|
year c |
|
தவக்காலம் 2ஆம் ஞாயிறு |
|
|
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
கடவுள் ஆபிராமுடன் உடன்படிக்கை செய்தார்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 15: 5-12, 17-18, 21b
அந்நாள்களில் ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, "வானத்தை
நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப் பார். இவற்றைப்
போலவே உன் வழி மரபினரும் இருப்பர்" என்றார்.
ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு
நீதியாகக் கருதினார்.
ஆண்டவர் ஆபிராமிடம், "இந்நாட்டை உனக்கு உரிமைச் சொத்தாக அளிக்க
உன்னைக் கல்தேயரின் ஊர் என்ற நகரிலிருந்து இங்கு அழைத்து வந்த
ஆண்டவர் நானே" என்றார்.
அதற்கு ஆபிராம், "என் தலைவராகிய ஆண்டவரே, இதை நான் உரிமையாக்கிக்
கொள்வேன் என்பதை எப்படித் தெரிந்துகொள்வேன்?" என்றார்.
ஆண்டவர் ஆபிராமிடம், "மூன்று வயதுள்ள இளம் பசு, மூன்று வயதுள்ள
வெள்ளாடு, மூன்று வயதுள்ள செம்மறியாடு, ஒரு காட்டுப்புறா, ஒரு
மாடப்புறா ஆகியவற்றை என்னிடம் கொண்டுவா" என்றார்.
ஆபிராம் இவற்றை எல்லாம் அவரிடம் கொண்டு வந்து, அவைகளை இரண்டிரண்டு
கூறுகளாக வெட்டி, ஒவ்வொரு பகுதியையும் அததற்கு இணையான பகுதிக்கு
எதிரெதிரே வைத்தார். ஆனால் பறவைகளை அவர் வெட்டவில்லை.
துண்டித்த உடல்களைப் பறவைகள் தின்ன வந்தபொழுது ஆபிராம் அவற்றை
விரட்டிவிட்டார். கதிரவன் மறையும் நேரத்தில் ஆபிராமுக்கு ஆழ்ந்த
உறக்கம் வந்தது. அச்சுறுத்தும் காரிருள் அவரைச் சூழ்ந்தது. கதிரவன்
மறைந்ததும் இருள் படர்ந்தது. அப்பொழுது புகைந்து கொண்டிருந்த
தீச்சட்டி ஒன்றும் எரிந்துகொண்டிருந்த தீப்பந்தம் ஒன்றும் அந்தக்
கூறுகளுக்கிடையே சென்றன. அன்றே ஆண்டவர் ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை
செய்து, "எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறு வரை
உள்ள இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்" என்றார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
(திபா: 27: 1. 7-8. 9abc. 13-14 (பல்லவி: 1a)
Mp-3
=================================================================================
பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.
1 ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்?
ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க
வேண்டும்? பல்லவி 7 ஆண்டவரே, நான் மன்றாடும்போது என் குரலைக்
கேட்டருளும்; என்மீது இரக்கங்கொண்டு எனக்குப் பதிலளித்தருளும்.
8 'புறப்படு, அவரது முகத்தை நாடு' என்றது என் உள்ளம்; ஆண்டவரே,
உமது முகத்தையே நாடுவேன். பல்லவி
9abc உமது முகத்தை எனக்கு மறைக்காதிரும்; நீர் சினங்கொண்டு அடியேனை
விலக்கிவிடாதிரும்; நீரே எனக்குத் துணை; என் மீட்பராகிய கடவுளே,
என்னைத் தள்ளிவிடாதிரும். பல்லவி
13 வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று
நான் இன்னும் நம்புகின்றேன். 14 நெஞ்சே! ஆண்டவருக்காகக்
காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக்
காத்திரு. பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
கிறிஸ்து நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றுவார்.
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து
வாசகம் 3: 17-4:1
சகோதரர் சகோதரிகளே, நீங்கள் அனைவரும் என்னைப்போல் வாழுங்கள்.
நாங்கள் உங்களுக்குக் காட்டிய முன்மாதிரியின்படி வாழ்பவர்களைப்
பின்பற்றுங்கள். கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களாய் நடப்போர்
பலர் உள்ளனர். அவர்களைப்பற்றி மீண்டும் மீண்டும் உங்களிடம்
கூறியுள்ளேன்.
இப்பொழுதும் கண்ணீரோடு சொல்கிறேன். அழிவே அவர்கள் முடிவு; வயிறே
அவர்கள் தெய்வம்; மானக்கேடே அவர்கள் பெருமை; அவர்கள் எண்ணுவதெல்லாம்
மண்ணுலகைச் சார்ந்தவை பற்றியே. நமக்கோ விண்ணகமே தாய்நாடு; அங்கிருந்துதான்
மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக்
காத்திருக்கிறோம். அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை
மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றவும் அனைத்தையும்
தமக்குப் பணியவைக்கவும் வல்லவர்.
ஆகவே என் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, என் வாஞ்சைக்குரியவர்களே,
நீங்களே என் மகிழ்ச்சி; நீங்களே, என் வெற்றி வாகை; அன்பர்களே,
ஆண்டவரோடு உள்ள உறவில் நிலைத்திருங்கள்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
மாற் 9: 7
ஒளிரும் மேகத்தினின்று தந்தையின் குரலொலி கேட்டது: "என்
அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்."
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது, அவரது முகத்தோற்றம் மாறியது.
+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 28b-36
அக்காலத்தில் இயேசு பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும்
கூட்டிக் கொண்டு இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைமீது ஏறினார்.
அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது;
அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது. மோசே, எலியா என்னும்
இருவர் அவரோடு பேசிக்கொண்டிருந்தனர். மாட்சியுடன் தோன்றிய
அவர்கள் எருசலேமில் நிறைவேற இருந்த அவருடைய இறப்பைப்பற்றிப்
பேசிக்கொண்டிருந்தார்கள். பேதுருவும் அவரோடு இருந்தவர்களும்
தூக்கக் கலக்கமாய் இருந்தார்கள். அவர்கள் விழித்தபோது
மாட்சியோடு இலங்கிய அவரையும் அவரோடு நின்ற இருவரையும்
கண்டார்கள்.
அவ்விருவரும் அவரைவிட்டுப் பிரிந்து சென்றபோது, பேதுரு இயேசுவை
நோக்கி, "ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு
ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று
கூடாரங்களை அமைப்போம்" என்று தாம் சொல்வது இன்னதென்று
தெரியாமலே சொன்னார்.
இவற்றை அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போது ஒரு மேகம் வந்து
அவர்கள்மேல் நிழலிட்டது. அம்மேகம் அவர்களைச் சூழ்ந்தபோது
அவர்கள் அஞ்சினார்கள்.
அந்த மேகத்தினின்று, "இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து
கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்" என்று ஒரு குரல்
ஒலித்தது. அந்தக் குரல் கேட்டபொழுது இயேசு மட்டும் இருந்தார்.
தாங்கள் கண்டவற்றில் எதையும் அவர்கள் அந்நாள்களில் யாருக்கும்
சொல்லாமல் அமைதி காத்தார்கள்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
(தொடக்க நூல் 15: 5-12, 17-18, 21; பிலிப்பியர் 3: 17-4: 1;
லூக்கா 9: 28-36)
துன்பமின்றி இன்பமில்லை!
நிகழ்வு
வாழ்வில் சவால்களைச் சந்திக்க முடிவெடுத்த ஒருவர்
போராடிக்கொண்டே இருந்தார். ஆனாலும் வளர்ந்துகொண்டேயும் இருந்தார்.
இன்னொரு தொழிலதிபரோ சவால்களைத் தவிர்த்து வந்தார். அப்படியிருந்தும்
சிக்கல்கள் வந்துகொண்டே இருந்தன.
ஒருநாள் இரண்டாவது தொழிலதிபர் முதலாமவரைப் பார்த்துக்
கேட்டார், "போராட்டங்கள் நடுவே நீங்கள் வளர்கிறீர்கள்... நான்
வளரவில்லையே?... அது ஏன்?" முதலாவது தொழிலதிபர் அதற்கு
பொறுமையாய் சொன்னார், "நான் கழுகுகளோடு போராடுகிறேன்; ஆகாயமே
எனக்குச் சொந்தமாகிறது. நீங்களோ கோழிகளோடு சண்டையிடுகிறீர்கள்...
அதனால்தான் கொஞ்சமே கொஞ்சம் தானியம் கிடைக்கிறது. அதுவும் கொத்தப்பட்ட
பிறகு... இனிமேலாவது நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் வரும் சவால்களைச்
சந்திக்கத் தயாராகுங்கள். அப்பொழுது என்னைப் போன்று உங்களுக்கும்
ஆகாயம் சொந்தமாகும்."
சரித்திரத்தில் சவால்களைக் கண்டு பயந்தவருக்கு அல்ல, அவற்றை எதிர்த்து
நின்று போராடியவருக்கே இடமிருக்கின்றது. ஆண்டவர் இயேசுவுக்கு
முன்பாக பாடுகள், சிலுவைச் சிலுவைச் சாவு என்ற சவால்கள் இருந்தன.
அதனைக் கண்டு அவர் பயப்படாமல், துணிவுடன் எதிர்கொண்டார். அதனால்
அவர் சரித்திரத்தில் இடம் பிடித்தார். இயேசு சவால்களைத் துணிவுடன்
எதிர்கொள்ளத் தயாரானார் என்பதற்கான ஓர் உன்னத நிகழ்வுதான் அவருடைய
உருமாற்ற நிகழ்வு. இந்நிகழ்வு நமக்குக் குறித்துக் காட்டும்
செய்திகள் என்ன? இயேசுவைப் போன்று மாட்சியடைய நாம் என்ன செய்யவேண்டும்
என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
இயேசு உருமாற்றம் அடைவதற்கான தேவை என்ன?
இயேசு உருமாற்றம் அடைவதற்கான தேவையென்ன? என்ற இந்த கேள்விக்கான
விடை இதற்கு முந்தைய பகுதியிலும் (லூக் 9: 18-27) இதோடு தொடர்புடைய
பகுதியிலும் (மத் 16: 21-23) இருக்கின்றது. இப்பகுதிகளில் இயேசு,
எருசலேமில் தான் அடைய இருந்த பாடுகளையும் சிலுவைச் சாவையும்
குறித்துப் பேசுவார். உடனே பேதுரு அவரிடம், "ஆண்டவரே, இது
வேண்டாம், இப்படி உமக்கு நடக்கவே கூடாது" (மத் 16:22) என்பார்.
இச்சொற்கள் பேதுருவின் வாயிலிருந்து வந்த சொற்களாக இருந்தாலும்,
அவை சீடர்களின், ஏன் யூதர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றது.
யூதர்கள், மெசியா என்பவர் எல்லா நாடுகளையும் தன்னுடைய ஆளுகைக்குள்
உட்படுத்தி, ஆட்சி செலுத்தும் ஓர் அரசியல் மெசியாவாக வருவார்
என்று நினைத்தார்கள். அவர்கள் நினைத்ததற்கு மாறாக இயேசு,
மெசியா என்பவர் அரசியல் மெசியா அல்ல, அவர் துன்புறும் ஊழியர்
என்று காட்ட விழைந்ததால், சீடர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இப்படிப்பட்ட தருணத்தில்தான் இயேசு, தன்னுடைய உருமாற்றத்தின்
வழியாக தான் மெசியா, இறைமகன் (யோவா 1:14) என்பதை சீடர்களுக்கு
எடுத்துரைக்கின்றார். அந்த வகையில் இயேசுவின் சீடர்களுக்கு இது
ஒரு முக்கியமான நிகழ்வு.
இயேசுவைப் பொறுத்தளவிலும் இந்நிகழ்வு அவருடைய வாழ்வில் நடந்த
மிக முக்கியமான நிகழ்வாக இருக்கின்றது. எப்படியெனில், இயேசு தந்தைக்
கடவுளின் திருவுளத்திற்கு ஏற்றார்போல் செயல்பட்டார் என்பதை மேகத்திலிருந்து
ஒலித்த, "இவரே என் மைந்தர்; நான் தேர்ந்துகொண்டவர் இவரே" என்ற
குரல் உறுதிசெய்வதாக இருக்கின்றது. ஏற்கனவே இயேசுவின்
திருமுழுக்கின்போது ஒலித்த இதே குரல் (லூக் 3:22), பின்னாளில்
அவர் தந்தையின் திருவுளத்தை நிறைவுசெய்துவிட்டார் என்பதைக்
குறிக்கும்வகையில் "மாட்சிப் படுத்தினேன்; மீண்டும் மாட்சிப்படுத்துவேன்"
(யோவா 12: 28) என்று ஒலிக்கும். அந்த வகையில் இயேசுவின் இந்த
உருமாற்ற நிகழ்வு, அவருக்கு தந்தைக் கடவுளிடமிருந்து உறுதியூட்டம்
வார்த்தைகளைப் பெற்றுத்தந்த நிகழ்வாக இருக்கின்றது என்று
சொன்னால் அது மிகையாகாது.
இதுவரை இயேசுவின் உருமாற்றத்திற்கான தேவையென்ன என்பதை அறிந்த
நாம், இயேசுவின் உருமாற்றம் நமக்கு எடுத்துச் சொல்லும் செய்தி
என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.
துன்பமின்றி இன்பமில்லை
இயேசுவின் உருமாற்ற நிகழ்வு நமக்குத் தருகின்ற மிக முக்கியமான
செய்திகளில் ஒன்று, துன்பமின்றி இன்பமில்லை என்பதாகும். இயேசு
உயிர்த்து, விண்ணேற்றமடைந்து, தந்தையின் வலப்பக்கத்தில் அமர்ந்தார்.
அதற்கு முன்பாக அவர் பாடுகள் பட்டு, மிகக் கொடிய வகையில்
சிலுவைச் சாவை அடைந்தார். அப்படியென்றால், அவருடைய சிலுவைச்
சாவே அவருடைய விண்ணக மாட்சிக்குக் காரணமாகவும் தந்தையின்
திருவுளத்தை நிறைவேற்ற அவர் அடைந்த துன்பமே அவருடைய இன்பத்திற்குக்
காரணமாகவும் அமைந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. ஆகையால்,
இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம் ஒவ்வொருவரும் அவரைப் போன்று
பாடுகளையும் துன்பங்களையும் தாங்கிக்கொள்கின்றபோதுதான் அவரைப்
போன்று விண்ணக மகிமையை அடைய முடியும்.
இதைத்தான் இயேசுவின் உருமாற்றத்தைக் கண்கூடாகப் பார்த்த
பேதுரு, "கிறிஸ்துவின் துன்பங்களில் நீங்கள் இத்துணை பங்குகொள்கிறீர்கள்
என எண்ணி மகிழுங்கள். அப்பொழுது கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படும்
வேளையில் இன்னும் மகிழ்ந்து பேருவகை கொள்வீர்கள்" என்கின்றார்
(1 4;13). எனவே, இயேசு அடைந்த மாட்சியை நாமும் அடையவேண்டும் எனில்,
அவரைப் போன்று துன்பங்களையும் சவால்களையும் தாங்கிக் கொள்ளவேண்டும்.
ஸா அதி என்ற எழுத்தாளர் சொல்வார், "ரோஜாவும் முள்ளும்போல இன்பமும்
துன்பமும் ஒன்றோடு ஒன்று இணைந்தே இருக்கின்றது. இதில் முள் என்னும்
துன்பத்தை நினைத்து வருந்திக்கொண்டிருந்தால், ரோஜா என்னும் இன்பத்தை
அடைய முடியாது." இது முற்றிலும் உண்மை. இன்பம் என்ற இலக்கை அடைய
துன்பம் என்ற பாதையில் கட்டாயம் பயணப்பட்டுத்தான் ஆகவேண்டும்.
மாயையில் சிக்கிக்காமல் மனவுறுதியோடு இறைவார்த்தையின்படி நடப்போம்
இயேசுவின் உருமாற்ற நிகழ்வு நமக்குத் தருகின்ற இரண்டாவது
செய்தி, மேகம் போன்று மறையும் மாயையைப் பற்றிப்
பிடித்துக்கொண்டிருக்காமல், மனவுறுதியோடு இறைவார்த்தையைக்
கேட்டு நடக்கவேண்டும் என்பதாகும். இயேசுவின் உருமாற்ற நிகழ்வில்
நிகழ்ந்த அற்புதக் காட்சியைப் பார்த்துவிட்டு, பேதுரு இயேசுவை
நோக்கி, "நாம் இங்கேயே இருப்பது (எத்துணை) நல்லது" என்று
சொல்கிறபோது, மேகத்தினின்று ஒரு குரல், "இவருக்குச் செவி
சாயுங்கள்" என்று ஒலிக்கின்றது. இதன்மூலம் இயேசுவின் சீடர்கள்
தற்காலிகமாக இருக்கும் அற்புத நிகழ்வைப் பற்றிப்
பிடித்துகொண்டிருக்காமல், நிலைவாழ்வு தரும் இயேசுவின்
வார்த்தைக்குச் (யோவா 6:68) செவிமடுத்து வாழ அழைக்கப்படுகின்றார்கள்.
நாமும்கூட பலநேரங்களில் மாய உலகில் சிக்கிண்டு போகின்றோம். இத்தகைய
சூழ்நிலையில் வாழ்வுதரும் இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பது
சிறந்தது.
சிந்தனை
'கோதுமை மணி மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்' (யோவா
12:24) என்பார் இயேசு. நாமும் நம்முடைய வாழ்வில் வரும் துன்பங்களை,
சிலுவைகளை மனவுறுதியோடு தாங்கிக்கொள்வோம். அதன்வழியாக விண்ணக
மகிமையை, இறையருளை நிறைவாய்ப் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
பாடுகளின் வழியாக பரலோகம்
உயிரியல் ஆசிரியர் ஒருவர் தன்னுடைய மாணவர்களுக்கு கம்பளிப்புழு
எப்படி வண்ணத்துப்பூச்சியாக மாறுகிறது என்பது குறித்து
செய்முறைப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அவர் தன்னுடைய மாணவர்களிடம்
கம்பளிப்புழு கூட்டைச் சுட்டிக்காட்டி, "இன்னும் ஒருசில மணித்துளிகளில்
இந்தக் கூட்டில் இருக்கக்கூடிய கம்பளிப்புழு வண்ணத்துப்பூச்சியாக
மாறும், அது எப்படி மாறுகிறது என்பதை கவனித்துக் கொண்டிருங்கள்"
என்று சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டார். மாணவர்கள் யாவரும்
கம்பளிப்புழு கூட்டையே பொறுமையாக பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
அப்போது கூட்டில் இருந்த கம்பளிப்புழு கஷ்டப்பட்டு வெளியே வந்துகொண்டிருந்தது.
அதைப் பார்த்து இரக்கப்பட்ட மாணவன் ஒருவன், கூட்டிலிருந்து அதனை
வெளியே எடுத்துவிட்டான். ஆனால் சிறுது நேரத்தில் வெளியே வந்த
அந்த கம்பளிப்புழு இறந்துபோனது. மாணவன் என்ன செய்வதென்று
தெரியாமல் திகைத்து நின்றான்.
இந்த நேரத்தில் வெளியே சென்ற ஆசிரியர் வகுப்புக்கு உள்ளே வந்தார்.
அவரிடத்தில் மாணவர்கள் அனைவரும் நடந்ததை எல்லாம் சொன்னார்கள்.
அதற்கு அவர், "அன்பு மாணவர்களே! கம்பளிப்புழு தன் கூட்டைவிட்டு
வெளியேவரக் கஷ்டப்படுகிறது என்று நினைத்து நீங்கள் அதனை வெளியே
எடுத்துவிட்டிருக்கிறீர்கள். ஆனால், உண்மையில் அந்த கம்பளிப்புழு
கஷ்டப்பட்டு வெளியே வருகிறபோதுதான் அதனுடைய சிறகுகள் வலுபெறும்.
ஒரு முழு வண்ணத்துப்பூச்சியாக மாறும்" என்றார். தொடர்ந்து அவர்
அவர்களிடம், "நமது வாழ்விலும் இப்படி கஷ்டங்களை, வலிகளை, துன்பங்களைத்
தாங்கிக்கொண்டால்தான் உயர்ந்த லட்சியத்தை அடையமுடியும்" என்றார்.
நாம் சந்திக்கும் துன்பங்கள் நம்மைப் புடமிடுகின்றன; நமக்கு ஏற்படும்
அவமானங்கள் நம்மைச் செதுக்குகின்றன. எப்படி உளியானது கல்லைச்
செதுக்க அது சிற்பமாக மாறுகிறதோ அதுபோல" என்பார் எழுத்தாளர்
வெ. இறையன்பு.
தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் நமக்கு
இன்றைய நாள் வாசகங்கள் நமக்குத் தரும் சிந்தனை "பாடுகளின் வழியாகப்
பரலோகம்" என்பதாகும். அதாவது சிலுவைச்சாவின் வழியேதான் நமக்கு
மீட்பு உண்டு என்பதே இன்றைய வாசகங்களின் சாராம்சமாக இருக்கிறது.
நற்செய்தி வாசகத்திலே ஆண்டவர் இயேசு உருமாற்றம் அடைகின்றார்.
அதில் மோசேயும், இறைவாக்கினர் எலியாவும் உடன் இருக்கிறார்கள்.
எருசலேமில் இயேசு மூப்பர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் கையில்
ஒப்புவிக்கப்பட்டு, கொலை செய்யப்படவும், மூன்றாம் நாளில்
மாட்சியுடன் உயிர்த்தெழுவதன் முன் அடையாளமாக இந்த உருமாற்ற நிகழ்வு
இருக்கிறது.
ஏற்கனவே சீடர்கள் இயேசு சிலுவைச்சாவைப் பற்றி மூன்றுமுறை முன்னறிவித்ததால்
குழம்பிப்போய் இருந்தார்கள். இதனால் உருமாற்ற நிகழ்வு ஒருவிதத்தில்
அவர்களையும் நம்பிக்கையில் உறுதிப்படுத்தியது என்றுகூடச் சொல்லலாம்.
இயேசுவின் சீடர்களைப் போன்றுதான் நாமும் பாடுகள், துன்பங்கள்
இவையெல்லாம் எதற்கு என்று நினைக்கிறோம்; துன்பமில்லா இன்பமான
வாழ்வு வாழ நினைக்கிறோம். ஆனால் ஆண்டவர் இயேசுவோ பாடுகளின் வழியேதான்
நமக்கு மீட்பு என்பதை நற்செய்தியில் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார்.
யோவான் நற்செய்தி 12:24 ல் ஆண்டவர் இயேசு கூறுவார், "கோதுமை மணி
மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். மடிந்தால்தான்
மிகுந்த விளைச்சலை அளிக்கும்" என்று. ஆக கோதுமை மணியைப் போன்று
நாமும் மடியவேண்டும், பாடுகளை அனுபவிக்கவேண்டும். அப்போதுதான்
நாமும் இயேசுவின் மகிமையில் பங்குபெற முடியும்.
ஆனால் இன்றைக்கு நிலைமை முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது.
யாருக்கும் துன்பங்களை, சவால்களை எதிர்கொள்ள துணிவில்லை. எல்லாவற்றிலும்
பாதுக்காப்பு தேடியே நமது வாழ்வானது ஓடிக்கொண்டிருக்கிறது.
பாதுகாப்பான இடம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்று பழக்கப்பட்ட
நமக்கு சாதாரண ஒரு பிரச்னையையும் எதிர்கொள்ள முடியவில்லை.
ஒருமுறை ஹங்கேரி நாட்டில் ஓர் ஆலயத்தில் பொது ஆராதனை நடைபெற்றுக்
கொண்டிருந்தது. அப்போது திடிரென்று துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள்
சிலர் ஆலயத்திற்குள் நுழைந்தார்கள். இதைப் பார்த்த மக்கள் அனைவரும்
(குருவானவர் உட்பட) எங்கே தங்களுடைய உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ
என்று பதறியடித்துகொண்டு ஓடினார்கள்.
ஆனால் அந்த கூட்டத்தில் இருந்த ஒரே ஒரு தாத்தா, பாட்டி மட்டும்
ஆலயத்தைவிட்டு நகராமல் அப்படியே இருந்தார்கள். "எல்லாரும் அலறியடித்துக்
கொண்டு ஓடும்போது, நீங்கள் மட்டும் ஏன் இந்த ஆலயத்திலேயே இருக்கிறீர்கள்?
உங்களுக்கு உயிர்மேல் பயமில்லையா? என்று அந்த முகமூடி அணிந்த
தீவிரவாதிகள் அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அவர்கள், "எங்கள்
உயிரைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. நாங்கள் செத்தாலும் இந்த
ஆலயத்திலே சாகிறோம்" என்றார்கள். இதைக்கேட்டு வியந்த அந்த தீவிரவாதிகள்
அவர்களிடம், "நாங்கள் தீவிரவாதிகள் அல்ல, மாறாக யாராரெல்லாம்
கிறிஸ்துவுக்காக எதையும் இழக்கத் துணிந்தவர்கள் என்பதைச்
சோதித்துப் பார்க்க வந்த இயேசுவின் உண்மையான ஊழியர்கள்" என்றார்கள்.
இயேசுவுக்காக எதையும், ஏன் தங்களுடைய உயிரையும் இழக்கத்
துணியும் இயேசுவின் உண்மையான சீடர்கள் குறைந்து போய்விட்டார்கள்
என்பதை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
இந்த பின்னணியில்தான் நாம் இயேசுவின் உருமாற்றத்தையும், அது
உணர்த்தும் 'பாடுகளின் வழியே மீட்பு உண்டு என்று உண்மையையும்
புரிந்துகொள்ள வேண்டும். இயேசு சாவைத் துணிவுடன் ஏற்றுக்கொண்டார்.
தன்னைப் பின்தொடர்ந்து வரும் சீடர்களும் சிலுவையை
தூக்கிக்கொண்டு வரவேண்டும் என்கிறார்.
பிலிப்பியருக்கு எழுத்தப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட
இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் கூறுவார்,
"கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களாய் நடப்போர் பலர் உள்ளனர்"
என்று. ஆம், துன்பமில்லா, இன்பமான வாழ்வு வாழ நினைக்கும் ஒவ்வொருவரும்;
பிறர்நலத்தை நாடாமல், தன்னலச் சேற்றில் மூழ்கிக் கிடக்கும் ஒவ்வொருவரும்;
இந்த மண்ணுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுபவர்கள் யாவருமே இயேசுவின்
சிலுவைக்கு பகைவர்கள்தான். ஏனெனில் சிலுவை மண்ணுலகு சார்ந்தவற்றை
அல்ல விண்ணுலகு சார்ந்த காரியங்களையே நமக்கு நினைவூட்டுகிறது.
ஆகவே இயேசுவின் சீடர்களாக இருக்கும் நாம் ஒவ்வொருவரும் சிலுவை,
பாடுகள், துன்பம் இவையெல்லாவற்றையும் ஒதுக்கித்தள்ளாமல், அவற்றைத்
துணிவுடன் ஏற்றுக்கொண்டு, இயேசுவின் வழியில் நடக்க முயலுவோம்.
அடுத்ததாக நாம் இயேசுவின் பாடுகளின் வழியில் நடப்பதோடு மட்டுமல்லாமல்,
அவரோடு நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ள முன்வரவேண்டும். இரண்டாம்
வாசகத்தில் பவுலடியார் கூறுகிறார், "ஆண்டவரோடு உள்ள உறவில்
நிலைத்திருக்கள்" என்று. இந்த தவக்காலத்திலே ஆண்டவருக்கும்,
நமக்கும் உள்ள உறவில் நிலைத்திருப்பது மிகவும் சாலச் சிறந்த ஒன்றாகும்.
ஏனென்றால் நமது வாழ்க்கை வேலை, படிப்பு, உழைப்பு என்று சுழன்றுகொண்டிருக்கிறது.
இதனால் கடவுளோடு உள்ள உறவில் தொய்வு ஏற்பட்டு, நமது வாழ்வே எந்திரத்தனமானதாக
மாறிப்போய்விடுகிறது. இந்த சூழ்நிலையில்தான் நாம் இறைவனோடு உள்ள
உறவில் வளர்வது மிகவும் தேவையானதாக இருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒருவன் பொதுத்தொலைபேசி நிலையத்திற்குச்
சென்று, வெளியூரில் இருக்கும் தன்னுடைய நெருங்கிய உறவினருக்கு
தொலைபேசி வழியாகப் பேசினான். ஆனால் மறுமுனையிலிருந்து சத்தம்
கேட்காததால் கொஞ்சம் சத்தமாகப் பேசினான். அப்போதும் அவனுக்கு
மறுமுனையில் இருப்பவர் பேசும் சத்தம் கேட்கவில்லை. இதனால் அவன்
இன்னும் அதிக சத்தமாகப் பேசினான்.
அதற்குள் பொதுத் தொலைபேசி நிலையத்தைச் சுற்றி பெருங்கூட்டமே
கூடிவிட்டது. அவன் எதற்கு இவ்வளவு மக்கள் கூடியிருக்கிறார்கள்
என்று புரியாமல் விழித்தான். அதன் பின்னர்தான் உண்மையை உணர்ந்தான்
தான் தொலைபேசியை மாற்றி வைத்துப் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று.
மனிதர்களோடு உள்ள தொடர்பு சரியில்லாதபோதே மிகப்பெரிய குழப்பம்
ஏற்படுகிறது என்று சொன்னால், கடவுளுக்கும், மனிதருக்கும் இடையே
உள்ள உறவு சரியில்லாதபோது அது மிகப்பெரிய குழப்பத்திற்கும்,
ஆபத்துக்கும்தான் நம்மை இட்டுச் செல்லும். அதனால்தான் பவுலடியார்,
"ஆண்டவரோடு உள்ள உறவில் நிலைத்திருங்கள்" என்கிறார்.
இப்படி ஆண்டவரோடு உள்ள உறவில் நிலைத்திருந்ததற்கு நமக்கு மிகப்பெரிய
உதாரணமாக இருப்பவர் முதல் வாசகத்தில் நாம் படிக்கக்கேட்கும்
நமது முதுபெரும் தந்தை ஆபிரகாம். அவர் கடவுளின் வார்த்தைக்கு
கீழ்படிந்து நடந்தார்; அவர்மீது ஆழமான நம்பிக்கை கொண்டு
வாழ்ந்தார். அதனால்தான் கடவுள் ஆபிரகாமின் நம்பிக்கையைப்
பார்த்து, "உன் மரபை வானத்து விண்மீன்களைப் போலவும், கடற்கரை
மணலைப் போலவும் பெருகச் செய்வேன்" என்கிறார்.
எனவே இந்த தவக்காலத்தில் ஆபிரகாம் எப்படி ஆண்டவரோடு உள்ள உறவில்
நிலைத்திருந்தாரோ அதுபோன்று நாமும் நமது நம்பிக்கையால், கீழ்படிதலுள்ள
வாழ்வால் நல்லுறவில் நிலைத்திருப்போம். அத்தோடு இயேசுவைப்
போன்று நமது வாழ்வில் வரும் துன்பங்களை, பாடுகளை துணிவுடன் ஏற்றுக்கொள்வோம்.
அதன் வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.
"இதோ என் எதிரிலுள்ள கம்பத்தில் என்னைத் தூக்கிலிட்டாலும் சரி,
துப்பாக்கியால் என்னைச் சுட்டாலும் சரி, நான் என் கொள்கைகளை
எவருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன் - புரட்சியாளர் சேகுவேரா.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
தவக்காலம் இரண்டாம் ஞாயிறு (மார்ச் 13, 2022)
தொடக்கநூல் 15:512, 1718
பிலிப்பியர் 3:17 4:1
லூக்கா 9:2836
உறுதியற்ற நிலையை எதிர்கொள்ளல்
'மாற்றம் ஒன்றே மாறாதது' என்பது எப்படி உண்மையோ, அதுபோலவே, மனித
வாழ்வில் 'உறுதியற்ற நிலையே உறுதியானது' என்பதும் உண்மையே. ஒன்றும்
ஒன்றும் இரண்டு என்பது போலவும், இரண்டு சதவிகித ஹைட்ரஜனும் ஒரு
சதவிகித ஆக்ஸிஜனும் இணைந்தால் தண்ணீர் என்பது போலவும் உள்ள கணித
மற்றும் வேதியியல் வாய்ப்பாடுகளின் உறுதித்தன்மையைப் போல
வாழ்வியல் எதார்த்தங்கள் இருப்பதில்லை.
நன்றாக உழைக்கிறோம். நேர்மையாக இருக்கிறோம். ஆனால், வாழ்வில்
முன்னேற்றம் இல்லை. எடுத்த காரியம் நிறைவேறுவது இல்லை. தினமும்
ஆலயம் செல்கிறோம். நற்செயல்கள் செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால்
எதிர்பாராத ஆபத்துக்கள் வந்தே தீருகின்றன. நம் குழந்தை நன்றாகப்
படிக்கிறார். ஆனால், படிப்பிற்கேற்ற பலன் இல்லை. நம் மகன் நன்றாக
வேலை செய்கிறார். ஆனால், வேலையில் அவருக்கு உயர்வே இல்லை. இம்மாதிரியான
நேரங்களில், 'நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்றும்
நினைக்கும்' என்று சொல்லி நம்மையே தேற்றிக்கொண்டாலும்,
வாழ்வின் உறுதியற்ற தருணங்கள் நம் வாழ்வில் நமக்கு அச்சத்தையும்,
ஏக்கத்தையும் கொடுத்துக்கொண்டே இருக்கின்றன. நாம் எப்போதும் சறுக்கலான
மணலில் நடப்பதுபோலவே உணர்கிறோம்.
உறுதியற்ற நிலையை எதிர்கொள்ள முடியுமா?
எதிர்கொள்ள வேண்டுமா?
அதை எப்படி எதிர்கொள்வது?
தங்கள் வாழ்வில் தாங்கள் சந்தித்த உறதியற்ற நிலைகளை ஆபிரகாம்,
பிலிப்பு நகரத் திருச்சபையினர், மற்றும் திருத்தூதர்கள் எப்படி
எதிர்கொண்டார்கள் என்பதை இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குக்
காட்டுகிறது.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். தொநூ 15:1-4), 'உன்னை பெரிய
இனமாக மாற்றுவேன்' என்று ஆபிராமுக்கு ('ஆபிரகாம்' என்ற பெயர்
மாற்றம் அடைவது 17:5ல்தான்) வாக்குறுதி கொடுக்கும் கடவுள் அவருக்குத்
தோன்றுவதைப் பார்க்கிறோம். 'உன்னை நான் பெரிய இனமாக்குவேன்.
உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்'
என்று (12:1) வாக்குறுதி கொடுத்துத் தன்னைத் தன் 'ஊரிலிருந்து'
புறப்படச் செய்த இறைவன் இவ்வளவு நாள்கள் ஆகியும் ஒன்றும்
செய்யாமல் இருக்கிறாரே என்று தன் உள்ளத்தில் குழப்பமும் ஐயமும்
கொள்ள ஆரம்பிக்கின்றார் ஆபிராம். இந்த நேரத்தில் ஆண்டவர் ஆபிராமை
வெளியே (அவரின் கூடாரத்திற்கு வெளியேயும், அவரின் மனத்திற்கு
வெளியேயும்) அழைத்து, 'வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால்,
விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்'
என்கிறார். 'ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர்
அவருக்கு நீதியாகக் கருதினார்' என உடனே பதிவு செய்கிறார் ஆசிரியர்.
'நீதி' என்பதற்கு 'மற்றவரோடு சரியான உறவில் இருப்பது' என்று
பொருள். ஆக, ஆபிராம் கடவுளோடு கொள்ளும் சரியான உறவு நம்பிக்கையில்
கட்டப்படுகிறது.
தொடர்ந்து, ஆண்டவர், 'இந்நாட்டை உனக்கு உரிமைச்சொத்தாக அளிக்க
உன்னைக் கல்தேயரின் ஊர் என்ற நகரிலிருந்து இங்கு அழைத்து வந்த
ஆண்டவர் நானே' என்கிறார். இது முந்தைய வாக்குறுதியைவிட இன்னும்
அதிகம் உறுதியற்றது. நம்ம ஊர் பேருந்து நிலையத்திற்கு வெளியே
சிறிய குடிசை போட்டு அமர்ந்து ஊசி பாசி பிண்ணிக்
கொண்டிருக்கும் ஒரு நபரிடம் கடவுள், 'உனக்கு அமெரிக்க ஐக்கிய
நாடுகளை உரிமைச் சொத்தாகத் தருவேன்' என்று சொன்னால் அவர் எப்படி
அதிர்ச்சி அடைந்து புன்னகை பூப்பாரோ அப்படித்தான் நகைக்கின்றார்
ஆபிராம். ஏனெனில், கல்தேயரின் ஊர் என்றழைக்கப்படும் கானான் அன்று
ஒரு பெரிய கனவு நாடாக இருந்தது. அதன் வளமும், பலமும் பலரின் கண்களை
அந்நாட்டை நோக்கித் திருப்பியது. தான் ஒரு சாதாரண நாடோடி என்பதை
அறிந்திருந்த ஆபிராம், இந்த வாக்குறுதியின் உறுதித்தன்மையை அறிந்துகொள்ளும்
பொருட்டு, 'என் தலைவராகிய ஆண்டவரே, இதை நான் உரிமையாக்கிக்
கொள்வேன் என்பதை எப்படித் தெரிந்துகொள்வேன்?' எனக்
கேட்கின்றார். உடனே ஆண்டவர் ஆபிராமுடன் உடன்படிக்கை
செய்துகொள்ள முன்வருகின்றார். உடன்படிக்கை என்பது ஓர் எழுத்துப்
பத்திரம் போன்ற ஆவணம். இதில் உடன்படிக்கை செய்துகொள்ளும் இரு
நபர்களின் உரிமைகளும் கடமைகளும் எழுதப்பட்டிருக்கும். மேலும்,
இது எழுதப்பட்டவுடன் அதன் வெளி அடையாளமாக பலி ஒன்று ஒப்புக்கொடுக்கப்படும்.
எபிரேயத்தில், 'உடன்படிக்கை செய்தல்' என்பதை 'உடன்படிக்கையை
வெட்டுதல்' என்று சொல்கின்றனர். அதாவது, உடன்படிக்கையின்போது
பலிப் பொருள்கள் வெட்டப்படும். வெட்டப்பட்ட பலிப்பொருள்களுக்கு
நடுவே உடன்படிக்கை செய்யும் இருவரும் நடந்து செல்ல வேண்டும்.
'நான் உடன்படிக்கையை மீறினால் நானும் இப்படி வெட்டப்படுவேன்'
என்று இருவரும் உணர்ந்துகொள்வதற்காகவே (காண். எரே 34:18) அவர்கள்
இப்படி நடுவே நடப்பது வழக்கம். முதல் வாசகத்தில் கடவுளே உடன்படிக்கை
செய்துகொள்ள முதலில் முன்வருகின்றார். மேலும், கடவுள் மட்டுமே
தீச்சட்டி மற்றும் தீப்பந்தம் வடிவில் அந்தப் பலி கூறுகளுக்கிடையே
நடக்கின்றார். இவ்வாறாக, கடவுள் நிபந்தனையற்ற நிலையில் ஆபிராமோடு
தன்னை இணைத்துக்கொள்கின்றார். மேலும், தான் கொடுத்த வாக்குறுதிகள்
நிறைவேறும் என்ற உறுதியையும் கடவுள் ஆபிராமுக்குத் தருகின்றார்.
காணக்கூடிய அடையாளத்தின் வாயிலாக ஆபிராமின் உறுதியற்ற
நிலையையும் குழப்பத்தையும் நீக்குகின்றார் கடவுள்.
ஆக, கடவுள் தனக்கு மொழிந்த குழந்தைப் பேறு மற்றும் வாக்களிக்கபட்ட
நாடு என்னும் வாக்குறுதிகள் பற்றிய உறுதியற்ற நிலையில் இருந்த
ஆபிராம், கடவுளின் உடன்படிக்கைச் செயல்பாட்டால் தன் உறுதியற்ற
நிலையை எதிர்கொண்டு, தன் நம்பிக்கையால் வெற்றியும் காண்கிறார்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். பிலி 3:17-4:1), பவுல்,
பிலிப்பி நகரத் திருஅவையில் விளங்கிய போலிப் போதனையை எதிர்கொள்கின்றார்.
பிலிப்பியில் பவுல் நற்செய்தி அறிவித்தபின், சில போலிப் போதகர்கள்
- யூதம் தழுவியோர் - எழுந்து மாற்று நற்செய்தி ஒன்றைப்
போதிக்கின்றனர். மேலும், கிறிஸ்தவ நம்பிக்கையாளராக ஒருவர்
மாறினாலும் யூதச் சட்டங்களையும், மரபுகளையும், முறைமைகளையும்
பின்பற்ற வேண்டும் என்றும், அச்செயல்களாலேயே ஒருவர் கடவுளுக்கு
ஏற்புடையவர் ஆகமுடியும் என்றும் போதிக்கின்றனர். இப்படியாக நம்பிக்கையாளர்கள்
தங்களின் மீட்பு பற்றிய உறுதியற்ற நிலைக்கும் குழப்பத்திற்கும்
தள்ளப்படுகின்றனர். இதைக் கேள்வியுறுகின்ற பவுல் போலிப் போதகர்கள்மேல்
கோபம் கொண்டு வெகுண்டெழுகின்றார். அவர்களை, 'நாய்கள்' என்றும்,
'கெட்ட ஊழியர்கள்' என்றும், 'உறுப்பு சிதைப்போர்' என்றும்
சாடுகின்றார் (காண். பிலி 3:2). மேலும், இன்றைய வாசகத்தில் 'வயிறே
அவர்கள் தெய்வம்' என்று சொல்லும் பவுல், அவர்கள் கொடுத்த உணவு
சார்ந்த மரபு முறைமைகளைக் கடிந்துகொள்கின்றார். ஏனெனில், யூத
மரபில் நிறைய உணவுசார்ந்த முறைமைகள் இருந்தன. மேலும், 'மானக்கேடே
அவர்கள் பெருமை' என்று சொல்லும்போது, மற்றவர்கள் பார்வையில் அருவருப்பாய்
இருந்த விருத்தசேதனத்தை அவர்கள் தங்கள் பெருமையாகக் கருதியதைக்
கடிந்துகொள்கின்றார். இறுதியாக, ஒட்டுமொத்தமாக, 'அவர்கள் எண்ணுவதெல்லாம்
மண்ணுலகைச் சார்ந்தவை பற்றியே' என்கிறார். இவ்வாறாக, யூத
போலிப் போதகர்கள் இவ்வுலக வாழ்விற்குத் தேவையான வாழ்வியல்
முறைமைகளைப் பற்றிப் பேசுவதைச் சாடுகின்றார் பவுல்.
இந்தப் பின்புலத்தில் தன் போதனை பற்றிய சில தெளிவுகளை
முன்வைக்கின்றார் பவுல். நற்செய்திக்கும் யூத முறைமைகளுக்கும்
தொடர்பில்லை என்பதைச் சொல்கின்றார். ஏனெனில், கிறிஸ்தவ நம்பிக்கையாளர்
பெறுகின்ற மீட்பு முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்ததே அன்றி
செயல்கள் சார்ந்தது அல்ல என்கிறார். ஏனெனில், விருத்தசேதனம்
போன்ற செயல்கள் வழியாகவும், உணவு மற்றும் உடலியல் முறைமைகளைப்
பின்பற்றுவதால்தான் மீட்பு என்றால், இயேசுவின் சிலுவை மரணம்
முழுமையற்றதாகப் போய்விடும். எனவே, போலிப் போதகர்களை,
'சிலுவைக்குப் பகைவர்களாய் நடப்போர்' என்றழைக்கும் பவுல்,
'நீங்கள் அனைவரும் என்னைப் போல வாழுங்கள்' என்கிறார். அதாவது,
'சட்டம்தான் எல்லாம்' என்று நினைத்து சட்டத்திற்கு எதிராக இருந்த
கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களைத் தண்டிக்கச் சென்ற நான், இப்போது
மனமாற்றம் பெற்று இயேசுவை மட்டுமே பற்றிக்கொண்டிருக்கிறேன். ஆக,
'நீங்களும் என்னைப்போல இயேசுவை மட்டும் பற்றிக்கொள்ளுங்கள்' என்கிறார்
பவுல். இந்த உலகு பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தவர்களை
விண்ணகம் நோக்கியும், இயேசுவின் மீட்புச் செயல் நோக்கியும்
திருப்புகின்றார் இயேசு.
ஆக, போலிப் போதகத்தால் உருக்குலைந்து உறுதியற்ற மற்றும் குழப்ப
நிலையில் இருந்த பிலிப்பி நகர நம்பிக்கையாளர்களை, தன் போதனையாலும்
முன்மாதிரியான வாழ்வாலும் உறுதியாக்குகின்ற பவுல், 'ஆண்டவரோடுள்ள
உறவில் நிலைத்திருங்கள்' என அறிவுரை பகர்கின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 9:28-36) இயேசுவின்
உருமாற்ற நிகழ்வை வாசிக்கின்றோம். இயேசுவுக்கு மிக நெருக்கமான
மூன்று திருத்தூதர்கள் - பேதுரு, யோவான், யாக்கோபு - இந்நிகழ்வில்
இயேசுவுடன் உடனிருக்கின்றனர். மலையில் தோன்றிய மோசேயும், எலியாவும்,
உருமாறிய இயேசுவின் தோற்றமும் திருத்தூதர்களைக் குழப்பத்திற்குள்
தள்ளுகின்றன. இந்தக் குழப்பத்தில்தான், 'ஆண்டவரே, நாம் இங்கேயே
இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு
ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்' என்கிறார் பேதுரு. இப்படிச்
சொல்வதன் வழியாக, (அ) பேதுரு, இயேசுவை மோசேக்கும் எலியாவுக்கும்
நிகராக்குகின்றார், (ஆ) பேதுரு 'ஆண்டவரே' என அழைத்து இயேசுவின்
முக்கியத்துவத்தை அறிக்கையிடுகின்றார், மற்றும் (இ) மலையிலேயே
நிரந்தரமான இடத்தைத் தெரிவு செய்ய நினைக்கின்றார்.
பேதுருவும் மற்ற இரு திருத்தூதர்களும் இயேசு யார் என்ற ஒரு குழப்பத்திலும்
உறுதியற்ற நிலையிலும் இருக்கின்றனர். இந்நேரத்தில் அவர்களின்
குழப்பத்தை நீக்கும் வண்ணம், மேகத்தினின்று, 'இவரே என் மைந்தர்.
நான் தேர்ந்துகொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்' என்ற
குரலொலி கேட்கின்றது. 'மைந்தர்' என்ற நிலையில் இயேசு, மோசே மற்றும்
எலியாவைவிட மேன்மையானவராகின்றார். 'தேர்ந்துகொண்டவர்' என்ற
நிலையில் அவர் மெசியாவாக இருக்கிறார். மேலும், இவருக்குச்
செவிகொடுக்க திருத்தூதர்கள் அழைக்கப்படுகின்றனர்.
ஆக, கடவுளின் குரலும் அவரின் கட்டளையும் திருத்தூதர்களின் உள்ளத்திலிருந்த
உறுதியற்ற நிலையையும், குழப்பத்தையும் அகற்றி உறுதி தருகின்றது.
இயேசு யார்? என்பது பற்றிய உறுதியை திருத்தூதர்கள்
பெற்றுக்கொள்கின்றனர்.
இவ்வாறாக, கடவுள் தேர்ந்துகொண்டவர்களும், கடவுளைத்
தேர்ந்துகொண்டவர்களும் - ஆபிராம், பிலிப்பு நகர நம்பிக்கையாளர்கள்,
திருத்தூதர்கள் - உறதியற்ற நிலையையும், குழப்பத்தையும் எதிர்கொள்கின்றனர்.
எதிர்கொண்ட அவர்கள் கடவுளின் உடன்படிக்கையால், வாக்குறுதியால்,
போதனையால், கட்டளையால் உறுதியும் பெறுகின்றனர். இதையே இன்றைய
திருப்பாடல் ஆசிரியரும் (காண். திபா 27), தன் உறுதியற்ற
நிலையிலும், தன் குழப்பத்திலும், 'ஆண்டவரே என் ஒளி' என்று கண்டுகொள்கின்றார்.
வாழ்வின் உறுதியற்ற நிலையை எப்படி எதிர்கொள்வது?
1. நம்பிக்கை:
'ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார்' என்ற சொல்கிறது இன்றைய
முதல் வாசகம். 'நம்பிக்கை' என்பது ஐயமற்ற நிலை. உயரம் தாண்டும்
விளையாட்டு வீரர் ஓடிக்கொண்டே இருக்கும்போது, தனக்கு முன் இருக்கும்
அந்தக் குச்சியின் உயரத்தைத் தான் தாண்டிவிடுவேன் என்ற உறுதியில்
ஐயமற்று இருக்க வேண்டும். 'தாண்டிவிடுவேனா?' என்ற ஐயம்
சிறுதுளி வந்துவிட்டாலே அவரால் உயரே எழ முடியாமல் போய்விடலாம்.
'அக்கா, ஒரு பென்சில் வாங்குங்க. அண்ணா, ஒரு பேனா வாங்குங்க!'
என்று சொல்லி பேருந்தைச் சுற்றி சுற்றி வரும் சின்னக் குழந்தைகளின்
கண்களில் இருந்து நம்பிக்கையை நாம் கற்றுக்கொள்ளலாம். 'இன்று
மாலைக்குள் எல்லாப் பேனாக்களும், பென்சில்களும் விற்றுவிடும்.
நாம் மாலையில் நன்றாக உணவருந்தி உறங்கலாம்!' என்ற நம்பிக்கையே
அவர்களை ஒவ்வொரு பேருந்தினுள்ளும் ஏறி இறங்க அவர்களை உந்தித்
தள்ளுகிறது. நம்பிக்கை என்ற அந்த நெருப்புத்துளி நம் உள்ளத்தில்
இருக்கும்போது, ஒரு கதவு அடைக்கப்பட்டாலும், மறுகதவு நோக்கி நம்
கால்கள் தாமாகவே நகர்ந்து செல்லும்.
2. உடனடி ரிசல்ட் வேண்டாம்:
பிலிப்பி நகர மக்கள் தங்களின் மீட்புக்கு உடனே பரிசு கிடைக்க
வேண்டும் என்று பொறுமையற்ற நிலையில் இருக்கின்றனர். பொறுமையற்ற
நிலையில்தான் நாம் யார் சொன்னாலும் எதைச் சொன்னாலும் நம்ப ஆரம்பிப்போம்.
'விண்ணகமே நம் தாய்நாடு', எனவே பொறுத்திருங்கள் என அறிவுரை பகர்கின்றார்
பவுல். நம் வாழ்வில் உறுதியற்ற நிலையும் குழப்பமும் வரக் காரணம்
நம்முடைய பொறுமையின்மையே. ஆக, அதைக் களைதல் அவசியம்.
3. சலனமற்ற மனம்:
உருமாற்ற மலையில் சஞ்சலத்தோடு பேசிய திருத்தூதர்கள் மலைக்குக்
கீழே வந்தவுடன் அமைதி காக்கின்றனர். சலனம் மறைந்து அமைதி பிறக்கும்போது
வாழ்வில் பல தெளிவுகள் பிறக்கும். இந்த அமைதியில்தான் இயேசுவை
யார் என்று அடையாளம் கண்டுகொள்கின்றனர்!
இறுதியாக, நம் நம்பிக்கை வாழ்விலும், அன்றாட நல்வாழ்விலும் உறுதியற்ற
நிலைகளும் குழப்பங்களும் தவிர்க்க முடியாதவை. ஆனால், நம்பிக்கை,
பொறுமை, அமைதி நம் நம்பிக்கையையும், நல்வாழ்வையும் உறுதிப்படுத்தும்
- இன்றும் என்றும்!
=================================================================================
முன்னுரைகளும் மன்றாட்டுகளும்
தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு
=================================================================================
தொடக்க நூல் 15:5-12,17-18
பிலிப்பியர். 3:17-4:1
லூக்கா 9:28-36
திருப்பலி முன்னுரை:-1
இயேசுவிற்கு மிகவும் நெருக்கமானவர்களே!
தவக்காலத்தின் இரண்டாம்
ஞாயிறுத் திருவழிபாட்டிற்கு வந்துள்ள உங்கள் அனைவருக்கும் அன்பு
வாழ்த்துக்கள்!. புயலுக்குப்பின் அமைதி, இரவுக்குப்பின் பகல்,
துன்பத்திற்குப் பின் மகிழ்ச்சி என்பதைப்போல் இயேசுவின் பாடுகளுக்குப்பின்
மகிமை உண்டு என்ற ஆழ்ந்தப் பொருள் நிறைந்த நம்பிக்கையை நாம்
மனதினில் பதிவு செய்கிறது இன்றைய வாசகங்கள். மலையின் மேல் ஏறி
ஓர் ஆன்மீகதேடலைத் தேடுவதை நம் நாட்டில் எப்பொழுதும் காணலாம்.
அன்று இஸ்ரயேல் மக்கள் மத்தியிலும் இந்த நிகழ்வுகள் உண்டு என்பதை
விவிலியத்தில் காணலாம். தாபோர் மலையில் திருத்தூதர்கள் அடைந்த
ஆன்மீக தெய்வீக நிகழ்வின் மகிழ்ச்சி என்றும் நம்மில்
நிறைந்திருக்கட்டும்..
மகிழ்ச்சியான தாபோர் மலைக்கும் துன்பமான கெத்சமணித் தோட்டத்திற்கும்
அதே சீடர்களை அழைத்துச் செல்கிறார். அதுபோல அன்றாட வாழ்வில் பல
மகிழ்ச்சியான ஆறுதலான நேரங்களில் இறைவன் நம்மை உறுதிப்படுத்துகிறார்.
சந்திக்கவிருக்கும் துன்பங்களைத் தாங்கும் சக்தியைத் தருகிறார்.
ஆனால் நாம் அதைப் பலமுறை கண்டுகொள்வது கிடையாது. துன்பங்கள் மட்டுமே
நமக்குப் பெருஞ்சுமையாக இருக்கிறது. எந்நாளும், எந்நேரமும் நம்மை
வழிநடத்தும் இயேசுவின் பிரசன்னத்தில் வாழ்வோம். காற்றில் ஆடும்
நாணலைப் போல் நாமும் இயேசுவோடு இணைந்திருந்தால் அச்சம் என்பது
இல்லை நம் வாழ்வில்! எனவே இன்பத் துன்பங்களை ஏற்றுக் கொண்டு இயேசுவோடு
இரண்டறக் கலந்து வாழ வேண்டி அருள் வரங்கள் இன்றைய திருப்பலிக்
கொண்டாடத்தில் மன்றாடுவோம். வாரீர்.
திருப்பலி முன்னுரை:-2
இயேசுக் கிறிஸ்துவின் பாஸ்காவிழாவிற்கு அணியமாகும் வகையில் தவக்காலப்
பக்தி முயற்சிகளில் பங்கேற்று இன்று சிறப்பாக தவக்கால இரண்டாம்
ஞாயிறு திருப்பலி வழிபாட்டில் பங்கேற்றுக் கொண்டிருக்கும்
பெரியோர்களே, வருங்காலத் திரு அவையின் கருவாகிய இளையோர்களே,
சிறுவர் சிறுமிகளே உங்கள் அனைவருக்கும் தவக்காலம் தரும் புதிய
பாஸ்காப் பெருவாழ்வு கிடைக்க அன்புடன் வாழ்த்துகிறேன். நம் ஆண்டவர்
இயேசுவின் மாட்சியில் பங்குபெற இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு
விடுக்கிறது. இந்த நாளில் இன்றைய இறை வாக்குகளுக்கு ஏற்ற வகையில்
மூன்று உறுதிமொழிகளை நம் உள்ளத்தில் பதியவைப்போம். அவை:-
1. கடவுளின் மக்களாய் வாழ்வோம்.
2. பாடுகளில் பங்கேற்போம்.
3. இறை மொழிகளுக்குச் செவிசாய்ப்போம்.
இன்றைய இறைச் செய்திகள் நம்மை ஈக வாழ்வு வாழத் தூண்டுகின்றன.
அந்த மன நிலையுடனே இன்று இந்த மாண்புமிக்க உயர் பலியில் பங்கேற்போம்.
வாசகமுன்னுரை:-
முதல் வாசக முன்னுரை:-
புதியநாட்டைப் பெற்ற ஆபிராமுடன் இறைவன் செய்யும் இந்த உடன்படிக்கையில்
மூன்று நிகழ்வுகள் உள்ளன. வாக்குறுதி, அடையாளம், கீழ்ப்படிதல்.
விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்'
என்ற வாக்குறுதி. உடன்படிக்கையின் அடையாளமாக இரண்டு பாறைகளின்மேல்
ஆண்டவரின் கட்டளைப்படி ஆபிராம் விலங்குகளை வெட்டி
வைக்கின்றார். 'ஆபிராம் ஆண்டவர் மீது நம்பிக்கைக் கொண்டார். அதை
ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்'. இதுதான் ஆபிராமின்
கீழ்ப்படிதல். இவ்வாறு கடவுளின் உடன்படிக்கையையும், ஆபிராமின்
கொண்ட நம்பிக்கையையும் எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்தைக்
கவனமுடன் செவிமெடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை:-
இன்றைய இரண்டாவது வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார்
கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது அவர் தமது ஆற்றலால்
தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றுவார்
என்று அவரின் அன்பைப் பதிவு செய்கின்றார்.நாம் நமது தன்னல
வாழ்வுக்குள் இறந்துப் புதைக்கப்பட்டால் தான் வேற்றுரு
பெற்றுக் கிறிஸ்துவைப் போல உயிர்த்தெழமுடியும். தன் மக்கள்
மீது அவருக்குள்ள அன்பை உச்சிமுகர்ந்துக் கொண்டாடும் அவர் "ஆண்டவரோடுள்ள
உறவில் நிலைத்திருங்கள்" என்று திருத்தூதர் பவுலடியார் திருமடலில்
பதிவுச் செய்த அறிவுரைகளைக் கவனமுடன் செவிமெடுப்போம்.
பதிலுரைப் பாடல்
(திபா 27: 1,7-8,9-13-14)
பல்லவி: ஆண்டவரே என் ஒளி். அவரே என் மீட்பு.
ஆண்டவரே என் ஒளி். அவரே என் மீட்பு. யாருக்கு நான் அஞ்ச
வேண்டும்? ஆண்டவரே என் உயிருக்க அடைக்கலம். யாருக்கு நான் அஞ்ச
வேண்டும்? -பல்லவி
ஆண்டவரே நான் மன்றாடும்போது என் குலரைக் கேட்டருளும். என்மீது
இரக்கங்கொண்டு எனக்குப் பதிலளித்தருளும். "புறப்படு அவரது முகத்தை
நாடு" என்றது என் உள்ளம்: ஆண்டவரே உமது முகத்தையே நாடுவேன். -பல்லவி
உமது முகத்தை எனக்கு மறைக்காதிரும்; நீர் சினங்கொண்டு அடியேனை
விலக்கிவிடாதிரும்; நீரே எனக்குத் துணை; என் மீட்பராகிய கடவுளே,
என்னைத் தள்ளிவிடாதேயும். -பல்லவி
வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று
நான் இன்னும் நம்புகின்றேன். நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு;
மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக்
காத்திரு.-பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:-
ஒளிரும் மேகத்தினின்று தந்தையின் குரலொலி கேட்டது "என் அன்பார்ந்த
மைந்தர் இவரே! இவருக்கு செவிசாயுங்கள்"
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:-
1.உடன்படிக்கையின் நாயகனே! எம் இறைவா! இத் தவக்காலத்தில் திருஅவையின்
திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் ஆகியோர்
இறைமகன் இயேசுவை உறுதியாகப் பற்றிக்கொண்டு அவர் வழியில் செல்லவும்,
எதிர்வரும் வாழ்வியல் நிகழ்வுகள் எப்படி இருந்தாலும் எம்பெருமான்
இயேசுவின் காலடிகளே எம் சுவை என்று பற்றி நிற்பவர்களுக்கு எல்லா
நாளுமே உருமாற்றம்தான்! என்பதை உணர்ந்து இத்தவக்காலத்தைப் பயன்படுத்த
வேண்டி வரங்களை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2.எங்களை வளமான உமது நிறைவாழ்வுக்கு இட்டுச் செல்லும் இறைவா!
எங்கள் குடும்பங்கள் பவுலடியார் கூறிப்படித் திருத்தூதர்களைப்
போல் வாழ்ந்திடவும், விண்ணகதே எமது தாய் நாடு, அங்கிருந்து வரும்
இறைமகன் இயேசுவிற்காகக் காத்திருக்கவும், மாட்சிமைக்குரிய அவரின்
உடல் போன்று உருமாற்றம் பெற்றிடவும் வேண்டிய வரங்களைப் பொழிய
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. நிலையான நாடு விண்ணகமே என்ற உணர்த்திய எம் இறைவா! அரசியல்
தலைவர்கள் இவ்வுலகச் சொத்துக்களையும் புகழையும் சேர்க்க
வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து விடுபட்டு மக்களின் நலன்கள்
காக்கும் தன்னலமற்ற போக்கைக் கடைப்பிடிக்கவும், நாட்டில் நடைப்பெறவிருக்கும்
தேர்தல் சிறப்பாக நடைபெற்று இந்திய நாட்டின் பன்மைத் தன்மையும்,
மனித உரிமைகளையும் பாதுகாக்கும் தகுதியான தலைவர்களைத் தேர்வு
செய்ய நல்ல ஞானத்தையும் மக்கள் உள்ளத்தில் பொழிந்து மக்களுக்கு
நல்லதோரு எதிர்கலத்தையும் வளமான வாழ்வையும் தர வேண்டுமென்று இறைவா
உம்மை மன்றாடுகின்றோம்.
4. அருட்செல்வங்களின் நாயகனே! எம் இறைவா! இப்பொழுது எம் தமிழகத்தில்
அரசுத் தேர்வு எழுதும் எல்லா மாணவ, மாணவிகள் அனைவரும் தேவையாக
உடல், உள்ளச் சுகமும், தேர்விற்குத் தேவையான ஞானத்தையும் மனத்
தைரியத்தையும் கொடுத்து, பெற்றோர்களின் அன்பும், தேற்றவும்
பெற்றுத் தங்களின் எதிர்கால வாழ்வில் வெற்றிப் பெறவும், அதன்
மூலம் புதுவாழ்வு அடைய வேண்டிய வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா
உம்மை மன்றாடுகின்றோம்.
5, ஏழைகளுக்கு இறங்குபவன் கடவுளுக்குக் கடன் கொடுக்கின்றான் என்று
கூறிய எம் இறைவா! உலகமுழுவதும் உணவின்றி, உடையின்றி, வாழ்வை
இழந்து உம்மையே நம்பி இருக்கும் ஏழைகள், அநாதைகள், கைவிடப்பட்டவர்கள்,
வறுமையில் வாடுவோர் தனிமையில் தவிப்போர் போன்ற இவர்களின் தேவைகளைச்
சந்தித்து, தங்கள் அன்பையும், அரவணைப்பையும் பகிர்ந்தளிக்கத்
தேவையாக நல்ல மனப்பக்குவத்தை எமக்கு இத்தவக்காலத்தில் தரவேண்டுமென்று
இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
6,மாட்சி மிகுந்தவரான இறைவா,
திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், ஆபிரகாம்
கொண்ட நம்பிக்கையின் வழிமரபினராக விளங்கும் திருச்சபையின் மக்களை,
உமது மாட்சிக்கு உகந்தவர்களாக உருமாற்றும் வரமருள வேண்டுமென்று
உம்மை மன்றாடுகிறோம்.
7,தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற உம்மையே எளிமையாக்கிக்
கொண்ட இயேசுவே,
உம்மைப் போற்றுகிறோம். எவ்வளவு மாட்சி நிறைந்த நீர், எவ்வளவு
எளிமையாய், பணிவாய் பணியாற்றினீர். இவ்வாறு, தந்தைக்குப்
பெருமை சேர்த்தீரே. உமக்கு நன்றி. நாங்களும் உம்மைப் போல தந்தையின்
விருப்பத்தையே நிறைவேற்றவும், இறைத் திருவுளத்துக்குப் பணிந்து
நடக்கவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
8,அன்புத் தந்தையே இறைவா!
நீர் எமக்குக் கொடுத்துள்ள மக்கள் செல்வங்களுக்காக உமக்கு நன்றி
கூறுகின்றோம். அவர்கள் இதுவே தகுந்த காலம், இன்றே மீட்பின்
நாள் என்னும் இறைவெளிப்பாட்டை தம் உள்ளத்தில் ஆழமாகப் பதித்து:
இக்காலத்தை உம்மையே தேடி நேசிப்பதிலும், உமது வார்த்தைக்கு ஆர்வத்துடன்
செவிமடுத்து வாழுவதிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தவும் உமக்குகந்த
பிள்ளைகளாக வாழவும், செயற்படவும் அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
9,விடுதலையின் நிறைவே இறைவா,
பலவிதமான உடல், உள்ள, ஆன்ம நோய்களால் வருந்தும் மக்களை கனிவுடன்
கண்ணோக்கி, அவர்களுக்குத் தேவையான நற்சுகமும், புதுவாழ்வும் அளித்து
பாதுகாக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
10,திருஅவையின் வருங்காலத் தூண்களை வழிநடத்தும் எம் இறைவா!
இளையோர்பால் திருஅவைக் கொண்டிருக்கும் நம்பிக்கைளை அவர்கள்
புரிந்துகொள்ளவும், கிறிஸ்துவ நம்பிக்கை வழியில் இளையோரது பங்கேற்பையும்
பங்களிப்பையும் திருஅவைக்கும், சமூகத்திற்கும் செய்து நற்செய்திப்
பணியாற்றுபவர்களாக இளையோர் திகழ்ந்திடவும், தங்கள் தேர்வுகளைச்
சிறப்பான முறையில் எழுதி வெற்றிப் பெறவும் ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
11,உமது மகன் இயேசுவில் நம்பிக்கைக் கொள்வோர் நிலைவாழ்வுப்
பெறுவர் என்ற வாக்களித்த எம் இறைவா!
எங்கள் நம்பிக்கை இறை இயேசுவில் நிலைப்பெற்று, எம் வாழ்வு ஏற்றம்
பெறவும், அதனால் நாங்கள் உம் இறையரசின் சாட்சிகளாய் ஒளிர்ந்திடவும்,
அடுத்திருக்கும் எம் மக்களையும் இறையரசில் இணைத்திட உழைக்கவும்
தேவையான ஞானத்தை அனைவருக்கும் வழங்கிட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
12,ஆற்றல் வழங்கும் இறைவா,
சோதனைகளை வெல்வதற்கு இயேசுவுக்கு வலிமை தந்தீரே, உம்மைப்
போற்றுகிறோம். எங்களை சோதனையில் விழவிடாதேயும். சோதனை வேளைகளில்
இயேசுவைப்போல இறைமொழி கொண்டு வெற்றி பெற இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இன்றைய சிந்தனை
கூடாரம் அமைப்போம்
பேதுருவின் நியாயமான ஆசை. மூன்று பேருக்கும் மூன்று கூடாரம் அமைக்க
விரும்பினார். கூடாரங்கள் விவிலியத்தில் இறைப் பிரசன்னத்தின்
அடையாளம். பழைய ஏற்பாட்டில் பாலை வனப் பயணத்தில் இஸ்ராயேல் மக்களோடு
யாவே இறைவன் தனக்கென தனி கூடாரம் அமைத்துக் குடிகொண்டார்.
"மோசே பாளையத்துக்கு வெளியே கூடாரத்தைத் தூக்கிச் செல்வதும்
பாளையத்திற்கு வெகு தூரத்தில் கூடாரம் அடிப்பதும் வழக்கம்அதற்கு
அவர் சந்திப்புக் கூடாரம் என்று பெயரிட்டார். ஆண்டவரைத் தேடும்
யாவரும் பாளையத்துக்கு வெளியேயுள்ள சந்திப்புக் கூடாரத்திற்குச்
செல்வர்." (விடுதலைப் பயணம் 33.7)
இறை மாட்சியைக் கண்ட பேதுரு அத் தெய்வீகப் பிரசன்னம் தங்களோடு
என்றும் தங்கியிருக்க விரும்பினார்.உண்மையில் இறைவன் நம்மோடு
வாழும் தெய்வம். இம்மானுவேல் என்பது அவரது பெயர்.உலகம்
முடியும்வரை நம்மோடு இருக்கும் தெய்வம். பேதுருவின் ஆசையிலும்
இறைவனின் இயல்பிலும் ஒரே கருத்து உள்ளோடுவதை உணரமுடிகிறது.
இதைச் செயல்படுத்துவதில் சில வேறுபாடுகளைக் காணமுடிகிறது.
மாட்சியும் பெருமையும் அவரைக் கவர்ந்தது. பேரொளி, பெரிய ஆட்கள்
அவருக்குப் பெருமை சேர்த்தது. உயர்ந்த மலை உடலுக்கு இதமாக இருந்தது.
இத்தகைய சுனம் கண்டதால், அங்கு ஆண்டவனுக்குக் கூடாரம் அமைப்பதை
அவர் விரும்பவில்லை. மாறாக, தன் பாடுகள், மரணம் இவற்றால்
மாட்சி அடைவதை அவர் விரும்பினார். "மானிட மகன் இறந்து உயிர்த்தெழும்
வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது" என்பதை
இயேசு கூடாரம் அமைப்பதின் கொள்கையாகக் கொண்டார். மாய சுகத்தில்
அமைக்கும் கூடாரம் நிலைக்காது. உழைத்து உருவாக்கிய கூடாரம் இறைவன்
விரும்புவது. அங்கு இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.
மன்றாட்டு:-
இறைவா, உம் திருமகனின் குரலுக்கு எப்போதும் செவிசாய்க்க எங்கள்
இதயத்தைத் திறந்தருளும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
திருப்பலி முன்னுரை
தவக்காலம் இரண்டாம் ஞாயிறு வழிபாட்டை சிறப்பிக்க வந்துள்ள உங்கள்
அனைவருக்கும் இயேசுவின் இனிய நாமத்தில் அன்பான வணக்கங்கள்.
இன்று நாம் இயேசுவின் உருமாற்ற விழாவைக் கொண்டாடுகிறோம். இது
இயேசுவின் வாழ்வில் நடந்த வித்தியாசமான நிகழ்வு இது. இந்த நிகழ்வு
நடந்த இடமாக " மலை" கருதப்படுகின்றது. மலைமீது இயேசு தோற்றம்
மாறினார் என்பது கடவுளுக்கும், மனிதருக்கும் பாலமாக இயேசு உள்ளார்
என்பதைக் காட்டுகிறது. இயேசுவின் பணிவாழ்வில் இரு மலைகள்
முக்கியத்துவம் வாய்ந்தவை. ஓன்று, தாபோர் மலை. இரண்டு, கல்வாரி
மலை. இயேசு தாபோர் மலையில் உருமாறினாhர். கல்வாரி மலையில் உருச்சிதைந்தார்.
தாபோர் மலையி;ல் அவரருகே எலியாவும், மோசேயும் இருந்தனர். கல்வாரி
மலையில் இரு கள்வர்கள் இரண்டு புறமும் இருந்தனர். தாபோர் மலையில்
பேதுரு,"இங்கேயே இருப்பது நல்லது" என்ற அவரின் மகிழ்ச்சி,
"அவரை எனக்குத் தெரியாது" என இயேசுவை மறுதலிக்க வைத்தது கல்வாரி
மலை. தாபோர் மலையில்; " இவரே என் அன்பார்ந்த மகன்" என்று தந்தை
இறைவன் மகிமைப்படுத்தும் குரல் ஒலித்தது. கல்வாரி மலையில் " என்
இறைவா, என் இறைவா, ஏன் என்னை கைநெகிழ்ந்தீர்" என்ற இயேசுவின்
அவலக் குரல் ஒலித்தது. தாபோர் மலையின் மகிமையும், கல்வாரி மலையின்
இகழ்வும் இயேசுவுக்கு ஒன்றுதான். போற்றுவார் போற்றலும்,
தூற்றுவார் தூற்றலும் அவரை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை.
அவர் தம் இலட்சியத்தை மட்டுமே முன்னிருத்தி, தன் பணிவாழ்வின்
பயணத்தைத் தொடர்ந்தார்.
இந்நிகழ்வு நடந்ததின் நோக்கம் என்ன, தாக்கம் என்ன.....முதலாவதாக,
இயேசு இறைவனால் அனுப்பப்பட்டவர்" என்பதை சீடர்கள் உணர்ந்து, நம்பிக்கையில்
இன்னும் ஆழப்படவே இந்த உருமாற்றம் நிகழ்கின்றது. இரண்டாவதாக,
இறைமகன் தந்தையின் விருப்பப்படி சிலுவைச் சாவை ஏற்க வேண்டும்
என்பதை சீடர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக் இந்நிகழ்வு
ஏற்பட்டது. மூன்றவதாக, மாட்சியும், துன்பமும், பாராட்டும்-அவமானமும்
மானிட வாழ்வு என்னும் நாணயத்தின் இருபக்கங்கள் என்பதையும் இந்நிகழ்வு
உணர்த்துகின்றது. இத்தகைய உணர்வுகளோடு நாமும் நம்மையே இக்கல்வாரி
பலியில் ஒப்புக் கொடுப்போம். நாம் அனைவரும் இயேசுவின் ஓருடலாய்
மாறுவோம்.
முதல் வாசக முன்னுரை: (தொ.நூல் 15:5-12,17-18, 21b)
இன்றைய முதல் வாசகம், கடவுள் மீது ஆபிரகாம் கொண்ட நம்பிக்கையைப்
பற்றி எடுத்துரைக்கிறது. ஆண்டவர் ஆபிரகாமுக்கு நாட்டை உரிமைச்சொத்தாக
வழங்குவது குறித்த உடன்படிக்கையை செய்து கொள்வதைப் பற்றி
வாசிக்க கேட்கிறோம். வானத்து விண் மீன்களைப்
போன்று, ஆபிரகாமின்
வழிமரபினரை பெருகச் செய்ய இருப்பதாக ஆண்டவர் வாக்களிக்கிறார்.
ஆண்டவரின் வாக்குறுதிகளுக்கு ஆபிரகாமின் நம்பிக்கையே காரணம் என
விவிலியம் கூறுகிறது. நாமும் ஆபிரகாமைப் போல கடவுள் மீது
முழுமையான நம்பிக்கை கொண்டவர்களாய்
வாழ்ந்து, அவரது ஆசிகளை உரிமையாக்கி
கொள்ளும் வரம்
கேட்டு, இவ்வாசகத்திற்கு செவிகொடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை: (பிலிப்பியர் 3:17-4:1)
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கிறிஸ்துவின்
சிலுவையே மீட்புக்கு வழி என்பதை எடுத்துரைக்கிறார். சிலுவைக்கு
பகைவர்களாய் இருப்போர் மானக்
கேட்டுக்கும், அழிவுக்கும் ஆளாவர்
என்று தெளிவுபடுத்துகிறார். இறைமகன் இயேசு மனிதரின் நிலைக்கு
தம்மை தாழ்த்தியதால், நம்மை மாட்சிக்கு உரியவர்களாய் மாற்ற வல்லவர்
என்பதை உணர நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவரோடு உள்ள உறவில்
நிலைத்திருந்து, அவர் தரும் உருமாற்றத்தை பெற்று மகிழும் வரம்
கேட்டு, இவ்வாசகத்திற்கு செவிகொடுப்போம்.
மன்றாட்டுக்கள்:
" நல்ல ஆயன் நானே, நல்ல ஆயன் தன் ஆடுகளுக்காக தம் உயிரையே
கொடுப்பான்" என்ற இயேசுவே,
இறைபணிக்காக தங்களையே அர்ப்பணித்த திருத்தந்தை, ஆயர்கள்,
குருக்கள், அருட்சகோதரிகள், துறவிகள் அனைவரும் தங்கள்
அர்ப்பணத்தின் மேன்மையை உணர்ந்து. எந்த பலவீனங்கள்,
வலுவின்மையில் வீழ்ந்திடாமல், உம் அருளால் அனைத்து
சோதனைகளையும் வென்று, மக்களை நல்மனமாற்றத்திற்கு இட்டுச்
செல்லும் பணியை சிறப்பாக முன்னெடுத்துச் செய்வதற்கு வேண்டிய
இறையாற்றலும், வல்லமையும், சக்தியும் தந்தருள வேண்டுமென்று,
எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக இறைவா உம்மை
மன்றாடுகின்றோம்.
" நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன்" என்ற இயேசுவே,
தாய், தந்தை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட
பெற்றோர்கள், சமூகத்தினால் ஒதுக்கப்பட்டவர்கள் அனைவரையும்
உம்மிடம் ஒப்புக் கொடுக்கின்றோம். அவர்களின் உள்ளத்து தேவைகளை,
நீரே நிறைவு செய்யும். அவர்களின் மனக் கண்ணீரை, நீரே
மகிழ்ச்சியாக மாற்றும். அவர்களின் பாச ஏக்கங்களை, உம்
அன்பினால் நிரப்பி, கண்ணின்மணிபோல் அவர்களைக் காத்தருள
வேண்டுமென்று, எங்கள்; ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக இறைவா,
உம்மை மன்றாடுகின்றோம்.
" அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன், என் அமைதியையே
உங்களுக்கு அளிக்கிறேன்" என்ற இயேசுவே,
இன்று பலரின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் அமைதி,
நிம்மதியின்றி தவிக்கின்றனர். அமைதிக்காக, நிம்மதிக்காக
எங்கெங்கோ செல்கின்றனர். போதை, மது போன்ற தவறான வழிகளில்
நிம்மதியை, அமைதியை தேடுகின்றனர். அவர்கள் தேடும் இறையமைதி
உம்மிலேதான் இருக்கின்றது, அது உம்மிடம் மட்டுமே உள்ளது என்பதை
உணர்ந்து, உம் இல்லம் நாடி வந்து, உம் நற்கருணை பிரசன்னத்தில்
உம் உடனிருப்பின் வழியாக, நீர் தரும் அமைதியை பெற்றுக் கொள்ள,
எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக, இறைவா உம்மை
மன்றாடுகின்றோம்.
" உயிர்த்தழுதலும் வாழ்வும நானே, என்னில் நம்பிக்கை கொள்பவர்
இறப்பினும் வாழ்வார்" என்ற இயேசுவே,
எங்கள் குடும்பங்களில், உறவுகளில் இறந்தவர்களுக்கும். மற்றும்
யாரும் நினையாத ஆன்மாக்களுக்கும் நீரே உம் அளவற்ற அன்பினால்,
பேரிரக்கத்தினால் அவர்களின் வாழ்வில் செய்த அனைத்து
பாவங்களையும் மன்னித்து, அவர்களுக்கு உம் பேரின்ப வீட்டில்
இடமளித்தருளும். உம்மை முகமுகமாய் தரிசித்து, உம்மைப் போற்றி,
துதித்திட செய்தருள வேண்டுமென்று, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து
வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
" உலகின்; ஒளி நானே: என்னை பின்செல்பவர் இருளில் நடக்க
மாட்டார்" என்ற இயேசுவே,
உம் சாயலையும், உயிர்மூச்சையும் தாங்கியிருக்கின்றோம் என
வார்த்தையளவில் மட்டும் சொல்லிக் கொள்ளும் கிறிஸ்தவர்களாக
இல்லாமல், பாவ வாழ்வின் நாட்டங்களை விட்டு விலகி, உம்
வார்த்தையை வாழ்வாக்கி, எங்கள் பாவங்களை உம் திருமுன்
அறிக்கையிட்டு, நல்ல மனமாற்றத்தை இத்தவக்காலத்தில் எங்கள்
செபம், தவத்தினால் செய்து, என்றும் உம் அன்புக்குரிய,
ஆசீருக்குரிய பிள்ளைகளாக, உம் ஒளியின் பாதையில் வாழ்ந்திட
வேண்டுமென்று, எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக இறைவா
உம்மை மன்றாடுகின்றோம். |
|