|
|
|
பொதுக்காலம்
27ம் ஞாயிறு
- 3ம் ஆண்டு |
|
|
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்.
இறைவாக்கினர் அபக்கூக்கு நூலிலிருந்து வாசகம் 1: 2-3; 2: 2-4
ஆண்டவரே, எத்துணைக் காலத்திற்கு நான் துணைவேண்டிக் கூக்குரலிடுவேன்;
நீரும் செவிசாய்க்காதிருப்பீர்? இன்னும் எத்துணைக் காலத்திற்கு
வன்முறையை முன்னிட்டு உம்மிடம் அழுது புலம்புவேன்; நீரும் எம்மை
மீட்காமல் இருப்பீர்? நீர் என்னை ஏன் கொடுமையைப் பார்க்கச்
செய்கின்றீர், கேட்டினைக் காணச் செய்கின்றீர்?
கொள்ளையும் வன்முறையும் என் கண்முன் நிற்கின்றன; வழக்கும்
வாதும் எழும்புகின்றன.
ஆண்டவர் எனக்கு அளித்த மறுமொழி இதுவே: "
காட்சியை எழுதிவை;
விரைவாய் ஓடுகிறவனும் படிக்கும் வண்ணம் பலகைகளில் தெளிவாய் எழுது.
குறித்த காலத்தில் நிறைவேறுவதற்காகக் காட்சி இன்னும்
காத்திருக்கின்றது; முடிவை நோக்கி விரைந்து செல்கின்றது. ஒருக்காலும்
பொய்க்காது. அது காலந்தாழ்த்தி வருவதாகத் தோன்றினால், எதிர்பார்த்துக்
காத்திரு; அது நிறைவேறியே தீரும்; காலம் தாழ்த்தாது. இதை நம்பாதவரே
உள்ளத்திலே நேர்மையற்றவராய் இருப்பர்; நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால்
வாழ்வடைவர்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
(திபா:
95: 1-2. 6-7. 8-9 (பல்லவி: 8b)
Mp3
=================================================================================
பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
1 வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின்
பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். 2 நன்றியுடன் அவர் திருமுன்
செல்வோம்; புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். பல்லவி
6 வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய
ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். 7 அவரே நம் கடவுள்; நாமோ அவரது
மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று
நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! பல்லவி
8 அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்தது
போல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். 9 அங்கே
உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும்
என்னைச் சோதித்துப் பார்த்தனர். பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
நம் ஆண்டவருக்கு நீ சான்று பகர்வதைக் குறித்து வெட்கமடையத்
தேவை இல்லை.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து
வாசகம் 1: 6-8, 13-14
அன்பிற்குரியவரே, உன்மீது என் கைகளை வைத்துத் திருப்பணியில்
அமர்த்தியபோது உனக்குள் எழுந்த கடவுளின் அருள்கொடையினைத்
தூண்டி எழுப்புமாறு நினைவுறுத்துகிறேன்.
கடவுள் நமக்குக் கோழை உள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும்
கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார்.
எனவே நம் ஆண்டவருக்கு நீ சான்று பகர்வதைக் குறித்தோ அவர்
பொருட்டு நான் கைதியாக இருப்பதைக் குறித்தோ வெட்கமடையத் தேவை
இல்லை; கடவுளின் வல்லமைக்கேற்ப நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில்
என்னுடன் பங்குகொள்.
கிறிஸ்து இயேசுவிடம் நம்பிக்கையும் அன்பும் கொண்டு என்னிடம் நீ
கேட்ட நலந்தரும் வார்த்தைகளை மேல்வரிச் சட்டமாகக் கொள். நமக்குள்
குடிகொள்ளும் தூய ஆவியால் ஒப்படைக்கப்பட்ட நல்ல போதனையைக்
காத்துக்கொள்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
1 பேது 1: 25
அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும்
நிலைத்திருக்கும். இவ்வார்த்தையே உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தி.
அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால்...
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 5-10
அக்காலத்தில் திருத்தூதர்கள் ஆண்டவரிடம், "
எங்கள் நம்பிக்கையை
மிகுதியாக்கும்'' என்று கேட்டார்கள்.
அதற்கு ஆண்டவர் கூறியது: "
கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால்
நீங்கள் இந்தக் காட்டு அத்தி மரத்தை நோக்கி, `நீ வேரோடே பெயர்ந்துபோய்க்
கடலில் வேரூன்றி நில்' எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.
உங்கள் பணியாளர் உழுதுவிட்டோ மந்தையை மேய்த்துவிட்டோ வயல்வெளியிலிருந்து
வரும்போது அவரிடம், `நீர் உடனே வந்து உணவருந்த அமரும்' என்று
உங்களில் எவராவது சொல்வாரா?
மாறாக, `எனக்கு உணவு ஏற்பாடு செய்யும்; உம் இடையை வரிந்துகட்டிக்
கொண்டு, நான் உண்டு குடிக்கும்வரை எனக்குப் பணிவிடை செய்யும்;
அதன் பிறகு நீர் உண்டு குடிக்கலாம்' என்று சொல்வாரல்லவா?
தாம் பணித்ததைச் செய்ததற்காக அவர் தம் பணியாளருக்கு நன்றி
கூறுவாரோ?
அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும்
செய்தபின், `நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான்
செய்தோம்' எனச் சொல்லுங்கள்.''
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
I அபகூக்கு 1: 2-3, 2: 2-4
II 2 திமொத்தேயு 1: 6-8, 13-14
III லூக்கா 17: 5-10
'
என் கடன் பணிசெய்து கிடப்பதே'
நிகழ்வு
இந்திய விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்திருந்த சமயம். ஆங்கிலேய
அரசாங்கத்திற்கு எதிராகக் கலகம் செய்ததாக 46 இந்தியர்கள்
கைதுசெய்யப்பட்டு, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டார்கள்.
அவர்கள் சார்பாக வழக்குரைஞர் ஒருவர் பேச்சில் அனல் பறக்க
வாதித்துக் கொண்டிருந்தார். நடுவில் அந்த வழக்குரைஞரின் உதவியாளர்
அவரிடம் வந்து, ஒரு துண்டுக் காகிதத்தைக் கொடுத்துவிட்டுப்
போனார். அதை வாசித்துப் பார்த்த வழக்குரைஞர் ஒரு கணம் அதிர்ந்துபோனார்.
பின்னர் அவர் அந்தத் துண்டுக் காகிதத்தை தான் அணிந்திருந்த சட்டைப்
பைக்குள் வைத்துவிட்டு, அந்த 46 இந்தியர்கட்காக வாதிட்டார்.
வழக்கின் முடிவில் அந்த 46 இந்தியர்களும் நிரபராதிகள் என்று
நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
தீர்ப்பு வழங்கப்பட்ட பின் வழக்காடிய வழக்குரைஞரிடம் வந்த அந்த
(ஆகிலேய) நீதிபதி அவரிடம், '
குற்றம் சுமத்தப்பட்ட இந்த 46 இந்தியர்கட்காக
நீங்கள் வாதாடும்போது, நடுவில் உங்களுடைய உதவியாளர் கொண்டுவந்து
கொடுத்த துண்டுக் காகிதத்தைப் படித்ததும் ஒரு கணம் நீங்கள் அதிர்ந்துபோனீர்களே!
அதில் என்ன எழுதியிருந்தது? என்றார். '
அதுவா! என்னுடைய மனைவி
இறந்துவிட்டார் என்ற செய்தி என்றார் அந்த வழக்குரைஞர். '
என்ன
உங்களுடைய மனைவி இறந்துவிட்டார்களா...? உங்களுடைய மனைவி இறந்த
செய்தியை அறிந்தும், நீங்கள் ஏன் வழக்கை அப்படியே விட்டுவிட்டு
பாதியிலேயே சென்றிருக்கக்கூடாது...? என்றார் நீதிபதி.
'
நீங்கள் சொல்வதுபோன்று இந்த வழக்கைப் பாதியிலேயே
விட்டுவிட்டுப் போயிருந்தால் இறந்துபோன என் மனைவி திரும்பக்
கிடைத்துவிடுவாளா...? இல்லைதானே! ஆனால், நான் அங்கு செல்லாமல்
இருந்தால், அநியாயமாகக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் இந்த 46
இந்தியர்களையும் தூக்குத் தண்டனையிலிருந்து மீட்க முடியும்.
அதனால்தான் என்னுடைய மனைவியின் இறப்புச் செய்தியை அறிந்தபின்னும்
வீட்டுக்குப் போகாமல், இங்கேயே இருந்து, இவர்கட்காக
வாதிட்டேன் என்றார். இதைக் கேட்ட அந்த ஆங்கிலேயே நீதிபதி,
'
இப்படியெல்லாம் கடமை உணர்வோடு மனிதர்கள் இருப்பார்களா! என்று
வியந்து நின்றார். தன்னுடைய மனைவி இறப்புச் செய்தியை அறிந்தபின்னும்
46 இந்தியர்கட்காக வாதித்த அந்த வழக்குரைஞர் வேறு யாருமல்ல, இந்தியாவின்
இரும்பு மனிதர் என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல்தான்!
நாம் நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை யாருடைய பாராட்டுக்காகவும்
இல்லாமல், பிறர் நலனுக்காக (இறைவனின் மகிமைக்காகக்) கடமை உணர்வோடு
செய்யவேண்டும் என்ற உண்மையை உணர்த்தும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.
பொதுக்காலத்தின் இருபத்து ஏழாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம்
வாசிக்கக்கேட்ட நற்செய்தி வாசகம், கடமையுணர்வோடு இறையாட்சிப்
பணியையும் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் பணியினையும் செய்யவேண்டும்
என்றோர் அழைப்பினைத் தருகின்றது. அது குறித்து இப்பொழுது நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
பிரதிபலன் பாராது பணிசெய்யவேண்டும்
இன்றைய நற்செய்தியின் இரண்டாவது பகுதியில், இயேசு பயனற்ற பணியாளர்
உவமையைச் சொல்கிறார். இவ்வுவமையில் வருகின்ற பணியாளர் வயலில்
உழுதுவிட்டோ, மந்தையை மேய்த்துவிட்டோ வருகின்றபோது, அவருடைய தலைவர்
அவரிடம், '
உணவருந்த அமரும்'
என்று சொல்லவில்லை. மாறாக, அவர்
அவரிடம், '
எனக்கு உணவு ஏற்பாடு செய்யும்... எனக்குப் பணிசெய்யும்'
என்றுதான் சொல்கின்றார்; அந்தப் பணியாளர் செய்த பணிக்காகத் தலைவர்
அவர்க்கு நன்றி கூறவில்லை. நீங்களும் அந்தப் பணியாளரைப் போன்று
இருங்கள் என்கின்றார் இயேசு.
உவமையில் வருகின்ற பணியாளர் செய்கின்ற பணிகளாக இயேசு, உழுவதையும்
மந்தையை மேய்ப்பதையும் குறிப்பிடுகின்றார். இந்த இரண்டு பணிகளும்
நற்செய்திப் பணியோடு தொடர்புடையவை. எப்படி என்றால், உழவர் உழுது
விதைகளை விதைத்து, பின்னர் அறுவடை செய்கின்றார். அதுபோன்று நற்செய்திப்
பணியாளர் ஆண்டவருடைய வார்த்தையை மனிதர்களுடைய உள்ளம் என்று நிலத்தில்
விதைக்கின்றார்.
மேலும் மந்தையை மேய்ப்பவர், தன்னுடைய மந்தைக்குத் தேவையானதைச்
செய்துதந்து, அதனை முன்னின்று வழிநடத்தி, நல்லாயனைப் போன்று விளங்குகின்றார்.
அவரைப்போன்று இயேசுவின் சீடரும் ஆயனைப் போன்று இருந்து, மக்களைப்
பேணிவளர்க்க வளர்க்கின்றார் (யோவா 21: 15-17). அப்படியென்றால்,
உவமையில் வருகின்ற பணியாளர் எப்படி தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட
பணிகளை தலைவரின் பாராட்டையோ நன்றியையோ எதிர்பாராமல் அது தன்னுடைய
கடமை என்ற உணர்வோடு செய்கின்றாரோ, அதுபோன்று நற்செய்தியை அறிவிகின்றவரும்
மந்தையை மேய்க்கிறவரும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகளை தலைவராகிய
ஆண்டவரின் பாராட்டையோ நன்றியையோ எதிர்பாராமல் தன்னுடைய கடமை என்ற
உணர்வோடு செய்யவேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால்,
எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பாராமல் இறைவனுக்குப் பணிசெய்யவேண்டும்
என்கின்றார் இயேசு
அன்போடு பணிசெய்யவேண்டும்
இயேசு தன்னுடைய சீடர்கள் யாவரும், தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட
பணிகளை கடமையுணர்வோடு செய்யவேண்டும் என்று சொன்னதை
'
கடமைக்காகச் செய்வது'
என்றோ, '
அடிமை மனோபாவத்தோடு செய்வது'
என்றால்
நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது. இன்றைக்குப் பலர் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட
பணிகளை கடமைக்காக ஏனோதானோ என்று செய்கின்ற போக்கானது நிலவிக்கொண்டிருக்கின்றது.
இது இயேசுவின் சீடர்களிடமிருந்து முற்றிலுமாக தவிர்க்கப்படவேண்டியதொன்றாக
இருக்கின்றது. மேலும் ஒருசிலர் தங்களை அடிமை என கருதிக்கொண்டு
பணிசெய்கின்ற போக்கையும் காணமுடிகின்றது. இதுவும் தவிர்க்கப்படவேண்டிய
ஒன்றாக இருக்கின்றது. இயேசுவின் சீடர்கள் கடமைக்காகவோ அல்லது
அடிமை மனபாவத்தோடோ அல்ல, அன்போடு அல்லது உளமாரப் பணிசெய்ய
வேண்டும்.
புனித பவுல் இதைத்தான், '
கிறிஸ்துவின் பணியாளர்களாய்க் கடவுளின்
திருவுளத்தை உளமார நிறைவேற்றுங்கள் (எபே 6:6) என்று
குறிப்பிடுகின்றார். கடவுளின் திருவுளத்தை உளமார நிறைவேற்ற
வேண்டும் என்றால், அதற்கு கடவுளின்மீது/ இயேசுவின்மீது நமக்கு
உண்மையான அன்பு இருக்கவேண்டும். ஏனென்றால் இயேசுவின்மீது உண்மையான
அன்பு கொண்டிருப்பவரால் மட்டுமே, அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க
(யோவா 14: 15) முடியும்; அதன்மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியையும்
அடைய முடியும் (திபா 40: 8). இயேசுவின் பணியை அல்லது கடவுளின்
திருவுளத்தை கடமைக்காகவும் அடிமை மனோபாவத்தோடும் செய்தால், அங்கு
மகிழ்ச்சி இருப்பதற்கு வாய்ப்பே இல்லை
இயேசுவைப் போன்று பணிசெய்ய வேண்டும்
கடவுளின் பணியை உளமாரச் செய்யவேண்டும் என்பதை இதுவரையில்
பார்த்தோம். அதை வேறுசொற்களில் சொல்லவேண்டும் என்றால், நாம்
செய்யும் பணியை இயேசுவைப் போன்று செய்யவேண்டும் என்று சொல்லலாம்.
இயேசு கடவுள் தன்மையில் விளங்கியபோதும், அதை வலிந்து பற்றிக்
கொண்டிருக்காமல், தம்மையே வெறுமையாக்கி மனிதரானார் (பிலி 2:
6-7) மட்டுமல்லாமல், தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றவே வந்தேன்
(மாற் 10: 45) என்று சொல்லி, சீடர்களின் காலடிகளைக் கழுவி, அவர்களையும்
அவ்வாறு இருக்கச் சொல்கின்றார் (யோவா 13: 14). இதுதான் நாம் இயேசுவிடமிருந்து
கற்கவேண்டிய பாடமாக இருக்கின்றது. ஆம், இயேசு இறைப்பணியை கடமைக்காகவோ
அல்லது அடிமை மனோபாவத்தோடா செய்யவில்லை. மாறாக அவர் அதை உளமாரச்
செய்தார். ஆகையால், இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம் ஒவ்வொருவரும்
நமக்குப் பணிக்கப்பட்ட பணிகளை உளமாரவும் அன்போடும் செய்யவேண்டும்.
அதன்மூலம் இயேசு விரும்பும் நல்ல சீடர்களாக, பணியாளர்களாக மாறவேண்டும்.
சிந்தனை
'
மனிதராகப் பிறந்தவர்க்கு எவ்வளவோ நற்பேறுகள் பாக்கியங்கள்
உண்டு. அந்த நற்பேறுகளில் எல்லாம் தலைசிறந்த பேறு பிறருக்குப்
பணி சேவைசெய்வதே'
என்பார்கள் பெரியோர். ஆகையால், நாம் இறைவனுக்கும்
அவருடைய மக்களுக்கும் பணிசெய்வதையே மிகப்பெரிய பேறாக நினைத்து
வாழ்வோம். மேலும் அதை கடமைக்காகவோ அல்லது அடிமை மனோபாவத்தோடோ
செய்யாமல் உளமாரவும் உள்ளார்ந்த அன்போடும் செய்வோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
=================================================================================
திருப்பலி முன்னுரை
=================================================================================
இயேசு கிறிஸ்துவில் அன்பார்ந்த சகோதரிகளே, சகோதரர்களே இன்று
நாம் ஆண்டின் பொதுக்காலம் 27ம் ஞாயிறைக் கொண்டாடுகின்றோம். இந்த
ஆண்டு அக்டோபர் மாதத்தில் வருகின்ற எல்லா ஞாயிற்றுக்கிழமைகளும்
நற்செய்திப் தூதுரைப்பணியின் சிறப்பு ஞாயிறுகளாகக் கொண்டாடப்பட
வேண்டும் என நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் தமிழக ஆயர்களும்
நமக்கு அழைப்பு விடுக்கின்றனர். ஏனெனில், 1919 ஆம் ஆண்டில்
திருத்தந்தை 15ஆம் பெனடிக்ட் அவரின் மகத்தான மற்றும் புனிதமான
பணி என்னும் பெயரில் நற்செய்தி தூதுரைப்பணி பற்றிய முதல்
சுற்றுமடலை அனைத்துலக திரு அவைக்கும் அளித்தார். திருச்சபையின்
வரலாற்றில் நற்செய்தி தூதுரைப்பணி பற்றி முதன்முதலாக வெளியிடப்பட்ட
இந்த சுற்றுமடல் வெளியிடப்பட்டதன் நூறாவது ஆண்டு இந்த ஆண்டு.
நற்செய்தி அறிவிப்பு பணியின் கருப்பொருள், உயிர்த்து மாட்சிமை
பெற்ற ஆண்டவர் இயேசுவே. அப்பணியின் உள்ளடக்கம் உயிர்த்த ஆண்டவரே.
நற்செய்தித் தூதுரைப் பணியாற்ற நம்மை உந்தித் தள்ளுபவர் உயிர்த்த
ஆண்டவரே. நற்செய்திப் பணியை ஆற்றுவதற்குத் தேவையான ஆற்றலை நமக்கு
அளிப்பவரும் அதே உயிர்த்த ஆண்டவர் தான். எனவேதான் உயிர்த்த ஆண்டவரைச்
சந்தித்தல் என்னும் அனுபவம் நற்செய்தி தூதுரைப்பணியின் முதல்
படியாக அமைகின்றது.
உயிர்த்த ஆண்டவர் இயேசு, தம் அன்புக்குரியவர்களுக்கும்
திருத்தூதர்களுக்கும் தம்மை வெளிப்படுத்தினார். விடியற்காலையில்
கல்லறைக்குச் சென்ற பெண்கள், மதலேன் மரியா, யோவான், பேதுரு, எம்மாவு
சீடர்கள் மற்றும் திருத்தூதர்கள் ஆகியோர் உயிர்த்த ஆண்டவரைச்
சந்தித்தனர். அவர்கள் ஆண்டவரைக் கண்டார்கள்.
அதே உயிர்த்த ஆண்டவர் இயேசுவைத் தான் இன்று நாம் இத்திருப்பலியில்
சந்திக்கப் போகின்றோம். இன்றைய திருப்பலி, நமக்கு உயிர்த்த ஆண்டவர்
இயேசுவைச் சந்திக்கும் ஒரு ஒப்பற்ற தெய்வீக அனுபவம் ஆகட்டும்.
இதை உணர்ந்து இத்தெய்வீக திருப்பலியில் பக்தியுடன் பங்கெடுப்போம்.
=================================================================================
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
=================================================================================
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
இரக்கம் நிறைந்த இறைவா,
எம் திருஅவையை வழிநடத்தும் எம் திருத்தந்தை அவரோடு உடன் உழைக்கும்
அனைத்து திருஆட்சியாளர்கள், அருட்பணியாளர்கள், துறவியர் ஆகிய
அனைவரும் அளவற்ற கருணையால் இவ்வுலகம் தழைத்தோங்க பணி புரியவும்,
உம் ஞானத்தின் துணைக் கொண்டு உலகப் பற்றுகளைத் துறந்து உம்மை
மட்டும் நம்பி வாழும் வரத்தினை நிறைவாய் பொழிந்து வழிநடத்த
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும் தந்தையே!
ஏக்கத்தோடும், நம்பிக்கையற்ற நிலையிலும் ஆண்டவராகிய உம்மை
நோக்கிக் கூக்குரலிடும் அனைவருடைய வேண்டுதல்களுக்கும் இரங்கி,
அவர்கள் அனைவரும் சோர்வடையாது, நிலைகுலையாது, நம்பிக்கையோடு
உமது வாக்குறுதிகளை எதிர்பார்த்துக் காத்திருந்து, உமது விருப்பப்படி
வாழும் வரத்தை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
பொறுமை நிறைந்த இறைவா,
பசியையும் நோயையும் பொறுமையுடன் சகித்துக்கொண்டு துன்பத்தில்
வாழும் மனிதர்கள் மீது கருணை காட்டி, அவர்களுக்குத் தேவையான
உணவையும், உடல்நலத்தையும் வழங்கி உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
மூவொரு இறைவனே எம் இறைவா!
எம் குடும்பத்தில் உள்ள பெற்றோர், பெரியோர் ஆகிய அனைவரையும்
நாங்கள் ஒரு சுமையாகக் கருதாமல் அவர்கள் வழியாக நாங்கள்
பெற்றுக் கொண்ட உம் ஆசீர்வாதங்களை எங்கள் பிள்ளைகளுக்கும், தலைமுறையினருக்கும்
கொண்டு செல்லக் கூட்டுகுடும்பத்தின் நன்மைகளை அறிந்துச்
சாட்சிய வாழ்வு வாழ இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
பரிவன்புமிக்க எம் இறைவா!
எம் இளையோர், இளம் பெண்கள், சிறுவர், சிறுமியர் இவர்களின் மனங்களில்
இறுமாப்பு, ஆடம்பரம் என்ற இருள் சூழ்ந்துக் கொள்ளமால் அன்பு,
பிறர்நலம் காணும் நல்லெண்ணம் வளர்ந்திடவும், தாழ்வுமனப்பான்மை
அகற்றித் தாழ்ச்சியில் உயர்ந்து ஓங்கிடத் தேவையான வரமருளவேண்டுமென்று
இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
குடும்பங்களின் பாதுகாவலான எம் இறைவா!
எம் குடும்பங்களில் உள்ள எம் பெற்றோர், பெரியோர், நண்பர்கள்,
உறவினர்கள் அனைவரும் சமாதானத்தோடும், ஒற்றுமையோடும் பிரிவினைகள்
கருத்துவேறுபாடுகள் இல்லாமல் வாழத் தேவையான அருளைப் பொழிந்திட
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எத்தகைய இடுக்கண்களில் உம்மைக் கூவி அழைத்தவருக்குச்
செவிசாய்ப்பவரே, எம் இறைவா!
வறுமை, கடன், முதுமை, பசி, தனிமை, நோய் என பல்வேறு விதங்களில்
துன்புறும் மக்களுக்கு நம்பிக்கை அளித்து, அவர்களின் துயரத்தை
நீக்கி ஆறுதல் அளித்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
=================================================================================
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
=================================================================================
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை
உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
வியத்தகு செயல்கள் புரிந்துள்ள தந்தையே இறைவா!
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவரும்;
தம்மிடம் ஒப்படைக்கப்பட்டவார்கள் மீது அன்பும், பரிவும்,
பாசமும் கொண்டு பணியாற்றிடவும், நீர் வெளிப்படுத்திய திருவுளம்
எதுவென கண்டுணர்ந்து செயற்பட வேண்டிய மனவுறுதியை அவர்களுக்கு
அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
நலன்களின் ஊற்றே இறைவா,
இவ்வுலகில் பல்வேறு நோய்களால் வருந்துவோர் நம்பிக்கையுடன்
உம்மைத் தேடி வரவும், உமது குணமளிக்கும் வல்லமையால் நலம்
பெற்று உமக்கு நன்றி செலுத்தவும் அருள வேண்டுமென்று உம்மை
மன்றாடுகிறோம்.
பேரன்பையும் உறுதிமொழியையும் நினைவுகூரும் தந்தையே இறைவா!
எந் நிலையிலும் மனந்தளராது எப்பொழுதும் எல்லாச் சூழ்நிலையிலும்
இறைவனுக்கு நன்றி கூறும் நல்லுள்ளம் எம்மிடம் உருவாகிடவும்,
நீர் வெளிப்படுத்திய திருவுளம் எதுவென கண்டுணர்ந்து
செயற்படவும் வேண்டிய அருள் அளித்துக் காத்திட வேண்டுமென்று
இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
மூவொரு இறைவனே எம் இறைவா!
எம் குடும்பத்தில் உள்ள பெற்றோர், பெரியோர் ஆகிய அனைவரையும்
நாங்கள் ஒரு சுமையாகக் கருதாமல் அவர்கள் வழியாக நாங்கள்
பெற்றுக் கொண்ட உம் ஆசீர்வாதங்களை எங்கள் பிள்ளைகளுக்கும்,
தலைமுறையினருக்கும் கொண்டு செல்லக் கூட்டுகுடும்பத்தின்
நன்மைகளை அறிந்துச் சாட்சிய வாழ்வு வாழ இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
பரிவன்புமிக்க எம் இறைவா!
எம் இளையோர், இளம் பெண்கள், சிறுவர், சிறுமியர் இவர்களின்
மனங்களில் இறுமாப்பு, ஆடம்பரம் என்ற இருள் சூழ்ந்துக்
கொள்ளமால் அன்பு, பிறர்நலம் காணும் நல்லெண்ணம் வளர்ந்திடவும்,
தாழ்வுமனப்பான்மை அகற்றித் தாழ்ச்சியில் உயர்ந்து ஓங்கிடத்
தேவையான வரமருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
குடும்பங்களின் பாதுகாவலான எம் இறைவா!
எம் குடும்பங்களில் உள்ள எம் பெற்றோர், பெரியோர், நண்பர்கள்,
உறவினர்கள் அனைவரும் சமாதானத்தோடும், ஒற்றுமையோடும்
பிரிவினைகள் கருத்துவேறுபாடுகள் இல்லாமல் வாழத் தேவையான
அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
நலந்தரும் மருத்துவரே தந்தையே இறைவா!
இன்று மக்களைத் தாக்கி, அவர்களை அலைக்கழிக்கும் போதைப் பொருள்
பாவனை, களியாட்டம், தீமைகள் அனைத்தையும் அழித்து மக்களை
நிம்மதியோடு வாழச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகின்றோம்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல். |
|