|
Year B |
|
பொதுக்காலம் 28ம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஞானத்தோடு ஒப்பிடும்போது, பொன்னெல்லாம்
சிறிதளவு மணலுக்கே நிகர்.
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 7: 7-11
நான் மன்றாடினேன்; ஞானம் எனக்குக் கொடுக்கப்பட்டது. நான் இறைவனை
வேண்டினேன்; ஞானத்தின் ஆவி என்மீது பொழியப்பட்டது.
செங்கோலுக்கும் அரியணைக்கும் மேலாக அதை விரும்பித் தேர்ந்தேன்;
அதனோடு ஒப்பிடும்போது, செல்வம் ஒன்றுமே இல்லை என்று உணர்ந்தேன்.
விலையுயர்ந்த மாணிக்கக் கல்லும் அதற்கு ஈடில்லை; அதனோடு ஒப்பிடும்போது,
பொன்னெல்லாம் சிறிதளவு மணலுக்கே நிகர்; அதற்கு முன் வெள்ளியும்
களிமண்ணாகவே கருதப்படும்.
உடல் நலத்திற்கும் அழகிற்கும் மேலாக அதன்மீது அன்பு கொண்டேன்;
ஒளிக்கு மாற்றாக அதைத் தேர்ந்தெடுத்தேன்.
ஏனெனில் அதன் சுடரொளி என்றும் மங்காது. ஞானத்தோடு எல்லா நலன்களும்
என்னிடம் வந்து சேர்ந்தன. அளவற்ற செல்வத்தை அது ஏந்தி வந்தது.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
(திபா 90: 12-13. 14-15. 16-17 (பல்லவி: 14a )
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, உம் பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்.
12 எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது
ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம். 13 ஆண்டவரே, திரும்பி
வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம்
காட்டும். பல்லவி
14 காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது
வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம். 15 எங்களை நீர்
ஒடுக்கிய நாள்களுக்கும் நாங்கள் தீங்குற்ற ஆண்டுகளுக்கும் ஈடாக,
எம்மை மகிழச்செய்யும். பல்லவி
16 உம் அடியார்மீது உம் செயலும் அவர்தம் மைந்தர்மீது உமது
மாட்சியும் விளங்கச் செய்யும். 17 எம் கடவுளாம் தலைவரின் இன்னருள்
எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி
தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்! பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
கடவுளுடைய வார்த்தை உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும்
சீர்தூக்கிப் பார்க்கிறது.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 4: 12-13
சகோதரர் சகோதரிகளே, கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல்
வாய்ந்தது; இரு பக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது;
ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது;
எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது; உள்ளத்தின்
சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது.
படைப்பு எதுவும் கடவுளுடைய பார்வைக்கு மறைவாய் இல்லை. அவருடைய
கண்களுக்கு முன் அனைத்தும் மறைவின்றி வெளிப்படையாய் இருக்கின்றன.
நாம் அவருக்கே கணக்குக் கொடுக்க வேண்டும்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
( மத் 5: 3 )
அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில்
விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 17-30
அக்காலத்தில் இயேசு புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தபோது வழியில்
ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, "நல்ல போதகரே,
நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?" என்று
அவரைக் கேட்டார்.
அதற்கு இயேசு அவரிடம், "நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள்
ஒருவரைத் தவிர நல்லவர் எவரும் இல்லையே.
உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா?
"கொலை செய்யாதே; விபசாரம்
செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச் சான்று சொல்லாதே; வஞ்சித்துப்
பறிக்காதே; உன் தாய் தந்தையை மதித்து நட" என்றார்.
அவர் இயேசுவிடம், "போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே
கடைப்பிடித்து வந்துள்ளேன்" என்று கூறினார்.
அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, "உமக்கு இன்னும்
ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக்
கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர்.
பின்பு வந்து என்னைப் பின்பற்றும்" என்று அவரிடம் கூறினார்.
இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு
சென்றுவிட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.
இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம், "செல்வர்
இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்" என்றார்.
சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள்.
மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து, "பிள்ளைகளே, செல்வர்கள்
இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம். அவர்கள் இறையாட்சிக்கு
உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" என்றார்.
சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், "பின் யார்தாம்
மீட்புப் பெற முடியும்?" என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, "மனிதரால் இது இயலாது. ஆனால்
கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும்" என்றார். அப்போது
பேதுரு அவரிடம், "பாரும், நாங்கள் எல்லாவற்றையும்
விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே" என்று
சொன்னார்.
அதற்கு இயேசு, "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என்
பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ,
சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலங்களையோ
விட்டுவிட்ட எவரும் இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும்
சகோதரிகளையும் தாயையும் நிலபுலங்களையும், இவற்றோடுகூட இன்னல்களையும்
மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்" என்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
ஆண்டவரைத் தேடுங்கள், (நிலை)வாழ்வடைவீர்கள்
பணக்கார இளைஞன் ஒருவன் டி.போர்ட் (T.Ford) வாகனத்தில் வேகமாகப்
போய்க்கொண்டிருந்தான். வாகனம் ஒரு பள்ளத்தில் இறங்கி ஏறியபோது
எதிர்பாராத விதமாக அது பழுதடைந்து அப்படியே நின்றுவிட்டது.
வாகனத்தை விட்டு இறங்கிய அவன் வாகனத்தில் என்னவெல்லாமோ செய்து
பார்த்தான். ஆனால், வாகனம் மட்டும் அவ்விடத்தை விட்டு
நகர்வதாய் இல்லை. அவ்வழியாக நிறையப் பேர் கடந்து சென்றார்கள்.
ஆனால், அவன் யாரிடத்திலும் உதவி கேட்காமல், தன்னால்
முடிந்தமட்டும் வாகனத்தை சரி செய்ய நினைத்தான். அவன் மேற்கொண்ட
முயற்சிகள் அனைத்தும் பலனற்றுப் போயின.
திடிரென்று ஒரு வாகனம் அவனுக்குப் பின்னால் வந்து நின்றது.
அந்த வாகனத்திலிருந்து பெரியவர் ஒருவர் இறங்கினார். அவர்
இளைஞன் அருகே சென்று, "உன் வாகனத்திற்கு என்னாவாயிற்று?" என்று
கேட்டார். அவன் வேண்டா வெறுப்பாக, நடந்தது அனைத்தையும்
கூறினான். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட அந்தப் பெரியவர்,
வாகனத்தின் என்ஜினில் இருந்த ஒரு குறிப்பிட்ட பகுதியை சரி
செய்யச் சொன்னார். அவன், "நமக்குத் தெரியாததா, இந்தக்
கிழவருக்குத் தெரிந்திருக்கப் போகிறது" என்ற ஒருவிதமான
மெத்தனத்தில் அவர் சொன்னது போன்று செய்தான். ஆச்சரியம்
என்னவென்றால், அந்தப் பெரியவர் சொன்னதுபோன்று, என்ஜினை சரி
செய்த மறுகணம் வாகனம் இயங்கத் தொடங்கியது.
அவனால் ஆச்சரியத்தை அடக்க முடியவில்லை, "இவ்வளவு நேரம் நான்
என்னவெல்லாமோ செய்துபார்த்தும் ஓடாத வாகனம், இப்போது நீங்கள்
சொன்னது போன்று செய்த மறுகணம் இயங்கத் தொடங்கிவிட்டதே, அது
எப்படி?, உண்மையில் நீங்கள் யார்?" என்று கேட்டான். அதற்கு
அவர் மிகவும் பொறுமையாக, "நான் தான் இந்த வாகனத்தைக்
கண்டுபிடித்த ஹென்றி போர்ட் (Hendri Ford)" என்றார். அவன்
அவருடைய கைகளைப் பிடித்து, தன்னுடைய நன்றியைத் தெரிவித்துக்
கொண்டு, அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றான்.
மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் பணக்கார இளைஞனைப் போன்று
இன்றைக்கு நிறையப் பேர் யாருடைய உதவியும் இல்லாமல், தன்னாலேயே
எதையும் அடைந்துவிட முடியும் - வாழ்வினைப் பெற்றுக் கொள்ள
முடியும் - என்று நினைக்கிறார்கள். ஆனால், அது முடியாத
காரியம். எப்படி அந்த இளைஞன் ஹென்றி போர்டு சொன்னதற்கு இணங்கி
நடந்து, அதனால் தன்னுடைய வாகனம் இயங்கச் செய்தானோ அப்படி நாம்
ஆண்டவரிடம் திரும்பிவந்து, அவருடைய வார்த்தைகளின் படி
நடக்கின்றோமோ அப்போது நாம் வாழ்வினை பெற்றுக்கொள்ள முடியும்
என்பது உறுதி.
பொதுக்காலத்தின் இருபத்தி எட்டாம் ஞாயிறான இன்று நாம்
படிக்கக்கேட்ட வாசகங்கள், "ஆண்டவரை நாடுகள்,
நிலைவாழ்வடைவீர்கள்" என்னும் சிந்தனையைத் தருகின்றது. நாம்
அதைக் குறித்து இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.
இன்றைக்கு மனிதர்களாகிய இன்பம்- வாழ்வு
- தரும் என்று
எவற்றிற்கு பின்னால் எல்லாமோ சென்றுகொண்டிருக்கிறோம். வாழ்வு
தரும் என்று எவற்றையெல்லாம் நாம் நம்பி, அவற்றிற்குப் பின்னால்
சென்றோமோ அவையெல்லாம் நமக்கு வாழ்வினை அல்ல, சாவையே
தருகின்றது, இன்பத்தை அல்ல, துன்பத்தையே தருகின்றது என்பதுதான்
உண்மை. இத்தகைய பின்னணியில் நாம் ஆண்டவரைத் தேடுங்கள்,
நிலைவாழ்வினை அடைவீர்கள் என்ற தலைப்பில் சிந்தித்துப்
பார்ப்பது மிகப் பொருத்தமானதாக இருக்கின்றது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு போய்க்கொண்டிருக்கும் போது
ஒருவர் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழந்தாள் படியிட்டு, "நல்ல
போதகரே! நிலை வாழ்வினைப் பெற்றுக்கொள்வதற்கு நான் என்ன
செய்வது?" என்று கேட்கின்றார். இயேசு அம்மனிதருக்குத் தரும்
பதிலைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னதாக, முதலில்
யார் இவர், எதற்காக இவர் இயேசுவைத் தேடி வந்தார் என்று
சிந்தித்துப் பார்ப்போம். இங்கே ஒருவர் என குறிப்படப்படும்
மனிதர் ஒத்தமை நற்செய்திகளில் இளைஞர் எனவும், செல்வந்தராகிய
இளைஞர் எனவும் குறிப்பிடப்படுகின்றார். அப்படியானால், இவர்
தன்னுடைய இளம்வயதிலேயே ஆண்டவரை, வாழ்விற்கான வழியினைத் தேடி
வந்தார் என்றால், உண்மையில் இவரைப் பாராட்டியே ஆகவேண்டும்.
ஏனென்றால், நிறையப் பேர் தங்களுடைய இளமைப் பருவத்தில்
எப்படியெல்லாமோ வாழ்ந்துவிட்டு, சாகப் போகும்போது வாழ்விற்கான
வழியினைத் தேடுகின்றார்கள். அப்படிப்பட்ட மனிதர்களைப் போன்று
இவர் இல்லை. அதற்காகவே நாம் இவரைப் பாராட்டியாகவேண்டும்.
மேலும் நிலைவாழ்வை அடைவது குறித்து இயேசுவிடம் பேசுகின்றாரே
இவர் யார் எனக் கேள்வி எழலாம். யூதர்களில் அதுவும்
படித்தவர்களில் இரு பிரிவினர் உண்டு. பரிசேயர், சதுசேயரே அந்த
இரண்டு பிரிவினர். சதுசேயர்களுக்கு நிலைவாழ்விலோ,
வானதூதர்களிலோ நம்பிக்கை கிடையாது. எனவே இவர் சதுசேயராக இருக்க
முடியாது. ஆனால், பரிசேயர்கள் அப்படியில்லை அவர்களுக்கு
மறுவாழ்வில் நம்பிக்கை உண்டு. ஆகையால், இம்மனிதர் இயேசுவைக்
குறித்து முழுமையாக அறிந்த ஒரு பரிசேயராக இருக்கலாம் என நாம்
உறுதியாகச் சொல்லலாம்.
இப்படி இளமையிலே இறைவனை
- இயேசுவைத்
- தேடி நிலைவாழ்வினைப் பெற
நான் என்ன செய்வது? என்று கேட்ட அந்த மனிதரிடம், "கட்டளைகள்
உனக்குத் தெரியுமே" என்று சொல்கின்றார். அதற்கு அவரோ, "போதகரே,
இவை அனைத்தையும் நான் என் இளமைப் பருவத்திலிருந்தே
கடைப்பிடித்து வந்துள்ளேன்" என்கிறார். அப்போது இயேசு அவரை
அன்பொழுகப் பார்த்து, "உமக்கு இன்னும் ஒன்று குறைவுபடுகின்றது.
நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும்.
அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து
என்னைப் பின்பற்றும்" என்கின்றார். இயேசு சொன்னதைக் கேட்ட அந்த
மனிதரோ முக வருத்ததோடு செல்கின்றார். ஏனென்றால், அவருக்கு
ஏராளமான சொத்து இருந்தது.
கட்டளைகளை எல்லாம் தன்னுடைய இளமைப் பருவத்திலிருந்தே
கடைப்பிடித்து வருகிறேன் என்று அவர் சொல்லியும், இயேசு
அவரிடம், "உமக்கு உள்ளவற்றையெல்லாம் விற்று ஏழைகளுக்குக்
கொடும்" என்று சொல்வதன் அர்த்தம் என்ன என்று நாம் சிந்தித்துப்
பார்க்கவேண்டும். முதலில் அந்த மனிதர் கடைபிடிப்பதாகச் சொன்ன
கட்டளைகள் யாவும் "செய்யாதே" என முடியும் கட்டளைகள் ஆகும்.
தீமை செய்யாமல் இருப்பது பெரிய விடயமே என்பதாலும், தன்னைப்
பின்பற்றி வரக்கூடியவர் பணத்தைப் பற்றியே கவலைப்பட்டுக்
கொண்டிருக்கக்கூடாது என்பதாலும்தான் இயேசு அவரிடம் அவ்வாறு
சொல்கின்றார். இயேசு மற்றொரு இடத்தில் "நீங்கள் கடவுளுக்கும்
செல்வத்திற்கும் பணிவிடை செய்ய முடியாது" என்று குறிப்பிடுவார்
(மத் 6:24). அவ்வார்த்தைகளை இங்கே பொருத்திப் பார்த்தால்
இன்னும் பொருள் நிறைந்ததாக இருக்கும் என்று தோன்றுகின்றது.
இயேசுவிடம் வந்த அந்த மனிதர் செல்வத்தின் மீது
பற்றுக்கொண்டவராய் இருந்தார், எனவேதான் இயேசு அவரிடம் அவ்வாறு
சொல்கின்றார். ஆகையால், நிலைவாழ்வை பெறுவதும் இயேசுவின் சீடராக
இருப்பதும் பணத்தின்மீது பற்றுக்கொண்டிருக்கும் ஒருவரால்,
எதையுமே இழக்கத் துணியாதவரால் முடியவே முடியாது என்பதுதான்
இயேசுவின் போதனையாக இருக்கின்றது. அதனால்தான் அவர், "செல்வர்
இறையாட்சியில் நுழைவது விட, ஊசியில் காதில் ஒட்டகம் நுழைவது"
என்கின்றார்.
நாம் செல்வம்தான் இன்பத்தையும் வாழ்வினையும் தரும் என்று
நினைத்துக் கொண்டிருக்கின்றோமா? அல்லது நிலைவாழ்வினை
பெற்றுக்கொள்ள எல்லாவற்றையும் இழக்கத் தயாராக இருக்கின்றோமா?
என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
சாலமோனின் ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்
வாசகத்தில், அதன் ஆசிரியர், நான் அரியணை, செங்கோல், செல்வம்,
மாணிக்கக் கல், வெள்ளி இவையனைத்தையும் விட, ஞானத்திற்காக
மன்றாடினேன். அதனால் ஞானத்தோடு சேர்த்து எல்லாமும்
கொடுக்கப்பட்டது என்கின்றார். இங்கே ஞானம் என்று சொல்லப்படுவதை
கடவுளோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம், ஆம், சாலமோன் ஞானத்தைக்
கேட்டதால் எல்லா ஆசிர்வாதமும் கிடைத்தது போன்று, நாம்
ஆண்டவரைத் தேடினால் வாழ்வடைவோம்; எல்லா ஆசிர்வாதத்தையும்
பெறுவோம்.
நற்செய்தி வாசகத்தில் பேதுரு, "நாங்கள் எல்லாவற்றையும்
விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே (எங்களுக்கு என்ன
கிடைக்கும்?)" என்று கேட்கும்போது இயேசு, "என் பொருட்டும்
நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ,
சகோதரிகளையோ தந்தையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ நிலபுலன்களையோ
விட்டுவிட்ட எவரும் இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும்
சகோதரர்களையும் தாயையும் நிலபுலன்களையும் இவற்றோடு கூட
இன்னலையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்" என்பார்.
ஆம், இயேசுவுக்காக, நிலைவாழ்வைப் பெற்றுக் கொள்வதற்காக நாம்
எல்லாவற்றையும் இழக்கின்றபோது, இயேசு
- இறைவன் - அதற்கான
கைமாறை நிச்சயம் தருவார். அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும்
கிடையாது.
எத்தனையோ புனிதர்கள் இயேசுவுக்காக எல்லாவற்றையும் தூக்கி
எறிந்தார்கள். அவர்கள் உலகத்தாரின் பார்வைக்கு வேண்டுமானால்
பிழைக்கத் தெரியாதவர்களாக இருக்கலாம். ஆனால், உண்மையில்
அவர்கள்தான் இறைவனின் ஆசிரைப் பெற்றுக் கொண்டவர்கள். மத்தேயு
நற்செய்தி 6:33 ல் இயேசு கூறுவார், "ஆகவே, அனைத்திற்கும் மேலாக
அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள்.
அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்"
என்று.
ஆகவே, நாம் அனைத்திற்கும் மேலாக ஆண்டவரையும் அவருக்கு
ஏற்புடையவற்றையும் நாடுவோம், ஒப்பற்ற செல்வமாகிய இறைவனைப்
பற்றிக்கொள்ள, உலக செல்வங்களைத் தூக்கி எறிவோம். இறைவனுக்கு
உகந்த வாழ்க்கை வாழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய்
பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
|
|