Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                       
                                      திருவருகைக்காலம் 1ஆம் ஞாயிறு - 3ம் ஆண்டு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 33: 14-16

இதோ, நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்பொழுது இஸ்ரயேல் வீட்டாருக்கும் யூதா வீட்டாருக்கும் நான் கொடுத்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றுவேன்.

அந்நாள்களில் - அக்காலத்தில் - நான் தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுவார்.

அந்நாள்களில் யூதா விடுதலை பெறும்; எருசலேம் பாதுகாப்புடன் வாழும். 'யாவே சித்கேனூ' - அதாவது 'ஆண்டவரே நமது நீதி' - என்னும் பெயரால் இந்நகர் அழைக்கப்படும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா 25: 4-5ab. 8-9. 10, 14 (பல்லவி: 1) Mp3
=================================================================================
 பல்லவி: ஆண்டவரே, உம்மை நோக்கி, என் உள்ளத்தை உயர்த்துகிறேன்.

4 ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும். 5ab உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள். பல்லவி

8 ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். 9 எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். பல்லவி

10 ஆண்டவரது உடன்படிக்கையையும் ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு, அவருடைய பாதைகளெல்லாம் பேரன்பும் உண்மையும் உள்ளனவாய் விளங்கும். 14 ஆண்டவரின் அன்புறவு அவருக்கு அஞ்சி நடப்போர்க்கே உரித்தாகும்; அவர் அவர்களுக்குத் தமது உடன்படிக்கையை வெளிப்படுத்துவார். பல்லவி


================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
கிறிஸ்துவின் வருகைக்கென்று ஆண்டவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக.

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 12-4: 2

சகோதரர் சகோதரிகளே, உங்கள்மீது நாங்கள் கொண்ட அன்பு வளர்ந்து பெருகுவதுபோல, நீங்கள் ஒருவர் ஒருவருக்காகவும் எல்லாருக்காகவும் கொண்டுள்ள அன்பையும் ஆண்டவர் வளர்த்துப் பெருகச் செய்வாராக!

இவ்வாறு நம் ஆண்டவர் இயேசு தம்முடைய தூயோர் அனைவரோடும் வரும்பொழுது, நம் தந்தையாம் கடவுள்முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு, அவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக!

சகோதரர் சகோதரிகளே! நீங்கள் கடவுளுக்கு உகந்தவர்களாய் வாழும் முறையை எங்களிடம் கற்றுக்கொண்டீர்கள்; அப்படியே வாழ்ந்தும் வருகிறீர்கள். இதில் இன்னும் முன்னேற வேண்டுமென ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் உங்களிடம் இறுதியாகக் கேட்டுக்கொள்கிறோம்.

ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை நீங்கள் அறிவீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
திபா 85: 7

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.

+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 25-28, 34-36

அக்காலத்தில் மானிடமகன் வருகையைப்பற்றி இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: "கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும். மண்ணுலகில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள். உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர். ஏனெனில், வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள்மீது வருவதை அவர்கள் காண்பார்கள். இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது."

மேலும் இயேசு, "உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும், அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப்போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள். மண்ணுலகெங்கும் குடியிருக்கும் எல்லார்மீதும் அந்நாள் வந்தே தீரும்.

ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும், மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்" என்றார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"தலை நிமிர்ந்து நில்லுங்கள், உங்கள் மீட்பு நெருங்கி வந்துவிட்டது"


நண்பர்கள் இருவர் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்துக் கொண்டார்கள். அதில் ஒரு நண்பர் மிகவும் சோகமாகவும் இன்னொரு நண்பர் மகிழ்ச்சியாகவும் இருந்தார்.

மகிழ்ச்சியாக இருந்த நண்பர் மிகவும் சோகமாக இருந்த நண்பரிடம், "நண்பா! ஏன் இவ்வளவு சோகமாக இருக்கின்றாய்?, உனக்கு ஏதாவது பிரச்சனையாக? என்ன பிரச்சனையானாலும் பரவாயில்லை, அதை என்னிடத்தில் சொல், நான் அதனை நிவர்த்தி செய்ய என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன்" என்றார். மிகவும் சோகமாக இருந்த நண்பரோ, "அது ஒன்றுமில்லை. கடந்த மாதம் என்னுடைய தாத்தா இறந்து போய்விட்டார். அவர் இறக்கும்போது எனக்காக இருபது லட்சம் ரூபாய் சொத்து சேர்த்து வைத்துவிட்டுப் போயிருக்கின்றார்" என்றார். "உன்னுடைய தாத்தா இறந்த செய்தி வருத்தத்திற்கு உரியதாக இருந்தாலும், அவர் உனக்காக இருபது லட்ச ரூபாய் சொத்து சேர்த்து வைத்திருக்கின்றார் அல்லவா, அதை நினைத்து நீ மகிழ்ச்சியாய் இருக்கலாமே" என்றார் அவருடைய நண்பர்.

"பிரச்சனை அதுவல்ல நண்பா, இரண்டு வாரங்களுக்கு முன்பாக என்னுடைய மாமா விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டார், அவர் இறக்கின்றபோது என் பெயரில் ஐம்பது இலட்ச ரூபாய் சொத்து சேர்த்து வைத்துவிட்டுப் போயிருக்கின்றார்" என்றார் சோகமாக இருந்த நண்பர். "உன்னுடைய மாமாவின் இறப்பு வருத்தத்தைத் தருவதாக இருந்தாலும், உன் பெயரில் ஐம்பது லட்ச ரூபாய் சொத்து சேர்த்து வைத்திருக்கின்றார் அல்லவா, அதை நினைத்துக்கூட நீ மகிழ்ச்சியாக இருக்கலாம் அல்லவா, ஏன் இவ்வளவு சோகமாக இருக்கின்றாய்?" என்று கேட்டார் மகிழ்ச்சியாக இருந்த நண்பர்.

"நண்பா பிரச்சனை அதுகூட இல்லை, சென்ற வாரம் என்னுடைய அப்பா நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையாகி இறந்துபோய்விட்டார். அவர் இறக்கின்றபோது என் பெயரில் ஒருகோடி ரூபாய் எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கின்றார்" என்றார் அவர். "உன் அப்பாவின் இறப்பு மிகப் பெரிய வருத்தத்தைத் தந்தாலும் அவர் உன் பெயரில் ஒரு கோடி ரூபாய் எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கின்றார் அல்லவா, அதை நினைத்து நீ எவ்வளவோ மகிழ்ச்சியாக இருக்கலாம்" என்றார் அவருடைய நண்பர்.

"என் நண்பா! இப்போது பிரச்சனை அதுவல்ல, இந்த வாரம் என் பெயரில் சொத்து எழுதி வைத்துவிட்டு இறக்க யாருமே இல்லை. அதை நினைத்துத்தான் நான் கவலையாய் இருக்கின்றேன்" என்றார் சோகமாக இருந்த நண்பர். இதைக் கேட்ட அவருடைய நண்பர், "என்ன மனுஷன் இவன், சந்தோசமாக இருக்க எவ்வளவோ விடயங்கள் இருக்கின்றபோது, இறப்பதற்கு யாருமே இல்லை வருத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றானே" என்று தலையில் அடித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் சோகமான நண்பனைப் போன்றுதான் நம்மில் பலர் மகிழ்ச்சியாக இருக்க எவ்வளவோ காரியங்கள் இருக்கின்றபோது, இன்னும் பணமில்லையே, பொருளில்லையே, வசதியில்லையே என்று வருத்தப்பட்டுக்கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கின்றது. நற்செய்தி வாசகத்தில் இப்படிப்பட்ட மனிதர்களைப் பார்த்துத்தான் என்னவோ இயேசு, "உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாரும் எச்சரிக்கையாய் இருங்கள்" என்கின்றார்.

இன்று நாம் திருவருகைக் காலத்தைத் தொடங்கியிருக்கின்றோம். இந்த திருவருகைக் காலத்தின் முதலாம் ஞாயிற்றுக்கிழமை வாசகங்கள் யாவும் மெசியாவின் வருகையைக் குறித்தும் அவருடைய வருகைக்காக நாம் என்ன செய்யவேண்டும் என்பதைக் குறித்துப் பேசுகின்றன. அதனால் நாம் அதைக் குறித்து 'தலைநிமிர்ந்து நில்லுங்கள், ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வந்துவிட்டது' என்ற தலைப்பில் சிந்தித்துப் பார்ப்போம்.

இன்று நாம் படிக்கக்கேட்ட முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியா, "அந்நாட்களில் நான் தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுவார்..." என்று ஆண்டவராகிய கடவுள் கூறுவதாகக் கூறுகின்றார். இஸ்ரேயல் மக்கள் பாபிலோனியர்களால் நாடு கடத்தப்பட்டு, வேற்று நாட்டில் அடிமைகளாய் நம்பிக்கை இழந்து நின்றார்கள். அப்படிப்பட்ட தருணத்தில்தான் ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் எரேமியா வழியாக யூதா விடுதலை பெறும்; எருசலேம் பாதுகாப்புடன் வாழும்" என்னும் நம்பிக்கைச் செய்தியைத் தருகின்றார்.

இறைவாக்கினர் எரேமியா வழியாக ஆண்டவராகிய கடவுள் உரைத்த வாக்கு இயேசு கிறிஸ்துவில் நிறைவு பெறுகின்றது. ஆம், தாவீதின் குலத்திலிருந்து தோன்றிய நீதியின் தளிராகிய இயேசுவால் உலகில் நீதியும் நேர்மையும் நிலைநாட்டப் பட்டது, அது மட்டுமல்லாமல் யூதாவோடு இவ்வுலகமும் விடுதலை பெற்றது, அவருடைய பாதுகாப்பைப் பெற்றது. ஆகையால், நாம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கக்கூடிய மெசியாவின் வருகையினால் இவ்வுலகில் நீதியும் நேர்மையும் நிலைநாட்டப்படும் என்பது உறுதி.

இப்படி நீதியையும் நேர்மையையும் இவ்வுலகில் நிலைநாட்டி, மக்களுக்கு விடுதலையும் பாதுகாப்பையும் தரக்கூடிய மெசியாவின் வருகைக்காக நாம் என்ன செய்யவேண்டும் என்பதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு எடுத்துச் சொல்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, உலகில் ஏற்படும் போர்களும் கலகங்களும் குழப்பங்களும் இயற்கைப் பேரிடர்களும் அச்சத்திற்குரிய காரியங்கள் அல்ல, மாறாக அவையெல்லாம் மானிட மகனது வருகைக்கான முன்னடையாளங்கள் என்கின்றார். எனவே நாம் அவற்றைக் குறித்து அஞ்சி நடுங்காமல், மீட்பு நெருங்கிய வந்துவிட்டதற்கான அறிகுறிகள் என நாம் புரிந்துகொண்டு வாழவேண்டும். இவ்வாறு சொல்லிவிட்டு இயேசு தொடர்ந்து சொல்லக்கூடிய காரியங்கள், நாம் அவருடைய வருகைக்காக எப்படி எல்லாம் ஆயத்தமாக இருக்கவேண்டும், என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பதை குறித்து தெளிவாக எடுத்துரைக்கின்றன.

இயேசு கூறுகின்றார், "உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாரும் அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப் போல் சிக்க வைக்காதவாரும் எச்சரிக்கையாய் இருங்கள்". இன்றைக்கு மனிதர்கள் அனைவரும் இன்றோடு வாழ்க்கை முடிந்துவிடப்போகிறது என்பதுபோல் மனம்போனவாறு, உலகப்போக்கிலான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்பவர்கள் திடிரென்று ஆண்டவருடைய வருகை நிகழும்போது அதற்கேற்ற தண்டனையைப் பெறுவார் என்பது உறுதி. எப்படி நோவாவின் காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்பாக மக்கள் உண்டு குடித்து மனம்போன போக்கில் வாழ்ந்ததனால் அழிந்தார்களோ அதுபோன்று, கடவுளைத் தேடாமல், அவருக்கு ஏற்புடையதை நாடாமல் நாம் வாழ்கின்றபோது அழிவுறுவோம் என்பது உறுதி. ஆகவே, நாம் மானிட மகனுடைய வருகைக்காக நம்மையே நாம் தயாரிக்கும் விதமாக இவ்வுலக வாழ்க்கையில் மூழ்கிப் போகாமல், அவருக்கு ஏற்புடையவற்றை நாடுவோம்.

உலகப் போக்கிலான வாழ்க்கை வாழாமல், இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்வேண்டும் என்று சொல்லும் இயேசு, தொடர்ந்து சொல்லக்கூடிய வார்த்தைகள், "எப்பொழுதும் விழித்திருந்து மன்றாடுங்கள்" என்பதாகும். ஆம், நாம் இறைவனை நோக்கி மன்றாடுகின்றபோதும், அவரை நோக்கி ஜெபிக்கின்றபோதும் மட்டுமே நம்மால் இறைவனுக்கு முன்பாக நிற்பதற்கு தகுதியுள்ளவர்களாக முடியும். ஆனால், இன்றைய நவீன கால கட்டடத்தில் ஜெபிப்பதற்கு முக்கியத்துவம் தராமல் நிறையப் பேர் வாழ்வதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கின்றது. இன்று வளர்ந்து வரக்கூடிய தலைமுறை சொல்கின்ற வார்த்தைகள், "நாங்கள் உழைக்கின்றோம், வாழ்க்கையில் முன்னுக்கு வருகின்றோம். இதில் ஜெபிப்பதற்கு என்ன தேவை இருக்கின்றது?, ஜெபிப்பதனால் என்ன பயன்?" என்பதுதான். இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கேட்பதற்கே மிகவும் வருத்தமாக இருக்கின்றது. நாம் ஜெபிக்கவேண்டும், அதுவும் விழித்திருந்து ஜெபிக்கவேண்டும். அப்போதுதான் நாம் வாழ்வதற்கான எல்லா ஆற்றலையும் பெற்றுக்கொள்ளமுடியும். எல்லாம் வல்லவராகிய ஆண்டவர் இயேசுவே விழிந்திருந்து இறைவனிடம் ஜெபித்தபோது நாமெல்லாம் எம்மாத்திரம்!. ஆகவே, நாம் ஒவ்வொருவரும் விழிந்திருந்து ஜெபிக்கின்ற மக்களாக வாழ முயற்சிப்போம்.

ஸ்காட்லாந்தை சார்ந்த பண்ணையார் ஒருவர் தன்னுடைய தோட்டத்திலும் வீட்டிலும் வேலை பார்க்க இளைஞன் ஒருவனை வேலைக்கு அமர்த்தினார். அந்த இளைஞனும் தனக்குக் கொடுக்கப்பட்ட பணிகளை சிறப்புடன் செய்துவந்தான். பண்ணையாரும் அவனைக் குறித்து மிகவும் திருப்திபட்டுக்கொண்டுக் கொண்டார்.

எல்லாம் நன்றாகப் போய்கொண்டிருந்த சமயத்தில் திடிரென்று ஒருநாள், அந்த இளைஞன் வேலைக்கு செல்வதை நிறுத்திக்கொண்டு வீட்டில் இருந்தான். இதைக் கவனித்த அந்த இளைஞனின் நண்பன் அவனிடம், "என்னப்பா! பண்ணையாரிடம் வேலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டாய், அவர் உனக்கு சம்பளம் குறைவாகத் தருகின்றாரா என்ன?" என்று கேட்டான். அதற்கு அந்த இளைஞன், "அப்படியெல்லாம் இல்லை, சம்பளம் அதிகமாகவே தருகின்றார்" என்றார். "அப்படியானால் அங்கு வேலைப் பளு அதிகமோ?" என்று கேட்டான் அவருடைய நண்பன். "அப்படியொன்றும் இல்லை, எளிதான வேலையாகத் தான் இருக்கின்றது" என்றான் அந்த இளைஞன். "சம்பமும் அதிகமாக இருக்கின்றது, வேலை மிக எளிதாக இருக்கின்றது என்று சொல்கின்றாய், பின் எதற்காக வேலையிலிருந்து நீங்கிவிட்டாய்" என்று கேட்டான் அவனுடைய நண்பன். "வேறொன்றும் இல்லை, அந்த வீட்டில் கூரை இல்லை" என்றான்.

ஸ்காட்லாந்து நாட்டில் ' வீட்டில் கூரை இல்லை' என்ற சொலவடை வீட்டில் ஜெபம் என்பதே இல்லை என்பதைக் குறிக்கும். அந்த இளைஞன் தனது நண்பனிடம், "பண்ணையாரின் வீட்டில் ஜெபம் செய்கின்ற வழக்கமில்லை, அதனால்தான் வேலையிலிருந்து நீங்கிவிட்டேன்" என்று சொல்லாமல் சொன்னான்.

ஆம், ஜெபம் இல்லாத வீடு கூரை இல்லாத வீட்டிற்குச் சமம். கூரையில்லாத வீடு எல்லாவிதமான ஆபத்துக்கும் உள்ளாவதுபோல், ஜெபிக்காத மனிதன் எல்லாவிதமான ஆபத்துகளுக்கும் உள்ளாவான் என்பதுதான் உண்மை.

ஆகவே திருவருகைக் காலத்தைத் தொடங்கியிருக்கின்ற இந்த வேளையில், நாம் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுகின்ற, மக்களுக்கு விடுதலையையும் பாதுகாப்பையும் தருகின்ற, மக்களிடத்தில் அன்பைப் பெருகச் செய்கின்ற (இரண்டாம் வாசகம்) மெசியாவின் வருகைக்காக நம்மையே நாம் தயார் செய்ய (விழித்திருந்து) ஜெபிக்கின்ற மக்களாகவும், கடவுளுக்குரிய காரியங்களை நாடுகின்ற மக்களாகவும் மாறுவோம். அதன்வழியாக இறைவன் தருகின்ற முடிவில்லா வாழ்வைக் கொடையாகப் பெறுவோம். இயேசுவின் பிறப்பு விழாவை அர்த்தமுள்ளதாக மாற்றுவோம்.


மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
திருவருகைக்காலம் முதல் ஞாயிறு


I எரேமியா 33: 14-16
II 1 தெசலோனிக்கர் 3: 12-4: 2
III லூக்கா 21: 25-28, 34-36

குடிவெறியினால் மந்தமடைய வேண்டாம்

நிகழ்வு

முரடர்கள் சிலர் இளைஞன் ஒருவனை ஓர் அறையில் அடைத்து வைத்தனர். அந்த அறையில் ஓர் அழகிய பெண் இருந்தாள். அவளுடைய கையில் அவளது குழந்தை இருந்தது. பக்கத்தில் ஒரு மதுக்குப்பி இருந்தது.

இளைஞனை அறையில் அடைத்துவைத்த முரடர்கள் அவனிடம், இங்கிருந்து நாங்கள் உன்னை விடுவிக்கவேண்டும் என்றில், இங்குள்ள மதுக்குப்பியிலிருந்து மதுவைப் பருக வேண்டும் அல்லது குழந்தையைச் சுவரில் அடித்துக் கொல்லவேண்டும். அதுவும் இல்லையென்றால், பெண்ணை மானபங்கப்படுத்த வேண்டும். இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை நீ செய்யாவிட்டால், இங்கிருந்து நாங்கள் உன்னை விடுவிக்க முடியாது கையில் துப்பாக்கியை வைத்து மிரட்டினார்கள்.

இளைஞன் யோசிக்கத் தொடங்கினான். இருப்பதிலேயே மது அருந்துவதுதான், குறைவான பாதிப்பை ஏற்படுத்தும், அதனால் அதைக் குடித்துவிட்டு, இங்கிருந்து வெளியேறிவிடுவோம் என்று முடிவுசெய்து கொண்டு, அவன் மதுக்குப்பியை எடுத்து, மதுவை அருந்தி முடித்தான். அவன் மதுவை அருந்தியதும், போதை தலைக்கேறியது. அதனால் பெண்ணை மானபங்கப்படுத்த முயற்சி செய்தான். அதற்கு அப்பெண்ணின் கையில் இருந்த குழந்தை தடையாய் இருந்தது. அதை அவன் சுவரில் தூக்கி அடித்துக்கொன்றான். பின்னர் அவன் அந்தப் பெண்ணையும் மானபங்கப்படுத்தினான். எல்லாம் நடந்தேறிய பின், ஒரு தவற்றிற்கு மூன்று தவறுகளைச் செய்துவிட்ட பெரும் பாவியாகிவிட்டேனே நான்! என்று சொல்லி மனம் நொந்து அழுதான் அவன்.

மது ஒருவரைத் தொடர்ந்து தவறு செய்யத்தூண்டும் என்பதற்காகச் சொல்லப்படும் இந்த நிகழ்வு நமது கவனத்திற்குரியது. திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறன இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, நம் உள்ளம் குடிவெறி, இவ்வுலக வாழ்வுக்குரிய கவலை போற்றவற்றால் மந்தமடையாதவாறு பார்த்துக் கொள்ளவும், வரப்போகிற நீதியின் அரசருக்காக நம்மையே தயாரிக்கவும் அழைப்புத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

குடிவெறியினால் மந்தமடைந்து கிடைக்கும் சமூகம்

ஒருகாலத்தில் பண்டிகைகள், விழாக்கள் என்று எப்போதாவது குடித்துக் கொண்டிருந்தவர்களை, வயது வித்தியாசமில்லாமல் எப்போதும் குடிக்க வைத்த பெருமை இந்த அரசுகளைச் சாரும். இதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது. மது விற்பனையினால் நாட்டிற்கு வருமானம் சேர்கின்றது என்று சொல்லும் இந்த அரசுகள், அது வருமானம் அல்ல, நாட்டின் அவமானம் என்பதை உணரவேண்டும்.

மது அல்லது குடியினால் வரும் தீமைகளைக் குறித்துத் தொடக்கம் முதலே பலரும் பல்வேறு கருத்துக்களைக் கூறியிருக்கின்றார்கள். மது அருந்துதல் ஒரு மனிதனின் பலவீனமாகக் கருதப்படும். அத்தகைய பலவீனத்தைக் கொண்ட மன்னன் எளிதில் வீழ்த்தப்படுவான் என்கிறார் திருவள்ளுவர். கடலில் மூழ்கியவர்களை விட மதுவில் மூழ்கியவர்கள் மிகுதி என்கிறார் தாமஸ் ஃபுல்லர். சாத்தானால் வீழ்த்த முடியாத ஒருவனை மது வீழ்த்திவிடும் என்கிறார் லியோ டால்ஸ்டாய். இப்படிப் பலரும் மதுவினால் ஏற்படும் தீமைகளைப் பற்றிச் சொல்லியிருந்தாலும், நாளுக்கு நாள் மதுவிற்கு அடிமையாகி வாழ்வைச் சீரழிப்போரின் எண்ணிக்கை மிகுதியாவதுதான் வேதனை கலந்த உண்மை.

இத்தகைய பின்னணியில் இயேசு இன்றைய நற்செய்தியில் சொல்லக்கூடிய, உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தால் மந்தமடையாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள் என்று சொல்லக்கூடிய வார்த்தைகள் நமது கவனத்திற்குரியவை. ஆண்டவர் இயேசு ஏன் இவ்வாறு சொல்கின்றார் என்று நாம் தொடர்ந்து சிந்திப்போம்.

வரப்போகிறவர் நீதியின் அரசர்

ஒருவேளை நம்முடைய உள்ளம் குடியினாலும் களியாட்டத்தினாலும் மந்தமாகிவிட்டால் நம்மால் வேறு எதைப் பற்றியும் சிந்திக்க முடியாது. அப்பொழுது, ஒரு கண்ணியைப் போன்று வரும் ஆண்டவரின் நாளில் யாவரும் வகையாய்ச் சிக்கிக் கொள்வோம். நோவாவின் காலத்தில் வாழ்ந்தவர்கள் இப்படித்தான் உலகப் போக்கிலான வாழ்க்கை வாழ்ந்ததால் வெள்ளப் பெருகிக்கினால் அழிந்தார்கள். ஆகவே, நம்முடைய உள்ளம் குடிவெறியினால் மந்தமடையாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.

இயேசு இவ்வாறு சொல்வதற்கு மற்றொரு காரணம், ஆண்டவரின் நாளை அடுத்து வருகின்ற மானிடமகன் நீதியின் அரசராய், நேர்மையின் அரசராய் இருப்பார் என்பார் என்பதால்தான். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், அந்நாள்களில் நான் தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையும் நிலைநாட்டுவார் என்கிறார் ஆண்டவர். இறைவாக்கினர் எரேமியா நூலில் இடம்பெறும் இவ்வார்த்தைகள் இயேசுவின் முதலாம் வருகையை விடவும், அவரது இரண்டாம் வருகைக்கே மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்று திருவிவிலிய அறிஞர்கள் கூறுவார்கள். ஆதலால், இயேசு கிறிஸ்து நீதியின் அரசராய், நேர்மையின் அரசராய் வருகின்றபோது, நமது உள்ளத்தைக் குடிவேறியினாலும் களியாட்டத்தினாலும் மந்தமடையாதவாறு பார்த்துக் கொள்வதே நல்லது.

மன்றாடினால் மகிழ்வு வரும்

இயேசு கிறிஸ்து நீதியின் அரசராய், நேர்மையின் அரசராய் வருகின்றார் எனில், அவர்முன் குற்றமற்றவர்களாய் நாம் இருக்கவேண்டும்; அவருக்கு உகந்தவர்களாய் நாம் வாழவேண்டும். இது குறித்துத் தெசலோனிக்கர்களிடம் பேசுகின்ற புனித பவுல், கடவுளுக்கு உகந்தவர்களாய் வாழும் முறையை எங்களிடம் கற்றுக் கொண்டீர்கள் என்கின்றார். அப்படியெனில், பவுலும் அவரோடு இருந்தவர்களும் கடவுளுக்கு உகந்தவர்களாய் வாழ்வது பற்றித் தெசலோனிக்கர்களிடம் போதித்து மட்டுமல்லாமல், அதை அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள் என்றுதான் சொல்லவேண்டும். இவ்வாறு பவுலும், அவரோடு இருந்தவர்களும் தங்களுடைய வார்த்தையால் மட்டுமல்ல, தங்களுடைய செயலாலும் தெசலோனிக்க மக்களுக்குக் கடவுளுக்கு உகந்தவர்களாய் வாழ்வது பற்றிக் கற்றுக் கொடுத்தது, நம்மையும் அவ்வாறு வாழ அழைக்கின்றது.

நற்செய்தியில் இயேசு நீதியின் அரசருடைய வருகையை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான ஒருவழியைச் சொல்கின்றார். அதுதான் விழிப்பாய் இருந்து மன்றாடுவது. இறைவனிடம் நாம் மன்றாடிவிடலாம்; ஆனால், விழிப்பாய் இருந்து மன்றாடுவது எப்படி என்ற கேள்வி நமக்கு எழும். விழிப்பாய் இருந்து மன்றாடுவது எனில், ஒருவர் எப்போதும் தன்னை இறைவேண்டலுக்கு, இறைவனைப் பற்றிய சிந்தனைக்கு உட்படுத்திக்கொள்வது என்று சொல்லலாம். எப்பொழுது ஒருவர் இறைச் சிந்தனைக்குத் தன்னை உட்படுத்திக் கொள்கிறாரோ, அப்பொழுது அவர் குடிவெறிக்கும் களியாட்டத்திற்கும், இன்ன பிற தீமைகளுக்கும் தன்னை உட்படுத்தி, தனது உள்ளத்தை மந்தமடைய விடமாட்டார். அதனால் அவர் நீதியின் அரசர் வருகின்றபோது, அவரை தூய்மையோடு எதிர்கொள்வார் என்பது உறுதி.

எனவே, நாம் இறைச்சிந்தனைக்கும் இறைவேண்டலுக்கும் எப்பொழுதும் நம்மை உட்படுத்தி, கடவுளுக்கு உகந்தவர்களாய் வாழ்ந்து, வரப்போகிற நீதியின் அரசரைத் துணிவோடு எதிர்கொள்வோம்.

சிந்தனை

மது ஆசையைத் தூண்டுகிறது, செயல்பாட்டைத் துண்டிக்கிறது என்பார் ஷேக்ஸ்பியர். ஆகையால், நமது ஆசையைத் தூண்டி, செயல்பாட்டைத் துண்டிக்கின்ற குடிவெறிக்கும் இவ்வுலக வாழ்விற்குரிய கவலைக்கும் அடிமையாகிவிடாமல், நீதியின் அரசராம் ஆண்டவர் இயேசுவில் ஆழமான பற்று வைத்து, அவருக்கு உகந்தவர்களாய் வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.




=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
உம்மை நோக்கியே உள்ளம்

எரேமியா 33:14-16
1 தெசலோனிக்கர் 3:12-4:2
லூக்கா 21:25-28,34-36

கார்த்திகை மாதம் பாதிக்கடக்குமுன்னே மார்கழிக் குளிர் நம் உடலைத் தழுவ ஆரம்பித்துவிட்டது. குளிர்காலத்தில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. இலைகளை உதிர்த்து குளிரை எதிர்கொள்ள வேண்டிய மரங்கள், இலைகளை உதிர்க்கவா, தளிர்களைத் துளிர்க்கவா என்று குழம்பிக் கொண்டிருக்கின்றன. காலநிலைகள் மாற்றங்கள் நம் ஊரில் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், அமெரிக்கா, ஐரோப்பாக் கண்டங்களில் இவை தெளிவாகத் தெரியும். இலையுதிர் காலம் முடிந்து குளிர்காலம் தொடங்கும் நேரம் இது. மரங்கள் வெறும் குச்சிகளாக நின்று குளிரை, 'வந்து பார்' என எதிர்நோக்கியிருக்கும் இக்காலத்தை நம் தாய்த்திருச்சபை, 'மாரநாதா, என் ஆண்டவரே வாரும்' என்று கிறிஸ்துவின் வருகைக்கு எதிர்நோக்கியிருக்கும் திருவருகைக்காலமாகக் கொண்டாடுகிறது.

ஒளி அல்லது வெப்பம் என்றால் உயிருக்கு வளர்ச்சி. இருள் அல்லது குளிர் என்றால் உயிருக்குத் தளர்ச்சி. தளர்ச்சி, சோர்வு, மதமதப்பு, நீண்ட இரவு, நடுக்கும் குளிர், உடல்நலத்தில் தேக்கம் அல்லது பின்னடைவு என்று மனித உடலும், உயிரும் கலங்கும் குளிர்காலத்தில் திருவருகைக்காலம் ஏனோ?

குளிர் என்பது குறுகிய இறப்பு. குளிரில் இக்குறுகிய இறப்பை அனுபவிக்கும் உயிர்களுக்குள் இறக்காமல் இறப்பது நம்பிக்கையே - வசந்தம் வரும் என்ற நம்பிக்கையே. இந்த நம்பிக்கைக்கான காத்திருத்தல் எதிர்நோக்காக மாறி, இந்த எதிர்நோக்கு நம்மை அன்பில் உந்தித் தள்ளுகிறது. நம் கண்களுக்குத் தெரியும் எல்லா மரங்களிலும் மூன்று கூறுகள் உள்ளன: வேர், தண்டு, கிளைகள். இந்த மூன்றில் ஒன்று இல்லை என்றாலும் மரம் இறந்ததாகவே கருதப்படும். நம் ஒவ்வொருவரின் வாழ்வையும் மரத்திற்கு ஒப்பிட்டால், நம்மில் வேராக நம்பிக்கையும், தண்டாக எதிர்நோக்கும், கிளைகளாக அன்பும் இருக்கின்றன. இம்மூன்றும் இருந்தாலும், சில நேரங்களில் நாமும் குளிர் தாங்கும் குச்சி மரமாக நிற்கத்தான் செய்கின்றோம். இப்படி நிற்கும் நமக்கு ஊட்டம் தருவதே திருவருகைக்காலம்.

இன்றைய பதிலுரைப்பாடலோடு (திபா 25) நம் சிந்தனையைத் தொடங்குவோம்:

'ஆண்டவரே, உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்' என்று பாடுகிறார் தாவீது.

குளிரில் தவிக்கும் தாவரங்களும், உயிர்களும் கதிரவனின் வருகையை நோக்கிக் கண்களை உயர்த்துவதுபோல, துன்பத்தில் இருக்கும் தாவீது ஆண்டவரை நோக்கித் தன் உள்ளத்தை உயர்த்துகின்றார்.

திருவருகைக்காலத்தில் ஆண்டவரை நோக்கி நம் உள்ளம் மூன்று நிலைகளில் உயர்ந்து நிற்கின்றது:

ஒன்று, அவரது முதல் வருகையின் நினைவுகூர்தலை நோக்கி நெஞ்சம் நிறை நன்றியோடும், மகிழ்ச்சியோடும்,

இரண்டு, அவரது இரண்டாம் வருகையை எதிர்பார்த்து கண்கள் நிறை விழிப்போடும், கவனமோடும்,

மூன்று, அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளிலும், நபர்களிலும் வரும் அவரின் உடனிருப்பு நோக்கி எண்ணம் நிறை பரிவோடும், பகிர்வோடும்.

திருவருகைக்காலத்தின் ஒற்றைச் செய்தியும் இதுதான்: 'அவரை நோக்கி நம் உள்ளம்'

அவரை நோக்கி நம் உள்ளம் இருக்க வேண்டும் என்றால், முதலில் இப்போது நம் உள்ளம் எதை நோக்கி இருக்கிறது என்று காணுதல் அவசியம். நாம் எதை நோக்கி இருக்கிறோமோ நாம் அதன் பிரதிபலிப்பாக மாறுகிறோம். இல்லையா?

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எரே 33:14-16) இறைவாக்கினர் எரேமியா இஸ்ரயேல் மக்களுக்கான ஆறுதல் செய்தியைத் தருகின்றார். எரேமியா இறைவாக்கினர் நூலில் மட்டும்தான் நாம் அழிவு மற்றும் ஆறுதல் என்ற இரண்டு செய்திகளையும் பார்க்கிறோம். பாபிலோனிய அடிமைத்தனத்தால் யூதா அழியும் என்று இறைவாக்குரைக்கும் அவரே, இன்று, 'தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன்' என்று ஆறதலும் தருகின்றார். அந்நாளில் எருசலேம் புதிய பெயரைப் பெறும். 'யாவே சித்கேனூ' என்பதே அப்பெயர். 'யாவே சித்கேனூ' என்றால் 'ஆண்டவரே நமது நீதி' என்று பொருள். 'தளிர்' என்பது இறைவாக்கினர் நூல்களில் மெசியாவின் வருகையைக் குறிக்கும் (காண். செக் 3:8). இஸ்ரயேல் மக்களை வழிநடத்த வரும் மெசியாவின் முதல் பண்பு 'நீதி' என முன்வைக்கிறது இன்றைய முதல் வாசகம்.

'ஆண்டவரே நமது நீதி' - எதற்காக இந்தப் புதிய பெயர்?

வேப்பமரத்திலிருந்து புதிய தளிர் வந்தால் அதை நாம் புளிய மரம் என்று வேறு பெயர் சூட்டுவதில்லையே. அப்படி இருக்க, ஏன் இங்கே புதிய பெயரைக் கொடுக்கின்றார் இறைவாக்கினர்?

யூதாவை செதேக்கியா மன்னன் ஆண்டபோதுதான் இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர். 'செதேக்கியா' என்றால் 'யாவே நீதியானவர்' என்பது பொருள். அதே பெயரின் மூலத்தை எடுத்து, 'யாவே நமது நீதி' எனப் பெயர் மாற்றுகின்றார் இறைவன். ஏன்? ஆண்டவரின் முதல் நீதி தண்டனையாக இஸ்ரயேல் மக்களுக்கு வெளிப்பட்டது. அவரின் இரண்டாம் நீதி இரக்கமாக பொழியப்படுகிறது. ஆக, முதல் தண்டிலிருந்து புதிய தளிர் வந்தாலும், அது புதிய பெயரைப் பெற்றுக்கொள்கிறது.

இரக்கத்தில் கனியும் நீதி - இதுதான் வரவிருக்கும் மெசியாவின் பண்பு.

இதையே தாவீதும், 'ஆண்டவரே, உமது இரக்கத்தையும் உமது பேரன்பையும் நினைந்தருளும்' (திபா 25:6) என்று உரைக்கின்றார்.

'இரக்கத்தில் கனியும் நீதி' என்ற மெசியாவின் பண்பு இயேசுவுக்கு வடிவாகப் பொருந்துவதை நாம் நற்செய்தி நூல்களில் பார்க்கிறோம். விபச்சாரத்தில் பிடிபட்ட பெண், சக்கேயு, பாவியான பெண், தொழுநோயாளர், பேய்பிடித்தோர் போன்றோரை இயேசு எதிர்கொள்ளும் நிகழ்வுகளில் எல்லாம் நீதி என்பது இரக்கத்தில் கனிகிறது. 'தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்' என்பது நீதியாக இருந்தாலும், 'அவர்களை இரக்கத்தால் மன்னிப்பதும் நீதியே' என்கிறது இயேசுவின் செயல்பாடு.

மத்தேயு நற்செய்தியாளரின் பதிவின்படி உள்ள இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்ச்சிகளில் முதன் முதலாக அறிமுகம் செய்யப்படும், யோசேப்பும் இத்தகைய நீதியைக் கொண்ட நேர்மையாளராகவே காட்டப்படுகின்றார். சட்டத்தை மதிக்கும் நேர்மையைவிட இறைத்திருவுளம் நிறைவேற்றும் நேர்மையைத் தழுவி, நீதிக்குப் புதிய பரிமாணம் கொடுக்கிறார் யோசேப்பு.

'அவரை நோக்கி நம் உள்ளம்' இருக்கும்போது நாம் பெறுகின்ற முதல் கொடையும் இதுவே: 'இரக்கத்தில் கனியும் நீதி.'

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 தெச 3:12-4:2) புனித பவுல் தெசலோனிக்கியருக்கு எழுதப்பட்ட திருமடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. புதிய ஏற்பாட்டு நூல்களில் முதன்மையாக எழுதப்பட்ட நூல் இந்நூலே. தெசலோனிக்கா நகரில் பவுல் மூன்றே முறைதான் (மூன்று ஓய்வுநாள்கள்) நற்செய்தி அறிவிக்கிறார் (காண். திப 17:1). ஆனால், அந்த மூன்று நாள்களிலேயே நிறையப்பேரைக் கிறிஸ்துவை நோக்கித் திருப்புகின்றார். அவர்கள் மீண்டும் தங்கள் பழைய வாழ்க்கைக்குத் திரும்பாவண்ணம் அவர்களை மீண்டும் சந்திக்கவும், அவர்களுக்கு கடிதங்கள் (இரண்டு) எழுதவும் செய்கின்றார். இக்கடிதங்களில் மேலோங்கி நிற்கும் கருத்துரு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை. பவுலும், அன்றைய திருச்சபையாரும் கிறிஸ்துவின் வருகை மிக அருகில் இருப்பதாகவும், அது தங்கள் காலத்திலேயே நடந்தேறும் என்று நம்பினர். இந்தப் பின்புலத்தில்தான், அவரின் வருகைக்கான தயாரிப்பை அறிவுரையாகத் தருகின்றார் பவுல்: '... நம் ஆண்டவர் இயேசு தம்முடைய தூயோர் அனைவரோடும் வரும்பொழுது, நம் தந்தையாம் கடவுள்முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு, அவர்கள் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக!'

இவ்வாறாக, 'அவரை நோக்கி இருக்கும் உள்ளம்' தூய்மையில் உறுதியாக இருக்கும் என்கிறார் பவுல். இத்தூய்மை எதில் ஊற்றெடுக்கும்? 'ஒருவர் ஒருவருக்காகவும் எல்லாருக்காகவும் கொண்டுள்ள அன்பு ஆண்டவரால் வளர்க்கப்படும்போது.' இங்கே அன்பிற்கான புதிய பொருளை பவுல் தருகின்றார்: 'அன்பை ஆண்டவர் வளர்த்துப் பெருகச் செய்வாராக!'

மனிதர்களிடமிருந்து மனிதர்களை நோக்கிப் புறப்படும் அன்பு நாளாக நாளாக வேகமும், ஆழமும் குறைந்துவிடும். ஏனெனில், ஒரு குறைகுடத்தால் இன்னொரு குறைகுடத்தை நிரப்பவே முடியாது. ஆண்டவரால் வளர்க்கப்படும் அன்பு நிறைவிலிருந்து புறப்படுவதால் அது எங்கு சென்றாலும் எல்லாரையும் நிறைத்துக்கொண்டே செல்லும். இந்த அன்பு யாரையும் பயன்படுத்தாது, யாரையும் பயமுறுத்தாது, எதையும் எதிர்பார்க்காது, எதையும் பொறுத்துக்கொள்ளும், எல்லாவற்றையும் நேர்முகமாகப் பார்க்கும்.

'அவரை நோக்கி நம் உள்ளம்' இருக்கும்போது நாம் பெறுகின்ற இரண்டாவது கொடை இதுவே: 'ஆண்டவர் வளர்த்தெடுக்கும் அன்பு.'

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். 21:25-28, 34-36) நாம் மூன்று நாள்களுக்கு முன் கேட்ட நற்செய்தி வாசகமும், அதன் நீட்சியுமே. மானிட மகனின் வருகையின்போது கதிரவனிலும், நிலவிலும், விண்மீன்களிலும், வான்வெளிக் கோள்களிலும் நிகழும் மாற்றங்களைப் பட்டியலிடும் இயேசு (லூக்கா), 'உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது' என்ற அவசரமான ஆறுதலையும், ஆறுதலான அவசரத்தையும் தந்து, 'உங்கள் உள்ளங்கள் குடிவெடி, களியாட்டம், இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினால் மந்தம் அடையாதவாறு காத்துக்கொள்ள' அறிவுறுத்துகின்றார்.

நம் உள்ளம் 'குடிவெறி, களியாட்டம், கவலை' ஆகியவற்றை நோக்கி இருக்கும்போது மந்தம் அடைகிறது. எப்படி? 'மந்தநிலை' என்பதை நாம் தேக்கநிலை என்று அறிகிறோம். தட்பவெப்பநிலை மந்தமாக இருக்கக் காரணம் கதிரவனின் ஒளி தேக்கநிலை அடைவதுதான். பங்குச்சந்தை மந்தமாக இருக்கக் காரணம் நிறுவனங்களின் விற்பனை தேக்கநிலை அடைவதுதான்.

ஆக, நகர்ந்து கொண்டிருக்கும் நம்மைத் தேங்க வைப்பவை மேற்காணும் மூன்றே: 'குடிவெறி, களியாட்டம், கவலை.' நாம் குடிவெறியில் இருக்கும்போது அல்லது நிறைய மது அருந்தும்போது நம் மூளை இருப்பை அப்படியே தக்க வைக்க நினைக்கிறது. முன்னும், பின்னும் நகராமல் தடுக்கப் பார்க்கிறது. ஆனால், அப்படி ஒரு நிலை சாத்தியமே அல்ல. ஏனெனில், குடி போதை இறங்கியவடன் நாம் மீண்டும் எதார்த்தத்தiயும் அதன் மாற்றத்தையும் எதிர்கொண்டே ஆக வேண்டும். 'களியாட்டம்' என்பது எல்லாவகை நுகர்வு இன்பங்களையும் இங்கே குறிக்கிறது. நுகர்வு இன்பங்கள் நம்மை நிகழ்காலத்தில் வாழ விடாமல் எதிர்காலத்திற்குக் கூட்டிச்சென்றுவிடுகின்றன. எடுத்தக்காட்டாக, ஒரு திரைப்படம் பார்க்கும்போது இருக்கும் இன்பம், அத்திரைப்படம் காட்டும் நல்உலகம் இன்றே வந்துவிட்டதுபோன்ற ஒரு பிரம்மையை உருவாக்கி நம்மை இரண்டு மணிநேரங்கள் எதிர்காலத்தில் வாழச் செய்கிறது. 'கவலை' இதற்கு நேர்மாறானது. இது நம்மை நம் கடந்தகாலத்தோடு கட்டிவிடுகிறது.

இவ்வாறாக, 'குடிவெறி' நம்மை நிகழ்காலத்திலும், 'களியாட்டம்' நம்மை எதிர்காலத்திலும், 'கவலை' நம்மை இறந்தகாலத்திலும் நம்மைக் கட்டிவிடுவதால் நாம் அப்படியே தேங்கி விடுகிறோம். இதுதான் நம் வாழ்வின் மந்தநிலை. இந்த மந்தநிலையின் எதிர்ப்பதம்தான் 'விழிப்பாயிருந்து மன்றாடுதல்.' மற்ற நற்செய்தியாளர்கள் எல்லாம், 'விழிப்பாயிருங்கள்' என்று பதிவு செய்ய, லூக்கா மட்டும், 'விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்' என்று இறைவேண்டலையும் உடன் நிறுத்துகின்றார். போதை மறுவாழ்வ மையங்களில் சொல்லப்படும் முதல் பாடமே, 'இறைவனின் துணையை நாடுங்கள்' என்பதுதான். எதற்காக? சில நேரங்களில் நம் மனம் உறுதியில்லாமல் இருக்கிறது. தடுமாறும் மனத்திற்கு உறுதியைத் தருவது இறைவனே. ஆக, 'குடிவெறி, களியாட்டம், கவலை' ஆகியவற்றை எதிர்கொள்ள ஒரே வழி விழிப்பாயிருத்தல். அவ்விழிப்பு கண் அசரும்போது அவரை நோக்கிய நம் மன்றாட்டு.

'அவரை நோக்கி நம் உள்ளம்' இருக்கும்போது நாம் பெறுகின்ற மூன்றாவது கொடை இதுவே: 'விழித்திருத்தல்.'

ஆக,
திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறு வழியாக புதிய திருவழிபாட்டு ஆண்டுக்குள் நுழையும் நம் எண்ணம் இது ஒன்றாக இருக்கட்டும்: 'அவரை நோக்கி என் உள்ளம்.'

புதிய வீட்டிற்குள் நுழையும்போது நாம் எப்போதும் கண்களை கதவுநிலைகளை நோக்கி உயர்த்தியே நுழைகிறோம். அப்படியே இப்புதிய ஆண்டிற்குள் நுழைதலும் இருக்கட்டும்.

திருப்பாடல் ஆசிரியர்போல, 'உம்மை நோக்கியே என் உள்ளம் ஆண்டவரே' என்று அவரைப் பார்க்க, அவர் நமக்கு, 'இரக்கத்தில் கனியும் நீதி,' 'அவர் வளர்க்கும் அன்பு,' 'விழிப்பு' என மூன்று கொடைகளால் நம்மை அணி செய்வார். தளர்ச்சியில், குளிர்ச்சியில் நிற்கும் நம் வேர், தண்டு, கிளை இம்மூன்று கொடைகளால் தளிர்க்கட்டும்.

'ஆண்டவரே, உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன். என் கடவுளே, உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்.' (திபா 25:1)

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)
Faculty Member
Saint Paul's Seminary
Tiruchirappalli - 620 001

 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!