Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                                       14 மே 2019  
                                பொதுக்காலம் 15ம் ஞாயிறு - 3ம் ஆண்டு
     
=================================================================================
முதல் வாசகம்

=================================================================================
நீ அதை நிறைவேற்றுமாறு வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 30: 10-14


மோசே மக்களை நோக்கிக் கூறியது: உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடு. சட்டநூலில் எழுதப்பட்டுள்ள அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் கடைப்பிடி. உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பு.

ஏனெனில், இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இந்தக் கட்டளை உனக்குப் புரியாதது இல்லை; உன்னிடமிருந்து வெகு தொலையிலும் இல்லை. `நாம் அதைக் கேட்டு, நிறைவேற்றுமாறு, நமக்காக யார் விண்ணகத்துக்குப் போய், அதைக் கொண்டு வருவார்' என்று நீ சொல்லாதவாறு, அது விண்ணில் இல்லை. `நாம் அதைக் கேட்டு நிறைவேற்றுமாறு, நமக்காக யார் கடல் கடந்து சென்று, அதை நம்மிடம் கொண்டு வருவார்' என்று நீ சொல்லாதவாறு, அது கடல்களுக்கு அப்பால் இல்லை.

ஆனால், நீ அதை நிறைவேற்றுமாறு வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது; உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா: 69: 13. 16. 29-30. 35யb,36 (பல்லவி: 32b)
=================================================================================
 பல்லவி: கடவுளை நாடித் தேடுவோரே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக.

13 ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்; கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில்மொழி தாரும்; துணை செய்வதில் நீர் மாறாதவர். பல்லவி

16 ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்; உம் பேரன்பு நன்மை மிக்கது; உமது பேரிரக்கத்தை முன்னிட்டு என்னை நோக்கித் திரும்பும். பல்லவி

29 எளியேன் சிறுமைப்பட்டவன்; காயமுற்றவன்; கடவுளே! நீர் அருளும் மீட்பு எனக்குப் பாதுகாப்பாய் இருப்பதாக! 30 கடவுளின் பெயரை நான் பாடிப் புகழ்வேன்; அவருக்கு நன்றி செலுத்தி, அவரை மாட்சிமைப்படுத்துவேன். பல்லவி

35ab கடவுள் சீயோனுக்கு மீட்பளிப்பார்; யூதாவின் நகரங்களைக் கட்டி எழுப்புவார்; 36 ஆண்டவருடைய அடியாரின் மரபினர் அதைத் தம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்; அவரது பெயர்மீது அன்பு கூர்வோர் அதில் குடியிருப்பர். பல்லவி



அல்லது  மாற்று பதிலுரைப் பாடல்


திபா 19: 7. 8. 9. 10 (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; இதயத்தை மகிழ்விப்பவை.

7 ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. பல்லவி

8 ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. பல்லவி

9 ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதி நெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. பல்லவி

10 பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை; தேனினும், தேனைடையினின்று சிந்தும் தெளிதேனினும் இனிமையானவை. பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
 
அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன.

திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 15-20

இயேசு கட்புலனாகாத கடவுளது சாயல்; படைப்பு அனைத்திலும் தலைப்பேறு. ஏனெனில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை, கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை, அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர்.

அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன. அனைத்துக்கும் முந்தியவர் அவரே; அனைத்தும் அவரோடிணைந்து நிலைபெறுகின்றன.

திருச்சபையாகிய உடலுக்குத் தலையும் தொடக்கமும் அவரே. எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு இறந்து உயிர்த்தெழுவோருள் அவர் தலைப்பேறு ஆனார்.

தம் முழு நிறைவும் அவருள் குடிகொள்ளக் கடவுள் திருவுளம் கொண்டார். சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர்வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 6: 63b,68b

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உம் வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
எனக்கு அடுத்திருப்பவர் யார்?

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 25-37

அக்காலத்தில் திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன், "போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்.

அதற்கு இயேசு, "திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?" என்று அவரிடம் கேட்டார்.

அவர் மறுமொழியாக, " உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்பு கூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக' என்று எழுதியுள்ளது" என்றார்.

இயேசு, "சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்" என்றார்.

அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, "எனக்கு அடுத்திருப்பவர் யார்?" என்று இயேசுவிடம் கேட்டார்.

அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை: "ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்துகொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள்.

குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கம் விலகிச் சென்றார்.

அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார்.

ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின்மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக்கொண்டார்.

மறு நாள் இரு தெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, 'இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்' என்றார்.

கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?" என்று இயேசு கேட்டார்.

அதற்குத் திருச்சட்ட அறிஞர், "அவருக்கு இரக்கம் காட்டியவரே" என்றார்.

இயேசு, "நீரும் போய் அப்படியே செய்யும்" என்று கூறினார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
(I இணைச்சட்டம் 30: 10-14; II கொலோசையர் 1: 15-20; III லூக்கா 10: 25-37)

யார் அடுத்திருப்பவர்?

நிகழ்வு

செல்வந்தன் ஒருவன் அடர்ந்து காடு வழியாகத் தன்னுடைய குதிரை வண்டியில் சென்றுகொண்டிருந்தான். வழியில் அவனைத் தடுத்து நிறுத்திய கொள்ளையர் கூட்டம் ஒன்று, அவனிடமிருந்த பணத்தையும் அவனுடைய குதிரை வண்டியையும் அடித்துப் பிடித்துக்கொண்டு, அவனைக் குற்றுயிராய்ப் போட்டுவிட்டுச் சென்றது.

அதே காட்டில் புத்திசாலியான நரி ஒன்று தன்னுடைய இரண்டு குட்டிகளுடன் வாழ்ந்து வந்தது. அது தன்னுடைய இரண்டு குட்டிகளுடனும் தற்செயலாக அந்தப் பக்கம் வந்தது. முன்னே சென்றுகொண்டிருந்த இரண்டு குட்டிகளும் செல்வந்தன் அடிபட்டுக் குற்றுயிராய்க் கிடப்பதைக் கண்டு தங்களுடைய தாயிடம், "அம்மா! இங்கே ஒரு மனிதன் அடிபட்டுக் கிடக்கின்றான்... அவனுக்கு நாங்கள் உதவிசெய்யப் போகிறோம்" என்று ஓடின. உடனே அவைகளுடைய தாய் அவற்றைத் தடுத்துநிறுத்தி, "கொஞ்சம் பொறுங்கள்... இவனுக்கு உதவி செய்வதற்கு முன்னம், இவன் எப்படிப்பட்ட மனிதன் என்று பார்த்துச் சொல்கின்றேன். இவன் நம்முடைய உதவியைப் பெறுவதற்குத் தகுதியுள்ளவன் என்றால் இவனுக்கு உதவி செய்வோம். இல்லையென்றால் இவனை இப்படியே விட்டுவிடுவோம்" என்றது.

தங்களுடைய தாய் இவ்வாறு சொன்னதைக் கேட்டு, அந்த இரண்டு குடி நரிகளும் சரியென்றன. பின்னர் அந்தத் தாய் நரி அடிப்பட்டுக் கிடந்த செல்வந்தனை ஒருமுறை சுற்றிப் பார்த்துவிட்டுத் தன்னுடைய குட்டிகளிடம் இவ்வாறு சொன்னது: "பிள்ளைகளே! இவன் நம்முடைய உதவியைப் பெறுவதற்கு எந்தவிதத்திலும் தகுதியற்றவன். இவனுடைய காதுகள் வறியவரின் குரலைக் கேட்கவே கேட்காது; இவனுடைய கண்கள் துன்புறுவோரைக் கண்டு இரங்கவே இரங்காது. இவனுடைய மூளை சுயநலத்தால் நிறைந்திருக்கின்றது. இவனுடைய கைகள் செய்யாத தவறுகளே கிடையாது. அப்படிப்பட்ட இவன் நம்மிடமிருந்து உதவியைப் பெற எந்தவிதத்திலும் தகுதியற்றவன். அதனால் இவனுக்கு உதவிசெய்யாமல் இருப்பதே நல்லது."

இவ்வாறு சொல்லிவிட்டு தாய் நரி தன்னுடைய இரண்டு குட்டிகளையும் கூட்டிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்துசென்றது. இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த செல்வந்தன், தன்னுடைய நிலையை நினைத்து மிகவும் நொந்து, யாருடைய உதவியில்லாமல் இறந்துபோனான்.

இந்த நிகழ்வில் வருகின்ற நரியினைப் போன்றுதான் மனிதர்களிலும் பலர் தேவையில் உள்ள மனிதர்க்கு உதவி செய்வதற்குக்கூட, தகுதியை எதிர்பார்த்துச் செய்கிறார்கள். இப்படிப்பட்ட மனிதர்கட்கு மத்தியில் எந்தவொரு தகுதியையும் எதிர்பாராமல் உதவி செய்யும் ஒருவரைக் குறித்து இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துக் கூறுகின்றது. அவரைக் குறித்து இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

நிலைவாழ்வு தொடர்பான கேள்வி

நற்செய்தியில், திருச்சட்ட அறிஞர் ஒருவர் இயேசுவிடம் வந்து, அவரைச் சோதிக்கும் நோக்குடன், "நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்யவேண்டும்?" என்று கேட்கிறார். இயேசு அதற்கான பதிலை திருமறை நூலிலிருந்து சொல்கின்றார். ஆனால், திருச்சட்ட அறிஞர் தன்னை நேர்மையாளர் என்று காட்டிக்கொள்ள விரும்பியதால், இயேசு அவர்க்கு ஓர் உவமையைச் சொல்லி அவர் வாயாலேயே பதிலைச் சொல்ல வைக்கின்றார். இயேசு அவரிடம் சொல்லக்கூடிய உவமைதான் நல்ல சமாரியன் உவமை. இவ்வுவமையில் கள்வர்கள் கையில் அடிபட்டுக் கிடக்கும் யூதரைத் தவிர்த்து மூன்றுவிதமான மனிதர்கள் இடம்பெறுகின்றார்கள். அம்மூன்றுவிதமான மனிதர்களில் நாம் யாராக இருக்கின்றோம் என்று சிந்தித்துப் பார்த்து, நிலைவாழ்வைப் பெறுவது எப்படி என்று சிந்தித்துப் பார்ப்போம்.

உள்ளதைப் பறித்துக்கொள்ளும் மனிதர்கள்

நற்செய்தியில், இயேசு சொல்லக்கூடிய உவமையில் வரும் எருசலேமிலிருந்து எரிக்கோ நோக்கிச் செல்லும் மனிதரை இந்தச் சமூகம் என எடுத்துக்கொண்டால், அவருடைய ஆடையை எப்படிக் கள்வர்கள் உரிந்துகொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்களோ, அதுபோன்று இந்த சமூகத்திலுள்ள மக்களிடமிருந்து அதுவும் வறிய, எளிய மக்களிடமிருந்து இருப்பதையும் பறித்துக்கொண்டு போக அரசியல்வாதிகள் தொடங்கி, பன்னாட்டு நிறுவனங்கள் வரை எத்தனை மனிதர்கள் இருக்கின்றார்கள். இவர்களைப் போன்று நாம் மக்களுடைய இரத்தத்தையும் உழைப்பையும் உறிஞ்சி வாழும் அட்டைகளாக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த மறைநூல் அறிஞர்கள் கைம்பெண்களின் வீடுகளை அபகரித்தார்கள்; வரிதண்டுபவர்கள் மக்களிடமிருந்து பணத்தையெல்லாம் பிடுங்கினார்கள். இவர்களைப் போன்றும் நாம் இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்ப்பது நமது கடமையாகும்

சகமனிதரைவிட சமயம் பெரிதென வாழும் மனிதர்கள்

உவமையில் வருகின்ற இரண்டாவது வகையான மனிதர்கள், குருவும் லேவியரும். இவர்கள் சக மனிதரை விட சமயமே பெரிதென்று நினைத்து வாழக்கூடியவர்கள். இங்கு சமயக் கடமைகள் வேண்டாம் என்று அர்த்தமில்லை. மாறாக, அடிபட்டுக் குற்றுயிராய்க் கிடப்பவர்க்கு அந்த நேரத்தில் உதவி செய்யாமல் வேறு எந்த நேரத்தில் உதவிசெய்ய முடியும்!

இன்றைக்கும்கூட பலர் சமயம்தான் பெரிது என்று சக மனிதரைக் கண்டுகொள்ளாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். அல்லது சமயத்திற்குக் கொடுக்கும் முக்கியவத்தை சக மனிதர்கட்குக் கொடுக்காமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இத்தகைய வாழ்க்கை எப்படிக் கடவுளுக்கு ஏற்ற வாழ்க்கையாக இருக்கும் என்று தெரியவில்லை. இத்தகையோர் "பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்" (மத் 9:13) என்று ஆண்டவர் கூறுவதையும் "நம்பிக்கை செயல்வடிவம் பெறாமல், அது தன்னிலே உயிரற்றது" (யாக் 2:17) என்று யாக்கோபு கூறுவதையும் தங்களுடைய கவனத்தில் இருத்துவது நல்லது.

தேவையில் உள்ளவர்கள்மீது பரிவுகொள்ளும் மனிதர்கள்

உவமையில் வருகின்ற மூன்றாவது மனிதர்தான் நல்ல சமாரியர். இத்தகையோர், யாராரெல்லாம் தேவையில் இருக்கின்றார்களோ அவர்கள்கள்மீது பரிவுகொண்டு, அவர்கட்குத் தேவையானதைச் செய்து தரக்கூடியவர்கள். உவமையில் வருகின்ற சமாரியரும் அடிபட்டுக் கிடக்கும் யூதரும் இனத்தால் பகைவராக இருந்தாலும் (யோவா 4:9; 8:48), சமாரியர் யூதர்மீது அன்பும் பரிவும் கொள்கின்றார். அது மட்டுமல்லாமல், குருவும் லேவியரும் அடிபட்டுக் கிடப்பவர்க்கு உதவி செய்யச் செல்லும்பட்சத்தில், தங்களுடைய உயிர்க்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்று விலகிச் செல்கையில், சமாரியர் தன்னுடைய உயிரையும் பணயம் வைத்து அவர்க்கு உதவுகின்றார். பின்னர் அவரைச் சாவடிக்குக் கூட்டிக்கொண்டுபோய் வேண்டியதை செய்கின்றார். இவ்வாறு ஒருவர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக இருக்கின்றார்.

இந்த உவமைக்குக் விளக்கம் அளிக்கும் ஒருசில விவிலிய அறிஞர்கள், இயேசுதான் அந்த நல்ல சமாரியர் என்று குறிப்பிடுவர். உண்மைதான். நல்ல சமாரியரைப் போன்றே இயேசு நம் ஒவ்வொருவர்மீதும் பரிவுகொண்டு, சாவின் பிடியிலிருந்த நம்மை விடுவித்துப் புதுவாழ்வு தருகின்றார். ஆகையால், நாம் ஒவ்வொருவரும் நல்ல சமாரியரைப் போன்று/ இயேசுவைப் போன்று தேவையில் உள்ளவர்மீது பரிவோடு வாழும்போது, நாம் அடுத்திருப்பவர்கள் ஆகின்றோம் நிலைவாழ்வையும் நமக்குச் சொந்தமாக்குகின்றோம் என்பது உறுதி,

சிந்தனை

"காதுகேளாதவரும் கேட்கக் கூடிய, பார்வையற்றும் பார்க்கக்கூடிய ஒரே மொழி அன்பு என்ற மொழியே" என்பார் மார்க் ட்வைன் என்ற எழுத்தளார். ஆதலால், நாம் நல்ல சமாரியனைப் போன்று தேவையில் உள்ளவர்மீது பரிவும் அன்பும் கொள்ளும் மக்களாக வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
  வாயில்! இதயத்தில்! கையில்!

ஆண்டின் பொதுக்காலம் 15ம் ஞாயிறு
(ஜூலை 14, 2019)

இணைச்சட்டம் 30:10-14
கொலோசையர் 1:15-20
லூக்கா 10:25-37

இந்து மரபில் இறைவனை அடைவதற்கு மூன்று மார்க்கங்கள் உண்டெனச் சொல்லப்படுகிறது:
பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், கர்ம மார்க்கம்.

பக்தி மார்க்கம் இறைவனை வழிபடுதலையும், மந்திரங்களை உச்சரிப்பதையும், வழிபாடுகள் நடத்துவதையும் முதன்மைப்படுத்துகிறது.
ஞான மார்க்கம் இறைவனின் திருநூல்களை அறிவதையும், இறைவன் பற்றிய மறைபொருளை சிந்தித்து, தியானித்து அறிதலையும் முதன்மைப்படுத்துகிறது.
கர்ம மார்க்கம் பிறரன்புச் செயல்கள் செய்வதையும், தன்னுடைய வேலைகளை சரிவரச் செய்தலையும் முதன்மைப்படுத்துகிறது.

இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் வரும் வாய், இதயம், கை என்னும் மூன்று வார்த்தைகளும் முறையே பக்தி, ஞானம், மற்றும் கர்மம் ஆகியவற்றைக் குறிப்பது போல இருக்கின்றன. இறைவனின் திருச்சட்டங்கள் தூரத்தில் இல்லை, மாறாக, அவை வாயிலும், இதயத்திலும் உள்ளன என்று மோசே இஸ்ரயேல் மக்களுக்குக் கற்பிக்க, இயேசுவோ இன்னும் ஒரு படி மேலே போய், அது கையில் - அதாவது, செயலில் - இருக்கிறது என்று இன்னும் நெருக்கமாக்குகிறார்.

இன்றைய நற்செய்தியில் (காண். லூக் 10:25-37) திருச்சட்ட அறிஞர் ஒருவர் இயேசுவிடம் வருகின்றார். சட்ட அறிஞர் இயேசுவிடம் கேள்வி கேட்பது மற்ற நற்செய்திகளில் காணக் கிடந்தாலும் (காண். மாற் 12:28-34, மத் 22:34-40, லூக் 18:18-20), லூக்கா மட்டும்தான் இந்த கேள்வியைப் பயன்படுத்தி 'நல்ல சமாரியன்' உருவகத்தைப் பதிவு செய்கின்றார்.

இயேசு பணிக்கு அனுப்பிய எழுபது (எழுபத்திரண்டு) சீடர்களும் மகிழ்வோடு திரும்புகின்றனர். அவர்களின் மகிழ்வில் மகிழ்கின்ற இயேசு தன் தந்தையை வாழ்த்திப் புகழ்கின்றார் (காண். லூக் 9:21-22). தொடர்ந்து, 'நீங்கள் காண்பவற்றைக் காணும் வாய்ப்பு பெற்றோர் பேறுபெற்றோர்!' (லூக் 9:23) என தம் சீடர்களை வாழ்த்துகின்றார். இந்தச் சூழலில் அங்கே வருகிறார் திருச்சட்ட அறிஞர். அவர் வருவதன் நோக்கம் இயேசுவைச் சோதிக்க. அவர் சோதிக்க விரும்பியதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்: ஒன்று, எல்லாம் தெரிந்த இயேசுவுக்கு திருச்சட்டம் தெரியுமா என்று பார்க்க. இரண்டு, தந்தையைப் பற்றி பேசும் இயேசு ஒருவேளை அவர் யாரென்று தனக்கு வெளிப்படுத்துவாரா என்று பார்க்க.

'போதகரே' என்றுதான் இயேசுவை அழைக்கிறார். இந்த அழைப்பிலேயே ஒரு இளக்காரம் அல்லது கிண்டல் இருக்கிறது. 'திருச்சட்டத்தை முறையாகக் கற்ற ஒருவரையே' இந்த தலைப்பு கொண்டு அழைப்பர் யூதர்கள். 'நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?' - 'நிலைவாழ்வை உரிமையாக்குதல்' என்பது ஒவ்வொரு யூதரும் ஏங்கிக் கொண்டிருந்த ஒன்று. ஆபிரகாமிற்கு அளிக்கப்பட்ட இந்த 'உரிமையாக்குதல்' வாக்குறுதி (காண். தொநூ 12:1-3) தள்ளிப்போய்க்கொண்டே இருப்பதாக நினைத்தனர் அவர்கள். இயேசு அவருக்கு பதிலாக மற்றொரு கேள்வியை முன்வைக்கின்றார்: 'திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?' மத்தேயு மற்றும் மாற்கு நற்செய்திகளில் இயேசுவே பதில் தருகின்றார். 'ஆண்டவரை அன்பு செய்' என இச 6:5ஐயும், 'அயலானை அன்பு செய்' என லேவி 19:18ஐயும் மேற்கோள் காட்டுகின்றார். இச 6:4-9 ஒவ்வொரு யூதரும் அறிந்திருக்கும் ஒரு இறைவாக்குப் பகுதி. 'இதயத்தோடும்,' 'ஆன்மாவோடும்,' 'வலிமையோடும்,' 'மனத்தோடும்' என்னும் நான்கு வார்த்தைகளில் முதல் மூன்று வார்த்தைகள் மட்டுமே எபிரேய அல்லது கிரேக்க பதிப்புகளில் உள்ளன. மூன்று வார்த்தைகளோ, நான்கு வார்த்தைகளோ, இவ்வார்த்தைகள் நமக்குச் சொல்வதெல்லாம் ஒன்றே: நம் வாழ்வின் எல்லாமாக இறைவன் வேண்டும் - இதயத்தின் ஆழத்தில், ஆன்மாவின் அடையாளமாய், நம் புத்தியின் தெளிவாய், நம் ஆற்றலின் நிறைவாய். நம் உடலின் எந்தச் சிறுபகுதியும் அவரிடமிருந்து அந்நியப்பட்டுவிடக் கூடாது. இறைவனை அன்பு செய்யும் கட்டளையோடு ஒன்றித்துச் செல்லும் மற்ற கட்டளை அடுத்தவரை அன்பு செய்வது (காண். 1 யோவா 4:7-21). 'உன்னைப்போல்' என்ற வார்த்தையில் ஒருவர் தன்னை அன்பு செய்ய வேண்டிய கட்டளையும் பதிவு செய்யப்படுகிறது. மூன்று அன்புகள்: ஆண்டவரை, அடுத்தவரை, என்னை - இதே வரிசையில் என் வாழ்வில் இருக்க வேண்டும்.

திருச்சட்ட அறிஞர் இந்தக் கட்டளைகளை அறிந்திருந்தார். ஏனெனில், அகிபாவின் போதனையின்படி, 'திருச்சட்டத்தை அறிதல் அதைப் பின்பற்றுவதைவிட மேலானது!' ஆனால், இயேசுவைப் பொறுத்த வரையில், அறிதல் மட்டும் போதாது நிலைவாழ்விற்கு. 'அப்படியே செய்யும். நீர் வாழ்வீர்' என கட்டளையும், வாக்குறுதியும் தருகின்றார் இயேசு. ஆக, திருச்சட்ட அறிஞர் 'நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்ட கேள்வியையே, 'நீர் செய்யும்!' என விடையாகத் தருகின்றார் இயேசு.

ஆக, நிலைவாழ்வு என்பது ஆண்டவரை, அடுத்தவரை, தன்னை அன்பு செய்வது.

இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன் வந்த அறிஞருக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. அந்த ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு, இன்னொரு கேள்வியை எழுப்புகிறார் அறிஞர்: 'எனக்கு அடுத்திருப்பவர் யார்?'

யூத சமயம் வரையறைகள் நிறைந்தது. 'தூய்மை - தீட்டு' என்ற அடிப்படையில்தான் அவர்களின் சமூகமும், சமயமும் கட்டப்பட்டிருந்தது. யூதர்கள் புறவினத்தார் மற்றும் சமாரியர்களிடம், குருக்கள் மற்ற மக்களிடம், ஆண்கள் பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என நிறைய சட்டங்களும், விதிமுறைகளும் வழக்கத்தில் இருந்தன. வரையறைகள் நிர்ணயித்தல் சமூகத்தின் செயல்முறைக்கு அதிகம் தேவைப்பட்டது. அது ஒரு சமயக் கடமையாகவும் பார்க்கப்பட்டது.

இந்தப் பின்புலத்தில் தான், 'எனக்கு அடுத்திருப்பவர் யார்?' 'என் அயலான் என்பதை நான் என்பதை நான் எப்படி வரையறுப்பது?' எனக் கேட்கிறார். இயேசு சொல்லும் கதையின் நாயகன் வரையறையைக் கடந்து நிற்கின்றான். அவனது இனம், மதம், சமூகம், தொழில் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. 'ஒருவர் எருசலேமிலிருந்து எரிக்கோவுக்குச் சென்றார்' என்று மட்டும் குறிப்பிடுகின்றார் இயேசு. 'ஒருவர்' என்பது லூக்கா உவமைகளில் பரவலாகக் காணக்கிடக்கும் கதைமாந்தர் (காண். 12:16, 14:2, 15:11, 16:1, 19:12, 20:9). எருசலேமிலிருந்து எரிக்கோவிற்கு செல்லும் வழி ஆபத்தானது. ஏறக்குறைய 3300 அடி தாழ்வாக இருக்கும் இந்தப் பாதை 25 கிமீ தூரம் செல்லக்கூடியது. திருடர்கள் பதுங்குவதற்கு ஏற்ற குழிகளும், புதர்களும் இவ்வழியில் நிறைய உண்டு. அவர்களின் கைகளில் சிக்கிய நம் கதைமாந்தர் குற்றுயிராய் விடப்படுகிறார். உடைமையின்றி, உடல்நலமின்றி இருக்கும் இவர் இப்போது அதிக தேவையில் இருக்கிறார். 'தற்செயலாக' அந்த இடத்திற்கு வரும் அடுத்த வழிப்போக்கர் வாசகருக்கு நம்பிக்கை தருகிறார். வந்தவர் ஒரு குரு. கண்டிப்பாக இவர் உதவி செய்வார் என வாசகர் நினைத்துக் கொண்டிருக்க, 'அவர் மறுபக்கம் சென்றார்.' நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. தொடர்ந்து வரும் லேவியரும் அவ்வாறே செய்கின்றார். அவர்கள் எதற்காக மறுபக்கம் சென்றார்கள் என்று சொல்லப்படவில்லை. ஆனால், அவர்கள் அப்படிச் சென்றதை நாம் நியாயப்படுத்த முடியாது. தொடர்ந்து வரும் மூன்றாமவர்தான் கதையில் முக்கியமானவர். 'குரு, லேவி, இஸ்ரயேலர்' என எல்லாரும் எதிர்ப்பார்க்க, மூன்றாம் நபரை, 'ஒரு சமாரியன்' என அறிமுகப்படுத்துகிறார் இயேசு. இவ்வாறாக, நீண்ட காலம் மக்கள் மனத்தில் இருந்த 'சமாரிய வெறுப்பை' கிண்டி விடுகின்றார் இயேசு. அசீரியர்களோடு திருமண உறவு கொண்டு தங்கள் தூய்மையை இழந்துவிட்ட யூதர்களே சமாரியர்கள் என அழைக்கப்பட்டனர் (காண். 2 அர 17:6, 24). சமாரியர் ஒருவரை கதாநாயகனாக முன்வைப்பதன் வழியாக இயேசு மக்கள் மனத்தில் இருந்த வரையறை எண்ணங்களையும், வேற்றுமை உணர்வுகளையும் புரட்டிப் போடுகின்றார்.

குரு மற்றும் லேவியைப் போல சமாரியர் காயம் பட்ட மனிதனைக் கண்டாலும் அவரை விட்டு விலகிச் செல்லவில்லை. மாறாக, அவர்மேல் பரிவு கொள்கின்றார். 'அவரை அணுகி,' 'எண்ணெயும் மதுவும் வார்த்து,' 'அவற்றைக் கட்டி,' 'விலங்கின் மீது ஏற்றி,' 'சாவடிக்குக் கொண்டு போய்,' 'அவரைக் கவனித்துக் கொள்கின்றார்' - இப்படி அடுக்கடுக்காக வினைச்சொற்களைப் பயன்படுத்துகிறார் லூக்கா. 'இந்த மூவரில் காயம்பட்டவரின் அயலார் யார்?' என அறிஞரிடம் கேட்கின்றார் இயேசு. 'சமாரியர்' என்ற வார்த்தையைக் கூட சொல்ல மறுக்கும் திருச்சட்ட அறிஞர், 'அவருக்கு இரக்கம் காட்டியவரே!' என்கின்றார். இவர் இப்படிச் சொன்னது அந்த சமாரியரின் இரக்கத்தையும், செயலையும் அடிக்கோடிடுவதுபோல இருக்கிறது. 'அயலாராக இருப்பது' என்பது ஒருவர் தானாக விரும்பி செயல்படும் நிலையே. 'நமக்கு ஒரு நல்ல அடுத்திருப்பவர் வேண்டுமெனில், நாமும் முதலில் நல்ல அடுத்திருப்பவராக இருத்தல் அவசியம்.'

'இதைச் செய்யும், வாழ்வீர்' (வ. 28) என்று முதலில் கட்டளையிட்ட இயேசு. இப்போது, 'நீரும் போய் அவ்வாறே செய்யும்' என்கிறார் (வ. 37). 'வாழ்வீர்' என்ற வாக்குறுதி இப்போது இல்லை. அயலாருக்கு நாம் காட்டும் பரிவன்பு எல்லாவகை பரிசுகளையும் கடந்தது. காயம்பட்ட மனிதனிடம் எந்தவொரு அன்பளிப்பையும் சமாரியர் எதிர்ப்பார்க்கவில்லை. ஆக, இரக்கம் என்பது கணக்குப் பார்க்கும் இதயம் அல்ல. நிலைவாழ்வு என்பது வெறும் கட்டளைகளைக் கடைப்பிடிப்பது மட்டும் அல்ல. பரிவு அல்லது இரக்கம் தேவையை மட்டுமே பார்க்கும்.

இவ்வாறாக, 'உனக்கு மிக அருகில்' இருக்கிறது நிலைவாழ்வு என திருச்சட்ட அறிஞருக்கு அறிவுறுத்துகின்றார் இயேசு.

இன்றைய முதல் வாசகத்திலும் (காண். இச 30:10-14) இதே எண்ணம்தான் மேலோங்கி நிற்கிறது.

எகிப்து நாட்டின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றபின், வாக்களிக்கப்பட்ட நாடு நோக்கி, இஸ்ரயேல் மக்களோடு நாற்பது ஆண்டுகள் வழிநடந்த மோசே, மோவாபு பள்ளத்தாக்கில், புதிய தலைமுறை இஸ்ரயேலருக்கு, இதுவரை நடந்த அனைத்தையும், யாவே இறைவன் தந்த திருச்சட்டங்களையும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறார். 'ஆண்டவர் மீது அன்புகூர்வாயாhக!' என்று முதல் கட்டளையை அவர்களுக்கு மேற்கோளிட்டுக் காட்டும் மோசே, கட்டளை என்பது 'புரியாததோ' அல்லது 'வெகு தொலைவில் இருப்பதோ,' 'விண்ணிலோ' அல்லது 'கடலுக்கு அப்பாலோ' இருப்பது அல்ல, மாறாக, 'உனக்கு மிக அருகில்,' 'உன் வாயில்,' 'உன் இதயத்தில்' இருக்கிறது என்கிறார். ஆக, ஒருவர் தன் உள்ளத்திலிருந்தே இந்தக் கட்டளையை உணர்ந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் முடியும். ஒருவரின் உள்ளுறைந்து கிடப்பதே இறைவனின் கட்டளை. இந்த நெருக்கம் கட்டளையின் மேல் ஒருவர் கொள்ள வேண்டிய ஆர்வத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது. 'எனக்குப் புரியவில்லை' என்றும், 'அதைப்பற்றி எனக்குத் தெரியாது,' என்றும் 'நான் அதைக் கண்டதில்லை' என்றும் யாரும் ஒதுங்கிவிடவும் முடியாது. அடிபட்டுக் கிடந்த அந்த பெயரில்லாத மனிதரைப் போல திருச்சட்டம் என் கண்முன், என் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கிறது. குரு மற்றும் லேவி போல மறுபக்கம் ஒதுங்கிச் செல்லாமல், சமாரியர்போல கைநீட்டி நான் தழுவிக் கொள்ள வேண்டும் திருச்சட்டத்தை.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். கொலோ 1:15-20) தொடக்கத் திருஅவையில் புழக்கத்தில் இருந்த ஒரு கிறிஸ்தியல் பாடல் (காண். பிலி 2:6-11). கிறிஸ்து தொடக்கமில்லாதவர், படைப்பனைத்தையும் முந்தியவர் என்று சொல்லும் பவுல், தொடர்ந்து, 'கிறிஸ்துவே திருச்சபையின் தலை' என்கிறார். ஆக, தூரமாக இருந்த ஒருவர் இன்று திருச்சபை என்னும் உடலின் தலையாக இருக்கும் அளவிற்கு நெருக்கமாக வந்துள்ளார். கிறிஸ்துவில் நடந்தேறிய இந்த நெருக்கத்தை, 'ஒப்புரவாதல்' ('being reconciled') என்ற இறையியல் கருதுகோள் வழியாக முன்வைக்கிறார் பவுல்: 'சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும், விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர்வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்' (1:20). விண்ணுக்கும், மண்ணுக்கும் இனி தூரமில்லை. இரண்டும் ஒன்றிற்கொன்று 'மிக அருகில் உள்ளது.' கடவுள் தன்மையும், மனிதத் தன்மையும் ஒன்றையொன்று கைகோர்த்து நிற்கின்றன கிறிஸ்துவில். கடவுள் தன்மையை நினைத்து நாம் பயந்து ஓடத் தேவையில்லை. மாறாக, 'மிக அருகில் உள்ள' கடவுள்தன்மையைத் தொட்டு நாம் அதை நமதாக்கிக் கொள்ள முடியும்.

ஆக, திருச்சட்டம், இயேசு, அயலார் என்னும் மூவரும் நம்முடைய வாய் மற்றும் இதயத்தைத் தாண்டி கையால் தொட்டுவிடும் நெருக்கத்தில் இருக்கின்றனர்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு வைக்கும் வாழ்வியல் சவால் ஒன்றுதான்: 'வாய்' மற்றும் 'இதயத்தை' தாண்டி என்னால் 'கைக்கு' செல்ல முடிகிறதா?

நல்ல சமாரியன் எடுத்துக்காட்டில் வரும் குருவுக்கும் லேவியருக்கும் 'அடுத்திருப்பவர்' என்பர் அவர்களுடைய வாயிலும், இதயத்திலும் இருந்தாரே தவிர அவர்களுடைய கைகளில் இல்லை. தங்களுடைய வாயால் இறைவனைப் புகழ்ந்த, தங்களுடைய இதயத்தால் இறைவனைச் சிந்தித்த அவர்களால் அடிபட்டுக் கிடந்த அயலாருக்கு கரம் நீட்ட முடியவில்லை. கரம் நீட்டுதல் மூன்று நிலைகளில் சாத்தியமாகும்:

அ. அறிதலிலிருந்து செய்தலுக்குக் கடத்தல்

'நிறைவாழ்வு பெற நான் என்ன செய்ய வேண்டும்?' என கேட்டு வருகிற அறிஞரிடம், 'நீ முதலில் செய்!' என கட்டளை கொடுத்து அனுப்புகிறார் இயேசு. ஆக, கட்டளைகளை அறிதல் அல்ல, மாறாக, அவற்றைச் செய்தல் அல்லது அவற்றின்படி நடத்தல் அல்லது அவற்றைச் செயல்படுத்துதலே நிறைவாழ்வைத் தரும். 'அறிவே ஆற்றல்' என்றார் பிரான்சிஸ் பேகன். ஆனால், அறிவு மட்டும் ஆற்றலாகிவிடுமா என்ன? எனக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என வைத்துக் கொள்வோம். சர்க்கரை நோய் உள்ளவர் உணவில் சர்க்கரை சேர்க்கக் கூடாது என்பது நான் கொண்டுள்ள அறிவு. இந்த அறிவு மட்டும் இருந்தால் போதுமா? இல்லை. அறிவோடு சேர்ந்து செயலும் இருக்க வேண்டும். 'சர்க்கரை சேர்க்கக் கூடாது' என்று அறிந்துள்ள நான் அதைச் செயல்படுத்த வேண்டும் - என் உணவில் சர்க்கரையைத் தவிர்க்க வேண்டும். அப்போதுதான் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும். ஆக, அறிவு மட்டும் ஆற்றல் அல்ல. அறிவோடு கூடிய செயலே ஆற்றல். அறிதலிலிருந்து செயல்பாட்டிற்கு திருச்சட்ட அறிஞரை அழைத்துச் செல்கின்றார் இயேசு.

ஆ. 'எனக்கு அருகிருப்பவர் யார்?' எனக் கண்டுணர்தல்

என் பெற்றோர், உறவினர், நண்பர், அறிமுகமானவர் ஒரு வட்டம் என் அருகில் இருந்தாலும், என் அருகிலிருப்பவர்கள் இவர்கள் அல்லர். எந்த ஒரு அடையாளமும் இல்லாமல், எல்லாம் சிதைந்து, முகம் இழந்து, உயிரையும் கையில் பிடித்துக் கொண்டு, முணுமுணுத்துக் கொண்டு இருப்பவரே என் அருகிலிருப்பவர். அவரின் ஒரே தேவை என்பது 'தேவை மட்டுமே.' அந்த தேவையை நான் நிறைவு செய்தால் நானும் அவரின் அருகிருப்பவரே. அவரின் தேவையில் நான் அவருக்கு பரிவு காட்டுவதற்குப் பதிலாக, அவரின் அடையாளத்தை நான் தேட ஆரம்பித்தாலோ, அல்லது 'இவருக்கு உதவினால் எனக்கு என்ன கிடைக்கும்?' என நான் கணக்குப் பார்க்க ஆரம்பித்தாலோ என்னால் அவரின் அடுத்திருப்பவராக இருக்க முடியாது. அவரின் முணகல் சத்தம் என் காதில் விழ வேண்டும். நான் என் கழுதையிலிருந்து இறங்க வேண்டும். குனிய வேண்டும். என் கையை அழுக்காக்க வேண்டும். என் உடையை இரத்தக்கறையாக்க வேண்டும். அவரைத் தொட வேண்டும். மருந்திட வேண்டும். காயத்திற்குக் கட்டுப்போட வேண்டும். என் விலங்கில் ஏற்றிக்கொண்டு சென்று அவரின் பாதுகாப்பை நான் உறுதி செய்ய வேண்டும். 'அவரைப்போல' நானும் செய்ய என்னை அழைக்கிறார் இயேசு.

இ. நிலைவாழ்வு - இங்கே இப்போதே!

இறப்பிற்குப் பின் வருவதல்ல நிறைவாழ்வு. இருக்கும்போதே வருவதுதான் நிலைவாழ்வு. 'ஆண்டவர்-அடுத்திருப்பவர்-நான்' என்ற புதிய மூவொரு இறைவனை முன்வைக்கின்றன இன்றைய வாசகங்கள். இந்த மூவொரு அன்பில் நான் இணைந்திருந்தால் அதுவே எனக்கு நிலைவாழ்வு. 'நான் ஆண்டவரை அல்லது அடுத்தவரை அல்லது என்னை அன்பு செய்தால் எனக்கு நிறைவாழ்வு கிடைக்கும்' என்று நினைப்பது சால்பன்று. ஆக, அன்பு என்பது நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் கொடுக்கும் விலை அன்று. அப்படி அதை விலை என நான் நினைத்தால், நான் ஆண்டவரையும், அடுத்தவரையும், என்னையும் வியாபாரப் பொருளாக்கிவிடுகிறேன். அடுத்தவரை அல்லது காயம்பட்டவரை அன்பு செய்து நான் நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்கிறேன் என்றால், அங்கே நான் அவரை ஒரு பொருளாக ஆக்கிவிடுகிறேன் என்றுதானே அர்த்தம். ஒவ்வொரு மனிதரும் ஓர் ஆள். அவரை நான் பொருளாக்க எனக்கு உரிமை இல்லை. நான் செய்யும் அன்பிற்கு எனக்கு நிறைவாழ்வு அல்லது நிலைவாழ்வு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, நான் தொடர்ந்து அன்பு செய்வேன் என்ற மனப்பான்மை என்னில் உதிக்கிறதா? நிறைவாழ்வு என்பது பயணத்தின் இறுதியில் நான் கண்டடையும் பொருள் அல்லது இடம் அல்ல. மாறாக, பயணமே நான் கண்டடையும் பொருள். என் இலக்கு பயணத்தின் இறுதி அல்ல, மாறாக, பயணமே. இந்தப் பயணத்தில் வழிப்பாதையில் விழுந்துகிடக்கும் அனைவரும் என் அடுத்திருப்பவரே. அவரைத் தொட்டுத் தூக்கும் ஒவ்வொரு நொடியும் எனக்கு நிறைவாழ்வே!

'உனக்கு அருகில் நான்' என என் ஆண்டவரும், என் அடுத்திருப்பவரும் என்னிடம் சொல்ல, 'உனக்கு மிக அருகில் நான்' என நான் அவர்களிடம் சொல்ல முடிந்தால் அதுவே நிலைவாழ்வு. வாயில் தொடங்கும் இப்பயணம் கைகளில் முடியட்டும் - இன்றும் என்றும்!

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)

=================================================================================
பொதுக்காலம் ஆண்டின் 15ஆம் ஞாயிறு C    (முன்னுரைகளும் மன்றாட்டுகளும்)
=================================================================================
இணைச்சட்ட நூல் 30:10-14
கொலோசையர் 1:15-20
லூக்கா 10:25-37

திருப்பலி முன்னுரை:-1

பிரியமானவர்களே! பொதுக்காலம் 15ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டிற்கு வருகைத் தந்துள்ள உங்கள் அனைவருக்கும் இறைஇயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துகள்! இன்றைய வழிப்பாட்டு வாசகங்கள் நமக்கு மிக அருகில் உள்ள இறைவன், அயலான் இவர்களை உணர்ந்துக்கொண்டு நிலைவாழ்வு எவ்வாறு நம்மில் பெற்றுக்கொள்வது என்பதைப் பற்றிய நமக்கு எடுத்துரைக்கின்றன.

இஸ்ரயேல் மக்களுக்கு 'ஆண்டவர் மீது அன்புகூர்வாயாக!' என்று முதல் கட்டளையை அவர்களுக்கு மேற்கோளிட்டுக் காட்டும் மோசே, கட்டளை என்பது 'உனக்கு மிக அருகில்,' 'உன் வாயில்,' 'உன் இதயத்தில்' இருக்கிறது என்கிறார். புனித பவுலடியார் கூறுகிறார். "விண்ணுக்கும், மண்ணுக்கும் இனி தூரமில்லை. இரண்டும் ஒன்றிற்கொன்று 'மிக அருகில் உள்ளது.' கடவுள் தன்மையை நினைத்து நாம் பயந்து ஓடத் தேவையில்லை. மாறாக, 'மிக அருகில் உள்ள கடவுள்தன்மையைத் தொட்டுணர்ந்து நாம் அதை நமதாக்கிக் கொள்ள முடியும்."

திருச்சட்ட அறிஞர் இயேசுவைச் சோதிக்கும் நோக்கில் 'நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டக் கேள்வியின் மூலம் நமக்கு வெகு அருகாமையிலுள்ள அயலானை அடையாளம் காட்டுகிறார். இதன் மூலம் மூன்று வித அன்பைப் பதிவுச் செய்கிறார். இந்த அன்பு நம்மில் நிறைவாய் இருந்தால் நிலைவாழ்வு நமக்கு வெகு அருகிலே! என்ற எண்ணங்களைத் தாங்கியவர்களாய் முழு 'இதயத்தோடும்,' 'ஆன்மாவோடும்,' 'வலிமையோடும்,' 'மனத்தோடும்' இத்திருப்பலியில் பங்குக்கொள்வோம் நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள...

திருப்பலி முன்னுரை:-2

அடுத்திருப்பவர்களே,

பொதுக்காலத்தின் பதினைந்தாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். இறையன்பு மற்றும் பிறரன்பு கட்டளைகளை நம் வாழ்வில் செயல்படுத்த இன்றைய திருவழிபாடு நம்மை அழைக்கிறது. நம்மை நாமே நேர்மையாளர்களாக எண்ணிக் கொள்ளாமல், கடவுளின் முன்னிலையில் நாம் நேர்மையாளர்களாக இருக்க வேண்டும் என்பதே ஆண்டவரின் விருப்பம். இயேசுவின் வழியில், கடவுளுக்கும் மற்ற மனிதர்களுக்கும் அடுத்திருப்பவர்களாய் வாழ அழைக்கப்படுகிறோம். எரிகோ செல்லும் பாதையில் அடிபட்டுக் கிடந்தவரை கண்டுகொள்ளாமல் சென்ற யூத குருவையும், லேவியரையும் போன்று மனிதநேயம் இல்லாதவர்களாய் நடந்துகொண்ட தருணங்களுக்காக மன்னிப்பு வேண்டுவோம். நல்ல சமாரியரைப் போன்று, தேவையில் இருப்பவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுபவர்களாய் வாழ வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

வாசக முன்னுரை:-

முதல் வாசக முன்னுரை:-

எகிப்து நாட்டின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப் பெற்றபின், இஸ்ரயேல் மக்களோடு நாற்பது ஆண்டுகள் வழிநடந்த மோசே, மோவாபு பள்ளத்தாக்கில், புதிய தலைமுறை இஸ்ரயேலருக்கு, இதுவரை நடந்த அனைத்தையும், யாவே இறைவன் தந்தத் திருச்சட்டங்களையும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறார். 'ஆண்டவர் மீது அன்புகூர்வாயாக!' என்று முதல் கட்டளையை அவர்களுக்கு மேற்கோளிட்டுக் காட்டும் மோசே, கட்டளையானது 'உனக்கு மிக அருகில்,' 'உன் வாயில்,' 'உன் இதயத்தில்' இருக்கிறது என்கிறார். ஒருவரின் உள்ளுறைந்துக் கிடப்பதே இறைவனின் கட்டளை. இணைச்சட்ட நூலிருந்து வரும் இவ்வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:-

'என்னைப் பொறுத்தவரையில் உலகமும், உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்' என்கிறார் பவுல். உலகையும், பவுலையும் இணைப்பது சிலுவையும், அந்தச் சிலுவையில் தொங்கும் இயேசுவும். சிலுவையில் அறையப்பட்டிருப்பது வேதனையை, வலியைத் தந்தாலும், அந்த வலிதான் பவுலை இயேசுவோடும், உலகத்தோடும் இணைக்கிறது என்று நம்பிக்கையில் நிலைத்திருக்க அறிவுறுத்தும் திருத்தூதர் பவுல் தன் கடிதத்தை நிறைவுச் செய்யும் பகுதியே இன்றைய இரண்டாம் வாசகம்...

பதிலுரைப் பாடல்

பல்லவி: கடவுளை நாடித் தேடுவோரே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக!
திபா. 69: 13,16,29-30,35,36

ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்; கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில் மொழி தாரும்; துணை செய்வதில் நீர் மாறாதவர். பல்லவி

ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்; உம் பேரன்பு நன்மை மிக்கது; உமது பேரிரக்கத்தை முன்னிட்டு என்னை நோக்கித் திரும்பும். பல்லவி

எளியோன் சிறுமைப்பட்டவன்; காயமுற்றவன்; கடவுளே! நீர் அருளும் மீட்பு எனக்குப் பாதுகாப்பாய் இருப்பதாக! கடவுளின் பெயரை நான் பாடிப் புகழ்வேன்; அவருக்கு நன்றி செலுத்தி, அவரை மாட்சிமைப்படுத்துவேன். பல்லவி

கடவுள் சீயோனுக்கு மீட்பளிப்பார்; யூதாவின் நகரங்களைக் கட்டி எழுப்புவார்; அப்பொழுது அவர்களுடைய மக்கள் அங்கே குடியிருப்பார்கள்; நாட்டைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்வார்கள். ஆண்டவருடைய அடியாரின் மரபினர் அதைத் தம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்; அவரது பெயர்மீது அன்பு கூர்வோர் அதில் குடியிருப்பர். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உம் வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:-

1. மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டாற்றுவதற்கே என்று கூறிய எம் இறைவா, இன்றைய காலக்கட்டத்தில் திருஅவையின் தலைமைஆயர் முதல் பொதுநிலையினர் ஆகிய அனைவரும் இறைவார்த்தையின் ஒளியில் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளவும், அதன் மூலம் தங்களை அயலானைக் கண்டுகொண்டு உணர்ந்து அவர்களுக்குத் தொண்டாற்றத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. நான் பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்ற எம் இறைவா இன்று உலகில் நிலவும், தீவிரவாதம், மனிதநேயமற்ற, செயல்கள், இனக்கலவரங்கள், சாதி, மதப் பேதமின்றி அனைத்து மாந்தர்க்கும் இப்புவிச் சொந்தம் என்ற பரந்த மனநிலையை அளித்து இவர்கள் அனைவரும் உண்மையான மனமாற்றமடையத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. ஏழைகளுக்கு இறங்குகிறவன் கடவுளுக்குக் கடன் கொடுக்கிறான் என்று இறைவார்த்தைக்கு ஏற்ப, ஏழை, பணக்காரக் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடுகளைக் களைந்துத் தேவையில் உழல்வோருக்குத் தேவையான உதவிகளைச் செய்திடவும், ஆதரவற்றோர்க்கு ஆதரவளித்திடவும் எல்லோரும், எல்லாம் நிறைவாகப் பெற்றிட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. உன்னைப் படைத்தவனை உன் வாலிபநாட்களில் நினை என்று கூறிய எம் இறைவா, எம் இளையோர் இளமையில் உம்மை அதிகமாகத் தேடவும் இறையரசின் மதிப்பீடுகளைத் தனதாக்கி, தங்கள் வாழ்வால், கிறிஸ்துவுக்கும் சமூகத்திற்கும் சான்றுப் பகர்ந்திடத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. குடும்பங்களின் பாதுகாவலான எம் இறைவா! எம் குடும்பங்களில் உள்ள எம் பெற்றோர், பெரியோர், நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் சமாதானத்தோடும், ஒற்றுமையோடும் பிரிவினைகள் கருத்துவேறுபாடுகள் இல்லாமல் நல்ல சமாரியர் போல வாழத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

(அல்லது)

1,ஒப்புரவாக்க அழைப்பவராம் இறைவா,
கிறிஸ்துவின் நற்கருணைப் பலியை நிறைவேற்றும் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் அனைவரும், உலக மக்களை உம்மோடு ஒப்புரவாக்கும் பணியை சிறப்பாக ஆற்றும் வரத்தினை வழங்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

2,அன்பே உருவான ஆண்டவரே,
உலகெங்கும் சிற்றின்ப ஆசைகளில் மூழ்கி, எந்திரங்களோடு பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கும் மக்கள், குடும்ப உறுப்பினர்களையும் அருகில் வசிப்பவர்களையும் அன்பு செய்து வாழும் மனநிலையை வழங்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3,நிறைவாழ்வு அருள்பவராம் இறைவா,
உலகின் பல பகுதிகளில் உடல் மற்றும் மனக் காயங்களால் அமைதி இழந்து வேதனையுறும் மக்களை குணப்படுத்த உழைக்கும் நல்லுள்ளம் கொண்டவர்கள் பெருக உதவிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4,உன்னைப் படைத்தவனை உன் வாலிபநாட்களில் நினை என்று கூறிய எம் இறைவா,
எம் இளையோர் இளமையில் உம்மை அதிகமாகத் தேடவும் இறையரசின் மதிப்பீடுகளைத் தனதாக்கி, தங்கள் வாழ்வால், கிறிஸ்துவுக்கும் சமூகத்திற்கும் சான்றுப் பகர்ந்திடத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5,எல்லாம் வல்ல இறைவா!
நாங்கள் சந்திக்கும் ஏழைகள், இன்னலுறுவோர், அனாதைகள், கைவிடப்பட்டோர், ஆதரவுற்றோருக்குத் தாராளமான மனமுவந்து உதவிகரம் நீட்டவும், நாங்கள் சிறந்த முறையில் பருவமழையைப் பெற்று வளமுடன் வாழ உமது அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

6,குடும்பங்களின் பாதுகாவலான எம் இறைவா!
எம் குடும்பங்களில் உள்ள எம் பெற்றோர், பெரியோர், நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் சமாதானத்தோடும், ஒற்றுமையோடும் பிரிவினைகள் கருத்துவேறுபாடுகள் இல்லாமல் வாழத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

7,எம் கால் கல்லில் மோதாதபடித் தூதர்களால் எம்மைத் தாங்கிக் கொள்ளும் எம் இறைவா!
தூய ஆவியின் ஒளியால் எங்கள் பங்கிலுள்ள இளையோரின் இதயங்களுக்கு அறிவூட்டும். அவர்கள் சரியானவற்றை உணரவும், அவர் அளிக்கும் ஆறுதலினால் என்றும் மகிழ்ச்சியாய் இருக்கவும், ஞானக்கதிர்களை அவர்கள் மேல் பொழியுமாறும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இன்றைய சிந்தனை

''எனக்கு அடுத்திருப்பவர் யார்?'' (லூக்கா 10:29)

திருச்சட்ட அறிஞர் இயேசுவிடம் கேட்ட இக்கேள்விக்குப் பதிலளிக்கும் விதத்தில் இயேசு கூறிய கதை ''நல்ல சமாரியர்'' என்னும் சிறப்பான உவமை ஆகும். லூக்கா நற்செய்தியில் மட்டுமே காணப்படுகின்ற இந்த உவமை தரும் செய்தி என்ன? ''எனக்கு அடுத்திருப்பவர் யார்?'' என்னும் கேள்விக்குப் பதில் கேள்வியாக, ''உமக்கு அடுத்திருப்பவராக இல்லாத ஒருவரைக் காட்ட முடியுமா?'' என்றுகூட இயேசு சவால் விட்டிருக்கலாம். ஆனால் இயேசு ஓர் உவமை வழியாக அந்த உண்மையைக் கற்பித்தார். சமாரிய இனத்தவர் தாழ்த்தப்பட்டோர்; அவர்களுக்கு யூதர்கள் நடுவே மதிப்பு இருக்கவில்லை. ஆனால் கள்வர் கையில் அகப்பட்டு, அடிபட்டுக் குற்றுயிராக விடப்பட்ட மனிதருக்கு உதவிசெய்தது அந்த சாதாரண சமாரியர்தானே தவிர யூத குருவோ, லேவியரோ அல்ல. யார்யாருக்கு உதவி தேவைப்படுகிறதோ அவர்கள் எல்லாருமே நமக்கு அடுத்திருப்பவர்கள்தாம். இந்த உண்மையை வாழ்க்கையில் காட்டியவர் நல்ல சமாரியர்.

இன்று இலட்சக்கணக்கான மக்கள் வறுமையில் வாடுகின்றார்கள்; மனித மாண்பு மறுக்கப்பட்டு, உரிமைகள் மீறப்பட்டு, இழிவாக நடத்தப்படுகிறார்கள். இவர்கள் எல்லாருமே நமக்கு அடுத்திருப்பவர்கள்தாம். அப்படியென்றால், இயேசு அறிவித்த அன்புக் கட்டளையின் பொருள் என்ன? ''உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீது அன்புகூர்வாயாக'' (லூக் 10:27; இச 6:5) என்னும் கட்டளையைக் கடைப்பிடிக்க அனைவருக்கும் கடமை உண்டு. யாருக்கு அன்புகாட்டுவது என்றொரு கேள்வி எழுப்புவதே முறையல்ல, ஏனென்றால் அன்பின் அரவணைப்பிலிருந்து விலகிநிற்போர் அல்லது விலக்கப்பட்டோர் ஒருவர்கூட இவ்வுலகில் இருக்கமுடியாது, இருக்கவும் கூடாது. எங்கு மனிதர் உள்ளனரோ அங்கு அன்புக் கட்டளை செயல்படுத்தப்பட வேண்டும். அக்கட்டளைக்கு விதிவிலக்கு கிடையாது. எனினும், சமுதாயத்தால் ஒதுக்கிவைக்கப்பட்டோர் நமது தனி அன்புக்கு உரித்தானவர் என்பது இயேசு நமக்கு அளிக்கின்ற போதனை. தன்னலம் கோலோச்சுகின்ற நம் சமுதாயத்தில் இது ஒரு பெரிய சவாலாகவே உள்ளது.

மன்றாட்டு:

இறைவா, நீர் எங்களுக்குக் காட்டிய அன்பை நாங்கள் எல்லா மனிதரோடும் பகிர்ந்திட அருள்தாரும்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!