|
ஆண்டு B |
|
பொதுக்காலம்
20ம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நான் தரும் உணவை உண்ணுங்கள்; திராட்சை இரசத்தைப் பருகுங்கள்.
நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் (9: 1-6)
ஞானம் தனக்கு ஒரு வீட்டைக் கட்டியிருக்கின்றது; அதற்கென ஏழு
தூண்களைச் செதுக்கியிருக்கின்றது. அது தன் பலி விலங்குகளைக்
கொன்று, திராட்சை இரசத்தில் இன்சுவை சேர்த்து, விருந்து ஒன்றிற்கு
ஏற்பாடு செய்தது; தன் தோழிகளை அனுப்பி வைத்தது; நகரின் உயரமான
இடங்களில் நின்று, "அறியாப் பிள்ளைகளே, இங்கே வாருங்கள்" என்று
அறிவிக்கச் செய்தது; மதிகேடருக்கு அழைப்பு விடுத்தது; "வாருங்கள்,
நான் தரும் உணவை உண்ணுங்கள்; நான் கலந்து வைத்துள்ள திராட்சை
இரசத்தைப் பருகுங்கள்; பேதைமையை விட்டுவிடுங்கள்; அப்பொழுது
வாழ்வீர்கள்; உணர்வை அடையும் வழியில் செல்லுங்கள்" என்றது.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 34: 1-2. 9-10. 11-12. 13-14 (பல்லவி: 8a)
=================================================================================
பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.
1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும்
என் நாவில் ஒலிக்கும். 2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப்
பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர்.
-பல்லவி
9 ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு
எக்குறையும் இராது.
10 சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும்,
ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது.
-பல்லவி
11 வாரீர் பிள்ளைகளே! நான் சொல்வதைக் கேளீர்! ஆண்டவருக்கு அஞ்சுவதைப்
பற்றி உங்களுக்குக் கற்பிப்பேன்.
12 வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா? வாழ்வின் வளத்தைத்
துய்க்குமாறு நெடுநாள் வாழ நாட்டமா?
-பல்லவி
13 அப்படியெனில், தீச்சொல்லினின்று உன் நாவைக் காத்திடு; வஞ்சக
மொழியை உன் வாயைவிட்டு விலக்கிடு!
14 தீமையைவிட்டு விலகு; நன்மையே செய்; நல்வாழ்வை நாடு; அதை அடைவதிலேயே
கருத்தாயிரு.
-பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
ஆண்டவருடைய திருவுளம் யாது எனப் புரிந்துகொள்ளுங்கள்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்
(5: 15-20)
சகோதரர் சகோதரிகளே, உங்கள் நடத்தையைப் பற்றி மிகவும் கருத்தாய்
இருங்கள். ஞானமற்றவர்களாய் வாழாமல் ஞானத்தோடு வாழுங்கள். இந்த
நாள்கள் பொல்லாதவை.
ஆகவே காலத்தை முற்றும் பயன்படுத்துங்கள்; ஆகவே அறிவிலிகளாய் இராமல்,
ஆண்டவருடைய திருவுளம் யாது எனப் புரிந்துகொள்ளுங்கள். திராட்சை
மது அருந்திக் குடிவெறிக்கு ஆளாகாதீர்கள். இது தாறுமாறான
வாழ்வுக்கு வழிகோலும்.
மாறாக, தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுங்கள். உங்கள் உரையாடல்களில்
திருப்பாடல்கள், புகழ்ப்பாக்கள், ஆவிக்குரிய பாடல்கள் ஆகியவை
இடம்பெறட்டும். உளமார இசை பாடி ஆண்டவரைப் போற்றுங்கள்.
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எல்லாவற்றிற்காகவும்
எப்போதும் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
(யோவா 6: 56)
அல்லேலூயா, அல்லேலூயா! எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக்
குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்.
அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி
வாசகம்
=================================================================================
எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம்
உண்மையான பானம்.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (6: 51-58)
அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கி,
"விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த
உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக்
கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.
நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?" என்ற
வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது.
இயேசு அவர்களிடம், "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிட
மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய
நீங்கள் வாழ்வு அடைய மாட்டீர்கள். எனது சதையை உண்டு என்
இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும்
அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.
எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது
சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு
இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந் திருப்பேன்.
வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன்.
அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர்.
விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர்
உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள்.
இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்."
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 1
=================================================================================
பேதைமையை விட்டுவிடுங்கள்; வாழ்வடைவீர்கள்!
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கு
மேல் சேசு சபைத் தலைவராக இருந்தவர் அருட்தந்தை பெட்ரோ அருப்பே
என்பவர். அவர் ஜப்பானில் உள்ள ஹீரோசிமாவுக்கு அருகில் இருந்த
குருமடத்தில் அதிபராக இருந்தபோது நடந்த நிகழ்வு.
அருட்தந்தை அருப்பே குருமாணவர்களுக்கு அதிபராக இருந்த சமயத்தில்
பக்கத்து ஊர்களில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு மருத்துவ உதவிகளைச்
செய்வதும் மறைக்கல்வி கற்றுக்கொடுப்பதும் நோயாளிகளைச் சந்தித்து
திவ்விய நற்கருணை வழங்குவதும் அவர்களுடைய ஆன்மீகக் காரியங்களைக்
கவனித்துக் கொள்வதுமாக இருந்தார். இப்படிப்பட்ட தருணத்தில்தான்
அமெரிக்க இராணுவம் ஹீரோசிமாவில் அணுகுண்டு வீசி, 80,000
பேருக்குள் மேல் கொன்றுபோட்டது, நிறையப் பேர் கை கால்களை இழந்து
போனார்கள். பலர் படுகாயமடைந்தார்கள். இப்படி குண்டுவீச்சில் படுகாயமடைந்தவர்களுக்கு
மருத்துவ உதவிகளையும் ஒருவேளை அவர்கள் கிறிஸ்தவர்கள் என்றால்,
அவர்களுக்கு மருத்துவ உதவியைச் செய்வது மட்டுமல்லாமல், அவர்களுக்காக
ஜெபித்து, திவ்விய நற்கருணையையும் வழங்கி வந்தார்.
ஒருநாள் அவர் தன்னுடைய குருமடத்திற்கு அருகில் இருந்த ஒரு
குடிசையில் சாகும் தருவாயில் இருந்த நகமுரா சன் (Nakamura
San) என்னும் பனிரெண்டு வயது சிறுமிக்கு மருத்துவ
உதவிகள் செய்து, திவ்விய நற்கருணை வழங்கச் சென்றார். அவர் அந்த
சிறுமி இருந்த குடிசைக்குச் சென்று, அவளைப் பார்த்தபோது அவரை
அறியாமலே அவருக்கு கண்ணில் கண்ணீர் வரத் தொடங்கியது. ஏனென்றால்
அந்தச் சிறுமியின் உடல் முழுவதும் காயங்கள், அவரால் எழுந்திருக்கவே
முடியவில்லை, அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அந்தச் சிறுமி அருட்தந்தை
அருப்பே அவர்கள் தன்னைச் சந்திக்க வருகின்றார், தனக்கு திவ்விய
நற்கருணையை வழங்க இருக்கின்றார் என்பதை அறிந்து எழுந்து உட்காரத்
தொடங்கினார். ஆனால், முடியவில்லை.
அப்போது அந்தச் சிறுமி அருட்தந்தை அவர்களைப் பார்த்து, "தந்தை
அவர்களே! எனக்கு திவ்விய நற்கருனையைத் தாருங்கள். இதற்காகதான்
நான் இவ்வளவு நாட்கள் உயிரைக் கையில் பிடித்துக்
கொண்டிருகின்றேன்" என்றாள். உடனே அருட்தந்தை அருட்பே அந்தச்
சிறுமியின் அருகே அமர்ந்து, அவளுடைய உடலில் இருந்த காயங்களில்
மருந்து தடவி கட்டுப்போட்டார். அவ்வாறு அவர் சிறுமியின் உடலில்
இருந்த காயங்களைத் துடைத்தபோது, சதைகள் எல்லாம் பிய்த்துகொண்டு
வந்தன. ஆனாலும் அவள் அந்த வேதனைகளை எல்லாம்
பொறுத்துக்கொண்டாள். பின்னர் அவர் சிறுமிக்கு திவ்விய நற்கருணை
வழங்கியபோது அவ்வளவு பயபக்தியோடு வாங்கினாள். அவள் நற்கருணை ஆண்டவர்மீது
காட்டிய பக்தியைக் கண்டு, அருட்தந்தை அருப்பே அவர்கள்,
"பனிரெண்டு வயதே நிரம்பிய இந்த சிறுமிக்கு நற்கருணை ஆண்டவர்மீது
இவ்வளவு பக்தியா?" என்று ஆச்சரியப்பட்டுப் போய் நின்றார். அவள்
திவ்விய நற்கருணையை வாங்கிய சில நிமிடங்களுக்குள் அவளுடைய உயிர்
உடலை விட்டுப் பிரிந்தது. இருந்தாலும் அவள் நற்கருணை ஆண்டவரை
உட்கொண்ட நிறைவில் மனநிம்மதியோடு தன்னுடைய உயிரைத் துறந்தாள்.
சிறுமி நகமுரா சன் நற்கருணை ஆண்டவர் மீது கொண்ட பக்தி, நற்கருணை
ஆண்டவருக்கு அவள் செலுத்திய வணக்கம் எல்லாம் உண்மையிலே நாம் அனைவரும்
வியந்து பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. "நாங்கள் அதிகம் படித்த
மனிதர்கள், நாங்கள் எல்லாம் தெரிந்தவர்கள்" என்று தங்களைக்
காட்டிக்கொள்ளும் ஒருசிலர் நற்கருணையில் ஆண்டவருடைய பிரசன்னத்தைக்
கேள்விக் குள்ளாகும்போது பனிரெண்டே வயதான சிறுமி நகமுரா சன் நற்கருணை
ஆண்டவர் மீது கொண்ட பக்தியும், அவள் அவருக்குச் செலுத்திய வணக்கமும்
நாம் என்றுமே நினைத்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.
பொதுக்காலத்தின் இருபதாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக்கேட்ட
வாசகங்கள் "பேதைமையை விட்டுவிடுங்கள், வாழ்வடைவீர்கள்" என்னும்
சிந்தனையைத் தருவதாக இருக்கின்றன. நாம் அதனைக் குறித்து
சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
பேதைமையை விட்டுவிடுங்கள் என்றால் எதைக் குறித்த பேதைமையை
விட்டுவிடவேண்டும் என்று நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
இன்றைய இறைவார்த்தையின் படி சிந்தித்துப் பார்த்தால் - நற்கருணையை
- ஆண்டவரின் திருவுடல் திரு இரத்தம் குறித்த பேதைமையை விட்டுவிடவேண்டும்
என்பதுதான் மிகவும் பொருத்தமான பதிலாக இருக்கும். ஏனென்றால்
நீதிமொழிகள் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில்,
ஞானம் "வாருங்கள், நான் தரும் உணவை உண்ணுங்கள்; நான் கலந்து
வைத்துள்ள திராட்சை இரசத்தை பருகுங்கள்; பேதைமையை விட்டு
விடுங்கள்; அப்பொழுது வாழ்வீர்கள்" என்று சொல்வதாக
வாசிக்கின்றோம். ஆம், நம்மிடம் இருக்கின்ற "நற்கருணை குறித்த
பேதைமையை விட்டுவிட்டு, நற்கருணையில் ஆண்டவர் இயேசு உண்மையாகவே
பிரசன்னமாக இருக்கின்றார் என்று நம்புகின்றபோது வாழ்வடைவோம் என்பது
உறுதி.
தூய பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட
இன்றைய இரண்டாம் வாசகத்தில் கூட, "ஞானமற்றவர்களாய் ஞானத்தோடு
வாழுங்கள்; அறிவிலிகளாய் இல்லாமல், ஆண்டவருடைய திருவுளம் யாது
எனப் புரிந்துகொள்ளுங்கள்" என்றுதான் வாசிக்கின்றோம். அப்படியானால்,
ஆண்டவர் இயேசு நற்கருணையில் பிரசன்னமாக இருக்கின்றார் என்று அறிவதே
ஞானம், அந்த நற்கருணை ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்து வாழ்வதே
வாழ்விற்கான வழி என்பதைப் புரிந்துகொண்டு வாழவேண்டும். இன்றைக்குப்
பலர் (அன்றைக்கும் கூட ஒருசிலர்) நற்கருணையில் ஆண்டவர் இருக்கின்றா?
அல்லது இயேசு எப்படி தன்னுடைய உடலையும் இரத்தத்தையும் நமது உணவாகவும்
இரத்தமாகவும் தருகின்றார் என்றதொரு கேள்வியை எழுப்புகிறார்கள்.
அவர்கள் அனைவரும் பேதைமையில், அறிவிலிகளாக இருக்கின்றார்கள் என்பதுதான்
உண்மை. எனவே, அவர்கள் நற்கருணையில் ஆண்டவர் இயேசு உடலோடும் ஆன்மாவோடும்
பிரசன்னமாக இருக்கின்றார் என்று நம்பவதுதான் வாழ்விற்கான வழி
என நாம் உறுதியாகச் சொல்லலாம்.
நற்கருணையில் ஆண்டவர் இயேசு உண்மையில் பிரசன்னமாக இருக்கின்றார்
என்று நம்பினால் மட்டும் போதுமா? அதுவே நமக்கு வாழ்வினைப்
பெற்றுத் தந்துவிடுமா? என்று கேட்டால், நிச்சயமாக இல்லை என்றுதான்
சொல்ல வேண்டும். ஏனென்றால், இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு
கூறுகின்றார், "மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக்
குடித்தாலொழிய நீங்கள் வாழ்வடைய மாட்டீர்கள்" என்று. இயேசுவின்
சதையை உண்டு, இரத்தத்தைக் குடித்தல் என்பது, இயேசுவாகவே வாழ்வதாகவும்.
இயேசுவாகவே நாம் வாழ்கின்றபோது நிலைவாழ்வினைப்
பெற்றுக்கொள்வோம் என்பது உறுதி.
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் "You are what
you eat" என்று. அதாவது நாம் எதை உட்கொள்கின்றோமோ
அதுவாகவே மாறுகின்றோம் என்பதுதான் அதன் அர்த்தமாக இருக்கின்றது.
இயேசுவின் உடலை ஒவ்வொருநாளும் நற்கருணை வடிவில் உட்கொள்ளக்கூடிய
நாம் இயேசுவாகவே மாறி இருக்கவேண்டும். ஆனால், நாம் இயேசுவாக மாறவில்லை
என்பது இங்கே பிரச்சனையாக இருக்கின்றது. இயேசுவின் உடலை உட்கொண்டு
இயேசுவாக மாறாததற்கு நம்முடைய பலவீனங்கள், குறைபாடுகள், கடவுளின்
திருவுளத்திற்கு ஏற்ப வாழாததுதான் காரணமாக இருக்கின்றன. ஆகவே.
நம் நம்முடைய பலவீனங்களை, குற்றங்குறைகளைப் போக்கி ஆண்டவர் இயேசுவின்மீது
கொண்ட நம்பிக்கையை வாழ்வாக்குகின்றபோது நிலைவாழ்வினைப்
பெற்றுக்கொள்ள முடியும்.
இயேசுவின் மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையை
வாழ்வாக்குகின்றோமா என்பது சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒரு
கேள்வியாக இருக்கின்றது.
மிகச் சிறந்த மறைபோதகரான பில்லி கிரஹாம் அவர்களுடைய
வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வு.
ஒருசமயம் பில்லி கிரஹாம் தில்லிக்கு வந்திருந்தபோது, அங்கு அவரைச்
சந்தித்த இந்து சமயத்தைச் சார்ந்த ஒரு நபர், "நான் மட்டும் இயேசுவின்
போதனைக்கேற்ப வாழ்கின்ற ஒரே ஒரு மனிதரைப் பார்த்தால் போதும்,
உடனே நான் கிறிஸ்தவராக மாறிவிடுவேன்" என்றார். அதற்கு பில்லி
கிரஹாம் அவரிடம், "யாராவது ஓர் உண்மையான கிறிஸ்தவர் உங்களுடைய
பார்வைக்குக் கிட்டாமலா போய்விடுவார், அப்போது நிச்சயம் நீங்கள்
கிறிஸ்தவர் ஆவீர்கள்" என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தார்.
நாட்கள் நகர்ந்தன. பில்லி கிரஹாம் சில மாதங்கள் தில்லியில் தங்கியிருந்து
நற்செய்தியை அறிவித்து வந்தார். அவரைக் கூர்ந்து கவனித்து வந்த
அந்த இந்து நபர், அவருடைய வாழ்க்கையால் தொடப்பட்டார்,
"இவரல்லவா உண்மையான கிறிஸ்தவர், இவரைத்தானே நாம் இத்தனை நாட்களும்
தேடிக்கொண்டு இருக்கின்றோம்" என்று மனதிற்குள்ளே நினைத்தவராய்,
அவரிடம் சென்று, "நான் இத்தனை நாட்களும் தேடியலைந்த உண்மையான
கிறிஸ்தவர், வாழும் நற்செய்தி நீங்கள்தான்" என்று சொல்லி,
திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவராக வாழத் தொடங்கினார். நாம் இயேசுவின்
போதனைகளை வாழ்வாக்குகின்றபோது, அவ்வாழ்க்கை பலரையும் இயேசுவுக்குள்
கொண்டு வந்துசேர்க்கும் அப்போது நாம் மட்டுமல்லாமல், அவர்களும்
நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வார்கள் என்பது உறுதி.
ஆம், இயேசுவின் உடலை உட்கொண்டு அவருடைய இரத்தத்தைக் குடிப்பது
என்பது அவராக வாழ்வது, அவரோடு இணைந்திருப்பது, நிலவாழ்வினைப்
பெற்றுக்கொள்வதற்கு இணையானது.
எனவே, நாம் நற்கருனையைக் கருத்த ஐயத்தை, பேதைமையான எண்ணங்களைத்
தவிர்ப்போம். ஆண்டவர் இயேசு நற்கருணையில் உண்மையாகவே பிரசன்னமாக
இருக்கின்றார் என்பதை நம்புவோம், நம்பியதை வாழ்வாக்குவோம், அதன்வழியாக
இறையருள் நிறைவாய் பெறுவோம்.
மறைத்திரு. மாிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 2
=================================================================================
தியாக சீலர்களாக மாறுவோம்
கடந்த நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலுமே, தொடர்ச்சியாக திருவிழாக்களைக்
கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். கடந்த வாரம்: மூவொரு கடவுள்
பெருவிழா, அதற்கு முந்தைய வாரம்: தூய ஆவி பெருவிழா. அதற்கு
முந்தைய வாரம்: ஆண்டவரின் விண்ணேற்பு. அதற்கெல்லாம்
முத்தாய்ப்பாக திருச்சபைக்கு இன்றும் ஊட்டம் தந்து வாழ்வளித்து,
இயக்கிக்கொண்டிருக்கும் திரு உடல், திரு இரத்தப்பெருவிழாவை இன்று
கொண்டாடுகிறோம். உணவு மற்றும் இரத்தத்திற்கு பழைய ஏற்பாட்டிலே
பிண்ணனி கொடுக்கப்படுகிறது. கடவுள் பாலைவனத்திலே, மன்னாவை மக்களுக்கு
கொடுத்து, பாலைநிலத்திலே, அவர்களுக்கு வாழ்வு கொடுத்தார். மன்னாவை
உண்ட மக்கள், ஒருநாள் இறந்து போனார்கள். ஆனால், இயேசுவின் உடலை
உண்கிற நாமோ, எந்நாளும் அவரில் உயிரோடிருக்கிறோம்.
லேவியர் நூலிலே வாசிக்கிறோம். இஸ்ரயேல் மக்கள் ஆண்டிற்கு ஒருமுறை,
தங்கள் பாவங்களுக்கு கழுவாய் நிறைவேற்றும் நாள் ஒன்றைக்
கொண்டாடினார்கள். அந்த நாளிலே, அனைத்து இஸ்ரயேல் மக்களும்
கூடியிருக்க, ஒரு காளையும், இரு வெள்ளாட்டு கிடாய்களும் கொண்டு
வரப்படும். காளை மாடு, குருவானவருடைய பாவங்களுக்கு பரிகாரமாகவும்,
இரண்டு ஆடுகளில் ஒன்று மக்களின் பாவம் போக்கும் பலிக்கெனவும்
பலியிடப்படும் என்று, லேவியர் ஆகமத்திலே வாசிக்கிறோம். செம்மறியின்
இரத்தத்தை எடுத்து, மக்கள் மேல், தெளிக்க, அவர்கள் பாவம் கழுவப்படுவதாக,
அவர்கள் நம்பினர். அதேபோல, நம் இயேசு கிறிஸ்து, மக்களுடைய பாவங்களைப்போக்குவதற்காக,
தன் இரத்தத்தையே, கொடுத்து, நிரந்தரமாக, நம்மை பாவத்திலிருந்து
விடுவித்து, தன்னையே தியாகமாக்கி, நமக்கு வாழ்வு தந்துள்ளார்.
யூதர்கள், இரத்தத்தை உயிருக்கு சமமாக கருதினார்கள். இரத்தம்
வெளியேறினால், உயிர் வெளியேறுவதாக எண்ணிக்கொண்டனர். இயேசு தன்
உடலையும், இரத்தத்தையும் நமக்காகப் பலியாக்குவதன் மூலமும்,
தியாகமாக்குவதன் மூலமும் மனிதராகப் பிறந்த கடவுள், நமக்காக உயிர்
விடுகிறார் என்று இது நமக்கு எடுத்துக்காட்டுகிறது. நம் அனைவருடைய
பாவங்களும், அவருடைய இரத்தத்தால், கழுவப்பட்டு, புது மனிதர்களாக
மாற வேண்டும், என்று அவர் உயிர் விடுகிறார். கடவுளுக்கும், மனிதனுக்கும்
இடையே துண்டிக்கப்பெற்ற, அந்த உறவை மீண்டும் உறுதிப்படுத்துகிறார்.
நமக்கு வாழ்வு தருகிறார் என்று நம்பினர்.
இந்தப்பெருவிழா, நமக்கு நம்முடைய வாழ்வுக்கு கூறுகிற செய்தி என்னவென்றால்,
எங்கே தியாகம் இருக்கிறதோ, அங்கே வாழ்வு இருக்கிறது. இந்த உலகம்
இருப்பதும், இயங்குவதும், வரலாற்றிலே, வாழ்ந்த தன்னலமற்ற தியாக
உள்ளங்களினால் தான். எனை ஈன்ற தந்தைக்கும், எனை வளர்த்த
தாய்நாட்டிற்கும், என்னால் சிறிதளவு நன்மை கிடைக்குமானால்,
செத்தொழியும் நாளும் எனக்கு திருநாளே. இதுதான், தமிழர்களாகிய
நம்முடைய முன்னோர்களின் வாழ்வு முறை. இன்று நம்முடைய வாழ்க்கை
எப்படி இருக்கிறது? அடுத்தவனுக்கு குழிவெட்டி, எப்படியாவது
நான் வாழ்க்கையில் முன்னேறிவிடலாம் என்கிற பார்வைதான் அதிகம்.
அப்படிப்பட்ட பார்வையை மறந்து, தியாக உள்ளங்களாக மாற அழைக்கப்படுகிறோம்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 3
=================================================================================
"இயேசு, 'எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு
இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்' என்றார்"
(யோவான் 6:56)
இயேசு மக்களுக்கு நிலைவாழ்வு தரும் உணவைத் தரப்போவதாகக் கூறியதும்
அவர்கள் தமக்குள்ளே "முணுமுணுத்தார்கள்" (யோவா 6:41). ஆனால்,
அவர் வழங்கப்போகின்ற உணவு அவருடைய சொந்த "சதையும் இரத்தமும்"
என்றதுமே மக்களிடையே வாக்குவாதமே எழுந்துவிட்டது! அவர்கள்
"நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்"
என்று வாதாடத் தொடங்கினர். இதைக் கண்ட இயேசு மக்களுக்கு இன்னும்
அழுத்தமாகக் கூறிய உண்மை இது: "எனது சதை உண்மையான உணவு. எனது
இரத்தம் உண்மையான பானம்" (யோவா 55). இவ்வாறு இயேசு கூறியதைக்
கேட்ட மக்கள் உண்மையிலேயே அதிர்ச்சியடைந்திருப்பார்கள். அதாவது,
எந்த மனிதரும் பிற மனிதரின் சதையை உண்பதை முறையானதாகக் கருத
மாட்டார்கள். ஏன், இத்தகைய செயல் காட்டுமிராண்டித்தனமானது என்று
கூடக் கூறுவார்கள். ஆனால் இயேசு கூறுகின்ற சொற்கள் உண்மையிலேயே
அவர் தம்மை நமக்கு உணவாகவும் பானமாகவும் தருகின்ற கொடையைக்
குறிக்கின்றன. என்றாலும் இயேசுவின் உடலை நாம் உண்ண முடியுமா,
அவருடைய இரத்தத்தை நாம் குடிக்க இயலுமா எனச் சிலர் கேட்கலாம்.
இங்கே இயேசு கூறுவது நம் ஆன்ம உணவையும் பானத்தையும் என்பதை
நாம் முதலில் உணர வேண்டும். அதே நேரத்தில், நாம் உட்கொள்கின்ற
உணவும் அருந்துகின்ற தண்ணீரும் நாம் உயிர்வாழ நமக்குச் சக்தி
தருவதுபோல, இயேசுவை நமது உணவாகவும் பானமாகவும் நாம் ஏற்றுக்கொண்டு,
அவருடைய தன்மையை நமது தன்மையாக மாற்றிக்கொண்டால் நாம் ஆன்ம
வாழ்வில் வளர்ச்சியும் முதிர்ச்சியும் அடைவோம்.
நற்கருணைக் கொண்டாட்டத்தின்போது அப்பமும் இரசமும் இயேசுவின்
உடலாகவும் இரத்தமாகவும் மாற்றம் பெறுகின்றன என்பது நம் நம்பிக்கை.
இயேசுவே தம்மை நமக்குக் கொடையாக அளிக்கின்றார் என்பதே இதன்
பொருள். தம்மையே கொடையாகத் தருகின்ற இயேசுவை நாம் ஏற்று, அவருடைய
சக்தியிலிருந்து சக்தி பெற்று வாழ்ந்தால் அவருடைய வல்லமை நமக்கு
ஊக்கமும் ஆக்கமும் தரும். இயேசுவிடம் துலங்கிய பண்புகள் நம்மிடமும்
துலங்கும். அப்போது நம் வாழ்க்கை இயேசுவின் வாழ்க்கைக்கு ஒத்ததாகவும்
உகந்ததாகவும் மாற்றம் பெறும். இயேசுவின் சதையை உண்டு. அவருடைய
இரத்தத்தைக் குடிக்கும் நாம் ஒருவிதத்தில் இயேசுவின் தன்மையைப்
பெறுவதால் அவர் எல்லா மனிதரையும் அன்புசெய்து அவர்களின் நலனுக்காகத்
தம்மையே பலியாக்கியதுபோல நாமும் தன்னலம் களைந்து பிறர்நலம்
பேணுவதில் நிலைத்திருப்போம்; நிலைவாழ்வு பெற்று மகிழ்வோம்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
|
|