Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                       year B  
                                             பொதுக்காலம் 11ம் - ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
 வெள்ளப் பெருக்கிலிருந்து மீட்கப்பட்ட நோவாவுடன் கடவுள் செய்த உடன்படிக்கை.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 9: 8-15

கடவுள் நோவாவிடமும் அவருடனிருந்த அவர் புதல்வரிடமும் கூறியது: "இதோ! நான் உங்களோடும் உங்களுக்குப் பின்வரும் உங்கள் வழிமரபினரோடும் பேழையிலிருந்து வெளிவந்து உங்களோடிருக்கும் உயிரினங்கள், பறவைகள், கால்நடைகள், நிலத்தில் உங்களுடன் உயிர்வாழும் விலங்கினங்கள் எல்லாவற்றோடும், மண்ணுலகில் உள்ள எல்லா உயிர்களோடும் என் உடன்படிக்கையை நிலைநாட்டுகிறேன்.

உங்களோடு என் உடன்படிக்கையை நிறுவுகிறேன்; சதையுள்ள எந்த உயிரும் வெள்ளப் பெருக்கால் மீண்டும் அழிக்கப்படாது. மண்ணுலகை அழிக்க இனி வெள்ளப் பெருக்கு வரவே வராது."

அப்பொழுது கடவுள், "எனக்கும் உங்களுக்கும் உங்களுடன் இருக்கும் உயிருள்ள எல்லாவற்றிற்குமிடையே தலைமுறைதோறும் என்றென்றும் இருக்கும்படி, நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளமாக, என் வில்லை மேகத்தின்மேல் வைக்கிறேன்.

எனக்கும் மண்ணுலகுக்கும் இடையே உடன்படிக்கையின் அடையாளமாக இது இருக்கட்டும். மண்ணுலகின்மேல் நான் மேகத்தை வருவிக்க, அதன்மேல் வில் தோன்றும்பொழுது, எனக்கும் உங்களுக்கும் சதையுள்ள உயிரினங்கள் எல்லாவற்றுக்கும் இடையே உள்ள என் உடன்படிக்கையை நான் நினைவுகூர்வேன். உயிர்கள் எல்லாவற்றையும் அழிப்பதற்குத் தண்ணீர் இனி ஒருபோதும் பெருவெள்ளமாக மாறாது" என்றார்.


- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
 
பதிலுரைப் பாடல்திபா: 25: 4-5ab. 6-7bc. 8-9 (பல்லவி: 10)
=================================================================================
பல்லவி: ஆண்டவரது உடன்படிக்கையைக் கடைப்பிடிப்போரின் பாதைகள் உண்மையானவை.

4 ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும். 5ab உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள். பல்லவி

6 ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும். ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே. 7bc உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். பல்லவி

8 ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். 9 எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
 இப்போது உங்களை மீட்கும் திருழுழுக்கிற்கு இந்த நீர் முன்னடையாளமாயிருக்கிறது.

திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 18-22

அன்பிற்குரியவர்களே, கிறிஸ்துவும் உங்கள் பாவங்களின் பொருட்டு ஒரே முறையாக இறந்தார். அவர் உங்களைக் கடவுளிடம் கொண்டு சேர்க்கவே இறந்தார். நீதியுள்ளவராகிய அவர் நீதியற்றவர்களுக்காக இறந்தார். மனித இயல்போடிருந்த அவர் இறந்தாரெனினும் ஆவிக்குரிய இயல்புடையவராய் உயிர் பெற்றெழுந்தார். அந்நிலையில் அவர் காவலில் இருந்த ஆவிகளிடம் போய்த் தம் செய்தியை அறிவித்தார்.

நோவா பேழையைச் செய்துகொண்டிருந்த நாள்களில், பொறுமையோடு காத்துக்கொண்டிருந்த கடவுளை அந்த ஆவிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. சிலர், அதாவது எட்டுப் பேர் மட்டும் அந்தப் பேழையில், தண்ணீர் வழியாகக் காப்பாற்றப்பட்டனர். அந்தத் தண்ணீரானது திருமுழுக்கிற்கு முன்னடையாளம். இத்திருமுழுக்கு உடலின் அழுக்கைப் போக்கும் செயல் அல்ல; அது குற்றமற்ற மனச்சான்றுடன் கடவுளுக்குத் தரும் வாக்குறுதியாகும்; இது இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் வழியாக இப்போது உங்களுக்கு மீட்பு அளிக்கிறது.

அவர் வானதூதர்களையும் அதிகாரங்களையும் வல்லமைகளையும் தமக்குப் பணிய வைத்து, விண்ணுலகம் சென்று, கடவுளின் வலப்பக்கத்தில் இருக்கிறார்.


- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 4: 4b
அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்.அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இயேசு சாத்தானால் சோதிக்கப்பட்டார்; வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர்.

+மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 12-15

அக்காலத்தில் தூய ஆவியால் இயேசு பாலைநிலத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார். பாலைநிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்; அங்குக் காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர்.

யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக்கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். "காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்"" என்று அவர் கூறினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
சோதனைகளை வெல்வோம்!

உரோமை சாம்ராஜ்யம் உலகிற்குத் தந்த மிகச் சிறந்த பேச்சாளர் மார்க் ஆண்டனி என்பவர்.

அவர் ஒரு மிகச் சிறந்த பேச்சாளர் மட்டும் கிடையாது, புத்திக் கூர்மையானவர், பெரிய போர்வீரர், எதற்கும் அஞ்சாதவர், உறுதியானவர். இப்படி பல்வேறு திறமைகள் வாய்ப்பட்ட மார்க் ஆண்டனி மட்டும் நினைத்திருந்தால் உலகில் தோன்றிய பேரரசர்களில் ஒருவராகத் திகழ்திருக்க முடியும். ஆனால், அவரால் அப்படித் திகழ முடியவில்லை. காரணம் அவரிடம் இருந்த பலவீனம், சோதனைக்கு எளிதாய் விழுந்துவிடக்கூடிய தன்மை.

ஒருமுறை அவருடைய உதவியாளர் அவரைப் பார்த்துச் சொன்னார், (Oh, Marcus, oh colossal Child! Able to conquer the world, but unable to resist a temptation) உலகை வெல்ல முடிந்த உன்னால், உனக்கு வந்த சோதனையை வெல்ல முடியவில்லையே" என்று. மார்க் ஆண்டனி மட்டும் தனக்கு வந்த சோதனைகளை வெற்றி கொண்டிருந்தார் என்றால், உலக வரலாற்றில் பெரிய பேரரசரகத் திகழ்ந்திருக்கலாம், சோதனைகளை வெல்ல முடியாததால், அவர் ஒரு சதாரண மனிதரைப் போன்றே மாண்டு போனார்.

தவக்காலத்தின் முதல் ஞாயிறான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் சோதனைகளை வெல்வோம் என்னும் சிந்தனையை நமக்கு வழங்குகின்றன. நாம் எப்படி நம்முடைய வாழ்வில் வரக்கூடிய சோதனைகளை வென்று, இறைவனின் அன்பு மக்களாக வாழலாம் என்று இறைவார்த்தையின் ஒளியிலே சிந்தித்துப் பார்ப்போம்.

மனிதர்களாகிய நாம் வலுக்குறைந்தவர்கள்; பலவீனமானவர்களாக இருந்தாலும், நமக்கு வருகின்ற சோதனைகளை வெற்றிகொள்கின்ற ஆற்றல் இல்லாதவர்கள் இல்லை. யாராரெல்லாம் தங்களுடைய வாழ்க்கையில் வருகின்ற சோதனைகளை வெற்றி கொள்பவர்களாக இருக்கின்றார்களோ அவர்கள் எல்லாம் வரலாற்றில் உயர்ந்தவர்களாகவும், எல்லாராலும் போற்றப்படக்கூட மக்களாகவும் இருக்கின்றார்கள், அதே நேரத்தில் யாராரெல்லாம் தங்களுடைய வாழ்க்கையில் வருகின்ற சோதனைகளை வெற்றிகொள்ள நெஞ்சுரம் இல்லாமல் இருக்கின்றார்களோ அவர்கள் எல்லாம் தாழ்ந்து போகின்றார்கள் என்பது உண்மையாக இருக்கின்றது. தங்களுடைய வாழ்க்கையில் வந்த சோதனைகளை வெற்றிகொண்ட பல மனிதர்கள் இருந்தாலும், அவர்களில் எல்லாம் மிக மேலான இடத்தில் இருப்பவர் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துதான். ஆண்டவர் இயேசு தனக்கு வந்த சோதனைகளை எப்படி வெற்றிகொண்டார் என்றும், அவர் வழியில் நடக்கும் நாம் எப்படி நமக்கு வரும் சோதனைகளை வெற்றிகொள்ளப் போகின்றோம் என்றும் இப்போது பார்ப்போம்.

மாற்கு நற்செய்தியில் இயேசு திருமுழுக்கு பெற்றபின், தூய ஆவியால் பாலை நிலத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றார். இங்கே ஓர் உண்மையை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். அது என்னவென்றால், இயேசு திருமுழுக்குப் பெற்றபோது எந்த ஆவி இயேசுவின் மீது இறங்கி வந்ததோ, அதே ஆவியால்தான் இயேசு பாலை நிலத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றார், பாலை நிலத்தில் இயேசு நாற்பது நாட்கள் நோன்பிருக்கின்றார், சாத்தானால் சோதிக்கப்படுகின்றார். ஆகையால் சோதனை என்பது எல்லாருக்கும் வரலாம். அந்த சோதனையை நாம் எவ்வாறு கைக்கொள்கின்றோம் என்பதைப் பொறுத்துத்தான் நம்முடைய வாழ்வும் தாழ்வும் அடங்கி இருக்கின்றது என்பது நாம் உணர்ந்துகொள்ளவேண்டிய முதன்மையான செய்தியாக இருக்கின்றது.

ஆண்டவர் இயேசுவுக்கு கல்லை அப்பமாக மாற்றுவதற்கான சோதனையும், சாத்தானை வணங்க வேண்டிய சோதனையும், எருசலேம் திருக்கோவிலின் மேலிருந்து கீழ குதிக்கக்கூடிய சோதனையும் இன்னும் பணிவாழ்வில் பல்வேறு விதமான சோதனைகளும் வந்தன. அந்த சோதனைகளில் ஆண்டவர் இயேசு விழுந்துவிடவில்லை. அவற்றையெல்லாம் அவர் இறைவனின் துணியோடு வெற்றிகொண்டார் என்பது உண்மையாக இருக்கின்றது. நாம் நமக்கு வருகின்ற சோதனைகளை எப்படி கையாளுகின்றோம் என்பதுதான் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

இணைச்சட்ட நூல் 30:15 ல் வாசிப்பதுபோல நமக்கு முன்பாக வாழ்வும், சாவும், நன்மையையும் தீமையும் வைக்கப்பட்டுள்ளது. நாம் வாழ்வின் வழியில் அதாவது இறைவழியில் நடந்தோம் என்றால் நமக்கு ஆசிர், அதே நேரத்தில் சாவின் வழியில் நடந்தோம் என்றால் நமக்கு அழிவு என்பதே உண்மை. நாம் செல்லும் வழி வாழ்வின் வழியா? சாவின் வழியா அல்லது வாழ்வில் வருகின்ற சோதனைகளுக்கு அடிபணிந்து செல்லக்கூடிய வழியா, சோதனைகளைத் துணிவோடு எதிர்கொண்டு செல்லும் வழியாக என்று நாம் சிந்தித்துப் பார்த்துக்கொள்ளவேண்டும்.

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் கார்பீல்ட் (James Garfield) அவர்களுடைய வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்வு.

ஜேம்ஸ் கார்பீல்டுக்கு பல முறைகேடான வழிகளில் பணம் சேகரிப்பதற்கான சூழல்கள் எல்லாம் அமைந்தன. ஆனால் அவர் அப்படியெல்லாம் பணம் சேகரிக்கவில்லை. அவருக்கு மிக நெருக்கமான நண்பர் ஒருவரிடம், "நீங்கள் இப்படி குறுக்கு வழியில் பணத்தை அடித்தால் அது யாருக்குத் தெரியப் போகின்றது?" என்று கேட்டார். அதற்கு அவர், "யாருக்கும் தெரியாதுதான். ஆனால் என்னுடைய மனசாட்சிக்குத் தெரியும். நான் முறைகேடான வழியில் பணம் சேகரித்திருக்கின்றேன். அது என்னை ஒவ்வொருநாளும் தூங்கவிடாமல் செய்துவிடும்" என்று மிக பொறுமையாகக் கூறினார்.

ஜேம்ஸ் கார்பீல்டுக்கு பணம் சேகரிப்பதற்கான பல்வேறு வாய்ப்புகள், சூழல்கள் அமைந்தாலும், அந்த சோதனைகளில் எல்லாம் விழாமல், மன உறுதியாக இருந்தது நமது ஆழமான சிந்தனைக்குரியதாக இருக்கின்றது.

நம்முடைய வாழ்க்கையில் பல்வேறு விதங்களில் சோதனைகள் வரலாம். அச்சோதனைகளை நாம் மூன்று தலைப்புகளுக்குள் அடக்கி விடலாம். முதலாவது விதமான சோதனை உணவு தொடர்பானது. மனிதர்களில் நிறையப் பேர் உணவைப் பார்த்தவுடன், எல்லாவற்றையும் மறந்துபோய் சோதனையில் விழக்கூடியவர்களாக இருக்கின்றார்கள் என்பது வேடிக்கையான உண்மை. ஆதிப் பெற்றோர் விளக்கப்பட்ட மரத்தின் கனியை உணவை உண்டு சோதனையில் விழுந்து பாவம் செய்தார்கள். ஈசாக்கின் புதல்வர்களில் மூத்தவனாகிய ஏசா ஒரு கலயம் கஞ்சிக்கு ஆசைப்பட்டு சோதனையில் விழுந்துவிடுகின்றான். இது போன்று பல்வேறு மனிதர்கள் உணவின்மீது ஆசைப்பட்டு, சோதனையில் விழுந்து பாவம் செய்கின்றவர்களாக இருக்கின்றார்.

அடுத்ததாக வரக்கூடிய சோதனை பணம்/ பொருள் தொடர்பானது. இயேசுவின் சீடர்களில் ஒருவனாகிய யூதாஸ் 30 வெள்ளிக்காசுக்கு ஆசைப்பட்டு, சோதனையில் விழுந்தது மிகவும் துரதிஸ்டவசமானது, யூதாசைப் போன்று பலர் பணத்தைப் பார்த்தவுடன், அதனை எப்படியாவது அபகரிக்கவேண்டும் என்ற சோதனையில் விழுந்து அழிந்துபோகின்றார்கள். உண்மைச் செல்வமான இயேசுவை, இறைவனை விட்டுவிட்டு, போலியான செல்வமாகிய பணத்திற்காக வாழ்வைத் தொலைப்பது மிகவும் வேடிக்கையானது.

மூன்றாவது வரக்கூடிய சோதனை அதிகாரம், அந்தஸ்து தொடர்பானது. இயேசுவின் சீடர்கள் தங்களுக்குள் யார் பெரியவர், யார் முதன்மையான இடத்தை வகிப்பது என்று விவாதித்தது கூட ஒருவிதமான சோதனைதான். இன்றைக்கு நிறையப் பேர் தங்களுக்கு அதிகாரம் கிடைக்கவேண்டும், அந்தஸ்து, பதவி கிடைக்கவேண்டும் என்பதற்காக சோதனையில் விழுந்து அழிந்து போவதை நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம். இத்தகைய சோதனைகளை எல்லாம் துணிவோடு எதிர்கொண்டு வெற்றிகொள்பவர்தான் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவார் என்பது உறுதி.

ஆண்டவர் இயேசுவோ மேலே சொல்லப்பட்ட மூன்று விதமான சோதனைகளையும் துணிவோடு எதிர்கொண்டு வெற்றிகொண்டார் என்பது நாம் நம்முடைய கவனத்தில் கொள்ளவேண்டியதொன்றாக இருக்கின்றது. இயேசுவைப் போன்று இறைவனின் துணைகொண்டு நம்முடைய வாழ்கையைக் அமைத்துக்கொண்டால் எப்படிப்பட்ட சோதனையையும் எளிதாய் வெற்றிகொள்ளலாம் என்பது உறுதி.

இன்றைய நற்செய்தியின் இறுதியில் ஆண்டவர் இயேசு காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர் என்று வாசிக்கின்றோம். இதற்கு விவிலிய அறிஞர்கள் இரண்டு விதமான விளக்கங்களைத் தருகின்றார்கள். ஒன்று இயேசு காட்டு விலங்குகளிடையே இருந்தார் என்பது இயேசு மனிதருக்கும் உயிரினங்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்த வந்தார் என்று சொல்வார்கள். இறைவாக்கினர் ஒசியா (2: 18), இறைவாக்கினர் எசாயா ( 11: 6-9) போன்றோர் மெசியா வருகின்றபோது மனிதருக்கும் உயிரனங்களுக்கும் இடையே எப்படிப்பட்ட அற்புதமான உறவு நிகழ்வும் என்பதை மிக அருமையாக எடுத்துரைக்கின்றார்கள். இயேசு காட்டு விலங்குகளோடு இறந்ததை அப்படித் தான் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

இரண்டாவதாக இயேசு பாலைநிலத்தில் இருந்தபோது வானதூதர்கள் அவருக்குப் பணிவிடை செய்தார்கள் என்பதற்கு விவிலிய அறிஞர்கள் கூறுகின்ற செய்தி, இறைவன் நம்முடைய துன்ப நேரத்தில் நம்மைக் கைவிட்டு விடாமல், நமக்கு உதவி செய்ய வருவார் என்று விளக்கம் தருவார்கள். ஆகையால், நம்முடைய சோதனை நேரத்தில் நாம் தனித்திருக்கின்றோம் என்று எண்ணாமல், இறைவனை நம்முடைய துணைக்கு அழைத்தால், சோதனைகளை எளிதாய் வெற்றி கொண்டு விடலாம் என்பதுதான் நிஜம்.

ஓர் ஊரில் இசைக் கச்சேரி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. இசைக் கச்சரியை நிகழ்த்துவதற்காக பாடகர்கள், இசைக் கலைஞர்கள் எல்லாம் அந்த ஊருக்கு வந்திருந்தார்கள்.

நிகழ்ச்சி தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக, ஆர்மோனியம் வாசிக்ககூடியவர், இசைக் கச்சேரியைத் தொகுத்து வழங்கும் இசைமேதையிடம் சென்று, "ஐயா! திடிரென்று ஆர்மோனியத்தில் இருக்கின்ற E flat கட்டை சரியாக இயங்கமாட்டேன் என்கின்றது" என்றார். அதற்கு அந்த தொகுப்பாளர் - இசைமேதை, "E flat கட்டையில் பாடல் வராதவாறு நான் பார்த்துக்கொள்கின்றேன், நீங்கள் கவலைப்படாமல், இங்கே பாடப்படப்படும் பாடல்களுக்கு ஆர்மோனியத்தை வாசியுங்கள்" என்றார்.

இசைக் கச்சேரி தொடங்கியது. அந்தக் கச்சேரி முழுவதும் ஒரு பாடல் கூட E flat கட்டையில் வராதவாறு இசைமேதையும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான அவர் சிறப்பாக இசைக் கச்சேரியை வழங்கினார். இதைப் பார்த்து ஆர்மோனியம் வாசிப்பவர் மிரண்டு போனார். எப்படி இவரால் இந்த இக்கட்டான சூழ்நிலையை இவ்வளவு அற்புதமாக மாற்ற முடிந்தது என்று.

மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் இசைமேதையை போன்று, கடவுளுக்கும் நம்முடைய கஷ்டங்களும் துன்பங்களும் தெரியும். நம்பிக்கையோடு நாம் அவரைத் துணைக்கு அழைத்தால், அல்லது அவருடைய உதவியை வேண்டினால் நம்முடைய துன்பங்களை இன்பமாகவும், சோதனைகளைச் சாதனைகளாக மாற்றுவார் என்பது உண்மை.

எனவே, வாழ்வில் வரும் சோதனைகளில் வீழ்ந்து விடாமல், இறைவனின் துணைகொண்டு துணிவோடு எதிர்கொள்வோம். இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
ஓவ்வொன்றிற்கும் ஒரு காலம் உண்டு. " பிறப்புக்கு ஒரு காலம் உண்டு, இறப்புக்கு ஒரு காலம் உண்டு. அழுகைக்கு ஒரு காலம் உண்டு, சிரிப்புக்கு ஒரு காலம் உண்டு, போருக்க ஒரு காலம் உண்டு, அமைதிக்க ஒரு காலம் உண்டு" என (சபைஉரை.03:01-11 சபை உரையாளர் உரைக்கின்றார். அதுபோல, இறைவன் நம் மனமாற்றத்திற்கு காலத்தை கொடுக்கின்றார். இது இரக்கத்தின் காலம், மன்னிப்பின் காலம், அதை பயன்படுத்தி நாம் மனமாற்றத்தை இந்தக்காலங்களில் பெறுவோம்.

இறைமகன் தூய ஆவியால் பாலை நிலத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார், பாலை நிலத்தில் நாற்பது நாள் இருந்தார். சாத்தனால் சோதிக்கப்பட்டார், காட்டு விலங்குகளிடையே இருந்தார்" என இன்றைய நற்செய்தி கூறுகிறது. புhலைநில வாழ்வு, சாத்தான் சோதனை, காட்டு விலங்குகள் என அந்த வாழ்வை நினைக்கவே கடினமான ஒன்று. பாலைநிலத்தில் இஸ்ரயேல் மக்களை நாற்பது ஆண்டுகள் வழிநடத்திய இறைவன், இன்று தன் ஒரே மகனை நாற்பது நாட்கள் பாலைநில வாழ்விற்கு உட்படுத்துகிறார். உண்ணவோ, குடிக்கவோ, தங்கிடவோ, உடனிருக்க யாருமில்லா நிலை என எதுவுமே இல்லா நிலை. பல துன்பங்கள், சோதனைகள். இன்னல்கள் கொண்ட வாழ்வு. அத்தகைய நிலையில்தான் நாம் இறையன்பை, நம்மை உணர முடியும்.

சோதனைகள் நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் வந்து கொண்டேதானிருக்கும். அந்தச் சோதனைகளில் சாத்தான் நம்மை பலவீனப்படுத்தி பாவத்தில் விழவைக்கும். ஏனென்றால், "உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்காலமெனக் கர்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிகிறது" (1பேதுரு,05:08). ஆகவே, நாம் அலகையின் சோதனையில் வீழ்ந்திடாது விழிப்புணர்வுடனிருக்கும்போதுதான் பாவத்திலிருந்து தப்பிக்க முடியும். அன்று, ஆதாம், ஏவாளை பாவத்தில் விழச்செய்த அலகை இன்றும் அதன் வேலையை தொடர்ந்து கொண்டேதானிருக்கிறது. ஒருவன் சோதனைக்குள்ளாவது அவனது சொந்த இச்சையாலேதான். தாவீது தன் வாழ்வில் சோதனைக்குள்ளாகி பாவத்தில் வீழ்ந்தது, அவரது சொந்த இச்சையாலேதான். யூதாஸ் வாழ்விலும் அலகை பணத்தின் வழியாக வந்து அவனை சோதனைக்குள்ளாக்கியது. அலகை விரித்த வலையில் அவன் விழுந்ததுபோலவே நாமும் இன்று அலகையின் பலவகை சோதனையில் விழுந்து விடுகின்றோம். இறைவன் யாரையும் சோதிப்பதில்லை, ஆனால், சோதிக்க அனுமதிக்கிறார்(யோபு.02:05,06). அதில் நம் மனஉறுதி புடமிடப்படுகிறது. யோபு எப்படி அலகையின் எல்லாச் சோதனைகளிலும் பாவத்தில் வீழ்ந்திடாமல் மனஉறுதியோடிருந்தாரோ, அத்ததைகய மனஉறுதியுடன், விழிப்பணர்வுடன் இருந்து, பாவத்தில் வீழ்ந்திடாமலிருப்போம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
மனம் மாறும், மாற்றும் கடவுள்

தொடக்கநூல் 9:8-15
1 பேதுரு 3:18-22
மாற்கு 1:12-15

"மனம்தான் எல்லாம்" என்று புத்தமதமும், "உங்கள் மனத்தை விழித்திருந்து காத்துக்கொள்ளுங்கள்; ஏனெனில், அங்கிருந்துதான் உங்கள் எண்ணங்கள் ஊற்றெடுக்கின்றன" என்று கிறிஸ்தவமும் சொல்கிறது. "மனமாற்றம்" என்பது நாம் அதிகம் கேட்டு அர்த்தம் இழந்த சில வார்த்தைகளில் ஒன்று.

இன்று காலை 8:30 மணிக்கு நாகமலை செல்வதற்காக ஓலா டேக்ஸி பதிவு செய்கிறேன் என வைத்துக்கொள்வோம். பதிவு செய்துவிட்டு முகம் கழுவ வேகமாக செல்கிறேன். கழுவிக்கொண்டிருக்கும்போதே, "நாளை போகலாம்!" என மனம் சொல்கிறது. வேகமாக ஓடி வந்து ஈரக்கைகளுடன் ஃபோனில் பின் கோடு இட்டு, ஓலா ஆப்பைத் திறந்து "கேன்சஸ் ரைட்" என கொடுக்கிறேன். உடனடியாக அது ஐந்து காரணங்களைப் பட்டியலிடுகிறது. அதில் இரண்டாவது காரணமாக "ஐ சேன்ஜ்ட் மை மைன்ட் - நான் எனது மனதை மாற்றிக்கொண்டேன்" என்ற சொல்கிறது. அதற்கு நேர் புள்ளி வைத்து "சப்மிட்" கொடுத்துவிட்டு முகம் துடைக்க டவல் தேடுகிறேன். 8:30க்கு நாகமாலை செல்ல வேண்டும் என நினைத்த மனம் 8:32க்கு மாறிவிடுகிறது. இது ஒரு வகையான மனமாற்றம்.

என் நண்பர் என்னிடம் கடன் வாங்குகிறார். ஐம்பதாயிரம் வாங்குகின்றார். "எப்போது கொடுப்பார்?" என நான் காத்துக்கொண்டிருக்க, "உன்னிடம் வாங்கிய பணத்தை அன்றே கொடுத்துவிட்டேன்" என்கிறார். பணமா? நட்பா? என்ற கேள்வியில், "இனிமேல் இவருக்கு பணம் கொடுக்கக்கூடாது" என்றும், "இனிமேல் இவரிடம் நட்பு பாராட்டக்கூடாது" என்றும் முடிவு செய்கிறேன். இவரின் அம்மாவுக்கு ஒருநாள் உடல்நலம் சரியில்லாமல் போய்விடுகிறது. அவசரமாக பணம் தேவைப்படுகிறது. அவர் கேட்காமலேயே நான் போய் பண உதவி செய்து, "உன்னிடம் பணம் இருக்கும் போது கொடு" என்று சொல்லிவிட்டுவருகின்றேன். இது இன்னொரு வகையான மனமாற்றம்.

இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் முதல் வாசகத்தில், "இனி உலகை அழிக்கமாட்டேன்" என கடவுள் மனம் மாறுகிறார். நற்செய்தி வாசகத்தில் "மனம் மாறுங்கள்" என்று இயேசு அழைப்பு விடுக்கின்றார். மேற்காணும் இரண்டு மனம் மாற்றங்கள்போல்தான் இந்த மனம் மாற்றமா? அல்லது இதன் பொருள் வேறா?

மனம் மாறுதல் என்பது ஒரு பெரிய போராட்டத்தின் கனியாக இருப்பதை முதல் மற்றும் மூன்றாம் வாசகங்கள் குறிப்பிடுகின்றன. "மனம் மாற்றம்" என்பது விவிலியத்தைப் பொறுத்தமட்டில் மனத்தை இறைவனை நோக்கி மாற்றுவது. அதாவது, சாலையில் செய்யும் பயணம்போல. இலக்கினை உறுதியாக வைத்துக்கொண்டு அதை நோக்கி பயணம் செய்வது.

இந்தப் புரிதலை இன்றைய வாசகங்களுக்கான விளக்கத்தின் பின்புலத்தில் பார்ப்போம்:

முதல் வாசகம்: தொடக்கநூல் 9:8-15

பெருவெள்ளத்திற்குப் பின் நோவோவுடன் கடவுள் பேசும் வார்த்தைகளே இன்றைய முதல் வாசகம். வாசகத்தின் மையப் பொருள் உடன்படிக்கை. உடன்படிக்கை என்ற சொல்லாடல் ஒரு அசீரியக் கலாச்சாரத் தாக்கம். ஒரு நாட்டை அல்லது ஊரை வெற்றிகொள்கின்ற அரசன் அந்த ஊர் மக்களோடு செய்து கொள்ளும் உறவு நிலைக்குப் பெயர்தான் உடன்படிக்கை. உடன்படிக்கையில் இருவர் இருப்பர்: ஒன்று செய்பவர், மற்றொன்று செய்யப்படுபவர். இதில் உடன்படிக்கை செய்பவர் எப்போதும் தலைமை நிலையிலும், செய்யப்படுபவர் பணியாளர் நிலையிலும் இருப்பர். மேலும், உடன்படிக்கை செய்யும் தலைவர், உடன்படிக்கை செய்யப்படும் தனக்குக் கீழிருப்பவருக்கு பாதுகாப்பை வாக்குறுதியாகத் தருகின்றார். அதே போல கீழிருப்பவர் மேலிருப்பவர் சொல்வதையெல்லாம் கேட்டு நடப்பதாக வாக்குறுதி தருகின்றார். இந்த இருவரும் தங்கள் உடன்படிக்கையின் நினைவாக கல்தூண், மரம் போன்றவற்றை அடையாளமாக ஏற்படுத்திக் கொள்வர். இந்தப் பின்புலத்தோடு இன்றைய முதல்வாசகத்தைப் பார்த்தால் அர்த்தம் தெளிவாகிறது: (அ) பெருவெள்ளத்திலிருந்து நோவாவின் குடும்பத்தைக் காப்பற்றியதன் வழியாக நோவாவை வெற்றி கொள்கின்றார் இறைவன் (9:8). (ஆ) உடன்படிக்கை செய்பவர் - கடவுள். செய்யப்படுபவர் - நோவா, அவரது சந்ததியினர் மற்றும் எல்லாரோடும் (9:9-10). (இ) உடன்படிக்கையின் மையப்பொருள் - இனி உயிர்கள் மீண்டும் அழிக்கப்படாது, மண்ணுலகில் அழிக்கும் வெள்ளப்பெருக்கு மீண்டும் வராது (9:11) (ஈ) உடன்படிக்கையின் அடையாளம் - வானவில் (9:12). 9:13-15ல் கடவுள் தான் 8-12ல் சொன்னதையே திரும்பவும் சொல்கின்றார். கடவுளின் இந்த செயல்பாடு "உன்னுடனோ என் உடன்படிக்கையை நிலைநாட்டுவேன்" (6:18) என்று அவர் முன் சொன்ன வார்த்தைகளின் நிறைவாக இருக்கின்றது.

வானவில் - இது ஒரு இயற்கை நிகழ்வு. மழைபொழிந்த ஈரக் காற்றுவெளியில் சூரியனின் கதிர்கள் படுவதால் ஏற்படும் ஒளிப்பிறழ்வே வானவில். இந்த இயற்கை நிகழ்வை எடுத்து அதற்கு ஆன்மீகப்பொருள் தருகின்றார் ஆசிரியர். இயற்கையின் நிகழ்வுகள் கடவுளின் செயல்பாடுகளாகச் சித்தரிக்கப்படுவதற்கு நிறைய எடுத்துக்காட்டுகள் உள்ளன (காண். எரே 31:35-36, 33:19-26). "வில"; கடவுளைச் சுட்டிக்காட்டும் அடையாளமாக விப 12:13லும் உள்ளது. பழைய ஏற்பாட்டு காலத்தில் வானவில் கடவுளின் ஆயுதமாகவும் கருதப்பட்டது (திபா 7:12-13, 18:14, 144:6, புலம்பல் 2:4, 3:12, எபி 3:9-11). உடைந்த வில் சமாதானத்தின் அடையாளமாகவும் இருக்கிறது (திபா 46:9). ஆக, இனி மனுக்குலத்திற்காக கடவுள் தாமே போரிடுவார் எனவும், இதனால் கடவுளின் வல்லமையை அவரது சொந்த மக்கள் உணர்ந்து கொள்வார்கள் எனவும், இனி மனுக்குலம்; கடவுளின் கைகளில் அமைதியாக ஓய்வெடுக்கலாம் எனவும் குறித்துக்காட்டுகிறது இந்த உருவகம்.

நினைவுகூர்வது - "நான் இந்த வானவில்லைப் பார்க்கும் போதெல்லாம் நினைவுகூர்வேன்!" என்கிறார் கடவுள். அப்படியென்றால் அதைப் பார்க்காதபோது கடவுள் மனுக்குலத்தை மறந்துவிடுவாரா? இல்லை. இந்த வானவில் கடவுள் நம்மை நினைவுகூர்வதை நமக்குக் காட்டும் ஒரு அடையாளம். ஆக, யார் கண்ணுக்கும் எளிதாய்த் தெரிகின்ற ஒரு அடையாளம் என்பதால் இது கடவுள் நம்மை நினைவுகூர்கிறார் என்பதை நமக்கு நினைவூட்டுவதாகவும் இருக்கிறது.

நான் அழிப்பதில்லை - கடவுள் தரும் வாக்குறுதி இதுதான். "கொல்பவரும் நானே, உயிரளிப்பவரும் நானே! காயப்படுத்துபவரும் நானே! குணமாக்குபவரும் நானே!" (இச 32:39) என்று சொல்லும் இறைவன் தன்னை வாழ்வின் காரணியாக மட்டும் இங்கே காட்டுகின்றார்.

ஆக, கடவுள் நமக்கு வாழ்வின் காரணியாக இருக்கிறார் என்றால், அந்த உடன்படிக்கையின் பங்கேற்பாளராக இருக்கும் நாம் சாவின் காரணிகளுக்குத் துணைபோகலாமா?

இரண்டாம் வாசகம்: 1 பேதுரு 3:18-22

இந்த இரண்டாம் வாசகத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில் அதன் முன்னும், பின்னும் உள்ள வசனங்களையும் நாம் இணைத்துப் பார்க்க வேண்டும். "நீதியின் பொருட்டுத் துன்புறுதல்" (3:8-22) என்ற தலைப்பில் தன் திருஅவைக்கு எழுதும் பேதுரு நம் துன்புறுதலைப் பற்றி எழுதிவிட்டு, நம் துன்பங்களைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் இயேசு அடைந்த துன்பங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என இயேசுவை மாதிரியாக வைப்பதோடு மட்டுமல்லாமல், இயேசுவை வானதூதர்க்கும் மேலாக உயர்த்திக் காட்டுகின்றார். ஒருபக்கம் துன்புறுதல் பற்றிப் பேசும் பேதுரு திடீரென நோவாவின் தண்ணீரைப் பற்றிப் பேசும் போது கிறிஸ்தவர்களின் திருமுழுக்கிற்கு (3:21) முடிச்சுப் போடுவது நம் புரிதலை இன்னும் கடினமாக்குகிறது.

இந்த வாசகத்தில் உள்ள இரண்டு கருத்தியல் பிரச்சனைகளை மட்டும் பார்ப்போம்:

அ. இயேசு காவலில் இருந்த ஆவிகளிடம் போய் நற்செய்தியை அறிவித்தார் (3:19). இயேசு ஆவிகளுக்குப் போதித்ததாக எழுதுகிறார் பேதுரு. இந்த ஆவிகள் யார்? இவர்கள் நோவாவிற்கு முன் வாழ்ந்தவர்களாக இருக்கலாம், அல்லது நோவாவின் காலத்தில் வாழ்ந்த தீயவர்களாக இருக்கலாம் அல்லது தொநூ 6:2-4ல் சொல்லப்படும் தெய்வப்புதல்வர்கள் அல்லது அரக்கர்களாக இருக்கலாம். இப்படி இயேசு போதித்தார் என்று சொல்வது இயேசு இவர்களுக்கும் முற்காலத்தில் இருந்தார் என்று இயேசுவின் இருப்பை படைப்பின் தொடக்கத்திற்குக் கொண்டு செல்கிறது. இந்த ஆவிகளிடம் அவர் என்ன போதித்திருப்பார்? இன்று நாம் நம் சக மனிதர்களுக்குப் போதிப்பதே பெரும்பாடாக இருக்க, ஆவிகளிடம் போதிப்பது எவ்வளவு கடினமாக இருக்கும்? ஆனால், இயேசு பாலைநிலத்தில் ஆவியால் சோதிக்கப்பட்ட நிகழ்வை அருகில் வைத்துப் பார்த்தால் அலகையோடு இயேசு பேசும் சொற்கள் கடவுள் பற்றிய போதனையாகவே இருக்கிறது.

ஆ. நோவா காலத்துப் பெருவெள்ளம் மற்றும் திருமுழுக்குத் தண்ணீர். நோவாவின் குடும்பம் தண்ணீரிலிருந்து காப்பாற்றப்படுகிறது. திருமுழுக்குப் பெறும் கிறிஸ்தவர் தண்ணீரின் வழியாக மீட்பைப் பெறுகின்றார். ஆக, தண்ணீரிலிருந்து, தண்ணீர் வழியாக என்று நாம் பிரித்துப் பார்க்க வேண்டும்.

நற்செய்தி வாசகம்: மாற்கு 1:12-15

மாற்கு 1:12-15 என்னும் இறைவாக்குப் பகுதியை 12-13, 14-15 என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். 12-13ல் இயேசு சோதிக்கப்படுகின்றார் (காண் மத் 4:1-11, லூக் 4:1-13). 14-15ல் கலிலேயாவில் இயேசு தன் பணியைத் தொடங்குகின்றார் (காண் மத் 4:12-17. லூக் 4:14-15).

முதல் பிரிவிலிருந்து தொடங்குவோம் (12-13):

இயேசு சோதிக்கப்படும் நிகழ்வு ஒத்தமைவு நற்செய்திகள் என்று சொல்லப்படும் மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா நற்செய்திகளில் மட்டும் தான் உள்ளன. இயேசுவின் வாழ்வில் இது உண்மையாகவே நடந்ததென்றால் அவருடைய அன்புச் சீடர் யோவான் மட்டும் ஏன் இந்த நிகழ்வு குறித்து மௌனம் காக்கின்றார். இது ஒரு வரலாற்று நிகழ்வா? அல்லது இறையியல் நிகழ்வா? இது ஒரு இறையியல் நிகழ்வே.

இது இறையியல் நிகழ்வு என்பதற்கு காரணங்கள் இரண்டு:

அ. விவிலிய இலக்கியத்தில் கடவுளால் தேர்ந்தெடுக்கும் நபர் "சோதிக்கப்படுதல்" என்பது ஒரு எழுத்தியல் நடை - காண். ஆபிரகாம் (தொநூ 22), சிம்சோன் (நீத 13-16). இவர்களைப் போலவே கடவுளின் மகனாகிய இயேசுவும் சோதிக்கப்பட வேண்டும்!

ஆ. பழைய இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குச் செல்லும் வழியில் 40 ஆண்டுகள் கடவுளால் பாலைவனத்தில் சோதிக்கப்படுகின்றனர். புதிய இஸ்ரயேலின் தலைமகனாய் இருக்கும் இயேசுவும் 40 நாட்கள் பாலைவனத்தில் சோதிக்கப்படுகின்றார்.

12-13 என்ற இறைவாக்குகளை இன்னும் இரண்டு உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்:

அ. பாலைநிலத்தில் இயேசு நாற்பது நாள் இருந்தார். அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்.

ஆ. அங்குக் காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர்.

பாலை நிலம் - காட்டு விலங்கு, சாத்தான் - வானதூதர் என்று சோதிக்கப்படுதலை இரட்டைப்படையில் எழுதுவது மாற்கு நற்செய்தியாளரின் எழுத்துக் கலை.

அ. பாலைநிலம் உடனடியாக நமக்கு பழைய ஏற்பாட்டு இஸ்ராயேல் மக்களை நினைவுபடுத்துகின்றது.

ஆ. காட்டு விலங்குகளிடையே இருக்கும் இயேசு பழைய ஆதாமை நமக்கு நினைவுபடுத்துகின்றார் (காண் தொநூ 2:19). ஆதாம் இறந்தபின் அவனது உடலை வானதூதர்கள் எடுத்துச் சென்றதாக யூத ரபிகள் போதிப்பது வழக்கம். ஆக, காட்டு விலங்குகள் மற்றும் வானதூதர்கள் பழைய ஆதாமைச் சுற்றி இருந்தது போல, புதிய ஏற்பாட்டு ஆதாமாகிய இயேசுவைச் சுற்றியும் இருக்கின்றனர். மேலும் பாலைநிலங்கள் மெசியாவின் வருகையினால் உயிரினங்கள் அமைதியாகக் கூடிவாழும் இடமாக மாறும் எசாயாவின் இறைவாக்கும் இங்கே நிறைவுபெறுகிறது (காண் எசா 11:6-9, 32:14-20, 65:25).

மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள் இயேசுவிற்கும், சாத்தானுக்கும் இடையே நடக்கும் போரட்டத்தை வர்ணிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் மாற்கு அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றார். ஏனெனில் மாற்கு நற்செய்தியாளரைப் பொறுத்தவரையில் இயேசுவின் பணித்தொடக்கத்திலேயே சாத்தான் அமைதியாக்கப்படுகின்றான் (காண் 1:21-27).

இரண்டாம் பிரிவு (14-15):

இதிலும் இரட்டைத்தன்மையைக் காணலாம்:

அ. காலம் நிறைவேறி விட்டது. இறையரசு நெருங்கி வந்துவிட்டது.

ஆ. மனம் மாறுங்கள். நற்செய்தியை நம்புங்கள்.

இவற்றில் "அ" வெறும் கருத்து வாக்கியமாகவும், "ஆ" கட்டளை வாக்கியமாகவும் இருக்கிறது.

"காலம்" என்பதற்கு "க்ரோனோஸ்" மற்றும் "கைரோஸ்" என்னும் இரண்டு கிரேக்க வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. "க்ரோனோஸ்" என்றால் வரலாற்று நேரம் - எகா. பிப்ரவரி 17 மாலை 5:50 மணி. "கைரோஸ்" என்பது மீட்பு நேரம் - அதாவது கடவுள் வரலாற்றில் செயலாற்றும் நேரம். இங்கே இயேசு குறிப்பிடும் காலம் இரண்டாம் வகை.

இறையரசு - இறையரசு என்றால் என்ன? பழைய ஏற்பாட்டில் கடவுள் தாமே மக்கள் மேல் அரசாள்வார் என்பது ஆழமான நம்பிக்கையாக இருந்தது (காண் 1 குறி 28:5, 2 குறி 13:8, சாஞா 10:10, 2 சாமு 7:12-26, திபா 132:11). இந்த இறையரசு ஒரு அரசியல் நிகழ்வோ, இடம்சார்ந்த ஆட்சியோ அல்ல. இது ஒரு ஆன்மீக அனுபவம். "நான் கடவுளின் மகள் அல்லது மகன்" என்று உணரும் ஒவ்வொருவருக்குள்ளும் தொடங்கும் ஒரு உள்ளொளிப் பயணம். இந்தப் பயணத்தின் நிறைவில் நமக்கு அருகில் இருப்பவர் எந்த நிறத்தை, மொழியை, மதத்தை, நாட்டை, இனத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் நம் சகோதரன், சகோதரியாகத் தெரிய ஆரம்பிக்கின்றார். பரந்த மனப்பான்மை, சகோதரத்துவம், சமத்துவம், சுதந்திரம் என்னும் மதிப்பீடுகளில் இறையரசின் பிம்பங்கள் தெரியும்.

மனம் மாறுங்கள் - "மெட்டாநோயா" எனப்படும் கிரேக்கச் சொல்லுக்கு ஆங்கிலத்தின் "யு" டர்ன் எடுத்தல் என்பது பொருள். கடவுளை விட்டு நம் முகம் திரும்பியிருந்தால், அவரை நோக்கி மீண்டும் திரும்புதல் மனம் மாறுவது.

நற்செய்தியை நம்புங்கள் - இந்த நற்செய்தி வெறும் வார்த்தை அல்ல. மாறாக, இயேசுவே (காண். மாற்கு 1:1).

வார்த்தையிலிருந்து வாழ்க்கைக்கு:

அ. பழைய ஏற்பாட்டில் நோவாவோடு உடன்படிக்கை செய்வதன் வழியாக தன் உடனிருப்பை காலங்காலமாக மனுக்குலத்திற்கு வாக்களிக்கும் இறைவன் புதிய ஏற்பாட்டு இயேசுவில் அதை முழுமையாக்குகின்றார். கடவுளின் காணக்கூடிய முகமாக வரும் இயேசு வாழ்வில் நம்மைப்போல பாலைநிலங்களைக் கடந்து சென்றாலும் நம்மோடு ஒன்றிணைந்து நிற்கின்றார்.

ஆ. வானதூதரும், சாத்தானும் நம் வாழ்வின் இரு பக்கங்கள். "கடவுள் பாதி - மிருகம் பாதி" என்று நாம் நமக்குள் பிளவுபட்டு நிற்கின்றோம். மற்றொரு பக்கம் இன்பமும், துன்பமும் நம் வாழ்வில் மாறி மாறி வந்தாலும் நம் மனம் அவற்றை எப்படி எடுத்துக்கொள்கின்றது. இன்பத்தால் ஏமாற்றப்படவும் வேண்டாம், துன்பத்தால் கலக்கமடையவும் வேண்டாம்.

இ. நாம் பெற்ற திருமுழுக்கு கிறிஸ்தவர் என்ற அடையாளத்தை மட்டும் நமக்குத் தருவதில்லை. மாறாக, மனம் மாறும் கடமையையும் நம்மேல் சுமத்துகிறது. மனமாற்றம் பெற்ற நாம் ஆவிகளுக்குப் போதிக்கும் அளவிற்குப் போகவில்லையென்றாலும், அன்றாடம் நாம் சந்திக்கும் சக உயிர்களுக்கு நம் புன்சிரிப்பையும், இனிமையான வார்த்தையையும் போதனையாக முன்வைக்கலாமே!

இறுதியாக, மனம் மாறும் கடவுள், மனம் மாற்றத்திற்கு நம்மை அழைக்கின்றார். இன்று என் மனம் எதை நோக்கி இருக்கிறது என்பதைப் பொறுத்தே என் வாழ்க்கை பயணம் இருக்கிறது. நோக்கம் சரியாக இல்லாதபோது, பாதையைவிட பாதையின் ஓரத்திலிருக்கும் பூக்கள்தாம் கவர்ச்சியாக இருக்கும். பூக்கள் இல்லாத பாலைவனங்களும், நம் வாழ்வின் காய்ந்த பொழுதுகளும்கூட மனமாற்றத்தின் ஊற்றாக இருக்க முடியும்.

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)
Archdiocese of Madurai

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!