Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                       
                                 பொதுக்காலம் 23 ஆம் வாரம் - ஞாயிறு - 3ம் ஆண்டு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஆண்டவரின் திருவுளத்தைக் கண்டுபிடிப்பவர் யார்?

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 9: 13-18


"கடவுளின் திட்டத்தை அறிபவர் யார்? ஆண்டவரின் திருவுளத்தைக் கண்டுபிடிப்பவர் யார்? நிலையற்ற மனிதரின் எண்ணங்கள் பயனற்றவை, நம்முடைய திட்டங்கள் தவறக் கூடியவை. அழிவுக்குரிய உடல் ஆன்மாவைக் கீழ்நோக்கி அழுத்துகிறது. இந்த மண்கூடாரம் கவலை தோய்ந்த மனதுக்குச் சுமையாய் அமைகிறது.

மண்ணுலகில் உள்ளவற்றையே நாம் உணர்வது அரிது! அருகில் இருப்பவற்றையே கடும் உழைப்பால்தான் கண்டுபிடிக்கிறோம். இவ்வாறிருக்க, விண்ணுலகில் இருப்பவற்றைத் தேடிக் கண்டுபிடிப்பவர் யார்? நீர் ஞானத்தை அருளாமலும், உயர் வானிலிருந்து உம் தூய ஆவியை அனுப்பாமலும் இருந்தால், உம் திட்டத்தை யாரால் அறிந்து கொள்ள இயலும்? இவ்வாறு மண்ணுலகில் வாழ்வோருடைய வழிகள் செம்மைப்படுத்தப்பட்டன. உமக்கு உகந்தவற்றை மனிதர் கற்றுக் கொண்டனர்; ஞானத்தால் மீட்பு அடைந்தனர்."

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 90: 3-4. 5-6. 12-13. 14,17 (பல்லவி: 1) Mp3
=================================================================================
 

பல்லவி: என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.
3
மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; 'மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்' என்கின்றீர்.
4
ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. - பல்லவி

5
வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்; அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்;
6
அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்; மாலையில் வாடிக் காய்ந்துபோகும். - பல்லவி

12
எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்.
13
ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். - பல்லவி

14
காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.
17
எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றி அருளும்! - பல்லவி


================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
இனி அவனை நீர் அடிமையாக அல்ல, உம்முடைய அன்பார்ந்த சகோதரனாக ஏற்றுக் கொள்ளும்.

திருத்தூதர் பவுல் பிலமோனுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 9b-10, 12-17

அன்பிற்குரியவரே,

கிறிஸ்து இயேசுவின் தூதுவனாக, அவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் பவுலாகிய எனக்குச் சிறையிலிருந்தபோது பிள்ளையான ஒனேசிமுக்காக உம்மிடம் வேண்டுகிறேன். அவனை உம்மிடம் திரும்ப அனுப்புகிறேன். அவனை அனுப்புவது என் இதயத்தையே அனுப்புவது போலாகும். நற்செய்தியின் பொருட்டுச் சிறையுற்றிருக்கும் எனக்கு, உமது பெயரால் பணியாற்ற, அவனை என்னிடமே நிறுத்திக்கொள்ள விரும்பினேன். ஆனால் நீர் செய்யும் நன்மையைக் கட்டாயத்தினால் செய்யாமல், மனமாரச் செய்ய வேண்டுமென்று நினைத்தே, உம்முடைய உடன்பாடின்றி எதையும் செய்ய நான் விரும்பவில்லை. அவன் என்றும் உம்மோடு இருக்க உம்மை விட்டுச் சிறிது காலம் பிரிந்திருந்தான் போலும்! இனி அவனை நீர் அடிமையாக அல்ல, அடிமையை விட மேலானவனாக, அதாவது உம்முடைய அன்பார்ந்த சகோதரனாக ஏற்றுக்கொள்ளும். அவன் என் தனிப்பட்ட அன்புக்குரியவன். அப்படியானால் மனிதன் என்னும் முறையிலும் ஆண்டவரைச் சார்ந்தவன் என்னும் முறையிலும் அவன் எத்துணை மேலாக உம் அன்புக்குரியவனாகிறான்! எனவே, நமக்குள்ள நட்புறவைக் கருதி, என்னை ஏற்றுக்கொள்வது போல் அவனையும் ஏற்றுக்கொள்ளும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
திபா 119: 135

அல்லேலூயா, அல்லேலூயா! உம் ஊழியன்மீது உமது முக ஒளி வீசச் செய்யும்! உம் விதிமுறைகளை எனக்குக் கற்பித்தருளும். அல்லேலூயா.
 
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================

உங்களுள் தம் உடைமை எல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.


✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 25-33


அக்காலத்தில்

பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்று கொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது: "என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னை விட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது. தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்க முடியாது.

உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்கமாட்டாரா? இல்லாவிட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக, 'இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க இயலவில்லை' என்பார்களே!

வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா? எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும்போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேடமாட்டாரா? அப்படியே, உங்களுள் தம் உடைமையை எல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது."

ஆண்டவரின் அருள்வாக்கு.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
பொதுக் காலத்தின் 23-ஆம் ஞாயிறு

இன்றைய வாசகங்கள்
சாலமோனின் ஞான நூல் 9: 13-18
பிலமோன் 9b-10, 12-17
லூக்கா 14:25-33



சீடத்துவமும் சிலுவையும்
திரும்பிப் பார்க்க மாட்டேன்:
மேகாலயாவில் கரோ (Garo) என்றோர் இனக்குழுவினர் உண்டு. இவர்கள் நடுவில் நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜரோப்பியக் கண்டத்திலிருந்து சிலர் நற்செய்தி அறிவிக்க வந்தனர். தொடக்கத்தில் இந்த இனக்குழுவில் இருந்த யாவரும் நற்செய்தியைக் கேட்கத் தயாராக இல்லை. பெரிய போராட்டத்திற்குப் பிறகே இந்த இனக்குழுவில் இருந்த ஒரு குடும்பம் நற்செய்தியை ஏற்றுக் கொண்டது. அந்தக் குடும்பத்தில் இருந்தவர்களைத் தொடர்ந்து பலரும் நற்செய்தியை ஏற்றுக் கொண்டார்கள்.

இதைத் தாங்கிக்கொள்ள முடியாத இனக்குழுத் தலைவர் முதலில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட மனிதருடைய இரண்டு மகன்களை ஊரிலிருந்த ஒரு பொதுவான இடத்தில் நிறுத்தி வைத்து அவரிடம், "நீர் கிறிஸ்துவை மறுதலிக்காவிட்டால் உன் மகன்கள் இவர்கள் இருவரையும் அம்பெய்த்து கொல்வேன்" என்று மிரட்டினார். அதற்கு அந்த மனிதர், "இயேசுவின் பின்னால் நானும் செல்வேன், திரும்பிப் பார்க்க மாட்டேன்" என்றார். இதனால் இனக்குழு தலைவர் அந்த மனிதருடைய இரண்டு மகன்களையும் அம்பெய்து கொன்றார்.

பின்னர் இனக்குழு தலைவர் அந்த மனிதருடைய மனைவியை அதே இடத்தில் நிறுத்தி, வைத்து அவரிடம், "இப்போதாவது நீ கிறிஸ்துவை மறுதலி, இல்லையென்றால் உன் இரு மகன்களைப் போன்று உன் மனைவியையும் அம்பெயது கொன்றுபோடுவேன்" என்று எச்சரித்தார். அப்போதும் அந்த மனிதர், "இயேசுவின் பின்னால் நானும் செல்வேன். திரும்பிப் பார்க்கமாட்டேன்" என்றார். இதனால் இனக்குழுத் தலைவர் அந்த மனிதருடைய மனைவியின்மீதும் அம்பெய்து கொன்று போட்டார்.

தன் இரண்டு மகன்கள், அவர்களைத் தொடர்ந்து தன் மனைவியை இழந்தபோதும் தன் முடிவிலிருந்து அந்த மனிதர் சிறிதும் பின்வாங்காததைப் பார்த்த இனக்குழுத் தலைவர், 'ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இயேசுவுக்காக இவர் தன் மகன்கள், மனைவி; ஏன், தன்னுடைய உயிரையும் இழக்கக் துணிகிறார் என்றால் அவர் மிகப்பெரியவர்' என்று இனக்குழுத் தலைவர் இயேசுவை நம்பி ஏற்றுக் கொண்டார். இனக்குழுத் தலைவர் இயேசுவை ஏற்றுக் கொண்டதைப் பார்த்துவிட்டு, அந்த இனக்குழுவில் இருந்த எல்லாரும் இயேசுவை நம்பி ஏற்றுக் கொண்டார்கள்.

ஆம், இந்த நிகழ்வில் வரும் கரோ இனத்தில் இயேசுவை முதலாவதாக ஏற்றுக்கொண்ட மனிதர் அவருக்காகத் தன் இரு பிள்ளைகள், மனைவி; ஏன், தன் உயிரையும் இழக்கத் துணிந்தார். இவ்வாறு அவர் இயேசுவின் உண்மையான சீடராக விளங்கினார். பொதுக் காலத்தின் இருபத்து மூன்றாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை இயேசுவின் உண்மையான சீடராக வாழ நமக்கு அழைப்புத் தருகிறது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

இயேசுவுக்கே முதன்மையான இடம்:
எருசலேம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த இயேசுவுக்குத் தன்னைப் பின்தொடர்ந்து வரும் பலரும் தன்னை உண்மையாய்ப் பின்தொடராமல், ஆதாயத்திற்காகவே பின்தொடர்ந்து வருகிறார்கள் (யோவா 6:26) என்பது நன்றாகவே தெரிந்திருந்தது. அதனால் அவர் தன்னை உண்மையாய்ப் பின்தொடர்பவர் எப்படி இருக்க வேண்டும் என்று, மூன்று முதன்மையான நிபந்தனைகளை முன்வைக்கின்றார். முதலாதாக, மற்ற எல்லாரையும்விட; ஏன், தம் உயிரையும் விட ஒருவர் தனக்கு முதன்மையான இடம் தர வேண்டும் என்கிறார் இயேசு. ஒருவரால் மற்ற எல்லாரையும் விட; ஏன் தம் உயிரையும் விட கடவுளுக்கு முதன்மையான இடம் தரமுடியுமா? என்றால் முடியும் என்று இயேசு நமக்கு முன்மாதிரி காட்டுகின்றார். அவர் தன் இரத்த உறவுகளைவிட இறையாட்சிக்கே முதன்மையான இடம் கொடுத்தார் என்பதை நற்செய்தியின்மூலம் நாம் அறிந்து கொள்ளலாம் (மத் 12: 46-50).

இரண்டாவதாக, இயேசு தன்னைப் பின்தொடர்ந்து வருபவர் தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு தன்னைப் பின்தொடர வேண்டும் என்கிறார். சிலுவை இல்லாமல் சீடத்துவ வாழ்வைத் கற்பனை செய்து பார்க்க முடியாது. இயேசு, இன்றைக்கு இருக்கும் அரசியல் மற்றும் ஒருசில சமயத் தலைவர்களைக் போன்று, 'என் பின்னால் வந்தால் சொகுசான வாழ்க்கை வாழலாம்' என்று பொய்யான, போலியான வாக்குறுதிகளை அள்ளி இரைக்கவில்லை. மாறாக, அவர் உண்மையையே பேசினார். ஆகவேதான் அவர் தன்னைப் பின்தொடர்பவர் சிலுவையைச் சுமக்க வேண்டும் என்கிறார். மட்டுமல்லாமல், தாமே சிலுவையைச் சுமந்து நமக்கு முன்மாதிரி காட்டுகின்றார்.

முன்றாவதாக, இயேசு தன்னைப் பின்தொடர்பவர் தம் உடைமையை எல்லாம் விட்டுவிட வேண்டும் என்கிறார். அவர் இவ்வாறு சொல்வதற்குக் காரணம், ஒருவரிடம் இருக்கும் உடைமை அல்லது சொல்வம் அவரைத் தன்மீது மட்டுமே அக்கறை கொள்ளச் செய்யுமே ஒழிய, அவரை அடுத்திருப்பவரைப் பற்றி அக்கறை கொள்ளச் செய்யாது. இயேசு சொல்லும் அறிவற்ற செல்வந்தன் உவமையும் (லூக் 12: 13-21), அவரைப் பின்தொடர விரும்பிய செல்வரான இளைஞனும் (மத் 19: 16-22) இதற்கு நல்ல எடுத்துக்காட்டுகள். இங்கே புனித பவுல் சொல்கின்ற வார்த்தைகளை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. "அவர் செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார்" (2 கொரி 8:9) என்று புனித கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தில் கூறும் வார்த்தைகள், இயேசுவே தமது 'செல்வத்தை' விட்டுவிட்டு வந்ததால் அவரைப் பின்தொடர்பவர் தன் உடைமையை விட்டுவிட்டு அவரைப் பின்தொடர்வது மிகவும் முக்கியம்.

கடவுளின் திட்டத்தை அறிவது எளிதல்ல:
இயேசுவைப் பின்தொடர்பவர் எதற்கு எல்லாரையும்விட அவரை மேலாக அன்பு செய்ய வேண்டும்? சிலுவையைச் சுமக்க வேண்டும்? தம் உடைமைகளையெல்லாம் விட்டுவிட வேண்டும்? என்பன போன்ற கேள்விகள் எழலாம். ஊனியல்புடையவர்களால், அல்லது சாதாரண மனிதர்களால் இதை அறிந்து கொள்ள முடியாது.

சாலமோனின் ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் அதன் ஆசிரியர், "நீர் ஞானத்தை அருளாமலும், உயர் வானினின்று உம் தூய ஆவியை அனுப்பாமலும் இருந்தால், உம் திட்டத்தை யாரால் அறிந்து கொள்ள இயலும்?" என்கிறார். எனில், கடவுளின் திட்டத்தை, அவரது திருவுளத்தைத் தூய ஆவியைப் பெற்றுக்கொண்ட ஒருவராலேயே அறிய முடியும். தூய ஆவியார் ஒருவருக்கு ஞானத்தைக் கொடுப்பார். அந்த ஞானத்தால் அவரால் கடவுளின் திட்டத்தை அறிந்து கொள்ள முடியும். அவரால் இயேசுவின் உண்மையான சீடரான இருக்க முடியும்!

இன்றைய நற்செய்தியின் இறுதியில் இயேசு தன்னைப் பின்தொடர்பவர் தெளிவாக முடிவெடுத்த பின்னே தன்னைப் பின்தொடர வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இரண்டு உவமைகளைச் சொல்கிறார். ஒன்று, கட்டடம் கட்டுதல், இரண்டு, எதிரிநாட்டோடு போருக்குச் செல்லுதல். இந்த இரண்டு செயல்களையும் செய்பவர் தெளிவான திட்டமிடல் இன்றி அவற்றில் வெற்றி காண முடியாது. இயேசுவைப் பின்தொடர்வது அந்த இரண்டு செயல்களையும் விட உயர்வானது. அதனால் இயேசுவைப் பின்தொடர்வதற்கு தூய ஆவியார் அருளும் ஞானம் இன்றி ஒருவரால் எதையும் செய்யமுடியாது.

ஒப்புரவுப் பணியைச் செய்வோம்!
இயேசுவின் சீடர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, அவரைப் பின்தொடர வேண்டும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் அவர் மனிதர்கள் நடுவில் ஒப்புரவை ஏற்படுத்த வேண்டும். இந்த ஒப்புரவுத் திருப்பணியைத் தொடங்கி வைத்தது இயேசுவாக இருந்தாலும், அந்த ஒப்புரவுப் பணியைக் கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் தந்துள்ளார் (2 கொரி 5:18) இதைச் சிறப்பாகச் செய்தவர் பவுல் என்று சொல்லலாம்.

முதல் வாசகத்தில் பவுல், கொலோசைத் திருஅவையில் தலைவராக இருந்த பிலமோனை அவரிடம் அடிமையாக இருந்து, பின் அவரிடமிருந்து தப்பித்து ஓடிவந்த ஒனேசிமை அடிமையாக அல்ல, சகோததராக மன்னித்து ஏற்றுக்கொள்ளச் சொல்கிறார். இத்தகைய செயலைப் பிலமோன் கட்டாயத்தினால் அல்ல, மனதாரப் செய்யச் சொல்கிறார் பவுல். இவ்வாறு பவுல் கடவுள் தன்னிடம் ஒப்படைத்த ஒப்புரவுப் பணியைச் சிறப்பாகச் செய்கிறார்.

இயேசுவின் உண்மையான சீடர் அவருக்கு முதன்மையான இடம் கொடுக்க வேண்டும்; அதே நேரத்தில் அவர் விட்டுச் சென்ற ஒப்புரவுப் பணியைப் புனித பவுலைப் போன்று செய்ய வேண்டும். இப்படிப் பணி கடுமையான பணி என்றாலும், நம்மால் முடியாத பணியல்ல,

சிந்தனைக்கு:
'இயேசு அளிக்கும் விண்ணகத்தைப் பெற பலரும் விரும்புகிறார்கள். அவரது சிலுவையைச் சுமக்கத்தான் வெகு சிலரே விரும்புகிறார்கள்' என்பார் வணக்கத்திற்குரிய தாமஸ் ஏ கெம்பிஸ். இயேசுவின் சீடர் சிலுவையையும் சுமக்கத் தயாராக வேண்டும். அதுவே அவருக்கு அழகு. எனவே, இயேசுவின் உண்மையான சீடராய் இருக்க சிலுவையைச் சுமப்போம், ஒப்புரவுப் பணியில் ஈடுபடுவோம். அதன் வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்


5. மறையுரைச் சிந்தனை - அருள்பணி மரிய அந்தோணிராஜ் . அருள்வாக்கு.காம்
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================


 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!