Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                       20 செப்டம்பர் 2019  
                                         பொதுக்காலம் 29ம் ஞாயிறு - 3ம் ஆண்டு
     
=================================================================================
முதல் வாசகம்

=================================================================================
மோசே தம் கையை உயர்த்தியிருக்கும்போதெல்லாம் இஸ்ரயேலர் வெற்றியடைந்தனர்.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 17: 8-13

அந்நாள்களில் அமலேக்கியர் இரபிதிமில் இஸ்ரயேலரை எதிர்த்துப் போரிட வந்தனர்.

மோசே யோசுவாவை நோக்கி, "நம் சார்பில் தேவையான ஆள்களைத் தேர்ந்தெடு. நாளை நீ போய், அமலேக்கியரை எதிர்த்துப் போரிடு. நான் கடவுளின் கோலைக் கையில் பிடித்தவாறு குன்றின் உச்சியில் நின்று கொள்வேன்'' என்றார்.

அமலேக்கியரை எதிர்த்துப் போரிட மோசே கூறியவாறு யோசுவா செய்யவே, மோசே, ஆரோன், கூர் என்பவர்கள் குன்றின் உச்சிக்கு ஏறிச் சென்றனர்.

மோசே தம் கையை உயர்த்தியிருக்கும் போதெல்லாம் இஸ்ரயேலர் வெற்றியடைந்தனர்; அவர் தம் கையைத் தளர விட்டபோதெல்லாம் அமலேக்கியர் வெற்றியடைந்தனர்.

மோசேயின் கைகள் தளர்ந்து போயின. அப்போது அவர்கள் கல்லொன்றை அவருக்குப் பின்புறமாக வைக்க, அவர் அதன்மேல் அமர்ந்தார். அவர் கைகளை ஆரோன் ஒருபக்கமும், கூர் மறுபக்கமுமாகத் தாங்கிக் கொண்டனர்.

இவ்வாறாக அவர் கைகள் கதிரவன் மறையும்வரை ஒரே நிலையில் இருந்தன. யோசுவா அமலேக்கையும் அவனுடைய மக்களையும் வாளுக்கிரையாக்கி முறியடித்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:  121: 1-2. 3-4. 5-6. 7-8 (பல்லவி: 2) Mp3
=================================================================================
பல்லவி: விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரே எனக்கு உதவி.

1 மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன்! எங்கிருந்து எனக்கு உதவி வரும்? 2 விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும். பல்லவி

3 அவர் உம் கால் இடறாதபடி பார்த்துக் கொள்வார்; உம்மைக் காக்கும் அவர் உறங்கிவிட மாட்டார். 4 இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதும் இல்லை; உறங்குவதும் இல்லை. பல்லவி

5 ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்; அவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்; அவரே உமக்கு நிழல் ஆவார்! 6 பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது; இரவில் நிலாவும் உம்மைத் தீண்டாது. பல்லவி

7 ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்; அவர் உம் உயிரைக் காத்திடுவார். 8 நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும் இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார். பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
  கடவுளின் மனிதர் தேர்ச்சி பெற்று நற்செயல் அனைத்தையும் செய்யத் தகுதி பெறுகிறார்.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 14 - 4: 2

அன்பிற்குரியவரே, நீ கற்று, உறுதியாய் அறிந்தவற்றில் நிலைத்து நில்; யாரிடம் கற்றாய் என்பது உனக்குத் தெரியுமே. நீ குழந்தைப் பருவம் முதல் திருமறை நூலைக் கற்று அறிந்திருக்கிறாய். அது இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையால் உன்னை மீட்புக்கு வழி நடத்தும் ஞானத்தை அளிக்க வல்லது. மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது. அது கற்பிப்பதற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது. இவ்வாறு கடவுளின் மனிதர் தேர்ச்சி பெற்று நற்செயல் அனைத்தையும் செய்யத் தகுதி பெறுகிறார்.

கடவுள் முன்னிலையிலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு அளிக்கப்போகிற கிறிஸ்து இயேசு முன்னிலையிலும் அவர் தோன்றப் போவதை முன்னிட்டும் அவரது ஆளுகையை முன்னிட்டும் நான் ஆணையிட்டுக் கூறுவது: இறைவார்த்தையை அறிவி. வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இதைச் செய்வதில் நீ கருத்தாயிரு. கண்டித்துப் பேசு; கடிந்துகொள்; அறிவுரை கூறு; மிகுந்த பொறுமையோடு கற்றுக்கொடு.


- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
எபி 4: 12

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
தாம் தேர்ந்துகொண்டவர்களுக்கு கடவுள் நீதி வழங்காமல் இருப்பாரா?

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-8

அக்காலத்தில் சீடர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார். "ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார்.

அவர் நடுவரிடம் போய், `என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்' என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்.

நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை.

பின்பு அவர், `நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக்கொண்டேயிருப்பார்' என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.''

பின் ஆண்டவர் அவர்களிடம், "நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணை செய்யக் காலம் தாழ்த்துவாரா? விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும் மானிட மகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
I விடுதலைப் பயணம் 17: 8-13
II 2 திமொத்தேயு 3: 14- 4:2
III லூக்கா 18: 1-8

மனந்தளராமல் மன்றாடுவோம்

நிகழ்வு

ஊர் ஊராகச் சென்று மக்கட்குப் போதித்துக்கொண்டிருந்த துறவி ஒருவர் இருந்தார். ஒருநாள் அவர் ஒரு கடற்கரைக் கிராமத்திற்குச் சென்று போதிக்கத் தொடங்கினார். அவருடைய போதனையைக் கேட்க ஏராளமான மக்கள் கூடி வந்தார்கள்.

துறவி தொடர்ந்து போதித்துக் கொண்டிருக்கையில் கூட்டத்திலிருந்து எழுந்த ஒரு மனிதர், "சுவாமி! நான் ஒரு இறைப்பற்றாளன்; எனக்குக் கடவுள்மீது ஆழமான நம்பிக்கை உண்டு; என் நண்பர்கட்கும் என்னை நாடி வருபவர்கட்கும் நான் தாராளமாக உதவிசெய்யக்கூடியவன். அப்படிப்பட்ட நான் பல ஆண்டுகளாக ஒரு விண்ணப்பத்திற்காக இறைவனிடம் தொடர்ந்து மன்றாடிவருகின்றேன். இருந்தும் என்னுடைய மன்றாட்டை இறைவன் கேட்பதாகவே இல்லை. இதனால் நான் இறைவனிடம் வேண்டுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ளலாம் என்று இருக்கின்றேன். இதுகுறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்றார்.

அந்த மனிதர் சொன்னதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த துறவி, பேசத் தொடங்கினார்: "தம்பி! கடலில் முத்தெடுப்பவர் எப்படி எடுப்பார் என்பதைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் தன்னுடைய உயிரைப் பணயம் வைத்து கடலுக்குள் மூழ்கி முத்தெடுக்கும்போது முத்து உடனடியாகக் கிடைத்துவிடுவதில்லை. உடனடியாக கிடைக்கவில்லை என்பதற்காக அவர் தன்னுடைய முயற்சியைக் கைவிட்டுவிடுவதில்லை; பலமுறை முயற்சி செய்கிறார். அதற்குப் பின்னரே அவர் தேடிய முத்தானது அவர்க்குக் கிடைக்கின்றது. அதுபோன்றுதான், இத்தனை ஆண்டுகளும் நீங்கள் இறைவனிடம் எடுத்து வைத்த விண்ணப்பத்திற்குப் பதில் கிடைக்கவில்லை என்பதற்காக உங்களுடைய முயற்சியைக் கைவிட்டுவிடாதீர்கள். தொடர்ந்து மன்றாடுங்கள். நிச்சயமாக இறைவன் உங்களுடைய விண்ணப்பத்திற்குப் பதிலளிப்பார். ஏனென்றால், இறைவன் உங்களுடைய விண்ணப்பத்திற்குப் பதிலளிக்கத் தாமதப்படுத்துகிறார் என்பதால், அவர் உங்களுடைய விண்ணப்பத்திற்குப் தரவே மாட்டார் என்ற அர்த்தம் கிடையாது."

துறவி சொன்ன இவ்வார்த்தைகளைக் கேட்டு மிகவும் மகிழ்சிபோன அந்த மனிதர் இறைவனிடம் இன்னும் விடாமுயற்சியோடு மன்றாடத் தொடங்கினார்.

இறைவனிடம் நாம் மன்றாடுகின்றபோது விடாமுயற்சியோடும் மனந்தளராமலும் மன்றாடவேண்டும் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. பொதுக்காலத்தின் இருபத்து ஒன்பதாம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் நமக்கு, இன்றைய நாள் இறைவார்த்தை 'மனந்தரளாது மன்றாவோம்' என்ற சிந்தனையைக் தருகின்றது. நாம் அது குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும்

நற்செய்தியில் இயேசு, மனந்தளராது மன்றாடவேண்டும் என்பதற்காக ஓர் உண்மையைச் சொல்கின்றார். அந்த உவமையைதான், 'நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும்' என்ற உண்மையாகும். இந்த உவமையைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னம், இஸ்ரயேல் சமூகத்தில் கைம்பெண்களின் நிலை எப்படி இருந்தது எனத் தெரிந்துகொள்வோம்

லூக்கா நற்செய்தியில் கைம்பெண்களைக் குறித்த குறிப்புகள் அதிகமான காணக்கிடக்கின்றன (லூக் 2: 37-38; 4: 25-26; 7: 11-17; 18: 1-8; 20: 45-47; 21: 1-4). இன்னும் சொல்லப்போனால், லூக்கா நற்செய்தியாளர் அளவுக்கு கைம்பெண்களைக் குறித்து எழுதிய நற்செய்தியாளர் யாரும் கிடையாது என்று சொல்லலாம். அந்தளவுக்கு கைம்பெண்களைக் குறித்து லூக்கா நற்செய்தியாளர் அதிகமாகவே பதிவுசெய்திருக்கின்றார். ஆண்டவராகிய கடவுள் கைம்பெண்களைக் கவனித்துக்கொள்ளவேண்டும்; அவர்களைப் பராமரிக்கவேண்டும் என்று பலமுறை சொல்லியிருக்கின்றார். இதற்கான குறிப்புகள் திருவிவிலியத்தின் பட இடங்களில் உள்ளன (விப 22: 22-24, இச 14: 28-29; எரே 7:6). அப்படியிருந்தும் கைம்பெண்களை இரண்டாம் தர மக்களைப் போன்று நடத்திய போக்கு இஸ்ரயேல் சமூகத்தில் நிலவித்தான் வந்தது. தொடக்கத் திருஅவையில் கைம்பெண்களைக் கவனித்துக் கொள்ளும் ஏற்பாடுகள் நடந்தாலும்கூட (திப 6:1. 1திமொ 5: 3-10, யாக் 1:27) அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகவே இருந்தது.

இத்தகைய பின்புலத்தோடு இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்கின்ற உவமையில் வருகின்ற கைம்பெண்ணின் நிலையைப் பார்ப்போம். அவளுக்கு முன்பாக மூன்று சவால்கள் இருந்தன. ஒன்று, அவள் பெண். இரண்டு, அவள் கணவனை இழந்தவள். மூன்று, அவள் ஏழை. இப்படிப்பட்ட சாவல்களோடு கடவுளுக்கு அஞ்சாத, மக்களையும் மதிக்காத ஒரு நடுவரிடமிருந்து நீதிகேட்டு அவள் போராடுகின்றார். அந்தக் கைம்பெண்ணிடம் பணம் இருந்தாலாவது கையூட்டுக் கொடுத்து (!) நடுவரிடமிருந்து உடனடியாக நீதியைப் பெற்றிருக்க முடியும். அக்காலத்தில் அப்படியொரு நிலை இருந்தது. உவமையில் வரும் கைம்பெண்ணுக்கு அதற்கும் வழியில்லாமல் போனதால், அவள் மனந்தளராது அந்த நடுவரிடமிருந்து நீதி கிடைக்கப் போராடுகின்றாள். முடிவில் அந்த நேர்மையற்ற நடுவர், 'இவளுக்கு நீதி வழங்கவில்லை என்றால், என்னுடைய உயிரை வாங்கிவிடுவாள்' என்று பயந்து போய் அவளுக்கு நீதி வழங்குகின்றார். இவ்வாறு அந்தக் கைம்பெண் மனந்தளராது போராடி தனக்கான நீதியைப் பெறுகின்றாள்

பேரன்பு கொண்ட இறைவனும் அவருடைய மக்கள்

இயேசு இந்த உவமையைச் சொல்லிவிட்டு, நேர்மையற்ற நடுவரே கைம்பெண்ணுக்கு நீதி வழங்கியபோது, தாம் தேர்ந்துகொண்டவர்கள் தம்மை நோக்கி மன்றாடும்போது, கடவுள் அவர்கட்கு நீதி வழங்காமல் இருப்பாரா? என்று தம் சீடர்களிடம் கேட்கின்றார்.

இங்கு நாம் 'நேர்மையற்ற நடுவர்தான் கடவுள்' என்று புரிந்துகொள்ளக்கூடாது. கடவுள் நேர்மையற்ற நடுவர் அல்ல, அவர் நல்ல நடுவர், நல்ல தந்தை. அப்படிப்பட்ட தந்தை தம் பிள்ளைகள் அல்லது தாம் தேர்ந்துகொண்டவர்கள் தம்மிடம் மன்றாடிக் கேட்கின்றபோது, அவர் எப்படித் தராமல் போவார்...? நிச்சயம் தருவார் என்பதுதான் இயேசு கூறும் செய்தியாக இருக்கின்றது. இன்னொரு செய்தியையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். அது என்னவெனில், கைம்பெண்ணுக்காக வழக்காட அல்லது அவர் சார்பாக நின்று போராட யாருமே இல்லை. ஆனால், நம் சார்பாக இறைவனிடம் பரிந்து பேச இயேசு கிறிஸ்துவும் (எபி 7: 25, 1 யோவா 2:1) தூய ஆவியாரும் (உரோ 8: 26-27) இருக்கின்றார்கள். அப்படியிருக்கையில் இறைவனிடம் நாம் மனந்தளராது மன்றாடுகின்றபோது, இறைவன் மன்றாட்டை நிச்சயம் கேட்பார் என்பதுதான் இயேசு சொல்லும் செய்தியாக இருக்கின்றது.

இறைவன் காலம் தாழ்த்துகிறார் என்பதால் தரமாட்டார் என்ற அர்த்தமில்லை

இங்கு ஒரு கேள்வி எழலாம். 'இறைவனிடம் பரிந்து பேச இயேசு இருக்கின்றார்; 'துணையாளராம் தூய ஆவியார் இருக்கின்றார். அப்படியிருந்தும் நாம் தொடர்ந்து மன்றாடுகின்றபோதும், இறைவன் நம்முடைய மன்றாட்டிற்கு (சில சமயங்களில்) பதிலளிப்பதில்லையே? அது ஏன்?' என்பதுதான் அந்தக் கேள்வி. இதற்கான பதிலை புனித யோவான் தன்னுடைய முதல் திருமுகத்தில் கூறுகின்றார். "நாம் கேட்பது கடவுளுடைய திருவுளத்திற்கு ஏற்ப அமைந்திருப்பின் அவர் நமக்குச் செவி சாய்க்கின்றார்" (1 யோவா 5: 14). ஆம், எதைக் கேட்டாலும் அதைத் தர வல்லவராக இறைவன் இருப்பினும், அவர் தன்னுடைய திருவுளத்திற்கு ஏற அமைந்திருப்பவற்றிற்கே செவிசாய்க்கின்றார்.

ஆகையால், நாம் இறைவனிடம் தொடர்ந்து மன்றாடுவோம். ஒருவேளை இறைவன் நம்முடைய மன்றாட்டிற்குப் பதில் தரவில்லை என்றால், அது இறைவனுடைய திருவுளத்திற்கு ஏற்ப அமைந்திருக்கவில்லை என்று நினைத்துக் கொள்வோம்; தாமதமாக தந்தால் அதை உள்ளன்போடு ஏற்றுக்கொள்வோம். ஆனால், எத்தகைய சூழ்நிலையிலும் நாம் மன்றாடுவதை நிறுத்திக்கொள்ளாமல், தொடர்ந்து மன்றாடி இறைவனின் ஆசியைப் பெறுவோம்.

சிந்தனை

'காலையில் கடவுளை விட்டு ஓடியவன் அன்று முழுவதும் அவரைக் கண்டுபிடிக்கமாட்டன்' என்பார் பனியன் என்ற அறிஞர். ஆகையால், நாம் இறைவேண்டலுக்கு நம்முடைய வாழ்வில் முதன்மையான இடம்கொடுப்போம்; இடைவிடாமலும் மனந்தளராமலும் மன்றாடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 


=================================================================================
திருப்பலி முன்னுரை
=================================================================================
பொதுக்காலம் 29ஆம் ஞாயிறு

இயேசு ஆண்டவரில் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, பொதுக்காலம் 29ம் ஞாயிறு திருப்பலியில் பங்கேற்க இறை இல்லம் வந்திருக்கின்ற உங்களை இத்திருப்பலி கொண்டாட்டத்திற்கு அழைக்கின்றோம். நற்செய்தி அறிவிப்பு சிறப்பு மாதத்தின் மூன்றாம் ஞாயிறை இன்று கொண்டாடுகின்றோம். இந்த நாளின் மையக்கருத்தாக நாம் சிந்திப்பது மறைத்தூது பயிற்சி. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விவிலியம், மறைக்கல்வி, ஆன்மீகம் மற்றும் இறையியல் போன்றவற்றில் பயிற்சி பெற்று நற்செய்தி அறிவிப்புப் பணியில் தங்களையே முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றார். 'ஆண்டவருடைய ஆவி என்மேல் உள்ளது; ஏனெனில் அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும், ஆண்டவர் அருள் தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்' என்று தன் பணி வாழ்வின் தொடக்கத்திலேயே இயேசு தொழுகைக் கூடத்தில் நற்செய்தியைப் பறைசாற்ற தொடங்கினார். அதற்கான மறைத்தூதுப் பயிற்சியையும் அவர் பெற்றிருந்தார். அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து, அவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டும், அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டும் இருந்தார் என்று லூக்கா நற்செய்தியில் வாசிக்கின்றோம் (லூக் 2:4-6). நாமும் நற்செய்தி அறிவிப்பின் தூதுவர்களாக பயணிக்க முழுமையான மறைத்தூதுப் பயிற்சியினைப் பெறுவோம், அதற்கு வழிகாட்டுகின்ற இத்தெய்வீகாத் திருப்பலியில் இணைந்திடுவோம்.

முதல் வாசக முன்னுரை: விப 17:8-13

நாம் கரங்களை விரித்து ஆண்டவரை நோக்கி உருக்கமாக செபிக்கின்ற போது கிடைக்கின்ற பரிபூரண பலனைப் பற்றி இன்றைய முதல் வாசகம் பேசுகின்றது. மோசே கொடுத்த பயிற்சியினைப் பெற்ற யோசுவா எளிதாக அமலேக்கையும் அவருடைய மக்களையும் வாளுக்கு இரையாக்கினார். திரு அவை கொடுக்கின்ற மறைத்தூதுப் பயிற்சிகளைப் பெற்று உலக தீயசக்திகளை வெற்றிகொள்ள முதல் வாசகத்திற்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை: 2 திமொத்தேயு 3:14-4:2

மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது. அது மட்டுமே நம் வாழ்வை நேர்மையாக வாழப் பயிற்றுவிக்கக் கூடியது. எனவே அதனைக் கற்று உறுதியாக நிலைத்து நின்று மறைத்தூதுப் பணியைச் செய்ய தூய பவுலடியார் அழைப்பு விடுக்கின்றார். மறைத்தூதுப் பயிற்சி அவசியம் என்பதை உணர்ந்தவர்களாய் இரண்டாம் வாசகத்திற்கு செவிமடுப்போம்.


=================================================================================
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
=================================================================================
இறைமக்களின் மன்றாட்டுகள்


என் மக்களை நானே தேடிச் செல்வேன், என்று எங்களைத் தேடி வந்திருக்கின்ற தெய்வமே இறைவா, உலக மக்களை நல்வழி நடத்திட நீர் தேர்ந்து கொண்ட எம் திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் ஆயர்களையும், அவர்கள் மேற்கொள்கின்ற நற்செய்தி அறிவிப்புப் பயணங்களையும் ஆசீர்வதியும். நீரே அவர்களுக்கு துணையாக இருந்து வழிநடத்தி, வெற்றியை அருளி, நற்செய்தியின் தூதுவர்களாக தொடர்ந்து பயணிக்க அருள்தர, உம்மை மன்றாடுகின்றோம்.


பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.


நற்செய்தி அறிவிப்புப் பணிதான் திருமுழுக்கு பெற்றோரின் முதன்மையான பணி என்பதை உணர்த்திய இறைவா, நாங்கள் எங்கள் திருமுழுக்கின் மேன்மையை உணர்ந்தவர்களாய் நற்செய்திப் பணியை செய்யவும், அதற்குத் தேவையான விவிலியம், இறையியல், மறைக்கல்வி மற்றும் வழிபாடுகள் குறித்த பயிற்சிகளை ஆர்வத்தோடு பெறவும், எங்கள் குழந்தைகளுக்கும் நாங்கள் மறைத்தூதுப் பயிற்சியை கொடுக்கவும் வரம் தர உம்மை மன்றாடுகின்றோம்.


பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.


உம்மைப் பாதுகாக்கும்படி கடவுள் தம் தூதர்களுக்கு உம்மைக் குறித்து கட்டளையிடுவார் என்று மொழிந்த இறைவா, இன்று நற்செய்திப் பணிக்கு எதிராக வருகின்ற தடைகள், சவால்கள் அனைத்தையும் உம்மிடம் ஒப்படைக்கிறோம். குறிப்பாக அரசியல், கலாச்சாரம், பொருளாதார தடைகளை தகர்த்தெறிந்து, தூய ஆவியைப் பெற்ற சீடர்கள் உம்மைத் துணிவுடன் எங்கும் அறிவித்தது போல, நாங்களும் அறிவிக்க உம்மை மன்றாடுகின்றோம்.


பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.


நீ மனிதரைப் பிடிப்பவர் ஆவாய் என்று மொழிந்த இறைவா, அறுவடைக்குத் தேவையான ஆட்களை அனுப்பும்படியாக உம்மை வேண்டுகின்றோம். நற்செய்தி அறிவிப்புப் பணிக்கு தேவையான பணியாளர்களை நீர் கொடுத்துக் கொண்டிருப்பதற்காகவும் நன்றி கூறுகின்றோம். இன்னும் தேவையான பணியாளர்களை அனுப்பும்படியாகவும், எங்கள் பங்கு மற்றும் குடும்பங்களில் தேவ அழைத்தலைத் தரும்படியாகவும் உம்மை மன்றாடுகின்றோம்.


பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.


நன்றி: நற்செய்தி அறிவிப்புப் பணிக்குழு, பாளையங்கோட்டை மறைமாவட்டம்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:

விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

நிலைத்திருப்பவரே இறைவா,
திருச்சபையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உம்மீது முழுமையான நம்பிக்கை கொண்டு செப வாழ்வில் நிலைத்திருக்க உதவ வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.

விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரே!
இன்றைய நற்செய்தியில் கூறப்படும் கைம்பெண்ணைப்போல நாம் அனைவரும் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாடவும், மீட்புக்கு வழி நடத்தும் ஞானத்தை அளிக்க வல்ல இறைவார்த்தையை, வாய்ப்புக் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் அறிவிப்பதில் கருத்தாயிருக்கவும், வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

உலகின் கடை எல்லைவரை நற்செய்தியை அறிவிக்க அழைத்த எம் இறைவா!
மறைபோதக ஞாயிறுவிழாவைக் கொண்டாடும் நாங்கள் உம் சீடர்கள் போல் நாங்களும் சாட்சிகளாய் இவ்வுலகில் வலம் வரவும், எம் பங்களிப்பால் உமது பணியாளர்களைத் தாங்கிக் கொள்ளும் நல்மனதையும், எளியோருக்கு நல்ல சமாரியனாக மாறி உம்மை அவர்களில் காணும் வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மூவொரு இறைவனே எம் இறைவா!
எம் குடும்பத்தில் உள்ள பெற்றோர், பெரியோர் ஆகிய அனைவரையும் நாங்கள் ஒரு சுமையாகக் கருதாமல் அவர்கள் வழியாக நாங்கள் பெற்றுக் கொண்ட உம் ஆசீர்வாதங்களை எங்கள் பிள்ளைகளுக்கும், தலைமுறையினருக்கும் கொண்டு செல்லக் கூட்டுகுடும்பத்தின் நன்மைகளை அறிந்துச் சாட்சிய வாழ்வு வாழ இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

பரிவன்புமிக்க எம் இறைவா!
எம் இளையோர், இளம் பெண்கள், சிறுவர், சிறுமியர் இவர்களின் மனங்களில் இறுமாப்பு, ஆடம்பரம் என்ற இருள் சூழ்ந்துக் கொள்ளமால் அன்பு, பிறர்நலம் காணும் நல்லெண்ணம் வளர்ந்திடவும், தாழ்வுமனப்பான்மை அகற்றித் தாழ்ச்சியில் உயர்ந்து ஓங்கிடத் தேவையான வரமருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

குடும்பங்களின் பாதுகாவலான எம் இறைவா!
எம் குடும்பங்களில் உள்ள எம் பெற்றோர், பெரியோர், நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் சமாதானத்தோடும், ஒற்றுமையோடும் பிரிவினைகள் கருத்துவேறுபாடுகள் இல்லாமல் வாழத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

இடைவிடாது செபிக்க அழைத்த எம் தந்தையே இறைவா!
செபமே ஜெயம் என்பதை நாளும் உணர்ந்தவர்களாய் தொடர்ந்து சோர்வில்லாமல் செபிக்கவும், பரிந்துரைச் செபத்தால் எமக்கு அடுத்திருப்பவர்களின் துயரத்தில் பங்கு கொண்டு அவர்களுக்காகச் செபித்து அவர்களை ஆற்றுப்படுத்தும் உள்ளத்தைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!