Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                             year B  
                                                         பொதுக்காலம் 17ம் - ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இம்மக்கள் உண்ட பின்னும் மீதி இருக்கும்.

அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 4: 42-44

அந்நாள்களில்

பாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு மனிதர் புது தானியத்தில் செய்யப்பட்ட இருபது வாற்கோதுமை அப்பங்களையும், தம் கோணிப் பையில் முற்றிய தானியக் கதிர்களையும் கடவுளின் அடியவரிடம் கொண்டு வந்தார். எலிசா, "மக்களுக்கு உண்ணக் கொடு" என்றார். அவருடைய பணியாளன், "இந்த நூறு பேருக்கு இதை நான் எப்படிப் பரிமாறுவேன்?" என்றான்.

அவரோ, "இவற்றை இம்மக்களுக்கு உண்ணக் கொடு. ஏனெனில் "உண்ட பின்னும் மீதி இருக்கும்" என்று ஆண்டவர் கூறுகிறார்" என்றார். அவ்வாறே அவன் அவர்களுக்குப் பரிமாற, அவர்கள் உண்டனர். ஆண்டவரது வாக்கின்படி மீதியும் இருந்தது.

ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல்திபா 145: 10-11. 15-16. 17-18 (பல்லவி: 16) Mp3
=================================================================================


பல்லவி: ஆண்டவரே, எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர்.
10
ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.
11
அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். - பல்லவி

15
எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன; தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர்.
16
நீர் உமது கையைத் திறந்து எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர். - பல்லவி

17
ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே.
18
தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். - பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
 ஒரே எதிர்நோக்கு இருப்பதுபோல, உடலும் ஒன்றே; ஆண்டவரும் ஒருவரே; திருமுழுக்கும் ஒன்றே.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-6

சகோதரர் சகோதரிகளே,

ஆண்டவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்; நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள். முழு மனத் தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரை ஒருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.

ஒரே எதிர்நோக்கு இருப்பதுபோல, உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவர் ஒருவரே; நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே; திருமுழுக்கு ஒன்றே. எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே; அவர் எல்லாருக்கும் மேலானவர்; எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்; எல்லாருக்குள்ளும் இருப்பவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
லூக் 7: 16

அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
அனைவரும் வயிறார உண்டனர்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-15

அக்காலத்தில்

இயேசு கலிலேயக் கடலைக் கடந்து மறு கரைக்குச் சென்றார். அதற்குத் திபேரியக் கடல் என்றும் பெயர் உண்டு. உடல் நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின்தொடர்ந்தனர். இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார். யூதருடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது.

இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு, "இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?" என்று பிலிப்பிடம் கேட்டார். தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார்.

பிலிப்பு மறு மொழியாக, "இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே" என்றார். அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா, "இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?" என்றார்.

இயேசு, "மக்களை அமரச் செய்யுங்கள்" என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக் குறைய ஐயாயிரம்.

இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டியமட்டும் கிடைத்தது. அவர்கள் வயிறார உண்டபின், "ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்" என்று தம் சீடரிடம் கூறினார். மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள்.

இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், "உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே" என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக்கொண்டு போய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================்சத்திற்கு
"
பொதுக்காலம் பதினேழாம் ஞாயிறு


I 2 அரசர்கள் 4: 42-44
II எபேசியர் 4: 1-6
III யோவான் 6: 1-15

"அன்புடன் தாங்கி, அமைதியுடன் ஒன்றிணைந்து வாழ்வோம்"


உங்களுக்குக் குஞ்சரம் அம்மாவைத் தெரியுமா? அப்படியானால் நீங்கள் 1885 ஆம் ஆண்டிலிருந்து 1890 ஆம் ஆண்டுவரை தமிழகத்தில் ஏற்பட்ட தாது வருடப் பஞ்சத்தைப் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். உணவு கிடைக்காமல் புற்றில் எறும்புகள் சேர்த்து வைத்திருந்த அரிசியைத் தின்றும், மூன்றுவேளையும் முருங்கைக் கீரையை அவித்துத் தின்ற காலமது. கண்முன்னே ஒட்டிய வயிறுடன் கணவன், மனைவி, பிள்ளைகள்.. இதில் முதலில் யார் முதலில் இறப்பாரோ என்று உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்த மிகக் கொடுமையான அந்தக் காலக்கட்டத்தில், மதுரையில் உள்ள வடக்கு ஆவணி மூல வீதியில் வாழ்ந்தவர்தான் குஞ்சரம் அம்மா. தாதி குலத்தைச் சார்ந்த இவரின் அழகில் மயங்காதவர் யாரும் கிடையாது. மேலும் அக்காலத்தில் இவர் செல்வச் சீமாட்டியாகவே இருந்தார்.

இந்நிலையில் ஒவ்வொரு நாளும் மக்கள் பட்டினியால் செத்துக்கொண்டிருப்பதைப் பார்த்து மனம் கசிந்து, அவர்களுக்குக் கஞ்சி காயச்சி ஊற்ற முடிவு செய்தார் இவர். முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் கஞ்சி காய்ச்சி ஊற்றி வந்த இவர், மக்கள் நீண்டதொரு வரிசையில் வருவதைப் பார்த்துவிட்டு மூன்று பெரிய பாத்திரத்தில் கஞ்சி காய்ச்சி ஊற்றினார். இதற்காக இவர் தன்னிடமிருந்த இரண்டு பெரிய வீடுகள், நகைகள், ஆபரணங்கள் என எல்லாவற்றையும் விற்றார். ஒருசில பணக்காரர்கள் இவர் செய்துவந்த இரக்கச் செயலைப் பார்த்துவிட்டு, "இவருக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை?" என்றெல்லாம் பேசினர். இவர் அவர்கள் பேசியதைக் கண்டுகொள்ளாமல், தொடர்ந்து மக்களுக்குக் கஞ்சி காய்ச்சிக் கொடுத்துக்கொண்டு வந்தார். பஞ்சத்தின் கோர தாண்டவத்தைப் பார்த்துவிட்டு, அப்பொழுது மதுரையில் மாவட்ட ஆட்சியராக இருந்தவர், ஆறாவது வாரத்திலிருந்து மூன்று இடங்களில் காஞ்சி காட்சி ஊற்ற ஏற்பாடு செய்தார். அதற்கெல்லாம் குஞ்சரம் அம்மாவே மூல காரணமாக இருந்தார். ஏறக்குறைய பதின்மூன்று மாதங்கள் குஞ்சரம் அம்மாவின் வீட்டில் இருந்த அடுப்பு அணையாமல் எரிந்தது. அதன்பிறகு அவரிடம் மக்களுக்குக் கஞ்சி காய்ச்சிக் கொடுக்க எதுவும் இல்லாமல் போனது.

ஒருவழியாகத் தாது வருடம் முடிந்தது. அதற்குப் பின் வந்த இரண்டாம் மாதத்தில் குஞ்சரம் அம்மா இருந்தார். அப்பொழுது வடக்கு ஆவணி வீதியில் கூடிய கூட்டம், மதுரையில் கொண்டாடப்படும் திருவிழாவிற்கு கூடும் கூட்டத்திற்கு இணையானதாக இருந்தது குறிப்புகள் சொல்கின்றன. ஆம், குஞ்சரம் அம்மா மக்களின் துன்பத்தைக் கண்டு மனமிரங்கி, அவர்களுக்கு உணவு தந்தார். அதனால்தான் அவருடைய இறப்பின்பொழுது, அவ்வளவு கூட்டம் கூட்டியது. பொதுக்காலம் பதினேழாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, பசியோடு இருப்பவரை அன்புடன் தாங்கிக்கொள்ள அழைப்புத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம் .

உணவின்றித் தவித்த தவிக்கும் மக்கள்

ஊர்ப்புறங்களில் இப்படியொரு பழமொழி சொல்வதுண்டு: "நரி வலம் வந்தால் என்ன, இடம் வந்தால் என்ன. நம்மீது விழுந்து பிடுங்காது இருந்தால் போதும்." யாரும் எப்படியும் இருக்கட்டும், நான் நன்றாக இருந்தால் போதும் என்பதுதான் இந்தப் பழமொழி உணர்த்தும் உண்மை. இன்றைக்குப் பலர், "நம்முடைய வீட்டில் அடுப்பு எரிந்தால் போதும்; நாம் நன்றாக இருந்தால் போதும். எவரும் எக்கேடு கெட்டும் போகட்டும்" என்று தன்னலத்தோடு வாழ்வதைக் காண முடிகின்றது. இன்னும் ஒருசிலர் தாங்கள் நன்றாக இருப்பதால், எல்லாரும் நன்றாக இருப்பார்கள் என்ற குறுகிய மனப்பான்மையோடு வாழ்வதையும் காண முடிகின்றது. இன்றைக்கும் ஒருவேளை உணவுகூடக் கிடைக்காமல் பட்டினி கிடக்கும் மக்கள் உலகில் ஏராளம் உண்டு. இது யாரும் மறுக்க முடியாத உண்மை. இந்நிலை இயேசுவின் காலத்திலும் அதற்கு முந்தைய காலத்திலும் இருந்திருக்கும்.

இந்தப் பின்னணியில்தான் இயேசு தன் சீடர்களிடம், "இன்று தேவையான உணவை எங்களுக்குத் தரும்" (மத் 6: 11) என்று இறைவனிடம் வேண்டக் கற்றுத் தருகின்றார். தமிழ் இலக்கியத்தில்கூட, "உண்டி (உணவு) கொடுத்தோர், உயிர் கொடுத்தோர்" என்று சொல்லப்படுகின்றது. உயிரைக்கொடுப்பவர் கடவுள். அப்படியெனில், ஒருவர் பசியோடு இருக்கின்ற ஒருவருக்கு உணவு கொடுப்பதன் மூலம், அவர் கடவுளாகின்றார் என்பதே இதில் பொதிந்துள்ள உண்மை. ஆதலால், பசியோடு இருக்கின்ற மக்களுக்கு உணவிடவேண்டும். அப்படி நாம் உணவிடுவதன் மூலம் கடவுளின் தூதர்களாக மாறுகின்றோம் என்பது நம் மனத்தில் பதிய வைக்கவேண்டிய செய்தி.

சீடர்களின் தட்டிக்கழிப்பும், இயேசுவின் பரிவும்

பசியோடு இருப்பவருக்கு உணவதன் மூலம் ஒருவர் கடவுளின் தூதராக - கடவுளாக மாறுகின்றார் என்று சிந்தித்தோம். இன்றைய முதல்வாசகத்தில் இறைவாக்கினர் எலியா இருபது வாற்கோதுமை அப்பங்களைக் கொண்டு நூறு பேருக்கு உணவளிப்பதையும், நற்செய்தி வாசகத்தில், இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு, பெண்கள் மற்றும் குழந்தைகள் நீங்கலாக ஐயாயிரம் பேருக்கு உணவளிப்பதையும் குறித்து வாசிக்கின்றோம்.

தன்னுடைய போதனையைக் கேட்க வந்த மக்களுக்கு இயேசு உணவளிப்பதற்கு முன்பாக, இயேசுவின் சீடர்கள் அப்பிரச்சனையை எப்படி அணுகினார்கள் என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம். முதலாவதாக, மாற்கு நற்செய்தியின்படி இயேசுவின் சீடர்கள் அவரிடம், "...உண்பதற்கு ஏதாவது அவர்களே வாங்கிக்கொள்ளுமாறு நீர் மக்களை அனுப்பி விடும்" (மாற் 6: 35-36) என்கிறார்கள். இது சீடர்களின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகின்றது. அடுத்ததாக, பிலிப்பு இயேசுவிடம், "இருநூறு தெனாரியத்த்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே" (யோவா 6:7) என்கிறார். இது பணமிருந்தால் எதையும் செய்துவிட என்ன எண்ணத்தை வெளிப்படுத்துவதாக இருக்கின்றது.

இதற்கு அடுத்ததாக அந்திரேயா, "...ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால், இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்" என்கிறார். அந்திரேயாவின் வார்த்தைகள் எலியாவின் பணியாளர் பேசும், "இந்த நூறு பேருக்கு இதை நான் எப்படிப் பரிமாறுவேன்?" என்ற வார்த்தைகளைப் பிரதிபலிக்கின்றன. மேலும் அந்திரேயாவின் வார்த்தைகளில் இயலாமேயே வெளிப்படுகின்றது. இப்படித் தன் சீடர்கள் தங்கள் இயலாமையைச் சொல்லிக்கொண்டு இருக்கும்பொழுது, இயேசு சிறுவன் கொடுத்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அமர்ந்திருந்தோருக்குக் கொடுக்கின்றார். இதனால் எல்லாரும் வயிறார உண்டது மட்டுமல்லாது. எஞ்சியதைப் பன்னிரண்டு கூடைகளில் நிரம்புகின்றார்கள்.

இயேசு செய்த இந்த வல்ல செயல் நான்கு நற்செய்தி நூல்களில் இடம்பெறுவதால் இது உண்மை என நிரூபணமாகின்றது. மேலும் நம்மிடம் இருப்பது குறைவாக இருந்தாலும், அதை ஆண்டவரிடம் கொடுத்தால், அது நிறைவாக மாறும் என்ற உண்மையானது நமக்கு உணர்த்தப்படுகின்றது

வறியவர்களை அன்போடு தாங்குவோம்

நம்மிடம் இருப்பது குறைவாக இருந்தாலும், அதைக் கடவுளின் கைகளில் கொடுத்தால் நிறைவாக மாறும்; பட்டினி என்பது இல்லாமல் போகும் என்பதை நற்செய்தி வாசகமும்; ஏன், முதல் நமக்கு உணர்த்தியதைக் குறித்துச் சிந்தித்தோம். இப்படி நம்மிடம் இருப்பதைக் கடவுளின் கையில், அல்லது அவரது மக்களின் கையில் கொடுப்பதற்கு, இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் சொல்வது போன்று, வறியவர்களை அன்புடன் தாங்குவது தேவையான ஒன்றாக இருக்கின்றது. வறியவரை அன்பு தாங்குவதற்கு, எனக்கு அடுத்திருப்பவர் கிறிஸ்துவின் உடலில் ஓர் உறுப்பாக இருக்கின்றார் (1 கொரி 12: 12) என்ற எண்ணமானது நமக்கு இருக்கவேண்டும்.

நம்முடைய உடலில் உள்ள ஓர் உறுப்பு பாதிக்கப்பட்டுவிட்டால், அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம். மாறாக, அதற்கு ஏதாவது செய்வோம். அதைப் போன்று கிறிஸ்து என்ற உடலின் உறுப்பாய் இருக்கும் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கின்றபோது நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காமல் ஏதாவது செய்ய வேண்டும்; அவரை அன்போடு தாங்க வேண்டும். எனவே, நாம் இயேசு எப்படி பசியோடு இருந்தவர்மீது பரிவோடு கொண்டு, அவர்களுக்கு உணவளித்து, அவர்களை அன்புடன் தான்கினாரோ, அப்படி நாமும் வறியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து, அவர்களை அன்புடன் தாங்க முயற்சி செய்வோம்.

சிந்தனை

"உன்னால் ஆயிரம் பேருக்கு உணவு கொடுக்க முடியாவிட்டாலும் ஒருவருக்காவது உணவு கொடுக்கலாமே" என்பார் கொல்கொத்தா நகர்ப் புனித தெரசா. ஆகையால், பசியோடு இருப்பவருக்கு உணவளித்து, பசி பட்டினியில்லா உலகை உருவாக்குவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மக்களுக்கு உணவளித்த இயேசு!

ஒரு தந்தை தன்னுடைய மகன் பதின்வயதைக் கடந்து இளைஞனாக மாறியதும், அவனிடம் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து, "இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு சந்தைக்குச் சென்று தொழில் செய்து வா, இனிமேலும் நீ என்னையே நம்பியிராமல் உன்னுடைய சொந்தக் காலில் நிற்கப் பார்" என்று சொல்லி அனுப்பிவைத்தார். அந்த இளைஞனும் தந்தை கொடுத்த பணத்தை வைத்துக்கொண்டு சந்தைக்குச் சென்றான்.

அவன் சந்தைக்குச் செல்லும் வழியில் கந்தல் ஆடையோடும் மெலிந்த தேகத்தோடும் ஒருவன் மரத்தடியில் படுத்துக்கிடந்தான். இளைஞன் அந்த மனிதனைப் பார்த்தபோது, அவன் சாப்பிட்டே பலநாட்கள் ஆனது போன்று தெரிந்தது. உடனே அவன் அருகிலிருந்த உணவகத்திற்குச் சென்று, தந்தை அவனுக்கு தொழில் செய்வதற்குக் கொடுத்த பணத்தை எடுத்துக் கொடுத்து, உணவு வாங்கி வந்து, அதனை அந்த மனிதனுக்குச் சாப்பிடக் கொடுத்தான். இளைஞன் வாங்கிக்கொடுத்த உணவினைச் சாப்பிட்டதும், அந்த மனிதன் உடல் வலிமை பெற்று எழுந்து உட்கார்ந்தான். இளைஞன் தன்னிடம் இருந்த மீத பணத்தையும் அந்த மனிதனிடமே கொடுத்து, அதனை அவனுடைய உணவுக்காகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு. வீட்டுக்குத் திரும்பி வந்தான்.

வீட்டு வாசலில் அவனுடைய தந்தை நின்றுகொண்டிருந்தார். தன்னுடைய மகன் வருவதைப் பார்த்த தந்தை அவனிடம், "மகனே! இன்றைக்குத் தொழில் எப்படி இருந்தது, தொழிலில் ஏதாவது இலாபம் ஈட்டினாயா?" என்று கேட்டார். அதற்கு அவன், "இன்றைக்கு நீங்கள் கொடுத்த பணத்தை வைத்துக்கொண்டு தொழில் எதுவும் செய்யவில்லை, ஆனால் பசியாய் இருந்த ஏழைக்கு உணவு கொடுத்தேன்" என்றான். இதைக் கேட்ட அவனுடைய தந்தை அவன்மேல் சினம்கொண்டு, "என்ன, நான் கொடுத்த பணத்தை வைத்து, ஏழைக்கு உணவு கொடுத்தாயா, ஏழைக்கு உணவு கொடுப்பதனால் என்ன இலாபம், பலன் கிடைத்து விடப்போகிறது?" என்று கேட்டார். அதற்கு அவன், "பசியாய் இருந்த ஏழைக்கு உணவு கொடுத்ததனால் இங்கு வேண்டுமானால் பலன் கிடைக்காமல் போகலாம், ஆனால், மேலே இறைவன் எனக்குப் பலன் தருவார்" என்றான். மகனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட தந்தையால் தொடர்ந்து எதுவும் பேச முடியவில்லை.

குரு நானக்கின் வாழ்வில் நடந்ததாகச் சொல்லப்படும் இந்த நிகழ்வு பசியாய் இருக்கின்ற மனிதர்களுக்கு உணவு கொடுக்கவேண்டும், அப்படி நாம் உணவு கொடுக்கும்போது, இறைவன் அதற்கு தக்க பலன் தருவார் என்னும் உண்மையை எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. பொதுக்காலத்தின் பதினேழாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் மக்களுக்கு உணவளிக்கும் இறைவன் என்னும் செய்தியைத் தாங்கி வருவதாக இருக்கின்றன. இறைவன் தன்னுடைய மக்களுக்கு எவ்வாறு உணவளிக்கின்றார், அவர்களுடைய தேவையை எப்படி கவனித்துக்கொள்கின்றார் என்று இப்போது பார்ப்போம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கலிலேயக் கடலைக் கடந்து, மறுகரைக்குச் சென்றபோது, பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்து வருகிறார்கள். அவர்கள் இயேசுவோடு நீண்ட நேரம் இருந்து, அவருடைய போதனையைக் கேட்டுக்கொண்டிருந்த படியால், அவர்கள் பசியாய் இருப்பதை இயேசு உணர்கின்றார். உடனே இயேசு பிலிப்பிடம், "இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?" என்று கேட்கின்றார். பிலிப்போ, "இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே" என்கின்றார்.

இங்கே இயேசுவின் வார்த்தைகளுக்கும் பிலிப்பின் வார்த்தைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இயேசுவோ மக்களின் தேவையை உணர்ந்து, அவர்களுடைய பசியை எப்படிப் போக்குவது என்று சிந்திக்கும்போது, பிலிப்போ அதில் உள்ள சிக்கலை மட்டுமே பார்க்கின்றார். அதனால்தான் அவர் அப்படிச் சொல்கின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில் கூட கடவுளின் அடியவராகிய எலிசாவிடம் ஒருவர் இருபது வாற்கோதுமை அப்பங்களையும் ஒரு கோணிப்பை நிறைய முற்றிய தானியங்களைக் கொண்டு வந்தபோது, எலிசா அவரிடம், "மக்களுக்கு உணவு கொடு" என்கிறார், அதற்கு அவர், "இந்த நூறு பேருக்கு இதை நான் எப்படிப் பரிமாறுவேன்?" என்று கேட்க, எலிசா அவரிடம், "இவற்றை இம்மக்களுக்கு உண்ணக்கொடு. ஏனெனில் உண்ட பின்னும் மீதி இருக்கும்" என்கிறார். அம்மனிதர் அவர்களுக்கு உணவினைப் பரிமாற, எல்லாரும் உண்ட பின்னும் மீதம் இருக்கின்றது. ஆகையால், நமக்கு முன்பாக இருக்கும் பொறுப்பினை, சவாலினை பிலிப்பை போன்றோ, எலிசாவிடம் வாற்கோதுமை அப்பங்களைக் கொண்டு வந்த மனிதரைப் போன்றோ தட்டிக் கழிக்கவும் செய்யலாம். அப்படி இல்லையென்றால், நமக்கு முன்பாக இருக்கும் பொறுப்பினை நேர்மறையோடு எடுத்துக்கொண்டு, அற்புதங்கள் நிகழக் காரணமாக இருக்கலாம்.

ஆண்டவர் இயேசுவும், எலிசாவும் தங்களுக்கு முன்பாக இருந்த மக்களுக்கு உணவு கொடுக்கவேண்டும் என்னும் பொறுப்பினை நேர்மறையோடு அணுகி, அற்புதங்கள் நிகழக் காரணமாக இருக்கின்றார்கள். நாம் நமக்கு முன்பாக இருக்கும் பொறுப்பினை/ சமூகக் கடமையை எப்படி அணுகுகின்றோம் என்று சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் கூறுவார், "நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்" என்று. ஆம், நாம் ஒவ்வொருவரும் நமக்கு அடுத்திருப்பவரை, குறிப்பாகத் தேவையில் இருப்பவரை அன்போடு தாங்கிக் கொள்ளவேண்டும். அப்போதுதான் நாமும் இறைவனின் அன்பு மக்களாக மாறமுடியும்.

இன்றைக்கு நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த காலகாலகட்டத்தில் ஒருவருக்கு மற்றவர் மீது உண்மையான அன்பில்லை, ஒருவர் மற்றவருடைய தேவையைக் கவனித்துக்கொள்ளும் இல்லை. இது எல்லா இடங்களிலும் பொருந்தும் என்று சொல்லமுடியாது. ஒருசில இடங்களில் இயேசுவைப் போன்று எளியவர் பால் அக்கறை கொண்டு உதவக்கூடிய நல்ல உள்ளங்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். நாம் இயேசுவைப் போன்று எல்லாருக்கும் உதவவேண்டும் என்பதில்லை, நற்செய்தியில் வருகின்ற ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டுவந்த சிறுவனைப் போன்றாவது நம்மால் இயன்ற உதவிகளைச் செய்யவேண்டும். அப்போது நம் வழியாக இறைவன் எல்லாரையும் ஆசிர்வதிப்பார்.

எனவே, நமக்கு முன்பாக இருக்கின்ற பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல், இயேசுவைப் போன்று எல்லாருக்கும் இரங்குவோம், எளியவருக்கு உணவளிப்போம் ஒருவர் மற்றவரை அன்போடு தாங்கிக் கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மாிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!