Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                       
                                           பொதுக்காலம் 16ஆம் - ஞாயிறு - 3ம் ஆண்டு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
என் தலைவரே, நீர் உம் அடியானை விட்டுக் கடந்து போகாதிருப்பீராக!

தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 1-10

அந்நாள்களில்

ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்களருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார். பகலில் வெப்பம் மிகுந்த நேரத்தில் ஆபிரகாம் தம் கூடார வாயிலில் அமர்ந்திருக்கையில், கண்களை உயர்த்திப் பார்த்தார்; மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார். அவர்களைக் கண்டவுடன் அவர்களைச் சந்திக்கக் கூடார வாயிலை விட்டு ஓடினார். அவர்கள் முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்கி, அவர்களை நோக்கி, "என் தலைவரே, உம் கண்களில் எனக்கு அருள் கிடைத்ததாயின், நீர் உம் அடியானை விட்டுக் கடந்து போகாதிருப்பீராக! இதோ விரைவில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரட்டும். உங்கள் கால்களைக் கழுவியபின், இம்மரத்தடியில் இளைப்பாறுங்கள். கொஞ்சம் உணவு கொண்டு வருகிறேன். நீங்கள் புத்துணர்வு பெற்றபின், பயணத்தைத் தொடருங்கள். ஏனெனில் உங்கள் அடியானிடமே வந்திருக்கிறீர்கள்" என்றார். "நீ சொன்னபடியே செய்" என்று அவர்கள் பதில் அளித்தார்கள்.

அதைக் கேட்டு ஆபிரகாம் தம் கூடாரத்திற்கு விரைந்து சென்று, சாராவை நோக்கி, "விரைவாக மூன்று மரக்கால் நல்ல மாவைப் பிசைந்து, அப்பங்கள் சுடு" என்றார். ஆபிரகாம் மாட்டு மந்தைக்கு ஓடிச் சென்று, ஒரு நல்ல இளங்கன்றைக் கொணர்ந்து வேலைக்காரனிடம் கொடுக்க, அவன் அதனை விரைவில் சமைத்தான். பிறகு அவர் வெண்ணெய், பால், சமைத்த இளங்கன்று ஆகியவற்றைக் கொண்டு வந்து அவர்கள் முன் வைத்தார். அவர்கள் உண்ணும் பொழுது அவர்களருகே மரத்தடியில் நின்று கொண்டிருந்தார்.

பின்பு அவர்கள் அவரை நோக்கி, "உன் மனைவி சாரா எங்கே?" என்று கேட்க, அவர், "அதோ கூடாரத்தில் இருக்கிறாள்" என்று பதில் கூறினார். அப்பொழுது ஆண்டவர், "நான் இளவேனிற் காலத்தில் உறுதியாக மீண்டும் உன்னிடம் வருவேன். அப்பொழுது உன் மனைவி சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்" என்றார். அவருக்குப் பின்புறத்தில் கூடார வாயிலில் சாரா இதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 15: 2. 3-4. 5 (பல்லவி: 1a) Mp3
=================================================================================
 
பல்லவி: ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?
2
மாசற்றவராய் நடப்போரே! - இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமாற உண்மை பேசுவர். - பல்லவி

3
தம் நாவினால் புறங்கூறார்; தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார்.
4
நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்; தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார். - பல்லவி

5
தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். - பல்லவி


================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================

மறைந்திருந்த இறைத்திட்டம் இறைமக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 24-28

சகோதரர் சகோதரிகளே,

உங்கள் பொருட்டுத் துன்புறுவதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். கிறிஸ்து தம் உடலாகிய திருச்சபைக்காக வேதனையுற்றார். அவர் மேலும் படவேண்டிய வேதனையை என் உடலில் ஏற்று நிறைவு செய்கிறேன். என் மூலம் இறைவார்த்தையை முழுமையாக உங்களுக்கு வழங்கும் பொறுப்பைக் கடவுள் எனக்குக் கொடுத்தார். எனவே நான் திருத்தொண்டன் ஆனேன்.

நான் வழங்கும் இறைவார்த்தை ஊழிஊழியாக, தலைமுறை தலைமுறையாக மறைந்திருந்த இறைத்திட்டத்தைப் பற்றியது. அத்திட்டம் இப்பொழுது இறைமக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. மக்களினங்களிடையே அது அளவற்ற மாட்சியுடன் செயல்படுகிறது என்பதைத் தம் மக்களுக்குத் தெரிவிக்க கடவுள் திருவுளம் கொண்டார். உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவைப் பற்றியதே அத்திட்டம். மாட்சி பெறுவோம் என்னும் எதிர்நோக்கை அவரே அளிக்கிறார். கிறிஸ்துவைப் பற்றியே நாங்கள் அறிவித்து வருகிறோம். கிறிஸ்துவோடு இணைந்து ஒவ்வொருவரும் முதிர்ச்சி நிலை பெறுமாறு ஒவ்வொருவருக்கும் அறிவுரை கூறி முழு ஞானத்தோடு கற்பித்து வருகிறோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
லூக் 8: 15

அல்லேலூயா, அல்லேலூயா! சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்கள் பேறுபெற்றோர். அல்லேலூயா.
 
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மார்த்தா இயேசுவைத் தம் வீட்டில் வரவேற்றார். மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 38-42

அக்காலத்தில்

இயேசு ஓர் ஊரை அடைந்தார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா. அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, "ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டுவிட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும்" என்றார்.

ஆண்டவர் அவரைப் பார்த்து, "மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது" என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
பொதுக்காலத்தின் பதினாறாம் ஞாயிறு


I தொடக்க நூல் 18: 1-10
II கொலோசையர் 1: 24-28
III லூக்கா 10: 38-42

விருந்தோம்பலும், இறைவார்த்தையைக் கேட்டலும், துன்புறுதலும்

யாராவது என் கதையைக் கேளுங்களேன்:

பிரபல இரஷ்ய எழுத்தாளரான ஆன்டன் செகாவ் எழுதிய புகழ்பெற்ற ஒரு சிறுகதை, "புத்திர சோகம்". இச்சிறுகதை "ஐயனோவ்" என்றொரு குதிரை வண்டிக்காரரைப் பற்றியது.

இந்த ஐயனோவ் ஒவ்வொரு நாளும் குதிரை வண்டியை ஓட்டி, அதிலிருந்து கிடைத்த சொற்ப வருமானத்தைக் கொண்டு பிழைப்பு நடத்தி வந்தார். இவருக்கு ஒரு மகன் இருந்தான். ஒருநாள் அவன் கடுஞ் காய்ச்சலால் துன்புற்று, இறந்து போனான். இந்தத் துயரத்தை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள நினைத்தார் ஐயனோவ். அதனால் இவர் தன்னுடைய குதிரை வண்டியில் சவாரி செய்ய வந்தவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடிவு செய்தார்.

முதலில் இவருடைய குதிரைவண்டியில் வியாபாரி ஒருவர் சவாரி செய்ய வந்தார். அவரிடம் இவர் தன்னுடைய மகன் இறந்த துக்கத்தைப் பற்றிச் சொல்லத் தொடங்கியபோது, அவர், "உன்னுடைய கதையைக் கேட்க நான் தயாராக இல்லை. வண்டியை நேராக ஓட்டு" என்று சற்றுக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியதால், இவர் அமைதியானார். வியாபாரியை அடுத்து, இராணுவ வீரர் ஒருவர் குதிரை வண்டியில் சவாரி செய்ய வந்தார். அவரிடமும் இவர் தன்னுடைய மகன் இறந்த துக்கத்தைப் பகிர்ந்து கொள்ள முயன்றபோது, அவர், "இந்த நகரில் நாட்டியம் எங்கு நடைபெறுகின்றது என்பதை மட்டும் சொல். உன் கதை எனக்கு வேண்டாம்" என்றார்.

இப்படி ஐயனோவ் தன்னுடைய மகன் இறந்த துக்கத்தைக் குதிரையில் வண்டியில் சவாரி செய்ய வந்த ஒவ்வொருவரிடமும் சொல்ல முயன்றபோது, அவர்கள் யாருமே இவரது துயரத்தைக் கேட்கத் தயாரில்லை. அந்த நாளின் முடிவில் ஐயனோவ் சவாரியை முடித்துக்கொண்டு, குதிரையைக் குதிரை இலாயத்தில் கட்டும்போது அதைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, "யாருமே என்னுடைய துயரத்தைக் கேட்கத் தயாரில்லையே" என்று கண்ணீர் விட்டு அழும்போது, குதிரை அசைபோட்டுக் கொண்டும், தலையை ஆட்டிக்கொண்டும் ஐயனோக் சொன்னதைக் கேட்டுக் கண்ணீர் விட்டது.

மனிதர்கள் பிறருடைய துயரத்தைக் கேட்கத் தயாராக இல்லாதபோது, குதிரை தயாராக இருந்தது என்று முடியும் இந்தச் சிறுகதை, பிறர் தங்களுடைய துயரத்தை நம்மிடம் பகிரும்போது, அதற்கு நாம் செவிகொடுக்க வேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது. பொதுக் காலத்தின் பதினாறாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, இறைவனுக்குச் செவிசாய்ப்பது எத்துணை முக்கியானது என்ற சிந்தனைத் தருகின்றது. அது குறித்து என்று சிந்திப்போம்.

ஆபிரகாம், மார்த்தாவின் விருந்தோம்பல்:

சொமொட்டோ, சுவிக்கி மூலம் உணவை வருவித்து, உண்ணும் காலகட்டம் இது. இக்காலக்கட்டத்தில் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை நல்லமுறையில் உபசரிப்பது என்பது அரிதாகிவிட்டது. நமது இந்திய மரபில் வீட்டிற்கு வரும் விருந்தினரைக் கடவுளுக்கு இணையாகப் பார்த்து, அவர்களுக்கு விருந்து உபசரிக்க வேண்டும் என்றொரு நிலை இருந்தது. இன்று அது சாத்தியம்தானா? என்பது கேள்விக்குறியே! இத்தகைய பின்னணியில் இன்றைய இறைவார்த்தையில் இடம்பெறும் இருவர் ஆபிரகாமும் மார்த்தாவும் - விருந்தோம்பலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றார்கள்.

முதலில் ஆபிரகாமைக் குறித்துப் பார்ப்போம். தனது கூடார வாசலில் அமர்ந்திருக்கும் ஆபிரகாம், கண்களை உயர்த்திப் பார்த்தபோது மூன்று மனிதர் அருகில் நிற்கக் காண்கின்றார். முதலில் அவர்களை மனிதர் என நினைத்த ஆபிரகாம், பின்னர் அவர்களைக் கடவுள் என உணர்ந்து, "என் தலைவரே! என்று சொல்லி, அவர்களுக்குச் சிறப்பானதொரு விருந்து படைக்கின்றார். இதனால் அவர்கள் பெரிதும் மகிழ்ந்து, அவருடைய மனைவி சாராவிற்குக் குழந்தைப் பேற்றினைத் தருகிறார்கள். நற்செய்தியில் மார்த்தா தன்னுடைய வீட்டிற்கு வரும் இயேசுவை நல்லமுறையில் விருந்து உபசரிக்கின்றார். இவ்வாறு வீட்டிற்கு வரும் விருந்தினரைச் சரியாக உபசரிக்காத மனிதர்கள் நடுவில் ஆபிரகாமும் மார்த்தாவும் விருந்தோம்பலுக்குச் சிறந்து விளங்குவது நமது கவனத்திற்குக் குரியது.

குறிப்பறிந்து செயல்பட்ட மரியா:

வீட்டிற்கு வரும் விருந்தினரை நல்ல முறையில் உபசரிப்பது தலைசிறந்த ஒரு செயல். அதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. அதைவிடவும் சிறப்பான ஒரு செயல், வீட்டிற்கு வரும் விருந்தினர் பேசுவதற்குச் செவிமடுப்பது. ஏனெனில், நமது வீட்டிற்கு வரும் விருந்தினர் வெறுமென உணவு சாப்பிட்டுவிட்டுப் போவதற்கு மட்டும் வருவதில்லை. மாறாக, அவர்கள் தங்கள் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் வருகின்றார்கள். அப்படியிருக்கையில், நாம் அவர்கள் பேசுவதற்குச் செவிகொடுப்பது மிகவும் அவசியமானது.

எருசலேம் நோக்கிப் போகும் வழியில்தான் இயேசு, மார்த்தா மரியாவின் வீட்டிற்குச் செல்கின்றார். எருசலேமில் இயேசு மூப்பர்கள் கையில் ஒப்புவிக்கப்பட்டுப் பலவாறாகத் துன்பப்பட இருந்ததால், அவர் தாங்கமுடியாத துயரத்தில் இருந்திருக்கலாம்! அத்தகைய வேளையில், அவருக்குத் தேவைப்பட்டது நல்லதொரு விருந்து என்பதை விடவும், செவி கொடுப்பதற்கு யாராவது ஒருவர்தான். இதைக் குறிப்பால் உணரும் மரியா இயேசுவின் காலடியில் அமர்ந்து, அவர் சொல்வதைக் கேட்கின்றார்.

குறிப்பால் அறியும் பண்பு இயேசுவின் தாய் மரியாவிற்கு மிகுதியாகவே இருந்தது. அதனால் அவர் "உதவி" என்று கேளாமலே தனது உறவினரான எலிசபெத்துக்கு உதவச் செல்கின்றார்; கானாவில் நடைபெற்ற திருமணத்தில் திராட்சை இரசம் தீர்ந்த நிலையில், திருமண வீட்டார் கேளாமலே அவர்களுக்கு உதவச் செல்கிறார். இத்தகைய குறிப்பால் அறியும் பண்பு மார்த்தாவின் சகோதரி மரியாவிற்கும் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் அவர் இயேசுவின் நிலையை அறிந்து, அவரது காலடியில் போய் அமர்ந்துகொண்டு, அவர் சொல்வதைக் கேட்கின்றார். இங்கே, இறைவனின் இயேசுவின் குரலுக்குச் செவிசாய்ப்பது எத்துணை முக்கியமாது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். இணைச்சட்ட நூல், "உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுத்தால், இந்த ஆசிகளெல்லாம் உன்மேல் வந்து உன்னில் நிலைக்கும்" (இச 28:2) என்கிறது. அந்த அடிப்படையில் மரியா இயேசுவின் காலடியில் அமர்ந்து, அவர் சொன்னதைக் கேட்டதால், அவர் நல்ல பங்கைத் தேர்ந்துகொள்கின்றார்.

கிறிஸ்துவோடு துன்புறுவோம்:

விருந்தோம்பலை விடவும் ஆண்டவருக்குச் செவிசாய்ப்பது உயர்ந்தது என்று பார்த்தோம். இப்போது "ஆண்டவருக்குச் செவிசாய்த்தால் மட்டும் போதுமா? வேறு எதுவும் செய்யத் தேவையில்லையா?" என்ற கேள்வி நமக்கு எழலாம். இதற்கான பதிலை இன்றைய இரண்டாம் வாசகம் தருகின்றது.

ஆண்டவருக்குச் செவிசாய்க்கும் ஒருவர், அவர் அளிக்கும் ஆசிகளைப் பெறுவார். அதே வேளையில், அவர் ஆண்டவரோடு துன்புறவும் தயாராவார். இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல், "கிறிஸ்து தம் உடலாகிய திருஅவைக்காக வேதனையுற்றார். அவர் மேலும் பட வேண்டிய வேதனையை என் உடலில் ஏற்று நிறைவு செய்கிறேன்" என்கிறார். பவுல் இயேசுவுக்குச் செவி கொடுத்தார். அதனால் அவர் இயேசுவைப் போன்று திருஅவைக்காகவும், அவரது மக்களுக்காகவும் துன்புற்றார்; அதுவும் மகிழ்வோடு துன்புற்றார். இவ்வாறு அவர் கிறிஸ்துவுகாகவே வாழ்ந்தார் (கலா 2: 20).

ஒவ்வொருவரும் இயேசுவிற்குச் செவிசாய்த்து, அவரைப் போன்று திருஅவைக்காக அவரது மக்களாக மகிழ்வோடு துன்புறும்போது, இரண்டாம் வாசகத்தில் பவுல் சொல்வது போன்று, மாட்சி பெறுவோம். எனவே, நாம் இயேசுவிற்குச் செவிசாய்த்து, அவரது மக்களுக்காகத் துன்புற்று, இறுதியில் அவர் அளிக்கும் மாட்சியைப் பெறுவோம்.

சிந்தனைக்கு:

"தனக்காக வாழ்வது இறகைவிட இலேசானது; பிறருக்காக வாழ்வது மலையை விடப் பளுவானது; அந்தப் பளுவைச் சுமக்கத் தயாரானவனே சவாலான வாழ்க்கையை வாழ்கிறான்" என்பார் மாவோ. நாம் இயேசுவின் குரல் கேட்டு, அவரைப் போன்று பிறருக்காக வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.




மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================


 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!