Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு வாசகம்

                        
                                             திருவருகைக் காலம்  1ம் ஞாயிறு - 2ம் ஆண்டு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நீர் வானங்களைப் பிளந்து இறங்கி வரமாட்டீரா?

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 63: 16b-17; 64: 1,3b-8

ஆண்டவரே, நீர்தான் எங்கள் தந்தை; பண்டைய நாளிலிருந்து "எம் மீட்பர்" என்பதே உம் பெயராம். ஆண்டவரே, உம் வழிகளிலிருந்து எங்களைப் பிறழச் செய்வது ஏன்? உமக்கு அஞ்சி நடவாதவாறு எம் நெஞ்சங்களைக் கடினப்படுத்தியது ஏன்? உம் ஊழியர்களை முன்னிட்டும், உம் உரிமைச் சொத்தாகிய குலங்களை முன்னிட்டும் திரும்பி வாரும்.

நீர் வானங்களைப் பிளந்து இறங்கி வரமாட்டீரா? மலைகள் உம் திருமுன் நடுநடுங்குமே! நீர் இறங்கி வந்தீர்; மலைகள் உம் முன்னே உருகி ஓடின! தம்மை நம்பியிருப்போருக்காகச் செயலாற்றும் கடவுள் உம்மையன்றி வேறு யார்? முற்காலம் முதல் இதுபற்றி எவரும் கேள்வியுற்றதில்லை; செவியுற்றதும் இல்லை. கண்ணால் பார்த்ததுமில்லை. மகிழ்ச்சியுடன் நேர்மையைக் கடைப்பிடிப்போர்க்கும், உம்மையும் உம் வழிகளையும் நினைவில் கொள்வோர்க்கும் நீர் துணை செய்ய விரைகிறீர்.

இதோ, நீர் சினமடைந்தீர்; நாங்கள் பாவம் செய்தோம்; நெடுங்காலமாய்ப் பாவம் செய்திருக்க, நாங்கள் மீட்கப்படுவது எங்ஙனம்? நாங்கள் அனைவரும் தீட்டுப்பட்டவரைப்போல் உள்ளோம்; எங்கள் நேரிய செயல்கள் எல்லாம் அழுக்கடைந்த ஆடைபோல் ஆயின; நாங்கள் யாவரும் இலைபோல் கருகிப்போகின்றோம்; எங்கள் தீச்செயல்கள் காற்றைப்போல் எங்களை அடித்துச் சென்றன. உம் பெயரைப் போற்றுவார் எவரும் இல்லை; உம்மைப் பற்றிக்கொள்ள முயல்பவர் எவரும் இல்லை; நீர் உம் முகத்தை எங்களுக்கு மறைத்துள்ளீர்; எங்கள் தீச்செயல்களின் பிடியில் எங்களை அழியவிட்டீர். ஆயினும், ஆண்டவரே நீரே எங்கள் தந்தை; நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்; நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் திபா 80: 1ac,2b. 14-15. 17-18 (பல்லவி: 3)
=================================================================================
பல்லவி: கடவுளே, எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்.

1ac இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! கெருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்! 2b உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்! பல்லவி

14 படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்! 15 உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! பல்லவி

17 உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை உமது கை காப்பதாக! உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக! 18 இனி நாங்கள் உம்மை விட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம். பல்லவி.

=================================================================================
இரண்டாம் வாசகம்
=================================================================================
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படவேண்டும் எனக் காத்திருக்கிறோம்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 3-9

சகோதரர் சகோதரிகளே, நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிட மிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக! இயேசு கிறிஸ்து நமக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர்.

கிறிஸ்து இயேசுவின் வழியாக நீங்கள் பெற்றுக்கொண்ட இறையருளை முன்னிட்டு உங்களை நினைத்து என் கடவுளுக்கு என்றும் நன்றி செலுத்துகிறேன்.

ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பெற்றுச் சொல்வன்மையும் நிறையறிவும் பெற்று, எல்லா வகையிலும் செல்வர்களானீர்கள். மேலும் கிறிஸ்துவைப் பற்றிய சான்று உங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்காகக் காத்திருக்கும் உங்களுக்கு அருள்கொடை எதிலும் குறையே இல்லை. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளில் நீங்கள் குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருக்க அவர் உங்களை இறுதிவரை உறுதிப்படுத்துவார்.

கடவுள் நம்பிக்கைக்கு உரியவர்; தம் மகனும் நம் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நட்புறவில் பங்குபெற உங்களை அவர் அழைத்துள்ளார்.

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
திபா 85: 7

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும். அல்லேலூயா.
லூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 
விழிப்பாயிருங்கள்: வீட்டுத் தலைவர் எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது.  

+ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 33-37

அக்காலத்தில் மானிடமகன் வருகையைப்பற்றி இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: "கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில் அந்நேரம் எப்போது வரும் என உங்களுக்குத் தெரியாது.

நெடும் பயணம் செல்ல இருக்கும் ஒருவர் தம் வீட்டை விட்டு வெளியேறும்போது தம் பணியாளர் ஒவ்வொருவரையும் அவரவர் பணிக்குப் பொறுப்பாளராக்கி, விழிப்பாய் இருக்கும்படி வாயில் காவலருக்குக் கட்டளையிடுவார். அதுபோலவே நீங்களும் விழிப்பாயிருங்கள்.

ஏனெனில் வீட்டுத் தலைவர் மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும் வேளையிலோ, காலையிலோ எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது. அவர் திடீரென்று வந்து நீங்கள் தூங்குவதைக் காணக்கூடாது.

நான் உங்களுக்குச் சொல்லுவதை எல்லாருக்குமே சொல்கிறேன்: விழிப்பாயிருங்கள்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
திருவருகைக் காலம் முதலாம் ஞாயிறு

"கவனமாயிருங்கள், விழிப்பாய் இருங்கள். ஏனெனில் அந்நேரம் எப்போது வருமென உங்களுக்குத் தெரியாது"

தியானம் என்றால் என்ன? என்று அந்தச் சிறுவனுக்கு நெடுநாட்களாய்த் தீராத சந்தேகம். அந்தச் சிறுவனின் பெற்றோருக்கோ சிறுவனுக்குப் புரிந்த மொழியில் சொல்லமுடியாத இயலாமை. அதனால் ஒருநாள் மூவரும் அவ்வூரில் இருந்த துறவியைச்  சந்திக்கச் சென்றிருந்தபோது சிறுவன் துறவியை நெருங்கி, தன் கேள்வியை முன் வைத்தான். சிரித்துக் கொண்டே அந்தச் சிறுவனுக்கு இலையில் ஒரு தோசையைப் பறிமாறச் சொன்னார்.

சிறுவனிடம், "நான் எப்போது "ம்" என்று சொல்றேனோ அப்போது சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். அதே மாதிரி எப்போது "ம்" என்று சொல்றேனோ அதற்கப்புறம் இலையில் தோசை இருக்கக் கூடாது. புரிந்ததா? என்றார் சிரித்துக் கொண்டே. சிறுவனுக்கு ஒரே உற்சாகம். சுற்றியுள்ளோருக்குக் குழப்பம். சிறுவன் துறவியின் "ம்" க்காகத் தோசையில் ஒரு கையை வைத்தபடி தவிப்புடன் அவர் முகத்தைப் பார்த்தபடி இருந்தான். சிறுவனைச் சிறிது காக்க வைத்து சற்றைக்குப் பின் "ம்" சொன்னார் துறவி.
அடுத்த சில நிமிஷங்களுக்குள் இரண்டாவது "ம்" வந்து விடக்கூடாதே என்ற பதைப்புடன் பெரிய பெரிய துண்டுகளாக எடுத்து அவசர அவசரமாகத் திணித்துக் கொண்டே துறவியின் முகத்தைக் கவனிப்பதும், தோசையைப் பிய்த்து உண்பதுமாக நேரம் கரைந்தது.

புன்னகை மாறாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாரே ஒழிய "ம்" சொல்வதாக இல்லை. தோசையோ சிறுத்து ஒரு சிறுதுண்டாக மாறியிருந்தது இப்போது. சிறுவனும் அந்த சிறிய துண்டு தோசையில் கையை வைத்தபடி எப்படா இந்தத் தாத்தா "ம்" சொல்லுவார் என்று காத்திருந்தான். சுற்றியுள்ளவர்களுக்கும் என்னதான் நடக்கப் போகிறது என்றறிய ஆவல். எதிர்பாராத ஒரு நொடியில் "ம்" சொல்லவும் சிறுவன் சடாரென்று கடைசி தோசைத் துண்டை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான். அப்போது துறவி அவனிடத்தில் "இரண்டு "ம்" களுக்கும் நடுவில் உன் கவனம் எப்படித் தோசை மேலும் என் மேலும் இருந்ததோ, அதே போல் நீ எந்தக் காரியம் செய்தாலும் அடிநாதமாக இறைவன் மேல் கவனம் வைத்திருப்பாயானால் அதன் பேர்தான் தியானம். புரிந்ததா இப்போது?" என்றார் துறவி. சிறுவன் புரிந்ததுபோல் தலையாட்டினான். எந்த ஒரு காரியத்தையும் முழு கவனத்தோடு செய்யவேண்டும் என்பதை இந்த நிகழ்வு எடுத்துக்கூறுகின்றது.

திருவருகைக் காலம் முதலாம் ஞாயிறான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் தரும் சிந்தனை "கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள், ஏனெனில் அந்நேரம் (மானிட மகனது வருகை) எப்போது வரும் என யாருக்கும் தெரியாது" என்பதாகும். நாம் எப்படிக் கவனமாக இருப்பது, எந்தெந்த வழிகளில் விழிப்பாய் இருப்பது எனச் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

இன்று நாம் திருவருகைக் காலத்தைத் தொடங்கியிருக்கின்றோம். திருவருகைக் காலம் என்று சொன்னாலே அது ஆண்டவர் இயேசுவின் வருகைக்காக நாம் நம்மையே தகுந்த விதத்தில் தயார்செய்ய அழைக்கப்படும் ஒரு காலமாகும். இக்காலத்தில் நாம் எப்படி தயார் செய்வது என்று இன்று வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையின் ஒளியில் சிந்திப்போம். நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மானிட மகனது வருகையைக் குறித்துப் பேசும்போது அது எந்நேரம் வரும்/நிகழும் என யாருக்கும் தெரியாது என்று சொல்கிறார். ஆகையால் நாம் மானிடமகனது வருகை எப்போது வேண்டுமானாலும் நிகழலாம், ஏன் இப்போதுகூட நிகழலாம் என்ற முழு கவனத்தோடு வாழ அழைக்கப்படுகின்றோம்.

நோவாவின் காலத்தில் மக்கள் உண்டார்கள், குடித்தார்கள், கடவுளை மறந்து தங்களுடைய மனம்போன போக்கில் வாழ்ந்தார்கள்.வெள்ளப்பெருக்கு வந்தபோது, நோவாவைத் தவிர, மற்ற அனைவருமே அழித்தொழிக்கப்பட்டார்கள். ஆகவே, நாமும் எந்தவொரு கவனமும், விழிப்பும் இல்லாமால் தான்தோன்றித் தனமாக வாழ்கின்றபோது இறைவனிடமிருந்து தண்டனையைப் பெறுவோம் என்பது உறுதி. இன்றைக்கு எத்தனையோ போலி இறைவாக்கினர்கள் மானிட மகனுடைய வருகை இதோ இங்கே நிகழ்கிறது, அதோ அங்கே நிகழ்கிறது என்று சொல்லிக்கொண்டு  மக்களைத் திசைமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் குறித்தும் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அதே நேரத்தில் நாம் நம்முடைய வாழ்க்கையை கவனத்தோடும் கடவுளுக்கு உகந்ததாகும் அமைத்துக்கொள்ளவேண்டும். ஏனென்றால் இன்றைய இரண்டாம் வாசகத்தில் படிப்பதுபோல நம்முடைய கடவுள் நம்பிக்கைக்கு உரியவர், அவர் சொன்னது போன்றே வருவார்.

மானிடமகனது வருகைக்காக நாம் எந்தெந்த வழிகளில் தயார் செய்யவேண்டும் என்பதை இறைவாக்கினர் எசயாப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகமானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது. நாம் அதனைச் சற்று ஆழமாக சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

மானிடமகனது வருகைக்காக முதலாவது நாம் செய்யவேண்டிய காரியம்: நேர்மையுடன் வாழ்வதாகும். எசாயா இறைவாக்கினர் அதைத்தான், " மகிழ்ச்சியுடன் நேர்மையைக் கடைப்பிடிப்போருக்கும், உம்மையும் உம் வழிகளையும் நினைவில் கொள்வோருக்கும் நீர் துணைசெய்ய வருகின்றீர்" என்று குறிப்பிடுகின்றார். நாம் நம்முடைய வாழ்க்கையில் நேர்மையைக் கடைப்பிடிக்கின்றோமா?, நேரிய வழியில் நடக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இன்றைக்கு மனிதர்கள் பணத்திற்கும், பதவிக்கும், சொத்து சுகங்களுக்கும் ஆசைப்பட்டு நேர்மை தவறி நடக்கின்றார்கள்.  இன்னும் சொல்லப்போனால் நேர்மையாக இருந்தால் எங்கே நம்மை பிழைக்கத் தெரியாதவர்கள் என்று பட்டம் கட்டிவிடுவார்களோ அல்லது நேர்மையாக வாழ்வதனால் பிரச்சனைகளைச் சந்தித்தாகவேண்டுமோ எனப் பயந்து, மனசாட்சியை அடகு வைத்து தங்களுடைய மனம்போன போக்கில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இத்தகைய வாழ்க்கை ஓர் உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கையாக அமைந்துவிடாது. "நேர்மை தவறிப் பணக்காரனாக இருப்பதைவிட நேர்மையோடு ஏழையாக இருப்பது மேலானது" என்பார் சிலோ என்ற அறிஞர். ஆகையால், நாம் எத்தகைய சூழ்நிலையிலும் ஏன், நம்முடைய உயிரை இழக்கவேண்டிய சூழ்நிலையிலும் நேர்மையினின்று வழுவாமல் வாழ்வோம்.

அப்போதுதான் பொறுப்பேற்ற ஒரு காவல்துறை அதிகாரி போக்குவரத்து நெருக்கடி (Traffic) மிகுந்த ஒரு பிரதான சாலையில் நின்றுகொண்டு அந்த சாலையில் போகின்ற, வருகின்ற வாகனங்களை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு நான்குசக்கர வாகனமானது போக்குவரத்து விதிமுறைகளை எல்லாம் மீறி வேகமாகச் சென்றது. இதைப் பார்த்த காவல்துறை அதிகாரி, அந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி, போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். உடனே அந்த வாகனத்தை ஒட்டிக்கொண்டு வந்த மனிதர், "நான் யாரென்று தெரியுமா?, நான் பக்கத்து ஊரில் இருக்கும் காவல்நிலையத்தின்  மேலதிகாரி, என்மீதே நீ அபராதம் விதிக்கிறாயா?, ஒருவேளை நீ மட்டும் எனக்குக் கீழ் பணிசெய்யும் நிலை ஏற்பட்டால், அப்போது என்ன ஆகும்? என்று யோசித்துப் பார்" என்றார். அதற்கு அந்த புதிய காவல்துறை அதிகாரி மிகவும் சாதாரணமாக, "ஒருவேளை நான் உங்களுக்குக் கீழ் வேலைபார்க்கும் நிலை ஏற்பட்டால், அப்போது நீங்கள் "ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியை உங்களோடு வைத்திருக்கிறீர்கள் என்று பெருமைப்படுவீர்கள்" என்றார்.

நாம் எந்த சூழ்நிலையிலும் நேர்மை தவறி நடக்கக்கூடாது என்பதை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகிறது.  ஆகவே நாம் இறைவாக்கினர் ஆமோஸ் சொல்வதுபோல் நமது வாழ்வால் நேர்மையை வற்றாத ஆறாக பாய்ந்து ஓடச் செய்வோம் ( 5: 24).

அடுத்ததாக மானிடமகனது வருகைக்கு நாம் செய்யவேண்டியது: இறைவனின் வழிகளைக் கருத்தில்கொண்டு வாழ்வதாகும் (எசாயா 64:5). இறைவனின் வழிகளில் நடக்கவேண்டுமென்றால் அவரது வழிகள் எத்தகையது என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். திருப்பாடல் 77:13 ல் வாசிக்கின்றோம், "கடவுளே, உமது வழி தூய்மையானது" என்று. ஆகையால் நாம் தூய வழியில், தூய வாழ்வு வாழ்கின்றபோது நாம் இறைவனின் வழியில் நடக்கின்றோம் என்று அர்த்தமாகும்.

இன்றைக்கு நாம் கறைபடியாத, தூய, மாசற்ற வாழ்க்கை வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பலநேரங்களில் நாம் நம்முடைய கைகளையும், மனத்தையும் பாவத்தால் கறைபடுத்திக்கொண்டிருக்கிறோம். இத்தகைய வாழ்க்கை இறைவனுக்கு உகந்த வாழ்க்கையாகாது என நாம் புரிந்துகொள்ளவேண்டும். திருப்பாடல் 24: 4,5 ல் வாசிக்கின்றோம், "கறைபடாத கைகளும், மாசற்ற மனமும் உடையவர்; பொய் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர்; வஞ்சக நெஞ்சத்தோடு ஆணையிட்டுக் கூறாதவர் இவரே ஆண்டவரிடம் ஆசிபெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார், அவரே ஆண்டவரின் மலையில், அவரது திருத்தலத்தில் நிற்கத் தகுதியுடைவர்" என்று படிக்கின்றோம். ஆகையால் நாம் தூய வாழ்க்கை வாழ்கின்றபோது இறைவன் அளிக்கும் உன்னத வாழ்வை, மீட்பை பெற்றுக்கொள்வோம் என்பது உறுதி.

இலக்கியத்திற்காக 1913 ஆம் ஆண்டு நோபல் பரிசு வாங்கியவர் நம்முடைய இந்திய நாட்டைச் சேர்ந்த ரவிந்தரநாத் தாகூர். ஒருமுறை அவரைச் சந்திக்க புனிதமான பெரியவர் ஒருவர் வந்தார். அவர் தாகூரோடு நீண்ட நேரம் கடவுள் தொடர்பான காரியங்களைக் குறித்துக் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அவர் தாகூரிடமிருந்து விடைபெற்றுச் சென்றார். அப்போது தாகூர் அந்த பெரியவரின் காலடிகளைக் கவனித்தபோது கடவுளது காலடிகளைப் போன்று இருப்பதை உணர்ந்தார். இதனை அவர் தன்னுடைய நாட்குறிப்பேட்டில் "இன்று நான் கடவுளின் காலடிகளைக் கண்டேன்" என்று குறித்து வைத்திருக்கிறார்.

ஆம், நாம் தூய வாழ்க்கை வாழ்கின்றபோது கடவுளைப் போன்றவர்களாக மாறுகிறோம் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

ஆகவே, ஆண்டவரின் /மானிடமகனின் வருகைக்காக நம்மையே நாம் தயாரிக்கும் இந்த வேளையில், அவருடைய வருகை எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்ற முழு கவனத்தோடு, விழிப்போடு வாழ்வோம். அதேநேரத்தில் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நேர்மையையும், தூய்மையையும் கடைப்பிடித்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
=================================================================================
 நீரே எங்கள் தந்தை!
 திருவருகைக்காலம், முதல் ஞாயிறு
(நவம்பர் 29, 2020)
 எசாயா 63:16-17, 64:1, 3-8
 1 கொரிந்தியர் 1:3-9
 மாற்கு 13:33-37

'மேகங்கள் நடுவே வானவில் பார்க்கும்போது
என் இதயம் துள்ளிக் குதிக்கிறது
என் வாழ்க்கை தொடங்கியபோது அப்படித்தான் இருந்தது.
இப்போது நான் வளர்ச்சி பெற்ற மனிதனாக நிற்கிறேன்
எனக்கு வயது முதிர்ந்தாலும்
நான் இறந்து போனாலும்
எனக்கு அப்படித்தான் இருக்கும்.
குழந்தையே மனிதனின் தந்தை.
இயற்கையான பற்றுடன் என் நாள்கள்
ஒன்றோடொன்று இணைக்கப்படுவனவாக!'

(வில்லியம் வேர்ட்ஸ்வொர்த், 1802)
'குழந்தையே மனிதனின் தந்தை' ('The child is the father of the man') என்ற வேர்ட்ஸ்வொர்த்தின் சொல்லாடல் இன்று வரை பலருக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது. ஆனால், 'நான் குழந்தைப் பருவத்தில் எப்படி இருந்தேனோ அப்படியே வளர்ந்தபின்னும் இருப்பேன். நான் குழந்தைப் பருவத்தில் எப்படி வானவில்லை இரசித்தேனோ அப்படியே இறுதி வரை இரசிப்பேன்' என்ற மிக எளிமையான பொருளில்தான் வேர்ட்ஸ்வோர்த் இச்சொல்லாடலைப் பயன்படுத்துகின்றார்.
மனுக்குலத்தின் தந்தையாக வந்த குழந்தையின் பிறந்தநாளைக் கொண்டாட நாம் இன்றுமுதல் நம்மையே தயாரிக்கிறோம். ஆண்டவரின் இரண்டாம் வருகை பற்றியும், உலக முடிவு பற்றியுமே அச்சம் கொண்டிருக்கும் நாம், அவரின் முதல் வருகையை, அந்த வருகை கொண்டுவந்த மகிழ்ச்சியை மறந்துவிடுகிறோம்.
விழித்திருத்தல், பரபரப்பு, எதிர்பாராத அவருடைய வருகை, தயார்நிலை, தயார்நிலையில் இல்லையென்றால் தண்டனை என எந்நேரமும் நாற்காலியின் நுனியில் அமர்ந்திருப்பதை விடுத்து, கொஞ்சம் சாய்ந்தே அமர்ந்துகொள்வோம். பரபரப்பில் அல்ல. மாறாக, அமைதியான, ஒய்யாரமான, ஓய்வில்தான் அவருடைய வருகை இருக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 63) அழகான இரண்டு சொல்லாடல்கள் உள்ளன: (அ) 'ஆண்டவரே, நீரே எங்கள் தந்தை', மற்றும் (ஆ) 'நாங்கள் களிமண். நீர் எங்கள் குயவன்'.
எசாயா இறைவாக்கினர் நூலின் 63ஆம் அதிகாரம், 'குழுமப் புலம்பல்' என்றழைக்கப்படுகிறது. ஒட்டுமொத்த இஸ்ரயேலின் சார்பாகக் கடவுளிடம் பேசும் இறைவாக்கினர், கடவுளை, 'தந்தை' என அழைக்கிறார். 'தந்தை' என்ற சொல்லாடல் புதிய ஏற்பாட்டில் பரவலாகப் பயன்பட்டாலும், பழைய ஏற்பாட்டில், பெரும்பாலும் குலமுதுவர்களை (ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு) குறிக்கவே பயன்படுத்தப்பட்டது. ஆனால், இன்றைய முதல் வாசகப் பகுதியில், 'ஆண்டவரே தந்தை' என அழைக்கிறார் எசாயா. மேலும், 'ஆபிரகாம் எங்களை அறியார். இஸ்ரயேல் (யாக்கோபு) எங்களை ஏற்றுக்கொள்ளார்' என்று தங்களுடைய மூதாதையரின் தந்தையர்களின் இயலாமையைச் சுட்டிக்காட்டுகிறார்.

'ஆண்டவரே, நீரே எங்கள் தந்தை' என்னும் வார்த்தைகள், இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்காக ஏங்குவதைச் சுட்டிக்காட்டுகிறது. கடவுளோடு உறவு நெருக்கத்தில் இருக்கின்ற அவர்கள் தங்களது கடினமான வாழ்க்கைச் சூழலில், தங்கள் கையறுநிலையில் தங்கள் கடவுளிடம், குழந்தைகள் போலச் சரணாகதி அடைகின்றனர். மேலும், தங்களது பிறழ்வுபட்ட வாழ்க்கையையும் ஏற்றுக்கொள்கின்றனர்: 'நாங்கள் பாவம் செய்தோம் ... நாங்கள் அனைவரும் தீட்டுப்பட்டவரைப் போல உள்ளோம் ... எங்கள் நேரிய செயல்கள் எல்லாம் அழுக்கடைந்த ஆடைகள் போலாயின. நாங்கள் யாவரும் இலைபோல் கருகிப்போகின்றோம். எங்கள் தீச்செயல்கள் காற்றைப் போல எங்களை அடித்துச் சென்றன.' தீட்டு, அழுக்கான ஆடைகள், கருகிய இலைகள், காற்றில் அடித்துச் செல்லப்படும் இலைகள் போன்ற உருவகங்கள் (வார்த்தைப் படங்கள்) இஸ்ரயேலின் பரிதாபமான நிலையைக் காட்டுவதுடன், இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் அவர்களுக்கு ஒரு தந்தை தேவை என்பதையும் வலியுறுத்துகிறது. தங்களுடைய மண்ணகத் தந்தையர்களான அரசர்களும், இறைவாக்கினர்களும், குருக்களும் தங்களைக் கைவிட, விண்ணகத்தில் வாழும் என்றுமுள தந்தையை நோக்கிக் கைகளை உயர்த்துகின்றனர் இஸ்ரயேல் மக்கள்.

'களிமண் - குயவன்' உருவகம் இறைவாக்கினர் இலக்கியங்களில் நிறைய முறை பயன்படுத்தப்படுகிறது. ஆண்டவராகிய கடவுளே தன்னைக் குயவன் என்று முன்வைக்கின்றார். குயவன் கையில் உள்ள களிமண் போல இஸ்ரயேல் தன்னையே கடவுளிடம் கையளிக்கக் கூடாதா? என்று கடவுளும் ஏங்கியுள்ளார். அந்த ஏக்கத்தை இஸ்ரயேல் இங்கு நிறைவு செய்கிறது. 'நாங்கள் களிமண் - நீர் எங்கள் குயவன்' என்னும் வார்த்தைகள், இஸ்ரயேல் மக்களின் சரணாகதியைக் காட்டுவதோடு, 'இதோ நாங்கள் உம் கைகளில்! உம் விருப்பம் போல எங்களை வளைத்துக் கொள்ளும்!' என்று இறைவேண்டல் செய்வது போல உள்ளன.

மேலும், 'நீர் வானங்களைப் பிளந்து இறங்கி வர மாட்டீரோ?' என்ற இறைவாக்கினரின் வார்த்தைகள், கடவுளின் அவசரம் மற்றும் அவசியத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 'வானங்களைப் பிளந்து கடவுள் இறங்கி வந்த நிகழ்வு' ஏற்கெனவே சீனாய் மலையில் நடந்தேறியது. அங்கேதான் கடவுள் இஸ்ரயேல் மக்களிடம், 'நான் உங்கள் கடவுளாய் இருப்பேன். நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள்' என்று சொல்லி அவர்களோடு உடன்படிக்கை செய்துகொண்டார். தங்களுடைய சிலைவழிபாட்டால் தாங்கள் இழந்த அதே உணர்வை மீண்டும் பெற்றுக்கொள்ள மாட்டோமா என்ற ஏக்கமும் அழுகையும் எசாயாவின் வார்த்தைகளில் இருப்பதை நாம் அறிய முடிகிறது. இழந்து போன உறவுகளை அல்லது முறிந்து போன உறவுகளை எண்ணிப் பார்த்து, 'மீண்டும் நாம் சேர மாட்டோமா?' என்று கேள்வி எழுப்புவது நம் வாழ்வியல் அனுபவமும்கூட.
ஆக, தந்தையை விட்டுத் தூரம் போன மகன், தன் தந்தைக்காக ஏங்குவதோடு, தன் தந்தையின் கையில் தன்னையே சரணாகதியாக்குவதோடு, தன் தந்தை உடனடியாக வந்து தன்னை அள்ளிக்கொள்ள வேண்டும் என்று ஏங்குவதாக அமைகின்றது
இன்றைய முதல் வாசகம்.
இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 கொரி 1:3-9), புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தின் தொடக்கப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. கொரிந்து நகரத் திருஅவையில் நிலவிய பிரிவினை, பரத்தைமை, சிலைவழிபாடு போன்ற பிரச்சினைகள் பவுலின் கண்களில் விழுந்த தூசி போல அவருக்குக் கலக்கம் தந்தாலும், 'நீங்கள் எல்லா வகையிலும் செல்வரானீர்கள்!' 'உங்களுக்கு அருள்கொடை எதிலும் குறையே இல்லை!' என்று வாயார வாழ்த்துகிறார். ஏனெனில், பவுலைப் பொருத்துவரையில் இறையருள் ஒன்றே அனைத்துக்கும் அடிப்படையானது. கொரிந்து திருஅவையில் பிரிவுகளுக்கும் சண்டை சச்சரவுகளும் இருந்தாலும், இறையருள் அங்கே ஒருபோதும் குறைவுபடுவதில்லை.
இறையருள் குழுமத்தை இரண்டு நிலைகளில் உறுதிப்படுத்துகிறது: (அ) குழுமம் கிறிஸ்துவுக்குச் சான்று பகர்கிறது, (ஆ) எந்தவித குறைச்சொல்லுக்கும் குழுமம் ஆளாகாதவாறு கடவுள் இறுதி வரை அதை உறுதிப்படுத்துகின்றார்.
ஆக, குழுமம் என்ற குழந்தையை நிறைவு செய்து இறுதி வரை உறுதிப்படுத்துவது தந்தையாகிய கடவுளின் இறையருளே.

மாற்கு நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்டுள்ள வாசகம் (காண். மாற் 13:33-37) இயேசுவின் பாடுகள், மற்றும் இறப்புக்கு முன் வழங்கப்பட்ட சான்று வாக்கியம் போல அமைந்துள்ளது. 'கவனமாயிருங்கள், விழிப்பாய் இருங்கள், விழித்திருங்கள்' என்று தன் சீடர்களுக்கு அறிவுறுத்துகின்றார் இயேசு. இயேசுவின் இரண்டாம் வருகைக்கான தயார்நிலையை இது வலியுறுத்துவதாக அமைகிறது. இரண்டாம் வருகை எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்பது நற்செய்தியாளரின் புரிதலாக இருந்தது.

தயார்நிலையை ஓர் உருவகம் வழியாக எடுத்துரைக்கிறார்: நெடும் பயணம் செல்ல இருக்கும் ஒருவர். அவர் தன்னுடைய வேலைக்காரர்களைப் பொறுப்பாளகளாக்கி, அவர்களை காவல்காக்கச் செய்கின்றார். நெடும் பயணம் என்பது இயேசுவின் உயிர்ப்பு மற்றும் விண்ணேற்றம் அல்லது அவருடைய மறைந்த நிலையைக் குறிக்கிறது. தான் தன் சீடர்குழுவை விட்டுச் சென்றவுடன், அது தூங்கிப் போகலாம், அல்லது மந்த நிலையை அடையலாம் என்ற அச்சம் இயேசுவுக்கு இருந்ததால், 'விழிப்பாய் இருங்கள்' என அவர்களை எச்சரிக்கின்றார். ஏனெனில், சீடர்களின் பொறுப்புணர்வு பெரிது.

ஆக, வேலைக்காரர் அல்லது பணியாளர் என்ற நிலையில் இருந்த சீடர்கள், வீட்டின் பொறுப்பாளர் நிலைக்கு உயர்த்தப்படுவதுடன், வீடு முழுவதையும் கவனித்துக்கொள்ளும் கடமையையும் பெறுகிறார்கள்.

இன்றைய முதல் வாசகத்தில், தங்கள் ஆண்டவரே தங்களுடைய தந்தையாக இருந்து தங்களை நிறைவுசெய்ய முடியும் என எசாயா ஆண்டவராகிய கடவுளிடம் சரணாகதி அடைகின்றார்.

இரண்டாம் வாசகத்தில், கிறிஸ்துவின் தந்தையாகிய கடவுள் தந்த இறையருள் அனைத்தையும் அனைவரையும் உறுதிப்படுத்துகிறது என்கிறார் பவுல்.
நற்செய்தி வாசகத்தில், பிள்ளைக்குரிய வாஞ்சையுடனும் உரிமையுடனும் சீடர்கள் தங்கள் தந்தையாகிய தலைவருக்காகக் காத்திருக்கின்றனர்.

இவ்வாறாக,
'ஆண்டவரே, நீரே எங்கள் தந்தை' என அழைத்து, 'உம் கைகளில் களிமண் நாங்கள்' என்று சரணாகதி அடைவதே இந்த ஞாயிற்றின் செய்தியாக இருக்கிறது.
கிறிஸ்து பிறப்பு நிகழ்வில் நாம் சந்திக்கும் கதைமாந்தர்கள் அனைவரும் - மரியா, யோசேப்பு, இடையர்கள், ஞானியர், எலிசபெத்து, செக்கரியா, சிமியோன், அன்னா - தங்களையே இறைவனின் கைகளில் சரணாகதி ஆக்கினர்.
ஏனெனில், வரவிருக்கும் குழந்தையே தங்கள் அனைவரின் தந்தை என அவர்கள் அறிந்திருந்தனர்.

இன்றைய வழிபாட்டின் வாழ்வியல் சவால் என்ன?

'நீரே என் தந்தை' என்று பெத்லகேம் குழந்தையிடம் சரணாகதி அடைவது.
இதற்குத் தடையாக இருப்பவை எவை?

நம் தீட்டுகள், பாவங்கள், இலைகள் போலக் கருகிய நம் வாழ்க்கை, காற்றில் அடித்துச் செல்லப்படும் நம் நிலைப்பாடு போன்றவை. இவற்றை நாம் ஏற்றுக்கொண்டாலே போதும் அவர் வானத்தைக் கிழித்துக் கொண்டு கீழே இறங்கி வருவார். வருபவர் நம்மை அள்ளி எடுத்து, தான் விரும்பியதுபோலச் செய்துகொள்வார். நம்மை இறுதிவரை உறுதிப்படுத்துவார். பணியாளர்களாகிய நம்மைப் பொறுப்பாளர்கள் ஆக்குவார்.
பெத்லகேம் குழந்தையை நாம் கொண்டாடுவதற்கு முன், அந்தக் குழந்தையே நம் தந்தை என அறிதல் நலம்.

'உமது வலக்கை நட்டு வைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்!' (காண். திபா 80) என்பது நம் இறைவேண்டலாகட்டும்.
திருவருகைக்கால செபங்களும் வாழ்த்துகளும்!

(அருள்திரு: இயேசு கருணாநிதி)
மதுரை உயர்மறைமாவட்டம்
இணைப் பேராசிரியர்

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!