|
year B |
|
பொதுக்காலம் 27ம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 2: 18-24
அனைத்தையும் படைத்து முடித்த பின் ஆண்டவராகிய கடவுள், "மனிதன்
தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன்"
என்றார்.
ஆண்டவராகிய கடவுள் மண்ணிலிருந்து எல்லாக் காட்டு விலங்குகளையும்
வானத்துப் பறவைகளையும் உருவாக்கி, அவற்றிற்கு மனிதன் என்ன பெயரிடுவான்
என்று பார்க்க, அவற்றை அவனிடம் கொண்டு வந்தார். உயிருள்ள ஒவ்வொன்றுக்கும்
அவன் என்ன பெயரிட்டானோ அதுவே அதன் பெயராயிற்று. கால்நடைகள், வானத்துப்
பறவைகள், காட்டு விலங்குகள் ஆகிய எல்லாவற்றிற்கும் மனிதன் பெயரிட்டான்;
தனக்குத் தகுந்த துணையையோ மனிதன் காணவில்லை.
ஆகவே ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச்செய்து,
அவன் உறங்கும் பொழுது அவன் விலா எலும்பு ஒன்றை எடுத்துக்கொண்டு,
எடுத்த இடத்தைச் சதையால் அடைத்தார்.
ஆண்டவராகிய கடவுள் தாம் மனிதனிடமிருந்து எடுத்த விலா எலும்பை
ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்து வந்தார்.
அப்பொழுது மனிதன், "இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின்
சதையும் ஆனவள்; ஆணிடமிருந்து எடுக்கப்பட்டதால், இவள் பெண் என்று
அழைக்கப்படுவாள்" என்றான். இதனால் கணவன் தன் தாய் தந்தையை
விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே
உடலாய் இருப்பர்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
================================================================================
பதிலுரைப் பாடல்
( திபா 128: 1-2. 3. 4-5. 6 (பல்லவி:
5 காண்க)
================================================================================
பல்லவி: உம் வாழ்நாளெல்லாம் ஆண்டவர் உமக்கு ஆசி வழங்குவாராக!
1 ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! 2
உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும்
பெறுவீர்! பல்லவி
3 உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல்
இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப்
போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். பல்லவி
4 ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார்.
5 ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ்
நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக!
பல்லவி
6 நீர் உம் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காண்பீராக! இஸ்ரயேலுக்கு
நலம் உண்டாவதாக! பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
தூய்மையாக்குகிறவர், தூய்மையாக்கப்படுவோர் அனைவருக்கும் உயிர்முதல்
ஒன்றே.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 2: 9-11
சகோதரர் சகோதரிகளே, நாம் காண்பதோ சிறிது காலம் வானதூதரைவிடச்
சற்றுத் தாழ்ந்தவராக்கப்பட்ட இயேசுவையே. இவர் துன்புற்று இறந்ததால்,
மாட்சியும் மாண்பும் இவருக்கு முடியாகச் சூட்டப்பட்டதைக்
காண்கிறோம்.
இவ்வாறு கடவுளின் அருளால் அனைவருடைய நலனுக்காகவும் இவர்
சாவுக்கு உட்படவேண்டியிருந்தது. கடவுள் எல்லாவற்றையும் தமக்கென்று
தாமே உண்டாக்கினார். அவர், மக்கள் பலரை மாட்சியில் பங்குகொள்ள
அழைத்துச் செல்ல விரும்பிய போது, அவர்களது மீட்பைத் தொடங்கி வழிநடத்துபவரைத்
துன்பங்கள் மூலம் நிறைவுள்ளவராக்கினார். இது ஏற்ற செயலே.
தூய்மை யாக்குகிறவர், தூய்மையாக்கப்படுவோர் அனைவருக்கும் உயிர்முதல்
ஒன்றே. இதனால் இயேசு இவர்களைச் சகோதரர் சகோதரிகள் என்று அழைக்க
வெட்கப்படவில்லை.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
( 1 யோவா 4: 12 )
அல்லேலூயா, அல்லேலூயா! நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு
கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்; அவரது
அன்பு நம்மிடம் நிறைவுபெறும். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 2-16
அக்காலத்தில் பரிசேயர் இயேசுவை அணுகி, "கணவன் தன் மனைவியை விலக்கி
விடுவது முறையா?" என்று கேட்டு அவரைச் சோதித்தனர்.
அவர் அவர்களிடம் மறுமொழியாக, "மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?"
என்று கேட்டார்.
அவர்கள், "மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம்
என்று அனுமதி அளித்துள்ளார்" என்று கூறினார்கள்.
அதற்கு இயேசு அவர்களிடம், "உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே
அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார்.
படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், "ஆணும் பெண்ணுமாக அவர்களைப்
படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன்
மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.'
இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர்
பிரிக்காதிருக்கட்டும்" என்றார்.
பின்னர் வீட்டில் இதைப் பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர்.
இயேசு அவர்களை நோக்கி, "தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு
பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான்.
தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம்
செய்கிறாள்" என்றார்.
சிறு பிள்ளைகளை இயேசு தொடவேண்டுமென்று, அவர்களைச் சிலர் அவரிடம்
கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர்.
இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, "சிறு பிள்ளைகளை என்னிடம்
வரவிடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே
உரியது.
இறையாட்சியைச் சிறு பிள்ளையைப் போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு
உட்படமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.
பிறகு அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள்மீது வைத்து
ஆசி வழங்கினார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
👼🏿👼🏾⛪👼🏽👼🏼⛪👼🏻👼
அல்லது
👼🏿👼🏾⛪👼🏽👼🏼⛪👼🏻👼
கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 2-12
அக்காலத்தில் பரிசேயர் இயேசுவை அணுகி, "கணவன் தன் மனைவியை விலக்கி
விடுவது முறையா?" என்று கேட்டு அவரைச் சோதித்தனர்.
அவர் அவர்களிடம் மறுமொழியாக, "மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?"
என்று கேட்டார்.
அவர்கள், "மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம்
என்று அனுமதி அளித்துள்ளார்" என்று கூறினார்கள்.
அதற்கு இயேசு அவர்களிடம், "உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே
அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார்.
படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், "ஆணும் பெண்ணுமாக அவர்களைப்
படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன்
மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.'
இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர்
பிரிக்காதிருக்கட்டும்" என்றார்.
பின்னர் வீட்டில் இதைப் பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர்.
இயேசு அவர்களை நோக்கி, "தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு
பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான்.
தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம்
செய்கிறாள்" என்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
திருமணம் என்னும் திருவருட்சாதனம்
ஒருவன் மிகவும் அழகான ஒரு பெண்ணை மணமுடித்தான், அவள்மீது
அளவுகடந்த பாசத்தையும் காட்டினான். இவ்வாறிருக்க ஒரு நாள் அவள்
ஒரு தோல்நோய்க்கு ஆளானாள். அதனால் அவளது அழகு படிப்படியாக
குறைவடையத் தொடங்கியது. அவ்வேளை அவளது கணவன் ஒரு பயணமொன்றை
மேற்கொண்டிருந்தான். அவன் திரும்பி வரும்போது ஒரு
விபத்துக்குள்ளாகி அவனது கண் பார்வையை இழந்திருந்தான். ஆனால்
எவ்வித பிரச்சினையும் இன்றி அவர்களது மண வாழ்வு தொடர்ந்தது.
நாற்கள் செல்லச் செல்ல மனைவி தனது அழகும் படிப்படியாக
குறைவடைந்து செல்வதை உணர்ந்தாள். ஆனால் குருடனான கணவனுக்கோ இது
ஒன்றும் தெரியாது. இருவரும் அவர்களிடையே இருந்த அன்பில் எவ்வித
வேறுபாடும் மாற்றமும் காட்டாது வாழ்ந்தனர். அவன் அவளை அதிகமாக
நேசித்தான் அவளுடன் அன்பாக நடந்து கொண்டான். அவளும் அவனுடன்
அவ்வாறுதான் இருந்தாள்.
அப்படியிருக்க ஒரு நாள் அவள் இறந்துவிட்டாள். அவளது மரணம் அவனை
மிகவும் வேதனைப்படுத்தியது. தன் அன்பு மனைவியின் இறுதிச்
சடங்கை நிறைவேற்றி அவளை அடக்கம் செய்த பின் அவன் தனி மனிதனாக
அவ்விடத்தை விட்டு வீடு திரும்பினான். அவன் திரும்பி வரும்போது
அவனுக்கு பின்னாலிருந்து ஒரு மனிதர் அவனை அழைத்து "எவ்வாறு நீ
தனியே நடந்து செல்கிறாய்?" இது வரைக்கும் நீ உன் மனைவியின்
உதவியுடன் அல்லவா நடந்தாய்?" எனக் கேட்டான். அதற்கு அவன்,
"நான் குருடன் இல்லை. எனது மனைவி நோய் வாய்பட்டுள்ளாள் என்பதை
நான் அறிந்தால் அவள் மனம் காயப்படக்கூடும் என்பதால்தான்
குருடன் போன்று பாசாங்கு செய்தேன். அவள் சிறந்ததொரு மனைவியாக
இருந்தாள். அவள் பின்னடைவதற்கு ஒரு காரணமாக இருக்க
பயப்பட்டேன். அதனால் தான் குருடன் போன்று பாசாங்கு செய்து
இதற்கு முன் எவ்வளவு பாசமாக நடந்து கொண்டேனோ அவ்வாறே இது
வரையும் அவளுடன் வாழ்ந்தேன்" எனப் பதிலளித்தான்.
உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் அடுத்தவரிடம் இருக்கும்
குறைகள் பெரிதாகத் தெரிவதில்லை என்பதற்கு இந்த நிகழ்வு சான்று.
பொதுக்காலத்தின் இருபத்து ஏழாம் ஞாயிறான இன்று நாம்
படிக்கக்கேட்ட வாசகங்கள் திருமணத்தின் புனிதத் தன்மையையும்
அதன் பிரிவுபடாத தன்மையையும் நமக்கு எடுத்துக் கூறுகின்றன.
நாம் அதைக் குறித்து சற்று ஆழமாக சிந்தித்துப் பார்த்து நிறைவு
செய்வோம்.
நற்செய்தி வாசகத்தில் பரிசேயர்கள் சிலர் இயேசுவிடம் வந்து,
"கணவன் தன்னுடைய மனைவியை விலக்கிவிடுவது முறையா?" என்றொரு
கேள்வியைக் கேட்கின்றார்கள். அதற்கு இயேசு அளித்த பதில்
நம்முடைய ஆழமான சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. கணவன் தன்
மனைவியையோ அல்லது மனைவி தன்னுடைய கணவனையோ விலக்கிவிடுவது
விபச்சாரம் எனச் சொல்லும் இயேசு, கணவனும் மனைவியும் எப்படி
இருக்க வேண்டும், அவர்கள் இருவருக்கும் இடையேயான உறவு
எத்துணைத் தூய்மையானது என்பதை இறைவார்த்தையின் துணைகொண்டு
மிகத் தெளிவாக விளக்குகின்றார். இயேசு பரிசேயருக்கு பதில்
நமக்கு ஒருசில உண்மைகளை மிகத் தெளிவாக விளக்குகின்றது. அவை
என்ன என்று இப்போது பார்ப்போம்.
கணவன் மனைவி இவர்கள் இருவரும் வேறு வேறு அல்ல, ஒரே உடல்.
இதுதான் இன்றைய இறைவார்த்தையின் வழியாக இயேசு நமக்குச்
சொல்லும் முதன்மையான செய்தி. அது எப்படி இரண்டு உயிர்கள்
ஓருடலாக முடியும் என்னும் கேள்வி எழுகின்றது. அதற்கான பதிலை
இன்றைய முதல் வாசகம் தாங்கி வருகின்றது. முதல் வாசகத்தில்
ஆண்டவராகிய கடவுள் பெண்ணை ஆணுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச்
செய்துவிட்டு, அவனுடைய விலா எலும்பை எடுத்துப் படைக்கின்றார்.
அவன் அவளைப் பார்க்கும்போது, "இவளே என் எலும்பின் எலும்பும்
சதையின் சதையுமாக இருக்கின்றாள்" என்கின்றான். அதாவது ஆதாம்
ஏவாளை தன்னுடைய உடலாகவே பார்க்கின்றார். திருமண உறவில்
இணைந்திருக்கின்ற கணவனும் மனைவியும் மக்கள் பார்வைக்கு வேறு
வேறாக இருந்தாலும் அவர்கள் ஓருடலாக இருக்கவேண்டும் என்பதுதான்
இறைவார்த்தை சொல்லும் செய்தியாக இருக்கின்றது.
இன்றைக்கு கணவனும் மனைவியும் தனித்தனி தீவாகப் பிரிந்து
கிடப்பது மிகவும் வேதனையளிப்பதாக இருக்கின்றது. மாறிவரும்
சமூகச் சூழலும் தொலைதொடர்புச் சாதனங்களும் இந்த இடைவெளியை
இன்னும் பெரிதாக்குகின்றன. இத்தகைய சூழலில் கணவனும் மனைவியும்
ஒருவர் மற்றவர் மீது உண்மையான அன்பினைக் காட்டி, ஒரே உடலாக
இணைந்திருப்பதுதான் சிறப்பான ஒன்றாகும்.
கணவனும் மனைவியும் ஒருவர் மற்றவருக்குப் பிரமாணிக்கமாக
இருக்கவேண்டும். இதுதான் இறைவார்த்தை எடுத்துச் சொல்லும்
இரண்டாவது செய்தியாக இருக்கின்றது. திருமணத்தில் இணைகின்ற
மணமக்கள் எல்லாம் வல்ல இறைவனை சாட்சியாகக் கொண்டு,
"இன்பத்திலும் துன்பத்திலும் உடல் நலத்திலும் நோயிலும் நான்
உனக்குப் பிரமாணிக்கமாய் இருந்து, என் வாழ்நாள் எல்லாம் உன்னை
நேசிக்கவும் மதிக்கவும் வாக்களிக்கின்றேன்" என்று வாக்குறுதி
தருகின்றார்கள். அந்த வாக்குறுதிக்கு அவர்கள் பிரமாணிக்கமாக
இருக்கவேண்டும், இல்லையென்றால் குடும்பங்கள பாழ்பட்டுப்
போய்விடும். இன்றைக்கு நிறைய குடும்பங்கள் பிரிந்து
கிடப்பதற்குக் காரணம் கணவன் மனைவியிடம் பிரமாணிக்கமற்ற தன்மை
நிலவுவதுதான். இப்படி பிரமாணிக்கமற்ற தன்மையினால் உண்டாகும்
விவாகரத்து எல்லாம் விபச்சாரத்திற்கு ஒப்பானது என்கின்றார்
இயேசு.
ஆகவே, கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் பிரமாணிக்கமாக
இருக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.
மணவாழ்க்கை சிறக்க ஏனையோர் உதவிபுரிய வேண்டுமே ஒழிய, அவர்கள்
கணவன் மனைவிக்கு இடையே பிரிவினைக்குக் காரணமாக இருக்கக்கூடாது.
இது இன்றைய இறைவார்த்தை தரும் மூன்றாவது செய்தியாக
இருக்கின்றது. நற்செய்தியில் ஆண்டவர் இயேசு எல்லாவற்றையும்
சொல்லி முடித்துவிட்டு, "கடவுள் இணைத்ததை மனிதன்
பிரிக்காதிருக்கட்டும்" என்பார். அப்படியானால் திருமண உறவில்
இணைந்திருக்கும் கணவன் மனைவியைப் பிரிப்பதற்கு யாருக்கும் எந்த
உரிமை இல்லை என்பதுதான் இறைமகன் இயேசுவின் கட்டளையாக
இருக்கின்றது.
நிறையக் குடும்பங்களில் கணவனும் மனைவியும் ஒற்றுமையாக
இருந்தாலும் கூட இருக்கின்ற உற்றார் உறவினர், மாமியார்,
மாமனார் போன்றோர் அவர்களைப் பிரித்துவிட்டு வேடிக்கை பார்ப்பது
வேதனையாக இருக்கின்றது. கடவுள் இணைத்து வைத்த ஆணையும்
பெண்ணையும் பிரித்துவிட்டு கடவுளின் திருவுளத்திற்கு எதிராக
செயல்படுவோர் கடவுளின் சாபத்திற்கு ஆளாவது உறுதி.
ஒரு ஞாயிறு மறைக்கல்வி வகுப்பில் ஆசிரியர் மாணவர்களைப்
பார்த்து, "பழைய ஏற்பாட்டில் மகிழ்ச்சியாக வாழந்த ஒரு
குடும்பத்தையும், புதிய ஏற்பாட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்த ஒரு
குடும்பத்தையும் சொல்லுங்கள்" என்றார். உடனே முன்வரிசையில்
இருந்த மாணவன் ஒருவன், "பழைய ஏற்பாட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்த
குடும்பம் என்றால் அது ஆதாம் ஏவாள் குடும்பம், புதிய
ஏற்பாட்டில் மகிழ்ச்சியான குடும்பம் என்றால் அது சூசை மரியாள்"
என்றான். "எதை வைத்து அப்படிச் சொல்கின்றாய்?" என்று ஆசிரியர்
அவனிடம் கேட்க, "இரண்டு குடுமபங்களிலும் மாமியார் தொல்லை இல்லை
அதான் அப்படிச் சொன்னேன்" என்றான். ஆசிரியரால் எதுவும்
பேசமுடியவில்லை.
வேடிக்கையாக சொல்லப்பட்டதாக இருந்தாலும் குடும்பத்தில்
பிரிவினைக்குக் காரணமாக இவர்கள் எல்லாம் இருக்கின்றார்கள்
என்பது வேதனையாக இருக்கின்றது. ஆதலால், நம்மால் "நாலு
குடும்பங்கள்" நன்றாக இருக்க முயற்சிக்க வேண்டுமே ஒழிய,
அழிந்துபோகக் காரணமாக இருக்கக் கூடாது.
குடும்பம் கணவன் மனைவியால் மட்டும் முழுமை அடைந்து விடுமா?
என்றால், நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
குடும்பத்திற்கு அழகே குழந்தைகள்தான். கணவன் மனைவிக்கு இடையே
மலரும் தூய அன்பினால் உருவாகும் குழந்தைகள் கடவுள் கொடுத்த
கொடை, அக்குழந்தைகளைப் பேணிக்காப்பதுகூட ஒரு குடும்பத்தின்
கடமையாகும். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, "சிறு பிள்ளைகளை
என்னிடம் வரவிடுங்கள், அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில்
இறையாட்சி இத்தகையோருக்கு உரியது" என்கின்றார். ஆகவே,
குடும்பத்தார் குழந்தைகளை முழுமையாக அறிந்து, அவர்களைப்
பேணுவதும், குழந்தைகளின் உள்ளம் கொண்டு வாழ்வது கூட காலத்தின்
தேவையாக இருக்கின்றது.
குடும்பங்களில் குழந்தைகளின் நிலை எவ்வாறு இருக்கின்றது
என்பதற்கு வேடிக்கையாகச் சொல்லப்படும் நிகழ்வு.
ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடுவார்.
"ஒருநாள் ஆபீஸ்போய் வேலை செய்துபார். சம்பாதிப்பது எவ்வளவுக்
கஷ்டம் என்று புரியும்" என்று அடிக்கடி சவால் விடுவார்.
அவருடைய மனைவி ஒருநாள் பொறுமை இழந்து, "ஒருநாள் நீங்க வீட்ல
இருந்து பசங்களை பார்த்துக்கோங்க. காலையில் குளிப்பாட்டி
சாப்பிட வச்சு, வீட்டுப் பாடங்கள் சொல்லிக்கொடுத்து, சீருடை
அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க. அதோடு சமைப்பது, துவைப்பது
எல்லாத்தையும் செஞ்சுதான் பாருங்களேன்" என எதிர்
சவால்விட்டாள். கணவனும் அதை ஏற்றுக்கொண்டான்.
அவன் வீட்டில் இருக்க, இவள் ஆபீஸ் போனாள். ஒரே குப்பை கூலமாக
கிடந்தது ஆபீஸ். முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல்
கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள். வருகைப் பதிவேட்டை
சரிபார்த்து தாமதமாய் வருபவர்களை கண்டித்தாள். கணக்கு
வழக்குகளைப் பார்த்தாள். மாலை 5 மணி ஆனதும் வீட்டுக்குப்
புறப்பட நினைத்தபோது, ஓர் அலுவலரின் மகள் திருமண வரவேற்பு
குறித்து உதவியாளர் சொல்ல, பரிசுப் பொருள் வாங்கிக்கொண்டு
கல்யாண மண்டபத்திற்கு சென்றாள். கணவர் வராததற்கு பொய்யான
காரணம் ஒன்றை சொல்லிவிட்டு, மணமக்களின் கட்டாயத்தால் சாப்பிட
சென்றாள். பந்தியில் உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம்
வீட்டைப் பற்றியே! இலையில் வைத்த ஜாங்கிரியை மூத்தவனுக்கு
பிடிக்கும் என்று கைப்பையில் எடுத்து வைத்தாள். முறுக்கு
கணவனுக்குப் பிடிக்குமே என்று அதையும் கைப்பைக்குள் வைத்துக்
கொண்டாள். அவள் சாப்பிட்டதை விட, பிள்ளைகளுக்கும், கணவனுக்கும்
என பைக்குள் பதுக்கியதே அதிகம்.
ஒரு வழியாய் வீடு வந்து இறங்கியவள், கணவன் கையில் பிரம்போடு
கோபத்துடன் அங்கும், இங்குமாக நடந்து கொண்டிருந்ததைப்
பார்த்தாள். இவளை பார்த்ததும், "பிள்ளையா பெத்து வச்சிருக்க?
எல்லாம் கியா, முய என்று கத்தி தொலையுதுங்க அத்தனையும்
குரங்குகள்! சொல்றதை கேட்க மாட்டேங்குது, படின்னா படிக்க
மாட்டேங்குது, சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்குது. அத்தனை
பேரையும் அடிச்சு அந்த ரூம்ல படுக்க வச்சிருக்கேன். பாசம்
காட்டுறேன்னு பிள்ளைகள கெடுத்து வச்சிருக்கே" என்று பாய, அவளோ
அய்யய்யோ பிள்ளைகளை அடிச்சீங்களா, என்றவாறே உள்ளே ஓடி கதவை
திறந்து பார்த்தாள்.
உள்ளே ஒரே அழுகையும், பொருமலுமாய் பிள்ளைகள்! விளக்கை போட்டவள்
அதிர்ச்சியுடன், "ஏங்க இவனை ஏன் அடிச்சு படுக்கவச்சீங்க? இவன்
எதிர்வீட்டு பையனாச்சே" என்று அலற "ஓஹோ, அதான் ஓடப்
பார்த்தானா!" என கணவன் திகைத்து நின்றான்.
நமது நாட்டில் இப்படி ஒருநிலை இன்னும் உருவாகவில்லை என்றாலும்,
இன்றைக்கு நிறைய குடும்பங்களில் பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளை
முழுமையாய் அறியாதவர்களாய், அவர்களை சரியாகப்
பேணிக்காக்காதவர்களாக இருக்கின்றார்கள். இத்தகைய சூழலில்
அவர்கள் குழந்தைகள் கடவுளின் கொடை என உணர்வதும், அவர்களைப்
பேணிகாப்பதும், குழந்தைகளின் உள்ளம் கொண்டு, இறையாட்சியை
உரித்தாக்குவதும் மிகவும் தேவையாக இருக்கின்றது.
எனவே, கணவன் மனைவி இருவரும் தாங்கள் இருவரும் ஒரே உடல் என்பதை
உணர்ந்து, ஒருவருக்கு ஒருவர் பிரமாணிக்கமாய் இருந்து, நல்ல
மக்கள் செல்வங்களைப் பெற்று, நாடு போற்றும் வாழ்க்கை வாழ
முயற்சிக்க நாம் இறைவனைப் பிரார்த்தனை செய்வோம். அதன்வழியாய்
இறையருள் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|