Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                        
                                         பொதுக்காலம் 28ம் ஞாயிறு - 3ம் ஆண்டு
     
=================================================================================
முதல் வாசகம்

=================================================================================
நாமான் கடவுளின் அடியவரிடம் திரும்பி வந்து ஆண்டவரை ஏற்றுக்கொண்டார்.

அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 5: 14-17


அந்நாள்களில் நாமான் புறப்பட்டுச் சென்று கடவுளின் அடியவரது வாக்கிற்கிணங்க யோர்தானில் ஏழுமுறை மூழ்கியெழ, அவர் நலமடைந்தார். அவரது உடல் சிறு பிள்ளையின் உடலைப் போல் மாறினது.

பின்பு அவர் தம் பரிவாரம் அனைத்துடன் கடவுளின் அடியவரிடம் திரும்பி வந்து," இஸ்ரயேலைத் தவிர வேறு எந்த நாட்டிலும் கடவுள் இல்லையென இப்போது உறுதியாக அறிந்து கொண்டேன். இதோ, உம் அடியான்! எனது அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளும்" என்றார்.

அதற்கு எலிசா, " நான் பணியும் வாழும் ஆண்டவர்மேல் ஆணை! நான் எதையும் ஏற்றுக்கொள்ளேன்" என்றார்.

நாமான் எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

அப்பொழுது நாமான் அவரை நோக்கி, " சரி, அப்படியே ஆகட்டும். ஆயினும் ஒரு சிறு வேண்டுகோள்; இரு கழுதைப் பொதி அளவு மண்ணை இங்கிருந்து எடுத்துச் செல்ல உம் அடியானுக்கு அனுமதி தாரும். இனிமேல் உம் அடியானாகிய நான் ஆண்டவரைத் தவிர வேறு தெய்வங்களுக்கு எரிபலியோ வேறு பலியோ ஒருபோதும் செலுத்தமாட்டேன்" என்றார்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா: 98: 1. 2-3a. 3b-4 (பல்லவி: 2 காண்க) Mp3
=================================================================================
 பல்லவி: ஆண்டவர் தம் மீட்பை மக்களினத்தார் காண வெளிப்படுத்தினார்.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி

2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண் முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். 3a இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். பல்லவி

3b உலகெங்குமுள்ள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். 4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி


================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
  கிறிஸ்துவோடு நிலைத்திருந்தால், அவரோடு ஆட்சி செய்வோம்.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 8-13

அன்பிற்குரியவரே, தாவீதின் மரபில் வந்த இயேசு கிறிஸ்து இறந்து உயிர் பெற்று எழுந்தார் என்பதே என் நற்செய்தி. இதனை நினைவில் கொள். இந்நற்செய்திக்காகவே நான் குற்றம் செய்தவனைப் போலச் சிறையிடப்பட்டுத் துன்புறுகிறேன்.

ஆனால் கடவுளின் வார்த்தையைச் சிறைப்படுத்த முடியாது. தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் மீட்பையும் அதனோடு இணைந்த என்றுமுள்ள மாட்சியையும் கிறிஸ்து இயேசு வழியாக அடையுமாறு அனைத்தையும் பொறுத்துக் கொள்கிறேன்.

பின்வரும் கூற்று நம்பத் தகுந்தது: `நாம் அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம்; அவரோடு நிலைத்திருந்தால், அவரோடு ஆட்சி செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவர் நம்மை மறுதலிப்பார். நாம் நம்பத் தகாதவரெனினும் அவர் நம்பத் தகுந்தவர். ஏனெனில் தம்மையே மறுதலிக்க அவரால் இயலாது.' இவற்றை நீ அவர்களுக்கு நினைவுறுத்து.


- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
1 தெச 5: 18

அல்லேலூயா, அல்லேலூயா! எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 11-19

அக்காலத்தில் இயேசு எருசலேமுக்குப் போய்க்கொண்டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார்.

ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்துத் தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்றுகொண்டே, " ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்" என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள்.

அவர் அவர்களைப் பார்த்து, " நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்" என்றார்.

அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும் போது அவர்கள் நோய் நீங்கிற்று.

அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்; அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர்.

இயேசு அவரைப் பார்த்து, " பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!" என்றார்.

பின்பு அவரிடம், " எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது" என்றார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
I 2 அரசர்கள் 5: 14-17

II 2 திமொத்தேயு 2: 8-13

III லூக்கா 17: 11-19


இறைவனுக்கு நன்றி கூறுவோமா?

நிகழ்வு


சூஃபி ஞானி ஒருவர் இருந்தார். ஒருநாள் அவர் பக்கத்து ஊரில் போதித்துவிட்டு, இரவில் நெடுநேரம் கழித்து, தான் இருந்த இல்லத்திற்குத் திரும்பினார். அன்று அவர்க்கு கடுமையாகப் பசியெடுத்தது. அதனால் அவர் உணவுக்குப் பொறுப்பாக இருந்த சீடரை எழுப்பி, " சாப்பிடுவதற்கு ஏதாவது கிடைக்குமா?" என்று கேட்டார். அதற்குச் சீடர், " குருவே! என்னை மன்னிக்கவேண்டும். வீட்டில் இருந்த உணவுப் பொருள்கள் எல்லாம் தீர்ந்துவிட்டன... உணவுப் பொருள்களை வாங்குவதற்கும் இப்பொழுது காசு இல்லை" என்றார்.


ஞானி அவரிடம் எதுவும் பேசாமல், தரையில் முழந்தாள் படியிட்டு இறைவனுக்கு நன்றி செலுத்தத் தொடங்கினார். சீடர்க்கு வியப்பாக இருந்தது. ' இவர்தான் ஒன்றுமே சாப்பிடவில்லையே! அப்புறம் எதற்கு சாப்பிட்டு முடித்துவிட்டு வழக்கமாகச் சொல்லும் மன்றாட்டைச் சொல்கிறார்' என்று அவரையே பார்த்தார்.


ஞானி இறைவனுக்கு நன்றிகூறி முடித்ததும், சீடர் அவரிடம், " நீங்கள்தான் எதுவும் சாப்பிடவில்லையே! பிறகு எதற்கு சாப்பிட்டு முடித்ததும் வழக்கமாகச் சொல்லும் நன்றி மன்றாட்டைச் சொன்னீர்கள்?" என்றார். உடனே ஞானி அவரிடம், " இப்பொழுது எனக்கு சாப்பிடுவதற்கு உணவுதான் இல்லையே ஒழிய, சாப்பிடும் விரும்பம் (Appetite) நிறைய இருக்கின்றது. எத்தனையோ மனிதர்கட்கு சாப்பிடுவதற்கு உணவு இருந்தும், சாப்பிடும் விருப்பம் இருப்பதில்லையே! அப்படிப்பட்ட மனிதர்கட்கு நடுவில், இறைவன் எனக்குச் சாப்பிடும் விருப்பத்தைக் கொடுத்திருக்கின்றாரே, அதற்குத்தான் நான் அவர்க்கு நன்றிகூறினேன்" என்றார். இதைக் கேட்டு சீடர் குருவின் உள்ளத்தில் பொங்கி வழிந்த நன்றிப் பெருக்கை எண்ணி வியந்து நின்றார்.


இறைவன் நமக்கு எவ்வளவோ நன்மைகளைச் செய்திருக்கின்றார், அதற்காக நாம் இறைவனுக்கு நன்றி செலுத்துவோம் என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. பொதுக்காலத்தின் இருபத்து எட்டாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் வாசிக்கக் கேட்ட இறைவார்த்தை, இறைவனுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருப்போம் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.


இயேசுவின் உதவியை நாடுதல்


இயேசு கலிலேயா மற்றும் சமாரியா வழியாக எருசலேம் நோக்கிச் சென்றுகொண்டிருக்கையில், ஓர் ஊருக்குள் நுழைந்ததும், பத்துத் தொழுநோயாளர் அவரை எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்றுகொண்டே, " ஐயா! இயேசுவே, எங்கட்கு இரங்கும்" என்று வேண்டுகிறார்கள். இவ்வாறு வேண்டி நின்ற அந்தப் பத்துத் தொழுநோயாளர்களிடம் இயேசு என்ன கூறினார் என்று சிந்தித்துப் பார்க்கும் முன்னம், இஸ்ரயேல் சமூகத்தில் தொழுநோயாளர்களின் நிலை எப்படி இருந்தது எனத் தெரிந்துகொள்வது நல்லது.


தொழுநோயால் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கின்றார் என்றால், அவர் தீட்டானவராகக் கருதப்படுவார். அதனால் அவர் ஊருக்கு வெளியில், கிழிந்த உடை அணிந்துகொண்டு, தலை வாராமல், மேலுதட்டை மறைத்துக்கொண்டு, " தீட்டு, தீட்டு" என்று குரலெழுப்ப வேண்டும் (லேவி 13: 45). அவ்வாறு அவர் குரலெழுப்புவதற்கு முக்கியமான காரணம், யாரும் அவரை நெருங்கிவிடக்கூடாது என்பதால்தான். இப்படியொரு மோசமான நிலையில் வாழ்ந்துவந்த தொழுநோயாளர் வெறுமனே உடல் வேதனையை மட்டும் அனுப்பவிக்க வில்லை; மக்களால் புறக்கணிக்கப்பட்டு, மனவேதனையையும் அனுபவிக்கும் நிலைக்கு ஆளானார்.. நற்செய்தியில் வருகின்ற பத்துத் தொழுநோயாளர்களும் இதே போன்றுதான் உடலளவில் மட்டுமல்லாது, மனதளவிலும் கொடுமைகளை அனுபவித்திருக்கவேண்டும். அதனால்தான் அவர்கள் ' ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்" என்ற வார்த்தைகளைச் சொல்லி உரக்க வேண்டுகிறார்கள்.


பத்துத் தொழுநோயாளர்களும் இயேசுவைப் பார்த்து, ' ஐயா' என்று சொல்லி வேண்டுவது லூக்கா நற்செய்தியில் சீமோன் பேதுரு ' ஐயா' (லூக் 5:5) என்று சொல்வதை ஒத்திருக்கின்றது. ' ஐயா' என்ற சொல், இயேசு இயற்கையின்மீதும் சாவின்மீதும் நோயின்மீதும் அதிகாரம் கொண்டிருப்பவர் என்ற உண்மையை உணர்த்துவதாக இருக்கின்றது. இயேசுவால் தங்களுடைய நோயைக் குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை அவர்கட்கு இருந்தது. அந்த ந்மபிக்கையில்தான் அவர்கள் இயேசுவிடம் வருகின்றார்கள்.


இயேசுவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்ததால் நலம்


மக்கள்மீது அதிலும் குறிப்பாக தொழுநோயாளர்கள் உட்பட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்மீது பரிவுகொள்ளும் இயேசு (மாற் 1: 41; 6:24) இன்றைய நற்செய்தியிலும் தன்னிடம் வரக்கூடிய தொழுநோயாளர்கள்மீதும் பரிவு கொள்கின்றார். அவர்கள்மீது இயேசுவின் பரிவு எப்படி வெளிப்பட்டது என்பதை, அவர் அவர்களைப் பார்த்(து)தார் என்ற வார்த்தைகளில் நாம் அறிந்துகொள்ளலாம்.


வழக்கமாகத் தொழுநோயாளர்களைக் கண்டாலே மக்கள் தங்களது முகத்தை மறைத்துகொள்வர். ஆனால், இயேசு மற்ற மக்களைப் போன்று இல்லாது, தொழுநோயாளர்களைப் பார்த்து, " நீங்கள் போய் உங்களைக் குருவிடம் காண்பியுங்கள்" என்கின்றார். அவர்களும் இயேசுவின் வார்த்தைகட்குக் கீழ்ப்படிந்து தங்களைக் குருவிடம் காண்பிக்கச் செல்கின்றார்கள். அவர்கள் போகிற வழியிலேயே அவர்களுடைய நோய் நீங்குகிறது. இவ்வாறு அவர்கள் இயேசுவின் வார்த்தைகட்குக் கீழ்படிந்ததால் தொழுநோய் நீங்கப் பெறுகின்றார்.


இதுவரைக்கும் அந்தப் பத்துத் தொழுநோயாளர்களும் ஒன்றுபோலவே இயேசுவிடம் வருகின்றார்கள்; ஒன்று போலவே குருவிடம் காண்பிக்கச் செல்கின்றார்கள். எப்பொழுது அவர்களிடமிருந்து தொழுநோய் நீங்கியதை அவர்கள் உணர்ந்தார்களோ அவர்களுடைய செயலில் மாற்றம் ஏற்படுகின்றது. அவர்களுடைய செயலில் ஏற்பட்ட மாற்றம் என்ன...? அதனால் அவர்கட்கு விளைந்தது என்ன என்பதைத் தொடர்ந்து சிந்தித்து பார்ப்போம்.


இயேசுவிற்கு நன்றி செலுத்தியதால் பாவம் நீங்கப் பெற்ற சமாரியர்


இயேசுவின் கட்டளைப்படி அந்தப் பத்துத் தொழுநோயாளர்களும் தங்களைக் குருவிடம் காட்டுவதற்குச் செல்கின்றபோது, அவர்களுடைய தொழுநோய் நீங்குகின்றது. அப்பொழுது சமாரியரைத் தவித்து மற்ற ஒன்பது பேர், ' தாங்கள் விரும்பியது நிறைவேறிவிட்டது' என்று தங்கட்கு நலம் தந்த இயேசுவை மறந்துவிட்டு தங்களுடைய வழியில் போய்விடுகின்றார்கள். ஆனால், அவர்களில் இருந்த இந்த ஒரு சமாரியர், ' இயேசுவால்தான் தனக்கு நலம் கிடைத்தது' என்று நன்றிப் பெருக்கோடு அவரிடம் வந்து, அவருடைய காலில் விழுந்து தன்னுடைய நன்றியைச் செலுத்துகின்றார். அப்பொழுதுதான் இயேசு அவரிடம், " எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது" என்கின்றார்.


இங்கு இயேசு அந்த சமாரியரிடம் சொல்கின்ற வார்த்தைகள், இயேசு தன்னுடைய காலடிகளைக் கழுவிய ' பாவிப் பெண்ணிடம் சொன்ன ' உமது நம்பிக்கை உம்மை மீட்டது' (லூக் 7: 50) என்ற வார்த்தைகளை ஒத்திருக்கின்றது. ஆம், இயேசு எப்படி பாவிப்பெண்ணின் பாவங்களை மன்னித்து, அவர்க்கு மீட்பினை அளித்தரோ, அதுபோன்று நன்றிப் பெருக்கோடு இருந்த சமாரியர்க்கு பாவத்திலிருந்து விடுதலை அளித்து, மீட்பினை வழங்குகின்றார். அப்படியானால், நாம் இயேசுவுக்கு நன்றியுள்ளவர்களாய் இருந்தோமெனில், நமக்கு நலமான வாழ்வு அமைவதோடு மட்டுமல்லாமல், அவர் நமக்கு வழங்கும் மீட்பும் கிடைக்கும் என்பது உறுதி.


இன்றைக்குப் பலர் இயேசுவிடமிருந்து நலம் பெற்று, அவர்க்கு நன்றி செலுத்த வராத ஒன்பது பேரைப் போன்று நன்றியுணர்வு இல்லாதவர்களாகவே இருக்கின்றார்கள். எந்த உள்ளத்தில் நன்றியுணர்வு இல்லையோ, அந்த உள்ளத்தில் சாத்தான் மிக எளிதாகக் குடிபுகுந்துவிடும் என்பார்கள் பெரியோர். ஆகையால், இறைவன் நமக்குச் செய்த ஏராளமான நன்மைகள் நினைத்து, திருப்பாடல் ஆசிரியரைப் போன்று (திபா 107:8), சமாரியரைப் போன்று நன்றி செலுத்துவோம்; மனநிறைவு நம்முடைய வாழ்வை அமைத்துக் கொள்வோம்.

சிந்தனை

' மனிதனிடமுள்ள பொய், செருக்கு, பிதற்றல், குடிவெறி மற்றும் வேறு எந்தத் தீமையை விடவும், நன்றி மறத்தல் மிகவும் மோசமானது. ஏனென்றால், அது அவனுடைய வாழ்வையே அழித்துவிடும்' என்பார் ஷேக்பியர். எனவே, நன்றி மறந்தவர்களாய் அழிந்து போகாமல், நன்றி உள்ளவர்களாய் இருந்து இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 


=================================================================================
திருப்பலி முன்னுரை
=================================================================================

இயேசு கிறிஸ்துவில் பிரியமான அன்புச் சகோதரமே, இன்று நாம் ஆண்டின் பொதுக்காலம் 28ம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்க, இறைவனின் இல்லத்தில் கூடி வந்துள்ளோம். அதே வேளையில், உலக மற்றும் தமிழக திரு அவையுடன் இணைந்து, மக்களினத்தார்க்கு நற்செய்தியை அறிவிக்கும் இலக்கைத் தூக்கிப் பிடிக்கும் நற்செய்தி தூதுரைப்பணி மாதத்தின் இரண்டாவது வாரத்தைக் கொண்டாடுகின்றோம். உயிர்த்த ஆண்டவரைச் சந்தித்து, இறை அனுபவம் பெறுவது, நற்செய்தி தூதுரைப்பணியின் முதல் படி என, சென்ற வாரத்தில் உணர்ந்தோம். ஆண்டவரைச் சந்தித்த சீடர்கள், அவரை கண்டுகொண்டார்கள்; அவர் மீது நம்பிக்கை கொண்டார்கள்; இயேசுவின் வார்த்தைகளினால் உள்ளம் உருகிப் போனார்கள்; மனமாற்றம் பெற்றார்கள்; அவர்களுடைய வாழ்விலே மாபெரும் திருப்பம் ஏற்பட்டது. தாங்கள் கண்டுகொண்ட இயேசுவை, எட்டுத்திக்கும் சென்று அறிவித்தார்கள்; இயேசுவுக்குச் சான்று பகர்ந்தார்கள்; அவருக்காக எதையும் இழக்கத் துணிந்தார்கள்; தங்கள் உயிரைக் கொடுக்கவும் அவர்கள் தயங்கவில்லை. இதுதான் நற்செய்தி தூதுரைப் பணியின் இரண்டாவது படி; அதாவது சான்று பகர்ந்து, கையளித்தல். உயிர்த்த ஆண்டவரைச் சந்தித்து, கிறிஸ்து அனுபவம் பெற்று, அவரால் ஆட்கொள்ளப்பட்டு, இயேசுவுக்குச் சான்று பகர்ந்து, தங்களையே அர்ப்பணம் செய்து, நற்செய்தி தூதுரைப்பணியை ஆற்றியவர்களின் பட்டியல், திருஅவை தோன்றியது முதல் இன்று வரை தொடர்ந்து கொண்டே செல்கின்றது. அருளாளர் தேவசகாயம், புனித அல்போன்சா, அருளாளர் ராணி மேரி, புனித இரண்டாம் ஜான்பால், புனித அன்னை தெரசா இன்னும் நம் மறைமாவட்டங்களில் வாழ்ந்த நல்லவர்கள் பலர்.

இயேசு கிறிஸ்து இறந்தார், உயிர்த்தெழுந்தார் என்ற நற்செய்தியை அறிவித்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த பவுலடியார், தம் சீடர் திமொத்தேயுவுக்குக் கூறிய வார்த்தைகளை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம். கடலில் அலைகள் கடவுளின் வார்த்தையைச் சிறைப்படுத்த முடியாது. ஆம், அன்றும், இன்றும், என்றென்றும் கடவுளின் வார்த்தை ஓயாமல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும். அந்த இறைவனின் வார்த்தைக்கு, நீங்களும் நானும்தான் குரலாக விளங்கவேண்டும். ஒலியாகத் துலங்க வேண்டும். இதற்கான ஆற்றலை நமக்கு அருள வேண்டி, இந்த தெய்வீகத் திருப்பலியில் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை: 2 அரசர் 5: 14-17

நாமான என்பவர் சிரியா நாட்டு மன்னனின் சிறந்த தளபதியாக இருந்தார். தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இறைவாக்கினர் எலிசாவைப் பற்றி கேள்வியுற்று, அவரிடம் சென்று, தமது நோயை நீக்குமாறு மன்றாடினார். எலிசா தம் கடவுளாகிய ஆண்டவரின் பெயரைக் கூவி அழைப்பார். தொழுநோய் கண்ட இடத்தின் மேல் தம் கையை வைத்துக் குணமாக்குவார் என்றெல்லாம் பல எதிர்பார்ப்புகளுடன் சென்ற நாமானுக்கு நடந்தது என்ன? இன்றைய முதல் வாசகம் பதில் அளிக்கின்றது.

இரண்டாம் வாசக முன்னுரை: 2 திமொத்தேயு 2: 8-13

மக்களுக்கு நற்செய்தியை அறிவித்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த புனித பவுலடியார், சிறையில் இருந்து கொண்டு தம் சீடர் திமொத்தேயுவுக்கு ஒரு மடல் எழுதுகின்றார். தாம் அறிவிக்கின்ற நற்செய்தியின் மையப் பொருள் என்ன என்பதை அவருக்குத் தெளிவுபடுத்துகிறார். நற்செய்தி அறிவிப்பவரைச் சிறையில் அடைத்து விடலாம். கடவுளின் வார்த்தையைச் சிறைப்படுத்த முடியுமா? இதற்கு பவுலடியார் கூறும் பதில் என்ன ? இரண்டாம் வாசகத்தைக் கருத்தூன்றிக் கேட்போம்.


=================================================================================
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
=================================================================================
1. உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள் என கட்டளையிடுகின்ற இறைவா, எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், அருட்பணியாளர்கள், துறவியர், திருநிலையினர் ஆகிய அனைவரும், நற்செய்தி தூதுரைப் பணியின் மாண்பினையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்து, தங்கள் வாழ்விலும் பணிகளிலும் அதற்கு முன்னிடம் தரவும், நற்செய்தி அறிவிப்புப் பணியில் அவர்கள் இறைமக்களுக்கு வழிகாட்டிகளாகவும் முன்னோடிகளாக இருக்கவும் அருள் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

2. உலகின் கடை எல்லை வரை நீங்கள் எனக்கு சாட்சிகளாகத் திகழ்வீர்கள் என மொழிந்த எம் இறைவா! பொதுநிலையினராகிய நாங்கள் நற்செய்தி தூதுரைக்கும் பணி, துறவியரையும் குருகுலத்தாரையும் சார்ந்தது என எண்ணி ஒதுங்கிக் கொள்ளாமல், அப்பணி ஆற்றிட எங்களையும் நீர் அழைத்துள்ளீர், அது எங்கள் பொறுப்பும் கூட என்பதை நன்கு கண்டுணரவும், நற்செய்தி அறிவிப்புப் பணியில் நாங்களும் ஆர்வமுடன் பங்கேற்கவும், எங்களுக்கும் உம் தூய ஆவியாரின் ஆற்றலையும் அருளையும் தந்தருள வேண்டுமென்று வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

3. மக்களினங்களுக்கு இறைவாக்கினர்களை அனுப்பிக் கொண்டே இருக்கின்ற எம் நல்ல தந்தையே இறைவா! இந்திய நாடே! உன் மக்களே உனக்கு மீட்பு கொணர்வார்கள் என மொழிந்த திருத்தந்தை 12ம் பத்திநாதரின் கூற்றின்படி தென்னிந்தியாவிலிருந்து எம் பாரத நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று மறைத்தூதுப் பணியாற்றிக் கொண்டிருக்கும் எங்கள் சகோதர சகோதரிகளுக்காக உம்மிடம் வேண்டுகின்றோம். உம் திருத்தூதர்களிடம் இருந்த மன வலிமையையும் துணிவையும் தியாக மனப்பான்மையையும் அவர்களுக்கு அளித்து, நற்செய்தியின் மறைபொருளைத் துணிவுடன் தெரியப்படுத்துவதற்கான வார்த்தைகளை அவர் வாயில் ஊட்டி, நற்செய்திப் பணியினால் வரும் ஆசியை அவர்களுக்கு நிறைவாகப் பொழிந்தருள வேண்டுமென்று வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

4. நற்செய்தி அறிவிப்பு பணியின் மையப்பொருலே எம் இறைவா! நற்செய்தி அறிவிப்புப் பணி என் மேல் சுமத்தப்பட்ட கடன் என்று கூறிய திருத்தூதர் பவுலின் மனநிலையில் எம் பங்கு மக்கள் அனைவரும் செயல்பட்டு, நற்செய்தியை அறியாதவர்களுக்கு நற்செய்தி அறிவிக்கும் ஆற்றலைத் தரவும், குடும்பங்கள் மற்றும் அன்பியங்களில் இப்பணியைச் செய்வோருக்கு உமது அருளை நிறைவாகப் பொழிந்து வழிநடத்திடவும், நேரடியாக நற்செய்திப் பணி ஆற்ற இயலாதவர்கள் தாராள மனதுடன் பொருளுதவியும் செப உதவியும் செய்து, நற்செய்திப் பணிகளை தாங்கவும் அருள்தர வேண்டுமென்று வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

நன்றி: நற்செய்தி அறிவிப்புப் பணிக்குழு, பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!