேசு திருத்தூதர்களை
அவர்களின் மூடிய கதவுகளிலிருந்து வெளியேற்றுகின்றார்.
இன்றைய இரண்டாம் வாசகம் (காண். திவெ 1:9-13, 17-19) பத்முதீவுக்கு
நாடுகடத்தப்படும் திருத்தூதர் யோவான் கிறிஸ்துவைக் காட்சியாகக்
காண்பதையும், கிறிஸ்துவைக் கண்டபோது அவரிடம் எழுந்த உள்ளுணர்வுகளையும்,
இந்தக் காட்சியை எழுதி வைக்குமாறு அவருக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையையும்
முன்வைக்கிறது. தான் திருத்தூதராக இருந்தாலும், கிறிஸ்துவையே
காட்சியில் கண்டாலும், நம்பிக்கை கொண்ட நிலையில் அனைவரோடும்
'வேதனையிலும், ஆட்சியுரிமையிலும், மனவுறுதியிலும்' ஒன்றித்திருப்பதாகச்
சொல்கின்றார் யோவான். ஆக, கிறிஸ்து தான் தரும் நம்பிக்கையால்
இன்னும் பலரை அழிவிலிருந்து வெளியேற்றுகிறார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில், கூட்டிலிருந்து வெளியே தம் சீடர்களை
அழைக்கும் இயேசு நம்மையும் நம்முடைய சௌகரிய மையங்களிலிருந்து
வெளியேற அழைக்கின்றார்.
எப்படி?
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். யோவா 20:19-31) மூன்று பகுதிகளாக
அமைந்துள்ளது:
20:19-23 இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல்
20:24-29 இயேசு தோமா மற்றும் மற்ற சீடர்களுக்குத் தோன்றுதல்
20:30-31 நற்செய்தி முடிவுரை
இந்நற்செய்தி வாசகத்தின் பின்புலத்தை முதலில்
புரிந்துகொள்வோம்:
இயேசு பிறந்த ஆண்டு '0' என வைத்துக் கொள்வோம். அவர் இறந்த ஆண்டு
33. யோவான் நற்செய்தி எழுதப்பட்ட ஆண்டு '100.' ஒரு தலைமுறை என்பது
40 ஆண்டுகள். இயேசுவின் இறப்புக்குப் பின் ஏறக்குறைய இரண்டு தலைமுறைகள்
கடந்துவிடுகின்றன. இயேசுவைப் பார்த்த அவரின் சமகாலத்தவருக்கு
அவரையும், அவரின் உயிர்ப்பையும் நம்புவது பெரிய விஷயமல்ல. ஆனால்,
அடுத்தடுத்த தலைமுறை வரும்போது கூடவே நம்பிக்கை சிக்கல்களும்
எழுகின்றன. அப்படி முதன்மையாக எழுந்த சிக்கல்கள் மூன்று: (1)
இயேசு உயிர்த்தார் என்றால், அவர் உடலோடு உயிர்த்தாரா? அல்லது
ஆவியாக உயிர்த்தாரா? ஆவியாக உயிர்த்தார் என்றால், அதை உயிர்ப்பு
என்று நாம் சொல்ல முடியாது. உடலோடு உயிர்த்தார் என்றால் அவர்
எப்படிப்பட்ட உடலைக் கொண்டிருந்தார்? பூட்டிய அறைக்குள்
நுழைந்த அவர் எப்படி உடலைப் பெற்றிருக்க முடியும்? - 'உடலா' 'ஆவியா'
என்பது முதல் கேள்வி. (2) கிரேக்க தத்துவ இயல் மேலோங்கி நின்ற
இயேசுவின் சமகாலத்தில், 'புலன்களுக்கு எட்டுவது மட்டுமே உண்மை'
(எம்பிரிசிஸ்ட்) என்று சொன்ன தத்துவம் மேலோங்கி நின்றது. இந்த
தத்துவயியலார்கள், கண்களுக்குத் தெரிவதை மட்டுமே நம்பினார்களே
தவிர, கண்ணுக்குத் தெரியாத கடவுள், ஆவி, மறுபிறப்பு, மோட்சம்,
நரகம், வானதூதர் என எல்லாவற்றையும் கேள்விக்குட்படுத்தினர். இப்படிப்பட்டவர்களுக்கு
இயேசுவின் மேலுள்ள நம்பிக்கையை எப்படி உருவாக்குவது? - இது அடுத்த
பிரச்சினை. மற்றும் (3) திருத்தூதர்கள் பல நாடுகளுக்குப் பயணம்
செய்து இயேசுவுக்குச் சான்று பகர்கின்றனர். திருத்தூதர் தோமா
தான் அதிக தூரம் பயணம் செய்து நம் ஊர் வரைக்கு வருகின்றார். இப்படி
இவர்கள் போகும் இடத்தில் இவர்களுக்கு வரும் புதிய சிக்கல் என்னவென்றால்,
இந்த தூர நாடுகளில் வசிப்பவர்கள், இயேசு என்ற வரலாற்று எதார்த்தத்திடமிருந்து
காலத்தாலும், இடத்தாலும் அந்நியப்பட்டவர்கள். 'நீங்க அவரைப்
பார்த்திருக்கிறீங்க! நம்புறீங்க!' 'ஆனா, நாங்க அவரைப் பார்த்ததில்லை.
அவரை எதுக்கு நம்பணும்?' என அவர்கள் கேள்வி கேட்டால், அவர்களுக்கு
சொல்வதற்காக கண்டுபிடித்த ஒரு பதில்தான்: 'கண்டதாலா நம்பினாய்!
காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்.' தோமாதான் அதிக தூரம் செல்ல
வேண்டியிருந்ததால், தோமாவே இந்நிகழ்வின் கதைமாந்தராக்கப்படுகின்றார்.
தோமா - இயேசு - விரல் நிகழ்வு தோமாவின் நற்செய்தியிலும், அவரின்
பணிகள் பற்றிய குறிப்பேட்டிலும் இல்லை. மேலும், தோமாவைப் பற்றிய
மற்ற நிகழ்வுகள் (யோவா 11:16, 14:5, 21:2) அவரை 'சந்தேகிப்பவராக'
நமக்கு அடையாளப்படுத்தவில்லை. மேலும், இயேசு தோமாவுக்குத்
தோன்றும் நிகழ்வு ஒரு பிற்சேர்க்கை போலவே அமைந்துள்ளது. அதாவது,
இயேசு தன் சீடர்களுக்குத் தோன்றி தூய ஆவி கொடுக்கின்றார். பாவம்
மன்னிக்கும் அதிகாரம் கொடுக்கின்றார். அப்புறம் மறைந்துவிடுகின்றார்.
நற்செய்தியாளர் டக்கென்று தன் குரலை மாற்றி, 'ஆனால் இயேசு வந்தபோது
தோமா அங்கு இல்லை' என்கிறார். அப்படியெனில் தோமா தூய ஆவியைப்
பெறவில்லையா? அல்லது பாவ மன்னிப்பு அதிகாரம் அவருக்கு கொடுக்கப்படவில்லையா?
'சீடர்கள்' என முதலில் சொல்லுமிடத்திலேயே, 'தோமாவைத் தவிர மற்ற
சீடர்கள்' என்று அவர்கள் சொல்லியிருக்கலாமே? இந்த பாடச் சிக்கல்களை
வைத்துப் பார்க்கும்போது, யோவானின் திருஅவை கொண்டிருந்த இறையியல்
கேள்விகளுக்கு விடையாக, தன் கற்பனைத்திறத்தால் நற்செய்தியாளர்
உருவாக்கிய நிகழ்வே 20:24-31.
இந்நிகழ்வு இயேசு உயிர்த்த அன்றே மாலை நேரத்தில் நடப்பதாக எழுதுகிறார்
யோவான். 'மூடிய கதவுகள்' என்னும் சொல்லாடல் கதையில் இறுக்கத்தை
அதிகரிக்கிறது. யோவான் நற்செய்தியாளர் திருத்தூதர்களை பன்னிருவர்
என அழைப்பதில்லை. யூதாசு காட்டிக்கொடுப்பவனாக மாறிவிட்டதால்,
அவரை உள்ளிழுக்கும் பெயரை இவர் தவிர்க்கிறார். இங்கே 'சீடர்கள்'
என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக!'
என்று இயேசு சீடர்களை வாழ்த்துகிறார். இது ஒரு சாதாரண வாழ்த்து
என்றாலும், இங்கே இயேசு நிறைவேற்றும் முதல் வாக்குறுதியாக இருக்கிறது
(காண். யோவா 14:27). உலகின் பகையையும், எதிர்ப்பையும் தாங்க
வேண்டிய தன் சீடர்களுக்கு (15:18-25) அமைதியை பரிசளிக்கின்றார்
இயேசு. சீடர்கள் தோமாவிடம், 'ஆண்டவரைக் கண்டோம்' என்று
சொல்கின்றனர். இந்த வார்த்தைகள் வழியாக யோவான் இந்நிகழ்வை
'நான் ஆண்டவரைக் கண்டேன்' என்ற (20:18) மகதலாவின் வார்த்தைகளோடு
இணைக்கின்றார். அங்கே மரியாள் இயேசுவைக் கட்டிப்பிடிக்கின்றாள்.
இங்கே தோமா அவரின் உடலை தன் விரலால் ஊடுருவுகின்றார். இந்த இரண்டு
நிகழ்வுகளும் இயேசு உடலோடு இருந்தார் என்பதற்குச் சான்றாக அமைகின்றன.
இயேசுவை நேரில் கண்ட தோமா, 'நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்'
என அறிக்கையிடுகின்றார். இதுதான் யோவான் நற்செய்தியின் இறுதி
நம்பிக்கை அறிக்கை. 'என்னைக் கண்டவர் தந்தையைக் கண்டார்'
(14:9) என்ற இயேசுவின் வார்த்தைகள் இங்கே உண்மையாகின்றன.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் மூன்று வகையான நகர்வுகள் இருக்கின்றன:
அ. பூட்டிய அறைக்குள்ளிருந்து வெளியே
'தந்தை என்னை அனுப்பியதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்' என்கிறார்
இயேசு. அழைத்தலின் மறுபக்கம்தான் அனுப்புதல். அழைக்கின்ற அனைவரும்
அனுப்பப்படுவர் என்பதே நிதர்சனமான உண்மை. அழைப்பு என்பது
வெறும் உரிமை அல்ல. அதில், அனுப்பப்படுதலின் கடமையும் இருக்கிறது.
இன்று, திருமணம், அருள்பணிநிலை என நாம் எந்த அழைப்பைப்
பெற்றிருந்தாலும் அதில் அடங்கியிருக்கும் அனுப்புதலையும் நாம்
உணர வேண்டும். அனுப்பப்படாமல் இருக்கும் வாழ்வு - முட்டைக்குள்
அடைந்த கோழிக்குஞ்சு முட்டைக்கும் தனக்கும் ஆபத்தாய் மாறுவது
போல - ஆபத்தாய் மாறிவிடும்.
இன்று நான் அடங்கியிருக்கும் பூட்டிய அறை எது? பூட்டிய அறையின்
இருள், பாதுகாப்பு, மற்றவர்களின் உடனிருப்பு என்னுடைய சௌகரிய
மையமாக மாறிவிடும்போது என்னால் வெளியே செல்ல முடிவதில்லை.
வெளியே செல்வதற்கு நான் என் சௌகரிய மையத்தை விட்டு வெளியே வர
வேண்டும். 'கடவுள் தன்மை' என்ற சௌகரிய மையத்திலிருந்து இயேசு
வெளியேறியதால்தான் அவரால் மனித தன்மையை ஏற்க முடிந்தது.
மேலும், நான் என்னையே அடுத்தவரிடமிருந்து தனிமைப்படுத்திப்
பூட்டிக்கொள்ளும்போது என் வாழ்க்கை முழுமை அடைவதில்லை.
ஆ. கோபத்திலிருந்து மன்னிப்புக்கு
சீடர்கள்மேல் ஊதி தூய ஆவுpயை அவர்கள்மேல் பொழிந்த இயேசு
பெந்தெகோஸ்தே திருநாளின் முன்சுவையை அளிக்கின்றார். மேலும், முதல்
ஆதாமின்மேல் கடவுள் தன் மூச்சைக் காற்றி ஊதி அவனுக்கு வாழ்வு
தந்தது போல. இங்கே தன் சீடர்களின்மேல் ஊதி அவர்களுக்குப்
புதுவாழ்வு அளிக்கின்றார் இயேசு. 'நீங்கள் எவருடைய பாவங்களை மன்னிப்பீர்களோ'
என்ற வாக்கியத்தை நாம் பெரும்பாலும் ஒப்புரவு அருள்சாதன உருவாக்கம்
என்று மேற்கோள் காட்டுகின்றோம். அல்லது இது அருள்பணியாளர்களுக்கு
மட்டுமே பொருந்துகிறது என்று சொல்கிறோம். ஆனால், இங்கே இயேசு
மன்னிப்பு என்ற மதிப்பீட்டை அனைவருக்குமான மதிப்பீடாகப் பதிவு
செய்கின்றார். சீடர்கள் அறைக்குள் ஒளிந்து நிற்கக் காரணம் யூதர்களின்
மேல், உரோமையரின் மேல் கொண்டிருந்த பயமும் கோபமுமே. தங்கள் தலைவரை
இப்படிக் கொன்றுவிட்டார்களே என்ற கோபம், தங்களையும் அதே போல
செய்துவிடுவார்களோ என்ற பயம். இந்தப் பின்புலத்தில்தான் அவர்களுக்குத்
தோன்றுகின்ற இயேசு அவர்களை மன்னிப்பிற்கு அழைத்துச்
செல்கின்றார். ஆக, மன்னிப்பின் வழியாக நாம் நம்முடைய கூட்டை உடைத்து
வெளியே செல்கிறோம்.
மன்னிக்க மறுக்கும் உள்ளம் மற்றவர்களை உள்ளே வராமல்
பூட்டிக்கொள்கிறது. மேலும், அமைதியின் தொடர்ச்சியாகவே இயேசு மன்னிப்பை
முன்வைக்கின்றார். மன்னிக்கின்ற மனம் அமைதியை அனுபவிக்கும். அமைதியை
அனுபவிக்கும் மனம் மன்னிக்கும்.
இ. சந்தேகத்திலிருந்து நம்பிக்கைக்கு
'கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபேற்றோர்' என்கிறார்
இயேசு. இயேசுவின் வெற்றுக் கல்லறையை நோக்கி ஓடும் யோவான் 'கண்டார்,
நம்பினார்' (20:8). இங்கே தோமா இயேசுவைக் 'கண்டார், நம்பினார்.'
ஆனால், இனி வரப்போகும் தலைமுறைகள் காணாமல்தான் நம்ப வேண்டும்
முதல் ஏற்பாட்டில் ஈசாக்கின் பார்வை மங்கியிருந்தபோது,
யாக்கோபு ஏசாவைப்போல உடையணிந்து, அவரை ஏமாற்றி தன் தந்தையின்
ஆசியை உரிமையாக்கிக் கொள்கின்றார். ஈசாக்கு தன் கண்களையும்,
தொடுதலையும் நம்பியதால் ஏமாற்றப்பட்டார். ஆனால், ஆபிரகாம் காணாமலேயே
இறைவனின் வாக்குறுதியை நம்பினார். அவரே நம்பிக்கையால் இறைவனுக்கு
ஏற்புடையவராகிறார். 'நம்பிக்கை கொள்கிற உள்ளம் நஞ்சையும் எதிர்கொள்ளும்'
என்பது பழமொழி. நம்பிக்கை ஒன்றே நம்மைச் செயல்படத் தூண்டுகிறது.
முதல் வாசகம் சொல்லும் அறிகுறிகள் அல்லது அரும் அடையாளங்கள்,
இரண்டாம் வாசகம் சொல்லும் காட்சி - இந்த இரண்டும் நமக்கு நடக்கவில்லையென்றாலும்,
நாம் காணாமலே நம்பினால், இன்றும் என்றும் பேறுபெற்றவர்களே.
இறுதியாக, இன்று நம் ஒவ்வொருவரையும் நாம் ஒளிந்திருக்கும் அல்லது
அடைந்திருக்கும் ஈஸ்டர் முட்டையிலிருந்து வெளிவர அழைக்கிறது இன்றைய
இறைவாக்கு வழிபாடு. இன்றைய ஞாயிற்றை நாம் இறைஇரக்கத்தின்
ஞாயிறு என அழைக்கின்றோம். இயேசுவில் நாம் இறைவனின் இரக்கத்தின்
முகத்தைக் காண்கிறோம். இதையே நாம் இன்று மற்றவர்களுக்கு அளிக்கவும்
அழைக்கப்படுகிறோம். இன்றைய உலகின் தேவை இரக்கமே. தன்
கூட்டைவிட்டு தான் வெளியேறும் ஒருவர் தன் கட்டின்மையில், மன்னிப்பில்,
நம்பிக்கையில், சரணாகதியில் இரக்கம் காட்ட முடியும்.
(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
"இயேசு தோமாவிடம், 'நீ என்னைக் கண்டதால் நம்பினாய்.
காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்' என்றார்" (யோவான் 20:29)
அன்பார்ந்த நண்பர்களே!
-- சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த இயேசு பலருக்குத் தோன்றினார்
என நற்செய்தி நூல்களும், திருப்பணிகள் நூலும், தூய பவுலும்
குறிப்பிடுகின்றனர். தாம் தேர்ந்துகொண்ட சீடர்களுக்கு இயேசு
தோன்றிய நிகழ்ச்சி விரிவாகத் தரப்பட்டுள்ளது. குறிப்பாக, தூய
தோமா இயேசுவைக் கண்டு அவரில் நம்பிக்கை கொண்ட நிகழ்ச்சி நம்
கவனத்தை ஈர்க்கிறது. ஏனென்றால் இயேசு தோன்றியபோது தோமா அங்கே
இல்லை. தோமாவிடம் பிற சீடர்கள் தாங்கள் இயேசுவைக் கண்டதாகக்
கூறிய பிறகும் அவர் நம்ப மறுக்கிறார். தாமாகவே நேரடியாக இயேசுவைக்
கண்டால்தான் நம்பமுடியும் என அவர் உறுதியாகக் கூறிவிட்டார். எட்டு
நாள்களுக்குப் பிறகு இயேசு மீண்டும் ஒருமுறை சீடர்களுக்குத்
தோன்றியபோது தோமாவும் கூட இருக்கிறார். இயேசு தோமாவை அழைக்கிறார்.
தம் அருகே வந்து தம்மைத் தொட்டுப் பார்க்கச் சொல்கிறார். ஐயம்
தவிர்த்து நம்பிக்கை கொள்ளக் கேட்கிறார். இயேசுவை அணுகிச்
சென்று, அவரைத் தொட்டுப் பார்க்கும் துணிச்சல் தோமாவுக்கு வரவில்லை.
ஏன், இயேசுவின் குரலைக் கேட்டதுமே அவருடைய உள்ளம்
நெகிழ்ந்துவிட்டது. தம் தலைவரும் போதகருமான இயேசுவே தம்
முன்னால் நிற்கிறார் என்னும் எண்ணம் தோமாவின் இதயத்தை நிரப்பிவிட்டது.
அப்போது இயேசு தோமாவைப் பார்த்து, 'நீ என்னைக் கண்டதால் நம்பினாய்.
காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்' என்கிறார்.
-- இங்கே "பேறுபெற்றோர்" எனக் குறிப்பிடப்படுவோர் நாம்தாம்.
நாம் உயிர்த்தெழுந்த இயேசுவை நேரடியாக நம் கண்களால் காணவில்லை.
அவருடைய குரலை நாம் நம் காதுகளால் கேட்கவில்லை. அவரை அணுகிச்
சென்று தொட்டுப்பார்க்கவும் நமக்கு வாய்ப்பில்லை. ஆனால் நாம்
இயேசுவை நம் ஆண்டவராக, உயிர்த்தெழுந்து நமக்கு உயிர் வழங்கும்
இறைவனாக ஏற்கிறோம். தோமாவுக்குத் தோன்றிய ஐயம் நமக்கும் தோன்றலாம்.
ஆனால் ஐயத்தைத் தவிர்த்து நம்பிக்கை கொள்ள வேண்டும் என்னும் இயேசுவின்
அழைப்பு நம் இதயச் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. தோமா
இயேசுவைத் தம் "ஆண்டவர்" என்றும் "கடவுள்" என்றும் அறிக்கையிட்டார்
(காண்க: யோவா 20:28). அதுபோல நாமும் இயேசுவை நம் மீட்பராக ஏற்று,
அவருடைய வழியில் நடந்துசென்றிட அழைக்கப்படுகிறோம். உண்மையிலேயே
நாம் "பேறுபெற்றோர்".
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
திருப்பலி முன்னுரை :
நம்பிக்கை கொண்டோரே,
பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறு திருவழிபாட்டுக்கு நம் ஆண்டவர்
பெயரால் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். இறை இரக்கத்தின்
ஞாயிறை சிறப் பிக்கும் இன்றைய நாளில், இறைமகன் இயேசு தம்
திருத்தூதர்கள் வழியாக, பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை
திருச்சபைக்கு வழங்கிய நிகழ்வு இன்றைய நற்செய்தியில் இடம்பெறுகிறது.
நாம் கடவுள் மீது எந்த அளவுக்கு சந்தேகம் கொண்டிருந்தாலும்,
நமது ஐயங்களைப் போக்க கடவுள் இரக்கத்துடன் காத்திருக்கிறார் என்பதை
உணர அழைக்கப்படுகிறோம். உயிர்த்த இயேசுவில் முழுமையான நம்பிக்கை
வைக்கவும், மரணத்தை வென்ற அவருக்கு சான்று பகரவும் உறுதி ஏற்போம்.
இயேசுவின் உயிர்ப்பினில் மனிதர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியும்,
மன அமைதியும் பிறக்கின்றது. பாவத்தின் விளைவாக மனித குலம் சந்திக்கும்
எந்தத் தடைகளும் இயேசுவின் உயிர்ப்பினால் தகர்க்கப்படுகின்றது.
உங்களுக்கு அமைதி உரித்தாகுக என்று தம் சீடரை வாழ்த்தி, பலப்படுத்திய
இயேசு நமக்கும் அதே அற்புதமான ஆசீர்வாதத்தைத் தருகின்றார். அத்தோடு
நாம் உடலிலும், ஆன்மாவிலும் நலம் பெற தூய ஆவியைப் பொழிந்து பாவமன்னிப்பு
என்னும் அருட்சாதனத்திற்கான பணியையும், அனுமதியையும் அவருடைய
பணியைத் தொடர்ந்தாற்றுகின்றவர்களுக்கு வழங்குகின்றார். இதன் வழியாக
நாம் நம்பிக்கை கொண்டு சொல்லொண்ணா, ஒப்பற்ற மகிழ்ச்சியடைந்து
பேருவகை கொள்வதோடு நம் நம்பிக்கையின் குறிக்கோளான ஆன்ம
மீட்பையும் பெறுகிறோம். இந்தப் பேருண்மைகளை மனத்தில் ஆழப் பதித்தவர்களாகத்
தொடரும் திருப்பலியில் பங்கேற்போம்.
பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு 2019 04
28
மூன்றாம் ஆண்டு
முன்னுரை:
பாஸ்கா கால இரண்டாம் வாரத்திற்கு வந்துள்ளோம். இறைஇரக்க ஞாயிறு
என்றும் இன்று அழைக்கப்படுகின்றது. பேதுருவின் நிழல் பட்டாலேயே
குணம் பெற்றார்கள் என்று லூக்கா பதிவு செய்துள்ளார்.
அதே வேளையில் தோமாவின் விருப்பத்தை புரிந்து இரக்கத்துடனே
அவரிடம் காயங்களை காட்டி நம்ப அழைக்கின்றார். துன்பங்கள்
துயரங்கள் வழி நம்முடைய நம்பிக்கையை உறதிப்படுத்திட முடியும்
என்பதனை உணர்த்துகின்றார்.
குணம் பெற விரும்பியும், வாழ்விலே நாம் படும் துயரங்கள் நம்மை
நம்பிக்கையிலே வளர்த்திட விழையும் என்று நம்பியும் பலியிலே
பங்கேற்று பயன்பெறுவோம்.
மன்றாட்டுக்கள்:
திருச்சபையின் பொறுப்பாளர்கள் தங்களை பக்குவப்படுத்தி, தங்களது
பணியினால் குணம் கொடுக்கின்ற அன்பர்களாக உருவெடுக்க அருள்தர
இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
நாட்டின் நலனிலே உண்மை அக்கரை கொண்டு பணி செய்யும்
அன்பர்களுக்கு, நீரே பாதுகாப்பாக இருந்து அவர்கள்
முன்னெடுக்கும் காரியங்களால் நாட்டின் வளமை பாதுகாக்கப்பட
அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
வாழ்விலே சந்திக்கின்ற துன்பதுயரங்களை நம்பிக்கையின்
வித்துக்களாக கொண்டு நம்பிக்கையில் நாளும் வளர்ந்திட அருள்தர
இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
போருக்கான அபாயச்சூழல் தணிந்து, பேச்சு வார்த்தைகளின் வழியாக
அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்பட அருள்தர இறைவா உம்மை
மன்றாடுகின்றோம்.
வெப்பமிகுதியால் பரவும் தொற்று நோய்களில் இருந்து எம்மை
காப்பாற்ற, நல்ல மழையை தந்து எம்மை காக்க அருள்தர இறைவா உம்மை
மன்றாடுகின்றோம்.
|
|