Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                             
                                          பொதுக் காலம் - 17ஆம் ஞாயிறு - 3ம் ஆண்டு
     
=================================================================================
முதல் வாசகம்

=================================================================================
என் தலைவரே, நான் இன்னும் பேச வேண்டும்; சினமடைய வேண்டாம்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 20-32

அந்நாள்களில் ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, "சோதோம் கொமோராவுக்கு எதிராகப் பெரும் கண்டனக் குரல் எழும்பியுள்ளது. அவற்றின் பாவம் மிகவும் கொடியது. என்னை வந்தடைந்த கண்டனக் குரலின்படி அவர்கள் நடந்து கொண்டார்களா இல்லையா என்று அறிந்துகொள்ள நான் இறங்கிச் சென்று பார்ப்பேன்" என்றார்.

அப்பொழுது அந்த மனிதர்கள் அவ்விடத்தை விட்டுச் சோதோமை நோக்கிச் சென்றார்கள்.

ஆபிரகாமோ ஆண்டவர் திருமுன் நின்று கொண்டிருந்தார்.

ஆபிரகாம் அவரை அணுகிக் கூறியதாவது: "தீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்து விடுவீரோ? ஒருவேளை நகரில் ஐம்பது நீதிமான்களாவது இருக்கலாம். அப்படியானால் அதிலிருக்கிற ஐம்பது நீதிமான்களை முன்னிட்டாவது அவ்விடத்தைக் காப்பாற்றாமல் அழிப்பீரோ? தீயவனோடு நீதிமானையும் அழிப்பது உமக்கு ஏற்றதன்று; நீதிமானையும் தீயவனையும் சமமாக நடத்துவது உமக்கு உகந்ததன்று. அனைத்துலகிற்கும் நீதி வழங்குபவர் நீதியுடன் தீர்ப்பு வழங்க வேண்டாமோ?" என்றார்.

அதற்கு ஆண்டவர், "நான் சோதோம் நகரில் ஐம்பது நீதிமான்கள் இருப்பதாகக் கண்டால், அவர்களின் பொருட்டு முழுவதையும் காப்பாற்றுவேன்" என்றார்.

அப்பொழுது ஆபிரகாம் மறுமொழியாக, "தூசியும் சாம்பலுமான நான் என் தலைவரோடு பேசத் துணிந்து விட்டேன்; ஒருவேளை அந்த ஐம்பது நீதிமான்களில் ஐந்து பேர் குறைவாயிருக்கலாம். ஐந்து பேர் குறைவதை முன்னிட்டு நகர் முழுவதையும் அழிப்பீரோ?" என்றார்.

அதற்கு அவர், "நான் நாற்பத்தைந்து பேரை அங்கே கண்டால் அழிக்க மாட்டேன்" என்றார்.

மீண்டும் அவர், உரையாடலைத் தொடர்ந்து, "ஒருவேளை அங்கே நாற்பது பேர் மட்டும் காணப்பட்டால் என்ன செய்வீர்?" என்று கேட்க, ஆண்டவர், "நாற்பது நீதிமான்களின் பொருட்டு அதனை அழிக்க மாட்டேன்" என்றார்.

அப்பொழுது ஆபிரகாம்: "என் தலைவரே, நான் இன்னும் பேச வேண்டும்; சினமடைய வேண்டாம். ஒருவேளை அங்கே முப்பது பேரே காணப்பட்டால்?" என, அவரும் "முப்பது பேர் அங்குக் காணப்பட்டால் அழிக்க மாட்டேன்" என்று பதிலளித்தார்.

அவர், "என் தலைவரே, உம்மோடு அடியேன் பேசத் துணிந்து விட்டேன். ஒருவேளை அங்கு இருபது பேரே காணப்பட்டால்?" என, அதற்கு அவர், "இருபது பேரை முன்னிட்டு நான் அழிக்க மாட்டேன்" என்றார்.

அதற்கு அவர், "என் தலைவரே, சினமடைய வேண்டாம்; இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் என்னைப் பேசவிடும். ஒருவேளை அங்கு பத்துப் பேர் மட்டும் காணப்பட்டால்?" என, அவர், "அந்த பத்துப் பேரை முன்னிட்டு அழிக்க மாட்டேன்" என்றார்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:138: 1-2a. 2bc-3. 6-7ab. 7c-8 (பல்லவி: 3a) Mp3
=================================================================================
 பல்லவி: ஆண்டவரே, நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்.

1 ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன். 2a உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன். பல்லவி

2bc உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர். 3 நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். பல்லவி

6 ஆண்டவரே! நீர் உன்னதத்தில் உறைபவர்; எனினும் நலிந்தோரைக் கண்ணோக்குகின்றீர்; ஆனால், செருக்குற்றோரைத் தொலையில் இருந்தே அறிந்து கொள்கின்றீர். 7ab நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும், என் உயிரைக் காக்கின்றீர்; என் எதிரிகளின் சினத்துக்கு எதிராக உமது கையை நீட்டுகின்றீர்; பல்லவி

7c உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர். 8 நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்; ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
 கடவுள் உங்களை அவரோடு உயிர்பெறச் செய்தார்.

திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 12-14

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் திருமுழுக்குப் பெற்றபோது கிறிஸ்துவோடு அடக்கம் செய்யப் பட்டீர்கள். சாவிலிருந்து அவரை உயிர்த்தெழச் செய்த கடவுளின் ஆற்றல்மீது கொண்டுள்ள நம்பிக்கையால் அவரோடு நீங்களும் உயிர் பெற்று எழுந்துள்ளீர்கள். உடலில் விருத்தசேதனம் செய்து கொள்ளாதவர்களாயும் குற்றங்கள் செய்பவர்களாயும் வாழ்ந்ததால் நீங்கள் இறந்தவர்களாய் இருந்தீர்கள். கடவுள் உங்களை அவரோடு உயிர்பெறச் செய்தார்.

நம் குற்றங்கள் அனைத்தையும் மன்னித்தருளினார். நமக்கு எதிரான ஒப்பந்த விதிகள் பல கொண்ட கடன் பத்திரத்தை அவர் அழித்துவிட்டார். அதைச் சிலுவையில் வைத்து ஆணியடித்து அறவே ஒழித்துவிட்டார்.


- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
உரோ 8: 15b

அல்லேலூயா, அல்லேலூயா! பிள்ளைகளுக்கு உரிய மனப்பான்மையையே பெற்றுக் கொண்டீர்கள். அதனால் நாம், "அப்பா, தந்தையே" என அழைக்கிறோம். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 1-13


அக்காலத்தில் இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, "ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும்" என்றார்.

அவர் அவர்களிடம், "நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள்: தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால் எங்கள் பாவங்களையும் மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்" என்று கற்பித்தார்.

மேலும் அவர் அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: "உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, 'நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு. என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை' என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். உள்ளே இருப்பவர், 'எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று; என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது' என்பார்.

எனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக்கொண்டேயிருந்தால், அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும்.

பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா? முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா?

தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி!"

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
(I தொடக்க நூல் 18: 20-32; II கொலோசையர் 2: 12-14; III லூக்கா 11: 1-3)

இறைவேண்டல் செய்வோமா?

நிகழ்வு

தொழில் சம்பந்தமாக கிராமத்திலிருந்து நகரத்திற்குச் சென்ற பெரியார் ஒருவர் தன்னுடைய வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு, நகரில் இருந்த ஒரு பெரிய உணவகத்தில் சாப்பிடச் சென்றார். அந்த உணவகம்தான் நகரத்திலேயே நல்ல உணவகம் என்று பெயர் பெற்றிருந்ததால், ஏராளமான பேர் அந்த உணவகத்திற்குச் சாப்பிட வந்திருந்தார்கள்.

கிராமத்திலிருந்து சென்ற பெரியவர் உணவகத்தில் ஓரமாக இருந்த ஓர் இருக்கையில் போய் அமர்ந்துகொண்டு, தனக்குப் பிடித்தமான உணவு வகையினைச் சொல்லிவிட்டு, உணவுக்காகக் காத்திருந்தார். சிறிதுநேரத்தில் அவர் கேட்ட உணவு வந்தது. அவர் உடனடியாகச் சாப்பிடத் தொடங்காமல், ஒரு நிமிடம் கண்களை மூடி கடவுளிடம் வேண்டிவிட்டுச் சாப்பிடத் தொடங்கினார். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த, அவர்க்கு முன்பாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒருசில விடலைப் பசங்கள் அவரிடம், "என்ன பெரியவரே! உங்கள் ஊரில் இருக்கின்ற எல்லாரும் சாப்பிடுவதற்கு முன்னம், இறைவனிடம் வேண்டிவிட்டுத்தான் சாப்பிடுவீர்களா?" என்று நக்கலாகக் கேட்டார்கள். அதற்கு அவர் அவர்களிடம், "எங்கள் ஊரில் இருக்கின்ற பன்றிகளைத் தவிர, மற்ற எல்லாரும் இறைவனிடம் வேண்டிவிட்டுத்தான் சாப்பிடத் தொடங்குவார்கள்" என்றார். இதைக்கேட்டு அந்த விடலைப் பசங்கள் வெட்கித் தலைகுனிந்து நின்றார்கள்.

மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் இறைவேண்டல் செய்யவேண்டும். ஏனென்றால், அலெஸிஸ் கரோலில் என்ற அறிஞர் குறிப்பிடுவதுபோல், ஒரு மனிதன் தனக்கான எல்லா ஆற்றலையும் இறைவேண்டலின் வழியாகவே பெறுகின்றான். இன்றைய இறைவார்த்தை இறைவேண்டலின் முக்கியத்துவத்தையும் எப்படி நாம் இறைவனிடம் வேண்டவேண்டும் என்பதையும் எடுத்துக்கூறுகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

இறைவேண்டல் செய்ய கற்றுத்தரக் கேட்கும் இயேசுவின் சீடர்கள்

நற்செய்தியில், இயேசுவின் சீடர்கள் அவரிடம் வந்து, யோவான் தன்னுடைய சீடர்க்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்ததுபோல், எங்கட்கும் கற்றுக்கொடும் என்று கேட்கின்றார்கள். இயேசு தன்னுடைய சீடர்க்கு எப்படி இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்தார் என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்கும் முன்னம், யோவான் தன்னுடைய சீடர்க்கு இறைவேண்டல் செய்ய எப்படிக் கற்றுக்கொடுத்தார் என்பதையும் அவருடைய வாழ்வு எப்படி இறைவேண்டலில் நிலைத்திருந்தது என்பதையும் குறித்துச் சிந்தித்துப் பார்ப்போம்.

நற்செய்தி நூல்கள், யோவான் எப்படி மெசியாவின் வருகைக்காக மக்களை அணியமாக்கினார் என்பதையும் எப்படித் திருமுழுக்குக் கொடுத்தார் என்பதையும் உண்மையை எப்படி உரக்கச் சொன்னார் என்பதையும்தான் அதிகமாகப் பேசுகின்றன. ஆனால், இன்றைய நற்செய்தி வாசகம் அவருடைய வாழ்வின் இன்னொரு பக்கத்தை அதாவது அவருடைய ஆன்மீக வாழ்வை எடுத்துச் சொல்வதாக இருக்கின்றது.

யோவான் தன்னுடைய சீடர்க்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்தார் எனில், அவர் எந்தளவுக்கு இறைவேண்டலில் நிலைத்திருந்திருப்பார் என்பதை நாம் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம். இப்படி அவர் இறைவேண்டலில் நிலைத்திருந்ததால்தான் என்னவோ இயேசு அவரை 'மனிதராகப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் யாருமில்லை' (லூக் 7:28) என்று சொல்கின்றார். ஆதலால், திருமுழுக்கு யோவான் இறைவேண்டலில் நிலைத்திருந்தக்கூடும். அதனாலேயே அவர் தன் சீடர்க்கு இறைவனிடம் வேண்டக் கற்றுத்தருகின்றார். இதைக் பார்த்து அல்லது கேள்விபட்ட இயேசுவிடம் சீடர்கள், அவரிடம் தங்கட்கு இறைவனிடம் வேண்டக்கற்றுத் தரக் கேட்கின்றார்கள்.

இயேசுவின் சீடர்கள் அவரிடம் எப்படி போதிக்கவேண்டும் என்றோ, எப்படிப் பேய்களை ஓட்டவேண்டுமென்றோ கேட்கவில்லை. மாறாக, அவர்கள் அவரிடம் எப்படி இறைவேண்டல் செய்யவேண்டும் என்று கேட்பது நமது கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது.

இறைவனிடம் வேண்டக் கற்றுத்தரும் இயேசு

தன்னுடைய சீடர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இயேசு அவர்கட்கு இறைவேண்டல் செய்யக் கற்றுத்தருகின்றார். அவர் கற்றுத்தரும் இறைவேண்டல் எப்படிப்பட்டது என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னம், அவர் எப்படி இறைவேண்டல் செய்பவராக இருந்தார் என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசு தன்னுடைய பணிவாழ்வின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இறைவேண்டல் செய்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. குறிப்பாக அவர் திருமுழுக்குப் பெறுகின்றபோதும் (லூக் 3:21) மக்கள் கூட்டம் அவரிடம் வருவதற்கு முன்னமும் (லூக் 5:16) பன்னிரு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுக்கும் முன்னமும் (லூக் 6:12) தன்னுடைய சீடர்கள் தன்னை எப்படிப் புரிந்துவைத்திருக்கிறார்கள் என்று கேட்பதற்கு முன்னமும் (லூக் 9:18) உருமாற்றம் அடைகின்றபோதும் (லூக் 9:29) தனியாகவும் (மாற் 1:35) இன்ன பிற வேளைகளிலும் அவர் இறைவேண்டல் செய்தார் என்று விவிலியம் மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றது. இப்படி இறைவேண்டலில் நிலைத்திருந்த இயேசுதான் தன் சீடர்க்கு இறைவேண்டல் செய்யக் கற்றுத் தருகின்றார்.

இயேசு தன் சீடர்க்குக் கற்றுத்தரும் இறைவேண்டல் இரண்டு பகுதிகளாக இருக்கின்றது. முதற்பகுதி இறைவனின் ஆட்சி இப்புவியில் வருவதற்காகவும் இரண்டாவது பகுதி நம்முடைய தேவைகட்கு வேண்டுவதாக இருக்கின்றது. உண்மைதான், எப்போதெல்லாம் நாம் இறைவனுக்கு முதலிடம் கொடுத்து, அவருடைய ஆட்சிக்காகவும் அவருடைய திருவுளம் நிறைவேறுவதற்காகவும் மன்றாடுகின்றாமோ அப்போது இறைவன் நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்வார். ஏனெனில், நம்முடைய இறைவன் நாம் கேட்கும் முன்னமே, நம்முடைய தேவைகளை அறிந்துவைத்திருப்பவர் (மத் 6:8). அப்படிப்பட்ட இறைவனை நோக்கி, அவருடைய திருவுளம் நிறைவேற வேண்டுவதே சிறப்பானதாகும்.

இறைவனிடம் தொடர்ந்து மன்றாடச் சொல்லும் இயேசு

இறைவனிடம் வேண்டுகின்றபோது அவர்க்கு முதன்மையான இடம் கொடுத்து வேண்டச் சொல்லும் இயேசு, தொடர்ந்து இறைவனிடம் மன்றாடச் சொல்கின்றார். அதைத்தான் அவர் 'கேளுங்கள் கொடுக்கப்படும்; தேடுங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் திறக்கப்படும்' என்கின்றார். இவ்வுண்மையை விளக்க அவர் சொல்லும் உவமைதான், தன்னுடைய நண்பர்க்காக இன்னொரு நண்பரிடம் அப்பம் கேட்கும் நண்பர் உவமையாகும். இவ்வுவமையில் நண்பரின் தொந்தரவின் பொருட்டு இன்னொரு நண்பர் அப்பம் தருவதாக வருகின்றது. இவ்வுவமையில் நாம் கவனிக்க வேண்டியது, கொடுக்க மனமில்லாத நண்பரே தன்னுடைய நண்பர்க்குக் கொடுக்க முன்வரும்போது, தாராளமாகத் தரும் கடவுள் தன்னிடம் கேட்போர்க்கு எவ்வளவு தருவார் என்பதாகும். ஆகையால், பிள்ளைகளாகிய நம் ஒவ்வொர்வர்க்கும் கொடைகளை வாரிவழங்கும் இறைவனிடம் நாம் தொடர்ந்து மன்றாடுவதே சிறப்பானது.

சிந்தன

'இறைவேண்டல் என்பது கடவுளின் கைகளில் நம்மை ஒப்படைத்துவிட்டு, அவருடைய திருவுளம் நிறைவேறக் காத்திருப்பது' என்பார் அன்னைத் தெரசா. உண்மைதான். கடவுளின் திருவுளம் நிறைவேற நாம் மன்றாடினால், நம்முடைய தேவைகள் நிறைவேறும் என்பது உறுதி. ஆகவே, நாம் 'இறைவா! உம்முடைய திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல, மண்ணுலகிலும் நிறைவேறுக' என்று மன்றாடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 பொதுக்காலத்தின் பதினேழாம் ஞாயிறு


I தொடக்க நூல் 18: 20-32
II கொலோசையர் 2: 12-14
III லூக்கா 11: 1-13

தளரா நம்பிக்கையும், தக்க கைம்மாறும்


இன்னும் மூன்று அடிதான்:

ஒரு மலைப்பாங்கான பகுதியில் தங்கம் இருப்பதாகக் கேள்விப்பட்ட ஒருவர் அதைப் பெரிய விலை கொடுத்து வாங்கினார். நிலத்தை வாங்கியதும் அவர் தனியாளாகவே தோண்டத் தொடங்கினார்.

பல நாள்களாக நிலத்தைத் தோண்டிய அவர், அதில் தங்கம் எதுவும் கிடைக்காததால், தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என நினைத்துக்கொண்டு அந்த நிலத்தை விற்க முடிவு செய்தார். அப்போது அந்த நிலத்தில் தங்கம் இருப்பதாகச் சொன்னவர் அவரிடம், "தயவு செய்து இன்னும் மூன்று அடி நிலத்தைத் தோண்டிப் பாருங்ங்கள். நிச்சயம் தங்கம் கிடைக்கும்" என்றார். அதற்கு நிலத்தை விலைகொடுத்து வாங்கியவர், "இவ்வளவு தூரம் தோண்டியும் கிடைக்காத தங்கம், இனிமேலும் கிடைக்கவா போகிறது?" என்று சொல்லி, அந்த நிலத்தைத் தனக்குத் தெரிந்த ஒருவரிடம் விலைக்கு விற்றுவிட்டார்.

புதிதாக நிலத்தை விலைக்கு வாங்கியவர், சரியாக மூன்று அடிதான் தோண்டினார். மூன்றாவது அடியில் அவருக்குத் தங்கம் கிடைத்தது. இச்செய்தியை அறிந்த முன்னவர், "இன்னும் மூன்று அடி நிலத்தைத் தோண்டியிருந்தால், தங்கம் கிடைத்திருக்குமே! இப்படிப் பாதியில் முயற்சியைக் கைவிட்டு, எல்லாவற்றையும் கோட்டை விட்டுவிட்டோமோ!" என்று மிகவும் வருந்தினார்.

ஆம், எந்தவொரு செயலையும் தளரா நம்பிக்கையுடன் செய்யவேண்டும். அப்படி நாம் செய்தால் அதற்குத் தக்க கைம்மாறு உண்டு. அதைத்தான் இந்தநிகழ்வும், பொதுக் காலத்தின் பதினேழாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. அது குறித்து நாம் சிந்திப்போம்.

தளரா நம்பிக்கையுடன் இறைவேண்டல்:

"ஒருவர் இறைவேண்டலே வேண்டாம் என்று அதை விட்டு விலகியிருந்தால், அவர் தனக்குக் கிடைக்கும் மிகப்பெரிய ஆற்றலிலிருந்து விலகி இருக்கின்றார் என்று பொருள்" என்பார் பில்லி சண்டே என்ற பிரபல மறைப்போதகர். இயேசு இறைமகன், அவர் மூவொரு கடவுளில் இரண்டாம் ஆள். அப்படியிருந்தும் அவர் கடவுளோடு இறைவேண்டல் மூலம் ஒன்றித்திருந்தார். தவிர, ஒவ்வொரு முதன்மையான நிகழ்விற்கு முன்பும் அவர் இறைவனிடம் வேண்டினார். இதையெல்லாம் பார்த்த அவரது சீடர்கள் தங்களுக்கு இறைவனிடம் வேண்டுவதற்குக் கற்றுத்தருமாறு கேட்கின்றனர். இயேசு கற்றுத் தரும் இறைவேண்டலில் மிகுதியான சொற்கள் இல்லை; இரத்தினச் சுருக்கமாய் மிகவும் குறைவான சொற்களே உள்ளன. ஆனாலும் ஓர் அணு அளவுக்கு அவ்வளவு வீரியமுள்ளதாக இருக்கின்றது.

இறைவனுக்கு முதன்மையான இடம் கொடுத்து, இயேசு தம் சீடருக்குக் கற்றுத்தரும் இறைவேண்டலுக்குப் பிறகு, அவர் அவர்களிடம், இறைவனிடம் தளரா நம்பிக்கையோடு வேண்ட வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்திக் கூறுகின்றார். அதற்காக அவர் ஓர் உவமையையும் சொல்கின்றார். இயேசு சொல்லும் அந்த உவமையில், நள்ளிரவில் தன் நண்பரிடம் அப்பம் கேட்டு வரும் மனிதர், ஒரு பிச்சைக்காரரைப் போன்று தன் நண்பரிடம் அப்பம் வேண்டும் என்று கேட்டு, இறுதியில் பெற்றுக்கொள்கின்றார். முதல் வாசகத்தில் ஆபிரகாம் கடவுளிடம் சோதோம் கொமோராவில் ஐம்பது நேர்மையாளர்கள் இருந்தால் அவற்றை அழிக்க மாட்டீர்தானே? என்று கேட்டுவிட்டுத் தொடர்ந்து 45, 40, 30, 20, 10 நேர்மையாளர்கள் இருந்தால் அவற்றை அழிக்கமாட்டீர்தானே? என்று கேட்கின்றார். அந்த அளவுக்கு அவர் தளரா நம்பிக்கையோடு ஆண்டவரிடம் வேண்டுகின்றார்.

ஆகையால், நாம் இறைவனிடம் வேண்டும்போது தளரா நம்பிக்கையோடு வேண்ட வேண்டும். அப்படி வேண்டினால் அதற்குத் தக்க கைம்மாறு உண்டு.

பிறருக்காக வேண்டுவதே முழுமையான இறைவேண்டல்:

ஒருவர் செய்யும் இறைவேண்டல் எப்போது முழுமை பெறுகின்றது எனில், அவர் தனக்காக அல்ல, பிறருக்காக வேண்டுகின்றபோதுதான். இதற்கு இயேசு நமக்கு மிகப்பெரிய முன்மாதிரி. பெரிய குருவாம் இயேசுவின் இறைவேண்டல் என அழைக்கப்படும் இறைவாக்குப் பகுதியில் அவர், "அவர்களுக்காக நான் வேண்டுகிறேன்" (யோவா 17:9) என்கிறார். இவ்வாறு இயேசு தன்னிடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்காக வேண்டுவதன் மூலம், ஒவ்வொருவரும் பிறருக்காக வேண்ட வேண்டும் என்ற செய்தியைத் தருகின்றார்.

நற்செய்தியில் நள்ளிரவில் அப்பம் கேட்டு வரும் மனிதர் தனக்காக அப்பம் கேட்டு வரவில்லை; மாறாகத் தன் நண்பருக்காக அப்பம் கேட்டு வருகின்றார். அப்படியெனில், இறைவனிடம் நாம் வேண்டுகின்றபோது தளரா நம்பிக்கையுடன் வேண்டவேண்டும். அதே வேளையில் நமக்காக (மட்டும்) அல்ல, பிறருக்காக(வும்) வேண்ட வேண்டும். இக்கருத்திற்கு வலுசேர்ப்பதாய் இருக்கின்றது இன்றைய முதல் வாசகம்.

முதல் வாசகத்தில் ஆபிரகாம் கடவுளிடம் கடவுளிடம் வேண்டுகின்றபோது தனக்காக வேண்டவில்லை. மாறாக, அவர் பாவம் மிகுதியாக இருந்த சோதோம் கொமோராவில் இருந்த நேர்மையாளர்களுக்காக வேண்டுகின்றார். அதுவும் தளரா நம்பிக்கையோடு வேண்டுகின்றார். எனவே, நாம் கடவுளிடம் வேண்டுகின்றபோது இயேசுவைப் போன்று, ஆபிரகாமைப் போன்று நமக்காக மட்டுமல்ல, பிறருக்காகவும் வேண்டவேண்டும். அப்போதுதான் நமது இறைவேண்டல் முழுமை பெறும்.

பேரன்பு மிக்கவர் பெரியன செய்வார்:

கடவுளிடம் வேண்டும்போது தளரா நம்பிக்கையோடும், பிறருக்காகவும் வேண்ட வேண்டும் என்று சிந்தித்தோம். இங்கு நமக்கொரு கேள்வி எழலாம். அது என்னவெனில், கடவுளிடம் நாம் தொடர்ந்து அல்லது தளாராமல் மன்றாடினால்தான் அவர் நமது வேண்டுதலைக் கேட்பாரா? ஒரே ஒருமுறை மட்டும் வேண்டினால் அவர் நமது வேண்டுதலைக் கேட்கமாட்டாரா? என்பதுதான் அந்தக் கேள்வி. கடவுளிடம் நாம் தொடர்ந்து கேட்டால்தான் அவர் தருவார் என்கிற அளவுக்கு அவர் ஒன்றும் கல்நெஞ்சக் காரர் இல்லை. ஏனெனில், மனிதர்களே தம் பிள்ளைகள் மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுக்காதபோது, கடவுள் மட்டும் அப்படிக் கொடுப்பாரா? நிச்சயமாக இல்லை. மாறாக, அவர் தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியை கொடுப்பார். ஏனெனில், அவர் பேரன்பு மிக்கவர்; அதைவிடவும் அவர் நமது குற்றங்களை மன்னிக்கின்றவர்.

கொலோசையருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல், "கடவுள் நம் குற்றங்கள் அனைத்தையும் மன்னித்தருளினார்" என்கிறார். இது எவ்வளவு உண்மையான வார்த்தைகள். திருப்பாடல் ஆசிரியர் சொல்வது, கடவுள் மட்டும் நமது குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால் யார்தான் அவர் திருமுன் நிலைத்து நிற்க முடியும்? அவரோ மன்னிப்பு அளிப்பவர் (திபா 130: 3-4). அவர் மன்னிப்பு அளிப்பவர் என்பதால்தான் சோதோம் கொமோராவில் ஐம்பது நீதிமான்கள் இருந்தால் போதும் என்ற நிலையிலிருந்து, பத்து நீதிமான்கள் இருந்தால் போதும் என்ற நிலைக்கு வருகின்றார். கடவுள் நாம் செய்த குற்றங்களையெல்லாம் மன்னிக்கக் காரணம், அவர் பேரன்பு மிக்கவராய் இருக்கின்றார் என்பதால்தான்.

எனவே, பேரன்பு மிக்கவரும், நம்மைத் தாராளமாய் மன்னிப்பவருமான ஆண்டவரிடம் நாம் தளரா மனத்துடனும், அதே நேரத்தில் பிறருக்காகவும் மன்றாடி இறையாசியைப் பெறுவோம்.

சிந்தனைக்கு:

"உண்மையான மகிழ்ச்சி ஒருவருக்கு உள்ளத் தூய்மையினாலும் தளரா இறைவேண்டலினாலுமே கிடைக்கும்" என்பார் அசிசி நகர்ப் புனித பிரான்சிஸ். எனவே, நாம் இறைவனிடம் தளரா நம்பிக்கையோடு மன்றாடுவோம்; அதுவும் பிறருக்காக மன்றாடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


=================================================================================
திருப்பலி முன்னுரை
=================================================================================
கேளுங்கள் தரப்படும் என்று அன்பாய் அழைத்து இறைவேண்டல் செய்யும் முறையை நமக்குக் கூறும் பொதுக்காலம் 17ம் ஞாயிறு திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம்.

இறைவேண்டல் என்பது நமது தேவைகளையும் நமது துன்பங்களையும் மட்டும் இறைவனிடம் கூறுவது அல்ல; தவறான பழக்கங்களையும் பாவங்களையும் செய்த சோதோம், கொமோரா மக்களுக்காக இறைவனிடம் பரிந்து, இறைவேண்டல் செய்த ஆபிரகாம் போல, தம்மை காட்டிக்கொடுக்க இருக்கிறார்கள் என அறிந்தும் இறைவனிடம் இரவு முழுவதும் இறைவனிடம் பரிந்து இறைவேண்டல் செய்த இயேசுவைப் போல இறைவேண்டல் செய்வோம்.

இன்றைய முதல் வாசகத்தில் இறைவனின் சினம் சோதோம், கொமோராவுக்கு எதிராக எழுவதையும் அவர்களை காக்க ஆபிரகாம் இறைவனிடம் வேண்டுவதையும் காண்கின்றோம். சோதோம், கொமோரா நகர்களுக்கு எதிரான கோபத்தை ஆபிரகாமிடம் இறைவன் வெளிப்படுத்துவதே ஆபிரகாமின் அன்பின் தன்மையை வெளிப்படுத்தத்தான். இறைவனின் பாதம் பணிந்து நின்ற ஆபிரகாம் போல நாமும் நமது நலம் மட்டுமல்லாது, நமது நாட்டின் நலனுக்காகவும் நாம் வெறுக்கும் மக்களுக்காகவும் இறைவேண்டல் செய்வோம்.

"கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்" என்று நம் நம்பிக்கையை உயிர் பெறச் செய்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். இயேசு கற்றுத் தரும் இறைவேண்டல் வார்த்தைகள் அவரை அன்பு செய்வதற்கான வழிகள்; வெறும் வார்த்தைகளின் தொகுப்பு அல்ல. ஒவ்வொரு வார்த்தைகளும் வாழ்வின் தத்துவத்தைக் கூறி நம்மை செயல்பட வைக்கும் ஊக்கிகள். விடாமுயற்சியோடு கேட்கும் ஜெபம் தொல்லைகளின் பொருட்டாவது நமக்கு நிறைவேறும் என்கிறார் இயேசு. இருப்பினும் நமது தேவைகளில் சுயநலம் மட்டுமே மேலோங்காமல், அன்புடன் கூடிய ஆசைகளுக்காய் வேண்டுவோம். இச்சிந்தனைகளைத் தாங்கி இப்பலியில் இணைவோம்.



மன்றாட்டுகள்


இறைவேண்டலைக் கற்றுக் கொடுத்தவரே எம் இறைவா!


எம் திருஅவையை வழிநடத்தவும், இறைவேண்டலில் மக்களைப் பண்படுத்தவும் நீர் தேர்ந்து கொண்ட எம் திருஅவை தலைவர்கள், பணியாளர்கள், உமக்கும் மக்களுக்கும் இடையே இறைவேண்டலின் உண்மைப் பொருளை உணர்த்தி மக்களை வழிநடத்தும் கருவிகளாக திகழவேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.


அன்பின் ஆண்டவரே, உம் ஆட்சி வருக என எதிர்பார்த்திருக்கும் நாங்கள், எம் நாட்டின் ஆட்சியாளர்களை உம் கரத்தில் ஒப்படைக்கின்றோம். மாநிலங்களுக்கிடையே சமதர்மம் பேணவும், புதுமை, வளர்ச்சி எனும் பெயரில் இயற்கையை சிதைக்காமலும் கல்வியை எளிமையாக்கவும் மக்கள் நலத்திட்டங்களை பாகுபாடின்றி செயல்படுத்தி, நாட்டின் முன்னேற்றத்தில் அக்கறை கொள்ள ஞானம் தரவேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.


பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.


கேளுங்கள் தரப்படும் என்றவரே எம் இறைவா!


வெறும் அடுக்கடுக்கான, அலங்காரமான வார்த்தைகளை ஜெபம் என்று எண்ணாமல், எங்கள் சொல்லாலும் செயலாலும் பிறரன்பு பணியாலும் நாங்கள் சிறந்து விளங்க ஆற்றலும் மனவலிமையும் தர வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.


தூய ஆவியைப் பொழிபவரே!


இறையாட்சியையும் அது சார்ந்த நீதியையும் முதன்மையாக நாங்கள் விரும்பித் தேடவும், ஒருவரையொருவர் மன்னிக்கவும், மன்னிப்பின் மூலம் அரசில் நுழையவும் வரம் வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.


தேடுங்கள், கண்டடைவீர்கள் என்றவரே எம் இறைவா!


எம் பகுதியில் நிலவும் குடிநீர் பற்றாக்குறை உம் ஆசியான மழையால் தீர்ந்து விவசாயம் செழிக்கவும், குடும்பங்களில் அமைதி, மகிழ்ச்சி பெருகவும், படிக்கும் மாணவர்கள் ஞானத்தோடு படிக்கவும், வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தை வரம் வேண்டுவோர் உமதருளால் பெற்று மகிழவும் வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.



நன்றி: ஆசிரியை. திருமதி. ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.



=================================================================================
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
=================================================================================
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

வேண்டலை கேட்பவராம் இறைவா,
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமக்கு உகந்தவர்களாக வாழவும், உமது திருச்சபையின் புதுவாழ்வுக்காக உழைக்கவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

எமக்காய் எப்பொழுதும் கரம் விரித்துக் காத்திருக்கும் என் இறைவா!
செபம் என்பது உமக்கும் எமக்கும் உள்ள உன்னத உரையாடல். அதில் கேட்டும் கிடைக்காமல் போனதும் உண்டு. கேட்காமல் நீர் வாரிவழங்கியது பலவும் உண்டு என்பதனை உணர்ந்து என்ன நேர்த்தாலும் நன்றியோடு உம்மைப் போற்றிட, தன்னலம் பாராமல் அனைவருக்குமாய் செபித்திட நல்மனம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அன்புத்தந்தையே இறைவா!
உம்முடைய பிள்ளைகளாகும் அருளை எங்களுக்குத் தந்து கிறிஸ்துவின் ஒளியில் நடக்க எங்களை அழைத்துள்ளீர். பொய்மை என்னும் இருளில் நாங்கள் சிக்கிக் கொள்ளாமல், உண்மையின் பேரொளியில் நிலைத்து நின்றிட எங்களுக்கு அருள் புரியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அமைதி அளிப்பவராம் இறைவா,
எம் இளையோர் இளமையில் உம்மை அதிகமாகத் தேடவும் இறையரசின் மதிப்பீடுகளைத் தனதாக்கி, தங்கள் வாழ்வால், கிறிஸ்துவுக்கும் சமூகத்திற்கும் சான்றுப் பகர்ந்திடத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

செபிக்கக் கற்றுக்கொடுத்த ஆசிரியரான இயேசுவே,
நீர் கற்றுத் தந்ததுபோல நாள்தோறும் நாங்கள் செபிக்க எங்களுக்கு செப ஆர்வத்தைத் தந்தருளும். நாங்கள் நாள்தோறும் தந்தையைப் போற்றவும், உமக்கு நன்றி கூறவும், தூய ஆவியில் மகிழவும், அன்னை மரியாவை வாழ்த்தவும் எங்களுக்கு வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

குடும்பங்களின் பாதுகாவலான எம் இறைவா!
எம் குடும்பங்களில் உள்ள எம் பெற்றோர், பெரியோர், நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் சமாதானத்தோடும், ஒற்றுமையோடும் பிரிவினைகள் கருத்துவேறுபாடுகள் இல்லாமல் வாழத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

திட்டமிட்டு செயல்படுத்துபவராம் இறைவா,
உம்மைப் போற்றுகிறோம். மார்த்தாவின் அறியாமையை அவருக்கு அன்புடன் சுட்டிக்காட்டியதுபோல, எங்களின் அறியாமையையும், குறை காணும் மனநிலையையும் சுட்டிக்காட்டியருளும். இதனால், நாங்கள் சரியானவைகளை உணரும் ஆற்றலை உமது தூய ஆவியால் பெற்றுக்கொள்ள வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!