Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                               year B  
                                                        பொதுக்காலம் 22ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நான் உங்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்பவற்றோடு எதையும் சேர்க்க வேண்டாம்.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 4: 1-2,6-8


இஸ்ரயேலரே! கேளுங்கள்; நான் உங்களுக்குக் கற்றுத்தரும் நியமங்கள் முறைமைகளின்படி ஒழுகுங்கள். அதனால் நீங்கள் வாழ்ந்து, உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டுக்குச் சென்று அதை உரிமையாக்குவீர்கள்.

நான் உங்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்பவற்றோடு எதையும் சேர்க்க வேண்டாம். அதிலிருந்து எதையும் நீக்கவும் வேண்டாம். உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளை நான் உங்களுக்குக் கற்றுத் தருகிறேன்; அவற்றைப் பின்பற்றுங்கள். நீங்கள் அவற்றைப் பின்பற்றி நடங்கள்.

அதுவே மக்களினங்கள் முன்னிலையில் உங்கள் ஞானமும் அறிவாற்றலுமாய் விளங்கும். இந்த நியமங்களைக் கேள்வியுறும் அனைவரும் உண்மையில் இப்பேரினம் ஞானமும் அறிவாற்றலும் கொண்ட மக்களால் ஆனது என்பர்.

நாம் குரல் எழுப்பும் போதெல்லாம் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு உள்ளார். அவரைப் போல், மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளைக் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா? நான் இன்று நேர்மைமிகு சட்டங்களை உங்களுக்குத் தந்துள்ளேன். இவற்றைப் போன்ற நியமங்களையும் முறைமைகளையும் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா?

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்திபா 15: 2-3ய. 3bc-4ab. 5 (பல்லவி: 1a) Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?

2 மாசற்றவராய் நடப்போரே! - இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமார உண்மை பேசுவர்; 3ய தம் நாவினால் புறங்கூறார். பல்லவி

3bஉ தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார். 4யb நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர். பல்லவி

5 தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; - இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
இறைவார்த்தையின்படி நடக்கிறவர்களாய் இருங்கள்.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 17-18, 21b-22, 27

சகோதரர் சகோதரிகளே, நல்ல கொடைகள் அனைத்தும், நிறைவான வரமெல்லாம், ஒளியின் பிறப்பிடமான விண்ணகத் தந்தையிடமிருந்தே வருகின்றன. அவரிடம் எவ்வகையான மாற்றமும் இல்லை; அவர் மாறிக்கொண்டிருக்கும் நிழல் அல்ல. தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகளாகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார்.

உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக் கொள்ளுங்கள். அதுவே உங்களை மீட்க வல்லது. இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள்.

தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும் மாசற்றதுமான சமய வாழ்வு எதுவெனில், துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தலும், உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக் கொள்வதும் ஆகும்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(யாக் 1: 18)

அல்லேலூயா, அல்லேலூயா! தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகள் ஆகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1-8, 14-15, 21-23

ஒரு நாள் பரிசேயரும் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர் சிலரும் இயேசுவிடம் வந்து கூடினர். அவருடைய சீடருள் சிலர் தீட்டான, அதாவது, கழுவாத கைகளால் உண்பதை அவர்கள் கண்டார்கள்.

பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை; சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே உண்பர்.

அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன.

ஆகவே பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரை நோக்கி, "உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?" என்று கேட்டனர்.

அதற்கு அவர், "வெளிவேடக்காரர்களாகிய உங்களைப் பற்றி எசாயா பொருத்தமாக இறைவாக்கு உரைத்திருக்கிறார். 'இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலையில் இருக்கிறது. மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண்' என்று அவர் எழுதியுள்ளார். நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்" என்று அவர்களிடம் கூறினார்.

இயேசு மக்கள் கூட்டத்தை மீண்டும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை நோக்கி, "நான் சொல்வதை அனைவரும் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப்படுத்தும்.

ஏனெனில் மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன. தீயனவாகிய இவை அனைத்தும் உள்ளத்திலிருந்து வந்து மனிதரைத் தீட்டுப்படுத்து கின்றன" என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
இறைவார்த்தையை கேட்பவர்களாக/ போதிப்பவர்களாக மட்டும் இராமல், அதன்படி நடப்பவர்களாகவும் இருப்போம்

ஈசாப் கதை இது.

ஒருநாள் ஆற்றங்கரையில் இருந்த சிறிய நண்டு ஒன்று ஆற்றை நோக்கி மெல்ல நடந்து போய்க்கொண்டிருந்தது. அதனுடைய நடையே நேராக இல்லாமல் கோணலும் மாணலுமாய் இருந்தது.

இதைக் கவனித்த ஒரு பெரிய நண்டு ஒன்று, சிறிய நண்டின் அருகே சென்று, "யப்பா தம்பி! எங்கே போய்க்கொண்டிருக்கின்றாய்? என்று கேட்டது. அதற்கு அந்த சிறிய நண்டு, "நானா! நான் இந்த ஆற்றில் போய் நீந்திக் குளிக்கப்போகிறேன்" என்றது. உடனே அந்தப் பெரிய நண்டு, "நீ இப்படி கிழக்கும் மேற்குமாக, வடக்கும் தெற்குமாக நடந்து போய்க்கொண்டிருந்தால், ஒருபோதும் ஆற்றை அடைய முடியாது" என்றது. "அப்படியானால், நான் எப்படி நடக்கவேண்டும் என்பதை எனக்குக் கற்றுத்தாருங்கள்" என்றது சிறிய நண்டு. "அப்படிக் கேள் என் செல்லம், இதோ பார் நான் நடந்து காட்டுகிறேன். அதன்பின்னர் என்னைப் பின்பற்றி நட" என்று சொல்லிவிட்டு முன்னால் நடந்து சென்றது.

பெரிய நண்டு நடந்துபோன விதத்தைப் பார்த்துவிட்டு, சிறிய நண்டுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. ஏனென்றால், அந்த நண்டும் கோணலும் மாணலுமாய் நடந்து போனது. அப்போது அந்தச் சிறிய நண்டு பெரிய நண்டைப் பார்த்து, "அண்ணே! நம்முடைய இனத்தில் உங்களால் மட்டுமல்ல, யாராலும் சரியாக நடக்கத் தெரியாது போலும்" என்றது. இதைக் கேட்ட பெரிய நண்டால், எதுவும் பேச முடியவில்லை.

ஆம், சொல்வது அல்லது போதிப்பது யாருக்கும் எளியது. ஆனால், அதைக் கடைப்பிடித்து வாழ்வது மிகக்கடினம். பொதுக்காலத்தின் இருபத்து இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் இறைவார்த்தையைக் கேட்பவர்களாக/ போதிப்பவர்களாக மட்டும் இருந்துவிடாமல், அதைக் கடைப்பிடித்து வாழ்பவர்களாகவும் இருக்கவேண்டும் என்னும் சிந்தனையைத் தருகின்றது, நாம் அதனைக் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

இந்த உலகத்தில் போதிப்பவர்களுக்கும் போதனையைக் கேட்பவர்களுக்கும் பஞ்சமே இல்லை, ஆனால், அதைக் கடைப்பிடித்து வாழ்பவர்களுக்குத்தான் பஞ்சம். மத்தேயு நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், "என்னை நோக்கி ஆண்டவரே ஆண்டவரே எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசில் நுழைவதில்லை, மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தின் படி நடப்பவரே செல்வர்" என்று (மத் 7:21). ஆம், நாம் விண்ணரசில் நுழைவதற்கு, இறைவனுக்கு உகந்த மக்களாக வாழ்வதற்கு இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடத்தல் என்பது முக்கியத் தேவையாக இருக்கின்றது. நாம் எப்படி இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடப்பது என்பது என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் சீடர்கள் கைகளைக் கழுவாமல் உண்பதைப் பார்த்த பரிசேயர்கள் மற்றும் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர்கள் சிலர் இயேசுவிடம் வந்து, "உம்முடைய சீடர்கள் மூதாதையரின் மரபினைக் கடைபிடிப்பதில்லையா?" என்று கேட்கின்றனர். அதற்கு இயேசு அவர்களிடம் "இம்மக்கள் உதட்டினால் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னைவிட்டு வெகு தொலைவில் இருக்கின்றது. மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண்" என்ற இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகளை எடுத்துரைத்து அவர்களை மிகக் கடுமையாக விமர்சிக்கின்றார்.

உணவை உட்கொள்ளும்போது கைகளைக் கழுவி தூய்மையாக இருப்பது அவசியம்தான். ஆனால், கைகளைக் கழுவி தூய்மையாக இருக்கின்ற அதே நேரத்தில் உள்ளத்தையும் தூய்மையாக வைத்திருக்கவேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், வெளிப்புறத்தில் தூய்மையைக் கடைப்பிடிப்பவர்கள் உட்புறத்திலும் தூய்மையாக இருக்கவேண்டும். ஆனால், பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் மக்கள் அப்படித் தூய்மையாக இருக்கவேண்டும், இப்படித் தூய்மையாக இருக்கவேண்டும் எனப் பேசிவிட்டு, ஏழைகளையும் வறியவர்களையும் கைம்பெண்களையும் ஒடுக்கினார்கள் (மாற் 12:40). அதனால்தான் இயேசு பரிசேயர்களையும் மறைநூல் அறிஞர்களையும் வெளிவேடக்காரர்கள் என்று கடுமையாய் விமர்சிக்கின்றார்.

ஆண்டவரின் வார்த்தையை மக்களுக்கு எடுத்துச் சொன்ன, பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் அவ்வார்த்தையின் படி வாழாமல், கைம்பெண்களையும் ஏழைகளையும் ஒடுக்கியது மிகவும் வேதனையாக இருக்கின்றது. இறைவார்த்தையைப் போதிப்பது அல்லது அதனைக் காது கொடுத்துக் கேட்பது என்பது யாருக்கும் எளிதான ஒன்று. ஆனால், அதைக் கடைபிடித்து வாழ்வதுதான் மிகக் கடினமான ஒரு காரியம் ஆகும். இதைத்தான் அசிசி நகரப் பிரான்சிஸ் இவ்வாறு குறிப்பிடுகின்றார், "போதியுங்கள், போதியுங்கள், போதியுங்கள். தேவைப்பட்டால் வார்த்தையைப் பயன்படுத்துங்கள்" என்று. ஆம், வாழ்ந்து காட்டுவதை விட சிறந்த போதனை என்னவாக இருக்கமுடியும்?.

ஒரு சமயம் எல்லா நாடுகளிலிருந்தும் வந்திருந்த கிறிஸ்தவப் பிரதிநிதிகள் ஓரிடத்தில் ஒன்று கூடி, கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை எப்படி சிறப்பாக அறிவிக்கலாம் என்று கலந்து பேசினார்கள். அப்போது ஒவ்வொருவரும் ஒரு கருத்தினைச் சொன்னார்கள். ஒருசிலர் தொலைத்தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி நற்செய்தியை சிறப்பாக அறிவிக்கலாம் என்று சொன்னார்கள். இன்னும் ஒருசிலர் வேறு பல கருத்துகளையும் சொன்னார்கள். ஆனால், யாருக்குமே அவர்கள் சொன்னதில் உடன்பாடில்லை.

கடைசியாக ஆப்ரிக்காவைச் சார்ந்த ஒரு பெண்மணி எழுந்து, "ஒரு முன்மாதிரியான கிறிஸ்தவக் குடும்பத்தை கிறிஸ்துவைப் பற்றி அறியா ஊரில் தங்கச் செய்தால், அவர்களைப் பார்க்கும் மக்கள், அவர்களைப் போன்று முன்மாதிரியான, கிறிஸ்தவ மதிப்பீடுகளின் படி வாழத் தொடங்குவார்கள். இப்படியாக கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை எல்லாருக்கும் பரவச் செய்யலாம்" என்றார். இதைக் கேட்டு எல்லாரும் அந்தப் பெண்ணைப் பாராட்டினார்கள். ஆம், வாழ்ந்து காட்டுவதுதான் மிகச் சிறந்த நற்செய்தி அறிவிப்பாகும்.

தூய யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் இதைத்தான் அவர், "இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக்கொள்ளவேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாகவும் இருங்கள்" என்கிறார். இறைவார்த்தையை கேட்பவர்களாக மட்டும் இருப்பவர்கள் சராசரியான மனிதர்கள், ஏன் அதைவிடக் குறைவான மனிதர்கள், இறைவார்த்தையைக் கேட்டு நடப்பவர்கள்தான் மேலானவர்கள். நாம் இறைவார்த்தையைக் கேட்பவர்களாக மட்டும் இருந்துவிடாமல், அதனை வாழ்வில் கடைபிடிப்பவர்களாகவும் இருக்கவேண்டும் என்பதுதான் இறைவனின் விருப்பமாக இருக்கின்றது.

திருத்தூதரான தூய யாக்கோபு வாழ்ந்த முதலாம் நூற்றாண்டில் அனாதைகள், கணவனை இழந்த கைம்பெண்கள் கவனிக்கப்படமால் இருந்தார்கள். அவர்கள் மிகவும் புறக்கணிக்கப்பட்டார்கள். அதனால்தான் அவர், தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும் மாசற்றதுமான சமய வாழ்வு எதுவெனில், துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தலும் உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக்கொள்வதும் ஆகும்" என்கின்றார். தூய யாக்கோபின் காலத்தில் இருந்தது போன்றுதான் இன்றைக்கும் ஏழைகள், அனாதைகள், கைம்பெண்கள் புறக்கணிக்கப்படுகின்றார்கள். இவர்கள் மீது நாம் உண்மையான அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

மயிலாடுதுறையில் இராமமூர்த்தி (81) என்னும் வைத்தியர் இருக்கின்றார். இவருக்குப் பெயரே ஐந்து ருபாய் வைத்தியர்தான். அது என்ன ஐந்து ருபாய் வைத்தியர் என்று பார்த்தால், தான் பார்க்கும் வைத்தியத்திற்கு, கொடுக்கும் மருந்து மாத்திரைகளுக்கு கட்டணமாக ஐந்து ருபாய்தான் வசூலிப்பார். அதுகூட அவர் வாங்கமாட்டார். மக்கள்தான் அவருடைய மேசையில் வைத்துவிட்டுப் போவார்கள். சில நேரங்களில் அவரிடத்தில் வைத்தியம் பார்க்க வருகின்றவர்கள் ஐந்து ரூபாயைக் கூட வைப்பதில்லை, அவற்றையும் அவர் பொருட்படுத்துவதேயில்லை. ஏனென்று அவரிடத்தில் காரணத்தைக் கேட்டால், "இங்குள்ள ஏழைகளுக்காகத்தான் நான் வைத்தியம் பார்த்துவருகின்றேன். அவர்கள் நன்றாக இருக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமே தவிர, பணம் சம்பாதிக்கவேண்டும் என்பது என்னுடைய விருப்பம் அல்ல" என்பார்.

ஏழைகள்மீது கொண்ட அன்பினால் மிகுந்த தியாக உள்ளத்தோடு கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேல் மருத்துவம் செய்துவரும் மருத்துவர். திரு. இராமமூர்த்தி நமக்கெல்லாம் ஒரு முன்னுதாரணம். நாம் நம்மோடு வாழக்கூடிய ஏழைகள், அனாதைகள் இவர்கள்மீது உண்மையான அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்கின்றபோது நாம் உண்மையான, பெயர் சொல்லக்கூடிய கிறிஸ்தவர்கள் என்று பெருமைகொள்ள முடியும்

இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி வாழ்கின்றபோது அதாவது ஏழைகள்மீது அக்கறையும் அதன்வழியாக இறைவன் மீது அன்பும் கொண்டு வாழ்கின்றபோது எத்தகைய ஆசிர்வாதம் கிடைக்கும் என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. அங்கு நாம் வாசிக்கின்றோம், "நான் உங்களுக்குக் கற்றுத்தரும் நியமங்கள் முறைமைகளின்படி ஒழுகுங்கள். அதனால் நீங்கள் வாழ்ந்து, உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டுக்குள் சென்று அதை உரிமையாக்குவீர்கள்" என்று. ஆம், ஆண்டவரின் கட்டளைகளை, அவருடைய நியமங்களை, முறைமைகளைக் கடைப்பிடித்து வாழ்கின்றபோது என்றுமே ஆசிர்வாதம் என்பது மேலே குறிப்பிடப்பட்ட இறைவார்த்தை நமக்கு எடுத்துச் சொல்லும் உண்மையாக இருக்கின்றது.

ஆகவே, நாம் இறைவார்த்தையைக் கேட்பவர்களாக/ போதிப்பவர்களாக மட்டும் இருந்துவிடாமல், அதனை நம்முடைய வாழ்வில் கடைபிடிக்க முயற்சிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மாிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
கிறிஸ்தவ அடையாளம்

இணைச்சட்டம் 4:1-2,6-8
யாக்கோபு 1:17-18,22-22,27
மாற்கு 7:1-8.14-15,21-23

இன்று நாம் ஐக்கன்-சூழ் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்: 'G' என்றால் 'கூகுள்,' 'f' என்றால் 'ஃபேஸ்புக்,' 't' என்றால் 'டுவிட்டர்,' 'O' என்றால் 'ஓலா,' 'ஹார்ட்' என்றால் 'ஹெல்த்.' நம்முடைய செயலிகள் வெறும் எழுத்துக்களாகவும், நம்முடைய வார்த்தைகள் வெறும் ஸ்மைலிகளாகவும் மாறிக்கொண்டிருக்கின்றன. 2009ஆம் ஆண்டு - மேற்காணும் ஐக்கன்கள் பிரபலமாகாத நேரம் - உலகெங்கும் ஒரு சர்வே எடுக்கப்பட்டது. அதில், 'சிலுவை' (+), 'எம்' (M) என இரண்டு அடையாளங்கள் முன்னிறுத்தப்பட்டு, வாக்காளர்கள் ஓட்டுப் பதிவு செய்ய அழைக்கப்பட்டனர். அதாவது, இந்த இரண்டு அடையாளங்களில் தங்களுக்கு பரிச்சயமான அடையாளத்திற்கு அவர்கள் 'டிக்' செய்ய வேண்டும். 'சிலுவை' அடையாளத்தை விட உலகெங்கும் உள்ள பலர், 'மெக்டொனால்டை' குறிக்கும் 'எம்' அடையாளத்தையே 'டிக்' செய்திருந்தனர்.

இந்த அடையாளங்கள் வெறும் அடையாளங்கள் அல்ல. இவை ஒவ்வொன்றும் கலாச்சாரக் குறியீடுகள். எப்படி? மெக்டொனால்ட் உணவகத்திற்கு உணவருந்தச் சென்றிருக்கிறீர்களா? மெக்டொனால்ட் உணவகத்திற்கு உணவருந்தச் செல்பவர் நேரே 'ஆர்டர்' கவுண்டருக்குச் செல்ல வேண்டும். அங்கிருக்கும் 'டிஸ்ப்ளே' அல்லது 'மெனு கார்டில்' நமக்கு வேண்டியதை தேர்ந்தெடுக்க வேண்டும். பில்லுக்கு பணம் கட்ட வேண்டும். அதே நேரம் நம் முன்னால் சிகப்பு கலரில் செவ்வக டிரே ஒன்று வைக்கப்படும். நாம் ஆர்டர் செய்த அனைத்தும் ஒவ்வொன்றாக அதில் வைக்கப்படும். நம் ஆர்டர் நிறைவேறும் வரை அடுத்தவர் ஆர்டர் கொடுக்க முடியாது. எல்லாம் வைத்தவுடன் பில் போட்டவர் அந்த தட்டை நம் கையில் எடுத்துத் தருவார். அவருக்கு மூட் சரியில்லை என்றால் நம்மையே எடுத்துக்கொள்ளுமாறு சொல்வார். அப்படியே நாம் தட்டை எடுத்துக்கொண்டு நமக்குப் பின்னால் நிற்கும் கூட்டத்திற்கு நடுவே மேஜிக் செய்து யாரையும் தட்டிவிடாமல், யாரும் நம்மைத் தட்டிவிடாமல் கவனமாக வந்து, அமர்வதற்கு ஒரு இடம் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு ஆளுக்கு சுவரைப் பார்த்து இருக்கை, இரண்டு பேருக்கு சுவரோடு இருக்கை, நான்கு பேருக்கு மேல் நடுவில் இருக்கை என இருக்கைகள் இருக்கும். அமர்ந்து சாப்பிட்டுவிட்டு, நாமே தட்டை எடுத்து, குப்பைக்கூடையைத் தேடி, 'ப்ளீஸ் இன்செர்ட் தெ ப்ளேட்' என்று சொல்லும் உருளையின் முன் ப்ளேட்டை நீட்டி, குப்பையைக் கொட்டிவிட்டு, ப்ளேட்டை இன்னொரு உருளைக்குள் போட்டுவிட்டு, அப்படியே திரும்பி வெறிக்க எல்லாரையும் பார்த்துவிட்டு, நாமே கதவைத் திறந்து வெளியே வர வேண்டும். இதுதான் 'மெக்டொனால்ட் கலாச்சாரம்.' ஆக, இந்த உலகில் உள்ள எந்த மெக்டொனால்ட் உணவகம் சென்றாலும் இதே கலாச்சாரம்தான். இப்படியாக, 'கேஎஃப்சி,' 'மேரி பிரவுன்,' 'ஸ்டார் பக்ஸ்,' 'வால்மார்ட்' என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கலாச்சாரம் உருவாகிறது. இந்த கலாச்சாரத்தைப் பின்பற்றினால்தான் உள்ளே சென்று உணவருந்த முடியும்.

நம்ம ஊரு செட்டிநாடு ஹோட்டல் கலாச்சாரம் முற்றிலும் வேறானது. நமக்கு ஒருவர் ஓட்டல் கதவைத் திறந்து விடுவார். உள்ளே நுழைந்தவுடன் நம்மை ஒருவர் வரவேற்பார். ஒருவர் நமக்கு அமர இடம் கண்டுபிடிப்பார். ஒருவர் தண்ணீர் ஊற்றுவார். ஒருவர் இலை போடுவார். ஒருவர் ஆர்டர் எடுப்பார். ஒருவர் உணவு பரிமாறுவார். சாப்பிட்டு முடிக்க ஒருவர் இலை எடுப்பார். ஒருவர் டேபிள் துடைப்பார். ஒருவர் பில் போடுவார். ஒருவர் பணம் வாங்குவார். ஒருவர் மீண்டும் கதவு திறந்துவிடுவார். ஒருவர் நம் காரை எடுக்க காருக்குப் பின் நின்று விசில் அடிப்பார். இது செட்டிநாடு உணவக கலாச்சாரம்.

ஆக, ஒருவர் எந்த ஐக்கன் அல்லது அடையாளத்தைத் தேர்ந்தெடுக்கிறாரோ அந்த ஐக்கன் அல்லது அடையாளத்தை அப்படியே வாழ்வாக்க வேண்டும். இது நாம் உண்ணும் உணவுக்கு மட்டுமல்ல. நாம் பின்பற்றும் சமயவாழ்விற்கும் பொருந்தும். இந்து சமயம், கிறிஸ்தவம், இசுலாம், பௌத்தம், சமணம் என ஒவ்வொரு சமயவாழ்விற்கும் ஒரு அடையாளம் உண்டு. அந்த அடையாளம் முன்வைக்கும் கலாச்சாரம் உண்டு. ஒரு அடையாளத்தை ஏற்பவர் அத்தோடு சேர்ந்து அதன் கலாச்சாரத்தையும் எடுக்க வேண்டும். தான் எடுக்கும் கலாச்சாரம் அவருக்குக் கொடுக்கப்படுவது. அவர் அதைக் கூட்டவோ, குறைக்கவோ முடியாது. மேக்டொனால்டில் சாப்பிட்ட தட்டை எடுக்குமாறு நாம் யாரிடமும் கேட்க முடியாது. செட்டிநாடு உணவகத்தில் நாமே இலையை எடுத்துப் போடவும் முடியாது. அப்படிக் கூட்டினால், குறைத்தால் அங்கே கலாச்சார குறைவு அல்லது குளறுபடி வந்துவிடும்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு யூத சமய வாழ்வு என்ற அடையாளத்தையும், அத்தோடு வருகின்ற கலாச்சாரத்தையும் பற்றிப் பேசுகிறது.

எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு அருகில் மோவாபு சமவெளிப்பகுதியில் நின்றுகொண்டிருக்கும் இஸ்ராயேல் மக்களுக்கு இன்றைய முதல் வாசகத்தில் (காண்க. இணைச்சட்டம் 4:1-2, 6-8) இறைவனின் சட்டம் குறித்தும், இறைமக்களின் மேன்மை குறித்தும் அவர்களுக்கு அறிவுறுத்துகின்றார் மோசே. இங்கே இறைவனின் சட்டம் இஸ்ரயேல் மக்களின் 'அடையாளமாக' முன்வைக்கப்படுகிறது. மேலும், இந்தச் சட்டத்தின்படி இவர்கள் ஒழுகுவது இவர்களின் 'கலாச்சாரம்' என்று அறிவுறுத்தப்படுகிறது. 'இவை போன்ற நியமங்களையும் முறைமைகளையும் கொண்ட வேறு பேரினம் உண்டா?' என்ற கேள்வி இஸ்ரயேல் சமயத்தின் தனிப்பட்ட அடையாளமாக 'கடவுளின் கட்டளைகளை' முன்வைக்கிறது. இந்த அடையாளம் இன்னும் மிக முக்கியமானது. ஏனெனில் இது கடவுளின் கைகளால் கொடுக்கப்பட்டது. ஏனெனில் 'மக்களோடு மிக நெருங்கிய கடவுளைக் கொண்ட' இனமும் இஸ்ரயேல் இனமே. இவர்கள் இந்தக் கட்டளைகளை 'வாழ' வேண்டும். மேலும், 'எதையும் சேர்க்கவோ, அவற்றிலிருந்து எதையும் நீக்கவோ கூடாது.'

இப்படியாக, இறைவனே இவர்களின் அடையாளமாகவும், இறைவனின் கட்டளைகள் வழியாக அவரோடு இணைந்திருப்பதுமே இஸ்ரயேல் மக்களின் கலாச்சாரமுமாக இருக்கிறது.

இந்த அடையாளத்தையும், கலாச்சாரத்தையும் பின்பற்றுமாறு அறிவுறத்தப்பட்ட இஸ்ரயேல் மக்கள், காலப்போக்கில் மாற்றுகின்றனர். தங்கள் மூதாதையரின் மரபுகளை முன்னிறுத்துகின்றனர். இவர்கள் இப்படிச் சேர்க்க சேர்க்க, கடவுளின் கட்டளைகளின் நோக்கம் மறைந்துவிடுகிறது. இதைத்தான் இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற்கு 7:1-8, 14-15, 21-23) சாடுகின்றார்.

சீனாய் மலையருகில் கூடி நின்ற இஸ்ரயேல் மக்களிடம் ஆண்டவராகிய இறைவன், 'நான் எகிப்திற்குச் செய்ததையும், கழுகுகளின் இறக்கைகளின் மேல் உங்களை ஏந்தி என்னிடம் வந்து சேரச் செய்ததையும் நீங்களே கண்டீர்கள். நீங்கள் என் வார்த்தைக்குச் செவிசாய்த்து என் உடன்படிக்கையைக் கடைப்பிடித்தால், அனைத்துலகும் என் உடைமையேயெனினும், நீங்களே எல்லா மக்கள் இனங்களிலும் என் தனிச்சொத்தாவீர்கள். மேலும், எனக்கு நீங்கள் குருத்துவ அரசாகவும், தூய மக்களினமாகவும் இருப்பீர்கள்' (காண். விப 19:4-6) என்கிறார். ஆக, கடவுளின் கலாச்சாரத்தின் அடையாளமாக இருந்தது 'தூய்மை.' கடவுள் குறிப்பிடும் அகத்தூய்மையை மிக எளிதாக மறந்துவிட்டு, காலப்போக்கில் புறத்தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிக்கின்றர் இஸ்ரயேல் மக்கள்.

இப்படிப்பட்ட 'தூய்மை-தீட்டு' நிகழ்வையே நாம் நற்செய்தி வாசகத்தில் பார்க்கிறோம்.

இன்றைய நற்செய்தியின் சூழல் என்ன? சாப்பாட்டு அறை! சாப்பாடு உண்ணுமுன் சீடர்களைக் கூர்ந்து கவனிக்கின்ற பரிசேயர்கள், அவர்கள் கைகளைக் கழுவாமல் உண்பதைப் பார்த்து, 'தீட்டு! தீட்டு!' என்கின்றனர். இந்தச் சீடர்கள் உண்மையிலேயே கைகளைக் கழுவவில்லையா? அல்லது இவர்கள் கைகள் கழுவாமல் இருப்பது இயேசுவின் போதனைக்கு தேவைப்பட்டதா? எனத் தெரியவில்லை. சீடர்களின் காலத்தில் ஸ்பூன்-ஃபோர்க் பயன்படுத்தும் பழக்கமும் இருந்திருக்க வாய்ப்பில்லை. 'ஆம்! பரிசேயர்களே! உங்களுக்கு என்ன ஒரு அக்கறை! கைகழுவாமல் சாப்பிட்டால் கையில் உள்ள கிருமிகள் உணவின் வழியே உள்ளே புகுந்து அவை 18 வகையான சரும மற்றும் உடல் உபாதைகளை ஏற்படுத்திவிடலாம்! இனி நாங்கள் கைகழுவி சாப்பிடுகிறோம்! இனி என்ன, இப்போது கைகள் கழுவுகிறோம்! தண்ணி எங்கப்பா?' என்று கேட்டால் பிரச்சினை முடிந்திருக்கும். ஆனால் பிரச்சினை இங்கே சுகாதாரமோ, கிருமியோ அல்ல. பின் என்ன? வீட்டிற்கு உள்ளே யூதர்களாகிய நாம் மட்டும் இருக்கிறோம். ஆனால் வீட்டிற்கு வெளியே புறவினத்தார்களும் இருக்கிறார்கள். பொதுவிடங்களில் அவர்களும் நடக்கிறார்கள். நாம் தொட்ட கைப்பிடியை அவர்களும் தொடுகிறார்கள். அவர்கள் தொட்ட காய்கறிகளை நாமும் தொட நேரிடுகிறது. இதில் சிலர் பாசத்தோடு நம்முடன் கைகுலுக்கவும் செய்கின்றனர். ஆக, அவர்கள் தொட்ட இடத்தை நாம் தொடும்போதும், அல்லது அவர்களைக் தொடும்போதும் நம் கைகளும் தீட்டாகிவிடுகின்றன. ஆக, இங்கே பிரச்சினை யூதரா? அல்லது புறவினத்தாரா? தூய்மையா? அல்லது தீட்டா? என்பது. மேலும் கைகளைக் கழுவுவது மூதாதையரின் மரபு என்றும், அந்த மரபு ஒருபோதும் மீறப்படல் கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கின்றனர் பரிசேயர். 'பரிசேயர்' என்றாலே 'தனித்து வைக்கப்பட்டவர்' என்றுதான் அர்த்தம். ஆக, கடவுள் தங்களைத் தனித்து தூய்மையாக வைத்திருக்கிறார் என்ற முதல் ஏற்பாட்டு மேன்மையான எண்ணம் காலப்போக்கில் அடுத்தவர்களைத் தீட்டானவர்கள் என்று மாறிவிடுகிறது.

இயேசுவின் போதனை இவர்களின் வெளிவேடத்தைத் தோலுரிக்கின்றது. 'உங்கள் அக்கறை சுகாதாரம் சார்ந்தது அன்று! மாறாக, யூதர்-புறவினத்தார் ஏற்றத்தாழ்வு சார்ந்தது!' என்கிறார் இயேசு. இறைவாக்கு தெரிந்த இந்த பரிசேயர்களுக்கு எசாயாவின் இறைவாக்கை மேற்கோள் காட்டுகின்றார்: 'இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர். இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலைவில் இருக்கிறது. மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண்!' (எசாயா 29:13). எசாயாவின் காலத்தில் இருந்த எருசலேமின் மக்களுக்கு எதிராக அவர் சொல்லிய வார்த்தைகள் இவை.

மேலும் இயேசு மக்கள் கூட்டத்தைப் பார்த்து, 'வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை என்றும், உள்ளத்திலிருந்தே தீயன வெளிவருகின்றன!' என்றும் சொல்கின்றார்.

ஆக, இயேசுவின் போதனை இறைவார்த்தையா? அல்லது மனித கோட்பாடா? என்று தொடங்கி, 'எது தீட்டு?' என்பதோடு முடிகிறது.

மோசேயின் காலத்தில் யூதர்களின் முக்கிய அடையாளமான, கலாச்சாரமாக இருந்த பத்துக்கட்டளைகள் இப்படி மனிதக் கோட்பாடுகளாக மாறியது வேதனைக்குரிய ஒன்று.

இஸ்ரயேல் இனம் தூய இனம் என்ற அடையாளத்தை இழந்து, இயேசுவின் காலத்தில் 'வெளிப்புறத்தூய்மையை வலியுறுத்தும் மரபுகளை' தூக்கிப்பிடிக்கும் இனம் என்ற அடையாளத்தைப் பெறுகிறது.

இயேசுவுக்குப் பின், கிறிஸ்தவம் மலர்கின்ற வேளையில் யூதர்களின் இந்த 'தூய்மை-தீட்டு' பிரச்சினை தங்களுடைய சமூகத்திற்குள்ளும் வந்துவிடுமோ என்ற அச்சம் திருத்தூதர்களுக்கு இருந்தது. கிறிஸ்தவர்களுக்கான அடையாளமாக எதை எடுப்பது? 'பத்துக்கட்டளைகளையா?' அல்லது 'மரபுகளையா?' என்ற பிரச்சினை வரும்போது, இரண்டையும் விடுத்து, 'இறைவார்த்தையை' - 'இயேசுவின் வார்த்தைகளை' தெரிவு செய்கின்றார் எருசலேம் திருச்சபையின் தலைவர் யாக்கோபு. இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண்க. யாக்கோபு 1:17-18, 21ஆ-22, 27) நாம் வாசிக்கின்றோம்: கடவுள் மாறிக்கொண்டிருக்கும் நிழல் அல்ல. மனிதர்களும் அவர்களின் போதனையும் நிழல்கள். ஆக, உங்களுள் ஊன்றியிருக்கும் இறைவார்த்தையை கேட்பவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம்! மேலும், 'கடவுளின் பார்வையில் தூய்மையானதும் மாசற்றதுமான சமய வாழ்வு எதுவெனில், துன்புறும் அநாதைகளையும், கைம்பெண்களையும் கவனித்தலும், உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக்கொள்வதும் ஆகும்.'

ஆக, கிறிஸ்தவம் என்ற ஐக்கன் அல்லது அடையாளமாக இறைவார்த்தையையும், இறைவார்த்தையைப் பின்பற்றுதலோடு இணைத்து நலிவுற்றோர் பாதுகாப்பையும் கிறிஸ்தவ கலாச்சாரமாக முன்வைக்கிறார் திருத்தூதர் யாக்கோபு.

'கட்டளை - மரபு - இறைவார்த்தை' - இதுவே கிறிஸ்தவம் கடந்து வந்த பாதை. ஆக, இன்னும் நாம் 'கட்டளைகளையும்,' 'மரபுகளையும்' பிடித்துக்கொண்டு நின்றால் நாம் யூதர்களாக இருக்கிறோமே தவிர, கிறிஸ்தவர்களாக இன்னும் மாறவில்லை. அல்லது பெயரளவில்தான் மாறியவர்களாக இருக்கிறோம்.

கிறிஸ்தவர்களாகிய நாம் இன்று நம் அடையாளத்தையும், கலாச்சாரத்தையும், 'தூய்மையும் மாசற்றதுமான சமயவாழ்வையும்' மேற்கொள்ள இன்றைய இறைவாக்குவழிபாடு நமக்கு வைக்கும் பாடங்கள் எவை?

1. தேர்ந்தெடுக்கப்பட்ட நிலை
இன்றைய முதல்வாசகத்தில் இஸ்ரயேல் மக்களை பேறுபெற்றவர்கள் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்று மோசே சொல்வதற்குக் காரணம் இரண்டு: அ. அவர்களுக்கு சட்டம் உண்டு. ஆ. அவர்களின் இறைவன் அவர்களுக்குத் துணையிருக்கின்றார். இதே பின்புலத்தில் இயேசுவை முன்னிறுத்தி எழுதும் தூய பேதுரு, 'நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர். அவரது உரிமைச் சொத்தான மக்கள்' (1 பேதுரு 2:9) என கிறிஸ்துவில் திருமுழுக்கு பெற்றவர்களையும் இந்த வட்டத்திற்குள் சேர்க்கின்றார். இவ்வாறாக, நாம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலை நமக்குக் கடவுளின் கொடையாக வந்தாலும், கட்டளையைக் கடைப்பிடிக்கும் அனைவரும் இந்த நிலையை அடைகின்றனர். முதல் ஏற்பாட்டின் பத்துக் கட்டளைகளைச் சுருக்கி, 'இறையன்பு - பிறரன்பு' என ஒற்றை அன்புக் கட்டளையாகக் கொடுத்துவிடுகின்றார் இயேசு. யாரெல்லாம் இந்தக் கட்டளையின்படி நடக்கிறார்களோ அவர்கள் எல்லாருமே கடவுளின் மக்கள் என்ற நிலையைப் பெறுகின்றார்கள். இதைத்தான் இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடு 'லூமன் ஜென்ஷியம், எண் 6' பதிவு செய்கிறது. ஆக, நம் தேர்ந்தெடுக்கப்பட்டநிலை அடுத்தவர்களைப் பேயாக்கப் பயன்படுவதை விடுத்து, நாம் இன்னும் அதிக பொறுப்புணர்வோடு செயல்பட நம்மைத் தூண்ட வேண்டும்.

2. மரபின் தேவை
சமூகவியலில் மரபு என்பது மிக முக்கியமான கருத்தியல். மரபின் வழியாகவே ஒரு குழந்தை சமூகத்தின் உறுப்பினராக மாற்றப்படுகிறது. மரபு என்று சொல்லும்போது அதில் ஒரு தொடர்ச்சி இருக்கிறது. மரபு நம்மை நம் முன்னோர்களோடும், அவர்களின் வரலாற்றோடும் கட்டிப்போடுகின்றது. மரபு நமக்கு அடையாளம் தருகின்றது. நாம் வேறு வேறு நாடுகளில் இருந்தாலும் நாம் தை முதல் நாளன்று வைக்கும் பொங்கல் நாம் தமிழர்கள் என்ற அடையாளத்தையும், நம் மரபையும் உறுதி செய்துவிடுகிறதே! மரபில் பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன. நாம் சோர்ந்து விழும்போது நம்மைத் தூக்கிவிடுவதும் நம் மரபுதான். இப்படி மரபு எந்த அளவிற்கு நேர்முகமானதோ, அந்த அளவிற்கு எதிர்மறையாகவும் இருக்கிறது. மரபு நம் சிந்தனையை முடக்கிவிடுகிறது. பரந்து சிந்திக்கும் ஒருவரைக் குற்றவாளியாக்கிவிடுகிறது. மரபு நம்மில் அடிப்படைவாதத்தை விதைத்து, அடுத்த மரபு சார்ந்தவரை 'கீழானவர்!' அல்லது 'தாழ்வானவர்!' என்று நமக்குக் கற்பிக்கத் தொடங்குகின்றது. மரபு மனித வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. நம் கத்தோலிக்க திருஅவை ஒரு கையில் இறைவார்த்தை, மறு கையில் மரபு என இரண்டையும் பற்றிக்கொண்டிருக்கின்றது. இந்த மரபு நமக்குத் தந்ததுதான் புனிதர்கள், வழிபாட்டு விதிமுறைகள், திருச்சபைச் சட்டங்கள், சுற்றுமடல்கள், திருச்சங்கங்கள். இறைவார்த்தை மரபிற்கு வலுசேர்க்கிறது என்றும், மரபு இறைவார்த்தையைப் பின்பற்றுகிறது என்றும் சொல்கிறது இரண்டாம் வத்திக்கான் சங்கம். இந்த மரபில் இருந்த கறையை வெறுத்த மார்ட்டின் லூத்தர், 'இறைவார்த்தை மட்டும் போதும்!' எனப் புறப்பட்டுவிட்டார். ஆனால், இன்று அவர்கள் பெயரளவில் 'இறைவார்த்தை மட்டும்!' என்று சொன்னாலும் அவர்களும் தங்களையறியாமல் ஒரு மரபைக் கொண்டவர்களாகத்தான் இருக்கின்றனர். ஆக, மரபு தவறு என்று நாம் ஒதுக்கி வைக்கத் தேவையில்லை. நம் மனித மூளை இறந்தகாலத்தையும், எதிர்காலத்தையும் பற்றிச் சிந்திக்கும் திறன் கொண்டிருக்கும் வரை இந்த மரபும், பாரம்பரியமும் நம்மிடம் இருக்கும். ஆனால், மரபையும் தாண்டி சிந்திக்கும் பக்கவம் வந்தால் அது போதும். மேலும், நம் திருஅவையில் இறைவார்த்தையைவிட சில நேரங்களில் திருச்சபைச் சட்டம் மற்றும் வழிபாட்டு விதிமுறைகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இறைவார்த்தையை மரபுகளைத் தாண்டி நாம் கொண்டு செல்ல வேண்டும்.

3. உதட்டு ஆன்மீகமா? உள்ளத்து ஆன்மீகமா?
இறைவனின் வார்த்தை உள்ளம் சார்ந்தது. மனிதக் கோட்பாடு உதடுகள் சார்ந்தது. இறைவனுக்கு உள்ளம் தெரியும். ஆனால், மனிதர்களுக்கு உதடுகள் மட்டுமே தெரியும். உதடுகளில் தொடங்கி, உதடுகளில் முடிந்துவிடுகின்றன மனிதக் கோட்பாடுகள். இறைவனின் வார்த்தை நம் உள்ளத்தை தொடுகின்றது. ஆனால் மனித மரபு, அந்த மரபு சார்ந்தவர்களின் உதடுகளில் மட்டுமே இருக்கின்றது. ஆக, நாம் உதடுகளைக் கடந்த ஒரு ஆன்மீகம் பெற வேண்டும். இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் யாக்கோபு தன் திருச்சபைக்கு எழுதும்போது, இறைவார்த்தை வெறும் பகிரப்படும் வார்த்தையாக இல்லாமல், வாழப்படவும் வேண்டும் என்று சொல்கின்றார். இது இன்று நமக்கு வைக்கும் சவால் என்னவென்றால் 'உதட்டு ஆன்மீகம்'. இதைப் புரிந்துகொள்ள நம் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளைப் பார்க்கலாம். விமானப் பணிப்பெண்கள், விடுதிகள் வரவேற்பறைப் பெண்கள், ஐந்து நட்சத்திர உணவகப் பணியாளர்கள் இவர்கள் பணிக்குப் பயிற்றுவிக்கப்படும்போது கற்றுக்கொடுக்கப்படும் முதல் பாடம் 'புன்முறுவல் - சிரிப்பு'. என்ன நடந்தாலும், யார் வந்தாலும், உங்களுக்கு தனிப்பட்ட பிரச்சினையிருந்தாலும், உங்கள் உள்ளத்தில் சோகம் இருந்தாலும், வாடிக்கையாளர் உங்களைத் திட்டினாலும் நீங்கள் உங்கள் உதடுகளில் கொண்டிருக்க வேண்டியது சிரிப்பு. இவர்களின் சம்பளமும் இந்தச் சிரிப்பிற்கே.

4. உள்ளே-வெளியே!
'களவு செய்யாதே!' 'பொய்ச்சான்று சொல்லாதே!' 'கொலை செய்யாதே!' 'விபச்சாரம் செய்யாதே!' 'பிறர் மனைவியை அல்லது பொருளை விரும்பாதே!' என்ற கட்டளைகள் இறைவனால் நம் உள்ளத்தில் எழுதப்பட்டவை. இவை சரியாகக் கடைப்பிடிக்கப்பட்டால் நம் உள்ளத்தில் பரத்தைமை, களவு, கொலை, விபச்சாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு என எதுவும் இருப்பதில்லை. ஆனால், நான் உள்ளத்தில் இறைவனின் கட்டளைகளை அனுபவிக்காததால்தான், வெளியில் உள்ள மரபு நோக்கி ஓடுகிறேன். ஆக, இறைவார்த்தையை நான் எவ்வித சமரசமும் இல்லாமல் கடைப்பிடித்தால் என் உள்ளமும் சுத்தமாகும். என் உள்ளிருந்து வெளியே வருவதும் சுத்தமாக வரும்.

5. அனிச்சை செயல்
நம்மை யாராவது முத்தமிட நெருங்கினால் நம்மையறியாமல் நம் கண்கள் மூடிக்கொள்கின்றன. அல்லது நம் கண்களை நோக்கி வரும் ஒளி, மரக்கட்டை, தூசி என அனைத்திலிமிருந்தும் நம் கண்களைக் காப்பாற்ற இமைகள் தானாகவே மூடிக்கொள்கின்றன. ஏன்? கண்ணைவிட பெரிய பொருள் கண்ணுக்கு அருகில் வந்தால் ஆபத்து! அந்த ஆபத்திலிருந்து நம் கண்களைக் காத்துக்கொள்ள இமைகள் போட்டுக்கொள்ளும் ஒரு பாதுகாப்பு வளையமே இந்த அனிச்சை செயல். நாம் சார்ந்திருக்கும் மனித மரபுகளும் பாதுகாப்பு வளையங்களே! அவைகள் ஆபத்திற்குத்தான் பயன்படவேண்டுமே தவிர, எப்போதும் நம்மை ஆக்கிரமித்துக்கொள்வதாய் இருத்தல் கூடாது. ஏனெனில், எந்நேரமும் நம் இமைகள் மூடினால் எல்லாமே இருட்டாகத்தானே இருக்கும்!

இறுதியாக,
நம் மொபைலில் உள்ள செயலி எந்த ஐக்கன் கொண்டிருக்கிறதோ, அந்த ஐக்கனுக்குரிய வேலையைச் செய்கிறது. அப்படிச் செய்தால்தான் அது சரியான செயலி. இல்லை என்றால் அது வைரஸ். அதுபோல, கிறிஸ்தவம் என்னும் ஐக்கன் என்னில் இருந்தால், அதற்கேற்ற ஆன்மீகமும், சமயவாழ்வும் கொண்டிருந்தால் தான் என் வாழ்வு நான் இருக்கும் உலகில் கனி தரும். இல்லையென்றால், என் இருப்பு தேவையற்றதாகவும், தீங்கானதாகவும் மாறிவிடும்.

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================


 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!